மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 - கொடுத்ததும் மறுத்ததும்

வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(இளமை இதோ இதோ - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

ன்னும் சில மணி நேரங்களில் 2014 பிறக்கப் போகிறது. கடந்து செல்ல இருக்கும் 2013 நல்லதையும் கெட்டதையும் கலந்தே கொடுத்தது என்பதை பெரும்பாலான பதிவுகளிலும் முகநூல் பக்கங்களிலும் காண முடிகிறது.

இந்த ஆண்டு என் வாழ்வில் செய்தது என்ன என்று சற்றே பின்னோக்கிப் பார்த்தால் முதலில் வருவது எங்கள் வீடுதான். ஆம் 2012 வீடு கட்டுவதென முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்தோம். 2013 மே மாதம் எங்கள் சொந்த இல்லத்தில் குடியேறினோம். கடன் தலைமேல் இருந்தாலும் நம்ம வீடு என்கிறபோது கவலைகள் மறக்கத்தான் செய்கிறது.

இந்த வருடத்தில்தான் மனசு வலைப்பதிவில் அதிக பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறேன். 2010ல்தான் முதல் சதம் அடித்தேன். மொத்தம் 101 பதிவுகள். 2011ல் 61, 2012ல் 38 பதிவுகள் மட்டுமே பகிர்ந்தேன். இந்த முறை இந்தப் பதிவுடன் சேர்த்து மொத்தம் 314 பகிர்வுகள் (அட கூட்டுத் தொகை 8... நமக்கு பிடித்த எண்). இது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. அடுத்த ஆண்டு இது தொடருமா தெரியாது. 

இந்த வருடத்தில் சோதனை முயற்சியாக கலையாத கனவுகள் தொடர்கதை எழுத ஆரம்பித்து அதுவும் 37 பகுதிகளைக் கடந்துவிட்டது. கதை எப்படி என தொடர்ந்து வாசித்து கருத்திடும் யோகராஜா சாரைத்தான் கேட்கணும். தொடர்கதையை 50 பேர் படிப்பது என்பதே அரிதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்கும் அந்த 35 பேருக்கும் நன்றி. இடையில் நிறுத்திவிடலாம் என்று கூட நினைக்க வைத்தது என்றாலும் முயற்சியை கைவிட வேண்டாம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னை க்ரைம் கதை எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார் மேனகா அக்கா, மற்றுமொரு தொடர்கதையா... யோசிக்க வேண்டிய விஷயம்.

இந்த வருடத்தில் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை ஆசிரியராய் பணியாற்றும் வாய்ப்பை மதிப்பிற்குரிய சீனா ஐயா கொடுத்தார். அவரின் மனம் மகிழும் வண்ணம் பகிர்வுகளை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான்கைந்து முறை மற்ற ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐயாவின் பின்னூட்ட வாழ்த்தில் சில வரிகள்...
"...பதிவு அருமை - வடிவமைப்பு கண்ணைக் கவரும் வண்ணம் புது விதமாக இருக்கிறது. சிறு பகிர்வு - எட்டின் மகிமையை எடுத்துரைத்தமை நன்று.  காணொளியினை அறிமுகப் படுத்திய நன்று. குறுங்கவிதை மிக மிக அருமை. பதிவரின் பெயர், தளத்தின் பெயர், கவர்ந்த பதிவுகளின் சுட்டிகள், பதிவில் இருந்த கவர்ந்த சில வரிகள், பதிவினைப் பற்றிய கருத்து - என எழுதியது தங்களீன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது... " 
உங்களது மனம் திறந்த வாழ்த்துக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

மறைந்த கிராமியக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்த பதிவு குறித்து மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை நான் மிகப்பெரிய சந்தோஷமாகக் கருதுகிறேன். அதிலிருந்து...
"....நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!..." 
இது போன்ற வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு உண்மையான சொத்து. மிகுந்த சந்தோஷம் ஐயா.

நிறைய படிக்க நினைத்து கொஞ்சமேனும் படிக்க முடிந்ததில் சந்தோஷமே.

இந்த வருடத்தில் மனங்கவர்ந்த சில சிறுகதைகளை எழுத முடிந்தது. கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளுக்கும் தற்போதைய கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணரமுடிகிறது.

என்ன சந்தோஷங்களே தொடருதுன்னு பார்க்காதீங்க வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த வருடத்திலாவது குடும்பத்தை இங்கு கூட்டி வர வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. வீட்டுக் கடன், கம்பெனியில் சம்பள உயர்வு இல்லாமை என எல்லாம் தடுத்துவிட்டது. இதனால் புரிந்து கொண்ட இதயங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் வருவதை தவிர்க்க முடியாமல் போனது. வரும் 2014ல் ஆவது நடக்க வேண்டும்... எல்லாம் இறைவன் சித்தம்.

சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர நினைத்து அகநாழிகை வாசு அண்ணன் மற்றும் வம்சி சைலஜா மேடத்திடமும் பேசி இருந்தேன். வீட்டு வேலை, கடன் இவைகள் முன்னுக்க வர புத்தக எண்ணம் பின்னுக்குப் போய்விட்டது. பிறக்கும் வருடத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.

வேறு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்தும் தட்டிக் கொண்டே போகிறது. இன்னும் எதுவும் நடக்கவில்லை. 

வருடம் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாக இருந்தாலும் இந்த மாதத்தில் என் கையிருப்பு சில சில்லறைகளாகவே இருந்தது. மிகவும் கஷ்டமான சூழலில் டிசம்பர் மாதம் கடந்து கொண்டிருந்தது. 

(நல்லோர்கள் வாழ்வைக் காக்க - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

சரி நண்பர்களே... எனது அன்பிற்குரிய அனைவருக்கும் வரும் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 30 டிசம்பர், 2013

2013 - அரசியல் சினிமா விளையாட்டு

2013 ஆம் ஆண்டின் நிறைவு நாளுக்கு வந்துவிட்டோம்.  2014-ல் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் ஒரு தினமே இருக்கிறது. 

சினிமா:

திரையுலகைப் பொறுத்தவரை சில சிறப்புக்களும் பல வருத்தங்களையும் கொடுத்த ஆண்டாகவே இது அமைந்தது. கமல் மற்றும் விஜய் தங்களது படங்களை வெளியில் கொண்டு வருவதற்குள் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. சினிமா நூற்றாண்டு விழாவை அரசியல் விழா போல் அம்மா நடத்த மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கோச்சடையான் வரும்... வரும்... என சொல்லிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் படம் வெளிவரவில்லை. 

இளம் நாயகர்களான விஜய் சேதுபதியையும் சிவகார்த்திகேயனையும் முன்னணி நாயகர்கள் வரிசையில் நிறுத்தியது. எதிர்பார்ப்புக்களுடன் வந்த தங்கமீன்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. நகைச்சுவைப் படங்களுக்கான ஆண்டாக இது அமைந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. 


நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு இந்த ஆண்டில் படங்களே இல்லாததால் சந்தானமும் சூரியும் அந்த இடத்தை பிடித்து வைத்திருந்தாலும் சந்தானத்தின் காமெடி பெரும்பாலும் காமநெடியாகவே இருப்பதால் முகம் சுளிக்க வைத்தது. இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. குறிப்பாக ஊதாக் கலரு ரிப்பன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. 

நடிகர்களைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனுக்கு இது ஏறுமுகமான ஆண்டாக அமைந்தது. அவரின் டைமிங் காமெடி நன்றாகவே கை கொடுத்தது. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார். விஜய் சேதுபதியும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சத்தியராஜ் சிறப்பான வேடங்களை தேர்வு செய்து தன்னை குணச்சித்திர நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார். இன்னும் நிறையப் பேர் வந்தார்கள்... சிலர் வென்றார்கள்... பலர் சென்றார்கள்.

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பருக்கு இந்த ஆண்டும் வரவேற்பு இருந்தது. ஆரம்பம் அதிரடி வெற்றி பெற்றதை தொடர்ந்து பொங்கல் வரவான வீரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு துப்பாக்கி கொடுத்த வெற்றியை தலைவலியோடு வந்த தலைவா கொடுக்கவில்லை. கமலைப் பொறுத்தவரை விஸ்வரூப வெற்றி பெற்றார். சூர்யாவைப் பொறுத்தவரை சிங்கம்-2 சிறப்பான வெற்றி பெற்றது. 


தனுஷூக்கு எதிர் பார்க்கப்பட்ட மரியான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நய்யாண்டியும் நமத்துப்போச்சு. ஆனால் இந்தியில் தனுஷின் முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தியைப் பொறுத்தவரை இந்த வருடம் மொத்தமாகவே சிறப்பாக அமையவில்லை. விமலுக்கு வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆர்யாவுக்கு இரண்டாம் உலகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. தனது நடிப்பால் திரையுலகைக் கவர்ந்தார். இவரைப் போலவே கேரளத்து வரவான லஷ்மிமேனன் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். நயன்தாராவைப் பொறுத்தவரை இரண்டாவது ரவுண்டிலும் கல்லாக் கட்ட ஆரம்பித்துவிட்டார். காஜலுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஹன்சிகா, அனுஷ்கா, திரிஷா, அமலாபால் என மற்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் இருப்பதை ஒரு சில படங்கள் மூலம் புதுப்பித்துக் கொண்டார்கள். அஞ்சலிக்கு பிரச்சினைகள் சூழ்ந்த ஆண்டாக அமைந்தது.

மணிவண்ணன், மஞ்சுளா, குள்ளமணி என சினிமா நட்சத்திரங்கள் பலரைக் காவு கொண்ட ஆண்டாக இது அமைந்தது.


அரசியல் :

அரசியலில் மோடி அலை வீச வைத்த ஆண்டாக இது அமைந்தது. ஆளும் காங்கிரஸ்க்கு மரண அடியைக் கொடுத்தது. ஊழலுக்கு எதிராக துடைப்பத்துடன் வந்த ஆம் ஆத்மியை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தது. தமிழகத்தில் எதிர்ப்பால் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரை செல்ல விடாமல் செய்தது. தமிழனுக்காகவோ இசைப்பிரியாக்களுக்காகவோ வாய் பேசாத மத்திய அரசை தேவயானிகளுக்காக தேவைக்கு மேல் வீரம் காட்ட வைத்தது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம் எதிர் அணியினரை அவமானப் படுத்துதல் என அம்மாவின் அதிரடி அரசியல் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது. எம் இனம் மடிந்தால் என்ன என் ரத்தத்துக்கு சீட்டு வேண்டும் என காங்கிரஸ் காலில் விழுந்த முன்னாள் முதல்வரை ஞானம் பெற்றது போல் இலங்கைப் பிரச்சினை குறித்தும் இசைப்பிரியா குறித்தும் பேச வைத்தது. 


தேமுதிகவைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பாக இருந்த பண்ருட்டியார் பக்குவாய் வெளியேறினார். குடும்பம் சூழ்ந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜகவும் திமுகவும் கூட்டணிக்காக அதிகம் எதிர்பார்க்கும் கட்சியாக தேமுதிகவை திகழ வைத்தது. பாமக தனித்துப் போட்டி என சொல்லிக் கொண்டு பாஜக பக்கம் சாய வைத்தது. 

சாதி அரசியலில் காதல் (தற்)கொலைகளும் அடிதடிகளும் அதிகம் அரங்கேறியது.  மின்சாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை இருட்டில் வைத்தது. இடைத்தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க வைத்தது. ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது, முக்கியமாக தேர்தலை முன்னிருத்தி எல்லா அரசியல்வாதிகளையும் இலங்கை பிரச்சினையை கையில் எடுக்க வைத்தது. 

விளையாட்டு:

சச்சின் என்னும் சகாப்தத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கபடியில் உலகக்கோப்பை வென்றது. விஸ்வநாதன் ஆனந்த உலக சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டது. இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் மரண அடி வாங்கியது என விளையாட்டிலும் 2013 ஏற்றத் தாழ்வுகளைக் கொடுத்தது.என் வாழ்வில் 2013 நாளைய பகிர்வாக வருகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எப்படியாச்சும் பதிவைத் தேத்தணுமே....

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மனசின் பக்கம் : உறவுக்காக கொஞ்சம்...

சென்ற வாரம் நவீன சரஸ்வதி சபதம் என்று ஒரு படம் பார்க்க நேரிட்டது. நகைச்சுவையாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதால் நம்பி பார்க்க ஆரம்பித்து படம் முடியும் போதுதான் தெரிந்தது வந்த குப்பையில் இதுவும் ஒன்றென்பது... லாஜிக்கே இல்லாமல் கதை சொல்லும்... லாஜிக் மட்டுமா கதையும் இல்லைங்க... பேச்சிலர் பார்ட்டிக்காக வெளிநாட்டுக்குப் போறானுங்க... குடி என்பது தமிழ்ச் சினிமாவின் அடையாளமாகிவிட்டது போல... அம்மா ஆட்சியில் 400 கோடி, 500 கோடிக்கெல்லாம் சரக்கு விக்கவும் குடியை பிரபலப்படுத்தினால் அம்மா தண்ணியா இறைப்பாங்கன்னு நம்பிக்கைபோல ம்... என்னத்தைச் சொல்ல... எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலகில் இப்படியும் படங்கள் வரத்தான் செய்கின்றன.

Photo: எனது " இளமை எழுதும் கவிதை நீ.... 
நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 
உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் 
இந்த இனிய நிகழ்வை மேலும் மெருகூட்டட்டும்

எனது அன்பிற்குரிய அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் தனது முதல் புத்தகமான 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் படைப்பின் வெளியீட்டு விழாவை வரும் ஜனவரி-5 ஆம் தேதி வைத்திருக்கிறார். சென்னை நண்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். தலைப்பைப் போலவே கவிதையாய் எல்லோரையும் கவர்ந்த தொடர் இது. அனைவரும் வாங்கி வாசியுங்கள்.அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

எனது பாசத்திற்குரிய அக்கா ராமலக்ஷ்மி அவர்கள் தனது முதலாவது தொகுப்பாக சிறுகதைகள் அடங்கிய அடைமழை என்றும் நூலை அகநாழிகை பதிப்பகம் மூலமாக வெளியிடுகிறார். புகைப்படக் கலையில் பிரபலமான அக்காவின் சிறுகதைகள் மிகவும் அருமையாக இருக்கும். கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள். அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

Photo: 2012 இறுதியில் சிறுகதைத் தொகுப்பு வெளியிடக் கேட்டு படைப்புகளை அனுப்பியவர் ராமலஷ்மி. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பொறுமையோடு காத்திருந்து வெளிவருகிற ஒரு சிறுகதைத் தொகுதி இது.மிகச் சிறப்பாக எழுதி வருகிறவரும்கூட. இவரது கதைகளை வாசிக்கையில் (கிட்டத்தட்ட நான்கு முறை பதிப்பிக்கிற ஒவ்வொரு படைப்பையும் வாசிக்கிறேன்) நான் உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். புனைவுகளற்ற எளிய மொழியில் எல்லோருக்கும் சென்றடைகிற விஷயங்கள் சொல்வதற்கான எழுத்தாளர்கள் இங்கில்லை. படித்தவர்களுக்கு எழுதுவது வேறு. பாமரர்களுக்கும் புரியும்படியாக எழுதுவது வேறு. எல்லோருக்கும் புரிகிற எளிய மொழியிலான கதைகளைச் சொல்லியிருக்கிறார் ராமலஷ்மி. அவை எளிய மனங்களால் புரிந்து கொள்ளக்கூடியவை.

வலைச்சரத்தில் அறிமுகம் என்பது எனக்கு அடிக்கடி கிடைக்கும் சந்தோஷம். இன்று அம்மா கோமதி அரசு அவர்கள் நினைவுகள் குறித்த பகிர்வில் என்னையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். மிக்க நன்றி அம்மா.

பதிவர்களைப் பொறுத்தவரை நான் சிலரைப் பார்த்து வியப்பதுண்டு. அப்படி வியந்த பதிவர்களில் முக்கியமானவர் இருவர். முதலாமவர் திண்டுக்கல் தனபாலன்  சார் அவர்கள். எல்லாருக்கும் பின்னூட்டம் இட்டு வலைச்சர அறிமுகத்தை மறக்காமல் எடுத்துச் சொல்லி உண்மையிலேயே உயர்ந்த குணம்தான். பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடப்போகும் எல்லா இடத்திலும் எனக்கு முன் பின்னூட்டம் இட்டிருப்பார். தளத்தில் எதாவது தவறு என்றாலும் உடனே சுட்டிவிடுவார்.

அடுத்தவர் வெங்கட் நாகராஜ்  அண்ணன்... மூன்று நான்கு பதிவுகளுக்கு அண்ணன் வரவில்லையே என்று நினைத்தால் பொறுமையாக நமது பதிவுகள் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் இட்டிருப்பார். நானும் சில நாட்கள் சோர்வினாலோ அல்லது வேறு காரணங்களாலோ நண்பர்களின் தளம் செல்வதில்லை. பின்னர் செல்லும் போது பெரும்பாலும் கடைசியாக எழுதிய பதிவைத்தான் வாசிப்பதுண்டு. அப்போது அண்ணனைத்தான் நினைத்துக் கொள்வேன்.

நார்த் 24 காதம் என்ற பகத் பாசில் மலையாளப் படம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். கதை என்று பார்தால் ஒண்ணுமேயில்லை... ஆனால் அதைக் கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை. ஒரு முழு அடைப்பு தினத்தன்று நடந்தே போக வேண்டிய சூழலில் கதை பயணிக்கிறது. மிகவும் சுத்தக்காரரான பகத் பாசில், நெடுமுடி வேணு, சுப்ரமணியபுரம் சுவாதி இவர்களின் பயணத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது. அருமையான படம்.

இருதினங்களுக்கு முன்னர் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய எனது அருமை நண்பனும் மிகச்சிறந்த கவிஞனும் தமிழ்குடிலின் நிர்வாகியுமான தமிழ்க்காதலன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இரண்டு சிறுகதைப் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். போட்டி விதிமுறைகளின்படி விரிவாக சொல்லக்கூடாது என்பதால் முடிவுகள் வரட்டும்... வென்றதா கோட்டைவிட்டதா என்பதைச் சொல்கிறேன்.

இங்கு வெயில் போட்டாலும் கொன்று எடுக்கிறது. குளிர்ந்தாலும் ஒரேயடியாக குளிர்கிறது. இங்கு வந்து ஐந்து வருடத்தில் இந்த முறை குளிர் அதிகம் இருப்பது போல் தெரிகிறது. மாலை வேளைகளில் அறையை விட்டு இறங்க முடிவதில்லை. ஊட்டி கொடைக்கானலில் இருப்பது போல் இருக்கிறது. இப்படி கடும் வெயில் கடுங்குளிர் என மாறி மாறி வரும் போது இயற்கையைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது.

ஆன்ட்ரியாவின் போட்டோவை எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர்கள் எல்லாருமே கேட்ட ஒரே கேள்வி 'என்ன ஆன்ட்ரியாவை வச்சிருக்கே?' என்பதுதான். அடப்பாவிங்களா... ஒரு படம் பிடித்திருந்து வைத்தால் என்னடா ஆன்ட்ரியா படமெல்லாம் வச்சிருக்கேன்னு கேக்கமாட்டீங்களா... குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிருவானுங்க போலவே... ஆவ்...


2013 தனது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் எனக்கு எப்படியிருந்தது என்பதை ஒரு பதிவாக சொல்லலாம் என்பதால் அடுத்த பதிவில் பார்ப்போம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 28 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 38

முந்தைய பதிவுகளைப் படிக்க...---------------------------------

38. காதல் தொடருமா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்குச் செல்ல நிறைய விஷயங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

இனி...

ராம்கிக்குப் பின்னால் புவனா மறையவும் "ஏய் புவி என்னாச்சு...?" என்றான்.

"எதிர்த்த கடையில எங்க சித்தப்பா..."

"சித்தப்பாவா...?"

"ஆமா... திருப்பத்தூர் சித்தப்பா... அந்த வெள்ளைச் சட்டை... பாத்தா அம்புட்டுத்தான்..."

"சரி நீ போயி அவரைப் பார்த்துப் பேசிட்டு வா... இங்க நிக்கிறதைப் பார்த்தா பிரச்சினை ஆகும்..."

"அவரைப் பார்த்தா ஆயிரம் கேள்வி கேட்பார்... பேசாம ஆட்டோ பிடிச்சி அடுத்த ஸ்டாப்புக்குப் போயிடலாம்.."

"இல்ல புவி பேசிட்டு வா..."

"வேண்டாம்... வாங்க போகலாம்..." என்றபடி பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினாள்.

"எங்கடா பொயிட்டு வாறே?" வீட்டுக்குள் நுழையும் போதே கோபமாக கேட்டாள் நாகம்மா.

"அதான் சொன்னேன்ல... ஐயாவோட வேலையா போறேன்னு..."

"என்ன நொய்யா போட்டு ஆட்டுறீங்க... லீவன்னைக்கு கூட உங்களால வீட்டுல இருக்க முடியாதோ..?"

"இப்ப என்னம்மா... படிப்புச் சம்பந்தமாத்தானே ஐயா வீட்டுக்குப் போறேன்... என்னவோ சும்மா சும்மா அங்க போற மாதிரி கத்துறீங்க..."

"என்னடா பேச்சு நீளுது... ஆமா காரைக்குடிக்கு அய்யாதான் போகச் சொன்னாரா?"

"கா... காரைக்குடி...." ஆரம்பித்தவன் 'ஆஹா எவனோ போட்டு விட்டிருக்கான்... ஒருவேளை சேகரா இருக்குமோ... சரி சமாளிச்சாகணுமே' என்று யோசித்தான்.

"என்னடா ரோசனை... இவளுக்கு என்ன பொய் சொல்லலாம்ன்னா..?

"இல்லம்மா... காரைக்குடிக்கு ஐயாதான் போகச் சொன்னார்"

"அந்தாளு எவகூடவோ உன்னைய போகச் சொல்லியிருக்காரு..."

"ஏம்மா சும்மா எவ கூடவும் போகலை... தனியாத்தான் போனேன்."

"எங்கிட்ட பொய் சொல்லதே.. எவளோ ஒரு செவப்புத்தோலுக்காரியோட சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு வந்திருக்கே... முத்தக்கா அவுக சொந்தக்காரவுக முடியாம இருக்காகன்னு பாக்கப் போனப்போ உங்க ஊருவலத்தைப் பாத்திருக்கு..."

"அய்யோ அம்மா... அந்தப் பொண்ணு எங்க காலேசுப் பொண்ணு... பஸ்ல பார்த்தேன்... பேசுச்சு... அதை முத்தம்மா தப்பாச் சொல்லியிருக்கு..."

"எனக்கிட்ட பொய் சொல்லாதே... குடும்ப நெலமையை நினைச்சுப் பார்த்துப் படி... அம்புட்டுத்தான்... பொம்பளப்புள்ளகளோட சுத்துறது இன்னிக்கு இனிக்கத்தான் செய்யும்... நாளைக்கு படிப்ப முடிச்சிட்டு திண்டாடும்போதுதான் தெரியும். கஷ்டப்பட்டுத்தான் உன்னைய இம்புட்டுத்தூரம் படிக்க வக்கிறோம். எவளையாவது இழுத்துக்கிட்டு வந்து நிக்காதே... அம்புட்டுத்தான்... இனி நொய்யா வூடு... நொய்யா வூடுன்னு போறதை கொறச்சுக்க.... எனக்கென்னவோ அந்தப்புள்ள உங்க நொய்யா மகளா இருக்குமோன்னு மனசுல சந்தேகமா இருக்கு... புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்."

இதற்கு மேல் ஒன்றும் பேசக்கூடாது என்று நினைத்தபடி பேசாமல் உள்ளே சென்றவன், 'ஆஹா... பத்தவச்சிட்டாங்களே... எங்காத்தா இனி இதை விடாம ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிடுமே' என்று நினைத்தபடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

வாசலில் சைக்கிளை நிறுத்தியவள் வைரவனின் பைக் வெளியில் நிற்பதைப் பார்த்ததும் 'இவன் இன்னைக்கு வர்றதாவே சொல்லலையே... எப்ப வந்தான்' என்ற குழப்பத்துடன் படியேறினாள். 

"என்னடி... லீவன்னைக்கு எங்க போயி சுத்திட்டு வாறே?" கட்டிலில் படுத்திருந்த வைரவன் கேட்டான்.

"பிரண்டு வீட்டுக்குத்தான் போனோம்... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் போனோம்... நீ என்ன இன்னைக்கு வந்து நிக்கிறே... அங்கயும் எதாவது இழுத்துட்டியா?" என்றவள் அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் உள்ளே சென்றாள்.

"எங்கடி சுத்திட்டு வாறே?" அம்மாவும் இதே கேள்வியைக் கேட்க, "அம்மா.... சொல்லிட்டுத்தானே போனேன்... அப்புறம் நீயும் அவன் கேட்ட மாதிரியே கேட்கிறே..?"

"ஆமா காரைக்குடி பஸ்ல ஏறுனியாம்? பிரண்ட் வீடு காரைக்குடின்னு சொல்லலையே?"

"யாரு சொன்னா? நா ஒண்ணும் காரைக்குடிக்குப் போகலை..."

"யாரு சொல்லுவா... பாத்தவங்கதான் சொன்னாங்க... எதுக்குடி பொய் சொல்லிட்டுப் போனே..."

"இல்லம்மா... அது..."

"உன்னோட போக்கு சரியில்லை... பாத்து நடந்துக்க... அவன் வந்திருக்கும் போது இதை பெரிசாக்குனா... அந்தப் பையனுக்குத்தான் பிரச்சினை..."

"என்னம்மா... என்னன்னமோ சொல்றே... எந்தப் பையன்... யாருக்குப் பிரச்சினை..." ஒண்ணும் தெரியாதது போல் பேசினாள்.

"நடிக்காதடி... நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லையில்லைன்னு சொல்லிக்கிட்டு நீ என்னமோ பண்ணிக்கிட்டு வாறே.... இது எதுல முடியப் போகுதோ தெரியலை... பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அவன் கூட காரைக்குடி வரைக்கும் போயிருக்கே... உங்கப்பாவுக்கோ அண்ணனுக்கோ தெரிஞ்சா அவனை வெட்டிப் போட்டுடுவாங்க... பிரண்ட்ஷிப்பை எல்லாம் காலேசோட வச்சுக்க... வயசுப்புள்ள... இன்னைக்கு சுத்திட்டு நாளைக்கு வேற மாதிரி ஆச்சின்னா எல்லாருக்கும் அவமானம்..."

"என்னம்மா... வேற மாதிரின்னா.... என்ன வேற மாதிரி... எதுக்கு உங்களுக்கு இந்த சந்தேகம்... நா யார் கூடவும் போகலை..." சொல்லி முடிக்குமுன் அம்மாவின் கை கன்னத்தில் இறங்கியது.

"அம்மா"

"என்னடி ஒம்மா...  உன்னோட சேர்க்கை சரியில்லை... எங்களை தலை குனிய வச்சிடாதே அம்புட்டுத்தான் சொல்லுவேன்...இன்னைக்கு நீ காரைக்குடிக்கு போனது உண்மை... போகலைன்னு பொய் சொல்லாதே... இதுவே பர்ஸ்ட்டும் லாஸ்டாவும் இருக்கட்டும்... எங்கே நீ அந்தப் பய கூட போகலைன்னு என்னோட தலையில அடிச்சி சத்தியம் பண்ணு பார்ப்போம்..."

"அம்மா... அது..."

"என்னம்மா... ரெண்டு பேருக்கும் என்ன சண்டை" வைரவன் வெளியில் இருந்து கேட்டான்.

"ஒண்ணுமில்லடா... சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்..." என்றவள் "இங்க பாரு.... எங்களை காலமெல்லாம் கண் கலங்க வச்சிடாதே... ஒவ்வொரு நாளும் அடி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்டி... நீ அப்படித்தான் இருப்பேன்னு சொன்னா படிச்சது போதும்ன்னு உங்கப்பங்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பாக்கச் சொல்லுற மாதிரி ஆயிடும்... பாத்துக்க... "

சூழ்நிலையை கருத்தில் கொண்டு "சாரிம்மா... ஐயா வீட்டுக்குப் போறேன்னு சொன்னா திட்டுவீங்கன்னுதான் பிரண்ட் வீட்டுக்குப் போறேன்னு சொன்னேன்... இன்னைக்கு ஐயாவோடதான் காரைக்குடி போனோம்... ஐயா வீட்டுக்குப் போனப்போதான் அங்க போறது தெரியும்... ஐயா கூப்பிட்டப்போ தட்ட முடியலை... உங்கிட்ட சொன்னா திட்டுவேன்னு சொல்லலை... இனி இது மாதிரி நடக்காது..." என்றவள் வழிந்த கண்ணீரோடு அறைக்குள் சென்றாள்.

ரண்டு வீட்டிலும் விழுந்த சந்தேகப் பொறி தீவிரமாகிக் கொண்டே செல்ல, மணியும் புவனாவுக்கு காதல் இருக்கிறதா என தீவிரமாக விசாரித்தும் அவளுடைய காதலையோ காதலனையோ அவனால் தெளிவாக அறிய முடியவில்லை. ராம்கியும் புவனாவும் மிகவும் கவனமாக காதலை நகர்த்தி வந்தார்கள். கல்லூரிக்குள் இவர்கள் நல்ல நண்பர்களாகவே அடையாளம் காணப்பட்டதால் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

மாதங்கள் கரைந்து கொண்டிருக்க, ஒரு நாள் அதிகாலை போன் அலறவும் "ஒரு சைத்தான் கூட போனை எடுக்காதுக... எல்லாத்துக்கும் நாந்தேன் வரணும்..." என்றபடி போனை எடுத்த நாகம்மாள் "ஆத்தி.... எப்போ?" என்றாள் அதிர்ச்சியாக.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்

பாரதி நட்புக்காக சொல்லரங்கம் - இன்னும் சில

பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய சொல்லரங்கம் பற்றி மூன்று பகிர்வுகள் பகிர்ந்தாச்சு. அதில் விடுபட்ட சிலவும் அவர்கள் தவறாகச் சொன்ன சிலவும்... எப்படியோ பகிர்வு தேத்திடுறமுல்ல....

"எதிர் நீச்சல்ன்னு ஒரு படம் சிவகார்த்திகேயன் நடிச்சது. அதுல அவருக்கு ஒரு பேர் வச்சிருப்பானுங்க... வெளிய சொல்ல முடியாத பேரு... அந்தப் பேரை வச்சிக்கிட்டு அவரு எதிர் நீச்சல் போட்டு  ஜெயிக்கிற கதை ரொம்ப நல்ல படம். நம்ம ஆளுங்க பேர் வைக்கிறது இருக்கே... பிச்சையின்னு வைப்பானுங்க அவன் கோடீஸ்வரனா இருப்பான். கோடீஸ்வரன்னு வைப்பானுங்க கோயில்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான். கன்னங்கருப்பா இருப்பான் அவனுக்கு வெள்ளச்சாமின்னு வைப்பானுங்க... வெள்ளையா இருக்கவனுக்கு கருப்புன்னு பேர் வைப்பானுங்க..."

"ஆஸ்பத்ரிக்குப் போனா இந்த டாக்டர்கள் செய்யிறது இருக்கே... அப்ப்ப்ப்பா... நமக்கு பிபி இருக்கான்னு பாக்குறதுக்கு கையில அப்படியே சுத்திக்கிட்டே ரிலாக்ஸா இருக்கணும்... அப்படித்தான்.... எதுக்கு டென்சன் ஆகுறீங்க... என்று சொல்லியே நம்ம பிபியை எகிற வச்சிடுவாங்க..." என்றவர் விழா அமைப்பாளர்களில் சிவராமன் என்பவர் மருத்துவர் என்பதால் உடனே "சிவராமனைச் சொல்லவில்லை... அவரு ரொம்ப நல்ல மருத்துவர்" என்று சொல்லி அரங்கைச் சிரிக்க வைத்தார்.

"அந்தக் காலத்துல படம் பூராம் பாட்டா வச்சிருப்பானுங்க... கதாநாயகன் பிறந்ததும் ஒரு பாட்டு... கதாநாயகிக்கு ஒண்ணு... அப்புறம் வளரும் போது ஆளுக்கு ஒண்ணு... அந்தப்புள்ள வயசுக்கு வந்ததுக்கு ஒண்ணு.... அப்புறம் ரெண்டு பேரும் இளைஞராகும் போது தனித்தனியா பாட்டு... காதல் வரும் போது ரெண்டு பாட்டு கற்பனையில... ரெண்டு பாட்டு தனித்தனியா... கல்யாணத்துக்கு... முதலிரவுக்கு... இப்படி பாட்டாவே போகும்... எவனாவது முதலிரவுல போயி பாட்டுப்பாடுவானாய்யா..."

"எம்.ஜி.ஆரோட ஸ்பெஷாலிட்டியே அந்த டொக்குத்தான்.. தொட்டால் பூமலரும்... அப்படின்னதும் கதாநாயகி மேல்ல கையை அப்படித் தட்டி 'டொக்' என்பார். 

ஒரு கறுப்பர் இன நாட்டில் உள்ள தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம் நடத்தியதைப் பற்றி இனியவன் சொன்ன போது "அந்த நாட்டை அழுத்திச் சொல்றதுக்கு காரணம் இருக்கு. பிளைட்ல போகும்போது கருப்பர் இன பிளைட்ல ஏர்ஹோஸ்டர்ஸ் எப்படி இருப்பாங்கன்னு தெரியும். மேல பறக்கும் போது குடிக்கக் கொடுத்தானுங்க.... நான் ஒன்மோர் பிளீஸ்ன்னு சொன்னேன்... கண்டுக்கவேயில்லை... ஆனா இவரு ஆளப் பாருங்க... அவங்க மாதிரியே இருக்கவும் கேட்காமலே கொடுத்துக்கிட்டே இருந்தாங்க... அதனாலதான் ரொம்ப அழுத்தமாச் சொல்றாரு."

"ஒரு ஊர்ல பட்டிமன்றம் நடந்தப்போ எவ்வளவு நேரம் பேசலாம் என்று கேட்டேன். நீங்க எம்புட்டு நேரம் வேணுமின்னாலும் பேசுங்க... நாங்க அரைமணி நேரத்துல போயிடுவோம் என்றார்கள். அரைமணி நேரத்துல போயிடுவீங்களான்னு கேட்டதுக்கு அதான் வீதிக்கு வீதி குழாயைக் கட்டி வச்சிருகானுங்கள்ல அதுல கேட்டுக்கிட்டே படுத்திருப்போம்"

திரு. விஜயகுமார் பேசும்போது "ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பதிவு நடந்தது. நான் பேச ஆரம்பிக்க இயக்குநர் அவர்கள் சார் சிரிக்கிற மாதிரி பேசுங்க என்றார். என்னங்க யாருமே இல்லாம எப்படிங்க சிரிக்க சிரிக்க பேசுறது. நீங்க பேசுங்க... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பாக்குறவங்க வீட்ல இருந்து சிரிச்சிக்குவாங்கன்னு சொன்னார். சரின்னு கேமராமேன் இருக்கானேன்னு அவனைப் பார்த்து நானும் சிரிக்க சிரிக்க ஒரு மணி நேரம் பேசினேன். அந்தாளு சிரிக்கவேயில்லை. எல்லாம் முடிந்து கடைசியில என்னய்யா... சிரிக்க சிரிக்க பேசுறேன்... நீ சிரிக்கவே மாட்டேனுட்டே... சிரிச்சிருந்தா என்னன்னு கேட்டா, ஹியான்னு இந்தியில பேசுறான்" என்றார்.

லியோனியின் டூயட்டைப் பற்றிப் பேசிய ஆதவன் அவர்கள், "ரெண்டு பேரும் டூயட் பாட ஆரம்பிச்சிட்டுட்டாங்க... ராத்திரி நேரம் வேற... எனக்கு என்னோட மனைவி ஞாபகம் வந்திருச்சு... அவ கடல்கரை ஓரம் தனியா இருக்கா" என்று சொன்னார்.

"ஒரு தடவை ஒரு ஊருக்குப் போனோம். ஒருத்தன் நல்ல போதையில முன்னால வந்து உக்காந்துட்டான். நான் என்ன பேசினாலும் திரும்பத் திரும்ப பேசுறான்... எல்லாருக்கும் வணக்கம் அப்படின்னா என்ன வணக்கம் அப்படிங்கிறான்... நான் என்ன சொல்றேன்னா... என்ன சொல்லப்போறேன்னு கேட்கிறான்... இப்படியே அவனை வச்சிக்கிட்டே நிகழ்ச்சி நடத்திட்டு வந்தேன்..." என்றார் லியோனி.

இன்னும் நிறையப் பேசினாலும் யாருமே இன்றைய சினிமா என்ற தலைப்புக்குள் வரவில்லை. பழைய சினிமாவைப் பற்றித்தான் பேசினார்கள். பழைய சினிமா பாடலுக்காகவும் ஓடியது... கதைக்காகவும் ஓடியது... இயக்குநருக்காவும் ஓடியது... நடிகருக்காகவும் ஓடியது... ஆனால் இன்றைய சினிமாக்கள் பாடல் இல்லாமல் பெரிய நடிகர் இல்லாமல் ஓடிகொண்டுதான் இருக்கின்றன. தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது இன்றைய சினிமாவை எடுத்துவிட்டு திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் எது என பேசியிருக்கலாம். தலைப்பை விட்டு பேசியது சிரிப்பாக போனதால் தப்பித்தது.

ஆரம்பத்தில் பேசும் போதே சினிமா சம்பந்தமான தவறான தகவல்களைச் சொன்னால் சின்னப் பையன் கூட யோவ் தப்பாச் சொல்லாதேன்னு சத்தம் போடுவான்னு சொன்னாங்க... ஆனா சில விஷயங்களைத் தவறாகத்தான் சொன்னார்கள்.

* அஞ்சலி அறிமுகமானது அங்காடி தெருவில் என்று சொன்னார்கள். அதற்கு முன்னே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் தமிழ் எம்.ஏ, வசந்தபாலன் கூட தனது முகநூல் பக்கத்தில் தமிழ் எம்.ஏயில் அஞ்சலியின் நடிப்பைப் பார்த்துத்தான் அங்காடி தெருவில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

* புது வசந்தம் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த படம் என்றார்கள். முரளி, சார்லி, ராஜா எல்லாம் புது முகங்களா?

* நினைத்தாலே இனிக்கும் தோல்விப்படம் என்றார்கள். பாடல்களுக்காகவே ஓடிய படம் அது... மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. நான் பிறக்குமுன் வந்த படம் இது...

* விஸ்வரூபத்தையும் தோல்விப்படம் என்றார்கள். படம் குறித்து இங்கு பேசவில்லை... ஆனால் கோடிகளை வசூலித்துக் கொடுத்ததுதானே...

மொத்தத்தில் தலைப்புக்கான பேச்சாக அமையவில்லை என்பதோடு லியோனியின் திருமதியை கடைசியில் பேச விட்டிருந்தால் மற்ற பேச்சாளர்களின் பேச்சை இன்னும் ரசித்திருக்கலாமோ என்று அரங்கைவிட்டு வெளியே வந்த அனைவரையும் பேச வைத்த விழாவாக அமைந்தாலும்  பாரதி நட்புக்காக அமைப்பினரின் ஒருங்கிணைந்த மிகச் சிறப்பான பணிக்காக அனைவரின் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு.  அடுத்த விழாவில் மிகச் சிறப்பான தமிழ் அமுது படைப்பார்கள் என்று நம்புவோம்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : மார்கழியும் மாரியும்மார்கழி... இதை பீடை மாதம் என்பார்கள். ஆனால் மற்ற மாதங்களில் நாம் அதிகாலையில் குளித்து கோயிலுக்குச் செல்கிறோமா என்றால் பெரும்பாலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை... விடிந்தும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத்தான் செய்வோம். ஆனால் மார்கழியில் மட்டும்தான் பெரும்பாலானோர் அதிகாலையில் குளித்து விடியும் முன்னர் கோவிலுக்குச் சென்று வருவோம். இது பீடை மாதம் அல்ல... பீடையை ஒழிக்க வந்த மாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது திருவிழா (செவ்வாய்) என்பதே அரிதாகத்தான் இருந்தது. எப்பவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கூட்டம் பெரும்பாலும் சண்டையில் முடிய செவ்வாய் என்பது கனவாகிப் போகும். பின்னர் நாங்களாக அந்த நாளில் சாமி கும்பிட்டோம். அதுதான் தொடக்கம்... பின்னர் ஒரு நல்ல நாளில் செவ்வாய் போடுவதென ஊரார் கூட்டதில் முடிவெடுக்க காப்புக்கட்டும் அன்று அடிதடிகள்... சண்டை... சச்சரவு... என எல்லாம் இருந்தும் அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழாவைத் தொடங்கினோம்.

பின்னர் போலீஸ், நாட்டுப் பஞ்சாயத்துக்கு அம்பலத்தின் அழைப்பு, அதை ஏற்க எங்கள் மறுப்பு என அந்த வருடம் விழா சிறப்பாக... வெகு சிறப்பாக நடந்தது... அது இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது... இனியும் தொடரும்... செவ்வாயை ஆரம்பித்து வைத்தது போல் மார்கழி மாதம் பொங்கல் வைப்பது என்று நாங்களே முடிவு செய்து வீட்டுக்கு 50 ரூபாய் கேட்டபோது பெரியவர்கள் சிலர் எதிர்ப்பு... சிலர் ஆதரவு... ஆதரவாளர்களின் துணையோடு 1500 ரூபாய்க்கு ஒரு மாதம் ரேடியோ போட தெரிந்த பையனை அழைத்து வந்தோம். 

முருகன் சவுண்ட் சர்வீஸ் இதுதான் அவனது கடையின் பெயர்.  மைக் செட்டை கட்டிவிட்டு வீட்டுக்குப் போனவனை எங்களுக்கு எதிராக செயல்பட்டவருக்கு ஆதரவாக ஒரு பெரும்புள்ளி கூப்பிட்டு ரேடியோவை உடனே அவிழ்க்கிறாய் இல்லை என்றால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்ட, அவன் அந்த ஊர்ல உள்ள பெரியவங்களும், எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களும் சொல்லித்தான் கட்டியிருக்கேன். ஊரே சொல்லிக் கட்டியவன் தனி ஒருத்தருக்காக அவிழ்க்க மாட்டேன் என்று சொல்ல, பின்னர் போலீஸ் வரை சென்று சுபமானது. அம்பலம் ஊருக்கே வந்து அவன் பண்ணியது தப்புத்தான் அவனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றது தனிக்கதை.

ஊரில் எல்லா வயல்களிலும் நெற்பயிர் பொதி கட்டி இருந்த நேரம். பக்கத்து ஊர் கோவில்  மாடுகள் வந்து அழித்து விடாமல் இருக்க வயலில் ஆங்காங்கே குடிசை போட்டு பெரியவர்கள் தங்கி இரவெல்லாம் தகரங்களை வைத்து அடித்து ஓசை எழுப்பி காவல் காப்பார்கள். முதல் வருடம் மார்கழி மாதம் சாமி கும்பிடுவது என முடிவு செய்தாச்சு. எல்லாமே பசங்களாக செய்த வேலைதான். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திரிச்சு... குளிச்சி... ரேடியோ போட்டு விட்டு கோவிலுக்கு முன்பாக தயார் பண்ணி வைத்திருந்த கல் அடுப்பில் நாங்களே பொங்கல் வைத்து அஞ்சரை மணிக்கெல்லாம் கோவில் மணியை அடித்து விடுவோம். அஞ்சே முக்காலுக்கு காவலுக்குச் சென்றவர்கள் திரும்பி வர, ஆறு மணிக்கு 'துதிப்போர்க்கு வல்வினைபோம்... துன்பம்போம்...' என கந்தர் சஷ்டி கவசத்தை ஓட விட்டு பிள்ளையார், முருகன், மாரியம்மனுக்கு தீப ஆராதனை பார்த்து சாமி கும்பிட்டு... பொங்கல் வழங்கி கலைந்து செல்வோம்.

மார்கழிக் குளிரில் எரியும் விறகடுப்பின் முன்பு பேசிக்கொண்டு பொங்கல் வைத்த அந்த நாள் ஞாபகம் ஒவ்வொரு முறை மார்கழி கடந்து செல்லும் போதும் நெஞ்சுக்குள் பனித்துளியாய் பரவிச் செல்லும். சில நாட்களில் அதிகாலையில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். அடாது மழை பெய்தாலும் விடாது காரியத்தில் கண்ணாய் இருப்போம். கோவிலுக்குள் ஈர மணலைப் போட்டு பொங்கல் அடுப்பை வைத்து பொங்கல் தயார் பண்ணிவிடுவோம். முதல் வருடம் ஒரு நாள் கூட தாமதித்ததும் இல்லை... தளர்ந்ததும் இல்லை.

எங்களின் இந்த ஆர்வத்தைப் பார்த்து அடுத்த முறை மார்கழிப் பொங்கலை ஊர் எடுத்துக் கொண்டது. சீட்டுக் குலுக்கிப் போட்டு தினம் ஒரு வீடு என்று கொண்டு வந்தார்கள். அப்புறம் வருடங்கள் கரைய ஐயரை வைத்துப் பண்ண ஆரம்பித்தார்கள். யாருக்கு சீட் விழுந்திருக்கிறதோ அவர்கள் ஐயருக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தார்கள்.

செவ்வாயும், மார்கழி மாதமும் நாங்கள் தொடங்கி வைத்து தொய்வில்லாமலும் சிறப்பாகவும் போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கண்மாய்க்குள் மரங்களுக்கு இடையே இருந்த முனியய்யாவுக்கு கல்லாலே மேடை அமைத்து கோவில் கட்டினோம்... சென்ற வருடம் மாரியம்மனின் ஓட்டுக் கொட்டகை கோவிலை கோபுரத்துடன் கூடிய அழகிய கோவிலாகக் கட்டி சில மாதங்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருக்கிறது சில கசப்புக்களை சுமந்தபடி...

ஆம் இந்த முறை ஐயரைக் கொண்டு வந்ததில் உடன்படாத எங்கள் இளைஞர்கள் எதிர்ப்பை உருவாக்கி யாருக்கு சீட் விழுந்திருக்கோ அவர்களே பொங்கல் வையுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். ஐயரை வைத்து பண்ணுவோம் இவ்வளவு வரும் என்ன செய்யலாம் என்ற எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் நான் முடிவெடுத்துவிட்டேன் என்று அதிகாரத் தோரணை வந்தபோதுதான் இளைஞர்கள் வீறு கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களது தொலைபேசி செய்திகள் சொல்கின்றன. இது சாதாரண விஷயம்தான்.... இதுவும் கடந்து போகும் எப்போதும் போல் சில சந்தோஷங்களால்...

எல்லாம் ஒரு தாய் மக்கள் என்பதாலும் சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கு என்ற நிலைக்குப் போகாததாலும் சில மௌனங்கள் பல பிரச்சினைகளை உடைத்து விடுவதும் உண்டு. எப்படியிருந்தாலும் திருவிழாக்களுக்கு பங்கம் வரப்போவதில்லை... வருமளவுக்கு வைத்துக் கொள்வதுமில்லை... விடுவதுமில்லை... என்னிடம் பேசிய சேகரிடம் இந்தப் பிரச்சினைகள் செவ்வாய் வரை போய்விடக் கூடாது சித்தப்பு என்றேன். இல்ல மகனே அதெல்லாம் எதுவும் நடக்காது... செவ்வாய்க்கு யாரும் எதிர்க்கக் கூடாதுன்னு கூட்டத்திலேயே சொல்லிட்டோம் என்றான்,

மார்கழியில் ரெண்டு குழாய் ரேடியோவுடன் வந்து மிரட்டல்களை சமாளித்து எங்களுடன் நின்ற ரேடியோ முருகன்தான் இன்று வரை எங்கள் ஊர் திருவிழாவுக்கு மைக் செட் போடுகிறான். இன்று தேவகோட்டையில் பிரபலமான மைக் செட் அமைப்பாளரில் அவனும் ஒருவன். அவனிடம் இன்று ஒரு திருவிழாவுக்கு அல்ல... நாலைந்து திருவிழாவுக்கு உள்ள பொருட்கள் இருக்கின்றன... அவனும் வளர்ந்துள்ளான்... பெருமையாக இருக்கிறது. இந்த வருடம் மார்கழிக்குத்தான் அவனது மைக்செட் இல்லை.... ஏனென்றால் இந்த வருடம் கோவிலுக்கு சொந்தமாக மைக் செட் வாங்கிட்டாங்கல்ல... எங்க அம்மனும் சிறப்பா இருக்கா... எங்களையும் சிறப்பா வச்சுக்குவாங்கிறதுல துளி கூட சந்தேகம் இல்லை...

-படத்துக்கு நன்றி : சக்தி விகடன் முகநூல் பக்கம்

கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்

வீடியோ : மார்கழி இசையும் மனங்கவர்ந்த இசையும்

மார்கழி மாதம்.... ஊரில் இருக்கும் எல்லாக் கோவில்களிலும் அதிகாலையில் சாமிப் பாடல்களைப் போட்டு சூரியன் உதிக்கும் முன்னர் பொங்கல் வைத்து மார்கழியைக் கொண்டாடுவார்கள். இந்த நினைவலையை கொஞ்சம் தட்டிப்பார்த்தால் அடுத்த கிராமத்து நினைவு தயார். அதற்கு முன் மார்கழியை ரசிப்போம் வாருங்கள்...


மார்கழி திங்கள் அல்லவா... இசையாய்...மார்கழி திங்கள் அல்லவா... பாடலாய்...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்...
கிறிஸ்துமஸ் கீதம் : மாதா உன் கோவிலில்...
இனி வருவது... என்றும் இனியவை


படம் : பொண்ணுக்கு தங்க மனசு
பாடல் : தேன் சிந்துதே வானம்...
படம் : கண்மணி ராஜா...
பாடல் : ஓடம் கடலோடும் அது சொல்லும்....


ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபட்டாலும் இசையை ரசிப்பதில் எல்லாருக்கும் விருப்பம் உண்டு. மீண்டும் நல்ல பாடல்களுடன் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 26 டிசம்பர், 2013

நாணயம்


ந்த ஏரியாவில் தரமான பொருட்களை குறைவான விலைக்கு கொடுத்துப் பெயர் வாங்கிய மளிகைக் கடை அது.

கடை முதலாளி ராமநாதனுக்கு உடம்பு சரியில்லாததால் அவரது மகன் செல்வம் இரண்டு நாட்களாக கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனிக்கிறான்.

"அண்ணே.... அண்ணேய்... மணி அண்ணே..."

"என்ன தம்பி..." கையில் பொட்டலத்தை மடித்தபடி உடம்பெங்கும் மளிகை சாமான்களால் ஏற்பட்ட அழுக்கோடு உள்ளிருந்து வந்தார் மணி.

"நம்ம கடையில எல்லா பொருளும் சுத்தமானதுதானே..?"

"ஆமா தம்பி... அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்..? அதனாலதான் நம்ம கடை வியாபாரத்தோட யாராலயும் போட்டி போட முடியலை..." பெருமையாய் சொன்னார்.

"ஆமா... அது சரிதான்... அதனாலதான் இன்னைக்கு கடை ஆரம்பிச்சவனெல்லாம் கோடீஸ்வரனாயிட்டான். ஆனா நாம அப்படியே இருக்கோம்.... இல்லையா?"

"என்ன தம்பி சொல்றீங்க..?"

"ஆமாண்ணே.... நமக்குப் பின்னால கடை வச்சவனெல்லாம் வீடு தோட்டம் தொறவுன்னு வசதியா செட்டிலாயிட்டான். நாம மட்டும் இன்னும் எந்த வசதியும் இல்லாம அதே பழைய காரை வீட்டுல இருக்கோம். அதனால..."

"அ... அதனால... என்ன... தம்பி..."

"நம்ம கடையில விக்கிற பொருளை நூறு சதவிகிதம் சுத்தமா கொடுக்காம கொஞ்சம் கலப்படம் பண்ணி வித்தா லாபம் பார்க்கலாமே...?"

"என்ன தம்பி சொல்றீங்க... வேண்டாம் தம்பி... அப்பா இந்த பெயரை எடுக்க ராப்பகலா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரு தெரியுமா...?

"அவரு சிரமப்பட்டு சொத்து சேக்கலையே... பேரை மட்டும்தானே சேர்த்து வச்சிருக்காரு... அதை வச்சி என்ன பண்றது. இனிமே தர்மம் நியாமுன்னு இருந்தா கடைசி வரைக்கும் சிரமப்பட வேண்டியதுதான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..."

"எ... என்ன தம்பி முடிவு..."

"இனிமே மிளகுல மூணுல ஒரு பங்கு பப்பாளி விதையை கலக்குறோம்... சீனியில ரவையை கலக்குறோம்... அதே மாதிரி...." செல்வம் அடுக்கிக் கொண்டே போக....

இடைமறித்த மணி, "வேண்டாம் தம்பி... இது மக்கள் நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு செய்யிற துரோகம்... அப்பாவுக்கு தெரிஞ்சா..."

"நிறுத்துங்க.... ஏதோ எங்க குடும்பத்துல் ஒருத்தரா பழகிட்டீங்கங்கிறதால உங்ககிட்ட இந்த விசயத்தைப் பத்தி பேசினேன். இல்லைன்னா நானே செஞ்சிருப்பேன்..."

"இல்ல தம்பி...."

"நான் சொல்றதை நீங்க செய்யிங்க... அதை விட்டுட்டு நியாயம் தர்மம் பேசாம... எங்களுக்கும் நியாயம் தர்மம் தெரியும்..." கோபமாய் பேச, பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மணி.

"இனிமே இது தொடர்ந்து நடக்கணும்... அப்பாக்கிட்ட சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன்..." அவர் முதுகுக்குப் பின்னால் செல்வம் சொல்லிக் கொண்டிருந்தான்.


சில நாட்களுக்குப் பிறகு.... ஒரு மதியவேளை...

"தம்பி அப்பா இல்லை..." என்றபடி வந்தார் அந்த தெருவில் வசிக்கும் ஆசிரியர் சுப்பையா.

"அப்பாவுக்கு உடம்பு முடியலை... அதனால நான்தான் பார்க்கிறேன்... ஏன் சார் சும்மாதானே... சாமான் எதுவும் வேணுமா...?"

"இல்ல தம்பி ஒரு விசயம்... அதை அப்பாகிட்ட..." என்று இழுத்தார்.

"என்ன சார் விசயம்... எங்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லுங்க நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்..."

"நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நம்ம கடையில இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்தது கிடையாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிய சாமானெல்லாம் சுத்தமா இல்லை... ஏதோ கலப்படம் பண்ணினது மாதிரி தெரியுது. நான் நம்ம கடையில் அதுமாதிரி செஞ்ச்சிருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா நீங்க மொத்தமா பொருள் வாங்கிற இடத்துல இந்த மாதிரி பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு இல்லையா....

"எங்க வீட்ல கூட சொன்னாங்க ராமண்ணன் கடையிலயும் கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு... நான் சத்தம் போட்டேன்... உங்க அப்பா இந்த மாதிரி ஒருக்காலமும் செய்யமாட்டாரு... அவரு பேருல மட்டும் ராமன் இல்ல... குணத்துலயும் ராமன்தான். இதுவரைக்கும் இங்க பொருள் வாங்கின யாருமே நேர்ல வந்து சொல்ல மாட்டாங்க. ஏன்னா... அப்பா மேல அவ்வளவு மரியாதை.

"அவருக்கே தெரியாம நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா..? நீங்க பொருட்களை பார்த்து வாங்கணுங்கிறதாலதான் நான் நேர்ல வந்து சொல்றேன். இனிமே பார்த்து வாங்குங்க தம்பி... உங்களுக்கு கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்கங்க... நான் வர்றேன்..."

"சரி... சா...சார்.... நான் பார்த்துக்கிறேன்..."

அவர் சென்றதும் செல்வத்திடம் மணி "தம்பி பாத்தீங்களா.... நம்ம அப்பா மேல உள்ள மரியாதையை... இதை சம்பாதிக்கத்தான் தம்பி நாளாகும்... பணம் எப்ப வேணுமின்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்லவன்கிற பேரை சம்பாதிக்கிறதி அவ்வளவு சுலபமில்லை.

"அன்னைக்கு என்ன சொன்னீங்க... அடுத்தவன் வீடு வாசல்னு இருக்கான்னுதானே... தம்பி இந்தக் கடையில் சம்பாதித்த காசுலதான் அப்பா மூணு பொண்ணுங்களை படிக்கவச்சசு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு.... உங்களையும் நல்லா படிக்க வச்சிருக்காரு... அதெல்லாம் இந்த கடை வருமானம்தானே... இதையெல்லாம் அன்னைக்கே நான் சொல்லியிருப்பேன்... அப்ப நீங்க கேக்கிற மூடுல இல்லை...

"நம்ம கடையில வாங்குன சாமான் நல்லாயில்லையின்னதும் வேற கடைக்குப் போகாம நேர வந்து சொல்லிட்டுப் போறாரு பாருங்க... அதுதான் அப்பா மேல உள்ள மரியாதை... இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல சம்பாதிக்க முடியாது தம்பி... இனிமே கலப்படம் பண்ண நினைக்காதீங்க... நாம எப்பவும் போல இருந்தா போதும்..." முடித்த போது அவரது கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

"அண்ணே... என்னை மன்னிச்சிடுங்க.... பணமும் புகழும்தான் வாழ்க்கையின்னு நெனச்சுட்டேன்... ஆனா நாணயம்தான் பெரிய சொத்து... அது அப்பாகிட்ட இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்... இனிமே கலப்படம் பண்ணனுமுன்னு மனசாலகூட நினைக்கமாட்டேன். இங்க நடந்தது அப்பாவுக்கு தெரிய வேண்டாம்..." என்றவன் மனதிற்குள் அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

(2010-ல் எனது சிறுகதைகள் வலைப்பக்கத்தில் பகிர்ந்தது)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : இ'

பாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.

முதல் இரண்டு பகுதிகளையும் படிக்க கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்...


(விழா அமைப்பாளர்களும் பேச்சாளர்களும்)

திரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைக்க, அவரும் தாய்த்தமிழுக்கு கவிதையால் வாழ்த்துப்பாடி அவை தொழுது இயக்குநரே என்று தனது வாதத்தை அமர்களமாக ஆரம்பித்தார். நடுவர் அவர்களே இசையே என்று பேச வந்த அண்ணியார் அவர்கள் பாடலாகப் பாடினார். நீங்களும் சேர்ந்து பாடினீர்கள்...  உங்க முதலிரவு அன்னைக்கு ரெண்டு பேரும் பாட்டாவா பாடுனீங்க என்றதும் ஏய்யா உனக்குப் பொறாமை நாங்க பாடுனது பிடிக்கலையான்னு லியோனி கேட்டாரு... சொல்லுங்க முதலிரவுல பாடுனீங்களா என்றார். ஏய்யா அங்க பாடியிருந்தா என்ன ரெண்டும் நல்லாத்தானே உள்ள போனதுங்க... என்னாச்சோன்னு சொல்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுவானுங்கய்யா என்றார். 

ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை வெளியில் கொண்டு வந்து கிராமத்து மனிதர்களைக் தனது படத்தில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரது படங்களை அவர் இயக்கியிருக்கும் விதம் மிக நேர்த்தியாக இருக்கும். கதை என்று பேசிய ஆதவன் அவர்கள் சோறு குழம்பு எனச் சொல்லி கதையே கதையேன்னு சொன்னார். எப்படிக் கதையிருந்தாலும் இயக்குநர் சரியாக இயக்கவில்லை என்றால் அந்தப்படம் தோல்விப்படமாகிவிடும் ஆதவன் என்றார். இங்கு விஜயகுமார் அவர்கள் சிவாஜி கணேசனைப் போல் 'மிஸ்டர் ஆதவன்' என்று சப்தமாக கர்ஜனையோடு அடிக்கடி அழைத்தது அரங்கை சிரிப்பில் ஆழ்த்தியது.

நானும் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று சென்னையில் அலைந்தவன்தான்... சீனு ராமசாமியும் நானும் ஒன்றாகத்தான் இருந்தோம்... சிம்புதேவனும் என்னோட நண்பன்தான்... அவர்கள் இயக்குநர்களாய் ஜொலிக்கிறார்கள். நான் இப்படியிருக்கிறேன் என்றார்.  இயக்குநர் சங்கரைப் பாருங்கள் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவர்களை எல்லாம் தனது படத்தின் மூலம் சீனப் பெருஞ்சுவரையும்... அயர்லாந்து, லண்டன் என எல்லா இடங்களையும் திரையில் கொண்டு வருகிறாரே...கதையும் இசையும் நடிப்பும் செய்து விடுமா என்ன...

நடுவர் அவர்களே... இசை எத்தனை எழுத்து... உடனே லியோனி ரெண்டு எழுத்து... கதை... அதுவும் ரெண்டு எழுத்துத்தான்.... நடிகர்.. நாலெழுத்து... இயக்குநர்... ஆறெழுத்து... இப்ப எதுக்குய்யா இதைக் கேட்கிறாய்... இப்பச் சொல்லுங்க ரெண்டு, நாலு, ஆறு இதுல எது பெரிசு என்றார். சந்தேகமில்லாமல் ஆறுதான் பெரிசு. அப்ப இங்க இயக்குநர்தானே பெரிசு... தீர்ப்பைச் சொல்லிடுங்க... அதுசரி இப்படியெல்லாம் தீர்ப்பைக் கேட்பீங்களா... நல்லாயிருக்குய்யா என்றார் லியோனி. இடையில் ரஜினி போல் பேசினார். உடனே ரஜினி நோவுல கெடந்து பேசுற மாதிரி இருக்குய்யா... இருந்தாலும் அந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள் என்றார்.

நேரம் கடந்து கொண்டிருந்ததால் விஜயகுமார் அவர்களின் பேச்சைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கவிஞர் ஆதவனை, இந்திய ராணுவத்தில் பணி புரியும் இவர் மிகச் சிறந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர்... ஆளைப் பார்த்தாலே தெரியும் அவர் ராணுவத்தில் இருப்பது என்று சொல்லி பேச அழைத்தார்.

Displaying ku_0658.JPG
(திரு.விஜயகுமார்)

இனியவன் தனது உரையைத் தொடங்கியதும், லியோனி அவர்கள் படையப்பாவில் ரஜினி சொல்வது போல் இவரு போட்டிருக்கிற டிரஸ் இவரது இல்லை. பாரதி நட்புக்காக அன்பர்கள் வாங்கிக் கொடுத்தது... இவருதான் டிரஸ்ஸை எல்லாம் பெட்டியோட விட்டுட்டு வந்துட்டாரே என்றார். உடனே இனியவன் ஆமாங்க எனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தாங்க.... பனியனெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க... அதுவும் பேக்கோட கொடுத்தாங்க என்றார். இந்தப் பேச்சு தொடரும் போது சிவகாசிக்கு ஒரு முறை போனபோது எனக்கு வெடியில மாலை போட்டாங்க... பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தா தீப்பெட்டி தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக இந்த வெடிமாலையை பத்த வைக்கிறோம்ன்னு சொல்லிட்டானுங்க என்றார்.

உடனே லியோனி ஒவ்வொரு ஊர்லயும் கொடுக்கிற அன்புப் பரிசு இருக்கு பாருங்க அந்தந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருக்கும். ஒரு முறை பவானி போனோம். அங்க ஒரு போர்வையை போர்த்திவிட்டுட்டு பேசி முடிக்கிறவரைக்கும் இதை போர்த்திக்கிட்டே பேசுங்கன்னு சொல்லிட்டானுங்க... அதே மாதிரி பத்தமடை போனப்போ ரெண்டு பாயைக் கொடுத்துட்டாங்க... பேசி முடிச்சிட்டு வீட்டுக்கு ரெண்டு கக்கத்துலயும் பாயை இடுக்கிக்கிட்டு நடந்து போனா பக்கத்துவீட்டு பாட்டி லியோனி என்ன முதலிரவுக்குப் பொயிட்டு வர்றமாதிர் வாறேன்னு கேக்குது. இப்படித்தான் திருநெல்வேலி போனதுக்கு இருட்டுக்கடை அல்வா கொடுத்தாங்க என்றதும் இன்னைக்கு டூயட் பாடினப்போ இங்கயும் அல்வா கொடுக்கிற மாதிரித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன் என்றான் இனியவன்.

ஒரு தடவை திருப்பூர் போனோம் அஞ்சு ஜட்டி, அஞ்சு பனியன் கொடுத்தாங்க. தினமும் காலையில அவங்களை நினைக்காம நான் கிளம்பினதே இல்லை என்றார். தனது உரையைத் தொடர்ந்த இனியவன், பிளைட்ல அந்தப் புள்ளைக்கிட்ட ஒண்ணும் கேக்கலை பேர் கேட்டேன்... நான் சௌத் இந்தியா இல்லை நார்த் இந்தியான்னு சொன்னா.. அதுதான் பார்க்கயிலே தெரியுதேன்னு சொல்லிட்டு கொஞ்சம் பேசினேன்... பின்னால வான்னு சொன்னா... போனது தப்பாய்யா... பெட்டியை எடுத்து வச்சிக்கிட்டு கொடுக்க மாட்டேனுட்டானுங்க என்றார்.

டூயட்டைப் பற்றி பேசிய இனியவன் இன்னைக்கு மேடையில நடந்ததைப் பார்த்தால் ஊருக்குப் போற டிக்கெட்டை நாளைக்கு மாற்றணும் போல என்றார். அண்ணியார் அவரை ரொம்ப மோசமா பாட்டுல திட்டினாலும் இவரு சிரிச்சிக்கிட்டே பாடுறாருய்யா... 'ஒத்தயடிப் பாதையில ஒருத்தி நான் போகயில.... சுத்திச் சுத்தி பின்னால பித்தனைப் போல் வந்தவனேன்னு பாடுறாங்க... இவரும் சிரிச்சிக்கிட்டு பின்னாலயே பாடுறாரு.... பித்தன்ங்கிறது எவ்வளவு மோசமான வார்த்தை தெரியுமா? என்று பேசிக்கொண்டே போக, இடையில் புகுந்த லியோனி ஏய்யா நாங்க பாடுனது உனக்குப் பிடிக்கலையா... என்னய்யா வயித்தெரிச்சல் உனக்கு என்றார்.

இன்னைக்கு பராசக்தி படத்துல இருந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாங்க. அப்போ அந்தப் பாடலைப் பற்றி மேடையில் அறிமுகம் செய்த சகோதரி, படத்தின் இயக்குநரையோ, இசை அமைப்பாளரையோ, கதையாசிரியரையோப் பற்றி சொல்லவில்லை. நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் என்றுதான் சொன்னார். இதிலிருந்தே தெரியவில்லையா ஒரு படத்தை மக்கள் முன் கொண்டு சென்று வெற்றிப்படமாக்குவது நடிகர்கள்தான் என்றார். ஆமா அந்தப்படத்துக்கு கதை கலைஞர் அவர்கள் யார் எடுத்ததுன்னு எனக்குந் தெரியலை என்று சொன்னார் லியோனி.

Displaying ku_0661.JPG
(திரு. இனியவன்)

முதல் மரியாதை படத்துல ஒரு காட்சி, சாகக் கிடக்கிற சிவாஜியைப் பார்க்க ராதா வருவாங்க. அப்போ ராதாவின் கால் அந்த மண்ணை மிதித்ததும் அவரது உடல் ஒரு சிலிர்ப்பு... சாகக் கிடக்கிறவன் நடிக்கணும்... இங்க அவரோட உயிர் நடிச்சது. அது ஒரு நடிகனாலதான் முடியும். என்னவோ சொன்னாங்களே இயக்குநர் இமயம் வெற்றிப்படம் கொடுத்தாருன்னு கருத்தம்மாவுல படத்துல பெரியார்தாசனுக்கு வாதம் வந்து ஒரு பக்கம் புல்லா செயல் இழந்திரும்... அவரோட அந்தப் பக்கத்துக் கண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கிட்டே வரும். பாரதிராஜா அவர்கிட்ட எதுக்கு கண்ணச் சுருக்குறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு பக்கம் உடம்பு செயலிழக்கும் போது கண்ணும் சுருங்கிடும்ன்னு சொல்லியிருக்கார். உடனே நீ நடிகன்யான்னு சொல்லி நீ நடின்னு சொல்லிட்டு அவர் போயிட்டார் என்றார்.

கும்பகோணத்துல குழந்தைகள் தீவிபத்தில் இறந்தபோது யாரு அந்த இடத்துக்கு வந்தா கதையாசிரியரா, இயக்குநரா.. ஒரு நடிகன் நடுவர் அவர்களே... தன்னோட சூட்டிங்கை பாதியிலேயே நிப்பாட்டிட்டு அங்க ஓடியாந்தது தல அஜீத் என்னும் நடிகன் மனிதன் என்றதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. 

ஷகீலா படம் கதைக்கா நடிகரே ஓடுது என்றதும் அதை ஏன்ய்யா இங்க கேக்குறே என்றார். சொல்லுங்க நடுவரே... நாமெல்லாம் முழூ நீள திரைப் படத்தைப் பார்ப்போம். இந்தம்மா படத்துல முழுவையும் திரையையும் எடுத்துட்டு நீலப்படமா ஆக்கிட்டாங்கன்னு சொன்னவர். நம்ம ஊர்ல தியேட்டருக்குள்ள பொயிட்டு படத்தைப் போடுய்யா... படத்தைப் போடுயான்னு கத்துறானுங்க என்றார். இன்னும் நிறைய பேசினார். பேசிக் கொண்டிருக்கும் போது  இடையில் நடுவரிடம் வந்த சித்ரா அவர்கள் ஒரு பேப்பரை நீட்ட, அதைப் பார்த்தவர் தன் வாட்சையும் பார்த்து ஓகே சொன்னார். திருமதி லியோனி அவர்களும் இனியவனை முடித்துக் கொள்ளும்படி சைகையால் சொன்னார்.

தனது தீர்ப்பைச் சொல்லும் விதமாக பேசிய நடுவர் அவர்கள் இசையால் ஓடிய படங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டாகவே வைத்திருப்பார்கள். அதேபோல் கதைக்காக ஓடிய படங்கள் எவ்வளவோ இருக்கின்றன. பாடல்கள் நிறைந்த படங்கள் எல்லாம் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. நல்ல கதைகள் இருந்த படங்கள் எல்லாம் சரியான இயக்கம் இல்லாமல் தியேட்டரை விட்டே ஓடியிருக்கின்றன.

இப்போ இரண்டாம் உலகம்ன்னு ஒரு படம் தியேட்டருக்குப் போனவனெல்லாம் இந்தா இப்படியே திரும்பி வாரானுங்க... என்னடான்னு கேட்டா டிக்கெட்டுக்கு கொடுத்த காசு போச்சுன்னு சொல்றானுங்க. நல்ல கதைதான் எதையோ சொல்ல வந்து எப்படியோ ஆயிடுச்சு. இயக்குநர் சொல்ல வந்தது இதுதான் எந்த உலகத்துக்குப் போனாலும் காதல் இருக்கும்ன்னு ஆனா சொல்லிய விதம் புரியலை. கடைசியில ஆர்யா நீ இன்னும் உயிரோட இருக்கியா எனக்கு ஒண்ணும் புரியலை என்றதும் ரசிகர்கள் எங்களுக்கும் ஒண்ணும் புரியலைன்னு கத்துறாங்க.

இயக்குநர் ராம் அருமையான படம் ஒண்ணை எடுத்தார். தங்க மீன்கள் ஆனா அந்தப் படம் ஓடலை. இதே மாதிரி ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... இப்படி நிறையப் பேசினார். பிரபலக் கதாநாயகர்கள் என்றில்லாமல் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. சுப்ரமண்யபுரம்ன்னு ஒரு படம் சசிக்குமார் எடுத்திருப்பார். அதுல எல்லாமே 1980ல நடந்த மாதிரி இருக்கும். ஒவ்வொன்னையும் பார்த்துச் செய்திருப்பார். அதுல நாயகனும் நாயகியும் தொடாமலே ஒரு பாட்டுப் படிப்பாங்க... கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... ஆஹா எப்படிப்பாடல். அந்தப் படத்துல காதலி துரோகம் பண்ணிட்டானதும் ஜெய் என்னைக் கொன்னுடுன்னு சொல்லுவாரு... அருமையான படம்  அதை எடுத்த சசிக்குமாரைக் கண்டிப்பா பாராட்டியே ஆகணும் என்றார்.

Displaying ku0642.JPG
(விழா மேடையில் நடுவரும் பேச்சாளர்களும்)

பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சியை அவர்கள் பேசுவது போல் பேசி ரசிக்க வைத்தார். அவர் மிகவும் ரசிப்புத் தன்மையுடன் அந்தக் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து வெளியே போய்விட்டு வந்த திருமதி. லியோனி ஏதோ சொல்ல அவரிடம் குனிய இவரும் நாகேஷ் பாலையாவிடம் ஒரு கத்துக் கத்துவாரே அதைச் செய்ய அந்த அம்மையாருக்கு பயத்தில் தூக்கி வாரிப் போட, அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

உடம்பில் உள்ள உறுப்புக்களை வைத்து அழகான விளக்கம் சொன்னவர் உடம்பை இயக்கும் இதயம் போல இயக்குநர், கதை மூளையாக இருக்கலாம். ஆனால் அதை வைத்து தன் எண்ணத்தில் உள்ளதை காட்சிப்படுத்தி மிகச் சிறப்பான படைப்பாக கொடுப்பவர் இயக்குநரே என்று சொல்லி தீர்ப்பை வழங்கினார். 

தியேட்டரில் படம் முடிந்ததும் தேசிய கீதம் போட்டால் நிற்காமல் போவோமே அதுபோல்தான் எப்பவும் நன்றி உரை சொல்லும் போது நடக்கும் எனவே தீர்ப்புக்கு இடையில் சொல்லி விடலாம் என லியோனியிடம் கேட்டிருக்கிறார்கள். சரி என்றவர் பேச்சு சுவராஸ்யத்தில் மறந்துவிட்டார்.  அதனால் கடைசியில் இதைச் சொல்லி இருந்து நன்றியுரையையும் கேட்டுச் செல்லுங்கள் என்றார். 

திருமதி. சித்ரா நன்றியுரை வழங்க விழா இனிதே முடிந்தது.

திரு.லியோனியின் நகைச்சுவைகளும், பேச்சாளர்கள் சொன்ன தவறான தகவல்களும் கலந்த பதிவு ஒன்றை விரைவில் பகிர்கிறேன். 

விழா நிகழ்வில் நிறைய மறந்து போச்சு... விழா பார்த்த நண்பர்கள் நிறை இருந்தால் மனதால் வாழ்த்துங்கள்... குறையிருந்தால் பின்னூட்டத்தில் சொல்ல மறக்காதீர்கள்.

 நன்றி.

படங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : ஆ'

பாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.

Photo: இன்று மாலை ( 20-12-2013) 5:30 மணிக்கு
அபுதாபி இந்தியன் ஸ்கூல் கலையரங்கில்
திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் அவர்தம் குழுவினரின் சிறப்பு  "சுழலும் சொல்லரங்கம்" நடைப்பெற உள்ளது.
அனைவரும் வருக...!!!               அனுமதி இலவசம்...!!!
(விழா அழைப்பிதழ்)

பாரதி நட்புக்காக சொல்லரங்கத்தின் முதல் பகுதியைப் படிக்க இங்கு சொடுக்குங்கள்...
-------------

சொல்லரங்கத்தின் நடுவர் நகைச்சுவைத் தென்றல் திரு.லியோனி இசையே என்ற தலைப்பில் பேச அழைத்ததும் மேடையேறிய திருமதி. அமுதா லியோனி செந்தமிழுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் சொல்லி தனது சொல்வீச்சை(!?) ஆரம்பித்தார். இசைதான் முக்கிய காரணம் என்று சொல்ல நடுவர் அவர்களே எந்த ஒன்றையும் இசையாய் சொன்னால்தான் அனைவரிடமும் போய் சேரும்.. இசையில்லாமல் சொன்னால் மக்களிடம் போய்ச் சேராது என்றவர் நமது நாட்டுப் பண்ணான 'நீராருங் கடலுடுத்த' பாடலை வசனமாகச் சொல்லச் சொன்னார். பின்னர் அதையே பாடலாகப் பாடச்சொன்னார்.  அதைப் பாடியதும் எனக்குப் பரிட்சை வைக்கிறாங்க போல... பள்ளிக்கூடத்துல படிச்சது சரியாப் பாடிட்டேன்... என்று நடுவர் சொன்னதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. ஆமா எதுக்கு இப்ப பாடச் சொன்னீங்க? என்று லியோனி கேட்க, இசையாய் சொன்னால் எல்லோரும் ரசிக்கிறாங்க... அதையே நீங்க வசனமாகச் சொல்லும் போது அரங்கமே அமைதியாயிருந்தது என்றார்.

பின்னர் ஒரு கிறிஸ்தவப் பாடல், முருகன் பாடல், நாகூர் ஹனீபா பாடல் என ஒவ்வொன்றாகப் பாடச் சொன்னார். நடுவரும் பொறுமையாகப் பாடினார். இங்கே பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்ன்னு ஒரு படம் வந்தது நமக்கு ஞாபகத்தில் வந்து சென்றது. பின்னர் டூயட்டிற்கு மாறினார்கள். 'ஒத்தையடிப் பாதையில ஒருத்தி மட்டும்....' பாடலின் பல்லவியை அம்மணி பாட சரணத்தை ஐயா பாடினார். அடுத்து முதல் மரியாதையில் இருந்து ஒரு காதல் பாடல் என இருவரும் தொடர்ந்து டூயட்டாகப் பாடி தலைப்பை மறந்து பயணித்தார்கள்.

இருபத்து ஐந்து நாட்கள் இந்தப் பாடல்களைப் பாடித்தான் தயாரானார்கள் போல... சின்ன வயதில் இருபத்து ஐந்து காசுக்கு பாட்டுப் புத்தகம் வாங்கி பத்து நிமிடத்தில் பாடலை மனப்பாடம் செய்துவிட்டு பாடிக்கொண்டு திரிந்தோம். இங்க இருபத்து ஐந்து நாள் தயாராகியும் ஒரு புதிய பாடலை ஆரம்பிக்கும் போது பாடலின் வரியை மறந்து 'சாரி' (அவங்க சாரின்னுதான் சொன்னாங்க... மன்னிக்கவும்ன்னு சொல்லலை) சொல்லிப் பாடினார். கடைசியாக இசைதான் சிறந்தது என தீர்ப்பை இப்போதே சொல்லிவிடுங்கள் நடுவரே என்றார். உடனே சுதாரித்த கணவர்... மன்னிக்கவும் நடுவர் 'அப்படியெல்லாம் சொல்ல முடியாது... இன்னும் மூணு பேர் பேச வேண்டியது இருக்கு... அப்புறம் எதுக்கு சொல்லரங்கம்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

Displaying ku0639.JPG
(திருமதி. அமுதா லியோனி)

ஒன்றுமே பேசாமல் பாடலைப்பாட இவருக்கு எதற்கு ஒரு மேடை... இருவரும் வீட்டிலேயே டூயட் பாடியிருக்கலாம். அரங்கம் நிறைந்த ரசிகர்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு லியோனி வேறு ஒவராக பில்டப் செய்து அவருக்காக நானும் கஷ்டப்பட்டு தயாரானேன் என்று சொன்னார். உண்மைதான் டூயட் பாட்டில் இருவருக்குமே சரிசமமாகப் பாடும் நிலைதான் இருந்தது. எனவே இவரும் பாடலைப் பாடி தயாராகியிருப்பாருல்ல... மனைவி பாடியதை மேடையில் அமர்ந்து சிரித்துச் சிரித்து ரசித்தார். நாங்க டூயட் பாடினதை கேட்கும் வாய்ப்பு அபுதாபி தமிழ் மக்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது... இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்றார். இதற்கு முன்னர் இருவரும் துபாயில் பாடியதாக படித்திருக்கிறேன். 

பேசி முடித்து... மன்னிக்கவும் பாடி முடித்து இசையே முக்கியம் என்று முழங்கிவிட்டு அம்மணி அமர,  இசைதான் சிறந்தது என்பதற்காக அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை பாடல்களைப் பாடி என்னையும் பாட வைத்து... பாடம இருக்க முடியாதுல்ல அப்புறம் வீட்டுல எப்படி இருக்கமுடியும் எனச் சொல்லி அருமையான கருத்துக்களைச் சொன்னதற்காக அவரைப் பாராட்டினார். 

எதற்காக இந்த அம்மையாரை முதலில் பேச அழைத்தார் என்று தெரியவில்லை. சொல்லரங்கத்தின் சுவராஸ்யத்தைக் குறைத்தாரே ஒழிய... அதன் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் திறன் அவரிடம் இல்லை. சென்ற முறை பார்வையாளராக வந்தவர் இந்த முறை பேச்சாளராக வந்திருந்தார். ஐயா நாலை மூணாக்கி வீட்டுக்கு ரெண்டு பங்காக்கிட்டாரு போல... சரி அது நமக்கெதுக்கு... மொத்தத்தில் பார்க்கப் போனால் இசை கடைசியில் வந்திருக்கலாம் என்றே எல்லார் மனதிலும் தோன்றியது. ஒருவேளை இவர் இசைக்கவே வந்திருக்க வேண்டாம் என அமைப்பினருக்குத் தோன்றியிருக்கலாம். 

கதையே என்று பேச குமரி ஆதவனை அழைத்தார். இவர் கன்னியாகுமரியில் இருந்து வந்திருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளர்... இங்கு வந்தது முதல் நடந்தவைகளை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார். ஊருக்குப் போனதும் புத்தகமாகக் கொண்டு வந்துவிடுவார் என்றார். குமரி மாவட்டப் பேச்சே மிக அருமையாக இருக்கும்... அவரு பெரிய எழுத்தாளர் என்பது அவரது தலையைப் பார்த்தாலே தெரியும். போகஸ் லைட் அவரு தலையில மட்டும் மின்னுது பாருங்க என்றார். 'ஏலே இங்க வாலே.... சும்மா ஒரு சமட்டுச் சமட்டுலே...' என்று சொல்வார்கள். அவ்வளவு அழகாக இருக்கும் என்று சொன்னார்.

குமரி ஆதவன் குமரிக் கடலில் ஆர்ப்பரிக்கும் அலையென ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார். ஒரு படத்தோட வெற்றிக்கு முக்கியக் காரணம் கதையே என்பதை விளக்கங்களுடன் நகைச்சுவையாய் சொன்னார். எத்தனை பாடல் இருந்தாலும் இசை இருந்தாலும் கதை இல்லை என்றால் அந்தப் படம் தியேட்டரைவிட்டே ஓடிவிடும் என்றார். அக்கா அவர்கள் இசையால்தான் படம் வெற்றி அடைகிறது என்றார் எங்கே அறுபத்து ஐந்து பாட்டை மட்டும் வைத்து ஒரு படத்தை எடுத்துப் பாருங்கள்... இல்லை ஒரு அம்பது பாட்டை வைத்து எடுத்துப் பாருங்கள் படம் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்.

இடையில் புகுந்த லியோனி நினைத்தாலே இனிக்கும் படத்தில் உள்ள பாடல்களைப் பற்றிச் சொல்லி ஒவ்வொரு பாடலையும் பாடி பாடல்களுக்காகவே வந்த இந்தப்படம் மிகச் சிறந்த இயக்குநரின் படம் ஆனால் வெற்றி பெற்றதா இல்லையே என்றார். நினைத்தாலே இனிக்கும் படம் பாடல்களுக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம்தானே... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வரும்போது இங்கிலீஷ் விங்கிலீஷ்ன்னு ஒரு படம் பார்த்தேன். அமெரிக்கா போய் ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டு நாலே வாரத்தில் ஆங்கிலம் கற்று சிறக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அருமையான படம்... அதைப் பார்த்ததும் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். அவள் தமிழ்... நான் கணிதம்... அவளுக்கு ஆங்கிலமும் வராது... கணக்கும் வராது... உனக்கு ஒண்ணும் வராது என்று மட்டம் தட்டியே வைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் பார்த்ததுக்குப் பிறகு அவளையும் ஆங்கிலம் படிக்க வைத்து அதில் புலமை அடைய வைக்க வேண்டும். ஊருக்குப் போனதும் இனிமேல் உன்னிடம் இப்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி அவளை படிக்க வைக்கணும் என்றார்.

Displaying ku 33.JPG
(திரு. குமரி ஆதவன்)

சோறு, குழம்பு என்று பேச லியோனி அவர்கள் ஏன்யா தலைப்பையே மாற்றிவிட்டாய்... இசையை சோறு, இயக்குநரை கூட்டு... என வரிசையாகச் சொல்லி இப்படித் தலைப்பை மாற்றி தீர்ப்புச் சொல்ல வைத்துவிடுவாய் போல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆதவன் அவர்கள் தண்ணீர் குடிக்க, என்னதான் சாப்பிட்டாலும் எது முக்கியம்ன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கும் தீர்ப்பு தண்ணிதான்யா என்றதும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

கதைக்காக ஓடிய படங்களில் சிலவற்றைச் சொல்லி படத்திற்கான கதை இருந்தால் நடிக்கும் நடிகனோ, இயக்குநரோ அல்லது இசையோ முக்கியத் தேவை கிடையாது என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

இவர் பேசியதற்கு கருத்துச் சொல்லும் விதமாக அந்தக் காலத்துல எல்லாப் படத்துலயும் பாட்டு பாட்டு பாட்டுத்தான்... எல்லாம் எட்டுக்கட்டையில்தான் இருக்கும். இசையை ரசிக்கலாம். வீட்ல அம்மாக்கிட்ட போயி 'அம்மா எனக்குக் கொஞ்சம் சோறு போடுங்கன்னு' பாட்டாப் பாடி கேட்க முடியுமா. அப்படிக் கேட்டா 'எம்மவன் அபுதாபிக்கு நல்லாத்தானே போனான்... இப்படி வந்திருக்கானேன்னு எங்கம்மா பயந்துரும் என்றார்.  ஆதவன் அவர்கள் மீண்டும் தண்ணீர் குடிக்க இப்பவும் தண்ணி குடிக்கிறார்... எனவே சாப்பாட்டுக்கு முக்கியம் தண்ணிங்கிறதை உணர்ந்திருப்பார் என்றவர் இயக்குநரே என்று பேச திரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைத்தார்.

சொல்லரங்கத்தின் ஆரம்பத்தில் லியோனி பேசும்போது மேடையில் இருந்த விளக்கு தவிர அரங்கத்தின் உள் இருந்த மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு விளக்குகள் அணைத்தும் உயிர்ப்பிக்கப்பட 'அப்பா இப்பத்தான் எனக்கு மூச்சு வந்திருக்கு... எம்புட்டு நேரந்தான் இருட்டைப் பார்த்து பேசுறது. சிரிக்கிறாங்களா இல்லையான்னு தெரியாம... இப்ப முகம் பார்த்து பேசும் போது நமக்கும் சந்தோஷமா இருக்கும்ல... என்றார்.

Displaying su 0628.JPG
(நடனமாடிய குழந்தைகள்)

பதிவின் நீளம் கருதி இத்துடன் 'பகுதி-ஆ' முடிகிறது.  திரு. விஜயகுமாரின் பேச்சு எப்படியிருந்தது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போமே... 

படங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.

-நாளை தொடரும்
-'பரிவை' சே.குமார்.