மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்


வெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.

தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.

விழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் அதிகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...


விழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..

நடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சிகள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.

இப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...

“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”

“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற பேரு அமலாபால்”

“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”

“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”

எனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”

“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”

“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”

“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”

நம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ அவரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.

குழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.

மொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.

கடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்வையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.

மொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

அடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.

-‘பரிவை’ சே.குமார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தவறு சரியாகுமா?


ராமசாமி செட்டியாருக்கு
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...

மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!

'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!

அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!

பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!

'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'

திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!


யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!

தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வணக்கமுங்க...

எல்லாருக்கும் வணக்கம்...

பதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.

முதலில் பிரச்சினைகள்...

வேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...

வீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...

அபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.

அறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...

ஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...

நாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....

இப்ப சில சந்தோஷங்கள்...

எனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...

கோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...

நண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....

ரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....

எனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...

எனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...

என இன்னும் சில சந்தோசங்கள் என்னுள்ளே...

மீண்டும் சில சோகங்கள்....

எனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.

சில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.

இதனிடையில்...

நேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...

இனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...

அதுவரை....

பிரியங்களுடன்

சே.குமார்.