மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2013

நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு 

 உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு 

 பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ் 

  பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட் 

   பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash) 

  ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி 

    பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி 

   தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம் 

     சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள் 

       இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி  

உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.

*************

நீரிழிவு நோய் குறித்த விக்கிபீடியா தகவல் :

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

நன்றி : விக்கிபீடியா & தட்ஸ் தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்.

கௌதமி எனக்கு அம்மாவா?- ஸ்ருதி; இனி ரெண்டு - விமல்

நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். 


இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். 

அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார். 

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு, நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இனி வருஷத்துக்கு ரெண்டு: விமல் 

விமல் சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஒரு முடிவை எடுத்துள்ளார். 

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த் ஆகியோரின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது. 


கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல். 

இனி வரும், போகும் கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். 

தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

-'பரிவை' சே.குமார்

மம்மிகள் அல்ல இவை தூங்கும் குழந்தைகள்

(இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!)

அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.

நாகா கதைகளில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமணமாகாத இளம் பெண் என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டாள் டென்சிலா.

இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

டென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்.

அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டி விடாமல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் ‘கபகோசா’.

இவற்றை ‘மம்மிகள்’ என்று அழைக்காமல் ‘தூங்கும் குழந்தைகள்’ என்று வர்ணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து விக்கிபீடியாவில் பார்க்க :http://en.wikipedia.org/wiki/Mummy_Juanita

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்

-'பரிவை' சே.குமார்

மலேசியாவில் தமிழரை சித்திரவதை செய்த தமிழர்..!காரைக்குடி வட்டத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவர் மலேசியாவில் உள்ள தமிழருக்கு சொந்தமான உணவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். இவருக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தான் இந்தியா திரும்பவேண்டும் என்று சொல்லி சம்பளம் கேட்டார். ஒரு நாள் (5/6/13) வேலைக்குப் போகாமலும் இருந்துவிட்டார். 

ஆத்திரமுற்ற முதலாளி மறுநாள் (6/6/2013) தமது மற்றொரு அலுவலகத்திற்கு வரசொல்லி "நீதான் எனது பணம் Rm250000 (சுமார் 50 லட்சம்) திருடிவிட்டாய் அந்த பணத்தினை தந்தால் உன்னை அனுப்பிவைக்கிறேன்" என்று சொன்னாராம். அதிர்ச்சியுற்ற கருப்பையா இதனை மறுக்கவே அங்கு வைத்து அடியாட்கள் கொண்டு அடித்திருக்கிறார். 

மேலும் கருப்பையாவை ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று சங்கிலியால் கால் கைகளை கட்டிப்போட்டு தினசரி 21 நாட்கள் உடலில் கத்தியாலும், சுடுநீராலும், கம்பாலும் அடியாட்கள் கொண்டு தாக்கியிருக்கிறார். 

கருப்பையாவின் தந்தைக்கும், மலேசியாவில் உள்ள கருப்பையாவின் நண்பர்களுக்கும் போன் செய்து ஐம்பது லட்சம் கொடுத்தால் கருப்பையாவை விட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். எங்கிருந்தும் பணம் கிடைக்காது போகவே மிகுந்த சித்திரவதைக்கு உள்ளான கருப்பையாவை வெளியில் விட்டால் ஆபத்து என்றெண்ணி கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார் இந்த மலேசியத் தமிழன்.

இந்நிலையில் 27/6/2013 அன்று வரை சங்கிலியால் தனிமையில் பூட்டப்பட்டிருந்த கருப்பையா அன்று மாலை தனது உயிர் போய்விடும் நிலையில் கூக்குரலிட்டும் வீட்டின் கதவை முட்டி மோதியும் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தினை கேட்ட பக்கத்து வீட்டினர் வீட்டை உடைத்து கருப்பையாவை தப்பிக்க வைத்துள்ளனர்.

இன்று 28/6/2013 அன்று காலை இவரது தந்தை அழகு என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளரிடம் தனது மகனை காப்பாற்றும்படி மனு கொடுத்தார். மலேசியாவில் உள்ள "தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றத்தினர்" அவரை பத்திரமாக மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்ததோடு காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். 

ஆனால் இந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக தமிழக முதல்வரும், மத்திய அரசின் அமைச்சர்களும் உடனடியாக தலையிட்டு மலேசிய அரசினை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் நீதியிலிருந்து தப்பித்துவிடாமல் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மலேசிய அரசினை உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட வேண்டும்.

நன்றி : காரைக்குடி மக்கள் மன்றம்

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 28 ஜூன், 2013

அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி

தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கமானதாகவே இருந்து வருகிறது. இதன்படி தி.மு.க.,வில் இருந்து பரிதிஇளம்வழுதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி ஆகியோர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விலகல் மேற்கண்ட கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ.,வை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரிதியை பொறுத்தவரை தி.மு.க.,வில் இருந்து ஸ்டாலினுடன் ஒத்து போகாததால் கட்சியில் இருந்து விலகி இருந்தார். 

இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. 

எவ்வித இழப்பும் இல்லைஜி.கே.,மணி ; இது குறித்து பா.ம.க., தலைவர் ஜி.கே.,மணி கூறுகையில்; கொள்கை ரீதியாக கட்சி நடத்துபவர் ராமதாஸ். தாழ்த்தப்பட்ட அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், இவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. 

இவர் அ.தி.மு.க.,வில் இணைந்ததால் கட்சிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இவர் கட்சியில் இருந்த போதே அவர் எந்தவொரு பலனும் இல்லாமல் தான் இருந்தார். இதனை பல தொண்டர்கள் சொல்லியிருக்கின்றனர். இவர்தான் தன்னை முன்னேற்றி கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். இது இவருடைய விருப்பம் இவரை கட்சியில் சேருங்கள் என எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

இது குறித்து பொன்னுச்சாமி இன்று கூறுகையில்; அரசியலுக்கு வர மாட்டேன் என்று இருந்த போது என்னை பா.ம.க.,தான் கட்சிக்கு அழைத்தது, மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றார். 

அ.தி.மு.க.வில் ரொம்ப நாளாக அழைப்பு இருப்பதாக எனக்கு எண்ணம் இருந்தது. மேடம் நன்றாக செயல்படுகிறார்கள் .காவிரி பிரச்னையிலும் நன்றாக செயல்பட்டார். நல்ல நிர்வாகம் இங்கு இருப்பதாகவும், மேலும் இந்த கட்சியில் இணைந்தால் நன்கு பணியாற்ற முடியும் என நம்புவதாகவும் பொன்னுச்சாமி தெரிவித்தார். 

இன்று முதல்வர் ஜெ., கொட நாடு செல்கிறார். அங்கும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.கவில் இணைவர் என கூறப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட தி.மு.க.,நிர்வாகிகள் சேரவுள்ளதாக தெரிகிறது.

‘ கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் ’- பரிதி 

கட்சியில் இணைந்த பின்னர் பேட்டியளித்த பரிதி இளம்வழுதி ; என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதற்கு அம்மாவுக்கு நன்றி. சட்டசபையில் ஜெ., இருக்கும்போது எதிர் வரிசையில் இருந்து நான் கடுமையா விமர்சித்தும், எதிர்த்தும் பேசியிருக்கிறேன். கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் பேச்சை கேட்டு பேசினேன். இருப்பினும இதனை மறந்து தாயுள்ளத்தோடு என்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

-நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்

வியாழன், 27 ஜூன், 2013

வெள்ளாமை

ன்னையனுக்கு இப்போதெல்லாம் கண் சரிவரத் தெரியவில்லை என்பது நன்றாக புலப்பட்டது. வரப்பில் நடந்து செல்லும்போது தூரத்தில் வருபவர்களைக்கூட துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளும் அவரால் தற்போது அப்படி கண்டு கொள்ள முடியவில்லை. 

மனைவி பஞ்சவர்ணத்திடம் சொன்னபோது 'வயசாயிடுச்சுல்ல இனி எல்லாம் வரும். இந்த அறுப்பு முடிஞ்சதும் கண் ஆபரேசன் பண்ணலாம்' என்றாள்.

அவள் சொல்லுவதிலும் அர்த்தம் இருந்தது. ஆபரேசன்னு போன கண்டிப்பா காசு வேணும். அறுப்பு முடிஞ்சா கைல நெல்லைப் பில்ல போட்ட காசு இருக்கும். இன்னும் ரெண்டு மாசம்தானே ஓட்டிரலாம் என்று முடிவு செய்து வயல் வேலையில் கவனம் செலுத்தினார்.

உதவி செய்ய ஆள் இருந்தாலும் இப்போதே செய்யலாம். அந்த கொடுப்பினைதான் இல்லாமப் போச்சே... மனசு வருந்துவது அவரது முகச்சுருக்கத்தில் தெரிந்தது.

இரண்டு மகள்களுடன் ஆஸ்திக்கு ஒரு மகனைப் பெற்ற அவருக்கு கண்ணை உடனே சரிபண்ண முடியாமல் போனது தூரதிஷ்டமே. 

மகள்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் கணவன்மார்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு சென்று விட்டதால் எப்போதாவதுதான் பிறந்தகம் வருவார்கள். 

மகனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினார். திருமணம் வரை அப்பா அம்மாவை சுற்றியவன் இன்று பொண்டாட்டி சுற்றத்தை சுற்றுகிறான். போன் பண்ணிக்கூட பேசுவதில்லை. தொப்புள்கொடி உறவு அறுந்து போனதாகவே அவருக்குப்பட்டது.

மகள்களிடம் பணம் கேட்டால் கிடைக்கும். ஆனால் தன்மானம் அவரைத் தடுத்தது. பெரியவள் என்னோடு வந்து விடுங்கள் என்று பலமுறை அழைத்தும், உங்களைப் படிக்கவைக்க கல்யாணம் பண்ணிக்கொடுக்க என எல்லாவற்றிக்கும் உதவியது இந்த நிலம் தான் அதை விட்டுட்டு எப்படிம்மா. அதுபோக சம்மந்தி மனசு வருந்துறமாதிரி ஆகக்கூடாது இல்லியா, அதனால அவங்கள நல்லாப் பாரு அது போதும் என்று தட்டிக்களித்தார். 

நாளாக நாளாக கண் மங்கலாவது அதிகரிக்க, நாளெல்லாம் வயலில் உழைத்து விட்டு வரும் அவரால் கண்ணுக்குப் பார்க்க டவுனுக்குப்போக உடம்பு இடம் தரவில்லை. அறுப்பு முடியட்டும் என மனசை தேற்றிக் கொண்டார். 

உறவினர் ஒருவரின் சாவுக்கு சென்றபோது மகனின் மாமனாரை சந்திக்கும்படி ஆகிவிட்டது. பேசாமல் போகக்கூடாது என்பதால் 'என்ன சம்பந்தி சௌக்கியமா..?' என்று ஒரு வார்த்தை கேட்டார். 

'சௌக்கியம் சம்பந்தி, என்ன வீட்டுப்பக்கமே வர மாட்டேங்கிறிங்க..?' என கேட்க, 'வயல் வேலையே சரியாய் இருக்கு. அறுப்பு முடிஞ்சிட்ட வரலாம். வயசு வேற ஆயிட்டதா கண்ணு வேற சரியாய் தெரியலை. அதான் தூரத்துல எங்கயும் போறதில்ல. அதுபோக வயல் வேலைக்கு முன்ன மாதிரி ஆள் கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு. நாமளும் சேந்து வேலை பார்த்தாதானே வேலை நடக்குது அதான்...' என்றபடி பெருமூச்சு ஒன்றை விட்டார்.

'ம்ம்ம்... நேத்துக்கூட மாப்பிள்ளை பேசினார். உங்களை விசாரித்தார். நான் என்ன சொல்லமுடியும் எனக்கு பல வேலை, நாம பக்கத்து ஊராய் இருந்தாலும் சந்திக்க முடியிதா... இல்லையே. எப்பவாச்சும் இப்படி பார்த்தால்தான் உண்டு. என்னைய வரச் சொல்லி மாப்பிள்ளையும், மகளும் ஒரே தொந்தரவு. அடுத்த மாசம் போகலாமுன்னு பார்க்கிறேன்... ' என்றவர் அலைபேசி ஒலிக்கவே, 'ஹலோ' என்று ஆரம்பித்தவர் சம்பந்தியை மறந்து வண்டியில் ஏறினார்.

சற்று நேரம் நின்றவர், 'ம்... நான் வயக்காட்டுல கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடனை வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினா மாமனார் குடும்பத்துக்கு உழைக்கிறான். ம்ம்ம்.. நல்லா இருக்கட்டும்.' என்று முணுமுணுத்தபடி நடக்கலானார். 

இதை பஞ்சவர்ணத்திடம் சொன்னால் அவ்வளவுதான் கத்தி ஊரைக் கூட்டிருவா. அவளுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்துக்கொண்டார். 

'ஏங்க பக்கத்துலதானே தம்பி மாமனார் வீடு ஒரு எட்டு போயி போன் நம்பரை வாங்கியாந்திருந்தால் உங்க கண்ணு ஆபரேசனுக்கு பணம் அனுப்ப சொல்லி இருக்கலாமே. ' என்றவளிடம்,

'அட எதுக்கு அவனை தொந்தரவு பண்ணச் சொல்லுறே. வெளிநாட்டுல குடும்பம் வச்சு இருக்கிறதுன்னா எவ்வளவு கஷ்டம். நம்ம கஷ்டம் நம்மளோட, அவன வேற சங்கடப்படுத்தனுமா... அறுப்பு முடியட்டும் நெல்லைப் போட்டுட்டு ஆபரேசன் பண்ணலாம்.' என்று மனைவியின் 
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்,

'பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எவ்வளவோ இழந்துட்டோம். கண் பார்வை போச்சேன்னு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. பார்த்துப்பார்த்து நீர் பாய்ச்சியும் பொய்த்துப் போற விவசாயம் மாதிரியில்ல ஆயிருச்சு பையனுக்கு செஞ்ச வெள்ளாமை... ம்ம்ம்.. என்ன செய்ய விதியோட விளையாட்டுக்கு யார இருந்த என்ன..' என்று நினைத்தவரின் மனசுக்குள் எதோ அழுத்துவது போல இருக்க ஒளியிழந்து வரும் கண்ணுக்குள் இருந்து தெறித்து விழுந்தது கண்ணீர்.

(தினத்தந்தி குடும்பமலரில் வெளியாகி சிறுகதைகள் தளத்தில் பதிந்தது)

-மீள்பதிவு

-'பரிவை' சே.குமார்

மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ்

‘தூத்துக்குடி ஜில்லாவுல 
திருவைகுண்டம் தாலுகாவாம் 
புளியங்குளம் கிராமத்திலே... 
புள்ளி மானாய்த் துள்ளி ஆட 
நாங்கள் புறப்பட்டு வந்தோமையா!’

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவ்வளவு கூட்டம் அப்படி ஓர் ஆரவாரமாகக் கூடியிருக்கும் போது, மேளக்காரர்கள் தங்கள் தவில்களைச் சின்னக் குச்சிகளால் தட்டிக் கூட்டத்தைக் கிளர்ச்சியடையச் செய்துகொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு பெரிய மஞ்சள் கலர் பட்டுப் பாவாடையை எனக்குக் கட்டிவிட்டார்கள். அதன் பின் ராணி அக்காவின் ஜாக்கெட்டைப் போட்டுவிட்டார்கள். அதற்குள் இரண்டு பெரிய தேங்காய் சிரட்டைகளை அவர்களாகவே திணித்தார்கள். அதன் பின் கூட்டத்தில் முதல் வரிசையில் உட்காந்திருந்த பெண் குழந்தைகளிடம் வாங்கிய பாசிமணிகளை என் கழுத்தில் அணிவித்தார்கள். மேலும் ஒரு சிவப்பு கலர் தாவணியை எங்கிருந்தோ வாங்கி வந்து, என் உடலைச் சுற்றிச் சொருகினார்கள். பட்டறைப் பாட்டியிடம் வாங்கிய கொண்டையை ஜெகன் அண்ணன் என் தலையில் வைத்துக் கட்டி, முடியைப் பறக்க அவிழ்த்துவிட்டான். முத்து ஓடிப்போய் யாரிடமோ வளையல்களை வாங்கி வந்து அணிவித்தான். கடைசி நேரத்தில் ஊத்திக் கூடுகளைக்கொண்டு கட்டப்பட்ட சலங்கையை என் இரு காலிலும் கட்டிவிட்டார்கள். கொஞ்சம் அசைத்தால் சத்தம் நிஜமான சலங்கையை மிஞ்சிவிடும். எல்லாரும் அப்படியே சுற்றி நின்று ஒரு முறை எல்லாவற்றையும் சரிபார்த்தார்கள்.


''ஏலேய்... அப்படியே அச்சு அசல் கரிசக்குளத்தா மாரியே இருக்கே! அவ ஆட்டத்தப் பாத்துருக்கலா... அப்படியே ஆடிடு... ஆமா'' என்றான் ஜெகன் அண்ணன். நான் அந்த நொடி அந்தக் கரிசக்குளத்தாவை நினைத்துக்கொண்டேன். கரிசக்குளத்தா நிஜமாக ஒரு பெண் இல்லை. பெண் வேடமிட்டு ஆண்களோடு சரிக்குச் சமமாகத் தூசி பறக்கப் பறந்து பறந்து அத்தனை ஆண்களையும் ஆட்டு மந்தைபோல ஆட்டுவித்து ஆடும் ஒரு சம்படி ஆட்டக்கார ஆண்.

சம்படி ஆட்டம் என்பது வெறுமனே ஆண் களால் ஆடப்படும் ஒரு வகை நாட்டுப்புற ஆட்டம். அதில் மூன்று ஆண்கள் பெண்ணாகவும் நான்கு ஆண்கள் ஆணாகவும் ஆடுவார்கள். 'ஏல... வரும்போது ஏழு ஆம்பிளதான வந்தா னுவா... இப்போ இந்த மூணு பொம்பளைங்க திடுதிப்புனு எங்கிட்டுருந்தல வந்தாளுவ?’ என்று ஆட்டத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த பெருசுகளையே குழப்பிவிடும் அளவுக்குப் பெண்ணாக ஆடும் ஆண்கள் நயமாக வேட மிட்டு ஆடுவார்கள். அதில் அன்றைய நாட் களில் சிறுசு முதல் பெருசு வரை கிறுக்குப் பிடிக்கவைத்திருந்தவள்தான் இந்தக் கரிசக் குளத்தா. உட்கார்ந்து, எழுந்து, ஒரு காலைத் தூக்கித் தரையில் நச்சென்று ஓர் அடி அடித்து ஆடும் அவளின் ஆட்டத்துக்கு விசில் பறக்கும். தவில்காரனைப் போட்டிக்கு இழுத்து அவள் போடும் குத்தாட்டம் தவில்காரனைக் கடைசியில் மண்ணைக் கவ்வவைக்கும். ஆடிக்கொண்டு இருக்கும்போதே திடீரென்று மைக்குக்கு முன்னால் நின்றுகொண்டு, ''ஏலேய்... ஏய்... பொம்பளப் பின்னாடி நாக்கத் தொங்கப் போட்டு அலையிற பொறம்போக்கு ஆம்பிளப் பயலுவளா... எல வாங்கல, ஒருத்தன்னாலும் வாங்க... இல்ல ஒம்போது பேருன்னாலும் வாங்கல... எவனுக்கும் இந்தக் கரிசக்குளத்தா அசையவும் மாட்டா, அஞ்சவும்மாட்டா...'' என்று சொல்லி, உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கும்போது பெண் கள் கூட்டத்தில் குலவை தெறிக்கும். அப்படிப்பட்ட கரிசக்குளத்தா வேடத்தைத்தான் எனக்கு இப்போது போட்டிருக் கிறார்கள். கரிசக்குளத்தாவாக மாறியிருந்த என் உடலை, கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்த்தேன். ஊத்திக்கூடுகள் குலுங்க உடல் சிலிர்த்துக் கூச்சலிடுவதைப்போல் இருந்தது எனக்கு.

கடலாடி முத்துவின் மேளம் கடவுள் வாழ்த்தோடு முழங்கத் தொடங்கியது. நாங்கள் அத்தனை பேரும் ஆடுகளத்துக்குச் செல்வதற்கு வசதியாக, கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஒரு வழி செய்திருந்தார்கள். அந்த வழியாக நாங்கள் வரிசையாக நடந்தோம். பெண் வேடமிட்டவர்கள் மட்டும் முகத்தை மறைத்து முக்காடிட்டிருந்தோம். கூட்டம் எங்கள் கையைப் பிடித்து இழுத்தது. கூட்டம் எங்கள் பாவாடையைப் பிடித்துக் கொண்டு கேலி செய்தது. எங்கிருந்தோ ஓடி வந்த என் அம்மா என் முக்காடை விலக்கி திருஷ்டி முறித்து, முத்தம் கொடுத்து, கொஞ்சம் கனகாம்பரம் பூவையும் தலையில் சூடிவிட்டாள். ஆடு களத்தைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றுக்குள் வந்ததும் கூட்டம் அப்படியே அமர்ந்தது. ஒரிஜினல் சம்படி ஆட்டக்காரர்கள் செய்வதைப்போலவே கூட்டத்தை வணங்கி, ஒவ்வொரு மேளக்காரரையும் தொட்டுக் கும்பிட்டு முக் காட்டை விலக்கிக் கூட்டத்தை ஒரு முறை பார்த்தபோது, உடம்பில் தீப்பற்றிக்கொண்டதைப் போல இருந்தது. இதற்கு முன் சாவு வீடுகளில், பள்ளிக்கூடங்களில் ஆடியிருக்கிறேன் என்றாலும், பெண் வேடமிட்டு இவ்வளவு கூட்டத்தின் முன் வந்து நிற்பது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

ஆண்களாக வந்தவர்கள் அப்படி இப்படி என்று சும்மா தங்களுக்குத் தெரிந்த ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்க, பெண் வேடமிட்ட நாங்கள் கூச்சப்பட்டு நின்றோம். எல்லாரும் கத்திக் கூச்சலிட்டு எங்களை ஆடச் சொன்னார்கள். எங்கள் முகங்களை மறைத்திருந்த துணிகளைப் பிடுங்கிக்கொண்டார்கள். 'ஏய்யா முத்து... பிள்ளைய வெட்கப்படுதுளா... அந்தச் சித்தாட கட்டிக்கிட்டுச் சிங்காரம் பண்ணிக்கிட்டு பாட்ட வாசி... தன்னால அதுகளுக்கு ஆட்டம் வரும்’ என்று ஒரு பெருசு யோசனை சொல்ல, கடலாடி முத்து வாசிக்க, மேளக்காரர்கள் அடித்து நொறுக்க, ஆளாளுக்கு விறுவிறுவென ஆடத் தொடங்கினார்கள். மேளம் அத்தனை ஆவேசமாக முழங்க முழங்க... என் நாடி நரம்பு கள் முறுக்கேறுவது எனக்கே தெரிந்தது. என் கால்கள் தானாகவே ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரனின் ஆட்ட நுணுக்கத்தில் சுழன் றன. மேளம் சூடுபிடிக்கப் பிடிக்க... என் ஆட்டத் தில் வெறி பிடித்ததை என்னாலேயே உணர முடிந்தது. ஆனால், நான் அந்தக் கரிசக்குளத் தாவைப் போல ஆடவில்லை. யாரோ போல ஆடினேன். அந்த 'யாரோ’, ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரன் என்பது மட்டும் நிச்சயம் என்பதைக் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு உணர்த் தியது. என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு வேகத்துடன், விசையுடன் ஆடினேன். தானாகவே பாவாடையை இடுப்பில் எடுத்துச் சொருகிக்கொண்டு, குனிந்து நிமிர்ந்து குலுக்கி ஆடினேன். ஒரு புள்ளியில் மேளமும் நாகஸ்வரமும் உச்சத்தில் இருந்தபோது ஓடிச் சென்று அமர்ந்து, நான் காலைத் தூக்கித் தரையில் நச்சென்று ஊன்றி அப்படியே    உடலைத் திருப்பி ஒரு வட்டம் போட்டு, நிமிர்ந்து நெளிந்து ஆடியபோது கூட்டம் வாய் பிளந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் காலில் கட்டியிருந்த ஊத்திக் கூடுகள் அடித்து ஆடியதில் சிதறித் தெறிக்க, கூட்டம் கூடிக் குவிந்து குலவையிட... மேளக்காரர்கள் அடித்து ஓய்ந்தார்கள். இப்போது ஒரு கூட்டம் ஓடி வந்து என்னை அள்ளிக்கொண்டது!

''எம்மா... பாப்பா மவன் எப்படி ஆடிட்டான் பாரு! அப்படியே கரிசக்குளத்தாவைக் கொன்னுப் புட்டான் ஆட்டத்துல!' என்று ஆளுக்காள் கூச்சலிடும்போதுதான் கூட்டத்தில் அதுவரை எனக்குத் தெரியாத ஓர் உண்மையை யாரோ ஒருவர் சொல்லக் கேட்டேன். 'அப்பன் செல்வராசு ஆடுன ஆட்டத்த, அவன் மவன் அப்டியே வாங்கி ஆடிப்புட்டானே! சும்மாவா சொன்னா னுவா 'கை எடுக்க எடுக்கக் களையும் வளரும்... கால் எடுக்க எடுக்கக் கலையும் வளரும்னு’ என்று யாரோ சொன்னபோதுதான் எனக்குத் தெரிந்தது என் ஆட்டத்தில் தெரிந்த அந்த 'யாரோ’ ஒரு சம்படி ஆட்டக்காரனின் நேர்த்தி, என் அப்பாவுடையது என்று! ஆம்... என் அப்பா ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரர்.
அன்று இரவே ஊத்திக்கூடுகள் குத்திக் கிழித்த என் கால்களைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு மருந்திட்ட அப்பாவிடம் கேட்டேன். ''நீங்க நிஜமாவே ஒரு சம்படி ஆட்டக்காரராப்பா?'' அதற்கு அப்பா மிச்சம்கிடந்த ஊத்திக் கூடுகளை எடுத்துக் கையில்வைத்து, ஒரு குலுக்குக் குலுக்கி, ''ஆமா... எல்லாருக்கும் பிடிச்ச ஒரு நல்ல சம்படி ஆட்டக்காரன்!'' என்று சொல்லிவிட்டு, அந்த ஊத்திக் கூடுகளைத் தன் காலில் கொஞ்ச நேரம் கட்டிக்கொண்டு அப்படி இப்படி கொஞ்ச நேரம் அசைத்துப் பார்த்தார். அப்புறம் அப்படியே எழுந்து உறங்குவதற்காகச் சென்றுவிட்டார். அதன் பிறகு, அப்பாவிடம் எதையும் நான் கேட்கவில்லை. அவரால் அதைச் சொல்ல முடியுமெனில் நான் கேட்காமலேயே சொல்லியிருப்பார். அப்பாவோடு சேர்ந்து சம்படி ஆட்டம் ஆடிய சுப்பு சித்தப்பா, பெருமாள் பெரியப்பா, ஆறுமுகம் மாமா போன்றவர்களைத் தேடிப் பிடித்துக் கேட்டேன்.

ஊரே பசியும் பட்டினியுமாகப் பஞ்சத்தில்கிடந்த காலமாம் அது. சாப்பாட்டுக்கு அரிசி இல்லாமல் குளத்தின் அடியில் இருக்கும் தாமரைக் கிழங்குகளைப் பிடுங்கி, அதற்கு உள்ளே சிவப்பு நிறத்தில் அரிசி போலிருக்கும் விதைகளை எடுத்துச் சோறாக்கித்தான் சாப்பிடுவார்களாம். ஒருநாள் வெளியூரில் போய் யாருடனோ கூத்தாடிவிட்டு வந்த ஆறுமுகம் மாமா ஒரு பை நிறைய அரிசியோடு வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்த ஒரு பை அரிசிதான், அப்பாவை, சுப்பு சித்தப்பாவை, பெருமாள் பெரியப்பாவை எல்லாரையும் சம்படி ஆட அழைத்துப்போயிருக்கிறது. பெருமாள் பெரியப்பாவும், சுப்பு சித்தப்பாவும் கொஞ்சம் பரவாயில் லாத நிறத்தில் இருந்ததால், அவர்களுக்குப் பெண் வேடம் கொடுத்திருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், 'மூணு செவத்த பொம்பளைக்கு மத்தியில ஒரு கறுத்த பொம்பள கண்டிப்பா வேணும்’ என்று நல்ல கறுப்பான அப்பாவுக்கும் பெண் வேடமே கிடைத்திருக்கிறது. பெண் வேடம்தான் இனி என முடிவான அன்றே அப்பா மீசையை மழித்துவிட்டார். அதோடு, தன் தலைமுடியைப் பெண்களைப் போலச் சுருட்டிக் கொண்டை போடும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்.

''ஏல... என்ன அந்தக் கருவாச்சி இன்னைக்கு வரல போலிருக்கு?''     

''அட, குருட்டுப் பயலே... நல்லா பாரு அந்தா மேளக்காரனுக்கு அந்தப் பக்கம் இடுப்ப ஆட்டிக்கிட்டு நிக்கா பாரு நம்ம கருவாச்சி!''

இப்படி அப்பா ஆடப்போகிற ஊர்களில் அப்பாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. என்னதான் அரிசிக்காகவும் கேப்பைக்காகவும் ஆடினாலும் சலங்கையைக் கட்டிக்கொண்டு துள்ளிக் குதித்து ஆடஆட, அண்ணன், தம்பிகளுக்கு அந்த ஆட்டம் அவ்வளவு பிடித்துப்போய்விட்டதாம். இப்படியாக இனி கொட்டோ கொட்டென மழை கொட்டித் தீர்த்தாலும், பரணி வெள்ளம் புரண்டு ஓடினாலும், காடு கரை எல்லாம் பச்சச் சேலை கட்டி, வா... வா... என்று ஆடினாலும், அணைத்துவிட முடியாத ஒரு பெரும் தீ வீட்டு அடுப்பில் எரிந்து, பாயாசமாகச் சோறு கொதித்தாலும்... இனி சம்படி ஆட்டம்தான் என முடிவுசெய்து சந்தோஷமாக ஆடி வந்திருக்கிறார்கள்.

அப்படியான சூழலில் ஓர் ஊரில் அப்பா, சித்தப்பா எல்லாரும் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். நல்ல கூட்டம் இருந்திருக்கிறது. அதனால் ஆர்ப்பரிப்பும் விசில் சத்தமும் அன்றைக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்த தாம். அப்பா, சுப்பு சித்தப்பா, பெரியப்பா எல்லாரும் தங்களை மறந்து ஆடியிருக்கிறார்கள். அப்பா ஒரு பெண் மானைப் போலத் துள்ளிக் குதித்து ஆடியிருக்கிறார். அப்படி ஆடும்போது, அப்பாவின் கால் திடீரென்று சுளுக்கியிருக்கிறது. அதனால், அப்பாவைக் கூட்டத்தில் ஒரு ஓரமாக உட்காரவைத்துவிட்டு ஆட்டம் நிற்காமல் நடந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாரும் ஆட்டத்தையே வேடிக்கை பார்க்க, மூன்று உள்ளூர் இளைஞர்கள் ஆள் இல்லாத இருட்டுக்குள் அப்பாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அப்பா எவ்வளவோ கத்திக் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்காததால், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அப்பா தன் பாவாடையை மடித்துக் கட்டிக்கொண்டு, கீழே கிடந்த பெரிய கம்பை எடுத்து அந்த மூன்று பேரையும் வெறி பிடித்த மாதிரி அடித்திருக்கிறார். அடி தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் அலறி அடித்து ஓடிவந்ததைப் பார்த்ததும் கூட்டத்துக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்துக்கொண்டு வந்து ஆட்டம் நடந்த மைதானத்தில் முட்டி போடவைத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.

''ஏம்மா... பயலுவ நீ பொம்பளனு நினைச்சிட்டானுவோ போலிருக்கு. வாம்மா... இப்படி வந்து அத்தனையும் கழட்டிக் காட்டும்மா. அந்தப் பயலுவலுக்கு மூளை தெளியட்டும்!'' என்று மொத்த ஊருக்கும் முன்னால் அப்பாவிடம் பெண் வேஷத்தைக் கலைக்கச் சொல்லியிருக் கிறார்கள். அப்பா நடுநடுங்கிக்கொண்டே கூச்சத்துடன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டக் கழட்ட... ஊர் கைத் தட்டி யிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு அப்பா தன் உடலுக்குள் கையைவிட்டு இருதயம், நுரையீரல் என ஒவ்வொன்றாக எடுத்து அனைவர் முன்னும் பாவமாக வைப்பதுபோல இருந்ததாம். அனைத்து ஆடைகளையும் அவிழ்த்த பிறகு, 'எதற்கும்’ பயன்படாத ஒரு திடகாத்திரமான கறுத்த ஆண் அப்பாவிடமிருந்து வெளிப்பட்டதைப் பார்த்து, 'இங்க பாருடி... இந்தக் கருவாச்சி எப்படிப்பட்ட ஆம்பிளையா இருக்கான்னு’ என்று மொத்த ஊரும் வாயைப் பிளந்து நின்றிருந்திருக்கிறது. ஆனால், அப்பாவோ தோலை உரித்த கோழி யாட்டம் கூனிக் குறுகி உடல் நடுங்க நின்றிருந் தாராம்.

''அதான்... அத்தனையையும் ஊருக்கு மத்தியில அவுத்து, 'நான் பொம்பள இல்ல... ஆம்பிள’னு அப்பட்டமாக் காமிச்சிட்டியே, அப்புறம் எப்படி நீ இன்னும் பொம்பளையா ஆட முடியும்!'' என்று அதன் பிறகு அப்பாவைப் பெண்ணாக ஆட யாரும் அனுமதிக்கவில்லையாம். ஆணாக சும்மா துணைக்கு அவ்வப்போது ஆடச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அப்படி ஆடிக்கொண்டிருக்கும்போது ஒருநாள், 'ஏலே... அங்க பாருல கருவாச்சி எப்படிக் கருவாயனா மாறிட்டான்னு!’ என்று சில இளவட்டங்கள் கேலி பேசியிருக்கிறார்கள். அவ்வளவுதான். அப்பா எப்போதும் ஆடிக்கொண்டிருந்த, ஆடத் துடித்த, ஆட அழைத்த, ஆடக் கெஞ்சிய, தன் கால்களை வலுக்கட்டாயமாக அதட்டி, மடக்கி, ஒடுக்கி வெறுமனே நடக்கும், ஓடும், நிற்கும், நீட்டும் கால்களாக மட்டும் மாற்றிக்கொண்டாராம்.

இப்போதும் சொல்கிறேன்... எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எத்தனையோ சாவு வீடு களில், பள்ளியில், பொங்கல் விழாக்களில், கட்சிக் கூட்டங்களில், கல்லூரி கலாசார விழாக் களில், கடைசியாக சென்னை ஸ்டார் ராக் பப் என எல்லா இடத்திலும் என் அப்பாவைப் போலவே, ஒரு துளி சாராயம் கலக்காமல் வியர்வை சிந்த நான் ஆடிய ஆட்டம் அத்தனையும் என் அப்பா அடக்கி, ஒடுக்கி, ஆடாமல்வைத்திருந்த சம்படி ஆட்டம்தான்.

ஏனெனில், நான் ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரனின் மகன். ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரன்!

படம் : ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்

-'பரிவை' சே.குமார்

புதன், 26 ஜூன், 2013

எனக்குத் தமிழும் தெரியும், நடிக்கவும் தெரியும்: பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்திடம் இப்போது வெற்றியின் புன்னகை. கிருத்திகா உதயநிதி இயக்கும் "வணக்கம் சென்னை', ஐஸ்வர்யா தனுஷின் "வை ராஜா வை', விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படம் என அடுத்த உயரத்துக்கு ரெடியாகி விட்டார்.


ஒவ்வொரு படத்துக்கும் கவனம் எடுத்துக் கொள்வீர்கள்... கதை விஷயத்திலும் சாய்ஸ் சரியாக இருக்கும்... ஆனால் இப்போது கிளாமர் முகமும் காட்ட ஆரம்பித்து விட்டீர்களே.... என்ன பிளான்..?

கரெக்ட். யாருமே கவனிக்கலையேன்னு யோசித்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் இப்போது வம்புக்கு வந்து விட்டீர்களே..? சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். அதைத்தான் நானும் செய்துக் கொண்டு இருக்கிறேன். சினிமா நடிகை எல்லா தளங்களிலும் இயங்க வேண்டும். 

நான் செய்யும் கேரக்டர்களுக்கு போதுமான அளவுக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இனி அதை தாண்ட வேண்டும். அதை மட்டும்தான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். இந்தப் பொண்ணு என்னமா நடிக்குதுன்னு நாலு பேர் சொன்னாலே போதும். கல்யாணம் முடித்து எங்கேயாவது நான் வாழும்போதும் என்னை பற்றி மீடியாக்கள் எழுத வேண்டும். இதுதான் என் ஆசை. நான் கிளாமருக்கு வந்து விட்டேன் என்பதில் யாருக்கும் கவலை வேண்டாம். 

நான் வேண்டாம் என்று ஒதுக்கிய கதைகள் நிறைய இருக்கிறது. பிடித்ததில் மட்டுமே நடிக்கிறேன். இவர் ஹீரோ, அவர் ஹீரோவென எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை. முன்னணி இயக்குநர்கள் படத்தில்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதைத் தர தயாராக இருக்கிறேன். நல்ல கதை தந்தால் உங்களுடன் கூட ஜோடியாக நடிக்க தயாராக இருக்கிறேன். இது மாதிரி எந்த நடிகையாவது பேசுவாங்களா? சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக பார்க்காதீங்க!

சில பேர் கமர்ஷியல் பக்கம் மட்டுமே இருப்பாங்க. சிலர் எதார்த்தப் படங்களுக்கும் வருவாங்க. "எதிர்நீச்சல்' கமர்ஷியல் வெற்றி... இது உங்களை எந்த இடத்தில் வைக்கும்...?

ஓ.கே. நான் பாயிண்டுக்கு வருகிறேன். "இங்கிலீஷ் விங்கிலீஷ்' மாதிரியான படங்கள் மட்டுமே எனக்கு போதுமா? அதே மாதிரி நடித்தால் இந்த கேள்வியை "என்னங்க ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறீங்க?''ன்னு மாற்றி கேட்பீங்க. எனக்கு எல்லாமும் வேண்டும். "வாமனன்' படத்தைப் பற்றி நிறைய பேர் இப்போதுதான் பேசுகிறார்கள். "180'-ல் மாடர்னா வந்த போது நிறைய பேர் ரசித்தார்கள். 

இப்படி எல்லாப் படங்களுக்குமே வெவ்வேறு கலர் இருக்கும். மேக்-அப் இல்லாமல் அப்பாவித்தனமாக வந்து போக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை மட்டுமே வைத்து சினிமா கேரியரை நகர்த்த முடியாது. இதுவரை பார்க்காத பிரியாவை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் நீங்க கேட்குறீங்க. அதற்கான படங்களைத்தான் நானும் தேர்வு செய்து கொண்டு இருக்கிறேன். 

"என்னை இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்க...''ன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரவில்லை. பிடித்து வந்தேன். பிடித்ததில் நடிக்கிறேன். நீங்கள் கவலைப்படுகிற அளவுக்கு தவறான படங்கள் எதுவும் என்னிடம் இல்லை. எல்லாவற்றிலுமே என்னை ரசிக்கலாம்.

இருந்தாலும் "எதிர்நீச்சல்'தானே பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்திருக்கிறது...?

நான் மறுக்கவில்லையே? மற்ற நடிகைக்கு கிடைக்காத வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றுதான் எல்லோருமே எதிர்பார்ப்பார்கள். எனக்கு அப்படி கிடைத்த வாய்ப்புதான் "எதிர்நீச்சல்'. மிகப் பெரிய வசூல் படம் என்கிறார்கள். அப்படியான படத்தில் நான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. எதார்த்தப் படத்தை உருவாக்குவதை விட, நல்ல கமர்ஷியல் படத்தை உருவாக்குவதில்தான் சிரமம் இருக்கிறது. சிவ கார்த்திகேயன், நந்திதா, இயக்குநர் துரை செந்தில்குமார், அனிருத் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்த தனுஷ் எல்லோருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. நிச்சயம் "எதிர்நீச்சல்' எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது.


"வணக்கம் சென்னை', "வை ராஜா வை' இதுவெல்லாம் எப்படிப்பட்ட படங்கள்...?

இரண்டிலும் லைஃப் இருக்கிறது. காதலை மட்டும் பேசுகிற படமாக இல்லாமல் இவை வேறு மாதிரியாக இருக்கும். "வணக்கம் சென்னை' கதை சொல்லி கிருத்திகா நடிக்க கேட்டார்... அவர் சினிமாவுக்கு புதுசு. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார். நிச்சயம் நல்ல சினிமா கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து விட்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் நல்ல படம் காத்திருக்கிறது. எனக்கு ஐஸ்வர்யாவின் "3' படம் ரொம்பவே பிடிக்கும். சில விஷயங்கள் அதில் தவறியிருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி ஒரு ஃபீல் இருந்தது. அதில் தவற விட்டதை, இதில் கொண்டு வர ரொம்பவே மெனக்கெடுகிறார். "வை ராஜா வை' என்கிற தலைப்பை பார்த்தால் காமெடி படம் மாதிரி தெரியும். ஆனால் இது சீரியஸ்.

தெலுங்கு, ஹிந்தியென நிறைய வாய்ப்புகள் வந்தும் தமிழில் மட்டுமே நடிக்கிறீர்களே.... எதாவது ஸ்பெஷல் காரணமா...?

நான் தமிழ் பொண்ணு. அதை விட என்ன காரணம் வேண்டும்? தென்னிந்தியாவில் எல்லா மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எனக்கு தமிழ் சினிமாதான் பிடித்திருக்கிறது. எனக்கு இங்கே நல்ல பெயர் இருக்கிறது. நல்லா நடிப்பேன்னு எல்லோருக்கும் தெரியும். அதை கடைசி வரைக்கும் விட்டு விடக் கூடாது. மற்ற சினிமாக்களில் நடித்து விட்டு, இங்கே வந்து நடிக்கலாம். அங்கே என் நடிப்பும், வாழ்க்கையும் மாறலாம். நான் அங்கே அப்படியெல்லாம் நடிக்கவில்லையென உங்களிடம் பொய் சொல்லலாம். அந்த மாதிரி சூழல் எனக்கு வேண்டாம். கதையை கூட நான்தான் கேட்கிறேன். கதை கேட்க ஒரு ஆள். கால்ஷீட் கொடுக்க ஒரு ஆள்ன்னு நான் வைத்துக் கொள்ளவில்லை. முக்கியமாக எனக்கு தமிழ் தெரிகிறது. நடிக்கவும் தெரிகிறது. ஸோ... தமிழில் நடித்தால் பிரச்னை இல்லை.

ஹிந்தி சினிமாதானே எல்லோருக்கும் கனவு... அங்கேகூட நடிக்க மாட்டீர்களா...?

அதற்கு நான் இன்னும் தயார் ஆகவில்லை. கன்னடம், தெலுங்கு என சில சினிமாக்கள் நடித்திருக்கிறேன். ஹிந்தியில் என் படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. சொல்லப் போனல் எனக்கு எல்லா கலாசாரமும் தெரியும். பிறந்து வளர்ந்தெல்லாம் நம்ம மயிலாடுதுறை பக்கம் என்றாலும், படித்ததெல்லாம் வெளிநாடுகள். கன்னடத்தில் நல்ல சினிமாக்களில் மட்டுமே நடிக்கிறேன். ஹிந்தியிலும் என் கேரியர் நல்லாவே இருக்கிறது. தமிழில் கை நிறைய படங்கள் இருப்பதால், மற்ற சினிமாக்களை பற்றி யோசிக்கவில்லை.

காதல் கல்யாணத்தில் நம்பிக்கை உண்டா...?

காதல் திருமணத்தில் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு டைம் இல்லை. எனக்கு பிடித்த ஆள் எந்த துறையில் இருந்தாலும் காதலிப்பேன். அந்த காதலுக்காக காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சினிமாவில் இருந்ததற்காக ஒரு நேஷனல் அவார்டு என் வீட்டில் இருக்க வேண்டும். அது வந்த பின் காதல், கல்யாணம் பற்றி யோசிப்பேன். நம்பிக்கை பற்றியெல்லாம் பேச நான் பெரிய ஆள் இல்லை.

நன்றி : தமிழ் பத்திரிக்கை.
-'பரிவை' சே.குமார்

அபுதாபியில் இருந்து....


வணக்கம்.

ஊரில் இருந்து வந்து பத்து நாளாகியும் இந்த முறை ஊர் நினைப்பும் ஊருக்கே மீண்டும் போய்விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கித்தான் நிற்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த எண்ணம் தோன்றினாலும் இந்த முறை பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. அதற்கான முயற்சியாக சில நண்பர்களிடம் எனது பயோடேட்டா கொடுத்து நல்ல வேலையாக வந்தால் பாருங்கள் என்றும் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.

எத்தனை கஷ்டப்பட்டாலும் நமக்குன்னு ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. உறவுகளும் நட்புக்களும் வந்து சிறப்பிக்க எங்கள் இல்ல புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது. கடனை நினைத்து பயமாக இருந்தாலும் குழந்தைகளின் சந்தோஷம் மனசுக்கு நிறைவைக் கொடுத்தது.

எங்கள் இல்ல விழாவிற்கு மின்னஞ்சலில் நான் அனுப்பிய அழைப்பை ஏற்று மதுரையில் இருந்து தனது துணைவியாருடன் வந்திருந்து வாழ்த்திய சீனா ஐயா அவர்களுக்கு எங்களின் நன்றிதனை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.அன்றைய தினத்தில் அவருடன் அதிக நேரம் பேசமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் வருகிறேன் என்று சொன்ன சில நட்புக்களும் உறவுகளும் வரவில்லை எனினும் என் நண்பர்கள் தேனி, நாகர்கோவிலில் இருந்து வந்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

யார் வரவேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்தேனோ அந்த நண்பனுக்கு இங்கிருந்து மின்னஞ்சல் செய்தேன். ஊரில் போய் அவரது இரண்டு நம்பருக்கும் முயற்சித்து முயற்சித்துத் தோற்றேன். விழா முடிந்த மறுநாள்தான் அவரைப் பிடிக்க முடிந்தது.நீண்ட நேரம் பேசினோம். அதன்பிறகு வேலைப்பளுவில் போன் பண்ணமுடியாமல் போக அவரும் போன் பண்ணவில்லை.நண்பேன்டா...

இன்னும் சகஜ நிலைக்கு வரவில்லை என்பதால் வலைப்பூ பக்கம் வரவில்லை. இருந்தும் இங்கு வந்து நா.பார்த்தசாரதியின் துளசிமாடம், சு.சமுத்திரத்தின் கல்தூண் மற்றும் ஒற்றைவீடு ஆகிய நாவல்களைப் படித்ததில் நாவல்கள் மீது ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. தற்போது என் நண்பன் பேராசிரியர் கரு. முருகனின் இரு சிறுகதைத் தொகுப்புக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு அனுபவம் சுகமாய் இருக்கிறது.

எனது முதல் தொடர்கதையான கலையாத கனவுகளை தொடர்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். விரைவில் தொடர முயற்சிக்கிறேன்.

மீண்டும் உங்களை சந்திக்கும் மகிழ்வுடன்....
-'பரிவை' சே.குமார்.