மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 ஜனவரி, 2011

உப்புக் காத்து


சிறுகதைக்குள் செல்லுமுன் சில வரிகள்...

வணக்கம்.

நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் நாம் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு தமிழனுக்கு என்ன செய்தது?

தினம் தினம் இலங்கை கடற்படையினரால் செத்து மடிகிறான் நம் மீனவ நண்பன். இறப்புக்கு பணம் கொடுக்கும் அரசு, இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்க மறுப்பதேன்? நமக்குள் ஒற்றுமை இல்லாதவரை ராஜபக்சேவுக்கு இங்கு ராஜ மரியாதைதான். எனவே நம் தமிழனுக்காக கூட்டாக குரல் கொடுப்போம். நம் குரல் அரசாங்கத்தை தட்டி எழுப்பட்டும். தயவு செய்து நம் மீனவனுக்காக உங்கள் ஆதரவினை அரசுக்கு தெரிவிக்க கீழே இருக்கும் இணைய முகவரிக்குச் சென்று சில நிமிடங்கள் செலவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.


ஒரு லட்சம் கையெழுத்து வேண்டுமாமாம்... இன்னும் சில ஆயிரங்களையே நாம் தாண்டவில்லை என்பது வேதனையானது... நான் எனது ஆதரவை தெரிவித்துவிட்டேன்....  நீங்களும் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்தே நிற்போம்.

என் நட்புக்கள் அனைவரும் கவிதை, கட்டுரை, கதை என தங்கள் பாணியில் ஆதரவுக் கரம் நீட்டும் போது நானும் என் பாணியில் அவர்களுடன் இணைகிறேன்.

இந்தக் கதையை வெறிபிடித்த சிங்களவனின் துப்பாக்கி குண்டுக்கு இரையான என் தமிழக மீனவ சொந்தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

இனி படியுங்க...   "உப்புக் காத்து"

-------------------------------------------------------------
கடந்த ஒரு வாரமாகவே ஜீவா நகர் பரபரப்பாகவே இருந்தது. அதிகம் கார்கள் வராத அந்தப் பகுதிக்குள் பெரிய பெரிய கார்கள் எல்லாம் வந்த வண்ணம் இருந்தன. கரை வேஷ்டிகளும் காக்கி சட்டைகளும் வந்து போய்க் கொண்டிருந்தன. அங்க நம்ம மாவட்டம் பேர்ல ஒரு கட் அவுட், இந்தப் பக்கம் ஒன்றியம், அங்கிட்டு எம்.எல்.ஏ என்று கட் அவுட்டுகளுக்கு இடம் வழங்கிக் கொண்டிருந்த கரைவேட்டி, நம்ம வைக்கிற கட்டவுட்டெல்லாம் தலைவர் பார்வையில வர்ற மாதிரி பாத்துக்க... உன்னை நான் தனியா கவனிக்கிறேன் என்று காதைக் கடித்தது.

மேடையில இருந்து பத்தடிக்கு ஒண்ணா தலைவர் போட்டோ மெயின் ரோடு வரைக்கும் வைக்கணும் என்று ஒருவரிடம் அளந்து கொண்டிருந்தது இன்னொரு கரைவேட்டி. மெயின் ரோட்ல தலைவரோட முழு உருவ கட் அவுட் மற்ற வளைவுகள் எல்லாம் பெரிசு பெரிசா இருக்கணும் அதை நீ பாத்துக்க என்று மாவட்ட காக்கியிடம் மாநில காக்கி சொல்லிக் கொண்டிருந்தது.

விழா மேடை, பந்தல் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அந்தப் பகுதி முழுவதும் சூறாவளியில் சிக்கிய கட்டுமரமாக தெரிந்தாலும் எதையும் அறிந்து கொள்ள நினைக்காத ஒரு குடிசைக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.

"கண்ணு தூங்கும்மா... ஆத்தால்ல... ரோ.... ரோ.... ரோ.... என் ஆராரோ... ஆரிராரோ..." என்றபடி பாலுக்காக அழுத தன் ஒரு வயது மகளை தேற்றிக் கொண்டிருந்தாள் மேரி.

"எம்மா...ஏங் குழந்தை அழுகுது... பால் கொடுத்துப் பாரு தாயி..." வாசலில் இருந்து எட்டிப் பார்த்த மாமியாக்காரி சொல்ல,

"என்ன இருக்கு கொடுக்க, பால் இல்லாத மாருல வாயவே வைக்க மாட்டேங்கிது... நா... என்ன செய்யட்டும்" என்றபடி சட்டைக் கொக்கிகளை மாட்டிக் கொண்டு, எதாவது சத்தா சாப்பிட்டா பாலூறும்... நம்ம என்னத்தை திங்கிறது?. காசு இருந்தாலும் ஆர்லிக்சு வாங்காந்து ஆத்திக் குடுக்கலாம்... எவங்கிட்ட கடன் கேக்கிறது..." என்று சொன்னவள் பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினாள்.

"என்ன செய்ய... கர்த்தரு நமக்கு மட்டுமா இந்த சோதனைய கொடுத்தாரு... நம்ம சனத்துக்கேல்ல கொடுத்துட்டாரு.... எங்க போயி அழுவுறது?... சரி... சரி... சோறு வச்சிட்டியா..."

"ம்... இப்பதான் கவித்திருக்கேன்..."

"புள்ளைய எங்கிட்ட கொடுத்துட்டு... வடிச்ச தண்ணிய நல்லா ஆத்திட்டு பால் டப்பாவுல ஊத்தித்தா...  நா... இப்புடி வெளிய போயி புள்ளய பசியாத்தைக் கொண்டு வாரேன்..."

"சரி.." என்றபடி அழுத குழந்தையை அவளிடம் கொடுக்க அது அவளை விட்டு இறங்க மறுத்துக் கத்தியது.

"சனியன் செத்துந் தொலைய மாட்டேங்குது... ஏ... வானாலையும் வதையையும் வாங்குது..." அவளது இயலாமை கோபமாய் குழந்தை மீது இறங்கியது.

"அடி ஏண்டி இவளே... என்ன பேசுறே..? நம்ம நெலமை ஆளுரவங்களுக்கே தெரியலை அதுக்குத் தெரியமா என்ன? புள்ளய நொந்து என்னாகப் போகுது... அதை அழுக விடாம நீ வச்சிக்க... நா... ஒலய நிமித்து வடிச்ச தண்ணிய கலந்துக்கிட்டு வாரேன்" என்றபடி அடுப்பை நோக்கி செல்ல, தங்கள் கஷ்டத்தை நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டபடி வாசலிலேயே அமர்ந்தாள் மேரி.

"அம்மா..." பின்னால் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான் மகன் திரவியம்.

"எங்கடா போனே? "

"அம்மா... நம்ம சருச்சுக்கிட்ட பெர்ர்ரிய மேட போடுலாங்கன்னு அமலண்ணதாங் கூட்டிப் போச்சி... பசிக்கிது சோறும்மா."

அவனை இழுத்து ஒழுகிய மூக்கை துடைத்து இடுப்பில் நிற்க மறுத்த டவுசரை பட்டுக் கயிற்றுக்குள் சிறையிட்டு, "இந்தா சோறு கவித்துருக்கேன்... தங்கச்சிப் பாப்பவை ஆச்சிக்கிட்ட கொடுத்துட்டு போட்டுத் தாரேன்..."

"ம்... அங்க நெறைய்ய்ய கார்ரா வந்திருக்கும்மா..."

".........."

"அல்லாரும் வெள்ள்ள்ளச்சட்டை போட்டுருக்காங்கம்ம்ம்மா... அமலண்ணே சொன்னுச்சு அவங்கள்ள்லாம் நெறைய்ய்ய்ய படிச்சவங்களாம்." ஆச்சரியத் தோரணையில் பேசும் தன் மூன்றரை வயது மகனின் மழலையை ரசிப்பதா... அறியாமை இருட்டுக்குள் அவனும் போய்விடுவானோ என்று தவிப்பதா... இலக்கில்லாமல் தவித்த கண்ணுக்குள் எட்டிப்பார்த்தது ஏழைகளின் பொக்கிஷமாம் கண்ணீர்.

"சரி சாப்டு... இங்கயே வெளாடணும் சரியா... அங்கெல்லாம் போக்கூடாது... காரும் வண்டியுமா சர்ரு சர்ருன்னு வருது... எதாவது ஒண்ணுன்னா என்ன பண்ண முடியும்... என்னா அங்கிட்டெல்லாம் போகக்கூடாது..."

"ம்..."

உப்புப் போட்ட வடிச்ச தண்ணியுடன் வந்த மாமியாக்காரி, பேத்தியை தூக்கிக் கொண்டு 'மாடு பாரு, ஆடு பாரு' என்றபடி பாட்டிலை வாயில் வைத்து வேடிக்கை காட்டியபடி போக மகனுக்கு சோறு போட்டுக் கொடுத்தாள்.

"அம்மா... இன்னிக்கும் கருவாடுதானா..."

"நாளைக்கு அம்மா நண்டு வச்சித் தாரேன்... டொமனிக் மாமா இன்னம் கடல்ல இருந்து வரலயில்ல... இன்னிக்கு வரும்... நாளைக்கு ராசாவுக்கு வச்சித்தாரேன்... செரியா?"

"ம்... " என்றவன் கருவாட்டை கடித்துக் கொண்டு கஞ்சியை குடித்தான். மகனைப் பார்த்தபோது அவளுக்குள் உடைந்த வேதனை கண்ணீராய் கன்னத்தில் இறங்கியது.
"மேரி... மேரி..." குரல் கேட்டு கண்ணைத் தொடைத்துக் கொண்டு "யாரு... இந்தா வாரேன்..." என்றபடி குடிசைக்குள் இருந்து வெளியே வந்தாள்.

வாசலில் மகளிர் மன்ற தலைவி விமலாவும் இன்னும் சில பெண்களும் நின்றிருந்தனர்.

"வாக்கா... உள்ள வா... என்ன விசயம்?" என்றாள்.

"ஒண்ணுந் தெரியாதவ மாதிரி கேக்கிறே... இன்னம் ரெண்டு நாள்ல இங்க நடக்குற மீட்டிங்குல நம்ம முதல்வர் பணம் கொடுக்கிறாருல்ல... தெரியுந்தானே"

"ம்.... தெரியும்.... அதுக்கு என்னக்கா?"

"என்னடி... என்னவோ மாதிரி பேசுறே...? நீயும் கணவனை இழந்து ஆறுமாசமா தவிக்கிறே... உம் பேரையும் சேக்க சொல்லியிருக்கேன்..."

"வேண்டாங்க... இந்த பணமெல்லாம் எனக்கு வேண்டாம்..."

"ஏ... வேண்டாம்... கிடைக்கிறதை வாங்கிப் போட்டா பிள்ளைங்க எதிர்காலத்துக்கு பயன்படுமில்ல..."

"எனக்கு விருப்பமில்லக்கா..."

"என்னடி நீயி... தானவார லெட்சுமிய வேண்டாங்கிறே... அஞ்சுக்கும் பத்துக்கும் கருவாடு காயப்போட்டு எப்படிடி குடும்பத்தை ஓட்டுவே... எதாவது ஒரு ஆம்பளைத் தொண இருந்தாலும் கடலுக்குள்ள போயி மீன் பிடிச்சு வாழ்க்கைய ஓட்ட முடியும் , கிழவியையும் பிள்ளைங்களையும் வச்சிக்கிட்டு வாரத வேணாங்கிறே..."

"ஏக்கா... எம் புருசன் மட்டுமா... எத்தனை உசுரு... நாமல்லாம் கடலம்மான்னு நம்பிப் போற கடலுக்குள்ள எல்லைய தாண்டிட்டான்னு கொக்கு குருவி சுடுற மாதிரி சுடுறாங்களே... இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருப்பாங்களா..."

"அடியே விதண்டவாதம் பேசுற நேரமாடி இது.."

"அக்கா நான் விதண்டவாதம் பேசலை... எம் புருசன் கூட போன சூசையண்ணன் காயத்தோட வந்திச்சு... அப்ப எம் புருசன் வரலை ... அதுகிட்ட கேட்டதுக்கு என்ன சொன்னுச்சு தெரியுமா?... சுட்டப்போ எல்லாரும் கடல்ல குதிச்சோம்... யாரு எங்கிட்டுப் போனான்னு தெரியலை தாயின்னு சொன்னுச்சு... அதுக்கப்புறம் நான் எம் புருஷனைக் கண்டுபிடிச்சுக் கொடுங்கன்னு கலெக்கிட்டரு ஆபீசுக்கும் வீட்டுக்குமா எத்தனை நாளு நடந்திருப்பேன். இதுவரைக்கும் எதாவது முடிவு எடுத்தாங்களா.... இல்லையே...?"

"சரி... எத்தனையோ பேர் இப்படி... அவங்க வீட்ல எல்லாம் பணம் வாங்க சம்மதிக்கிறப்போ நீ ஏன் மறுக்கிறே...?"

"அந்த விழாவுல முதல்வர் வந்து நீலிக் கண்ணீர் வடிப்பாரு... இந்த கலெக்கிட்டரும் போலீசுக்காரவுங்களும் ஜால்ரா தட்டுவாங்க... நம்ம சனம் கடலுக்குப் போகம... கருவாட வெயில்ல காத்திருந்து வாழ்த்துக் கோஷம் போடும்... எனக்கு வாழ்த்துக் கோஷம் போடவும் பிடிக்கலை... வக்கத்தவங்க கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு கால்ல விழுந்து தெய்வமுன்னு சொல்லவும் பிடிக்கலை... நாமல்லாம் இன்னும் இப்படியே இருக்கதாலதான் தேர்தலப்போ மட்டும் தென்றலை அனுப்புறாங்க... அப்பறம் பூரா உப்புக்காத்தைத்தானேக்கா சுவாசிக்கிறோம்."

"நீ வில்லங்கம் பேசுறே... வில்லங்கம் பேசிக்கிட்டு எப்படி வாழ்க்கைய ஓட்ட முடியும்..."

"ஏக்கா... நமக்கா குரல் கொடுக்காத அரசும் அதுக்கு துணை போற ஆட்களும் இருக்கிற நாட்டுல நாம இருந்தென்ன செத்தென்ன... வாழ்ந்தாலும் செத்தாலும் சாதிமானாத்தாங்கா சாகணும்... நா... உங்கிட்ட ஒண்ணு கேக்குறேன்.... என்னை தப்பா நினைக்காத... உம் புருசனும் எலங்ககாரங்களோட துப்பாக்கிக்குத்தான் செத்தாரு... அவருக்கு இந்த அரசாங்கம் கொடுக்கிற அம்பதாயிரம்தான் விலையின்னா... நீ ஏன் பொட்டு பூவை தொறந்திட்டு ஏஞ்சாமியின்னு ஏங்கித் திரியிறே... பிச்சைக்காரன் கொடுக்கிற பிச்சைக்காசை வாங்கிட்டு பவுசா திரிய வேண்டியதுதானே...

"இங்க பாருக்கா... உங்க புருசங்களுக்கெல்லாம் அம்பதாயிரமும் அர வயித்துப் பிரியாணியும்தான் வெலயின்னா எம் புருசனுக்கு வெல இல்லக்கா... எம் மனசு பூராம் நெறஞ்சிருக்க மவராசனை பிச்சைக்காசை வாங்கி குப்பையில போட எனக்கு திராணியும் இல்ல... மனசும் இல்ல... எம் பேரு வேண்டாங்க... நா ஒழச்சுச் சாப்பிட்டுக்கிறேன்... இவங்க குடுக்கிற அம்பதாயிரம் ஓவாய வாங்கிக்கிட்டு அடுத்த தேர்தல்லயும் இவங்களுக்கு ஓட்டுப் போட்டு அரியாசனத்துல ஏத்தி வக்கிறதுக்கு உடம்பை வித்து கொழந்தங்களை காப்பத்துனாக்கூட என்னைப் பொறுத்தவரைக்கும் தப்பில்லேக்கா" என்றவளைப் பார்த்து வந்தவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் செல்ல...

வீட்டுக்குள் நுழைந்தவள் மூலையில் கிடந்த புருஷனின் சட்டையை எடுத்து வைத்துக் கொண்டு , "ஏய்யா... உனக்கு வெல கொடுக்குதாம் இந்த அரசாங்கம்... உனக்கு என்ன வெலயின்னு இந்த பணந்தின்னி நாய்களுக்கு என்னய்யா தெரியும்" என்று கதற, சாப்பாட்டை வைத்துவிட்டு அவளருகில் வந்து கண்ணைத் துடைத்தபடி "அம்மா... அப்பா நெறைய மீனோட வந்திரும்மா... அழுவாதம்மா" என்ற தன் மகனை இழுத்து அணைத்துக் கொண்டவளின் கண்ணீர் கங்கை வற்ற மறுத்தது.

-'பரிவை' சே.குமார்.
போட்டோ உதவிய கூகிளுக்கு நன்றி


குறிப்பு: நீங்கள் ஆவலுடன் (!!!!???) படிக்கும் பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி பட்டிமன்றம் நிறைப்பகுதி அடுத்த பதிவாக வரும்.


சனி, 29 ஜனவரி, 2011

கண்ணாடி சிதறல்கள்


ஒரே தலைவலியாக இருந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு படுத்திருந்தான் ராகவன். மாத்திரைகள் போட்டும் தலைவலி நிற்பது போல் தெரியவில்லை. நேற்றிரவு சரக்கு அளவுக்கதிகமாய் போய் வண்டி ஓட்ட முடியாத நிலையில் நண்பர்கள் கொண்டு வந்து விட்டுச் சென்றது ஞாபகச் சுவற்றில் வட்டமிட்டது. எப்பவும் ஒரு பீர்தான் ஆனால் நேற்று ஸ்காட்ச், நண்பர்கள் தடுத்தும் அளவுக்கதிகமாய் குடித்தான். அதுதான் இன்றைய தலைவலிக்கு காரணம் என்பதை அவன் உணராமல் இல்லை. ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு போக எதாவது காரணம் இருக்கணுமே... அவனுக்கும் ஒரு காரணம் இருந்தது.

அந்தக் காரணம்... யாழினி... அவனின் மனைவி, நல்ல அழகி என்று சொல்வதைவிட பேரழகி என்று சொல்லலாம். அவளைப் பெண் பார்க்க சென்றபோது அவளைப் பார்த்த வினாடி முதல் தன்னையே மறந்தான் ராகவன். அவனை அவளுக்கும் பிடித்துப் போக இரண்டாண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடந்தது.அதன் பின் ஆசை மனைவியுடன் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் தனிக்குடித்தனம். அவளும் கணிப்பொறியில் பட்டம் பெற்றவள் என்பதால் வேலைக்குப் போனாள். நல்ல வருமானம்... அவர்களின் அன்பான வாழ்க்கைக்கு ஐந்து மாதங்கள் ஆன போதுதான் அது அவர்களுக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது... அந்த அது...ஈகோ.

இருவருக்குள்ளும் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் சண்டை வர ஆரம்பித்து சண்டையே வாழ்க்கையானது. எல்லாவற்றிற்கும் சண்டையென்றான வாழ்க்கையில் சந்தேகம் என்ற கரும்புள்ளியும் இருவர் உள்ளத்திலும் புகுந்தது. இதன் பின் அவளுக்கு அவனோ... அவனுக்கு அவளோ... போன் செய்யும் போது அவர்கள் எடுக்காமல் அவன் போனை பெண்ணோ அவள் போனை ஆணோ எடுத்தால் அன்று இரவு பயங்கரமான சண்டை நடக்கும். அவளை வச்சிருக்கியா என்றும் அவனை வச்சிருக்கியா என்றும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களின் முடிவில் இருவரும் அடித்தும் கொள்வார்கள்.

இதன்பின்னான வாழ்க்கையில் ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் தனித்தனி அறையில் வாசம். யாராவது சொந்தங்கள் வரும்போது மட்டும் கணவன் மனைவியாய் நடிக்க கற்றிருந்தார்கள். உறவுகள் அதிகம் கோவைக்கு வருவதில்லை என்பதால் அவர்கள் அதிகம் நடிக்க வேண்டியிருக்கவில்லை. ஊருக்கு செல்லும் போது இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்த்தார்கள். ஊரில் யாராவது கேட்டால் வேலை என்ற காரணம் சொல்லப் பழகியிருந்தார்கள். வீட்டில் சமைத்து நாட்களாகிவிட்டன. இருவரும் வெளியில்தான் சாப்பாடு, யாராவது வந்தால் மட்டுமே அபூர்வமாய் அடுப்புக்கு வேலை. நீ எப்படியிருக்கே என்று ஒருவரை ஒருவர் கேட்பதுகூட இல்லை.

கிராமங்களில் மொரப்பாடு என்று ஒன்று வழக்கத்தில் இருக்கும். மொரப்பாட்டுகாரர்களின் வீட்டில் சாப்பிட மாட்டார்கள்.அது மாதிரிதான் இருவரும் பார்த்துக் கொள்வதே அபூர்வமானது. காலையில் அவள் குளித்து வெளியில் வரும்போது இவன் குளிக்கப் போவான். அப்போது சந்திக்கும் அந்த சில நிமிடங்கள்தான் அவர்கள் அன்றைய இருபத்து நான்கு மணி நேரத்திற்கு அவர்களின் சந்திப்பு. அவன் குளித்து வரும்போது அவள் வண்டி தெருமுனையை தாண்டியிருக்கும். விடுமுறை தினங்களில் அவள் சமைத்து சாப்பிடுவாள். இவன் எங்காவது வெளியில் போய்விடுவான்.

போன மாதம் ஒரு ஞாயிறு அவன் வெளியே கிளம்ப ஆயத்தமானபோது நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று அவள் சொல்ல, என்ன என்பது போல் பார்த்தான். நாம விவாகாரத்து அப்ளை பண்ணலாம் என்று நேரடியாக சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் இருக்க, இந்த வாழ்க்கை நமக்கெதுக்கு...ஒப்புக்காகவும் உறவுக்காகவுமா? நமக்குள்ள என்ன இருக்கு... ரெண்டு தனித்தனி தீவா இருக்கோம்... இதை கட்டிக்கிட்டு வாழ்க்கையை ஏன் நாம கெடுத்துக்கணும்... விவாகரத்து வாங்கிட்ட அவங்கவங்க அவங்கவங்க வாழ்க்கையை பாக்கலாம் என்றாள். சரி அப்ளை பண்ணலாம் என்றவன் முகம் எப்போதும் போல்தான் இருந்தது எந்த மாற்றமும் இல்லை.

அதற்கான வேலையில் இருவரும் இறங்கியபோது நண்பர்கள் வேண்டாம். உங்க பிரச்சினையை பேசித் தீர்த்துக்கங்க என்று எவ்வளவோ சொல்லியும் இருவரும் பேசாமல் இருக்கவே நினைத்தனர்.

எல்லாம் முடிந்து நேற்று குடும்ப நலக் கோர்ட்டில் விசாரணை நடந்தது. விசாரித்த பெண் நீதிபதி, இருவரிடமும் நல்லா படிச்சிருக்கீங்க... லவ் மேரேஜ் பண்ணியிருந்தாலும் சில பிரச்சினைகள் வரும். அப்பா, அம்மா பாத்து கட்டி வச்சிருக்காங்க... அவங்க மனதையும் நோகடிச்சிருக்கீங்க... குழந்தை பெத்துக்காம இருந்தது ஒரு விதத்துல நல்லதுதான்... இல்லேன்னா இங்க ஆறு மாசம் அங்க ஆறு மாசமுன்னு அதோட வாழ்க்கை பாழாப்போகும் என நிறைய பேசி இருவரையும் ஈகோவை விட்டு வெளிய வந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொன்னார். ஒரு வருடம் பிரிந்து இருங்கள. அடுத்த ஆண்டு இதே தேதியில் விசாரணைக்கு அழைப்பு வரும். அப்போது நீங்க சட்டப்படி பிரியலாம். அதில் ஜீவனாம்சம் குறித்தும் முடிவு செய்யப்படும் என்று சொல்ல, யாழினி ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் எனக்கு வேண்டியது விடுதலை மட்டுமே என்று அடித்துக் கூற, ராகவன் எதுவும் சொல்லாமல் நின்றான்.

அதன் பின் வீட்டிற்கு வந்தவன் நண்பர்கள் அழைப்பின் பேரில் பாருக்குப் போய் ஸ்காட்சில் நீந்தியதன் விளைவுதான் காலையில் எழுந்திருக்க முடியாத தலைவலி. தைலங்கள் எல்லாம் தேய்த்தும் விடுவதாக இல்லை. எதாவது சாப்பிடலாம் என்றால் வீட்டில் எதுவும் இல்லை. தெருமுனைக் கடைக்குத்தான் போக வேண்டும். இந்த நிலையில அங்கு செல்வது சாத்தியமில்லை என்று தெரிந்ததால் தண்ணீர் குடித்துவிட்டு தைலம் தடவிக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கிப் போனான். எவ்வளவு நேரம் தூங்கினான் என்பது தெரியாது. ஆனால் விழித்த போது சற்று தலைவலி விட்டது போல் இருந்தது.

மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு எங்கோ தனித்தீவுக்குள் இருப்பது போல் இருந்தது. யாழினி வீட்டில் இருந்தால் அவள் அறையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவள் இல்லாத வீட்டில் மயான அமைதி... அவனை தனிமை கொல்ல, தொலைக்காட்சி பார்க்க முயன்றான். ஒன்றும் அவனுக்கு பிடிக்கவில்லை. சரி வெளிய போய் சாப்பாடு எதாவது வாங்கி வரலாம் என்று எழுந்தவன் லேசாக திறந்திருந்த யாழினியின் அறைக்கதவை பார்த்தவுடன் யாழினி உள்ளே இருப்பது போன்ற பிரமையால் மீண்டும் அந்த அறையை பார்த்தான். அவள் இல்லா வெறுமையை உணர்ந்தவன் அவதான் போயாச்சே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

பின் தன் அறை நோக்கி நகர்ந்தவனின் கால்கள் யாழினி அறை முன் நின்றன. திருமணமான புதிதில் அந்த அறைக்குள் வந்திருக்கிறான். அதற்குப் பின் பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்க்கையில் யாழினியின் உடமையான அந்த அறைக்குள் நுழையும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை. மெதுவாக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

கட்டிலின் மேல் சில பழைய துணிகள் மட்டுமே கிடந்தன. அவளின் மற்ற எல்லா பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டாள். யாழினியிடம் அவனுக்கு பிடித்த பழக்கம் இது தான். எப்பவும் எல்லாவற்றையும் சுத்தமாகவும், பொருட்களை நேர்த்தியாகவும் அடுக்கி வைத்திருப்பாள். நேற்றுவரை அவள் உபயோகித்த அறை இன்று வெறுமையாய் இருந்தாலும் சுத்தமாக வைத்துச் சென்றிருந்தாள்.

இதே ராகவனாக இருந்தால் இருக்கிற பேப்பரை எல்லாம் தரையெங்கும் பரப்பி போட்டுவிட்டுத்தான் போயிருப்பான். அவன் உபயோகிக்கும் அறையோடு இந்த அறையை ஒப்பிட்டுப் பார்க்ககூட அவனால் முடியவில்லை. பார்வையை சுழற்றியவன் கண்ணில் பட்டது அந்த நிலைக்கண்ணாடி. அதில் எதோ ஒட்டியிருந்தது. அருகில் சென்று பார்த்தான். அது அவன் போட்டோ...

திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை போட்டாவாய் கொடுத்தது. இருவருக்குள்ளான பிரச்சினையில் எவ்வளவோ இழந்திருந்தாலும் அவள் மனது அவனை இழக்கவில்லை என்பது அவனுக்கு விளங்கியது. இருந்தும் பிரச்சினைகளே பூதாகரமாய் இருந்ததால் விவாகரத்து வரைக்கும் அவளை வர வைத்து விட்டது. அதற்கு நானும் காரணம்தான் என்று நினைத்தவன், கண் கலங்க அவளின் படுக்கை மீது அமர்ந்தான்.

அதே நாளில் வேலைக்கு செல்ல குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்த யாழினியின் கண்கள் அவனைத் தேட, 'சே... இது அம்மா வீடுல்ல...' என்றபடி அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த கண்ணாடி வெறுமையாய் தெரிய தன் கைப்பையைத் திறந்து அதிலிருந்த ராகவன் போட்டாவை கண்ணாடியில் ஒட்டினாள்.

இதையும் பாருங்கள்:
இந்தக் கருத்தை வைத்து கதை எழுதும் போது என் அருமை நண்பர் இதயச்சாரல் தமிழ் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு வந்தது. அவரிடம் இது குறித்து பகிர்ந்த போது இதே கருவை மையமாகக் கொண்டு கவிதை எழுதுகிறேன் என்றார். "செந்தமிழ்க்கோன்" தமிழ் காதலன் தனது கவிதையை இன்று பகிர்ந்துள்ளார். அந்த அருமையான கவிதையை பார்த்து நண்பனைப் பாராட்ட இங்கே (நேச முடிச்சுக்கள்) செல்லுங்கள்.


எனது நண்பன் "இதயச்சாரல்" தமிழ்க்காதலன் குறித்து திரு. ராம்சாமி அவர்கள் தனது ஸ்டார்ட் மியூசிக்! என்ற தளத்தில் பகிர்ந்துள்ளார்... அப்படிக்கா ஒருக்கா பொயிட்டு வாங்க... அங்கே போக இந்த வழியா போங்க...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-3)


பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) படிக்க

************

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2) படிக்க


(அரங்கத்தில் வெள்ளமென பார்வையாளர்கள்...)

தங்களது அணிக்காக அழகான வாதங்களை முன்வைத்து மற்றவர்களின் வாதங்களை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த திருமதி. சித்ரா, திருமதி. பொற்செல்வி, திரு. செந்தில் வேலன் ஆகியவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி தனது வாதங்களை எடுத்து வைக்க வந்தார் திரு.சங்கர்.

திரு.சங்கர்: 'செந்தமிழே உன் பிறப்பை யார் அறிவார்' என்று தமிழ்த்தாயை வணங்கி வாதத்தைத் தொடங்கிய சங்கர் அவர்கள் எல்லாரும் பொண்டாட்டி புள்ளைங்ககூட வந்து பட்டிமன்றத்தை ரசிக்கும்போது செந்தில் மட்டும் மனைவியை துபாயிலேயே விட்டுவிட்டு வந்து திருமணத்துக்கு முன்னே பட்டாம் பூச்சி என்று பேசுகிறார் என ஆரம்பத்திலேயே செந்தில் வேலனை சிறு தாக்கு தாக்கி தன்னை தாக்கியவருக்கு நம் பாணியில் பின்னூட்டமிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்னே என்று என் கட்சிக்காரர்கள் வாதிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதை கண்டிக்கிறேன்... என்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்து நமக்கு அதைப் பிடித்து அதுக்கு நம்மளைப் பிடித்துப் போச்சின்னு வையுங்க அன்னைக்கே மகிழ்ச்சி ஆரம்பிச்சிரும். நீங்க போங்க நாங்க சொல்லி அனுப்புறோமுன்னு சொல்லி அவங்க சொல்லியனுப்புற வரைக்கும் மனசு படுற பாட்டை அனுபவிச்சிருப்பாரு போல... அவ்வளவு அழகா விளக்கினார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை திருமணமே சொர்க்கம்தானேங்க என்று சிலாகித்தார். அண்ணனுக்கு கல்யாணம் என்றால் தம்பிக்கு சந்தோஷம் ஏன்னா அண்ணிக்குதான் ரெண்டு தங்கைங்க இருக்காங்களேன்னு கொஞ்சம் 'ஜொள்'னார்.

மேலும் சொந்த வீட்ல நாம தெண்டச்சோறா இருந்திருப்போம். சாப்பிட்டியான்னு கேக்கக்கூட நாதியிருக்காது ஆனா திருமணத்துக்குப் பின்னாடி மாமியா வீட்ல பாத்துப் பாத்து கவனிக்கும் போது மச்சினன் பக்கத்துல இருந்துக்கிட்டு மச்சான் அடிக்கடி வாங்கன்னு சொல்றப்போ எனக்கே இன்னைக்குத்தான் கிடைக்குதுன்னு சொல்ல முடியாட்டியும் அதுல இருக்கிற சந்தோஷம் கல்யாணம் பண்ணாதவங்களுக்கு கிடைக்குமான்னு கேட்டார்.  நிறைய சொன்ன அவர்

"திருமணம் செய்து பார்!
வாரத்தில் ஒரு முறையாவது பல் துலக்கத் தொடங்குவாய்!
மாதத்தில் சில முறையாவது குளிக்கத் தொடங்குவாய்!" என்று கவிதையாய் ஆரம்பித்து கடைசியில்
"திருமணம் செய்து பார்!
உன் மனைவிக்கு நீதான் உலகமே!" என்று முடித்தார்.

(திருமணத்திற்குப் பின்பே என்று வாதிட்ட திரு.சங்கர்)

திரு.ஐ.லியோனி: சங்கர் கூறிய கருத்துக்களை தன் நகைச்சுவைப் பாணியில் பாடல்களுடன் விளக்கினார். அப்போது பயக வேலையில்லாம வீட்ல இருக்கும் போது படும்பாட்டை ஒரு கதையின் மூலமாக சொன்னார். வேலையில்லாமல் வீட்டில் இருந்த ஒருத்தன் எல்லாரும் குளித்ததற்குப் பிறகு ஒரு பத்து மணி வாக்குல குளிச்சிட்டு வந்தானாம். அப்போ அவனோட அப்பத்தா பாத்துட்டு என்னமோ வேலை பாக்குற மாதிரித்தான் சீக்கிரம் எந்திரிச்சிக் குளிச்சா என்ன என்று திட்டியதாம். அதனால் அடுத்த நாள் விடியக்காலையில எந்திரிச்சுக் குளிச்சானாம். அவன் அப்பா பாத்துட்டு எந்த ஆபீசுக்குப் போகப் போறாராம் மொத ஆளா குளிக்கிறாருன்னு கேட்டாராம். என்னடா சீக்கிரம் குளிச்சாலும் திட்டுறாங்க... லேட்டா குளிச்சாலும் திட்டுறாங்கன்னு அடுத்த நாள் குளிக்காம இருந்தானாம். வீட்டுப் பக்கம் வந்த அடுத்த வீட்டுப் பாட்டி , என்னமோ தம்பி இப்பத்தான் சமஞ்ச குமரியாட்டம் குத்த வச்சிக்கிட்டு இருக்குன்னு திட்டிட்டுப் போச்சாம் என்று நகைச்சுவையுடன் பேசி திரு. தனபால் அவர்களை திருமணத்திற்கு முன்பாக என்ற அணிக்கு பேச அழைத்தார்.

திரு. தனபால்: நடுவருக்கும் அவைக்கும் வணக்கம் சொல்லி தனது உரையை ஆரம்பித்த தனபால் அவர்கள் நடுவர் அவர்களே கொங்குத் தமிழுக்கு மாறினால்தான் எனக்கு பேச வரும் என்று கோவை பேச்சுக்கு மாறினார். சங்கர் என்னவோ சொல்லிட்டுப் போனார்.இப்ப இங்க என்ன நடந்துச்சு தெரியுங்களா..? நானும் அவரும் இன்னைக்குப் பூராம் சேந்தே இருக்கோம். ரெண்டு போனுதாங்க வந்துச்சு... ஆளே மாறிட்டாரு பாருங்க... வரும் போது கோட்டுப் போட்டுக்கிட்டு வந்தாரு... அப்ப அம்மாகிட்ட இருந்து போன், அம்மாகிட்ட இவரு இன்னைக்கு பட்டிமன்றத்துல பேசுறேம்மான்னு சொல்லவும். கோட்டுச் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டுப் போப்பான்னு சொல்ல, கோட்டுத்தான் போட்டிருக்கேன்னு சொன்னாரு. அப்புறம் தங்கச்சிக்கிட்ட இருந்து போன், இவரு கோட்டுப் போட்டு பட்டிமன்றத்துல பேசப்போறேன்னு சொல்ல, முதல்ல அதைக் கழட்டி வீசுங்கன்னு கோவமா சொல்ல அந்தாப் பாருங்க கழட்டி தொங்க வச்சிட்டு வந்திருக்காருன்னு சொன்னார்.

மேலும் நான் எங்கவூட்ல எம் புள்ளைக்கிட்ட சொல்லி அம்மாகிட்ட காபிதண்ணி வாங்கிட்டு வான்னு சொன்னேன். அவளும் போட்டுக் கொடுத்து விட்டா. குடிச்சா வாயில வைக்க முடியலை, இது யாரு குடிப்பான்னு உங்கம்மாகிட்ட கேளுன்னு சொல்ல, அதுவும் கேட்டுச்சு, அப்ப உள்ள இருந்து ஏழு வருசமா எந்த நாய் குடிக்குதோ அதுதான் குடிக்குமுன்னு சொல்றாங்க. என்னைய எப்பவும் ஒரு புருஷனா நினைக்கிறதே இல்லைங்க எப்பவும் நான் கண்ணாடிதான்.

அப்புறம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல பிரபலமான எதாவது வாங்கிட்டு வருவேன். மணப்பாறையில ஒரு பட்டிமன்றம் முடிச்சிட்டு வரும்போது முறுக்கு நல்லாயிருக்குமின்னு வாங்கிட்டு வந்து ராத்திரி வந்ததால கண்ணாடிய கழட்டி வச்சிட்டு முறுக்கு வாங்கி வந்திருக்கேன்னு சொல்ல அங்க வையி கண்ணாடின்னா வச்சிட்டு படுத்துட்டேன். கொஞ்ச நேரத்துல என்ன கண்ணாடி முறுக்கு வாங்காந்திருக்கே... கசக்குதுன்னா... நான் தூக்க கல்க்கத்துல நல்லமுறுக்குன்னுதான் வாங்கியாந்தேன்ன்னு சொல்ல, எந்திரிச்சுப் பாருன்னு சொல்ல, எந்திரிச்சு கண்ணாடிய எடுத்துப் போட்டுப் பார்த்தா வாங்கியாந்த முறுக்கு அப்படியே இருக்கு. பக்கத்துல இருந்த கொசுவர்த்தி சுருளை ஒடச்சி சாப்பிட்டுருக்கா நடுவரே என்றார்.

இப்படித்தான் பக்கத்து வீட்ல எதாவது ஒண்ணு வாங்கிட்டா அதைவிட பெரிசா வாங்கணும் எங்கவீட்டு அம்மணிக்கு... பக்கத்து வீட்ல பைக் வாங்கிட்டாங்கன்னு நச்சரிக்க, பல்சர் வண்டி வாங்கி வீதியில கூட்டிக்கிட்டுப் போனா அடுத்தவன் கார் வாங்கிட்டான்னு கார் வாங்கச் சொல்லி சண்டை, அப்புறம் காரும் வாங்கியாச்சு நடுவர் அவர்களே... ஒரு நா வெளிய பொயிட்டு வரும் போது அவங்க வீட்டு வாசல்ல நின்ன வண்டிய பாத்துட்டு கண்ணாடி இது மாதிரி நமக்கும் வாங்கணுமின்னு சொன்னா, எனக்கு தூக்கிப் போட்டுடிச்சு. அவ கேட்டது என்ன தெரியுமா? ரோடு வேலை பாத்துட்டி பொக்லைன் வண்டிய அடுத்த வீட்டு முன்னாடி நிப்பாட்டிட்டு போயிருக்காங்க...

இவர் இவ்வாறு பேசும் போது இடையில் புகுந்த லியோனி, இதைத் தாய்யா அன்னைக்கே கவிஞன் பாடி வச்சான். 'டுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா... அவ ஆத்துக்காரர் பண்ணுறதைக் கேட்டேளா'ன்னு பாட்டைப் பாடி கடைசியா அவன் அடிச்ச பின்னாலயும் அழுதுகிட்டே அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளான்னு பாடுவான்னு சொன்னார்.

தனது பேச்சைத் தொடர்ந்த தனபால், ஒரு நா இப்படித்தான் எங்கம்மாவுக்கும் வூட்டுக்காரிக்கும் சண்டை. நான் வந்தா ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கிட்டு நா எங்கயோ பேறேன்னு அம்மாவும் நா எங்கம்மா வூட்டுக்குப் போறேனும் பொண்டாட்டியும் கிளம்ப, சொல்லிப் பாத்து கேக்கலை அப்ப நான் சரி ரெண்டு பேரும் போங்க வேலைக்காரியிருக்கான்னு சொன்னேன் திரும்பி வந்துட்டாங்கன்னார். மேலும் நிறைய நகைச்சுவைகளை அள்ளி வீசினார். இவருடன் சேர்ந்து லியோனியும் கலக்க, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கடைசியாக நடுவர் அவர்களே எனக்கு எழரைச் சனியின்னா உங்களுக்கு ஜெம்மச்சனி என்று லியோனி மனைவியுடன் வந்திருப்பதை நகைச்சுவையுடன் சொல்ல, அரங்கம் மட்டுமல்ல பேச்சாளர்களும் கைதட்டி ரசித்தார்கள்.

முடிக்கும் போது மணப்பாறைக்கு முறுக்கு, தஞ்சாவூருக்கு பொம்மை, மதுரைக்கு குண்டு மல்லி, மானாமதுரைக்கு மல்லி, திருநெல்வேலிக்கு அல்வா, கும்பகோணத்து வெத்தலை என்று வரிசையாக அடுக்கி கடைசியில் பட்டிமன்றத்துக்கு லியோனி, அபுதாபிக்கு பாரதி நட்புக்காக என்று முடித்தார்.

ஆரம்பம் முதல் கடைசி வரை கொங்குத் தமிழில் நகைச்சுவையை அள்ளி வழங்கினார் திரு.தனபால். அவர் மனைவி மட்டும் கேட்டிருந்தால் அய்யாவுக்கு ஆப்புத்தான். கரண்டி வாராது என்ற நம்பிக்கையில்... கடல் கடந்து வந்த சந்தோஷத்தில் பேசினாரோ என்னவோ...

திரு.லியோனி: அப்பு இப்படி அடுக்குமொழி பேசி பெரிய ஆளா ஆயிரலாமுன்னு நினைக்கிறாரு போல... அடுக்கு மொழி பேசினவங்க எல்லாம் இப்ப இருக்க எடம் தெரியலை என்றார். இவருக்கு ஏழரைச் சனியாம் நான் என் மனைவியுடன் வந்திருப்பதால் ஜென்மச்சனியாம் என்று அவரது பேச்சை விளக்கி, நான் நல்லாயிருக்கனானு கேக்கப்படாது... எனக்குத்தானே தெரியும் என்று முடித்தார்.

திரு.தனபால் அவர்களைத் தொடர்ந்து பேச வந்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் பேச்சு மற்றும் திரு.லியோனி அவர்கள் உரையும் நிறைவுப் பகுதியில்...

தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-2)பட்டிமன்றத் தலைப்பு : "மகிழச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே" (விழா மேடையில் திரு.லியோனி)

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு தொகுதி-1) வாசிக்காதவர்கள்  இங்கே கிளிக்கவும்.

திரு.லியோனியின் முன்னுரையுடன் தொடங்கிய பட்டிமன்றத்தில் பேச்சாளர்களின் பேச்சு தொடங்கியது.

திருமதி. சித்ரா: பள்ளிக் காலம், கல்லூரிக்காலம் என நட்பின் அடையாளங்களை தனது பேச்சில் வழங்கினார். ஒரு அப்பாவும் பொண்ணும் திருவிழாவுக்கு செல்லும்போது கூட்டத்தில் வழி தவறாமல் இருக்க என் கையை பிடித்துக்கொள்ளம்மா என்று அப்பா சொன்னாராம். அதற்கு அந்தப் பெண் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் அப்பா என்றது சொன்னதாம். அது ஏன் அப்படி சொல்கிறது என்று குழம்பிய அப்பாவிடம் நான் கூட்டத்தில் உங்கள் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையை பிடித்தபிடியை விடமாட்டீர்கள் என்பதால்தான் என்று அந்தப் பெண் தன் அப்பாவிடம் சொன்னாளாம்.

திருமணத்திற்கு முன் அண்ணன், தம்பி, அக்கா தங்கை என்று சந்தோஷித்த அந்த நாட்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின் கிடைக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கையை செடியுடன் ஒப்பிட்டுச் சொன்னார். லியோனி அவர்களைப் பார்த்து நீங்களும் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கிறீர்கள் எனவே மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பே என்று தீர்ப்பு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று முடித்தார்.

திரு. லியோனி : திருமதி. சித்ரா அவர்கள் அருமையாக தங்கள் பக்க கருத்துக்களைச் சொல்லி அமர்ந்திருக்கிறார்கள். இப்படித்தான் ஒரு அக்கா, தன் பையனைப் படிக்க வைக்க பணம் பொரட்டி பத்தாயிரம் பத்தாமல் போகவே தம்பியிடம் வந்து தம்பி ஒரு பத்தாயிரம் கொடுடா, மூணு மாசத்துல திருப்பித் தந்துடுறேன் என்று கேட்க, எங்க வீட்டு நிதியமைச்சர் கிச்சன்ல இருக்காக்கா, என்று சொல்லி இரு அவகிட்ட கேக்கிறேன்ன்னு சொல்லி என்னடி எங்கக்கா பத்தாயிரம் கேக்குது கொடுக்கவான்னு கேக்க, இந்தப் பொம்பளங்க அதுக்குன்னு ஒரு பேச்சு வச்சிருப்பாங்க, கொடுங்ங்ங்கககன்னு சொல்ல கொடுக்கிறதா இல்லையாங்கிற குழப்பத்தோட கொடுக்கத்தான் சொல்றா நாளைக்கு வாக்கா என்று சொல்லி அனுப்ப, கொடுங்க கொடுங்க இப்படி அள்ளிக் கொடுத்துப்புட்டு எங்களை தெருவுல விடுங்கன்னு கத்திக்கிட்டு, தூங்குன பையனை தட்டி எழுப்பி நாம பிச்சைதான்டா எடுக்கனுமின்னு சொல்ல இதுக்குத்தான் இந்த ஆளை கட்டிக்காதேன்னு சொன்னேன்னு சொன்னானாம் என்று சில நகைச்சுவைகளுடன் விளக்கங்கள் கொடுத்தார்.

('நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி' - நடன மயில்)

தன் பெயரை தவறாக சொல்கிறார் என்பதால் சித்ரா அவர்கள் பேசும்போதே பொற்செல்வி கண்ணன் என்ற தன் பெயரை லியோனி அவர்களிடம் எழுதிக் கொடுத்துவிட இந்தமுறை லியோனி திருமதி பொற்செல்வி கண்ணன் என்று சரியாக அழைத்தார்.

திருமதி பொற்செல்வி: திருமதிற்குப் பின்புதான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அடித்துச் சொன்னதுடன் குடும்ப சகிதமாக வந்து பட்டி மன்றத்தை ரசிப்பவர்கள் மத்தியில் ஒருத்தர் மட்டும் தனியாக உக்காந்து பாவமா பாத்துக்கிட்டிருக்கிறார் என்று சித்ராவின் கணவரை காண்பித்து கைதட்டல் பெற்றார்.

உறவுகள் நட்புக்கள் என எல்லாம் இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாத இருவர் வாழ்க்கையில் இணைந்து தங்கள் சுக, துக்கங்களைப் பகிர்ந்து வாழும் திருமண வாழ்க்கையின் மகோத்துவத்தை தன் வாதத்தில் வைத்தார். கணவனோ மனைவியோ அணுசரனையாய் இருப்பது போல் நட்போ உறவோ இருப்பதில்லை என்றும், தாய்மையின் சந்தோஷங்களும் தங்கள் வாரிசின் வரவின் மகிழ்ச்சியும் அளிக்கும் சந்தோஷத்தை திருமணமில்லாத வாழ்க்கை கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். தாய்மையின் தனித்துவம் குறித்து நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் சிலாகித்தார்.. கணவன் மனைவி உறவு குறித்துப் பேசியதுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கவிதையும் சொன்னார்.

திரு. லியோனி: பொற்செல்வி அவர்களின் பேச்சை அலசிய லியோனி அவர்கள், நம் திருமண வாழ்க்கை குறுத்த கருத்துக்களை சொன்னபோது, ஒரு கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடந்ததாகவும், அதை பார்த்த வெள்ளைக்காரன் வாட் இஸ் திஸ் என்று ஒருவரிடம் கேட்க, இது அறுபதாம் கல்யாணம் என்று அதற்கான விளக்கம் கொடுக்க, என்னடா இவங்க ஒரே பொம்பளைகூட அறுபது வருடம் குடும்பம் நடத்துறாங்கன்னு சொன்னானாம் என்றார்.


('போக்கிரிப் பொங்கல்' - அரும்புகள்)

திருமதி.சித்ரா பேசும் போதும், லியோனி பேசும் போதும் விடியோ எடுப்பவர் அவர்களை  முழுவதும் கவரேஜ்க்குள் கொண்டு வந்தார். அதனால் மேடைக்கு இடப்புறம் வைத்திருந்த ஸ்கீரினில் பார்க்க முடிந்தது. ஏனோ தெரியவில்லை திருமதி.பொற்செல்வி பேசும்போது சித்ரா அவர்களையும் மற்றவர்களையும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை கேமராவைத் திருப்பவில்லை. இதனால் எங்கள் பக்கம் இருந்த நண்பர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். எதனால் அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.

 திரு.செந்தில் வேலன்: வெகு வேகமாக சொல்லப் போனால் ரஜினி ஸ்டைலில் நடந்து வந்த செந்தில் சற்று சாய்வாக நின்றபடி அவர் உயரத்துக்கு தகுந்தாற்போல் மைக்கை சரி பண்ண முயன்று திணறி தோற்றார். மற்றொரு நண்பர் வந்து சரி பண்ணிக் கொடுத்தார். இதுவே அவருக்குப் பின் பேச வந்த மதுக்கூராருக்கு அவலானது. சாய்வாக நின்றவண்ணம் முழுமை பெற்றதற்கும் பெறாததுக்கும் நடுவரிடம் விளக்கம் கேட்டார். அவர் நீங்க முதல்ல நல்லா நில்லுங்க என்றும் நீங்க முழுமை பெற்று விட்டீர்களா என்றும் திருப்பிக் கேட்க, கடைசியில் சொல்வதாக சொன்னார்.

திருமணங்களுக்குப் பின்னர் அநாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் பெருகுவதாகவும் பேசினார். நட்பு குறித்து சித்ரா அவர்கள் பேசியதை நினைவு கூர்ந்த வேலன், முஸ்தபா... முஸ்தபா... பாடலைப்பாடி நட்பின் ஆழத்தை விளக்கினார். அப்போது லியோனி அந்தப்பாடலின் மூழ்காத ஷிப்பே பிரண்ட் ஷிப்தான் என்ற வரிகளைப்பாடி சிலாகித்தார். தாய்மை குறித்துப் பேசிய பொற்செல்வி அவர்களின் கூற்றை மறுத்து தாய்மை சிதைக்கப்படுவதாக ஆதாரங்களுடன் பேசினார். சிறைக்கு சென்று சுவீட் கொடுத்தது போன்ற விசயங்களைப் பேசும்போது திரு. சங்கர் அவர்களை வம்புக்கு இழுத்தார்.

மேலும் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை பட்டுப்பூச்சி வாழ்க்கை என்றும் முன்னான வாழ்க்கை பட்டாம் பூச்சி வாழ்க்கை என்றும் சொல்லி பட்டுப்பூச்சி பாருங்க ஒரு இடத்துல இருந்து அதோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு பட்டு நூலை கொடுத்துட்டுப் போகுது. ஆனா பட்டாம்பூச்சி அப்படியே பறந்து பல இடத்துக்கும் போய் சந்தோஷமா இருந்துட்டுப் போகுது என்று முடித்தார். ஆனால் கடைசி வரை முழுமை பெற்றதற்கும் பெறாததற்கும் அவர் விளக்கம் கொடுக்கவில்லை.


(திரு & திருமதி. லியோனியுடன் 'பாரதி நட்புக்காக' . திரு ராமகிருஷ்ணன், அவருக்குப் பின்னே திரு. சுபஹான் (வெள்ளைச்சட்டை))

திரு.லியோனி: செந்தில் வேலன் அவர்களின் வாதத்தில் அவர் பட்டுப்பூச்சி, பட்டாம்பூச்சி என சொன்ன கருத்தை ரசித்துப் பேசினார். மேலும் ஒரு கல் ஒரே இடத்தில் கிடக்கும் என்றும் ஆனால் சிறு இறகு காற்றில் பறந்து எல்லா இடங்களும்... ஏன் உலகையே சுற்றி வர அதனால முடியும். திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை இறகு போல்... பின்னான வாழ்க்கை கல் போல்... என்று சொல்லி வாங்க சங்கர், என்ன பதில் வச்சிருக்காருன்னு பாப்போம் என்றழைக்கவும் திரு.சங்கர் அவர்கள் தனது தரப்பு வாதத்தை தொடர வந்தார்.

சிறு விளக்கம்:

பட்டிமன்ற பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி மேடையேற்றிய பாரதி நட்புக்காக நண்பர் திரு. முனீஸ்வரன் அவர்கள் பெயர் சென்ற பதிவில் விடுபட்டு விட்டது. பதிவைப் பார்த்த திரு,முனீஸ்வரன் அவர்கள் சகோதரர் சுபஹான் அவர்களுக்கு அனுப்பிய மெயில் இது...

//அது எப்படி சார் ?????


உங்கள் நண்பர் குமாருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சசிகலா ஞாபகமிருக்கு

என் பெயர் ஞாபகமில்லாமல் போச்சு.

என் பெயர் தமிழ்ப் பெயர் இல்லையோ??


நன்றி
Muneesh //

என்ன செய்யிறது நம்ம வலைப்பூவோட பேரே 'மனசு' - மனசுக்கு என்ன பிடிக்குமுன்னு எல்லாருக்கும் தெரியுமில்ல... அதனால கூட மறந்திருக்கலாம். முனீஸ்வரன் சாரையும் பாருங்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடினது ரெண்டு பேரு... ஆனா அவரு சொன்னது.... சரி விடுங்க... அவருக்கும் 'மனசு' இருக்குல்ல... சார்... உங்கள் பெயர் விடுபட்டதை சரிக்கட்ட மூன்று முறை சொல்லியாச்சு. (சகோதரர் சுபஹான் மன்னித்தருள்வாராக - அனுமதி பெறாத மின்னஞ்சல் பதிவுக்காக)

தொடரும்...

-'பரிவை' சே.குமார்.

** நட்புக்காக போட்டோ உதவிய திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.

புதன், 26 ஜனவரி, 2011

குடியரசுத் தாயே...!


பதவிக்கான மரியாதையோ
பதவிக்கு மரியாதையோ
இல்லா குடியரசுத் தலைவர்..!

இத்தாலியின் கூண்டுக்குள்
இந்தியாவை ஆளும்
பொம்மைப் பிரதமர்..!

பாராட்டு விழாக்களிலும்
பசங்களின் வளர்ச்சியிலும்
தீராத தாகம் கொண்டு
சீர்மேவ ஆட்சி செய்யும்
முத்தான முதல்வர்..!


மக்களுக்கு பிரியாணி
கொடுத்து வாங்கிய பதவியில்
ஊழலை இருத்தி
உள்ளுக்குள் கொழிக்கும்
உத்தம அமைச்சர்கள்..!

தொகுதி என்பதை
தேர்தல் நேரத்து
தேனீர்க்கடையாக்கி
பதவிக்காக காலில்
விழும் எம்.எல்.ஏக்கள்..!

மாவட்டம்...
வட்டம்...
மேயர்...
நகரசபைத் தலைவர்...
பஞ்சாயத்து...
வார்டு...என வட்டமாய்...
வாகாய் அமர்ந்து...
வளம் கொழிக்ககும்
அரசியல் வியாதிகள்...

தேர்தல் நேரத்தில்
கடவுளாய்...
பிரதமராய்...
முதல்வராய்...
மந்திரியாய்...
எம்.எல்.ஏ.வாய்...
கௌரவ வேடம் ஏற்கும்
குடிமக்களாகிய நாங்கள்...

மறுதேர்தல் வரை
மதிகெட்டு 'குடி'யிழந்து நிற்க...
அமோகமாய் வாழ்கிறது அரசு.


வெறுப்புக்களின் நெருப்பில்
வெந்து தணிந்தாலும்
என்றும் குறைந்ததில்லை
உன் மீதான எங்கள் மோகம்..!

எங்கள் அன்னையே...
வெள்ளையனை விரட்டி
கொள்ளையனின் கைகளில்
கொள்கை இழந்து நீ...

கொள்ளையனை வேறறுப்போம்...
கொள்கைகளை மீட்டெடுப்போமென
இந்நாளில் சூளுரைத்து...
தேர்தல் நேரத்து இலவசங்களில்
சூளுரைகளை துகிலுரிக்கும்
குடிமக்கள் நாங்கள்.

****************

நம் நாட்டின் குடியரசு தின வாழ்த்துக்கள்...!

-'பரிவை' சே.குமார்.


போட்டோ உதவிய கூகிளுக்கு நன்றி

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஆடுகளம்... அனல் பறக்கும் சேவக்கட்டுபொங்கல் படங்களில் காவலன், சிறுத்தை, ஆடுகளத்துக்கான சேவக்கட்டில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது தனுஷின் ஆடுகளம் என்பதே உண்மை. மேலும் விஜய் படத்துடன் வெளிவந்த தனுஷின் எல்லாப் படங்களுமே வெற்றிப்படங்கள் என்ற வரிசையில் ஆடுகளமும் சேர்ந்துள்ளது.

மதுரையை கதைக்களமாகக் கொண்டு தனி முத்திரை பதித்த பருத்திவீரனைத் தொடர்ந்து நிறையப் படங்கள் மதுரையை திரைக்களமாக கொண்டு வெளிவந்தன. பெரும்பாலான படங்கள் மதுரை என்றால் அடிதடி என்பது போல் வெட்டுக்குத்து கதைகளை மையமாகக் கொண்டு வந்தன... இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதே தோரணையில் வராமல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மக்களின் பேச்சு வழக்கை கையாண்டிருப்பது ஆறுதலான விசயம்.

சேவல் கட்டை கதையின் கருவாக எடுத்து அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். சேவல் கட்டு குறித்த சிறு விளக்கம் படத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்படுவது சுவராஸ்யத்தைக் கூட்டுகிறது.


கருப்பாக வாழ்ந்திருக்கும் தனுஷ், தனக்கென்று வைத்திருந்த கெட்டப்புக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறார். இதற்கு முன் புதுக்கோட்டையிலிருந்து சரவணனில் சற்று மாறுபட்டு நடித்திருப்பார். அதேபோல் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலத்தில் வித்தியாசப்பட்டிருப்பார்.

ஆடுகளத்தில் ஒட்ட வெட்டிய தலை, லேசான தாடி, கைலிக்கட்டு என நம்ம ஊரில் நாம் சுற்றும் சாதாரண கெட்டப்பில் கதை நாயகன் கருப்பாகத்தான் தெரிகிறார் கதாநாயகன் தனுஷ்.

பேட்டைக்காரராக நடித்திருக்கும் ஜெயபால்... அந்த முரட்டு மீசைக்கு மத்தியில் சாமானிய முகத்தில் திராவகம் வைத்து நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் ராதாரவி ஏற்ற இறக்கங்களுடன் பேசி திரைக்குப் பின்னாலிருந்து பேட்டைக்காரரை பெஸ்ட்காரராக்கியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அழுக்கு வேஷ்டிக் கட்டும் சட்டையில்லா கருத்த உடம்புமாக நம்ம ஊரில் நாம் தினமும் பார்க்கும் மனிதராகத் தெரிகிறார்.

பார் நடத்திக்கொண்டு பேட்டைக்காரருடன் இருக்கும் துரையாக நடித்திருக்கும் கிஷோர், தனுஷூக்காக பேசுவதாகட்டும் பின்னர் அவருடன் மோதுவதாகட்டும் குறைவில்லாமல் செய்திருக்கிறார். இவருக்கு குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இவரும் குரலால் நடித்திருக்கிறார். அப்படி ஒரு அழகான குரல்வளம்.

நாயகியாக நடித்திருக்கும் தப்ஸி பன்னு நடிப்பில் பின்னவில்லை என்றாலும் அவருக்கான பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். இவருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பில்லை. வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களான்னு நம்மளையும் கேக்க வைக்கும் அழகு. ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருவதாலோ என்னவோ அவரது முக பாவனைகளில் அதிகம் கவனம் செலுத்த இயக்குநர் தவறிவிட்டார் என்றே தெரிகிறது.

பேட்டைகாரரிடம் சேவல் சண்டையில் வெற்றிக்கனியை பறிக்க முயற்சித்து அதற்காக சித்து வேலைகள் செய்யும் காவல்துறை அதிகாரி ரத்தினசாமி, எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் தனுஷின் அம்மா, பேட்டைக்காரரின் இளம் மனைவி, படம் முழுவதும் வரும் நண்பன் என எல்லா கதாபாத்திரங்களும் தங்களுக்கான வாய்ப்பை மிகவும் அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சேவல் சண்டையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள்தான் இருந்தும் அது தெரியாத வண்ணம் படமாக்கியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. அதேபோல் பாடல்களில் முத்திரை பதித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 'யாத்தே... யாத்தே...', 'என் வானவில்லே...' , 'அய்யோ...' பாடல்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இயக்குநர் வெற்றி மாறன் தனது ரெண்டாவது படத்திலும் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார். அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படத்தில் பிரகாசிக்கும் காட்சிகளில் தெரிகிறது.

தப்ஸி லோக்கல் ரவுடியிடம் இருந்து தப்பிக்க தனுஷை காதலிப்பதாக சொல்லும் போது தனுஷ் காட்டும் முகபாவங்கள் அவருக்கு மட்டுமே உரித்தான நடிப்பு, அதன் பின்னான பாடல் அப்ளாஸ். காதலிக்கவில்லை என்று சொன்ன நாயகியிடம் பணம் பெற்றுக் கொண்டு காதலிச்சேன்னு சொன்னதுக்கு பைன் என்று சொல்லும் காட்சியும் அருமை.

சேவல் கட்டில் பேட்டைக்காரரை எதிர்த்து 'எஞ்சேவ ஜெயிக்குமுண்ணே' என்கிற போதும் கிளைமாக்ஸில் 'இவ்வளவு தூரம் வருமுன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே அறுத்துப் போட்டிருப்பேண்ணே' என்கிறபோதும் தனுஷ் ஜொலிக்கிறார்.

சேவல் கட்டில் சேவல் தோல்வியின் விளிம்பில் இருக்கும் போது ஏண்ணே நம்ம சேவல் தோத்துருமோன்னு அழகும் அந்த சிறுவன், தம்பி இன்னும் கொஞ்ச நேரந்தாண்டா... என்று பதட்டத்துடன் சேவலுடன் பேசும் தனுஷ் என ஆளாளுக்கு சேவச்சண்டையின் வீரியத்தை அதிகரித்திருக்கிறார்கள்.

இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிறைகளை மட்டுமே பார்ப்பது என்பது தவறு என்பதால் குறைகளையும் சொல்ல வேண்டும் அல்லவா?

சேவல்கட்டை மையமாக வைத்து சச்சின், சேவாக்கின் அதிரடிபோல் சென்று கொண்டிருக்கும் ஆடுகளம் போட்டி பொறாமை என்று திரும்பும் போது களத்தில் லெட்சுமணனும் திராவிட்டும் நிற்பதுபோல் ஆகிவிடுகிறது.

நாயகி ஆங்கிலோ இந்தியன் என்பதால் நாயகனிடம் தமிழும் இங்கிலீஸூம் கலந்து பேசுவது படத்துடன் ஒட்டாதது போல் தெரிகிறது.

எப்படித்தான் சேவக்கட்டு என்றாலும் ஜெயித்துட்டு வாடா என்று ஒரு கிழவி உயிரைப் பிடித்துக் கொண்டு இருப்பதுபோல் காட்டுவதெல்லாம் சினிமாவுக்கான மிகைப்படுத்துதலே.

தனுஷ், தப்ஸி காதல் படத்துடன் ஒட்டவே மறுக்கிறது. ஆங்கிலோ இந்தியப் பெண், படிக்கும் பெண் சாதாரண பொறுக்கி கதாபாத்திரத்தை விரும்புவதை நம்ப மறுக்கும் நமக்கு அதற்கான ஆழமான காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டார் இயக்குநர்.

பேட்டைக்காரரின் மனைவி மீனா கோவித்துக் கொண்டு செல்லும் போது ஏன் கிழவரின் குள்ள நரித்தனத்தை தனுஷிடன் சொல்லாமல் எங்கோ சென்றுவிடுகிறார். அந்த இடத்தில் இயக்குநர் கோட்டை விட்டதேன்?

சேவல்கள் போல் சண்டை போடும் தனுஷூம் கிஷோரும் கட்டிப் புரளும் போது தனுஷிடம் என்ன கொல்ல கத்தியோடவா வாரேன்னு கேக்கும்போது பிளாஸ்பேக்குக்கு போகும் தனுஷ் ஏன் உண்மையை சொல்லவில்லை...

இப்படி இன்னும் அடுக்கலாம்... இருந்தும் கதைக்களமும் படத்தின் முடிவும் இவற்றை மறக்கச் செய்துவிடுகின்றன என்பதே உண்மை.

மொத்தத்தில் ஆடுகளத்தில் புழுதி பறக்கிறது.

ஆடுகளம் - உள்ளூர்க்கோப்பையல்ல... உலகக்கோப்பை.

-'பரிவை' சே.குமார்.
 
Photos from Google - Thanks Google

திங்கள், 24 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு பகுதி-1)வார விடுமுறையான வெள்ளிக்கிழமை அபுதாபியில் ஒரு மழை நாள் என்று சொல்லும்படியாக காலை முதல் வானம் அவ்வப்போது விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது. என் மரியாதைக்குரிய சுபஹான் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் மிக முக்கியமான நண்பரைக் காண வருமாறு வியாழன் அன்று இரவே அழைத்திருந்தார். போகமுடியாத காரணத்தால் காலையில் போக நினைத்திருந்தேன். ஆனால் மழையும் மதிய உணவு சமைக்க வேண்டிய கட்டாயமும் என்னைச் சுற்றிக்கொண்டதால் போக முடியவில்லை.

மாலை நடக்கும் விழாவில் அவரைச் சந்தித்து நிலமையை விளக்கி கொள்ளலாம் என்று நினைத்து மதியம் சாப்பாட்டுக்குப் பின் சிறிது தூக்கம், பின் ஊருக்கு போன், நண்பர் தமிழ்க்காதலனுடன் சாட்டிங் என்று கழித்து மாலை விழாவுக்கு செல்ல நினைக்கையில் நல்ல மழை பெய்கிறது எப்படிச் செல்வது என்ற யோசனை வேறு... இருந்தும் மழையோடு எங்கள் அருள் அண்ணன் காரில் கிளம்பினோம். மாலை நேர மழையில் அபுதாபி இன்னும் அழகாகத் தெரிந்தது. மழையோடு விழா மேடையை அடைந்தோம். யாருடனோ பேசியபடி எதிர்ப்பட்ட சுபஹான் அவர்கள் கை கொடுத்து விலகிச் செல்ல, சரி அவர் கூப்பிட்டதுக்கு மதிப்பளிக்கவில்லை என்று நினைத்து கோபமாக இருக்கிறார் போலும் என்று நினைத்தபடி நாளை அண்ணனை சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். எதோ விழா என்கிறான் என்னவென்று சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்கள்தானே வாங்க விழாவுக்கு சேர்ந்தே போவோம்.

சில வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையை பொன்மாலைப் பொழுதாக மாற்றிய பாரதி நட்புக்காக அமைப்பினர் இந்த மழைநாளை சிரிப்பு மாலையாக ஆக்கியிருந்தார்கள். ஆம்... திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தலைமையில் ஒரு அழகான பட்டிமன்றத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தி அசத்தினார்கள்.

பட்டி மன்றத்தின் தலைப்பு "மகிழ்ச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே".

"முன்பே" என்ற அணியில் திருமதி. சித்ரா, திரு.செந்தில் வேலன், கோவையிலிருந்து வந்திருந்த ஆசிரியர். தனபால் ஆகியோர் பேசினார்கள். "பின்பே" என்ற அணியில் திருமதி. பொற்செல்வி, திரு. சங்கர், பத்திரிக்கையாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.

மழை நேரம் என்றாலும் விழா அரங்கத்தில் நம் தமிழர் வெள்ளம் நிரம்பி இருந்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. திருமதி. சசிகலா, திருமதி. சங்கீதா கடவுள் வாழ்த்துப் பாட, அவர்களைத் தொடர்ந்து பேச வந்த முருகப்பன் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் பெருமைகளைச் சொல்லி அவர்கள் இணையதளத்தில் நிறைய பேர் உறுப்பினர்களாகி இருப்பதாக சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

அதற்குப் பின் திருமதி. மீரா நாயர் அவர்களின் நடனக் குழுவினரின் நடனம் நடத்தப்பட்டது.

முதலில் நம்கவி பாரதியின் 'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...' பாடலுக்கான நடனத்தில் ஆடிய அந்தப் பெண் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அதன் பின் அந்தக்காலப் பொங்கலுக்கான பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்...' பாடலுக்கு ஆடியவர்கள் கலக்கினார்கள் என்றால் அதன்பின் இந்தக்கால பொங்கலுக்கான பாடலாக போக்கிரிப் பொங்கல் ஆடிய அனைத்தும் குட்டீஸ், அதில் விஜயாக வந்தவர் போன விழாவில் பரதம் ஆடியவர் என்று நினைக்கிறேன்.

பாவம் குழந்தைகள் மேடையேற்றிய பின்னர் கையை நீட்டியபடி நிற்க பாடல் போடுவதில் பிரச்சினை, பிரச்சினையை மறைக்க ஒருவர் புதுப் பொங்கலை அவ்வளவு சீக்கிரமா அனுபவிக்க விட்டுடுவோமா என்று சமயோகிதமாக திரைமறைவில் இருந்து பேசினாலும் குழந்தைகள் கை வலித்து கையை தொங்கப் போட்டபோது நம் மனது வலிக்கத்தான் செய்தது. பின்னர் பாடலுக்கான ஆட்டத்துக்கு கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்தாலும் விஜய்க்கு இன்னும் மாஸ் குறையவில்லை. அரசியலுக்கு போக வேண்டாம் விஜய்... பிளாப் கொடுத்தாலும் உன்னைக் கண்டால் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்.

அதன்பின் இந்த விழாவுக்கு உதவி புரிந்த தொழிலதிபர் திரு. லெட்சுமணன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். ஒரு தமிழன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வெற்றிகரமாக அரசுடன் இணைந்து நடத்துகிறார் என்கிறபோது நமக்கெல்லாம் சந்தோஷமே. அவர் சில நொடிகள் மேடையில் பேசினார் அதுவும் அழகு தமிழில்... ஆங்கிலமே பேசி பழகும் அவரால் சரவெடியாக வெடிக்க முடியாவிட்டாலும் அவர் பேசிய தமிழில் சந்தோஷம் கொண்டிருப்பாள் நம் தமிழ்த்தாய்.

பின்னர் பட்டிமன்றம் தொடங்கியது. பேச்சாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட இறுதியில் நடுவர் லியோனி குறித்து சிறு விளக்கம் சொன்னதுடன் இன்னும் அதிக விவரம் தேவைப்பட்டால் 'www.dindugal.com' -ல் போய் தெரிந்து கொள்ளுங்கள் என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

அழைப்பைத் தொடந்து பார்வையாளர்கள் வரிசையில் இருந்த லியோனி அவர்கள் மேடையேறினார். மேடையில் வைத்திருந்த பேனரில் சிவப்புச் சட்டை போட்டிருந்தார். நேரிலும் அதே சிவப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். எதேச்சையாக நடந்ததா இல்லை அந்தக் கலர் அவருக்கு ராசியா என்பது தெரியவில்லை. மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். அவருக்கு பூச்செண்டு மற்றும் சால்வை மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.

லியோனி தன் பேச்சை 'மனதில் உறுதி வேண்டும்...' என்ற பாரதி பாடலுடன் ஆரம்பித்தார். நானும் உலகெங்கும் பட்டிமன்றத்துக்கு சென்றிருக்கிறேன், எல்லா இடத்திலும் தமிழ் அமைப்பு, தமிழ் சங்கம் என்ற பெயர்களில்தான் இருக்கும், இங்கு பாரதி நட்புக்காக என்று வைத்திருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார். மழை பெய்யுது கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்திருக்கும் நம் தமிழர்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

அவர் பேச்சில் சிரிப்புக்கள் சரவெடியாக வந்து கொண்டிருந்தன. என்னைய கூட்டியாந்து வச்சி எப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க பாருங்க... முன்னேன்னு சொன்னா கல்யாணமானவங்களும் பின்னேன்னு சொன்னா ஆகாதவங்களும் சண்டைக்கு வருவாங்க... சிக்கல்தான் என்றவர், இளமைப் பருவத்தைப் பற்றி சிலாகித்தார்.

அவர் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருபாலர் பள்ளியில் படித்தாராம். அதன் பின் கல்லூரி முடிக்கும் வரை பசங்க மட்டுதான்... நிறைய மிஸ் பண்ணியிருப்பார் போல மேடையில் சோகத்துடன் சொன்னார். அந்த அஞ்சாவதுக்குள்ள அவரு பெரிய ஆளா இருந்திருக்கிறார். அவரோட ஒரு பொண்ணு திக் பிரண்டாம். அந்தப்புள்ளை (இப்ப திருமதியா இருப்பாங்க) கையில அஞ்சு காசு வச்சிருந்தா டேய் லியோனி வாடான்னு சொல்லி பள்ளைக்கூட வாசல்ல இருக்க கடையில நெல்லிக்காய் வாங்குமாம். சரி கொடு நான் கடிச்சித்தாரேன்னு லியோனி கேட்டா ம்... ஓ எச்சிய நாந்திங்கணுமாக்கும் , சரி நீ கடிச்சிக்கொடுன்னா எ... எச்சிய திங்கணுமுன்னு உனக்கு அம்புட்டு ஆசையாக்கும்ன்னு கேட்டுட்டு இரு வாரேன்னு சொல்லிட்டு பாவடையில வச்சி கடிச்சுக் கொடுக்குமாம். அந்தப் பாடவை தொவச்சி ஒரு மாதம் இருக்குமாம். இருந்து அந்த சுவை இன்னும் இனிக்கிறதாம். எல்லா மேடையிலும் அந்தப்புள்ளையப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்காராம். எத்தனை புள்ளை பெத்து எங்கிட்ட கஷ்டப்படுதோ அதை எப்படியாவது பாக்கணுமின்னு நினைவுகளில் நீந்தினார்.

அப்புறம் 14,15 வயசுதான் கவனிச்சுப் பாக்க வேண்டிய என்றவர், அப்பதான் பயலுகளுக்கு குரல் மாறும் அதுவரைக்கும் அப்பா சரிப்பான்னு கீச்சுக்குரல்ல பேசுவாங்களாம். அப்புறம் பாத்தா 'என்னன்னு...' கரகர கொரல்ல பேச ஆரம்பிச்சிட்டா அப்பங்காரன் சரியின்னு ஒதுங்கிறனுமாம். மேலும் டாய்லெட் குறித்து பேசும்போது ஒருமுறை மாமா ஒருவருடன் வெளிநாட்டுக்கு பேச சென்றிருந்தேன். அங்கு தங்கியிருந்த வீட்டில் டாய்லெட்டுக்கு போனார், போனவர் சிறிது நேரத்தில் கதவை தட்டினார். என்ன மாமா என்று கேட்க, தண்ணியில்ல மாப்ளே என்றார். பேப்பர் இருக்கும் பாருங்கன்னு சொல்ல, சரியா தொடக்க முடியலைன்னாராம். நல்லா தொடச்சுக்கங்கன்னு சொன்னதும் வச்சிருந்த பேப்பரையெல்லாம் காலி பண்ண வீட்டுக்காரன் தண்ணியும் வாளியும் கொண்டு வந்து வைத்தானாம்.

அதே நம்ம ஊரில் நடந்த கதை ஒன்று சொன்னார், வெளிநாட்டில் இருந்து மகங்களுடன் வந்த ஒருவனிடன் மகன் அப்பா டாய்லெட் போகணும் என்றதும் நம்ம டைப் டாய்லெட்டில் கொண்டு போய்விட, இதில் எப்படி என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க, அப்பா சொன்னாராம் ' put your left leg left side, right leg right side sit middle..........' அப்படின்னு சொல்லிக்காட்டினானாம். பையனும் போனானாம் பேண்டைக் கழட்டாமல்.... அப்புறம் எப்படி அலசினார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறினார். அவரது நகைச்சுவைகளில் முகம் சுளிக்க வைத்த முதரலிரவு நகைச்சுவைகளே அதிகம் இருந்தன. மேடையில் இருந்த பேச்சாளர்களில் பெண் பேச்சாளர்கள் இருவரும் மிகவும் தர்ம சங்கடத்துடன் இருந்தார்கள் என்பது அவர்கள் அங்கும் இங்கும் பார்வையை ஓட விட்டதிலேயே தெரிந்தது. நகைச்சுவையாய் நிறைய பேசினார்.

நானே பேசிக்கொண்டிருந்தால் என்னடா இவனே பேசுறான்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிருவீங்க அப்படின்னு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். 'முன்பே' அணியின் திருமதி. சித்ராவை அறிமுகப்படுத்தும் போது அவர் நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொண்டு திருமணத்துக்கு முன்பு சந்தோஷமாக இருந்ததாக பேச வந்திருக்கிறார் என்றவர் உங்க வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா என்று கேட்க, முதல் வரிசையில் இருந்தவரை கைகாட்ட, திருமணத்துக்கு முன்னாலதான் சந்தோஷமா இருந்தேன்னு பேசுறதை கேட்க முன்வரிசையில வந்து உக்காந்திருக்கார் பாருங்க என்று நகைச்சுவையாய் கூறினார். திரு. செந்தில் வேலனை அறிமுகப்படுத்தும் போது சிறந்த பேச்சாளர் என்னுடன் சில மேடைகளில் பேசியிருக்கிறார் என்றார். திரு. கோவை தனபாலை அறிமுகம் செய்யும் போது கல்லூரியில் வேலை பார்ப்பதாகவும் கோவை தமிழில் பேசி அசத்துவார் என்றார். அப்ப எல்லா மாவட்டத்து பேச்சு வழக்கையும் ஒரு பிடி பிடித்தார் அதில் மதுரைக்காரன் பிரசன் டென்ஸ், பாஸ்டென்ஸ், பியூச்சர் டென்ஸ் எதுவுமே இல்லாம பேசுவாங்க, சாப்பிட்டியாடான்னா சாப்பிடுவோமுல்ல என்பான் சாப்பிட்டான்னா, இல்லையான்னே தெரியாது என்றார் அதேபோல் நாம சைக்கிளை ஓட்டினா திருநெல்வேலிக்காரங்க சமட்டுவாங்க என்று சொன்னது ஹைலைட்.

'பின்பே' அணியின் திருமதி.பொற்செல்வி கண்ணன் அவர்களை அறிமுகப்படுத்தும் போது பேரை மாற்றிச் சொன்னார். திரு. சங்கர் அவர்களை துபாயில் தமிழ் வளர்ப்பவர்களில் இவரும் ஒருவர் என்றார். திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை அறிமுகம் செய்யும்போது சிறந்த பத்திரிக்கையாளர், நல்ல பேச்சாளர், இவரது கட்டுரைகளை அரசியல் தலைவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்றார்.

பேச்சாளர்கள் சரவெடியாய் களத்தில் இறங்கினர்.

தொடரும்....

-"பரிவை" சே.குமார்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நேதாஜி... எங்கள் நேதாஜி...


சுதந்திர வேள்வியில்
காந்திக்கு அப்பாற்பட்டு
மக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!

பெருங்'குடி'யில் பிறந்ததால்
மக்களைப் பிள்ளைகளாய்
அரவணைத்துச் சென்றாயோ...?

இந்திய தேசிய ராணுவத்தை
பிறப்பித்த பெருமை உனக்கு...
உன்னில் கலந்து உயிர் நீத்த
பெருமை எம் மறவர்களுக்கு..!

வங்கம் தந்த சிங்கம்
என்பவர்கள் அறியவில்லை
நீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!

இந்தியாவில் பிறந்து... தைவானில் இறந்து...
இன்னும் வாழ்கிறாய்... ஜப்பானில் அஸ்தியாய்..!

ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை...

பாரதி இறப்புக்கு பத்துக்கு மேல்...
உன் அஸ்தி கண்டதோ பத்துக்கு கீழ்...

உலகம் சுற்றும் தலைவர்களுக்கு
உன் அஸ்தி காண என்ன அசதியோ...?

இருந்தும் வாழ்கிறாய்
எங்கள் இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல
தீச்சுடராகவும்...!
(நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று ( பிறந்த தேதி : சனவரி-23, 1897) அவர் குறித்து பதிவிடும்படி நண்பர் தமிழ்க்காதலன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுதந்திர தியாகி நேதாஜிக்கு இந்த கவிதை போன்ற சில வரிகள் சமர்ப்பணம். - நமக்காக உயிர்நீத்த தியாகச் சுடரை மனதில் நிறுத்துவோம்)

-'பரிவை'. சே.குமார்.

சனி, 22 ஜனவரி, 2011

மனசின் பக்கம் 22/01/2011

எல்லாரும் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சியில் இருப்பீர்கள். என்ன பொங்கல் சாப்பிட்டா நல்லா தூக்கம் வருமுன்னு சொல்லுவாங்க. அது உண்மைதான்னு வலையுலகம் நிரூபிச்சிருச்சு. அட ஆமாங்க கடந்த ஒரு வாரகாலமாக வலைப்பூக்களில் ரொம்ப டல் அடித்தது என்பதே உண்மை.

***************************

தமிழ்மணம் விருதுகள் அறிவித்தாச்சு. விருதுகள் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். கலந்து கொண்டு கிடைக்கவில்லையே என்று விருது கிடைக்காத நண்பர்கள் வருந்த வேண்டாம். திறமைசாலிகளிடம்தான் தோற்றிருக்கிறீர்கள் என்ற வகையில் சந்தோஷப்படுங்கள். விருது கிடைத்தவர்களில் பெரும்பாலான பதிவர்கள் நான் விரும்பி வாசிப்பவர்களே என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

***************************

எங்கள் மாவட்டத்தில் ஒரு ஊரில் வெளி நாட்டில் வேலை பார்க்கும் கணவன் விடுமுறையில் சென்ற போது மனைவி மீது சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொன்று சாக்கில் கட்டி வீட்டின் பின்புறம் புதைத்து விட்டான். இதைவிட கொடுமை என்னவென்றால் அம்மா எங்கே என்று கேட்ட இரண்டு குழந்தைச் செல்வங்களை ஊரை ஒட்டியுள்ள மரங்கள் அடர்ந்த பகுதிக்கு கூட்டிச் சென்று கழுத்தை அறுத்து புதரில் வீசிவிட்டு வந்திருக்கிறான்.

அவனது மாமியார் மகளைப் பார்க்க வந்தபோது சந்தேகப்பட்டு கேட்க, முன்னுக்குப்பின் முரணாக பேச, கடைசியில் விவரம் அறிந்து அவனை போலீஸில் ஒப்படைத்திருக்கின்றனர், அவனுக்கு போலீஸில் சொந்தங்கள் இருக்கிறார்களாம். அவன் ஒரு மனநோயாளி என்று கதையை மாற்றுகிறார்களாம். இவனுக்கெல்லாம் எதற்கு சிறை, விசாரணை எல்லாம்... அப்பவே போட்டுத் தள்ளியிருக்கணும். இல்ல கை காலை வெட்டி சாகுற வரைக்கும் அனுபவிக்க விட்டிருக்கணும்.

மூணு பேரை கொன்றவனை காப்பாற்ற நினைப்பவர்களை என்ன சொல்வது? ஈரமில்லாத மனிதர்கள் என்றா... இதயமில்லாத மனிதர்கள் என்றா... அரபு நாடுகள் போல் சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தால் மன நோயாளிகள் குறைவார்கள் அல்லவா?

***************************

நேற்று முழுவதும் அபுதாபியில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மாலை சற்று பலமாகவே மழை பெய்தது. எப்போதும் மழையுடன் உறவாடிய நமக்கே பாலைவனப் பூமியில் அத்தி பூத்தாற் போல் பெய்யும் மழைகண்டு சிலிர்க்கும் போது அரபிகளை சொல்லவா வேண்டும். மழையில் நனைந்து கொண்டே திரிவது, கால்பந்து விளையாடுவது என சந்தோஷமாய் கழித்தார்கள். இன்றும் மழை வருவது போல்தான் இருக்கிறது.

***************************

மழை பெய்த நேற்று மாலை அபுதாபி இந்தியன் பள்ளி கலையரங்கத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தலைமையில் பொங்கல் பட்டிமன்றம் ஒன்றை பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தியது. அந்த மழையிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது. வெளியே மழை....உள்ளே சிரிப்பு மழை... இது குறித்த விரிவான பதிவு விரைவில்....

***************************

நம்ம வாரிசு... விஷால், தனது இரண்டாவது பிறந்த நாளை ஜனவரி -17 ,அதாங்க பொங்கல் முடிந்து ஜல்லிக்கட்டு வைப்பாங்கல்ல... அன்னைக்கு (அவரும் ஜல்லிக்கட்டு காளை மாதிரித்தான்....) கொண்டாடியிருக்காங்க... பாவம் புள்ளைக்கு கேக் வெட்டி தானே சாப்பிட்டு, எல்லாருக்கும் கொஞ்சமா கொடுத்து, கசகசன்னு புது டிரஸ் போட்டு... ரொம்ப சோர்வாயிட்டாரு போல... போங்கடா நீங்களும் ஒங்க பொறந்த நாளு கொண்டாட்டமும் அப்படின்னு என்ன ஒரு தெனாவெட்டா உக்காந்திருக்காரு பாருங்க...மனசின் பக்கம் மீண்டும் மலரும்....

-'பரிவை' சே.குமார்.

புதன், 19 ஜனவரி, 2011

பாதசாரிமழை நின்ற இரவில்

அருகில் கிடப்பவன் குறட்டையும்...

சாக்கடைக் கொசுவின் கடியும்...

கிழிந்த போர்வைக்குள் நுழைந்து

இதயம் உறைய வைக்கும் குளிரும்...

மழையின் எச்சமாய் எங்கோ

தாளநயத்துடன் சொட்டும் ஓசையும்...

பாதசாரியின் தூக்கம் கலைக்க

சொக்கலால் பீடியை

சுகமாய் உறிஞ்சிய போது

தூரத்து விளக்கொளியில்

சுகத்தை விக்க தூக்கம் மறந்தவள்...

இன்றாவது வாய்க்குமா?

இடுப்பை தொட்டுப் பார்த்தான்

நோட்டில்ல சில்லறை சிரித்தது...

ஏக்கமாய் சிரித்தவன்

எவனை(ளை)யோ திட்டியபடி

எழுந்தான் வேறிடம் தேடி..!

-'பரிவை' சே.குமார்.

சனி, 15 ஜனவரி, 2011

மகிழம்பூ மனசு (பொங்கல் சிறப்பு சிறுகதை)


பொங்கலுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. என்னவோ ரெண்டு மூணு வருசமாவே ஆறுமுகத்துக்கு பொங்கல் மேல இருந்த ஈர்ப்பெல்லாம் போயாச்சு. அதுக்கு காரணமில்லாம இல்ல. ரெண்டு பொங்கலுக்கு முன்னால நல்லா இருந்த அவரு பொண்டாட்டி ராஜம் போய் சேர்ந்துட்டா. அதுக்கு அப்புறம் அவரு நட பொணமாயிட்டாரு. எந்த விசேசத்துக்கும் போறது கிடையாது. புதுத்துணி கட்டுறதையும் விட்டுட்டாரு.

போன பொங்கலுக்கு அவரு நண்பன் ராமசாமி வலுக்கட்டாயமா கதர் வேட்டியும், வெள்ளச்சட்டையும் எடுத்தாந்து கொடுத்தாரு. ஆனா அதை அவரு கோடியாப் போடமா தண்ணியில நனச்சுத்தான் கட்டுனாரு. எனோ ராஜமில்லாத வாழ்க்கையில எல்லாமே வெறுமையாத்தான் தெரிஞ்சது அவருக்கு. பசங்களெல்லாம் வேலை பாக்கிற எடங்கள்ல குடும்பத்தோட இருக்கதால பொங்க தீபாளி சந்தோசங்களை எல்லாம் அவரு வீடு கொஞ்சம் கொஞ்சமா இழந்துக்கிட்டு வர ஆரம்பிச்சிருச்சு.

பக்கத்து ஊருல கட்டிக்கொடுத்த பெரிய மவ பெரியநாயகிதான் பொங்க தீபாளிக்கெல்லாம் வந்து இருந்துட்டுப் போவா. இந்த வருசம் அவ புது வீடு கட்டி தனியா இருக்கதால மொத வருசம் புது வீட்ல பொங்க வைக்கணும்ப்பா நீங்களும் இங்க வந்துடுங்கப்பான்னு போன்ல சொன்னா. அவருக்கு என்னத்தப் போனமுன்னு வந்துச்சு. பேசாம ராஜத்துக்கிட்ட போகலாமுன்னு இப்பல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு. இருந்தும் சாவு நம்ம கையிலயா இருக்கு. என்ன ரொம்ப வேண்டியவங்க நமக்கு முன்னால போறப்ப வருத்தமாத்தான் இருக்கு. அதுவும் வாழ்க்கையே பொயிட்டா... அதுவரைக்கும் எனக்கு முன்னால பொயிட்டா, இல்லேன்னா அவ கஷ்டப்பட்டுக்கிட்டு கிடக்க வேண்டியிருக்கும் அந்த வகையில அந்த புண்ணியவதி பாக்கியசாலிதான்னு மனசுக்குள்ள சொல்லிப்பாரு.

பசங்கள்லாம் சின்னதுங்களா இருக்கும் போது பொங்க தீபாளின்னா அந்த வீடே சந்தோஷமா இருக்கும். அப்ப ஆறுமுகம் தேவகோட்டை சின்னப்ப செட்டியார் வீட்ல கணக்கப்பிள்ளையா இருந்தாரு. ராஜம் போற வரைக்கும் அவங்க வீட்லதான் இருந்தாரு. அதுக்குப் பின்னால செட்டியார்கிட்ட சொல்லி அவருக்கு துணையா இருந்த செல்வத்தை கணக்க்ப்பிள்ளையாக்கிட்டு வந்துட்டாரு. லெச்சுமி ஆச்சிக்கு இவரு இல்லாத வீடு வெறுமையா தெரிய ஆறுமுகண்ணே நீ வேலை பாக்கலையின்னாலும் பரவாயில்லை வீட்டுக்கு வந்து இருந்துட்டுப்போன்னு சொல்லி போன் பண்ணுச்சு.

மகராசி, மனுசனுக்கு மரியாதை குடுக்கிறதுல அதுமாதிரி யாரையும் அவரு பாத்ததில்லை. என்ன செஞ்சாலும் ஆறுமுகண்ணனுக்கு கொடுங்கன்னு சொல்லி எடுத்து வைக்க மறக்காது. அது முகத்துக்காக காலையில சைக்கிள்ல பொயிட்டு தோட்டத்து செடிகளுக்கு தண்ணி பாச்சிட்டு வருவாரு. அவருக்கும் மனசுக்கு நிறைவா இருக்கு.

பொங்கலுக்கு மொத நாள் செட்டியார் வீட்டுல ஏழெட்டுக்கட்டு கரும்பு வாங்குவாங்க. எல்லாருக்கு ரெண்டு கரும்பும் காசும் கொடுப்பாரு செட்டியாரு. ஆனா லெச்சுமி ஆச்சி இவருக்கு மட்டும் ஒரு கட்டு கரும்ப கொடுக்கச் சொல்லி தனியா எடுத்து வச்சிடும். சாயந்தரம் வரும்போது கரும்புக்கட்டை சைக்கிள் பார்ல அழகா கட்டி சீட்ல உக்காந்து ஓட்டிக்கிட்டே வந்துடுவாரு. கரும்பு வந்ததும் பசங்களுக்கு சந்தோசம் எங்கிருந்துதான் வருமுன்னு தெரியலை. வீடே சந்தக்கடை மாதிரி இருக்கும். அப்பவே கரும்ப வெட்டி கடிக்க ஆரம்பிச்சிருவாங்க. எல்லாருக்கும் புதுத்துணி எடுத்து வச்சிருப்பாரு.

பொங்கலன்னைக்கு பெரியவனை வயல்ல போயி அருகம்புல்லும் அப்படியே கதிர் இனுக்கு ரெண்டும் பறிச்சுக்கிட்டு வரச்சொல்லி மாட்டுச்சாணியில பிள்ளையார் பிடிச்சு, நெல்லோட இருக்க கதிர் இனுக்கை பானையில கட்டி ரெடியா வச்சிருவாரு. நல்லா தலைக்கு குளிச்சு ஈரம் சொட்டச் சொட்ட அள்ளிக் கொண்ட போட்டுக்கிட்டு ராஜம் வீட்டு வாசல்ல அடுப்பு வச்சு பொங்க வைக்கிறப்போ பக்கத்துலயே நிப்பாரு. பயலுகளும் தொலைக்காட்சி வாறவரைக்கும் நின்னாங்க. என்னைக்கு வாங்குனாரே... தீபாளி பொங்கலுக்கு அதக் கட்டிக்கிட்டு கிடக்க ஆரம்பிச்சிட்டாங்க.

பால் பொங்கி ராஜம் கலஞ்ச அரிசியை போடுறப்போ இவரு சங்கெடுத்து 'ப்பூ...'ன்னு ஊருக்கே கேக்கிற மாதிரி ஊதுவாரு. அதுல அவருக்கு ஒரு சந்தோசம். ராஜம் போறதுக்கு முன்னால அவ வச்ச கடைசிப் பொங்கலப்பக்கூட இவருதான் சங்கு ஊதுனாரு. இவரு சங்கூதுனா ராஜமுக்கும் சந்தோசம்தாங்கிறது அவ முக மலர்ச்சியில தெரியும்.

பசங்கள்லாம் படிச்சு வேலைக்குப் போன பின்னால பெரியநாயகியும் சுந்தரியும் மட்டும்தான் வீட்ல இருப்பாங்க. அந்த வீட்ல முன்னாடி கேட்ட சத்தமெல்லாம் குறஞ்சு தொலைக்காட்சி சத்தம் மட்டும் கேக்க ஆரம்பிச்சிருச்சு. மகளுகளுகு நாடகத்துலதான் மோகம். தொலைக்காட்சியில் வாற எல்லா நாடகத்தையும் பாக்குங்க.

இவரு வேலை முடிஞ்சு வாரப்போ எட்டு மணியாயிடும் வந்ததும் அடிபைப்புக்கு போயி தண்ணி பிடிச்சி குளிச்சிட்டு வாரதுக்குள்ள சாப்பாடு ரெடியா இருக்கும் சாப்பிட்டு ராமசாமிகூட அவரு வீட்டு கோழிக்கூட்டு திண்டுல உக்காந்து என்ன பேசுவாங்களோ தெரியாது பத்துப் பதினோரு மணி வரைக்கும் பேசிக்கிட்டே இருப்பாங்க.

ரெண்டு பேருக்கும் ஒரு பழக்கம், நிஜாம்லேடி போயிலை போடுவாங்க. ஆனா மத்த போயிலை பிடிக்காது. பாக்கெட்டுல இருந்து எடுத்து கையில வச்சி உருட்டி வாய்க்குள்ள லாவகமா வச்சிக்கிட்டு எச்சியை புளிச்...புளிச்சின்னு துப்பிக்கிட்டே பேசுவாங்க. வீட்ல போயிலை போட்டுட்டு அவரு உக்காந்து இருக்கப்போ எதாவது விசயம் பேசினா வாயில எச்சியோ கொழக்கொழன்னு பேசுவாரு... சில நேரம் வாயில இருந்து எச்சி ஒழுக ஆரம்பிக்கும். அப்ப ராஜம் அந்த சனியனைத்தான் துப்பி தொலச்சிட்டு பேசினா என்னன்னு சத்தம் போடுவா. அவ போனதுக்கு அப்புறம் அந்த சனியனையும் தொலச்சிட்டாரு.

பிள்ளைங்கள்லாம் இல்லாம தீபாளி பொங்கலுக்கு ரெண்டு பேரு மட்டும் இருந்த வீடு என்னமோ போல இருந்துச்சி. பக்கத்து வீட்டுப்பயக வந்து சந்தோஷமா பொங்க கொண்டாடும் போது இவருக்கு நம்ம பயக வரலையேன்னு மனசு வருந்தும், இந்த பயலுக பொங்க தீபாளிக்கு வந்த நல்லாயிருக்கும். அப்படி என்னதான் வேலை பாக்கிறாங்களோன்னு ராஜத்துக்கிட்ட பொலம்புவாரு. அவனுங்களுக்கு என்ன வேலையோன்னு மகங்களுக்கு சப்போர்ட்டா பேசுவா.

அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் அம்மன் கோவில் திருவிழாவுக்கு மட்டுந்தான் வாராங்க. மத்ததுக்கெல்லாம் வாரதில்லை. பிள்ளைங்க படிப்பு போயிடுமாம். அப்படி என்னதான் படிக்க வைக்கிறாங்களோ.நாங்களும்தான் வயலு வேலை பாத்துக்கிட்டு படிக்க வைச்சோம். ஆபீசுல வேலை பாக்கலையா. ஏன் ராமசாமி மவன் இன்ஸ்பெக்டரா இல்லையா என்னன்னு அவருக்குள்ள கேட்டுப்பாரு.

திண்ணையில உக்காந்து என்னென்னமோ ரோசனை பண்ணினவரை ராமசாமியின் குரல் கலைத்தது. வா ராமசாமி பொங்க வருதுல்ல... பய வாரானான்னு கேட்டாரு. ஆமாப்பா இந்த வருசம் பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னாடி வாரேம்பான்னு சொல்லியிருக்கான். ஆமா ஒம்மயங்க வாரேன்னு சொன்னாங்களா... போன் பண்ணினியான்னு கேட்டபடி துண்டால திண்ணைய தட்டிட்டு ராமசாமி உக்காந்தார்.

எப்ப வந்திருக்காங்க... இப்ப வர... எப்பவும் பெரியவ வருவா. அவளுக்கும் புதுவீட்ல பொங்க வைக்கணுமாம். என்னய வரச் சொல்லுறா. போக வேண்டியதுதானே இங்க இருந்து என்ன பண்ணப் போறே... பொயிட்டு மாட்டுப் பொங்கலுக்கு வான்னு சொன்ன ராமசாமியப் பாத்து சிரிச்சுக்கிட்டே அவ போனதுக்கப்புறம் எதுலயுமே பற்றிலாம போச்சுப்பா... என்னத்தைப் போனேன். எதையாவது ஆக்கி தின்னுபுட்டு உம் பேரப்புள்ளைங்க வந்தா அதுக கூட கொஞ்சிக்கிட்டு இருந்தா சரியாப் போகும். எனக்கு எங்க நல்ல நாள் கெட்டநாள் எல்லாம். அவ நல்லவ போயிட்டா, நான் இருக்கேன்... எப்ப கூப்பிடுவானோ தெரியலை.

அட எம்ப்பா நீ நாங்கள்லாம் இல்ல... சும்மா எப்ப பாத்தாலும் அதே பேசிக்கிட்டு... எல்லாரும் ஒரு நாள் போகத்தான் போறோம். யாரும் இங்க தங்கப் போறதில்லை... என்ன முன்னப்பின்ன... அது மட்டும்தான் வித்தியாசம். விடு போய் படு காலயில பாப்போமுன்னு ராமசாமி எந்திரிச்சுப் போக, திண்ணையில படுத்து நெடுநேரம் தூக்கம் வராம புரண்டுக்கிட்டு கிடந்தவரு எப்படியோ தூங்கிப் போனாரு.

அடுத்த நாள் செட்டியாரு வீட்டுக்குப் பொயிட்டு மத்தியானமா சைக்கிள்ல வந்தவரு மாடு மேச்சுக்கிட்டு இருந்த ராமசாமியப் பாத்ததும் நின்னாரு... அவரு சைக்கிள் பார்ல கட்டியிருந்த கரும்புக்கட்டையும் கேரியர்ல இருந்த அட்டப்பெட்டியையும் பாத்ததும் என்னப்பா மக வீட்டுக்குப் போகலையின்ன நீயே பொங்க வைக்கப் போறியா... சாமானெல்லாம் பலமா இருக்குன்னு ராமசாமி கேக்க, இல்லப்பா நாளக்கி சின்னவன் குடும்பத்தோட வாரானாம். ஒரு வாரம் இருக்கானாம். சின்ன ராஜம்.. அவரு பேத்தி பேரு ராஜலெட்சுமி . இவரு சின்ன ராஜமுன்னுதான் சொல்லுவாரு... எனக்கு நெறைய கரும்பு வாங்கி வையிய்யான்னு சொன்னா. அதான் வாங்கிக்கிட்டு வந்தேன், நாளக்கி இன்னொரு கட்டு வாங்கியாரணும் எம் பேத்திக்குட்டி... என் தாயிக்குன்னு அவரு பேசுறப்போ முகத்துல அத்தனை சந்தோஷம். ராஜம் போனதுக்குப் பின்னாடி ஆறுமுகத்தோட முகத்துல அத்தனை சந்தோஷத்தை ராமசாமி அன்னைக்குத்தான் பார்த்தார்.
-'பரிவை' சே.குமார்.