மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : சுய டைரிக் குறிப்பு

து இந்த வருடத்தில் நிகழ்ந்தவைகளின் தொகுப்பாக எழுதப்படும் பகிர்வே... ஜோதிஜி அண்ணனைப் போல் வருடா வருடம் விரிவாக, அலசி ஆராய்ந்து எல்லாம் எழுத நம்மால் முடியாது... நாம பட்டதும் பெற்றதும் என்னன்னு கொஞ்சம் எழுதி வச்சுப்போமேன்னு வருட முடிவில் ஏதாவது கிறுக்கி வைக்கிறது போல இந்த வருட முடிவிலும் சில...

Image result for new year gif file

2016... வருட ஆரம்பத்தில் எங்கள் ஊரில் வீடு வேண்டும் என்பதற்காக கையில் காசில்லாத நிலையில் வீட்டை ஆரம்பித்து அப்படி இப்படி புரட்டி வீட்டைக் கட்டி மே மாதம் பால்காய்ச்சினோம். ஏதோ ஒரு விதத்தில் விரயமாகும் என்றார்கள் வீட்டைக் கட்டியதால் கடனாகி நின்றாலும் வீடு நமக்கானதே என்ற நிம்மதி.

2016...  சில நல்ல நிகழ்வுகள் நடந்தன என்றாலும் நிறைய பிரச்சினைகள், கஷ்டங்களைச் சுமந்து பயணித்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு அப்போதைய நிவாரணியாய் ஏதாவது ஒரு மாற்று அமைந்து தற்காத்துக் கொண்டே வந்தது.

2016...  கச்சா எண்ணெய் விலை குறைவுப் பிரச்சினையால் எங்க வேலைகள் எல்லாம் தடைபட்டதால் வருடத்தின் இறுதியில் சில மாதங்களாய் அலுவலகத்தில் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய சூழல்... ஊருக்குச் செல்லச் சொல்லி விட, முடியாது என சண்டையிட்ட காரணத்தால் மலையாளிகள் ஊருக்குச் செல்ல, என்னை மட்டும் போக வேண்டாம் என்று சொன்னார்கள்... இன்னும் எந்த ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை.

2016... தமிழ்வாசி மூலமாக பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்து வரலாற்றுப் புதினங்களில் அதிகம் பயணிக்க ஆரம்பித்தேன். நிறைய வாசிக்க முடிந்தது.

2016... வருத்தங்கள் கவலைகள் சூழ இருக்கும் தினங்களில் எல்லாம் ஆறுதலாய் காயத்ரி அக்கா, நிஷா அக்கா, நண்பன் தமிழ்க்காதலன், குடந்தை சரவணன் அண்ணன் என நட்புக்கள் எல்லாம் சரியாகும் என ஆறுதலாய் நின்றார்கள்.

2016... பதிவுக் காப்பியின் காரணமாக மனசு தளத்தில் சிறுகதைகள், எழுதிக் கொண்டிருந்த தொடர்கதை எல்லாம் நிறுத்திவிட்டு மனசு பேசுகிறது நிறைய எழுத ஆரம்பித்தேன்.

2016... 2015-ல் பாக்யா மக்கள் மனசு பகுதிக்கு எழுத ஆரம்பித்து இந்த வருடத்தில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்து வந்து கொண்டிருக்கிறது.

2016... நிறைய சிறுகதைப் போட்டிகளில் ஒரு சில காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் எனது கதைகள் ஏதோ ஒரு பரிசைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2016... ஸ்ரீராம் அண்ணா அவர்களின் எங்கள் பிளாக் வலைத்தளத்தில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது கதையான ஹரிணியும் வெளிவந்தது.

2016... எனக்கு இங்கு ஆறுதலாக இருந்த கில்லர்ஜி அண்ணன் அவர்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிட்டு தேவகோட்டைக்குச் சென்று விட, வருத்தங்கள் நிரம்பிய நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது.

2016... திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடன் போனில் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பை வருட இறுதி கொடுத்தது.

2016... ஆரம்பத்தில் இருந்த கஷ்டங்கள் கவலைகளை விட வருடத்தின் இறுதியில் கஷ்டத்தை இன்னும் இறுக்கமாய் அளித்து நகர்ந்தது.

2016...அகல் மின்னிதழில் அதிக கட்டுரைகள் எழுதும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திரு. கணேஷ் (சத்யா) அவர்கள் வழங்கினார்.

2016... நிஷா அக்கா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் என்னைக் குறித்தும் சொல்லியிருந்தது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. மகிழ்ச்சி.

2016... 2013-ல் இருந்து புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, அதற்கான முயற்சியில் இறங்க நினைக்கும் போது எதாவது ஒரு பிரச்சினை முன் வந்து பூதகரமாக, முயற்சி முயற்சியாகவே இந்த வருடம் வரை பயணித்துக் கொண்டிருக்கிறது.

2016... என் கதை புத்தகமாகவில்லை என்றாலும் என் எழுத்து சகோதரர் ஒருவரின் புத்தகத்தில் இணைந்திருக்கிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு.

2016... பல கவலைகளை மறக்க வைத்தது எங்கள் விஷாலின் குறும்புச் செயல்கள்.

2016... என் மனைவி தனது கைவண்ணத்தில் வரைந்த கோலங்களுக்காகவே 'சிநேகிதி' என்ற தளத்தை ஆரம்பித்தார்.

2016... வட்டார வழக்கில் எழுது... அது உனக்கு நல்லா வருது என ஜோதிஜி அண்ணாவுடன் பேசும் போது குறிப்பிட்டார். மிகச் சிறந்த எழுத்தாளர், கருத்தோடு புள்ளி விவரங்களை வைத்து எழுதுவதில் நிபுணர் அவர் என்பதை அனைவரும் அறிவோம்... அப்படிப்பட்டவரின் பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி.

2016... குடும்பத்தைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில் நிறைய வலிகளைக் கொடுத்த ஆண்டு இது. மொத்தத்தில் இந்த ஆண்டில் கற்றது அதிகம் என்றாலும் பெற்றது குறைவுதான்... அதிலும் பட்ட கஷ்டங்கள் பட்டை தீட்டின என்று எடுத்துக் கொண்டாலும் அதிக கஷ்டம் அயற்சியை உண்டாக்கியது என்பதே உண்மை.

நாளையும் எப்பவும் போல்தான் விடியும் என்றாலும்... அந்த விடியல் எல்லோருடைய கனவுகளையும் நனவாக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : பழைய பன்னீரு

Image result for சசிகலாவுடன் பன்னீர்

த்திரியன் படத்தில்  விஜயகாந்தைப் பார்த்து திலகன் அவர்கள் 'பன்னீர் செல்வம் நீ பழைய பன்னீர்செல்வமா வரணும்... வருவே...' அப்படின்னு சொல்வார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக முதல்வரான பன்னீர்செல்வம் அவர்கள் பழைய பன்னீர்செல்வமாக இல்லாமல் புதிய பன்னீர்செல்வமாக மலர்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகமாகவே இருந்தது. மன்னார்குடி மாபியா கையில் சொத்துக்கள் செல்வதை மக்கள் விரும்பவில்லை என்றாலும் அதற்காகத்தானே இத்தனை கபட நாடகங்கள் நடந்தேறியது என்பதை அறிந்தே இருந்தார்கள்.. சோற்றுக்குள் பூசனிக்காயை மறைப்பது போல் மறைக்க நினைத்தாலும் உலகுக்கே தெரிந்த விசயம் அது... சொத்துக்கள் போகட்டும் ஆனால் கட்சி அந்தம்மா கையில் போகக்கூடாது என்பதில் மட்டும் மக்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள்... இன்று வரை இருக்கிறார்கள். நாளை எப்படியோ... பணம் பத்தும் செய்யும். நேற்று வரை முழுக்க முழுக்க பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்று பொதுமக்களும் சமூக வலைத்தள அன்பர்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன..?

மரணம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளுடன் ஜெயலலிதா என்னும் உறவுகளற்ற மனுஷியின் உடல் மெரீனாவில் புதைக்கப்பட்ட பின்னர், சசிகலாவின் நடை உடை பாவனை எல்லாமே அவரைப் போல் மாறியதைப் பார்த்தபோதே நாமெல்லாம் இரும்பு மனுஷி என்று புகழ்ந்த ஜெ.யின் ரிமோட் முழுக்க முழுக்க இவரின் கையில்தான் இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர  முடிந்தது. ஜெ.யின் சாவில் மர்மம் இருக்கு... அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று இப்போது ஆளாளுக்கு கூவினாலும் இனி என்ன ஆகப் போகிறது..? கோடிகளை அடித்த கேடிகளை பேச விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, தன் மந்த நிலையைத்தான் தொடருமே தவிர ரகசியத்தை வெளியிட முன் வராது... சாமானியனை வதைக்கும் மோடி பணக்காரர்களிடம் சரண்டர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை... சமீபத்திய நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. டாக்டரிடம் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்று சொல்வார்கள்... அது சாதாரண மக்களுக்குத்தான்... டாக்டருக்கும் வக்கீலுக்கும் அல்ல என்பதை டாக்டர் ரெட்டி அன் கோ நன்றாக நிரூபித்திருக்கிறார்கள்... பணம் பத்தும் செய்யும் என்றால் ஜெ. விசயத்தில் பணம் பத்தாயிரம் செய்திருக்கிறது.

சரி பன்னீருக்கு வருவோம்... இரண்டு முறை  தற்காலிகமாக இருந்தவர் இந்த முறை நிரந்தர முதல்வராக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவரின் நடவடிக்கைகளும் பாராட்டும்படியாகத்தான் இருந்தது... பொன்னையன், தம்பித்துரையைப் போல் காலில் விழுந்து கிடக்காமல் பழைய பன்னீர் புதிய பன்னீராக மாறிவிட்டார் என்று நினைக்கத் தோன்றியது அதெல்லாம் எதுவரை... 'மாண்புமிகு சின்ன அம்மா' என வளைந்து நிற்கும் வரை.. ஆம் தன் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இன்னும் சம்பாதித்துக் கொள்ளவும் இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதை அவரும் உணர்ந்து கொள்ள, ஒரு மிகப்பெரிய கட்சி இன்று அழிவின் பாதையை நோக்கி சதி(சி)கலா கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் சொத்து சுகத்துக்காக மானத்தை எப்பவும் காற்றில் பறக்க விடுபவன் நான் என்பதை நிரூபித்திருக்கிறார். 

தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும்... சின்ன புரட்சித் தலைவர்... சிங்கமே சீறி வா... உன் பின்னே நாங்கள் இருக்கிறோம்... என்று எழுச்சி பெற்ற தமிழினத்தை தன் வாழ்நாள் கூழைக்கும்பிடு மூலம் கேவலப்படுத்திவிட்டார் இந்த மனிதர்... என்னைக்குமே நான் பழைய பன்னீர் செல்வம்தான்... புதிதாய் பிறந்து வா என்று நீங்கள் சொன்னாலும் நான் மாற மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். நாளை முதல்வர் பதவியைக் கொடுத்துவிட்டு சசிகலாவின் கார் போகும் போது ரோட்டைத் தொட்டுக் கும்பிடுவார்... அவருக்கு சொத்து பத்து முக்கியம் அடிப்படைத் தொண்டனும் அப்பாவித் தமிழன் அல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார்... அவர் மட்டுமல்ல எல்லா அல்லக்கைகளும் அப்படியே.

சசிகலா ஆளக்கூடாதா... அவரும் தமிழச்சிதானே என்று பொங்குகிறார் இங்கு நண்பர் ஒருவர்... ஆளட்டுமே... யார் வேண்டாம் என்றது... ஒரு திறமைசாலியாய் இருந்து... உண்மையான தோழியாய் இருந்து... ஜெவின் மரண முடிச்சுக்களை அவிழ்த்து... மக்களைச் சந்தித்து... தன்னாலும் சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நல்ல மனுஷியாய் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.. ஆனால் பண ஆசையும் பதவி வெறியும் பிடித்த ஒரு பெண், ஜெயலலிதா என்ன செய்தாரோ அதையே செய்ய நினைக்கும் ஒரு பெண், எப்படி மக்கள் மனதில் இடம் பெற முடியும்... கூன் பாண்டியர்களை வைத்து அரியணை ஏறுவார் என்பதில் சந்தேகமே இல்லை... டீக்கடைக்காரர் பிரதமராக இருக்கும் நாட்டில்... வீடியோக்கடைக்காரி முதல்வர் ஆவதில் தப்பு ஏதும் இல்லையே...  ஆனாலும் எதுவுமே அறியாத... இந்த இடத்தில் இப்படிச் சொல்வது தவறுதான்... ஏனென்றால் கொள்ளைகளை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்... ஜெயலலிதாவையே அடக்கி ஆண்டவர் எனும் போது எதுவுமே அறியாத என்ற சொல் தவறுதான்... இருந்தாலும் ஒரு நாட்டை நிர்வகிக்கும் திறமை இல்லாத ஒரு மனுசியை கூன் பாண்டியர்கள் ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் மக்கள்..?

அதிமுகவின் அஸ்தமனத்துக்கான தீர்மானம்தான் சசியை தேர்ந்தெடுத்தது... ஆனாலும் சசி முதல்வராக நம்மை ஆளும் நிலமை வரக்கூடாது என்றால் அவர் நிற்கக்கூடிய தொகுதி மக்கள் பணத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்... பணம் மக்களை விலைக்கு வாங்கிவிடும் என்ற நினைப்புத்தான் தமிழகத்தின் தலையெழுத்து இனி கேள்விக்குறியாகிவிடும் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. என்ன செய்ய... கொள்ளை அடித்தவன் அரசை மிரட்டுறான்... அவன் பேசுவதைப் பார்த்தால் மீண்டும் அவனுக்கு சாமரம் வீசிவார்களோ என்றுதான் தோன்றுகிறது. அரசின் மௌனமும் அதைத்தான் சொல்கிறது. நடப்பவை எல்லாம் மன்னார்குடிக்கு சாதகம்தான் என்ற நிலையில் வருந்திப் பயனில்லை என்றாலும் தமிழகம் இன்னுமொரு பீகார் ஆகாமல் இருந்தால் சரி...

ஆமா தையில முதல்வர் பதவி ஏற்பாருன்னு சொன்னானுங்க... இப்ப அடுத்த வாரம்ன்னு சொல்றானுங்க... பன்னீரு... நீங்க இன்னும் பழைய பன்னீராவே இருக்கீங்களே... மாறுவீர்கள்... வீறு கொண்டு எழுவீர்கள் என்று நாங்கள் நம்பியதும்... அதைச் செய்தார் ... இதைச் செய்தார்... என இணைய இதழ்கள் வரிந்து கட்டி எழுதியதும் கானல் நீராய் போய்விட்டதே...  என்ன செய்வது பணம் காக்க நீங்கள் சொன்ன 'மாண்புமிகு சின்ன அம்மா' உங்களுக்கு வாழ்வு.... தமிழனுக்கு இழுக்கு.

நக்கிப் பிழைப்பதற்கு நரகலைத் தின்பது மேல்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 28 டிசம்பர், 2016

நாய்க்கு வாழ்க்கைப்பட்டா... (பரிசு பெற்ற கதை)

சிற்றிதழ் உலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை பகிர்ந்து கொண்ட கதை... போட்டியை சிறப்பாக நடத்திய திரு. கிருஷ் ராமதாஸ் அவர்களுக்கும் கதைகளை வாசித்து மதிப்பெண்கள் கொடுத்த நடுவர்களுக்கும் நன்றி.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எழுத்தாளர்களுக்கும் , கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சரி அப்படியே பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல சிறுகதைப் போட்டியில் களத்தில் இருக்கும் 'நிழல் தேடும் உறவுகள்' கதையை வாசித்து உங்க மதிப்பெண்ணையும் மறக்காமல் கொடுங்கள்.. நன்றி.


****
நாய்க்கு வாழ்க்கைப்பட்டா...

"எங்க போகணும்?"

"கல்துறைக்கு..."

"கல்துறைக்கா...? எத்தனை மணிக்கு...?"
"
ஆறுமணிக்கு..."

"சரி... அங்க போயி..."

"நீ ஆட்டோவுல போ... ஆட்டோ ஏறும் போது நம்பரைக் குறிச்சி எங்கிட்ட சொல்லிடு... கல்குறிச்சி அஞ்சு லைட்டுக்கிட்ட போனியன்னா ஆட்டோ நம்பரை வச்சி அவங்க உன்னை பிக்கப் பண்ணிப்பாங்க..."

"அவங்கன்னா... எத்தனை பேர்...?"

"செய்யிற வேலையில எல்லாம் துருவித் துருவி கேட்பே... யாரா இருந்தா என்ன... போனமா... வந்தமான்னு இல்லாமா... சும்மா..."

"உனக்கு என்ன இம்புட்டு கோபம் வருது... அவங்கன்னா எத்தனை பேர்... போனமா வந்தமான்னு இருக்கணுமின்னாலும் நாளைக்கும் நான் தொழிலுக்குப் போகணும்... ரெண்டு பேருன்னா ஓகே... அதுக்கு மேலன்னா என்னால முடியாது... தேவிதான் அதுக்கு சரியா வருவா... நீ அவளைக் கூப்பிடு..."

"ஏய் இந்தா... அவளைக் கூப்பிடத் தெரியாமயா உன்னைக் கூப்பிடுறாக... அவங்க இப்படித்தான் வேணுமின்னு கேட்டாங்க... நீயும் ராதாவுந்தான் சரியா வருவீங்கன்னு தோணுச்சு... ராதா இப்போ மாரியாயி மில் ஓனர் கூட ஊட்டியில... அதான் உன்னைக் கூப்பிட்டேன்..."


Image result for lADY ART

"ஓ... இது இது இப்படி இருக்கணும்ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்களா... சரிதான்... ஆமா... மொத்தம் எத்தனை பேர்ன்னு சொல்லு..."

"நாலு பேர்..."

"நாலா... என்ன விளையாடுறியா...? என்னைய என்ன மிஷின்னு நினைச்சியா...?"

"ச்ச்சீய் கத்தாதே... சொளையா பன்னெண்டு ஆயிரம் கொடுத்திருக்கானுங்க... உனக்கு எவன் கொடுப்பான் இம்புட்டு... மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டாயிரம் கிடைக்கும்... இன்னைக்கு ஒரு ராத்திரிக்கு உனக்கு ஆறாயிரம்... சொளையா வருது வேணாங்கிறே... நாலு பேருதான்... சின்னப்பசங்கதான்... சரியா வரும்..."

"ஆறாயிரம் கிடைக்கிறது சரிதான்... ஒரு வாரத்துக்காசு ஒரு நாள்ல... ஆனா சின்னப் பசங்கன்னா... காலேசு பசங்களா...?"

"இங்க பாரு.. நீ அங்க போ... அவனுக கூப்பிடுற எடத்துக்குப் போ... என்ன விரும்புறானுகளோ அப்படி நடந்துக்க... விடியக்காலத்துல ஆட்டோவுக்கு போனது வர்றதுக்குன்னு காசு வாங்கிக்கிட்டு முடிஞ்சா காலைச் சாப்பாட்டுக்கும் வாங்கிக்கிட்டு வந்து சேரு... எல்லா விவரமும் தெரிஞ்சாத்தான் போவிங்களாக்கும்... ஏன் போன வாரம் எழுபது வயசுக் கெழவன் கூட மூணு நாள் இருந்துட்டு வரலை..."

"இங்க பாரு அது வேற... இது வேற... பசங்கன்னா காலேசு பசங்களா சொல்லு...."

"நீ என்ன நொய்யி நொய்யின்னுக்கிட்டு... ஸ்கூல் பசங்கடி... போதுமா..."

"ஸ்கூல் பசங்களா...? இவனுகதான் அளவு சொல்லிக் கேட்டானுங்களா...? எனக்கு அந்த ஆறாயிரம் வேண்டாம்... நான் போகலை... வேற யாராச்சும் பாரு..."

"ஏய்... எவனா இருந்த நமக்கென்ன... நமக்கு வேண்டியது பணம்... இப்ப வேற யாராச்சும் பாருன்னா... பார்ட்டிக்கிட்ட மொத்த பணமும் வாங்கிட்டேன்... இன்னும் மூணு மணி நேரத்துல நீ கல்துறையில இருக்கணும்... இன்னைக்கு நீ போகலைன்னா இனி உன்னைய எப்பவும் கூப்பிடமாட்டேன் தெரிஞ்சிக்க..."

"என்ன மிரட்டுறியா...? நான் உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஸ்கூல் பசங்கன்னா என்னைக் கூப்பிடாதேன்னு... என்னோட மகன மாதிரி இருப்பானுங்க... புரிஞ்சிக்க... அவனுக கூட எப்படி... எனக்கும் மனசு இருக்கு... உடம்பை விக்கிறவள்ன்னா மரத்துப் போனவன்னு நினைச்சி வச்சிருக்கே நீ... காலேசு பசங்க கூட இருக்குறதுக்கே வெந்து சாவேன் தெரியுமா... ஸ்கூல் பசங்க... சை... போனதடவை இப்படித்தான் மிரட்டி அனுப்பினே... ப்ளீஸ் சின்னப்பசங்களோட வாழ்க்கை நல்ல பாதையில் பயணிக்கட்டும் இதில் வேண்டாம்... ஒரு தடவை விழுந்துட்டா அப்புறம் எழவே மாட்டானுங்க..."

"எனக்கு நீ கிளாசெடுக்குறியா தே... எவனா இருந்தா உனக்கென்ன... நாளைக்கு காலையில உன்னோட அக்கவுண்ட்ல காசு ஏறிடும்... அவனுக ஆசைய உங்கிட்ட தீத்துக்கப் போறானுங்க... படுக்குற தொழில்ல இவங்கிட்ட படுக்கமாட்டேன் அவனுக்கிட்ட படுக்கமாட்டேன்னு பத்தினி வேம் போடுறே... நாய் வேம் போட்டா குரைச்சித்தான்டி ஆகணும்... கிளம்பிப் போய்க்கிட்டே இரு.."

"பத்தினி வேமா... அதான் பாழுங்கிணத்துல விழ வச்சிருச்சே வாழ்க்கை... இனி எங்கிட்டு பத்தினி வேம் போடுறது... பசங்க வேண்டான்னுதான் சொல்றேன்... எனக்கு எம்மவனை ஒத்த வயசுல்ல பசங்க கூட இருக்க விருப்பமில்லை... ஆறாயிரம் இல்லை ஆறு லெட்சம் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்... நாய் வேம் போட்டாலும் நானும் மனுசிதான்... நீ எனக்கு தொழில் கொடுக்கலைன்னா ஒண்ணும் குடி முழுகிடாது... எனக்குன்னு வர்ற கஸ்டமர் வரத்தான் செய்வாங்க... முதல்ல அந்த பயலுககிட்ட காசை திருப்பிக் கொடுத்துட்டு நாலு உதை கொடுத்துட்டு வா... காசு கிடைக்கிதுங்கிறதுக்காக நரகலைத் திங்காதே... உனக்கும் பசங்க இருக்கானுங்க..." பொரிந்து தள்ளிவிட்டு போனை வைத்தாள் அவள்.

                                                                                                                                                                 -'பரிவை' சே.குமார்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மனசின் பக்கம் : பாகிஸ்தான் வண்ணச் சிநேகிதி

Image result for abu dhabi transport
லுவலகத்திற்கு பேருந்தில் செல்வதில் சில சுவராஸ்யமான சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் நாம் மனபாரத்துடன் வரும்போது அதைக் குறைக்கும் விதமாக சிரிக்க வைக்கும் நிகழ்வுகளும் பல நேரங்களில் வேதனையைக் கூட்டும் நிகழ்வுகளும் நடந்தாலும் எல்லாம் சுவராஸ்யமானவைதான்... கடந்த வாரத்தில் ஒருநாள் ஐந்தாம் நம்பர் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். பேருந்துக்குள் இருக்கைகள் நிறைந்து சிலர் நின்று கொண்டிருக்க, அடுத்த நிறுத்தத்தில் போனில் பேசியபடி ஒரு வயதான பாகிஸ்தானி ஏறினார். வேண்டுமென்றே மிகவும் சப்தமாக பேச ஆரம்பிக்க, அங்கிருந்த மலையாளிகள், ஆந்திராக்காரன் என சிலர் சப்தத்தைக் குறை இது பேருந்து என்று சொல்ல, உடனே நான் அப்படித்தான் பேசுவேன்... பேருந்துக்குள்ள பேசக்கூடாதுன்னு சொல்ல நீ யாருன்னு கேட்டதும் இல்லாம போலீசுக்கு போன் பண்ணுறேன்... அவங்க வரட்டும் கேட்போம் எனச் சொல்லியபடி போனில் சில நம்பர்களை அழுத்தி, இன்னும் சப்தமாக 'என்னைப் பேசக்கூடாதுன்னு சொல்றானுங்க... எனக்கு பேச உரிமையில்லையா... போன் வந்தா என்ன செய்யிறது...' அப்படி இப்படின்னு கோபமில்லாமல் உரக்க பேசியபடி, அந்த நபர்களுடன் அவ்வப்போது முட்டியபடி ஒரு அரைமணி நேரம் பேசிக் கொண்டே வந்தார். ஒரு நிறுத்தத்தில் மலையாளி இருவர் இறங்க, 'ஏய் எங்க போறே... போலீசைக் கூப்பிட்டிருக்கேன்... வா...வா அடுத்த நிறுத்தத்தில் இறங்குவோம்' என்று சொல்லி விரட்ட, அவர்கள் சிரித்துக் கொண்டே சென்று விட, தலைவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது 'போலீசுக்கிட்ட சொல்லிட்டேன்... யாரும் இறங்கக்கூடாது... வந்து பேசுவாங்க... என்ன சரியா.. எனக்கு வேலை இருக்கு வரட்டா' அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே பொயிட்டார். அந்த அரைமணி நேரத்துக்கு மேல மனுசன் கோபமே இல்லாம விவாதம் பண்ணிக் கொண்டு, சும்மா போனை காதில் வைத்துக் கொண்டு 'இங்க பாரு... என்னை பேச வேண்டான்னு சொல்றாங்க', 'பொது கழிப்பிடத்துக்குப் போனாக்கூட என்னைய சிறுநீர் கழிக்காதேன்னு சொல்வாங்க போல' அப்படி இப்படின்னு ரொம்பச் ஜாலியா பேசி எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே வந்தார்.

Image result for புத்தகம்

ன்பின் அண்ணன் கனவுப்பிரியன் அவர்கள் இரண்டு புத்தகங்கள் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் எதுவும் புத்தகம் குறித்துச் சொல்லவில்லை... நமக்கு கோபம் எவ்வளவுக்கு எவ்வளவு வருதோ அதே மாதிரி ஒரு சில விசயங்களில் பொறுமையும் ரொம்ப அதிகம் என்பதை இங்கு சொல்லி விட வேண்டும்... அதுவும் வாசிப்பு என்றால் ரொம்பப் பொறுமை... இரண்டு புத்தகத்தையும் வாசித்தேன். ஒரு புத்தகம் பொள்ளாச்சியில இருந்து புளியம்பட்டி போயி மறுபடிக்கும் பொள்ள்ச்சிக்கு சூரிய வம்சத்துல டிக்கெட் கேக்குற கதைதான்... எங்கே பயணிக்குது... எப்படி நகருதுன்னு கடைசி வரை புரியலை... பின் நவீனத்துவமாம்... என்னமோ போடா மாதவான்னு வாசிச்சி முடிச்சிட்டு அடுத்ததை எடுத்தேன்... தலைப்பெல்லாம் சூப்பர்... ஒரு நாவல்ல மூணு நாலு கதை பயணிக்குது... எல்லாக் கதையிலும் போதை மட்டுமே ஒன்றாய்.... மற்றபடி எந்தக் கதையும் எதோடும் இறுதிவரை சேரலை...இது பின் நவீனத்துவமான்னு தெரியலை... ஆனா எப்படியும் எழுதலாம் என்பதற்கு உதாரணம் இது... ரெண்டு புத்தகத்துக்குமான தொடர்பு 'காமம்'. இவ்வளவு மோசமா இளம் எழுத்தாளர்கள் அதைக் கையாள வேண்டிய அவசியம் என்னன்னு தெரியலை... காமம் கலந்து எழுதலாம் தப்பில்லை... ஆனால் காமமே எழுத்தாய் பக்கமெல்லாம் விரவிக் கிடக்கு... அதிலும் ஒருத்தர் சில மதங்களை வைத்து எழுதியிருக்கிறார்.... ஆனாலும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரிஞ்சது... பிரபல எழுத்தாளர்களின் ஆதரவிருந்தால் இது போன்ற கதைகள் உலக எழுத்து என்று சிலாகிக்கப்படும். 


விஞர் கல்யாண்ஜி என்ற எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதில் மிகுந்த சந்தோஷம். ஒரு மண் சார்ந்த எழுத்தை, அந்த வழக்கில் இருந்து வெளியில் வராது எழுதி, அதற்குள் நம்மை இழுக்கும் சூட்சமத்தை வைத்து எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரின் முகநூல் பக்கத்தில் பூக்களின் வாசத்தை அழகாய் பகிர்வார் தினம் தினமும்... சாகித்ய அகாதெமி வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.

ம்ம சிறுகதை ஒன்று 'பிரதிலிபி - ஒரே ஒரு ஊர்ல' சிறுகதைப் போட்டியில் இருக்கு. சில பல காரணங்களால் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாதென முடிவு செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மின்னஞ்சல் அனுப்பியதும் நம்மளையும் நம்பி(!?) கூப்பிடுறாங்களேன்னு எழுதி அனுப்பிடுவேன்... இப்பவும் அங்கு வரிசைப் படுத்தியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது முதலில் தெரியும் மூன்று வரிசையில் இருக்கும் கதைகள் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது. பின்னால் செல்லச் செல்ல கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதைதான்... ராஜா இதுவரைக்கும் சாப்பிடாத பழம் கொண்டு வரச் சொல்லி அன்னாசிப் பழம் கொண்டாந்தவன் வாயில் வைத்து திணித்து வாய் கிழிந்த போதும் சிரிக்க, ஏன்டான்னு கேட்டா எனக்கே இந்த நிலைன்னா பின்னால ஒருத்தன் பலாப்பழத்தோட நிக்கிறானே அவனை நினைச்சி சிரிச்சேன்னு சொல்வானே அந்தக் கதைதான் என்னோட கதைக்கு ஏதோ சில பார்வைன்னா கடைசி கடைசியா இருக்கவங்களை எல்லாம் யாருமே சீண்டலை.... வாசகர் பார்வையின் அடிப்படையில் தேர்வு என்பது சரியான முறை அல்ல... அதை 'நேசம் சுமந்த வானம்பாடி'-யில் உணர்ந்தேன். இருந்தாலும் நமக்கு ஒரு கதை எழுத சந்தர்ப்பம் அவ்வளவே... வாசிங்க... பிடிச்சிருந்தா மதிப்பெண்ணும் முடிந்தால் கருத்தும் இடுங்க.... அது பரிசுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.... தனிப்பட்ட முறையில் எனக்கு அது குறித்தான கருத்துக்கள் வந்தது அதுதான் சந்தோஷம்... அதற்கான இணைப்பு கீழே...


ன் மனைவி மிக அழகாக படம் வரைவார்... அவர் போடும் கோலங்கள் கண்ணைக் கவரும்... அதுவும் மார்கழி மாதம் என்றால் இரவு மூன்று மணிக்கே எழுந்து கோலம் போட்டுக் கலர் கொடுத்து வாசலை அலங்கரித்து விடுவார். ஊரில் நான் இருக்கும் போது இரவு மூணு மணிக்கு எழுந்திருக்கக் கூடாது எனக் கத்துவேன். இப்ப விஷால் கத்துவான்... அப்படியும் கோலம் போடுவதை விடுவதில்லை... அதில் ஒரு தனிப்பட்ட ஆர்வம்.... அவங்க சென்ற ஆண்டு போட்ட கோலங்களை எல்லாம் பதிவாக்கினேன்... அதை பலர் பதிவாக்கி புள்ளிக் கோலங்கள் என்னும் இணையதளத்திலும் போட்டுட்டாங்க... ஆஹா நாம சுட்ட வடையை எவனோ சுட்டுட்டானேன்னு எனக்கு ஒரு வலைப்பூ வேண்டும் என்று கேட்க, தயார் செய்து  கொடுக்க, தான் போட்ட கோலங்களைப் பதிகிறார். நீங்களும் பாருங்க... உங்க கருத்தைச் சொல்லுங்க...

மனசின் பக்கத்தில் நிறைய எழுத ஆசைதான்... இருப்பினும் பதிவின் நீளம் கருதி....  மற்றொரு பதிவில் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

வெளிநாட்டு இந்தியர்களை ஆழம் பார்த்ததா ஐநூறு ஆயிரம்? (அகல் கட்டுரை)

ந்த மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை... வாசித்து கருத்துச் சொல்லுங்கள்.


************

Image result for 500

வம்பர்-8 அப்படி ஒரு திடீர் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரியாமலேயே எல்லாருக்கும் எப்பவும் போல் விடிந்தது, இதில் ஒரு சில அரசியல்வாதிகள் விதிவிலக்காக இருக்கலாம். அன்றைய தினம் ஐநூறுகளும் ஆயிரங்களும் கடந்து சென்ற தினங்களைப் போல் எல்லா இடத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தன. இரவு எட்டு மணிக்கு பிரதமரின் அறிவிப்பால் ஸ்தம்பித்தது இந்தியா, இது நல்ல திட்டமா... இல்லை மோசமான திட்டமா என்றோ கள்ளப் பணம், கருப்புப் பணம் ஒழிந்ததா... ஒழியுமா என்றோ தீவிர ஆராய்ச்சி செய்தால் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எழுதும் அரசியல் பதிவாகிவிடும். திட்டம் எப்படியோ அதை நடை முறைப்படுத்திய விவகாரத்தில் சாமானியன் இன்னும் பாதிக்கப்பட்டு வருவது வேதனையான விஷயம் என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு இதனால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு எதுவும் பாதிப்பு வந்ததா என்பதை நண்பர் சத்யா சொல்லச் சொன்னதை மனதில் நிறுத்தி, ஊர் நிலவரம்தான் எல்லாருக்கும் தெரியுமே... இங்கு எப்படின்னு எழுதலாம்ன்னு உக்காந்தாச்சு.

ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்ன அன்னைக்கு இரவு எங்கள் அறையில் எல்லாம் பயங்கர விவாதம்... நல்ல திட்டம்... இதென்ன நல்ல திட்டம் நடுத்தர வர்க்கத்துக்கு பாதிப்பு... கள்ள நோட்டு ஒழியும்... ஒழிச்சி... பெரும் பணக்காரன்கிட்ட இருக்க கருப்பு பணத்துக்கு ஆப்புல்ல... முதல்ல சுவிஸ் பேங்கில வச்சிருக்கிறதை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டாருவேன்னு சொன்னது என்னாச்சு... பெரும் முதலைகள் தப்பிச்சிரும்... சின்ன மீன்கள்தான் மாட்டிக்கும்... சந்திரபாபு நாயுடு அன்னைக்கே சொல்லிட்டாரு... குஜராத்துல நாலு மாசம் முன்னாடியே சொல்லிட்டானுங்க... அம்பானி அதானியெல்லாம் ரொம்ப ஷேப் ஆயிட்டாங்க... குப்பனும் சுப்பனும்தான் பாதிக்கப்படுவான் என சாப்பாடு இல்லாமல் நாலு முனைத் தாக்குதல் விவாதம் அனல் பறந்தது. முகநூலை நோக்கினால் வெளிநாட்டில் இருக்கும் அண்ணாச்சிகள் சிலர் மோடியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். ​
 Picture
மறுநாள் அலுவலகம் சென்றால் மலையாளியான ரபீக் 'இது நல்ல திட்டமானு... கள்ளப்பணத்தை அழிக்க சரியான திட்டம்' அப்படின்னு ஒரே சந்தோஷமா சொன்னான். ஆபீஸ் பாயான கர்நாடாகவைச் சேர்ந்த யாசர், 'சூப்பர் திட்டம்... சரியான நடவடிக்கை... இப்படித்தான் செய்யணும்' என்று சொன்னான். குஜராத்தியும் பாம்பேக்காரனும் இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்... தேவையில்லாத வேலை' என்று புலம்பினார்கள். எகிப்துக்காரனான நண்பன் இதென்ன அறிவுகெட்டத்தனம் திடீர்னு இப்படி அறிவிக்கிறது சரியில்லை என்றான். அன்று, அறையில் ரெண்டு நாளைக்கு ஊரில் ஏடிஎம் இருக்காதாம்... நாலாயிரம் மட்டுமே எடுக்கலாமாம் என்ற விவாதங்களும் முகநூல் வாட்ஸ்-அப்பில் ஆளாளுக்கு திரித்து எழுதியதையெல்லாம் வைத்து விவாதம் சூடு பிடித்தது.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மலையாளி 'மக்கள் படாதபாடு படுறாங்க... இந்தாளு டிரைனுக்கு முன்னால நின்னு செல்பி போடுறான்... இது கேவலமான திட்டம்... மக்கள் பாதிப்பு பற்றி துளி கூட கவலை இல்லாத பிரதமர் நாட்டுக்கு எதற்கு?' என்றான். 'என்னடா நீதான் சூப்பர் திட்டம்ன்னு சொன்னே?' என்றதும் 'நாட்டுல பைசா மாத்த முடியலை... ஏடிஎமில் பணம் இல்லை... அரி (அரிசி) கிடைக்கலை... கடைகள் எல்லாம் மூடிட்டானுங்க... ரொம்ப சிரமமா இருக்காம்' என ஆரம்பத்தில் ஆதரவுக்குரல் கொடுத்தவன் சில நாளில் எதிர்க்க ஆரம்பித்தான். அரபு நாட்டைப் பொறுத்தவரை மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் இது முட்டாள்தனமான முடிவு என்றுதான் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் லட்சங்களையும் கோடிகளையும் வீட்டில் வைத்திருப்பவர்கள். ஹவாலா பணம் அதிகம் புழங்குவது சேர நன்நாட்டில்தான் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? எனவே அவர்களுக்கு இந்தத் திட்டம் சுத்தமாக பிடிக்கவில்லை.

கிச்சனுக்கு டீ எடுக்கப் போகும் போது ஆபீஸ்பாய் வந்து இங்கிருந்து 4000 திர்ஹாம் போட்டு விட்டா ஊரில் உன் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் போடப்படும். (அன்றைக்கு ஒரு லட்சத்துக்கு 5500 திர்ஹாம் கிட்ட வரும்) வேணுமின்னா சொல்லு இன்னைக்கு நீ பணம் போட்டா நாளை உன் கணக்கில் பணம் ஏறிவிடும் என்றான். அட ஏன்டா அம்புட்டுப் பணம் முதலில் இல்லை... நாளைக்கு செலவுக்கே வழியில்லை... அது போக ஆசைப்பட்டு யாருக்கிட்டயாச்சும் வாங்கிப் போட்டுட்டு, அவன் ஏமாத்திட்டான்னா எவன்கிட்ட போயி புகார் செய்ய முடியும் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்ற போது நான் ஒரு லட்சம் போட்டிருக்கு என் மச்சான் ரெண்டு லட்சம் போட்டிருக்கு... நிறையப் பேர் போட்டாச்சு' என்றான் சர்வ சாதாரணமாக. கருப்பை எவ்வளவு எளிமையாக வெள்ளை ஆக்குறானுங்க பாருங்க... இதெல்லாம் சுத்தப் பொய் அதல்லாம் முடியாது என மோடிஜிக்கு ஆதரவாய் நாம சொன்னாலும் நம்ம கவுன்சிலர் கூட வரிசையில் வந்து நிற்கலை ஆனாலும் நவம்பர் எட்டுக்கு மேல் செலவு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது இதெல்லாம் சாத்தியமே...

Image result for 1000 dhs

இப்ப ஊருக்கு பணம் அனுப்புறதில் பிரச்சினை... அவசரத் தேவைக்கு பணம் அனுப்பினாலும் அங்கு முதலில் 4000, அப்புறம் 2000 என்றாகிவிட, ஊரில் வீடு கட்டுபவர்கள்... திருமணச் செலவுக்காக மகனின் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள், வைத்தியச் செலவு... இப்படியான சூழலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. கேரளாவில் என் நண்பனின் சகோதரி திருமணம் இதனால் நிறுத்தப்பட, அவன் ரொம்ப புலம்பிக் கொண்டிருந்தான். நண்பர் ஒருவர் அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய சூழல், வங்கி மூலம் எடுப்பதில் சிரமம் என்பதால் வெஸ்டர்ன் யூனியன் மூலமாக அனுப்பினால் மொத்தமாகப் பெற முடியும் என நினைத்தோம், அப்போது அதன் மூலம் அனுப்பிய நண்பர் ஒருவர் அதிலும் சிக்கல் இருப்பதைச் சொன்னார்... ‘மொத்தமாகக் கொடுக்க முடியாது... அரசு நிர்ணயித்தபடி கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு மூணு நாட்களில் வாங்கிக்கங்க என்று சொல்லி விட்டார்களாம்’ என்றார், சரி அருகில் இருந்த யுஏஇ எக்ஸ்சேஞ்சில் கேட்டு வருவோம் எனச் சென்றோம்... அவர்களும் அப்படித்தான் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். மொத்தமாக வேண்டும் என்றால் வங்கிக் காசோலையாக கொடுப்பார்கள்... மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்.

மலையாளி ரொம்பப் புலம்பினாலும் அடுத்த நாள் சந்தோஷமாக இருந்தான்... என்னடா ஊரில் பணமெல்லாம் மாத்திட்டீங்களா? என்றதும் 'அவசரமா ஐம்பதாயிரம் பணம் அனுப்ப வேண்டிய நிலை... வங்கி மூலமோ, வெஸ்டர்ன் மூலமோ அனுப்பினாலோ அங்கு பணம் எடுப்பதில் சிக்கல்... அதான் உண்டி மூலமாக அனுப்பிட்டேன் என்றான். உண்டியிலா..? இப்போ அங்க மொத்தமா பணம் கொடுத்துருவானா என்றதற்கு 'நேற்று இரவு கொடுத்தேன். 560 திர்ஹாம் 10,000, (எக்ஸ்சேஞ்ச் மூலமா அனுப்புனா 540 இருந்தது), எக்ஸ்சேஞ்சைவிட அதிகம் என்றாலும் சர்வீஸ் சார்ஜ் 20 திர்ஹாம் கொடுக்கிறதை வைத்துப் பார்த்தால் இது மோசமில்லைதானே... நேற்று ராத்திரி கொடுத்தேன்... இன்னைக்கு காலையில 2000 ரூபாய் நோட்டா அம்பதாயிரம் வீட்டுல கொடுத்துட்டான்... வங்கியில போயி தொங்கிக்கிட்டு நிக்க வேண்டிய அவசியமில்லை என்றான்.

பெரும்பாலும் மலையாளிகள் உண்டியில் அனுப்பி விடுகிறார்கள். இங்கு லட்சங்களை வாங்கிக் கொண்டு அங்கு லட்சத்தைக் கொடுக்க ஆளிருக்கு. நம்ம ஊருக்கும் உண்டி இருக்கத்தான் செய்கிறது. அரசு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்கு சேவை வரி விதிக்கப் போவதாய் பேச்சு அடிபடுகிறது அப்படிச் செய்யும் பட்சத்தில் 500 க்கும் 600 க்கும் கிளீனிங் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் ரொம்ப பாதிக்கப்படுவார்கள் என்றாலும் பெரும்பாலான பண பரிவர்த்தனை உண்டி மூலமே நிகழும். அரசுக்கு எக்ஸ்சேஞ்ச் மூலமாக கிடைக்கும் சேவை வரியும் கிடைக்காமல் போகும்.

இன்றைய நிலையில் பண மாற்றம் கொடுத்த வீழ்ச்சியினால் திர்ஹாமுக்கு எதிரான பண மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. (1 திர்ஹாம் = 18.68 ரூபாய் வரை சென்று இன்று 18.60 ஆயிருக்கிறது). தங்கத்தின் விலை கிராமுக்கு 150 திர்ஹாம் வரை இருந்தது 135 திர்ஹாமாக குறைந்திருக்கிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள் பண மதிப்பைக் கருத்தில் கொண்டு வங்கிகளில் லோன் எடுத்து ஊருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐநூறு ஆயிரம் ஒழிப்புத் திட்டத்தால் இங்கு அதிகம் பிரச்சினை இல்லை என்றாலும் இங்கிருந்து அனுப்பும் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஊரில்... உண்டிகளும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயல்பவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை. ஐநூறு ஆயிரத்தை முடக்க இரண்டாயிரத்தை கையில் எடுத்த போது அதன் பின்னே வரும் பிரச்சினைகள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாதது பண முதலைகளை காப்பாற்றி சாமானியர்களை பாதித்திருக்கிறது என்பதே உண்மை.

இங்கும் பலபேர் கையில் நம்ம பணமான ஐநூறு ஆயிரத்தில் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு எப்படி மாற்றுவது எங்கு தவிக்கிறார்கள். இங்கு பழைய நோட்டை மாற்றி புது நோட்டுக் கொடுக்க எந்த எக்ஸ்சேஞ்சும் முன்வரவில்லை. பணப் பிரச்சினை சில நாள் காரசாரமான விவாதத்தை முன்னெடுக்க வைத்தது என்றாலும் தற்போது அது குறித்தான பேச்சுக்கள் குறைந்து பெட்ரோல் விலை குறைவால் புராஜெக்ட்ஸ் எல்லாம் நிறுத்தப்பட்ட நிலையில் வேலை நீடிக்குமா என்ற கவலை மீண்டும் எல்லாருடைய மனதிலும் ஆட்கொள்ள யுஏஇ இன்று தனது 45 வது தேசிய நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆர்ப்பாட்டம் இல்லை என்றாலும் தேசிய தினம் வாண வேடிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

சனி, 17 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது ; பல்லவ பீடம்

வாசிப்பின் தொடர்ச்சியாய் கனவுப் பிரியன் அண்ணன் கொண்டு வந்து கொடுத்த 'ஐந்து முதலைகளின் கதை'யை வாசித்தேன். அது குறித்தான விமர்சனத்தை இங்கு வைக்க விரும்பவில்லை... ஆனாலும் ஒன்று முன்னுக்குப் பின்னாய்... பின் நவீனத்துவம் என்று சொல்லிக் கொண்டு எழுதினால் பிரபலங்கள் ஆஹா.. ஓஹோ என்று புகழ்வார்கள் என்பதை உணர்த்திய இரண்டாவது நாவலையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்... என்னைப் போன்ற பாமரனுக்கு இதைப் போன்ற நாவல்களைப் புரிந்து படிப்பது ரொம்பச் சிரமமே... ஏன்னா எனக்கு பின் நவீனத்துவ எழுத்து அறிமுகமில்லை.... பாமர எழுத்து மட்டுமே பரிச்சயம்... பின் நவீனத் துவத்துக்குள் புகுந்து வர முடியாமல் இடையில்  அதை விடுத்து எப்பவும் போல் சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புனைவு ஒன்றை வாசித்தேன். 234 பக்கங்களைக் கொண்ட சிறிய வரலாற்றுப் புனைவு... நிறையப் படங்களுடன் இருப்பதால் பக்கங்கள் விரைவாய் நகர்கின்றன. அதைப் பற்றித்தான் இங்கு பேசப் போகிறேன்.


பல்லவ பீடம்...

பல்லாரியில் (பல்லவபுரி) அரசாண்ட பல்லவ மன்னன் பப்பதேவனின் மகன் சிவஸ்கந்தவர்மன் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயன்ற களபிரர்களை காஞ்சியில் வைத்து வெற்றி கொண்டதை கருவாக எடுத்து, காஞ்சி மாநகரை முதல் முதலில் ஆட்சி செய்தவன் இளந்திரையன் என்னும் மன்னன்.... அவன் ஆட்சி புரிந்த போது அமர்ந்திருந்த, பொன்னும் வைரமும் வைடூரியமும் மாணிக்கமும் பதிக்கப்பெற்ற பீடத்தை அதன் பின்னான அரசர்கள் சரிவர ஆட்சி செய்யாமல் பல்லவநாடு வலு குன்றியதால் தனது முதுமையில் பல்லவ பீடத்தை எங்கோ மறைத்து வைத்து விட்டு மறைந்து விட்டான் எனவும், அதைக் கண்டு பிடிப்பவனே இந்த நாட்டை ஆட்சி செய்வான் என்றும் அவனாலேயே பல்லவ சாம்ராஜ்யம் மலரும் என்று சொல்லி விட்டு மறைந்ததாகவும்  வதந்தி இருப்பதாக ஒரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்ல வைத்து பல்லவ பீடம், மாடுகள் திருட்டு, கள பிரர்களுடன் போர் என கதையை நகர்த்தியிருக்கிறார்... மிகச் சிறிய வரலாற்றுப் புனைவு இது என்றாலும் வாசிக்கும் போது வசீகரிக்கத்தான் செய்கிறது.

பப்பதேவனின் ஆணையை ஏற்று காஞ்சியில் நடக்கும் மாடு திருட்டு பற்றி அறிய வரும் பப்ப குமாரன் (சிவஸ்கந்தவர்மன்), நகருக்குள் நுழையும் முன்னரே மாடு திருட வந்த கொள்ளையரில் ஒருவனைக் கொன்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள்தான் நாயகி தாமரைச் செல்வி... பின் என்ன கண்டதும் காதல்... அவளுக்கு ஒரு முறை மாப்பிள்ளை... குடிகாரன், அவனுடன் சேர்ந்து குடிக்கும் அவளின் அப்பா பெரிய மறவன் இருவரும் வர, மோதலுக்குப் பின்னர் காதலுடன் அவளிடம் இருந்து விடைபெற்று காஞ்சி செல்கிறான்.

மாடு கடத்தல் குறித்து விசாரிக்க வந்தவனுக்கு பப்பதேவன் ஆந்திராவில் இருப்பதால் காஞ்சியைப் பார்த்துக் கொள்ளும் படைத் தலைவன் அதை களப்பிரர்களுடன் சேர்ந்து கைப்பற்றத் திட்டமிடுவது தெரிய வர,  பல்லவ மன்னனுக்கு நெருக்கமான நீதிபதி நிரூபவர்மரிடம் வேலைக்குச் சேர்ந்து படைத்தளபதியுடன் மோதல், தாமரைச் செல்வியுடன் காதல் என்று இருக்கிறான். இதனிடையில் பெரிய மறவன்  மூலமாக குகைக்குள் இருக்கும் பல்லவ பீடத்தைப் போய் பார்த்து வருகிறான். அதை வெளியில் கொண்டு வர சரியான சந்தர்ப்பம் வரட்டும் என்று முடிவு செய்கிறான். பல்லவ பீடம் பற்றி பெரிய மறவனுக்கு தெரியக் காரணமே அதை அறிந்த இன்னொருவன்தான்...ஆனால் அந்த இன்னொருவன் யார் என்பது தெரியாது. குகைக்குள் இறங்கி பீடத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது அந்த இன்னொருவனால் பிரச்சினை... அதைச் சமாளிக்கும் போது பெரிய மறவனுக்கு கத்திக் குத்து விழ, அந்த இன்னொருவனைக் கண்டு பிடிக்கவும் காஞ்சியைக் காக்கவும் பெரிய மறவன் இறந்ததாக நாடகம் ஆடுகிறான்.

பின்னர் களப்பிரருடன் போர் செய்து வெற்றி பெற்று காஞ்சியைக் காப்பாற்றுகிறான்... மாடு கடத்தல் எதற்காக நடக்கிறது...? பல்லவ பீடம் குறித்து அறிந்த அந்த மற்றொரு நபர் யார்...? படைத்தலைவன் என்ன ஆனான்...? நிரூபவர்மர் வகுக்கும் திட்டங்கள் வெற்றிக்கு உதவியதா..? தாமரைச் செல்வியை மணம் முடித்தானா,..? முறை மாப்பிள்ளை என்ன ஆனான்...? பெரிய மறவன் பிழைத்துக் கொண்டானா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை கண்டு முடிகிறது பல்லவ பீடம்.

சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள் வைத்து வரிஞ்சி வரிஞ்சி வசீகரிக்கும் விதமாக வர்ணனைகளை அள்ளி வீசியிருப்பார்... இதில் நாயகி ஒருத்தியே... வர்ணனைகளும் குறைவுதான்... நான் பப்பதேவனின் ஒற்றன்.. மாடு திருட்டை கண்டுபிடிக்க வந்தவன் என்று சொல்லும் போதே இவந்தான் இளவசரன் என்று நமக்குத் தெரிந்து விடுகிறது. படைத் தலைவனுக்கும் இவனுக்கும் மோதல் ஏற்படுவதும் நீதிபதியின் செய்கைகளும் யார் வில்லன் என்பதையும் புலப்படுத்தி விடுகிறது. 

சின்ன ஒரு விதையை மட்டும் வரலாற்றில் இருந்து முழுக்க முழுக்க கற்பனை கலந்து எழுதியிருக்கிறார். கற்பனைக் கதைதான் என்றாலும் வாசிப்பவர்கள் பப்பதேவனின் குமாரன் சிவஸ்கந்தவர்மனின் குதிரையின் பின்னால் பயணிக்க வைத்து விடுகிறார்... 
-'பரிவை' சே.குமார்.

புதன், 14 டிசம்பர், 2016

பாரதி நட்புக்காக : எத்தனை கோடி இன்பம்...

புதாபி பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் நிகழ்வுகளுக்கு எல்லாம் தவறாமல் செல்வேன். அதற்கு இரு காரணங்கள் உண்டு... முதலாவது அபுதாபியில் மலையாளிகளும் கன்னடர்களும் அதிக விழாக்களை... பெரும்பாலும் சினிமா சம்பந்தமான நிகழ்வுகளை நடத்தும் போது நம் தமிழுக்காக நடத்தப்படும்  விழா என்பதால்.... இரண்டாவது காரணம் நமக்கு நாலு பதிவு தேறுமே... அதை எழுதி உங்களையும் படுத்தி எடுக்கலாமே என்ற நல்ல எண்ணமே காரணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலைனில் இருந்து கூட விழாவுக்கு வந்திருந்தேன். இந்த முறை விழா நிகழ்வு அருகில்தான் என்றாலும் செல்ல முடியாத சூழல்... மிகச் சிறப்பாக, சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு நிகழ்ந்த சுழலும் சொல்லரங்கத்தை கேட்டு ரசிக்க முடியவில்லை. அங்கு செல்ல முடியாத நிலை என முகநூலில் சொன்ன போது, நான் என்னவோ மிகச் சிறப்பான விமர்சனப் பகிர்வு அளிப்பது போல்... (அப்படியே தொகுத்துக் கொடுப்பேன் அவ்வளவே) உங்கள் விமர்சனத்தை நாங்கள் இந்த முறை பார்க்க முடியாதே என பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் திரு.இராமகிருஷ்ணன் சார் கருத்தாக பகிர்ந்திருந்தார். விழா குறித்த போட்டோக்களையாவது பதிவாக்கலாம் என கேமராக் கவிஞர் அண்ணன் திரு. சுபஹான் அவர்களிடம் கேட்டதும் படங்களை உடனே அனுப்பிவிட்டார். விழா நிகழ்வுகள் படங்களாய் உங்கள் பார்வைக்கு....
(விழா மேடையில் நடனம்)
(விழா மேடையில் நடனம்)
(புலவர் இரெ.சண்முகவடிவேலு)
(பேராசிரியர். திரு. இராமச்சந்திரன்)
(திரு.மோகன சுந்தரம்)
(பேராசிரியை. திருமதி. பர்வீன் சுல்தானா)
(பார்வையாளர்களாய் ரசிப்பில்)
(பார்வையாளர்களாய் ரசிப்பில்)
விழாவை போட்டோ மூலம் ரசித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நான் பார்க்க வீடியோ பகிர்வு கிடைத்தால் உங்களுக்கு பதிவாய் எழுதுகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 10 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : ராஜ திலகம்

வாசிப்பு அவ்வப்போது தடைபட்டாலும் சில நாட்களாக சாண்டில்யனின் ராஜ திலகம் வாசித்து முடித்தேன். சாண்டில்யன் நாவலுக்கே உரிய இரட்டை நாயகிகள்... இருவரும் வரலாற்று நாயகிகள் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு ராணியின் பெயர் எதிலும் பொறிக்கப்படவில்லை என்றாலும் மாமல்லபுரத்தில் ராஜசிம்ம பல்லவனுடன் இரு ராணிகள் இருப்பதை வைத்து ஒரு ராணிக்கு மைவிழிச் செல்வி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.  இரட்டை நாயகிகள் என்றாலும் கடல்புறா, ஜலதீபத்தைவிட இதில் வர்ணனை அதிகம். இளைய பல்லவன் இரண்டு ராணிகளையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சந்திக்கும் இடங்களில் எல்லாம்  ரெண்டு மூணு பக்கத்துக்கு வர்ணனைகள்தான்... அதுமட்டுமில்லாமல் இரண்டு ராணிகளும் சந்தித்துப் பேசும் இடங்கள் எல்லாம் வார்த்தை விளையாட்டு வர்ணனைகள்தான்.

Image result for சாண்டில்யனின் ராஜதிலகம்

காஞ்சியை ஆண்ட பரமேஸ்வரவர்மன் அதன் சிற்பக்கலைகள் போரில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனிடம் காஞ்சியை விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடுகிறான். அவனின் மகன் இளவரசனும் மிகச் சிறந்த சிற்பியும் ஆன இளைய பல்லவன் என்ற ராஜசிம்மனை போரில் கவனம் கொல்லாமல் மாமல்லபுரத்தில் கோவில் கட்டுவதற்கு அனுப்பியிருக்கிறார். அப்பா தலைமறைவாக இருந்தாலும் மகன் சிற்பி என்றாலும் ஒருவேளை அப்பனுடன் சேர்ந்துவிட்டால் சாளுக்கிய வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும் என்பதோடு அவன் போர்த் தந்திரங்களில் சிறந்தவன் என்பதால் அவனை சிறை செய்ய நினைக்கின்றார் சாளுக்கிய போர் மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் ஆனால் விக்கிரமாதித்தனோ அவனின் திறமை மீது மதிப்பு வைத்து இருவரும் போரில் நேருக்கு நேர் மோத வேண்டும் என்று சொல்லி கைது பண்ணும் சூழல் இருந்தும் தப்ப விடுகிறான்.

மாமல்லபுரத்தில் இருக்கும் மைவிழிச் செல்வி, இவள் அரச ஒற்றன் இந்திர வர்மனின் மகள், கடலை ரசிப்பது போல் ஓராண்டுக்கு மேலாக ராஜசிம்மனை மனதுக்குள் காதலித்து ஏங்குகிறாள். தன்னை மல்லையில் வைத்து கைது செய்ய நினைக்கும் சாளுக்கிய தளபதி வீரபாகுவிடம் இருந்து தப்பித்து காஞ்சியை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் இளவரசன் சூழலால் மைவிழிச் செல்வியையும் அழைத்துக் கொண்டு காஞ்சி பயணிக்கிறான். அவனுடன் அவனின் நண்பனும் சீனனுமான யாங் சிங்கும் இருக்கிறான். மைவிழிச் செல்வியையும் மற்றவர்களையும் சாளுக்கிய படைகள் தங்கியிருக்கும் இடத்தில் தங்க வைத்துவிட்டு தான் மட்டும் அரசுக்கு நெருக்கமான சாமியார்ரும், அரச குருவுமான தண்டியின் இல்லத்தில் தங்குகிறான். அங்கு கங்க நாட்டு மன்னன் பூவிக்கிரமனின் மகளான ரங்கபதாகா தேவியைப் பார்த்து அவளையும் விரும்ப ஆரம்பிக்கிறான். அந்த இடத்தில் அவனைச் சிறை வைக்கும் ஸ்ரீராமபுண்யவல்லபர் இரண்டு பெண்களையும் அங்கு தங்க வைக்கிறார்.

சாளுக்கியரின் நண்பனான கங்க மன்னன் மூலமாக விளிந்தையில் இருக்கும் பரமேஸ்வரபல்லவனை வீழ்த்த திட்டமிடும் ஸ்ரீராமபுண்யவல்லபர், அந்த இடத்துக்கு இளவரசன் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் தண்டியின் இல்லத்தில் இருந்து சுரங்கப்பாதையில் தப்பித்துச் செல்லும் இளவரசனை சிறை பிடிக்க, அங்கிருந்தும் தப்புபவனை அங்காங்கே சிறை பிடிக்க முயன்று இறுதியில் காட்டுக்குள் இருக்கும் அரச மாளிகையில் சிறை வைக்கிறார். விளிந்தைக்கு அருகே காவிரிக் கரையோரம் கங்க மன்னனை எதிர்க்கும் ராஜா பரமேஸ்வரவர்மன், சிறிய படையால் அவனை எதிர்க்க முடியாமல் காயம் பட்டு போர்க்களத்தில் இருந்து தனது குதிரை அதிசயம் காற்பாற்றிக் கொண்டு வர தோல்வியுடன் திரும்புகிறார். அவருக்கு அங்கு வரும் கங்க மன்னன் மகள் மருத்துவம் பார்க்க மருத்துவரை அழைக்கிறாள். காட்டு மாளிகையில் இருந்து தப்பி வரும் இளவரசன் மருத்துவராய் வர, சீனன் தங்கள் நாட்டு அங்குபஞ்சர் முறையில் காயத்தை உடனே குணமாக்குகிறான்.

ரங்கபதாகா தன் தந்தையின் படையினை காவிரிக் கரையில் இருந்து இளவரசனுடன் மோதாமல் சாமர்த்தியமாக தங்கள் தலைநகர் தழைக்காட்டுக்கு கூட்டிச் சென்று விட, விக்கிரமாதித்தனுடன் நேருக்கு நேர் மோத படையைப் பெருக்கும் முகமாகவும், தங்களுக்கான பண வசதிக்காகவும் சாளுக்கிய நாட்டின் எல்லைப் பகுதியில் போர் தொடுத்து அங்கிருக்கும் கிராமங்களில் வரி விதித்து செல்வம் சேர்க்க நினைக்கும் ராஜசிம்மன், பூவிக்கிரமன் இந்தச் சண்டையின் போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்டு தழைக்காட்டுக்குப் போகிறான். அங்கு அவனை சம்மதிக்க வைப்பதுடன் ரங்கபதாகாவை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் பெற்று வருகிறான்.

காட்டு வழியாக சாளுக்கியம் நோக்கி படையை நடத்திச் செல்லும் சீனன், வழியில் கங்க நாட்டு போர் வீரர்களையும் சேர்த்துக் கொள்ள படையின் பலம் கூடிவிடுகிறது. அவர்களுடன் தழைக்காட்டில் இருந்து வந்து சேர்ந்து கொள்ளும் இளவரசன் அதைப் பார்த்து கோபம் கொள்ள, சீனன் எடுத்துச் சொல்ல, கங்கநாட்டு வீரர்களை தனியாக வைக்காமல் கலந்து செல்ல வைத்து விக்கிரமாதித்தனின் மகன் விஜயாதித்தன் மற்றும் பேரனும் சிறுவனும் ஆன விநயாதித்தனை எதிர்த்து வெல்கிறான். இந்தப் போரில் விநயாதித்தனின் போர்க்குணத்தைப் பார்த்து அவனின் வீரத்தைப் பார்த்து, போர் முடிந்து நீ எனது எதிரிதான் என்று ஒரு பார்வை வீசி, குதிரையைப் பிடித்தபடி நடந்து செல்பவனைப் பார்த்து இவனைப் போல் மகன் எனக்கு பிறக்க வேண்டும் என போர்க்களத்தில் சொல்கிறான்.  அதை விக்கிரமாதித்தனிடமும் உறையூரில் சொல்கிறான். அடுத்தவனின் வீரத்தை மதிப்பதிலும் அவர்களை கொல்லக் கூடாது என்பதிலும் இருவரும் உறுதியாக இருந்தார்கள் என்று பல இடங்களில் சொல்கிறார் சாண்டில்யன்.

தெலுங்கு தேசம் சென்று பரமேஸ்வரவர்மன் படை திரட்டி வர, காஞ்சிக்கு அனுப்பப்பட்ட மைவிழிச்செல்வி தண்டியுடன் இணைந்து அங்கிருக்கும் நிலவரம் குறித்து ஓலை அனுப்ப, சோழர்களை எதிர்க்க முக்கால்வாசி படையுடன் ஸ்ரீராமபுண்யவல்லவரை காஞ்சியை ஆள வைத்துச் செல்லும் விக்கிரமாதித்தனைப் பார்க்க தானே உறையூர் செல்லும் இளவரசன், அங்கு விக்கிரமாதித்தனுடன் போர்ப்பயிற்சிக் கூடத்தில் மோதி வெல்கிறான். பாண்டியனுக்கு பல்லவர் எதிரி என்பதால் திறமைமிக்க பாண்டிய இளவரன் ரணதீரனை தங்களுக்கு உதவ ஸ்ரீராமபுண்யவல்லவர் கேட்க நினைத்து ஓலை அனுப்பியிருக்கும் வேளையில் அவனையும் உறையூரில் சந்தித்து அவனுடனும் போர் செய்து வெற்றி பெறுகிறான். அவனுடன் போர் செய்ய இளவரசன் கேட்பது விக்கிரமாதித்தனுடனான போரின் போது அவன் தந்தை உதவிக்கு வரலாம் ஆனால் ரணதீரன் வரக்கூடாது என்று கேட்டு போர் மந்திரியின் எண்ணத்துக்கு செக் வைத்து விடுகிறான். 

அதன் பின்னர் படைகளை வழி நடத்தி பெருவநல்லூர் என்னுமிடத்தில் விக்கிரமாதித்தனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கு அவன் அமைக்கும் போர் வியூகம் விருட்சிகம்... மிகச் சிறப்பான வியூகம் அமைக்க, அதை அறிந்த சாளுக்கிய மன்னன் படையினை மூன்றாகப் பிரித்து இரண்டை காட்டுப் பகுதிக்கு அனுப்ப, அதையும் அறியும் ராஜசிம்மன், சீனன்,படைத்தளபதி பலபத்ரவர்மன் உள்ளிட்ட மிகச் சிறந்தவர்களின் உதவியுடன் தந்தையை முன்னிறுத்தி வெல்கிறான். காயம் பட்ட விக்கிரமாதித்தனை காப்பாற்றி, அவனை சாளுக்கிய நாட்டுக்கு திரும்பிச் செல்லப் பணிக்கிறான். ராஜசிம்மனை விட்டால் சாளுக்கிய பேரரசை விஸ்திகரிக்க முடியாது என்று சொல்லும் ஸ்ரீராமபுண்யவல்லபர் நிறைய சாணக்கியத்தனம் செய்தும் அதை இளவரசன் முறியடித்து வென்று காஞ்சி திரும்ப, அவனின் மணம் முழுவதும் நிறைந்திருக்கும் காஞ்சி கைலாசநாதர் மற்றும் மல்லை அரங்கன் கோவில் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இரண்டு மோதிரங்களில் கோவில்களைப் பொறித்து ராணியரால் ராஜசிம்மனுக்கு திலகமிடச் சொல்லிவிட்டு சாளுக்கியத்துக்கு பயணிக்கிறார்.

போர் வியூகங்களையும் போர்க் காட்சிகளையும் எழுதுவதில் தான் கில்லாடி என்பதை இதிலும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன் அவர்கள். ஆரம்பத்தில் மாமல்லபுரத்தில் இருந்து நகரும் கதை, காஞ்சிக்கு வந்து விளிந்தைக்குள் நுழையும் வரை ரொம்ப மெதுவாகத்தான் செல்கிறது. மைவிழி, ரங்கபதாகா இவர்களுடனான காதல், அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் என சுற்றிச் சுற்றி வருவதால் கதையை வாசிப்போமா வேண்டாமா என்று நினைக்க தோன்றியது. விளிந்தைக்குள் நுழைந்ததும் கங்க தேசம் செல்வதும் பாக்குவெட்டி வியூகம் வைத்து சாளுக்கியத்தை வெல்வதும் விக்கிரமாதித்தனை உறையூரில் சென்று சந்தித்து நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்று அவனுக்கும் தன் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, பெருவநல்லூரில் விருட்சிக வியூகம் அமைத்து வெற்றி பெற்று காஞ்சிக்கி வரும் வரை கதை விறுவிறுன்னு நகர கீழே வைக்க மனமின்றி வாசித்து முடித்தேன்.

ராணியரின் துணையுடன் தனது தந்தையின் ஆசையை நிறைவு செய்யும் விதமாக மிகச் சிறப்பாக இரண்டு கோவில்களையும் கட்டி முடித்த ராஜசிம்மன் தனது நண்பனும் சீனனுமான யாங் சிங்கிற்காக புத்தரின் கோவில் ஒன்றையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : உண்மை தெரிஞ்சா...?

'உண்மை தெரிஞ்சாகணும்... உண்மை தெரிஞ்சாகணும்...' என்று ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்களில் வரும் பகிர்வுகளைப் பார்க்கும் போது  இவர்கள் எல்லாம் அந்த 75 நாட்கள் எங்கிருந்தார்கள்..? ஏன் அப்பொழுதெல்லாம் அப்போலோவில் நடந்த நாடகம் குறித்துக் கேட்கவில்லை..? இப்போது உண்மை அறியத் துடிப்பவர்கள் அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறார்கள்..? சம்பந்தப்பட்டவரை நாடு கடத்திவிடுவார்களா என்ன..? உண்மையைத் தெரிந்து கொண்டு மௌனமாகத்தான் இருக்கப் போகிறோம்... பிறகு எதற்கு விடியாத பொழுதில் கூவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ஒரு வழக்கறிஞர் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியதற்கு அவரைச் சூழ்ந்து கொண்ட ரவுடிக் கூட்டம் அவரை மிரட்டி மன்னிப்புக் கேட்கச் சொல்லும் வீடியோவை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். இதுதான் உண்மை நிலை... ஒரு சாமானியன் மரணம் குறித்துக் கேட்டால் அவனின் மரண நாள் குறிக்கப்படும் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம். அன்று அம்மா... அம்மான்னு கூழைக் கும்பிடு போட்டு, ஹெலிகாப்டரையும் காரையும் பார்த்து  மணிவண்ணன் சொல்வதைப் போல கிருஷ்ணா... கிருஷ்ணா என பருந்தைப் பார்த்து கும்பிடு போடுவது போல் கும்பிட்டு... ரோட்டில் விழுந்து கும்பிட்டு... மண் சோறு சாப்பிட்டு... தீச்சட்டி எடுத்து.. வேல் போட்டு... மொட்டை அடித்த பயகதான் இன்னைக்கு சும்மா நிக்கிறானுங்க. இவனுக இன்னும் அடிமை வாழ்க்கைக்குத்தான் ஆசைப்படுவார்களே ஒழிய நல்லதொரு அரசை நமக்குத் தரமாட்டார்கள் என்பதை அறிந்தும்தான் நாம் உண்மையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிரந்தர முதல்வரே... என்றவனெல்லாம் நிம்மதி என்று நினைத்து 'அவரால் ஒன்றும் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை' என்று அறிக்கை விடுகிறான். சரி அவரால் வரவில்லை... இப்ப இருக்கும் அடிமை அல்லக்கைகளால்தான் ஓட்டு விழுந்தது... ஆட்சிக்கு வந்தோமென்றால் மீண்டும் தேர்தலைச் சந்திப்பார்களா..?  அது எப்படிச் சந்திப்பார்கள்... இருக்கும் வரை சம்பாரித்துக் கொள்வோம் என இனி துரிதமாக இயக்குவார்கள். அதற்காகத்தானே அடிப்படை உறுப்பினரை பொதுச் செயலாளர் ஆக்கும் முயற்சியில் திளைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா என்னும் ஒரு மனுஷி, ஹிட்லராய் இருந்து இவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது இன்றைக்கு இவர்களின் செயலைப் பார்க்கும் போது தவறில்லை என்றே தோன்றுகிறது.

போயஸ் தோட்ட மர்மம்... அப்போலோ மர்மம்... அப்படின்னும் இன்னைக்கு கட்டுரைகள் எழுதிக் குவிக்கும் பத்திரிக்கைகள் எல்லாம் செப்டெம்பர் 22 முதல் தமிழகத்தை விட்டு வெளியில் இருந்தா செய்திகளைக் கொடுத்தன. நித்யானந்தா படுக்கை அறை வரை செல்ல முடிந்த மீடியாக்களால் அப்போலோவுக்குள் செல்ல முடியவில்லையே ஏன்..? யாருக்காக அவர்கள் உண்மை அறியும் முயற்சியில் இறங்கவில்லை... இன்று சில தொலைக்காட்சிகளும் சில பத்திரிக்கைகளும் சின்னம்மாவுக்கு சாமரம் வீசுவதிலிருந்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சாதித்த மௌனத்தின் காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கட்சியின் அடிப்படை உறுப்பினரை முதல்வர் நேரில் சென்று பார்த்து மாநில நிர்வாகம் குறித்து விவாதிப்பது எந்த மாநிலத்தில் நடக்கும்... அடிப்படை உறுப்பினரை தங்கள் சுய நலத்துக்காக பயன்படுத்தும் கட்சிகளைத்தான் நாம் அறிவோம். இங்கே அடிப்படை உறுப்பினரும் அடிப்படை உறுப்பினர் அல்லாதோரும் கட்சியைக் கைப்பிடிக்க நினைப்பதுடன் தமிழகத்தை ஆளவும் முயல்வதுதான் வேதனை... இப்படியான ஒரு நிகழ்வு நடக்குமானால்... நடக்குமானால் என்ன நடந்தே தீரும் என்பதுதான் நிதர்சனம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கு காரணகர்த்தா யாராக இருக்க முடியும் நாம்தான்... பணத்துக்காக நம் ஓட்டை விற்று பணம் தின்னும் பிணங்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு திருவோடு சுமக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்று அப்போலோ வாசலில் தவம் கிடந்து பூஜைகள் செய்த தமிழினம் அப்போலோவுக்கு பூஜை செய்திருந்தால்... மிகப் பெரிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் நம் முதல்வரின் சாவு குறித்தான உண்மையை அறிந்திருக்க முடியும். நம்மை எவ்வளவு கேவலமாக நினைத்து மத்திய அரசும் இவர்களும் காய் நகர்த்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால்... தமிழினத்துக்கு வெட்கக்கேடு... சிரிக்கிறார்... பேசுகிறார்... சாப்பிடுகிறார்... என்று ஒரு பக்கம் கட்சிக்காரர்களும், நல்லாயிருக்கிறார்... விரைவில் வீடு திரும்புவார் என மாநில, மத்திய அரசியல் கட்சித் தலைவர்களும் நம்மை எப்படியெல்லாம் ஏமாத்தினார்கள்... நாம் அடிமையினமாக இருப்பதால்தான் அறிவில்லாத மனிதர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். ஒரு மருத்துவன் உண்மையைப் பேச வேண்டும் என்பதைக் கூட நினைவில் கொள்ளாத நிர்வாகம் கோடிகளில் சிக்கி விட்டதை நம்மில் அனைவரும் அறிவோம். இருந்தும் அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் மண்ணுக்குள் புதைத்த பின்னர் கேள்வி கேட்கிறோம் அதனால் என்ன பிரயோசனம்...?

வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுதும் போது தமிழக பத்திரிக்கைகள் 'எனக்காக எல்லாம் இழந்தார் சசி', 'என் உயிர் சசி', 'பொதுச் செயலாளர் சசி' என தனி மனித துதி பாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நக்கிப் பிழைப்பதே அவர்களின் வாடிக்கை. விஜயகாந்த் துப்பியதை தவறென்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அது சரிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை பேசும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இப்போது இல்லை... இவர்கள் எல்லாம் பணத்துக்கு வாலாட்ட ஆரம்பித்து நாளாகிவிட்டது. உண்மை என்ன... உண்மை என்னன்னு ஆளாளுக்கு கேக்குறீங்களே... அப்படியே உண்மை தெரிந்தாலும் எந்தப் பத்திரிக்கை அதை தைரியமாக வெளியில் கொண்டு வரும் சொல்லுங்கள்.

அண்ணன் மகள் தீபா, இதுவரை எங்கிருந்தார்...? இப்போது எப்படி வந்தார்..? என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள். ரத்த சொந்தங்களை அண்ட விடாமல் ஒரு மனுஷியை வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் பலமும் அந்த மனுஷியின் பலவீனமும் வெட்ட வெளிச்சமாகிறதல்லவா...? திரு. நெல்லைக் கண்ணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 'ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது கூட தீபா, ஜெயலலிதா கூடத்தான் இருந்தார். பின்னர் எப்படி அவர் அவரிடம் இருந்து விலக்கப்பட்டார்' என்று கேட்டிருந்தார். அப்படியானால் அவரை போயஸ் தோட்டத்துப் பக்கம் வரவிடாமல் செய்தது யார்..? அரசியல் சதுரங்கத்தில் அழகாக காய் நகர்த்தியிருக்கிறார்கள்... சகுனிகளை நல்லவர்களென நம்பி உறவுகளைத் துறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த மரணம் பல உண்மைகளை உணர்த்தி உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கும்.

சரிங்க, முதல் மரியாதை படத்துல செருப்புத் தைக்கும் தொழிலாளியான வெள்ளைச்சாமி, தன்னோட மகள் இறப்புக்கு காரணமானவன் யார்ன்னு கண்டு பிடிக்க 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' அப்படின்னு சொல்லிக்கிட்டு திரிவாரு, அது மாதிரி சமூக வலைத் தளங்களில் உண்மை தெரிஞ்சாகணும்ன்னு படிச்சவனும் படிக்காதவனும் எழுதிக் குவிக்கிறார்கள்... பலதைப் பலரும் பகிர்கிறார்கள். எந்த உண்மை தெரிந்தும் இனி ஒன்றும் நடக்கப் போவதில்லை. காவிரித்தாய், நிரந்தர முதல்வர், தங்கத் தாரகை எல்லாம் கூன் பாண்டியர்கள் மெரினாவில் புதைச்சிட்டு நிமிர்ந்து சிரித்ததை நாடே பார்த்தது. இன்னைக்கு உண்மை தெரியணும்ன்னு கேக்குற பயக, நாளைக்கு எங்கள் தமிழகமேன்னு சின்னம்மாவை பெரியம்மாவாக்கி போஸ்டர் ஒட்டப்போற பயகதான் என்பதைச் சொல்லிக் கொண்டு, மூன்று நாள் துக்கம் முடிஞ்சாச்சு... இனியும் அதைச் சுமக்காமல் எப்பவும் போல் களமாடுங்கள்... எல்லா உண்மைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு மெரினாவில் நிம்மதியாகத் தூங்கட்டும் முன்னாள் முதல்வர். 

உண்மைகள் வெளிவரும் காலம் வரும்... அடிமைப்பட்டது போதும்... அறுத்தெரிந்து விட்டு காசுக்கு காலைப் பிடிக்காமல் கௌரவமாக வாழ்வோம்... உண்மை தெரியணும்... உண்மை தெரியணும்ன்னு எழுதித் தள்ளுறோமே அப்படித் தெரிந்தால் என்ன செய்து விடுவோம்..?
-'பரிவை' சே.குமார்.

புதன், 7 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : அ...ம்...மா..!

'அ...ம்...மா...!'

இந்த வார்த்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதும் போதெல்லாம் நான் எழுதாத வார்த்தைதான்... அவரை அம்மா என்று சொல்வதையும் அவர் செல்லும் ஹெலிகாப்டரையும் காரையும் விழுந்து கும்பிடுவதையும் மிகவும் கடுமையாக எனது முகநூல் பக்கத்தில் விமர்சித்திருக்கிறேன். இன்று மதியம் ஜெயலலிதாவின் இறப்பு மிகுந்த வேதனையா இருக்கு என்று சொன்னபோது நண்பர் ஒருவர் என்ன முகநூலில் தேர்தலப்போ எல்லாம் கழுவிக் கழுவி ஊத்தினே இன்னைக்கு வேதனைப்படுறே என்றார். நமக்கு பிடிக்காதவரே என்றாலும் அவரின் ஆளுமை தமிழகத்துக்கு இனி கிடைக்கப் போவதில்லை என்பது உண்மைதானே. அந்த ஆளுமை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

Image result for jayalalitha

ஒரு மனிதன் நமக்கு எதிரியாக இருந்தாலும் அவனின் மரணம் என்பது வேதனையான ஒரு நிகழ்வுதானே. அப்படியிருக்க அவர் குறித்து கேலியும் கிண்டலும் செய்வது என்பது மிகவும் மோசமான செயல். அந்த நேரத்தில் 'அடப்பாவமே..' என்ற ஒற்றை வார்த்தையை நாம் உச்சரிப்பதால் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதா குறித்தான சிலரின் முகநூல் பகிர்வுகள் மிகவும் மோசமாக இருந்தன... வேதனைக்குரியதாகவும் இருந்தன... அவரை நமக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது அவர் அவர் விருப்பம். பிடிக்கவில்லை என்றால் நாம் அவர் குறித்து எழுத வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்திருந்தால் இப்படியான பதிவுகளை பகிர்ந்திருக்க மாட்டோம். இன்று அவருக்கு மரணம் என்றால் நாளை நமக்கு என்பதை ஏன் மறந்து போகிறோம்..?

அ...ம்..மா...!

ஆண்கள் நிறைந்த அரசியலில் ஒரு பெண்ணாய் சாதித்த உனக்குள் வாழ்க்கையில் உறவுகளோடு வாழக் கொடுத்து வைக்காத வலி நிறைந்திருந்திருக்கலாம்... இன்றைய நிகழ்வுகளை உனது ஆத்மா கண்டிருக்குமேயானால் மிகுந்த வேதனையை அடைந்திருக்கும் என்பதை உன் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிவர். எத்தனை பணமிருந்தும்... எத்தனை வசதியிருந்தும்... உறவுகளற்ற ஒரு மனுஷிக்கு அழக்கூட ஆளில்லாத நிலையை உனது மரணத்தில் கண்கூடாகக் கண்டோம்...  இன்று உன்னைச் சுற்றி நின்ற கூட்டம் அழக்கூட மனமின்றி ஏதோ சிந்தனையில்... என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றியது. சினிமாக்காரன் உன் உடலுக்கு அருகில் வந்து அஞ்சலி செலுத்திச் செல்கிறான்.. ஆனால் உன் மீது பாசம் வைத்த மக்கள் கண்ணீர் கடலில் நீந்தி தவித்தாலும் உன் அருகில் வர அனுமதியில்லை... தூர நின்றே தரிசித்தார்கள் இறுதியாய் உன்னை...

உன் ஆளுமையில் அடைபட்டுக்கிடந்தவர்கள்  உன் இறப்புச் செய்தி கேட்டும்.. (அவர்களுக்கு முன்னே தெரிந்திருந்தாலும் உறுதியான அறிக்கையை உலகுக்கு தெரிவித்த போது) மெதுவாக கூட்டம் நடத்தி, ஆளுநர் மாளிகை சென்று, பதவி ஏற்று மெதுவாகத்தானே உன்னைக் காண வந்தார்கள். அன்று நீ சிறை சென்ற போது அழுது ஆர்ப்பாட்டம் செய்து பதவி ஏற்றவர்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாது நீ மரணித்த சில மணித்துளிகளில் பதவி ஏற்றார்களே நீ அறிவாயா...? உன்னை பல அடைமொழிகள் வைத்து அழைக்கும் உனது ஜெயா தொலைக்காட்சி, அன்று நீ சிறையிருந்த போது ஓ.பி.எஸ் முதல்வரானதும் உன்னை மக்கள் முதல்வர் என்று சொல்லியதை நீயும் அறிவாய் நாங்களும் அறிவோம்... ஆனால் இன்று உன் பெயர் சொல்லி அழைத்ததே நீ அறிவாயா..? இதுதான் உலகம்... காசுக்கும் செல்வாக்குக்குமே இவர்கள் எல்லாம் அடங்கிக் கிடப்பதாகவும் அழுவதாகவும் நடிக்கிறார்கள் என்பதை நீ ஏன் கடைசி வரை உணரவில்லை. சாணக்கியனாக நீ இருந்திருந்தால் ஒருவேளை நீ சகுனிகளிடம் மாட்டியிருக்கமாட்டாய்... ஆனால் நீ ஆளுமையாக இருந்தும் அடைக்கலமடைந்த இடத்தில், அடிமைகளிடத்தில் தோற்றுவிட்டாயே..

உன் உறவுகள் எங்கோ இருக்க, உன் உடலைச் சுற்றி வளையமிட்டு நிற்கிறது ஒரு குடும்பம்... நீ படி ஏறக்கூடாது என்று விரட்டியவனெல்லாம் இன்று பக்கத்தில் நின்றான். உன்னைத் தொட்டுக் கும்பிட்டவனின் கரம் அடுத்த நிமிடம் கும்பிடுகிறது அருகில் நிற்பவரை... அவரைக் கும்பிடும்படி யார் சொன்னது.. நீ நடந்து போகும் போது உன் பின்னே மறைந்து வந்தவருக்கு உன் உடலருகே மரியாதை... நீ எதிலும் தோற்கமாட்டாய்... போராட்ட குணம் நிறைந்த இரும்புப் பெண் என்றெல்லாம் இன்று பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள்... எமன் கூட எழுபத்தைந்து நாளாக போராடித்தான் உன்னை அழைத்துச் செல்ல முடிந்தது என்று அழுகையினூடே எழுதியிருந்தார்கள்... அதெல்லாம் உண்மையாக இருக்கலாம்... ஆனாலும் நீ உன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் தோற்றுவிட்டாயே...

முதல்வராய் நீ எடுத்த முடிவுகள் எல்லாமே மிகச் சரியான... தீர்க்கமான முடிவுகள். முல்லைப் பெரியாறு, காவிரி என அவரின் தீர்க்கமான முடிவுகளால் ஆட்டம் கண்டன கேரளமும் கர்நாடகமும் என்பதை எல்லாரும் அறிவார்கள். இன்று மலையாளிகளுக்கும் கன்னடனுக்கும் மனசுக்குள் சந்தோஷம்... ஒரு எதிரி இல்லையென... எங்களுக்குத்தான் மனம் முழுக்க வேதனை இனி ஒரு ஆளுமை உன்னைப் போல் எங்கள் தமிழகத்துக்கு கிடப்பாரா என்று... உன் மரணம் விதியா சதியா என்று விவாதித்தால் அது இரண்டாவதுதான் வெற்றி பெறும்.  இன்று கண்ணீர் சிந்தாது நிற்பவர்கள் வேண்டுமானால் மறைக்கலாம் ஆனால் காலம் ஒருநாள் கண்டிப்பாக சொல்லியே தீரும்.

உறவுகளற்ற ஒரு வாழ்க்கை உன் இறுதியாத்திரையில் மிகக் கொடூரமாக அமைந்ததை உன் ஆன்மா பார்த்து கதறி அழுதிருக்கும்... உன்னையே நினைத்த தமிழக மக்களின் அழுகை உன் ஆன்மாவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கும். இறுதி நாட்களில் நீ பட்ட வேதனையை அப்போலோவும் அந்த சில மனிதர்களுமே அறிந்திருப்பார்கள், உன் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்..? நீ அதை யாரிடமாவது சொன்னாயா..? இல்லை சொன்னால் நடக்காது என்பதால் உனக்குள் சுமந்து சென்றாயா...? நிறைவேறாத ஆசையுடன் எப்படி நிம்மதியாய் துயில் கொள்வாய்..?

கவர்னர் செல்வி ஜெயலலிதாவாகிய நான் என்று சொன்னதும் செல்வி ஜெ.ஜெயலலிதாவாகிய நான் என்று அழுத்தமாகச் சொல்லி ஒரு சிரிப்பு சிரிப்பாயே... 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று சிம்மக்குரலில் கர்ஜிப்பாயே அதெல்லாம் இனி கேட்கவே முடியாதல்லவா... இன்று உன்னைச் சுற்றி நின்றவர்கள் உன் பிறப்பு இறப்பு நாட்களில் பூக்கள் வைத்து வணங்குவார்கள்... உன் குரலும் நினைவும் வாழும் நாட்களில் எல்லாம் உன் உண்மை விசுவாசிகளின் நினைவுகளில் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.

இன்று முழுவதும் மனசெல்லாம் வேதனை... ஏனோ தெரியலை... நீ எல்லார் மனசுக்குள் இன்று இறைந்து கிடந்தாய்.... உன்னை விரும்பாதவனும் உனக்காய் அழுதான்... உன் மரணம் சொன்னது உன் வாழ்வின் அர்த்தத்தை...

மெரினா கடற்கரையோரம் உன் மன்னவனின் அருகே துயில் கொள்ளும் நீ இனிமேலாவது நிம்மதியாகத் தூங்கு....

ஆம்...

நிம்மதியாய் உறங்கு அ...ம்...மா...!
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

சினிமா : இளமி

மிழகத்தில் 1715-ல் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அறிமுக இயக்குநர் ஜூலியன் பிரகாஷ் கதை, திரைக்கதை எழுதி அத்துடன் தானே தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு கதைக்களத்துடன் சினிமா உலகிற்குள் தைரியமாக இறங்கி யாரும் தயாரிக்க முன் வரமாட்டார்கள் என்பது தெரிந்து தானே தயாரித்து இருக்கிறார். அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா... இல்லையா என்பதை பார்க்கும் முன்னர் அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

Image result for இளமி

எப்பவுமே நம்மாளுங்க சாமி கும்பிடுவதில்தான் தகராறு செய்வார்கள். கிராமங்களில் வழி வழியாக ஒரு குடும்பத்துக்கு முதல்மரியாதை கொடுத்துக் கொண்டு வருவார்கள், புதிதாய் ஒருவன் கிளம்புவான் எனக்கு முதல் மரியாதை வேண்டுமென அப்புறம் சண்டை, சச்சரவுன்னு ஆகி கடைசியில் திருவிழா நின்று போகும். எங்க ஊரில் இருக்கும் ஐயனார் கோவிலில் சிறப்பாக திருவிழா நடக்கும் என்பது எனக்கெல்லாம் சொல்லக் கேள்வி, அதுவும் பக்கத்து ஊர்க்காரன் மரியாதை கேட்டதால் நின்றதாகச் சொல்வார்கள். எங்க ஊருக்கு அருகில் இருக்கும் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவிலில் பல வருடங்களுக்குப் பிறகு குதிரை எடுப்பு நடத்தினார்கள். கோவிலுக்கு குதிரைகளைக் கொண்டாந்ததும் புதிதாய் ஒருவருக்கு முதல் மரியாதை வேண்டுமென ஒரு கூட்டம் கேட்க, அதுவரை வாங்கிவருபவரும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதால் விட்டுக் கொடுக்க மற்றொரு கூட்டம் மறுக்க நீண்ட நேரமாக தீர்வு காணப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து எப்பவும் கொடுப்பவருக்கே கொடுப்பதென முடிவாகி சாமி கும்பிட, அதன் பிறகு இதுவரை குதிரை எடுப்பு இல்லை. அப்படியான ஒரு பிரச்சினைதான் கதையின் ஆரம்பப்புள்ளி... இரு ஊருக்கும் பொதுவான சாமியை, அது இருந்த கிராமத்தில் இருந்து அபகரித்து மற்றொரு ஊரில் வைத்து அவர்கள் இஷ்டம் போல விழா எடுக்க, இன்னொரு கிராமத்தான் பிரச்சினைக்கு வருகிறான்.

மஞ்சு விரட்டில் மூன்று வகை உண்டு என்று பெயர் போடும்போதே விரிவாகச் சொல்கிறார்கள். மாடுகளை மொத்தமாக அவிழ்த்து விட்டு முடிந்தவர்கள் பிடிக்கலாம் என்று சொல்வது, வாடி வாசல் வழியாக மாட்டை அவிழ்த்து விட்டு பிடிக்கச் சொல்வது, மாட்டை கயிற்றில் கட்டி ஒரு வட்டத்துக்குள் குழுவாக இறங்கி பிடிக்கச் சொல்வது என மூன்று வகையைக் குறித்துச் சொல்கிறார்கள். மாட்டை பார்த்துப் பார்த்து வளர்ப்பவர்கள் மாடு தோற்றால் கொன்று விடுவான் என்று சொல்கிறார்கள். இது உண்மையா தெரியலை... சினிமாவில்தான் நம்பியாரும், விஜயகுமாரும் மாட்டை சுட்டுக் கொல்வார்கள். நிஜவாழ்க்கையில் அப்படியெல்லாம் கொல்லமாட்டார்கள். வந்த விலைக்கு விற்று விடுவார்கள் என்பதே நான் எங்கள் பக்கம் பார்த்தது. இந்த மூன்று வகை போக எருது கட்டு ஒன்று எங்கள் பக்கம் மிகவும் பிரபலம். நீண்ட வடத்தில் மாட்டைக் கட்டி ஒரு குழு இழுத்துக் கொண்டு செல்ல இன்னொரு குழு மாட்டை பிடிக்க முயலும். இந்த வகை எருது கட்டில் நீண்ட தூரம் சுற்றி ஓடி வருவார்கள். இதைத்தான் வடமாடு மஞ்சுவிரட்டு என மாட்டை வட்டத்துக்குள் கட்டி சுற்ற வைத்தார்கள் போலும் என்று நினைக்கத் தோன்றும்.

விலங்குகள் நல வாரியம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு விலங்குகள் பற்றி அறியாத இவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவேயில்லை. மஞ்சுவிரட்டுப் பற்றி தெரியாதவனெல்லாம் கூடிப் பேசி வீடியோ கேமில் விளையாடச் சொன்ன கேவலம் இந்த நாட்டில்தான் நிகழ்ந்தது. சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை மாட்டை எவ்வளவு நேசத்தோடு வளர்ப்பார்கள் என்பதை அந்த வீடுகளில் போய் பார்த்தால்தான் தெரியும். இந்தப் படத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுதான் கதையின் திருப்பத்திற்கான காரணி, என்ன ஒண்ணு மேலே சொன்ன விலங்குகள் நல வாரியத்தின் புண்ணியத்தால் தமிழ் சினிமாவில் மஞ்சுவிரட்டு பற்றி விரிவாய் பேசிய படத்தில், ஒரு நல்ல வடமாடு மஞ்சுவிரட்டைப் பார்க்க முடியாமல் கிராபிக்ஸ் மாட்டைத்தான் பார்க்க முடிகிறது. அங்குதான் இளமிக்கு சறுக்கல். இருப்பினும் முடிந்தவரை அதையும் சரியாக செய்ய முயன்றிருக்கிறார்கள் என்றாலும் மாடு முன்னும் பின்னும் போகும் போது கிராபிக்ஸ் சிரித்து விடுகிறது ஆனாலும் விறுவிறுப்புக் குறையவில்லை.

Image result for இளமி

ஒரு காதல்... அந்தக் காதல் எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. அதற்கு வில்லனாகிறது இரு ஊருக்கும் பிரச்சினையாக இருக்கும் சாமி சிலை, யாராலும் அடக்க முடியாத தன்னோட மாட்டை எவன் அடக்குகிறானோ அவனுக்கு தன் மகளையும் கொடுத்து அந்த ஊருக்கு சாமியையும் கொடுப்பதாய்ச் சொல்ல பிரச்சினை விஸ்வரூபமாகிறது. எல்லா ஊரிலும் மாடுபிடித்து... அதிலும் கொஞ்சம் தில்லாலங்கடி வேலை செய்து... பெயரை வாங்கி வைத்திருப்பவனுக்கு சிலை கொண்டு வருவதுடன் தங்கச் சிலையை கட்டிக்க ஆசை... அந்த ஆசையால் விளைவது... பயங்கரம்.

மாங்குளத்தின் தலைவராக ரவி மரியா, இவரின் மகள் இளமியாக (இளமீனாட்சி) அனு கிருஷ்ணா, பக்கத்து ஊரில் காட்டுக்குள் போய் வேட்டையாடும் கருப்பாக யுவன், அவனுக்கு வில்லனாகும் சடைப்புலியாக 'கல்லூரி' அகில்  என அனைவரும் அந்தக் காலத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் காலத்து கதைக்களம் என்பதால் ஒரு தார் ரோட்டுக்கு கூட வந்து விடக்கூடாது என தேனிப்பக்கம் ஒரு பொட்டல்காட்டில் செட் போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். பல காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும் கதையின் போக்கில் நம்மை இழுத்துச் செல்வதால் அது அதிகம் உறுத்தவில்லை.

யுகாவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம்... ஆரம்பம் முதல் இறுதி வரை பழைய காலத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் வேட்டை ஆடுதல், தேன் எடுத்தல், மாடு பிடித்தல் என ஒவ்வொரு நிகழ்வையும் மிக அழகாக படம்பிடித்திருக்கிறார். அதேபோல் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம்தான்... வடமாடு மஞ்சுவிரட்டின் போது உறுமி ஒலிப்பதே ஒரு சுகம்தான்... பாடல்கள் பழைய காலத்தை நினைவு படுத்துபவை என்பதால் வித்தியாசமாக இருந்தாலும் கேட்க இனிமை. மதுரைத் தளபதியாக வரும் கிஷோர் மட்டும் சுத்தத் தமிழில் பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.

சாமி சிலை - இரு ஊர் பிரச்சினை - காதல் - வடமாடு பிடித்தல் என நகரும் கதையின் இறுதிக் காட்சி மிகக் கொடூரம்... இதை ஆகச் சிறந்த வன்முறை என பலர் வாதிடலாம்.. இருந்தாலும் ஒரு உண்மைச் சம்பவம்... இன்றும் மதுரை மேலூருக்குப் பக்கத்தில் செவி வழிச் செய்தியாக தலைமுறை கடந்து வாழும் ஒரு நிகழ்வு... இன்றும் கருப்புக்கும் இளமிக்கும் மாங்குளத்தில் இருக்கும் கோவிலுக்கு தங்கள் காதலைச் சேர்த்து வைக்கச் சொல்லி காதலர்கள் வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள் என்பதை படத்திலும் காட்டுவதால் அந்த நிகழ்வு அப்படியே நடந்திருக்கலாம் என்று நினைப்போடு அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நாம் வந்துவிடுகிறோம்.

Image result for இளமி

எப்படியும் சினிமா எடுக்கும் பலர் மத்தியில் இப்படித்தான் சினிமா எடுப்பேன் என்று வருபவர்கள் சொற்பமே. அப்படிச் சொற்பத்தில் விளைந்த இந்த ஜூலியன் பிரகாஷ் அடுத்த படத்தையும் தயாரிப்பாளருக்காகவும் தமிழ் சினிமாவுக்காகவும் சமரசம் செய்யாமல் எடுத்தால்... இவரை தமிழ் சினிமா உலகம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றால் ஒரு நல்ல இயக்குநரின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறலாம்.  அப்படியான வாய்ப்பு கிடைக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

இளமி... கோர தாண்டவத்தை மனதில் சுமக்க வைக்கும் இளமையான காதல் கதை... வட்டத்துக்குள் கட்டிய மாடாக இல்லாமல் அவிழ்த்து விட்டதும் சீறிப் பாய்ந்து வரும் காளையாக மிக அழகாக வந்திருக்கிறது.

கண்டிப்பாக பார்க்கலாம்... ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 1 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : பஞ்சாயத்து

ன்னைக்கு காசுப் பிரச்சினையை விட குடும்ப பிரச்சினையைத் தீர்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக எதிர் எதிர் வாதங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினையாக பத்திரிக்கைகளை அலங்கரித்து வருகிறது. ஆளாளுக்கு டுவிட்டுறாங்க... இது ஒரு பக்கம்ன்னா சினிமாக்காரனுங்க ஒரு சங்கம்ன்னு வச்சிக்கிட்டு அவனுக அடிச்சிட்டுக்கிட்டு இது ஒண்ணும் லவ் லெட்டர் இல்லைன்னு இன்னொரு பக்கம் டுவிட்டுறாங்க. சரி நாம பஞ்சாயத்துக்குள்ள போவோம்.

Image result for நிஜங்கள்

கிராமங்கள்ல இந்த பஞ்சாயத்து பிரசித்தம்... ஆனால் எங்க ஊருப் பக்கம் சினிமாவில் காட்டுவது போல ஒரு ஆல மரமும், ஒரு அடி வாங்கின சொம்பும், நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு சொல்ல நாலு பேரும் இருக்கமாட்டார்கள். கிராமத்துக்கு ஒரு அம்பலம் இருப்பார். அவர் சொல்வதே இறுதித் தீர்ப்பு... ஆனால் அந்த அம்பலத்தையே எங்க ஊருல இருபது வருசத்துக்கு மேல எதுலயும் சேர்க்காம ஒதுக்கி வச்சிருந்தாங்க... அதனால யார் தப்புச் செய்தாலும் தீர்ப்பு மட்டும் சரியா இருக்கும். அம்மாவுக்கு குமாரசாமி சொன்ன மாதிரியெல்லாம் அபத்தமாக இருக்காது. நாட்டாமை தப்புப் பண்ணினாலும் தண்டனை தண்டனைதான். ஊரு கூடி பேசி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பாங்க. குடும்பப் பிரச்சினைகளை தெருவுக்கு கொண்டு வரமாட்டாங்க. பொண்ணு புள்ள பிரச்சினையின்னா ஊருல ரெண்டு குடும்பத்தையும் கூப்பிட்டு வச்சிப் பேசுவாங்க. அதுல சரியா வரலைன்னா நாட்டு அம்பலங்களை வச்சி நாட்டுக் கூட்டம் போட்டு பெரும்பாலும் நல்ல முடிவா எடுப்பாங்க.

ஊர் பஞ்சாயத்துங்கிறதை எல்லா விஷயத்துக்கும் கூட்டுவாங்க... திருவிழாவா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... விவசாயப் பிரச்சினையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க.... அங்காளி பங்காளி சண்டையா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இடத் தகராறா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... கணவன் மனைவி பிரச்சினை குடும்ப அளவில் வந்துவிட்டதா ஊர் கூடி முடிவெடுப்பாங்க... இப்படி கண்மாயில் இருந்து கல்யாணம் வரை பல பிரச்சினைகள் ஊர் கூடி நல்ல முடிவெடுப்பாங்க. இதுலயும் சினிமாவுல காட்டுற மாதிரி தீர்த்து வைக்கிறது... அத்து விடுறது போன்ற விசயங்களைச் செய்ய மாட்டார்கள். நாலு சுவத்துக்குள்ள நடக்குற பிரச்சினையை நாலு சாதி சனம் முன்னாடிக் கூட கொண்டு வர யோசிப்பாங்க. பிரச்சினை பெரிதாகும் போது... அடுத்து என்ன செய்வது பொண்ணோட வாழ்க்கையில்ல என்ற கையறு நிலையில்தான் ஊர்க்கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பாங்க. ஆனால் இன்னைக்கு மேக்கப் போட்டு... பிரகாசமான விளக்கொளியில் அமர்ந்து உலகமே பார்க்க, குடும்ப பிரச்சினையை சந்திக்கு இழுக்க யோசித்த மக்களை, சமுத்திரம் தாண்டி எல்லாரும் பார்க்கும்படி அடித்து அழ வைத்து தங்கள் டி.ஆர்.பியை ஏற்ற எல்லாத் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டி குடும்ப பஞ்சாயத்தை நடத்துகின்றன.

ஒரு குடும்ப பிரச்சினையை பொதுவெளியில் வைத்து, அவர்களை மெல்ல மெல்லச் சூடேற்றி அடித்துக் கொள்ள வைத்து அதை அப்படியே ஒளிபரப்பி... என்ன கேவலமான செயல் இது.  நல்லாப் பாருங்க இது ஒன்றும் நேரடி ஒளிபரப்பு அல்ல... முன்கூட்டியே பதியப்பட்ட நிகழ்ச்சிதான். இதுபோன்ற அடிதடிகளை எடிட் செய்து ஒளிபரப்ப முடியும் இருந்தும் செய்ய மாட்டோம். ஏன்னா அதைப் பார்க்கத்தான் ஆவலாய் இருக்கிறோமே நாம்... அடுத்த வீட்டுச் சண்டையின்னா வாசல்ல நின்னு பாக்குற ஆளுங்கதானே நாம்... அதான் அவன் அதை பயன்படுத்திக்கிறான். அதுலயும் என்னமோ சண்டை நேரடி ஒளிபரப்பு போல அப்பத்தான் விளம்பர இடைவேளையை அவசரமா விட்டு என்னாச்சோன்னு குடும்பத் தலைவிகளை தவிக்க வைப்பாங்க... அடுத்த சேனல் மாற்றாமல் விளம்பரங்களையும் பார்க்கும் தெருக்குழாய் சண்டையை பார்க்காத எம் இனம்...  இந்த சிம்பு, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என்னைக்கு ஆரம்பிச்சி வச்சானே எல்லாப் பயலும் புடிச்சிக்கிட்டான். ஒப்பாரியை ஒளிபரப்பி டி.ஆர்.பியை ஏத்திக்கிறான்.

லஷ்மி இராமகிருஷ்ணன் என்னவோ தன்னோட குடும்பத்துல... உறவினர் வீடுகளில் நிகழ்ந்த சண்டைகளுக்கு தீர்வு சொன்னது போல் சினிமாவில் தன்னோட நிகழ்ச்சியை காமெடி என்ற பெயரில் கலாய்த்து விட்டார்கள் என டுவிட்டரில் பொங்கினார். ஜி.வி. பிரகாசையும், ஆர்.ஜே. பாலாஜியையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். ஜி.வி.பியை எனக்கு சுத்தமாக பிடிக்காது... அவன் என்னவோ நல்ல குடும்பப் படங்களைக் கொடுப்பது போல் ஆட்டம் போடுகிறான்... கேவலமான படங்கள்... இரட்டை அர்த்த வசனங்கள் என பென்சில் தவிர வேறு படங்களை பார்க்கவேயில்லை... ஆர்.ஜே. பாலாஜி, காமெடியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். என்பதை அறிவோம். இந்தம்மா டுவிட்டரில் சண்டை போட்டதற்குப் பதில் போனில் அவரிடம் கேட்டிருக்கலாம்... அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் மாதிரி, அசிங்கப்பட்டு மீடியாக்களில் இனி எந்த நிகழ்ச்சியும் நடத்தமாட்டேன் என்ற நல்ல முடிவை எடுத்திருக்கிறார். இவரால் கெட்ட குடிகள் போதும். இனிமேலும் குடிகெடுக்க நினைக்க வேண்டாம்.

அப்புறம் நம்ம குஷ்பு... இந்தம்மாவை பல விதத்துல கிண்டல் பண்றானுங்க... பாவம் சுந்தர் மாமான்னு எல்லாம் எழுதுறானுங்க... இது குடும்ப பஞ்சாயத்துப் பண்ணுது... காங்கிரஸ்க்கு இது போனப்போ இளங்கோவன் வழிஞ்சதை எல்லோரும் அறிவோம். இது உள்ளே போக அங்க குந்திக்கின்னு இருக்க நக்மாவுக்கு பிரச்சினை... அது ஏழரையை ஆரம்பிச்சி வச்சி வெளியேத்த ஆயத்தமாயிக்கிட்டு இருக்கு. இதுல இந்தம்மா பஞ்சாயத்து பண்றேன்னு அடிக்கப் போகுது. என்ன நடக்கு இங்கே... ஏழைகள் வாழ்க்கை அவ்வளவு கேவலமாப் போச்சு இல்லையா..? நடிகை ஸ்ரீபிரியாவும் ரஞ்சனியும் நல்லாக் கேட்டிருந்தாங்க. உடனே அதுக்கு நாங்க பதில் சொல்ல மாட்டோம் இதுக்கு நாங்க பதில் சொல்லமாட்டோம்ன்னு ஜால்ஜாப்பு பதில்கள் இவர்களிடம் இருந்து. இதே ஒரு சாதாரண ரசிகனோ ரசிகையோ கேட்டிருந்தா இன்னேரம் ஆளாளுக்கு வரிந்து கட்டி களத்தில் இறங்கியிருப்பாங்க.

ஆமா அடுத்த வீட்டு பிரச்சினைய தீர்த்து வைக்க இவங்க யாரு...? இதுவரைக்கும் சமூகத்துக்கு இவங்க என்ன நல்லது செஞ்சிருக்காங்க...? சொற்ப பணம் கொடுத்து தங்களது குடும்பச் சண்டையை சந்தி அல்ல.. இந்த உலகமே சிரிக்கக் காண்பித்து டி.ஆர்.பி ஏற்றி அதன் மூலம் கல்லாக் கட்டிக் கொள்ளும் இந்த களவாணிகளிடம் அபலைகளே ஏன் போய் விழுகிறீர்கள்..? உங்கள் பிரச்சினையை நீங்கள் பேசித் தீர்க்க முடியாதா..? உங்கள் உறவுகள் இல்லையா... அதில் இரு தரப்புக்கும் எடுத்துச் சொல்லி பிரச்சினையை தீர்க்கும் நல்ல மனிதர்கள் இல்லையா..? யோசியுங்கள்... இனியும் இவர்களிடம் மாட்டாதீர்கள்... இவர்கள் நம் வாழ்க்கையை வைத்து மாளிகை கட்டி வாழும் மனிதப் பதர்கள்... இந்த இழிபிறவிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவத்துக்குள்ளோ நாலு நல்ல மனிதர்கள் முன்னிலையிலோ தீர்க்கப் பாருங்கள்... தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அல்ல குடும்ப விஷயங்களைப் பேசும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-'பரிவை' சே.குமார்.