மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 டிசம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 38

முந்தைய பதிவுகளைப் படிக்க...



---------------------------------

38. காதல் தொடருமா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்குச் செல்ல நிறைய விஷயங்களை எதிர்க்கொள்கிறார்கள்.

இனி...

ராம்கிக்குப் பின்னால் புவனா மறையவும் "ஏய் புவி என்னாச்சு...?" என்றான்.

"எதிர்த்த கடையில எங்க சித்தப்பா..."

"சித்தப்பாவா...?"

"ஆமா... திருப்பத்தூர் சித்தப்பா... அந்த வெள்ளைச் சட்டை... பாத்தா அம்புட்டுத்தான்..."

"சரி நீ போயி அவரைப் பார்த்துப் பேசிட்டு வா... இங்க நிக்கிறதைப் பார்த்தா பிரச்சினை ஆகும்..."

"அவரைப் பார்த்தா ஆயிரம் கேள்வி கேட்பார்... பேசாம ஆட்டோ பிடிச்சி அடுத்த ஸ்டாப்புக்குப் போயிடலாம்.."

"இல்ல புவி பேசிட்டு வா..."

"வேண்டாம்... வாங்க போகலாம்..." என்றபடி பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினாள்.

"எங்கடா பொயிட்டு வாறே?" வீட்டுக்குள் நுழையும் போதே கோபமாக கேட்டாள் நாகம்மா.

"அதான் சொன்னேன்ல... ஐயாவோட வேலையா போறேன்னு..."

"என்ன நொய்யா போட்டு ஆட்டுறீங்க... லீவன்னைக்கு கூட உங்களால வீட்டுல இருக்க முடியாதோ..?"

"இப்ப என்னம்மா... படிப்புச் சம்பந்தமாத்தானே ஐயா வீட்டுக்குப் போறேன்... என்னவோ சும்மா சும்மா அங்க போற மாதிரி கத்துறீங்க..."

"என்னடா பேச்சு நீளுது... ஆமா காரைக்குடிக்கு அய்யாதான் போகச் சொன்னாரா?"

"கா... காரைக்குடி...." ஆரம்பித்தவன் 'ஆஹா எவனோ போட்டு விட்டிருக்கான்... ஒருவேளை சேகரா இருக்குமோ... சரி சமாளிச்சாகணுமே' என்று யோசித்தான்.

"என்னடா ரோசனை... இவளுக்கு என்ன பொய் சொல்லலாம்ன்னா..?

"இல்லம்மா... காரைக்குடிக்கு ஐயாதான் போகச் சொன்னார்"

"அந்தாளு எவகூடவோ உன்னைய போகச் சொல்லியிருக்காரு..."

"ஏம்மா சும்மா எவ கூடவும் போகலை... தனியாத்தான் போனேன்."

"எங்கிட்ட பொய் சொல்லதே.. எவளோ ஒரு செவப்புத்தோலுக்காரியோட சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு வந்திருக்கே... முத்தக்கா அவுக சொந்தக்காரவுக முடியாம இருக்காகன்னு பாக்கப் போனப்போ உங்க ஊருவலத்தைப் பாத்திருக்கு..."

"அய்யோ அம்மா... அந்தப் பொண்ணு எங்க காலேசுப் பொண்ணு... பஸ்ல பார்த்தேன்... பேசுச்சு... அதை முத்தம்மா தப்பாச் சொல்லியிருக்கு..."

"எனக்கிட்ட பொய் சொல்லாதே... குடும்ப நெலமையை நினைச்சுப் பார்த்துப் படி... அம்புட்டுத்தான்... பொம்பளப்புள்ளகளோட சுத்துறது இன்னிக்கு இனிக்கத்தான் செய்யும்... நாளைக்கு படிப்ப முடிச்சிட்டு திண்டாடும்போதுதான் தெரியும். கஷ்டப்பட்டுத்தான் உன்னைய இம்புட்டுத்தூரம் படிக்க வக்கிறோம். எவளையாவது இழுத்துக்கிட்டு வந்து நிக்காதே... அம்புட்டுத்தான்... இனி நொய்யா வூடு... நொய்யா வூடுன்னு போறதை கொறச்சுக்க.... எனக்கென்னவோ அந்தப்புள்ள உங்க நொய்யா மகளா இருக்குமோன்னு மனசுல சந்தேகமா இருக்கு... புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்."

இதற்கு மேல் ஒன்றும் பேசக்கூடாது என்று நினைத்தபடி பேசாமல் உள்ளே சென்றவன், 'ஆஹா... பத்தவச்சிட்டாங்களே... எங்காத்தா இனி இதை விடாம ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிடுமே' என்று நினைத்தபடி தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

வாசலில் சைக்கிளை நிறுத்தியவள் வைரவனின் பைக் வெளியில் நிற்பதைப் பார்த்ததும் 'இவன் இன்னைக்கு வர்றதாவே சொல்லலையே... எப்ப வந்தான்' என்ற குழப்பத்துடன் படியேறினாள். 

"என்னடி... லீவன்னைக்கு எங்க போயி சுத்திட்டு வாறே?" கட்டிலில் படுத்திருந்த வைரவன் கேட்டான்.

"பிரண்டு வீட்டுக்குத்தான் போனோம்... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் போனோம்... நீ என்ன இன்னைக்கு வந்து நிக்கிறே... அங்கயும் எதாவது இழுத்துட்டியா?" என்றவள் அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் உள்ளே சென்றாள்.

"எங்கடி சுத்திட்டு வாறே?" அம்மாவும் இதே கேள்வியைக் கேட்க, "அம்மா.... சொல்லிட்டுத்தானே போனேன்... அப்புறம் நீயும் அவன் கேட்ட மாதிரியே கேட்கிறே..?"

"ஆமா காரைக்குடி பஸ்ல ஏறுனியாம்? பிரண்ட் வீடு காரைக்குடின்னு சொல்லலையே?"

"யாரு சொன்னா? நா ஒண்ணும் காரைக்குடிக்குப் போகலை..."

"யாரு சொல்லுவா... பாத்தவங்கதான் சொன்னாங்க... எதுக்குடி பொய் சொல்லிட்டுப் போனே..."

"இல்லம்மா... அது..."

"உன்னோட போக்கு சரியில்லை... பாத்து நடந்துக்க... அவன் வந்திருக்கும் போது இதை பெரிசாக்குனா... அந்தப் பையனுக்குத்தான் பிரச்சினை..."

"என்னம்மா... என்னன்னமோ சொல்றே... எந்தப் பையன்... யாருக்குப் பிரச்சினை..." ஒண்ணும் தெரியாதது போல் பேசினாள்.

"நடிக்காதடி... நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லையில்லைன்னு சொல்லிக்கிட்டு நீ என்னமோ பண்ணிக்கிட்டு வாறே.... இது எதுல முடியப் போகுதோ தெரியலை... பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு அவன் கூட காரைக்குடி வரைக்கும் போயிருக்கே... உங்கப்பாவுக்கோ அண்ணனுக்கோ தெரிஞ்சா அவனை வெட்டிப் போட்டுடுவாங்க... பிரண்ட்ஷிப்பை எல்லாம் காலேசோட வச்சுக்க... வயசுப்புள்ள... இன்னைக்கு சுத்திட்டு நாளைக்கு வேற மாதிரி ஆச்சின்னா எல்லாருக்கும் அவமானம்..."

"என்னம்மா... வேற மாதிரின்னா.... என்ன வேற மாதிரி... எதுக்கு உங்களுக்கு இந்த சந்தேகம்... நா யார் கூடவும் போகலை..." சொல்லி முடிக்குமுன் அம்மாவின் கை கன்னத்தில் இறங்கியது.

"அம்மா"

"என்னடி ஒம்மா...  உன்னோட சேர்க்கை சரியில்லை... எங்களை தலை குனிய வச்சிடாதே அம்புட்டுத்தான் சொல்லுவேன்...இன்னைக்கு நீ காரைக்குடிக்கு போனது உண்மை... போகலைன்னு பொய் சொல்லாதே... இதுவே பர்ஸ்ட்டும் லாஸ்டாவும் இருக்கட்டும்... எங்கே நீ அந்தப் பய கூட போகலைன்னு என்னோட தலையில அடிச்சி சத்தியம் பண்ணு பார்ப்போம்..."

"அம்மா... அது..."

"என்னம்மா... ரெண்டு பேருக்கும் என்ன சண்டை" வைரவன் வெளியில் இருந்து கேட்டான்.

"ஒண்ணுமில்லடா... சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்..." என்றவள் "இங்க பாரு.... எங்களை காலமெல்லாம் கண் கலங்க வச்சிடாதே... ஒவ்வொரு நாளும் அடி வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்டி... நீ அப்படித்தான் இருப்பேன்னு சொன்னா படிச்சது போதும்ன்னு உங்கப்பங்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பாக்கச் சொல்லுற மாதிரி ஆயிடும்... பாத்துக்க... "

சூழ்நிலையை கருத்தில் கொண்டு "சாரிம்மா... ஐயா வீட்டுக்குப் போறேன்னு சொன்னா திட்டுவீங்கன்னுதான் பிரண்ட் வீட்டுக்குப் போறேன்னு சொன்னேன்... இன்னைக்கு ஐயாவோடதான் காரைக்குடி போனோம்... ஐயா வீட்டுக்குப் போனப்போதான் அங்க போறது தெரியும்... ஐயா கூப்பிட்டப்போ தட்ட முடியலை... உங்கிட்ட சொன்னா திட்டுவேன்னு சொல்லலை... இனி இது மாதிரி நடக்காது..." என்றவள் வழிந்த கண்ணீரோடு அறைக்குள் சென்றாள்.

ரண்டு வீட்டிலும் விழுந்த சந்தேகப் பொறி தீவிரமாகிக் கொண்டே செல்ல, மணியும் புவனாவுக்கு காதல் இருக்கிறதா என தீவிரமாக விசாரித்தும் அவளுடைய காதலையோ காதலனையோ அவனால் தெளிவாக அறிய முடியவில்லை. ராம்கியும் புவனாவும் மிகவும் கவனமாக காதலை நகர்த்தி வந்தார்கள். கல்லூரிக்குள் இவர்கள் நல்ல நண்பர்களாகவே அடையாளம் காணப்பட்டதால் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

மாதங்கள் கரைந்து கொண்டிருக்க, ஒரு நாள் அதிகாலை போன் அலறவும் "ஒரு சைத்தான் கூட போனை எடுக்காதுக... எல்லாத்துக்கும் நாந்தேன் வரணும்..." என்றபடி போனை எடுத்த நாகம்மாள் "ஆத்தி.... எப்போ?" என்றாள் அதிர்ச்சியாக.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

ஆஹா இப்படி சஸ்பெண்ஸ் பன்ணிட்டீங்களே..எப்போ புதன்கிழமை வரும்னு இருக்கு!!

Unknown சொன்னது…

ஆஹா.............மாட்டினாலும்,தப்பிச்சுட்டாங்க.அருமையாக நகர்கிறது தொடர்.வாழ்த்துக்கள்!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown சொன்னது…

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுதான் ,அதுக்காக எங்களை புதன் வரை காக வைப்பது ,நியாயமா ?
+1

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
HOI சொன்னது…

பாஸ் கதையை சீக்கிரம் முடிங்க பாஸ் ஆர்வம் தாங்கல