மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 ஜூலை, 2018

சினிமா : சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்)

Image result for sudani from nigeria

'ஹேய் சூடானி...'

'ஐ ஆம் ப்ரம் நைஜீரியா...'

'ஓ... சூடானி ப்ரம் நைஜீரியா...'

படத்தோட பேரை ஒரு புட்பால் மேட்சுக்கு அப்புறம் பார்வையாளனாக வந்த ஒருவன் போட்டியின் நாயகனான சாமுவேல்கிட்ட கேட்பதில் படத்தின் பெயர் வந்துவிடுகிறது. 

நம்மவர்களோடு ஓப்பிடும் போதும் மலையாளிகள் ஒரு சின்னக் கதையை, தம்பி நௌஷாத் பாணியில் சொன்னால் 'நாட்'டை வைத்துக் கொண்டு மிகச் சிறந்த படத்தைக் கொடுப்பதில் வல்லவர்கள்.  அப்படித்தான் இந்தப் படமும் வந்திருக்கிறது. 

நாம எப்போது இப்படியான படங்களை எடுக்கப் போகிறோம் என்றார் நண்பர். இந்தப் படங்களை ரீமேக் பண்றேன்னு கொலை பண்ணாமல் இருந்தாலே போதும் என்றார் மற்றொருவர்... மூன்றாம் கலைஞரின் 'நிமிர்' பார்த்திருப்பார் போலும்.

நாம எப்படி கிரிக்கெட்டுக்கு முன்னால விழுந்து கிடக்கிறோமோ அப்படித்தான் மலையாளிகள் புட்பாலின் முன்னால்... அர்ஜெண்டினா தோத்துப் போச்சுன்னு தற்கொலையெல்லாம் பண்ணிக்கிட்டானுங்களா இல்லையா... 

இந்தப் படம் புட்பால் பின்னணியில் பயணித்தாலும் ஒரு தனி வீரன் அடிபட்டு விழ, அன்பு என்னும் வலைக்குள்... அவன் பின்னே பயணிக்கிறது அழகிய காட்சிகளுடன்.

கல்யாணத்துக்குப் பெண் பாக்கும் போது மாப்பிள்ளை என்ன பண்றார் என்ற கேள்விக்கு சும்மாதான் இருக்கார்ன்னு சொன்னா பெரும்பாலும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க... அப்படித்தான் சரியான வேலை இல்லாத காரணத்தால் பார்க்கும் பெண்ணெல்லாம் தட்டிப் போக, தான் மேலாளராய் இருந்து நடத்தும் ஒரு புட்பால் அணியின் வெற்றியில் சம்பாதிக்கும் காசை வைத்து வீரர்களுடன் மகிழ்வாகவே வாழ்கிறான், மிகப் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் மஜீத்.

நைஜீரியாவில் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பாட்டி, தங்கைகளுடன் வாழ்ந்து வருபவம் சாமுவேலுக்கு குடும்ப வறுமையை விரட்ட பணம் வேண்டும். அந்த பணத்துக்காக பல வேலைகள் பார்க்கிறான். இறுதியில் உள்ளூர் புட்பால் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று பணம் சம்பாதிக்க கேரளா வந்து சேர்க்கிறான்... நாம வளைகுடா நாட்டில் வந்து கிடப்பது போல். 

இவனுடன் சேர்த்து மூன்று நைஜீரியன்களை தன் அணியில் வைத்திருப்பதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது மஜீத்தின் 'MYC' அணி. யார் கண்பட்டதோ அணியின் நட்சத்திர வீரனான 'ஷூடு' என்றழைக்கப்படும் சாமுவேல் பாத்ரூமில் விழுந்து அடிப்பட்டு, சில மாதங்கள் எழுந்து நடமாட முடியாது என்ற நிலைக்கு ஆளாகிறான்.

அவனை மருத்துவமனையில் வைத்துப் பார்த்தால் அதிக செலவாகும் என்பதால் வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்துக் கொள்ளும் மஜீத், அவனை ஊருக்கு அனுப்பலாமா... இங்கு வைத்துக் கொள்ளலாமா எனத் தவிக்கிறான், அதற்குக் காரணம் பணமே.

பணம் ஒரு மனிதனை என்ன பாடு படுத்தும் என்பதை உணர்ந்தவனால் மட்டுமே சொல்லமுடியும். நாமதான் ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொன்னப்பவே உணர்ந்துட்டோமேன்னு  சொல்றீங்களா..? சரி விடுங்க.

அடிபட்டவனுக்கு ஒரு அம்மா அல்ல இரண்டு அம்மாக்களாய் மஜீத்தின் அம்மாவும்...அவரின் தோழியும்... எத்தனை பாசம் இந்தப் பெருசுகளிடம்... உடல் நலம் தேற... அவனின் பாட்டியின் மரணத்துக்கான செய்முறை... அவன் எழுந்து நடமாட வேண்டி பள்ளிக்குச் செல்லுதல் என எத்தனை நேசம் இந்த அம்மாக்களுக்குள்....  

மொழி புரியாவிட்டாலும் 'மம்மா' என்று சாமுவேல் அழைக்கும் போதெல்லாம் தன் மீதான கோபத்தில் மகன் தன்னை அம்மா என்றழைக்காமல்... பேசாமல்... அந்த வீட்டுக்குள் வாழ்வதை நினைத்து அழும் தாயிடம் 'மம்மா... டோண்ட் கிரை' என்று சொல்லும் போது நமக்கும் அழுகை வரலாம்.. வரும்.

காவிரி இல்லாது காய்ந்து கிடக்கிறோம் என நாம் புலம்புவதை நினைத்து மனம் இறங்க மறுக்கும் கர்நாடகாவிடம் நீ மறுத்தால் நான் விட்டு விடுவேனா என வருணபகவான் அடித்து ஆடி திறக்க வைக்க, நாமும் மண்ணெல்லாம் அள்ளி விற்று விட்டு குற்றுயிரும் குறை உயிருமாய்க் கிடக்கும் காவிரித்தாயின் மடி நனைந்தோடும் தண்ணீரை கடலுக்கு கொடுத்தது போக பாதியளவுக்கேனும் தேக்கி,  விவசாயம் செய்து மனம் மகிழ்கிறோம். 

எட்டு வழிச் சாலை எனக்குத் தேவை எனவும் நான் வேண்டியதால்தான் மழை வந்தது எனவும் ஆட்டம் போடுபவர்கள் மத்தியில் நாமும் நம் பங்குக்கு புதிய இந்தியா பிறந்து விட்டதா இல்லையா... கலைஞர் இறப்பாரா மாட்டாரா... பதினேழு பேர் கெடுக்கும் வரை அந்த சிறுமி என்ன செய்தாள் என என்னவெல்லாமோ பேசினாலும் நம் நாடு நமக்கு சுதந்திரத்தை மட்டுமல்ல சொர்க்கத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 

எங்க வீட்டுப் போரெல்லாம் மணிக்கணக்கில் ஓடினால்தான் டேங்க் நிறைகிறது. பக்கத்து வீடுகளில் எல்லாம் போரில் தண்ணீர் வராமல் காற்று மட்டுமே வர, புதிய குழாய்களை இறக்கி விட்டார்கள் என்றாலும் தண்ணீர் பஞ்சம் என்பது குடங்களைத் தூக்கிக் கொண்டு கிணறு கிணறாக அலைந்த பள்ளி நாட்கள் அளவுக்கு அவ்வளவு மோசமானதாக இன்னும் நம் பகுதிக்குள் இறங்கிவிடவில்லை. 

நைஜீரியாவைக் காட்டும் போது தண்ணிக்கு ரேசன்... பணம் கொடுத்து வாங்கி...  சோமாலியர்களைப் போன்றுதான் அவர்களும் இருக்கிறார்கள். என்ன சற்றே உடலில் சதைகள் இருக்கின்றன... எத்தனை எத்தனையோ கஷ்டங்களை அந்த மக்கள் அனுபவிக்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை நமக்களிக்காத இறைவனுக்கு நன்றி.

ஒரு புதிய மனிதனோ... புதிய பொருளோ வீட்டுக்கு வரும்போது அக்கம் பக்கத்தார் சன்னல் வழி எட்டிப் பார்ப்பது கிராமத்துக்கே உரிய இயல்புதானே... பெண் பார்க்க வந்தாலும் அப்படித்தானே பார்ப்பார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஊருக்குள் முதலில் வந்த தொலைக்காட்சிப் பெட்டில் படம் காண இப்படித்தானே நின்றிருக்கிறோம். அப்படித்தான் அடிபட்டு ஸ்டெக்சரில் கொண்டு வரப்படும் சாமுவேலை எட்டிப் பார்க்கிறது ஒரு சிறுவர் கூட்டம்.  நம்ம பயலுக ஒரு கட்டம் போட்டு சிக்ஸ் அடிச்சா அவுட்டுன்னு கிரிக்கெட் விளையாடுற மாதிரி அவனுக புட்பாலோட திரியிறானுக... பின்னாளில்  சாமுவேலின் நண்பர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்... நம்ம ஷுடுவும் கோச்சாக ஆகிறான்.

படுத்த படுக்கையாய்  இருப்பவனிடம் பீரைக் காண்பித்ததும் அவனின் முகத்தில் வரும் சந்தோஷம் அடுத்த நொடி உடைக்கிறேன் பேர்வழி என தரையில் போட்டு உடைக்கும் நண்பனால் காணாமல் போய் விடுகிறது. காட்டுக் கத்தாலாய் கத்துகிறான். இதே போன்ற ஆற்றாமையை மஜீத்தும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறான். இருப்பினும் அன்பு ஜெயித்து ஆற்றாமையை அழித்து விடுகிறது. அதில் மஜீத்தின் ஆங்கிலமும் அளவளாவுகிறது.

மேனேஜர் நீ அம்மாவிடம் பேசாமல் இருக்கக்கூடாது என அந்த அன்னையின் கண்ணீருக்கு ஆதரவாய் மஜீத்திடம் பேசும் போதும்... பாட்டி செத்துப் போச்சு நான் ஊருக்குப் போகணும் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் போதும்... பெண் பார்க்க போறவனிடம் எனக்கும் ஒருத்தி இருக்கிறாள் என போட்டோவைக் காட்டி வாழ்த்துச் சொல்லி அனுப்பும் போதும்... சுவரில் படம் வரைந்து அம்மாக்களிடம் காட்டி மகிழும் போதும் மனசுக்குள் நிற்கிறான் சாமுவேல்.

அடிபட்டவனுக்கு செலவு செய்யணுமா... எழுந்து வருவானா மாட்டானா... ஊருக்கு அனுப்பலாமா... என எத்தனையோ எண்ண ஓட்டமிருந்தாலும்.. பார்க்கும் பெண்ணெல்லாம் தன்னை வெறுத்து ஓதுக்குதே என்ற வருத்தம்... போட்டிகளில் ஜெயிக்கும் சந்தோஷத்தை வீரர்களுடன் கொண்டாட்டம்... அம்மாவை... அம்மாவைக் கட்டிக் கொண்ட அப்பனை வெறுத்து ஒதுக்கி வாழ்தல்... என அடித்து ஆடும் மஜீத் (ஷோபின்), சாமுவேலின் மலம் எடுத்து வெளியே போடும் மனிதாபிமானம் நிறைந்தவனாக... மன நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

எங்கோ பிறந்து தன் வீட்டில் முடங்கிக் கிடக்கும் வேற்று மதத்தினனை தன் மகனாய் பார்க்கும், மகனின்  அன்புக்காக ஏங்கும் மஜீத்தின் அம்மாவும், அவரின் தோழியும் மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.  அன்னையை மணம் புரிந்து கொண்ட காரணத்தால் மஜீத் தன்னை  ஒதுக்கினாலும் அந்த வீட்டுக்கு விடுமுறையில் வந்து செல்லும் வாப்பாவும் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

ஒரு ஏழை தன்னால் இயலாது என்றாலும் தன்னை நம்பி வந்தவனை எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டுமென நினைக்கும் போது வெளிநாட்டவனை தங்க வைத்திருப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள், அதை எதிர் கொள்ளும் விதம், பாஸ்போர்ட் தொலைந்த நிலையில் அவனை எப்படி ஊருக்கு அனுப்புவது என அலைபாயும் மனதுடன் ஓடித்திரிதல் என வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷக்காரியா.

ஏலே எத்தனை பாட்டிருந்தாலும் ஒரு குத்துப் பாட்டு வேணும்... அது கஸ்தூரியா இருந்தாலும் பரவாயில்லை... அவரு பாட்டுக்கு... ஓரு பக்கம் தொப்புள்காட்டி ஆடிக்கிட்டு இருக்கட்டும் என தமிழ் சினிமா தரமாய்ப் பயணிக்கும் போது நாயகியே இல்லாமல் சேவல் பண்ணையை வைத்தே படமெடுத்து உலக சினிமாவாய் கொடுப்பது கூட ஒரு தில்தான்... 

நாம இன்னமும் அரிவாளும் ரத்தமும்... ஏய் உய்யின்னு டாட்டா சுமோ பறத்தலுமாய் பயணிக்க சேரநாடு பசுமையான படங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் படங்களை அள்ளிக் கொடுக்க நாம எப்போதேனும் கடைக்குட்டி சிங்கங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

என்னய்யா இந்தாளு நாயகி இல்லாம... தொப்புள் காட்டாம... சினிமா எடுத்து... சை... என்ன படமோ... இப்படியெல்லாம் எடுக்க முடியுமா... இல்ல எடுக்கலாமா... சாமி குத்தமில்லையா... அப்படின்னு எல்லாம் யோசிக்க விடாம நம்மளையும் சாமுவேல் பக்கத்துல படுக்க வைத்து... அந்த அம்மாக்களோட அன்பில் நனைய வைத்து... மஜீத் பின்னால அலையவிட்டு... கடைசியில கண்ணுல தண்ணி வர வச்சிடுறாரே... வாழ்த்துக்கள் இயக்குநர் ஷக்காரியா. உமக்கு இது முதல் படமாய்யா... வச்சி செஞ்சிட்டே போ.

வெற்றிக்குப் பின் சட்டையைக் கழற்றிச் சுற்ற தாதா வேண்டும் கிரிக்கெட்டில்... ஆனால் புட்பாலில் வெற்றிக்குப் பின் பனியனை மாற்றிக் கொள்ளுதல் இயல்பான ஒன்று.  சாமுவேல் தன் பனியனைக் கழற்றிக் கொடுக்க, மஜீத்தும் தன் பங்கிற்கு தனது பனியனைக் கொடுக்க, அந்த ஏழைகளின் பரஸ்பர அன்பு உயர்ந்து நிற்கிறது ஒரு உன்னத சினிமா.

போலீஸ் ஸ்டேசனுக்கு  வரச் சொன்ன போலீசு இருங்கய்ய பத்து நிமிசத்துல வாறேன்னு சொல்லிட்டுப் போய் இரவு பத்து மணிக்கு வந்து நீங்க இன்னும் போகலயான்னு கேட்டு சரி போங்கன்னு சொன்னான் பாருங்க... எதுக்கு உக்காரச் சொன்னாருன்னு மணிக்கணக்குல உக்காந்து கடைசியில ஒண்ணுமில்லாம கொடுத்த காசு போச்சுன்னெல்லாம் வர வேண்டாம்... கொடுக்குறதுக்கு மேல மன நிறைவு கிடைக்கும் கண்களில் கண்ணீருடன்.

ஆமா பாஸ்போர்ட் கிடைச்சிருச்சாய்யா... போலியாமே... பார்த்தா தெரியப் போகுது கிடைத்ததா இல்லையா என்பது...

சூடானி ப்ரம் நைஜீரியா... பார்க்க வேண்டிய மிகச் சிறந்த படம்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 ஜூலை, 2018

சினிமா : கடைக்குட்டி சிங்கம்

Image result for கடைக்குட்டி சிங்கம்

மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக்குட்டி சிங்கம்'. இதற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.

மாயாண்டி குடும்பத்தார் பார்ட்-2 என ஒரு நண்பர் சொல்லியிருந்தார். அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே... அக்கா, தம்பியின்னு ஒரு அழகான குடும்பத்துக்குள்ள வாழ்ந்துட்டு வந்த வாசனையைக் கொடுக்குதே... ரத்தவாடை வீசாமல் ஒரு சினிமாவைக் கொடுத்திருக்கிறாரே... அதுவே இன்றைய தமிழ்ச் சினிமாவின் போக்கில் பெரிதில்லையா..?

படம் விவசாயி, விவசாயம்ன்னு பேசினாலும், சில காட்சிகளில் வயலில் உழவு செய்வது போலவும், வைக்கோல் டிராக்டரை ஓட்டி வருவது போலவும் காட்டினாலும், நிறைய இடங்களில் விவசாயிக்கு குரல் கொடுத்திருந்தாலும், காதல் அறுபடையின் காரணமாக உடன் பிறப்புகளுக்குள் வரப்பு எழ ஆரம்பிக்க, அந்த வரப்பில் மண் அணைத்து மகிழ நினைக்கும் வில்லன் என படம் வேறு பாதையில்தான் நகர்கிறது.

வானவன் மாதேவி, வேலு நாச்சியார், பத்மாவதி, பஞ்சவன் மாதேவி  என படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அழகான பெயர்கள். கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.

நாலும் பெண்ணாப் பிறந்திருச்சே... ஆண் வாரிசு வேணுமேன்னு மனைவியின் தங்கை பானுப்பிரியாவைக் கட்டிக் கொள்ளும் சத்யராஜூக்கு, பானுப்பிரியா மூலமாக பிறக்கும் குழந்தையும் பெண்ணாய் பிறக்க, மூன்றாம் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவரே கதையின் நாயகன் கார்த்தி.

அக்காள்கள் மீது பாசமழை பொழியும் தம்பி, தம்பியே உலகமென இருக்கும் அக்காள்கள்... அக்காள் மகள்களில் இரண்டு பெண்கள் மாமனைக் கட்டிக் கொள்ளும் போட்டியில்... மாமனுக்கோ வில்லனின் அக்காள் மகளின் மீது மோகம்... காதலுக்கு அப்பா ஆதரவு என்றாலும் இதனால் குடும்பங்கள் பிரியக்கூடாது என்பதே அவரது கோரிக்கை... இதன் பின்னான நிகழ்வுகளும் வில்லனுடனான மோதலுமே இடைவேளைக்குப் பின்னான கதையாய்....

இடைவேளையின் போது அக்காள்களின் குணங்களைப் பற்றிய பேச்சு வரும்போது ஒரு மகாபாரதத்தையும் (ஐந்து அக்காள்கள்) ஒரு இராமாயணத்தையும் (நாயகியின் மாமா) சமாளிக்கணும் என்று சூரியிடம் சொல்கிறார் கார்த்தி. 

தங்கள் மகள்களில் ஒருத்தியைக் கட்டிக் கொள்ளாமல் யாரோ சோடாக்காரியைக் கட்டிக்கப் போகிறானே என அக்காள்களும் மாமாக்களும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக பார்த்துப் பேசியும் எதுவும் ஆகவில்லை. இடையில் வில்லனும் அக்காள் கணவர்கள் இருவருடனும் கூட்டணி போட, நாயகனின் காதல் அறுவடைக்காக போராட வேண்டியதாகிவிடுகிறது. தண்ணீர் கிடைகாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயியாக நாயகனின் நிலை.

வானம் பார்த்த பூமியாய் நாயகி காத்திருக்க, அறுவடை செய்ய ஒரு தண்ணிதான் வேணும்... மழை இல்லை... கண்மாயில் தண்ணீர் இல்லை.. பயிர் காய்கிறது என அருகில் இருக்கும் தோட்டத்தில் இருந்து மோட்டார் தண்ணியை மணிக்கு இவ்வளவு பணம் எனக் கொடுத்து வாங்கி விளைய வைப்பது போல் அக்காள்கள் பின்னால் அழைகிறார் நாயகன்.

சிவகாமியின் செல்வனாக வரும் சூரிக்கான ஒரு வரி வசனங்கள் அருமை.... இறுதிக் காட்சி வரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். இப்படி அவர் சிரிக்க வைப்பது அரிது. அவரது நகைச்சுவைகள் எல்லாமே நகைக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலையே ஏற்படுத்தும் என்றாலும் சதீஷ், சந்தானத்துக்கு இவர் மேல். இந்தப் படத்தைப் பொறுத்தவரை மனுசன் அடிச்சி ஆடியிருக்கிறார். செம.

பாசப் போராட்டத்தின் பின்னே கோவிலில் நடக்கும் இறுதிக்காட்சியில் கார்த்தி அழ, அம்மா அழ, பாட்டி அழ, அக்காள்கள் அழ, மாமாக்கள் அழ, மருமக்கள் அழ.... பாசப் போராட்டம் உறவுகளுக்குள் அடித்து ஆட என்னை அறியாமல் நானும் அழுதேன். 

என்னைப் பொறுத்தவரை நாம் இனிமேல ஒரே வயிற்றில் பிறக்கப் போகிறோம் என்பதை எப்போதும் சொல்வேன். உடன் பிறப்புக்களுடன் சண்டை சச்சரவின்றி வாழ்ந்து செல்லுதல் வரம். அந்த வரம் வேண்டும். அப்படியான வாழ்க்கை வாழ்தல் சிறப்பு. அந்த உறவுகளுக்குள்ளான சிக்கலும் அதன் தீர்வின் போதான பாசப் போராட்டங்களும் என்னை அறியாமல் அழ வைத்தது.

நான் தூக்கி வளர்ந்த பெண்கள்... என்னோட தங்கச்சி மாதிரி பாத்துட்டேன்... கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முகத்தைப் பார்த்தா அக்காக்களும் அம்மாவும்தானே தெரிவாங்க என கார்த்தி சொல்வார். தன் மாமாவுக்கு கட்ட வைத்திருந்த பெண்ணை, தூக்கி வளர்த்த புள்ளையோட குடும்பம் நடத்தச் சொல்றீங்களேன்னு என் தோழியைக் கட்டிக் கொள்ள மறுத்த மனிதரைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் குடும்பத்தார் கட்டாயத்தால் அவர் மணம் புரிந்து கொண்டார். இங்கு கார்த்தி அதைச் செய்யவில்லை. 

பாடல்கள் அருமை... சண்டைக்காரி பாடல் செம.

பெருநாழி ரணசிங்கமான சத்யராஜூக்கு அதிக வேலை இல்லை என்றாலும் வரும் இடங்களில் எல்லாம் கலக்கல்.  முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகர் இறுதிக் காட்சியில்தான் பேசுகிறார்... அந்தப் பேச்சு தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல. பானுப்பிரியாவுக்கும் அதிக வேலை இல்லை. அக்காள் மகள்களுக்கு அளவான நடிப்பு. வில்லன் அடிவாங்குவதற்கென்றே. அக்காள் கணவர்களில் இளவரசே நடிப்பில் முன்னணி, சரவணன், ஸ்ரீமன், மாரிமுத்து எல்லாருமே அவருக்குப் பின்னால்தான்.

குணசிங்கமாக கார்த்தி, கிராமத்துக் கதைக்களம் என்றால் மிகச் சிறப்பாக நடிக்கிறார். இதிலும் நல்ல நடிப்பு... பாசப்போராட்டத்தில் கதையோடு ஒன்றிய நடிப்பு. இது போன்ற படங்களில் அடிக்கடி நடிப்பது நல்லது. அண்ணன் வழி செல்வதைக் காட்டிலும் இதுவே அவருக்கு நன்மை பயக்கும்.

'ஒரு நாள் விவசாயியா வாழ்ந்து பாரு... அது கூட வேண்டாம் விவசாயியோட இருந்து பாரு அப்பத் தெரியும்', 'எல்லாருக்கும் பேருக்கு முன்னால இஞ்சினியர், டாக்டர்ன்னு போட்டிருக்கீங்க, எனக்கு விவசாயின்னு போட்டிருக்கலாமுல்ல'  என விவசாயிக்கான வசனங்கள்.

எல்லாரையும் ஒண்ணா வச்சி ஒரு போட்டோ எடுக்கணும் என்பது கதையின் ஆரம்பத்தில் வரும் வசனம். கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இறுதியில் போட்டோ எடுப்பது போல்தான் குரூப் போட்டா வாய்த்திருக்கிறது.

மொத்தத்தில் கடைக்குட்டி சிங்கம் ஆக்ரோஷமாக இல்லாமல் பாசத்தின் மூலம் மனம் கவர்க்கிறான்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 14 ஜூலை, 2018

மனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்

ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவது அண்ணனும் தம்பியும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்ததால் எல்லாருமாக இருந்து மகிழ்ந்த நாட்கள் முகநூல், வலைப்பூ என எதிலும் நுழையாமல் மகிழ்வாய் நகர்ந்தன. 

குடும்பத்துடன் எங்கும் வெளியில் செல்லவில்லை, நண்பர்களைப் பார்க்கவும் செல்லவில்லை. எந்த வேலையாக, எங்கு சென்றாலும் வண்டியில் எனக்கு முன்னே விஷால் ஏறிக் கொள்வான்.எப்போதும் என்னோடு பயணித்தவன் அவன் ஒருவனே. அதனால்தான் இந்த முறை அவனே நிறைய அழுதான்...:( பாப்பா பத்தாவதில் அடியெடுத்து வைப்பதால் அவருக்கு வகுப்பும் டியூசனும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ள, பக்கத்து ஊருக்குக் கூட எங்களுடன் வரமுடியவில்லை.

பழனி ஐயாவைக் கூட ரோட்டில் வைத்துத்தான் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னவன் வரும் வரையிலான போராட்டங்களில் அங்கும் செல்லவில்லை. அம்மாதான் ரொம்ப பாசமாக இருப்பார் எப்போதும்... இந்த முறை அவரைப் பார்க்கவில்லை. குலதெய்வம் கோவிலான அழகர் கோவிலுக்குக் கூட விடுமுறையின் இறுதித் தினங்களே செல்ல வாய்த்தது. அன்றுதான் மனைவியின் பிறந்தகத்திலும் தலைகாட்டி வந்தோம்.

குடந்தை சரவணன் அண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், அகல் சத்யா, திண்டுக்கல் தனபாலன் அண்ணன் மீரா செல்வக்குமார் அண்ணன் என பலரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ஆனால் அதற்கான நாட்கள் அமையவில்லை. அப்படியிருந்தும் முத்துநிலவன் ஐயாவின் மகன் நெருடா இங்கிருப்பதால் ஊருக்குப் போய் வாருங்கள் என்று சொல்லியிருந்தார். அதற்கான நேரமும் நாளும் தள்ளிப் போக, ஒருநாள் போய் வந்தே ஆகவேண்டுமென  ஐயாவுக்கு போன் செய்தால் மாலை நாலு மணிக்கு திருச்சி போறேன் என்றார். அன்றைய நாளை விட்டால் அடுத்த நாள் செல்ல வாய்க்காது என்பதால் அதற்கு முன் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.

ஒரு மணி நேரம் மிஞ்சிப்போனால் ஒண்ணே கால் மணி நேரத்தில் போயிடலாம் என முடிவு செய்து உறவினர் கார் ஓட்ட, பாப்பா தவிர்த்து நாங்கள் மூவரும் கிளம்பினால் தேவகோட்டையில் இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை ரோடு பணி.... அதற்குள் நீந்திச் சென்று  புதுகை அடைந்து மீண்டும் தஞ்சாவூர் ரோட்டில் மெல்லப் பயணித்து ஐயா வீட்டை அடையும் போது மணி நான்கை நெருங்கியிருந்தது.

எங்கே வருகிறீர்கள் என அடிக்கடி போன் செய்து... வழி சொல்லி... மாடியில் காத்து நின்று எங்களை வரவேற்ற ஐயா, திருச்சி  செல்லத் தயாராக இருந்தாலும் எங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி பேசிக் கொண்டிருந்தார்.... அம்மா இருந்தால் உங்களை மிகச் சிறப்பாக உபசரித்திருப்பார், நண்பர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லிக் கொண்டே மிக்ஸர், முறுக்கு கொடுத்து காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்து மிகச் சிறப்பாக உபசரித்தார்.

மாடிக்கு அழைத்துச் சென்று புத்தகங்களைக் காட்டி, நெருடாவுக்கு புத்தகங்கள், எனக்கு... விஷாலுக்கு என தனித்தனியாக கொடுத்தபோது புத்தகங்களைப் பார்த்து விஷாலுக்கு ஆச்சர்யம்... நம்ம ஐயா (பழனி ஐயா) வீட்டுல இருக்க மாதிரி இருக்குப்பா என வியந்தான். நம்ம வீட்டிலும் இது போல புத்தகங்கள் வாங்கி வைக்கணும்ப்பா என்றேன் பின்னர் வீடு திரும்பும் போது.

ரொம்ப நேரம் பேசவில்லை... ஒரு போட்டோவும் எடுக்கவில்லை... பேசிய கொஞ்ச நேரத்தில் எங்களை தன் அன்புக்குள் அழுத்தமாய் அணைத்துக் கொண்டார் ஐயா. உங்க கதைகள் அருமையா இருக்கு... நல்லா எழுதுறீங்க... புத்தகமா எப்ப கொண்டு வரப்போறீங்க என்று கேட்டார். நம் கதை நல்லாயிருக்கு என அவர் சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.

மீரா செல்வக்குமார் அண்ணனையும் சந்திச்சிடலாம்ன்னு நினைச்சேன். அவர் திருச்சியில் இருப்பதாய் ஐயா சொன்னார்கள். இந்த முறையும் அண்ணனைப் பார்க்க முடியாதது வருத்தமே.

இந்த முறை மிகவும் ஒட்டிக் கொண்டது எங்கள் விஷால் வளர்க்கும் ரோஸிதான்... என்ன ஒரு பாசம் அதற்கு...

******

இப்போது மனிதர்களை கேன்சர் கொன்று கொண்டிருக்கிறது. ஊரில் இருக்கும் போது நிகழ்ந்த இழப்புக்களில் அதிகம் கேன்சரால்தான். அதுவும் சிறிய வயதுடையோரெல்லாம் பலியாவது வேதனை. 

******

கருவேல நிழல் என்னும் வலைப்பூவில் கவிதைகள், கதைகள், புரையேறும் மனிதர்கள் என எழுதிக் கொண்டிருந்து விட்டு சில வருடங்களுக்கு முன்னர் சிவகங்கையில் போய் செட்டிலான பா.ராஜாராம் அவர்களின் மரணச் செய்தி கேட்ட போது அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. என்னைப் போல் பலரை மகனே என்று அழைத்த சித்தப்பா அவர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******

நம்ம கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் அப்பா இறந்த செய்தியை முகநூல் மூலமாக அறிய முடிந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்பாவின் இறப்பில் மீளாத் துயரில் இருக்கும் ஐயா இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******
தீர்வில்லா பிரச்சினைகள் இல்லை... எல்லாப் பிரச்சினைகளும் தீர்வு உண்டு. நாளைய நாள் நல்லதாய் அமையும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறேன். விரைவில் எல்லாம் சுகமாகும் என்ற எண்ணம் மனசுக்குள் ஆலவிருட்சமாய்....

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 9 ஜூலை, 2018

‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)


சில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு முறைப்படி வாசகர் பார்வை அதிகம் கிடைக்கப் பெறாத கதை... முடிவை மாற்றியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது இப்போது. பேய்க் கதைகள் எழுத நாம் என்ன பி.டி.சாமியா..? நமக்கு இதெல்லாம் வருமான்னு ஒரு முயற்சி அவ்வளவே. எது எப்படியோ உங்கள் பார்வைக்காக இங்கு கதை விரிக்கிறேன்.... உங்களின் உள்ளார்ந்த கருத்துக்களைச் சொல்லுங்க.

**************

ப்படி நள்ளிரவில் வந்து இறக்கி விடுவான் என்று ராமு நினைக்கவே இல்லை. கிளம்பிய நேரத்துக்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் தேவகோட்டை வரவேண்டிய பேருந்து, நாப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் நகராமல், இடையில் டயர் பஞ்சரானது வேறு சேர, பனிரெண்டரை மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான்.

தேவகோட்டையில் இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் ஊருக்கு எப்படி இந்த இரவில் செல்வது என்பதே இப்போது அவனது உள்ளத்துக்குள் ஓடும் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. அப்பா போன் பண்ணும் போதே எப்படியும் நடுராத்திரிதான் வந்து சேரும்போல நீங்க வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

நண்பன்... நண்பன் என்ன நண்பன், சின்னத்தை மகன் ராஜாவுக்கு போன் பண்ணின போது 'வேலையா திருச்சிக்கு வந்திருக்கிறேன் மாப்ள... ரெண்டு நாளாகும் வர' என்று சொல்லிவிட்டான்.

அண்ணன் சுப்பு இருந்தால் எந்த நேரம் என்றாலும் வந்து விடுவான். அவனும் சென்னைக்கு வேலைக்குப் போய் ஒரு  மாதம்தான் ஆகிறது.

என்ன செய்யலாம்...? ஆட்டோக்காரர்களைக் கூப்பிட்டால் அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நான் வரலைங்க... என்பார்கள்.  டாக்சிக்காரர்களோ ஒண்ணுக்கு மூனா வாடகை கேப்பார்கள். பெரும்பாலும் பொணம் ஏத்தும் வண்டிகளே வாறேன்னு சொல்லுவாங்க...

சுந்தரப்பய வீட்டுலதான் இருப்பான் ... அந்த நாய்க்குப் போனடிச்சா எடுக்கவே மாட்டேங்குது... மூதேவி தூங்குச்சுன்னா கும்பகர்ணந்தான்... இப்ப என்ன செய்யிறது என்ற பலமான யோசனையுடன் சங்கர் டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்தான்.

ராமு சரியான பயந்தாங்கொள்ளி என்று பெயரெடுத்தவன்... பத்தாவதில் மைக்கேல் சார்க்கிட்ட டியூசன் படிச்சப்போ ஆறு மணி இருட்டுல வீடு வர்றதுக்கே வேர்த்து விறுவிறுத்துப் போய் வருவான். அதுவும் சுடுகாடு ரோட்டை ஒட்டியிருப்பது அவனது பயத்துக்கு மேலும் பயம் சேர்க்கும். டியூசன் விட்டு வரும்போதுதான் மருந்தக் குடிச்சிச் செத்த மேல வீட்டுச் சந்திரன எரிச்சிக்கிட்டு இருந்தாக.... வந்து விழுந்தவன்தான்... மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தான்.

'நீ என்ன சின்னப்புள்ளையாடா.... உங்கண்ணன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வரச்சொன்னாலும் வருவான்... நீ என்னடான்னா இப்படிப் பயப்படுறே'ன்னு அம்மா திட்டினாலும் அவனோட பயம் மட்டும் போகவேயில்லை.

டவுனுல ராத்திரி எத்தன மணிக்கு வேணுமின்னாலும் நடந்து போகலாம். அங்க பேய்க்கதைகள் எல்லாம் அதிகமாக இருப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அப்படி இருட்டில் நடக்க முடியுமா என்ன...? எத்தனை பேய்க் கதைகள்... அதுபோக வில்லுக்கம்பு வெள்ளச்சாமி, முனீஸ்வரன்னு சாமிகளின் கதி கலங்க வைக்கும் கதைகள் வேறு...

எப்பத் தனியாகப் பயணிக்கிறானோ அப்பல்லாம் அவனுக்கு இந்தக் கதைகளும் நண்பர்கள் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் வர, முகத்தில் திட்டுத்திட்டாக வியர்க்க ஆரம்பிக்கும்... வாய் தன்னை அறியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கவசம் சொன்னால் பயம் போகும் என்பது அவனின் நம்பிக்கை.

சரி ஆட்டோக்காரனிடம் கேட்டுப் பார்ப்போம்... எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாமென்ற முடிவோடு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனான்.

'அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நேத்து நல்ல மழை இங்க... உங்க ஊரு ரோடு ரொம்ப மோசம்... இப்ப தண்ணி வேற கிடக்கும்... காசுக்கு ஆசைப்பட்டு வந்து லோல்பட  விரும்பலை... வண்டி வராது' என்றான் முழுக்குடியில் நின்ற ஆட்டோக்காரன். அவன் சொன்னதையே மற்றவர்களும் சொல்ல, சரி நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அப்பா அழைத்தார்... 'ம்... இப்பத்தான் வந்தேன்... ஆட்டோல்லாம் வர மாட்டேங்கிறானுங்க...நடந்து வந்திடுறேன்.' என்றான்.

'நீ அங்கயே நில்லு நான் வர்றேன்... எம்புட்டுத்தூரம் நடந்து வருவே' என்றவரை இந்த நேரத்துல நீங்க எதுக்கு வர்றீங்க... உங்களுக்கு ராத்திரியில கண்ணும் சரியாத் தெரியாது... மழையால ரோடெல்லாம் மோசமா வேற கிடக்காம்... நான் மெல்ல நடந்து வந்துடுறேன்... அரை மணி நேரத்துல வந்துருவேன்...' என்று அவரைத் தடுத்துவிட்டு நடந்தான்.

என்னென்னமோ நினைவுகள் மனதுக்குள் எழ, நடப்போமா வேண்டாமா... என்ற யோசனையும் மெல்லத் தலை தூக்கியது.

'நாம என்ன சின்னப்பிள்ளையா... ஆம்பளை... இனி இருட்டுக்குப் பயந்துக்கிட்டு இருந்தா கேவலமா இல்லை...' என்று வீராப்பாய் மனசுக்குள் நினைத்தவன் 'நடடா ராமு... நீ ஆம்பளை' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

தேவகோட்டையை விட்டு அவனோட ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் இறங்கிவனை இருட்டு தனக்குள் இழுத்துக் கொண்டது. விளக்கொளி விடுத்து இருளில் இறங்கும் போதே 'கதக்' என்றது மனசு.

இன்னும் இருட்டுப் பழகவில்லை என்பதால் மெல்ல அடியெடுத்து வைத்தான். வலது காலை வைத்த இடத்தில் தாவு இருந்திருக்கும் போல அதில் கிடந்த தண்ணிக்குள் 'சதக்'கென கால் இறங்க, 'சை...  இந்த ரோட்டைப் போட்டுத் தொலைய மாட்டேங்கிறானுங்க... காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா ரோடெங்கிட்டுப் போடுவானுங்க...' என் கடுப்போடு சற்று சத்தமாகவே சொன்னான்.

இருட்டு பழகிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தான், ரோட்டோரத்தில் குட்டையாய் தேங்கி நின்ற தண்ணிக்குள் கிடந்து கத்தும் தவளைகளின் 'கொர்ர்ர்... கொர்...' என்ற சத்தம் பயத்துக்கு தூபம் போட, மொபைலில் சாமிப் பாடல்களைத் தேடி 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்ற பாடலை ஓடவிட்டு இயர் போனை காதில் மாட்டிக் கொண்டான்.

நடையில் வேகம் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50-க்கு மாறியது.

லேசான குளிர் சிகரெட் கேட்டது... மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தவனுக்குள் மெல்ல மெல்ல பய நினைவுகள் மேலெழும்ப, நினைவுகளை மாற்ற முயற்சித்துத் தோற்றான்.

சின்ன வயதில் தன் வயதொத்த, தங்களுடன் ஓடிப்பிடிச்சி விளையாண்ட சித்ராவின் திடீர் மரணமும், ராத்திரியோட ராத்திரியா எரித்துவிட்டு வந்ததும் சாமி பாட்டையும் தாண்டி மனசுக்குள் எழ, சித்ரா எரிந்த தீயின் நாக்குகள் நெஞ்சுக்குள் சுட, படபடப்பு கூடியது. சை... எதுக்கு இப்ப தேவையில்லாத நினைவுன்னு நினைச்சிக்கிட்டே மனசுக்குள் வேறு நிகழ்வுகளை கொண்டு வர முயற்சித்துத் தோற்றான்.

செத்ததுக்கு அப்புறம் பேயா ஆட்டம் போட்டு சகட்டுமேனிக்கு அம்புட்டுப் பேரையும் பிடிச்சி ஆட்டுன சவுந்தரம் மனசுக்குள் வர,  'டேய் பேராண்டி... இருட்டுக்குள்ள போறியே... அப்பத்தா தொணக்கி வரவாடா...'ன்னு முதுகுக்குப் பின்னால குரல் கேட்பது போல் தோன்ற, பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது. 

திடீரென அவனுக்கு நாவறட்சி எடுத்தது, முதுகில் தொங்கிய பேக்கில் வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து நடந்தபடியே... அதுவும் வேகமாக நடந்தபடியே மடக் மடக்கென குடித்ததில் சட்டையை நனைத்துக் கொண்டான்.

'இங்கருடா... சுப்பிரமணி தூக்குப் போட்டுச் செத்தானுல்ல... அந்த மரத்துப் பக்கம் மட்டும் போவாதே... பிடிச்சிக்கிறானாம்... அவன் பிடிச்சா கயரை எடுத்துக்கிட்டு சாகப்போறேன்னு போறாங்களாம்...' எட்டாவது லீவுல ஆயா வீட்டுக்குப் போனப்போ மாமா மகன் கருப்பட்டி கண்ணன் சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வந்தது.

ரோட்டோரத்தில் நின்ற ஆலமரம் தலை விரித்து  நிற்கும் பேய் போல் தெரிய, இதயம் ஏறுக்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவன் நடையின் வேகம் இப்போது டிவிஎஸ் 50-ல் இருந்து ஹோண்டாவுக்கு மாறியிருந்தது.

அடக்கி வைத்த மூத்திரத்தை அடிச்சே தீர வேண்டும்... இனித் தாங்காது... எங்கே பயத்தில் பேண்ட்லயே போயிருவோமோ என்ற நிலை வந்தபோது நின்று அடிக்கப் பயம்... கண்ணை மூடிக்கொண்டு ஜிப்பைக் கழட்டியவனின் கால்கள் நிற்க மறுத்து நடக்க... யாருதான் ரொம்பத் தூரம் பேயிறாங்கன்னு பாப்போமா என அவன், முருகன், ரமேஷ் மூவரும் போட்டி போட்டது ஞாபகம் வர லேசான சிரிப்பும் வந்தது. நடந்தபடியே பெய்ய ஆரம்பித்தான்.

சுப்பிரமணியோட தோப்புக்கிட்ட போகும் போது உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. சின்ன வயசுல இருந்து இந்த இடத்துல உருளைக்கிழங்கு வாசம் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு... நல்லபாம்பு இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துருச்சு போல என்று நினைத்துக் கொண்டான்.

பய நினைவு மாறியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தூரத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கோபுர விளக்குகள் தெரிய ஆரம்பிக்க, சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.

அவனின் நடையின் வேகம் மட்டும் குறையவே இல்லை.

பள்ளிக்கூடம் படிக்கும் போது ராமசாமி ஐயா செத்ததுக்கு மண் முட்டியில வச்ச தண்ணியை பயலுக எல்லாம் சேர்ந்து கல்லெடுத்து எறிஞ்சி உடைச்சதும் புகையிலையை எடுத்து ஓணானைப் பிடித்து அதுக்கு வச்சிவிட்டு கிறுக்குப் பிடிச்சி ஓட வச்சதும் ஞாபகம் வர, 'ஏலே சுப்பையா மவனே... எம் முட்டித் தண்ணி எங்கடா... எனக்கு வேணும்.... தந்துட்டுப் போடா... போயில வாங்கித் தாடா.... வாயி நமநமன்னு இருக்கு 'ன்னு காதருகில் வந்து கேட்பது போல் தோன்ற பயம் மறுபடியும் மனசுக்குள் 'பச்சக்' என ஒட்டிக் கொண்டது.

சாமி பாட்டுக் கேட்டாலும் மனசுக்குள்ள ஆவி ஆட்டமாவே இருக்கே... சை... எதை நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறமோ அதையே நினைக்கச் சொல்லுது. எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இதுக மட்டும்தான் ஞாபகத்தில் வரணுமா என்ன...  பேய், பிசாசுன்னு சுத்திச் சுத்தி வருதே இந்த மனசு.... அவனுக்கு மனசு மீது கோபம் வந்தது.

சிறிது தூர நடைக்குப் பிறகு அவனைச் சுற்றி மல்லிகைப் பூவின் வாசம் அடிப்பது போல் தோன்றியது.  உதடு வறண்டு போக,  நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. சம்பந்தமில்லாம மல்லிகைப் பூ வாசம்... கொலுசு சத்தமும் கேக்குமோ என இயர் போனை எடுத்துவிட்டு கேட்டான். சில் வண்டுகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. அப்ப மல்லிகை வாசம் எப்படி...?

'ராமு... நல்லாயிருக்கியா... பாத்து எம்புட்டு நாளாச்சு... நீயெல்லாம் சந்தோஷமாத்தான் இருப்பே... நாந்தான்டா... சந்தோஷமில்லாமா... உடம்பெல்லாம் எரியுதுடா... என்னால முடியலைடா...' கோபத்தில் தீவைத்துக் கொண்டு செத்துப் போன பெரியப்பா மக அகிலா அழுது கொண்டே பேசுவது போல் இருந்தது. அக்காவுக்கு மல்லிகைப் பூன்னா உயிருல்ல என்பது ஞாபகத்தில் வர 'காக்க காக்க கனகவேல் காக்க' என வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட வேக நடை ஓட்டமாக மாறியது. குளிராக இருந்த போதிலும் வியர்வையில் தெப்பலாய் நனைந்திருந்தான்.

செல்லையாவின் ஆட்டுக் கசாலையைக் கடந்தபோது 'ஒரு காலத்துல எம்புட்டு ஆடு அடைச்சிக் கிடக்கும்... அவரு செத்ததுக்கு அப்புறமே எல்லாம் போச்சு... இப்பப் பாரு... கசாலை இருந்ததுக்கு அடையாளமா நாலு கல்தூண்தான் நிக்குது' தனக்குள் சொல்லிக் கொண்டவன்  அந்தக் கசாலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதானே செல்லையாய்யா செத்துப் போனாரு... முனி அடிச்சிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க... என அவரின் சாவுக்குப் பின்னே போன மனசை சனியன் பிடிச்ச மனசு எங்க சுத்துனாலும் அங்கதான் போயி நிக்கிது என மனசின் மீது கோபப்பட்டான்.

இன்னும் கொஞ்சத் தூரம்தான் ஓடியாச்சும் வீடு போய் சேர்ந்துடணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு சுடுகாட்டைக் கடக்கணுமே என்ற நினைவு வர, பயம் இன்னும் அதிகமாகியது. உடம்பில் உதறல் எடுப்பதை உணர்ந்தான்.

'அப்பாவ மெல்ல மெல்ல வரச் சொல்லியிருக்கலாம்... கொஞ்சத் தூரம் நடந்து வந்திருந்தாக்கூட இந்நேரம் அவரு வந்திருப்பாரு.... என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு... வந்துருவேன்னு வெத்துப் பந்தா வேற... பயத்துலயே செத்துருவேன் போலவே...'  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு முன்னே பத்தடி தூரத்தில் திடீரென வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து செல்வது தெரிய, அவனுக்குத் திக் என்றது.

நின்று விடலாமா என்று யோசித்தவனுக்குப் பின்னால் இருந்து 'பயமா இருக்கா பேராண்டி.... நீ இந்த கயித்துக் கட்டில்ல படுத்துக்க... நான் உள்ள கெடக்க பலகையில படுத்துக்கிறேன்... வா' என செல்லையாய்யா கூப்பிடுவது போல் தோன்ற, படபடப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எகிறியது.

நடையின் வேகத்தை அவன் அதிகமாக்கிய போது முன்னே நகர்ந்த வெள்ளை உருவமும் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

'நாந்தான் வீராப்பா வரவேண்டான்னு சொன்னேன்... அம்மாவுக்கு எங்கே போச்சு அறிவு... அவன் பயப்படுவான்... நீங்க மெதுவாப் போய் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு அப்பாவை அனுப்பியிருக்கலாம்தானே... வீட்டுக்குப் போய் வச்சிக்கிறேன்...' என அந்த நேரத்திலும் அம்மா மீது கோபப்பட்டான்.

திடீரென கோவில் மாடொன்று சடச்சடவென ரோட்டைக் கடக்க, ரோட்டோரத்தில் இருந்த காரஞ்செடிக்குள் சரச்சரவென சத்தம் கேட்க, அவனுக்குத் ‘திடுக்’ தூக்கிவாரிப் போட்டது. பயம் போக தூத்தூ எனத் துப்பினான்.

அந்த திடுக்கில் காதில் மாட்டியிருந்த இயர் போனும் கழண்டு கொள்ள, தூரத்தில் நரி ஒன்று ஊளையிடுவதும். அதைத் தொடர்ந்த அந்தையின் அலறலும் கேட்க, 'முனியய்யா... என்னைப் பெத்த அப்பனே...  பத்தரமா வீடு கொண்டு போய்ச் சேரு... உனக்கு நாளக்கி தேங்காய் வாங்கி உடைக்கிறேன்' என வேண்டியபடி நடையின் வேகத்தைக் கூட்டினான். அவன் முன்னே நடந்த வெள்ளை உருவம் இன்னும் முன்னேதான் போய்க் கொண்டிருந்தது.

முன்னால் பார்க்கவும் பயமாக இருந்தது... பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சுற்றிலும் கேட்கும் சப்தங்கள் வேறு பயத்தைக் கூட்ட, மீண்டும் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு, ஆசுவாசத்திற்கு கொஞ்சம் தண்ணீர் குடித்து, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுடுகாடு நெருங்க நெருங்க 'தம்பி சிகரெட்டு ஒண்ணு எனக்குக் கொடுத்துட்டுப் போவே' என்று யாரோ கேட்பது போலவும், 'எனக்கு மல்லிகைப் பூ வாங்கியாந்தியா' என அகிலாக்கா கேட்பது போலவும் 'வாடா ஓடிப்பிடிச்சி விளையாடலாம்' என்று சித்ரா கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்பட, அவனை அறியாமல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான்.

என்ன ஓடினாலும் வெள்ளை உருவத்தைத் தாண்ட முடியவில்லை. அது அவனுக்கு முன்னே நகர்ந்து கொண்டுதான் இருந்தது.

பின்னால் ஏதோ ஒரு வண்டி வருவது போல் சத்தம் கேட்க, இந்த நேரத்துல யாரு... பேயா இருக்குமோ... செத்தவன் எவனாச்சும் வண்டி ஓட்டிக்கிட்டு வாரானோ... அய்யோ... காலையில என்னைய பொணமாத்தான் பார்ப்பாங்க போலயே.... செல்லையாய்யா செத்த மாதிரி முனி அடிச்சிருச்சின்னு சொல்லுவாங்களோ... என்று நினைத்தவனுக்கு உடம்பெல்லாம் சில்லென வேர்க்க, இதயம் எக்ஸ்பிரஸ் ரயில் போல் படபடக்க ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.

அவனருகில் வண்டி வந்த போது. 'அடே ராமுவா... உயிருக்குப் பயந்து ஓடும் போதே நினைச்சேன்... நீனாத்தான் இருக்கும்ன்னு.... ஆமா மாமவ வரச் சொல்லியிருக்கலாமுல்ல... பயந்தோளிப் பயலே.... இந்த ஓட்டம் ஓடுறே... நல்லவேள சுடுகாட்டுக்கிட்ட இன்னும் போவல... அங்கிட்டு போயிருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்னு நினைக்கிறேன்... வா... வண்டியில வந்து ஏறு....' எனச் சிரித்தார் செல்லையாய்யா பேரன் ராஜேந்திரன்.

ராஜேந்திரனை அனுப்பி வச்ச முனியய்யாவுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி அவர் தோள் வழியாக மெல்ல முன்பக்கம் பார்த்தேன்.

வெள்ளை உருவத்தைக் காணோம்... 'அப்ப நம்மூருக்கு ரோடு இல்ல... குளக்கால் வழியாத்தான் வரணும்...  கடையடச்சிட்டு இருட்டுக்குள்ள நான் வரும்போது எனக்கு முன்னால ஒரு வெள்ள உருவம் வர்ற மாதிரியே இருக்கும். சரியா நம்ம முனியய்யா கோவில்கிட்ட வரும்போது மறைஞ்சிரும்... அது நம்ம முனியய்யாதான் தெரியுமா...' அப்படின்னு அப்பா எப்பவோ சொன்னது இப்ப ஞாபகத்தில் வர... அப்படியும் இருக்குமோ... இல்ல வில்லுக்கம்பு வெள்ளச்சாமி... அதுவுமில்லேன்னா செல்லைய்யாய்யா மாதிரி யாராச்சும்.... நினைவு மீண்டும் பேய்க்குள் பயணிக்க, பயத்தில் ராஜேந்திரனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு  கண்களை இறுக மூடிக் கொண்டான்.

'சிவப்பி செத்த கதை தெரியுமா...?' என ராஜேந்திரன் ஆரம்பிக்க, சுடுகாட்டைக் கடக்க வேண்டுமே என்ற நினைப்பே வயிற்றைக் கலக்க சிவப்பி கதை வேறயா என்று நினைத்தவனுக்குப் பின்னே மல்லிகைப் பூ வாசம் தொடர ஆரம்பித்தது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 4 ஜூலை, 2018

வாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை

லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவதற்கான மனநிலை இல்லை. இனி வலைப்பக்கம் தொடருமா... தொடராதா தெரியாது... ஆனாலும் இதுவரை எழுதியவற்றையாவது தொடர்ந்து வலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொண்ட கதைகள். அகல் மின்னிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை, அகலுக்கு எழுதிய கட்டுரை என கைவசமிருப்பவற்றை அவ்வப்போது பதிந்து வைக்கலாம் என்ற எண்ணம்.

கருத்து இடுவதில்லை... மறுமொழி இல்லை என்றெல்லாம் நினைப்பீர்கள் என்றால் மீண்டு(ம்) வரும் வரை அப்படித்தான் நகரும். சிலரின் வலைப்பக்கத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து நட்பில் இருப்பேன்... நன்றி.

நட்புடன்
சே.குமார்.

மே மாத (வைகாசி மின்னிதழ்) அகலில் வெளியான கட்டுரை 'வேயன்னா' இங்கே...

குற்றப்பரம்பரை : வேயன்னா

ரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்... உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்... கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்... ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்... யவனராணியில் இளஞ்செழியனுடனும்... சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் பயணிக்கும் போது உணர்ந்தேன்... கதைகளைச் சுவைத்தேன். ஒரு சில நாவல்களில் எந்தக் கதாபாத்திரமும் நம்முடன் ஒட்டாது. அப்படியான நாவல்கள் வாசிப்புக்கு அயற்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதன் பின் வாசிக்க ஆரம்பித்த குற்றப் பரம்பரையில் ஆரம்பம் முதலே ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.

அவர்தான் வேலுச்சாமி என்ற வீயன்னா என்ற வேயன்னா.

நண்பர்கள் எல்லாம் சிலாகித்துப் பாராட்டிப் பேசிய நாவல் குற்றப்பரம்பரை. ரொம்ப நாளாகவே வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நாவல். நண்பர்களால் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்தேன்.

“பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு கேட்கும் தென் மாவட்டத்து சாதிக் கலவரங்கள். தமிழ்நாட்டின் சரித்திரக் கேடு” என்ற வரிகளே நாவலாசிரியரின் முன்னுரையின் முதல் வரிகளாய்... அது முற்றிலும் உண்மை. அதேபோல் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு எழுதத் துவங்கினேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த பேரன்பையும் பெருங்கோபத்தையும் வேயன்னாவின் பின்னால் பயணிக்கும் போது உணரலாம்.

ஊருக்கு ஒரு மரியாதைக்குரிய மனிதர் இருப்பார் இந்த வேயன்னாவைப் போல... ஊருக்கு ஒரு பிரச்சினைக்குரிய மனிதர் இருப்பார் பெருநாழி பச்சமுத்துவைப் போல...  இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். எங்கள் ஊரில் கூட இது போன்ற மனிதர்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்... பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஊரிலும் நல்லது செய்ய ஒருவன் இருந்தால் கெடுதல் செய்வதற்கென ஒருவன் இருப்பான். அவனுக்குப் பத்துப் பேர் என்றால் இவனுக்குப் பத்துப் பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதனாலேயே ஊர் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ரெண்டு பட்டுக்கிடக்கும். ஊரில் ஒரு பிரச்சினை என்றால் ஊர்ப்பெரியவர் தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர்க்கூட்டத்தில் விதண்டாவாதம் செய்வதே பச்சமுத்து போன்றவர்களின் வேலை. இது குற்றப்பரம்பரையில் இல்லை என்றாலும் கிராமங்களில் வழிவழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஊர்த் தலைவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும். ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் விதி ஆனால் அந்த விதியும் சிலகாலமாக ஆம்பளை இல்லாத வீட்டில் பொம்பளை கலந்துக்கலாம் என மாற்றப்பட்டுவிட்டது. ஊர்க்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாத பெரும் பிரச்சினைகள் நாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும். பல கிராமங்களை உள்ளடக்கியது ஒரு நாடு. கிராமத் தலைவர்கள் எல்லாம் நாட்டுத் தலைவருடன் அமர்ந்து பிரச்சினையை பற்றிப் பேசி, பெரும்பாலும் நல்லதொரு முடிவை எடுத்து விடுவார்கள். இங்கும் முடியாதபட்சத்தில் நீதிமன்றம் நோக்கிச் செல்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்ப சின்னப் பிரச்சினைகள் என்றாலும் காவல் நிலைத்திலும் நீதிமன்றத்திலும்தான் நிற்கிறார்கள். இந்த ஊர்க்கூட்டம், நாட்டுக்கூட்டம் எல்லாம் எங்க பக்கம் இன்னும் உயிர்ப்போடுதான் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காவல் நிலையங்களே இப்போது பிரதானமாகிவிட்டது.

சரி இனி வேயன்னாவோட பயணிக்கலாம்.

தங்கள் வாழ்க்கைக்காக... குறிப்பாக மூன்று வேளை சோற்றுக்காக திருடும் மக்கள் அவர்கள். தங்களை அழிக்கத் துடிக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க காட்டுக்குள் குழந்தை குட்டிகள், நாய்கள், மாடுகள் என எல்லாவற்றோடும்  ஓடும் மக்கள் பலரை இழந்து சம்பங்கி நதிக்குள் விழுந்து அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்க, அந்தக் காட்டுக்குள் மாடு மேய்க்க வரும் பெரும்பச்சேரி வட்டத்துரை என்னும் அரிஜனச் சிறுவனால் தங்கள் ஊருக்கு அருகில் சுற்றிலும் வேலிக்கருவை சூழ்ந்த பகுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதையே கொம்பூதி என்ற பெயருடன் தங்கள் ஊராக மாற்றிக் கொள்ளும் அக்கள்ளர்கள். அங்கிருந்தபடியே தங்கள் திருட்டுத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தலைவன் தான் வேலுச்சாமி. உயிருக்குப் பயந்து வரும் போது மூத்தமகன் சேதுவைத் தொலைத்து விட்டவரின் இரண்டாவது மகன் வில்லாயுதம். அப்பனுக்குப் பின் அந்த இடத்தில் இவந்தான் தலைவன் என்பதை ஆரம்பம் முதலே அக்கூட்டம் சொல்லி வருகிறது. நாம் செயல் எப்படியும் தலைவராகிவிடுவார் என்றும் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கனவு காண்பதைப் போல்தான்... வில்லாயுதமாச்சும் தலைமைப் பண்புக்கு சிறந்தவனாகிறானா என்பதை முடிவில் பார்க்கலாம். இப்ப நாம் பயணிக்க வேண்டியது வேலய்யாவோடுதானே...

தங்களைப் பார்த்ததும் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு 'கும்புடுறேன் சாமி' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்ற சட்டங்கள் இன்று பல கிராமங்களில் இருக்க, இக்கதையின் காலகட்டத்தில் நீயும் நானும் ஒண்ணுதாம்லே நம்ம அர்ணாக்கயிரை அவுத்துட்டா நமக்குள்ள என்னலே வித்தியாசமிருக்கு என வாழ்ந்திருக்கிறார் இந்த வேயன்னா. இன்று அரசியல் காரணிகளுக்காகவே இந்த இரு சாதிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படிப் பிரித்தாள வெள்ளையரும் அவருடன் சேர்ந்த பெருநாழிக் கிராமத்தார்களும் முயற்சிக்கிறார்கள் என்பதை கதையை வாசிக்கும் போது அறியலாம்.

தங்களுக்கு வாழ்வளிக்க முக்கியக் காரணியாய் இருந்த பெரும்பச்சேரி வட்டத்துரையை தன் மகனாகத்தான் பார்க்கிறார். சாதி என்னும் சகதியை தன்னுள் அப்பிக் கொள்ளாத மனிதன் வேலய்யா... வட்டத்துரையுடன் சரிசமமாக வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுகிறார். தோளில் கை போட்டு நீயும் எம்புள்ளதாம்லே என அணைத்துக் கொள்கிறார். வட்டத்துரையைக் காணோமென்றால் தவிக்கிறார். தன் மகன் வில்லாயுதத்தைக் கூட அருகில் வைத்துக் கொள்ள விரும்பாத மனிதர், வட்டத்துரை இல்லாது எங்கும் செல்ல விரும்பாத மனிதராகவே வாழ்கிறார்.
கொம்பூதி கிராமம் மட்டுமல்ல, பெரும்பச்சேரி கிராமமும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. அதற்காக நாட்டமை பாதம் பட்டால் என்றோ, எஜமான் காலடி மண்ணெடுத்து என்றோ பாடவில்லை. மரியாதையை மரியாதையாகவே செய்கிறார்கள். அவரும் அவர்களை மதிக்கிறார்... அவர்களுடன் பேசி மகிழ்கிறார். பெருநாழி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இவர் மீது பயம் கலந்த மரியாதையே இருக்கிறது... அதுவும் திருட்டுக் கூட்டத் தலைவன் என்ற பயம்.

தங்கள் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும்... பெண்கள் எல்லாம் நகைகளைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் எண்ணமில்லை. மண் குடிசைதான் அவர்களின் வீடு... திருடும் பொருள்கள் எல்லாம் பெருநாழியைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுக்கிறார்கள். அவரும் இவர்களுக்கு தவசம் உள்ளிட்ட தானியங்களைக் கொடுக்கிறார். அதை வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேயன்னாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என்பது அந்த ஊரில் இல்லவே இல்லை... அவர் சொல்வதே வேதவாக்கு.

திருடப் போகும் முன்னர் தனது சொந்தத் தங்கை உள்ளிட்ட பெண்களை ஆட்டுக்கறி கொண்டு செல்வது போல் போகவிட்டு யார் வீட்டில் கொள்ளை அடிக்க நினைக்கிறார்களோ அவர் வீட்டில் எந்த அறையில் நகைப்பெட்டி இருக்கிறது என்பதை அறிந்து வரச் செய்து அதன் பின் இரவில் ஊர்க் கோவிலின் முன் நின்று தனது தாய் கூழானிக்கிழவி... இந்தக் கிழவி செமக் கிழவி... கதையை வாசித்தால் இது பண்ணுற அட்டகாசத்தையும் இறுதியில் அது நம்மளை அழ வைப்பதையும் ஒரு சேரப் பருகலாம். இந்த மாதிரி ஆட்டம் போடுற அப்பத்தா ஊருக்கு ஒண்ணு இருக்கும். சுந்தர பாண்டியனில் வருகிற அப்பத்தாக்கள் மாதிரி ரகளையான கிழவி. அது சாமி கும்பிட்டு திருமண் எடுத்துப் பூசிவிட்ட பின்தான் திருடக் கிளம்புகிறார்கள். இரவில்தான் இவர்களின் வேட்டை. சரியான இடத்தில் ஓட்டையிட்டு ஆக்காட்டி குருவியை உள்ளே விட்டு வேவு பார்த்து அதன் பின்னே வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். எல்லாத்திலும் மூளை வேயன்னாதான்.

சுற்றுப்பட்டு எங்கிட்டும் உப்புத் தண்ணியாக இருக்க, பெருநாழியில் இருக்கும் கிணறு மட்டுமே நல்ல தண்ணீரைக் கொடுக்கிறது. பெருநாழிக் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெரும்பச்சேரி மக்களுக்கும் அதுதான் தாகம் தீர்க்கும் சாமி... அவர்கள் தங்களது வயல்களில் உழைத்தாலும் கீழ்சாதிக்காரர்கள்தானே... தீண்டாமை என்னும் தீயை மிகத் தீவிரமாக வளர்க்கும் பெருநாழி ஆண்களும் பெண்களும் பெரும்பச்சேரி பெண்கள் தண்ணீர் எடுக்க வந்தால் குடத்தை தள்ளி வைத்து விட்டு எட்ட நிற்க வேண்டும்.  தண்ணீர் எடுக்க வரும் பெருநாழிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு வாளிதான் ஊற்றுவார்கள். எப்போது குடம் நிறைகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என சட்டமியற்றி வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் குடங்கள் அரைமணியிலும் நிறையலாம்... அரை நாளிலும் நிறையலாம்... பாவம் வெயில்ல காத்துக்கிடக்காளே என யாரும் ஒரு வாளி சேர்த்து ஊத்துவதில்லை. இந்தக் கிணறுதான் மிகப்பெரிய பிரச்சினைக்கு விதையாகிறது.

ஆம்... கைக்குழந்தைக்காரியான ராக்கு தண்ணியெடுக்கப் போகும் போது இந்த நேரத்தில் யாருமிருக்க மாட்டார்கள் எனப் போய் தானே தண்ணியெடுக்க, அவள் கணவன் துருவனைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கிடக்கும் காசை எடுக்கச் சொல்லி, கையை வேக வைத்து உடம்பெல்லாம் சர்க்கரைப் பாகை ஊற்றி எறும்புகள் நிறைந்த மரத்தடியில் கட்டி வைத்து விடுகிறார்கள், கணவனைக் காணவில்லை என வேயன்னாவிடம் முறையீடு செய்ய, வட்டத்துரை இன்னும் சிலர் சகிதம் பெருநாழி சென்று அவனை மீட்பவர் நாளை முதல் பெரும்பச்சேரி சனம் அந்தக் கிணற்றில் தாங்களே நீர் எடுத்துக் கொள்வார்கள் எனச் சொல்லிச் செல்லும் வேயன்னா, மறுநாள் பெரும்பச்சேரி ஊரையே கூட்டிக் கொண்டு கிணற்றுக்கு வர, நீரில் மலம் நிறைந்து மிதக்கிறது. அவமானத்தால் கோபத்தில் தகிக்கும் வேயன்னாவால் பெருநாழி சந்தையும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு சந்தை தீக்கிரையாகிறது.

கள்ளர்களை ஒடுக்க பெருநாழியில் கச்சேரி (போலீஸ் நிலையம்) அமைக்கப்பட, முதலில் வரும் வெள்ளக்கார போலீசுக்கு வேயன்னா மீது மிகுந்த மரியாதை, வீயன்னா என அழைக்கும் அவர் கச்சேரிக்கு அழைத்துப் பேசுகிறார் ஆனால் மற்ற போலீசுக்கு வேயன்னாவை பிடித்து உள்ளே போட வேண்டும் என்பதுதான் ஆவா... நல்லவரான வெள்ளைக்கார அதிகாரியை தங்களுக்கு எதிரானவர் என வேயன்னாவின் ஆட்கள் விரட்டி விட, அடுத்து வருகிறவன் எப்படியும் வேயன்னாவை பிடிச்சி உள்ளே போடணும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறான். அவனின் மேலதிகாரியும் வேயன்னாவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.அதற்குப் பெருநாழி ஆண்களும் துணை நிற்கிறார்கள்.

கிணற்றுப் பிரச்சினைக்குப் பின்னர் பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் வேலை இல்லை என்றாகிப் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வரும் தவசத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார் வேயன்னா.

பெருநாழி ஆசாரியின் வீட்டில் தீப்பிடிக்க இது கொம்பூதி வேயன்னா வேலைதான் என்று ஊரே கூடிப் பேசிக் கொண்டிருக்க, வெள்ளைக்கார போலீசும் எரியும் தீயை வேடிக்கை பார்க்க, வயிற்றுப் பிள்ளைக்காரியான மனைவி தீக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆசாரி தவிச்சி நிற்க, புதிய வெள்ளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பெருநாழிக்கு கண்மாய் வழியாகச் செல்லும் வேயன்னாவும் வட்டத்துரையும் தீக்குள் புகுந்து ஆசாரி மனைவியைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வெள்ளை அதிகாரிக்கு வேயன்னா மீது மரியாதை ஏற்பட, அவர் கள்ளத் தொழிலை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ மாட்டோமென முடிவாய் இருப்பவர்களை எருது கட்டுக்கு மாடு பிடிக்க வரச்சொல்லி அழைத்துத் தந்திரமாக போலீஸ் வளைத்துப் பிடித்து அடிக்கிறது. கொம்பூதி ஆண்கள் எல்லாம் வேயன்னாவின் ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களோடு நாமும் உக்கார்ந்திருக்கிறோம் போலீஸ் அடி வாங்கிக் கொண்டு.

அந்த கருத்த உரமேறிய தேகம்... வேல் கம்பு பிடித்து சிங்கமென நடக்கும் மனிதன்... பார்த்தவர் எல்லாம் பயந்து ஒதுங்கிச் செல்லும் மனிதன்... சுற்றிலும் இறுக்கப்பட்ட கயிற்று வலைக்குள் நொறுங்கி அமர்ந்திருக்கும் போது நாமும் அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறோம்.

சிங்கத்தை சீண்டிட்டேல்ல.... அது இனி என்ன பண்ணுதுன்னு பாரு அப்படின்னு ஊரில் சொல்லுவாங்க... அப்படி போலீஸ் தீண்ட, அவர்களுக்கு பாடம் கற்பிக்க தன் இளைஞர் கூட்டத்துக்கு கண்ணைக் காட்டுகிறார் வேயன்னா. பெருநாழி ஆசாரி, வேயன்னா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் குழந்தைக்கு வேலுச்சாமி என பெயர் வைத்திருக்கிறார். அதே ஆசாரி போலீசாரையும் பெருநாழி குள்ள நரிகளையும் பலி வாங்க தன் வீட்டில் சட்டி சட்டியாக எண்ணெய் காய வைக்க உதவுகிறார். வித்தியாசமான திட்டத்தால் போலீசாரெல்லாம் எண்ணெய்க்குப் பலியாக, வேயன்னாவைப் பிடிக்க வந்த உயர் அதிகாரி வில்லாயுதத்தால் கொல்லப்படுகிறார்.

மூன்றாவதாக வரும் போலீஸ் அதிகாரி சேது. ஆம் வேயன்னா தப்பி வரும் போது தொலைத்த மகன்தான் அவன். ஐயாவை (அப்பாவை ஐயா என்றழைப்பது பெரும்பாலான கள்ளர்களின் வழக்கம்) தன் பாசத்தால் இனித் திருட மாட்டோம் என சத்தியம் செய்ய வைக்கிறான். அதன் பின் வேயன்னாவின் கொம்பூதி கிராமம் திருடச் செல்லவில்லை. திருடிய மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக்குப் பொருள் அனுப்பும் பச்சமுத்து சும்மா இருப்பாரா என்ன...? அவரின் சித்து வேலைகளால் திருட்டு நடக்கிறது... பழி வேயன்னா மீது விழுகிறது. மகன் எதிரியாகிறான்... தன் கையால் அவரை அடித்து நொறுக்குகிறான்.

வயிற்றுப்பசியால் வாடினாலும் செய்த சத்தியத்தை மீறாத வேயன்னாவும் அவரின் கூட்டமும் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருநாழி பச்சமுத்துவின் திட்டத்தால் செய்தாத திருட்டுப் பழியையும் சுமந்து வருந்தித் திரிகிறது. வேல் கம்புடன் வீறாப்பாய் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வேதனையுடன்.

இவர்களுக்கு எதிராக சிலர் கிளம்பினாலும் இவர்களோடு இருக்கும் பெரும்பச்சேரி மக்களைப் பிரித்தாலொழிய வேயன்னாவை வீழ்த்த முடியாது... அவர்களுக்குள் மூட்டி விட வேண்டும் என முடிவெடுத்து பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் மீண்டும் வேலை அது இது என்ன இரு சாதிக்குள்ளும் சா'தீ'யை வளர்க்க ஆரம்பிக்கிறது கச்சேரியும் பெருநாழியும்.

இறுதியில் மிகப்பெரிய சண்டை... பெருநாழியில் பலர் கொல்லப்படுகிறார்கள். கொம்பூதிக்கு வரும் சேது தலைமையிலான போலீஸ் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து தாக்கும் ஆண்களை எல்லாம் சுட்டுத் தள்ள, மகன் சேதுவால் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் வேயன்னாவும் கொல்லப்படுகிறார்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு வாழுந்த மனிதரான வேயன்னாவுக்கு அங்கம்மா என்ற மனைவியும் அன்னமயிலு என்ற அழகிய மகளும் வில்லாயுதம், கூனிக்கிழவி, கணவனை இழந்த தங்கை, அவளின் மகன் ஊமைத்துரை, மகள் சிட்டு என ஏகப்பட்ட சொந்தங்கள் இருந்தாலும் இந்த மனிதர் திருடியது... வாழ்ந்தது... எல்லாமே தன்னை நம்பி வந்த மக்களுக்காகவும் தங்களைக் காப்பாற்றி இருக்க இடமளித்த பெரும்பச்சேரி மக்களுக்காகவும்தான். பெருநாழி பகைக்கிராமமாக இருந்தாலும் அங்கும் பலருக்கு உதவி செய்தவர்தான் இந்த வேயன்னா. மொத்தத்தில் ஊருக்காக வாழ்ந்த மனிதன் வேயன்னா... உறவுக்குக் கட்டுப்பட்டு உயிரை இழக்கிறார்.

கதையை முடித்து அதிலிருந்து வெளிவரும் போது வீரம் செறிந்த மனிதன்... தன்னை நம்பிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்... என்றோ காணாமல் போன மகன் போலீசாய் வந்து வாங்கிய சத்தியத்தால் வறுமையில் வாடிய மனிதன்... தண்ணீருக்குள் இறந்து கிடக்க, வேயன்னா பின்னால் வட்டத்துரை போல் நடந்தும் ஓடியும் அவரின் கைகாட்டலுக்கு அடித்தும் ஆர்ப்பரித்தும் பயணித்த நாமும் கூழானிக்கிழவி, அன்னமயிலு, அங்கம்மா, சிட்டு, வட்டத்துரை... இன்னும் இன்னுமாய்க் கூடிநிற்கும் கொம்பூதி, பெரும்பச்சேரி மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிப்போம் கண்ணீருடன்.

இதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி. வட்டார எழுத்தும் ஒரு பரம்பரையின் வாழ்வும் நம்மை ஈர்த்துக் கொள்ளும்... அதிலிருந்து மீள்வது என்பது வேயன்னாவின் மரணத்தில் கண்ணீராய் நாம் வெளியாகும் போது மட்டுமே.

வில்லாயுதம் ஒரு களவைத் தலைமை தாங்கிச் செய்து வேயன்னாவுக்குப் பின் இவன்தான் என்று நிரூபித்தாலும் கதை முழுவதும் அவனின் களம் வஜ்ராயினி, வைரம், முனியின் குடில் என வேறு பாதையில்தான் பயணிக்கிறது. எனக்குச் சரிசமமாக வில்லாயுதம் கூட உட்கார முடியாது ஆனால் வட்டத்துரை உட்காருவான் என வேயன்னா சொல்வதன் உண்மையை கதையினை வாசிக்கும் போது அறியலாம். வில்லாயுதத்துக்கு அப்பாவுடன் அமரவோ பேசவோ நேரம் இருந்தால்தானே சமமாக உட்காரமுடியும். அவனின் போக்கு வேறு பாதையில்...

வட்டத்துரை பிறப்பு குறித்தான கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதையும் வஜ்ராயினி தொடர்பான வைரத்தேடல் கதையும் கிளைக்கதைகளாய்... அவலமாய் முடியும் கதைகள். இரண்டுமே சோகமயமானது என்றாலும் வஜ்ராயினி கதையின் கழுகு, மான், வைரம், ஆட்டுத் தோலில் வைரத்தை கழுகு எடுத்து வருதல் என ஆபுனைவாய் பயணிப்பது வேயன்னா பின்னால் வேல் கம்புடன் பயணிக்கும் போது நம்மோடு ஒட்டவில்லை.

சேதுவின் வெள்ளைக்கார காதலி... அவர்களின் காதல் என மற்றொருமொரு களம்... இறுதியில் வெள்ளைக்காரக் காதலி எடுக்கும் முடிவால் மனசுக்குள் நிற்கிறாள்.

அன்னமயிலுக்கு வட்டத்துரை மீது சொல்லாத காதல். அதை சில இடங்களில் அவளின் செய்கையால் மட்டுமே ஆசிரியர் உணர்த்தியிருப்பார். சினிமாத்தனமாய் அவனிடம் உன்னைத்தான் கட்டிப்பேன்னு அவளை நிற்க வைக்கவில்லை.

சேது போலீஸ் பயிற்சிக்குச் செல்வதும், அவனுக்கு துப்பாக்கி சுடுவதில் இருக்கும் திறமை குறித்து காதலி வீட்டில் பெருமை பேசுவதும் கதையின் முடிவை நமக்குச் சொல்லிவிடுகின்றன ஆமா எத்தனை சினிமா பார்த்திருப்போம்.

சேதுவின் வருகைக்குப் பின்னர் கதையில் சினிமாத்தனம் குடி கொண்டு விடுகிறது. வேகமான வேயன்னா சத்தியத்தின் பின்னே சாந்த சொரூபியாய் மாறிவிட, கதை மெல்லத்தான் பயணிக்கிறது.

வேயன்னாவாய் அந்த கருத்த தேகமும் வேல் கம்பு தாங்கி கையும் வீரமான நடையும்... கிடாரி, மதயானைக் கூட்டம் படங்களில் நடித்த இந்த நாவலின் ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கு முன்னே வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தார்.

கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வந்ததுதான் நாவலாகும் போது ஒரு பரம்பரையின் கதையாய்... சீறும் காளையாக பயணிக்க குற்றப்பரம்பரை ஆனது.

பாலா இந்தப் படத்தை எடுக்கும் போது நாயகனைச் சேது, வில்லாயுதம் என இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு வேல ராமமூர்த்தி அவர்களை 'வேயன்னா' ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

வேயன்னாவாக வாழ அந்தப் பரம்பரையில் வந்த வேல ராமமூர்த்தி அவர்களால் மட்டுமே முடியும்.

வேயன்னா இன்னும் எனக்குள் வேல் கம்போடுதான் வலம் வருகிறார். ஒருவேளை நீங்கள் வாசிக்கும் போது அவர் எனக்குள் இருந்து உங்களுக்குள் இடம் மாறலாம். 

-'பரிவை' சே.குமார்.