மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஆகஸ்ட், 2013

மனசின் பக்கம்: சில வாழ்த்தும் பருகத் தமிழும்

பதிவர் சந்திப்புக்காக நமது பதிவுலக உறவுகளும் நட்புக்களும் சென்னையில் குழுமியிருக்கிறார்கள். விடிந்தால் இரண்டாம் ஆண்டு பதிவர் விழா சிறப்பாக நடக்க இருக்கிறது. எல்லாரும் ஒரிடத்தில் கூடி சந்தோஷமாக தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தும் நேரடி ஒளிபரப்பில் விழாவைக் காண முடியும் என்ற போது கொஞ்சம் சந்தோஷம்... ஆனால் அலுவலகம் சென்று திரும்பி வருவதற்குள் விழா நிறைவுக் கட்டத்திற்கு வந்துவிடும் என்பதால் நிறைவுரையைத்தான் பார்க்க முடியும் போலும்... எப்படியும் நண்பர்கள் விழா நிகழ்வு குறித்துப் பகிர்வார்கள். அதில் பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர் சங்கவி மற்றும் திரு. மோகன் குமார் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை வாசு அண்ணா அவர்களின் அகநாழிகை புத்தக நிலையத்தில் நடந்துள்ளது. புத்தக ஆசிரியர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிப்புக்கள் வெளியிட வாழ்த்துக்கள்.

சகோதரர் கதிர்பாரதி அவர்களின் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" கவிதை நூலுக்கு சாகித்ய அகாதெமியின் 'யுவ புரஸ்கார் விருது' கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி, மேலும் தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் விருதுக்கும் தேர்வாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரா.... தாங்கள் இன்னும் நிறைய கவிதை நூல்கள் வெளியிட்டு சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்க வாழ்த்துக்கள்.

எனது நண்பரும் கவிஞருமான சிலம்பூர் தமிழ்க்காதலன் அவர்களும் அவரது நண்பர்க்ளும் இணைந்து தமிழ்க்குடில் அறக்கட்டளையை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். அவர்களது சீரிய பணியின் முதல் முயற்சியாக பெரம்பலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் ஒரு நூலகமும் தமிழ்குடிலுக்கு என ஒரு அலுவலகமும் நண்பர்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார்கள். அதன் திறப்பு விழா வரும் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு நண்பர்களின் உதவியுடன் தனியாளாய் ஊரிலேயே இருந்து இப்பணியைச் சிறப்பாக செய்து முடித்திருக்கும் எனது நண்பனை வாழ்த்தும் இந்த நேரத்தில் அவனு(ரு)க்குப் பக்கபலமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் விழாவில் கலந்து கொள்ளுங்கள்.

தேவகோட்டையில் நடக்கும் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக நகரில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டும் போதாது. காவல்துறை அதனை சரிவர செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்து. மேலும் தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோட்டில் எல்லாம் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்து வந்தார்கள். தற்போது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து அதையெல்லாம் சரி பண்ணி போக்குவரத்தை சரி செய்திருக்கிறார்களாம்.. இந்தப் பணி சரிவர நடைபெற்றால் தேவகோட்டையில் போக்குவரத்து பிரச்சினையை சீர்பண்ண முடியும்... செய்யுமா காவல்துறை... செய்ய விடுமா பொதுஜனம்...?

பாரதி குறித்து திரு.நெல்லைக் கண்ணனின் பேச்சு. பாரதியின் பாடல்களுடன் தமிழ்கடல் ஆழிப்பேரலையாய் அடித்து நொறுக்கும் ஒரு பகிர்வு. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள்... கேட்டுப்பாருங்கள்... வியப்பில் ஆழ்வீர்கள்.



மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

தொடர்கதை : கலையாத கனவுகள் - 11

(சில தவிர்க்க முடியாத வேலைகளால் புதன்கிழமை பதிவிடமுடியவில்லை)

முந்தைய பதிவுகளைப் படிக்க...

                                                 பகுதி-1        பகுதி-2        பகுதி-3       
                                             
                                                 பகுதி-4        
பகுதி-5        பகுதி-6      


பகுதி-10

**********************************************************

11. ஊடலுக்குப் பின் நட்பு

முன்கதைச் சுருக்கம்.

கல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு புவனாவுடனான சந்திப்புக்குப் பின்னர் அவளை மனசுக்குள் விரும்புகிறான். புவனாவோ கல்லூரியின் முக்கிய ரவுடியான வைரவனின் தங்கை என்று தெரியவர சற்றே யோசிக்கிறான். இந்ந்iலையில் வைரவன் வேறு கல்லூரிக்குள் அவளிடம் பேசாதே என்று சொல்லி வைக்கிறான். அதனால் அவளுடன் பேசுவதை தவிர்த்து வருகிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்கிறார். ராம்கி எதிர்க்கிறான். ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. அதனால் சேகருடன் சுற்றுவதற்கு அம்மா கோபப்படுகிறாள்.சேகரோ அப்படியெல்லாம் இல்லை என்றும் நீயும் காதலில் விழுகாதே அது உன் கனவுகளை அழித்துவிடும் என்றும் அட்வைஸ் பண்ணுகிறான்.

இனி...

நாட்கள் நகர ஆரம்பிக்க, வைரவனுக்குப் பயந்து புவனாவைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தான். இந்நிலையில் காரைக்குடிக்கு போட்டிக்குச் செல்லும் நாளும் வந்தது. ராம்கி போட்டியில் கலந்து கொள்ளும் சில நண்பர்களுடன் பேருந்தில் கிளம்பி விழா நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து புவனா சில பெண்களுடன் வந்து சேர்ந்தாள். ராம்கியிடம் எதுவும் பேசாமல் தனியாக போய் அமர்ந்து கொண்டாள். ராம்கிக்கு கஷ்டமாக இருந்தது.


அவளருகில் சென்று "சாரி... பஸ்ஸ்டாண்டுல காத்திருந்தோம்... உங்களை எல்லாம் காணோம்... அதான் வந்துட்டோம்..."

"நான் இப்ப உங்ககிட்ட கேட்கலையே... யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லத் தேவையில்லை..."

"இல்ல... அது.."

"டீ... வாடி அங்கிட்டுப் போய் இருப்போம்... அவங்க அவங்க பாட்டுக்கு வந்தோம்... அவங்க அவங்க பாட்டுக்கு போட்டியில கலந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்... யாரைப் பத்தியும் நமக்குத் தேவையில்லை..." என்றபடி கொஞ்சம் தள்ளிப்போய் அமர, ராம்கி பேசாமல் அங்கிருந்து நகர்ந்து மீண்டும் நண்பர்களுடன் கலந்துவிட்டான்.

போட்டிகள் ஆரம்பித்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம்தான் என்றும் எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் யாரும் வெளியில் சென்று சாப்பிடவேண்டாம் என்று போட்டியின் அமைப்பாளர் அறிவித்ததும் மற்ற கல்லூரி மாணவர்கள் எல்லாம் மதியம்தானாம் என்று வெளியில் கிளம்ப, ராம்கியும் மற்ற மாணவர்களும் அருகில் இருக்கும் தியேட்டரில் படம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்தனர். ராம்கிக்கு புவனாவிடம் கேட்கப் பயம்... ஆனால் அவளை விட்டுட்டுச் செல்லவும் மனமில்லை... கோபித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பதே சந்தோஷமாக இருந்தது. மற்றவர்கள் அழைத்து செல்லாமல் இருந்தாலும் பிரச்சினை... ஒருவனிடம் பெண்களும் வருகிறார்களா என்று கேட்கச் சொன்னான். அவன் போய் கேட்டதற்கு நாங்கள் வரவில்லை என்று பதில் வந்தது. எனவே மாணவர்கள் மட்டும் கிளம்பினர். ராம்கி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.

தியேட்டரில் கூட்டமாய் இருந்தது... டிக்கெட் எடுக்க காத்திருந்த போது மாணவிகளும் வந்து சேர்ந்தார்கள்... புவனாவைப் பார்த்ததும் ராம்கிக்கு மனசு சந்தோஷமானது. எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இடம் தேடி அமரும் போது படியில் தடுக்கி விழப்போன புவனா ஆதரவுக்காக அருகில் நின்ற தோளில் கைவைத்து முகத்தைப் பார்த்தவள் அது ராம்கி என்று தெரிந்ததும் சாரி என்று சொல்லி படக்கென்று  கையை எடுத்துக் கொண்டாள்.

அமரும் போதும் வரிசையாக நண்பர்கள் அமர ராம்கிதான் கடைசி அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் புவனா அமர அவளைத் தொடர்ந்து தோழிகள் அமர்ந்தனர். ஆனால் ராம்கி பக்கம் திரும்பாமல் கைபடாமலும் இருந்தாள். 'பேசாம இருக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட உக்காரணும்... தள்ளிப்போயி உக்கார வேண்டியதுதானே' என்று ராம்கி மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அதே நேரம் 'உனக்கு அருகில் என்னைத் தவிர எவளையும் உக்கார விடமாட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் புவனா.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ராம்கி மெதுவாகக் குனிந்து 'சாரி... உங்க அண்ணனுக்குப் பயந்துதான் உங்ககிட்டப் பேசலை... இன்னைக்கு அதனாலதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணலை... அது போக செகண்ட் இயர் பசங்களும் வந்தாங்க... அதனால..."

"அப்பவே சொல்லிட்டேனே... நான் கேட்கலைன்னு..."

"கோபம் நியாயந்தான்... ஆனா இதுதான் உண்மை... இந்த மஞ்சள் தாவணி ரொம்ப நல்லாயிருக்கு..."

"என்னைய வர்ணிக்கச் சொன்னேனா... அதான் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே செகண்ட் இயர் பயதான் குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னானே... கேட்கலை... பாவம் அவனுக்கு என்னோட குணம் தெரியலை... எங்க அண்ணனுக்கிட்ட சொன்னா பெரியாஸ்பத்திரியில ஒரு பெட்டு ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்... அடுத்து உனக்கும் பக்கத்துல போடச் சொல்லணுமா?"

"அவனுக்கு உங்களைத் தெரியுமின்னு நினைக்கிறேன்... அவன் வேற பொண்ணச் சொன்னான்... உங்களையில்லை...."

"வேற பொண்ணுன்னா பேசுவிங்களா...? வைரவனுக்கிட்ட சொன்னா வாயைப் பேத்துடுவான்"

"..."

"என்ன பதிலைக் காணோம்...?"

"நான் தப்புப் பண்ணுனாத்தானே என் வாயைப் பேப்பாரு... ம்... மஞ்சள் புடிச்சிருந்தது அதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்... ஆனா உங்களுக்கு எம்மேல உள்ள  கோபம் குறையலை... சாரி..." 

"ம்... படத்தைப் பாருங்க... பக்கத்துல பாக்காம..."

படம் முடியும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அனைவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமானார்கள். மரபுக்கவிதைகள் போட்டியில் புவனா கலந்து கொண்டாள். அவளுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்று ஊரில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டான். பின்னர் கட்டுரைப் போட்டியையும் முடித்து முடிவுகள் அறிவிப்பதற்காக காத்திருந்தனர்.

ஒருவழியாக முடிவை அறிவித்தனர். ராம்கி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருந்தான். புவனா கவிதையில் முதல் பரிசைப் பெற்றிருந்தாள். கட்டுரையில் மூன்றாம் பரிசும் அவளுக்கே.... பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மற்ற நண்பர்களும் சில போட்டிகளில் பரிசுகளை வெல்ல சந்தோஷமாய் எல்லோரும் கிளம்பினர்.

பேருந்தில் ஏறும் முன் "எனக்குக் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் நீங்கல்லாம் போங்க நான் வாங்கிக்கிட்டு வாறேன்" என புவனா சொல்ல, "இனி புக்கெல்லாம் வாங்கிட்டு திரிஞ்சு ராத்திரியிலயா வீட்டுக்குப் போவே...இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம் வாடி" என்று மற்ற பெண்கள் சொல்ல,

"இல்ல வந்தது வந்துட்டோம்... நான் வாங்கிக்கிட்டு வாறேன்..."

"ஏங்க நான் வேணா உங்களுக்கு துணைக்கு வாறேன்..." என்று ராம்கி சொன்னதும் "என்ன ராம்கி மஞ்சத் தாவணிக்கு துண்டு போடுறியா?" என்றான் இரண்டாமாண்டு மாணவன்.

"என்ன நக்கலா பேசுறே... காலையில வரும்போது குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னே... இப்ப துண்டு போடச் சொல்லுறே... நான் யாருன்னு தெரியுமில்ல... நாளைக்கு காலேசுக்கு வரணுமா... வேண்டாமா?" புவனா கோபமாக, "ஏங்க அவங்க யாரோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க... தேவையில்லாம பேசி பிரச்சினையாக்காதீங்க... எல்லாரும் ஒண்ணா வந்தோம்... சந்தோஷமாப் போவோம்... நான் அவங்க கூட பொயிட்டு லேட்டாயிட்டா தேவகோட்டையில ஐயா வீட்ல விட்டுட்டுப் போயிடுவேன்... அதான் கேட்டேன்... இல்ல யாராவது பொண்ணுங்க துணைக்குப் போங்க.. " என்றான் ராம்கி.

"இல்ல ராம்கி..." ரொம்ப லேட்டான வீட்ல திட்டு வாங்க முடியாது.. நீயே இருந்து கூட்டிக்கிட்டு வா" என பெண்கள் ஜகா வாங்க, ராம்கி, புவனா தவிட மற்றவர்கள் எல்லாரும் வந்த பேருந்தில் ஏறினார்கள்.

"வாங்க போகலாம்"

"எங்க?"

"புக்ஸ் வாங்கணுமின்னிங்க..."

"சும்மா சொன்னேன்..."

"சும்மா சொன்னீங்களா..?"

"ஆமா... நாம தனியாப் போகணுங்கிறதுக்காக சொன்னேன்..."

"தனியாவா... நான்  நிக்காம போயிருந்தா..."

"போகமாட்டீங்கன்னு தெரியும்...காலையில விட்டுட்டு வந்ததுக்கே இவ பேசலை... இப்ப விட்டுட்டுப் போனா பேசவே மாட்டாளேன்னு யோசிச்சிப்பீங்கன்னு தெரியும்..."

"பொண்ணுங்க யாராவது நின்னுருந்தா..."

"நிக்க மாட்டாளுங்க... ஏன்னா என்னோட தோழி கனிக்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்... அதனால அவ யாரையும் நிக்க விடமாட்டா"

"அடேங்கப்பா... எதுக்கு இப்படி..."

"சும்மாதான்... சரி வாங்க பஸ் வருது"

பேருந்தில் ஏறியதும் இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்த புவனா, ராம்கியைப் பார்த்து "உக்காருங்க" என்றாள்.

"இல்லைங்க... பரவாயில்லைங்க..."

"சும்மா உக்காருங்க..." மெதுவாகச் சொன்னாள்.

"இல்லை... நான் நிக்கிறேன்... அந்த அம்மாவை உக்காரச் சொல்லலாம்..."

"நீங்க இப்ப உக்காருவீங்களா மாட்டிங்களா..." மெதுவாகக் கேட்டபடி பல்லைக் கடித்தாள்.

அவள் கோபமாவதைப் பார்த்ததும் வைரவனுக்கு வேண்டியவன் எவனும் பஸ்ஸில் இருக்ககூடாது என்ற பயத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தான்.

"இப்ப கோபமெல்லாம் இல்ல... தியேட்டர்ல படம் பார்த்த மாதிரி இருக்காம நல்லா இருங்க..." என்று புவனா சிரித்தபடி சொன்னதும் ராம்கி கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்தான். அவளது தோளில் அவனது தோள் உரச, அவனுக்குள் புதுவித உணர்வு மெல்ல எட்டிப்பார்த்தது,

பேருந்தில் 'இந்த மான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாட...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ராமராஜனின் கானங்கள்


தமிழ் சினிமாவில் மோகனுக்குப் பிறகு தனது படங்களில் எல்லாப் பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் விரும்பி கேட்க வைத்தவர் மக்கள் நாயகன் இராமராஜன். இவரது படங்களின் பாடல்கள் வெற்றி பெற்றதில் இசைஞானிக்குப் பெரும்பங்கு உண்டு. மோகனுக்குப் பிறகு ராஜாவின் செல்லப் பிள்ளையானார் ராமராஜன். மக்கள் நாயகனின் படங்களிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக....


படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடல் : மதுரை மரிக்கொழுந்து வாசம்




படம் : மனசுக்கேத்த மகாராஜா
பாடல் : ஆறெங்கும் தானுறங்க...




படம் : ராசவே உன்னை நம்பி
பாடல் : ராசாத்தி மனசுல என்ராசா...




படம் : பொங்கி வரும் காவேரி
பாடல் : வெள்ளிக் கொலுசு மணி




படம் : கிராமத்து மின்னல்
பாடல் : நீ போகும் பாதையில் மனசு போகுதே




படம் : எங்க ஊர்க் காவக்காரன்
பாடல் : மாலைக் கருக்கலிலே...


என்ன மக்கள் நாயகனின் பாடல்களை ரசீத்தீர்களா?

-'பரிவை' சே.குமார் 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

நினைக்கத் தெரிந்த மனமே...


அவள்...  நிம்மி... 

நினைத்தாலே இன்னும் இனிக்கிறாள்...

எப்படி எனக்குள் வந்தாள்?

கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது திரைமறைவில் இருந்து சிரிக்கிறாள் அந்தக் கள்ளி...

எப்பவும் போல் அதே கல்லூரிச் சாலை... காலையில் பரபரப்பாய் இருக்கும்  மாணவர்களின் ஊர்வலம்... இதைத்தான் கடந்த ஒன்னறை வருடங்களாகப் பார்க்கிறேன். நாங்களும்... நாங்கள் என்றால் நான், அஸார், சேவியர்... அப்புறம் கண்ணன்... பல கதைகள் பேசியபடி மெதுவாக நடக்கிறோம். பள்ளி செல்லும் பிள்ளை புத்தக மூட்டை தூக்கிச் செல்லும் காலத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வாங்கிய ஒத்தை அக்கவுண்டன்சி நோட்டைத் தூக்கக் கஷ்டப்பட்டு சேவியரின் சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தோம் எங்களுக்கு இணையாக சேவியரும் ஸ்லோ ரேஸ் சைக்கிள் போட்டியில் ஓட்டுவதைவிட சைக்கிளை ஸ்லோவாக ஓட்டிக் கொண்டு வந்தான். அப்பத்தான் 'கிணி'ங் என்ற இரட்டை மணியோசை இதயம் தொட்டது.

இம்புட்டு இடம் கிடக்கும் போது நமக்குப் பெல் அடிக்கிறது யார்டா? என்றபடி அஸார் திரும்ப... எல்லாரும் திரும்பினோம். இரட்டை தேவதைகள் எங்களைக் கடந்தார்கள். அதில் சிவப்பு தாவணியிட்ட சிவப்பு மங்கை சற்றே திரும்பி நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதாக என் கண்கள் அவளை நோக்க, அவளோ என் பின்னே வரும் மற்றொரு சைக்கிளை நோக்கினாள் என்பது அவள் கண்ணின் பார்வை போகும் திசையில் பயணித்துப் போனபோது பின்னால் வந்த மூன்றாவது தேவதை கையாட்ட கண்டு கொள்ள முடிந்தது. அண்ணலும் நோக்கினான் அவள் நோக்கவில்லை என்பதால் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்த போது அதுவரை அடிபட்ட அரசியல் சற்றே பின்னால் போக தேவதைகள் முன்னேறினார்கள்...

"யாருடா இவளுக... புதுசா இருக்காளுங்க..." மெதுவாகக் கேட்டான் சேவியர். பதிலைப் பெறும் ஆவலில் எல்லாம் தெரிந்த கண்ணனை நோக்கினேன் நான்.

"அட பர்ஸ்ட் பிஸிக்ஸ்... அந்த அரக்கு சுடிதார் இருக்குல்ல அது தேர்ட் மாத்ஸ் மணிகண்டன் தங்கச்சி., பின்னாடி தனியா போனது அண்ணாநகர்ல இருக்கு அப்பா கிராமத்துக் ஸ்கூல் டீச்சருடா... சரியான வாயாடி.. வகுப்புல அதுக்கு பேரே பிபிசியாம்..."

"நம்ம கிளாஸ் விமலாவை விடவாடா... வாய் நீளம்" என்றான் அஸார், அவனுக்கு விமலாவைப் பார்த்தாலே பிடிக்காது, வாயாடி வசந்தா வந்துட்டாடான்னு கத்துவான். சிவப்புத் தாவணியை மறந்துட்டாய்ங்களேன்னு கவலையா இருந்துச்சு...

"விமாலாவை விட இவ செம வாயாடியாண்டா..." அப்படியே பேச்சை நிறுத்தினான். சிகப்புத் தாவணி பற்றி இப்போதும் சொல்லவில்லை... அடேய் சொல்லேன்டா மனசு அடித்துக் கொண்டது. கேட்கப் பயம் எனக்கு, அவளைக் குறிப்பிட்டுக் கேட்டா அப்புறம் கொஞ்ச நாளைக்கு நாந்தான் அவனுகளுக்கு மெல்லு பொருளாவேன். அதனால் கேட்காமல் தவி(ர்)த்தேன்.

"என்னடா எல்லா விவரமும் சொல்லுறே... அந்த சிவப்புத்தாவணியப் பத்தி சொல்லலை...." இதுவும் சேவியர்தான்... எனக்கு தெய்வமாகத் தெரிந்தான்.

"ஓ... அவளா... அவ பேரு நிர்மலா... எல்லாருக்கும் நிம்மி.."

"ஜிம்மியா?" கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தான் சேவியர். ஜோக் அடிச்சிட்டாராம்... நம்ம நெஞ்சு அடிச்சிக்கிறது தெரியாமா ஜிம்மி அம்மின்னு... சீ கம்முனு இருன்னு கத்த ஆசை... அடக்கிக் கொண்டேன்... அவனே விட்டு விட்டுப் பேசுறான்... இவன் வேற நகர்ற தேருக்கு கட்டை போட்டுக்கிட்டு... சொல்லாமப் போகப் போறாண்டா...  அடேய் அடங்குடா... 

"இருடா... அவன் சொல்லட்டும்..." இந்த முறை அஸார் என் மனசறிந்து பேசினான்... நல்லா இருப்பேடா நண்பா.

"அப்பா இல்லை.... அம்மா போஸ்ட் மாஸ்டரா இருக்காங்க... ஒரு அக்கா... ஒரு அண்ணன்.. அவளுக்கு செல்லப் பெயர் ஒண்ணும் இருக்கு... அதுதான் பட்டு... வீட்டுலயெல்லாம் அவ பேரு பட்டுத்தான்..."

"அவதான் அழகா இருக்காளே... அப்புறம் எதுக்கு பட்டுப் போகச் சொல்லணும்...?"

"மூதேவி... பட்டுன்னா... பட்டம்மாள்... பாட்டி பேரோ... பூட்டி பேரோ... அது எதுக்கு... பேரை சொன்னா கேட்டுக்கணும்... ஆராயக்கூடாது..."

"ம்.. ஆமா அக்கவுண்டன்சியில பாலன்ஸ் ஷீட் பத்திக் கேட்டால் உனக்குத் தெரியாது... பொண்ணுங்க டீடெயில் மட்டும் தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் கரெக்டா சொல்லுவேடா... உனக்கு உங்கப்பா கண்ணன்னு அன்னைக்கே கணிச்சுப் பேர் வச்சிருக்காருடா..."

"அப்படி இப்பிடி கலெக்ட் பண்ணுறதுதான்... ஆமா ஒரு செமஸ்டர் முடிச்சிட்டாளுங்க... இப்பத்தான் பாக்குறமாதிரி கேக்குறீங்களேடா... காலேசுல படிக்கிறீங்கன்னு சொல்ல வெக்கமாயில்லை... இந்த பட்டு இருக்காளே ரொம்ப தைரியமானவ... எதுக்கும் பயப்படமாட்டா... ஒரு ஸ்டிரைக் அப்போ அவங்க கிளாஸ் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு உள்ளே போயி பிரச்சினை பண்ணியது இவதான்... இப்ப ஞாபகம் இருக்கா..."

அட ஆமா.... இவளா அவ... கூ......கூன்னு எல்லாரையும்  கூவ வச்சவளாச்சே... எப்படி மறந்துச்சு... அதுசரி... அப்ப இவளைப் பத்தி யோசிக்கலையில்ல... அதுக்கப்புறம் இவளைப் பார்த்தாலும் அதிகம் கண்டுக்கவே இல்லை... அப்போ இம்புட்டு மெருகு இல்லையின்னு நினைக்கிறேன்...என்று யோசிக்கும் போதே...

"அவளாடா இவ... அன்னைக்கு பார்த்தப்போ இப்படித் தெரியலையே... முகம் ஞாபகத்து வரலை" என்றான் சேவியர்.

"அவதான்... உங்களுக்கு எங்க பொண்ணுகளைப் பார்க்க நேரமிருக்கு... எப்ப பார்த்தாலும் புரபஸர்ஸ் பின்னால சுத்தத்தான் நேரம் இருக்கு... பெரிய படிப்பாளிங்கன்னு பேரெடுத்து என்னத்தை சாதிக்கப் போறீங்களோ... பொது அறிவு சுத்தமா இல்லாம..."

"விடுடா... சும்மா எங்கள ஓட்டாம... உன்னோட பொது அறிவை வச்சி நாங்க சமாளிச்சிக்கிறோம்... வா..." நாந்தான் பேசினேன்... படிப்பாளி... புத்தகப்புழு... லைப்ரரி டேபிள்ன்னு எல்லாம் சொன்ன எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும் தெரியுமா?

அன்னைக்கு மத்தியானம் எங்க கிளாஸ்க்கு அருகிலுள்ள தண்ணீர் அண்டாவில் தண்ணி குடிக்க வந்தாள்... அவள் கைபட்டு சங்கிலியில் கட்டப்பட்ட டம்ளர் கூட பட்டாய் ஜொலித்தது. அவளையே பார்ப்பேன் என அடம்பிடித்தது எனது கண்கள்.... அவள் ருசித்தாள்... நான் ரசித்தேன்...

மாலை அவள் சைக்கிளை எடுக்கும் வரை வேண்டுமென்றெ பிகாம் நண்பனுடன் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். என் நேரமோ... இல்லை எப்பவும் அப்படித்தானோ தெரியவில்லை சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கள் முன்னே நடந்தாள் துணைச் சாமிகள் அருகில் வர உற்சவ மூர்த்தியாய் அவள் தனித்துத் தெரிந்தாள்.

பின் தொடரும் படலமும்... கண் தேடும் படலமுமாக நாட்கள் ஓட அவளுக்காகவே லைப்ரரியில் வாலண்டியராகச் வாலண்டாப் போய்ச் சேர்ந்தேன். பெரும்பாலும் அவள் வரும் நேரம் பார்த்துச் சென்றேன்.... பார்த்தேன்... பார்த்தாள்... சிரித்தேன்... சிரித்தாள்... பேசினேன்... பேசினாள்... பழகினேன்...பழகினாள்...  அப்புறம் பழகினோம்...

பின்பு எனக்காக அவளும் அவளுக்காக நானும் காத்திருக்கும் நாள் மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் எங்களுக்குள் ஆரம்பமானது. எனக்காக அவள் நட்பைத் துறந்தாள்... அவளுக்காக நான் நட்பைத் துறந்தேன்... மாலை நேரம் எங்களுக்கு மைதானமே பேச்சிடமானது... காலையும் மாலையும் கூட்டமாய் மாணாக்கர்களை வழி நடத்திய கல்லூரிச் சாலை இருட்டும் வேளையில் எங்களுக்காக மட்டும் கருநீல மெத்தை விரித்து வைத்தது.

எப்பவும் அவள்... ஞாபகமெல்லாம் அவள்... விடுமுறை தினம் கூட அவளைப் பார்க்காது கழிவதில்லை... எல்லாமே அவளாகிப் போனாள்.

படிப்பு முடிந்து வேலை தேடி அலைந்த போதும் ஆறுதலாய் அவளின் போன்கால்... ஒரு நாள் அவள் குரல் கேட்க விட்டாலும் அந்த நாள் என் அகராதியில் யுகமாய் கழிந்த நாளாய்த்தான் இருந்தது. பட்டென்று அண்ணன் அனுப்பிய விசாவால் சட்டென்று சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை... வருவேன் கண்மணி... காத்திரு... உனக்காகவே வாழ்வேன் என்றெல்லாம் பேசிச் சென்றேன்.

வாழ்க்கைக்குத் தெரியவில்லை காதலின் வலி. கஷ்டங்களுக்கு இடையே அவளை நினைத்து வாழ்ந்து வந்தேன். அம்மாவும் அண்ணனும் கம்பல் பண்ணி எங்க அத்தை மகனுக்கு முடிச்சிட்டாங்க... என்னால ஒண்ணும் சொல்ல முடியலை... உன்னையும் மறக்க முடியலைன்னு ஒப்பாரியாய் ஒரு கடிதம் கண்ணனின் உதவியுடன் அவளிடமிருந்து வந்தது.

பாத்ரூமில் உக்கார்ந்து பாவி நான் அழுதேன்... அழுதேன்... கண்ணீர் வற்றும் வரை அழுதேன்... கடல் கடந்து இருக்கும் என்னால் கடந்து போய்விட்ட காதலை என்ன செய்ய முடியும்... கையாலாகாதவன் ஆனேன்... கிளம்பிச் சென்று அவளைச் சிறையெடுக்க நினைத்தேன்... எனக்கு முன்னே இருக்கும் அக்காவும் பின்னே பருவமெய்தி காத்திருக்கும் தங்கைகளும் கண்ணில் வந்து மறைந்தார்கள். குடும்பத்திற்காகவே உழைக்கும் அண்ணன் வெயிலில் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்.

திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நாய்குட்டியாய் மனசு அவளையே சுற்றிச் சுற்றி வந்து அரற்றியது... நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தது. கண்ணனின் கடிதம் அவளின் திருமணம் முடிந்த சுபச் செய்தியை தாங்கி வந்தது.

நாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாக... மாதங்கள் வருடங்களாகி கடந்து கொண்டே போக, அக்கா, தங்கைகள்... அப்புறம் அண்ணன் என திருமணங்கள் நடந்தேறியது... அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டேன் ஒரு நிபந்தனையுடன்...

அது என்ன நிபந்தனைன்னுதானே கேக்குறீங்க...இருங்க சொல்றேன் பொண்ணு பேரு கண்டிப்பாக நிர்மலான்னு இருக்கணும்... அவளை நான் நிம்மியின்னு கூப்பிடணுமின்னு... அவங்களுக்குப் புரியலை... எனக்கு மறக்கத் தெரியலை...

ஆச்சு கல்யாணமாகி ஆறு மாசம்... இப்போ என்னோட நிம்மி கர்ப்பமா இருக்கா... அவளோட ஒரு நாள் மார்க்கெட்டுக்குப் போனேன்... எனக்கு முன்னே திரும்பி நின்றவளை எங்கோ பார்த்தது போல் இருக்கிறாளே என்று யோசித்தபோது அருகில் நின்றவனிடம் கணவனாகத்தான் இருக்கும்... காய்கறிக்கூடையை கையில் வைத்திருக்கிறானே... ஏதோ சொல்லிச் சிரித்தபடி திரும்பியவள் என்னைப் பார்த்தாள்... நானும் பார்த்தேன்... இங்கே அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றெல்லாம் தோணவில்லை... கண்கள் பனித்ததை நான்கு கண்களும் நன்கறிந்தன என்பது மட்டும் உண்மை... இருந்தும் ஒற்றை புன்னகை கூட உதிர்க்காமல் கணவனின் கரம்பற்றி என்னைக் கடந்தாள்...

எப்படி என்னை மறந்தாள்? மறந்தாளா... மறக்க நினைக்கிறாளா...?

யோசித்தேன்... எனக்குத் தெரியவில்லை... இருந்தும் நினைப்பதற்கு ஒரு மனம் இருந்தால் மறப்பதற்கும் ஒரு மனம் இருக்குமே என்று என்னை ஆறுதல் படுத்திக் கொண்டு 'நிம்மி வா போகலாம்...' என்றபடி நானும் நடந்தேன் அவளுக்கு இணையாக என் துணையுடன்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

கடைசி வரை காணாமல்...



திகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.

''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.

''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''

''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.

''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.

''எப்படிப்பா...'' அழுகை பீறிட்டது.

''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...''  பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.

''அண்ணனுக்கு போன் பண்ணிட்டிங்களா...?''

''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?''  கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.

''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.

''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.

அவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...?' என்று பதறினர்.

''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.

''இப்ப நீ போகணுமில்லயா..?''

''போகணும்... ஆனா...''

''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''

''ம்...'' என்றவனின் கண்கள் மட்டும் அருவியாக.

 ***

''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''

''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.

''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார். இவன் வரவுக்காக ஊர்ல எல்லாரும் காத்திருக்காங்க சார்''

''எப்படிப்பா... நம்ம கம்பெனியில ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறுமாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா...  அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''

''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்... எமர்ஜென்ஸியில போற மாதிரிப் பாருங்க சார்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.

''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''

***

எம்.டி.யிடம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது பத்து நாள் எமர்ஜென்ஸி லீவுல பொயிட்டு வா என்று சொல்லிவிட்டார்.

விடுப்பு முடிவானதும்8 அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

மனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.

அப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும்,  நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.

சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டனர்.

அப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.

"என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...''

"விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.

அம்மாவை தூக்கிட வேணாம்ணே...''

''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.

போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.

''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.

''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும்.  எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.

தனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

***

ஊரில்...

''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.

''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''

''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.

''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.

விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே... திருச்சி வந்துட்டேன். கார் பிடிச்சுத்தான் வாறேன்... வேகமா வந்துடுவேன்...''

''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''

''சுடுகாட்டுக்கா..?''

''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கப் போறோம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்...  வேகமாக வந்துடு''

''ச...சரிண்ணே...''

விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் பணம் எவ்வளவு என கேட்டு அதை அவரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடியபடி அழுகையை அடக்கினான். கண்ணீர் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது.

***

''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''

''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.

அப்போது ஒரு சில துளிகள் தூறல் விழ, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''

''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்... அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்...'' சம்மதித்தார் மாணிக்கம்.

சுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் கண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.

அவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.

காரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி இறங்கி  இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்... எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ஸ்தம்பித்து நின்றான். அம்மாவை இனி பார்க்க முடியாது என்பது நினைவில் உதிக்க ''அம்மா...''  என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான். 

27/08/2009 - ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது சற்று மாறுதலுடன்...
- பரிவை'சே.குமார்

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஆதலால் காதல் செய்யலாமாம்


ஆதலால் காதல் செய்வீர்...

இந்தப் படம் குறித்த விமர்சனங்கள் அதிகம் வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக இணைய விமர்சகர்கள் எல்லாரும் அருமையான படம் என்ற விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் ஒருவர் நல்லாயிருக்கு என்று சொன்னால் நாலு பேரின் ரசனை மாறும். ஆனால் இதில் எல்லாருடைய ரசனையும் ஒன்றாகவே இருக்கிறது... அப்படியென்றால் ஆச்சரியம்தானே.

ஆதலால் காதல் செய்வீர் அனைவரும் பாராட்டும்படியான படம்தானா... எனது பார்வையில்...

* படம் என்ன சொல்கிறது என்றால் படிக்கும் வயதில் காதல்... அதனால் கர்ப்பம்... அதற்குப் பின் வரும் விளைவுகள்... வேதனைகள்...  திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையின் நிலை என இளவயது காதலையும் அதன் விளைவுகளையும் அழகாக விவரிக்கிறது.

* ஆரம்பத்தில் படம் சாதாரண கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருந்து... காதலில் விழும் போதும்... இளமையின் வேகத்தில் இணைந்து அதனால் கர்ப்பமான பின்னாலும் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.

* வெகுளியான அம்மா, பெண் சொல்வதை எல்லாம் நம்பும் அம்மா, மகள் கெட்டுப் போய் நிற்கிறாள் என்று தெரிய வரும்போது பதறித் துடிப்பதும், கணவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லி எவங்கிட்டயோ படுத்து வயித்தை ரொப்பிக்கிட்டு வந்திருக்காங்க என்று அழும்போதும், தனது மகளை ஏற்க மறுக்கும் பையனின் வீட்டின் முன்பு போய் சண்டை போடும் போதும்... எதார்த்தமான நடிப்பைக் காட்டி சபாஷ் போட வைக்கிறார் துளசி.


* மகள் மீது பாசத்தை வைத்திருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துத் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மகள் கெட்டுப் போய் வந்து நிற்கும் போதும் அவளுக்காக பையனின் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு கட்டத்தில் அவர்கள் தன் மகளை கேவலமாகப் பேச, அங்கிருந்து அழுதபடி எழுந்து வீதிகளில் கண்களைத் துடைத்தபடி ஓடிவரும் போதும் தனது நடிப்பில் புதிய பரிணாமத்தைத் தொட்டிருக்கிறார்.

* நாயகன், நாயகியின் நட்புக்களாக வரும் குண்டுப் பையனும் அந்தப் பெண்ணும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் அருமை.

* மனிஷா யாதவ் வழக்கு எண்ணில் பார்த்ததற்கு இதில் இன்னும் அழகாக தெரிகிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் இடைவேளைக்குப் பிறகு நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கற்பமான பிறகு அதை மறைக்கப் போராடுவது வீட்டிற்குத் தெரியாமல் கலைக்க முயல்வது காதலன் ஏமாற்றிய பிறகு அவனை வெறுத்து என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மாவிடம் சொல்வது என பல இடங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

* நாயகி அழகி நாயகன் மொக்கை என்ற தமிழ் சினிமா வழக்கப்படி பிடிக்கப்பட ஒரு முகம்தான் நாயகன் சந்தோஷ், அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் வெளிக்காட்டாத் தெரியாத முகம். அடுத்தடுத்து படங்கள் வரும் என்றெல்லாம் சொல்லமுடியாது.

* நாயகனின் அப்பா, அம்மா, அக்கா என அனைவரும் அளவான நடிப்பு.


* சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக் திகழும் மஹாபலிபுரத்தை தமிழ் சினிமா உலகம் தப்பு செய்வதற்காகவே பயன்படும் இடமாகக் காட்டிக் காட்டி இப்போது அப்படியே ஆகிவிட்டது என்பதே உண்மை.

* தப்புப் பண்ற வயசுல தப்புப் பண்ணுனா எதுவும் தப்பில்லை என்று மஹாபலிபுரம் போவதற்கு முடிவெடுக்கும் போது நாயகன் சொல்வது படம்பார்க்கும் மாணவ மாணவிகளை நாமும் செய்து பார்ப்போமே என்று நினைக்க வைக்கும்படிதான் இருக்கிறது.

* நாயகி வீட்டில் பெற்றோர் இல்லாத போது அங்கு வந்து கொட்டமடிக்கும் நாயகன், வீட்டிற்கு அம்மாவின் தோழி வருகிறார் என போன் வந்ததும் கொரியர் பையன் போல் நடிப்பது, அம்மா எதிரே போனில் பேசும் போது காதலனை அண்ணா போட்டு பேசுவது, கருவைக் கலைக்க மருத்துவமனை போகும் போது நண்பனை கணவனாக நடிக்கச் சொல்வது, கருவைக் கலைக்க வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வருவது என இளைய தலைமுறைக்கு தப்பு பண்ணுவதற்கு சொல்லிக் கொடுக்கும் படமாகவே இருக்கிறது.

* படத்தின் இறுதியில் அந்தக் குழந்தையின் நடிப்பை அதன் போக்கிலேயே படம் பிடித்து இருக்கிறார்கள். யுவனின் பாடல் நெஞ்சைக் கனக்க வைக்கிறது. வெயிலில் வெறுங்காலுடன் நடந்து சூட்டால் அலறும் குழந்தையின் வலியை  நம்மை சுமக்க வைத்திருப்பதில் இயக்குநர் சுசீந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார்.


* 'லவ் பண்ணும் போது சுற்றியுள்ளவங்க முட்டாளாத்தான் தெரிவாங்க ஆனா நீ ஏமாந்து நிக்கும்போதுதான் நீ முட்டாளானது உனக்குத் தெரியும்', 'இப்ப வேண்டாம்...நீயும் நானும் சேரணுமின்னா இதுதான் நமக்கு எவிடன்ஸ்... புரிஞ்சிக்க', 'கலைச்சதுக்கு அப்புறம் மாத்திப் பேசினாருன்னா', 'ஆம்பளை சுகத்தைத் தேடி அலையிற பொண்ணுக்கு எங்க பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது', - இப்படி நிறைய வசனங்கள் அருமை.

* தாயும் தந்தையும் வேறு வாழ்க்கை தேடிப் போக அநாதையான குழந்தை போல் எத்தனையோ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் காதலிக்கும் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எத்தனையோ காதல்கள் இதைவிட மோசமான சூழலிலும் ஜெயித்திருக்கின்றன என்ற உண்மையை இயக்குநர் ஏனோ உணரவில்லை.

* வயசுக் கோளாறால் தப்புப் பண்ணி, அதனால் பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் தனக்கான வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ள முடியும் என்றுதான் சொல்கிறது படம். மேலும் காதல், உறவு, கர்ப்பம், பிரச்சினைகள், எதிர்பாரா முடிவு என செல்லும் படம் ஆதலால் காதல் செய்வீர் என்று சொல்லும்போது இதெல்லாம் நடக்க காதலியுங்கள்... அதனால் பிரச்சினை இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது.

* படத்தின் தலைப்பை ஆதலால் காதல் செய்யாதீர் என்று வைத்திருக்கலாம். காதல் செய்யாதீர் என்று வைத்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள் என்ற பயத்தால் இப்படி வைத்தார்கள் போலும்.

* மொத்தத்தில் யோசித்துப் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் இதுவும் நல்ல படமே...


படங்களுக்கு நன்றி - இணையம்.

-'பரிவை' சே.குமார்.

தொடர்கதை : கலையாத கனவுகள்-10

முந்தைய பதிவுகளைப் படிக்க...

                                                 பகுதி-1        பகுதி-2        பகுதி-3       
                                               
                                                 பகுதி-4        
பகுதி-5        பகுதி-6      



***********************
10. நெஞ்சுக்குள் காதல் விதை

முன்கதைச் சுருக்கம்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்கி அவளது பெயரில்லாததால் அவளிடம் கோப்ம் கொள்கிறான். அவள் புனைப்பெயரில் எழுதுவதாக சொல்லிச் செல்ல, அவனருகில் புவனாவின் அண்ணனும் கல்லூரி ரவுடியுமான வைரவன் வந்து வண்டியை நிறுத்துகிறான். 

வைரவனைப் பார்த்து மிடறு விழுங்கினான் ராம்கி.

"என்னடா ராம்கி... படிப்பெல்லாம் எப்படிப் போகுது?"

"நல்லாப் போகுதுண்ணே... ரொம்ப நாளா உங்களைப் பார்க்கவே முடியல..."

"நான் இங்கதான் இருக்கேன் எங்க போறேன்... நீ படிப்பாளி... பொண்ணுங்க எல்லாம் உன்னோட பேச காத்திருக்கும் போது நா எங்க உன் கண்ணுக்குத் தெரியப் போறேன்..."

"அதெல்லாம் இல்லண்ணே... எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டக்கூட பேச மாட்டேன்... என்னைப் போயி..."

"எல்லாந் தெரியுண்டா... பர்ஸ்ட் இயர்ல ஒரு பொண்ணு... அது பேரு கூட... ரமணா... சேச்சே... புவனாவாமே... அடிக்கடி பேசுறியாம்... பசங்க சொன்னாங்க..."

"அண்ணே... அதெல்லாம் இல்ல... காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குன்னு தமிழய்யா சொன்னதால ரெண்டு பேரும் பேச நேர்ந்தது... அம்புட்டுத்தான் மத்தபடி அவங்ககிட்ட பேசுறதுக்கு நான் காரணமெல்லாம் தேடிப் போகல... அது போக அவங்க உங்க தங்கச்சிங்கிறதும் எனக்குத் தெரியும்...." பேச்சை நிறுத்தினான்.

"ஹா...ஹா... அதெல்லாம் தெரியுமா..." என்றபடி தோளில் கைபோட்டு "இங்க பாரு ராம்கி அவளைப் பற்றி எனக்குத் தெரியும் எல்லார்க்கிட்டயும் சோசியலாப் பழகுவா... ஆனா நெருப்பு... எங்க ஜாதிப் பொண்ணுங்களுக்கே இருக்க தைரியம் அதிகம்... அதனால அவளைச் சந்தேகப்படலை... அதே மாதிரி நீயும் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்திருக்கேன்னு தெரியும்... எதோ உன்மேல எனக்கு தனியா பிரியம் இருக்கு... உன்னப் பத்தியும் தெரியும். இருந்தாலும் அடிக்கடி ரெண்டு பேரும் பேசினா கதை கட்டிவிட நிறையப் பேரு இருப்பாங்க... எந்தங்கச்சி என்னதான் போல்டானவளா இருந்தாலும் அவளும் பொண்ணுதானே நாளைக்கு அவ படிப்பு பாதிக்கப்படக்கூடாது... என்ன சொல்றது புரியுதா... பிரண்ட்லியா பேசுங்க.... எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டு இரு... வெளியிடங்கல்லயும் காலேசுலயும் பேசுறதை குறைச்சுக்க... நாளைக்கு எதாவது சிக்கல் வந்துச்சின்னா நாந்தான் உங்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்... இனி நீங்க ரெண்டு பேரும் காலேசுக்குள்ள ஐயாவோட இருக்கும் போது பேசுறது தவிர மத்த நேரம் அந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்க... இந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்கன்னு எந்தச் செய்தியும் என் காதுக்கு வரக்கூடாது... அவகிட்டயும் சொல்லிடுறேன்... சரியா..."

"சரிண்ணே... ஐயா கூப்பிடச் சொல்லி அவங்க வந்து சொன்னதாலதான் அவங்களோட பேச வாய்ப்பு வந்திச்சு... இனி அவங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு... நீங்க சொல்றது உண்மைதான்னே படிக்கணுமின்னு கனவோட வந்த எங்களுக்கு படிப்பைத் தவிர வேற எதுலயும் கவனம் போகாதுண்ணே... நீங்க நம்பலாம்... " என்றான்.

"எனக்கு உன்னைப் பற்றி தெரியும்... ஆனா வயசு அப்படி... பாத்துக்க... சரி வரவா?" என்றபடி வைரவன் சிகரெட்டை பற்ற வைத்தபடி கிளம்ப, ராம்கியின் இதயம் நெருப்புப் பற்றிக் கொண்டது.

****

"மாமா எப்ப வந்தீங்க?"
 
"வா ராமு... இப்போத்தான் வந்தேன்...பக்கத்து ஊருக்கு கேதத்துக்கு வந்தேன்... அப்படியே பாத்துட்டுப் போயிடலாம்ன்னு வந்தேன்... காலேசெல்லாம் எப்படியிருக்கு.... நல்லாப் படிக்கிறியா...?"

"நல்லா படிக்கிறேன் மாமா... முத்து மச்சான் எப்படியிருக்கார்..?"

"ம்... இருக்கான்... அவனுக்கென்ன ஊர் மேயுறதுதானே வேல..."

"ம்... அக்கா... அம்மால்லாம் இல்லையா...?"

"அம்மா மாட்டைப் பாக்கப் போயிருக்காம்... சீதா தண்ணி தூக்கப் போயிருக்கு..."

"அப்புறம் மாமா... அம்மா அன்னைக்கு ஒரு சேதி சொன்னாங்க..." 

"என்னது...!?"

"சீதாவை முத்து மச்சானுக்கு..." மெதுவாக இழுத்தான்.

"ஆமா ரெண்டு பேருந்தான் பேசி முடிவு பண்ணினோம்... அவனுக்கும் ஒரு கால்கட்டைப் போட்டுட்டா திருந்திருவான்னு பட்டமங்களம் சோசியர் சொன்னாரு... சரி நம்ம புள்ளயவே கட்டி வச்சிட்டா நல்லதுன்னு பாத்தேன்..."

"ம்..."

"ஏம்ப்பா... சீதாவுக்கு விருப்பமில்லையா...?"

"அதெல்லாம் இல்ல மாமா... அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்..."

"ம்... ஊரு மேயுறாந்தான்... தெரியுது.... நம்ம சாதிசனத்துல யாரும் பொண்ணு கொடுக்கமாட்டான் அதான் நம்ம புள்ளயின்னா எல்லாத்தையும் பொறுத்துப் போகுமில்ல..."

"..." ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்த ராம்கி மனசுக்குள் 'ஒரு பொறுக்கிக்கு உங்க பிள்ளையை கட்டுவீங்களா?' என்ற கேள்வி எழ. 'சீதா வாழ்க்கை போன பரவாயில்லையா மாமா' என்று கேட்க நினைத்து மாமாவைப் பார்த்தபோது

"வாண்ணே... எப்பவந்தே...உள்ள உக்காரச் சொல்லலையா... எங்க போனா அவ..." வாயெல்லாம் பல்லாக சுப்பிக்கட்டை தூக்கிக் கொண்டு வந்தாள் நாகம்மா.

"எதுக்கு சத்தம் போடுறே... சொக்கு செத்துப் பொயிட்டானுல்ல அதை கேக்க வந்தேன். சரி வந்ததுதான் வந்தோமே அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். கேதகார வீட்டுக்குப் பொயிட்டு வந்ததால உள்ள போகலை... சீதா காபி கொடுத்துட்டு அம்மா வந்துருவாங்க... நாம்போயி நல்ல தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போச்சு..."

"சரி அடி பைப்புல ரெண்டு வாளி அடிச்சு ஊத்திக்கிட்டு வாங்க... டேய் மாமாவ கூட்டிக்கிட்டுப் போடா... அதுக்குள்ள நான் எதாவது செஞ்சுடுறேன்... இவுகளும் ஊரு சுத்திட்டு இப்பத்தான் வாறாக..."

"இல்லத்தா.... எனக்கு வேல கெடக்குது... இருந்து சாப்பிட்டுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. என்னப்பா ஊரு சுத்துறியா... படிப்புல கவனமிருக்கட்டும்..."

"அதெல்லாம் இல்ல மாமா... அடுத்த வாரம் ஒரு போட்டி இருக்கு அதுக்கு தயார்ப் பண்ண தமிழய்யா வீட்டுக்குப் பொயிட்டு வந்தேன்..."

"அதானே... உன்னைய குறை சொல்ல முடியுமா?... ஆத்தா அவன அவம்போக்குல விடு... அதெல்லாம் படிச்சிருவான்"

"ம்... இவர நம்பித்தான் இருக்கோம்... பெரியாளா ஆயி எல்லாருக்கும் ஒதவியா இருப்பாங்கிற கனவோட..."

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு 'பெரியமாப்பிள்ளை பொங்கலுக்கு வருமில்ல... அப்ப எல்லாம் பேசிக்கலாம்ன்னு...' சொல்லிட்டு கிளம்ப, ராம்கி அவருக்குத் தெரியாமல் அம்மாவை கோபமாகப் பார்த்தான்.

மாமா கிளம்பியதும் "என்னம்மா நீ... அவரே மகன ஊரு மேயுறான்னு சொல்றாரு... நீ என்னமோ..."

"ஓ வேலயப்பாரு எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்..." என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

பின்னாலே வந்த ராம்கி, "சீதா எதுக்கும்மா இந்த வெயில்ல எதுக்குத் தண்ணிக்குப் போனா..."

"ம்.. எல்லாரு வீட்லயும் பயலுகதான் போறாய்ங்க... இங்கதான் நீங்க காலேசுப் படிக்கிறியல்ல... தண்ணி மண்ணியெல்லாம் தூக்க மாட்டிய..."

"அம்மா... நா போறேன்னு சொன்னப்போ போகவேண்டான்னு நீதான் சொன்னே... சரி நாளயில இருந்து நான் பொயிட்டு வாறேன்... அவ போக வேண்டாம்..." என்றபடி கயிற்றுக்கட்டிலில் ஏறிப்படுத்தான்.

"அந்த சேகரு உன்னயத் தேடி வந்தான்... அவனுக்கு என்னவாம்?"

"அம்மா ரெண்டு பேரும் ஒண்ணாத் திரிவோம்...அதான் கேட்டிருப்பான்..."

"அவங்கூட சுத்துறதை குறைச்சுக்க ஆமா... காவேரிக்கும் அவனுக்கும் எதோ இதுவாம்... நாளக்கி எவளாவது உன்னைய இதுமாதிரி சொல்லக்கூடாது ஆமா பாத்துக்க..."

"அய்யோ அம்மா... காவேரி அவனுக்கு சொந்த அத்தை பொண்ணு... நீ உங்க அண்ணன் மகனுக்கு கட்ட நினைக்கிற மாதிரி அவங்கப்பா அவனுக்குத்தான் காவேரியின்னு பேசி வச்சிருக்காரு... அவங்க பேசுறதுல என்ன பிரச்சினை இருக்கு... ஊரு நாலு விதமா பேசத்தான் செய்யும்... நமக்கென்ன... சாப்பாடு ரெடியாயிட்டா போடுங்க... சாப்பிட்டு அவனப் போயி பாத்துட்டு வாறேன்..." என்றவன் கையில் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

****
"எங்கடா போனே... வீட்டுக்கு வந்தா ஆளக்காணோம்..."

"காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குல்ல...  மொத்தம் அஞ்சு தலைப்பு இருக்கு... எதாவது ஒண்ணு கொடுத்து எழுதச் சொல்லுவாங்களாம்... மரபுக்கவிதை போட்டியும் இருக்காம்... நமக்கு அதெல்லாம் தெரியாது... பேச்சுப் போட்டியின்னா ஓகே... கட்டுரை... எப்படியாவது பிரைஸ் வாங்கணும்டா..."

"ம்... உனக்கு என்னடா... அடிச்சு தூள் கிளப்பிடுவே..."

"ஆமா... நீயும் காவேரியும் எனக்குத் தெரியாம எங்கடா பழகுனீங்க... அம்மா சொல்லுது?"

"அடப்பாவி... இது வேறயா... அவளும் நானும் கீரியும் பூனையுமா இருக்குறது உனக்குத்தான் தெரியுமே... ரெண்டு நாள் முன்னாடி ஸ்கூல் முடிஞ்சு வாறப்போ அவ சைக்கிள் பஞ்சராயிடுச்சாம்... கடைக்கிட்ட நின்னா... மழ வேற லேசாத் தூறிச்சு... சரி பாத்து வைக்கட்டும் நாளக்கி வந்து எடுத்துக்கலாம்ன்னு சொல்லி கூட்டியாந்தேன்... அப்பவே எல்லாப்பயலும் ஒரு மாதிரி பாத்தாய்ங்க... அயித்த மகளக் கூட்டியாந்ததுக்கே இப்படின்னா... மத்தபுள்ளங்களை கூட்டியாந்திருந்தா இன்னேரம் கலியாணமே பண்ணியிருப்பாய்ங்க... நம்ம ஊருக்குள்ள எல்லாம் வேற சாதிப் பொண்ண காதலிக்கிறோம்ன்னு தெரிஞ்சாலே செங்கக்காலவாயில தூக்கிப் போட்டு எரிச்சிடுவாய்ங்கடா..."

"ஆமாடா... படிச்சமா... ஒரு வேலக்கிப் போனமான்னு இருக்கணும்..."

"எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்ன காவேரியை வேண்டான்னு சொல்ற அன்னைக்குத்தான் இருக்கு... பெரிய பூகம்பமே வெடிக்கும்..."

"அவளுக்கு என்னடா... ஏன் வேண்டாங்கிறே...?"

"பாக்கலாம்... அவதான்னு விதியிருந்தா மாறவா போகுது... சரி அதை அப்போதைக்கு பாப்போம்... ஆமா சீதாவை முத்துக்கு கட்டப்போறேன்னு அயித்தை அப்பாகிட்ட சொன்னுச்சாம்... அதுக்கு என்ன கிறுக்காடா புடிச்சிருக்கு...."

"ஆமாடா... ரெண்டு நாளா சீதா அழுவுறா... இது பிடிவாதமா நிக்கிது... எனக்கும் மனசே சரியில்லை... அண்ணன் பொங்கலுக்கு வரயில பேசிக்கலாம்ன்னு பேசாம இருக்கமுடா..."

"ம்... பெரிய மச்சாங்கிட்ட சொல்லி நிப்பாட்டுற வழியைப் பாரு... கிளிய வளர்த்து பூனைக்கிட்ட கொடுக்க அயித்தைக்கு எப்படி மனசு வந்துச்சு..."

"அது அண்ணன் உறவுக்காக பாக்குது... அதுக்காக முத்துக்கு கட்டணுமாடா... சொன்னா எங்கிட்ட சண்டைக்கு வருது..."

"இப்ப நீ எதுவும் பேசாதே... பெரிய மச்சான் வந்ததும் பக்குவமா எடுத்துச் சொல்லி அயித்தைக்கு புரிய வையுங்க... ஆமா வீட்ல உன்னோட புத்தகத்தோட ஆனந்த விகடன் ஒண்ணு பார்த்தேன்... எடுத்து படிச்சேன்... அதுல கவிதைப்பிரியான்னு ஒரு பேரை ஸ்கெட்சுல ரவுண்ட் பண்ணியிருந்துச்சு... யார்டா அது?"

"என்னோட பிரண்ட்டுடா... காரைக்குடி போட்டிக்கு அவங்களும் வாறாங்க... கவிதை நல்லா எழுதுவாங்க... அவங்க கவிதை..."

"அவங்க பேரை நீ எதுக்கு ரவுண்ட் பண்ணுறே... என்னடா காதல் வந்திருச்சா என்ன... வேணான்டா நம்ம கனவுகளை அழிச்சிடும் பார்த்துக்க..."

"ஐயோ... அதெல்லாம் இல்லடா... எங்க காலேசுல படிக்கிறாங்க... எனக்கும் பிரண்ட்...  அவங்க கவிதைங்கிறதால ரவுண்ட் பண்ணினேன்... அம்புட்டுத்தான்..."

"ம்... பிரண்டா... அப்ப கவிதை முழுவதையும் ரவுண்ட் பண்ணியிருக்கனும்... அதென்னா பேரை ரவுண்ட் பண்ணியிருக்கே... சரி பிரண்டா இல்ல லவ்வரான்னு போகப்போகத் தெரியப்போகுது...."

"சும்மா இருடா.. பிரண்டுதான்... லவ்வுமில்ல கிவ்வுமில்ல" என்று மறுத்தவன் மனசுக்குள் கவிதைப்பிரியாவை மாற்றி புவனாராம் என்று எழுதிப் பார்க்க மனசு உயரப் பறக்க ஆரம்பித்தது.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.