மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 ஆகஸ்ட், 2017

இந்திரா சௌந்தரராஜனின் 'கோட்டைப்புரத்து வீடு'

Image result for கோட்டைப்புரத்து வீடு

கோட்டைப்புரத்து வீடு...

நம் தமிழகத்தில் வீடுகளுக்கு... குறிப்பாக கிராமங்களில் வீடுகளுக்குப் பெயர் உண்டு என்றாலும் அதை நாம் எங்கும் பயன்படுத்துவதில்லை. ஆனால் கேரளாவில் நமக்கு நேர்மாறாக வீட்டின் பெயரை பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லா இடத்திலும் தங்கள் பெயருக்குப் பின்னே பயன்படுத்துகிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் மலையாளிகளில் ரபீக் வைத்தேக்காரன், முகம்மது குட்டி புதுப்பரம்பில் என்ற பெயர்கள் உண்டு. இது எதுக்கு இந்தப் பெயர் ஆராய்ச்சி என்று தோன்றுகிறதல்லவா... இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நாவல் 'கோட்டைப்புரத்து வீடு'. எத்தனையோ மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட கதையின் பிரதான பாத்திரம் இந்த வீடு. அதாவது கோட்டைப்புரத்து அரண்மனை... அங்கு நடக்கும் நிகழ்வுகளே கதையின் மையப்புள்ளி... நாவலைப் படிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து வாசிக்கச் சொல்லும் விறுவிறுப்பு... அடுத்தது என்ன என்ற பரபரப்பு... போன்றவை வாசிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன.

'இந்தக் கோட்டைப்புரத்து வீடு அன்றைய சரித்திரமும் இன்றைய சமூகமும் கைகோர்த்து நடந்த ஒரு கற்பனை, அதனூடே மர்மத்தைப் புதைத்து, கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அந்த மர்மம் கலையாமல் நான் செயல்பட மிகுந்த சிரத்தை எடுத்தேன்' எனவும் 'பெண்ணைப் போதைப் பொருளாகவே கருதும் காலம் இன்னும் மலையேறவில்லை. சுருட்டு விளம்பரத்தில் கூட சம்பந்தமேயில்லாத அவர்களின் திறந்த மார்பு கவர்ச்சிப் படங்களாய், நம் தேசம் இன்னும் அம்மட்டில் தலைநிமிரவும் இல்லை. ஆகையால் என் படைப்புக்களில் அவர்களைப் பிரதான பாத்திரங்களாக்கி, ஆணுக்குச் சமமாக - சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கும் மேலாகவே கொண்டு சென்று விடுவதுண்டு' எனவும் 'பலர் இது நிஜ சம்பவமா? என்று கேட்டனர். அந்த அளவு இது மற்றவர்களை நினைக்க வைத்தபோது என் நெஞ்சு தானாக நிமிர்ந்தது. பரவாயில்லை - ஒரு கற்பனையைக் கூட நமக்கு நிஜம் போல் சொல்லத் தெரிகிறது என்று செருமாந்தேன்' எனவும் ஆசிரியர் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இதில் அவர் சொல்லியிருப்பவை எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பதை நாவலை வாசித்து முடிக்கும் போது உணரலாம்.

மதுரைக்குத் தெற்கே 40 மைல் தொலைவில் இருக்கும் கோட்டைப்புரத்து ஜமீனுக்கு ஒரு சாபக்கேடு. அதன் ஆண் வாரிசு தனது முப்பதாவது பிறந்தநாளில் இறக்கும் என்பதுதான் அந்தச் சாபம்... அப்ப பெண் வாரிசு அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற காலம் காலமாக பாதுகாத்து வரும் மூங்கில்பெட்டியை பெண் வாரிசுதான் திறக்க வேண்டும். ஆனால் பெண் குழந்தைகள் பிறப்பதில்லை அப்படியே பிறந்தாலும் குறிப்பிட்ட வயது வரை உயிரோடு இருப்பதில்லை. முப்பது வயதில் உயிரைவிடக் கூடிய சாபம் வரக் காரணம் பெண் சபலம்... சாபம் கொடுத்தவள் வஞ்சியம்மா என்ற நூறுகுடிக் கூட்டத்துப் பெண். உண்மையில் இது சாபம்தானா..? இல்லை சதிவேலையா என்பதை விறுவிறுப்பாக அடுத்து என்ன... அடுத்து என்ன... என்ற ஆவலோடு படிக்க வைக்கும் கதைதான் கோட்டைப்புரத்து வீடு.

இராணி ரத்னாவதியின் கணவன் வேங்கைராஜன் முதல் கொண்டு அடுத்து வந்த வாரிகள் அனைவருமே மனைவியிருக்க மற்ற பெண்களை தங்களது காம இச்சைக்கு பலியாக்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரட்டையர்களான வேங்கைராஜன், சிம்மராஜன், வேங்கைராஜனின் வாரிசுகளான இந்திரராஜன், சந்திரராஜன் என இது வாழையடி வாழையாக காமமும் அதற்கான வேட்டையும் தொடர்கிறது. 

இவர்கள் தங்களது காம இச்சையை, கோட்டைப்புரத்து சமஸ்தானத்துக்கு வேலை செய்வதற்கென்றே அதனருகிலேயே குடிசைகள் போட்டுத் தங்கியிருக்கும் நூறுகுடிக் கூட்டத்துப் பெண்களிடம்தான் தீர்த்துக் கொள்கிறார்கள். அதுவும் எப்படித் தெரியுமா? திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைச் சீர் வரிசையுடன் ராஜாக்கள் பெரும்பார்வை பார்க்க எனக் கூட்டி வந்துவிட, இவர்கள் அந்தப் பெண்ணை வேட்டையாடி மகிழ்கிறார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் பெயர் 'இராஜப் பிரசாதம்'. மேலும் விருப்பப்பட்ட பெண்ணை எப்படியும் தங்களது கட்டிலுக்குக் கொண்டு வரத் தயங்கமாட்டார்கள். இவர்களுக்கு எடிபிடி வேலை செய்ய குழந்தைச்சாமி போன்ற சிலரும் இருக்கிறார்கள்.

நூறுகுடிக் கூட்டம் ஜமீனை விட்டு வெளியே போகக்கூடாது என்ற சட்டதிட்டம் இருக்க, நாட்டுப்பற்றுக் கொண்ட நண்டுவடாகன் வெள்ளையர்கள் எதிர்ப்புக் கூட்டங்களுக்குப் ஜமீனுக்குத் தெரியாமல் போய் வருவது தெரிய, மூன்று நாட்களுக்கு அன்னந்தண்ணி கொடுக்கக்கூடாது என்று சொல்லி வேங்கைப்பொன்னி கோவில் வாசலில் கட்டிப் போடப்படுகிறான். அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளால் சில நாட்களில் சிம்மராஜனால் நாக்கறுக்கப்படுகிறான். இதை அறிந்த அவனின் மனைவி வஞ்சியம்மா கோபத்தில் கோவில் வாசலில் தனது தாலிச் சரடை வெட்டிப் போட்டுவிட்டு போலீஸ் பிடித்துச் சென்ற கணவனைப் பார்க்க , கைக்குழந்தையோடு ஓடி வருகிறாள். 

அவளை மறித்து பிரச்சினை செய்யும் வேங்கைராஜனிடமிருந்து தப்பி மீண்டும் கோவிலுக்கே ஓடுபவளைத் துரத்தி வந்து கோவிலில் வைத்துக் கெடுத்து விடுகிறான். வேங்கையிடம் அகப்பட்ட மானைக் காப்பாற்ற நினைத்த ஊருக்குள் அவளது குழந்தையுடன் ஓடும் பூசாரி, மக்களுடன் திரும்பி வரும்போது கோவில் மணி கட்டிய இரும்புச் சங்கிலில் வஞ்சியம்மா பிணமாகத் தொங்க, பூசாரியிடமும் மற்றவர்களிடமும் பிறந்தும் பெற்றவர்களை முழுங்கிருச்சு என்ற அவப்பெயரோடு வளர்கிறான் அவளின் மகன் விருச்சிகமணி. தங்களது முப்பதாவது பிறந்தநாளில் ஆங்கிலேயன் கொடுக்கும் விருந்துக்குச் செல்லும் வேங்கைராஜனையும் சிம்மராஜனையும் காட்டுப்பாதையில் புலி தாக்கிக் கொள்கிறது.

நூறுகுடிக் கூட்டத்தில் ஒரு அழகி... சதா சர்வகாலமும் காட்டு விலங்குகளுடன் வாழ்க்கை நடத்தும் யாருக்கும் பிடிக்காத தன் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் மீது அவளுக்குக் காதல்... இதை அறிந்த ரத்னாவதி, அரண்மனையில் இருந்து சீர் செய்து திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஆனால் அந்த அழகியை புலியிடமிருந்து காப்பாற்றிய போது அவளின் அழகில் மயங்கிக்கிடந்த இந்திரராஜனும் சந்திரராஜனும் அவளை அனுபவிக்கத் துடித்து இராஜபிரசாதமாக அவள் வேண்டும் எனச் சொல்கிறார்கள், இதை அறிந்த அழகியோ ராணியிடம் நியாயம் கேட்கிறேன் என்று போய் இந்திரராஜனால் கற்பழிக்கப்படுகிறாள். இதனால் கோபமும் வருத்தமும் கொண்ட ரத்னாவதி இந்திரராஜனுக்கு இரண்டாம் தாரமாக அவளைக் கட்டி வைக்கிறாள். அந்த அழகிதான் விருச்சிக மணியின் காதலி பாண்டியம்மாள். 

நூறுகுடிக் கூட்டத்தில் பெண் வயதுக்கு வந்தால் முதலில் கோட்டைப்புரத்து வீட்டுக்குத் தகவல் சொல்லி அவர்கள் கொடுக்கும் நூறு படி அரிசியில் பால் அப்பம் செய்து எல்லாருக்கும் கொடுத்து பெரியவளான செய்தியை சொல்லி, தாய்மாமனோ அல்லது முறைப்பையனோ பச்சை ஓலை கட்ட நீராட்டுவார்கள். அப்படி வயதுக்கு வந்த ஒரு பெண், தனது தம்பி மற்றும் அம்மாவுடன் வேங்கைப்பொன்னி ஆலையம் செல்லும் முன்னர் ராணி ரத்னாவதியிடம் ஆசி வாங்க மேளதாளத்துடன் வர, அவளைப் பார்க்கும் சந்திரராஜனிடம் திவான் குழந்தைச்சாமி தூபம் போடுகிறான். சந்திரராஜன் தயங்க அவனை மெல்லக் கரைத்து சம்மதிக்க வைக்கிறான்.  தனது அம்மாவையும் தம்பியையும் கட்டி வைத்து அவர்கள் முன்னிலையில் சீரழிக்கப்படுகிறாள். தான் இனி உயிருடன் இருப்பதில் பலன் என்ன இருக்கு என்று நினைத்து அந்த அபலை கத்தியால் தன்னைக் குத்திக் கொண்டு உயிரை விடுகிறாள். அந்த அபலைப் பெண் பூவாத்தா.

இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட பாண்டியம்மாள் கருவுற்றிருக்கும் போது மற்ற ராணிகளால் துன்புறுத்தப்பட்டவள் தொடர்ந்து வேதனையை அனுபவித்து வருகிறாள். தனது முப்பதாவது வயதில் மரக்கிளை முறிந்து விழுந்து இந்திரராஜன் இறக்க, சந்திரராஜனோ தனது முப்பதாவது வயதில் சாரட்டில் போகும்போது குதிரை தறிகெட்டு ஓடிய விபத்தில் இறக்கிறான். இதன் பின் எல்லாம் மாற, நூறுகுடிக் கூட்டத்தில் இருந்து ஜமீனுக்கு மருமகளாய் வந்த பாண்டியம்மாளுக்கு மதிப்புக்கூடி பெரியராணியாகிறாள்.

மேலே சொன்ன கதைகளில் பூவாத்தா கதை தவிர மற்றவை  நூறுகுடிக் கூட்ட கிறுக்கன் விஷ்ணுசித்தன் என்பவனால் சொல்லப்படுகிறது. பூவாத்தா கதை இறுதிக் கட்டத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கதைகளை யார் சொல்கிறார்கள்..? எதற்காகச் சொல்கிறார்கள்..? யாரிடம் சொல்கிறார்கள்..? என்பதைச் சொன்னால் சஸ்பென்ஸ் போயிரும்ல்ல... அதனால கதையை வாசிச்சித் தெரிஞ்சிக்கங்க.

கோட்டப்புரத்து இளைய வாரிசு விசு என்கிற விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தான், இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஊரில் ஏதாவது தொழில் செய்ய நினைப்பவன். விசுவின் அண்ணன் கஜேந்திர ரூபசேகர கோட்டைபுரத்தானும் தன் முன்னோரைப் போல சல்லாப சபலத்தில் கிடக்கிறான். விசு வெளியூரில் இருந்து திரும்பும் அன்று அதாவது தனது முப்பதாவது பிறந்தநாளில் வேங்கைப் பொன்னி கோவிலில் சாபத்துக்கு பலியாகாமல் இருக்க பூஜை செய்யும் போது பாம்பு கடித்து இறக்கிறான் கஜேந்திரன். அடுத்த சாவு விசுதான் என்பதை பத்திரிக்கைகள் பறைசாற்ற,  அல்பாயுசுக்கு உன்னை கட்டிவைக்க மாட்டேன் என அப்பா சொல்ல, உயிரை இழந்ததுபோல் துடிக்கிறாள் விசுவின் காதலி அர்ச்சனா. 

அதன்பின் அப்பாவுக்குத் தெரியாமல் கோட்டைப்புரத்துக்கு வரும் அர்ச்சனா அங்கு நிகழும் சில கொலைகளையும் அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து விசுவைக் காப்பாற்ற முனைகிறாள். அவளின் செய்கைகளுக்கு எதிர்ப்பு வருகிறது. அந்த எதிர்ப்பில் இருந்து விசுவைக் காப்பாற்றினாளா? உண்மையில் வஞ்சியம்மாவின் சாபம்தான் பலி வாங்குகிறதா...? இல்லை விருச்சிகமணி, பூவாத்தாவின் தம்பி, விஷ்ணுசித்தன் அல்லது கதை கேட்டவர் என இவர்களில் யாரேனும் கொலை செய்கிறார்களா..?

கதையில் கோட்டைப்புரத்து ஜமீனில் எல்லாரும் மதிக்கும் தேவர், இந்திரராஜனின் மற்றொரு மனைவி திவ்யமங்களம், திருமேனித்தேவர், கார்வார் சிவக்கொழுந்து, சிவக்கொழுந்து மகன் கார்வார் கருணாமூர்த்தி, பூசாரி பொன்னம்பலம், கஜேந்திரன் உயிரைக் காப்பாற்றப் போய் உயிரை விடும் பாண்டிக்குட்டி, பாண்டிக்குட்டி சாவுக்கு எதிர்த்துப் பேசி ஜெயிலுக்குப் போகும் இருசன், பாண்டிக்குட்டியின் அக்கா செல்லம்மாள், செல்லம்மாளின் கணவன் சோலை, கோடாங்கி வீரநாட்டார், தேவரின் பி.ஏ. தில்லைநாயகம், கஜேந்திரனின் மனைவி வளையாம்பிகை, அர்ச்சனா வீட்டு வேலைக்காரி வசந்தி, விசுவுக்கும் அர்ச்சனாவுக்கும் உதவியாய் இருக்கும் வடிவேலு, அர்ச்சனாவின் தோழியுடைய டாக்டர் அக்கா, மாடுமுட்டி இறக்கும் இலங்கைக்காரன், நூறுகுடி கூட்டத்து ஆட்கள், அர்ச்சனாவின் அப்பா, பத்திரிக்கைக்காரர்கள், போலீஸ்... இன்னும் இன்னுமாய் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், எல்லாமே கதையோடு பிண்ணிப் பிணைந்து பயணிப்பதால் கதையை விரிவாச் சொன்னால் பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

ரத்னாவதிக்கு மட்டும் தெரிந்த தங்க, வைரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் உண்டிக்குழி என்னாச்சு..? அதன் சாவிகள் யாரிடம் இருந்தன..? தன் அக்காவின் குழந்தையை காப்பாற்றச் சொல்லி உயிரிழந்த பாண்டிக்குட்டிக்கு கொடுத்த வாக்கை அர்ச்சனா காப்பாற்றினாளா..? வளையாம்பிகை வயிற்றில் இருந்த குழந்தை ஆணா... பெண்ணா..? மூங்கில்பெட்டி திறக்கப்பட்டதா..? அதற்குள் இருந்தது என்ன...? போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட இருசன் திரும்பினானா...? விருச்சிகமணி என்ன ஆனான்...? குழந்தைச்சாமிக்கு தண்டனை கிடைத்ததா..? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கான பதிலை மிகவும் விறுவிறுப்பாய் அமானுஷ்யமாய் 328 பக்கங்களில் சொல்லிச் செல்கிறது கோட்டைப்புரத்து வீடு.

அமானுஷ்ய விரும்பிகள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 26 ஆகஸ்ட், 2017

மனசின் பக்கம் : சுமைகளும் சுமையாவும்...

முதல்லயே சொல்லிடுறேன்... என் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் பதிவுகளையும் படித்துவிடுகிறேன். கருத்து இடுவதில்தான் சிக்கல்... தட்டச்சு செய்து பதியும் கருத்து எங்கு போகிறது என்றே தெரியவில்லை. இதனால் சில நாள் முன் அலுவலகத்தில் இருந்து சிலருக்கு கருத்து இட்டுப் பார்த்தேன். கருத்து காணாமல் போகவில்லை... அதிலிருந்து எனது கணிப்பொறியில்தான் பிரச்சினை என்பதை அறிந்து கொண்டேன். இன்றும் சிலருக்கு கருத்து இட்டேன்... யாருக்குமே கருத்துச் சென்றதாகத் தெரியவில்லை. கணிப்பொறிக்கு வயசாயிருச்சு... உள்ளே ஏதோ பிரச்சினை... தளங்கள் திறப்பதிலும்... அட ஏன் முகநூல், ஜிமெயில் என எது திறந்தாலும்தான் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பலமுறை கணிப்பொறியை ஸ்கேன் பண்ணியாச்சு... வைரஸார் எவரும் உள்ளுக்குள் இல்லை... கூகிள் குரோமையும் தூக்கிட்டு பலமுறை புதிதாய்ப் போட்டுப் பார்த்தாச்சு... ம்ஹூம்... ஒண்ணும் நடக்கலை. சரியாகுமா தெரியலை... அதனால கருத்து வரலையேன்னு யாரும் நம்ம கடைப்பக்கம் வராம இருந்துடாதீங்க...உங்கள் எழுத்துக்களை வாசித்து விடுகிறேன்... என் வார்த்தைகள்தான் வழி தவறிப் போய் விடுகின்றன.

நெருஞ்சியும் குறிஞ்சியும் அப்படின்னு ஒரு தொடர்கதை இங்க எழுதிக்கிட்டு இருந்தேன்... உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கா தெரியலை. பாதிக் கிணறு தாண்டும் முன்னர் அதை நிறுத்திட்டேன். சரி இங்க எழுதாட்டியும் கதையையாவது எழுதி முடிச்சிடலாம்ன்னு நினைச்சிருக்கேன்... ஆனா இப்ப என்னவோ தெரியலை உக்காந்து எழுத மனசு வரலை... அதனால் அந்தத் தொடர்கதை மொட்டைக் கோபுரமாட்டம் முழுமையடையாமல் இருக்கிறது. விரைவில் எழுதி முடிக்கணும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. முடியுமா தெரியல... அதற்கு இடையில் இன்னொரு தொடர்கதை... (சத்தியமா இங்கு பதியமாட்டேன்... கவலைப் படாதீங்க...) எழுதலாம் என்ற எண்ணம்... அதற்கான ஆரம்பமாய் முதல் பகுதி எழுதிவிட்டேன்... சற்றே வித்தியாசமாய்... சாவை எதிர் நோக்கிக் கிடக்கும் ஒரு மனிதன் தன்னோட வாழ்நாளில் சந்தித்த மறக்க முடியாதவர்களின் சாவைப் பற்றி நினைப்பதாய்.... 12 அல்லது 15 பகுதிகளாக எழுத எண்ணம்... கொஞ்சம் வரலாற்று விவரங்கள்... நாட்டுப்புற பாடல்கள்... இப்படி சேர்த்துக்கலாம்ன்னு எண்ணம்... ஆனா சந்தோஷமான கதையாக இல்லாமல் ஒவ்வொரு சாவும் சொல்லிச் செல்லும் கதையாக இருக்கும். பார்க்கலாம்... விரைவில் எழுதி முடிக்க எண்ணமிருக்கிறது... மனசு ஒத்துழைக்கணும்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் நிலை வந்து இன்னும் மீளமுடியாத நிலையில் மனைவியின் உடல்நலமும் இன்னும் சீராகவில்லை. அருகில் இருந்து பார்த்துக் கொள்ள ஆசையிருந்தும் வாழ்வின் வருத்தமிகு பக்கங்கள் நிறைந்த நிலையில் பொருளாதார சிக்கலில் சுழன்று அதற்கேனும் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக வருத்தங்களைச் சுமந்து இங்கு கிடக்க வேண்டியிருக்கு... அவருக்கு  டெங்குக் காய்ச்சல் வந்து நாலைந்து வருடம் ஆன பின்னாலும் காய்ச்சல் வந்தவுடன் பிரஷர் குறைந்து விடுகிறது. சென்ற வாரத்தில் காய்ச்சல் வர, பிரஷர் 40க்கும் கீழ் இறங்கிவிட்டது. பின்னர் ஊசி, குளுகோஸ்... தொடர் மருத்துவம் என உடல் நலம் கொஞ்ச தேறினாலும் வியர்வை அருவி நிற்கவில்லை.... ஒரு நாளைக்கு நாலைந்து டிரஸ் மாற்றும் அளவுக்கு வியர்வையில் குளிக்கிறார். யாரும் பார்க்க ஆளில்லை என்று ஆதங்கப்படுவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. இப்போதைக்கு குழந்தைகள் மட்டுமே பாதுகாவலாய்... ஆனால் குழந்தைகள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது. இந்த வியர்வை அருவியை நிறுத்துவதற்கு ஏதேனும் மருத்துவ முறைகள் இருந்தால் சொல்லுங்களேன்.

வேரும் விழுதுகளும் மற்றும் கலையாத கனவுகள் தொடர்கதைகளை புத்தகமாக்க வேண்டும் என தேவா அண்ணன் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். வேரும் விழுதுகளும் மொத்தம் எத்தனை பக்கம் வரும் என சில மாதங்களுக்கு முன்னர் கணேஷ்பாலா அண்ணனுக்கு அனுப்பிக் கேட்டு வைத்திருக்கிறேன். மீன் பிடிக்க ஆசைதான்... கையில் சரியான வலை இல்லையே... ஓட்டை வலையை வைத்துக் கொண்டு எப்படி மீன் பிடிப்பது. சில வருடங்களாக புத்தகம் போட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதும் பொருளாதாரம் அதைப் பிடித்துக் கீழே இறக்கிவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எது எப்படி என்றாலும் ஒரு தொடர்கதையை நாவலாகவும் சில சிறுகதைகளைத் தொகுப்பாகவும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை விருட்சமாய் மனசுக்குள்... நேரமும் காலமும் கூடி வருகிறதா என்பதை பொறுத்திருந்து  பார்க்கலாம். யாரேனும் இந்த இரண்டு தொடர்கதைகளையும் வாசித்து தவறுகளைச் சுட்டிக்காட்டி, இன்னும் எப்படி மேம்படுத்தலாம் எனச் சொல்ல முடியும் என்றால் சொல்லுங்கள் அனுப்பித் தருகிறேன் திருத்தித் தாருங்கள்... நான் விருப்பப்பட்டு சிலரிடம் கொடுத்து அதை அவர்கள் எடுத்துக்கூட பார்க்கவில்லை என்பது வருத்தமே.

விவேகம் எனக்குப் பிடித்திருந்தது... தொடர்ச்சியான கதை அமைப்பு இல்லாத, அடிக்கடி மாறும் காட்சிகள் என எடிட்டிங்கில் சொதப்ப, கேமராவை ஆட்டி ஆட்டி படம் பிடித்திருக்கும் கலையும் சேர்ந்து கொண்டாலும் கலைப்பட விரும்பிகளுக்கு பிடிக்காது என ராஜ சுந்தரராஜன் அண்ணா அவர்கள் விமர்சனத்தில் சொன்னது போல நான் கலைப்பட விரும்பி இல்லை என்பதால் பிடித்திருந்தது. விரிவான விமர்சனம் எழுதினால் அஜீத்தை பிடிக்கும் என்பதால் பாஸிட்டிவ் விளம்பரம் என்று சொல்லி சிலர் சண்டைக்கு வரலாம்... எனவே ஆங்கிலப் படத்துக்கு நிகரான ஒரு படம் தமிழில்... குடும்பமும் பார்க்கும் வேலையும் என கலந்து கட்டி நகர்த்திச் செல்லப்படும் கதை... விருப்பம் இருந்தால் பார்க்கலாம்.

டுத்த வாரம் பக்ரீத் வருவதால் வாரவிடுமுறையுடன் ஒரு நாள் கூடுதல் விடுமுறையாய் கிடைக்கும். எங்கு செல்வது...? என்ன செய்வது...? என்ற எந்தப் பிளானும் இன்றி அறையில் கிடக்கப் போகிறோம் என்ற நினைப்பை அதெல்லாம் இல்லை சனிக்கிழமை மாலை ஒரு பெரிய விழாவை முன்னின்று நடத்த வேண்டும்... நீங்க எல்லாரும்தான் வேலை பார்க்க வேண்டும் என்று கனவுப் பிரியன் அண்ணாவின் ஆணை... ஆம் அவரின் 'சுமையா' சிறுகதைத் தொகுப்பு அபுதாபியில் ஒரு வெளியீடு காண இருக்கிறது. அரபு தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் மரம் போல வளர்ந்து நிற்கும் எழுத்தாளர் குழாமைச் சந்திக்க ஒரு வாய்ப்பு. அரப் உடுப்பியில் நடக்க இருக்கும் இந்த விழாவில் பிரபல எழுத்தாளர்கள் (அபுதாபி வாழ் மக்கள்) பேச இருக்கிறார்கள். அதனால் சனிக்கிழமை ஒரு சந்தோஷ நாளாக அமையுமென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... அப்புறம் அபுதாபி வாழ் மக்கள் விழாவுக்கு மறக்காம வந்திருங்க...

-'பரிவை' சே.குமார். 

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மனசு பேசுகிறது :எது சுதந்திரம்?

Image result for எது சுதந்திரம்?


ம் 71வது சுதந்திர தினத்துக்கு எதிராக முகநூலிலும் வாட்ஸப்பிலும் டுவிட்டரிலும் பதிவுகள் வந்து குவிந்து கொண்டிருந்த தினத்திற்கு மறுநாள் எழுதிய பகிர்வு.. முழுமை பெறாமலும் மற்ற சில வேலைகளினாலும் பகிர முடியவில்லை. ரெண்டு நாள் சர்வே பணி நடக்கும் இடங்களுக்கு பார்வை இட சர்வே இஞ்சினியருடன் சென்று வெயிலில்... அந்த சுடு மணலில் வீதி வீதியாக சுற்றிவிட்டு வந்ததால் இன்று அலுவலகத்தில் ஓய்வாய்... லெபனானிகள் எல்லாம் புதிய புராஜெக்ட் மீட்டிங்கிற்குப் போய்விட, எது சுதந்திரத்தை சுதந்திரமாய் பட்டி பார்க்க முடிந்தது.

எதிர் பதிவுகள் என்பது அவரவர் விருப்பம் என்றாலும் நாம் இந்தியர்கள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லேயே... ஆயிரம் வெறுப்புக்கள் இருந்தாலும் நம் நாட்டின் சுதந்திர தினம் என்பது கொண்டாடக் கூடியதே தவிர, கேவலமான பதிவுகள் இட்டு தரம் தாழ்த்த அல்ல... இது அஹிம்சையால் கிடைத்த சுதந்திரம் என்பதைச் சொல்லுவதில் எத்தனை சந்தோஷம் இருக்க வேண்டும்... இதில் எதற்கு வேதனைகளும்... வெட்கக்கேடுகளும்... எத்தனை நாடுகள் அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றிருக்கின்றன..? இன்னும் எத்தனையோ நாடுகள் அடிமைகளாய் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கின்றன..

உலகின் உயரமான கட்டிடமான துபை புர்ஜ் கலிபா நம் தேசியக் கொடி அலங்கார விளக்கை தன்மேல் போர்த்தி ஜொலித்தது... அழகாய்ச் சிரித்தது... நயகரா நீர் வீழ்ச்சியில் நம் தேசியக் கொடி விளக்கொளியில் ஜொலித்தது. சிங்கப்பூரில் மிகப்பெரிய சிசிடிவி திரையில் நம் கொடி பறந்தது. போர்ப்பதட்டம் நிறைந்த இந்திய சீன எல்லையில் சீன ராணுவ வீரர்களுக்கு இனிப்புக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலும் அதுபோலவே... அப்படியிருக்க நாம் எத்தனை எத்தனை வன்மங்களை இணையத்தில் விதைத்துக் கொண்டிருந்தோம் அந்த நாளில் என்பதை இணையம் சொல்லுமே.

இன்று இணையவெளி என்பது நல்லதைவிட அதிகம் கெட்டதையே போதிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சாதீய விஷங்களையும் மத ரீதியாக வன்மங்களையும் விதைக்கும் இடமாகவே இருக்கின்றது. முகநூலிலும் டுவிட்டரிலும் சாதிக் குழுக்களும் மதக் குழுக்களும் மலிந்து கிடக்கின்றன. பிக்பாஸ் ஜூலி நம்ம சாதி, அவரைச் ஜெயிக்க வைக்க நம்மவர்கள் எல்லாம் மறக்காமல் வாக்களியுங்கள் என எனக்குத் தெரிந்த பத்திரிக்கைத் துறையில் உள்ள நண்பர் பகிர்ந்திருந்தார். அதேபோல் அடுத்த மதத்தினர் குறித்து தரமற்ற வரிகளை வாந்தி எடுத்து வைப்பவர்களும் அதிகம்... சாதிகள் குறித்த பகடிகளுக்குப் பஞ்சம் இல்லை. இதில் என்ன சுதந்திரம் இருக்கிறது... எழுத்துச் சுதந்திரமா...? இல்லை கருத்துச் சுதந்திரமா..?

இந்தியா எனக்கு என்ன பண்ணுச்சு... பல் விளக்கி விட்டுச்சா.. பால் கொடுத்துச்சான்னு ஏகப்பட்ட வியாக்கியானப் பகிர்வுகள்... மோடி வந்தால் ஏதோ செய்வார் என்ற நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாமரம் வீசுவதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்களே... ஈபிஎஸ், ஓபிஎஸ்களை வாராவாரம் சந்திக்கும் பிரதமர் தில்லியில் போராடும் நம் விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லையே... நெடுவாசல் போராட்டம் குறித்து யாரும்... எந்த ஊடகமும் பேசவில்லையே... மக்கள் நலனுக்காக எனச் சொல்லி தாங்கள் சம்பாதிக்க இணைப்பு நாடகம் நடத்தி வெற்றி பெற்றுவிட்டார்களே... ரேஷன் கார்டு இல்லை என்று சொல்கிறார்களே... தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவில்லை... எம் ராஜராஜன் காலத்தில் கரைபுரண்ட காவிரியில் தண்ணீர் கேட்டால் அடிக்கிறார்களே... ஆந்திராவுக்கு பிழைக்கப் போன தமிழன் அடி வாங்கிச் சாகிறானே... அணைகட்டுவதற்கான புவியியல் அமைப்பு இங்கு இல்லை என்கிறார்களே.. மதுக்கடைகளை மூடுவதாய் கண்துடைப்புச் செய்து கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் கடைகளைத் திறந்து அந்தப் பாதையில் பாதுகாப்பில்லாத தன்மையை உண்டு பண்ணிவிட்டார்களே... வீட்டிற்கு ரேசன் இல்லை சாரய பாட்டிலை வாங்கி வைத்துக் கொள் என்கிறார்களே... கபட நாடகம் ஆடும் எதிர்க்கட்சிகள்... பாண்டிச்சேரியிலும் ஒரு கூவாத்தூர்... ஏழைகளான எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு... என எத்தனையோ பிரச்சினைகள் குறித்து எல்லாத் தமிழனுக்கும் வருத்தம் உண்டு. அது எனக்குள்ளும் உண்டு.

இதேபோல் எழுபது பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டு அதனால் செத்தார்கள்... இதனால் செத்தார்கள்... இது இப்போதுதான் நிகழும் நிகழ்வில்லை... இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கு என ஆளாளுக்கு பேசுகிறார்களே... குழந்தைகள் இறப்புக் குறித்து வாய் திறக்காத பிரதமர் தமிழகத்தில் கங்கையும் காவிரியும் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறாரே.... அம்பானி மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல நேரில் செல்கிறாரே... மதங்களைக் கடந்து வாழ்ந்த அப்துல்கலாம் நினைவு மண்டபத்துக்குள் மதப்பிரச்சினையைக் கொண்டு செல்கிறார்களே.. காதலித்தால் நிர்வாணமாக்கி தற்கொலைக்கு தூண்டுகிறார்களே... விவசாயியின் கோவணத்துணி கிழிந்து தொங்க ஆதியோகிகளுக்கு நிலங்களைத் தானமாக கொடுக்கிறார்களே... மழை வேண்டி வாடி நிற்க காட்டை அழிக்க கோட்டை உதவுகிறதே... ஆற்று மணலெல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு அணைகட்ட அள்ளிக் கொடுக்கப்படுகிறதே.. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தண்ணீர் தாரை வார்க்கப்படுகிறதே... மாடுகளுக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லையே... மீனவனின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லையே... ஆளாளுக்கு அரசியல் செய்கிறார்களே... ஏழரைக்கோடி மக்களைக் கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிலையான ஆளுநர் கிடைக்கவில்லையா... இப்படி இன்னும் இன்னுமாய் நிறைய வருத்தங்களும் வேதனைகளும் ஒவ்வொரு இதயத்துக்குள்ளும் விரவித்தான் கிடக்கிறது... அதற்காக பிறந்த நாட்டுக்கு எதிராக பகிர்வுகள் போடுவதால் என்ன லாபம்?

தனித் தமிழகம் அமைந்தால்தான் உண்மையான சுதந்திரம் என்று பதிவிடுவதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது... இது அரசியல் பிழைப்பவர்கள் கூறும் வார்த்தைகள்... இதைத் தூக்கிக் கொண்டு திரிவது நமக்குக் கேவலமில்லையா... தமிழன் அவமானப் படுத்தப்படுகிறான்... கேவலப் படுத்தப்படுகிறான்.. தலை குனிவு ஏற்படுகிறது நமக்கெதுக்கு சுதந்திர தினம்..? வாழ்த்துச் சொல்லாதீர்கள்... கொடியேற்றாதீர்கள்.... கொண்டாடாதீர்கள் எனக் குதிக்கிறோமே... இந்த அவமானம்... கேவலம்... தலைகுனிவு எல்லாம் யாரால்..? நம்மால்தானே... ஊழல் அரசியல்வாதிகள் கொடுக்கும் சொற்பக் காசுக்கு விலை போவது யார்...? நாம்தானே... படிப்பவறிவு நிரம்பியவர்கள் நிறைந்த மாநிலங்களில் நம் தமிழகமும் ஒன்று என்றாலும் பண்புள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா..? இல்லையே... இப்பவும் பெரும் நிதிகள் இணைப்புக்குப் பின் தமிழக அரசியல் கேலிக்கூத்தை கேலிச்சித்திரங்களாய் ரசிக்கத்தானே செய்கிறோம்.. வேறு என்ன செய்துவிட்டோம்... இதையும் கடந்து கொடுக்கும் பணத்துக்கு மீண்டும் முதலைகளிடமே அடமானம் ஆவோம்தானே... இல்லையே... நம் சுதந்திரத்தை நாம்தானே அடகு வைக்கிறோம். நம்மை நாமே சில்லறைக்காக வித்து விட்டு ரஜினி சொல்வதுபோல் சிஸ்டம் சரியில்லை என்றால் எப்படி...? அந்த சிஸ்டம் சரிவர இயங்க நாம் என்ன செய்தோம்... அதைப் பாழாக்கியதில் நமக்குத்தானே அதிகப் பங்கிருக்கிறது.

சரிங்க... இந்தியாவோட இருக்க என் தமிழகம் வஞ்சிக்கப்படுது... எல்லா வகையிலும் நமக்கு தீங்கிழைக்கப்படுது... பிரதமரின் பார்வை நம் மீது இல்லை... மாநில நிர்வாகமோ கைப்பாவையாய்... எத்தனையோ பிரச்சினைகள்... எதுவுமே தீர்க்கப்படாமல்... அதனால் எங்களுக்கு தனிநாடு... எங்கள் தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும்... எல்லாம் சரிதான்... பிக்பாஸ் பார்க்காதே... சமுதாயத்தைப் பார்... சமூகப் பிரச்சினைக்கு குரல் கொடுன்னு சொன்ன எத்தனை பேர் உண்மையிலேயே பிக்பாஸ் பார்க்காமல் சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தோம்..? சாதியை ஒழிப்போம் என்று சொன்ன எத்தனை பேர் அதைச் செயல்படுத்தியிருக்கிறோம்..? காதலுக்கு எத்தனை குடும்பங்களில் பச்சைக்கொடி காட்டப்படுகிறது..? இவ்வளவு ஏன் நம் வீட்டில் ஆண் என்ற அகங்கார ஆதிக்கதை எத்தனை பேர் விட்டொழித்திருக்கிறோம்..?  என் வீட்டில் எந்த முடிவென்றாலும் என் மனைவி எடுக்கலாம் என எத்தனை பேரால் சொல்ல முடியும்..? சாதீய தலைவர்களுக்கான விழாக்களில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள விடுவோமா...? அன்றைய தின ஆர்ப்பரிப்பில் மற்ற சாதிக்காரர்களை துன்புறுத்தாமல் இருக்கிறோமா..? மக்கள் தலைவர்களை சாதித் தலைவர்களாக்கி கொண்டாடாமல் இருக்கிறோமா..?  இன்னும் நிறைய இருக்குங்க... பொங்கினா நிறையப் பொங்கல் வைக்கலாம்.

நமக்கு கீழ் இருப்பவனுக்கு நாம் சுதந்திரம் கொடுக்கவும் மாட்டோம்... கொடுக்க விடவும் விடமாட்டோம்... மக்கள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் போடலாம்... கொள்ளை அடித்தவர்களுக்கு கோவிலும் கட்டலாம்... எழுத்து சுதந்திரம் பறிக்கப்படலாம்... எங்கோ ஒருத்தன் கேள்வி கேட்டால் ஒடுக்கப்படலாம்.. சினிமாவில் தவறாக சித்தரித்தால் மகளிர் அமைப்புக்கள் மல்லுக்கு நிற்கலாம்... நிஜத்தில் நடந்தால் நமக்கேன் வம்பென வாய் பொத்தி வேடிக்கை பார்க்கலாம்... சாதீய வெறியில் வெட்டிக் கொல்லலாம்... வெட்டியவனுக்கு அடுத்த வாரமே விழா எடுக்கலாம்... பாரதியையும் திட்டலாம்... வள்ளுவனையும் கேவலப்படுத்தலாம்... சிவனைச் சீண்டலாம்... ஏசுவை ஏசலாம்... அல்லாவை அவமதிக்கலாம்... இப்படி எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்... ஏனென்றால் சுதந்திரம் இருக்கு... மக்களாட்சி இருக்கு... குடியரசு இருக்கு... இதெல்லாம் இருந்தாலும் என் சுதந்திரம் எனக்கில்லை என தாய்நாட்டின் சுதந்திர தினத்தன்று எதிர்ப்பு பதிவுகள் போடலாம்... கேவலமாக எழுதலாம்... கேடுகெட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யலாம்... ஏனென்றால் தனித்தமிழகம் இல்லாத சுதந்திரம் நமக்கு வேண்டாம்.

முதலில் நாம் சுதந்திரமாக இருப்பதைப் போல் நாம் அடக்கி வைப்பவர்களுக்கும் சுதந்திரம் கொடுப்போம்... தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்போம்... ஊழல், கொள்ளை, சாதீய வெறிகளை அடித்துத் துரத்துவோம்... இதையெல்லாம் விட எத்தனை வேற்றுமை இருந்தாலும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தனித்தமிழகம் வருதோ இல்லையோ தலைநிமிர்ந்த தமிழனின் புகழ் உலகெங்கும் பரவும் என நம்புவோமாக.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் : ஆண்டவரே இது சரியா?

பிக்பாஸ் வீட்டுக்குள் தான் வைத்ததே சட்டமென ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளும் விதமாக உள்ளடி வேலை பார்த்தல், கெட்ட வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசுதல், ஒருவரை ஒதுக்கி வைத்து முடிந்தளவுக்கு அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தல் என ஐம்பத்தைந்து நாட்களாக அடித்து ஆடிக் கொண்டிருந்த காயத்ரி அவர்களை ஒருவழியாக நேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

Image result for பிக்பாஸ் காயத்திரி

இதே காயத்ரியை சென்ற முறை ஒரு எளிய கேள்வி பதிலின் மூலமாக காப்பாற்றினார் பிக்பாஸ்... இதற்குப் பார்வையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வர, இந்த முறை காப்பாற்றும் முயற்சியில் இறங்கவில்லை என்றாலும் சுஜா, காஜல் என்ற இரண்டு ரவுடிகளை காயத்ரிக்கு பதிலாக களம் இறக்கியிருக்கிறார் பிக்பாஸ்... மேலும் காயத்ரி விதைத்த வன்ம விதை ஆரவ்வுக்குள்ளும் ரைஸாவுக்குள்ளும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த வாரம் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படப் போகும் அந்த இருவர் சிநேகனும் வையாபுரியுமாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

சரி காயத்ரியின் வழி அனுப்புதலில் கமல் நடந்து கொண்ட விதம் சரியா? என்ற கேள்வி பலரிடம் இருப்பதை முகநூல் பதிவுகளில் காண முடிகிறது. அதில் உண்மையும் இருப்பது போல்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்வுகள் இருந்தது. 

ஒரே சாதி அதான் கமல் காயத்ரிக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் என்ற பேச்சுக்கு நேற்று காயத்ரி முன்னிலையில் பதில் அளித்த கமல், நான் அப்படியா என்று கேட்டார்... அதில் தனது கோபத்தையும் காட்டினார்... நியாயம்தான்.. கமலைப் பொறுத்தவரை சாதி எதிர்ப்பாளர்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் காயத்ரி விஷயத்தில் சாதியோ மண்ணாங்கட்டியோ நடந்து கொண்ட விதம் ஆதரவுக்கரம் நீட்டுவது போல்தானே இருந்தது ஆண்டவரே.

இதுவரை வழி அனுப்பி வைத்தவர்களுக்கு போட்ட குறும்படங்களும் காயத்ரிக்குப் போட்ட குறும்படமும் உங்கள் எண்ணப்படி சரியாகத்தான் இருந்ததா? மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்... 

காயத்ரியிடம் கேள்விகள் கேட்கப்பட்ட விஷயத்தில் மக்கள் கேட்க வேண்டியதைக் கேட்டு, உரைக்க வேண்டியதை உரைக்க வைத்தல்தான் சிறந்து அப்படின்னு கமல் நினைத்திருக்கலாம் என்று வக்காலத்து வாங்கினாலும் அவரே கேள்விகள் கேட்டிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் சாதாரணக் கேள்விகளே. தான் வில்லிதான் என்பதை மறைத்து எப்பவும் கமலைப் பார்த்ததும் செயற்கைச் சிரிப்போடு இருக்கும் காயத்ரி மேடையிலும் செயற்கைச் சிரிப்போடு பேசினாலும் அவ்வப்போது அவருக்குள் சொர்ணாக்கா எழத்தான் செய்தது... கமல் அடக்கவில்லை.... மடக்கிக் கேள்வியும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமே.

ஜூலி... சுயமாய் சிந்திக்கத் தெரியாத ஒரு பெண்... காயத்ரியின் சூதாட்டத்தில் சிக்கிய முதல் காய்... அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்... மற்றபடி அவர் ஓரளவுக்கு எல்லாருடனும் அன்பாய்த்தான் நடந்து கொண்டார். ஒவ்வொரு முறை ஓவியாவுடன் இணக்கமாகும் போதும் பின்னணியில் சதி செய்து பிரித்தது காயத்ரிதான். மேலும் காயத்ரி தனது பிரித்தாளும் செய்கையை ஜூலி, சக்தி, ரைஸா, ஆரவ் வாயிலாக நிகழ்த்தியதை எல்லோரும் அறிவோம். பரணி விழுந்தா கால்தானே உடைஞ்சிருக்கும், சாகவா போறான் என்றதும்... ஓவியா பிரச்சினையில் விளையாண்டதும்... ஒவ்வொருவரையும் கேவலமாகப் பேசியதும் காயத்ரிதான் என்பது தெரிந்தும் மழுப்பலான வழி அனுப்பல் ஏன் தலைவரே?

ஜூலியிடம் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டீர்... கஞ்சாக்கருப்பு, நமீதா ஏன் சக்தியிடம் கூட ட்ரிக்கர் இல்லாமல் ட்ரிக்காக கேள்விகள் கேட்டீர்கள். காயத்ரி என்று வரும் போது எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கலாம்... ஓவியா ஆரவ் காதலைப் பிரித்தது? ஜூலி ஓவியாவைப் பிரித்தது? சிநேகன் ஆரவை மோதவிட்டது? புதிதாக வந்தவர்கள் குறித்துப் பேசியது என எத்தனை கேள்விகளைக் கேட்டிருக்கலாம். எதுவுமே கேட்காமல் மக்களே நீங்களே கேளுங்கள் என்று விலகி இருந்து கொண்டு டுவிட்டரில் முகம் தெரியாது என்பதால் பேசினீர்களா? என்று மக்களைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்கிறீர்களே...? இதுதான் சரியான வழி அனுப்பலா ஆண்டவரே?

சரி குறும்பட விஷயத்துக்கு வருவோம்... ஜூலிக்கான குறும்படத்தில் அவர் குறித்து மற்றவர்கள் பேசியதைக் காட்சிப்படுத்தினீர்கள்... உண்மையிலேயே பொய் பேசி மக்களிடம் திட்டுக்களை வாங்கியிருந்தாலும் பரவாயில்லை சார்... அது என் குடும்பம்தானே என பெருந்தன்மையாக சிரித்துச் சென்றாள் அந்தப் பெண். அதேபோல் காயத்ரியிடம் அவர் செய்த அட்சகாசங்களைக் காட்டியிருந்தால் பெருந்தன்மை காட்டியிருப்பாரா? இந்தக் கேள்வி தங்களுக்குள்ளும் எழுந்ததால்தான் பாசிட்டிவ்வான விசயங்களை மட்டும் குறும்படம் ஆக்கினீர்களோ? 

ஓவியா மூன்று முறை அம்மான்னு சொன்னாங்கன்னு குறும்படத்துல காட்டுன நீங்க... பல முறை சொன்ன 'ஹேர்', 'மூஞ்சி முகரக்கட்டை','நாய்' எல்லாம் காட்டவில்லையே ஏன்? இப்பொழுதுதான் இது கேம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்ன அவரிடம் அந்த வீட்டுக்குள் கேம் விளையாண்டதே தாங்கள்தானே எனச் சொல்லவில்லையே ஏன்? ஜூலிக்கு ஒரு முகம்... காயத்ரிக்கு மற்றொரு முகமா...? இதுதான் நீங்க பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று சொன்னதன் அடையாளமா?

மக்கள் கேள்விகள் என புதியவர்கள் மூவரையும் கேள்வி கேட்க வைத்து காயத்ரி இல்லாத வாரத்தை சூடாக கடத்திச் செல்ல மெல்லப் பற்ற வைத்திருக்கிறீர்கள். அதுவும் நல்லாவே பத்திக் கொண்டிருக்கிறது.. இனி வரும் நாட்களில் அது காட்டுத் தீயாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதானே வேணும்... இதுதானே டி.ஆர்.பிக்கான ஆட்டம்... பொறுப்பாய் செய்திருக்கிறீர்கள். 

காயத்ரியுடன் எப்படி டான்ஸ் ஆடலாம் என்றும் சிலர் கேட்கிறார்கள். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடியதில் தவறில்லை என்பது என் எண்ண்ம்... இருப்பினும் தங்களின் அன்பு மற்றவர்களைவிட காயத்ரிக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பது அந்த முத்தத்தில் தெரிந்தது. இனி வரும் நாட்களில் யாருக்கும் சார்பாக... உங்கள் மொழியில் பாரபட்சமாக (யானைக்கும் அடிசறுக்கும் நேற்று சார்பாக என்பதை பாரபட்சமென சொல்லி அடி சறுக்கினீர்கள்... இது கூட பேசு பொருளாக அடித்து ஆடிக் கொண்டுதான் இருக்கிறது) இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

ஓவியா வெளியே போனபின் சனி, ஞாயிறு மட்டுமே பார்க்கும்படி இருந்தது. இந்த வாரம் அதிலும் சறுக்கல்... வரும் வாரத்தில் சூடு பிடிக்குமா ஆண்டவரே..? என்னதான் தாங்கள் சார்பாக, பாரபட்சமாக இருந்தாலும் தங்களின் முக நளினங்கள் ஆஹா... அசத்தல்... மற்ற மொழிகளில் பிக்பாஸ் எப்படியோ தமிழில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்... உங்கள் பேச்சு, முகபாவம் எல்லாமே தனித்துவம்தான்... வரும் வாரங்களில் தனித்துவம் கெடாமல் பார்த்துக் கொள்வீர்கள்தானே..?
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ருக்குச் சென்று திரும்பிய பின்னர் அங்கும் பிரச்சினைகள்... இங்கும் பிரச்சினைகள் என மனம் எதிலும் நாட்டமில்லாமல் இருந்த சூழலில் தான் பஸ் பயணத்தில் வாசிக்கும் பொருட்டு சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ நாவலை தரவிறக்கம் செய்தேன். இந்த நாவல் ஹர்ஷவர்த்தனன் எப்படி அரியணை ஏறினான் என்பதைச் சொன்னாலும் முழுக்க முழுக்க ஹர்ஷவர்த்தனனின் தங்கை ராஜ்யஸ்ரீயின் வாழ்க்கையைச் சுற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது. 'கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். முக்கால் பங்கு சரித்திரத்தை வைத்தும் சரித்திரக்கதை எழுதலாம். சரித்திரத்தோடு கதை இழைந்து ஓடுகிறதா என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்' என்று தனது முன்னுரையில் திரு. சாண்டில்யன் அவர்கள் சொல்லியிருக்கிறார். உண்மைதான்... சரித்திரக்கதை என தனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் எழுதியவர்களையும் எழுதிக் கொண்டிருப்பவர்களையும் நாம் வாசித்திருக்கிறோம் அல்லவா..? நம் வரலாற்றுப் பாடங்களில்  பல சரித்திரங்கள் மாற்றித்தானே நமக்குப் புகட்டப்பட்டிருக்கின்றன... புகட்டப்படுகின்றன. ஜான்சிராணியை நமக்குச் சொல்பவர்கள் வேலு நாச்சியாரைப் பற்றி சொல்வதில்லையே. சரி நாம ராஜ்யஸ்ரீ பின்னே போவோம்.

Image result for சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ

ராஜ்யஸ்ரீ... இவளின் வாழ்க்கையே ஒரு சரித்திரம்தான் என்பதால் கால் பங்கு... முக்கால் பங்கு எல்லாம் அவசியமில்லை... 98% சரித்திரம் பேசும் கதையில் 2% மட்டுமே சுவைக்காக உப்பு, உரைப்பு சேர்த்திருப்பதாகவும் முன்னுரையில் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். மேலும்  வடபுலச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய அவையிலிருந்த பாணபட்டன் இயற்றிய ஹர்ஷ சரித்திரத்தில் ராஜ்யஸ்ரீயின் இன்பமும் துன்பமும் கலந்தே எழுதியிருப்பதாகவும் 'சரித்திர அமைப்புக்கள்' ஆசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவர்கள்  எழுதிய இந்தியாவின் புராதன வரலாற்றில் விரிவாக எழுதப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

ராஜ்யஸ்ரீ கதை என்ன?

தானேசுவரத்தின் அரசன் பிரபாகரவர்த்தனன்... இவர் 'ஹூணர்களாகிய மான்களுக்கு சிங்கம்' என அழைக்கப்பட்டவர். பட்டத்துராணி யசோவதி, இவர்களுக்கு ராஜ்யவர்த்தனன், ஹர்ஷவர்த்தனன் மற்றும் ராஜ்யஸ்ரீ என மூன்று மக்கள். மூத்தவன் இமயமலைப் பக்கம் போருக்குச் சென்றிருக்கிறான். இளையவன் ஹர்ஷன் வாள் சுழற்றுவதில் வீரன் என்றால் இன்னும் பருவம் அடையாத ராஜ்யஸ்ரீயும் வாள் போர் புரிவதில் கில்லாடி. மன்னுக்கு மகள் மீது அலாதிப் பிரியம். அப்பாக்களுக்கு மகள்கள் மீதுதானே அதிகப் பிரியம் இருக்கும். இதில் மகாராஜா  மட்டும் விதிவிலக்கா என்ன..? 

மகாவீரனான மஹாசேனகுப்தன் மகன் தேவகுப்தன், ராஜ்யஸ்ரீயை பெண் கேட்டு வருகிறான்... மன்னரோ தன் மகளுக்கு இப்போது திருமணம் சாத்தியமில்லை என்று காரணங்களை அடுக்க, யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்று பிடித்த பிடியாய் நிற்கும் தேவகுப்தனை, அரண்மனையில் தங்கி செல்லச் சொல்லி அவனுக்கு ராஜ உபச்சாரம் செய்யச் சொல்கிறார். அன்று இரவு நந்தவனத்து வாவிக்கரையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருக்கும் ராஜ்யஸ்ரீயைப் பார்த்து அவளுடன் வம்பு செய்ய, அங்கு வரும் ஹர்ஷன் அவனை தூக்கி தண்ணியில் போட்டு விடுகிறான். அதன் பிறகு இருவரும் வாட்பயிற்சிக் கூடத்தில் மோதுவது என முடிவு செய்கிறார்கள். அதன்படி வாட்பயிற்சி கூடத்தில் வாட் போர் ஆரம்பமாக அங்கும் தேவகுப்தனுடன் மோதுவது ஹர்ஷன் அல்ல... தான் யார் என்ற அடையாளத்தை மறைத்து அவனுடன் மோதி ஜெயிப்பது ஒரு பெண்.. அதுதான் ராஜ்யஸ்ரீ... பெண்ணால் ஏற்பட்ட அவமானத்தால் அவனுக்குள் வன்மம் முளை விடுகிறது.

அந்த சமயத்தில் மகாமந்திரி கன்னோசி அரசகுமாரன் வந்திருப்பதாகச் சொல்கிறார். அவரை அழைத்து வரச் சொல்ல, சென்று திரும்பிய மகாமந்திரி ஆளைக் காணோம் என வருகிறார். அப்போது தேவகுப்தன் உப்பரிகையில் ராஜ்யஸ்ரீயின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கும் கன்னோசியின் அரசன் கிருகவர்மனைக் காட்டி கேவலமாகப் பேசுகிறான். தன் தங்கை ஒரு ஆடவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஹர்ஷனுக்கு கோபம் வருகிறது. மன்னரோ கோபப்படாமல் அவனை அழைத்து வரச் சொல்லிப் பேசுகிறார். அப்போதுதான் கிருகவர்மன் தங்கைக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்பது  ஹர்ஷனுக்குத் தெரிய வருகிறது. பருவம் அடையாத பெண்ணை உடனே கல்யாணம் பண்ணித் தர முடியாது என்பதை மறைமுகமாச் சொல்லி அவனை இரவு தங்கிச் செல்லச் சொல்ல, அவனோ தேவகுப்தனைப் போல் இரவில் வாவிக்கரையில் ராஜ்யஸ்ரீயைச் சந்திக்கிறான். இந்த இடத்தில் சாண்டியல் எப்படி எழுதியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... மனிதர் அடித்து ஆடியிருக்கிறார்.. இந்த சந்திப்பின் முடிவில் ராஜ்யஸ்ரீ பருவம் அடைகிறாள்.

பருவம் அடைந்த பெண்ணை உடனே கட்டி வைக்க முடியாது என்று மகாராணி யசோவதி சொல்ல, காதலைவிட காமம் தலைக்கேறிய கிருகவர்மனுக்கு மாமியார் துரியோதனி ஆகிறாள். பருவம் அடையும் முன்னரே கிருகவர்மனின் சேட்டைகளால் சொக்கிய ராஜ்யஸ்ரீக்கோ தங்கள் திருமணத்தை தள்ளிப்போட அம்மா செய்யும் முயற்சிகளைக் கண்டு அவள் மீது கோபம் வருகிறது. கன்னோசி செல்லும்முன் கிருகவர்மன் விரைவில் ராஜ்யஸ்ரீயை மணமுடிக்கும் முகமாக தானேசுவர அரண்மனை சோசியருக்கு பொற்காசுகளைக் கொடுத்து கல்யாணத்தை சீக்கிரம் வைப்பதுதான் அரச குடும்பத்துக்கு நல்லது என பொய் சொல்ல வைக்கிறான். மகாராணிக்கு இதில் விருப்பம் இல்லை.

அரண்மனை நிகழ்வுகளால் திருமணம் தள்ளிப் போவதை விரும்பாத ராஜ்யஸ்ரீ தன்னை உடனே திருமணம் செய்ய வரும்படி ஓலை அனுப்ப நினைக்கிறாள். அதை யாரிடம் கொடுத்துவிடுவது என்று யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது ஆபத்தாந்தவனாக வருகிறான் தனது மாமன் பண்டியிடம் வாள் பயிற்சி கற்றுக்கொள்பவனும் தேவகுப்தனின் தம்பியுமான மாதவகுப்தன். அவனிடம் ஓலை கொடுத்த விவரம் மகாராணிக்குத் தெரிய, பண்டி அவனைச் சிறை செய்கிறான். மகாராஜா தப்ப வைக்கிறார். இமயமலைப் பக்கம் போருக்குச் சென்ற மூத்தவனும் வெற்றியுடன் திரும்புகிறான்.

ஓலை கிடைத்த பின்னர் கிருகவர்மனால் அனுப்பப்பட்ட அவனது அரண்மனை சோசியரும், தானேசுவர அரண்மனைச் சோசியரும் திருமணத்தை உடனே நடத்த முயற்சிகள் எடுக்க, அரண்மனையில் தங்கும் கன்னோசி சோசியருக்கு நான்கு பேரிடம் இருந்து அழைப்பு வந்து அதன் காரணமாக நாலு ஓலைகளை கன்னோசிக்கு அனுப்புகிறார் உடனே புறப்பட்டு வாருங்கள் என்ற தனது ஐந்தாவது ஓலையையும் அதனுடன் இணைத்து...

கன்னோசி வரும் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயை சந்தித்தல்... மாமியார் மாப்பிள்ளை பிரச்சினைகள்... எல்லாம் முடிந்து மாப்பிள்ளை அழைப்பின் போது யானைக்கு மதம் பிடித்து ஓட, அதை அடக்கி கிருகவர்மனைக் காப்பாற்றும் ஹர்ஷக்க்கு யானை மதம் பிடித்து ஒடவில்லை... அதன் மீது விரிக்கப்பட்ட பட்டுத்துணிக்குள் ஆணிகள் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவர, அதற்கு காரணமான தேவகுப்தனைக் கொல்ல நினைக்கிறான். ஆனால் பண்டியோ இருவரையும் மோதவிட்டு தேவகுப்தனை தோற்கடித்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார். முதலில் அவனுள் விழுந்த வன்ம விதை வளர்ந்து விருட்சமாகிறது,

ராஜ்யஸ்ரீ திருமணத்துக்குப் பின் நிறைய மாற்றங்கள்... மகளின் பிரிவால் தானேசுவர மன்னனுக்கு உடல் நலம் பாதிக்கிறது. கிருகவர்மனோ மனைவி மோகத்தில் அந்தப்புரத்தில் கிடந்து அரசைக் கவனிக்க மறக்கிறான். தேவகுப்தன் தனது நண்பனான கௌட நாட்டு சசாங்கனுடன் இணைந்து ராஜ்யஸ்ரீயை பலி வாங்க கிருகவர்மனை அழிக்க நினைக்கிறான். ஹூணர்கள் மீண்டும் எல்லைப் புரத்தில் பிரச்சினை செய்வதாய் செய்தி வர, கன்னோசியைக் காக்க யாராவது ஒரு மகன் போகவேண்டும் என்ற மன்னரின் விருப்பம் நிறைவேறாமல் அண்ணன் தம்பி இருவரும் இமயமலைச் சாரலுக்கு படையுடன் விரைகிறார்கள். அடிவாரம் சென்றது அண்ணன் தம்பியை தன் பெற்றோரை பாதுகாப்பும் பொருட்டு அங்கு தங்கியிருக்கும்படியும் ஏதேனும் ஓலை வந்தால் எனக்குத் தெரிவி என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.

விதி விளையாடுகிறது... மன்னன் பிரபாகவர்த்தனன் உயிருக்குப் போராட, மகன்களுக்கு ஓலை போகிறது... ஹர்ஷன் மட்டுமே வருகிறான். மன்னர் இறக்கிறார்... மகாராணி உடன்கட்டை ஏறுகிறாள்.  போர் முடித்து வெற்றியுடன் திரும்பும் ராஜ்யவர்த்தனனை பெற்றோரின் இழப்பு மிகவும் பாதிக்கிறது. தம்பியை அரசாளச் சொல்லி  துறவியாக நினைக்கிறேன். அந்தச் சமயத்தில் வஞ்சகமாக வேட்டைக்கு அழைக்கப்பட்ட கிருகவர்மன் கொலை செய்யப்பட்டு ராஜ்யஸ்ரீ சிறையில் அடைக்கப்பட்ட செய்தி கிடைக்க, தங்கையைக் காக்கவும் மைத்துனனைக் கொன்றவர்களைப் பலி வாங்கவும் படையுடன் கிளம்பும் ராஜ்யவர்த்தனன், சசாங்கனின் குள்ளநரித்தனத்தால் வஞ்சகமாகக் கொல்லப்பட, கோபத்துடன் தேவகுப்தனைத் தேடி ஹர்ஷன் கிளம்புகிறான்.

சிறையில் அடைபட்ட ராஜ்யஸ்ரீ தப்பித்தாளா..? அவளை யார் காப்பாற்றினார்...? ஹர்ஷவர்த்தனன் தேவகுப்தனையும் சசாங்கனையும் பலி வாங்கினானா...? தானேசுவரம் யாரால் ஆளப்பட்டது...? கன்னோசி என்ன ஆனது...? என்பதை விறுவிறுப்புடன் தனக்கே உரிய வர்ணனைகளை தூக்கலாகப் பரிமாறிக் கொடுத்திருக்கிறார் சாண்டில்யன்.

மக்களுக்காக... மக்கள் நலனுக்காக நாங்கள் பேசுகிறோம் என தீவிர பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் மத்தியில் நாம் வாழ, நம் முன்னோரான... நம்மை ஆண்ட அரசர்கள் எல்லாருமே உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். மகள் போகும்போது ஸ்ரீதேவியே போச்சு என்று ஒரு சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம்... இங்கு மன்னனும் மகள் செல்லும் போது இந்த வார்த்தையைச் சொல்ல அதன் பின் பிரச்சினைகளை மட்டுமே சுமக்கிறது தானேசுவரம். மனைவியின் அழகில் மயங்கி, காமமே வாழ்வெனக் கிடக்கும் மன்னனால் ஒரு நாடு பாதிக்கப்படுகிறது.

மன்னன் வயதானாலும் மகாராணியிடம் கொஞ்சுவது சுவராஸ்யம்.. மன்னனின் இடக்கு மடக்கான பேச்சுக்கள் ரசிக்க வைக்கிறது. தங்கைக்கு மாப்பிள்ளை நிச்சயம் பண்ணியிருப்பது அண்ணன்களுக்கு தெரியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். 

ராஜ்யஸ்ரீயில் வர்ணனைகளில் கலக்கியிருக்கிறார் சாண்டில்யன். கடல்புறா, ஜலதீபம், கன்னித்தீவு போன்றெல்லாம் இல்லை என்றாலும் போரடிக்காமல் வாசிக்க முடிகிறது.

அப்புறம் கில்லர்ஜி அண்ணா, ஸ்ரீராம் அண்ணா, வெங்கட் நாகராஜ் அண்ணா உள்ளிட்ட பலருக்கு கருத்து இட்டேன்... ஆனால் கருத்துக்கள் அவர்கள் தளங்களுக்குச் செல்லவில்லை... என் கணிப்பொறியில் ஏதோ பிரச்சினையா... அல்லது வலைப்பூவில் ஏதேனும் பிரச்சினையா தெரியலை... துரை செல்வராஜூ ஐயாவின் கதைக்கு (கேட்டு வாங்கிப் போடும் ஸ்ரீராம் அண்ணா) நீண்ட கருத்துப் போட்டேன். அதுவும் போகவில்லை போலும்... என்ன செய்வது..:(

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

அவசரம் ஏனோ..?

வரை எனக்கு முன்பின் தெரியாது... 

இங்கு நிறையப் பேர் எழுதுகிறார்கள் என்றாலும் ரெண்டு மூணு பேர் மட்டுமே உறவாய்... அப்படி ஒரு ஆறுதலாய் இருந்தவர் அன்பின் அண்ணன் கில்லர்ஜி... அவரும் ஊருக்குப் போய்விட இப்போது ஆறுதலாய், நம் சுக துக்கங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் இடமாக இருப்பவர் அன்பின் அண்ணன் யூசுப் (கனவுப் பிரியன்)... மற்றபடி பலர் திடீரென முகநூல் அரட்டையில் வருவார்கள்... போவார்கள்... அவ்வளவே... அப்படித்தான் அவரும் வந்தார். சிறுகதைப் போட்டிக்கு சிறுகதை அனுப்புங்கள் நண்பரே என முகநூல் உள்பெட்டியில் வந்தார்.

பின்னர் முகநூல் அரட்டை தொடர, அவரைப் பற்றி அறிய முடிந்தது... ஊர் பெரம்பலூர் என்றும் அலைனில் இருக்கிறேன் என்றும் சொன்னார். அவரது கவிதைகள் அவ்வப்போது ஏதேனும் ஒரு சிற்றிதழில் வெளிவர. அதைப் பகிர்ந்து கொள்வார். அவர் சிற்றிதழ்களின் காதலன் என்று அறிந்தபோதும் சிற்றிதழ்கள் சேகரிப்பு, அது குறித்தான பார்வை என அவரின் மனக்கிடங்குக்குள் அவ்வப்போது இணையவழி மூலமாக மூழ்கிய போதும் வெளிநாட்டு வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் இருக்கும் அப்படியிருக்கும் போது இத்தனைக்கும் இடையில் அவரால் சிற்றிதழ்கள் குறித்தான ஒரு ஆய்வையே மேற்கொள்ள முடிகிறதே என  வியந்தேன்.

அவருடன் இணைய வழி தொடர்பு மட்டுமே அதிகமிருந்தது. ஒரு முறை மட்டுமே போனில் பேசிய நியாபகம். அவர் நடத்திய சிறுகதைப் போட்டியில் என் கதைக்கு மூன்றாமிடம் கிடைத்தது. சிற்றிதழ்கள் உலகம் என்னும் சிற்றிதழ் இணைய வெளியில் கொண்டு வர இருப்பதாகச் சொன்னார், பின்னர் அதை அச்சிலும் கொண்டு வருகிறோம் என்றார். அதற்கு வாழ்த்துச் செய்தி வாங்கி அதை முதல் இதழில் பிரசுரித்தார். அடுத்த இதழில் சிற்றிதழ்கள் உலகம் குறித்து நான் இங்கு பகிர்ந்த பதிவை பகிர்ந்து கொண்டவர் மூன்றாவது இதழ் தயாராகும் முன்னர் இரண்டு கதைகள் அனுப்புங்க ஒண்ணை இதழிலும் மற்றொன்றை ஒரு போட்டிக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன் என முகநூல் மூலமாகக் கேட்டார். நானும் அனுப்ப முயற்சிக்கிறேன் ஐயா என்று சொன்னேன்.

மறுநாள் கதையை மெதுவா அனுப்புங்க அடுத்த இதழ்ல போடுவோம்... இப்ப அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதி அனுப்புங்க என்றார். அசோகமித்திரனைப் பற்றியா என்ற யோசனையோடு அவர் கேட்டதற்காக எழுதி அனுப்பினேன். அதை எனது போட்டோவுடன் பிரசுரித்தார். சிற்றிதழ்கள் உலகம் இதழை ஊரில் தனது மகள் மூலமாக எல்லாருக்கும் அனுப்பி வருவதாகவும் நீங்களும் கனவுப்பிரியனும் சந்தாதாரராக சேர்ந்து கொள்ளுங்கள் என்றும் சொல்ல, நாங்க இங்கயே பணம் தந்துடுறோமே என்ற போது இல்லை வங்கிக் கணக்கில் போடுங்க என்று சொல்லிவிட்டார். மிகச் சிறிய தொகைக்காக சேவைக்கட்டணம் தேவையில்லாமல் போகுமே மே மாதம் ஊருக்குப் போகும் போது அங்கு எனக்கும் அண்ணனுக்கும் பணம் போடுகிறேன் என்றதும் சரி உங்க முகவரி கொடுங்க இதழ் அனுப்பச் சொல்றேன் என்றார். பணம் போட்டதும் இதழ் அனுப்பலாம் என்றதற்கு அட பணம் என்னங்க பணம் முகவரி கொடுங்க என்றார் உரிமையாக.

ஊருக்குப் போய் திருவிழா, குழந்தைகள் என இணையப் பக்கமே வரலை. ஒருநாள் அலுவலக மின்னஞ்சல் பார்த்த போது முகநூல் உள்ளே போனால் இதழ் கிடைத்ததா என உள்பெட்டியில் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய... அனுப்பச் சொன்ன இதழ்கள் எதுவும் என் முகவரிக்கு வரவேயில்லை. இல்லை என்றதும் தாங்கள் கொடுத்த முகவரியில்தான் அனுப்பியிருக்கு... தபால்காரரை விசாரிங்க என்றார். சரி என்றவன் அதன் பின்னான வாழ்க்கைச் சிக்கல்கள்களில் சிதறி எல்லாம் மறந்தேன்... இதழுக்கு சந்தா அனுப்புதல் உள்பட.

பிரச்சினைகள் சூழ் உலகில் கில்லர்ஜி அண்ணாவைப் பார்த்து அவரின் தங்கை மறைவு குறித்துக் கூட கேட்கவில்லை... செல்வக்குமார் அண்ணனிடம் புதன்கிழமை வருகிறேன் என்று சொல்லி செல்ல முடியாத சூழல்... தமிழ்வாசியை மதுரையில் சந்திக்கிறேன் என்று சொல்லி மதுரையில் இருந்தும் பார்க்கவில்லை என்ற வருத்தம் இன்னும் மனசுக்குள்... கில்லர்ஜி அண்ணா தேவகோட்டையில் இருந்திருந்தால் சந்தித்திருக்கலாம். நான் ஊருக்கு கிளம்ப இருக்கும் அன்று பரம்பக்குடியில் இருக்கிறேன் மாலை சந்திப்போம் என்றார். நான் ஊருக்குப் போறேன் என்றதும் சரி போனில் பேசுவோம் என்று சொன்னார். ஆனால் மனைவியின் உடல்நிலை காரணமாக அன்றைய பயணம் பத்து நாட்கள் ஒத்திப்போடப்பட்டதை பிரச்சினைகள் சூழந்த நிலையில் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்பது என் தவறுதானே.

இங்கு வந்த பிறகு இன்னும் சில பிரச்சினைகள்... அவற்றில் எல்லாம் மூழ்கி முத்தெடுக்க முடியாமல் திணறிய நிலையில் சிற்றிதழ்கள் உலகம் மறந்தேன். அவரும் அழைக்கவில்லை... நானும் நினைக்கவில்லை. திடீரென ஒருநாள் வதிலை பிரபா அண்ணன் அவர்கள் பதிவின் மூலமாக உடல்நலமில்லாமல் துபை மருத்துவமனையில் இருப்பதாக அறிந்ததும் கனவுப்பிரியன் அண்ண்னுக்கு போன் செய்து விசாரிக்க, ஆமா உடல் நிலை சரியில்லாம  மருத்துவமனையில் இருக்கார் என்றார். எனக்கு மிகுந்த வருத்தம்... எப்படி இதழ்... இதழ்... என ஓடிய மனிதருக்கு என்னாச்சு...? என்ற குழப்பமான மனநிலை. பின்னர் என் பிரச்சினைகளின் பின்னேயான பயணத்தில் அவர் என்ன ஆனார்...? உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்பினாரா..? இல்லை ஊருக்குப் போய்விட்டாரா...? என்று சிந்திக்கவே இல்லை. ஊரில் போய் செட்டில் ஆகணும் என முன்பு ஒரு முறை சொன்ன நியாபகம்.

நேற்று அலுவலகத்தில் வேலை இல்லை... முகநூல் மேய்ந்தபோது அதே வதிலைப் பிரபா அண்ணன் அவர்கள் அவரின் இறப்பை பகிர்ந்திருந்தார். என்னால் நம்பவே முடியலை... நண்பரே என்னோட பிளாக்ல அதை வைக்கணும் இதை வைக்கணும் நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா? என மூன்று மாதம் முன்னால் கேட்டாரே... முதல் இதழின் அட்டைப் படம் எப்படியிருக்கு பார்த்துச் சொல்லுங்க...? என்று அனுப்பி வைத்தாரே... நிறைய இருக்கு அதை எல்லாம் பத்திரமாக பாதுகாக்க ஒரு ஹார்ட் டிஸ்க் வாங்கணும் என்றாரே... இன்னும் இன்னுமாய் நிறைய மனசுக்குள் சுழல கண்கள் கலங்கின. அவரின் சிற்றிதழ்கள் மேம்பாடு குறித்தான ஆசைகள் இனி என்னவாகும். சிலர் வதிலை பிரபா அண்ணாவை தொடரச் சொல்லி எழுதும் பதிவுகளை முகநூலில் பார்த்தேன். அவர் தொடர்ந்தால் சந்தோஷம்.

அன்பின் ஐயா கிரிஷ் இராமதாஸ் அவர்களே... ஏன் இந்த அவசரம்...? மனம் கனக்கிறது ஐயா... தாங்கள் என்னுடன் முகநூல் அரட்டையில் தட்டச்சிய வார்த்தைகளை இன்று காலையில் பார்த்தேனே... அவை அழியாமல் இருக்கின்றனவே ஐயா...

Image may contain: 1 person, text

ஐயாவின் பேரிழப்பால் பெரும் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் அமைதியைக் கொடுக்கட்டும்.

ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

புதன், 16 ஆகஸ்ட், 2017

சினிமா : உரு

ரு -  இது ஒரு சைக்கோ த்ரில்லர் கதை.

உன்னோட எழுத்துக்கு இப்போ மார்க்கெட் இல்லப்பா... வேணுமின்னா ஒரு த்ரில்லர் கதையா எழுதிக்கிட்டு வா என்று சொல்ல அதற்கான முயற்சியில் இறங்கும் எழுத்தாளன் படைக்கும் கொலையைக் கூட கலையாகச் செய்ய நினைக்கும் கதாபாத்திரம் உருப்பெற்று கொலை செய்வதுதான் படத்தின் கதை.

கதையின் நாயகன் ஒரு எழுத்தாளன்... ஒருபக்கம் அவனது எழுத்துக்கு மார்க்கெட் மதிப்பு போயாச்சு என பதிப்பகத்தார் வெளியிட மறுப்பதுடன், திகில் கதை எழுதிக்கிட்டு வா பார்க்கலாம் என்று சொல்லிவிட, மறுபக்கமோ வேலைக்கு போகும் மனைவிக்கு கணவன் எழுத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதால் குழந்தை குட்டியின்னு சந்தோஷ வாழ்க்கை இல்லாமல் இருக்கும் கவலை மற்றும் ஒரு ஆள் சம்பளத்தில் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ இயலாது என்ற உண்மையான வருத்தம்... இக்காரணிகளின் விளைவாக கொஞ்சம் கோபமான வார்த்தைகள்... அதன் பின் கொஞ்சல்... தன்னை எழுத்தாளனாய் நிலைநிறுத்தி, குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த துடிக்கும் நாயகன் திகில் கதை எழுத முடிவெடுத்து அதற்காக தனி இடம் தேடி நண்பனின் மேகமலை எஸ்டேட் பங்களா செல்கிறான்.

Image result for உரு விமர்சனம்

அவன் கதை எழுத, அதில் எழுதப்படும் வரிகள் உயிர் பெறுகின்றன... கொலையைக் கலையாகச் செய்யும் மர்ம மனிதன் வெளிவருகிறான்... அந்தச் சமயத்தில் மனைவி அவனைத் தேடி வருகிறாள்... அதன் பின்னான சம்பவங்கள் திகிலாய் பயணிக்க ஆரம்பிக்கின்றன.

மேகமலைக் காடு இரவு நேரத்தில் பயமுறுத்தத்தான் செய்கிறது. கணவனை அடித்து ஓலைப் பாயில் சுற்றி வீட்டுக்குள் தூக்கிப் போடும் மர்ம மனிதன் மனைவிக்கு ஐந்து மணி நேரத்தில் வீட்டுக்குள் வராமல் உன்னைக் கொல்வேன் என்று மிரட்டல் விடுகிறான். இந்த மரணப் போராட்டத்துக்கு இடையில் பக்கத்து வீட்டு கர்ப்பிணிப் பெண் உள்பட சிலரைக் கொடூரமாகக் கொல்கிறான். தனக்கு உதவச் சொல்லி அண்ணனுக்குப் போன் செய்கிறாள்... அங்கு வரும் அவனும் கொல்லப்படுகிறான்... காட்டு இலாகா அதிகாரியிடம் உதவி கேட்கிறாள்..? அதுவும் தவிடுபொடி ஆகிறது... கணவன் பிழைத்தானா..? அவள் தப்பித்தாளா..? மர்ம மனிதன் யார்...? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்று தோற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளனாய் 'மெட்ராஸ்' கலையரசன்... விரக்தி அடைந்த எழுத்தாளனைப் பிரதிபலிக்கிறார். கஞ்சா பீடியைப் பற்ற வைத்ததும் எழுத்துக்கான கரு உதிப்பதும்  எழுதும் போது அடிக்கடி அந்த பீடியை பற்ற வைப்பதும்... எழுத்து அருவியாய் வர ஏதோ ஒரு போதைக்கு அடிமையாக இருக்கு வேண்டும் என்பதாய் காட்டப்படுவது கண்டனத்துக்குரியது... போதை இருந்தால்தான் எழுத முடியும் என்றால் இன்று இணைய வெளியில் லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்க முடியாது. விரக்தியில் பேனா முனையை உடைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே... நாமெல்லாம் பேப்பரைக் கிழித்துக் கிழித்து எறிந்தவர்கள்தானே...

தன்ஷிகா... எழுத்தாளன் மனைவி... வேலைக்குப் போகும் பெண்... குழந்தை குட்டி என குடும்ப வாழ்க்கைக்குள் போகத் துடிப்பவள்... மேகமலைக்கு வந்த பின் மர்ம மனிதனிடம் மாட்டி அவர் படும் பாடு... அப்பப்பா... படத்தில் கலையரசனைவிட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திரம் சைக்கோ ஆகும் போதே பிசிறு தட்ட ஆரம்பிக்கும் படத்தில் கலையரசன் மர்ம மனிதனைப் பார்க்கும் இடத்தில் நமக்கு இப்படித்தான் இருக்கும்... இவனாகத்தான் இருப்பான் என்று தோன்றும் போதே படத்தில் தொய்வு வந்து விடுகிறது.  பிக்பாஸ் வீட்டில் பேய் நாடகம் போடுறேன்னு முன்னாலே சொல்லிட்டு போட்டதால உப்புச் சப்பு இல்லாத மாதிரித்தான் மர்ம மனிதனுக்கும் தன்ஷிகாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் இருக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சமேனும் அழுத்தம் சேர்ப்பது தன்ஷிகாவின் நடிப்புத்தான் என்றால் மிகையாகாது. 

ஐந்து மணி நேரம் எனச் சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மர்ம மனிதன் - நாயகி எபிசோடை... மெகா சீரியல் அழுகைச் சீனை இழுப்பது போல் வளவளான்னு கொண்டு செல்வது திகில் படத்துக்கான திகிலைத் தின்று ஏப்பம் விடுகிறது. இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமை. நடிகர்கள் சொற்பமே என்றாலும் அவர்களின் தேர்வு கன கச்சிதம். 

கிளைமேக்ஸில் என்ன சொல்கிறார்கள் என்பது ரொம்ப யோசித்தால் புரியலாம்... எனக்கு குழப்பமே மிஞ்சியது. லாஜிக் ஓட்டைகள்... விறுவிறுப்பில்லாத இழுவைக் காட்சிகள் இருந்தாலும் திகில்கதை பிடிக்கும் என்பவர்கள் தாராளமாய்ப் பார்க்கலாம். 

'தரமணி' பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு 'உரு' ரொம்பப் பிடிக்கலாம் என்பது என் எண்ணம்.

படம் வந்து ரொம்ப நாளாச்சு... ஏதாவது எழுதணும்ன்னு யோசிச்சப்போ எதுவும் எழுத தோணலை... அதனால் உரு இங்கு உருப்பெற்றுவிட்டது.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?

பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு வந்த கருத்துக்களில் நண்பர் வருணின் கருத்து மிகவும் வித்தியாசமாகவும் சற்றே கோபமாகவும் வந்திருந்தது. பிக்பாஸ் பற்றி எழுதியது எப்படி எனது விருப்பமோ அப்படித்தான் கருத்து என்பது அவரவர் விருப்பம்... அவர் மனதில் உள்ளதை தெள்ளத்தெளிவாகச் சொன்னதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் நான் கமல் ஆதரவாளனும் இல்லை... எதிர்ப்பாளனும் இல்லை... ஆண்ட, ஆளத்துடிக்கிற பரம்பரையும் இல்லை... இதையெல்லாம் விட திராவிட அடிமையும் இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இன்ன சாதியாய் இருப்பாய் என்று அவராக, மாவட்டத்தை வைத்து சாதியைக் கணித்திருக்கிறார் ஆனால் அது தவறான கணிப்பு. என்னைப் பொறுத்தவரை சாதி பார்த்துப் பழகுவதும் இல்லை... சாதியைத் தூக்கி தலையில் வைத்துக் கொள்வதும் இல்லை... அதனால் அந்த வரிகள் சிரிப்பைத்தான் கொடுத்தது.

மேலும் அந்தப் பதிவில் கமல் குறித்து அதிகம் எழுதவும் இல்லை... போராளிகளாய் தங்களைக் காட்டிக் கொண்டு புத்தி சொல்வோரைப் பற்றிய பகிர்வாய்த்தான் எனக்குத் தெரிந்தது. சரி விடுங்க... ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படும்தானே... வருணின் கருத்துக்களிலும் அவரின் பதிவுகளிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான்... கருத்துப் போர்களையும் வாசிப்பதுண்டு. கருத்துப் போர் செய்யத் தெரியாததால் அதிகம் கருத்து இடுவதில்லை. நிறைய விஷயங்களை நிறைவாய் எழுதக்கூடியவர் அவர்... அவரைப் போல் என்னால் எழுத இயலாது... நானெல்லாம் போகிற போக்கில் கிறுக்கிச் செல்லும் ஆள்தான்...அவரின் கருத்துக்கு மட்டுமின்றி எனது முந்தைய பகிர்வில் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

இதுவும் பிக்பாஸ் பற்றிய பகிர்வுதான். ஒவியாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா...? ஆரவ்கள் செய்ததை ஏற்றுக் கொள்ளலாமா..? ஜூலிக்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களா..? சிநேகன்கள் செய்வது சரியா..? என நிறையக் கேள்விகளை நம்மிடம் மற்றுமின்றி நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் கேட்கத் தோணலாம். ஏன் நமக்குள் எழும் இதே கேள்விகள் அவர்களுக்குள்ளும் எழலாம் இல்லையா..?

ஓவியாவைப் போல் ஒரு பெண் நம் வீட்டில் இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவோமா அல்லது தூக்கிப் போட்டு மிதிப்போமா என்று சிலர் முகநூலில் கேட்டிருந்தார்கள். ஓவியாவைப் போல் ஒரு பெண், தனக்குச் சரியெனப்பட்டதை... மனதில் நினைத்ததை... அப்படியே வாழ நினைத்தால்... அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவரை அப்படியே வளர விடவேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் கிராமங்களில் அப்படி வளரும் பிள்ளைகளை 'பொட்டப் பிள்ளைக்கு அடக்கம் வேணும்...' என்றும் 'சமஞ்சபுள்ள மாதிரியா நடந்துக்கிறே' என்றும் அடக்கி வளர்ப்பதைப் பார்க்கலாம். எங்களுடன் கல்லூரியில் படித்த தோழி இப்படித்தான் தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை தயங்காமல் செய்து அப்படியே நடந்து கொள்ளவும் செய்தார். எதற்கும் பயப்படமாட்டார்.. இது சரி... இது தவறென மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார். அவரை அடங்கி ஒடுங்கி வாழ் என்று யாரும் சொல்லவில்லை.. சொல்லப் போனால் அவரின் அந்தக் குணம்தான் எல்லாருகும் அவரைப் பிடிக்கும்படி செய்தது. 

சரி ஓவியாக்கு வருவோம்... அவரின் தனிப்பட்ட தன்மை எல்லாரையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்ல... ஆனாலும் நான் கொடுத்ததைக் கொடு போய்விடுகிறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு பின்னரும் துரத்துவதும்... மிரட்டுவதும்... நான் இப்படித்தான் என்று சொல்லும் ஒரு பெண், தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவேன் என்று உதார் விட்டு விட்டு மீண்டும் மீண்டும் சீண்டி விளையாடுவதும்... அதற்காக எல்லை தாண்டுவதும் சரியானதல்ல... இப்படியான மனநிலை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியதில்லை... பிடித்தவர்கள் எது செய்தாலும் சரி என்ற மனநிலை நம்மில் மாற வேண்டும். நடவடிக்கை மாற்றம் என்பது சரியா.. தவறா... என்பதை புரிந்து தூக்குவதும் தூர எறிவதும் இருக்க வேண்டும்.

மருத்துவ முத்தம் கொடுத்த... கொடுக்கும் ஆரவ்கள்... ஆபத்தானவர்கள் அல்ல என்றாலும் தங்களுக்கு தேவை என்றால் ஒட்டிக் கொள்ளவும், தேவையில்லை என்றால் வெட்டிக் கொள்ளவும் அவர்களால் முடியும். ஒருவரின் மனதுக்குள் நுழைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு உடனே வெளிவர இவர்கள் தயங்குவதில்லை. அப்படியான அதிரடி மாற்றத்தைப் பாதிக்கப்பட்ட நபரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லர் இவர்கள்... சிந்திக்க நினைக்காதவர்களே இவர்கள். உன்னைப் பழி வாங்குகிறேன் பார்  என நேற்றைய எதிரியை இன்று தூக்கி வைத்து கொண்டாடும் மனநிலை இவர்களுக்கு இன்பம் அளிக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..? இந்தச் செயல் அவர்களின் வெந்த புண்ணில் வேலைத்தான் பாய்ச்சும் என்பதை அறியாதவர்கள் அல்லர்... அறிந்தே அதைச் செய்பவர்கள், என்ன இருந்தாலும் ஓவியாக்களுக்கும் இதில் பங்கு இருக்கும்போது ஆரவ்களை மட்டுமே திட்டுவது என்பது தவறு. ஆரவ்களின் ஆசைக்கு எங்கோ ஓரிடத்தில் ஓவியாக்கள் இடமளித்து விடுவது விபரீதங்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆரவ்களில் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்கும் மனிதர்களாக மாறும் ஆரவ்களை கேவலமாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஆனாலும் ஒரு முத்தம் கொடுத்துட்டு அதை மருத்துவ முத்தம் எனச் சொல்லும் மகத்தான இந்த மனிதர்கள் கொஞ்சம் கவனமுடன் அணுக வேண்டியவர்களே என்பதில் சந்தேகம் இல்லை.

நம்மில் பெரும்பாலானோர் ஜூலிகளாய்த்தான் இருக்கிறோம் என்றால் அதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால்அதுதான் உண்மை... அரிச்சந்திரனாய் உண்மை மட்டுமே பேசுவது என்பது இயலாத காரியம்... ஆனால் பொய் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்து வாழ எல்லாராலும் முடியும். ஒரு சிறு பொய்யை... அட இது சும்மா எனக் கடந்து போகத் தெரிந்தால் நாம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம் என்பதை உணரலாம். அதை விடுத்து அந்தப் பொய்க்கு மசாலா தூவி புதிதாக அடுத்தவருக்குக் கொடுக்கும் போதுதான் நாம் பொய்யிலே வாழத் தொடங்குகிறோம். இப்படித்தான் ஜூலிகள்... தனக்கான இலக்கை நோக்கிப் பயணிக்க உண்மையைவிட பொய்யே சிறந்த ஆயுதம் என்பதை மனதுக்குள் ஆணி அடித்து மாட்டி வைத்துக் கொண்டு அதற்கான வாழ்வை வாழத் துணிபவர்கள்... இதனால் அடுத்தவர் செய்ய நினைப்பதை தன்மேல் சுமத்தி, தன்னைச் செய்யத் தூண்டுவதை அறியாமல் பலி ஆகும் ஆடுகள்... புறம் பேசும் மனிதர்களிடையே பொய் பேசி இலக்கை அடைந்து விடலாம் என்ற நப்பாசையில் நாளுக்கு நாள் பொய்யில் நெய் ஊற்றி பிரகாசிக்க வைப்பவர்கள். அதிலிருந்து வெளிவந்தால் நல்லாயிருக்கும் என்றாலும் அந்த நடிப்பில் இருந்து வெளிவரத் தயங்குபவர்கள்... இப்படியே இருப்போமே என போலியாக நடிக்கத் தெரிந்தவர்கள்... இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்... நான் உத்தமன் எனக்கு பொய் பிடிக்காது என்று சொல்லும் நூறு சதவிகித சுத்தமானவர்களுக்கு ஜூலிகள் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்களே... அரவணைப்பே இவர்களை திருத்தும் மருந்து.

புறம் பேசாதார் யாருண்டு...? நானும்... நீங்களும்... அவர்களும்... இவர்களும்... எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் புறம் பேசத்தானே செய்கிறோம். அதைத்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேமராவை மறந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் காயத்ரிகளும் சக்திகளும் மட்டுமின்றி சிநேகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டிப்புடி வைத்தியம் நோயாளிக்கு நல்லதென கமல் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் சிநேகன்கள்... ஆறுதல் என்ற போர்வையில் கட்டிப்பிடிப்பது திரைக்கு அழகு... ஆனால் பொதுவெளிக்கு அழகல்லவே... ஆறுதல் சொல்ல ஆயிரம் வழிகள் இருக்க இது மட்டுமே உடனடி நிவாரணம் என நினைக்கும் மனிதர்கள் இவர்கள்... இவர்களின் கட்டிப்பிடி வைத்தியம் எதிர்பாலரிடம் மட்டுமே... இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது இவர்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்... எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகுறான் பாருன்னு ஊரில் சொல்வாங்க... இன்னொன்னும் சொல்லுவாங்க... ஆம்பளை அழக்கூடாதுன்னு.... ஆனாலும் சிநேகன்களின் மனசு இளகிய மனசு என்பதை பொசுக்கென்று பொங்கும் கண்ணீர் சொல்லத்தான் செய்கிறது ஆம்பளை அழலாம் என... கட்டிப்புடி வைத்தியம் தவறு என்பதை... அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் அழாதே எனச் சொல்லி கட்டிப்பிடிப்பது என்பது தவறுதான் அதைச் செய்யக் கூடாதுதான்.

எது எப்படியோ பிக்பாஸ் நம்மை நாம் எடை போட்டுப் பார்க்க வைக்கிறது... இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் அங்கிருக்கும் மனிதர்கள் ஸ்கிரிப்படியோ அல்லது சுயமாகவோ நடித்தாலும் என் பார்வை இப்படியாகத்தான் இருக்கும். அந்த வீட்டுக்குள் நடமாடும் மனிதர்களை வைத்து நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். கருத்துக்கள் எப்படி வந்தாலும் இது பற்றி இன்னும் பேசுவேன்.

தூக்கிக் கொண்டாடப்பட்ட ஓவியாவும் வில்லியாக்கப்பட்ட ஜூலியும் இல்லாமல் பிக்பாஸ் போரடிப்பதாகச் சொல்கிறார்கள். காய் நகர்த்தும் காயத்ரியும் போய்விட்டால்... சீந்துவாரின்றிப் போகுமோ...?
-'பரிவை' சே.குமார்.

சனி, 5 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?

பிக்பாஸ்...

எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் பற்றியே விவாதங்கள்...

Image result for biggboss tamil

இந்தப் பதிவு கூட அது பற்றியதுதான்... விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டும். வாசித்துவிட்டு நான் கீழே சொல்லியிருப்பவர்களைப் போல் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். ஏன்னா நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  மண்வெட்டி பிடித்தவன்தான்... எரவாமரம் போட்டு தண்ணீர் இறைத்தும்... நாற்றுப் பறித்தும்... வரப்பு வாய்க்கால் வெட்டியும்... கதிர் அறுத்தும்... கட்டுத் தூக்கியும் எல்லா வேலையும் பார்த்து வளர்ந்தவன்தான். விவசாயியின் வலியும் தெரியும் அந்த கஷ்ட ஜீவன வாழ்க்கையும் தெரியும். எனவே எனக்கு அறிவுரை வேண்டாம்... மன்னிக்கவும்... அறிவுரை சொல்லும் கருத்துக்களுக்கு விவாதம் செய்யும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

பிக்பாஸ் பற்றி பேசும் நீங்க நெடுவாசல் போராட்டத்துக்கு ஏன் பொங்கவில்லை... ரேசன் இல்லைன்னு சொல்லிட்டானுங்க அதுக்கு ஏன் போராட்டக்களம் அமைக்கவில்லை... இறப்பைப் பதிவு செய்ய ஆதார் அவசியம் என்று சொன்னதற்கும் பொங்கவில்லையே... ஏன்...? ஏன்...?? என சமூக வலைத்தளங்களில் பலர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்கள்... இல்லை எத்தனை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முகநூலிலோ டுவிட்டரிலோ தங்கள் எண்ணங்களைப் பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதில் ஒரு நண்பர் பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு கருத்திட்ட ஒருவர் விவசாயியின் வலி உனக்குத் தெரியலையா...? அவர்கள் போராட்டம் நடத்தும் போது நீ கேவலம் எழுதிக் கொடுத்ததை நடிக்கும் நாடகத்துக்கு இவ்வளவு சிரத்தையாக எழுதுகிறாயே என்பதுடன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் சேர்த்து கருத்து இட்டிருந்தார். விவசாயியின் மகனாய்ப் பிறந்து அந்த வலியை எல்லாம் அறிந்தவர்கள்தான் அந்தப் பதிவை எழுதிய என் நண்பர்... அவர் சொன்ன ஒரே பதில் நான் இப்படித்தான் புடிக்கலைன்னா போயிடுங்க... என்ன புடுங்கணுமுன்னு கிளாஸ் எடுக்க வேண்டாம்... இதன் பின் பொங்கியவர் அடங்கிப் போய்விட்டார். இன்று விவசாயிகள் போராட்டம் கூட அரசியல் ஆக்கப்பட்டுத்தான் இருக்கிறது... விவசாயிகள் போராட்டம் என்றில்லை எல்லாப் போராட்டமுமே அரசியல் கலந்தவைதான் என்பதுதான் உண்மை. 

பிக்பாஸ் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பதிவைப் படிக்காதீர்கள்... விலகிச் செல்லுங்கள்... நீங்கள் கேட்கும் போராடினீர்களா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு போராட்டக் களங்களுக்கு விரையுங்கள்... அதை விடுத்து நீ ஏன் அதற்கு எழுதுகிறாய்... நீ ஏன் இதற்கு எழுதுகிறாய் என்று கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சமூக அக்கறையோடு பொங்குவதாய் நடிப்பதை விட, பிடித்ததைக் குறித்து எழுதுவது தவறில்லை என்பதே என் எண்ணம்... இந்தப் பொங்கு பொங்குகிறவர்கள்தான் காலை வணக்கத்துக்கும் மாலை வணக்கத்துக்கும் லைக்கிட்டு ஆயிரம் ஆயிரமாய் லைக் வாங்க வைக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...

Related image

இந்த நிகழ்ச்சி பிரபலமாக ரெண்டே காரணங்கள்தான்... அது 'ஆண்டவர்' என்று சொல்லப்படும் கமலும் 'ஆன்மா'வின் ராகமாய் இருக்கும் ஒவியாவும் மட்டுமே. இந்தாளுக்கு வேலை இல்லையா... இந்த நிகழ்ச்சி நடத்த வந்துட்டான் எனக் கோபமாய் பேசினார் என்னுடன் தங்கியிருக்கும் பக்கா பிஜேபி நண்பர். இதை கமல் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது..? பலர் கமலின் திறமையான பேச்சைக் கேட்கவே சனி , ஞாயிறு மட்டும் பிக்பாஸ் பார்ப்பதாய்ச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தவிர வேறு யார் நடத்தினாலும் சொதப்பியிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை என்பதே உண்மை. கமல் தள்ளி வைக்கப்பட வேண்டியவர் என்ற கருத்தே பலருக்குள் இருக்கிறது. 

ரஜினியை அரசியலுக்கு வா என்று சொல்லும் பிஜேபிதான் கமல் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கமலின் டுவிட்டர்களை கேலி செய்கிறேன் பேர்வழி என நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம்... கமலின் கருத்தை ஏற்று அவரை தலைவராக்க வேண்டும் என்றில்லை... நாம் சுயமாக சிந்திக்க வேண்டும்... மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தங்கள் நலம் மட்டுமே பார்த்து மத்தியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசைத் தூக்கியெறிய வேண்டும்... ஆனால் அதைச் செய்வோமா என்றால் செய்ய மாட்டோம் என்பதே நிதர்சனம்... அரசு இப்படி இருக்கே... அரசு எந்திரம் முடங்கிப் போச்சேன்னு யாராவது கேட்டால் பிக்பாஸ் பார்ப்பதால்தான் ஆளும் அரசு குறித்து கவலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் கிளம்புவார்கள். எது எப்படியோ நாம் திருந்தாதவரை அரசியல்வாதிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... கமலை விடுத்து பிக்பாஸ் பிக்கப் ஆக முக்கிய காரணம்... 'ஹேர்', 'மொகரையைப் பாரு', 'தூக்கி அடிச்சிருவேன்', 'சேரி பிகேவியர்' என்றெல்லாம் பேசி வன்மம் விதைக்கும் காயத்ரியோ... அவருக்கு சப்போர்ட் பண்ணும் 'ட்ரிக்கர்' சத்தியோ..., 'ஆ...', 'யா..' எனத் தலையாட்டும் ரைசாவோ... 'ஆளிருக்கும் போது ஏன் செய்தாய்' என ஆளில்லாத போது காதல் செய்யத் துடிக்கும் ஆரவோ... 'கட்டிப்புடி' வைத்தியம் செய்யும் சிநேகனோ... 'நான் நடுநிலைவாதி' எனச் சொல்லும் முட்டை கணேஷோ... ஒரளவு நியாயம் பேசும் வையாபுரியோ... என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்கும் பிந்து மாதவியோ... இவ்வளவு ஏன் சல்லிக்கட்டு பிரச்சினையில் நம் உறவுகள் எல்லாம் அடி வாங்கி மிதி வாங்கித் துடிக்க, மீடியா வெளிச்சம் பட மட்டுமே கூச்சலிட்டு இன்று காயத்ரியின் அடிவருடியாகி...  பொய்யின் பிம்பமாய் வாழும் ஜூலியோ அல்ல... எதையும் நேரிடையாகப் பேசும் ஓவியாவே...

ஓவியாவை எல்லாருக்கும் பிடிக்க எது காரணமாக இருக்கும் என்றதும் எல்லாரும் சொல்வது கவர்ச்சி... சத்தியமாக இல்லை என்பதுதான் என் கருத்து. நாம் இப்படி வாழணும் என்று நினைத்து சில காரணங்களால் முடியாமல் சார்பு நிலை வாழ்க்கையைத்தான் இன்று பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ நினைத்த வாழ்க்கையை... ஒரு பெண் வாழ்ந்து காட்டுகிறாளே என்ற எண்ணமே ஓவியாவின் மீது காதல் கொள்ள வைக்கிறது. காதல் என்றதும் வேறு திசையில் பயணிக்காதீர்கள்... பொய் சொல்லாமல்... எது சரி எது தவறு என்பதை உணர்ந்து வாழும் பெண்ணின் மீதான அதீத அன்புதான் ஓவியாவை விரும்ப வைக்கிறது. சரி ஓவியா பற்றி மற்றொரு பதிவில் விரிவாய் பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை வேலை டென்ஷன், பணப் பிரச்சினைகள் எல்லாம் சுற்றி வாழும் சூழலில் மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஏதோ ஒரு வகையில் ஆறுதல்... அதற்காக போராட்டக்காரர்களின் வலி தெரியலையின்னு சொல்லாதீங்க... நிறைய போராடியாச்சு... இன்னும் வாழ்க்கையோடு போராடிக்கிட்டுத்தான் இருக்கேன்.

மறுபடியும் சொல்றேன்... பிக்பாஸ் பிடிக்கலையா பாக்காதீங்க... அதைப் பற்றி எழுதுபவர்களை ஒதுக்கி வைத்து உங்க வேலையைப் பாருங்க.. அதை விடுத்து அதற்காக போராடினாயா... இதற்காக போராடினாயா... நடிகன் பின்னே போகாதே... நடிகையின் கவர்ச்சியில் அழியாதேன்னு புராணம் பாடாதீங்க... ஏன்னா மீடியா வெளிச்சம்பட கூச்சல் போட்ட ஒருத்தியை வீரத்தமிழச்சின்னு நீங்க தூக்கி வச்சீங்க... அவ மீடியாவுக்குள்ள நுழைய போட்ட நாடகமே என்பதை இப்போது உணர்ந்து பொங்குகிறோம்... இதுதான் நாம். நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்... என் விருப்பு வெறுப்புக்களைச் சொல்வதில் முட்டுக் கொடுக்கவோ... முட்டுக் கட்டையாக இருக்கவோ யாரும் தேவையில்லை. 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா இன்னைக்கு பொங்குறவங்கதான் சூப்பர் சிங்கர்ல சின்னப் பிள்ளைங்களை முக்கல் முணங்கள் பாட வைப்பதைப் பார்த்து ரசிச்சி பதிவு போட்டவங்க... அதை மறுத்து நான் எப்பவுமே போராளிதான் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்...

மீண்டும் சொல்றேன்... யாரும் இங்கு பொங்காதீர்கள்... எனக்கு பிக்பாஸ் பிடிச்சிருக்கு...
-'பரிவை' சே.குமார்.