மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 20 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 76

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



76. தாய் உதவியோடு கிளி பறந்தது

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... ராம்கியும் புவனாவும் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டுக் கிளம்பும் நாளை முடிவு செய்தனர்.

இனி...

'நாளைக்கு காலையில தயாரா இரு' என மல்லிகா சொல்லவும் புவனாவுக்கு படபடப்பு அதிகமானது. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. முகமெல்லாம் வேர்த்தது. 

"என்னடி சொல்றே... நாளைக்கேவா?" மெதுவாகக் கேட்டாள்.

"ஆமா... "

"...."

"என்னடி... இங்க தைரியமாப் பேசினே... இப்ப என்னாச்சு பேச்சைக் காணோம்... என்ன பயமா?"

"இல்லடி... அது... அம்மா இருக்காங்க... விரிவாப் பேச முடியாது... அப்புறம் பேசலாம்டி..." என்றபடி போனை வைத்தாள்.

"என்னம்மா... யாரு போன்ல...?" என்றபடி அடுப்படியில் இருந்து கரண்டியுடன் வந்தாள் அம்மா.

"அது... மல்லிகாதான் பேசினாம்மா"

"என்ன உனக்கு முகமெல்லாம் வேர்த்திருக்கு... எதாவது பிரச்சினையா?"

"அதெல்லாம் இல்லம்மா... சும்மாதான்... என்னன்னு தெரியலை ஒரு பக்கமா தலை வலிக்கிதும்மா..." என்றவாறு அம்மா தோளில் சாய்ந்தாள். அவளை அறியாமல் கண்ணீர் வடிந்து அம்மாவின் ஜாக்கெட்டில் இறங்கியது.

"என்னாச்சும்மா... எதுக்கு அழுகுறே...?" மகளின் கண்ணீர் பட்டதும் தாய் மனம் துடித்தது.

"ஒண்ணுமில்லம்மா..."

"என்னாச்சு... தலைவலி அதிகமா இருக்கா... இரு சாந்திக்கிட்ட மாத்திரை இருக்கும் வாங்கிட்டு வந்து சூடா காபி போட்டுத் தாரேன் குடிச்சிட்டுப் படு... சரியாயிடும்..."

"வேண்டாம்மா... காபி கொடுங்க போதும்..." என்றாள்.

"என்ன புவிம்மா... என்னாச்சு.... என்ன இவ்வளவு சோர்வாயிட்டே... அப்படி போன்ல மல்லிகா என்ன சொன்னா..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... அவ வீட்டுக்கு வாறியான்னு கேட்டா... சாயந்தரம் பாக்கலாம்ன்னு சொன்னேன்..." என்றவாறு சிறுகுழந்தைபோல அம்மா மடியில் படுத்துக் கொண்டாள்.

"காபி கேட்டே... இப்படி படுத்துக்கிட்டா காபி எப்படி போடுறது...."

"கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கிறேம்மா... ப்ளீஸ்..."

"என்னம்மா என்னாச்சு இன்னைக்கு... ஆமா அந்தப் பையன் வந்திருக்கானாமே... அவனைப் போயி பாத்தியா... அவன்தான் இப்ப போன் பண்ணினானா?" அம்மா அடுக்கிக் கொண்டே போக பேசுவது அவள்தான என யோசித்த புவனா அடக்க முடியாத அழுகையோடு அவளைப் பார்த்தாள்.

"என்னாச்சும்மா.... எதுக்கு அழுகுறே... அந்தப் பையன் எதாவது சொன்னானா...? இப்ப பாக்க வரச்சொன்னானா?"

"இல்லம்மா... இப்ப பேசினது அவரில்லை... மல்லிகாதான்..."

"என்னடா அம்மா இப்படிப் பேசுறேன்னு நினைக்காதே... நீ அந்தப் பையனோட பழகினது எனக்குப் பிடிக்கலைதான்... நீங்க ரெண்டு பேரும் படிப்பு முடிஞ்சு உங்க ஆசியோடதான் கல்யாணம் பண்ணுவோம்ன்னு சொன்னப்பக் கூட நான் இது நீடிக்காதுன்னு நினைச்சேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் இன்னும் அதிகமான அன்போடத்தான் பழகுறீங்கன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். எனக்குள்ளயும் சாதி, கவுரவம் எல்லாம் இருக்கு. இந்த சாதியைத் தூக்கி எறிஞ்சிட்டு... கட்டுன புருஷனை விட்டுட்டு... பெத்த மகனை எதிர்த்துக்கிட்டு உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க பாழாப்போன மனசு இடங்கொடுக்கலை... இப்ப இருக்க சூழல்ல எல்லாருக்கும் உங்க காதல் தெரிஞ்சாச்சுன்னு நினைக்கிறேன்... உங்கப்பாவும் சித்தப்பாவும் தீவிரமா உன்னோட கல்யாண வேலையில இறங்கியாச்சு... உங்க அண்ணன் அவன் போக்குல எதோ தப்பாப் பண்ணிக்கிட்டு இருக்கான்... நீ அந்தப் பையன் கூட இருந்தாத்தான் சந்தோஷமா இருப்பே... நாங்க பார்க்கிற வரனெல்லாம் உன்னோட வாழ்க்கையை அழிச்சிடும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்... எங்களுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருப்பேன்னு சொல்ல முடியுமா? நீ கஷ்டப்படுறதையோ இல்ல உன்னைய அழிச்சிக்கிறதையோ என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது... அதனால..."

அம்மா பேசிக்கொண்டே போக அவளைக் கண்ணீரோடு ஏறிட்டாள் புவனா, அவள் தொடர்ந்தாள்.

"நீயும் அவனும் சேரணும்... நாங்க சேர்த்து வைக்கிறதுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்... அதனால அந்தப் பையன் கூட பேசி எங்கிட்டாவது கண்கானாத இடத்துல போயி சந்தோஷமா இருங்க... என்னடா இவ இப்படிப் பேசுறான்னு பாக்குறியா... நீ எங்கயாவது சந்தோஷமா இருந்தால எனக்குப் போதும்... இந்த சாதி, சனங்க, அவமானம் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்து செத்துப் போயிடுவேன்... உங்கப்பா எடுக்கிற முடிவால நீ தவறான முடிவெடுத்துட்டா... நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூடப் பாக்க முடியலை... நீ எங்கயாவது சந்தோஷமா இருக்கணும்... அது போதும் எனக்கு..." சொன்ன போது அம்மாவின் கண்ணீர் அவள் முகத்தில் வழிந்தது.

"அம்மா..." என்று அவள் மடியில் முகம் புதைத்து அழுதாள். 

"எதாயிருந்தாலும் ரெண்டு பேரும் சீக்கிரம் முடிவெடுங்க... காலங்கடந்தா எல்லாம் மாறிடும்..." 

"ஏம்மா... நாங்க ரெண்டு பேரும் பெத்தவங்க சம்மதத்தோடத்தானே கல்யாணம் பண்ணனுமின்னு இருந்தோம். ஆனா இப்ப இந்த உலகம் எங்களையும் இந்த முடிவெடுக்க வச்சிருச்சேம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எங்களைச் சேத்து வைக்க உங்களால முடியாதாம்மா..."

"அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை... இந்த சாதி, மதமெல்லாம் இருக்க வரைக்கும் இப்படித்தான்... எங்கயாவது ஒண்ணு ரெண்டு நினைச்சபடி நடக்கலாம்... எல்லாம் நல்லதுக்குத்தாம்மா... அந்தப் பையன்கிட்ட பேசு... உடனே எங்கயாவது கூட்டிப் போகச்சொல்லு...."

"அம்மா... எப்படி இப்படி மாறினீங்கன்னு எனக்குப் புரியலை... இதுவரைக்கும் உங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சினை ஆயிடுமோன்னு சொல்லாம இருந்த விஷயத்தை இப்பச் சொல்றேம்மா.... நாங்க நாளைக்குப் போறதா இருக்கோம்மா... அது விஷயமாத்தான் மல்லிகா பேசினா... எல்லாருமே எனக்கு எதிர்ப்பா இருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா மல்லிகா சொன்னதும் உங்களை விட்டுட்டுப் போகணுமேன்னு எம்மனசு அடிச்சிக்கிச்சு அதான் உங்க மடியில படுத்து அழுதேன்..." கண்ணீரோடு சொன்னாள்.

"நல்லாயிருப்பீங்க... எதையும் வெளிய காட்டிக்காதே...." என்றவாறு மகளின் நெற்றியில் முத்தமிட்டவள் ஓவென்று கதறி அழுதாள்.

தேவகோட்டைப் பேருந்து நிலையம்.... இரவு 7.00 மணி...

சென்னை செல்லும் பேருந்தின் அருகே அண்ணாத்துரை, சரவணன், அறிவு மற்றும் ராம்கி நின்று கொண்டிருந்தனர்.

"இங்க பாருடா... நாளைக்கு காலையில பதினோரு மணிக்கெல்லாம் இங்கிருந்து புவனாவோட கிளம்பிடுவோம். புதுக்கோட்டை வந்து வேற வண்டி மாறிடுவோம். அப்புறம் திருச்சியில பிரண்ட் வீட்ல தங்கிட்டு அடுத்தநாள் டிரைன்ல சென்னை வருவோம்... நீ சேகர்கிட்ட பேசி மற்ற முடிவுகளை எடுத்துக்க... ஆமா அம்மாவை எங்க இருக்கச் சொல்லியிருக்கே?" கேட்டான் அண்ணாத்துரை

"அம்மாவை அக்கா வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்... மாடு ஆடுகளை சுமதி அக்கா பாத்துக்கும். அண்ணி அடிக்கடி போய் பாத்துப்பாங்க... அப்புறம் அம்மாவை அங்கிட்டே கூட்டிப் போயிடலாம்ன்னு நினைக்கிறேன்."

"பரவாயில்லை உனக்கு எல்லாரும் உதவுறாங்க... ஆமா அம்மாவைக் கூட்டிப் போகப்போறியா... நீ கூப்பிட்டாலும் அவங்க வரணுமில்ல..." - இது சரவணன்.

"பாக்கலாம்... எல்லாம் நல்லபடியா நடக்கும்தானே? பாவம்டா புவி... அவளுக்கு இதுல இஷ்டம் இல்லை... பெத்தவங்க சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு சொல்லுவா... இப்ப எங்க காதலும் இப்படி ஆயிருச்சேடா..."

"ஆமாடா அவ வீட்ல ஒத்துக்கிட்டு உனக்கு கட்டி வைப்பானுங்கடா... அட ஏன்டா... அவனுகளே உன்னை வெட்டணுமின்னு திரியிறானுங்க... இங்க பாருடா சினிமாவுல கூட லவ்வை ஈசியா சேத்து வைக்க மாட்டானுங்க... வெட்டுக்குத்துத்தான் முதல்ல... அப்புறம்தான் சேருவானுங்க... சட்டுப்புட்டுன்னு ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டீங்கன்னா எல்லாரும் வந்து சேந்துருவானுங்க... சரி கிளம்பு... சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்...." என அவனை பேருந்தில் ஏற்றிவிட்டான் அண்ணாத்துரை.

றுநாள் காலை முதலே புவனாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்பாவும் அண்ணனும் சென்றுவிட கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். அம்மா தேற்ற, பதினோரு மணிக்கு அம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டு அவள் கொடுத்த துணி முட்டையுடன் கண்மாய்க்கு துவைக்கப் போவது போல் கிளம்பினாள்.

இதுவரை பட்டாம்பூச்சியாய் வலம் வந்தை வீட்டை விட்டுப் போகிறோம் என்ற நினைப்பு கண்ணீரை வர வைக்க, அழுவது தெரியாமல் துடைத்தபடி வாசலில் இறங்கிய போது வைரவனின் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த படைப்பு
சிறப்பாக நகருகிறது
தொடருங்கள்

Unknown சொன்னது…

அம்மாவின் ஆசியுடன்...............கண்கள் குழமாயிற்று,............நமக்கும் தான்.

தனிமரம் சொன்னது…

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை வாழ்த்துக்க்ள் சார்!

Menaga Sathia சொன்னது…

அம்மாவின் ஆசியுடன் சேரப்போவதில் மகிழ்ச்சியா இருக்கு,படிக்கும் போதே கண்களில் கண்ணீர்....

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-