மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 1 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 65

முந்தைய பதிவுகளைப் படிக்க...


65.  புவனா பேசினாளா?

டை வாசலில் சகலையின் வண்டி வந்து நிற்பதைப் பார்த்த புவனாவின் அப்பா, "அட... வாப்பா கண்ணா... என்ன திடீர்ன்னு இம்புட்டுத் தூரம்?" என்று வரவேற்று கடைப்பையனிடம் "போய் சர்பத் வாங்கிக்கிட்டு வாடா" என்று சொல்லி அனுப்பினார்.

"என்னண்ணே... நல்லாயிருக்கீகளா?" என்றபடி அமர்ந்தார் புவனாவின் சித்தப்பா கண்ணன்.

"நல்லா இருக்கேன்... ஆமா ஏது இம்புட்டுத்தூரம்..? எதுனாச்சும் வேலையா?"

"எல்லாம் புவனாவுக்கு மாப்பிள்ளை விசயமா வந்தேன்..."

"அவளுக்கு இப்ப என்ன அவசரம்?"

"நீங்களும் அத்தாச்சியும் ஒரே மாதிரிக் கேக்குறீங்க..? அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டுப் போகலையா? அவ வயசொத்த பொண்ணுங்க கலியாணமாகி புள்ளை குட்டியோட இருக்குக..."

"ம்... வீட்டுக்குப் போனியாக்கும்... உங்க அத்தாச்சி என்ன சொன்னா? ரொம்ப சூடா வந்திருக்கே போல..."

"என்னத்தை சொல்லுறாக வழக்கம் போல இப்ப வேண்டாம்... அப்புறம் பாக்கலாங்குது... வேலாயுதபட்டினத்துல நல்ல பணக்காரக் குடும்பம்... வீட்டுக்கு ஒரே பையன்... முடிச்சிடலாம்ன்னா..."

"இங்க பாரு... இப்ப படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு அவசரப்பட்டு கலியாணம் பண்ணனும்... படிப்பை முடிச்சிட்டு வேலைக்குப் போகட்டும்... அப்புறம் கலியாணத்தைப் பண்ணலாம்..."

"அண்ணே... நம்ம சாதியில இம்புட்டு தூரம் படிக்க வைக்கவே மாட்டானுங்க... பத்தாங்கிளாஸ் தாண்டுறதே கஷ்டம்... அவ விரும்புறான்னு படிக்க வச்சீங்க... சரி... அதுக்காக வேலைக்கெல்லாம்... இது சரி வராதுண்ணே... எல்லாரும் கேவலமாப் பாப்பானுங்கண்ணே..."

"இங்க பாரு முன்னாடி எவனும் படிக்க வைக்கலைதான்... இப்ப நம்ம புள்ளங்க நல்லாப் படிக்கிதுங்க... படிக்க வச்சா என்ன தப்புன்னேன்... அப்புறம் நம்ம சாதி சனத்துல முதல்ல வேலைக்குப் போனது நம்ம புள்ளயா இருக்கட்டுமே... என்ன நாஞ் சொல்றது..."

"காலாகாலத்துல செய்ய வேண்டியதை செஞ்சிடனும்ண்ணே..." என்றபடி சர்ப்பத்தைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"வரட்டும்ப்பா... எதுக்கு அவசரம்...?"

"அது... எதுக்குச் சொல்றேன்னா..." மெதுவாக சித்தப்பா இழுத்தார்.

"எனக்குப் புரியிது... என்ன அந்தப் பய கூட எதாவது பண்ணிக்குவான்னா..."

"அ... அண்ணே..."  என குழறலாய் அவரைப் பார்த்தவர் மனசுக்குள் 'இவருக்கு எப்படித் தெரியும்' என்று நினைத்தார்.

"எல்லாம் எனக்குத் தெரியும்... நீங்க அந்த பையங்கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம் தெரியும்... அதுக்காக அவளை கண்டிச்சி என்னாகப் போகுது... இப்ப அவன்கிட்ட பழகுறா... நேரம் வரட்டும் சொல்றவிதமா சொல்லி அவளை சரி பண்ணலாம். எம்பேச்சை அவ மீற மாட்டா... சரி... சரி... இதெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு உங்க அத்தாச்சிக்கிட்டயும் பசங்ககிட்டயும் சொல்லி வைக்காதீங்க... எங்க போயிடப் போறா.... பக்குவமா புரிய வைப்போம்..."

"கை மீறிப் போயிடக்கூடாதுன்னுதான் நான் பயப்படுறேன்..."

"அதெல்லாம் போகாதுப்பா... இங்க சரி வரலைன்னா தட்ட வேண்டிய எடத்துல தட்டுவோம்... சரி... அவ படிச்சி முடிச்சி வேலைக்குப் போற வரைக்கும் கலியாணப் பேச்சு வேண்டாம்... "

"சரிண்ணே.... புளியால்ல ஒருத்தன் கொஞ்சம் பணம் தரணும்... ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடுறேன்..."

"இந்த வெயில்லயா போறே... வீட்டுக்குப் பொயிட்டு சாப்பிட்டுக் கீப்பிட்டு வெயில் சாய போகலாமுல்ல..."

"நீங்க வேற... வெயில் நேரத்துல போனாத்தான் ஆளைப்பிடிக்கலாம்.... அது போக அத்தாச்சி மறுபடிக்கும் நான் போனா கடிச்சாலும் கடிச்சிடும்" என்று சிரித்தபடி சொல்ல "ஆமா அது உண்மைதான்" என்று இவரும் சேர்ந்து கொள்ள, இருவரும் சத்தமாகச் சிரித்தனர்.

"என்னடி... குட்டி போட்ட நாய் மாதிரி சுத்திச் சுத்தி வர்றே?" 

"ஒண்ணுமில்லம்மா... அண்ணனைக் காணாமே அதான்..."

"என்னது அண்ணனா... அதுசரி... என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு அவனைத் தேடுறே...."

"சும்மாதாம்மா... லா சம்பந்தமாக கேக்கலாம்ன்னுதான்..."

"என்னது லா சம்பந்தமாகவா... அவனுக்கிட்டயா... சரிதான்... மதுரையில எத்தனை தியேட்டர் இருக்குன்னு கேட்டா டக்குட்டக்குன்னு சொல்லுவான்... இல்லேன்னா எத்தனை பார் இருக்குன்னு கேட்டாச் சொல்லுவான்..."

"அப்ப உங்க பையன் லா படிக்கப் போகலைன்னு ஒத்துக்குறீங்கதானே..."

"ஏய்... அவன் வக்கீலுடி... சும்மா வம்புக்கு இழுக்காதே... உனக்கு என்ன டவுட்டு... பாட சம்பந்தமாகவா?"

"ஆமா.. பாட சம்பந்தமாத்தான்... வாழ்க்கை பூராம் படிக்கப்போற பாட சம்பந்தமா"

"என்னன்னு சொல்லு எனக்குப் பதில் தெரியுதான்னு பார்ப்போம்..."

"ஐய்யோ... அம்மா... இதை உங்ககிட்ட கேட்டா பதிலே கிடைக்காது... இல்லேன்னா எதிர்மறையான பதில் வரும்... விடுங்க... நான் அவன்கிட்டயே கேட்டுக்கிறேன்..."

"என்னமோ போ... நீ கேட்டு அவன் உருப்படியா சொன்னாப்புலதான்..." என்று சொல்லும் போது வைரவனின் வண்டி வாசலில் வந்து நின்றது.

இதுவரை சிரித்துப் பேசிய புவனாவின் மனது தடக் தடக்கென்று அடிக்க ஆரம்பிக்க, வைரவனின் வருகைக்கு முன்னே காற்றில் சிகரெட்டின் வாசம் பரவி நிறைந்தது. 'இந்தக் கருமத்தை குடிக்காம வரமாட்டாக' என்று முனங்கியபடி அம்மா அங்கிருந்து நகர, தன்னைக் கடந்த அண்ணனிடம் "அண்ணா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள்.

"என்ன பேசணும்?" என்றவனின் வாக்குள் கிரேன் பாக்கோ நிஜாம் பாக்கோ அரைபட்டுக் கொண்டிருந்தது. 

"பர்சனல்... கொஞ்சம் தனியாப் பேசணும்... எங்க பேசலாம்...? எப்போ பேசலாம்...?" என்று கேள்விகளை அடுக்க, வைரவன் எதுவும் சொல்லாமல் அவளை முறைப்பதுபோல் பார்த்தான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ஸ்.............அப்பாடி,ஆத்தா(புவனா)தையரியமா பேச ஆரம்பிச்சுட்டா.பாப்போம்.........

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புவனா பேசி .. நல்ல முடிவு கிடைக்கட்டும்..!

Menaga Sathia சொன்னது…

ஊரிலிருந்து வந்தாச்சா..விடுமுறை நல்லபட்யாக சென்றதில் மகிழ்ச்சி..தொடர்கதை நீங்கள் எழுதவில்லை என்று நினைத்தேன்.இப்போதான் பார்த்து,படித்தேன்.

கதை விறுவிறுப்பா போகுது,இவ்வளவு பகுதியும் சுவராஸ்யம் குரையாமல் செல்கிறது,வாழ்த்துக்கள்!!

கோமதி அரசு சொன்னது…

புவனாவின் அண்ணன் என்ன சொல்லப்போகிறார் என்று அடுத்துப்படிக்க ஆவல்.