மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 13 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 74

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



74. சுபமாய் முடியுமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்க இருவரும் யாருக்கும் தெரியாமல் கிளம்பும் முடிவை நண்பர்களுடன் எடுக்க, காதல் குறித்து அறிந்த அப்பாவோ வேறு விதமாக முடிவெடுக்கிறார்.

இனி...

'என்னடா இது வந்ததும் வராததுமா மாப்பிள்ளை வீட்டை வரச்சொல்லுறாரு...' என இருவரும் வியப்பாய் பார்க்க "என்ன அப்படி பாக்குறீங்க?" என அவரே ஆரம்பித்தார்.

"இல்ல இப்பக் கல்யாணம் வேண்டான்னு சொல்லுவீங்க... நீங்க.." என இழுத்தாள் புவனாவின் அம்மா.

"அதுவா... இன்னைக்கு வேலையுதபட்டணத்துல இருந்து ஒரு குரூப் கடைக்கு வந்துச்சு... மெதுவா நம்ம திருப்பத்தூரான் சொன்ன மாப்பிள்ளை பற்றி விசாரிச்சேன்... நல்ல குடும்பம்ன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தாங்க.... அதே யோசனையோட வந்தேனா... நம்ம ஐயனார் கோயிலுக்கிட்ட வரும்போது ஒரு நல்ல சகுனம்... இதுக்கு அதுக்கும் முடிச்சிப் போட்டுப் பார்த்தப்போ... சரி நம்ம புள்ள வாழ இதுதான் நல்ல இடம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"ஓ... இதுதான் இந்த அவசரத்துக்கு காரணமா?" என்று அவள் சொன்ன போது புவனா சைக்கிள் சாவியை சுழற்றியபடி உள்ளே வந்தாள்.

"என்னது குடும்ப மாநாடா?" என்று கேட்டபடி அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.

"மாநாடாவது மண்ணாங்கட்டியாவது.... ஒரு நல்ல விஷயம் பேசிக்கிட்டு இருந்தோம்...." என்றபடி மகளின் தலையைத் தடவினார்.

"என்னப்பா.... என்ன விஷயம்... நானும் தெரிஞ்சிக்கலாமா?"

"உனக்குத்தான் முதல்ல தெரியணும்.. ஒண்ணுமில்ல... நீயும் படிப்பை முடிச்சிட்டே... இனி ரிசல்ட்தான் வரணும்... வயசும் ஏறிக்கிட்டே போகுது... நம்ம சாதி சனத்துல இம்புட்டு வயசு வரைக்கும் பொண்ணுங்களை வச்சிக்க மாட்டானுங்க... அதான் சித்தப்பா சொன்ன வரனை விசாரிச்சேன்... நல்ல குடும்பமாம்... நமக்கு இணையான வசதி... அதான் சட்டுப்புட்டுன்னு அவங்ககிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்... அதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்..." ரொம்பப் பொறுமையாய் சொன்னபடி மகளின் முகத்தை நோக்கினார்.

"அ... அப்பா.... எனக்கு எதுக்கு இப்பக் கல்யாணம்...? நான் படிச்சது அடுப்படியில கிடக்கவா... வேலைக்குப் போகணும்ப்பா..." தனது பதட்டத்தை கண்ணில் காட்டாது மறைத்தபடியே பேசினாள். அவளது கண்ணில் தெரியவிட்டாலும் உடம்பு பதறுவதை அம்மாவும் அண்ணனும் காணத் தவறவில்லை.

"யாரு சொன்னா அடுப்படியில கிடக்கப் போறேன்னு... அதெல்லாம் பேசி உன்னைய மாப்பிள்ளை இருக்க எடத்துக்கு கூட்டிப் போகச் சொல்லி... வேலை வாங்கித் தரச் சொல்லிடுவேன்ல்ல... கவலைப்படாதே.... சித்தப்பா வரச்சொல்லி வந்து பாக்கட்டும் சாதகம் சரியா இருந்தா மேக்கொண்டு பேசலாம்... " என்றவர் மனைவியிடம் "சாப்பாடு போடு... " என எழுந்தார். அவரின் பின்னே அம்மா செல்ல புவனா அப்படியே அமர்ந்திருந்தாள்.

"என்னம்மா காதல் கனவு நொறுங்கிப் போச்சா..." என அவளருகில் வந்து மெதுவாகச் சிரித்தான் வைரவன்.

"சீ... போடா... நொறுங்கப் போகுதா... இல்ல இறுக்கமாகுதான்னு போகப் போகத் தெரியும்..."

"இனி எங்கிட்டு தெரியுறது... அதான் வேலாயுதபட்டினம் வந்தாச்சுல்ல... உன்னை அந்த வேலவந்தான் காப்பாத்தனும்..." என வில்லன் சிரிப்புச் சிரித்தான்.

"டேய் அங்க அவகிட்ட என்னடா பிரச்சினை பண்றே... சாப்பிட வாங்கடா" என்ற அம்மாவின் அழைப்புக்கு இருவரும் உள்ளே சென்றனர்.

சாப்பாட்டை விரலால் கிளறியபடி இருந்த புவனாவிடம் "இப்ப என்ன மாப்பிள்ளை வீட்டை பாக்கத்தானே வரச்சொல்லியிருக்காக.... என்னமோ பரிசம் போட்ட மாதிரி மொகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கே... சாப்பிடு... பிடிச்சாப் பாக்கலாம்.... இவன் இல்லாட்டி வேற மாப்பிள்ளை..." என்றபடி சாம்பாரை ஊற்றினாள்.

"என்னடி... உம்மவ அவளுக்குப் பிடிச்ச மாதிரி எதாவது மாப்பிள்ளை பாத்து வச்சிருக்காளா?" தெரியாதது போல் கேட்டார்.

"ஐயோ... அப்பா... அதெல்லாம் இல்ல... வேலைக்குப் போகணுமின்னு..." அவளின் பதட்டம் அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க, வைரவனுக்கோ அவளின் நிலை கண்டு சந்தோஷமாக இருந்தது.

"அதுக்கு எதுக்கு இப்படி பதறுறே... எம்மவளைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன... அதை நா பாத்துக்கிறேம்மா... நீ சாப்பிடு..." 

"ம்..." என்றவள் ஒன்றும் பேசாமல் சாப்பிட ஆரம்பிக்க அம்மாவும் மகனும் பரிமாறிக் கொண்ட பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

"டேய் நான் ராம்கி பேசுறேன்டா..."

"சொல்லுடா மச்சான்... இப்பத்தான் என்னோட நெனப்பு வந்துச்சா?" எதிர் முனையில் கோபமாய்க் கேட்டான் சேகர்.

"அப்படியெல்லாம் இல்லடா... திருப்பூர் போனதுல இருந்து பேசணுமின்னு நினைப்பேன்... எதோ வேலையில மறந்துடும்... காவேரி எப்படிடா இருக்கா..?"

"எல்லாரும் நல்லாயிருக்கோம்... ஒரு தடவை இங்கிட்டு வந்துட்டுப் போகலாம்ல்ல..."

"அதுக்குத்தான்டா கூப்பிட்டேன்... உங்கிட்ட ஒரு உதவி..."

"எப்ப வாறேன்னு சொல்லு... உனக்குச் செய்யாம வேற யாருக்கு மச்சான் செய்யப் போறேன்... என்னான்னு சொல்லு..."

"அது... அது வந்து...."

"ஏன்டா இழுக்குறே... எதாவது பிரச்சினையா?"

"ம்... புவி வீட்டு சைடுல எங்க காதலுக்கு எதிர்ப்பாயிருச்சு... அவளோட அண்ணன் இளங்கோ மூலமா என்னை கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கான்... அண்ணாத்துரை புவியை கூட்டிக்கிட்டு எங்கிட்டாவது எஸ்கேப் ஆகிடலாம்ன்னு சொன்னான். எல்லாருக்கும் அதுதான் சரியின்னு படுது.... எங்க அண்ணி சப்போர்ட் பண்ணுறாங்க... அம்மாதான் பயப்படுறாங்க..."

"என்னடா சொல்றே... உனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டானுங்கன்னா என்ன மயித்துக்கு நீ அங்க இருக்கே... உடனே இங்க வா... இங்க எங்க பசங்க நிறையப் பேரு பக்கத்துல பக்கத்துலதான் இருக்கோம்... என்ன வந்தாலும் பாத்துக்கலாம். எப்ப இங்க வாறீங்க..."

"நீ ஓகே சொல்லிட்டியன்னா நா திருப்பூர் பொயிட்டு அப்படியே வந்துடுவேன்... அவனுக புவிய சேப்பா கொண்டு வந்துருவானுங்க..."

"இதுல என்ன கேட்டுக்கிட்டு... உடனே கிளம்பி வாங்க... ஆந்திரா, கர்நாடகான்னு ஒரு டூர் அடிச்சிட்டு வரலாம்... உனக்கும் ஹனிமூன் ட்ரிப் போன மாதிரி இருக்கும்ல்ல..."

"ஆமா இழுத்துக்கிட்டு ஓடுறதுல... ஹனிமூன் ட்ரிப்தான் குறைச்சல்... சரி சீக்கிரமா முடிவு சொல்றேன்..."

"சரி... ஓகேடா மச்சான்..."

போனை வைத்த ராம்கியிடம் "இது சரிப்பட்டு வருமாப்பா? எதாவது ஒண்ணு கெடக்க ஓண்ணு ஆயிட்டா... என்னப்பா பண்றது... அந்தப்புள்ளதான் வேணுமா?" என்று கேட்டாள் நாகம்மா.

"என்னம்மா சரி... சரியின்னு சொல்லிட்டு இப்ப அந்தப் புள்ளதான் வேணுமான்னு கேக்குறே... உனக்கு உயிர் பயம் வந்திருச்சா?" என்றான்.

"என்னோட உசிரைப்பத்தி கவலப்படல... ஆனா உனக்கு ஒண்ணுன்னா.... என்னால எப்படி..." குரல் தழுதழுக்க கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"ஒண்ணும் ஆகாதும்மா... என்னோட சுயநலத்துக்காக உங்களை எல்லாம் கஷ்டப்படுத்துறேன்னுதான் கவலையா இருக்கும்மா..."

"எதுக்குய்யா வருந்துறே... உனக்குப் பிடிச்சவளுக்காகத்தானே எல்லாரும் கஷ்டப்படப்போறோம்... எங்களுக்கு என்ன வந்தாலும் பரவாயில்லைப்பா ஆனா உனக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னுதான் கவலைப்படுறேன்... அந்த மாரிதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்..." என்ற அம்மாவை அணைத்து அவளின் தோளில் சாய்ந்து கொண்டான்.

"இங்க பாரு இளங்கோ... நீ வைரவனுக்காக அவனைப் போட்டுட்டு கடைசியில வைரவன் உனக்கு நாமம் போட்டுறாம..." என்ற நண்பனிடம் "அப்படி எனக்கு துரோகம் பண்ண நினைச்சா திருப்பூர்ல ராம்கிய போட்ட கையோட இங்க வைரவனுக்கும் சமாதிதான்..."

"அதானே... நீ வில்லனாச்சே... ராம்கியை எப்பப் பண்ணச் சொல்லியிருக்கே?"

"எல்லாம் ஓகே... இவன் அங்க எறங்கினதும் போட்டுருவானுங்க... காணாப் பொணமா ஆக்கிடுவானுங்களாம்..."

"ம்.... எனக்கென்னவோ இதெல்லாம் தேவையான்னு தோணுது... ஒரு பொண்ணுக்காக உயிரை எடுக்கணுமா? யோசிச்சிப் பாரு.... அவனைப் பெத்து வளத்து... கஷ்டப்பட்டு படிக்க வச்ச பெத்தவங்கள யோசிச்சியா... அவன் எதுக்கு எவளோ ஒருத்திக்காக வெட்டுப்பட்டுச் சாவணும்... மிரட்டி விட்டுட்டு புவனாவை கட்டித்தரச் சொன்னா கட்ட மாட்டாங்களா என்ன?"

"வேதாந்தம் கேட்க இது நேரமில்லை... எனக்கு புவனா வேணும் அவளை அடைய ஒருத்தனை இல்லை பத்துப்பேரைக் கூட கொல்லுவேன்" என்றபோது டெலிபோன் ஒலித்தது.

"அலோ... அட்வகேட் இளங்கோ ஸ்பீக்கிங்க்..."

"டேய் நான் வைரவன்..." என்றது எதிர்முனை.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

க்ளைமாக்'ஸ் நெருங்குறாப்புல இருக்கு.நல்லபடியா முடிஞ்சா சரி!

வருண் சொன்னது…

oru varudaththiRku mElA pOguthupOla?
I have to start reading from the beginning :-)

Yarlpavanan சொன்னது…

சிறப்பாக நகரும் கதை தொடர வாழ்த்துகள்