மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சிறுகதை : எதிர்சேவை

Image result for தல்லாகுளத்தில் அழகர்

ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்றாங்கன்னு கை, கால் புரியல... எங்கண்ணன் அதை விரும்பிச் சாப்பிடும்... இதை விரும்பிச் சாப்பிடும்ன்னு ஒரே அண்ணன் புராணம். 

எனக்கு மாமாவோ அத்தையோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாமா மக அகிலா வருவாதானே... சின்னப் பிள்ளையில் பார்த்தது. இப்போ எப்போதேனும் மாமா வீட்டுக்குப் பேச நேர்ந்தால், ஒருவேளை அவள் போனெடுத்தால் ரெண்டு வார்த்தை பேசுவாள் அவ்வளவுதான்.

மாமா தன்ராஜ்... அம்மாவுக்கு நேரே மூத்தவர்... மாமாவுக்குப் பின்னே அம்மாவும் லெட்சுமி சித்தியும் கஸ்தூரி சித்தியும்... மாமாவுக்கு திருச்சி பெல்லில் இஞ்சினியர்... வசதி வாய்ப்புக்கு குறைவில்லை... ரெண்டு கார் வைத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த பந்தங்களில் நல்லது கெட்டதில் அவரைப் பார்க்க முடியும். எங்க வீடுகளுக்கு எல்லாம் வருவதில்லை... வேலை அதிகம்... லீவு போட்டு சொந்தம் பந்தமெனப் போனால் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்கும் என்பார். ஆனால் அது காரணமில்லை... அத்தைக்கு அம்மாக்களுடன் அப்படி ஒன்றும் இணக்கமான உறவில்லை என்பதே காரணம்.

இந்த முறை அழகர் வைகையில் இறங்குவதைக் காண வருகிறேன் என்பதெல்லாம் ஜால்சாப்புத்தான்... மதுரையில் பிரபலமான துணிக்கடை முதலாளி மகளை மகனுக்குப் பேசவே அழகர் பேரைச் சொல்லி.... அம்மாவைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி... வருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கான பயணம்தான்... அழகருக்காகவோ தங்கைக்காகவோ அல்ல என்றாலும் இந்தப் பயணத்தில் நான் அகிலாவைப் பார்க்கலாமே... அந்த ஆனந்தம் ஒன்றே இப்போது மனசுக்குள்.

மாமா வந்தது முதல் தன் பெருமையையும் பிள்ளைகள் பெருமையையுமே பேசினார். பெங்களூரில் வேலை பார்க்கும் கம்பெனியில் மகனில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பது போல் பேசினார். அகிலா மாதிரி படிக்கவே  முடியாது... எத்தனை தடவை அவ கல்லூரி முதல்வர் எனக்குப் போன் பண்ணி பேசியிருக்கிறார் தெரியுமா... அவளோட முடிவெல்லாம் டாக்டரேட் பண்ணி, நிறைய சாதிக்கணுங்கிறதுதான்... அப்படியிப்படின்னு அள்ளி விட்டார். எப்பவுமே இப்படித்தான் பிள்ளைகள் புராணம் பேசுவார்... இதொன்னும் புதிதில்லை.

அத்தையைப் பொறுத்தவரை இந்த வைர நெக்லஸ் தங்கமயில்ல சொல்லி வச்சி வாங்குனேன். அகிலா போட்டிருக்கிற ஜிமிக்கி இது வரைக்கும் நம்மாளுக யாருமே போடாத மாடல் ஜோய் அலுக்காஸ்ல சொல்லி கேரளாவுல இருந்து ஸ்பெஷலா செஞ்சி வாங்கினேன்... அவ கால்ல போட்டிருக்கிற தங்க கொலுசு சென்னை போகும்போது வாங்கினது என தற்பெருமையும் நகைபெருமையுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.

இது பெண் பார்க்கும் படலம் என்பதால் மாப்பிள்ளையும் வந்திருந்தான். எப்போதும் போனில்தான் இருந்தான். சிலேட்டு மாதிரி பெரிய போன்... யாரிடமும் பேசவில்லை... அந்தப் பக்கமாக யார் போனாலும் ஒரு சிரிப்பு... அவ்வளவே.

அகிலாவும் கூட போனில்தான் மூழ்கியிருந்தாள். வரும்போது பார்த்துச் சிரித்தவள்தான்... அதன் பின் கண்டு கொள்ளவில்லை. அவளுடன் பேச மனம் துடித்தது... ஆனாலும் நம்மோடு பேசுவதை விரும்பாதவளிடம் என்ன பேசுவது என்ற யோசனையும் தடை செய்தது. 

என் தவிப்பை உணர்ந்த தங்கை, 'என்ன அவகிட்ட பேசணுமாக்கும்... அவ எங்கிட்டயே ஒழுங்காப் பேசல... போன்ல யார் கூடவோ கடலை போடுறா... பேசாம வண்டி எடுத்துக்கிட்டு போயி உன்னோட ஆளு சுபாவோட பேசிக்கிட்டு இருந்துட்டு வா' என்றாள்.

சுபா என்னோட ஆளு இல்லை பிரண்ட்... உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு... அதிக பிரசங்கித்தனம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிய போக ஹாலைத் தாண்டியபோது 'என்ன மச்சான்... இங்க இருக்க லா காலேஜ் பத்தி எங்களுக்கே நல்லாத் தெரியுது... உங்களுக்குத் தெரியாதா என்ன... சரவணனை இதுல சேர்த்து விட்டிருக்கீங்க... இங்க படிச்சி அவன் என்ன பெரிசா சாதிக்கப் போறான்... சிந்தாமணியிலயும் தேவியிலயும் படம் பார்த்து ஊரு சுத்துவான். தலை முடியக் கூட வெட்டாம... ரவுடி மாதிரியில்ல இருக்கான்... எம்பையனையும் பாருங்க... அவனையும் பாருங்க... ஊருக்குள்ள புகாரி மெஸ் ஓனருன்னு உங்களுக்கு ஒரு நல்ல பேரு இருக்கு...  அதைக் கெடுத்துருவான் போலவே...' என என்னை வாரிக் கொண்டிருந்தார்.

'அவன் நல்லாப் படிப்பான் மச்சான்.. சின்னப்பயலுகதானே கொஞ்சம் அப்புடி இப்பிடித்தான் இருப்பானுக... வேலைக்குன்னு பொயிட்டா சரியாயிருவானுங்க...' என எப்பவும் போல் அப்பா எனக்காக முட்டுக் கொடுத்தார்.

'என்னமோ போங்க... வக்கீலுக்குப் படிச்சி என்னத்த சம்பாதிக்கப் போறான்...' என்று அவர் இன்னும் என்னை வாருவதில் குறியாக இருக்க, எனது புல்லட்டை வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன். 

'டேய் மத்தியானம் வீடு வந்து சேரு... சாயந்தரம் தல்லாகுளத்துக்கு எல்லாரையும் நீதான் கூட்டிப் போகணும்' அம்மா வீட்டுக்குள் இருந்து கத்தினாள். என் வண்டி புகையைக் கக்கியபடி கேட்டைத் தாண்டியது. 

கண்டிப்பாக மாமா இப்படி வண்டி எடுத்ததற்கும் எதாவது திட்டியிருப்பார். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழ்க்கை என்னாகிறது. மதுரை மண்ணுக்குன்னு ஒரு கெத்து இருக்கா இல்லையா.

மூணு மணிக்கு மேல்தான் வீடு வந்தேன்... 'என்ன எம்மாமன் மக எங்கிட்ட பேசமாட்டேங்கிறாடின்னு சுபாகிட்ட புலம்பிட்டு வந்தியாக்கும்... உனக்குத் தெரியுமா... அகிலா எங்கிட்ட ரொம்ப நேரம் கலகலப்பாப் பேசிக்கிட்டு இருந்தா' என வெறுப்பேற்றியவள் 'உன்னைப் பற்றிக்கூட பேசினாள்' என என் முகம் பார்க்க, போட்டு வாங்கப் பார்க்கிறா, என்ன கேட்டான்னு நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடாதேடா சரவணான்னு கேக்க நினைத்ததைக் கேட்காமல் அவளை ஒரு அசால்ட் லுக் விட்டேன். 'நம்பாட்டி போ' என நகர்ந்தவளிடம் சரி சொல்லு என்ன கேட்டா என்றதும் 'உங்கண்ணன் இப்படித்தான் ஊரு சுத்துமா... வீட்லயே இருக்காதான்னு கேட்டா' என்றவளிடம் 'அவளும் சுத்த வார்றாளான்னு கேட்டுச் சொல்லு' என்றேன்.

'சாப்பிட்டியாடா' என்ற அம்மாவின் முகம் சரியில்லை. ஏன் என்னாச்சு...? நம்ம புள்ளையைக் கட்டிக்காம வேற இடத்துல பெண் பாக்குறாரே அண்ணன்னு வருத்தமா இருக்கும் என்று நினைத்துக் கடக்க நினைத்தவனுக்கு எப்பவும் மகிழ்வாய் இருக்கும் அம்மாவை அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை. அப்பா, மாமா, அத்தையின்னு யாரும் அங்கில்லை. எல்லாரும் தூங்கலாம்... அம்மா அருகில் போய் 'என்னம்மா... முகமெல்லாம் வாடியிருக்கு' என அம்மாவைக் கட்டிக் கொண்டு கேட்டேன். 'அய்யே பாசம்' என கவிதா நகர்ந்தாள்.

'ஒண்ணுமில்லடா... எங்க சுத்திட்டு வர்றே... வந்திருக்கவங்க என்ன நினைப்பாங்க...' என்றாள் என் முகம் வருடி. 

'அவங்க என்னமோ நினைக்கட்டும்... அவங்க பாடுற புகழைக் கேட்டுக்கிட்டு இங்க இருக்க எனக்குப் பிடிக்கலை.. அதை விடு... நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே...' என்றதும் 'அதான் சொன்னேனே... ஒண்ணுமில்லேன்னு...' என்றாள். 

'சொல்லாட்டி போ...' எனக் கோபமாய்ப் போவது போல் பாசாங்கு செய்ய, 'இன்னைக்கு பொண்ணு பாக்கப் போனோம்' என்றாள்.

'அதான் தெரியுமே... உன்னோட உடன்பிறப்பு அதுக்குத்தானே வந்திருக்கு... அது சரி பொண்ணு எப்படி... உங்கண்ணன் மகன் நம்ம கவிதாவைக் கட்டிக்கலைன்னு வருத்தமோ..?' என்றபடி அம்மா மடி சாய்ந்தேன். 

'எம்மவளுக்கு என்னடா... அவளுக்கு ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவான்... அதெல்லாம் ஒரு வருத்தமுமில்லை.... அந்த துணிக்கடைக்காரன் எங்கண்ணனுக்கிட்ட உங்களுக்கு உங்க தங்கச்சி வீட்டுல வசதி பத்தலைன்னா நம்ம வீட்டுக்கு வந்துருங்க... இங்க எல்லா வசதியும் இருக்குன்னு சொல்றான்... நாம எந்த விதத்துல குறைஞ்சி பொயிட்டோம்...' 

'இதுக்குத்தானா... ஆமா உங்கண்ணன் என்ன சொன்னார்... இப்பவே வர்றோம்ன்னு சொல்லிட்டாரா...' காலைக் கடுப்பில் நக்கலாய்க் கேட்டேன்.

'சீச்சி... அங்க எல்லா வசதியும் இருக்கு... நிச்சயமெல்லாம் முடியட்டும்... அப்புறம் வரும்போது இங்க வந்து தங்குறோம்ன்னு சொன்னார்...' என்ற அம்மாவிடம் 'அப்ப அடுத்த பயணத்துல உங்க அண்ணனை நீ போய் அவர் சம்பந்தி வீட்டுலதான் பாக்கணும்...' எனச் சிரிக்க, 'உனக்கு கொழுப்பு ரொம்பத்தான்... சரி... சாயந்தரம் மாமா கார்ல எல்லாரும் தல்லாகுளம் போலம்ன்னு சொன்னார்... அப்பா கடைக்குப் போயிடுவார்... நீ கார்ல எங்ககூடவே வா...' என்றாள்.

'சாரி மம்மி... அந்தாளு கார்ல.... நெவர்.... என்னோட புல்லட் இருக்கு... பிரண்ட்ஸ் இருக்காங்க... நான் தனியாப் போயி அழகரைச் சந்திச்சிக்கிறேன்... உங்க சங்காத்தமே வேண்டாம்... கூட்டத்துல எங்கூட படிக்கிற எதாச்சும் ஒரு பொண்ணு பார்த்து ஹாய்ன்னு வந்து பேசினா உங்கண்ணன் என்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்வார்... நமக்கு ஆயிரம் பிரண்ட்ஸ் இருக்காங்க... அதுல முக்கால்வாசி பெண்கள்தான்...' என்றபடி எழுந்து சென்றேன்.

மாலை எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'அம்மா... நான் கார்ல வரலை... அண்ணங்கூட வர்றேன்...' என்றாள் கவிதா. 

'ஏன்டி அவன் எங்கிட்டு சுத்தப் போறானோ... அவங்கூட போயி...' என்ற அம்மாவிடம் ' நீங்க பூமா ஆஸ்பிடல் பக்கம்தானே காரை பார்க் பண்ணிட்டு வருவீங்க. நான் நவநீத கிருஷ்ணன் கோவிலுக்கிட்ட நிக்கிறேன்' என்றவளுக்கு அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன்.

'நானும் கவிதாவோட வண்டியில போறேன்' என்றபடி காரில் ஏறாது நின்றாள் அகிலா. 'மூனு பேரா... வண்டியிலயா... அதெல்லாம் சரிவராது. அகி வண்டியில ஏறு' அத்தை கத்தினாள்.

'போம்மா... ஜ லைக் புல்லட்... நான் வண்டியில வர்றேன்... வேணுமின்னா கவிதாவை கார்ல கூட்டிக்கிட்டுப் போங்க... நான் சரவணன் கூட வண்டியில வர்றேன்...' என பிடிவாதமாய் நின்றாள். கவிதாவை அத்துவிட அடி எடுத்துக் கொடுத்ததும் என் பெயரைச் சொன்னதும் மகழ்ச்சியாய் இருந்தாலும் நான் எதுவும் பேசவில்லை.

அகிலாவின் பிடிவாதம் வெல்ல, 'டேய் வேகமா ஓட்டாதே... ரெண்டு பேரையும் கிருஷ்ணன் கோவில்கிட்ட விட்டுட்டு நீயும் நாங்க வர்ற வரைக்கும் அங்கயே நில்லு' என அம்மா சொல்லியபடி காரில் ஏற, என் வண்டி அழகரின் புஷ்ப பல்லக்கு போல் தல்லாகுளம் நோக்கிப் பயணித்தது. 

கவிதா சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுட்டு அம்மா சொன்னதுக்காக நிற்காமல் அகிலாவுக்காக நின்றேன். அதைப் புரிந்து கொண்ட கவிதா 'நடத்துடி... நடத்து...' என மெல்ல என் காதைக் கடித்தவள், 'இங்கயே நில்லுங்க... இந்தா வர்றேன்..' என தன்னைக் கூப்பிட்ட நண்பிகள் கூட்டம் நோக்கிப் போனாள். 

'வண்டி நல்லா ஓட்டுறீங்க... அம்புட்டுச் சந்து பொந்தும் அத்துபடி போல...' என பேச்சை ஆரம்பித்தாள் அகிலா.  நான் ஒன்றும் சொல்லவில்லை.

'எனக்கும் பைக் ரைடிங் ரொம்பப் பிடிக்கும்...' கண்கள் விரித்து அவ பேசும்போது திருக்கல்யாண மீனாட்சியாய் சொக்க வைத்தாள். அதில் மயங்கி பேசாது நின்றேன். 

''என்ன பேசவே மாட்டேங்கிறீங்க... அப்புறம் கவிதாட்ட நான் பேசமாட்டேங்கிறேன்னு சொன்னீங்களாம்... வீட்லயே தங்க மாட்டீங்க போல...' என்றவள் கேட்டபோது 'எனக்கு லீவு நாள்ல வீட்டுல தங்க பிடிக்காது... நாங்க ஒரு கேங்க்கா யானைமலை, திருபரங்குன்றம், அழகர்கோவில், ஹவாவெளின்னு எங்கயாச்சும் கிளம்பிடுவோம்...' என்றேன். 

'நாங்க வந்திருக்கும் போதாச்சும் வீட்ல இருக்கலாம்ல' என்றாள்.

'நீங்க எங்க எங்கிட்ட பேசினீங்க... நீயும் உங்கண்ணனும் போன்ல சாட்டிங்... உங்கம்மாவுக்கு நகைப் பெருமை... உங்கப்பாவுக்கு என்னையத் திட்டணும்...அப்புறம் நான் எங்கிட்டு வீட்டுல இருக்குறது....' என்றதும் சத்தமாகச் சிரித்தாள்.

'அப்பா எப்பவும் பிள்ளைங்க பெருமை பேசுவார்... மற்றவங்க பிள்ளைகளை மட்டம் தட்டித்தான் பேசுவார். அது மட்டும்தான் அவருக்கிட்ட பிடிக்காது... மற்றபடி ரொம்ப நல்லவர்.... அம்மாவுக்கு நகை, பணம்... அம்மாவோட பிடுங்கலாலதான் என் கால்ல தங்கக் கொலுசு... அண்ணனை பெங்களூர் ரொம்ப மாத்திருச்சு... நீங்க யாரும் எங்கிட்ட பேசலை... அதான் நான் என் பிரண்ட்டுக்கிட்ட பிளேடு போட்டேன்...' என மீண்டும் சிரித்தாள். 

அழகரைக் காண கூட்டம் அலைமோதியது, எங்களைக் கடந்த இளைஞர்கள் மீனாட்சி போல் அழகாய் இருந்த அகிலாவைப் பார்வையால் தின்று கொண்டே சென்றார்கள். பலருக்கு அவளருகில் நான் நிற்பதே பொறாமையாக இருந்தது. கடந்து சென்ற பெண்கள் கூட அந்த அழகியை ஒரு முறை பார்க்கத் தவறவில்லை. எனக்குப் பெருமையாக இருந்தது. 

'இன்னும் ரெண்டு நாள் இங்க இருப்போம்... அழகர்மலைக்கு பைக்ல கூட்டிப் போவீங்களா..?' என அவள் கேட்ட போது கவிதா வந்து சேர, கார் பார்ட்டிகளும் வந்து சேர்ந்தது. 

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது 'சரிம்மா... வர்றேன்... நீங்க பாத்துட்டு இந்த இடத்துல வந்து நின்னு போன் பண்ணுங்க...வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...' எனக் கிளம்ப, 'இனி எங்க போறே... எங்ககூட வந்து சாமி பாத்துட்டு வரவேண்டியதுதானே...' என்றாள் அம்மா. 

'அதானே... எங்களை மறுபடியும் வீட்டுக்கு கூட்டிப் போகணுமில்ல... எங்க கூடவே வரவேண்டியதுதானே... பிரண்ட்ஸ் நாளைக்குப் பாத்துக்கலாம்...' என்றாள் கவிதா. அத்தை அவளை முறைக்க, கொய்யால இந்த முறைப்புக்காகவே நான் வருவேன்னு வண்டியை ஓரங்கட்டிட்டு அவங்க கூட நடந்தேன்.

கூட்டம் கட்டி ஏறியது... ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்க, அகிலாவின் வலது கரம் என் தோள் பற்றியது அதைக் கவனித்த கவிதா என்னை மெல்ல இடித்து 'இன்னைக்கு அழகரோட எதிர்சேவை பாக்குறோமோ இல்லையோ மீனாட்சி திருக்கல்யாணம் கூடிய சீக்கிரம் பார்ப்போம் போல' என என் காதைக் கடித்தாள். 

'வாராரு... வாராரு....அழகர் வாராரு...' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டம் நெட்டித் தள்ளியதில் அகிலாவின் இடதுகரமும் என் கையைப் பற்றியது. அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் என்ன என்பது போல் பார்க்க, எங்களின் கண்கள் எதிர்சேவை செய்து கொண்டன.

....கண்டோம் அழகர் கண்டோம் அழகு கொண்டோம் மதுரை வாழியவே !! கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே !! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே !!....

என்ற வரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, கூட்டம் ஆர்ப்பரிக்க... என் மனசுக்குள்ளும் தத்தோம்... தகிட தத்தோம்....
'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்

மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்கவி. திரு. ரமணன் அவர்கள் திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பில் பேச கணீரென்ற தனது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்தார். 

ஆரம்பத்திலேயே 'இசைக்கவி ரமணன் அவர்களை அடுத்த முறையும் பாரதி நட்புக்காக விழாவில் பேச வரும்படி அன்புடன் அழைக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டார். வந்தவர்களையே திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள் எப்படியும் என்னையும் திரும்ப அழைப்பார்கள் என்றார். இதையே யுகபாரதி பேசும் போது சொன்னார்.


பதினைந்து நிமிடம் இருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் இரண்டாவதா ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் மூன்றாவதாக ஒரு பாட்டுப் பாடுறேன் என்று சொல்லி, தன் சக பேச்சாளர்கள் பற்றி சில வரிகள் சொல்லி பேச்சைச் தொடர்ந்தார். சினிமாப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான் என்றவர் சில அப்படியிப்படியான பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்றார்.

முதலில் 'எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே...' என்ற வரிகள் வரும்படியான பாடலைப் பாடினார். பாடலின் வரிகளிலும் அவரின் கணீர்க்குரலிலும் லயித்துப் போன பார்வையாளர்கள் பக்கமிருந்து பாடலுக்கு ஏற்றபடி கைதட்டல் ஆரம்பமாக, அவருக்குள் ஒரு உற்சாகம்... அரங்கம் அவர் பாடல் வரிகளுடன் அழகிய கைதட்டல் இசையால் நிரம்பியது.

'அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்...' என்ற பாரிமகளிர் பாடல் குறித்துப் பேசி... அதை விவரித்து, சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்படும் வரிகளை கவிஞர்கள் கையாளும் போது அது சுலபமாக கேட்பவர் மனதுக்குள் இறங்கிவிடுகிறது என்றவர் இந்த அற்றைத் திங்களை வைரமுத்து தனது நறுமுகையே நறுமுகையே பாடலில் பயன்படுத்தியிருப்பது குறித்துப் பேசினார். திருநாவுக்கரசர் பாடிய தேவரப்பாடலான 'குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும்' பாடலை வாலி தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டுக்குள் வைத்தபோது இந்த குனிந்த புருவம் எல்லாருடைய வாயிலும் சுலபமாய் விளையாடியதை நாம் அறிவோம் அல்லவா.

பின்னர் யுகபாரதி எழுதிய பாடல்கள் குறித்து பேசினார். ஒரு அருமையான பழைய பாடலைச் சொல்லி இதை எழுதியது வாலியா, கண்ணதாசனா என்று தெரியவில்லை என்று சொன்ன போது அது கண்ணதாசன்தான் என்றார் தமிழருவி. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலை அழகாகப் பாடினார்.

பாரதி குறித்துப் பேசினார்... பாரதியின் பாடல்வரிகளைச் சொன்னார். மிக அழகாகப் பாடினார். என்ன குரல் வளம்... அப்பா... இசையோடு இசைக்கவி பாடியிருந்தால் எழுந்து வரவே மனமிருக்காது. நேரம் முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த முறை தொடரும் என முடித்துக் கொண்டார்.

அவர் பேசி முடித்ததும் டிஎம்எஸ்சும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது போல் இருந்தது. என்ன அருமையான குரல் வளம், வாலி சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என தோல்வியோடு திரும்ப நினைத்த போது அவரின் வாழ்வை மாற்றியது இந்த மயக்கமா கலக்கமா பாடல்தான் என்றும் நினைவு கூர்ந்த தமிழருவி, அடுத்ததாக பர்வீன் சுல்தானா அவர்களை பழஞ்சுவை இலக்கியம் என்ற தலைப்பில் பேச அழைத்தார். உங்கள் அன்பிற்குப் பாத்தியமான என்று தமிழருவி சொல்லும் போதே தெரிந்து விட்டது பர்வீன் அவர்களுக்கு பதினைந்து நிமிட வரைமுறை இல்லை என்பது. அன்னைத் தமிழை வணங்கி தன் பேச்சை ஆரம்பித்தார்.


தமிழருவியை என் அப்பா என்றும்... இசைக்கவியை தேவதச்சன் என்றும்.. மோகன சுந்தரத்தை என் சகோதரர் என்றும் அழைத்தவர் ஐந்தாவது முறையாவது தமிழை சரியாகப் பேசிவிடமாட்டாளா என்னை அழைத்திருக்கிறார்கள் என்று சீண்டிப் பார்த்திருக்கிற, மன்மத ராசா என்ற பாடல் மூலமாக என் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகி கண்ணம்மா என்ற பாடலை எழுதியதன் மூலமாக என் அனைத்து மன்னிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் யுகபாரதி அவர்களே என்று அவையைச் சிரிக்க வைத்து  மன்மதராசா அவருக்கு பெயரையும் பணத்தையும் கொடுத்தாலும் தன் மகளைப் பாடுபொருளாக்கி கண்ணம்மா என்ற பாரதியின் வரியையும் வைத்து எழுதிய பாடல் அவருக்கு புகழைத் தந்திருக்கிறது. அவர் நிரந்தரமான புகழுடன் இன்னும் நல்ல பாடல்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

அதன் பின் பழஞ்சுவை இலக்கியம் குறித்து கொஞ்ச நேரம் பேசுகிறேன் என தமிழுக்குள் அமிழ்ந்தார். அவை அமைதியை அந்தத் தமிழைப் பருகியது. எனக்கு ரெண்டு , மூணு, நாலு மொழிகள் தெரியும் என்ற போது தமிழருவி அவர்கள் ரெண்டா, மூணா, நாலா என இடையில் புக, அவையில் சிரிப்பொலி எழுந்தது. தமிழ் தவிர்த்து ஆங்கிலம், இந்தி, உருது, அரபி என நான்கு மொழிகள் எனக்குத் தெரியும் என்றார்.

தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு என்ன என்றால் தாய்மொழி எல்லாருக்கும் சுகமானதுதான் பேசினால் இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ்மொழி மட்டும்தான் மற்றவர் பேசக் கேட்க மிகவும் சுகமாக இருக்கும். தாய்மொழி உயிர்ப்பைத் தரும் உயிரைத் திருப்பித் தரும் என்றார்.

இங்கு பேசியவர்கள் எல்லாரும் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்துதான் தரவுகளை எடுத்துத் தந்தார்கள். ஏன் தலைவர் கூட சங்க இலக்கியத்தில் இருந்துதான் தனது பேச்சை ஆரம்பித்தார். எனவே நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய புள்ளி பழம்பெரும் இலக்கியங்கள்தான் என்றார்.

'செல்லாமை உண்டேல்...' என்னும் குறளைச் சொன்னவர் இது தமிழில் இருப்பதால் நமக்குப் புரியலை... கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் புரியும் என்ற போது சிரிப்பலை எழ, நான் வெளியில் செல்கிறேன் விரைவில் திரும்பி வந்துருவேன் என மனைவியிடம் சொல்லும் போது அந்தம்மாவின் பதில்தான் குறள்... போகமாட்டேன்னா எங்கிட்டே சொல்லு நீ வருவேன்னு சொல்ற அந்த வள்வரவை எவ நீ திரும்பி வரும்போது இருப்பாளோ அவளிடம் சொல்லு என்றாளாம்.

சிம்மமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் தமிழருவி மணியனைத்தான் உங்களுக்குத் தெரியும். சிறுவயதில் இருந்து அவரை அறிந்த எனக்குத் தெரியும் அவர் ரசனையான மனிதர் என்பது. கண்ணதாசனைப் பற்றி அவரைப் பேசச் சொல்லிக் கேளுங்கள்... அவரின் ரசனை புரியும் என்றார்.

அம்மா உன்னோட டேட் ஆப் பெர்த்தைக் காட்டு என அவரின் மகன் கேட்டதாகவும் ஏன்டா எனக் கேட்ட போது பழசை எல்லாம் ரசிக்கிறே என்றானாம். அவனிடம் பழந்தமிழ் இலக்கியமெல்லாம் இல்லாமப் போச்சு... அதை நாம் அப்படியே விட்டுவிட்டால் தமிழ் இல்லாது போகும் என்றார்.

அப்துல் ரஹ்மான் பற்றிப் பேசும் போது ஒரு சாடியில் இருந்த காதலன் தன் காதலியை அணைத்து முகத்துக்கு அருகே முகம் வைத்த ஓவியத்தைப் பார்த்து கீட்ஸ் என்னும் கவிஞன் எழுதியதை மொழிபெயர்த்த கவிக்கோ துணிச்சலான காதலனே என ஆரம்பித்து நீ உன் இலக்கை நெருங்கிவிட்டாய்... ம்ஹூம்... நீ ஒரு போதும் நெருங்கவே மாட்டாய்... வருத்தப் படாதே காதலனே... உன் காதலி ஒளி மங்கவே மாட்டாள் என்று எழுதியதைச் சொல்லிச் சிலாகித்தார்.

2004ம் ஆண்டில் நாற்பத்தி ஓரு இலக்கியங்கள் செம்மொழி இலக்கியமாக அறிவிக்கப்பட்டது அது எதுன்னு கேட்டா ரொம்பப் பேருக்குத் தெரியாது. பதிணென் கீழ்க்கணக்கு, பதிணென் மேல்கணக்கு மொத்தம் முப்பத்தியாறு அதுபோக மணிமேகலை, முத்தொள்ளாயிரம், தொல்காப்பியம், இறையனார் களவியல்,சிலப்பதிகாரம் என மொத்தம் நாற்பத்தி ஒன்று என்றார். மேலும் புறம் சார்ந்த 400 என்பது தொகுப்பாளர்கள் தொகுத்தது என்றாலும் ஒரே சமயத்தில் எழுதியது இல்லை. 600 ஆண்டு காலமாக எழுதியதை தொகுத்தவன் தமிழன்தான் என்றார்.

வீரம் என்றால் வன்முறை என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறோம் அதுவா வீரம் என்றார்.

யாரோ ஒருவர் காட்டும் காட்சியை விட நாமே ஒரு காட்சியைப் படைப்பதுதான் சுவை என்றார்.

Image may contain: one or more people and crowd

வீரம் பற்றிப் பேசும் போது யானையை வேலால் தாக்கிய வீரன், வேல் தாக்கிய போதும் தன்னை நோக்கி வரும் யானையை வீழ்த்த இன்னுமொரு வேல் வேண்டுமே என்று நினைத்தவன் ஆஹா வேல் கிடைச்சிருச்சி என சந்தோஷப்பட்டு அதைப் பிடுங்கி... எங்கிருந்து தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தானாம் இதுதான் வீரம் என்றார்.

முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் போரில் வெற்றி பெற்று உவகை சிந்த வந்த போது  தனது அரண்மனை வாசலில் யானை மேல் ஒரு வீரன் , நாக்கை மடக்கியபடி வேலெறிய முயன்ற நிலையில் செத்துப் போய் நின்ற வீரனைப் பார்த்து தோற்றான் போல் நின்றான் என எழுதினான் பாரு... அவன் ஜெயித்தான்... அதுதான் அறம் என்றார்.

அன்பு பற்றிச் சொல்லும் போது பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுங்கள். மனைவி என்பவள் ஒரு பெண் மட்டும் அல்ல... அவளின் சக்தி நிலையைப் பேசக் கூடிய இலக்கியங்கள்தான் தமிழ் இலக்கியங்கள் என்றார்.

சிலர் மனைவியை எங்கு போனாலும் மனைவியைக் கூட்டிப் போவார்கள் என்றதும் அரங்கில் சிரிப்பொலி.... காரணம் தமிழருவி அவர்கள் மனைவியுடன் வந்திருந்தார். பர்வீன் சுல்தானா அவர்கள் தொடர்ந்து பேச மணி ஒலித்தது போல் ஒரு சப்தம், உடனே நான் முடிச்சிடுறேன் என்றார். நான் இருமினேன் அம்மா என தமிழருவி அவர்கள் சொன்னதும் அரங்கில் மீண்டும் சிரிப்பொலி. 

பரணியிலக்கியம் சொல்லும் கதையைச் சொன்னார். ஒரு வீரன் போர்க்களத்துக்கு தன் மனைவியைக் கூட்டி வந்து பாசறையில் இருக்க வைத்திருக்கிறான் என்ற போது நான் சொல்லப் போற பெண்தான் உங்களுக்காக உங்கள் வீடுகளில் காத்துக்கொண்டிருக்கும் பெண் எனவே எத்தனை நேரமானாலும் இன்னைக்குப் போன் பண்ணிடுங்க என்றார்.

கதையைத் தொடர்ந்தவர் தன் கணவன் மீது எதிரி வீரன் எறிந்த வேல் பாய்ந்த போது என ஆரம்பித்து இப்படியெல்லாம் எப்படியய்யா ஜெயங்கொண்டான் எழுதினே... நான் வியந்து போனேன்யா... என்று சொன்ன போது குரல் கம்மியது. அத்தனை வியப்பு அவருக்குள். கதை கேட்கும் ஆவல் நமக்குள்.

தன் கணவன் மீது வேல் பாய்ந்ததும் ஓடிப் போயி அவனைத் தாங்கிப் பிடித்தவள் அவன் சாகும் முன் தன் உயிரைத் துறந்தாள். இது காட்சி... இதை ஜெயங்கொண்டாஎ எழுதியதை வியந்து மண் பெண்தானே... எங்கே அவள் தழுவி விடுவாளோ என அவள் தழுவி இறந்து அவனுக்கு முன்னே உயிரைக் கொடுத்தாள். மேலோகத்திற்குப் போனால் பெண்கள் தன் கணவனைத் தழுவி வரவேற்ப்பார்கள் என்பதால் அவர் விரைந்து விண்ணுலகம் சென்றதாகவும் எழுதியிருப்பதாகவும் சுவையுடன் சொன்னார்.

காதல் பாடல்களை எழுதுபவர்கள் பழம் பாடல்களில் இருந்து எடுத்து எழுதும் அதை மட்டுமில்லாது அதன் சுவையையும் அறத்தையும் சேர்த்தே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

குற்றாலக் குறவஞ்சி எனக்குப் பிடிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று சொன்னவர் 'வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு...' என்ற பாடலை விளக்கும் போது குரங்கு தனது தாயாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் மந்திக்குப் பழங்களைக் கொடுத்துச் சாப்பிட்ட பாடலையும் குற்றாலச் சாரல் தென்காசியில் விழுவதையும் அவ்வளவு சுவையாகப் பேசினார்.

அன்பு செய்பவன் இருந்து விட்டால் பெண்களுக்கு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிரை ஏற்றுக் கொள்பவர்கள்தான் அன்பில் அறம் காண்கிறார்கள் என்ற போது கைதட்டல் அடங்க அதிக நேரமானது.

நாம சரியான சுவையைக் கொடுக்காததால் தான்  சுவையை இழந்து நிற்கிறோம் என்றார். தேனருவி, தமிழருவி, நீர்வீழ்ச்சி என எல்லாம் பேசினார்.

நேரமின்மை காரணமாக தன் பேச்சை விரைந்து முடித்ததால் தமிழ்சுவை அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த தமிழின் சுவை இன்னும் மனசுக்குள்.

மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு... பாரதி நட்புக்காக அமைப்புக்கு நன்றி. உங்களது தமிழ்ப்பணி தொடரட்டும். எப்போதும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு இந்த முறை ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தார்கள். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைச் சொன்னதில் குழப்பம், அவர்களின் பெயரைக் கூட சரியாக அறிவிக்காதது போன்றவை கவிஞர்களுக்கு அதிருப்தி கொடுத்தது என கலந்து கொண்ட நண்பர் சொல்லியிருந்தார். அடுத்த முறை இவை எல்லாம் களையப்பட்டு பாரதி சிறப்பான விழாவை நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நன்றி.

படங்களுக்கு நன்றி : சுபஹான் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... அருவியும் நகைச்சுவையும்

யுகாவின் பேச்சுக்குப் பின்னர் கவிதைப் போட்டி பரிசளிப்பு நேரம் என்பது சினிமாவில் இடைவேளை விட்டது போல் இருக்கைகள் எல்லாம் காலியாக, பார்வையாளர்கள் எல்லாம் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பலாமென வெளியில் சென்றிருந்தார்கள். அரங்குக்கு வெளியே மணிமேகலைப் பிரசுரம் புத்தக விற்பனை செய்து கொண்டிருந்து. நாமெல்லாம் பிடிஎப் வாசிப்பாளன் என்பதால் அந்தப் பக்கம் செல்லவில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

பேச்சாளர்கள் ஒவ்வொருவராக திருமதி. சித்ரா அவர்களின் அழகிய சிறிய அறிமுகத்துடன் மேடை ஏற, தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது பழஞ்சுவை இலக்கியம், பண்பாட்டின் வெளிப்பாடு, திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பிலான விவாத அரங்கம் ஆரம்பித்த போது மணி 8.30க்கு மேல்.


விழாத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் மூவரையும் பேச விட்டு, அவர்கள் பேசியதில் இதுதான் சரியென்ற முடிவை நான் சொல்லப் போவதில்லை. ஒவ்வொருவரின் பேச்சும் ஒவ்வொரு விதமானது... அதை நீங்கள் ரசிக்க வேண்டும்... இதில் இவர்தான் பெரியவர் அவர்தான் பெரியவர் என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது என்றவர் மோகன சுந்தரம் ஐயா, பர்வீன் சுல்தானா மேடத்துடன் நிறைய நிகழ்ச்சிகளில் பேசியிருப்பதாகவும் இசைக்கவி ஐயாவுடன் பேசியதில்லை இதுதான் முதல் மேடை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் செய்திருக்கும் அவரின் பேச்சைக் கேட்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார்.

நான் இப்போதே பேசிவிடுகிறேன் முடிவில் பேசப் போவதில்லை என்றவர், நம்ம ஊரில் இருந்து இங்கு ஆட்களைக் கூட்டி வரும்போது அவர்களைப் பேச விட்டுக் கேட்க வேண்டும். அவர்களின் தமிழைப் பருக வேண்டும். பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் என பேச விடுவது சரியல்ல. இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் ஐந்து மணிக்கே ஆரம்பிக்கலாம் தவறில்லை என்றார். அவர் சொன்னது உண்மையே ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்தது. மணி ஒலித்தபின்னர் கொஞ்சம் இழுத்து 20 நிமிடங்கள் ஆக்கினார்கள்.

பர்வீன் சுல்தானா அவர்களுக்கு மட்டுமே சற்று நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டது என்றாலும் அவர் நிறைவாய் பேச முடியாத சூழல். குற்றாலக் குறவஞ்சிக்குள் மழையாய் நுழைந்தவர் காற்றுக் கலைத்த மேகம் போல வெளியேற, நேரம் கருதி முடித்தது சரியே எனக் கிளம்பினாலும் மனசு மட்டும் அவர் அதிக நேரம் பேசவில்லையே என்று வருந்தியது. அவருக்காக மட்டுமல்ல மோகன சுந்தரம் ஐயா சிரிப்பொலியோடு இன்னும் கொஞ்சம் இருக்க முடியவில்லை... ரமணன் ஐயாவின் கம்பீரக் குரலிலான தமிழை கொஞ்சம் கூடுதலாக சுவைக்க முடியவில்லை. ஆம் பேசிய நால்வருக்குமே நேரச் சிக்கல் பேச்சைக் குறைக்க வைத்துவிட்டது.

தமிழன் மட்டுமே தான் வாழும் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்து வைத்திருக்கிறான். உலகில் வேறு எங்கும் பிரிக்கப்படவில்லை என்று சொன்ன தமிழருவி அவர்கள், காற்றை நான்கு வகையாக அதாவது வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல், கிழக்கே இருந்து வருவது கொண்டல், மேற்கே இருந்து வருவது கோடை எனப் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னவர் பேசும் மொழியை இயல், இசை, நாடகமென மூன்று வகையாகப் பிரித்தவன் வாழ்வை அகம், புறம் என இரண்டாகவும் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாகவும் பார்த்தவன் நம் தமிழன் என்றார்.

அகநானூறு புறநானுறு குறித்து விரிவாகப் பேசினார். புறநானுற்றில் 398 பாடல்கள் மட்டுமே இருக்கு. 267, 268 எண் கொண்ட இரண்டு பாடல் இல்லை... காணாமல் போச்சு.. நம்ம குழந்தைகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கணும்... இல்லேன்னா ரெண்டு போனது மாதிரி நாம எல்லாத்தையும் தொலச்சிட்டு நிப்போம் என்று வருத்தப்பட்டார்.

Image may contain: 1 person, smiling, sitting and hat

கண்ணதாசனைப் பற்றி வாலி 'வாலிப வாலி' என்னும் புத்தகத்தில் எழுதியிப்பதைச் சொல்லி, தனக்குப் போட்டியாளராய் இருந்தவரைப் பற்றிச் சிலாகித்துப் பேச பெரிய மனசு வேண்டும் என்றார். கண்ணதாசனுடனான மோதலுக்குப் பின்னே எம்.ஜி.ஆர்.தான் வாலியை வளர்த்து விட்டவர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பேசிக் கொண்டிருக்கும் போது முன்வரிசை வி.ஐ.பி. களுக்கு சாப்பிட எதோ கொடுக்கப்பட மைக்கில் தட்டி கூப்பிட்டு நான் பேசும் போது எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்... இப்படிக் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது என அவர்களைப் போகச் சொன்னார். அரங்கம் கைதட்டலால் நிறைந்தது என்றாலும் கொடுத்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்கி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

இனி வரும் காலங்களில் மேடைகளில் சங்க இலக்கியங்களைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகச் சொன்னார். பாரதியின் கண்ணம்மா பற்றி பேசினார். கண்ணம்மா காதலி அல்ல அவள் குழந்தை என்பதை இசைக்கவி பேசும் போது சொன்னார். மயக்கமா கலக்கமா பாடல் பற்றிய பேச்சு இசைக்கவியின் பேச்சில் எழுந்தபோது அதை எழுதியவர் கண்ணதாசன் என்றவர் அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அழுதுவிடுவேன் என்றார்.

யுகபாரதியின் பேச்சைச் சிலாகித்தார்.   இன்னும் இன்னுமாய் நிறையப் பேசினார் ஒரிடம் தவிர அரசியலுக்குள்ளேயே போகவில்லை அவர். இது இலக்கிய மேடை என்பதில் துளியும் பிசகாது அரை மணி நேரத்தில் இலக்கிய மழை பொழிந்தார். அதனால்தானே அவர் தமிழருவி ஆனார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தவர் நகைச்சுவை அரசர் மோகன சுந்தரம் ஐயா அவர்கள். இந்த மனுசன் வாயைத் திறந்தாலே சிரிப்புத்தான். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னவர் உங்களுக்கு கவலையில்லை நீங்க சித்திரை ஒண்ணு கொண்டாடிட்டீங்க... எங்களுக்குத்தான் பிரச்சினையே... சித்திரை ஒண்ணுன்னு இவன் சொன்னான். அடுத்த ஆட்சி மாறினப்போ தை ஒண்ணுன்னான்... அப்புறம் மறுபடியும் சித்திரை ஒண்ணுன்னான்... இனி ஆட்சி மாறி வேற யாராச்சும் வந்து டிசம்பர் 12-ன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம்... இல்லே மஹாளய அமாவாசைதான் தமிழ் வருடப்பிறப்புன்னு சொன்னாலும் நாங்க ஏத்துப்போம். எங்களுக்குத் தேவை ஒரு நாள் விடுமுறை... சாயந்தரம் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாய் புதுப்படம் விளம்பரங்களுக்கு இடையே அவ்வளவுதான் என்றார்.

டாய்லெட்டை இப்ப நாம ரெஸ்ட் ரூம் என மாற்றி வைத்திருப்பதை வைத்து அவர் நகைச்சுவையாகப் பேசிய போது சிரிப்பொலி அடங்கவே இல்லை. அலுவலக செகரெட்டரி காலையில் வந்தவுடன் டாய்லெட் போக, மேனேஜர் வந்தவர் அவள் எங்கே எனக் கேட்க, மற்றொருவர் ரெஸ்ட் ரூம் போய்விட்டதாகச் சொன்னதும் என்ன வேலைக்கு வந்த உடனேயே ரெஸ்ட் ரூமா என்று திட்டிய போது சார் ரெஸ்ட் ரூம்ன்னா டாய்லெட் என்று சொல்ல வேண்டியிருந்ததைச் சொல்லி, டாய்லெட்டை ரெஸ்ட் ரூம் ஆக்கிட்டீங்க... அப்ப மத்தியானம் சாப்பிட்டு உட்காந்திருக்க ரூமுக்கு என்ன பேர் என்றார்.

ஆங்கிலம் பேச முடியாமல் தவிப்பதைச் சொல்லி, அப்படிப் பேச வேண்டும் என்றால் மனசுக்குள் வார்த்தைகளைக் கோர்த்து  அட்சர சுத்தமாகப் பேச, மனசுக்குள் பேசிப் பார்த்து பேச வேண்டியிருப்பதை நகைச்சுவையாய் சொன்னவர் தன்னிடம் மேலதிகாரி, நீ வெளியில பட்டிமன்றமெல்லாம் பேசுறியாமே இங்க அதெல்லாம் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், ஒரு முறை குட்டியானையில் மோதி ஸ்கூட்டர் பழுதானபோது மேனேஜருக்கு போனில் கூப்பிட்டு ஆங்கிலத்தில் பேச சார் குட்டியானை என ஆரம்பித்து அடுத்தடுத்த என்ன வரி போடுவது என்ற சிக்கலில் எப்பவும் சொல்லும் சார் ஐ ஆம் நாட் பீலிங் வெல் எனச் சொல்லி வைத்ததாய்ச் சொன்னார்.

திருமணத்துக்கு தன்னை மனைவி அனுப்பி வைப்பதையும் அங்கிருப்பவர்கள் தன்னை விடுத்து வீட்டில் கூட்டிவரலையா என்று கேட்பதையும் அப்ப நான் வீடில்லையாடா என அவர் மனசு கேட்பதையும் வீட்டுக்கு வந்ததும் உங்க சித்தப்பா என்னைக் கேட்டாரா...? உங்க அத்தை என்னைக் கேட்டாரா என மனைவி கேட்பதையும் நகைச்சுவையுடன் சொன்னார்.

இடையில் தமிழனாய் இருந்தால் ஷேர் பண்ணு என்பதையும் திருவள்ளுவருக்கே தாடி வச்சவனுங்க நாம என்பதையும் சாமியார்கள்தான் வாழ்கிறார்கள் என்பதையும் அவருக்கே உரிய நகைச்சுவையில் சொல்லி சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். அவர் பேசும் போது சிரிப்பொலி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. அன்றைய பண்பாடு, இன்றைய பண்பாடு குறித்தெல்லாம் பேசினார்.

அவர் பேசிய பின்னர் பலர் மேடைகளில் நகைச்சுவையை வலிந்து திணிப்பார்கள். அது நமக்கு சிரிப்பைக் கொடுக்காது ஆனால் சண்முக சுந்தரம் அவர்கள் பேசுவது எல்லாமே நகைச்சுவையாய்... நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தும் என்று சொன்ன தமிழருவி அவர்கள் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களை அழைக்க, கம்பீரமாய் எழுந்து வந்தார் அந்த மீசைக்காரர். அவரது வெண்மை நிற மீசையும் உயரமும் நடையும் திரு.பொன்னீலன் ஐயாவை கண் முன் நிறுத்த, தன் பேச்சை ஆரம்பித்தார்.

சென்ற பதிவில் போட்டிருந்த நடனப் போட்டோவில் இருக்கும் பையன் குறித்து கனவுப்பிரியன் அண்ணன் முகநூலில் சிலாகித்து எழுதி எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசானே நன்றி என முடித்திருந்தார். உண்மைதான்... தன் எதிரே ஒரு கூட்டம் இருக்கு... தன்னைச் சுற்றி சில பெண் குழந்தைகள் ஆடுகிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாது பாடலில் மட்டுமே கவனம் கொண்டு மிகச் சிறப்பாக ஆடினான். பாரதி மேடைகளில் தொடர்ந்து ஆடுபவன்... பரதம் அவனிடம் பரவசப்பட்டு நின்றது. வாழ்த்துக்கள் சகோதரா.

(தொடரும்)

படங்கள் உதவி : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.


சனி, 21 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... யுகா கலக்கல்....

மீரத்தின் நேற்றைய மாலையை அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பு தமிழ் அருவியில் நனையும் மாலையாக ஆக்கியது. முதலில் அவ்வமைப்புக்கும் சிறப்பாக வழிநடத்தும் திரு.இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல் அவர்களுக்கு நன்றி.

Image may contain: 4 people, people smiling, people standing

மாலைதான் நிகழ்வு என்றாலும் மதியமே நெருடாவிடம் இருந்து அழைப்பு, நாங்கள் இலக்கியவாதிகள் எல்லாம் தலைமை இலக்கியவாதியுடன் இணைந்து உங்க பக்கமாக காளியின் காதலனைத் தேடி வருகிறோம்... நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென... இலக்கியவாதிகள் சந்திப்பில் எளக்கியவாதிக்கென்ன வேலை என முயற்சிக்கிறேன் என்று சொல்லி முடித்துக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து அழைத்து... பின்னர் தலைமை இலக்கியவாதி சொன்னால்தான் வருவான் என முடிவு செய்து அவரிடம் போட்டுக் கொடுக்க, 'நாங்க வர்றோம்... நீ கீழே நிக்கிறே' என்பதாய்  தலைமை முடித்துக் கொள்ள, சரி தலைமை அலைனில் இருந்து வந்திருக்கிறாரே ஒரு எட்டு பார்த்து விட்டு வந்துவிடலாம் என படுத்திருந்தவன் எழுந்து ஓட காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்ட்டாங்க சாப்பாட்டுக் கடைக்கு... அறையில் வைத்த பிரியாணி, இந்த வாரமும் ஓடிட்டியாடான்னு கேட்டது எனக்கு நல்லாவே கேட்டது.

பின்னர் ஒரு பெரிய இலக்கியக் கும்பலுடன் எளக்கியவாதியாய் ஒரு ஓரமாக நின்று அவர்கள் அடித்து ஆட, பார்த்துக் கொண்டிருந்தேன். இலக்கியமாப் பேசியதால் பசிக்க, அப்படியே கடைக்குள் நுழைய நல்லதொரு சாப்பாடு... அதன் பின் கனவு அண்ணன் இல்லத்தில் ஒரு சிறிய தூக்கம்... மாலை காபி முடித்து விழா நடந்த சூடான் கலாச்சார மய்யத்துக்குச் செல்லும் முன்னரே இடம் பிடித்து வைத்திருப்பதாக நண்பர் நந்தா மெஜேச்சியிருந்தார். அங்கு சென்றால் நிறைய நட்புக்களைக் காண முடிந்தது. இந்த துபாய் மக்களில் பாதிப்பேருக்கு நம்மளைத் தெரியலை... இலக்கியவாதிகளை மட்டுமே தெரிந்தது. சசிக்குமார் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறேன் போல அருகில் வந்து கை கொடுத்தார். ஆர்.ஜே. நாகா பேசினார். 

எப்பவும் சரியான நேரத்துக்கு ஆரம்பிக்கும் பாரதி அமைப்பினர் நேற்றைய விழாவை 7 மணி வாக்கில்தான் ஆரம்பித்தார்கள். தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்புரை என எல்லாம் முடிந்து எப்பவும் போல் ஆஷா நாயர் அவர்களின் திறமையான பயிற்சியில் பாரதியாரின் இரண்டு பாடலுக்கு மிகச் சிறப்பான நடன நிகழ்வுடன் விழா விரிய ஆரம்பித்தது.

விழா நாயகர்களை அறிமுகம் செய்தவர் வசீகரா பாட்டை யுகபாரதி எழுதியதாகச் சொன்னதும் அதெப்படி அது தாமரையாச்சேன்னு யோசிக்க பக்கத்தில் இருந்த இலக்கியவாதி ராஜாராம் அவர்கள் வசியக்காரி பாடல், புதிய கீதை படத்துக்கு எழுதியது என விளக்கினார். விளக்கமாய்ச் சொல்லும் பால்கரசு, நௌஷாத், ராஜாராம் போன்றோர் அருகிலிருந்ததால் விபரங்களை அறிய முடிந்தது.

அதன்பின் சில மரியாதைகள் செய்யப்பட்டு மேடை கவிஞர் யுகபாரதியின் கையில் கொடுக்கப்பட்டது... சிறப்புரை அவர்தானே.... அதனால் அவர்தானே முதலில் இறங்க வேண்டிய மட்டையாளர்... கவிஞர், ஆயிரம் பாடலுக்கு மேல் எழுதியவர் என்பதால் 'என் தமிழ்த்தாயே... பாரதியே.... ' என்றெல்லாம் பேசுவாரோ என்ற பய யோசனை தோன்றினால் நம்ம பக்கத்துல உக்காந்து இந்தருய்யா... நான் இப்படித்தான் எனப் பேசுவது மாதிரி பேச்சை ஆரம்பித்தார் கவிஞர்.

முதலில் பாரதியின் பாடலைப் பாடி... எல்லா மேடையிலும் இந்தப் பாடலைத்தான் பாடுவேன்... மேடை அலங்காரப் பேச்செல்லாம் பேசுவதில்லை என்று நகைச்சுவையாய் தொடங்கியவர், பல்லாங்குழியின் வட்டம் பாடலை சிநேகா தொலைக்காட்சிகளில் ஆடி ஆடி கோடிகளில் சம்பாதிக்க பாட்டெழுதிய தனக்கு அடுத்த பாட்டு வரவேயில்லையே என்ற ஏக்கம் கொண்டு புலம்பியதைச் சொன்னபோது அரங்கம் சிரிப்பொலியுடன் கலந்த கைதட்டலில் அதிர்ந்தது. 

லிங்குச்சாமி இவரிடம் பிரபலமான பாட்டை எழுதினே... அடுத்த பாட்டுக்கான சான்ஸ் உனக்கு வரவேயில்லை என்றபோது நீங்க கூடத்தான் நல்ல படமெடுத்தீங்க... எட்டு மாசமா சும்மாதானே இருக்கீக என்று இவர் சொன்னதும் உனக்கு ஏன் பாட்டெழுத வாய்ப்பு வரலைன்னு இப்பத்தான்யா தெரியுதுன்னு அவர் சொன்னதை நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பைத் தொடர வைத்தார்.

 

இவருக்கும் வித்யாசாகருக்குமான முதல் சந்திப்பைச் சொன்னபோது அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. மனுசனுக்குள்ள ரெண்டு மூணு வடிவேலு இருக்கானுகய்யா... பேசப் பேச சிரிப்பு... இவரு பாட்டெழுதுறதோட சிரிப்பு நடிகர்களுக்கு வசனமும் எழுதலாம். இப்ப அதுதானே ரொம்ப பஞ்சமா இருக்கு... வறட்டுச் சிரிப்பை வச்சி நம்மளைக் கொல்லுறானுங்க.

லிங்குச்சாமியின் அடுத்த படத்தில் பாட்டெழுத, அதாவது தனது இரண்டாவது பாட்டு வாய்ப்புக்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். வித்யாசாகர் ஆர்மோனியப் பெட்டியோடு காதல் செய்து கொண்டு தலைவரை ஒரு பொருட்டாகவே மதிக்கலையாம்... இவரும் ரெண்டு மூணு கவிதை தொகுப்பு போட்டவரு... ரெண்டு தொகுப்புக்கு தமிழக அரசு விருது பெற்றவரு... (இதையெல்லாம் அவரு திரும்பத் திரும்ப சொல்லும்போது அரங்கெங்கும் நிறைந்திருந்தது சிரிப்பலை.) அப்படியிருந்தும் மனுசன் மதிக்கலை. இவரு செருமிப் பார்த்து சார் எனக் கூப்பிட்டு தன்னுடைய கவிதை தொகுப்பைக் கொடுத்தப்போ இடது கையால் வாங்கி தூக்கிப் போட்டுட்டாராம். பதினெட்டு வருசத்துக்கு முன்னே இன்னைக்கு சிரிச்சிச் சிரிச்சிப் பேசுறவருக்கு அன்னைக்கு முறுக்கிக்கிட்டு நிக்கிற வயசுல்ல... கோபம் கடுமையா வந்திருக்கு இருந்தாலும் அடக்கிக்கிக்கிட்டு மீண்டும் சார் போட, வித்யாசாகர் பேசியிருக்கிறார். என்ன சொன்னாராம் தெரியுமா..?

உம்பாட்டே தப்பாயிருக்கேய்யா... அதென்ன பல்லாங்குழியின் வட்டம்... பல்லாங்குழி வட்டமாய்யா... அது குழிவட்டம்... எதோ எழுதணுமின்னு எழுதக் கூடாதுன்னு சொன்னாராம். இவருதான் ஒரு பாட்டுல பேமஸான மகாகவியாச்சே.... ரெண்டு மூணு புத்தகம் வேற போட்டவரு... அதுல தமிழக அரசு விருது வேற... இதெல்லாம் இருந்தும் மதிக்காம பேசுனா... அதுபோக கொடுத்த புத்தகத்தை இடது கையால தூக்கிப் போட்டுட்டு பாட்டுல பிழை கண்டுபிடிச்சா... இவருக்கு கோபம் வந்து தாமரைக் கன்னம், நிலா முகம்ன்னு எல்லாம் எழுதுறோம்... தாமரைக் கன்னமா சார்... நிலா முகமா சார்ன்னு கேட்டதும் இசையமைப்பாளருக்கு கோபமாயிருச்சாம். லிங்குச் சாமி சாரைக் கூப்பிட்டு இந்தப் படத்துக்கு இந்தப் பையன் எழுதணுமான்னு கேட்டாராம்.

அப்ப லிங்குச்சாமி சென்டிமெண்டா இவர் எழுதினா நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்னு சொன்னாராம்... அப்பத்தான் நம்ம பாட்டுமேல நம்பிக்கை வச்சி எழுதச் சொல்லலை... சென்டிமெண்ட் மேலதான் நம்பிக்கை வச்சிருக்காங்கன்னு தோணுச்சாம் இவருக்கு.... பின்னர் இது ஒரு காதல் கடிதம் எழுதுவது போலான பாட்டு அன்புள்ளன்னு எல்லாம் எழுதக்கூடாதுன்னு ஏகப்பட்ட விதி முறைகள் சொல்ல, கடைசியில் இவர் லிங்குச்சாமியிடம் உங்க படத்துக்கு இவர் இசையமைக்கணுமான்னு யோசிச்சிக்கங்க சார்ன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்.

பின்னர் லிங்குச்சாமி உன்னோட திறமைமேல அவருக்கு இருக்கும் எண்ணத்தை மாற்ற நல்ல பாட்டா எழுதி காலையில கொண்டு வான்னு சொல்ல இரவெல்லாம் உக்காந்து இலக்கியங்கள் வாசித்து 'காதல் பிசாசே'ங்கிற வார்த்தையை எழுதிட்டு அதுக்கு மேல என்ன எழுதன்னு தெரியாம தூங்கிட்டாராம்... பின்னர் காலையில் நண்பருடன் பேசிய போது கிடைத்த வார்த்தை அடுத்த வரியாக, பயணப்பட்ட போது ஸ்கூட்டர் விபத்துக்குள்ளாக ஓட்டிய நண்பருக்கு அடிபட்ட போதிலும் நீ போய் பாட்டைக் காட்டு என்று நண்பர் சொல்லிய போது சில வரி உதயமாக, பாட்டை எழுதிக் கொண்டு போய் லிங்குச்சாமி முன்னர் நின்றார். இந்தப் பாடலில் முதல் இரண்டு வரி போக மீதமெல்லாம் வித்யாசாகரை திட்டியதுதான் என்றும் சொன்னார்.

லிங்குச்சாமி பாட்டை பார்க்காமலே என்னய்யா ஒரு பக்கம் மட்டும் எழுதியாந்திருக்கே என்றபோது இதுக்கு மேல் எழுத முடியாது சார் என்று சொன்னதும் இவரை வித்யாசாகரிடம் அனுப்பி வைக்க, அவரோ முதல் நாள் போல் ஆர்மோனியப் பெட்டியுடனான காதலில் இருக்க, பாட்டைக் கொடுக்க எழுதிட்டிக்கிட்டு வந்துட்டியா என கேட்டபடி வாசித்தவர் , இவரை அருகழைத்து எழுந்து அருமையா இருக்கு என கட்டிக் கொண்டாராம். மேலும் உன்னோட முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அதை நேற்றே சொல்லியிருந்தால் பெரிய கவிஞன் என்ற மிதப்பில் இப்படி எழுதியிருக்கமாட்டாய். அதான் அப்படிப் பேசினேன் என்று தட்டிக் கொடுத்தார். அவருக்கு முன்னூறு பாடலுக்கு மேல் எழுதியதாய்ச் சொன்னார்.

மேலும் பாரதியின் அக்கினிக் குஞ்சொன்று கண்டேனையும்... கண்ணதாசனயும் வியந்து பேசினார். பாரதி மீதான தன் காதலையெல்லாம் வார்த்தைகளாக்கி வசீகரிக்க விட்டார். கண்ணம்மா பாடல் எழுதியதைக் குறித்து சிலாகித்துப் பேசினார். அந்தப் பாடலை தன் மகளை மனதில் வைத்து அவளுக்காக எழுதிய பாடலே என்றார். கண்ணம்மா பாடல் தாமரை எழுதியதென நினைத்துக் கொண்டிருந்த திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களுக்கு இன்றுதான் நான் எழுதியது என்பது தெரியும் என்றவர், பாரதி நட்புக்காக அமைப்பு ஐந்தாவது முறையாக பர்வீன் அவர்களை அழைத்திருப்பது நன்றாக பேசினார் என்பதாலா அல்லது இந்த முறையாவது நன்றாக பேசிவிடுவார் என்பதாலா என கிண்டலாய் இடைச் செருகினார்.

மன்மத ராசா போன்ற பாடல்களை எழுதினாலும் முடிந்தளவு நல்ல பாடல்களை எழுதுவதாகச் சொன்னார். இசையமைப்பாளர் இமானுக்கு முன்னூற்றம்பது பாட்டுக்கு மேல் எழுதியிருப்பதாகவும் இதுவரை அவரும் இவர் நல்ல பாடலை எழுதிவிடுவார் என்று வாய்ப்புக் கொடுப்பதாகவும் இவரும் அவர் நல்ல டியூனாகப் போட்டு விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சிரிப்போடு சொல்லிவிட்டு இதெல்லாம் யூடிப்புல போடும் போது எடிட் பண்ணிருங்க... நாளை மறுநாள் விசுவாசம் கம்போசிங் இருக்கு என்றார்.

நிறைய விஷயங்கள் பேசினார்... நிறைவாய்ப் பேசினார்... ஒரு கவிஞன் இவ்வளவு நகைச்சுவையாய்... அவையை அதிர வைக்கும் சிரிப்பொலியையும் கைதட்டலையும் தொடர வைத்தபடி பேசுதல் என்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சிறப்பான பேச்சு... இடையில் வண்ணங்கள் பற்றி பேசும் போது கருப்பு அரசியலும் எட்டிப் பார்த்தது. மனைவிக்கு சமையலில் உதவி செய்வேன் என கவிதை சொன்னது... இதுவரை அவருக்கு உதவாதது... அதை அவர் கேட்டபோது நீ என்னைக்கு நல்லா சமைக்கிறியோ அன்னை உதவுறேன்னு சொன்னது என்ன இவரின் பேச்சின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிரிப்புக்கும் சிந்தனைக்கும் பஞ்சமில்லை.

இவரின் பேச்சுக்குப் பின்னே கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு கொடுக்கப்பட்ட போது சொதப்பி விட்டார்கள். சரியான முறையில் பரிசுக்குறியவர்களின் பெயர்களை எழுதி வைக்காமல் பரிசு பெறாத மூவருக்கு பரிசு கொடுத்து விட்டார்கள். முதலாமர் பரிசு வாங்க மேடையில் நிற்கும் போது பரிசு பெற்ற கவிதையில் கவர்ந்த வரிகள் என கவிஞர் சொன்னபோதுதான் விவரம் வெளிச்சமானது.

இரண்டாவது பரிசு பெற்றவர் அரசியல்வாதிபோல் கூட்டத்தில் இருந்து மேடைக்குப் போகும் போதே கையெல்லாம் தூக்கிக் கும்பிட்டு அலப்பறை கொடுத்துச் சென்றார். ஐந்து நிமிடத்தில் அது திரும்பப் பெறப்பட அவரின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து சோகம் குடி கொண்டது. மூன்றாம் பரிசு எனச் சொல்லி மேடைக்கு அழைத்து பரிசு கொடுத்த போதே சுதாரித்திருக்கலாம். பாவம் மூவருக்குமே மிகுந்த வருத்தம். இனி வரும் விழாக்களில் இப்படியான நிகழ்வு இல்லாதிருக்கட்டும்.

இதன் பின் மேடை திரு. தமிழருவி மணியன், ஐயா மோகன சுந்தரம், ஐயா ரமணன், திருமதி. பர்வீன் சுல்தானா வசம் ஒப்படைக்கப்பட்ட போது மணி 8.30க்கு மேல்.... 

தமிழ் மொழியின் அடையாளமாக இன்றும் நிலைத்து நிற்பது என்ற தலைப்பில் தலைவராக தமிழருவி வீற்றிருக்க, பழஞ்சுவை இலக்கியங்களே என பர்வீன் அவர்களும் பண்பாட்டின் வெளிப்பாடே என மோகன சுந்தரம் அவர்களும் திரைக்கவிஞர்களின் ஆளுமையே என இசைக்கவி ரமணன் அவர்களும் பேச ஆரம்பித்தார்கள். கவிதை போட்டி சொதப்பல் மறந்து பேச்சை ரசிக்க அரங்கம் அமைதியானது.

(தொடரும்)

படங்கள் (நன்றி) : சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 18 ஏப்ரல், 2018

இன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)

பிரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது. இதில் வழக்கமான கிராமத்துப் பாணி இருக்காது. வாசித்து உங்க கருத்தைச் சொல்லுங்க.

அப்படியே நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் எங்கள் பிளாக்கில் நேற்றைய கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது 'மஞ்சநெத்திப் பூ வாசம்' வந்திருக்கு. அங்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் இங்கும் நன்றிகள். நீங்களும் வாசிங்க... எனக்கென்னவோ கதையை இன்னும் பட்டை தீட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது என்பதே உண்மை. அண்ணனிடம் சொன்னபோது எனக்குப் பிடித்திருக்கிறது என எடுத்துக் கொண்டார்கள். சிலருக்கு சுத்தமான கிராமத்து வாசனை பிடிக்க வாய்ப்பில்லை. எப்படியிருந்தாலும் நான் எழுதியதில் இதுவும் ஒரு சிறந்த கதையே.... நன்றி ஸ்ரீராம் அண்ணா.

******

இன்னார்க்கு இன்னாரென்று...

னி...

என் வாழ்வில் மறக்க முடியாத பெயர். ஏறத்தாழ இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் எனது மூன்றாண்டு கல்லூரிக் காலத்தை அன்பால் நிறைத்தவள். வசந்தம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க வைத்தவள்... தினம் தினம் சந்தோஷம் பூக்க வைத்தவள்.

அவளைக் கடைசியாகப் பார்த்து பதினெட்டு வருசமாச்சு... அதாவது ஒன்னறை மாமாங்கம்... இனி அவளை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்தவன் அவளை மறக்காது மனசுக்குள் பூட்டி வைத்திருந்தேன். வேதனையான தருணங்களில் அவளின் நினைவுகளை மெல்ல மீட்டெடுப்பேன்... என் வேதனைகள் கரைந்து போகும்.

காரைக்குடி செல்ல மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் நின்றவன், ஏதேச்சையாக திரும்பிப் பார்க்க எனக்குப் பின்னே சற்று தள்ளி அவள் நின்றாள்... தனியாக அல்ல... இன்னும் இரண்டு பெண்களுடன் ஏதோ சுவராஸ்யமாய் பேசியபடி... என் கண்ணை என்னாலேயே நம்ம முடியாமல் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவள்... அவளேதான்... அதே வசீகரிக்கும் முகம்... அதே மின்னல் வெட்டும் கண்கள்... கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாள்.

அவளிடம் பேசுவோமா வேண்டாமா என யோசிக்க ஆரம்பித்தேன் நான்.

பாலா...

இந்தப் பெயரை என்னால் எப்படி மறக்க முடியும்... என் கல்லூரி நாட்களை வசந்தமாக்கியவன்... இவன் எனக்கானவன் என்று பெருமிதம் கொள்ள வைத்தவன். எந்தப் போட்டி என்றாலும் வகுப்பறைக்கு வரும் வெற்றி பெற்றவர்கள் பெயரைத் தாங்கிய அறிவிப்பில் அவன் பெயரில்லாது வராது. ஒவ்வொரு முறை அவன் பெயரை வகுப்பறையில் ஆசிரியர் உச்சரிக்கும் போது எனக்குள்ளே சந்தோஷம் சதிராடும்...

ரொம்ப ஜென்டிலானவன்... கல்லூரி இறுதிநாளில் யாருமற்ற வேப்பமரத்தில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... பிரிவுச் சுமையை தூக்க முடியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது... ஆறுதலாய் கரம் பற்றி அவசரமாய் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்... அதுவே காதலின் முதலும் கடைசியுமான முத்தம்... இப்போது நினைத்தாலும் என் நெற்றி ஒரு முறை சிலிர்த்து அடங்கும்.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் கையறு நிலையில் என்னிடம் விடைபெற்றவனை அதன் பிறகு பார்க்கவேயில்லை... இதோ என் முன்னே நிற்கிறான்... என்னை அவன் பார்க்கிறான்... நானும் அவனைப் பார்த்துவிட்டேன்... ஆனால் பார்க்காதது போல் நிற்கிறேன்.

அவன் அருகில் செல்வதா வேண்டாமாவென யோசிக்கலானேன்.

சுபத்ரா...

கல்லூரி முடித்து எம்.ஏ முடிக்கும் வரை கனியுடனான காதல் உயிர்ப்போடு இருந்தது. அதன் பின்னர் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வேலையும் இல்லாமல்... குடும்பச் சூழலும் சரியில்லாமல் அவளை கூட்டிக் கொண்டு போய் என்ன செய்வது என்ற கையறு நிலையில் அவளைப் பிரிந்தவன், இந்த பதினெட்டு வருடத்தில் ஓடி.. ஓடி... ஓரிடத்தில் செட்டிலாகிவிட்டேன்.

அம்மாவின் நச்சரிப்புக்காகவும் வயது போய்க் கொண்டிருந்தாலும் தூரத்துச் சொந்தத்தில் நான் மணமுடித்தவள்தான் சுபத்ரா... பள்ளி ஆசிரியை... பல நேரங்களில் வீட்டிலும் ஆசிரியை போல் கேள்வி மேல் கேள்வி கேட்பாள்.

கனி குறித்து அவளுக்குத் தெரியும்... பல நேரங்களில் என்ன அவளை மறக்க முடியலையோ என்று வேல் பாய்ச்சவும் தவறமாட்டாள்... இருந்தாலும் என் மீது பாசம் கொண்டவள்.

ணிகண்டன்

எம்.எஸ்.ஸி முடித்தவுடன் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்போது பாலாவுக்கும் வேலை இல்லை... கஷ்டப்படுற குடும்பம்... இரண்டு தங்கைகள்.. ஒரு தம்பி... விவசாயியான அப்பாவைவிட படித்து முடித்த அண்ணனையே பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

என் நிலையை அழுகையோடு சொன்னபோது அவன் சூழலைச் சொல்லி எப்படி முடியும் என எதிர்க் கேள்வி கேட்டான். அந்த நிலையில் எத்தனை வருடமானாலும் காத்திருப்பேன் என்று என்னால் சொல்ல முடியாத நிலை. என் காதலைப் புதைத்து அம்மாவின் அண்ணன் மகனான மணியின் மனைவியானேன்...

மணி பக்கா ஜென்டில்மேன்... என்னைத் தாங்குதாங்கென்று தாங்குவார்... இன்று வரை அப்படித்தான்... அவரிடம் ஏனோ என் காதலை இன்று வரை சொல்லவில்லை... சொல்லி என்னாகப் போகுதுன்னு விட்டுட்டேன்... அதுவும் நல்லதுக்குத்தான்... ஒருவேளை சொல்லியிருந்தா அவரு மனசுக்குள் சில வன்மங்கள் தோன்றியிருக்கக்கூடும்.

1993... செப்டெம்பர் 17

கல்லூரி முதல் வருடம்... பள்ளிக்கும் கல்லூரிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஒரு சில போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு மாணவ மாணவிகள் இணைந்து செல்லும் போது என்னைக் கவர்ந்தவள் கனி... ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்தவன், அவளை தினமும் பார்க்கணும் ஏதாவது பேசணுங்கிற நிலமைக்கு தள்ளப்பட்டேன்.

இதெல்லாம் வயசுக்கோளாறு... ஏதோ அந்தப்புள்ள நல்லாப் பேசுது.. அதைக் கெடுத்துக்காதே என்று நண்பர்கள் சொன்னாலும் அவள் மீதான காதல் மாறவில்லை... ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது என் காதலைச் சொல்லிவிட்டேன்.

அந்த நாள்தான் செப்டெம்பர் 17.

1993 செப்டெம்பர் 25

எனக்கு நல்லா நினைவிருக்கு செப்டெம்பர் 17, எப்பவும் போல பாலா கூட பிரண்ட்லியா பேசிக்கிட்டு இருந்தேன். என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அவன் ரொம்ப பதட்டமா இருந்தான்...  என்னாச்சு... பதட்டமா இருக்கே என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு மழுப்பினான். ஆனால் ஏதோ ஒண்ணு இருக்குன்னு தோண, நான் சொன்னாத்தான் பேசுவேன்னு சொன்னேன். உடனே அவன் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டான்.

பிரண்ட்லியா பேசினதை காதல்ன்னு சொல்லிட்டானேன்னு எனக்குக் கோபம்... என்னோட மனவலி கண்ணீரா மாறிடுச்சு... ச்சீ... உங்கூட பழகுனேன் பாரு... இனி எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு கண்ணீரோட எழுந்து போயி சைக்கிளை எடுத்துக்கிட்டு வேகமாப் பொயிட்டேன்.

அதுக்கு அப்புறம் ஒரு வாரமா அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை...  அவனைப் பார்க்காமல் பேசாமல் நகர்ந்த அந்த ஏழுநாள் எனக்கு மிகுந்த வேதனையையும் அவன் மீதான பெருங் காதலையும் கொடுத்துச்சு. அன்னைக்கு காலையில கல்லூரி கிளம்பும் போது எனக்குள்ள அவன் நிறைந்திருந்தான்...

அவனைப் பார்த்து நான் காதலைச் சொன்ன நாள் செப்டெம்பர் 25.

பிச்சைக்காரன்

என்னருகே வந்த பிச்சைக்காரன் ‘தர்மம் பண்ணுங்க சாமி’ என்றான். நான் ஒன்றும் பேசாமல் நிற்கவும், ‘உங்க பிள்ளை குட்டி நல்லாயிருக்கும் சாமி’ அப்படின்னு சொல்ல சிரித்தபடி ‘சில்லறை இல்லய்யா’ என்று விரட்டினேன்.

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தபடி ‘சில்லறை இல்லாம வெள்ளையுஞ் சொள்ளையுமா ஏன் வாறீங்க சாமி’ என்று முணங்கியபடி அவளை நோக்கி நகர்ந்தான்.

நாங்க காதலிக்கும் போது பலமுறை பிள்ளையார்பட்டி கோவிலுக்குப் போயிருக்கிறோம். ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் எங்களிடம் வந்து யாசகம் கேட்க, நான் சில்லறை இல்லை என விரட்ட, ‘தாயி... மகாலெட்சுமி... தர்மம் போடு தாயி’ன்னு சொன்னதும் அவ பர்ஸில் இருந்து சில சில்லறைக் காசை பிச்சைப் பாத்திரத்தில் போட்டாள்.

'தாயி... இந்தாளையா கட்டிக்கப் போறே... சரியான கஞ்சனா இருப்பான் போல... பாத்து தாயி... கஞ்சி ஊத்தாம விட்டுடப் போறான்...' சொல்லிட்டு திரும்பிப் பாக்காம பொயிட்டான்.

கனி என் தோள் சாய்ந்து வெகுநேரம் சிரித்தாள்.

பூக்காரி

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் முழுவதும் பூக்கடைகள் நிறைந்திருக்கும். எப்போது மதுரை வந்தாலும் மல்லிகைப் பூ நிறைய வாங்கிக் கொள்வேன். எனவே எனக்கு வேண்டிய பூ வாங்கி வைத்திருந்தேன்.

கைகுழந்தையுடன் வந்த பூக்காரி 'அம்மா பூவாங்கிக்கங்கம்மா... இதை அப்படியே எடுத்துக்கிட்டு முப்பது ரூபாய் கொடுங்க போதும்’ என்றாள். ‘இல்லம்மா நான் வாங்கிட்டேன் எனக்கு வேண்டாம்’ என்றதும் ‘பச்சைக் குழந்தைம்மா... இது மட்டும்தான் பாக்கி குடுத்துட்டா கிளம்பிடுவேன்’ என்று கெஞ்சினாள்.

அவளைப் பார்க்க பாவமாய் இருக்க அதை மொத்தமாய் வாங்கி மூன்றாய் கட் பண்ணச் சொல்லி மூணு பாலிதீன் பையில் போட்டு வாங்கி உறவுக்கார பெண்களிடம் இரண்டைக் கொடுத்து விட்டு ஒன்றை எனது பேக்கில் வைத்துக் கொண்டேன்.

கல்லூரியில் ஒரு விழா... அதற்கு வீட்டிலேயே பூவாங்கி வைத்துக் கொண்டு சென்றேன்... கல்லூரி வாசலில் நின்ற பாலா என்னிடம் ஒரு பாலித்தீன் பையை நீட்ட, என்னது என்றேன்... மல்லிகைப்பூ என்றான்... எதுக்கு என்றதும் உனக்குத்தான் என்றான்.

நான் நிறைய வைத்திருக்கிறேன் என்றதும் இதையும் வச்சிக்க பூத்தானே... இன்னும் அழகா இருப்பே என்றான். அவனின் மனசு வருந்தக் கூடாது என்பதற்காக  வாங்கி அவன் முன்னே தலையில் வைத்துக் கொண்டேன்.

பாலா

பிச்சைக்காரன் முணங்கிக் கொண்டே சென்றதும் நான் கையிலிருந்த பாக்யாவைப் புரட்டி பாக்யராஜின் கேள்வி பதில்களை வாசிக்க ஆரம்பிக்க, ஏனோ மனசு அதில் ஒட்டவில்லை... கண் அவளை மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சித்தது. என் மனதின் ஓரத்தில் இருந்த அவள் இப்போது மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.

இன்று அவள் வேறொருவரின் மனைவி என்றாலும் அன்று அவள் என் காதலி, அவளைப் பார்க்கும் வாய்ப்பு இனி ஒரு தடவை கிடைக்குமோ என்னவோ...? யார் அறிவார்...? பதினெட்டு வருடத்திற்குப் பின்னர் சந்திக்கிறேன்... ஏறத்தாழ எங்களின் நாப்பதுகளில்... பக்குவப்பட்ட வயதில் பார்த்தும் பார்க்காமலும் செல்வது அழகல்லவே... இன்றைய காதல் தோல்விகள் கொலையில் முடிகின்றன... அன்றைய காதல்கள் அப்படியில்லையே... தோற்றாலும் பல இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது.

என் உயிர் நண்பன் ராகவனின் காதல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தபோது அவனை வேறொரு ஊரில் கொண்டு வைத்து பத்திரமாக பார்த்துக் கொண்டதில் எனக்கும் பங்கு இருந்தது... அந்த ஒரு வாரம் என்னால் மறக்க முடியாத நாட்கள். இன்று ராகவன் தன் முன்னால் காதலியின் குடும்பத்தில் ஒருவனாய்... அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்பவனாய் இருக்கிறான்... இதுதான் காதல்... அவர்கள் அரிவாள் எடுக்கும் போது அவனும் அரிவாள் எடுக்க நினைக்கவில்லை... காலங்கள் கடக்க அன்பு என்னும் ஆயுதத்தை மட்டுமே பிரயோகித்தான் அதனால்தான் அவனின் காதல் இன்று நட்பாய்... உறவாய் தொடர்கிறது.

இப்படித்தான் சுபாவைக் காதலித்த முருகன் அவளை ஒருமுறை பேக்கரியில் பார்த்திருக்கிறான்... அவள் குழந்தைகளோடு நின்றிருக்கிறாள்... இவன் தன் மகனோடு போயிருக்கிறான்... பார்த்தும் பார்க்காதது போல் வந்துவிட்டானாம். என்னிடம் சொல்லிப் புலம்பினான்... ஏன்டா பேசலைன்னு கேட்டதுக்கு என்னத்தைப் பேச சொல்றே... நான் நல்லாயிருக்கியான்னு கேட்டு அவ நல்லாயில்லைன்னு சொல்லிட்டான்னா மனசு ஒடைச்சிடுமேடா... அதான் பேசலைன்னு சொன்னான். இப்படியும் சிலர்... ஒருவேளை அவள் பார்த்திருந்தால் அவனுடன் பேசியிருக்கக் கூடும்.

மனசு பழங்கதைகளை நினைத்த போது அருகருகே பார்த்தும் பார்க்காமல் செல்வது அழகல்ல என்பதால் கனியை நோக்கி நகர்ந்தேன்.

னி

உறவுகளிடம் பேசினாலும் மனம் மட்டும் எனக்கு முன்னே கொஞ்ச தூரத்தில் நின்ற பாலா மீதே இருந்தது. பார்த்திருந்தால் கண்டிப்பாக பேசியிருப்பானே... பார்க்கவில்லை போலும் என்று நினைத்தேன். எங்கள் காதலின் போது வந்த ஊடல்களின் முடிவில் எல்லாமே பாலாதான் முதலில் பேசியிருக்கிறான்.

எத்தனை வருசமாச்சு..? இப்போ கணவன், குழந்தைகள் என காதல் விரிந்து பரவிக்கிடக்க, எப்போதும் மனதின் ஓரத்தில் அவன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். காதலித்து பிரிந்தவர்கள் மறந்துவிட்டு வாழ்கிறேன் என்று சொன்னால் அது சுத்தப் பொய்... மனதுக்குள் மறைத்து வைத்துத்தான் வாழ முடியும்.

நட்புக்கள் யாரேனும் அவர்கள் குறித்துப் பேசினாலும், அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை கண் பார்த்தாலும் அந்தக் காதல் வெளியில் வந்து விளையாடி கண்ணில் ஆட்டம் கட்டி கண்ணீரை வெளியேற்றும். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

அவனைப் பார்த்தும் பார்க்காமல் செல்ல மனசு இடம் கொடுக்கவில்லை... என்னோட காலேஜ் மெட் நிற்கிறார் பார்த்துட்டு வாறேன் என உறவுகளிடம் சொல்லிவிட்டு பாலாவை நோக்கி நகர்ந்தேன்.

பேருந்து

இரண்டு அரசு பேருந்து சென்ற பின்னர் கிளம்பிய தனியார் பேருந்தில் ஏறினோம். மதிய நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. பெரும்பாலான சீட்டுக்கள் காலியாக இருந்தன. இதே பேருந்து காலையும் மாலையும் கால் வைக்க இடமில்லாமல் ஆட்களை ஏற்றி வரும்.

மூன்று பேர் அமரும் இருக்கையில் உறவினர் இருவரும் அமர்ந்து கொள்ள, அவர்களுக்குப் பின்னிருக்கையில் கனி அமர்ந்து கொண்டு என்னை அமரச் சொன்னாள்.

பேருந்தில் ஏறும் முன்னரே இருவரும் குடும்பம் குழந்தைகள் என எல்லாம் பேசிவிட்டோம். இனி பேச ஒன்றுமில்லை என்றாலும் அவளருகே அமர்ந்தேன்.

காதலிக்கும் போது இதே பேருந்தில் பல முறை பயணித்திருக்கிறோம்... அப்போதெல்லாம் இரண்டு பேர் அமரும் இருக்கையில்தான் அமருவோம்... அப்போதெல்லாம் அவளின் சேலை முந்தானையோ அல்லது சுடிதாரின் துப்பட்டாவோ என் கையில் விளையாடும்... என் தோள் சாய்ந்து தூங்கும் போது காற்றிலாடும்  அவளின் கேசம் என் முகத்தில் விளையாண்டு கவிபாடும். சேலையின் முந்தானையை இழுத்து அவள் மடியில் கிடத்திக் கொண்டாள்.

இன்றோ இருவருக்கும் இடையில் ஒருவர் அமரும்படியான இடைவெளி... அந்த இடைவெளியில் சுபத்ரா அமர்ந்திருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன்... அவள் கூட மணிகண்டன் அமர்ந்திருப்பதாக நினைத்திருக்கக் கூடும்.

அப்போது பேருந்தில் இன்னார்க்கு இன்னாரென எழுதி வைத்தானே தேவன் அன்று என்று பாடிக் கொண்டிருந்தது.
-‘பரிவை’ சே.குமார்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

இப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)

சித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி. 

அகலில் வாசிக்க "இப்படியும் சிலர்"

*****

ம்மைக் கடந்து செல்லும்... நாம் கடந்து போகும்... மனிதர்களில் சிலர் அவர்களது செய்கையால் நம் மனதுக்குள் வந்து விடுவார்கள். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி சத்யா அவர்கள் 'முகங்கள்' என்னும் தொடராய் முத்துலெட்சுமி ராகவன் அவர்களின் தளத்தில் எழுதி வருகிறார். இதையே என்னை நேசித்த மனிதர்களைப் பற்றி 'வெள்ளந்தி மனிதர்கள்' என்னும் தலைப்பில் என் தளத்தில் எழுதி வந்தேன். என்னை நேசிப்பவர்களை எழுத எழுதக் குறையாது என்றாலும் என்ன காரணத்தாலோ தொடர் பாதியில் நிற்கிறது.

வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இங்கும் அன்றாடம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் பல முகங்கள் பரிதாப முகங்களே. சமீபத்தில் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டு வாழ்க்கைக்காரர் இருவரின் மனைவியர் பற்றியதாய்... இறுதியில் இரண்டு மனிதர்களும் ஒரே கட்டிட வேலை இவரை மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் முடியும். அதுதான் நிதர்சனம். இனி கட்டுரைக்குள் வருவோமா?

நாங்கள்... நாங்கள் என்றாலும் நானும் இன்னொரு தமிழ் நண்பரும் காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது. அடித்துப் பிடித்து ஏறுதலும் இல்லை என்பதால் ஒவ்வொருவாராக ஏறுவார்கள். இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.

பேருந்து வந்ததும் ஓடி படியில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். ஏறி அமர்ந்து மொபைலில் முகம் பார்த்து அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! இப்படியும் சிலர்.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சில நாட்கள் முன்னர் ஒருவர் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டை கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். பார்க்கும் போதே கடுப்பு தான் வந்தது.

அதன் பின்னான ஒருநாள் அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்... அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது. இப்படியும் சிலர்.

கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வந்கதேசத்தவர்களும் இந்த வேலைக்கு வருவார்கள். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே... சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை. அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறி இருந்து... வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க... இப்படியும் சிலர்.

எங்கள் அறை இருக்கும் கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் சிலர்.

இதுவும் பேருந்து ஏறும் இடத்தில் பார்க்கும் நிகழ்வுதான். சில நாட்களாக நானும் நண்பரும் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்கள் சிகரெட் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே.... அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இப்பதான் லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க... இங்க எல்லாம் சகஜம்தானே... அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை. இப்படியும் சிலர்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய் உதவி செய்பவனாகவும் இருந்தான். இப்போது ஒரு நண்பர் அதே போல்... மிகவும் நல்லவர்... இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான். இப்படியும் சிலர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... பார்த்த பல மனிதர்களை. நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.