மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 மார்ச், 2019

சினிமா : டூலெட் (TOLET)

Image result for டூலெட் படங்கள்
வீடு தேடி அலையும் படலமே செழியனின் எதார்த்த சினிமாவாய் வந்திருக்கிறது. அதிர வைக்கும் இசையில்லை... பாட்டில்லை... சண்டையில்லை... இப்படி எதுவுமே இல்லாமல் வாடகை வீட்டுக்காரனின் அதுவும் நிலையான சம்பளமில்லாதவனின் வாழ்க்கையைப் பேசியிருக்கிறது 'டூலெட்'.

சென்னையில் வாடகை வீடு தேடுதலும் தேடிக் கிடைத்த வீட்டின் உரிமையாளரிடம் படும்பாடுகளும் சொல்லிமாளாது. அதைச் சொல்லியிருக்கிறது ஒரு நடுத்த வர்க்கத்தானின் வாழ்க்கை கதை. இப்படித்தான் நடக்கிறது என்பதைத் தைரியமாக படமெடுக்கும் துணிச்சல் எல்லாருக்கும் வருவதில்லை. இப்போதைய தமிழ்ச்சினிமா சாதியின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வருவது என்பது எப்போதேனும் நிகழக்கூடியதுதான். அப்படியொரு நிகழ்வை இப்போது நிகழ்த்தியிருக்கிறார் செழியன்.

சினிமாவில் இணை இயக்குநராய் இருக்கும் நாயகன் இயக்குநராகும் கனவோடு சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்து அன்றாடம் கிடைப்பதைச் சம்பாரித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் கூடலும் ஊடலுமாய் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு அறிவுள்ள ஒரு மகனும் இருக்கிறான். வீடு பார்க்கும் படலத்தை அப்பனைப் போல அழகாய் விவரிக்கும் போது அவன் நம்மையும் ஈர்க்கிறான்.

'அடுத்த மாசம் வீட்டை காலி பண்ணிக்கங்க...' என்ற வீட்டு உரிமையாளினியின் உத்தரவின் பேரில் தங்களுக்கான... தங்களின் வருமானத்துக்குள்ளான வீட்டைத் தேடி அலைவதும்... அப்போது அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்... பிரச்சினைகள்... கார்ப்பரேட்டுக்களின் வளர்ச்சியால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது எல்லாமுமே படமாய் மலர்ந்திருக்கிறது.

சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பென்றால் அப்படியே சொல்லும் எல்லாவற்றுக்கும் பூம்பூம் மாடாய் தலையாட்டிவிட்டு குடி போனவுடன் வீட்டு உரிமையாளர் (பெரும்பாலும் பெண்கள்) போடும் உத்தரவுகளும் செய்யும் அடாவடிகளும் சொல்லி மாளாது. இப்படியான அனுபவம் எனக்கும் இருக்கிறது.

பத்திரிக்கையில் வேலை பார்த்த போது மனைவியையும் மகளையும் அங்கே கொண்டு வந்து விடலாம் என முடிவெடுத்து அலுவலகத்துக்குப் பக்கமாய் முகப்பேர் ஏரியாவில் நானும் என் நண்பர்கள் இருவரும் பணி முடிந்தபின் வீடு தேட ஆரம்பித்தோம். எத்தனை பேர்..?, குழந்தைகள் பெரியவர்களா... சிறியவர்களா..?, அடிக்கடி ஆட்கள் வருவார்களா...?, வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க... பிரண்ட்ஸ் அடிக்கடி வரக்கூடாது...? குறிப்பாக சிவகங்கை மாவட்டம் என்றதும் (செழியனும் சிவகங்கை என்பதால் இதில் நாயகன் ஊர் அதாய்த்தான் சொல்லப்படும்) 'என்ன ஆட்கள் நீங்க...?' என ஏகப்பட்ட கேள்விகளுடன் அவர்கள் கேட்ட வாடகை வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் என்ற நிலையில் பல வீடுகளைப் பார்க்கப் போய் பதில் சொல்லாமல் நகரவே வைத்துக் கொண்டிருந்தது.

தினம் தினம் அலைச்சல்... அவர்களின் கேள்வியில் எரிச்சல்... என எல்லாமாய் வீடு பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தைத் திணித்த நிலையில்தான் அந்த வீட்டில் டூலெட் போர்டைப் பார்த்தோம். கீழ் வீட்டில் குடியிருந்தார்கள். முதல் தளத்தில் வீட்டு உரிமையாளர்கள்... இரண்டாவது தளத்தில் வீடு காலியாக இருந்தது. அதற்கும் மேலே மொட்டைமாடியில் ஒரு சிறிய அறை... அதுவும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நாங்கள் சென்றபோது உரிமையாளரின் மகள் மட்டுமே இருந்தார். விபரம் கேட்டு அவரின் அம்மாவிடம் போனில் பேசினோம்.

'பாப்பாக்கிட்ட கேட்டோம்மா...' என்று ஆரம்பித்ததும் ' நான் ஒரு மணி நேரத்துல வருவேன் சார்... நீங்க வாங்க பேசிக்கலாம்... ' என்றார். சந்து போல் பயணித்து இருட்டில் படியேறி இருட்டாகவே இருக்கும் வீடு என்றாலும் இதுவரை பார்த்ததில் இது பரவாயில்லை என்பதால் சரியெனச் சொல்லி அதற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த நண்பரின் வீட்டிற்குப் போய்விட்டு சொன்ன நேரத்தில் மீண்டும் வந்தோம்.

'பாப்பா சொன்னா சார்... அவளுக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சு..., நீங்க பாப்பான்னு பேசுறது எனக்கும் பிடிச்சிருக்கு...' என்றவர் குலம், கோத்திரம் எல்லாம் விசாரித்து இவ்வளவு வாடகை... இவ்வளவு கரண்டுக்கு என்றபோது வாடகையைவிட கரண்ட் பில் கூட வருமோ என தலை சுற்றியது. அப்போதைய கட்டணத்தில் ஆறு மடங்கு...ஒரு வழியாகப் பேசி வாடகையில் சற்றே குறைத்து அட்வான்ஸும் கொடுத்துவிட்டு வந்துவிட்டோம். அட்வான்ஸ் வாங்கிய பின்னர் ஊரிலிருந்து சொந்த பந்தம் என யாரும் இங்கு வந்து அதிகம் தங்கக்கூடாதுங்க... தண்ணி பார்த்துத்தான் செலவு பண்ணனுங்க... சுவத்துல கிறுக்கக் கூடாதுங்க... காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க இருக்காங்க... அதிகம் பிரண்ட்ஸ் இங்க வரக்கூடாதுங்க... உங்க வண்டியை வெயில் மழையின்னாலும் வீதியிலதான் நிப்பாட்டனுங்கன்னு ஏகப்பட்ட 'ங்க' போட்டார். எல்லாத்துக்கும் பூம்பூம் மாடாய் நான்.

மனைவியை அழைத்து வந்த போது இந்த இருட்டுக் குகைக்கா இம்புட்டு ரூபாய்... உங்களுக்கு வேறு வீடே கிடைக்கலையாக்கும் என அலுத்துக் கொள்ள,  'அட ஏந்தா நீ வேற... நாங்க அலஞ்சி இந்த வீட்டைப் பிடிக்கப்பட்ட பாடு இருக்கே... அந்தப் பொம்பளைக்கு எங்களை எல்லாம் பிடிக்கலை... பாப்பான்னு சொன்னான் பாரு அதுதான் பிடிச்சிருச்சி... கொஞ்ச நாள் இருங்க பின்னால மாறிக்கலாம்' என நண்பன் வெங்கடேசன் சொன்னதும் சரி என அரைமனதாய் ஒத்துக் கொண்டார். 

அடுத்த மாச கரண்ட்பில்லுக்கான பணமும் தண்ணிக்கான பணமும் கேட்டபோது மூர்ச்சையாகி மீள நெடு நேரம் ஆகிவிட்டது. பத்திரிக்கையில் வேலை என்பதால் கொஞ்சம் அனுசரித்துப் பழக ஆரம்பித்தார் வீட்டின் உரிமையாளினி. சம்பளம் வர ரொம்ப லேட் ஆகும்.... பரவாயில்லைங்க வந்ததும் கொடுங்க என்றார். கீழ் வீடு காலியாகும் போது எனக்கு கீழ மாற்றிக் கொடுங்க என்றதும் கொஞ்சம் சேர்த்துக் கொடுங்க என உடனே மாற்றிக் கொடுத்தார். மனைவியிடம் ரொம்ப நெருக்கமானார். தொடர் மழை பெய்த போது வண்டியை உள்ளே வச்சிக்கங்க... உங்களுக்கு மட்டும்தான்... மத்தவங்கன்னா உள்ள வைக்கச் சொல்லமாட்டேன் என்றார். அதன்பின் வீடு காலி பண்ணும் வரை வண்டி உள்ளேதான். எல்லாத்துக்கும் காரணம் பத்திரிக்கையாளன் என்பதாகவும் இருக்கலாம் என்றாலும் டூலெட் சினிமா உரிமையாளர் போல அவ்வளவு ரப் அண்ட் டப்பாக இருக்கவில்லை அவர் என்பதே உண்மை.

வெளிநாடு போறேன் என்றதும் என் வீட்டு ராசிதான் என பெருமையாகச் சொன்னார். இப்ப இங்க படுற கஷ்டத்தைப் பார்க்கும் போது அந்த வீட்டு ராசிதான்னு அந்தம்மாக்கிட்ட போயி சொல்லணும்ன்னு தோணுது. சென்னை வந்தா வாங்க என்றார். ஒருமுறை சென்றபோது பார்த்தும் வந்தோம்.

வீட்டைப் பிடிச்சிருந்தா சொல்லுங்க ஒரு வாரத்துல காலி பண்ணித் தரச் சொல்றேன்னு மளிகைக்கடை அண்ணாச்சி சொன்னதும் வீட்டைப் பார்க்கப் போய் அதில் இரண்டு பெரியவர்கள் தள்ளாத வயதில் இருப்பதைப் பார்த்து பதில் பேசாது திரும்பும் இடத்தில் மனித நேயம் கவிதையாய்... ஒரு வீட்டை வாடகைக்கு விட சேட் செய்யும் அடாவடிகள் நிஜத்தை உரித்து வைத்தபடி... இப்படியே நிறையப் பேசுகிறது அதுவும் நிஜத்தைப் பேசுகிறது.

Image result for tolet tamil cinema image sheela

செமியனிடம் உதவியாளராய் இருந்த சந்தோஷை நாயகன் ஆக்கியிருக்கிறார். சரியான தேர்வு... கண்ணே கதையை பேசி, காட்சியை நம்முள் இறக்கிவிடுகிறது. மகிழ்ச்சி, வேதனை, கஷ்டம் என எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஷீலா... எனக்கு தலைமுடி அதிகமுள்ள பெண்களை எப்போதும் பிடிக்கும். அப்படித்தான் ஷீலாவையும் பிடித்துப் போனது... என்ன ஒரு தேர்ந்த நடிப்பு... கோபம். ஆத்திரம், துக்கம் என அடித்து ஆடும் அவர் சில நேரங்களில் காதலோடு கணவனைப் பார்க்கும்... அணைக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்திருக்கும் நடிக்கத் தெரிந்த நடிகை... சதையை மட்டுமே நம்பும் நாம் இவருக்கு வாய்ப்புக் கொடுப்போமா என்பது கேள்விக்குறிதான்.... கிடைத்தால் ஒரு நல்ல நடிகையாக வலம் வருவார்.

குட்டிப் பையன் தருண் படம் வரைகிறான் வீடெங்கும்... அப்பாவுக்கு செல்லப்பிள்ளை... கதை சொல்லும் இடத்தில் நம்மை அவனிடம் வீழ்த்தி விடுகிறான்.

சிட்டுக்குருவியும் நடித்திருக்கிறது... சுவரில் வரைந்த ஓவியங்களும் நடித்திருக்கின்றன... சன்னல் செடிகளும்... அந்த ஓட்டைப் பைக்கும் கூட நடித்திருக்கிறது.

செழியனின் ஒளிப்பதிவில் அந்த சிறிய வீடு ஒரு நடுத்தர வர்க்கம் தனது மகிழ்ச்சியை, சோகத்தை, கஷ்டத்தை, ஊடலை, கூடலை என எல்லாவற்றையும் அழகாய் தாங்கிச் சிரிக்கிறது. நம்மையும் அவர்களுடன் அந்த வீட்டுக்குள் உட்கார்த்தி வைக்கிறது.

படத்தில் குறையில்லையா என்றால் இருக்கிறது என ஒன்றைச் சொல்லலாம் வீட்டு உரிமையாளினியிடம் காட்டும் பவ்யம் சரி என்றாலும் வீடு பார்க்க வருபவர்களிடம் ஏன் கூனிக்குறுகி நிற்கிறார்கள் என்பது மட்டுமே குறையாய். மற்றபடி டூலெட் வீடு தேடி அலைபவனின் கஷ்டத்தை அப்படியே கண் முன்னே காட்சியாய் விரிக்கிறது.

அருமையான படம்... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

பல விருதுகளை வாங்கியிருக்கிறது.... விருது பெற்ற படமென்றாலே விலக்கித்தான் வைத்திருப்போம்... கொண்டாடப்பட வேண்டிய படமென்றாலும் கொண்டாடவில்லை என்பது வருத்தமே... இருப்பினும் செழியனுக்குள் இருக்கும் கதாசிரியன் ஒரு வாழ்க்கைப் படத்தின் மூலம் ஜெயித்திருக்கிறான். சாதியைச் சுமக்காமல்... இரட்டை அர்த்தத்தை தோளில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் அடுத்த படத்தில் இதைவிடக் கூடுதலாய் சாதிக்க வாழ்த்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 25 மார்ச், 2019

சிவகங்கை நிலையும் வாழ்க்கைக் கதையும்

ங்கள் சிவகங்கைத் தொகுதிக்கு ஒரு சாபக்கேடு எப்பவுமே... அது இந்த முறையும்... தொகுதியை ஒரு குடும்பத்துக்கு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்... அதிமுக போட்டியிடாததால் தற்போதைய எம்.பிக்கு வாய்ப்பில்லை, கூட்டணிக்கட்சி எச்.ராஜா பற்றி எல்லாருக்கும் தெரியும்... அமமுக வேட்பாளரை இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள்தான் தெரியும்... மநீமவின் சினேகனுக்கும் அப்படியொன்றும் வாய்ப்பில்லை... எது எப்படியோ ரெண்டு கூமுட்டைகளில் ஒரு கூமுட்டைக்குத்தான் வாய்ப்பு அதிகம்... எவன் ஜெயித்தாலும் எப்பவும் போல் சிவகங்கை மாவட்டம் அப்படியேதான் இருக்கப் போகிறது... வேலுநாச்சியார் ஆண்ட... மருதுபாண்டியர் ஆண்ட... அப்படின்னு நாங்க வரலாறுகளைப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்... காலக் கொடுமை, வேறென்ன சொல்ல.
-----------------
பிரதிலிபியில் எழுதாதே என்பது நண்பர்களின் வேண்டுகோளாய்... பெரும்பாலும் கதைகள் பகிர்வதில்லை... எப்போதேனும் இங்கு பதியும் பதிவைப் பகிர்வதுண்டு. போட்டிகளுக்கும் தொடர்ந்து எழுதுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் போட்டிக்கு எழுதுங்க என மின்னஞ்சல் செய்வதும் உண்டு. எழுதுவதுடன் சரி... அதை இங்கும் முகநூலிலும் மட்டுமே பகிர்வேன்... நமக்கு ஒரு கதையோ கட்டுரையோ கூடுதல் அவ்வளவே என்பதால் அப்படியே விட்டுவிடுதல் நலம் என்றே நினைப்பதுண்டு. 

அப்படியிருக்க 'காதலா... காதலா..' சிறுகதைப் போட்டியில் இருக்கும் கதை 4000 வாசகர் பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது போக 'நான் ஏன் எழுதுகிறேன்..?' என்பதாய் ஒரு போட்டி, அதற்கும் எழுதச் சொன்னார்கள். அதற்கு வரும் கருத்துக்கள் மனதிற்கு மகிழ்ச்சியாய்... நான் ஏன் எழுதுறேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் என்றாலும் வாசிக்க நினைத்தால் வாசியுங்கள்.

இந்தக் கட்டுரையை வாசித்த தம்பி ஒருவர் போனில் அழைத்து 'என்னண்ணே காதல் தோல்விதான் காரணம்ன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா, வாழ்க்கை அது இதுன்னு வலி சார்ந்து பேசியிருக்கீங்க...' என்றார். கதை எழுதணும்ன்னா காதல் தோல்வியாத்தான் இருக்கணும் என்பதாய் நினைத்தல் என்ன மனநிலையின்னே தெரியலை...  அப்படிக் காதல் தோல்வி என்றால் காதல் கதைகள்தானே வரும்... வாழ்க்கைக் கதை வருமா..?
-----------------
ன்னொரு சந்தோஷம் பிரதிலிபி மூலமாக, ஆம்... எனது 'தோஷம்','புரிந்து வாழணும்' என்ற இரண்டு கதைகளை ஒலி வடிவில் கொடுத்திருக்கிறார்கள். கதைகளை வாசித்த திரு,வசந்த் மிகச் சிறப்பாக வாசித்திருக்கிறார். அவருக்கு நன்றி. மொத்தம் 50 கதைகளில் எனது கதைகள் 2 என்பது மகிழ்ச்சி. அதுவும் முதல்முறை நம் எழுத்தை இன்னொருவரின் குரலில் கேட்பது வித்தியாச அனுபவமாய் இருந்தது. அதைக் காப்பி பண்ண முடியலை. இணைப்புத் தாரேன் முடிந்தால் கேளுங்க.


-----------------
டைப்பு குழுமத்துல ஒரு கவிதைப் போட்டி... அதுலயும் ஒரு கவிதை இருக்கு... கருத்துப் போட உங்க பேரும் மின்னஞ்சலும் கேட்க்கும் என்பதால் வாசித்து விட்டு மட்டும் வாருங்கள்..

-----------------
'அப்பா காண்டம்' என்ற குறும்படத்தை எடுத்த ஆரா என்பவர் யூடிப்பில் ரெட் ஸ்டுடியோ என்ற சேனல் நடத்துகிறார். அங்கு ஒரு சிச்சுவேசனுக்கு கதை சொல்லுங்க.. நல்லாயிருந்தா குறும்படமாகவோ, பெரிய திரையிலோ எடுக்கலாம் என்று சொல்லியிருந்தார். நண்பர் பரிந்துரைத்தார். அங்க போய் கிறுக்கினேன். அடுத்த நிமிடமே செல்போன் நம்பர் கேட்டார். வெளிநாட்டில் இருப்பதாய்ச் சொல்லி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் நம்பர் கொடுத்திருக்கிறேன்.  வெளிநாடு என்பதால் தொடர்பில் வருவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அங்கு கருத்துக்களில் இருக்கும் சின்னக் கதையை வாசிக்க...

-----------------
நேற்று ஒரு கதை எழுத நேரம் கிடைத்தது... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வாழ்க்கைக் கதை எழுத முடிந்தது. போட்டிகளுக்கான கதை எனும் போது பெரும்பாலும் தலைப்பின் கீழ்தான் எழுத வேண்டியிருக்கும்... அப்படி எழுதியதுதான் கணேஷ்பாலா அண்ணன் கொடுத்த படத்துக்கு எழுதிய கதை... அது மூன்றாம் பரிசை வென்றது. அதேபோல்தான் 'காதலா.. காதலா..' மற்றும் சு.சமுத்திரம் நினைவுப் போட்டிக்கு எழுதிய 'திருநங்கை' கதைகள் எல்லாமே... தலைப்பின் கீழ் எழுதப்பட்டன. நம் போக்கில் எழுதும் வாழ்க்கைக் கதைகள் எப்போதும் மனநிறைவைக் கொடுக்கும். அப்படியான கதை ஒன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்த்தது.

"செலுவப்பய மவன் நட்டநடுநிசியில வந்துருகானாமப்பே... ஊரெல்லாம் டமாரமாக் கெடக்கு... ஒனக்குத் தெரியாதுன்னுதான் வெளிய இருக்கப் போனவன் சொல்லிட்டுப் போகலாம்ன்னு இங்கிட்டு வந்தேன்..."

"ஆறு மணிக்கெல்லாம் ஊரு பூராம் பரவிருச்சாக்கும்... எனக்கெங்கப்பே தெரியுது... இங்கிட்டு தோட்டத்துப் பக்கம் வந்துட்டு ஊரு வெசயம் ஒன்னய மாதிரி ஆளுக யாராச்சும் சொன்னாத்தான் தெரியுது..."

"ஆமா அவளும் வந்திருக்காளாமா....?" என்றபடி மீண்டும் 'உருட்'டினார். 

"ஆமா குடும்பத்தோடதான் வந்திருக்கானாம்.."

"நீ பாக்கலயா...?"

"இல்ல.... பார்வதியக்கா... பால் வாங்க வந்தப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"ம்... செலுவம் வரச்சொல்லாமயா வந்திருப்பான்... என்ன தைரியமிருந்தா அவளயும் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்... சும்மா விடக்கூடாது... ஊர்க்கூட்டத்தைக் கூட்டி உண்டு இல்லன்னு பண்ணாம விடக்கூடாது.."

"அட இருப்பே... இன்னும் வந்திருக்கது அவன் மட்டுந்தானா... இல்ல அவளயும் கூட்டியாந்திருக்கானா... எதுக்கு வந்திருக்கான்... என்ன வெவரம்ன்னு எதுவுமே சரியாத் தெரியல... அதுக்குள்ள நாம அருவா எடுத்து... எப்படியும் இன்னக்கி வெசயம் வெளிய வந்துதானே ஆவணும்..."

"அட கூமுட்ட... நீதானே பார்வதியக்கா சொன்னுச்சுன்னு சொன்னே...." காபி டம்ளரைக் கட்டைச் சுவற்றில் வைத்தார். காத்திருந்த ஈக்கள் காபி குடிக்க டம்ளருக்குள் சண்டை போட்டன.

"அட அது ஒரு ஆக்கங்கெட்ட கூவ... ஒண்ணுக்குப் போக எந்திரிச்சி வந்துச்சாம்... அப்ப எறங்கிப் போனாவளாம்... இருட்டுல யார்யாருன்னு தெரியலன்னு சொன்னுச்சு..." என்றபடி வாயில் இருந்த போயிலை எச்சியை 'புளிச்'சின்னு தரையில் துப்பினார்.

மனசின் பக்கம் வேறு செய்திகளுடன் மீண்டும் வரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 20 மார்ச், 2019

'என் கதைகள் குறித்து...' - இராஜாராம்

டல் கடந்த தனிமைக்கு மருந்தாய் அமீரகம் கொடுத்திருக்கும் உறவுகள் அதிகம்... நலம் விரும்பிகளும் நல்லோர்களும் நட்பாய் அமைத்தல் வரம். எனக்கு அது வாய்த்திருக்கிறது. படிக்கும் காலத்தில் இருந்தே என் வாழ்க்கை நட்பால்தான் சூழப்பட்டிருக்கிறது... நட்பால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது...
கல்லூரியில் படிக்கும் போது சைக்கிளில் அம்மாவை அழைத்துக் கொண்டு தேவகோட்டை சென்றால் எதிர்ப்படும் நண்பர்கள் 'ஹாய்' எனக் கையைத் தூக்கிக் காட்ட, வீட்டுக்கு வந்ததும் 'போறவனெல்லாம் கை காமிக்கிறான்... எம்புட்டுப் பேரைத்தான் பழகி வச்சிருக்கோ' அப்படின்னு அம்மா சொல்லும்.  அது உண்மை... எப்பவுமே எனக்கு நட்பு வட்டம் மிகப்பெரிதாய்த்தான் இருக்கும்.
அப்படித்தான் அமீரகம் வந்து கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் அண்ணாவென சிலருடன் மட்டுமே இருந்த நட்பு இன்று பலருடன் விரிந்திருக்கிறது. அப்படிக் கிடைத்த நட்புக்களில் சகோதரர் இராஜாராம் எதோ ஒரு வகையில் மிகவும் நெருங்கமாகிப் போனார். 

இருவரும் 'அண்ணே...' என்றே அழைத்துக் கொள்வோம்... நாந்தான் மூப்பாக இருக்க வேண்டும். பொண்ணு 10வது படிக்குதே... :) இருப்பினும் பெயர் சொல்லி அழைக்கவோ, வா... போ... என்றழைக்கவோ எப்போதும்  நான் விரும்புவதில்லை என்பதால் அண்ணே... இல்லேன்னா வாங்க... போங்கதான்... (இதில் முருகன், தமிழ்க்காதலன் என சில விதிவிலக்குகள் உண்டு) எங்க வீட்டில் எங்களை அப்படித்தான் வளர்த்தார்கள். நாங்கள் அம்மாவை வா, போ என்போம். என் குழந்தைகள் அம்மாவையும் வாங்க போங்கதான் என்ற மரியாதையில்தான் அழைப்பார்கள்.
கதையா எழுதி வச்சிருக்கே... அதெல்லாம் ஒழுங்குபடுத்து சில கதைகளை புத்தகம் ஆக்கலாம் என கவிஞர் பிரபுவும், தம்பி நெருடாவும் சொல்ல, 50 கதைகளை எடுத்து பிடிஎப் ஆக்கி சிலருக்குக் கொடுத்தேன். எல்லாரும் வாசிக்கவில்லை என்றாலும் மூன்று பேர் முழுதாய் முடித்தார்கள். அவர்களில் இராஜாராமும் ஒருவர்... ஒவ்வொரு கதை குறித்தும் அதில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள் குறித்தும் பேசுவார்... கேள்விகள் கேட்பார்.
ரொம்ப மகிழ்வாய் இருக்கு... சொம்படிக்காத... உள்ளதை உள்ளபடி பேசும்... இப்படியான உறவுகள் எனக்கு நிறையக் கிடைத்திருப்பதில் சந்தோஷமே... இவ்வுறவுகள் தொடரவும் இப்படியான உறவுகளோடு இறுதிவரை பயணிக்கவும் எம்பெருமான் முருகன் துணை நிற்கட்டும்.
50 கதைகளின் வாசிப்புக்குப் பின்னர் முகநூலில் அவர் எழுதியது இங்கே...
*************
ண்ணே வணக்கம்ணே!
வணக்கம்ணே...!
இந்த மனுசனுக்கு வயசு கூடவா, குறையவானு தெரியல நானும் அவர அண்ணேனு சொல்லுவேன்., அவரும் என்னை அண்ணேனு சொல்றாரு நல்ல மனிதர். ஒரு மனுசன் யாரு? என்ன? நம்மள விட பெரியாளா, சின்னாளானு பாக்காம மனந்திறந்து ஏற்றத்தாழ்வின்றி மரியாதையாக பழகுவது நன்றுதானே! 

அது ஒரு புதிய அழகான, மரியாதை நிமித்த நட்பு வாசலை திறக்கும் என்பதில் எனக்கு என்றுமே சந்தேகம் வந்ததில்லை, குறிப்பாக நம்மோடு பழகும் நண்பர்களோ, நன்பர்கள் அல்லாத வயதில் பெரிய,சிறிய சகோதரர்களோ மரியாதை கலந்த நட்பு வட்டாரத்தில் ஒரு சிலரோடுதான் நட்பு வட்டம் விரிந்து நல்ல உறவுகளாகவே மாறும், அது நாம் பழகும்போதே அந்த நட்பின் மகத்துவம் எல்லோருக்குமே தெரிந்து விடும். 

இதில் பாலின பாகுபாடு இல்லை! நமது எல்லை எது என்பதை அறிந்தே அணுகும் பொழுது அது எல்லையற்ற பாசத்தையும், உறவுகளையும் தருகிறது. அந்த விதத்தில் அண்ணன் குமார் அவர்கள் அவரின் எழுத்துப் போலவே மிகுந்த மரியாதையான நபர்தான்! 

அருகில் இருப்பதால் அம்மனிதரோடு குணங்களையும் எழுத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அருகில் இல்லையென்றாலும், நடவடிக்கைகள் சரியில்லை என்றாலும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட விடயங்களை நாம் பகிரப்போவதில்லை, அதுபோல நிரம்ப உண்டு சொல்லிக்கொள்ளுமளவுக்கு. இது செம்படிக்கிறதுக்காக அல்ல! அதற்கான அவசியமும் எனக்கு நேர்ந்ததே இல்லை!

இந்த உறவுகள் வளர்ந்து நல்ல நட்பு வட்டம் விரிய எல்லா நல்லெண்ணங் கொண்ட உறவுகள் உடனிருக்கட்டும்!

அண்ணன் குமார் அவர்கள் வலைதளங்களில் நிறைய சிறுகதைகளை எழுதி வருகிறார், சில சிறுகதைகள் வார, மாத இதழ்களில் அச்சாகியும், வலைதளங்களில் பதிவேற்றம் செய்தும் வருகிறது. தற்சமயம் ஒலிப்பதிவாகவும் ஒரு சில வலைதளங்களில் அவரின் சிறுகதைகளை வெளியிடுகிறார்கள். அதில் நான் படித்த சிறுகதைகள் இரண்டும் ஒலிப்பதிவாக கேட்டேன். அதில் ஒரு வித்தியாசம் உணர்ந்தேன். 

எப்படியென்றால் ஒரு திரைப்படம் எடுக்கும்போது பிற்காலத்தில் இந்த படத்தின் பாடல்களையோ, அப்படத்தையோ அப்போதைய நவீனத்திற்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கான தகுதியை அப்படம் முழுமையாக பெற்றிருக்க வேண்டும். அந்த சமயத்தில் அந்த நவீனத்திற்காக அசலை மாற்றாமல் பொறுத்துவதற்கு... 

அது போல அண்ணன் குமார் அவர்களின் எழுத்தில் அந்த ஒலிப்பதிவில் எந்த கூடுதல் சேர்க்கையும், உதாரணத்திற்கு ஒரு எழுத்துக்கூட சேர்க்கவில்லை அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது! அவ்வளவு பொருத்தமான எழுத்துக்கு சொந்தக்காரர்.

அந்த வகையில் அண்ணன் குமார் அவர்கள் எழுதிய ஒரு ஐம்பது சிறுகதைகளை சிறிய ஆவண வடிவத்தில் எனக்கு அனுப்பி வாசிக்க சொன்னார்கள். இதை வாசிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது. பள்ளிக் காலத்துலதான் அரைகுறை, இப்பவாவது படிக்கிறத கவனமா பொறுப்போடு படிக்கனுங்கிறதுக்காக அதற்கான நேரந்தான் அதிகமாக நீடித்தது எதுவுமே புதிதல்ல..! 

நம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்த, கேட்ட, மற்றும் பார்த்த வாழ்க்கை முறைதான், அதை அவரின் எழுத்து எங்கேயுமே எல்லை மீறாமல் அழகாக கையாண்டிருக்கிறார். ஏற்கனவே அண்ணன் குமாரின் எழுத்துக்கு நான் ரசிகன்.

உதாரணமாக வெவ்வேறு எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான ஐந்து கதை இருக்கிறதென்றால் அதில் குமார் அண்ணன் அவர்களின் கதை எதுவென கண்டுபிடித்து விடுவேன். அதற்கும் அவருக்கே தெரியாத(அனேகமாக) அவரின் ஒரு சில எழுத்துநடை போக்கை அடையாள படுத்தி வைத்துள்ளேன். அதாவது "டைரக்டர் டச்" மாதிரி இவருக்கே உரித்தான "ரைட்டர் டச்" ஒன்று உள்ளது!

அதுபோல நமது கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்கள், கால்நடைகள், நமது திருவிழாக்கள், காதல், திருமணம், மரணம், உறவு, நட்பு, சாதி, மதமென எல்லாவற்றையும் உரசிப் பார்த்து செல்கிறது இந்த சிறுகதைகள்! 

எனது விருப்பமெல்லாம் இந்தக் கதைகள் எல்லாம் நூல் வடிவாக வரவேண்டும். நான்கு பிரிவுகளாக வரவேண்டும்! ஒவ்வொன்றும் மனித வாழ்வின் ஒரு அத்தியாயம். நமது நிறைய பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், விவசாயம் மற்றும் தெரியாத வட்டாரச்சொற்கள் நிரம்ப இருக்கிறது இந்த சிறுகதைகளில்... 

எல்லாவற்றையும் விரைவில் நூலாக கொண்டு வர வேண்டும்! 

அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்ணே!

((((()))))

ன் கதைகள் ஏதோ ஒரு வகையில் சோகத்தில்தான் பெரும்பாலும் முடியும்... மகிழ்வாய் எழுதுதல் என்பது எப்போதேனும்தான் எனக்கு வாய்க்கிறது. சோகமாய் ஏன் முடிக்கிறாய்.. சந்தோஷமாய் எழுது என்று என்னிடம் பலர் சொல்லியிருக்கிறார்கள். நாம் பார்த்து வாழ்ந்த வாழ்க்கையின் எதார்த்தங்களில் ஏது சந்தோஷப் பக்கங்கள்... என் கதைகள் எப்பவுமே எதார்த்த வாழ்க்கையைத்தான் பேசும்.

ரொம்ப நன்றி இராஜாராம்.
நேசத்துடன்
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 மார்ச், 2019

அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'

Related image
ழி -

கிழக்குப் பதிப்பக வெளியீடாய் வந்திருக்கும் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் நாவல்.

வாசிப்பின் போது காமமும் கொலைகளும் மட்டுமே கதை சார்ந்த களம் என்பதாய்த் தோன்றும்... நாவலை முடிக்கும் போதுதான் காசுக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பேசியிருக்கிறது என்பதை உணர முடியும்.

சில புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களைக் கடக்கும் போதே இதைத் தொடர்ந்து வாசிக்கத்தான் வேண்டுமா..? என்ற எண்ணம் ஒருவித அயற்சியை ஏற்படுத்தும்... பழியைப் பொறுத்தவரை அந்த எண்ணத்தை, அயற்சியைக் கொடுக்கவேயில்லை...  இடைநில்லாமல் இறுதிவரை ஒரு த்ரில்லர் சினிமாவைப் போல் விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.

அய்யனார் விஸ்வநாத் முடிவை முதலியே சொல்லி, முன்னும் பின்னுமாய் கதையை நகர்த்தும் வித்தைக்காரர்... ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் அள்ளி நிறைப்பதில் கில்லாடி... இதிலும் அப்படித்தான் கதை நகர்கிறது... ஆரம்பத்தில் ஒரு கொலை... பின்னர் தொழில்முறைத் தோழர்களுடனான வாழ்க்கைக் கதை ஒருபுறமும், தனித்த வாழ்க்கையும் விஜியுடனான உறவுமாய் மறுபுறமும் கதை பயணப்படுகிறது. 

தன் கையால் ஒருவனை அடித்தே கொல்கிறானே... அவ்வளவு வன்மம் ஏன்..? கொல்லப்பட்டவன் யார்..? அவனுக்கும் இவனுக்கும் என்ன பகை...? அவன் எதனால் இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்படுகிறான் என்பதைப் பழியை வாசித்து முடிக்கும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். அதுவரை கதை பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும், கொல்லப்பட்டவன் யாரென்பதைச் சொல்லாமல்... இறுதி அத்தியாயத்துக்குப் பிறகு மீண்டும் முதல் அத்தியாயத்தை வாசித்தால் என்ன என்று தோன்ற வைக்கும்.

பணத்துக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான்... காமமும் போதையுமாக கடந்து சென்று கொண்டிருக்கும்... பணம் கொடுத்தால் போதும் யார்..? எவர்...? என்பதெல்லாம் ரெண்டாம்பட்சம்தான். உயிருக்கு உயிராய் பழகியிருந்தாலும் பணம் என்னும் போதை ஆயுதத்தைக் கையில் எடுக்க வைக்கும்... அப்படியானவர்களின் வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது பழி. 

எவனுக்கோ ஒருவனுக்குத் தொழில் செய்வதில் அதிக பணம் கிடைக்காது... நாம சேர்ந்து தொழில் பண்ணலாம் என இணையும் நால்வரில் ஒருவன்தான் கதையின் நாயகன்... அவனே கதை சொல்லியும் கூட. 

குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல் கொலை செய்வதில் நால்வருக்குமே ஒரு சலிப்பு... திருந்திய வாழ்க்கை வாழ நினைக்கிறார்கள்.... அதற்காக இடம் விட்டு இடம் பயணிக்கிறார்கள்... அப்படியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்களா...? அவர்களை வாழ விட்டார்களா..? என்பதை மட்டுமல்லாது மனத்திருப்திக்காக நாயகன் ஒரு கொலை செய்கிறான்... அதை ஏன்... ஏதற்காக... யாருக்காகச் செய்கிறான் என்பதையும் கலந்து பேசுகிறது பழி.

விஜயலெட்சுமி - அழகி என்பதாய் சொல்லப்பட்டிருக்கலாம்... அவள் அங்கங்களின் வர்ணிப்புக்கள் அக்குவேர் ஆணி வேராய் பல பக்கங்களில்... தகதகவென மின்னினால்தான் நாம் அவளை அழகி என்போமா... விஜி கருப்பு அழகி என்றிருந்தாலே ஓரிதழ்ப்பூ துர்க்காவைக் கொண்டாடியது போல் கொண்டாட பல பிரபுக்கள் இங்கே உண்டு.

கட்டியவன் தனக்காகத்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாய் இருக்கிறான் என்ற நிலையில்... மருத்துவமனையில் கவனிக்க ஆளின்றி அம்மா கிடக்கிறாள் என்ற நிலையில்... கடற்கரையில் அவனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள்... குடிக்கிறாள்... ஆடை துறந்து அலைகிறாள்... அதிகம் பேசாத, பழகாத ஒருவனுடன் உடலைப் பகிர்கிறாள்... ஏன் இந்தப் பெண் இப்படி..? அவளுக்குக் கூட காமம்தான் வாழ்க்கையா...?

தனக்காக கொலை செய்தவன்... காமத்துக்காக மட்டுமே தன்னை நேசித்தவன்... என இருவருக்கும் மத்தியில் அவளை விபச்சாரியாக காலம் மாற்றி வைத்திருக்க... சுகம் கொடுத்தவனைக் காக்க, எவன் தனக்காக கொலை செய்தானோ அவன் அரிவாளுக்குத் தானே பரிதாபமாகப் பழியாகிறாள் விஜி.

விஜியின் வாழ்க்கை கெடுகெட்டுப் போக யார் காரணம்...? 

'ரெண்டு பொண்டாட்டி இருப்பது போல் ரெண்டு புருஷன் இருக்கக்கூடாதா..?', 'என்னை அம்மணமாத்தானே அலையவிட்டே... தாலி கட்டணும்ன்னு தோணலையே...?' என அவள் ஆயிரம் கேள்விகள் அவனிடம் கேட்கலாம்... ஆனால் கேள்வி கேட்காமல் அவனின் அணைப்புக்குள் ஆடை துறந்து இணக்கமாய் நுழைந்தவள்தான் இந்தக் கேடு கெட்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருக்க முடியும். அப்படியானால் விஜிதானே காரணம்.

ஜிகினாஸ்ரீ, ரஷ்யப் பெண், ஓனரம்மா, அவளுடன் வரும் பெண் என எல்லாப் பெண்களின் அங்கங்களும் விலாவாரியாக வர்ணிக்கப்படுகிறது. இவர்கள் எல்லாருமே காமத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் போல் கதையில் வருகிறார்கள். 

ஜிகினாஸ்ரீக்காக மட்டும் நாயகன் வருந்துகிறான்... அவளின் குழந்தை மனசுக்காக காக்க நினைக்கிறான். அவளைக் கொல்லும் முன் அவன் உள்பட மூவருடன் அவளே விரும்பி உறவு வைத்துக் கொள்கிறாள். அனுபவித்து முடிந்ததும் பணப்போதை அவளைக் கூறு போடுகிறது.

ஆந்திராவில் சென்னாரெட்டி உதவி செய்யும் இடங்கள் சினிமாப் பாணி... கொலை, பெண்கள் எனப் பயணிக்கும் கதையில் நாயகன் அய்யனாராய் ஆனபின் ஒரு தொய்வு... அய்யனார் என்றானபின் வேகமெடுக்காமல் ஆந்திராவில் ஒரு காட்டுக்குள் போய் கதை முடங்கிப் போகிறது... அதன் பின்னான கதை ஏனோ விறுவிறுப்பை இழந்து தவிக்கிறது அவனின் மனதைப் போல. 

தனித்துத் தொழில் செய்ய நினைப்பவர்கள் தலைமைக்குத் தெரியாமல் மதுரையில் கடை வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்வதென்பது ஒட்டவில்லை... சினிமாவில் மட்டுமே இது சாத்தியம்... நிஜத்தில் தலைமைக்கு விரோதமாய் விலகி எங்கு சென்றாலும் வெட்டப்படுவார்கள் என்பதே நிதர்சனம். 

அய்யனாரின் ஓரிதழ்ப்பூ போல் இதிலும் பெண்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல் தானகவே கள்ளக்கலவிக்கு உடன்படுகிறார்கள்... பெண்கள் எல்லாரும் அப்படியே என்பதாய் எல்லா பெண் கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல. 

அவன் எப்படிப்பட்டவன் என்றாலும் அவன் கேட்காது ஆடை துறந்து அணைத்துக் கொள்வார்கள் என்பது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. ஆசிரியரின் பார்வை ஏன் இப்படியே அவரின் எல்லாக் கதைகளிலும் பயணிக்கிறது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

ஆற்று நீருக்குள் இருக்கும் மணல் கூட ஒரு பெண்ணின் அங்கமாய்த் தெரிகிறது ஆசிரியருக்கு... பார்க்கும் பார்வையில் எல்லாமே பெண்ணின் உறுப்புக்கள் தெரிவதென்பது பெண் உடல் மீதான அதீதக் காதலா... அல்லது அதீதக் காமமா.... என்பது தெரியவில்லை. 

என் கதையில் காமம்தான் நாயகி என்பது எழுத்தாளரின் எண்ணம் எனில் ஏன் அப்படி ஒரு எண்ணம் என் மனதுக்குள் இருக்கு என்பதையும் அவர் சொன்னால்தான் உண்டு.

'உன்னாலதான் நான் இந்த இடத்துக்கு வந்தேன்..?', 'ரெண்டு புருஷன் கூடாதா..?' என ஒரு பெண் கேள்வி கேட்பதால் மட்டும் இதைப் பெண்ணீயம் பேசும் நாவல் என்று சொல்வதை எல்லாம் ஏற்கமுடியாது... இது முழுக்க முழுக்க காசுக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் மட்டுமே பேசுகிறது. ஆம் ஆணாதிக்கம்தான் நிறைந்திருக்கிறது. இதில் பெண் போகப்பொருளாய் மட்டுமே.

கதை நாயகனின் பெயரை கதை முழுவதும் சொல்லாமல் இறுதியில் சொல்லும் போது ஏன் அந்த இடத்தில் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை... செயற்கையாய் நுழைக்கப்பட்டது போல் இருக்கு... அதையே அவன் ஏமாத்திட்டான்.... நம்மள்ல ஒருத்தனைக் கொன்றதில் அவனுக்கும் தொடர்பு இருக்கு... அவனைப் போடணும் என நண்பர்கள் பேசுமிடத்தில்... அந்த அத்தியாயத்தின் இறுதியில் பெயரைக் கொண்டு வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் எனத் தோன்றியது என்றாலும் அய்யனார் என்பது இல்லாமல் இருந்திருந்தாலும் சிறப்பாய் இருந்திருக்கும்.

சினிமாவாக எடுக்கலாம் என நாவல் குறித்து எழுதும் எல்லாரும் தவறாமல் எழுதுகிறார்கள். சினிமாவாக எடுக்கலாம் என்றால் அய்யனார் ஆங்கிலத்தில்தான் எடுக்க வேண்டும்... இத்தனை கலவியும் இவ்வளவு வர்ணிப்பும் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக வெட்டப்படும். அப்படி வெட்டப்பட்டு விட்டால் கொலைகள் மட்டுமே மிஞ்சும்... அப்படியானதொரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது சந்தேகமே. அதனால் அய்யனார் ஹாலிவுட் பக்கம் போய்விடுங்கள்... உள்ளதை உள்ளபடி எடுக்கலாம்.

பரபரப்பாய் கதை சொல்வதில்... விறுவிறுப்பைக் கூட்டுவதில்... பெண் உடல் வர்ணிப்பில்... காமத்தைப் பக்கம் பக்கமாக எழுதுவதில் அய்யனார் கில்லாடி. அதை பழியில் பக்காவாய் கையாண்டிருக்கிறார். பரபரவென எழுத்தில் பறந்திருக்கிறார். 

வாசிப்பவர்களுக்கு பிடித்ததா... பிடிக்கலையா... என்பதை வாசித்து முடிக்கும் வரை யாரும் பேசவே மாட்டார்கள். அப்படி ஒரு அசரடிக்கும் எழுத்து. இந்த எழுத்துக்காகவே வாழ்த்துக்கள் அய்யனார்.

காமம் மட்டுமே இலக்கியம் ஆகாது... எல்லோராலும் காமம் கலந்து எழுத முடியாது. சிலரே அப்படி எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றாலும் சோற்றுக்குத் தகுந்த உப்பிட்டுச் சாப்பிடலாம்... ஆனால் ஒரு தட்டு உப்புக்கு சிறிதளவு சோறிட்டுச் சாப்பிடுவது என்பது முடியாத செயல்தானே.

தம்பி ஒருவர் சொன்னார் பெண்கள் எல்லாம் பழியைப் புகழ்கிறார்கள்... அதே போல் நாமும் எழுத வேண்டுமென... யார் யாருக்கு எப்படி எழுத வருமோ அப்படியே பயணித்தல்தான் நலம் பயக்கும் என்றேன் நான்... இது கத்திமேல் நடக்கும் முயற்சி... தவறினால் அவ்வளவுதான்... இந்த முயற்சியில் அய்யனார் வெற்றி பெறலாம்... எல்லாராலும் முடியாது என்பதே உண்மை.

அய்யனார் விஸ்வநாத்தைப் பொறுத்தவரை எழுத்தை ரசித்து எழுதும் எழுத்தாளன் என்பதை அவருடன் பழகுவதன் மூலம் அறிய முடிந்தது. அது தொடரட்டும்... ரசித்து எழுதும் எழுத்தே நீண்ட ஆயுளைப் பெறும்.

காமத்தைக் கொண்டாடலாம்... ஆனால் காமமே கொண்டாட்டம் ஆகாது என்பதையும் ஆசிரியர் நினைவில் வைத்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கலாம். செய்வாரா... அல்லது இதேதான் தொடருமா என்பதை அடுத்த நாவல்தான் சொல்ல வேண்டும்.

காமமோ... கொலையோ.... அய்யே... எனத் தள்ளி வைக்க வேண்டிய நாவல் இல்லை இது, அய்யனார் என்னும் எழுத்து அரக்கனுக்காக, அவரின் கதை சொல்லும் பாங்குக்காக பழியைக் கொண்டாடலாம்... கொண்டாடனும்... கொண்டாடுவோம்.

வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத்.

பழி-
அய்யனார் விஸ்வநாத்
கிழக்குப் பதிப்பகம்
பக்கம்  : 168
விலை  : 200 ரூபாய்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 18 மார்ச், 2019

மனசு பேசுகிறது : 'அன்பின்' சீனா ஐயா

Image result for சீனா ஐயா

நாம் அறிந்த மனிதர்களின் சமீபத்திய மரணங்கள் நம்மைப் புரட்டிப் போட்டு விடுகின்றன. அப்படியான நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்தல் என்பது வேதனையைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. அப்படியானதொரு மறைவு நம் வலைச்சரம் சீனா ஐயாவினுடையது.

நம்மை எல்லாம் இணைத்தது இந்த எழுத்துத்தான்... அதுவும் குறிப்பாக வலையுலகம்... அங்கு எழுத ஆரம்பித்த பின்னர்தான் உலகளாவிய அளவில் ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, தோழன், தோழி என விரிந்தது உலகம். அப்படி விரிந்ததில் கிடைத்தவர்தான் சீனா ஐயா.

'வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் இருக்க முடியுமா..?' எனக்கேட்டு விதிமுறைகள் அனுப்பி 'அன்பின்' சீனாவாய் மனசுக்குள் அமர்ந்தவர். எத்தனையோ பேரை ஆசிரியராக்கி, எத்தனையோ பேரை பலருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர். 

இந்த வார ஆசிரியர் யார்..? நம்மை ஏழு பதிவில் எதாவது ஒன்றில் அறிமுகப்படுத்துவாரா..? என எல்லோரும் ஆவலாய் வாசிக்கும் தளமாய் வலைச்சரம் இருந்தது.

ஒருமுறை ஆசிரியரானதைத் தொடர்ந்து நல விசாரிப்புக்கள், குழந்தைகள் குறித்த விசாரிப்பு என மின்னஞ்சலில் உறவை வளர்த்து வந்தவர் சீனா ஐயா. இந்த வாரம் ஆசிரியராக வேண்டியரால் முடியாத நிலை அதனால நீங்க இருக்க முடியுமா..? என உரிமையுடன் மின்னஞ்சல் செய்வார். 

மூன்று முறை ஆசிரியர் பொறுப்புக் கொடுத்திருக்கிறார். பதிவுகள் குறித்து தனிப்ப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்வார். பல முறை பலரால் அறிமுகப்படுத்தப்பட்டவன் நான் என்பதில் பெருமை எனக்கு உண்டு. அதனால்தான் மனசு குமராய் பலர் மனதில் இடம் பிடித்திருக்கிறேன்.

அதன் பின்னான அன்பின் தொடர்ச்சியால் எங்களின் இல்லப் புதுமனை புகுவிழா குறித்துச் சொன்னபோது எப்படியும் நான் வந்துவிடுவேன் என்றார். அவருக்கு அன்றைய தினம் நிறைய விஷேசங்கள் இருந்தபோதும் சொன்னபடி மதியத்துக்கு மேல் அம்மாவுடன் வந்து வாழ்த்திச் சென்றார்.

அவர் சற்று தளர்ந்தபோது வலைச்சரமும் தளர்ந்து போனது என்பதே உண்மை. அதன் பின் அது எழவேயில்லை... யாருமே எடுத்து நடத்த நினைக்கவும் இல்லை என்பதே வேதனைதான். 

நண்பர் தமிழ்வாசியிடம் பேசும்போது வலைச்சரத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் எனப் பேசினோம். ஏனோ அதைச் செயல்படுத்த முடியாமல் போனது. இப்போது வலைப்பூக்களும் 2008-2014 காலகட்டத்தில் இருந்தது போல் இல்லை... இன்றைக்கு முகநூல், டுவிட்டர் என மக்கள் நகர்ந்து விட்டது கூட காரணமாக இருக்கலாம்.

எப்போது மின்னஞ்சல் அனுப்பினாலும் அதில் என் பேத்தியும் பேரனும் நலமா என ஸ்ருதி, விஷாலைக் குறித்துக் கேட்காமல் இருக்க மாட்டார். சிறியவர் பெரியவர் என வித்தியாசமெல்லாம் பாராது எல்லாருடனும் புன்னகையுடன் நட்பைக் கொண்டாடியவர் அவர்.

மதுரைக்கு அடிக்கடி செல்லும் நிலையில் இருந்தும் கூட அவர் உடல்நலமில்லாது இருந்தார் என்பதை அறியவோ, நண்பர் தமிழ்வாசியைத் தொடர்பு கொண்டு போய் பார்க்கவோ செய்யவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

எங்கு சென்றாலும் அம்மாவுடன்தான் செல்வார் என்று கேள்விப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்கும் இருவரும் வந்துதான் வாழ்த்தினார்கள். அவரின் மறைவு அம்மாவுக்கு மிகப்பெரிய வேதனையை வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருக்கும். அதிலிருந்து அவர் மீளவேண்டும் என்று சொல்வதைவிட அந்த வேதனையத் தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

தமிழ், எழுத்து, நட்பு என பரவலான பாதையில் பயணித்த ஐயாவின் மரணம் வலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு. பிறக்கும் போதே இறக்கும் தேதியை எழுதி விடுகிறான் இறைவன். இன்னும் கொஞ்சக்காலம் இருந்திருக்கலாம் என நாம் ஆறுதலாய்ப் பேசினாலும் வந்த வேலை முடியும் போது எல்லாரும் செல்லத்தானே வேண்டும்.

அமைதியாய் ஓய்வெடுங்கள் ஐயா...

நீங்க ஊற்றிய தமிழ் என்னும் தண்ணீர் இன்னும் வலைச்சரத்தின் வேரில் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் நினைவாய்... வலைச்சரத்தை மீண்டும் தொடர்ந்து இயக்க முயற்சிகள் மேற்கொள்வோம் ஐயா.

உங்கள் ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தினர் இந்த பேரிழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா.

ஐயா... நினைவிருக்கும் வரை நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள்.

மறக்கக்கூடிய பெயரா இது.

'அன்பின்' சீனா

போட்டோவுக்கு நன்றி : கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் பதிவில் வந்தது... கூகுளார் மூலம் கிடைத்தது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 6 மார்ச், 2019

மனசின் பக்கம் : பல கதைகள் பேசலாமே

சில விஷயங்களைப் மனம் திறந்து பேசுவதே மனசின் பக்கமும் மனசு பேசுகிறதும். இதில் ஒரே விஷயம் என்றால் மனசு பேசும், அதே பல கலவை என்றால் மனசு பக்கமாய் மலரும். இங்கு மலர்ந்திருப்பது மனசின் பக்கம்.

உறவு சொல்லும் கதை

தேன்சிட்டு மின்னிதழில் தொடர்ந்து எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கிவரும் நண்பர் 'தளிர்' சுரேஷ்க்கு நன்றி. இந்த மாதம் வெளியான கதை சென்ற மாதமே அனுப்பியது. அடுத்த மாதம் பயன்படுத்திக் கொள்கிறேன் இந்த மாதம் காதலர் தினம் என்பதால் காதல் கதை ஏதாவது கொடுங்கள் என கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் சொன்னபடி 'உறவு சொல்லும் கதை'யை இந்த மாதம் பயன்படுத்தியிருக்கிறார். தேன்சிட்டு பிடிஎப் அவரின் வலையில் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை இங்கு தவறாமல் சொல்லுங்கள்.


ஸ்ரீராம் அண்ணனைப் பொறுத்தவரை, உரிமையுடன் கேட்டு கதைகளை வாங்கி தன் தளத்தில் அதற்கென ஒருநாளை ஒதுக்கி வாராவாரம் ஒருவர் என சிறப்பாக பகிர்ந்து, மனம் திறந்த கருத்துக்களை நட்புக்கள் சொல்ல, நம் எழுத்தைச் செம்மையாகும் முயற்சியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்தச் செவ்வாய் எனக்கான நாளாய் அமைந்தது. என் கதைக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி அண்ணா... கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி... எல்லாரும் வாசிச்சிருப்பீங்க... வாசிக்காதவங்க தலைப்பைக் கிளிக்கி எங்கள் பிளாக் போங்க... வாசிங்க... உங்க கருத்தைச் சொல்லுங்க.

விமர்சனம்

ஒரு புத்தகம் விமர்சனத்தின் பின்னே சில கசப்பான நிகழ்வுகள்... இனி இங்கிருக்கும் நட்பு வட்டத்தின் புத்தகங்கள் குறித்தான விமர்சனம் செய்யக் கூடாது என்ற நிலையை எடுக்க வைத்துள்ளது. அதுவும் நல்லதுதான்... நம் விமர்சனத்தால் அந்தப் புத்தகம் விற்கப்போவதில்லை... எழுத்தாளரின் எழுத்து நல்லாயிருக்கும் பட்சத்தில் விற்பனையில் அடித்து ஆடப் போகிறது... பின் ஏன் உண்மையைப் பேசுறேன்னு நாம எழுதணும்.

திருநங்கை

லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் 'நான் சரவணன் வித்யா' வாசித்தேன்... ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை விரிவா எழுதணும்... திருநங்கைகள் குறித்த சிறுகதைப் போட்டிக்கு கதை எழுதி, அனுப்ப இருக்கும் எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களைச் சொன்னது... நல்ல புத்தகம் இந்த வார இறுதியில் விரிவான பதிவாய் எழுதுவோம்.

தடம்

தடம் படம் பார்த்தேன்... வித்தியாசமான படம்... நல்ல த்ரில்லர்... இயக்குநர் மகிழ்திருமேனி பாராட்டுக்குறியவர். இது குறித்தும் விரிவாய் எழுதணும்... பார்ப்போம்.

பார்வைகள் பலவிதம்

கணேஷ் பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் ஒரு படம் கொடுத்து கதை எழுதுங்க புத்தகம் பரிசு தாரேன்னு சொன்னார். ஆளாளுக்கு எழுத, நானும் எழுதியிருக்கிறேன். நடுவர்களின் தேர்வில் வெற்றி பெற்று புத்தகம் பெறுமா தெரியாது என்றாலும் எப்பவும் போல் உணர்ச்சிக் கதையாய் இல்லாமல் ரொம்ப ஜாலியா கதை சொல்லியிருக்கிறேன். முடிந்தால் தலைப்பைக் கிளிக்கி வாசிங்க.

மரணம் உணர்த்திய பாடம்

சமீபத்திய மரணம் ஒன்று வாழ்வைக் குறித்து அதிகம் யோசிக்க வைத்து இருக்கிறது. என்ன செய்திருக்கிறோம் குடும்பத்துக்கு நாம் என எண்ணங்கள் அலை மோத ஆரம்பித்துவிட்டன. இங்கு நகரும் வாழ்க்கையில் கடனும் தீராது... கஷ்டமும் தீராது என்பதே உண்மை... யாரிடம் பேசினாலும் எதோ இரு அழுத்தத்தின் காரணமாகவே இங்கிருப்பதாகச் சொல்வதைக் கேட்கலாம். இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை தூரம்..? எத்தனை காலம்..? யோசிக்க வைக்கிறது.

இலக்கிய வட்டம்

நிறைய இலக்கியம் பேசும் நட்புக்களை இங்கு சில மாதத்தில் பெற்றிருக்கிறேன். மணிக்கணக்கில் நிறைய பேசமுடிவது மகிழ்வே என்றாலும் வாழ்க்கையின் இன்னல்கள் மனப் போராட்டத்தையே கொடுத்துக் கொண்டிருக்கின்றன... எதிலும் ஒட்ட முடியா நிலை... எனது கதைகளின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தினமும் அழைத்து அது குறித்து விவாதிப்பது மகிழ்வைக் கொடுக்கிறது.

காதலா... காதலா...

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கதை... இதுவும் ஜாலியான கதைதான். இதுவரை 2200 பேருக்கு மேல் வாசித்து போட்டியில் முன்னணியில் இருக்கும் கதைகளுடன் களத்தில் நிற்கிறது. வாசிக்க நினைத்தால் தலைப்பைக் கிளிக்கி வாசியுங்கள்.

கதையாசிரியன் விஷால்

விஷால் பள்ளியில் ஆங்கிலத்தில் கொடுத்த தலைப்புக்கு சின்னதாய் ஒரு கதை எழுதி மூன்றாம் பரிசும் சான்றிதழும் பெற்றிருக்கிறான். எப்பவாச்சும் நான் கதை எழுதியிருக்கிறேன் பாருங்க... என வாசிப்பான். அவனின் அம்மா, அப்பா மாதிரி நீயும் கதை எழுதுறேன்னு ஏன்டா வெறுப்பேத்துறே படிக்கிற வேலையைப் பாருடா எனத் திட்டினாலும், என்னைப் பொறுத்தவரை ஐந்தாவது படிக்கும் அவனின் செயலை பாராட்டுவதுதான் பிடிக்கும் அது எதுவாகினும். கதை எழுதி பரிசு வாங்கினேன்னு வீட்டில் சொன்னதும் அப்ப அப்பாவுக்கு நீதான் போட்டியாக்கும் என அவனின் அக்கா கேட்க, ஆம் என்றிருக்கிறார். திறமைகள் இருக்கட்டும்... வாழ்வில் எப்பவும் போல் பிறரை மகிழ்விப்பவனாக இருந்தால் போதும்.

மீண்டும் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 4 மார்ச், 2019

மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி

Image result for மரணம்
ரணம்...

யாராலும் தள்ளிப் போட முடியாதது... 

எல்லாரும் ஒரு நாள் எதிர்க்கொள்ள வேண்டியதுதான்... அது எங்கே, எப்படி, எப்போது நிகழும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. 

மனிதன் பிறக்கும் நாளைப் போல் இறக்கும் நாளும் தெரிந்திருந்தால் இந்தப் பேராசை, வன்மம், கோபமெல்லாம் இல்லாது போயிருக்குமோ என்னவோ... அல்லது இவ்வளவு நாள்தான் வாழ்வோம் என்பதால் அதற்க்குள் வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்து விடுவோமென இன்னும் அதிகமான பேராசையுடன் வாழ்வோமோ என்னவோ.. தெரியவில்லை.

இப்போதெல்லாம் காலன் சுழட்டும் கயிறு பெரும்பாலும் இளம் வயதினர் மீதுதான் விழுகிறது. சமீபத்தில்தான் உறவில் ஒரு பையனை விபத்தில் இழந்தோம்... அதன் பின் மற்றொருவன் நண்பனின் புது புல்லட்டை ஓட்டிப் பார்க்கிறேன் என விபத்தில் மரணித்தான். இப்படியான மரணங்கள் வலியையும் வாழ்க்கை மீதான பயத்தையுமே கொடுக்கின்றன. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம் என்ற கேள்வி மனசுக்குள் சுழன்றடிக்க ஆரம்பித்து விட்டது.

இங்கும் அடிக்கடி இப்படியான இளவயது மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு வந்த புதிதில் எங்கள் தளத்தில் தங்கியிருந்த சென்னைப் பையன் திருமணமான ஆறு மாதத்தில் தாயையும் தன்னை நம்பி வந்தவளையும் தவிக்க விட்டுவிட்டு அதிகாலை கழிப்பறைக்குள் மாரடைப்பால் மரணித்தான்... அவனைக் கொன்றது விடாத குடி.

இங்கு நிகழும் மரணங்களுக்கு முக்கிய காரணியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சொல்கிறார்கள் என்றாலும் வேலைப்பளுவின் ஆதிக்கமும் மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி வைத்துக்கொள்ளும் கஷ்டங்களும்தான் பலரைக் கொன்று வருகிறது என்பதே உண்மை. அதேபோல் அதீத குடியும் கொல்லத்தான் செய்கிறது.

இரு தினங்களுக்கு முன் ஒரு மரணம்... 41 வயதில் மாரடைப்பால் மரணித்துள்ளார் எல்லாருடனும் மிகுந்த இணக்கத்துடன் இருந்த அபுதாபி தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான சோலையப்பன் அவர்கள். 'மரணிக்கும் வயதா இது..?' என்பதே எல்லாருடைய வாயிலிருந்தும் வரும் வார்த்தையாய் இருக்கிறது. மரணத்திற்கு வயதேது... பிறக்கும் போதே இறப்பும்... இளவயது... முதுமை... நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தபின் இறப்பு என மரணம் எல்லா நிலையிலும் இருக்கிறது.

சோலையப்பனைப் பார்த்ததில்லை... பேசியதில்லை... இருந்தும் அவரின் மரணம் மனசுக்குள் இன்னும் அழுத்திக்கொண்டே இருக்கிறது. முகநூலில் பல நண்பர்கள் இரங்கலைப் பகிர்ந்தார்கள்... எனக்கு ஏனோ மனம் வரவில்லை... நேற்று முழுவதுமே ஓரே அழுத்தம்... கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டே இருக்கிறது...

'பார்த்துப் பேசாத நபருக்காகவா அழுதாய்..?' என்ற கேள்வி எழலாம். என் அழுகையெல்லாம் ஒரே ஒரு முறை பார்த்த அவரின் ஒன்பதாவது படிக்கும் மகனுக்கானது. வாழ்வின் வெறுமையை தந்தையின் இழப்பில் உணர்ந்திருப்பானே என்பதை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்த்துளி தயாராய் நிற்கிறது.

ஒரு வாரம் முன்புதான் அவரின் மனைவி மற்றும் மகனுடன் துபையில் நடந்த நூல் வெளியீட்டுக்கு நெருடா, ராஜாராம், பால்கரசு, நௌஷத் மற்றும் சுடர்விழியுடன் சென்றோம். செல்லும் வழியில் டீக்குடிக்கலாம் எனக் கார்களை நிறுத்தி இறங்கியபோதுதான் சிறிய அறிமுகம் அவர்களுடன்...

அப்போது 'அண்ணே.. இவன்கிட்ட பேசியிருக்கீங்களா'..? என்ற நெருடா, 'மிகுந்த அறிவானவன் அண்ணே... இவனுக்கிட்ட நாம பேசி ஜெயிக்க முடியாது' என்றார். அந்த நேரத்தில் 'எங்க விஷால்கிட்ட கூட என்னால பேச முடியலை... இந்த மாதிரி பசங்ககிட்ட எல்லாம் பேசுறதில்லை' எனச் சிரித்துக்கொண்டே சொல்லிக் கடந்தேன். அவனும் அவனது சிரிப்பும் எனக்கு விஷாலை நினைவூட்டியது.

ஒரு புரோட்டா வேணும் என்று அம்மாவிடம் கேட்டவனுக்கு மற்றவர்களிடம் சொல்ல மிகுந்த சங்கோஜம்... அம்மா சொல்லி... அதன் பின் யோசித்தே நெருடாவிடம் சொன்னான்... அப்படிப்பட்ட குழந்தை அப்பாவை இழந்திருக்கிறது. இந்த இழப்பை எப்படி அவன் தாங்குவான்..? ஊரில் உறவுகளுடன் வாழும் வாழ்க்கைக்கும் இங்கு உறவுகளற்று வாழும் வாழ்க்கைக்கும் எத்தனை வேறுபாடு..? எத்தனை நண்பர்கள் இருந்தாலும்... ஆறுதலாய் அணைத்தாலும்... உறவுகளின் கைகளுக்குள் இறுகிக் கிடக்கும் போது துக்கத்தின் தன்மை குறையும்தானே... அது இல்லாது இந்த மூன்று நாளாய் அம்மாவும் மகனும் எவ்வளவு துக்கத்தை அடைத்து வைத்திருப்பார்கள் என்பதை நினைத்தாலே வாய்விட்டு அழுவது நலம் என்று தோன்றுகிறது.

அப்பாவின் திடீர் மரணம் அந்தப் பிஞ்சு உள்ளத்துக்குள் எத்தனை தாக்கத்தை உண்டாக்கியிருக்கும். அதிகம் பேசவில்லை.... பழகியதில்லை என்றாலும் அவனும் நம் பிள்ளைகளைப் போல்தானே... மனசு ஆறவில்லை... பார்த்திராத சோலையப்பனின் மரணத்தை எப்போதும் போல் கடந்து வந்துவிட்டாலும் அந்தக் குழந்தையின் முகம் மனசுக்குள் பாரத்தைச் சுமக்க வைக்கிறது... நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் துளிர்க்கிறது. என்ன செய்வது..? மரணம் சொல்லாமல்தானே வருகிறது. வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பியவர் இப்படியாகும் என்று நினைத்திருப்பாரா..? அல்லது அப்பா நம்மை விட்டு நிரந்தரமாகப் போகப் போகிறார் என்பதை அவன் உணர்ந்திருப்பானா..?

புத்தக வெளியீட்டுக்கு வந்த அவரின் மனைவி, நாகாவின் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டபோதும் அதன் பின்னான நிகழ்வுகளிலும் புன்னகையோடு வலம் வந்தாரே... ஒரே வாரத்தில் இப்படியான ஒரு நிகழ்வு, அவரை அடியோடு மாற்றிப் போட்டு விட்டதே... இதை எப்படி அவரால் தாங்க முடியும்..? இப்படியான மரணங்கள் மரணித்தவரின் நிழவில் வாழ்ந்தவர்களைக் கொல்லாமல் கொன்று விடுகிறதே.

நெருடாவிடம் பேசும் போது அப்பாவைச் சடலமாக மருத்துவமனையில் வைத்திருக்க, அழுவதால் என்ன நிகழும்... அழாவிட்டால் என்ன ஆகும்... என்ற மனநிலையில் இந்த வயதில் பறிகொடுக்கக் கூடாததை பறிகொடுத்த நிலையில் 'இதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணப் போறேன்..?' என்றான் அந்த பதினாலு வயதுக் குழந்தை என்றார். கேட்கும் போது வந்த கண்ணீர், இப்ப இதை இங்கு எழுதும் போதும் எழுகிறது. என்ன பதில் சொல்ல முடியும் இந்தக் கேள்விக்கு... அப்பாவின் ஆசைப்படி படித்து நீ பெரியாளாக வேண்டும் என்ற ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வதால் என்னாகப் போகிறது..?  அப்படியான பசப்பு வார்த்தைகள் அவனின் கேள்விக்குள் பொதிந்து கிடக்கும் அழுத்தத்துக்கு மருந்தாகுமா..?

அன்றிரவு ராஜாராமுடன் பேசும் போது அறைக்குள் அமர்ந்திருந்த அந்தப் பையனைப் பார்க்கப் போனேன் அண்ணே... அவன் என்னைப் பார்த்த பார்வையில் 'என்னைய இப்படி நிப்பாட்டி வச்சிருக்கீங்களேடா..' என்பதுதான் தெரிந்தது. அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை... கொஞ்ச நேரம் கூட பார்க்க முடியவில்லை வெளியே வந்துட்டேன் என்றார் அழுகையுடன்... எப்படிப் பார்க்க முடியும்..? ஒரு நாள் சில மணி நேரம் தனித்தனிக் காரில் பயணித்த என்னால் தாங்கமுடியாத நிலையில், தொடர்ந்து சில வருடங்களாக நட்புக்களாய் பயணிக்கும் ராஜா, பாலா, நெருடாவால் எப்படித் தாங்க முடியும்..?

இரண்டு நாட்களாக அவன் முகமே மனதில் நிறைந்து நிற்கிறது... நினைக்கும் போதெல்லாம் 'நம் குழந்தை போல்தானே அவன்' என்பதாய் கண்ணீர் கசிகிறது. படுத்தாலும் அவன் நினைவே கொல்கிறது... இறந்த சோலையப்பனை மறக்கச் செய்கிறது 'இதுக்கு அப்புறம் நான் என்ன செய்யப் போகிறேன்..?' என்ற கேள்வியும் 'என்னைய இப்படி நிறுத்திட்டிங்களேடா' என்ற பார்வையும்.

மனசுக்குள் மகிழ்வு, கோபம், ஆற்றாமை என எல்லாவற்றையும் அழுத்தி வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கையே இங்கு பெரும்பாலானோருக்கு வாய்த்திருக்கிறது. எங்கே, எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நொடியும் அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் செல்லும் இளவயது மரணங்கள் இல்லாது போகட்டும்.

குழந்தைகளுக்கு என்ன செய்து வைத்திருக்கிறோம்..? 

திடீர் இழப்பு என்றால் அவர்களால் அதிலிருந்து மீள முடியுமா..? 

எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் கடனில் உழலும் வாழ்க்கையை அவர்கள் மீது சுமத்திவிட்டால் எப்படி மீள்வார்கள்...?

என்பதையெல்லாம் மனசுக்குள் ஓடவைக்கிறது அந்த பாலகனின் முகம்.

எத்தனை ஆண்டுகள் இங்கு வாழ்ந்தாலும் கடனும் கடமைகளும் துரத்திக் கொண்டேதான் இருக்கும்... குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கும்... அதை இந்த மரணமும் அந்தப் பையனின் வார்த்தையும் பார்வையும் இன்னும் அழுத்தமாக்கியிருக்கிறது.

மரணம்... 

ஒருவனைக் கொண்டு சென்று அவனை நம்பியிருக்கும் குடும்பத்தைக் கொல்லாமல் கொல்கிறது.

பத்துநாள் முன்பு மகிழ்வாய் ஊருக்கு வந்து திரும்பிய சோலையப்பன் இன்றோ நாளையோ சவப்பெட்டிக்குள் ஊருக்கு வரலாம். சில நாளில் நாம் அவரை மறந்தும் போகலாம். அதுதான் இயற்கை என்றாலும் இதன் பின்னான வாழ்வில் மிகச் சிறப்பான எதிர்காலத்தை அந்தக் குழந்தைக்குக் கொடு இறைவா என்று பிரார்த்திப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை.

சகோதரர் ராஜாராம் சோலையப்பனின் மரணம் குறித்து முகநூலில் எழுதிய வரிகள்  இது...
'தேரா யிறைவா 
சேரா தருணத்திலே 
நேரா மரணமளித்து 
தீரா சோகத்தில் 
ஆழ்த்திவிட்டாயே!

மீளா துயரம் 
தாளா உயரம் 
பாரா முகமாக 
ஆரா நினைவை 
அளித்து விட்டாயே!'

சோலையப்பனின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்தினர் மிகப்பெரிய இழப்பில் இருந்து மீண்டு வரவும், அந்தக் குழந்தை மிகச் சிறந்த வாழ்க்கையை வாழவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.