மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 டிசம்பர், 2019

மறக்க முடியாத 2019 - வலியிலும் மகிழ்விலும்

Image result for 2019
31-12-2019 இந்த வருடத்தின் நிறைவு நாள்.

இந்த வருடம் என்ன செய்தது என்பதை இந்த நாளில் பலர் நினைவு கூர்ந்து எழுதுகிறார்கள்.

எப்பவுமே கடந்து சென்ற வருடம் செய்ததையும் வர இருக்கும் வருடம் செய்ய இருப்பதையும் பெரிதாய் பேசுவதில்லை. இதற்குக் காரணம் வருடங்கள் வயதை மட்டுமே கூட்டி விட்டுச் செல்கின்றனவே ஒழிய, மாற்றங்கள் என எதுவும் இதுவரை நிகழ்ந்து விடுவதில்லை. இனி வரும் வருடங்கள் நிகழ்த்தும் என்ற கனவு எதற்கு...?

2019 என்னைப் பொறுத்தவரை வடிவேலுவை முட்டுச் சந்தில் வைத்து அடித்து அதுவும் போதாதென மூத்தரச் சந்தில் வைத்து அடித்த கதைதான்... இத்தனை வலிகளையும் வேதனைகளையும் எந்த வருடமும் கொடுத்ததில்லை என்று மட்டும் அடித்துச் சொல்ல என்னால் முடியும். 

இன்னும் தீராப் பிரச்சினைகளை அடுத்து வரும் 2020க்கும் மிச்சம் வைத்தே செல்கிறது. வலிகளை அவ்வளவு சீக்கிரத்தில் இறக்கி வைத்து விடுவாயா என்ற எகத்தாளத்துடன் சிரிக்கிறது.

வருட ஆரம்பம் முதலே விராட் ஹோலியைப் போல அடித்து ஆட ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை என்பதே உண்மை. பணமே பிரதானம் என்னும் உலகில் அதுவே மிகப்பெரிய பிரச்சினையாய்... கடன்களும் வட்டிகளும் தூங்கா இரவைத்தான் கொடுத்தன... வலியை நான் சுமந்ததைவிட என் மனைவியே அதிகம் சுமந்தார். அரவணைப்புக்கு ஆளின்றி தினமும் கஷ்டத்தை மட்டுமே தலையணையாக வைத்து கலங்கிக் கொண்டிருந்தார்... இருக்கிறார்.

2019 என்னை வாட்டி அவர்களையாவது மகிழ்வாய் வைத்திருந்திருக்கலாம்... ஆனால் செய்யவில்லை. என்னைவிட அவர்களையே அதிகமாய் வாட்டியது. அவ்வப்போது உதவ நண்பர்கள் இருந்தாலும் எத்தனை முறை அவர்களிடம் நிற்பது..? 

இந்த வருடம் கொடுத்த மிகப்பெரிய வலி ஊருக்கு ஒருமுறை கூட செல்ல முடியாததுதான். கிட்டத்தட்ட 19 மாதங்களுக்குப் பிறகு விடுமுறை கேட்டு விண்ணப்பித்த போதும் ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரமென ஏலம்தான் கேட்கிறார்கள். ஒரு வாரம் போய் என்னடா பண்ணமுடியும் என சண்டை போட்டுப் போட்டு இப்போது நாலு வாரம் என்பதாய் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

வருட இறுதியில்தான் இரண்டு நேர்முகத் தேர்வு வந்தது... தேர்வில் வெற்றி என்றாலும் இன்னும் அவர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யாமல் காத்திருக்க வைத்திருக்கிறார்கள்... சம்பள விவகாரம்தான் முக்கிய முடிவாக இருக்கும். இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வரும் முயற்சி விதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் செடிபோல அழகாகத்தான் தழைத்தது. பச்சைப் பசேரென நிற்கும் செடி சில நாளிலேயே காய்ந்து போவதைப் போல் பின்னொரு நாளில் அது தோல்வியில் முடிந்தது. வலிகளைச் சுமக்கத் தெரிந்ததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

நமக்கும் காலம் வருமென்ற நம்பிக்கைதான் இந்த வருடம் முழுவதும் பல நேரங்களில் மனசுக்குள் தோன்றிய நேர்மறை எண்ணங்களை மாற்றியது. அதேபோல்தான் ஷார்ஜா புத்தக விஷயத்திலும் மனம் எண்ணிக் கொண்டது. 

மிகப்பெரிய வலிகளை வாழ்க்கையில் சுமக்க வைத்த வருடமென்றாலும் எழுத்தில் என்னை நிறைவடையவே வைத்தது என்று சொல்லலாம். அந்த எழுத்தே பல நேரங்களில் என் மோசமான சிந்தனைகளை மாற்றி அமைத்திருக்கிறது. இல்லையேல் இந்நேரம் நானில்லை என்பதாய்த்தான் இருந்திருக்கும்.

காற்றுவெளியிலும் தேன்சிட்டிலும் பாக்யா மக்கள் மனசு பகுதியிலும் கிட்டத்தட்ட எல்லா மாதத்திலும் என் படைப்பு வந்திருக்கிறது. இதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிதான் என்னைப் பொறுத்தவரை.

முத்துக்கமலத்துக்கு அவ்வப்போது அனுப்புவதுண்டு... அதுவும் பிரசுரமாகும்... ஒருமுறை என் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகப் பரிசு பெற்றது. புத்தகங்கள் வீடு வந்து சேர்ந்தன.

நண்பர் சத்யா அகல் மின்னிதழுக்கு கட்டுரை எழுதச் சொல்லி வாங்கிப் போடுவார்... அங்குதான் நான் மனதுக்குப் பிடித்த கட்டுரைகள் பல எழுதியிருக்கிறேன். இந்த முறைதான் இரண்டு கதைகள் வேண்டுமென்றார். நான் மூன்று கதைகளுடன் ஒரு கட்டுரையும் அனுப்பினேன். அவருக்கு எல்லாம் பிடித்துப் போனது. ஒவ்வொன்றாய் வரும் என்று நினைக்கிறேன்.  

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணா கேட்டு வாங்கி போடும் கதையில் மூன்று அல்லது நான்கு கதைகள் இந்த வருடத்தில் போட்டிருக்கிறார். இன்னும் அதிகமாக அனுப்பியிருந்தால் அவரும் பகிர்ந்திருப்பார். நாந்தான் அனுப்பவில்லை. நல்ல விமர்சனம் வேண்டுமெனில் எங்கள் பிளாக்கில் கதைகளைப் பகிரவேண்டும்.

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத்தொகை வந்ததான்னு கேட்கக்கூடாது... எழுத்து தனக்கான இடத்தைப் பிடித்ததேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்... அதைத்தான் நான் எப்பவும் செய்வேன்... இப்பவும் கூட.

கொலுசு மின்னிதழில் கவிதைகள் வெளிவந்தன. 

பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்றாலும் பிக்பாஸ் குறித்து எழுதிய பகிர்வுக்கு பிரதிலிபியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வருடம் அதிகம் வாசிக்கப்பட்டோர் வரிசையில் என்னையும் பிரதிலிபி சேர்த்திருக்கிறது. இல்ல முகவரி எல்லாம் வாங்கியிருக்கிறார்கள். புத்தாண்டு பரிசு அனுப்புவார்களாம்.

மின் கைத்தடி இணைய இதழில் முதல் சிறுகதை எழுதிய எழுத்தாளன் எனப் பெயர் பெற்றதுடன் தீபாவளிக்கு என் கதையை சிறப்புச் சிறுகதையாகப் பகிர்ந்து கொண்டார்கள். நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் 'இணை' எனக்கு மிகவும் பிடித்த கதையாய்... இதை எழுதிக் கொண்டிருக்கும்போது மின் கைத்தடிக்கென ஒரு புத்தாண்டு வாழ்த்து வீடியோ கேட்டு அதன் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் திரு. கமலக்கண்ணன் பேசினார். எழுத்து பல நண்பர்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

சிறுகதைகள்.காம் தளத்தில் என் கதைகள் பகிரப்பட்டன.

மனசுக்குப் பிடித்த புத்தகங்கள் வாசித்து அது குறித்து வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டேன். அதன் ஆசிரியர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டது மகிழ்வான நிகழ்வு. இதை எழுதும் போது காற்றுவெளியில் வந்த மரப்பாலம் கட்டுரையை வாசித்த திரு.கரன் கார்க்கி அவர்கள் கட்டுரை சிறப்பு , இந்தளவு மரப்பாலத்தை உள்வாங்கி எழுதியிருப்பது மகிழ்ச்சி என முகநூலில் தனிச்செய்தி அனுப்பியிருக்கிறார். இதைவிட வேறென்ன வேண்டும்..?

சென்ற ஆண்டைவிட இந்த வருடம் எழுதிய கதைகள் குறைவுதான் என்றாலும் எல்லாமே மனசுக்கு நிறைவாய்.

எழுத்தாளர் சுப்ரஜா தீபாவளியின் போது டிஜிட்டல் தீபாவளி மலர் கொண்டு வந்தார். அதற்கு கதை அனுப்பியபோது புத்தகம் தயாராகிக் கொண்டிருந்ததால் அதில் இடம்பெறவில்லை. இதோ இப்போது பொங்கல் டிஜிட்டல் மலரில் முத்திரைக் கதையாக வர இருக்கிறது.

அமேசானில் எனது 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவலை வெளியிட்டு வைத்திருக்கிறேன். அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்பதை அறியும் ஆவலுடன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரபு மற்றும் நெருடாவின் முயற்சியால் சகோதரர் தசரதன் கதைகளை வாங்கிப் படித்து அதில் அவருக்குப் பிடித்த 12 கதைகளைத் தேர்வு செய்து 'எதிர்சேவை' என்னும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். என் எண்ணப்படி எழுத்து தனக்கான இடத்தைப் பணம் கொடுத்துப் பிடிக்காமல் இத்தனை விரைவாய் ஒரு புத்தகம் வருமென நினைக்கவேயில்லை. இறைவன் நாடினால் எதுவும் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றாலும் மேலே சொன்ன மூன்று சகோதரர்களும் நன்றிக்குரியவர்கள்.

இப்படி எழுத்து என்னை மெல்ல மேல் நோக்கிக் கொண்டு சென்று கொண்டுதான் இருக்கிறது என்றாலும் இது மட்டுமே வாழ்க்கை அல்லவே. வாழ்க்கையோ 'நாளை என்ன செய்யப் போகிறாய்..?' என்ற கேள்வியுடந்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

2020-ல் சிம்ம ராசிக்கு செல்வாக்குத்தான் என ராசிபலன் சொன்னாலும் இன்றைய நிலையில் இருக்கும் பிச்சைக்காரன் நிலமை உடனே எப்படி கோடீஸ்வரனாகும்..? கடினமான பாதையில்தான் இதுவரை நடந்து வந்திருக்கிறேன். இனிமேலேனும் கற்களும் முற்களுமில்லாத பாதையாக அமைந்தால் நலம்.

வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பேன் என்பதில் மட்டும் எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. வலிகளும் வேதனையும் என்றாவது மாறாதா என்ன..?

2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...

Image result for 2020

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : நிறைவான சந்திப்புசி
ல சந்திப்புக்கள் எதிர்பாராதவை... கிட்டத்தட்ட் 8 ஆண்டுகள் இணைய வழி மட்டுமே தொடர்பில் இருந்தோம்...

யார்..? 

எப்படி..? 

கறுப்பா... சிகப்பா..? 

நெட்டையா... குட்டையா..? என்பதெல்லாம் இருபக்கமும் அறிந்திருக்கவில்லை... அறிந்து கொள்ளவும் விரும்பியதில்லை. பெரும்பாலும் நட்பு மரியாதையான பேச்சுக்கு வழி வகுக்காது என்பதால் சார்... மோரெல்லாம் இல்லாமல் என்ன தலைவரே என்பதாய்த்தான் இருந்தது. அன்று முதல் இன்று வரை நட்பு மட்டும் கூடுதல் அன்போடு பயணித்தது.

படித்த புத்தகங்கள் குறித்த கருத்துக்கள் இரண்டு பக்கமும் அடிக்கடி பயணிக்கும். நிறைய புத்தகங்கள் பிடிஎப்பாய் அனுப்புவார். அதை வாசிங்க... இதை வாசிங்க என்பார்... நிறைய ஆங்கிலப்படங்களின் பெயர்களைச் சொல்லி பார்க்கச் சொல்வார். தினமும் காலையில் குட்மார்னிங் என எதாவது ஒரு படம் இங்கிட்டும் அங்கிட்டுமாய் இணைய வழி பறக்கும்... அது போதும் அன்றைய நாளுக்கு... சில நாள் எதாவது பேசி அனுப்பிக் கொள்வோம்... இப்படித்தான் நகர்ந்தது.

சந்திக்கும் வாய்ப்பு வருமா.. வராதா தெரியாது... இவரைப் பற்றி நிஷாந்தி அக்கா பெருமையாகச் சொல்வார்கள்... அவரிடமும் இதே எட்டாண்டு கால இணைய நட்புத்தான்... இப்படி பலரிடம் தொடரும் நட்பு இணைய வழிதான்... நீ அவரைப் பார்க்கணும் என்று அக்கா சொல்லும் போதெல்லாம் இரு வேறு நாடுகளில் இருப்பவர்கள் சந்திப்பது எப்படி என்றே தோன்றும். சிங்கப்பூரில் இருக்கும் அண்ணனும் தம்பியும் கூட நான் ஊருக்குப் போகும் போது வருவதில்லை... நாங்களே எப்போதேனும் சந்திக்கும் வாய்ப்பு அரிதாக அமையும் போது இவரை சந்திப்பதென்பது நிகழுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

துபை வருகிறேன் என்று சொன்னதும் எப்படியும் பார்த்து விடலாம் என்ற எண்ணம் மனசுக்குள் எழ, சற்றே மகிழ்வும் எட்டிப் பார்த்தது. ஊரில் இருந்து கடலை மிட்டாயெல்லாம் வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு வாரமாக அடுத்த வாரம் சந்திப்போம் எனப் பேசும் போதும் என்ன செய்கிறோம் ஏது  செய்கிறோம் என இருவருக்கும் கேட்டுக் கொள்ளத் தோன்றவில்லை... ஏதோ பல முறை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பேசி மகிழ்ந்தது போல ஒரு நெருக்கம் மட்டும் மனசுக்குள் இருந்தது.

வியாழன் இரவு அபுதாபிக்கு அன்போடும் கடலை மிட்டாயோடும் வந்தார். டாக்ஸிக்குள் இருந்தே மகிழ்வோடு கையசைத்தார். இறங்கியதும் கட்டி அணைத்துக் கொண்டார்.

இரவு அதிகம் பேச முடியவில்லை... காலையில் கடற்கரை ஓரத்தில் போய் அமர்ந்து நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் பேசினோம்... நிறைவாய்.

ஒவ்வொருவரின் வேதனையும் வலியும் அவர்கள் சொல்லாத வரை தெரிவதில்லைதானே... புன்னகைக்கும் உதடுக்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கலாம்... அதை எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றாது அல்லவா..? அவர் சொன்னார்... நானும் சொன்னேன்... கடல் அமைதியாய் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

என்னை எப்போது நட்புத்தான் நகர்த்திச் செல்லும்... அது அப்போதும் இப்போதும் அப்படியே... அப்படியானதொரு நட்பு இது... இன்றைய தினம் மகிழ்வான தினம்... பெரிதாய் ஒன்றும் செய்துவிடவில்லை... பெரிதாய் ஒன்று சமைத்து விடவில்லை... ஆனால் மன நிறைவாய் நிறையப் பேசினோம்...

நிறைய நண்பர்கள் இருந்தாலும் முதலில் பார்க்க நினைத்தது உன்னைத்தான் என்ற அன்புக்கு என்ன சொல்வது..?

இனித் தொடரும் சந்திப்புக்கு இது முன்னோடி...

ஆம் நண்பர்... சகோதரர் சுரேஷ் சக்தி என்னைத் தேடி வந்தார்... அன்பின் கரங்களோடு அணைத்துக் கொள்ள...

அன்பு ஒன்றுதான் எப்பவும் அணைத்துக் கொள்கிறது.

நன்றி நண்பா.

******************************
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை
எதிர்சேவை புத்தகம் வாங்க விரும்பினால்...
திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com


விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)
புத்தக விலையில் 10% கழிவு சென்னை புத்தகக் கண்காட்சி முடியும் வரை கொடுக்கப்படும்.
-'பரிவை' சே.குமார் 

வியாழன், 26 டிசம்பர், 2019

எதிர்சேவை - கதைகள் ஒரு பார்வை


னது முதல் சிறுகதைத் தொகுப்பான எதிர்சேவையில் இருக்கும் 12 கதைகளும் நீங்க மனசு வலைத்தளத்தில் வாசித்ததாய்த்தான் இருக்கும். நான் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் அவர்களுக்கு அனுப்பிய 32 கதைகளில் நிறைய இங்கு பகிராத கதைகள் இருந்தன என்றாலும் முதல் தொகுப்பில் வரும் வாய்ப்பைப் பெற்ற 12 கதைகளும் இங்கு பகிரப்பட்டவைதான்.

பரிசு பெற்ற கதைகள், மின்னூலில் வந்த கதைகள் என எல்லாமாய் கலந்துதான் எடுத்திருக்கிறார் சகோதரர் தசரதன். கதைகளுக்கு ஒரு முன்னோட்டம் கொடுத்தால் என்ன எனத் தோன்றியதாலேயே இங்கு கதைகள் குறித்து எழுதுகிறேன்... என் கதைகளை பற்றிய சுய அறிமுகமே தவிர... அவை ஆஹா ஓஹோ என்றெல்லாம் சொல்வதற்காக அல்ல  என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

என் கதைகளை 'மனசு' வலைப்பூவிலும் மின்னிதழ்களிலும் வாசித்தவர்களுக்கே அது தேறுமா தேறாதா என்பது தெரியும் என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும். 

கதைகளை வாசிக்கும் போது அவை உங்களை ஈர்த்தால் என் எழுத்திற்கான வெற்றி... என்னடா கதை இது..? இதெல்லாம் ஒரு கதையா..? என நினைக்க வைத்தால், அதன்பின் தோன்றும் உங்கள் கருத்தை என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள் அது என் எழுத்தை இன்னும் கூர் தீட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

முதல் சிறுகதைத் தொகுப்பு என்றாலும் அபுதாபி வந்த பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக  எழுதிய கதைகள்தான் இவை. அதற்கு முன் கல்லூரியில் படிக்கும் போதிருந்து எழுதி பத்திரிக்கைகளில் வந்தவை வீட்டில் இருக்கின்றன. அவற்றை இன்னும் கணிப்பொறியில் ஏற்றவில்லை. அக்கதைகளுக்கும் இங்கு வந்த பின் எழுதிய கதைகளுக்கும் இடையே நிறைய மாற்றம் இருக்கும்.

1. நினைவின் ஆணிவேர் - வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. எழுத்தாளர் வாமு கோமு அவர்கள் அம்மாவும் பெண்ணும் சந்தித்தபின் நிகழ்வது ஒரு குறும்படம் போலிருக்கும் என்று சொல்லியிருந்தார். அந்தப் பகுதி உங்களையும் கவரலாம்.

2. தீபாவளிக் கனவு - தீபாவளி குறித்த ஒரு சிறுமியின் எண்ண ஓட்டமே கதையாய்... இறுதியில் அம்மாவுடன் பேசுவது மட்டுமே உரையாடலாய்... இது சில வருடம் முன்னர் தீபாவளிக்கு எழுதிய கதை... சென்ற தீபாவளிக்குத் தேன்சிட்டு மின்னிதழில் வெளியாகியது.

3. எதிர்சேவை - இரண்டு வருடம் முன்பு சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் அன்று எழுதியது... குடும்பக் கதைக்குள் சின்னதாய் ஒரு காதல்... அந்தக் காதல்தான் எல்லாராலும் பேசப்பட்டது. பலருக்குப் பிடித்தும் இருந்தது எனவே புத்தகத்தின் தலைப்பாகவும் அமைந்துவிட்டது.

4. வீராப்பு - ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று வாசித்தவர்கள் எல்லாருடைய பாராட்டையும் பெற்ற கதை... வெட்டி வீராப்பைத் தூக்கிச் சுமக்கும் ஒரு மனிதனின் கதை... முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதிப் பார்த்த பல கதைகளில் இதுவும் ஒன்று. இதே ரகத்தில் எழுதிய கதைகளில் எனக்கு காற்றுவெளியில் இருமுறை வெளியிடப்பட்ட 'நெஞ்சக்கரை'யை சொல்வேன். ஏனோ அது இத்தொகுப்பில் தனக்கான இடத்தைப் பெறவில்லை. ஒருவேளை அடுத்த சிறுகதைத் தொகுப்பு வரும் பட்சத்தில் அதில் இடம் பிடிக்கலாம்.

5. என்னுயிர் நீதானே - முத்துக்கமலத்தில் வெளியான கதை இது. கிராமத்து மனிதர்களிடமிருந்து அவ்வப்போது விலகி கதை எழுதிப் பார்ப்பதும் உண்டு. அப்படி எழுதிய கதைதான் இது... போதையின் வேகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் மார்பில் கை வைத்துவிடுவான்... இதைப் படித்த சகோதரர் நௌஷாத்கான், அந்த ஒரு இடத்துக்காக 'என்னண்ணா நீங்களா இப்படி எழுதுனீங்க..?'ன்னு கேட்டார் என்றாலும் எல்லை மீறாத கதைதான் இது. எல்லை மீறிய சில கதைகள் உண்டு... 'செண்பா'வெல்லாம் அந்த வகைதான்... எழுதிச் சேமிப்பில் இருக்கிறது எங்கும் பகிராமல்... ஏதாவது புத்தகத்துக்கு அனுப்பலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. கறுப்பி நாவல் முழுக்க முழுக்க செண்பா வகைதான். கறுப்பியைப் பலரைப் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன்... எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆர்.வி.சரவணன் அண்ணன் மட்டும் 'உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு நாவலா..? அந்தப் பெண் இவ்வளவு வல்கராப் பேசுறா..?' என்றார். கொஞ்சம் உண்மை கலந்த நாவல் அது... அப்படித்தான் எழுத முடியும் என்றேன்... ஏற்றுக் கொண்டார். 

6. மனத்தேடல் - இது காற்றுவெளியில் வந்த கதை. கல்லூரிக் காதல்... முறிந்த பின்னான வாழ்க்கையில் இருவரும் நாற்பதுக்கு மேல் மீண்டும் சந்தித்தால்... அதுதான் கதைக்களம். உதிராத நேசமென இதே கதையை வேறு கோணத்தில் எழுதிய போது பல நண்பர்கள் இருவரும் சந்திருந்தால் நன்றாக இருக்குமே... இதில் சந்தித்தார்களா இல்லையான்னு எங்களை யோசிக்க வச்சிட்டீங்களேன்னு சொன்னாங்க.. ஆர்.வி.சரவணன் அண்ணன் மட்டுமே அந்தக் கதை ரொம்பப் பிடித்ததாகச் சொன்னார். இந்த மனத்தேடல் எல்லாருடைய மனசுக்குள்ளும் இருக்கும் காதலை ஒரு நொடி வெளியே கொண்டு வந்து இப்போ அவர்/அவள் எப்படியிருப்பார் என்று யோசிக்க வைக்கும்... அப்படி வைத்தால் அதுதான் இக்கதையின் வெற்றி... ஒவ்வொரு முறை வாசிக்கும் போது என்னை ஏதோ செய்யும் கதை இது.

7. குலசாமி - தகப்பனைக் குலசாமியாக மனதுக்குள் வைத்திருக்கும் பெண்ணின் மனவோட்டத்தைச் சொல்லும் கதை. தன் தகப்பன் பற்றி, அவருக்கும் தனக்குமான இடைவெளி பற்றியெல்லாம் பேசும் கதை... வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.

8. வெள்ளாடும் செம்மறியாடும் - தினமணியில் வந்த கதை... ஊர் ஊராய் ஆட்டுக்கெடை போடுபவர்களின் கதை... ஊரில் ஆட்டுக்கெடை போட வர்றவங்க.... மைக்செட் கட்ட வர்றவங்க... என சில நாள் ஊரில் தங்குபவர்கள் அங்கிருக்கும் பெண்களுடன் காதலில் விழுவார்கள்... இங்கே ஆட்டுக்காரப் பெண்ணுடன் உள்ளூர்க்காரன் காதல் விழும் கதை... வேறு மாதிரி எழுத நினைத்து இப்படியாய் முடிந்தது.

9. நேசத்தின் ராகம் - ஒரு பேராசிரியருக்கும் அவரின் மாணவிக்குமான மானசீக நட்பைச் சொல்லும் கதை இது. அவர் அவளை எந்த இடத்தில் வைத்திருந்தார்... அவள் அவருக்கு என்ன உறவு முறை கொடுத்திருந்தாள் என்பதை மட்டுமே பேசும்... இப்படி ஒரு ஈர்ப்பை, அன்பை, நட்பை நாம் பார்க்கும் விதம் வேறுதானே... கொச்சையான இடத்தில்தானே இதை இறுத்திப் பார்ப்போம்... கதையின் முடிவில் அது தவறென்பது புரியும்.

10. விரிவோடிய வாழ்க்கை - அகலில் எம்.பிக்களுக்கு அரசு செய்யும் வெட்டிச் செலவு மற்றும் விவசாயத்தை மையப்படுத்தி வைக்கப்பட்ட போட்டிக்கு எழுதிய கதை. எப்பவுமே படத்துக்கோ அல்லது ஒரு தலைப்புக்கோ எழுதுதல் என்பது எனக்கு எப்பவும் சரிவராது என்றாலும் அவ்வப்போது இது மாதிரியான போட்டிகளுக்கு முயற்சிப்பதுண்டு. அப்படி முயற்சித்ததில் இரண்டு புத்தகங்களைப் பரிசாகப் பெற்றது. 

11. ஜீவநதி - இதுவும் தீபாவளிக்காக எழுதிய கதைதான்... அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் கதை. இந்தக் கதையை ஆர்.வி.சரவணன் அண்ணன் திரைக்கதையாக எழுதி தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். நானும் பகிர்ந்து கொண்டேன். இந்த வருட தீபாவளிக்கு கைத்தடி மின்னிதழில் சிறப்புக்கதையாக வெளிவந்தது.

12. அப்பாவின் நாற்காலி - அப்பாவைச் சுமந்த நாற்காலி அவர் இறந்த பின் என்ன ஆனது என்பதைச் சொல்லும் கதையில் நாற்காலியோடு பிணைந்த அப்பா பற்றிய நினைவுகளே அதிகமிருக்கும். எழுதாளர் ஆபிதீன் ஐயா அவர்கள் தனது ஆபிதீன் பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். ரொம்பப் பிடித்த கதை என்றும் சொல்லியிருந்தார். 

இந்த 12 கதைகள்தான் புத்தகத்தில் இருக்கின்றன. கதைகளை உங்களிடம் கொடுத்து விட்டேன்... புத்தகத்தைப் படித்து உங்களின் கருத்துக்களை எனக்குத் தாருங்கள். என்னென்ன தவறு இருக்கு... இன்னும் எப்படி சிறப்பாக எழுதியிருக்கலாம் என்பதையெல்லாம் சொல்லுங்கள்... அதுதான் எனக்கு வேணும்... புகழாரம் வேண்டியதில்லை... அடித்து ஆடத் தயாராகுங்கள்... குனிந்து ஏற்றுக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து எனது புத்தகத்தை வாசிக்கும் முதல் வாசகி என் அன்புச் சகோதரர் இராஜாராமின் மகள்தான் என்று நினைக்கிறேன். பேரன்பும் பெருமகிழ்வும் மகளே... இந்தப் படம் வருடங்கள் கடந்தாலும் என்னுடன் இருக்கும். சகோதரர் தசரதனுடன் பேசி, புத்தகத்தை உடனே வாங்கிய தங்கள் அன்புக்கு நன்றி இராஜாராம்.


புத்தகம் வாங்கிப் படிக்க நினைத்தால்.... 

திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com
விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)

விலையில் 10% கழிவு வழங்கப்படும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
------------------------------

இனி....

அமேசானில் இன்று முதல் 31ம் தேதி வரை நம் ஜோதிஜி அண்ணாவின் '5 முதலாளிகளின் கதை' இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். முடிந்தவர்கள் தரவிறக்கி, வாசித்து உங்கள் கருத்தை அண்ணனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் அங்கு ஸ்டாரும் கருத்தும் கொடுங்க.


தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்.


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : 'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பு


டந்த சில ஆண்டுகளாக சின்னச் சின்ன சூறாவளியைக் கடந்து வந்து கொண்டிருப்பவனை இந்த ஆண்டு ஆரம்பம் முதல் அடித்துத் துவைக்க ஆரம்பித்தது. தீராப் பிரச்சினைகளின் பின்னே தீர்வில்லாமல் எல்லாப் பக்கமும் நகர்ந்து, எழ முடியாத நிலைக்குத் தள்ளிக் கொண்டு போனது. வெளிநாட்டில் இருக்கும் பிச்சைக்காரன் என்ற நிலையில்தான் இன்றுவரை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையிலும்  ஏதோ ஒரு வகையில் உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையிலேயே நகர்கிறது வாழ்க்கை, வட்டி கட்ட முடியாத சூழலில்தான் இந்த நாள் வரை தினமும் விடிந்து கொண்டிருக்கிறது. வருத்தங்களும் வலிகளுமே வசதியாய் அமர்ந்திருக்கின்றன... வாழ்க்கை வசந்தமாகும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் மனசுக்குள் வலுவிழக்காமல்.

'இது என்ன வாழ்க்கை..?' என்ற புலம்பலுடனேயே நகரும் நாட்களில் எழுத்தும் வாசிப்பும் மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது... கூடவே ஊருக்குப் பேசுதலும்... மகனின் சேட்டைகளும். இவை இல்லையென்றால் என்ன ஆகியிருக்குமோ தெரியாது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன், நீ கதை எழுது... உனக்கு எழுத வரும் எனப் போட்ட விதைதான் எழுத வைத்தது. அங்கு தொடங்கியது அவ்வப்போது காணாமல் போய் மீண்டும் எதாவது ஒரு இடத்தில் முளைக்கும். இப்படியாகத்தான் இதுவரை நகர்ந்து வந்திருக்கிறது என்றாலும் எழுத்து நீர்த்துப் போகவில்லை... அது மெல்ல மெல்ல உருமாறி... உருமாறி... எளிய மனிதர்களைப் பற்றிய களத்தில் வந்து நிற்கிறது. இதுதான் நம் இடம் என்பதாய் அந்த வாழ்க்கைகளை மட்டுமே கதைகளாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் மகிழ்வை வலிந்து திணிப்பதில்லை... வாழ்க்கைக்கு ஜிகினா பூசுவதில்லை... எதார்த்தத்தை எதார்த்தமாய் எழதப் பழகி வருகிறேன். ஆஹா ஒஹோ என்றெல்லாம் எழுதவில்லை என்றாலும் என் கதைகள் வாசிப்பவரை ஏதோ ஒரு விதத்தில் கண்டிப்பாக ஈர்க்கும்... முடிவு ஒரு சிலரையேனும் வருந்தவோ அழவோ  வைக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும்.

என் வலைப்பூவில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக எழுதி வருகிறேன்... இங்கே 126 கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் பரிசு பெற்ற, மின்னிதழ்களில் வந்த கதைகள்தான் அதிகம் இருக்கும். இப்போதெல்லாம் சில காரணங்களால் எழுதிய எல்லாக் கதைகளையும் இங்கு பகிர்வதில்லை.

மேலும் புத்தகமாக்கும் சூழலை எப்போதும் உருவாக்கிக் கொள்ள நினைத்ததில்லை... பணம் கொடுத்துப் போட வேண்டிய அவசியமும் இல்லை... நண்பர்கள் பணம் கொடுத்துப் போடுவதைப் பார்க்கும் போது அவ்வளவு பணம் கொடுத்து யாருக்காகப் போடவேண்டும் என்ற எண்ணமே மனதுக்குள் எப்போதும் தோன்றும் கேள்வியாய்... கதைகள் அதற்கான இடத்தை அடைய முடிந்தால் அடையட்டும்... பணம் கொடுத்துப் போட்டு வாங்கி பரணில் போட்டு வைக்கும் அளவுக்குப் பொருளாதாரமும் இல்லை... எண்ணமும் இல்லை. மேலே சொன்ன நிலையில் இருந்து மீள்தல்தான் இப்போதைய சிந்தனையெ ஒழிய, வேறொன்றும் எனக்குள் இல்லை. எல்லாவற்றிலும் இருந்து வெளிவர வேண்டும்... மனநிறைவான வாழ்க்கை போதும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு எழுத்தாளர் திரு. காவிரிமைந்தன் அவர்கள் மூலமாக பத்தொன்பது புத்தகங்கள் கொண்டு வரும் முயற்சி நடந்தது. எழுத்தாளர் ஆசிப் மீரான் அண்ணா தம்பி உன் கதைகளைப் புத்தகமாக்க வேண்டுமென சொல்லிக் கொண்டேயிருப்பார். அவர் பத்தொன்பதில் ஒன்றாக்கி விடலாம் என முயற்சித்தார். இருபது கதைகள் கொடுத்தோம்... இந்தா வரும்... அந்தா வரும்... எனக் காத்திருக்க, ஏதோ காரணத்தால் அது முன்னெடுத்த வேகத்தில் பின் தள்ளப்பட்டுவிட்டது. பத்தொன்பது என்பது பறந்து போனது. ஒரு சில புத்தகங்கள் தனித்து வந்தன. ஏமாற்றத்தில் என்னைவிட வருந்தியவர் ஆசிப் அண்ணன்தான். 

எப்பவுமே... எதிலுமே தடங்கள் என்பது நமக்குப் பழக்கப்பட்டதுதான் என்பதால் அதைச் சுலபமாகக் கடந்து வந்துவிட்டேன். அதற்காக யாரிடமும் புலம்பவில்லை... போச்சே என்று வருந்தவில்லை... எப்போது வரவேண்டும் என்று இருக்கிறதோ அப்போது கண்டிப்பாக வரும்... அதுவரைக்கும் நாம் நாமாக நகர்வோ என்பதுதான் என் எண்ணம். அப்படியே வந்தாலும் அல்லது வரலாமலேயே போனாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை... என் நிலை அப்படியேதான் நகரும். 

மேலும் இங்கே மிகச் சிறப்பாக எழுதும் எத்தனையோ பேர் வலைப் பக்கங்களிலும் முகநூலிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கு முன் நானெல்லாம் ஒரு பெரிய எழுத்தாளான் ஒன்றுமில்லை... அவர்கள் எல்லாரும் புத்தகம் போட்டுவிடுவதில்லை... எழுத்தின் மீதான காதலில் எழுதுகிறார்கள்... அப்படியே நாமும் இருந்துவிட்டுப் போவோம் என்ற எண்ணம்தான் எனக்குள்ளும். என் கதைகள் எனக்கான இடத்தை என்னிடம் கதை கேட்டு வாங்கிப் போடும் வலை நண்பர்களிடம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதைவிட வேறென்ன வேணும்..?

ஆசிப் அண்ணனின் முயற்சி வெற்றி பெறாததில் அவருக்கு மிகுந்த வருத்தம் என்று சொன்னேனல்லவா... இப்படி ஆகிப் போச்சே எனப் பலமுறை வருந்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அண்ணா... விடுங்க... எப்ப நடக்கணுமோ அப்ப நடக்கட்டும் என்றே கடந்து வந்தேன். அதன் பின் சகோதரர் நெருடா கூட பணம் நான் போடுகிறேன் என ஆசிப் அண்ணனிடம் பேசியிருக்கிறார். இது எனக்குப் பின்னர்தான் தெரியும். 

இப்படித்தான் சில வருடங்கள் முன்பு 'கலையாத கனவுகள்' நாவலை நான் பணம் போட்டு புத்தகம் ஆக்குகிறேன் என நின்றார் நிஷாந்தினி பிரபாகரன் அக்கா. அப்போது பின்னர் பார்க்கலாம் என மறுத்தேன். விடாமல் மல்லுக்கு நின்றார் அக்கா. தள்ளிப்போவது நமக்கு வாடிக்கை என்பதால் அந்தச் சூழலில் தள்ளிப் போட்டேன்... என்னால் அவர் ஏன் நஷ்டப்பட வேண்டும். இதேபோல் பல நண்பர்கள் முன்னெடுக்க முன்வந்தார்கள். எல்லாரிடமும் சின்னச் சிரிப்போடு மறுத்துவிட்டேன். 

பின்னர் ஒரு முறை சகோதரர் பிரபு கங்காதரன்  போனில் பேசும் போது தல நாம புக் கொண்டு வர்றோம் எனச் சொல்லி, அவரின் நண்பரான கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் அவர்களிடம் பேசி கதை அனுப்பச் சொல்லி, அவருக்கு கதைகள் பிடித்ததால் அடுத்தடுத்த வேலைகள் விரைவாய் நடந்தேறி நேற்று புத்தகமும் தயாராகிவிட்டது. இது எதிர்பாராதது... இப்படி நிகழுமா என்ற ஆச்சர்யமே என்னிடத்தில் தொக்கி நிற்கிறது. 

ஆரம்பத் தடங்கலுக்குப் பின் நிகழ்ந்த அதிரடி நிகழ்வு இது... ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வர நினைத்து முடியாமல் போனது அடுத்த சில மாதத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து நிற்கிறது. இதற்கு முழுக்காரணம் சகோதரர்கள் பிரபுவும் நெருடாவும்தான்... அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. இதில் நான் எதையும் நகர்த்திவிடவில்லை... கதைகள் அனுப்பியதைத் தவிர. இருவருக்கும் நன்றி எனச் சொல்லி தள்ளி வைக்க மனமில்லை... இந்த உறவு இறுதிவரை நீடிக்கட்டும்... அது போதும்...   

எங்கள் குல தெய்வம் கள்ளழகர்... அவரின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'எதிர்சேவை' புத்தகத் தலைப்பாய்... அட்டையில் அழகர் கோவிலும் கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமுமாய்... அமைந்ததெல்லாம் எதார்த்தமான நிகழ்வுதான்... யோசித்த மூன்று தலைப்பில் இது நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்ததால் தேர்ந்தெடுத்தோம். அட்டைப்படம் முழுக்க முழுக்க கலக்கல் ட்ரீம்ஸின் எண்ணம்தான்... முதல் முறை அட்டைப் படத்தைச் சகோதரர் தசரதன் அனுப்பிய போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... ஆம் அழகனின் தரிசனம்... இந்தத் தரிசனத்தைக் காண மதுரை வீதிகளில் கூட்டத்துக்குள் அலைந்தவன் என்பதால் அந்தப் பரவசம் எனக்குத் தெரிந்தது. ஆம் என் முதல் புத்தக அட்டையில் கள்ளழகர்... வேறென்ன வேண்டும்.

சகோதரர் தசரதன் பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும்... எந்த எதிர்பார்ப்புமின்றி கதை பிடித்துப் போனதால் புத்தகம் ஆக்கியிருக்கிறார். புத்தகங்கள் விற்பனையைப் பொறுத்து அவர் என் மீது கொண்ட நம்பிக்கை இன்னும் இறுக்கமாகும் என்று நம்புகிறேன்.

எத்தனை முறை மாற்றங்கள்... பிழை திருத்தங்கள்... அமீரகத்தில் இருந்து இரவு 12 மணிக்கு (ஊரில் 1.30) ஒரு மாறுதல் சொன்னால் காலை 5.30 மணிக்கு எழும்போது இப்ப சரியா இருக்கான்னு பாருங்க சகோ என வாட்ஸப்பில் அனுப்பி வைத்திருப்பார். புத்தகம் ரெடி... அடுத்து நாவல் பண்றோம்... ரெடியாகுங்க... என்றார் போனில் பேசும்போது...  எங்கிட்ட நிறைய கைவசம் இருக்கு என்றதும் புத்தகக் கண்காட்சி முடிந்ததும் கொடுங்க வாசிக்கிறேன்... புத்தகமாக்கிடலாம் என்று சொல்லியிருக்கிறார். நல்ல எழுத்துக்களை நேசிப்பவர்கள் எப்போதும் நம்மோடு இருத்தல் நலம். இறுக்கிப் பிடித்துக் கொள்வேன் அவரையும் அவர் கரங்களையும்.

கதைகள் எப்படியிருக்கு என நண்பர்களிடம் அறிய பிடிஎப் ஆக மாற்றி, நான் கொடுத்த 50 கதைகளையும் வாசித்து தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் முதல் என் எழுத்தின் வளர்ச்சியில் மகிழ்ந்து இன்னும் சிறப்பாய் எழுது என உற்சாக மூட்டிக் கொண்டிருக்கும் வலைத்தள நட்புக்கள் வரை எல்லாருக்கும் தனித்தனியாய் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது மொத்தமாய் எல்லாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். பின்னொரு நாளில் தனித்தனியாய்.

எப்போதும் என் வாழ்க்கை நண்பர்களாலேயே சிறக்கிறது... அது இப்போதும்... 

புத்தகம் தயாராகிவிட்டது... வாங்கிப் படித்து உங்க கருத்தைச் சொல்லுங்க...  எழுதும் வரை தான் கதைகள் என்னுடையது... இப்போது புத்தக வடிவில் அது உங்களிடம் எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள்... திருத்திக் கொள்கிறேன். உங்கள் விமர்சனமே என் எழுத்துக்கான உரமாய் அமையும்.

வாழ்வில் கடந்து சென்ற வருடங்களில் அடையாத மோசமான நிலையைக் கொடுத்தது 2019.... வாழ்வில் மறக்க முடியாத வருடம் இது. வருடத்தின் கடைசியில் கொஞ்சமாய் சாரல் மழை பெய்து செல்ல ஆரம்பிக்கிறது... ஆம் சிறுகதைத் தொகுப்பு, சென்ற ஆண்டு கணேஷ்பாலா அண்ணன் நடத்திய படத்துக்குக் கதையெழுதும் போட்டிக்கு வந்த கதைகளின் தொகுப்பாய் வெளிவந்திருக்கும் 'பூக்கூடை'யில் என் கதையும் (பரிசு பெற்றது) இருக்கிறது. வாதினி வெளியிடும் டிஜிட்டல் பொங்கல் மலரில் முத்திரைக் கதையாய் என் கதை வர இருக்கிறது. அகல் பொங்கல் மலருக்கு கதைதான் வேண்டுமெனக் கேட்டு வாங்கியிருக்கும் நண்பர் சத்யாவென அடுத்த வருடத்தின் ஆரம்பம் மகிழ்வாய் இருக்கிறது... அந்த மகிழ்வோடு  வரும் வருடமேனும் நிம்மதியானதாய் அமையட்டும்.

புத்தகம் வாங்குவது குறித்த விபரங்களுக்கு...

திரு. தசரதன்.
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
சென்னை.
00919840967484
kalakkaldreams@gmail.com
விலை : ரூ.100 (தபால் / கூரியர் செலவு தனி)

விலையில் எதுவும் சலுகை உண்டா, வங்கிக் கணக்கு விபரம் உள்பட மற்ற விபரங்களைச் சகோதரர் தசரதனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : நான்காம் சுவர்

Image result for நான்காம் சுவர்
நான்காம் சுவர்...

ஆகஸ்ட் 2018 முதல் மே 2019 வரை ஆனந்த விகடனில் தொடராக வந்து ஜூலையில் யாவரும் பதிப்பகத்தால் புத்தமாகியிருக்கிறது.

நாம் எட்டி நின்றே பார்த்துக் கொண்டிருக்கும் விளிம்புநிலை மனிதர்களைப் பக்கத்தில் இருத்திப் பார்த்து... அவர்களின் வாழ்வை ரசித்து... அவர்கள் கொடுப்பதையும் சாப்பிட்டு... அவர்களின் சுக துக்கங்கங்களைத் தன்னுள் சுமந்து வலியும் நேசமும் நிறைந்த எழுத்தாய் இறக்கி வைத்திருக்கிறார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர்.

இது கதையா..? கட்டுரையா..? என யோசிக்கும் முன் இதில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நமக்கு இது வாழ்க்கைக் கதை... வாழ்ந்த கதை... வாழும் கதை என்பதை நம் பொட்டில் அடித்துச் சொல்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நாம் பார்த்து ஒதுங்கி நகர்ந்து சென்ற பலரின் வாழ்க்கையை நமக்குள் துளிர்த்தெழச் செய்கிறது.

புத்தகத்தின் ஆரம்பமே பிணப் பரிசோதனை செய்யும் ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் 'திருப்பால்' என்னும் வாழ்க்கைக் கதை. வாசிக்க வாசிக்க நம் மனதை ஏதோ செய்கிறது. இந்த வேலை என்னோடு போகட்டும் என் மகன் இந்த வேலைக்கு வரக்கூடாது என்ற அவரின் எண்ணம் எண்ணமாகவே அவருடனே மறைந்து போகிறது. ஆம் அவரின் மகனும் கத்தியெடுக்கிறான். இது வழிவழியாய் தொடரும் வாழ்க்கை என்பதை மட்டும் சொல்வதாக திருப்பால் முடிந்து விடவில்லை. அந்த மனிதனின் மனசுக்குள் இருக்கும் மனிதநேயத்தை, இறந்து போன குழந்தைக்கு அவர் கொடுக்கும் மானசீக அன்பைப் பற்றிப் பேசுகிறது... அதைத்தான் அதிகம் பேசுகிறது. திருப்பாலைப் போல எத்தனையோ பேர் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் பிணவறைக்குள் நுழைய யோசிப்பதுடன் அந்த மனிதர்களையும் பிணங்களாகப் பார்க்கக் கற்று வைத்திருக்கிறோம். அவர்கள் மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மயில்வாகணன் என்னும் பிச்சையெடுக்கும் மனிதரின் வாழ்க்கையை மட்டுமின்றி அவரோடு வாழும் மற்றொரு பெண் பற்றியும் பேசுகிறது மைலோ. நாளெல்லாம் பிச்சையெடுத்து மனம் முழுவதும் வலியையும் வேதனையையும் சுமந்து வரும் பெண்ணுக்கு இரவில் ஒரு அன்பான அணைப்புத் தேவைப்படுகிறது... அது காமத்துக்கான வடிகால் என தவறாக நினைக்க வேண்டாம்... இங்கே ஒற்றை அணைப்புக் கொடுக்கிறது ஓராயிரம் சந்தோஷத்தை... அந்த அணைப்பில் அவளின் வலியும் வேதனையும் கண்டிப்பாகக் கரைந்து போய் விடியலில் மலர்ச்சியோடு எழுவாள் என்பதுதான் உண்மை. எப்பவும் தான் படுக்கும் இடத்தில் எவனோ ஒருவன் படுத்திருக்கும் போது அவளின் மனம் படும் பாட்டையும் அது வார்த்தையாய் வந்து விழும் போது எவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்பதையும் ரொம்ப அழகாகச் சொல்லிச் செல்கிறது மைலோ.

உலகுக்குக் கலையைக் கற்றுக் கொடுத்த தொம்பரக் கூத்தாடிப் பரம்பரையில் வந்த பாபுஜீயின் வாழ்க்கையை, அந்தப் பெண்களை நாம் பார்க்கும் பார்வை, படிக்க ஆசைப்படும் அவர்களின் குழந்தை சோனா என ஒரு கூத்தாடியின் வாழ்க்கையைச் சொல்கிறது தொம்பரக் கூத்தாடி. அதில் பாக்கியம் சங்கர், கவிஞர் வெயிலின் கவிதையை இறுதியாகக் கொடுத்திருக்கிறார். அந்தக் கவிதை மனதை ஏதோ செய்கிறது. அதிலிருந்து மீண்டு வருதல் என்பது முடியாததாகவே இருக்கிறது. இன்னும் இம்சிக்கிறது அந்தக் கவிதை... வரிகளில் வலியைக் கடத்த முடியும் என்பதைக் காட்டிய கவிதை அது. 'சோனாவைப் பார்த்தேன்... சோனா சிரித்தாள். என் பிள்ளை என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் போலவே இருந்தது' என்ற வரிகள் வாசித்து முடிக்கும் போது எனக்குள்ளும் சோனா அப்படித்தான் அமர்ந்து கொண்டாள்.

இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்... இது ரசித்து வாசித்த புத்தகமல்ல... வலியும் வேதனையையும் மட்டும் சுமக்காமல் அந்த மனிதர்களின் அன்பான விசாலமான மனதை அருகிருந்து பார்த்தது போன்ற உணர்வோடு வாசித்த புத்தகம். ஒவ்வொருவருடைய வாழ்வையும் படிக்கும் போது நாமும் அவர்களுடன் பயணித்தது போன்றதொரு உணர்வைக் கொடுத்த எழுத்து... உள்ளுக்குள் ஈர்த்துக் கொண்டது.

'நான் உழைச்சித்தான் கடைசி வரைக்கும் சாப்பிடுவேன்... புரியுதாடா என் மாமா பையா...' எனச் சொல்லும் விலைமாது கல்யாணி... உடம்பை விற்பவளாகத் தெரியவில்லை... மனுசியாகத்தான் தெரிகிறாள்... ஆம் அவளும் மனுசிதானே.  

'விவரம் தெரியாதவனும் போதையில் இருக்கிறவனும்தான் விஷவாயுல மாட்டிப்பான் நைனா' என்று சொல்லிச் சிரிக்கும் சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும் மாலகொண்டைய்யா. பின்னொரு நாளில் அதே விஷவாயு தாக்கி இறந்ததாய் பேப்பரில் உர்ரென்று இருக்கும் போட்டோவில் சிரிக்கும் போது நம் மனசும் கல்லென ஆகிவிடுகிறது.

'என் உசுரைக் கொடுத்தாவது என் புள்ளையைப் படிக்க .வச்சிருவேன் நைனா...' எனச் சொல்லும் குப்பை அள்ளும் மன்னாரு. தலையில் தூக்கி வீசப்பட்ட குப்பைக்குப் பின்னே வந்து விழும் சாரியையும் குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுப் பயணிக்கும் போது பஞ்சரான அவரின் வண்டியை பேசியபடி நாமும் தள்ளிக்கொண்டே நடக்கத்தான் செய்கிறோம்.

'மிருகங்ககிட்ட கூட பயமில்லை சார்... வெள்ளையா சிரிக்குற இவனுங்கதான் சார் வெசத்தோட அலையுறானுங்க' என்று சொல்லும் தங்கள் இருப்பிடத்தில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி, ஈக்கள் மூலமாக நோயைக் கொடுத்துக் கொண்டிருப்போரை எதிர்த்துப் போராடும் சிறைக்காடு மகாலெட்சுமி. புண் சுமக்கும் பசங்களின் முதுகை நாமும் தடவிக் கொடுக்கத்தான் செய்கிறோம் மனசுக்குள்.

'கடைசியா மொகம் பார்க்கிறவங்கள்லாம் பாத்துக்கங்கப்பா...' என்று சொல்லிவிட்டு ஊருக்காக உழைத்ததால் இறந்த பின்னும் கருத்துப் போகாமல் மினுத்துக் கொண்டிருக்கும் தன் ஆசான் சாண்டோராஜ் வாத்தியாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கும் மாசாணம். அடுத்தவங்க நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிற நிறையப் பேர் மனக்கண்ணில் வந்து போனார்கள்.

'என் கூடப் பொறந்தவங்க மொத்தம் நாலு பேர்... அதுல ஒருத்தங்க திருநங்கை' என தன் தம்பி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அம்மாவாக மாறிப் போன சுதா என்னும் செந்தில். திருநங்களைகள் தொழில், வேலை வாய்ப்பென வளர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் இந்தச் செந்திலும்... மன்னிக்கவும் சுதாவும்.

'இனி இந்தக் காசைச் சேர்க்கிறதுக்கு என் குரலு போவாம இருக்கணும் சார்... ஜானகி என் மொகத்தைப் பார்த்துரணும் சார்...' என்று சொல்லும் திருச்சி வோகநாதன். இவரைப் போல எத்தனை பேர் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமின்றி தங்களை நம்பியிருப்போருக்காகவும் பாடுவார்கள்... வேனில் அமர்ந்து 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' எனப்பாடும் பலரை தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகே பைக்கில் போனபடி கடந்து சென்றது ஞாபகம் வந்தது.

'பாவம் அந்த மூதேவிக்கு கொழந்த பொறக்கப் போவுது... கூட நூத்தி அம்பது ரூபா கெடச்சா சந்தோஷம்தான அசிஸ்டெண்ட் சார்' எனச் சொல்லும் ஒரு படத்தில் நடித்த போஸ்டரால் வாழ்வை இழந்து நிற்கும் வைரம். திருப்பம் வருமென காத்திருக்கும் இவரைப் போல பலர், இதுதான் திருப்பமென ஆவலில் நுழைந்து வாழ்வையே இழந்த கதையைப் பார்த்திருக்கிறேன்.

'ரோஸி இப்போதைக்கு இந்தத் துணியை வச்சிச் சமாளி... நா போயி நாப்கினை எடுத்துட்டு வந்துர்றேன்...' எனச் சொல்லும் மனநலம் பாதிக்கப்பட்டு குணமான பின்னும் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் மனநல மருத்துவமனையிலேயே தங்கி இருக்கும் குணா. 'அவன் போறான்... பைத்தியக்காரன்...' என வீட்டாரே சொன்னதை எங்க பங்காளி வீட்டிலேயே கேட்டிருக்கிறேன்... நல்லா வந்து... பின்னர் மீண்டும் பைத்தியமாகி... மறுபடியும் நல்லா வந்து என அமாவாசை, பௌர்ணமி என மாறிமாறி நகர்ந்து இறுதியில் இறந்தே போனார்.

'கடலோடு பொறந்து கடலோடு வாழ்ந்த எங்கள தடுக்க நீ யாருடா...' என தங்கள் வாழ்விடத்துக்காகப் போராடும் தேசப்பனும் வள்ளியும். இப்படித்தான் பல இடங்களில் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. நல்ல இடம் தருகிறோம் எனச் சொல்லி நகர்த்தி விட்டு கண்டும் காணாமலும் போகும் அரசு அதிகாரிகளை நாம் பார்த்ததில்லையா..?

'முடியாது... முடியாது... மொதலாளி ஏசுவா' எனச் சொல்லும் நாகர்கோவிலுக்கே இராசியாகிப் போன நாரோயில் கிட்ணா. ராசிக்காரன் என்றாலும் அவன் மனசு வைக்க வேண்டும்...  பள்ளியில் படிக்கும் போது எங்க ஊருக்கு அருகில் ஒரு பிச்சைக்காரர் இருந்தார்... 'அம்ம்மா' என்றுதான் சத்தமிடுவார்... அது பெரும் சப்தமாக இருக்கும். கடைகளில் அவருக்குக் காசு போடுவார்கள். அம்பது பைசா, ஒரு ரூபாயெல்லாம் போட்டால் எடுத்து வைத்துவிட்டுப் போய்விடுவார். பத்துகாசு போதும் என்பார். அப்படித்தான் கிட்ணாவும் அவனுக்குத் தேவை எதுவோ அது போதும்... தன் கைராசியை அவன் அறிந்திருக்கவேயில்லை. அப்படி அறிந்திருந்தால் கோடிஸ்வரானகியிருப்பான்தானே...

'மச்சி... இந்த தடவ... என் வெளையாட்ட யாராலும் தடுக்க முடியாது... வெளையாடிட்டே இருக்கறவந்தான் மெஸி ஆவ முடியும்... வெளையாடவே கூடாதுன்னு சொன்ன என் அம்மாவே பால் குடுத்தாச்சு... வேல்டு கப்புல நா ஆடறது அம்மா பாக்கும் மச்சி...' என நம்பிக்கையோடு சொல்லும் குடியால் மதி மயங்கி மீண்டு வந்திருக்கும் மெஸி. இப்ப டிஸ்டிரிக் விளையாடுறேன்... அடுத்து தமிழக அணிதான் என்ற கனவோடு விளையாண்டவன் அரசியல் விளையாட்டில் தேவகோட்டையில் மளிகைக் கடை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

'ஏதாவது பத்தலைன்னா... சொல்லி விடுங்கடா... பார்த்துக்கலாம்...' என தன் கஷ்டத்தை எப்போதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கொடை வள்ளலாகவே வாழும் சேகர். இப்படி நிறையப் பேர்... எங்க பேராசான் கூட இன்னும் வாடகை வீட்டில்தான் என்றாலும்... உதவி என்று போய் நிற்பவர்களுக்கு இல்லையென்று சொல்வதே இல்லை... இன்றும் பலருக்கு உதவிக் கொண்டேதான் இருக்கிறார் எந்த எதிர்பார்ப்பும் இன்றி... இப்படி மனிதர்களுடன் வாழ்தல் மட்டுமல்ல... அவர்களின் அன்புக்குப் பாத்திரமாதலும் வரமே.

'எங்க போனாலும் எங்கள தொரத்துறானுங்கய்யா... ஊரு பேரு இல்லாத... நாதியத்த பயலுவதான்னு நெனக்கிறானுங்க... ஈனப் பயலுவ... ராவுக்கெல்லாம் அடிவயிறு வலிக்குதுன்னு அழுதாய்யா' எனச் சொல்லும் குறவர்களின் இறப்பு பற்றிப் பேசும்  வாழ்க்கைக் கதையில் தங்கள் நிலை சொல்லி வருந்தும் மேஸ்திரி. இது எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதான் எனக் கடந்து போனாலும் அவர்களின் வலியை என்ன சொல்வது..? எங்கள் ஊருக்குச் செல்லும் வழியில் நரிக்குறவர் காலணி இருந்தது... இப்போதும் இருக்கிறது அந்த வீடுகளில் வேற்றுச் சாதியினர்தான் இருக்கிறார்கள். அவர்கள் திருவிழா... ஏழு பானையில் பொங்கல் வைப்பது... எருமை மாடு வெட்டுவது... என சிறப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர் படமெல்லாம் ஓட்டுவார்கள். அங்கு போகக்கூடாது... கருமம் என வீட்டில் திட்டினாலும் போய்ப் படம் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்கள் அழகுதான்... அழுக்கோடு இருப்பதே பாதுகாப்புதான் என்பதால் அப்படி இருப்பார்கள் என்றுதான் நான் நினைத்துக் கொள்வேன். இல்லையேல் கர்ப்பிணி என்றும் பாராமல் மேஸ்திரி பொண்டாட்டியைத் தொட்டவர்களைப் போல் பலருக்கு குறத்திகளும் இரையாகக் கூடும் இல்லையா..?

'ஏன் தலைவருங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டாங்களா... இல்ல அவங்கள பொயித்தான் யாராவது கேட்டமா.... அந்த மாதிரித்தான் இதுவும்...' எனச் சிரிக்கும் பூகம்பம். அப்பன், அம்மா, மகன் என மூவரும் மூன்று கட்சியில்... இது எல்லா இடத்திலும் உண்டு. எங்க ஊரில் ஓரே வீட்டில் நாலு கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள்... நால்வரும் கூட்டுக் குடும்பமாய் ஒரே வீட்டில்... எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு லாபமே. பெத்த அரசியல்வாதின்னா அது சாத்தியம்... பூகம்பம் போன்றோர் 'என் இனிய வாக்காளப் பெருமக்களே...' சொல்ல மட்டும்தான் முடியும்... வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால்தான் தலைவன் வீட்டில் இருக்க நாம் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறோம் எப்போதும்.

'சார்... வெளிய போங்கன்னு சொல்றது ஓகேதான்... அதுக்காக... புள்ள செத்து போயிடும்ன்னு சொல்றது தப்பில்லயா...'  எனச் சொல்லும் நான்... அந்த நான் வாசிக்கும் நாமாகக் கூட இருந்திருக்கலாம். இங்கே இதன் ஆசிரியர் மருத்துவமனையில் தகப்பனாய்த் தவித்திருக்கிறார். குழந்தைக்கு உடல் நலமில்லை என ஒருநாள் மருத்துவமனையில் இருந்து பாருங்கள். அப்போது தெரியும்... அந்த நரக வேதனை. நானும் அனுபவித்திருக்கிறேன் என் மகளுக்காக... அதன் பின்னும் தீராத பிரச்சினைக்காக பல வருடம் ஒரு மருத்துவமனையில் காட்டிக் கொண்டே வந்தோம். எத்தனை காலம்தான் தலை, உடம்பென வயர்களை வைத்து சிகிச்சை அளிப்பது...? எத்தனை காலத்துக்குத்தான் மாத்திரை கொடுப்பது..? அப்போதுதான் நண்பர் மூலம் ஔவை நடராஜனின் சகோதரர் இதைச் சரிபண்ணுவார் என அறிந்து அங்கு சென்றோம். பார்த்ததும் அவர் கேட்ட கேள்வி ரெண்டு பேரும் படிச்சிருக்கீங்கதானே... புள்ளைய கொன்னுக்கிட்டே இருந்திருக்கீங்க...  மொதல்ல வெளியே போங்க... நான் உங்க முன்னாடி பிள்ளையைப் பார்க்க மாட்டேன் என்றார்... அதன் பின் சமாதானமாகி முதல்ல அந்த மாத்திரை சாப்பிடதால் வந்த பாதிப்பைச் சரி பண்ணுவோம் என மருத்துவத்தை ஆரம்பித்தார்... நான்கு மாதத்தில் இரண்டு முறை சென்றோம். இனி வரவேண்டாம்... போதும் என்றார்... அதன் பின் அந்தப் பிரச்சினை போன இடம் தெரியவில்லை. படக்கெனப் பேசும் மருத்துவர்கள் நல்லவர்களே.

'ஆனா ஒண்ணுலே.... அப்பவும் டிஸோசா பிரஷ்தான் புடிச்சேன்... இப்பவும் பிரஷ்தான் புடிக்கேன்' எனச் சிரிக்கும் டிஸோசா. இதைப் பார்த்தபோது சமீபத்தில் பார்த்த வினீத் ஸ்ரீனிவாசனின் மனோகரம் மலையாளப் படம்தான் ஞாபகத்தில் வந்தது. அதிலும் இப்படித்தான். பெயிண்டரானவன் டிஜிட்டலாக மாறிப்போன ஊரில் தானும் மாற நினைத்து என்னவாகிப் போனான் என்பதைச் சொல்கிறது. உண்மையில் ரசித்துப் பார்த்த படம். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் நம்மைப் பார்த்து அப்படியே வரைவான்... இப்போது அவன் வரைவதில்லை... வாழ்க்கை அவனை வச்சிச் செய்து கொண்டிருப்பதால் அதன் பின்னே நகரவே அவனுக்கு நாட்கள் போதவில்லை.

'மண்ண நம்பி வாழ்ற எங்களுக்கு... எந்த நோவும் வராது சார்... உட்கார்ற இடத்துல பொறந்து... போற ஊர்ல செத்து... பொதச்சுட்டு போய்ட்டே இருப்போம் சார்...' எனச் சொல்லும் வெட்டுக்கார முனுசாமி. இவர்கள் பிரசவம் பார்ப்பது போல்தான் நாடோடிகளாய் நகரும் பலர் பார்த்துக் கொள்கிறார்கள். நாம்தான் மருத்துவர்கள் சொல்வதை நம்பி கிழித்தெடுக்கிறோம். என் மகள் பிறந்த போது 'புள்ள நல்லாயிருக்கு... வலி வந்ததும் பொறந்துடும்' எனச் சொல்லிச் செல்ல, இட்லி சாப்பிட அமர்ந்தவரை ஏதோ டெஸ்ட் எடுக்கணும் எனச் சொல்லி அழைத்துச் சென்ற மறுவினாடி, குழந்தை கொடி சுற்றியிருக்கு ஆபரேசன் பண்ணலைன்னா ஆபத்து எனச் சொல்லி அறுத்தார்கள்... அதெல்லாம் பணத்துக்கான் அறுவைதான்... அந்த வலியை இன்னும் சுமப்பது என் மனைவிதானே. அவர்களுக்கென்ன... இவரைப் போல் பல பேர்...

'ஏன் சார் கேக்குறே..? இருக்கும் போது ஜாதி மதம் மயிருன்னு பேசுவான்... அடிபட்டுக் கொழ கொழன்னு கெடக்கும்... எவ்ளோன்னாலும் பரவயில்ல பாடிய தூக்குங்கன்னுவான் பார்ட்டிக்காரன்... நமக்கு அதுல்லாம் இல்ல சார்... தலைல சுமந்தா கூலி... வேலன்னு வந்தாக்கா சந்தோசமும் கெடயாது... வருத்தமும் கெடயாது...' என ஸ்டெக்சரைத் தூக்கிக் கொண்டு நடக்கும் பாடிமேன் தர்மன். ஆம் இவரைப் போன்றோர் சிதைந்து சின்னாபின்னமான உடம்பையும் பொறக்கி எடுத்து அள்ளிக் கொண்டு போவதில்தான் வாழ்க்கை இருக்கிறது. இறந்தவனின் நகைகளை போலீசுக்குத் தெரியாமல் உரியவரிடம் கொடுக்கும் அந்த மனசுதான் இவர்களை மனிதர்களாய் மட்டுமல்ல தெய்வங்களாகவும் கையெடுத்துக் கும்பிட வைக்கிறது இல்லையா..?

'இதுதான் மாப்ள என்னோட குரல்... இத ஏன் நா மாத்திக்கணும்...' எனச் சொல்லும் டி.எம்.எஸ். போலப் பாடும் மாரி. ஆம் எதற்காக, யாருக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். என் எழுத்தைப் பலர் அழுகாச்சி எனக் குறை சொல்லி அதிலிருந்து மாறி வா என்று சொல்லும் போதெல்லாம் நான் சொல்வது 'உங்களுக்காக நான் ஏன் என் எழுத்தை மாற்ற வேண்டும்...' என்பதுதான்.

'கடல் இன்னாடா தப்புப் பண்ணிச்சு... நாம போட்ட குப்பய நம்மளாண்ட வந்து குடுத்துட்டுப் போச்சுடா..' எனச் சொல்லி கடலுக்குப் பூ அள்ளிப் போடும் சுனாமியில் மனைவியையும் மகனையும் பறிகொடுத்த பாம்பு நாகராஜ். கடலம்மா எனக் கும்பிடும் இவர்கள் யாரும் கடல் மீது கோபம் கொள்வதில்லை... பீச்சுக்குப் போகிறோமென அதை நாறடிக்கும் நாம்தான் அதைத் தூற்றிக் கொண்டிருக்கிறோம். அதனதன் வாழ்வை அப்படியே வாழ விட்டோமென்றால் அது ஏன் நம்மீது திரும்பப் போகிறது...?

'காயல் விழியாளே... உன்னை கோத்தித் தின்னப் போகிறேன்...' என போதையில் தன் மனதுக்குப் பிடித்த சாந்தகுமாரியிடம் பேசி, பின் வருந்தி மீண்டும் பேசும் போது சிங்கமெனப் பேசும் ஜம்பு. பிடித்த பெண்ணுடன் நடித்தல் என்பது சுகமே... ஆனால் வில்லனாக என்னும் போது கஷ்டம்தான்... அவளை எனக்குப் பிடிக்கும்... ஆனா எப்போதோ ஒருநாள் கல்லூரி வாசலில் ஸ்டிரைக்கின் போது இளையராஜா அவளைக் கேலி செய்து பாடல் பாடியபோது அருகிருந்தவன் நான் என்பதால் முன்பு புன்னகைத்த முகம் இப்போது சுட்டெரிக்கிறது பங்காளி எனச் சொன்ன நண்பன்... இறுதி ஆண்டில் அவளைப் புன்னகைக்க வைத்தான்... காலம் அவர்களைப் பிரித்துத்தான் வைத்தது... இங்கே ஜம்பு சாந்தகுமாரியை அடுத்த காட்சியிலேயே தனக்குள் இழுத்துக் கொள்கிறான்.

'பார்த்தியா ஜம்பு... நாம சரியாத்தானே யோசிக்கிறோம்... எவ்ளோ அப்ளாஸ்... என் கதையை அவங்க எடுத்துட்டாங்கன்னு நா கவலப்படல... எனக்கு அவங்க நம்பிக்க  குடுத்துருக்காங்க.... நம்மால சினிமா பண்ண முடியும்... நெயிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க...' என நம்பிக்கையாகப் பேசும் கலை. நானும் நடிகனாகனும் இயக்குநராகனும் என மேற்கு மாம்பலத்தில் ஒரு மொட்டை மாடியில் அமர்ந்து பேசும் என் நண்பர்களுடன் நானும் அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அடுத்த நாள் காலை ஒரு சீரியல் சூட்டிங் இருக்குன்னு கிளம்பி ஓடுவார்கள்... இன்னும் ஒடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் படங்களாக வருவதைப் பார்க்கத்தான் முடிகிறது. பேர்தான் வேறாக இருக்கிறது.

'தமிழனுக்கு ஒரு நாடு வேணும்னு நெனக்கிற உங்க மனசுக்காகவே தமிழ் ஈழம் அமையும்ணே... அப்பிடி அமைஞ்சதுன்னா அப்பவாவது உங்கள மாதிரியானவங்களுக்கு ஒரு வீடாவது இருக்கும்ன்னு தோணுதுண்ணே...' என அருகில் போகவே அஞ்சும் குஷ்டரோகிகளுடன் அமர்ந்து பேசி, கடிதம் எழுதி, அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும் குட்டக்கையன். எங்க ஊருக்கு அருகில் ஈழத்தமிழர் தங்கியிருக்கும் முகாம். அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறோம். தமிழ் மீது நாம் கொண்டிருப்பதெல்லாம் அவர்கள் மொழி மீது கொண்டிருக்கும் பற்றுக்கு முன் சாதரணமே. இன்னமும் நம்மட நாட்டில் போய் வாழும் காலம் வரும் என அவர்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாம் கனவாய்ப் போய்விட்டது என்பதுதானே உண்மை.

'எம்மோவ் சும்மா அழுவாத.... கல்யாணம் பண்ணிக்கினு இன்னா பண்ணச் சொல்ற... எந்நேரமும் கழுத்த குறி பாத்துகினு ஒரு கத்தி இருந்துக்கினே இருக்குது... எப்ப வேணா போட்டுருவானுங்க... ஒரு பொண்ணோட வாழ்க்கய கெடுக்கச் சொல்றீயா..?' என எதார்த்தமாய்ச் சிந்திக்கும் கைமால் செய்ய ஆரம்பித்து ரவுடியாகிப் போன குட்டக்கையன். கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதைப் பார்த்துத்தானே வளர்ந்து வந்திருக்கிறோம். இன்று அவனை வெட்டினால் நாளை வெட்டியவனை வேறொருவன் வெட்டுவான்... அந்த வாழ்க்கை எப்போதும் கத்தி மீது நடப்பது போல்தான்.

'சாமி நாளைக்கும் வாங்க சாமி.... இருபத்தி அஞ்சு ரூபா கொடுங்க... எம் பொண்ணோட ஆடுங்க.... அது கல... எங்க பொழப்பு.... கூடாரத்துக்குள்ள வரணும்ன்னு நெனக்காத சாமி...' எனச் சொல்லும் கருணைபிரகாசம். எங்க ஊருக்கு கரகாட்டம் ஆட வந்த குறத்தி கூட இது எங்க பொழப்பு அதுக்காக ஆடுறோம்... ஆனா வாழ்க்கையின்னு ஒன்னு இருக்குதுங்களே... பல ஊர்ல இவ ஆடுறவதானேன்னு கை வைக்கிறாங்க... என்னத்தைச் சொல்றது... எங்கள்லயும் சிலதுக பணத்துக்காக அப்பிடி இப்படி நடக்கத்தானே செய்யிதுங்க... அதான் எல்லாரையும் ஒரே தராசில் வச்சிருறானுங்க என்று சொல்லியிருக்கிறார். எங்க ஊரில் கெட்ட வார்த்தை பேசுதல், கெட்ட ஆட்டம் போடுதல் என்பதெல்லாம் கூடாதென எப்போதும் கரகாட்டக்காரர்களுக்கு கட்டுப்பாடு உண்டு. இப்போதெல்லாம் கரகாட்டம் வைத்தால் நான்கு மணி நேரம் மட்டுமே வைக்க வேண்டும் என காவல்துறை கட்டுப்பாடு இருக்கிறது.

'ஆனா ஓனர்... உள்ள ரொம்ப நாள் இருந்துட்டா... வெளிய வந்து தப்பு பண்ணமாட்டான் ஓனர்...' சிறையிலிருந்து வெளியே போகமாட்டேன் எனச் சொல்லி, உனக்கு விடுதலை போய்த்தான் ஆகவேண்டும் என வெளியேற்றப்பட்டு புரோட்டோ கடையில் வேலை பார்க்கும் திருநா. சிறைக்குள் இருந்து திருந்தி வரும் மனிதர்களும் இருக்கிறார்கள்... வந்ததும் மீண்டும் தவறு செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே... சிறை எல்லாரையும் மனிதனாக மாற்றுவதில்லை என்றாலும் பலர் மாறித்தான் வருகிறார்கள்.... ஆனால் நாம்தான் அவர்களை ஜெயிலுக்கு வைத்துப் பார்க்கிறோம்.

'குளோசப்பில் பார்க்கும் போது வாழ்க்கை ஒரு துயரம். ஆனால், லாங் ஷாட்டில் பார்க்கும் போது அதுவொரு நகைச்சுவை' என்று சொன்ன சார்லி சாப்ளினின் வார்த்தைகள் எத்தனை மகத்துவமானது என்று பாக்கியம் சங்கர் குட்டக்கையன் கதையில் எழுதியிருப்பார். அது உண்மை... இவர்களை எல்லாம் அருகில் போய் பார்க்கும் போதுதானே நம்மால் எல்லாம் அறிய முடிகிறது. தூரத்தில் நின்று பார்க்கும் போது எதையும் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கடந்துதானே போகிறோம்.

இப்படி நான்காம் சுவர் முழுவதும் விளிம்பு நிலை மனிதர்களின்  முகங்களை நிறைத்துள்ளார் பாக்கியம் சங்கர். இங்கு நான் சொன்னவர்கள் எல்லாம் ஒவ்வொரு தலைப்போடும் ஒன்றிப் பயணித்தவர்கள். இவர்கள் அல்லாது ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் இன்னும் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கதையையும் இல்லை வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒவ்வொரு கட்டுரையையும் நீங்கள் ரசித்து மட்டுமல்ல... அந்த மனிதர்களை அருகில் அமர்த்தி வாசிக்க வேண்டும்... ஒரு புது அனுபவமும் வாழ்க்கையும் உங்களுக்குக் கிடைக்கும்.

இலக்கியம்... இலக்கணம் என எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வர முடியாத எழுத்து மட்டுமே தன் கண் முன்னே வாழும்... வாழ்ந்த மனிதர்களைப் பற்றிப் பேசும்... அவர்களின் வாழ்க்கையை ஜிகினா சேர்க்காமல் அப்படியே சொல்லும்... இப்படியானவர்களின் வாழ்க்கையை வாசிக்கும் போது வலியும் வேதனையும்தான் மிஞ்சும் என்றாலும் ஒரு சில நேரங்களில் இதழோரத்தில் மெல்லிய புன்னகை ஒன்று கண்டிப்பாகப் பூக்கும். அது அந்த மனிதனின் வலியால் அல்ல... அவனின் விசாலமான மனசால்... இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போனது எனக்கு அடிக்கடி அப்படிப்பட்ட புன்னகை பூக்கத்தான் செய்தது.... நான் இவர்களை எழுதவில்லை என்றாலும் கிராமத்து மனிதர்களையே என் கதைகளில் எழுதி வருவதால் இந்தப் புன்னகை பூத்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நிறைந்த மனங்கொண்ட மனிதர்களை. அவர்களெல்லாம் அருவறுக்கத் தக்கவர்கள் என ஒதுக்கும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட, சிறைபட்ட மனசுக்காரர்களாகிய நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கும் பாக்கியம் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாசிப்பவரை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமைந்து விடுவதில்லை... இது அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. அருமையான, கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த நான்காம் சுவர்.

Image result for நான்காம் சுவர்

தொம்பரக் கூத்தாடியில் பாக்கியம் சங்கர் பகிர்ந்திருந்த கவிஞர் வெயிலின் கவிதையையும் இங்கு பகிரவேண்டும் எனத் தோன்றியது... 

'ஆகாச விரிவு கண்டு அஞ்சி
இமைகளை இறுக்கிக் கொள்ளும் குழந்தை
கம்பத்தினுச்சியில் மல்லாந்து கிடக்கையில்
தயவு செய்து பிச்சையிருங்கள்
இன்றேல்,
வில் தைத்த பறவைக் குஞ்சாய்
விழும் பஞ்சுடம்பை ஏந்துகையில்
தகப்பனின் கைகளைத் தட்டிவிடுங்கள்'.

நான்காம் சுவர்
பாக்கியம் சங்கர்
யாவரும் பதிப்பகம்
ஜூலை 2019 வெளியீடு
விலை ரூ. 375

வாசிக்க வேண்டிய புத்தகமெனக் கொடுத்த சகோதரர் இராஜாராமுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : சினிமா என்னும் ஜிகினா

Related image

சினிமாங்கிறது எல்லாருக்குமே ஒரு குறிப்பிட்ட வயது வரை ரொம்பவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சிலர் அன்றும் இன்றும் என்றும் சினிமா மீது தீராத காதல் கொண்டிருப்பார்கள். இன்றைய டிக்கெட் விலையில் கூட அவர்களுக்கு தியேட்டரில் போய் படம் பார்த்தால்தான் பார்த்தது போலிருக்கும்.

சின்ன வயதில் சினிமா மீது தீராத காதல். தேவகோட்டையில் அப்போது மூன்று தியேட்டர்கள்... ரீலீஸான உடனேயெல்லாம் அங்கு படம் வராது... சில வாரங்களுக்குப் பின்தான் வரும். ரிலீசான படமென்றால் அது காரைக்குடியில்தான். பள்ளிப்பருவத்தில் காரைக்குடிக்கு படம் பார்க்கப் போவதெல்லாம் முடியாத காரியம் என்பதால் தேவகோட்டையில்தான் பார்க்க வேண்டும்... அதுவும் அம்மாவுடனோ அக்காக்களுடனோதான் போகமுடியும்.

அம்மாவுக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும்... பெரும்பாலும் காலைக்காட்சிக்கு அவரும் அவர் பிறந்த ஊரில் இருந்து எங்க ஊருக்கே திருமணம் முடித்து வந்த அவர் வயதொத்த பஞ்சம்மாவும் பேசி வைத்துக் கிளம்பி விடுவார்கள். விடுமுறை தினம் என்றால் நாங்களும் இருப்போம். சில சமயங்களில் ஆறு மணிக்குப் போடப்படும் முதல் காட்சிக்கு கூட்டிச் செல்வார்கள். அடிக்கடி சினிமாவுக்குப் போவோம். 

பள்ளியில் படிக்கும் போது தூறல் நின்னு போச்சு பார்த்துவிட்டு வந்த மறுநாள் பள்ளியில் தவட்டாங்கம்பு (மரக்குரங்கு) விளையாண்டவர்களை வேடிக்கை பார்க்கும் போது மேலிருந்து குதித்தவன் என் மீது விழ, நான் சுவரில் விழுந்து கை உடைந்து அம்மாவிடம் பட்ட அடிகள்... கைக்கு கட்டுப்போட குன்றக்குடி கிளம்பும் போது விவித பாரதியிலோ இலங்கை வானொலியிலோ சரியாக ஒலிக்க விடப்படும் ஏரிக்கரைப் பூங்காற்றோ அல்லது தங்கச் சங்கிலியோ 'நீ போம்மா.. நான் பாட்டைக் கேட்டுட்டு வாரேன்'னு சொல்ல வைக்கும்... அதுக்கு மானாவாரியாத் திட்டு வாங்கினதெல்லாம் பெரிய கதை.

அப்ப விஜயகாந்தை ஏனோ பிடிக்காது.... இப்ப ரொம்பப் பிடிக்கும்... இந்த இரண்டுக்கும் எனக்குக் காரணமெல்லாம் தெரியாது. நம்ம விருப்பம் அப்போது கமல், பாக்கியராஜ், இராமராஜன்தான். இவர்கள் படமென்றால் அம்மாவை நச்சரிப்பதுண்டு... அம்மா எப்படியும் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றுவிடுவார். தொன்னூறுகளில் டிக்கெட் விலையும் அதிகமில்லைதானே. 

முதலில் ஊருக்குள்... அப்புறம் வீட்டுக்குள் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி வந்தபின் ஞாயிறுகளில் ஒரு பழைய சினிமா...  சனிக்கிழமை ஹிந்திபடம் மொழி புரியாமல் பார்த்து ரசித்த நாட்கள் மறக்க முடியாதவை...  அதுவும் எல்லாரும் ஒன்றாகக் கூட்டமாக அமர்ந்து பார்ப்பது என்பது மகிழ்வின் உச்சமில்லையா..! இப்பவும் மொழி அவ்வளவாகப் புரியாதென்பதால் ஹிந்தியும் கன்னடமும் தவிர்த்து தெலுங்கு, மலையாளப் படங்கள் பார்ப்பதுண்டு என்றாலும் மலையாள சினிமா மீதே ஆர்வம் அதிகம்... ஷகிலா படத்தின் மீதல்ல.

கல்லூரியில் படிக்கும் போது வீட்டுக்கு நல்ல பிள்ளை... அது போக தேவகோட்டை தியேட்டருக்குப் படத்துக்குப் போனால் எப்படியும் யாராவது ஒரு உறவினர் வரக்கூடும்... அம்மாவிடம் சொன்னால் எது பிய்யும் என்பதெல்லாம் தெரியாது ஆனால் கண்டிப்பாக அடி விழும் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் விடுமுறை தினமே முதுகுக்கு நல்லது என முடிவெடுத்து முதலாம் ஆண்டு நகர்ந்தது. 

இரண்டாம் ஆண்டில் நண்பர் கூட்டம் அதிகமானதால் சில படங்களை தியேட்டரில் போய் பார்க்க ஆரம்பிச்சாச்சு. யாராவதுபார்த்துட்டுப் போய்ச் சொன்னால் சொல்லட்டும் என்ற எண்ணமும் மனசுக்குள் வந்தாச்சு. மூன்றாம் ஆண்டில் நிறையப் படங்கள்... மதியம் பெரும்பாலும் வகுப்பு இருக்காது என்பது ஒரு வாய்ப்பாக அமைந்தது. நண்பர்களுடன் அதுவும் கூட்டமாய் படம் பார்ப்பது என்பது மீண்டும் கிடைக்காத ஒன்று... நாங்கள் எங்கள் எல்லை யைத் தாண்டி படம் பார்க்கவில்லை...  ஆம் காரைக்குடிக்கு படம் பார்க்கச் சென்றதே இல்லை... அதேபோல் கட்டடித்துவிட்டுப் படத்துக்குப் போகவில்லை. 

காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் வேலை பார்த்தபோதுதான் தினமும் இரவுக்காட்சி... ஆறு திரையரங்குகள்... பெரும்பாலும் ரிலீஸ் செய்யப்படும் படங்கள்... எப்படியும் போய் விடுவோம். படம் பார்க்கச் சலிப்பதேயில்லை... பாரதி கண்ணம்மாவெல்லாம் இருக்கை இல்லாமல் கடைகள் இருக்கும் வரண்டாவில் அமர்ந்து பார்த்தோம்.  

திருமணம் ஆகும் வரை சினிமாப் பார்ப்பதில் குறை வைத்ததேயில்லை... திருமணத்துக்குப் பின்னும் கூட சினிமா மீது ஆர்வம் அதிகம்தான்.  மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் சினிமாதான்... குடும்பத்தை விடுத்துச் சென்னையில் இருந்த ஆரம்ப காலத்தில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீனிவாசாவும் உதயமும் எங்கள் ஆஸ்தான் திரையரங்குகள்... உதயத்தில் முதல் 10 டிக்கெட்டுகள் 10 ரூபாய்க்கு கொடுப்பார்கள். சொர்ணாக்கா மாதிரி இருக்கும் ஒரு பெண்தான் அந்த டிக்கெட்டுக்களைக் கொடுப்பார்... உருட்டல் மிரட்டல் வேறு... பத்து ரூபாய் டிக்கெட்டில்தான் பாரிஜாதமெல்லாம் பார்த்தோம்... அறைக்குத் திரும்பியதும்தான் அண்ணாந்து பார்த்ததன் வலி தலையில் தெரியும்... இருந்தாலும் மறுமுறையும் பத்து ரூபாய் டிக்கெட்தான்.

ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்துவிட்டு வரும்போது அதே சொர்ணாக்கா போன்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டியதும் அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னையும் நண்பனையும் விடாமால் பேசிக் கொண்டு நின்றதும், என்னை நிறுத்தி அவனைப் போய் பான்பராக் சரம் ஒன்று வாங்கி வரச் சொன்னதும்.... மறக்க முடியாத நினைவுகள்... அவரிடம் மாட்டிய அன்று இனி இரவுக்காட்சி என்றால் கூப்பிடு தூரத்தில் இருக்கும் கிருஷ்ணவேணிதான் என முடிவு செய்து அடுத்த இரண்டு நாளில் மீண்டும் ஸ்ரீநிவாசாவுக்குச் சென்றோம்.

அபுதாபி வந்த பின் சினிமாப் பார்க்க தியேட்டருக்குச் செல்வது குறைந்து விட்டது. எண்ணி ஐந்து படங்கள்தான் இந்தப் பத்தாண்டில் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். கணிப்பொறியில்தான் இப்போதெல்லாம் படம் பார்ப்பது என்றாகிப் போய்விட்டது. 

வேலை முடிந்து வந்ததும் சமையல், ஊருக்குப் பேசுதல் என்னும் அன்றாடப் பணிக்குப் பிறகான மணித்துளிகளை... அதாவது இரவு பதினொன்னறை வரை எழுத்தும் சினிமாவுமே காலம் கடத்தும் காரணிகளாய் இருக்கின்றன... இது நல்லதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்... தொலையும் காலங்களைக் கடத்தும் படகுதான் இவை... ஆனால் இந்த தொலையும் காலத்தில் மனைவியின் பரிதவிப்பும் குழந்தைகளின் பாசமும்  சேர்ந்தே தொலைந்து கொண்டுதான் இருக்கின்றன... இவை திரும்பக் கிடைக்க இந்த வாழ்க்கை மீது வெறுப்புத்தான் வருகிறது. என்ன செய்ய... நம் தலையில் எழுதியது இப்படி என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில் இந்த வாழ்க்கையில் எழுத்தில் என்ன சாதித்து விட்டோம் என யோசித்தாலும் சினிமாப் பார்ப்பதால் என்ன கிடைத்தது என யோசித்தாலும் விடை என்னவோ பூஜ்ஜியம்தான் எங்கள் வாழ்க்கையைப் போல. 

இங்கு அதிகம் பார்ப்பது மலையாளப் படங்கள் என்று சொன்னேன்... ஆம்... அவைதான் அழகிய கதைகளைக் கொண்டிருக்கின்றன... அடித்து நொறுக்கவோ... அபத்தமாகப் பேசவோ செய்யவில்லை... தமிழிலும் அவ்வப்போது நல்ல படங்கள் வருகின்றன என்றாலும் பெரும்பாலும் மாஸ், சாதீயம் பேசுதல் என ஒரு வட்டத்துக்குள்ளேயே நிற்கிறது தமிழ்ச்சினிமா... மலையாளம் இதையெல்லாம் தன் எல்லைக்குள் வரவிடாமல் அழகான சிறுகதைகளை அபரிதமான சினிமாவாக்கித் தருகிறது. எனக்கு இப்போது மலையாளப் படங்களே மனமகிழ்வைத் தருகிறது.

இப்போதெல்லாம் ஊருக்குப் போனாலும் தியேட்டருக்குப் போதல் என்பது குறைவு. பிள்ளைகளின் சந்தோஷத்துக்காகச் ஒன்றிரண்டு படங்களுச் செல்வதுண்டு. சொல்ல மறந்துட்டேனே தேவகோட்டையில் மூன்றில் ஒரு தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது.  மற்ற இரண்டில் ஒன்று இப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இரண்டிலுமே ரிலீஸ் படங்கள்தான்  போடுகிறார்கள். என்ன டிக்கெட் விலைதான் எங்கள் ஊருக்கு அதிகம்... அதுவும் அஜித், விஜய்க்கெல்லாம் நானூறு ஐநூறு என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இவ்வளவு பணம் கொடுத்துப் பார்ப்பதெல்லாம் இருப்போருக்கே சாத்தியம். ஏசியை அமர்த்தி வைத்துவிட்டு இந்த விலை வாங்குவதெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம். 

என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது அப்போதும் இப்போதும் எப்போதும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. தொலைக்காட்சியில் ஒரே படத்தை எத்தனை முறை போட்டாலும் திரும்பத் திரும்ப பார்க்கத்தான் செய்கிறோம்.

சினிமா என்னும் ஜிகினா எப்போதும் மின்னிக்கொண்டேதான் இருக்கும்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 12 டிசம்பர், 2019

சினிமா : அம்பிலி (மலையாளம்)

ம்பிலி...

கடவுளின் குழந்தை இவன்.

அதென்ன கடவுளின் குழந்தை..?

எத்தனை வயதானாலும் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைத்தனத்துடன் வாழ்பவர்களை... இதயத்தில் இருந்து வாழ்பவர்களை... பிற உயிர்க்குத் தீங்கு நினைக்காமல் வாழ்பவர்களை... குறிப்பாக வெளி உலகம் பற்றி அறியாமல் வாழ்பவர்களை...  வேறு எப்படி அழைக்க முடியும்..? அவர்கள் கடவுளின் குழந்தைகள்தான். மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் என அவர்களைச் சொல்லும் நாம்தான் துரோகம், குரோதம், வன்மம், போட்டி, பொறாமை என எல்லாம் சுமந்து திரியும் மூளை வளர்ச்சியற்றவர்கள். அவர்கள் இது எதுவும் அறியாத வளர்ந்த மனிதர்கள்.

Image result for ambili movie images hd

அப்படிப்பட்ட ஒரு குழந்தைதான் அம்பிலி... அப்பா, அம்மா இருவரும் இல்லாமல்... உறவென்று யாருமற்ற நிலையில் தனியே ஒரு வீட்டில் இருக்கும் குழந்தை மனம் கொண்ட இளைஞன் அவன்.  அவன் உலகம் வித்தியாசமானது... சிறு பிள்ளையாய் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான்... ஸ்கைப்பில் வெளியூரில் தங்கிப் படிக்கும் தோழியிடம் மணிக்கணக்கில் பேசுகிறான்... தனக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருக்கும் கடைகளின் வாடகை வாங்கச் செல்கிறான்... மொத்தத்தில் கட்டப்பனை என்னும் இடத்தில் இருக்கும் இயற்கை அழகோடு ஒன்றி பேரழகனாய் வாழ்கிறான்.

தன் வேலை மட்டுமின்றி தனக்குப் பிடித்தவர்களின் வீட்டில் சொல்லும் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொடுக்கிறான். அவனுக்கு அந்த வேலை கடினமாக எல்லாம் தெரிவதில்லை... அந்த மனிதர்களின் அன்பு மட்டுமே தெரிகிறது... எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவர்களைப் பாசத்தோடு அணுகுகிறான்... ஆனால் அவர்களில் சிலரோ பாசாங்கோடு அவனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் புரிந்து கொண்டானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

இப்படிப்பட்ட மனிதர்களைத்தானே இந்த உலகம் ஏமாற்ற நினைக்கும்..? அவர்கள் ஏமாற்றுவதில் நமக்கொரு அல்ப சந்தோசம் வரும்தானே..? அப்படித்தான் வாடகை வாங்கச் செல்லும் போது கடை வைத்திருப்பவர்கள் வாடகை கேட்டுப் போகும் போது, 'அம்பிலி உன்னோட கவிதை வந்திருக்கு பார்...?', 'உனக்கு இந்தச் சட்டை நல்லாயிருக்கா பார்...?' என்றெல்லாம் சொல்லி வாடகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்... அவனும் அதை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நினைப்போடு அங்கிருந்து நகர்கிறான்... அவர்களிடம் வாடகையைப் பெற்றானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

தோழி டீனா குரியனின் மனசுக்குள் அவன் காதலனாகத்தான் இருக்கிறான்... அவனுக்குள்ளும் அப்படித்தான். ஊருக்கு வருபவள் அம்பிலியிடம் இன்னும் நெருக்கமாகிறாள்... அவனைத்தான் கட்டுவேன் என வீட்டில் சொல்லும் போது அவளைப் பெற்றவர்கள் அதை ஏற்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை... காரணம் இரண்டு குடும்பத்துக்குமான முன்கதையும் அவர்களுக்கான நெருக்கமும் காஷ்மீர் இராணுவ முகாமில் இருக்கிறது என்பதால் அம்பிலிக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு... இவர்களின் காதல் ஏற்கப்பட்டதா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

டீனாவின் அண்ணனும் அம்பிலியின் நண்பனுமான பாபி குரியன் ஒரு சைக்கிள் வீரன்... தேசியப் போட்டிகளில் வென்றவன்... அவனின் ஒவ்வொரு வெற்றியிலும் அதிகம் மகிழ்பவன் அம்பிலி... ஊருக்கு வரும் பாபிக்கு அம்பிலியின் குழந்தைத்தனமான செயல்பாடுகள் மீது ஒரு வெறுப்பு... அவனை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறான்... இந்நிலையில் தங்கையின் காதலும் தெரியவர, எதிர்ப்பைத் தூக்கிக் கொண்டு நிற்பதுடன், பாவப்பட்ட அம்பிலியை வீட்டில் போய் அடித்துத் துவைக்கிறான்... அடிபட்ட அம்பிலி அவனைப் பலி வாங்கினானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.

Image result for ambili movie images hd

ஆம்...

குணா கமல் மாதிரி ஒருத்தனைக் காதலிப்பதை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா...?

அவர்களைப் பிரிக்கச் செய்யும் சதி என்ன...?

காதலர்கள் சேர்ந்தார்களா... அல்லது செத்தார்களா...?

அம்பிலி  அசகாய சூரனானா..?

தன்னைத் தாக்கிய பாபியைத் தூக்கிப் போட்டு மிதிச்சானா..?

டீனாவைக் கைப்பிடித்தானா...?

நூறு பேரை அடித்து வீர வசனம் பேசினானா..?

இப்படியான கேடுகெட்ட யோசனை எல்லாம் இன்னும் மலையாளக் கரையோரம் நகரவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஒரு சிறு கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பானதொரு படத்தை நம்முன்னே வைப்பதில் இப்போது வரும் மலையாள இளம் இயக்குநர்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள்... திரையில் ஆளாளுக்கு அடித்து ஆடுகிறார்கள். சமீபத்தில் பார்த்த எல்லாப் படங்களும் சின்னக் கதையை வைத்து சித்திரம் வரைந்தவைதான்... அத்தனை அழகு... ரசிக்க வைத்த படங்கள்.

நாம்தான் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொண்டு சாதியை வைத்தே படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இளம் இயக்குநர்களில் பலர் சாதிக்குள் மட்டுமே சுற்றி வருகிறார்கள். இது ஆபத்தானது... ஆனால் அதைத்தான் நாம் விரும்புகிறோம். கொடி பிடிக்கிறோம்.. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் 'என்னை அடக்கி வச்சே... நான் முளைச்சி வருவேன்'னு வசனம் பேசப் போறோமோ தெரியலை... எல்லா இடத்திலும் எல்லாரும் முளைத்து வந்தாச்சு... இந்தப்படங்கள் வளரும் கிளைகளை ஒடித்துச் செடியைக் கருக வைக்குமே ஒழிய வளர வைக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

அந்த வகையில் மலையாளிகள் இப்போது வர்க்க பேதம், பொருந்தாக் காதல் என எதையும் பேசவில்லை என்பதே மகிழ்ச்சிதான்... இதனாலேயே அவர்களின் கதைகள் மீது ஒரு தனி மரியாதை வருகிறது... நம் புதிய இயக்குநர்களின் கதைகள் சாதிய விதையைப் பரவலாக முளைக்க வைத்து அதன் மூலம் பணம் சம்பாரிக்கிறார்களே என்ற கோபம்தான் வருகிறது..

இன்னும் சொல்லப் போனால் மலையாளிகள் மாஸையும் நம்புவதில்லை... சதையையும் நம்புவதில்லை... சாதியையும் நம்புவதில்லை... கதையை மட்டுமே நம்புகிறார்கள். சமீபத்தில் பார்த்த படங்கள் எல்லாமே ஒருவரிக் கதைதான்... ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் காட்சிக்கு காட்சி ரசித்துப் பார்க்க வைக்கிறது.

தங்கள் கதை வெல்லும் என்றால் எவனையும் நாயகனாக்கலாம் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் மலையாளிகள். அம்பிலியாக பஹத் பாசில், துல்கர், நிவின் பாலி, ஷேன் நிகம் போன்றவர்களைப் போட்டிருக்க முடியும் ஆனால் இயக்குநரின் தேர்வு ஷெளபின் ஷாகிர். இந்தக் கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.

காதலும் இல்லை... மோதலும் இல்லை என்றால் அப்ப கதைதான் என்ன..?

ஒரு சைக்கிள் பயணம்... ஆம் இதுதான் கதை.

சைக்கிள் வீரனான பாபி கின்னஸ் சாதனைக்காக கேரளாவில் இருந்து பல மாநிலங்களைக் கடந்து காஷ்மீரை அடையும் சாகசப் பயணத்துக்குத் தயாராகிறான். அவனுக்கு வழியெங்கும் தங்கிச் செல்ல, உதவ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Image result for ambili movie images hd

அவன் கிளம்பிச் சென்றபின் அவனிடம் அடிபட்ட அம்பிலியைக் காணோமென ஊரே தேடுகிறது... எங்கே சென்றிருப்பான்...? அடிபட்ட வருத்தத்தில் எங்காவது சென்று செத்திருப்பானா..? எனப் பரபரப்பாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் எல்லாரும் அம்பிலி மீது எவ்வளவு நேசம் வைத்திருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது...

எங்கே போயிருப்பான் என்ற பதைபதைப்புக்கு இடையே பாபியின் சைக்கிளின் பின்னே தன் பழைய சைக்கிளில் பயணிக்க ஆரம்பிக்கிறான் அம்பிலி. கதையும் சுவராஸ்யமாய்ப் பயணிக்க ஆரம்பிக்கிறது.

அதன் பின் இருவர் மட்டுமே பயணிக்கிறார்கள்... இருவருக்கும் நட்பு ரீதியிலான பந்தம் இல்லை. அம்பிலி நட்போடு நகர்ந்தாலும் பாபி அப்படி நகரவில்லை. கள்ளங்கபடமில்லாத நட்பைக் கொடுத்து ஒவ்வொரு இடத்திலும் அம்பிலி மனிதர்களைப் பிடித்துக் கொள்கிறான். அவனின் உலகம் அன்பால் ஆனது... அதில் பல மொழி பேசும் மனிதர்களை அமர்த்திக் கொள்கிறான். பாபியோ இவனை எப்படியும் கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறான். அதற்காக முயற்சி மேல் முயற்சி செய்கிறான். அவனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது.

அம்புலி தன்னுடன் வருவதைப் பற்றித் தங்கையிடம் சொல்ல, அவளோ அம்பிலியிடம் உன்னால் அவ்வளவு தூரம் போக முடியாது... திரும்பி வா என்றழைக்கிறாள். அவளின் பேச்சுக்கு எப்பவுமே எதிர்ப்பேச்சு இல்லை என்பதால் திரும்பிப் போகிறேன் எனச் சோகமாய்ச் செல்பவன், ஏனோ காதலியைவிட இந்தச் சைக்கிள் பயணத்தையே பெரிதும் விரும்புகிறான்... பாபியின் மனசுக்குள் இருக்கும் தன் மீதான வெறுப்பை அழித்து அவனுள் இடம் பிடிக்கவோ அல்லது தனக்கும் காஷ்மீருக்குமான பந்தத்தின் காரணமாக அந்த மண்ணை மிதிக்கவோ... ஏதோ ஒன்றுக்காய் அவனுக்கு இந்தப் பயணம் தேவைப்படுகிறது... காதலியின் சொல்லை மறந்து கேரளம் திரும்பிய சைக்கிளை காஷ்மீர் நோக்கித் திருப்புகிறான்... ஆம் மீண்டும் பாபியின் பின்னே சைக்கிளை மிதிக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் பாபிக்கு உடல்நலமில்லாமல் போக, சில நாள் ஒரு கிராமத்து மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல்... அப்போது அம்பிலி அவனைத் தாயைப் போலக் கவனிப்பதுடன் அங்கிருப்பவர்கள், குழந்தைகள் என எல்லாரிடமும் மொழி தெரியாவிட்டாலும் தெரிந்தவரை பேசி நெருக்கமாகிறான். அவனின் அந்த நேசம், பழகும் பாங்கு பாபியின் மனசுக்குள் முதல் முறையாக அம்பிலி மீதான வெறுப்புணர்வைக் கொன்று அன்பை விதைக்கிறது.

அதன் பின் இருவருவருமாய் பயணிக்கிறார்கள்... காஷ்மீர் போய் அம்பிலியும் பாபியும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவாய்.

பாதிப்படத்துக்கு மேல் சைக்கிள் பயணமாய் நகரும் கதையில் ஆங்காங்கே சந்திக்கும் மனிதர்கள் மற்றும் கடக்கும் நிலங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

காதலியை நினைத்து ஒரு பாடல், காதலனை நினைத்து ஒரு சோகப்பாடல், நண்பர்களுக்குள் போட்டிப் பாடல் அல்லது பாசப்பாடல், இடையில் சண்டைக் காட்சிகள், இதனிடையே ஒரு குத்தாட்டம் என்றெல்லாம் நம்மைப் போல் யோசிக்காமல் அந்த இருவரையும் அவர்கள் கடக்கும் நிலங்களையும் மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் கடக்கும் நிலங்கள் ஓராயிரம் கதை பேசுகின்றன. அதையெல்லாம் படம் பார்க்கும் போது நாம் ரசித்துக் கேட்கலாம்.

மிக அழகாகப் பயணிக்கும் கதை... இப்படியானதொரு கதையை எடுத்ததற்காகவே இயக்குநர் ஜான்பால் ஜார்ஜைப் பாராட்டலாம். அவ்வளவு நேர்த்தியாய் கதை சொல்லியிருக்கிறார்.  சைக்கிள் பயணத்தில் என்ன சுவராஸ்யத்தைக் காட்டிவிட முடியும்... அதுவும் படம் முழுவதும் இருவர் சைக்கிளில் பயணிப்பது பார்ப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்காதா..? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை... பார்ப்பவர்களை அம்பிலியின் சைக்கிளின் பின்னே தன்னால் காஷ்மீருக்குக் கொண்டு செல்ல முடியும் என நம்பியிருக்கிறார்... அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

பரந்த நிலப்பரப்பை மேலிருந்தே படமாக்கியிருப்பது சிறப்பு. படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் எடிட்டிங்கும் மிக முக்கியமானதாய்... மூன்றும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன... ஒளிப்பதிவாளர் ஷரன் வேலாயுதமும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்யும் எடிட்டர் கிரண் தாஸூம்  கலக்கியிருக்கிறார்கள்... இந்த மும்மூர்த்திகளுக்குப் பாராட்டுக்கள்.

Image result for ambili movie images hd

குறிப்பாக ஷௌபினின் நடிப்பு... அற்புதம்... அருமையான கலைஞன்... இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் நாம் முன்பு பார்த்த அதே நடை, உடை, பாவனையில்தான் நடிப்பார்கள்... இதில் இவர் அதை முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்... பாராட்டப்பட வேண்டிய கலைஞன்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை மிக அழகாகக் கொடுத்து விடுகிறார் ஷௌபின். சூடானி ப்ர்ம நைஜீரியா, கும்பளங்கி நைட்ஸ் என எல்லாப் படத்திலும் அவரின் நடிப்பு தனித்தே தெரியும். படத்துக்குப் படம் தன் நடிப்பை பட்டை தீட்டிக் கொண்டேயிருக்கிறார். நான் ரசிக்கும் கலைஞன் ஷௌபினுக்கு வாழ்த்துக்கள்.

டீனாவாக தன்வி ராமும் பாபியாக நவீன் நஜீமும் கதைக்கு வலுச் சேர்க்கிறார்கள். மேலும் இவர்களின் அப்பாவாக வரும் வெட்டுக்கிலி பிரகாஷ், அம்மாவாக வரும் நீனா குருப், பாட்டியாக வரும் ஸ்ரீலதா நம்பூதிரி என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

E4 Entertainment மற்றும் AVA Productions-க்காக மனோஜ் A.மேத்தா,  A.V. அனூப் மற்றும் C.V. சாரதி தயாரிப்பில் வந்திருக்கும் அம்பிலி அருமையானதொரு படம்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் கூட.************

எனது நாவலொன்று அமேசானில் இருக்கிறது. வாசிக்க நினைத்தால் வாசியுங்கள். அங்கு வாசிக்க : நெருஞ்சியும் குறிஞ்சியும்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

அமேசானில் 'நெருஞ்சியும் குறிஞ்சியும்'

மேசான்ல கணக்கு ஆரம்பித்து அதன் பின் PENTOPUBLISH-2019 போட்டியில் இருக்கும் நண்பர்களின் கதைகளை தேடித் தரவிறக்கம் செய்ய முயன்றால் இங்கு அது இல்லை... இங்கு இது இல்லை எனச் சொல்ல ஆரம்பித்தது.

நண்பர்கள் தரவிறக்கம் செய்து படி... கருத்து இடுன்னு எல்லாம் சொன்னாங்க... கருத்து இட அமேசான்ல குறைந்தது இந்த மதிப்புக்கு வர்த்தகம் பண்ணியிருக்கனும்ன்னு சொன்னுச்சு...

நாமளே அமேசானுக்குப் புதுசு... அப்புறம் எங்கிட்டு வர்த்தகம்... அதுவும் அவங்க சொல்ற மதிப்புல வர்த்தம் பண்ணுறது. அதான் நம்ம கணக்கு... நம்ம கதைங்கிற முடிவுக்கு வந்தாச்சு.

போட்டிக்காகவெல்லாம் போடவில்லை... பணம் கொடுத்து எல்லாம் வாங்கச் சொல்லவில்லை... இந்தியாவுல இருப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்குமாம் அமேசான்...  அதே மாதிரி கிண்டில் இருந்தா இலவசமாக படிக்கலாமாம்... இந்த அமேசான் பற்றி நிறையத் தெரிஞ்சிக்கணும் போல... கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி இருக்கு.

ஆகவே நண்பர்களே... உங்களில் யாராவது அப்படி இலவசமாகத் தரவிறக்கிப் படித்தீர்கள் என்றால் உங்கள் கருத்தை அங்கு சொல்லாட்டியும் இங்காவது சொல்லுங்க... அம்புட்டுத்தான்....

'நீயுமா குமாரு...?' அப்படின்னு நினைக்காதீங்க... சொக்கா ஒரு லட்சம் ஆசையெல்லாம் இல்லை... எழுத்துக்கான மதிப்புச் சோதனைதான் இது... இருநூறுக்கும் மேற்பட்ட கதைகள், நாலைந்து நாவல்கள் என எல்லாம் எழுதிக் கிடக்கே எடுத்துப் போட்டு விடலாம் என்பதால்தான் இந்நாவலை அங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அதனால்தான் இங்கு பாதிவரை தொடராய் எழுதிய 'நெருஞ்சியும் குறிஞ்சியும்' நாவலைத் தூக்கிப் போட்டு வச்சிருக்கேன்.

நெருஞ்சியும் குறிஞ்சியும் நாவலில் இருந்து...

“மாமா...” வேலாயுதம் அருகில் அமர்ந்து தோள் தொட்டு அழைத்தார் ராமநாதன்.

வாயிலிருந்து துண்டை எடுத்து வறண்ட உதடு பிரித்து “ம்.. என்னப்பா...” என்றார் வார்த்தைகளுக்குப் பதில் உஷ்ணக் காற்று வந்து வெளிக்காற்றோடு சோகமாய்க் கலந்தது.

“கலங்காதீங்க மாமா... நாஞ் சொல்றதுக்கு கோபப்படமாட்டீங்கன்னு நெனக்கிறேன்...”

என்ன சொல்லப் போறீக என்ற கேள்வியோடு அவரைப் பார்த்தார்.

“அயித்த மூத்தவனப் பாக்கணுமின்னு ரொம்ப ஆசப்பட்டுச்சு... அது நடபொடயா இருக்கும் போது அது நடக்கல... இந்தக் கடசி நேரத்துலயாச்சும் நடந்தா நல்லாயிருக்கும்...”

“....”

“மூத்தவன வரச்சொல்லவா..?”

“.....”

“என்ன மாமா.... எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க...? நாம அவனோட ஒறவு கொண்டாட கூப்பிடல... ஆனா அயித்தயோட ஆச.... அதான்.... எங்க எல்லாரோட முடிவும் அவன் ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போவணுங்கிறது.... நீங்க சொல்ற முடிவுலதான்...”

வேலாயுதம் வறட்சியாய் சிரித்தார்... கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தன... துண்டால் துடைத்துக் கொண்டு ஒரு செருமலோடு பேச ஆரம்பித்தார். “மாப்ள... நீங்கதான் எம் மூத்த மவன்... ஒங்ககிட்ட உரிமயோடதான் சண்ட போட்டிருப்பேன்... என்னோட வலி, ரணமெல்லாம் ஒங்க எல்லாருக்கும் தெரியும்... ஏன் இந்தா உசிருக்குப் போராடுறாளே அவளுக்கும் தெரியும்... ஒரு ஆம்பள... எத்தன ராத்திரி வாய் விட்டு அழுதிருப்பேன் தெரியுமா..? குடிக்க கஞ்சியில்லாம வெறும் வயித்தோட வயல்ல கெடந்து வெவசாயம் பண்ணி... நானும் அவளும் புழுப்புடிச்ச ரேசன் அரிசிய சாப்பிட்டுக்கிட்டு புள்ளயளுக்கு நல்ல அரிசி சமச்சிக் கொடுத்து... நல்லா படிக்க வச்சி... பொட்டப்புள்ளக்கி படிப்பெதுக்குன்னு செலுவிய படிக்க வக்காம நாளக்கி கஞ்சி ஊத்துவானுங்க... அரசாள வந்த ஆம்பளப்புள்ளன்னு படிக்க வச்சா.... எவளோ ஒருத்திக்காக ஒத்த ராத்திரியில எல்லாத்தயும் மறந்துட்டு....” பேசமுடியாமல் கோபமும் வருத்தமும் அழுகையும் அவரை அணைத்துக் கொள்ள, கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

“புரியுது மாமா...”

“இருங்க.... பேசிடுறேன்... எவளோ ஒருத்திக்காக எல்லாத்தயும் தூக்கிப் போட்டுட்டுப் போனான்... நான் கொடுத்த படிப்ப தூக்கிப் போடலயில்ல... அதுதானே அவனுக்கு இப்ப சோறு போடுது... எனக்கு அவ வேணும்... உங்க படிப்பு வேண்டான்னு சொல்லலையே... அப்ப அவன் பண்ணுனத சரியின்னு ஏத்துக்கணுமா...? சரி விடுங்க... இத்தன வருசத்துல நீங்கள்லாம் அவனச் சேக்கணும் சேக்கணுமின்னு நிக்கிறிய... ஒரு நா... ஒரு பொழுது... நா பண்ணுனது தப்புன்னோ... என்ன மன்னிச்சிடுங்கன்னோ இந்த வீட்டு வசல்ல வந்து நின்னிருப்பானா... நாந்தான் வைரி... புடிச்ச முயலுக்கு மூணு காலும்பேன்... ஆத்தா... அவ என்ன பண்ணுனா... எனக்குத் தெரியாம முந்தானயில முடிச்சி வச்சிருந்து காலேசுக்குப் போவும் போது செலவுக்கு வச்சிக்கன்னு கொடுத்து விடுவாளே... சுண்டக் கொழம்புன்னா அவனுக்கு உசிருன்னு மண் சட்டியில் எடுத்து பத்திரப் படுத்தி வச்சி...... சுடவச்சி... சுட வச்சிக் கொடுப்பாளே... கஞ்சிதான் குடிப்பான்னு அவனுக்காக தனியா கொஞ்சங் கஞ்சியாச்சும் வச்சி வப்பாளே... அவளக்கூட வந்து பாக்கணுமின்னு தோணலயே...”

“ம்...”

“என்ன மாப்ள... நா பேசுறது தப்புன்னா சொல்லிருங்க... பேசல...”

“இல்ல மாமா... இதுல தப்புன்னு சொல்ல என்ன இருக்கு... உங்க ஆதங்கத்த.... மனசுக்குள்ள போட்டு வச்சிருக்கிறத வெளிய கொட்டிடுறதுதான் நல்லது...”

“அந்த ஆத்தாவ இங்க வந்து பாக்கலன்னாக் கூட... சின்னவன் வீட்டுக்கு கூட்டியாரச் சொல்லியோ.... இல்ல உங்க வீட்டுல வச்சோ பாத்துட்டுப் போயிருக்கலாமுல்ல... என்னடா இப்படி பேசுறேன்னு பாக்காதீங்க... நீங்கள்லாம் அவங்கிட்ட பேசுறது எனக்கு எப்பவோ தெரியும்... எல்லாரும் நல்லாச் சேந்துக்கங்க... எனக்கொண்ணுமில்ல... ஆனா அவரு எதுவும் செய்ய மாட்டாரு... நாம அவருக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு கால்ல விழணுங்கிறீங்க... ஆமா இங்க தப்புச் செஞ்சது யாரு... அவனா... நாங்களா... நல்லாருக்கு மாப்ள உங்க ஞாயம்..?”

இராமநாதன் பதில் பேசாமல் அமர்ந்திருந்தார்.

அமேசானில் முழுவதும் வாசிக்க : நெருஞ்சியும் குறிஞ்சியும்

ணேஷ்பாலா அண்ணனின் படத்துக்கு கதை எழுதும் போட்டிக்கு எழுதிய கதைகள்... வாசித்து அங்கு லைக்கும் கருத்தும் இடுங்கள்...


நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 5 டிசம்பர், 2019

மனசு பேசுகிறது : ஜோதிஜியின் 5 முதலாளிகளுக்காக...

ஜோதிஜி அண்ணன் அவர்களின் 5 முதலாளிகளின் கதை அமேசான் கிண்டில் 'Pen to Publish - 2019' போட்டியில் இருக்கிறது. நானெல்லாம் கிண்டிலுக்குள் செல்வதே இல்லை என்றாலும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் பொருட்டு அதிலும் இணைந்தேன்... முதல் முயற்சியாய் என் நாவல் ஒன்றையும் இணைத்துள்ளேன். என்னால் ஜோதி அண்ணனின் புத்தகத்தை எடுக்க இயலவில்லை என்பதால் கிண்டில் Reader வைத்திருக்கும் நண்பர் மூலமும் முயற்சித்தோம்... அவராலும் எடுக்க இயலவில்லை. பல விதத்தில் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம்... வெற்றி மட்டும் இதுவரை கிட்டவில்லை... போட்டியில் அண்ணனுக்கு வெற்றி கிட்டட்டும்.

வாசிக்காத ஒரு புத்தகத்தைப் பற்றி என்ன எழுதுவது..?  

வாசித்து எழுதலாம் என்றுதான் இருக்கிறேன். இதுவரை அதற்கான முயற்சிகள் முயற்சிகளாகவே இருக்கின்றன... அதனால் மற்றவர்களிடம் கொண்டு செல்லும் விதமாக இக்கட்டுரை... இது வாசிக்காத ஒரு நூலுக்கான கட்டுரைதான்.

மற்றவர்களின் விமர்சனங்களை வாசித்த விதத்தில் திருப்பூருக்கு வந்தது முதல் இன்றுவரை தான் நேர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், அதன் பின்னான வெற்றிகள், சந்தித்த துரோகங்கள் என விரிவாய் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவரின் எழுத்து பற்றி நாமறிவோம்... அது எப்பவும் விவரங்களுடன் விரிவாய்ப் பேசும் எழுத்து... ஊருக்குப் போய் வந்ததைக்கூட மிக அழகான கட்டுரையாக்கும் ஆற்றல் படைத்தவர் அவர். எனவே 5 முதலாளிகளின் கதை... கண்டிப்பாக புதிதாக திருப்பூருக்குப் பணிக்குச் செல்வோருக்கு மட்டுமின்றி எல்லாருக்குமே பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. வாசிக்க வேண்டிய புத்தகமாக அது இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.

சில மாதங்கள் முன் எனது கறுப்பி என்னும் நாவலை அனுப்பி வாசிக்கச் சொன்னபோது அவர் வலைப்பூவில் எழுதிய ஒரு தொடரை வாசிக்கச் சொன்னார். ஆரம்ப காலத்தில் நானும் வாசித்து ஒரு வரியில் 'அருமை', 'நல்லாயிருக்கு' எனக் கடந்து போயிருந்த தொடர்தான் அது... அதை வாசித்து அது குறித்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி அனுப்பியதை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசியுங்கள்... அப்படியே கிண்டில் போட்டியில் இருக்கும் 5 முதலாளிகளின் கதையை இங்கே சொடுக்கிப் படித்து மதிப்பெண் கொடுத்து, முடிந்தால் உங்கள் கருத்தையும் அங்கு சொல்லுங்கள்... வெற்றி பெற்றதும் நமக்கெல்லாம் விருந்து வைப்பார். (படத்தையும் சொடுக்கி வாசிக்கலாம்)

Image result for ஜோதிஜி

இனி அவரின் கதையான 'ஒரு தாயின் மரண சாசனம்' வாசிப்பின் பின் அவருக்கு எழுதியது... அவரின் அனுமதியின்றி இங்கே...

அன்பின் அண்ணா.

தங்களின் 'ஒரு தாயின் மரணசாசனம்' முழுவதும் இன்று வேலையில்லை என்பதால் வாசித்து முடிக்க முடிந்தது.

நான் இங்கு வந்த, வலைப்பூ ஆரம்பித்த தருணத்தில் நீங்கள் எழுதிய பகிர்வு. நானும் வாசிக்கிறேன் என்பதைக் காட்ட ஒரு வரிக் கருத்து இட்டிருக்கிறேன்... பதிவைவிட வந்திருந்த கருத்துக்களும் அவர்கள் பேசிய விஷயமும் நீளமும் ஆழமும் கொண்டவை. எத்தனை விஷயங்களை அறிய முடிகிறது.

ஒரு பெண் தன் வாழ்க்கை குறித்து அறியாத ஆணிடம் பேசுதல் என்பது அவ்வளவு சீக்கிரம் நிகழ்வதல்ல... அவர் உங்களின் தொலைபேசி உரையாடலில் ஈர்க்கப்பட்டு உங்களின் முகத்தை வாசித்திருக்கக் கூடும். இவரிடம் நாம் பேசலாம் என்ற நிலையைத் தங்களின் முகம் அவருக்குக் கொடுத்திருக்கும்... அதனாலேயே வாழ்க்கைக் கதையை உங்களிடம் இறக்கி வைத்திருக்கிறார்.

கதையின் போக்கில் நகராமல் இடையிடையே செய்திகளையோ அல்லது வேறு பாதையிலோ பயணித்தல் என்பது என்னிடம் இருக்கும் குறைபாடு என்றே வைத்துக் கொண்டாலும் அந்த முறை கதை நகர்த்தல் எனக்குப் பிடிக்கும் என்பதாலே அப்படியே எழுதுவேன். அதை இரண்டாம் பாகத்திலும் மற்ற இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களிடம் காண முடிந்தது.

எழுத்து நடை உங்களுக்கு அசாத்தியம்... முதல் இரண்டு பாகங்களைவிட மூன்றாம் பாகத்தில் இருந்து நடையின் பின்னே வாசிப்பவரை ஓடவைத்த எழுத்து... கிரேட்... இப்ப எழுதும் பதிவுகளெல்லாம் ஜெட் வேகத்தில் உங்களிடம்.

எனக்கு இறுதிப் பகுதியில் அம்மாவின் கடிதம் வாசிக்கப்பட்டபோது அது செயற்கையாய் தெரிந்தது... அம்மாவின் கடிதம் என்பது உங்கள் எழுத்து நடையிலேயே போயிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அது ஏனோ இலக்கியமாய் எழுதப்பட்டது போல் இருந்தது.

ஆண்களுக்கு இடையே ஒரு பெண் வெற்றி பெற போராடத்தான் வேண்டியிருக்கிறது... அப்படிப் போராடியவள்... வாழ்க்கையில் கஷ்டப்பட்டவள் கதர்ச்சட்டையுடன் மனம் விரும்பி, மகளுக்கான வாழ்க்கைக்காக தன்னைக் கொடுத்தல் என்பது 'பாலியல் தொழிலாளி' என்ற வட்டத்துக்குள் வருமா...? பல ஆண்களுக்குத் தன்னை விருந்தாக்கி, வருமானம் பார்த்து வாழ்பவள்தானே பாலியல் தொழிலாளி..?

தான் உயர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எல்லாம் ஆண்களுடன் போராடத்தானே வேண்டியிருக்கிறது... எங்கள் அலுவலக அவலங்களைத்தான் உங்களை வாசிக்கச் சொன்ன கறுப்பியில், ரீமா என்னும் கதாபாத்திரத்தை வைத்துச் சொல்லியிருக்கிறேன். மலையாள சேச்சி ஒருவர் ரிஷப்சனிஸ்டாக பணி புரிந்த போது, கம்பெனி எம்.டியான  லெபனானி அவர் தோளில் கை போட்டு இழுத்து அணைக்கும் போதெல்லாம் அவரின் மன ஓட்டத்தை முகத்தில் காண முடியும்... வெட்கித் தகிப்பார்.

ஒருமுறை கம்பெனி பார்ட்டி ஒரு பார்க்கில்... அப்போது அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.. குடும்பம், குழந்தைகள் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொல்கத்தாக்கார மேனேஜர், 'வா இப்படியே பேசிக் கொண்டே பொயிட்டு வருவோம்...' என அவரைத் தனியாகக் கூப்பிட, நடக்க ஆரம்பித்ததும் அவரின் கையைப் பிடித்தார். உடனே சேச்சி எங்களைப் பார்த்து நீங்களும் வாங்க... எனக்கு இவன் கூட தனியாப் போக பயமாயிருக்கு என எங்களையும் அழைத்துச் சென்றார். பெண்கள் தங்களின் பாதுகாப்புக்கு இவர்கள் சரியானவர்கள் என்றால் தைரியமாக அருகில் வைத்துக் கொள்வார்கள்.

மகளை சரியான பாதைக்கு கொண்டு செல்ல அந்தத் தாய் செய்தது தியாகம்... மன்னிப்பு என்பது பொதுவானது... சில விஷயங்களுக்காக மன்னிப்புக் கோருதல்... அதுவும் தங்கள் மீதே தவறு என்றபோது கேட்பது என்பது சரியே... எதற்காக அவர் கடிதத்தில் அத்தனை மன்னிப்புக் கேட்கிறார்..? அவர் செய்த தவறு என்ன..? மகளை இந்த உலகத்தில் எதையும் எதிர்க்கொண்டு வாழும் பெண்ணாக வளர்த்ததற்காகவா...? கிழவனுக்கு கட்ட நினைத்த கணவனைப் பிரிந்து தைரியமாக வேறு ஊரில் வாழ்ந்து தன் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டதற்காகவா..?

இந்த இடத்தில் கறுப்பியில் (வாசித்தீர்களா தெரியாது) சொன்னதைச் சொல்கிறேன்.. எங்கள் வீட்டருகில் நடக்கும் கேவலம் அது... உங்கள் கதையில் அம்மா மகளுக்காக விலங்கொடித்து வெளிவருகிறாள்... ஆனால் இந்தக் கதையில் மூன்று பிள்ளைகளின் தாய்... தற்போது ஒருவனுடன் கூட்டு... அவனுடன் ஆட்டம்... அம்மணமாய் குடிசை வீட்டுக்குள் இருவரும் கிடக்க, முதல் பெண் திருமணமாகி குன்றக்குடி போய்விட மற்ற இரண்டு பிள்ளைகளும் (ரெண்டாவது பெண் வயசுக்கு வந்திருந்த நிலையில்) வெளியில் வெயிலில் இருக்குங்க... அதுகளுக்கு என் மனைவியே அடைக்கலம் கொடுப்பார்.

மூத்தபெண் கணவனுடன் சண்டையிட்டு வந்த சில நாளில் தான் கூட்டாக இருப்பவனின் ஆசைக்காக மகளையும் அவனுடன்... இரண்டாவது பெண்ணையும் அவன் கேட்க, அது எங்கள் வீட்டில் வந்து அழுதபோது என் மனைவி நீ உன் ஆயாவீட்டுக்குப் போவென பணம் கொடுத்து அனுப்பினார். நீங்கள் நினைக்கலாம் யாரும் தட்டிக் கேட்கவில்லையாவென... நாம் அவளுடன் சண்டை போட்டால் நம் முன்னே உடைகளைக் களைந்து அம்மணமாக நின்று நீ வாடா... வந்து... என்று ஆபாசமாகப் பேசுவார் என்பதால் எல்லாருக்கும் பேசப்பயம்.

இப்படியான பெண்களுக்கு மத்தியில் போராட்டக் குணமிக்க நிறைய தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்... உங்கள் கதையில் வரும் அம்மாவைப் போல... இந்த அம்மா தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள இப்படியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை... மகளின் வளமான எதிர்காலத்துக்கு... அவள் இந்தப் பூமியில் ஜெயிக்க... என மகளுக்காக மெழுகுவர்த்தி ஆகியிருக்கிறாள்... பாராட்டப்பட வேண்டியவள் அவள்.

இங்கே எங்கள் கதையையும் சொல்ல வேண்டும்... என் அம்மா போராட்டக்குணம் நிறைந்த பெண்மணிதான்.

நாங்கள் படிக்கும் காலத்தில் திருச்சி - பாடாலூரில் வேலை பார்த்த அப்பாவுடன் எனக்கு நேர் மூத்த அக்கா தங்கிப் படித்து வந்தது. அண்ணன்கள் இருவரும் வேலைக்குப் போய்விட நான் அம்மா தம்பி மட்டுமே ஊரில்... விவசாய, பள்ளிக் கட்டணம், பண்டிகைகள் என எதுக்குப் பணம் கேட்டு கடிதம்  போட்டாலும் பதிலே போடமாட்டார்... தேவகோட்டையில் மளிகைக்கடை, வட்டிக்கடை என இரண்டையும் குடியால் தொலைத்தவர்தான் என்றாலும் அப்போது குடியெல்லாம் விட்டுவிட்டார்... இப்போதும். ரொம்ப பாசக்காரர்... யாரையும் அதிர்ந்து பேசமாட்டார்... ரொம்ப நல்லவர் அதுவும் ஊருக்குள் சேது என்றால் அவரை மாதிரி மனுசனைப் பார்க்க முடியாது என்ற பெயரை இன்றளவும் தக்க வைத்திருப்பவர்தான் என்றாலும் அந்த நேரத்தில் ஏனோ பதிலோ பணமோ வருவதில்லை.

விவசாய வேலை, எங்களின் படிப்பு என எல்லாவற்றுக்கும் அண்ணன்கள் கொடுக்கும் பணத்தில்தான் செலவு செய்வார். எட்டாவது முடித்து ஒன்பதாவது தே பிரித்தோவில் சேர பரிட்சை எழுதி பாஸ் பண்ணிவிட்டேன்... பள்ளியில் சேர்க்கும் நாள் யாரிடமோ பணம் கடனாய்ப் பெற்று 'குமாரைக் கொண்டு போய் சேர்த்துவிட்டு வாங்களேன்' என என் உறவினர் முன் நின்றார். ஏனென்றால் 4 கிமீ நடந்து போக வேண்டும்... அப்ப 'இவனெல்லாம் படிச்சி என்ன பண்ணப் போறான்' என்பது போல் பேசினார் அந்த உறவினர். அந்த வைராக்கியத்தில்... வேகத்தில்... கோபத்தில்... 4 கிமி நடந்து கூட்டிப் போய் சேர்த்து விட்டார். எனக்கும் என் தம்பிக்கும் படிப்பு கிடைக்கக் காரணம் என் அம்மாவும் மூத்த அண்ணனும்தான்.

எப்பவும் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி வந்தவர்தான் அம்மா... இத்தனைக்கும் அவர் பிறந்த குடும்பம் பணக்காரக் குடும்பம்... எங்க மாமாவை அந்தக் காலத்தில் லண்டன் அனுப்பி படிக்க வைத்த ஐயா, பெண் குழந்தைகள் மூவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிட்டார். அம்மா திருமணமாகி வந்து மாமியார், நாத்தனார்கள், எங்க அப்பா என எல்லாரிடமும் பட்ட அவஸ்தைகளை அவமானங்களை எல்லாம் வீட்டு வாசலில் படுத்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை ரசித்து எண்ணியபடி பல நாள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மிகுந்த சிரம்மத்துக்கு இடையே ரேஷன் அரிசி, கேப்பைக் கூழ் என எங்களை வளர்த்தவர் அம்மா... எங்கள் வளர்ப்பில் அப்பாவுக்கு பெரும் பங்கெல்லாம் இல்லை என்றாலும் தங்கமான அப்பாதான்... அவர் எப்பவும் தன் தரத்தை குறைத்துக் கொண்டதில்லை... திருமணமான புதிதில் தாய் சொல்லைக் கேட்டவர், பின்னர் புரிந்து திருந்தி, அவர்களை விட்டு விலகி வாழ ஆரம்பித்திருக்கிறார். அப்பா அவரின் அம்மா (அப்பத்தா) பிறந்த வீட்டுக்குப் பிள்ளை வந்தவர்... அந்த வேதனை, வலிகளை அதிகம் அனுபவித்தவர்... அதனாலேயே எங்களை வீட்டோடு மாப்பிள்ளையாக்க வந்த வரன்களையெல்லாம் வேண்டாமென்று சொன்னவர். எங்களுக்கு படிப்புக்கு அப்பா துணை நிற்க்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் மற்றவர்களிடம் எப்படி நடக்க வேண்டும்... மூத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தவர் இப்போதும் சொல்லிக் கொடுப்பவர்.

சரி அண்ணா, எங்கயோ பொயிட்டேன்... பாதை மாறிட்டேன்னு நினைக்கிறேன்...

தங்கள் கதையும் , அதற்க்கு வந்த கருத்துக்களும் எனக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது.

நன்றி. 
****

அமேசான் கிண்டிலில் இருக்கும் ஐந்து முதலாளிகளின் கதையை வாசிக்கத் தவறாதீர்கள். உங்கள் மதிப்பெண்ணும் கருத்தும் போட்டியில் முதல் நூறுக்குள் இருக்கும் அவரை முதலிடத்திற்குக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.