மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 நவம்பர், 2019

தெரிசை சிவாவின் 'குட்டிகோரா'

Image result for குட்டிகோரா

'குட்டிகோரா'

சகோதரர் தெரிசை சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

சில பல காரணங்களால் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்களின் புத்தகங்களுக்கு விமர்சனம்... விமர்சனம் என்பதைவிட வாசிப்பின் அனுபவத்தை எழுதுவதில்லை என்ற விரதத்தைத் தீவிரமாக கடைபிடித்து வருகிறேன் என்றாலும் சிவாவின் முதல் புத்தகம் குறித்தான வாசிப்பு அனுபவத்துக்காக சற்றே அதைத் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.... ஏனென்றால் கதையின் மொழிநடை நாஞ்சில் வழக்கு என்றாலும் கதைக்களம் எனக்கு மிகவும் நெருக்கமான கிராமத்து மனிதர்களின் வாழ்வியல். 

'எழுத்து எனக்கான ஒரு ஆர்ப்பரிப்பு... நான் கண்ட எளிய மனிதர்களின் மறுதலிப்பு... எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்... நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும் என் கதை மாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள்... காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால் என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன்.'

இது தன்னுரையில் சிவா சொல்லியிருப்பது... மண்ணை நேசிக்கும் ஒரு மனிதனுக்குள்தான் மண்ணின் மைந்தர்கள் கதை மாந்தர்களாய் வலம் வருவார்கள்... வலம் வரமுடியும்... குட்டிகோராவில் அப்படித்தான் வருகிறார்கள்... வாழ்கிறார்கள்... நம்மை வசப்படுத்துகிறார்கள்.

கதைகள் குறித்து  இப்படியிருக்கு... அப்படியிருக்கு... என்றெல்லாம் விரிவான விமர்சனம் எழுத வேண்டியதில்லை... ஒவ்வொரு கதையும் எழுத்தாளனின் எண்ணத்தில் உதிக்கும் போது அழகாக, அருமையாக உதித்திருக்கிறது... சிறப்பாகவும் வந்திருக்கிறது. ஒரே மாதிரிக் கதைகளாக இல்லாமல் கலவையாய்க் கதைகளைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு சோகத்துக்குப் பின் கண்ணீர் வருமளவுக்குச் சிரிப்பு... சிரித்து முடிந்ததும் வழுக்கிச் செல்லும் பாசம்... பாசத்தில் குளித்து எழுத்தால் சமூகச் சாடல் என மாறி மாறி ஆடிக்காற்றாய் சுழன்றாடி இருக்கிறார் ஆசிரியர். 

சடலச்சாந்தி போன்ற கனத்த கதையைச் சுமக்கும் புத்தகத்தில் முடியன் போன்று வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் கதையுமிருக்கு... குட்டிகோரா போன்ற வாலிபக் கதையுமிருக்கு... தோசை போல சமூக தீவிரத்தைச் சொல்லும் கதையுமிருக்கு... ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களத்தில்... எல்லாவற்றிலும் பேசும் மொழி ஒன்றே என்றாலும் ஒவ்வொன்றும் பேசும் விதம் மாறுபட்டதாய்... அசரடிக்கும் எழுத்து நடைக்கு ஆரம்பத்திலேயே வாழ்த்துச் சொல்வதில் தப்பொன்றும் இல்லையே... வாழ்த்துக்கள் சிவா.

கதைகள் எப்படியிருக்கு...? 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்... பதம் சரியாகவே இருக்கு... இன்னும் சொல்லப் போனால் பாயாசம்ன்னா அறவே பிடிக்காது என்றாலும் பால்பாயசம்ன்னா கொஞ்சம் விருப்பமாய் சாப்பிடுவேன் என்று சொல்லும் என்னைப் போன்றோருக்கு இது பால்பாயாசம்... 

சரி கதை எப்படியிருக்கு...? 

தித்திப்பா இருக்கு.... ஆனா திகட்டலை... அதுதான் முக்கியம்.... திகட்டத் திகட்டச் சாப்பிடுவதைவிட, சாப்பிட்டபின் நாவில் தித்திப்பு தங்கியிருப்பதுதான் சுவை... அந்தச் சுவை துளியும் குறையவில்லை. வாசிப்புக்குப் பின் தித்திப்பு நிச்சயம்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் கடற்காகம், வேற்று திசை, மலையாளத் திரையோரம் போன்ற புத்தகங்களின் வெளியீடு நிகழ்வு அன்று துபை வரை செல்ல வேண்டிய வேலை... அங்கு சென்ற பின் விழாவில் கலந்து கொள்ள வாருங்கள் என நெருடாவின் அழைப்பு... இன்று வரை திக்குத் தெரியாத காடுதான் துபையெல்லாம் எனக்கு... அபுதாபி எனக்கு தேவகோட்டை, காரைக்குடி மாதிரி... சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்திடுவேன்... துபையே தரிகிணத்தோம் எனும்போது ஷார்ஜா எப்படிப்  போவதுன்னு யோசனை... அப்புறம் பாலாஜி அண்ணாவை நெருடாவும் நானும் மாறி மாறிப் போனில் தொந்தரவு செய்ய, முடிவில் மெட்ரோவுல மைதானம் நிறுத்தம் வந்துரு... நான் வந்து அள்ளிக்கிறேன்னு சொன்னார். அப்படியே அள்ளிக் கொண்டார்.

அவரின் காரில் புத்தகக் கண்காட்சி நடக்கும் இடம் நோக்கிப் போகும் போது 'தம்பி சிவாவோட குட்டிகோரா வாசிச்சேன்டா.... அப்பப்பப்போ சிரிச்சி மாளலை... உடம்பு முடியலைன்னு வீட்டுல படுத்துக்கிட்டு இதைப் படிச்சி சிரிச்சா... வீட்டுல ஒரு மாதிரிப் பார்க்குறாங்க....' என ஆரம்பித்தார். அப்போதே அவர் முகத்தில் எப்போது இருக்கும் சிரிப்பின் அடர்த்தி கூடியிருந்தது.

'ஆமாண்ணே... நானும் ஒரு சில கதைகள் படிச்சேன்... நல்லாயிருந்துச்சு... ரசிக்க வைக்கும் எழுத்து நடை...'

'ஆமாடாம்பி... அந்த நெல்லைப் பேச்சு வழக்குத்தான் கொஞ்சம் நமக்குப் புதுசுங்கிறதால கொஞ்சம் எடறுச்சு... மத்தபடி ரசனைதான் போ... இலக்கியவாதிகளுக்கான மூணு கதை தவிர, மற்றதெல்லாம் ரொம்ப நல்லாயிருந்துச்சு...'

'ம்... நீங்க ரசிச்சி எழுதியிருந்தீங்க... பார்த்தேன்...'

'அதுலயும் பாரு.... முடியன்னு ஒரு கதை... ஹஹ்ஹாஹா.... சிரிக்க முடியலடா தம்பி... ஆடும் சுடலைமாடனும் பேசுற மாதிரி... நம்ம பக்கம் கருப்பன், முனியன்னு இருக்க மாதிரி அவய்ங்க ஊருல சுடலைமாடன்... சுடலைக்கு வெட்ட நேர்ந்து விட்ட ஆட்டுக்கும் நாலு வருசத்துக்கு ஒருமுறை திருவிழாவைப் பார்க்கிற சுடலைக்கும் நடக்குற பேச்சு வார்த்தைதான் கதை... வரிக்கு வரி சிரிக்கலாம்...'

'அப்படியா..? முதல் கதையான தோசை வருத்தமான முடிவைக் கொடுத்தது... சடலச்சாந்தி கூட ரொம்பவே யோசிக்க வைத்தது... முடியன் இன்னும் வாசிக்கலை....'

'சடலச்சாந்தியெல்லாம் ரொம்பச் சோகமான முடிவோட வருத்தப்பட வைக்கும்... ஆனா இது வடிவேலு நகைச்சுவை மாதிரிப் படிச்சிட்டு வச்சிட்டு நினைச்சி நினைச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்...'

'ம்...'

'சுடலை நிக்கிறதைப் பார்த்து நடிப்புல நீரு சிவாஜியை மிஞ்சிடுவீரு ஓய்ன்னு ஆடு சுடலையைப் பார்த்துச் சொல்லும்டா தம்பி... சிரிச்சேன் பாரு விழுந்து விழுந்து சிரிச்சேன்....'

நானும் சிரிச்சேன்... எங்க ஊரு அய்யனாருகிட்ட வெள்ளாட்டங்கிடாய் சொல்வதாய் நினைத்து...

'உனக்கு என்னை வெட்ட இருப்பதாகவும் என்னைப் பலி கொடுக்கப் போறாங்க... அதுல இருந்து தப்பிக்க நீதான் ஏதாவது வழி சொல்லணும் என சுடலைக்கிட்டயே ஆடு சொல்லும்... அதுக்கு அவரு தலையில தண்ணி ஊத்தும் போது தலையை ஆட்டாதேன்னு சொல்வாரு... யாரு நானு... தலைய தண்ணிக்குள்ள அழுக்கி காதுல எல்லாம் தண்ணி போக வைப்பாங்க... அப்ப தலையை ஆட்டாம... செரித்தான்... ஆமா நீ ஆட்டாம இருப்பியான்னு திருப்பிக் கேக்கும்.... உடனே சுடலை யோசிச்சி உடம்புல ஒச்சம் இருந்தா வெட்டமாட்டாகன்னு சொல்லிக் கொடுக்கும்... ஹா...ஹா..ஹ்ஹா... அவுக ரெண்டு பேரும் பேசுறது வரிக்கு வரி சிரிப்புடா தம்பி...' என்றார்.

'அப்புறம் எழுதியிருப்பாரு பாரு... கவட்டுக்கு கீழே... அதான் ரெண்டு காலுக்கும் இடையில சூடம் வைப்பாங்க... எங்கே உடுத்தியிருக்கிற ஒத்த வேட்டியில பிடிச்சிருமோன்னு சுடலை பயந்து நிப்பாருன்னு எழுதியிருக்காரு... சுடலைக்கு இருக்கதே ஒத்த வேட்டிதான்னு நினைச்சப்போ சிரிப்பை அடக்க முடியலை... அப்புறம் திருப்பதி வெங்கடாஜலபதியாப் பிறக்கணும்ன்னு சுடலை நினைக்கும் ஏன்னா அப்பத்தான் பணக்கார சாமியாயிருக்கலாம்ன்னு யோசிக்குதாம்... ஹாஹ்ஹா... சிரிச்சி மாளலை தம்பி... வீட்டுல எல்லாரும் தூங்குறாய்ங்க... இதை மறுக்கா மறுக்கா படிச்சி எந்திரிச்சி உக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...'

ஷார்ஜா போகும் வரை குட்டிகோராதான் காருக்குள் சுற்றிச் சுற்றி வாசனையைப் பரப்பியது. ஒரு மனிதனை இவ்வளவு ரசிக்க வைக்கும் எழுத்து எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... இந்தளவுக்குச் சிலாகிக்கிறார் என்றால் அக்கதை எந்தளவுக்கு இருந்திருக்க வேண்டும்... அப்படித்தான் இருந்தது முடியன்.

இன்று முடியனை வாசிக்கும் போது சிவாஜியை மிஞ்சிடுவீரு ஓய்ல அலுவலகம் என்பதையும் மறந்து சிரித்தேன். சாமிக்கு முன்னாடி நின்னு சண்டை போட்டுப் பேசும் மனிதர்களைப் பார்த்து இருப்போமில்லையா அப்படித்தான் இங்கே ஆடு... அதான் முடியன். ஆடு பேசும் போது எனக்கு ஊர்ல திரியிற கிசும்பு பிடிச்ச ஆள் பேசுவது போலத்தான் இருந்தது.

குட்டிகோரா பவுடரின் மணம் எப்படியிருக்கும்...? அப்படித்தான் இருந்தது குட்டிகோரா கதையும்... சற்றே வித்தியாசமான கதை...  பேண்ட் கோபக்கார அப்பாவுக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் இருக்குன்னு சொன்ன கதை...  நருவல் எதார்த்தம்... உலக்கருவி அமானுஜ்யம் நிறைந்த பரபரப்பாக நகரும் கதை... ஆசானும் மலையாளப் பேய்களும் ரசிக்க வைத்த பேய்க்கதைகள்... இன்னும் இன்னுமாய் தோசை, அண்டி, அணுகுண்டு, கும்பாட்டக்காரி,வெத்தலப்பெட்டி என எல்லாமுமே ஒவ்வொரு சுவையில்.

சடலச்சாந்தி கதை கதைசொல்லி பவாவுக்கு ரொம்பப் பிடித்துப் போக, பொன்னீலன்-80 விழா மேடையில் கதையை முழுவதுமாய்ச் சொல்லியிருக்கிறார்... இதுதான் இவ்வெழுத்து சிவாவுக்குக் கொடுத்திருக்கும் பரிசு... இன்னும் சிறப்பான கதைகளைப் படைக்க இவையெல்லாம் ஊக்கம் கொடுக்கும் படிக்கற்கள்... பாலாஜி அண்ணனின் பாராட்டுப் போல் பாராட்டுக்களே ஒரு நல்ல எழுத்தாளனை மேலும் மேலும் முன்னே பயணிக்க வைக்கும்.

உதிரம் தா...

உதிரம் தா...

என்பதைப் போல இன்னும் பல கதைகளைத் தா... கதைகளைத் தாவெனச் சொல்ல வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சிவா.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உட்புறம் மற்றும் உரை

குட்டிகோரா - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

வாழ்த்துக்கள் சிவா...

விரைவில் உங்கள் நாவலை வாசிக்கும் ஆவலுடன்.

குட்டிகோரா
தெரிசை சிவா
எழுத்து பதிப்பகம்.
விலை : ரூ.180/-

**************
கணேஷ் பாலா அன்னான் நடத்தும் மூன்றாம் ஆண்டு படத்துக்கு கதை எழுதும் முகநூல் சிறுகதை போட்டியில் என் கதையும்... அங்கு வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்க...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

அனுபவக் குறிப்புகள் - வாசிப்பு (அகல் கட்டுரை)

அகல் மின்னிதழ் எப்போது என்னிடம் கட்டுரைக்கான களத்தை மட்டுமே காட்டும். சிறுகதையை விட கட்டுரைகள் அதிகம் எழுதியது அங்கு மட்டுமே. அது ஏனோ தெரியவில்லை நண்பர் சத்யா, 'ஜி அடுத்த இதழுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன்' என்றுதான் முகனூல் அரட்டையில் சொல்வார். அப்படித்தான் தொடர்ந்து கட்டுரைகளாய் அகலில் மட்டும். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்... கதைகள் என்றால் ஒகே... கட்டுரை என்னும் போது கொஞ்சம் யோசிப்பேன். இந்த முறை கட்டுரை எழுதி அனுப்பியதும் வாசித்துவிட்டு இப்படி முகனூல் அரட்டையில் சொல்லியிருந்தார். 

'கட்டுரை படிச்சுட்டேன் அற்புதம் ஜி உங்க கட்டுரைகளில் இது தான் டாப். ஆரம்ப கட்ட எழுத்திலிருந்து வேகுவா மெருகேறி சிறப்பா எழுதி இருக்கீங்க...தொடர்ந்து கலக்குங்க ஜி'

நன்றி சத்யா.

சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. இன்று அகலில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை உங்கள் வாசிப்புக்காக.

Image result for வாசிப்பு
வாசிப்பு
வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்தானே..?

வாசிப்புக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருந்தது... அது படிக்கும் காலம் முதல் இப்போது வரை ஏற்ற இறங்கங்களுடன் நகர்ந்தாலும்... பெரும்பாலும் தூரமாகவேதான் இருந்து வந்தது... சமீபத்தில்தான் சற்று பக்கத்தில் வந்திருக்கிறது என்பது கூட மகிழ்வான விஷயம்தானே.

பள்ளியில் படிக்கும் போது வீட்டில் அம்மாவின் விருப்பமாய் 'ராணி' மட்டுமே வாங்கப்படும். செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு வந்ததும் வாங்கி வர வேண்டும். அதில் அட்டை டூ அட்டை எல்லாரும் வாசிப்போம். சின்னம்மா வீட்டில் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலி மாமா முதல் வாராந்திர, மாதப் பத்திரிக்கைகள் நாவல்கள் எல்லாம் வாங்குவார்கள். அங்கு சென்றால் புத்தகங்கள் அள்ளி வரலாம் என்பதால் இரு ஊருக்கும் இடையில் இருக்கும் கண்மாயைக் கடந்து சென்று புத்தக மூட்டையுடன் திரும்பி வருவோம். அப்போதுதான் க்ரைம், பாக்கெட் நாவல்களின் தீவிர வாசிப்பாளன் ஆனது.
Picture
கல்லூரியில் படித்தபோது தமிழ்த்துறையோடு சிறிதான தொடர்பு இருந்ததாலும் நண்பன் முருகன் தழித்துறையில் படித்ததாலும் பழனி ஐயாவுடனான நட்பு, உறவாய் மாறி அவரின் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அங்குதான் பெரிய பெரிய புத்தகங்களாய் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இருந்தால் பேச்சு பல நல்ல விஷயங்களுக்குள் நுழைந்து பயணிக்கும்... அவர் இல்லைன்னா ஒரு பெருங்கூட்டத்தின் அரட்டைதான் அங்கு நிறைந்திருக்கும்... எல்லாருக்கும் காபி, சாப்பாடென அம்மாதான் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்... என்ன கூட்டம் இங்கே... ஐயா இல்லை போங்க என்று ஒரு வார்த்தை எப்போதும் அவர் வாயில் இருந்து வந்ததேயில்லை... என் பிள்ளைகள் என்றுதான் சொல்வார். ஐயா இருந்தாலும் இல்லையென்றாலும் உபசரிப்பு ஒன்றுதான்... அதில் எப்போதும் மாற்றமிருக்காது.

வீடெங்கும் நிறைந்து கிடக்கும் புத்தகத்தில் எதையும் எடுத்துப் படிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது... நல்ல புத்தகமெனில் ஐயாவே இதை வாசிங்க என்று சொல்லிக் கொடுப்பார். சில நேரங்களில் நமக்கே நமக்காகவும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வாசிப்பின் நீட்சியாய் கல்லூரி நூலகத்தில் பாடப்புத்தகம் தவிர்த்து சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடிந்தது. தோழி சுபஸ்ரீ கல்லூரி நூலகத்தில் உணவு இடைவேளை மற்றும் ஆசிரியர் வராத பாடவேளைகளில் தன்னார்வ சேவை செய்ததால் விருப்பப்பட்ட புத்தகத்தைச் சொன்னால் அவர் எடுத்துக் கொடுப்பார். வாசித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தால் அடுத்த புத்தகம் வரும்.

அதன் பின்னான நாட்களில் வாசிப்பு என்பது மீண்டும் வெகு தூரமாகிப் போனது... பெரும்பாலும் வேலை, வீடு எனச் சென்னையில் வாழ்க்கை நகர்ந்து செல்ல, எழுத்தும் வாசிப்பும் சொல்லாமல் கொள்ளாமல் இனிதே காணாமல் போனது, அமீரகம் வந்த பின்னும் வாசிப்பிலும் எழுதுவதிலும் நாட்டமில்லை... ஏன் வாழ்க்கையிலும் கூட நாட்டமில்லாமலே இருந்தது.

கோவில்களில் தினசரி பூஜை எப்படி நேராநேரத்துக்கு நடக்குமோ அதுபோலானது வாழ்க்கை... அதிகாலை விழிப்பு... குளியல்... அலுவலகம்... மதிய உணவு உண்ணக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாத வேலைப்பளு... மாலை அறைக்குத் திரும்புதல்... ஊருக்குப் பேசுதல்... பெரும்பாலும் வருத்தத்தை மட்டுமே சுமக்க வைக்கும் பேச்சு... )வலிகளை இறக்கி வைக்க முடியாமல் வருத்தங்களைக் கூடுதலாய்ச் சுமக்க மட்டுமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எப்போது நிம்மதியான பேச்சுக் கிடைக்கும்) சமையல்... சாப்பாடு... மனசை ஆசுவாசப்படுத்த பாடல்கள் அல்லது படம்... உறக்கம்... மீண்டும் அதிகாலை விழிப்பு... என தினசரி வாழ்க்கை கோவில் பூஜை நேரம்போல சுருங்கிப் போனது.

வெள்ளிக்கிழமை என்பது விடுமுறை தினமான போதும் இதுநாள் வரை அதிக நேரம் தூங்க வேண்டுமென மற்றவர்களைப் போல் நினைத்ததேயில்லை... அதே அதிகாலை விழிப்பு... குளியல் என்பது இப்போதுவரை அப்படியே... சில நாட்கள் மற்றவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதால் மிஞ்சிப்போனால் எழாமல்.... தூங்காமல்... அரைமணி அல்லது ஒரு மணி நேரம் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல்...  இருப்பினும் வாட்ஸப்பும் முகநூலும் முந்திக் கொள்ள, அவற்றின் பின்னே படுத்தபடி நகர ஆரம்பித்து விடுகிறேன்.

இங்கு வியாழன் இரவு முதல் சனி விடுமுறை என்றால் சனி இரவு வரை கொண்டாட்டம்தான்... குடி மனிதர்களைக் குடித்து மகிழும் நேரம் அது... ரசித்துக் குடிக்க ஆரம்பித்து அவர்களை குடி ரசித்துக் குடிக்கும் வரை தொடரும்... ஒரு வாரத்துக்கான சரக்கை ஒரே நாளில் குடித்து... ஒட்டகத்தைப் போல சேமித்து வைத்து அடுத்த வாரம் முழுவதும் ஓட்ட வேண்டும் என்பதாய்... குடித்துக் குடித்துக் குடித்துக் கொண்டேயிருப்பார்கள்... அரசியலும் அந்நிய நாட்டு நிகழ்வுகளும் பேச்சாய் ஆரம்பித்து சண்டையாய் முடியும்... சில நேரங்களில் அடிதடி, கத்துக்குத்து, கொலை வரை செல்லும். 

அதிகமான குடியால் எழ முடியாமல்... நடக்க முடியாமல்... போட்டது போட்டபடி அதே இடத்தில் படுத்தாலும் மறுநாள் காலை மணக்க மணக்கக் குளித்து மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்கள். இது ஆறுதலில்லாத வாழ்க்கை... குடி ஒன்றே வலி போக்கும் மருந்தென நினைத்துத் தன்னையே அழித்துக் கொள்பவர்கள் இங்கே 90%க்கு மேல்தான். இந்த வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம்... இது வாசிப்புக்கான பகிர்வு என்பதால் மாறிய குடிகாரப்பாதையிலிருந்து மறுபடியும் வாசிப்பு என்னும் வளமான பாதைக்குள் நுழைவோம்.

அமீரகம் வந்த பின் வாழ்க்கை மீதான வெறுப்பு அதீதமாய் துளிர்விட்ட தருணத்தில்தான் வலைப்பூ (BLOG) அறிமுகமானது. அதில் எழுத ஆரம்பித்த பின்தான் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனசுக்குப் பிடித்த, வாழ்க்கைக் கதைகள் இங்குதான் எழுத்தாய் மலர்ந்தன... தனிமை இந்த எழுத்தில் தன்னிறைவு பெற ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் என் கதைக்குள் வலம் வந்தார்கள்... வாழ்க்கை மீதான வெறுப்பு, குடும்பத்தைப் பிரிந்த விரக்தி, அறை... அலுவலகம் என்ற வழக்கமான வாழ்க்கை என எல்லாவற்றையும் இந்த மனிதர்கள்தான் மறக்கச் செய்து எழுத்தின் மூலம் கொஞ்சமாய் எழ வைத்தார்கள். அப்போதும் வாசிப்பு என்பது தூரமாகவே இருந்தது ஆனால் சினிமா மொழி கடந்து இன்னும் நெருக்கமானது. இணையத்தில் புதிய படங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க நானும் அதிகமாய் சினிமா பார்த்தேன்.

வலைப்பூ வழி நட்பான சகோதரர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ் குமார் மற்றும் நிஷாந்தினி அக்கா மூவரும் புத்தக வாசிப்பில் இறங்க, அவர்களின் பின்னத்தி ஏராய் நானும் இறங்கினேன். பெரும்பாலும் பிடிஎப் பைல்களாகத்தான் அவர்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் பெற்றேன். வேலைக்குப் போக, வர பேருந்தில் 40 நிமிடத்துக்கு மேலாகும் என்பதால் அதுவே வாசிக்கும் நேரமானது.

கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆரம்பித்து உடையார், கடல்புறா என பாலகுமார், சாண்டில்யனில் பயணித்து ஏறக்குறைய சாண்டில்யனின் எல்லா வரலாற்று நாவல்களையும் வாசித்து முடித்து, அதைப் பற்றி விவாதித்தல்... வலைப்பூவில் எழுதுதல் என சில மாதங்கள் வாசிப்பின் பின்னே நகர்ந்தது... மகிழம்பூப் போல... மல்லிகைப்பூப் போல... வாசிப்பு அத்தனை வாசமாய் இருந்தது... உண்மையில் வாசிப்பு மகிழ்வைக் கொடுத்தது... வலிகளை மெல்லக் குறைத்தது... குறிப்பாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் வாசிப்புக்குள் மூழ்கி மெல்லக் கரைந்து போனதும்

பின்னர் ஒரு தொய்வு... வாசிப்பு மீண்டும் தூரமாய்த் தள்ளி நிற்க ஆரம்பித்தது. அமீரக எழுத்தாளர் குழுமத்துக்குள் இணைந்த போது மீண்டும் வாசிப்புக்குள்... பிடிஎப், புத்தகமெனக் கலந்து கட்டி வாசிக்க ஆரம்பித்தோம்... ஆம் அதிகமான வாசிப்பாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதும் வசதிதான்... இதைப்படி.. அதைப்படி எனச் சொல்லிச் சொல்லி புத்தகங்கள் கிடைத்தன... வாசிப்பு நிறைய நட்பைக் கொடுத்தது... வாசிப்பு நிறைய விஷயங்களை அள்ளிக் கொடுத்தது... ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமாய்... எத்தனை கதைகள்... எவ்வளவு தகவல்கள்... என்ன மாதிரியான எழுத்துக்கள்... வாசிப்பு தொடரத் தொடர ஒவ்வொருவரின் எழுத்தும் வெவ்வேறு விதமாய் மனசுக்குள் தங்கியது. மீண்டும் வாசிப்பில் களம் காண நண்பர்களே முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.

கிராமத்துக் கதைகள் என்றால் அதனோடு ஒன்றி வாசித்துப் பழகியவன் வரலாற்றுப் புதினங்களையும் ரசித்து வாசிக்க ஆரம்பித்தவன் நமக்கு சரிவராதென்றாலும் தகவல்கள் நிறைந்த நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

தங்களின் எழுத்துக்காக அந்தந்த இடங்களுக்கே சென்று வருடக் கணக்கில் தங்கி, விவரங்களைச் சேகரித்து எழுதப்பட்ட நாவல்களை வாசிக்கும் போது ஒரு நாவலுக்காக இத்தனை மெனக்கெடலா என்று ஆச்சர்யமும் அவர்கள் மீதான மரியாதையும் கூடிப் போனது.

சிலர் வரலாறுகளை ஆராய்ந்து... தீவிரமாய்த் தேடிப் படித்து... விவரணைகளுடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது என்னால் எழுத முடியும் என்பதைவிட என்னால் இத்தனை விவரங்களுடன் எழுத முடியும் என்று காட்டும் அவர்களின் திறமை மீதும் தனி மரியாதை உண்டாகியது.

சிலரோ இணையம் சொல்வதை உண்மையென நம்பும் விதமாய் புனைவு எழுதுகிறார்கள்... சிலரின் கதைகள் காமத்துக்குள் காவிரியாய்ப் பாய்ந்து வெளிவருகிறது... சிலரோ வாழ்க்கையைப் படம்பிடித்து எளிய மனிதர்களை நம் கண்முன்னே நடமாட விடுகிறார்கள்... எத்தனை வண்ணமான எழுத்துக்களை இப்போதெல்லாம் வாசிக்க முடிகிறது... இதையெல்லாம் கொடுத்தது எழுத்து மூலம் கிடைத்த நட்புக்களே.

இரா.முருகவேளின் முகிலினி வாசித்தபோது பஞ்சாலையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களுமெனச் சுற்றி வந்த மனசு, கரன் கார்க்கியின் மரப்பாலம் வாசித்தபோது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குள் நகர்ந்து சயாம் - பர்மா மரப்பாலம் கட்டும் பணியில் ஜப்பானிடம் மாட்டிய மக்கள்பட்ட துயரக்கடலுக்குள் நீந்திய மனசை, முஹம்மது யூசுஃப்பின் மணல் பூத்த காடு சௌதிக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக வரலாற்றுச் செய்திகளுடன் சுற்றிக் காட்டி அமைதிப்படுத்தியது... ஆசுவாசப்படுத்தியது.

சோளகர் தொட்டி வீரப்பன் வேட்டை என வனக் காவலர்கள் பழங்குடி மக்களைச் சித்திரவதை செய்ததை, அவர்கள் அனுபவித்த நரகவேதனையை நெஞ்சுக்குள் நிறுத்தி இன்னும் என்னை அதிலிருந்து மீளமுடியாமல் வைத்திருக்கிறது... உண்மையில் இந்த நாவலுக்காக அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்த ச.பாலமுருகன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வீரப்பன் வேட்டை மலைவாழ் பழங்குடி மக்களை என்னவெல்லாம் செய்தது என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஒரே நாவல் இது. இன்னும் ஒருமுறை படிக்க முடியாத வலி என்றாலும் மீண்டும் அந்த மக்களுடன் வலம் வர வேண்டும் என்ற ஆசையிருக்கத்தான் செய்கிறது. நான் வாசித்தவரை என்னை அதிகம் பாதித்த நாவல் இது. இன்னும் மீளமுடியவில்லை... மாதியும் சித்தியும் இன்னமும் கண் முன்னே கதறுகிறார்கள்.

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்... மிக அற்புதமான புத்தகம்... சல்லிக்கட்டு நடக்கும் இடம் மட்டுமே கதைக்களம்... மாடும் அதைப் பிடிப்பவனுமே பிரதானம்... எத்தனை விவரிப்பு... என்ன அழகான காட்சிப்படுத்துதல்... சிறிய நாவல் என்ற போதும் சிறப்பான நாவலாய்... இப்படி ஒரு நாவல் எழுதினால் என்ன என்று தோன்ற வைத்த எழுத்து... குறிப்பாக வட்டார வழக்கில்தான் முழு நாவலும் நகர்கிறது என்றாலும் நம்மை வாடிவாசலில் கட்டிப் போட்டு விடுகிறது என்பதே உண்மை.

சில நாள் முன்பாக முஹம்பது யூசுஃப்பின் இரண்டாம் நாவலான கடற்காகம் வாசித்தேன்... டெல்மா தீவுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் கதையின் மனிதர்களும் அவர்கள் பேசும் இனப்பிரிவினை, சிரியா யுத்தமென வாசிக்கும் போது நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளரின் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது.

தகவலைச் சொல்வதிலும் ஒரு கலை இருக்கத்தான் செய்கிறது. கதையின் போக்கில் சொல்லத் தெரிந்தவர்களின் எழுத்து வீரியம் பெற்று நம் முன்னே உயர்ந்து நிற்கிறது. தகவல்களுக்காக அதிக சிரத்தை எடுக்கும் போது கதை மாந்தர்களுக்குப் பதில் எழுத்தாளனே நம்மிடம் நேரடியாகச் சொல்வது போல் மாறிவிடும் போது அதன் வீரியம் குறைந்து உயரம் தடைபடுகிறது. எது எப்படியென்றாலும் அந்த எழுத்தாளர்களின் தேடுதலுக்காவேனும் அவர்களைக் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறலாம்... தப்பேயில்லை... அந்தத் தேடுதலில் 1% கூட என்னிடம் இல்லை... நான் தேடுவதெல்லாம் கிராமத்து மனிதர்களின் மனசை மட்டுமே. அப்படியான எழுத்துத்தான் வாய்த்திருக்கிறது.

கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்த போது அந்த எழுத்து என்னைத் தொடர்ந்து வாசி என ஈர்த்தது. கலைஞரைப் பிடிக்காது என்றாலும் அந்தத் தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாண்டிருக்கிறது... வார்த்தை விளையாட்டுக்களும் அதில் அடக்கம். சிறப்பான தமிழ் புத்தகமும் முழுவதும் விரவிக் கிடந்தது. கலைஞரின் மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

விதவிதமான கதைகள்.... வித்தியாசமான எழுத்துக்கள்... பலதரப்பட்ட கதைக்களன்கள் என வாசிப்பின் பாதை நீண்டு கொண்டே போனாலும் வாசிப்பின் மூலம் நம் பார்வை விரிந்து கொண்டு போக ஆரம்பிக்கிறது... நிறையத் தேடல்களை நம்முள்ளே பதியம் போட்டு வைக்கிறது... அடுத்து என்ன... அடுத்து என்ன... என வாசிப்பின் வாசலைத் திறந்து வைக்கிறது. நம் எழுத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரத் தோன்றுகிறது.

வாசிப்பு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... இப்போதெல்லாம் எதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. விடுமுறை தினங்களில் சினிமா என்னிடமிருந்து விலகி, வாசிக்கச் சொல்கிறது... சில புத்தகங்கள் எடுத்ததும் முடித்தால்தான் கையிலிருந்து விலகுவேன் என்கிறது. வாசிப்பை நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை விட வாசிப்பு என்னை நேசிக்க மட்டுமில்லாமல் இழுத்து அணைத்துக் கொண்டு விட்டது. அந்த அணைப்புக்குள் பல புத்தகங்களை மாறி மாறி வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

வெக்கையின் அறுபது பக்கங்களைக் கடந்து காட்டுக்குள் திரிந்தபடி, பெயரிடப்படாத புத்தகத்தின் ஆறாவது கட்டுரையில் அமிழ்ந்து கிடக்கிறேன்... காடோடியின் பின்னே நூறு பக்கங்களைத் தாண்டி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் மரம் வெட்டச் செல்லும் மனிதர்களுடன்... இடையே நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கதையை...

வாசிப்பு உங்களின் பார்வையை விரிவாக்கும்... நிறைய கற்றுக் கொடுக்கும்...

வாசியுங்கள்... நிறைய... நிறைவாய்....

வாசிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடமாட்டீர்கள்.

ஆம்... வாசிப்பு என்பது சுகானுபவம்தான்.

*******
அகலில் வாசித்து அங்கும் கருத்துச் சொல்லுங்க... உங்கள் கருத்தே அம்மின்னிதழை இன்னும் சிறப்பாக பயணிக்க வைக்கும்... அங்கிடப்போகும் கருத்துக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

சனி, 23 நவம்பர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் : 5

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1   2   3  4

ன்னைக் கவர்ந்த பாடல்கள் எழுதி ரொம்ப நாளாச்சு... சில விழாக்கள்... சில புத்தகங்கள் என எழுதியதால் பாடல்கள் குறித்தான தொடரைத் தொடர முடியாமல் போனது. கடவுள் வணக்கம் எல்லாம் முடித்து விட்டோமல்லவா... அடுத்தது... சினிமாதானே என்றால் இல்லை... அதற்கு முன் எல்லாரையும் ஆட வைக்கும் மண்ணின் இசையான நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

பாடல்களுக்குள் போகும்முன் நம் இசையுடன்...


நாட்டுப்புறப் பாடலோ அல்லது இசையோ ஆடாதவரையும் ஆட வைக்கும் தன்மை கொண்டவை... அது திருவிழாவுக்கு என்றாலும் திரும்பாத விழாவுக்கு என்றாலும் இசையில் மாற்றமிருக்குமே ஒழிய ஆட்டம் போட வைப்பதில் இருந்து எப்போதும் மாறாது... 'தாயே கருமாரி...' என வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம்.... 'மக்க கலங்குதப்பா...'ன்னு சாவு வீட்டில் வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம். நாட்டுப்புற இசை எப்போதும் ஆட்டம் கொடுக்கும் இசைதான்.

அப்படியே பறவை முனியம்மாவின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்கலாமே...


உருமியும் மேளமும் நாகஸ்வரமும் பம்பையும் தப்பும் கொடுக்கும் இசைக்கு ஈடு வேறு எதிலும் இல்லை. இன்னும் கிராமியப் பாடல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுபவை இந்த இசைக் கருவிகள்தான். கரகாட்டம் ஆடுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடட்டும்... ஆனால் கரகாட்டம் ஆரம்பிக்கும் முன் பத்து நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை இசைக் கலைஞர்களின் வாசிப்பு கூட்டத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வரும்... அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் இசையாய் அது அமையும். அதேபோல்தான் கூத்துக்களில் பின்பாட்டுக் குழுவின் இசை, பின்பாட்டுப் பாடுபவர் பாடலைக் கொலையாக் கொண்டாலும் அந்த டோலக், மிருதங்கம் என எல்லாமே அடித்து ஆடும்.


பெரும்பாலும் கிராமியப் பாடல்கள் யாரோ எழுதியதாய் இருக்கும்... கிராமியப்பாடல் பாடும் எல்லாருமே ஒரே பாடலைப் பாடுவார்கள் என்றாலும் ஒரு சில பாடல் இவர் பாடினால்தான் நல்லாயிருக்கும் என்ற பிம்பத்தை உண்டாக்கிவிடும்... அதை மற்றொருவர் பாடும் போது அது பல நேரங்களில் ஓட்டுவதில்லை. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய 'அங்கே இடி முழங்குது' பாடலை பலர் பல மேடைகளில் பாடினாலும் திருவிழாக்களில் தேக்கம்பட்டியாரின் குரலில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் அங்கே இடி முழங்குது எனப் பாடும் போது பலருக்குள் கருப்பன் பாய்ந்தோடி இறங்கி நிற்பான்.

விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாடல்கள் ஆட்டம் போட வைக்கக் கூடியவை... அதுவும் மெதுவாக ஆரம்பித்து... மெல்ல வேகமெடுத்து.... வேகமாய் முடியும் பாடல்கள் நிறையப் பாடுவார். சினிமாவில் இவர் பாடிய 'தோசைக்கடை ஓரத்துல தோசை ஒண்ணாங்க...' பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல் என்றால் இவருக்கு என தனி மதிப்பைக் கொடுத்த பாடல் என்றால் அது...
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமா
பத்திரக்காளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மல
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாபண்ணைக்கு அழகு பூபூத்து
ஆத்தா வராலாம் பூஞ்சோலைக்கு...

இன்னும் அழகான அருமையான பாடல்களை எல்லாம் பாடினார் டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்கும் போது கணவன் மனைவி இருவருமே தள்ளாத வயதில் இருப்பது போல் எழுந்து நிற்பதில் கூட சிரமப்பட்டதைக் காண முடிந்தது. இன்று அவர்களின் பாடல்களைப் பலர் பல மேடைகளில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களின் குரலுக்கு இருக்கும் ஈர்ப்புத் தனிதான்.

அடுத்து 'ராஜாத்தி உன்னையெண்ணி' பாடலை பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க விட்ட புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி இணை... இந்தாளு எந்த ஒரு பாடல் என்றாலும் அதை ரசிக்கும்படி பாடக்கூடிய திறமை மிக்கவர். எத்தனை எத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறார்கள் இந்த இணை.
மஞ்ச செவ்வந்திப் பூவாம்
மன்னார்குடி பூத்த பூவாம்
மன்னார்குடிக்குப் போயி வந்தேன்
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்.


இவர்களைப் போலவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பறவை முனியம்மா, சிங்கம்புணரி தங்கராசு, கோட்டைச்சாமி ஆறுமுகம் இப்படி நிறையப் பேர் கிராமியப் பாடல்களில் ஒரு காலத்தில் கோலோச்சியிருந்தார்கள். இவர்களுக்குப் பின்னே வந்த புதியவர்கள் எல்லாம் மெல்ல சினிமாவுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டார்கள்.

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் 'நாக்க முக்க...' பாடிய சின்னப்பொண்ணு. இப்ப பெரும்பாலான செல்போன்களில் 'கண்ணான கண்ணே...' ரிங்டோனாக இருப்பது போல் சில வருடங்களுக்கு முன் எந்தப் போன் அடித்தாலும் 'மரிக்கொழுந்தே... மல்லிகைப்பூவே...'தான். அந்தளவு அவரின் இந்தப் பாடல் மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தது.

இவரின் பாடல்கள் எல்லாமே கேட்கப் பிடிக்கும் என்றாலும் மகள் அம்மாவுக்கு எழுதும் கடிதம் போன்ற வரிகளை சின்னுப்பொண்ணு பாடும் போது அந்த வரிகளை உணர முடியும்.

ஏதோ நானும் இருக்கிறன்,
உருபிடியா படிக்கிறன்.....
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
அன்பு உள்ளம் கொண்ட அம்மாவுக்கு,
மகள் எழுதும் கடிதம்...


ஆந்தகுடி இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்... அவரின் பாடல்களில் என்னை ரொம்பக் கவர்ந்த பாடல் 'அத்தமக உன்னை நினச்சி...' இதில் வரிகள் எல்லாம் நல்லாயிருக்கும்... இந்தப் பாடல்கள் எல்லாம் ஆல்பத்தில் இருப்பதால் ஆல்பத்துக்கான இசையிருக்கும். இதே பாடலை மேடையில் பாடும்போது கிராமிய இசைகளுடன் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.

அத்தமக உன்னை நினைச்சு
அழகு கவிதை ஒண்ணு வடிச்சேன்...
அத்தனையும் மற ந்துபுட்டேன்
அடியே உன்னைப் பார்த்ததுமே...


எங்க ஊர் பக்கம் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி என்றால் அது சேவியர்தான்... இவரிடம் இருந்துதான் இளையராஜாவெல்லாம் வெளியில் வந்திருக்கிறார். இவர் குழுவில் இளையராஜா பாடிக் கேட்டிருக்கிறேன். அருமையான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவார்.


முத்துச்சிற்பி சிம்மக்குரலோன் என வள்ளிதிருமண நாடகத்தில் பெயர் எடுத்திருப்பவர்... எல்லாப் பாடல்களையும் அருமையாகப் பாடக்கூடியவர். இவரின் முதல் ஆல்பத்தில் ஒரு பாடல்... என்னை ரொம்பவே கவர்ந்த பாடல்... அது குறித்து தனிப்பதிவே எழுதினேன்.

பொறுபுள்ள பூவழகி...
சத்தநேரம் பேசிக்கிறேன்...
பொழுதும் போகவில்லை...
உன்னைத்தான் யோசிக்கிறேன்...


இயக்குநர் செல்ல. தங்கையாவின் இசைக்குழுவில் நல்ல நல்ல பாடல்களாய் பாடியிருக்கிறார்கள்... அதில் அபிராமி பாடியிருக்கும் 'ஏரி நன்னாக்கு' பாடல் அழகு... அதைப் பாடியிருக்கும் அபிராமியின் அபிநயங்களும் அழகு. இந்தப் பாடலைப் பலர் பாடியிருந்தாலும் ஏனோ அபிராமியின் குரலுக்குத்தான் அப்படியே பொருந்தி வருகிறது... எங்க தேவகோட்டைப் பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் சொல்லவில்லை... இளையராஜா, முத்துச் சிற்பி என எல்லாருமே நம்ம பக்கத்து ஊராளுகதான்.

 ஏரி நன்னாங்கு ஏரிதான்டா மாமா..
எலந்தப்பழ தோப்புத்தான்டா...
ஏறி நல்லா உலுப்பட்டுமா மாமா..
பழத்தை நல்லாப் பறிக்கட்டுமா...


கிராமியப் பாடல்களில் மிகவும் பிரசித்திபெற்ற பாடல்கள் என்றால் 'சட்டி முட்டி கழுவவில்லை... சமையல் வேலை பார்க்கவில்லை...' என்ற பாடல்தான் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் பாடலாய்... இதை கரகாட்டத்தில் அதிகம் பாடுவார்கள். இதே பாடலின் மெட்டில் நிறையப் பாடல்கள் வந்தாச்சு... அதேபோல் 'சின்னஞ் சிறுசெல்லாம் சிகரெட்டு குடிக்குது... சித்தப்பன்மாருக்கிட்ட சிகரெட்டுக் கேக்குது'ன்னு நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் என எத்தனையோ பேர் பாடியிருந்தாலும் பறவை முனியம்மாவின் குரல்தான் நமக்கு ஞாபகத்தில் வரும்.

கிராமியப் பாடல்கள் பாடும் பெண்கள் வரிசையில் மாரியம்மாளும் குறிப்பிடத்தக்கவராய் இருக்கிறார். இவரின் பாடல்களும் கேட்டுத்தாளம் போட வைக்கும்... அவரின் பாடலில் ஒன்று... ரசிக்க.


இன்றைய நாட்டுப்புறப் பாடகர்கள் எல்லாருமே முன்னத்தி ஏர்கள் பாடி வைத்ததைத்தான் மேடையில் பாடுகிறார்கள்... இவர்கள் எழுதி இசையமைத்துப் பாடுவதென்பது எப்போதேனும் நிகழலாம்... எப்போதும் இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்... அல்லது முன்னே எழுதி வைத்து விட்டுச் சென்ற பாடல்களை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். பறவை முனியம்மா பாடிய பல பாடல்கள் கோனார் என்பவர் எழுதியவையே... இன்றைய இளைஞர்களுக்கு பாடல் எழுத பலர் இருக்கிறார்கள்.

நல்ல நல்ல வரிகளுடன் பாடல்கள் வருவது இனிமைதான்... நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒரு சிலரே செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்களின்  பார்வை எல்லாம் சினிமாப் பக்கமே இருக்கிறது. இவர்களின் குரல் வளத்துக்கான பாடல்கள் சில அமைவதுடன் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமிடல் சரியாக இல்லாமல் போகிறதா... அல்லது கிராமத்துப் பாடல் பாடுறவன் என்ற மனநிலை கொண்டவர்களால் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகிறதா என்று தெரியாமலேயே காணாமல் போய் விடுகிறார்கள்... ஒரு சிலரைத் தவிர பலர் நிலை இதுதான்.

எல்லாரையும் சொல்லிட்டு நம்ம பக்கத்து கொல்லங்குடி கருப்பாயி பாட்டுப் போடலைன்னா எப்படி... அதனால போட்டுடுவோம்.


இப்ப நிறைய இளைஞர்கள் ஆந்தகுடி இளையராஜா, மதுரை சந்திரன். கொல்லங்குடி கருப்பாயி பேரன், நாரதர் முத்துச்சிற்பி, செந்தில்கணேஷ் இப்படி நிறையப் பேர் வந்தாச்சு... குரல் வளம் இருக்கு இவர்களிடம்... கவுண்டமணி, செந்திலுக்கு நகைச்சுவை எழுதிக் கொடுத்தவரைப் போல இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்.... அந்தப் பாடல்களைப் பாடி ஆல்பம் வெளியிடுகிறார்கள்... வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்... இவர்களின் வளர்ச்சியை விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைக்கும். கலக்கப்போவது யாரு மேடைக்கும் பயன்படுத்தி, இவர்களையே வெற்றியாளர்களாகவும் ஆக்கித் தன் வருமானத்தையும் டிஆர்பியையும் பெருக்கிக் கொள்கிறது. இவர்களும் சினிமா என்னும் கனவுலகுக்குள் போகவே இந்த முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

மதுரை சந்திரனின் குரலில்...

மங்கம்மா சாலை மலைமேல
மதுரைக்குப் போறேன் வழி மேல...


அப்படியே இதையும் கேளுங்க... உங்களுக்குப் பிடிக்கும்.


இந்தப் பதிவு துள்ளலுடன் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்... ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... எங்க மண்ணுக்கும் நாட்டுப்புற இசைக்கும் அதிகப் பிணைப்பு உண்டு... இப்ப வந்திருக்கும் பலர் தேவகோட்டை, காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்... சரி சரி... பெருமை பேசலை... விடுங்க... வுடுங்க... வுடுங்க....

அடுத்த பதிவு முதல் சினிமா பாடல்களுடன்...

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 நவம்பர், 2019

சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்'

Image result for சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்
வாடிவாசல்...

வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..?

இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம்... வாடிவாசல் சொல்லும் ஆயிரம் கதைகள்... 

ஆம்... அவிழ்த்து விடப்படும் மாட்டுக்கும் அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மனிதனுக்கும் இடையேயான சிறு தடுப்புத்தான் இந்த வாடிவாசல்.

மாடு உள்ளிருந்து சீறி வருவது இந்த வாசல் வழிதான்... அதற்கு யார் மீதும் எந்தத் தனிப்பட்ட கோபமும் இருந்ததில்லை... வெளிவரும் போது அதைப் பிடிக்கக் காத்திருப்பவர்களுக்கும் அந்த மாட்டின் மீது எந்த ஒரு கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை... ஆனாலும் இருவரும் மோதுகிறார்கள்... அதை எப்படியும் அடக்கித் தன் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்று காத்திருப்பவனும் அவனிடம் பிடிபடாமல் வெளியேற வேண்டும் என்று வெளியே வரும் காளையும் தங்களுக்குள் நடத்தும் போராட்டம் அரங்கேறுவது இந்த வாடிவாசல் முன்னேதான்.

சல்லிக்கட்டு நம் வீர விளையாட்டு என்று தொலைக்க இருந்ததை... தொலைவில் நகர்ந்ததை... மீண்டும் கொண்டு வந்த போராட்டத்தை நம்மால் மறக்க இயலுமா..? அதுபோல்தான் வாடிவாசல் வழி வந்த மாட்டை அடக்கித் தன்னை நிரூபித்தவன் அந்த நாளை எப்போதும் மறக்கமாட்டான். பரிசாய்க் கிடைப்பது குடமோ, பாத்திரமோ, கட்டிலோ, தங்கச் சங்கிலியோ எதுவாகினும் தன் வீரம் நிரூபிக்கப்பட்ட நாள் அவனுள் எப்போதும் மகிழ்வைப் பூக்கவைக்கும் நாளல்லவா..?

சல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, வண்டிப் பந்தயம், கைப்புறாப் பந்தயம் என மாட்டுக்கும் மனிதனுக்குமான நிகழ்வுகள் எங்கள் பக்கம் அதிகம். திருவிழாவுக்கும் பொங்கலுக்கும் இவற்றை நடத்தும் ஊர்கள் அதிகம். பந்தயம் பார்க்க காலையில் சைக்கிளில் வெகுதூரம் போய்க் காத்திருந்த நாட்கள் எல்லாம் மறக்க முடியாதவை.

முன்பெல்லாம் மஞ்சுவிரட்டில் மாட்டைப் பிடித்து அடக்குவார்கள்... இப்போதெல்லாம் அதற்கும் ஒரு எல்கை வகுக்கப்பட்டு திமிலில் ஒருவன் விழுந்துவிட்டால் மற்றவர்கள் அந்த மாட்டைத் துன்புறுத்தக் கூடாதென்றும் திமிலில் விழுந்தவனைத் திமிறித் தள்ளி எல்கையைத் தாண்டிவிட்டால் மாடு வெற்றி என்றும் அந்த எல்கை வரை பிடித்த திமிலை விடாது திமிரோடு போராடி மாட்டோடு கடந்துவிட்டால் அந்த வீரன் வெற்றி பெற்றான் என்றும் முடிவாகிறது.  கோட்டை அடையுமுன்னே 'மாடு பிடிமாடு' என்றோ 'மாடு பிடிபட்டது' என்றோ அறிவித்து விடுவார்கள் பஞ்சாயத்தார்கள்.

வடமாடு மஞ்சுவிரட்டில் ஒரு திடலில் குறிப்பிட்ட நீளத்தில் கயிறு கட்டப்பட்டு, அதன் ஒரு முனை முழக்குச்சியிலும் மறுமுனை மாட்டின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும்... சுற்றிலும் மரத்தடுப்பு... அதன் பின்னே வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.. உள்ளே கயிற்றின் நீளம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நீளம் சுற்றிச் சுற்றி வரும் மாடு. அதைப் பிடிக்க எல்லாப் பக்கமும் ஓடி விளையாடும் மாடு பிடி வீரர்கள்... சல்லிகட்டைப் போல கலவையாக இல்லாமல் ஒரு குழுவாக இறங்குவார்கள்... இதை நடத்துபவர்கள் மாட்டுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பாக்கு வைத்து அழைத்து வருவார்கள்.

எருதுகட்டு என்பது நீண்ட வடத்தில் கட்டபட்ட மாட்டை, வடத்தை இழுத்துக் கொண்டு ஓட, அதன் பின்னே ஓடும் மாட்டை ஒரு மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். சில நேரங்களில் மாடு நின்று விளையாடும்... சில நேரம் வேகமெடுத்து ஓட வடத்தைப் போட்டு விட்டு ஓடும் நிலமையெல்லாம் வரும்... மாடு கூட்டத்துக்குள் புகுந்து துவம்சம் செய்யவும் கூடும்... வடம் இழுத்து ஓடுபவர்கள் கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும்... வடமும் மிக நீளமாக இருக்க வேண்டும். 

கைப்புறாப் பந்தயம் என்பது மாட்டை பிடித்து விரட்டிக் கொண்டு ஓட வேண்டும்... ஏறக்குறைய ஓட்டப்பந்தம் போல, குறிப்பிட்ட தூரம் என்பது இலக்கு... அதிகமான பரிசுத்தொகை இருக்காது... சில ஊர்களில் ஐந்து கிலோ வெல்லம் முதல் பரிசாக வைக்கப்படும்.

வண்டிப் பந்தயம் என்பது பல தரப்பட்ட நிலைகளில் அதாவது கரிச்சான், சின்ன மாடு, நடு மாடு, பெரிய மாடு என்ற நிலையில் வைக்கப்படும். போய் வரும் தூரம் கூட கூடுதல் குறைச்சலாகத்தான் இருக்கும். வண்டியில் சாரதி மற்றும் பக்கசாரதி இருவர் இருப்பார்கள். எல்லைக் கோட்டைத் தொட்டு கொடி வாங்கித் திரும்பவும் கிளம்பிய இடத்துக்கு வர வேண்டும். இதில் பரிசுத் தொகை அதிகமிருக்கும்.

நாம வாடிவாசலுக்கு முன்னால நின்னுக்கிட்டு நிறையப் பேசிட்டோம்... மாடு அவிழ்த்து விட ஆரம்பிச்சிட்டாங்க.. வாங்க மாடு பிடிக்க வந்த கதையைப் பார்க்கலாம்.

பிச்சியும் அவன் மைத்துனன் மருதனும் கிழக்கே இருக்கும் உசிலனூரில் இருந்து பிரசித்திபெற்ற செல்லாயி சாட்டுக்கு மாடு பிடிக்க (பேச்சு வழக்கில் மாடு அணைய) வந்திருக்கிறார்கள். அவர்களின் வீரமும் விவேகமும் அந்த ஊரைச் சேர்ந்த கிழவனுக்குப் பிடித்துப் போக, சில மாடுபிடி தந்திரங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுக்கிறான். அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

பேச்சு வாக்கில் கிழக்கே பிரபலமான மாடு பிடிக்கும் வீரனான அம்புலியைப் பற்றிச் சொல்லும் கிழவன், அவன் மாடு குத்தி மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் செத்ததைச் சொல்லி வருந்துகிறான். அவனின் மகன்தான் பிச்சி என்பதையும் சாகும் தருவாயில் தன்னைக் குத்திய மாட்டை எப்படியும் அணைந்து வெற்றி வீரனாகவேண்டும் என அப்பன் சொன்னதாலேயே கிழக்கே இருந்து இந்த ஊர் ஜமீன்தார் வாங்கி வந்திருக்கும் காரியைப் பிடித்து அப்பனின் வீரத்தை தன் மூலமாக நிரூபிக்க மச்சினனுடன் வந்திருக்கிறான் என்பதையும் கிழவன் அறிகிறான்.

கிழவன், பிச்சி, மருதனின் பேச்சு... எதிர்த்து நிற்கும் முருகுவுடன் சின்ன மல்லுக்கட்டு... அவ்வப்போது துள்ளி வரும் காளைகளில் மற்றவர் பிடிக்க அஞ்சும் காளைகளாய்ப் பார்த்துப் பிடித்து பரிசை தட்டிச் செல்லுதல்... ஊர்க்காரர்களின் நக்கல் நையாண்டி... ஜமீன்தாரின் மிடுக்கு.... காளைகள் குறித்த குறிப்பு... வாடிவாசலில் கொம்பு தீட்டி நிற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் போராட்டம் எனக் கதை நம்மை வாடிவாசல் முன்னே கட்டிப் போடுகிறது... திமிறும் காளை போல அடங்க மறுக்கும் எழுத்து அடித்து ஆடுகிறது... சல்லிக்கட்டுப் பொட்டலில் புழுதி பறக்க நிகழும் நிகழ்வை ரசிப்பது போல 'வாடிவாசல்' நம்மை வசமிழக்கச் செய்கிறது.

காரியை அடக்கவென வந்தவன் அதை அடக்கினானா...? 

ஜமீன்தார் என்ன செய்தார்...? 

காரி திமிறி நின்றதா..? 

காரி என்ன ஆனது...? 

பிச்சி என்ன ஆனான்..? 

மருதனும் கிழவனும் முருகுவும் என்ன செய்தார்கள்...? என்பதையெல்லாம் ஒரு சோகமான முடிவுடன் சொல்லி முடிக்கிறது வாடிவாசல்.

மாடு பிடிப்பவனும் மாட்டுக்காரனும் ஒரே சாதி என்றாலும் இருவருக்குள்ளும் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டப்படுகிறது. சி.சு.செல்லப்பா அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். மாடுகளோடு வாழ்ந்த, வாழ்கிற மனிதர்கள்... சல்லிக்கட்டு, பந்தயமெல்லாம் சலிக்காமப் பார்க்கிறவங்க... கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்... அப்ப மற்றவர்கள்...? அவர்களும் வாசிக்க வேண்டிய நாவல்தான்... வட்டார வழக்கில் வாடிவாசலை வாசிப்பது ஒரு சுகம்.

Image result for சல்லிக்கட்டு

சல்லிக்கட்டுப் பற்றி தமிழில் வந்த மிகச் சிறந்த குறுநாவல் இது. சி.சு.செல்லப்பா அவர்கள் 1959ல் சந்திரோதயம் பத்திரிக்கையில் எழுதியதை, கொஞ்சம் விரித்து எழுதிக் குறுநாவலாய் அப்போது தான் தொடங்கியிருந்த எழுத்து என்னும் இதழின் சந்தாரார்களுக்கு இலவசமாக அனுப்பினார். இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்ததா இல்லையா என்பது தெரியாத நிலையில் 1992-ல் பீகாக் பதிப்பகம் வெளியிட்ட 'வாடிவாசல்' சிறுகதைத் தொகுப்பில் இக்குறுநாவல் இடம் பெற்றது. அதன் பின்னர் 1994-ல் இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பு மலரில் வெளிவந்தது. ஜனவரி-2019ல் காலச்சுவடு இப்புத்தகத்தின் 23வது பதிப்பைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பதிப்பில் இந்தியா டுடேயில் கே.எம்.ஆதிமூலம் அவர்கள் வரைந்த கோட்டோவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பதிப்பில் சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதிய முன்னுரையுடன் 'எதிர்ப்புச் சலனங்களின் களம்' என எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆறாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரையும் இந்தப் பதிப்பில் இடம் பெற்றிருக்கின்றன. 

'சல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும்.' 

'காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் சல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது... நுட்பமாகவும் கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டிருப்பது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை' என சி.சு. செல்லப்பா எழுத்துப் பத்திரிக்கையில் இக்குறுநாவல் பற்றிக் கொடுத்த விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார். இதுவும் காலச்சுவடு பதிப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது.

'சி.சு.செல்லப்பா வாடிவாசலைத் தொடங்கி வளர்த்துச் செல்லும் விதம், பாத்திரங்களை அதனூடே உருவாக்கும் நுட்பம், படைப்பு எட்டக்கூடிய விரிவு பற்றிய உணர்வு அனைத்தும் உயர்ந்த படைப்பாளராக அவரைக் காட்டுகின்றன. சல்லிக்கட்டை மிருகவதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய நேசர்கள், சல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்ட வாடிவாசலை ஒருமுறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்' என எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்.

'இந்தப் புத்தகத்தின் பக்கங்களை மூடி வைத்துவிட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டேயிருக்கும்' என்று தன் முன்னுரையில் சி.சு.செல்லப்பா சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. காரியும் பிச்சியும் வாடிவாசலும் நம் கண்களைவிட்டு அகலாது.

Image result for சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்

எழுத்தாளரைப் பற்றி...

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா அவர்கள் செப்டெம்பர்  29 - 1912-ல் வத்தலக்குண்டு அருகிலுள்ள சின்னமனூரில் பிறந்தார். 

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எல்லாவற்றையும் எழுதினார். 

தினமணி மற்றும் சந்திரோதயத்தில் உதவியாசிரியராய் பணியாற்றினார். 

எழுத்து இதழைக் கடும் பொருளாதார நெருக்கடியிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தினார். 

பணம், பரிசு, புகழ் போன்றவற்றின் பின் எப்போதும் பயணிக்க விரும்பாத படைப்பாளி. 

புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். 

டிசம்பர் 18 - 1998-ல் இயற்கை எய்தினார்.

சகோதரர் பிலால் அமீரக எழுத்தாளர் குழும வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம் நிகழ்வில் 'வாடிவாசலை' லயித்துப் பேசினார். அதன் பாதிப்பால் ஷார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் வாடிவாசலை வாங்கி வாசித்தேன்... வாசித்து முடிக்கும்வரை கீழே வைக்க மனமில்லை... அவ்வளவு அருமையான எழுத்து.

வாடிவாசல் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய குறுநாவல்.

வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்.
விலை. ரூ. 90
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

வீராப்பு (பரிசு பெற்ற கதை)

வீராப்பு...

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. கிராமத்து மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் எப்பவுமே வீம்பும் வீராப்பும் நிறைந்ததாய்த்தானிருக்கும். 

அப்படியான அவர்களின் வாழ்க்கையை, எதார்த்த வாழ்க்கையை, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை, அறியாமை நிறைந்த வாழ்க்கையை, நேசம் நிறைந்த வாழ்க்கையை, ஆடு, மாடு, கோழி, நாயென அரவணைத்து வாழும் வாழ்க்கையை, தெய்வங்களுடனான பிணைப்பு, திருவிழாக்கள், துக்கம், சந்தோஷம் என எல்லாம் கலந்த வாழ்க்கையைத்தான் எனது பெரும்பாலான கதைகள் பேசும்... அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இக்கதையும் பேசியது. 

இன்று பாலாஜி அண்ணா தனது வலைப்பூவான 'போற போக்குல'யில் இது குறித்து எழுதி, முகநூலில் பகிர்ந்த பின்னர்தான் கதைகளைப் பகிர்வதில்லை என்ற விரதத்தைச் சற்றே விலக்கி வைத்து வீராப்பை இங்கே இறக்கி வைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.... அதுக்கு முன் பாலாஜி அண்ணாவின் வலையில் 'வீராப்பு' பற்றி எழுதியிருப்பதை வாசிக்க இங்கே சொடுக்குங்க. நன்றி பாலாஜிண்ணே.

இனி... 
வீராப்பு

ம்ப்பு... ஒனக்கு வெசயம் தெரியுமாப்பு...என்றபடி பொழுது பளப்பளன்னு விடியும் போதே சாமிநாதன் வீட்டு வாசலில் நின்றார் சேதுக்கரசு.

"என்னப்பா... படுக்கய விட்டு எந்திரிச்சி வாறவனுக்கு என்ன வெசயந் தெரியப்போவுது... ஒனக்குத் தெரிஞ்சிதானே இம்புட்டுத்தூரம் வந்திருக்கே... அது என்னன்னுதான் சொல்லுவேப்பா..." என்றபடி கையிலிருந்த சொம்புத் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவி, வாய் கொப்பளித்து தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.

"ஒனக்குத் தெரியாதுன்னுதான் சொல்ல ஓடியாந்தேன்..." என்றபடி இடுப்பு வேட்டிக்குள் இருந்த நிஜாம் லேடி புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, விரல் விட்டு கொஞ்சமாய் கிள்ளி எடுத்து, கையில் வைத்துத் தேய்த்து வாய்க்குள் அதக்கிக் கொண்டு "போயெல வேணுமாப்பா..." என பாக்கெட்டை சாமிநாதனிடம் நீட்டினார்.

"இப்ப வாணாம்... காப்பித்தண்ணி குடிக்காம போயெல போட்டா நல்லாத்தேன் இருக்கும்... அது இருக்கட்டும் வெசயத்தோட வந்தவன் அப்பறம் என்னத்துக்கு கேள்வி கேக்குறே... என்னான்னுதான் சொல்லுவே..." ஏதோ விவகாரம் என்பதால் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருந்த சாமிநாதனிடம் காபியை நீட்டினாள் பேத்தி அனன்யா.

"ஏம்ப்பா காப்பி...” என்றவர், “அதான் நீ போயெலயப் போட்டுட்டியே... இனி எங்கிட்டு காப்பி..." என்றபடி டம்ளரை வாயில் வைத்து 'உருட்' என உறிஞ்சினார்.

"செலுவப்பய மவன் நட்ட நடுநிசியில வந்துருகானாமப்பு... ஊரெல்லாம் டமாரமாக் கெடக்கு... ஒனக்குத் தெரியுமோ என்னமோன்னுதான் வெள்ளக்கம்மாப் பக்கமா வெளிய இருக்கப் போனவன் சொல்லிட்டுப் போகலாம்ன்னு இங்கிட்டு வந்தேன்..."

"ஆறு மணிக்கெல்லாம் ஊரு பூராம் பரவிருச்சாக்கும்... எனக்கெங்கப்பா தெரியுது... இங்கிட்டு தோட்டத்துப் பக்கம் வந்துட்டு ஊரு வெசயம் ஒன்னய மாதிரி ஆளுக யாராச்சும் சொன்னாத்தான் தெரியுது..."

"ம்..."

"ஆமா அவளும் வந்திருக்காளாமா....?" என்றபடி மீண்டும் காபி டம்ளரை வாயில் வைத்து 'உருட்'டினார்.

"ஆமா குடும்பத்தோடதான் வந்திருக்கானாம்..."

"அப்ப நீ பாக்கலயா...?"

"இல்ல.... பார்வதியக்கா... பால் வாங்க வந்தப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"ம்... செலுவம் வரச் சொல்லாமயா வந்திருப்பான்... என்ன தயிரியமிருந்தா அவளயும் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்... சும்மா விடக்கூடாது... ஊர்க் கூட்டத்தக் கூட்டி உண்டு இல்லன்னு பண்ணாம விடக்கூடாதுங்கிறேன்.."

"அட இருப்பு... இன்னும் வந்திருக்கது அவன் மட்டுந்தானா... இல்ல அவளயும் கூட்டியாந்திருக்கானா... எதுக்கு வந்திருக்கான்... என்ன வெவரம்ன்னு எதுவுமே சரியாத் தெரியல... அதுக்குள்ள எதுவுந்தெரியாம நாம அருவா எடுத்து... எப்படியும் இன்னக்கி வெசயம் வெளிய வந்துதானே ஆவணும்..."

"அட கூமுட்ட... நீதானே பார்வதியக்கா சொன்னுச்சுன்னு சொன்னே...." காபி டம்ளரை கட்டைச் சுவற்றில் வைத்தார். காத்திருந்த ஈக்கள் காபி குடிக்க டம்ளருக்குள் சண்டை போட்டன.

"அட அது ஒரு வெவரங்கெட்ட மனுசி... ஒண்ணுக்குப் போக எந்திரிச்சி வந்துச்சாம்... அப்ப ஆளுக காருலயிருந்து எறங்கிப் போனாவளாம்... இருட்டுல யார்யாருன்னு தெரியலன்னு சொன்னுச்சு..." என்றபடி வாயில் இருந்த புகையிலை எச்சியை 'புளிச்'சின்னு தரையில் துப்பினார். அது மண்ணில் உருண்டு திரண்டது. ஈக்கள் அதன் மீதும் உட்கார்ந்து பறந்தன.

"நல்லாத்தேன்... எவுக எறங்கிப் போனாவனே தெரியாம... செலுவம் மவன மட்டும் தெரிஞ்சிச்சாக்கும் அந்த முண்டச்சிக்கி..."

"அதுதான் சொல்லுது... எனக்கென்னதத் தெரியும்... பாப்பம் யாரு வந்திருக்காவன்னு வெளிய தெரியாமயாப் போவும்..."

"ம்... நீ சொல்றது செரிதான்... வெவரந் தெரியாம நாம முந்திக்கிட்டுப் போக்கூடாதுதான்... "

"ஆமாமா... அப்ப நா வாரேம்ப்பா..." என்ற சேதுக்கரசு, வாசலில் நின்ற வேப்ப மரத்தில் குச்சியை ஒடித்து பல் விளக்க கையில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.

திண்ணையில் அமர்ந்த சாமிநாதன் மனசுக்குள் செல்வம் மகன் செய்தது நினைவில் ஆடியது.

ஏழு பங்காளி வீட்டுக்குன்னு ஒரு நடமொற இருந்துச்சு... நாலஞ்சு ஊருல இருந்தாலும் கருப்பன் கெடா வெட்டுக்கு மட்டும் எல்லாரும் இங்க வந்து கூடிருவாக... அவங்களுக்குள்ள பொண்ணு எடுக்கவோ, கொடுக்கவோ கூடாதுகிறது தலமொற... தலமொறயாத் தொடந்துக்கிட்டு இருக்க பழக்கம்.  'அந்தப் பழக்கத்தை உடச்ச பயதானே செலுவம் மயன்...' என்று நினைத்தவர் 'க்க்கும்...' என்று செருமியபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டார். அவரின் மனசுக்குள் சில வருடங்களுக்கு முன்  தன் முகத்தில் கரி பூச்சிய அந்த நிகழ்வு காட்சியாய் விரிந்தது.

"வாங்க சித்தப்பா... என்ன கருக்கல்ல வந்திருக்கீக... ... ராஜாத்தி சித்தப்பாவுக்கு காப்பி போடு..."

"காப்பியெல்லாம் வேணாந்தா.... இப்பத்தான் குடிச்சிட்டு வாரேன்... ஏஞ் செலுவம்... எங்காதுக்கு அரசபுரசலா ஒரு சேதி வந்திருக்கு... ஓனக்கு எதுவுந் தெரியுமா...?"

"என்ன சேதி சித்தப்பா..?"

"எல்லாப் பக்கமும் பேசுறாய்ங்க... நீ தெரியாதுங்கிறே... எங்க ஒம்மவன்..."

"ம்.... அதுவா...? தெரியிஞ் சித்தப்பா... என்ன செய்யச் சொல்லுறீய..?"

"அப்ப ஒத்துக்கிறியா...? ஏழு பங்காளிக்குன்னு ஒரு மொற இருக்குடா... நாளாப்பின்ன ஊரு, நாட்டுக் கூட்டத்துல நம்மளுக்கு மதிப்பிருக்குமா..?"

"என்ன பண்ண சித்தப்பா... சொல்லிப் பாத்தாச்சி... அடிச்சிப் பாத்தாச்சி... செத்துருவேன்னு மிரட்டுறான்... என்னய என்ன செய்யச் சொல்லுறீய...."

"என்ன செய்யச் சொல்லுறீய... என்ன செய்யச் சொல்லுறீயன்னா... நீயே கட்டி வப்பே போல..."

"இந்தாங்க மாமா காப்பி..." என காபியை நீட்டியவளிடம் "அதான் வாணாமுன்னு சொன்னேனுல்ல... ஏம் போட்டே... செரி குடுத்தா...." என்றபடி வாங்கிக் கொண்டார்.

"அவுகளும் சொல்லிப் பாத்தாச்சு... அடிச்சி மெரட்டியெல்லாம் பாத்துட்டாக... அவளத்தான் கட்டுவேன்... இல்லேன்னா ரெண்டு பேரும் வெசத்தக் குடிச்சிட்டு செத்துப் போவோமுன்னு மிரட்டுறான்.... இதுக்கா பெத்து வளத்தோம்... என்ன செய்யுறதுன்னு தெரியல மாமா..." சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரைதாரையாக கன்னத்தில் ஓடியது.

"இப்ப எதுக்கு நீ அழுவுறே... செத்தாச் சாவட்டும் மயிருப்புள்ள... இப்படிப்பட்ட புள்ள இருந்தாயென்ன... செத்தாயென்ன..." என்றவர் குரலைத் தாழ்த்தி "இங்கேரு செலுவம்... அந்தப்பய நாளக்கி விடியயில இங்க இருக்கப்படாது... எதாச்சும் நல்லதச் சொல்லி எங்கிட்டாச்சும் விரட்டிவிடு கழுதய... சோறு தண்ணிக்கி நாயாத் திரிஞ்சி வேல பாத்தா சூத்துக் கொழுப்பு தன்னால அடங்கும்... நாஞ் சொல்றத சொல்லிப்புட்டேன்... அம்புட்டுத்தான்... அவன் ஏதாவது நாடுமாறித்தனம் பண்ணிப்புட்டா அப்புறம் ஊரு ஒறவுன்னு நீதான் பதில் சொல்ல வேண்டி வரும் பாத்துக்க..." என்றபடி காபி டம்ளரை வைத்துவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

"வாங்க சித்தப்பா... என்ன இம்புட்டுத்தூரம்...?" கட்டுத்தொரையில் எருக்கூட்டிக் கொண்டிருந்த வசந்தா, கட்டை விளக்குமாறைப் போட்டுவிட்டு சேலை முந்தானையில் கையைத் துடைத்தபடி வரவேற்றாள்.

"சும்மாதாந்தா... மேலக்கொள்ள ராசப்பன ஒரு வேலயாப் பாக்க வந்தே... ஒ ஞாபகம் வந்திச்சி... இம்புட்டுத் தூரம் வந்துட்டு ஒன்னய பாக்காம போலாமா... அதான் ஒரு எட்டு பாத்துட்டுப் போலாமுன்னு... ஆமா எங்க எம்பேத்தியா... ஆளில்லயோ..." என்றபடி துண்டால் திண்ணையில் கிடந்த தூசியைத் தட்டிவிட்டு அமர்ந்தார் சாமிநாதன்.

"உள்ளதான் இருக்காவ... அவுகளுக்கு இப்ப எங்க மரியாத கொடுக்கணுமின்னில்லாம் தெரியுது... அவுக போக்குலதானே போறாவ... நாலெழுத்துப் படிக்க வச்சது எந்தப்பு..." பொறுமினாள்.

"இந்தா... இப்ப என்ன நடந்து போச்சுன்னு ஒப்பாரி வக்கிறவ... அந்த வெசயத்த நானும் அரசல்புரசலாக் கேள்விப்பட்டேந்தான்... காலயில செலுவத்துக்கிட்ட கூட இது வெசயமாத்தான் பேசிட்டுத்தான் வாரேன்.... ஏழு பங்காளிக்கின்னு ஒரு நடமொற இருக்குல்ல... அத மாத்த முடியாதுல்ல... ரெண்டு பேருக்கும் கேலி மொறதான்... கட்டி வக்கலாந்தான்.... ஆனா வழிவழியா வந்த மொறய விட்டுட முடியுமா...?"

"அதான் சித்தப்பா... அதனாலதான் நானும் தலதலயா அடிச்சிக்கிறேன்... பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கா... எதுனாச்சும் பண்ணிப்பாளோன்னு பயமா வேற இருக்கு..."

"நீ ஏன் அப்புடி நெனக்கிறாவ... இங்க வா.... அவளுக்கிட்ட எதுவும் பேச வேணாம்... காதுங்காதும் வச்ச மாதிரி ஒரு பயலப் பாத்து சட்டுப்புட்டுன்னு அவ கல்யாணத்த முடிச்சிப்புட்டா சோலி முடிஞ்சிச்சி... அந்தப் பயலயும் நாளக்கி எங்கயாச்சும் வெளிய அனுப்பச் சொல்லிட்டுத்தான் வாரேன்... எல்லாஞ் செரியாகும்... கருப்பன் இருக்கானுல்லாத்தா... நடமொறய மாத்த விட்டுருவானா என்ன... நீ கவலப்படாத..."என்று மெல்லப் பேசியவர், "சரித்தா கொஞ்சந் தண்ணி கொடு... நாங்கெளம்பணும்" என்றார்.

"இருங்க காப்பி போட்டுக்கிட்டு வாரேன்."

"அதெல்லாம் வேணாம்... விடிஞ்சுட்டு ரெண்டு மூணு காப்பி குடிச்சாச்சு... தண்ணி மட்டும் கொடு போதும்..." என தண்ணி வாங்கிக் குடித்துவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோசத்தில் கிளம்பினார்.

மறுநாள் விடியல் அவருக்கு செல்வம் மகனும் வசந்தா மகளும் ஓடிப்போயிட்டாக என்பதாய்தான் விடிந்தது.

'ம்மொகத்துல கரியப் பூசிட்டுப் போனதுக திரும்பி வந்திருக்குக... விடக்கூடாது...' எனச் சொல்லிக் கொண்டு முகத்தைத் துடைத்தவர். 'எதுக்கு வெவரம் தெரியட்டும்ன்னு காத்திருக்கணும்... அங்க போன வெவரம் தெரியப்போகுது... என்ன ஆனாலுஞ் செரி நேர போயி பாத்துட்டு வந்துடலாம்' என்ற முடிவோடு செல்வம் வீட்டை நோக்கி நடந்தார்.

"வாங்க சித்தப்பா... நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்..." என்றபடி சேரெடுத்துப் போட்டான் செல்வம்.

"என்னப்பா... காலயில எனக்கு வந்த சேதி உண்மதானா...?" கோபத்தோடு கேட்டார்.

"ஆமா சித்தப்பா... ஒங்க பேராண்டி வந்திருக்கான்..."

"பேராண்டி... எவன்டா எம்பேராண்டி... அம்புட்டு ஒங்கிட்டச் சொல்லிட்டுப் போயும் எம் மொகத்துல மறுநாளே கரியைப் பூசுனவன் பேராண்டியா...?" கோபமாய்க் கேட்டார்.

"இப்ப என்ன செய்யணுங்கிறிய சித்தப்பா... அவனை வெட்டிப் போட்டுடவா... அப்படிப் போட்டுட்டா ஏழு பங்காளிக்கு அவனால ஏற்பட்ட களங்கம் போயிருமா...?"

"என்னடா பேசுறே... அப்ப நீ அவன ஏத்துக்கிட்டுத்தான் வரச்சொல்லியிருக்கே... இல்லயா...?"

"ஆமா நாந்தான் வரச்சொன்னேன்... ரெண்டு பேரும் விரும்புனாங்க... ஓடிப்போனாங்க... ரெண்டு புள்ளயும் பெத்துட்டாக... இனியும் ஒதுக்கி வச்சி என்னாகப் போகுது... அதான் இங்க வரச் சொன்னேன்..."

"... புரட்சி பேசுறியோ... அப்ப நடமொற... பழக்க வழக்கமெல்லாம் தேவயில்லன்னு சொல்றே... அப்படித்தானே..."

"என்ன சித்தப்பா நடமொற... இதெல்லாம் நாம ஏற்படுத்துனதுதானே... வெள்ளச்சாமி மவன் கெளெக்குள்ள கெளெதான் கட்டிக்கிட்டான்.... அன்னக்கி ஊரு குதிச்சிச்சு... இப்ப எவன் கெளெக்கிள்ள கெளெ கட்டாம இருக்கான்.... இல்ல நல்லது கேட்டதுன்னா எவன் அவமூட்டுல போயி நிக்காம இருக்கான்... அன்னக்கி சாதிக்குள்ளயே பாகுபாடு பாத்தாங்க.. அந்த பிரிவுல நாங்க கொடுக்கிறதில்ல... இந்தப் பிரிவுல நாங்க கொடுக்கிறதில்லன்னு சொன்னாக... இன்னக்கி எந்த பிரிவுல கொடுக்காம இருக்காக சொல்லுங்க..."

"அதுக்காக ஒம்மவன் பண்ணுனத ஞாயப்படுத்துறியா... ஏழு பங்காளி வகயறாவே தல  குனிஞ்சு நின்னுச்சுடா... மறந்துட்டியா..."

"ஞாயப்படுத்தல சித்தப்பா... இப்ப இருக்க காலகட்டம் அப்படின்னு சொல்ல வந்தேன்.... நாளக்கி கருப்பனுக்கு கெடா பூச போடுறேன்... அப்ப இந்தக் கலியாணம் தப்புன்னா கருப்பன் அதுகளுக்குத் தண்டன கொடுக்கட்டும்... ரெண்டு ரத்தமும் சேந்து மூணாவது ரத்தங்களும் வந்தாச்சு.... இன்னமும் நாம எதுக்கு எதுத்துக்கிட்டு கெடக்கணும்... என்னத்த கொண்டு போப்போறோம் சித்தப்பா..."

"ஒனக்கு வசந்தா பரவாயில்ல... செத்தாலும் அவ மொகத்துல முழிக்கமாட்டேன்னு சொன்னவ அப்புடியே போயிச் சேர்ந்துட்டா... நீ கூட்டியாந்து ஒறவ வளக்குறியாக்கும்.... பங்காளிகளுக்கிட்ட கலந்து பேசி ஒன்னய ஏழு பங்காளிகள்ல இருந்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும் பாத்துக்க..."

"அட ஏஞ்சித்தப்பா இன்னமும் பழய நடமொறயவும் பழக்க வழக்கத்தயும் தூக்கி வச்சிக்கிட்டு திரியிறிய... சின்னஞ்சிறுக மனசுக்குப் பிடிச்சி கட்டிக்கிருச்சுக... பழசச் சொமக்காம அதுக நல்லாயிருக்கட்டும்ன்னு வாழ்த்துறதுல என்ன வந்திறப் போவுது... நானும் வீம்பாத்தான் இருந்தேன்... என்னத்தக் கொண்டு போப்போறோமுன்னுதான் அவனோட பெரண்டு மூலமாப் பேசி இங்க வரச்சொன்னேன்... இங்கயே அவுக தங்கப் போறதில்ல... ஆனா வரப்போக இருக்கத்தான் செய்வாக... ஊரு என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுறேன் சித்தப்பா...."

"ம்... எடுக்கும்... எடுக்கும்... எடுக்க வப்பேன் " என்றபடி வேகமாய் சேரைத் தள்ளிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.

"இந்த வீராப்புனாலதானே ஏழு பங்காளி வீட்டு செல்லத்தாயி... அதான் ஒங்க தங்கச்சி... எங்க அத்த... ஒரம்பா மரத்துல தொங்குச்சு.... அன்னக்கி என்னய்யா நடமொறன்னு எங்கய்யனோ... அப்பனோ... இல்ல நீங்களோ  தூக்கி வீசிட்டு... எங்க அத்த ஆசப்படி சேத்து வச்சிருந்தா அல்பாயுசுல அது போயிருக்காதுல்ல... இன்னமும் வாவரசியா வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்குமுல்ல..." செல்வத்தின் குரல் அவரின் முதுகுக்குப் பின்னே அறைந்தது.

அந்த வார்த்தைகள் அவரின் நெஞ்சுக்குள் சுருக்கென குத்தியது.

செல்லத்தாயி நினைவில் கண் கலங்கியது.

கண்ணைத் துடைத்தபடி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்...

அவர் செல்லத்தாயி உயிரைப் பறித்த ஒரம்பா மரம் நின்ற இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்...  ஊர்க் கூட்டத்தைக் கூட்டுவேன் என்ற வீராப்பை அந்த இடத்தில் இறக்கி வைத்துவிட்டுச் செல்வாரா அல்லது சுமந்து செல்வாரா என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது... ஏறு வெயிலில் வேகமாக நடந்தார்.

-'பரிவை' சே.குமார்.