மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 மே, 2012

செல்லரிக்காத நினைவுகள்

எனக்கும் உனக்குமான காதல்
துருப்பிடித்த இரும்பைப் போல்
தூரக் கிடக்கிறது...

வெற்றிடத்தை நிரப்பும்
காற்றைப் போல் மனதெங்கும்
வியாபித்திருக்கும் நினைவுகள்
எனக்குள் மட்டுமல்ல...
உனக்குள்ளும்தான்...

உறவுப் பார்வைக்குள்
உன் ஒற்றைப் பார்வை மட்டும்
சத்தமில்லாமல் சண்டையிடுகிறது
பார்த்தும் பார்க்காமல்
காதல் போர்க்களத்தில்
நிராயுதபாணியாய் நான்...

நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...
அவர்களுக்குத் தெரியுமா
நம் காதல் செல்லப்பெயர்கள்...சொந்தமான நமக்குள்
பந்தமற்ற வாழ்வைக் கொடுத்த
கருணையற்ற காலத்தை
நினைத்து மறுதலிக்கும்
மனங்களின் முகவரியாய்
தவிக்கும் கண்கள்...

மணிக்கணக்கில் பேசும் நீ
மனதால் பேசுகிறாய்
எப்போதும் உதிர்க்கும்
ஒற்றைப் புன்னகையை
உலர்வாய் உதிர்த்தபடி...
உறவுகளோடு உறவாய்...
  காதலைச் சுமக்கும்
கல்லறை இதயத்துக்குள்
நீ பூத்த உலர் புன்னகையும்
உலராத புதுவரவாய்...

என் சிந்தைக்குள் நீயும்
உன் சிந்தைக்குள் நானும்
இப்போதும்... எப்போதும்...
செல்லரிக்காத நினைவுகளாய்...

-'பரிவை' சே.குமார்.

நன்றி : படம் இணையத்திலிருந்து

ஞாயிறு, 27 மே, 2012

நாயகன்: நாகேஷ்

நாயகன் அப்படிங்கிற தலைப்புல முதன் முதலில் அஜீத் குறித்து எழுதினேன். அதன் பிறகு நாயகன் எழுதவில்லை... எல்லாமே ஆரம்பிக்கும் போது தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஆரம்பமாகிறது. ஆனால் தொடரத்தான் முடிவதில்லை. நாகேஷ் பற்றி படித்த போது அவரைப் பற்றி நாயகனில் எழுதலாமே என்ற எண்ணம் தோன்ற ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி சில தகவல்கள் நாயகனில்...

நாகேஷ்... இந்தப் பெயரே சிரிப்பை வரவைக்கும். ஊரில் ஒல்லியாக இருக்கும் சிலருக்கு நாகேஷ் என்ற பட்டப் பெயரே உண்டு. இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் நாகேஷ்க்கு என்று இருந்த அந்த இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் வைகைப் புயல் வடிவேலு கருப்பு நாகேஷ் என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார்.

இன்று இருக்கும் சில நகைச்சுவை நடிகர்கள் வரும் சிரிப்பைக்கூட வரவிடாமல் செய்யும் பெரிய அப்பாடக்கர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாகேஷ், என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு என இவர்கள் எல்லாம் திரையரங்கு வரும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தார்கள்.

அபுதாபியில் திரு. நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசும் போது சிவாஜி ஒருமுறை அவரிடம் "இந்த நாகேஷ், ஆச்சியெல்லாம் நாம கொஞ்சம் ஏமாந்தாலும் தூக்கிச் சாப்பிட்டுடுவாங்க... கவனமா இருக்கணும்..." என்றாராம். அவர் பொறாமையில் சொல்லவில்லை. நாகேஷின் நடிப்பை பார்த்து வியந்ததால் அப்படி சொல்லியிருக்கிறார்.

நாகேஸ்வரன் என்ற பெயர்தான் நாகேஷ் ஆனது. 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி தாராபுரத்தில் கன்னடர்கள் அதிகம் வாழும் கொஞ்சிவாடியில் கிருஷ்ணாராவ், ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த நாகேஷ் பிறப்பால் கன்னட பிராமணர். நாகேசை வீட்டார் அழைக்கும் செல்லப் பெயர் குண்டப்பா. நண்பர்கள் அவரை குண்டுராவ் என்றே அழைப்பார்களாம்.(உடம்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லாமல் வைப்பதுதான் நம் மறபு இல்லையா?)கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு வந்த அம்மை நோயின் காரணத்தால் முகத்தில் தழும்புகள் தோன்றின. படிக்கும் போதே னடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். படிப்பை முடித்ததும் அப்பா ரயில்வேயில் இருந்ததால் அவருக்கும் ரயில்வே பணி சுலபமாக கிடைத்தது. ரயில்வேயில் பணி புரியும் போதும் அமெச்சூர் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை... தொடர்ந்து நடித்து  வந்தார்.

மணியன் அவர்கள் எழுதிய 'டாக்டர் நிர்மலா' என்ற நாடகத்தில் 'தை தண்டபாணி' என்ற பெயரில் 'தை... தை...' என்று சொல்லிக் கொண்டு வரும் நோயாளி கதாபத்திரத்தில் நடித்தார். அதனால் இவருக்கு 'தை' நாகேஷ் என்ற பட்டப் பெயர் உண்டானது. அதுவே பின்னாளில் மருவி 'தாய்' நாகேஷ் ஆனது.

நாடகங்களில் நடித்து வந்த நாகேஷ் 1959 ஆம் ஆண்டு 'தாமரைக்குளம்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் வேலையை விட்டுவிட்டு வந்து நடித்த 'தாமரைக்குளம்' படத்தின் மூலம் அவருக்கு பெயரும் வரவில்லை... எதிர்பார்த்த பணமும் வரவில்லை என்பதை நாகேஷே ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. பேர் சொல்லிக் கொள்ளும்படியான படமாக எதுவும் அமையவில்லை. இந்த நாட்களில்தான் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். படத்தின் பல காட்சிகள் நாகேஷைப் பற்றி பேச வைத்தன. குறிப்பாக பாலையா அவர்களிடன் நாகேஷ் கதை சொல்லும் காட்சி இன்று புதிதாக பார்ப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.

இயக்குநர் கே.பாலச்சந்தரின் 'சர்வர் சுந்தரம்' படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து தன்னால் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமல்ல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்தார். அதன் பயனாக இயக்குநர் கே. பாலச்சந்தர் தனது 'நீர்க்குமிழி' படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். நாகேஷ் தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த பெருமை நம்ம ஆச்சி மனோரமா அவர்களையே சேரும். இரண்டு பேரும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்கள் என்றால் மிகையாகாது. நாகேஷின் நடிப்பில் திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும் பலராலும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என கலக்கிய நாகேஷ் வில்லனாக அதுவும் கொடூர வில்லனாகவும் கமலஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்  நடித்திருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் போன்ற கமலஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். தசாவதாரம் படம்தான் நாகேஷின் கடைசிப் படம் ஆகும்.

நாகேஷ் ஒரு பேட்டியின் போது "நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னை ரசிகர்கள்தான் நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்" என்று சொல்லியிருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் நாகேஷ் கஷ்டப்பட்ட போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. தனக்குத் தெரிந்த பட முதலாளிகள், டைரக்டர்கள், முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள்ளுங்கள்'' என்று சொல்லுவாராம். அவரைப் பற்றி பேசும் போது ''பாலாஜி எனக்குச் செய்த உதவிகளை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று நாகேஷ் பலமுறை கண்கலங்க சொல்லியிருக்கிறார்.

எல்லாரையும் சிரிக்க வைத்த நாகேஷால் கடைசி காலத்திலும் சொந்த வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்பதே உண்மை.


"வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். கலையைக் காப்பாற்றுகிறேன் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை எல்லோரும் நினைத்தால் கலையும் பிழைக்கும்... நாமும் பிழைக்கலாம்" என்பது நாகேஷின் கருத்து.

நாகேஷ் என்ற மகா நடிகன் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்தக் கலைஞன் வாழ்ந்து மறைந்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் இன்றும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது... இன்று மட்டுமல்ல இன்னும் பல காலங்கள் சினிமாவின் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

தகவல் திரட்ட உதவிய தமிழ் விக்கிப்பீடியா மற்றும்  நண்பர்களின் இணைய தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

கூகிள் : படங்களுக்கு நன்றி

புதன், 23 மே, 2012

மறந்தவை... மறைந்தவை...

கிராமத்து பசங்களோட ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டுக்களை பாடிக்கொண்டு விளையாடுவது என்பது உற்சாகத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இப்போ இருக்கிறதா..? இன்றைய நிலையில் கிராமத்துல பிறந்த பிள்ளைகளுக்கே அப்படி ஒரு பாட்டு இருப்பது தெரியாது. காரணம் என்னன்னா இப்ப பிள்ளைங்க படிப்பு, வெளியூரில் வேலை, பொய்த்துப் போன விவசாயம் என கிராமம் மெல்ல மெல்ல நகரத்துக்குள் வந்துவிட்டது. கூட்டாக பிள்ளைகள் விளையாடுவது என்பது அரிதாகிவிட்டது.

தொலைக்காட்சியும் இணையமும் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப் போட்டுவிட்டன. முன்பெல்லாம் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு பக்கத்து வீட்டுப் பெரிசுடன் அளவளாவிக் கொண்டிருக்கும் பெரியவர் கூட கிரிக்கெட்டையும் நாதஸ்வரத்தையும் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு தவமிருக்கிறார். உறவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியமாகி வருகின்றன என்பதே உண்மை.

பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் காபியோ கஞ்சியோ குடித்துவிட்டு மாலை ஆரம்பிக்கும் விளையாட்டு இரவு வரை தொடர்வதும்... ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 'அடேய் ராமு...' 'அடேய் சேகரு...' என்று அழைப்போசை கேட்டதும் 'சாப்பிட்டுட்டு வாறேன்' என்று சொல்லிச் சென்று மீண்டும் வந்து விட்ட இடத்தில் இருந்து விளையாடுவதும் வாடிக்கையாக இருந்த வாழ்க்கையோடு இன்றைய சிறார்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியாது.

அப்படி விளையாண்ட நாட்களில் விளையாட்டோடு ஒன்றிய பாடல்கள் பல மறந்து விட்டன... இல்லையில்லை... காலச் சுழற்சியில் மறைந்து விட்டன என்றால் மிகையாகாது. அப்படி மறைந்த பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

கண்டு பிடிச்சு விளையாடும் போது ஒருத்தர் கண்ணை பொத்திக் கொள்ள மற்றவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். அப்படி கண்ணப் பொத்தும் போது சும்மா பொத்த மாட்டாங்க... அதுக்கு ஒரு பாட்டு பாடுவாங்க...

'கண்ணாங் கண்ணாம் பூச்சி
கடகட தோழி
எத்தனை முட்டை
மூணு மூட்டை
நொள்ள முட்டையை போட்டுட்டு
நல்ல முட்டையை கொண்டு வா...'

இதுல எத்தனை முட்டையின்னு கேட்டதும் கண்ணு பொத்தப்பட்டிருப்பவர் விளையாடுற ஆட்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.

இதே போல் சொட்டாங்காய் விளையாடும் போது ஒண்ணான்... ரெண்டான்... மூணான்... இப்படி போகும் போது இடையில் சில ஆட்டங்களில்....

'அத்திப் பித்தித் தா
தவிடு தள்ளித் தா
திங்க மாட்டேன் போ
சீனி போட்டுத் தா
தின்னு விட்டேன் வா...'

என்ற பாடலும்....

'ஊத்தா ஒழுங்கா
சம்பா சரவணக் கும்பா'

என்ற பாடலும் வரும். இன்னைக்கு பலருக்கு சொட்டாங்காய் எப்படி விளையாடுறதுன்னு தெரியாது. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கும்... இல்லையா?

கிச்சுக் கிச்சுத் தம்பளம் விளையாடும் போது மண்ணுக்குள் குச்சியை ஒளித்து வைக்கும் போது...

'கிச்சுக் கிச்சுத் தம்பளம்
கிய்யா கிய்யா தம்பளம்
நட்டு வச்ச் இடத்துல
பட்டுப் போ பட்டுப் போ...'

அப்படின்னு பாடிக்கிட்டே குச்சியை மண்ணுக்குள் ஒளித்து வைப்பார்கள்.
மழைக் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் போதோ அல்லது திரும்பி வரும்போதோ ரோட்டோரத்தில் அழகாக ஊர்ந்து செல்லும் நத்தையைக் கண்டதும் வரும் பாடல் இது.

'ஊறி ஊறியாரே...
உடப்பம்பட்டியாரே...
புள்ள குட்டி நல்லாயிருக்கா...
பொதுக்கை செட்டியாரே...'


இதுல ஊறி சில நேரத்துல ஊதின்னு கூட வரும். உடப்பம்பட்டி எப்பவுமே ஒடப்பம்பட்டிதான்... அப்புறம் இந்த பொதுக்கை செட்டியாரே... பல ரூபத்துல வரும். அதெல்லாம் இப்ப எதுக்கு... எல்லாருமா சேர்ந்து கோரஸா பாட ஆரம்பிச்சிட்டா பள்ளிகூடத்துக்கு ரெண்டு கிலோ மீட்டர் நடக்கிற அலுப்பே இருக்காது.


கை விரல்களை ஒன்றன் மேல் ஒன்றாக வளைத்து அடுக்கி வச்சிக்கிட்டு சின்ன குழந்தைக்கு விளையாட்டுக் காட்டும் போது வரும் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல் இதோ...

'குப்பையை குப்பையை
நோண்டினேன்...
கோணக் கையாப் போச்சு...
நாகருக்கு நேர்ந்தேன்
நல்ல கையா ஆயிருச்சு...'

நல்ல கையா ஆயிருச்சுன்னு சொல்லும் போது எல்லா விரலையும் விரிச்சுக் காட்ட அழுகிற குழந்தை அழுகையை விட்டுட்டு சிரிக்க ஆரம்பிக்கும்.

தட்டான் பிடிக்கும் போது ரெண்டு பேருக்கு சண்டையின்னு வையிங்க, ஒருத்தன் தட்டானை பிடிக்கப் போகும் போது இன்னொருத்தன் சத்தம் போட்டு கெடுத்துடுவான். அதுவும் எப்படி இந்த பாட்டைப் பாடி கத்தினால் தட்டான் பறந்து போயிடுமில்ல...

'தட்டான் தட்டான் டோய்...
தவளைத் தட்டான் டோய்...
உன்ன ஒருத்தன் புடிக்க வாறான்...
ஓடிப்போ டோய்...'

அப்படின்னு கத்தியே அதை விரட்டிருவான். அப்புறம் என்ன மண்ணுக்குள்ள மல்லுக்கட்டுதான். ஆனா அந்த சண்டையிலயும் ஒரு சுகம் இருக்கும். அடிச்சு... முகமெல்லாம் கிள்ளி சண்டை போட்டாலும் அடுத்த நாள் ரெண்டு பேரும் பின்பக்கம் கிழிஞ்ச காக்கி டவுசரை ஒரு கையில புடிச்சிக்கிட்டு தோள் மேல கை போட்டுக்கிட்டு தீவிரமா பேசிக்கிட்டு பள்ளிக்கூடம் போயிடுவாங்க.

இப்ப மேல பார்த்த பாட்டையெல்லாம் 'டியர் பாய்ஸ்... ஐ ஆம் சிங் எ சாங்... நத்தை சாங்... சொட்டங்காய் சாங்...' அப்படியெல்லாம் யாரும் ஆரம்பிக்க மாட்டாங்க... அவனவனுக்கு என்ன மாதிரி பாடத் தோணுதோ அப்படி பாடுவாங்க. இன்னும் கொலகொலயாம் முந்திரிக்கா..., அத்தளி பித்தளி அப்படின்னு நிறைய பாடல்களை சொல்லிக்கிட்டே போகலாம்.இப்படி விளையாட்டோட ஒன்றிய பாடல்கள் எல்லாம் மறைந்து விட்டன என்றால்கூட  கால மாற்றம் என்று நினைக்கலாம். ஆனால்  இந்த விளையாட்டுக்களும் அரிதாகிவிட்டன என்று நினைக்கும் போது வேதனைப்பட மட்டுமே முடிகிறது. 

 இப்ப கிராமங்கள்ல கபடி விளையாடக்கூட ஆளில்லைங்க...  எங்கள் பகுதியில் கிராமத்து திருவிழாக்களின் போது மாட்டு வண்டிப் பந்தயம், கபடி போட்டி, இளவட்டக் கல் தூக்குதல், உறி அடித்தல் போன்ற விளையாட்டுக்களை இன்னும்  நடத்துறதுக்கு ஆளிங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது மனசுக்குள்ளே சாரல் மழை போல சந்தோசம் வந்து போறதை மறுக்க முடியலைங்க.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவி : கூகிள்.
-

வெள்ளி, 18 மே, 2012

கிராமத்து நினைவுகள் : பனை மரம்


கிராமத்து நினைவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. இன்று எழுதலாம் என்று நினைத்து அமர்ந்த போது மனதில் நிறைய விசயங்கள் வந்து அமர்ந்தன. திருவிழா மாதம் என்பதால் திருவிழா குறித்து எழுதலாம் என்று நினைத்து பிறகு எழுதலாம் என்று தள்ளி வைத்த போது பனை மரம் என்னைப் பற்றி எழுது என்று மனசுக்குள் வந்து உக்காந்து கொண்டது.

'பனை மரத்துக்கு கீழ இருந்து பாலைக் குடிச்சாலும் ஊரு கள்ளுன்னுதான் சொல்லும்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பனைமரம் எப்படியெல்லாம் நம்மகூட உறவாடியதுன்னு பாக்கலாம்...

எங்கள் ஊரில் நிறைய பனைமரங்கள் இருக்கும். அதிக பனைகள் நிற்கும் ஒரு இடம் வயல்வெளிக்குள் இருந்தாலும் அந்த இடத்துக்குப் பேர் பனங்காடு. நெட்டையும் குட்டையுமாக மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு நிற்கும் அழகே அழகுதான். பனைகளுக்கு நெட்டைப் பனை, குட்டைப் பனை, சதைக்காச்சி என தனித்தனி பெயர்கள் உண்டு.

பனை ஓலை காய்ந்து கீழே விழுந்து கிடக்கும் அதை எடுப்பதற்காக காலையில் விழுந்து அடித்து ஓடிய காலமும் உண்டு. அதில் ஒருவர் அமர்ந்து கொள்ள ஒருவர் கோவிலைச் சுற்றி இழுத்துக் கொண்டு போக வேண்டும். அது ஒரு சந்தோஷம்தான் போங்க. அப்பல்லாம் பனை ஓலை விசிறிதான் எல்லார் வீட்டிலும் இருக்கும்.

காய்ந்த ஓலையில் இருக்கும் மட்டையின் அடிப்பகுதியை அழகாக வெட்டி வண்டி செய்து அதன் முன்பக்கம் நுகத்தடி போல் கம்பைக் கட்டி அதன் இரண்டு பக்கத்திலும் களிமண்ணில் செய்த மாட்டைக்கட்டி அதிலிருந்து கயிறைக்கட்டி இழுத்துக் கொண்டு திரிந்தால் சாப்பாடு மறந்து போகும். கார்த்திகை அன்று சுளுந்து என்று ஒன்றை காய்ந்த ஓலையில் செய்து விளைந்து நிற்கும் வயலின் சனி மூலையில் வைத்து கொளுத்திவிடுவோம். அதற்காக ஓலை கிடைக்காமல் அலைந்து திரியும் நிலமையில்தான் இன்று எங்கள் கிராமம் இருக்கிறது என்று சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

பனை காய்க்க ஆரம்பித்ததும் யாருக்கும் தெரியாமல் நுங்கு வெட்டிக் குடிக்க ஒரு குழுவாக கிளம்பி விடுவோம். மரம் ஏறுவதற்கென்றே பிறந்த சில மச்சான், மாமன் இருப்பார்கள்... அவர்கள் மரத்தில் சரச்சரவென ஏறி... கருக்கு வெட்டிவிடாமல் லாவகமாக பிடித்து அமர்ந்து எது நுங்கு என்பதை கண்டுபிடித்து பிடிங்கிப் போடுவார்கள். பின்னர் யாருக்கும் தெரியாத இடத்தில் அமர்ந்து வெட்டிக் குடிப்போம். நுங்கு சட்டையில் பட்டால் கறை பிடிக்கும். அதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. துணி துவைக்க கண்மாய்க்கு சென்ற அம்மா வந்து வசைபாடும் போதுதான் அந்த நினைப்பே வரும். அதை அப்பவே உதறிட்டு விளையாட ஒடிருவோம்.

சின்ன வயசுல மத்தவங்க நுங்க குடிச்சிட்டு போடுற குதம்பையை எடுத்து வந்து அழகா செதுக்கி ரெண்டு சக்கரம் போல செய்து இடையில் கம்பை சொருகி நீளமான கவக்கம்பு வெட்டி நுங்கு வண்டிய தரையில் வைத்து கவட்டைக் கம்பை வைத்து அழகாக ஓட்டிக் கொண்டு கம்மாய் வரைக்கும் ஓடுவதுண்டு... போகும் போதே ரோட்டோரம் இருக்கும் மாமரத்தில் (காய் திங்க அருமையா இருக்கும்... குழம்புக்கு சுமார்தான்) ஆள் பார்த்துக் கொண்டு ஒரு கல் விட்டுப் பாக்கிறது. மாங்காய் விழுந்தால் அதை எடுத்து கடித்துக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு ஓடுவோம். அந்த மரத்து ஓனரு... ஆ...யா... பாத்தா ஆரம்பமே அமர்களமான வார்த்தையில் ஆரம்பித்து ரவுண்ட் கட்டி கத்த ஆரம்பிக்கும். நமக்குத்தான் இந்தக் காதுல வாங்க அந்தக் காதுல விடுற அருமையான கலை தெரியுமில்ல... அப்புறம் என்ன அது பாட்டுக்கு லோ... லோன்னு கத்த... நாம கருமமே கண்ணா நுங்கு வண்டியோ நூறாங்குச்சியோ வெளாண்டுக்கிட்டு இருப்போம்.

நுங்குக் காலம் முடிந்த கொஞ்ச நாளில் பனம் பழம் விழ ஆரம்பிச்சிரும். பனம் பழம் பொறக்க விடிகாலையில் ஒருவருக்கு முன் ஒருவர் என பனங்காட்டுக்குப் போவோம். குறிப்பா சதைக்காச்சி, இனிப்புப் பனையில்தான் முதல் தேடல். எடுத்து வந்து விறகு அடுப்புல வச்சி சுட்டு பதமா சுட்டதும் ஆளுக்கு ஒரு கொட்டையாக பிரித்து சாப்பிடுவோம். சில நேரங்களில் ரெண்டு கொட்டை, ஒரு கொட்டை பனம் பழத்தில் சிறிதாக சதையாக ஒரு பகுதி இருக்கும். அதுக்குப் பேர் மக்குவாச்சி, அதுதான் வேண்டும் என ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வோம். கொட்டையா எடுத்தா கொஞ்சம்தான் சதை இருக்கும்... மக்குவாச்சியில கொட்டை இல்லாமல் சதையா மட்டுமே இருக்குமே அதுதான் சண்டைக்கான காரணம். அதன் நார் போன்ற பகுதியை சப்பி சாப்பிடும் போது மஞ்சள் கலரில் வரும் கலவை வாயைச் சுற்றி மஞ்சளாக ஒட்டிக்கொள்ளும். கழுவாமல் விட்டால் வறவறவென்று பிடித்துக் கொள்ளும்.

பனங்கொட்டையை காய வைத்து அதன் மேல்புறம் நாறை அழகாக நீக்கி அதில் கண், மூக்கு, வாய் எல்லம் வரைத்து அழகிய பெண்ணாகவோ அல்லது மீசையெல்லாம் வைத்து ஆணாகவோ செய்து நிலைப்படியில் ரெண்டு பக்கமும் மாட்டி வைப்போம். எங்கள் வீட்டிலெல்லாம் நிறைய இருந்தது. தற்போது யார் வீட்டிலும் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆள் விட்டு பனை ஓலை வெட்டும் போது மறக்காமல் பனங்காய்களை வெட்டி வந்து அழகாக சதையை மட்டும் கட்பண்ணி பனையில் போட்டு அது வேவதற்குத் தேவையான தண்ணீர் வைத்து அதற்குள் கொஞ்சம் வெல்லம் போட்டு வேகவைத்து எடுத்து வைத்தால் அது பாட்டுக்கு வயித்துக்குள்ள போய்க்கிட்டே இருக்கும்.

கொட்டைகளை எல்லாம் சேர்த்து வைத்து வீட்டு அருகிலோ அல்லது கொல்லையிலோ மண் மேடு போட்டு அதில் பதித்து வைப்போம். அதற்கு நாள் கணக்கு உண்டு. அந்த நாள் வந்ததும் பறித்துப் பார்த்தால் அம்புட்டுக் கொட்டையும் கிழங்கு வைத்து இருக்கும் கிழங்கை சுட்டோ அல்லது அவித்தோ திங்கலாம். அவிழ்த்த கிழங்கை விட சுட்ட கிழங்குக்கே சுவை அதிகம். இப்ப கிழங்கு ஆசை வந்தா மார்க்கெட்டுல மூணு கிழங்கு பத்து ரூபா கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டியிருக்கு. அந்த கொட்டையை தூக்கிப் போடுவோம் என்றா நினைத்தீர்கள் அதையும் ரெண்டாக வெட்டி உள்ளே வெள்ளையாக இருப்பதை எடுத்து தின்போம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

நான் படிக்கும் காலத்தில் எல்லாம் எங்கள் வீட்டு மாட்டுக் கசாலை பனை ஓலையால்தான் கட்டப்பட்டிருக்கும். ஓலை வெட்டி வந்து மட்டையை தனியாக எடுத்து ஊரணியில் ஊற வைத்து, ஓலைகளை எல்லாம் அழகாக அடுக்கி தண்ணீர் ஊற்றி ஊறவைத்து... மட்டையை நாராக உரித்து வைத்துக் கொண்டு கசாலையில் ஓலை மாற்றும் அன்று காலை முதல் ஓலைக்கு தண்ணீர் ஊற்றி ஊற்றிக் கொடுக்க பூமி அண்ணனும் அவருடன் வருபவர்களும் மழை பெய்தால் தண்ணீர் இறங்காத வண்ணம் மோடு கட்டி இறங்கும் போது சூரியன் மறைந்திருக்கும் நமக்கு உடம்பெல்லாம் வலி உயிர் போகும். அப்படியே புதுசா ஓலை மாற்றிய கசாலைக்குள் போனால்... அப்பப்பா... என்ன சுகமான காற்று... அனுபவித்தால்தான் புரியும். அந்த சந்தோஷத்துடன் கண்மாய் தண்ணீருக்குள் போய் விழுந்தால் வலியெல்லாம் பறந்து போகும்.

அப்புறம் ஓலை வெட்டி கொண்டு வந்து சேர்த்து பண்டுகம் பாத்து கட்டுறதுக்குள்ள ஆவி போயிரும். தென்ன ஓலை வாங்கி கட்டிறலாம் என அப்பா தென்னை ஓலைக்கு மாறினார்... வேலைப் பளு குறைந்தது... ஆனால் வருசம் ஒருமுறை மாத்த வேண்டியிருக்கு என இப்ப ஓட்டுக் கசாலயாக மாறிப் போச்சு... குறிப்பா ஒன்னு சொல்லனுங்க... ஓலைக் கசாலையில நரை எருமை, வெள்ளச்சி, கருத்தப் பசு, காறிக்காளை, மச்சக்காளை என எல்லாரும் வாழ்ந்து எங்களையும் வாழ வச்சாங்க... இப்ப ஓட்டுக் கொட்டகையில வெறுமை மட்டும்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அம்மாவுக்கு மழைக்காலத்தில் விறகு அடுக்கி வைக்க மட்டுமே கசாலை பயன்படுககிறது.

பனை மடடை வண்டியோ, நுங்கு வண்டியோ இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை. கிரிக்கெட்டும் கணிப்பொறியும் அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் கொடுப்பதாக நினைக்கிறார்கள்... உண்மையான சந்தோஷம் நாம் ஓட்டி மகிழ்ந்த டயர் வண்டி, விளையாண்டு மகிழந்த நூறாங்குச்சி, கபடி இவற்றில்தான் இருந்தது என்பது அனுபவித்த நமக்கு மட்டும்தான் தெரியும்.

-'பரிவை' சே.குமார்.

படங்களுக்கு நன்றி : கூகிள்

செவ்வாய், 15 மே, 2012

கண்ணாடி போட ரத்தம் கொடுங்க...

இன்று என்னுடன் பணி புரியும் பாகிஸ்தான் நண்பர் கண் வலிக்கிறது... கண்ணாடி சரியில்லைன்னு நினைக்கிறேன்... இன்று மாலை கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். உடனே என் மனதில் ஊருக்கு வந்த போது கண் மருத்துவமனை சென்றது ஞாபகத்தில் வர அதையும் ஒரு பதிவாக்கிட்டோமுல்ல...

கணிப்பொறி பயன்படுத்துவதால் அடிக்கடி தலைவலி வருவதால் டாக்டர் பரிந்துரையின் பேரில் டே-நைட் (பகலிரவு!?) கண்ணாடி பயன்படுத்தி வந்தேன். சென்ற முறை ஊருக்கு செல்வதற்கு முன்னர் கீழே விழுந்து சிதறிவிட்டது. இங்கு விசாரித்தால் யானை விலை சொன்னார்கள். சரி ஊருக்குப் போறோமே அங்க போயி நல்லதா வாங்கிப் போட்டுக்கலாம் என்று நினைத்து இங்கு வாங்கும் எண்ணத்தை மூட்டைகட்டியாச்சு.

ஊருக்குப் போனதும் ஒரு நாள் நகரின் பிரபல கண் மருத்துவமனைக்கு சென்றேன். சென்ற முறையும் அங்குதான் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கினேன். அதனால் மீண்டும் அங்கு சென்றேன். நான் சென்ற போது நல்ல கூட்டம். பெயர் சொல்லி... பழைய அட்டை இருக்கா என்ற கேள்விக்கு இல்லை என்று சொல்லி புதிதாய் அட்டை ஒன்று பெற்று அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.

நானும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருக்கிறேன்... இருக்கிறேன்... இருந்து கொண்டே இருக்கிறேன்... எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் முதல் கட்ட பரிசோதனை பண்ணிவிட்டு இரண்டாவது சோதனைக்கான அறை முன்னர் ஆஜராகிவிட்டனர். பொறுமை இழந்த எனக்குள் இருந்த குமார், என்னம்மா... எவ்வளவு நேரம் இங்க இருக்கிறது... பின்னால வந்தவங்களை எல்லாம் கூப்பிடுறே... நான் இருக்கது உனக்கு தெரியலையா... என்று கொதித்து குமுறினான். இருங்க சார் அடுத்தது நீங்கதான் என்றாள். என்னைப் போல் ஒரு பெரியவரும், ஒரு பாட்டியை கூட்டி வந்த் பேத்தியும் சத்தமிட... அடுத்தடுத்து நாங்கள் அழைக்கப்பட்டோம்.

நானும் உள்ளே சென்றேன். சேரில் அமர்ந்து கண்ணில பரிசோதனை கண்ணாடி வைத்து நம்பரை வாசிக்க சொன்னுச்சு. நல்லாத்தாய்யா வாசிச்சேன்... ஒத்த கண்ண மூடி சொல்லிட்டு உடனே அடுத்த கண்ண தொறந்து இத மூடி படிங்கன்னு சொலலும் போது கண்ணு மங்கலாகுமா இல்லயா அதுதான் நடந்துச்சு... மங்கலா இருக்குன்னு சொன்னேன் பாருங்க... உடனே அந்தப் புள்ள ஒரு புத்தகத்தை எடுத்து அதுல இருக்கதுல சின்ன எழுத்த எடுத்து வாசிங்க பாப்போமுன்னு சவால் விட்டுச்சு... நாம யாரு விடுவோமா... சரியா வாசிட்டுட்டோமுல்ல... அப்புடியும் அந்தப் புள்ள விடலைய்யா... உடனே ஒரு கண்ணாடிய மாட்டி இப்ப படிங்கன்னு சொல்லுச்சு... அதையேதான் படிச்சேன்... ஆனா அந்தப்புள்ள கண்ணாடி போட்டு படிச்சப்போ வேகமா படிச்சீங்க... உங்களுக்கு பார்வை பிரச்சினை இருக்கு... அதுக்கு இந்த கண்ணாடி போடணுமுன்னு ஒரு நம்பரை அட்டையில எழுதுச்சு... அம்மா தாயே கண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு... எனக்கு சும்மா படிச்சப்போவும்  அப்புறம் கண்ணாடி போட்டு படிச்சப்போவும் ஒரே மாதிரித்தான் இருந்துச்சு... பவரெல்லாம் கிடையாது... கணிப்பொறி பயன்படுத்துறதால கண்ண பரிசோதனை பண்ண வந்தேன்னு சொன்னதும் அந்தப் பொண்ணு சரியின்னு சொல்லிட்டு எழுதுன நம்பரை அழிச்சிட்டு எல்லாம் நல்லாயிருக்குன்னு எழுதிருச்சு.அடுத்த அறைக்கு சென்றதும் அங்கிருந்த பெண், 'உங்களுக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை பண்ணனும்' என்றார். என்னடா இது கண்ண பரிசோதிக்க வந்த இரத்தம் நீரெல்லாம் எடுக்குறாங்கன்னு... இதெல்லாம் எதுக்கும்மா என்றேன். டாக்டர் உங்களுக்கு பண்ணச் சொல்லியிருக்கிறார் என்றாள். அடப்பாவி மக்கா... வாசல்ல இருந்து பாதித்தூரம் வந்திருக்ககேன்... டாக்டர் அறைப் பக்கமே இன்னும் போகலை அப்புறம் எப்படி டாக்டர் நம்மளை பார்த்தார் என்று நினைத்தபடி... கண்ணாடி போடனுமா வேண்டாமான்னு பாக்க வந்தா இதெல்லாம் எதுக்கு தேவையில்லம்மா... என்று பேசியதும் அந்தப் பெண் சார் சத்தம் போடுவார்... நீங்க அவரு கேட்டா சொல்லிடுங்க என்றாள்.

ஊருக்கு வாறதுக்கு முன்னாலதான் கால் வலிக்கு எல்லா பரிசோதனையும் பண்ணியிருக்கு... அவரு கேட்டா நான் சொல்லிக்கிறேன்னு வெளியில வந்துட்டேன்... வாறவங்களைப் பூராம் அங்க கொண்டு போயி இரத்தம் நீருன்னு கெடா வெட்டிருறாங்கய்யா. ஸ்... அப்பா இப்பவே கண்ணக் கட்டுதேன்னு நெனச்சுக்கிட்டு தலய ஒரு சிலுப்பு சிலுப்பிக்கிட்டு நடக்கிறது நடக்கட்டுமுடா இன்னும் பாதிக் கிணறுதான் பாக்கி நடடா சிங்கமேன்னு  போயி அடுத்த அறையில உக்காந்து மனைவியிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் இரத்தம் கேட்ட புள்ள கூப்பிட, டாக்டர் இரத்தம் எடுக்காம விடாதேன்னு கண்டிசன் போட்டுட்டாரோ என்று நினைத்தபடி சென்றேன். பிரஷர் பார்க்கிறேன் என்று பார்த்துவிட்டு உங்களுக்கு சுகர் இருக்கா என்றதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வரும் போது விட்டம்மா வீட்ல சுகர் இல்லைன்னு சொல்லி வாங்கியாறச் சொன்னாங்க... அதையே இன்னும் வாங்கலையே... அப்புறம் எப்படி நமக்கிட்ட சுகர் இருக்குமுன்னு ஆத்தா உனக்கு எம்மேல அப்படி என்னத்தா கோபம்... நல்லாயிருக்கவனைப் பார்த்து சுகர் இருக்கா... உப்பு நீர் இருக்கான்னு பீதியக் கெளப்புறே என்று கேட்டதும் மற்றொரு பெண் வந்து மீண்டும் பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லி போய் உக்காருங்க... டாக்டரை பாக்க வரிசையா கூப்பிடுவாங்கன்னு சொல்லிச்சு. ரத்தம் கொடுக்கமாட்டேன்னதும் அந்தப் புள்ளக்கி கோபம் போல... என்ன ஒரு கொலவெறி... அடி ஆத்தி...

கடைசியாக டாக்டர் பரிசோதித்து எல்லாம் சரியா இருக்கு... ஒண்ணும் பிரச்சினை இல்ல... கணிப்பொறி பயன்படுத்தும் போது மட்டும் போட்டுக்கிறதுக்கு ஒரு கண்ணாடி எழுதி தாறேன் அதை வாங்கி போட்டுக்கங்கன்னார். அங்கயே டிசைன்ஸ் பாத்து ஆர்டர் கொடுத்துட்டு வந்தேன்.

அப்புறம் மூன்று நாட்கள் கழித்து போய் வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். ஒரு பக்கம் சரியான முறையில் மாட்டாமல் பிசிறு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. போய் கேட்டால் அங்கிருந்த பெண் சொன்ன பதிலென்ன தெரியுமா... இதெல்லாம் ஒண்ணும் பண்ணாது சார். நல்லா லாக் ஆகியிருக்கு. அப்படியே வச்சிக்குங்கன்னு அழகா சொல்லிடுச்சு. திரும்ப வாங்கி சரி பண்ணனுமின்னா மறுபடியும் திருப்பி அனுப்பி சரி பண்ணி வாங்கனும் எதுக்கு வேலயத்த வேலையின்னு பதில் சொல்லி திருப்பி அனுப்பியாச்சு.

இதை எதுக்கு சொல்ல வாறேன்னா கிராமத்துல இருந்தோ (நானும் கிராமத்தாந்தான்) அல்லது படிப்பறிவில்லாத அல்லது வயதான யாராவது வந்தால் எல்லா பரிசோதனைகளும் செய்து (ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை எல்லாருக்கும் தேவையா?) பணம் பறிக்கத்தானே செய்வார்கள். அவங்களை சொல்லியும் குற்றமில்லை... டாக்டர் சீட்டுக்காக லட்சங்களை கொடுத்து படித்து வந்து அவற்றை வட்டியும் முதலுமா எடுக்கனுமே... நாமதான் கொஞ்சம் சூதனமா இருக்கணும். டாக்டர்கிட்ட போகும் போது வீட்ல கொஞ்சம் விவரம் தெரிஞ்ச ஆளை கூட்டிக்கிட்டு போகணும். இல்லையின்னா மணிபர்ஸ்க்கு பிரசவம் பாத்து அனுப்பிடுவாங்கய்யா.

-'பரிவை' சே.குமார்

படங்கள் : கூகிள்

வெள்ளி, 11 மே, 2012

என்னைக் கவர்ந்த வழக்கு - ஒரு பார்வை


நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமா என்ற வரம்பை விட்டு வெகுதூரம் வெளியே வந்து நமக்கருக்கில் வாழும் மனிதர்களை திரையில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கும்... கொடுத்துக் கொண்டிருக்கும் படம்தான் வழக்கு எண்: 18/9.

தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்கள் இருந்தாலும் சேரன், அமீர் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவை உயரப் பறக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கும் பாலாஜி சக்திவேல்.... ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்களை மட்டுமின்றி அவர்களுக்கு அருகே இருக்கும் நகரும்... நகரா பொருட்களை எல்லாம் பேச வைத்திருக்கிறார்.

வழக்கு எண் என்றதும் கதைக்களம் நீதிமன்றமும் வக்கீல்களின் வாதங்களுமாய் நகருமோ என்று நினைத்தால் ஆசிட் வீசப்பட்ட பெண் மருத்துவமனையில் இருப்பதில் தொடங்குகிறது கதை. அதன் பிறகு எந்தப் படத்துக்குப் போனாலும் தொணதொணவென்று பேசுபவர்களாக இருக்கட்டும்... சும்மா விசிலடிப்பவர்களாக இருக்கட்டும்... எல்லாரையும் கதையோடு கதை மாந்தரோடு பயணிக்க வைத்தது மூலம் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார் இயக்குநர்.

படத்தைப் பற்றி பல நண்பர்கள் விமர்சனங்களை தங்களது வலைப்பூவில் எழுதிவிட்டார்கள்... கதையை மீண்டும் ஒரு முறை எழுதி விமர்சனப் பதிவாக ஆக்க நினைக்கவில்லை. என்னை கவர்ந்தவைகளை இங்கே எழுதலாமென்று நினைக்கிறேன்.

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மீதான ஒருதலைக் காதல், பணக்காரப் பையனின் காமம் நிறைந்த காதல் என இரண்டு கதைகளுடன் இயல்பாய் பயணிக்கிற கதையில் இயல்பாய் சில மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர்களில்...

சின்னச்சாமி... படத்தில் அதிகம் கவர்ந்த கதாபாத்திரம்... முதலாளியிடம் கணக்கைப் பார்த்து காசைக் கொடு என்று கேட்கும் தெனாவெட்டு... சூட்டிங்கில் கதாநாயகன் வசனம் பேச திணறும் போது தானாக வசனத்தை சொல்லுவது... ஸ்ரீயுடன் நட்பு பாராட்டி அவனை யோவ்...யோவ் என்று அழைப்பதாகட்டும்... கலக்கல் நடிப்பில் பார்ப்பவர்கள் மனதில் கலந்து விடுகிறான்...இந்தக் கூத்துக்காரனுக்கு தெரு நாடக மேடைகள் மட்டுமே உலகமாக இருந்திருக்கும்... பாலாஜி சக்திவேலின் பார்வை பட்டதால் தமிழ் சினிமா இவனை உயரப் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பசியால் ஒருவன் விழுந்து கெடக்கும் போது டிபன் பாக்ஸூடன் செல்லும் மனிதர்கள்... காலையிலயே அடிச்சிட்டியா... என்ற பேச்சுக்கள் மத்தியில் உடலை விற்று வயிற்றைக் கழுவும் ரோஸி, யாராவது சாப்பாடு கொடுங்க என்று கேட்டு கிடைக்காத நிலையில் கையேந்தி பவனில் வாங்கி அவனை கைகழுவச் செய்து சாப்பிட வைக்கும் போதும், தனது சக தோழியுடன் எங்க போகலாம் என்று பேசியபடி நடந்து செல்லும் போதும், தண்ணியடிக்க காசு கேட்டு நிக்கும் போதும், ஸ்ரீ காசு கொடுத்து இனி தண்ணி அடிக்காதக்கா என்றதும் கண்களில் நீருடன் போகும் போதும் ரோஸி ஸ்ரீக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ரோஸி அக்காவாக் உயர்ந்து நிற்கிறார்.

அந்த அலட்டலில்லாத போலீஸ்காரர்... எங்கய்யா புடிச்சாங்க... ஸ்ரீயை விசாரிக்கும் போது, 'அந்த முறுக்கு கடை முதலாளி மேல நீ எண்ணய ஊத்தியிருக்கனுமிடா'என்று சொல்வதாகட்டும்... ஆர்த்தியிடம் பேசும் போது 'பரிட்சையாம்மா நீ போ' என்று சொல்வதாகட்டும்... பசங்களை ஜட்டியுடன் உக்கி போட வைத்து மிரட்டுவதாகட்டும்... அமைச்சரிடம் பேசுவதாகட்டும்... ஜெயலட்சுமியிடம் 'அம்மா இனி நீங்க ஸ்ட்ரைட்டா எங்கிட்டே வாங்க' என்பதாகட்டும்... நல்ல மனிதராக இருப்பார் என்று எண்ணினால் நல்ல பாம்பே அவர்தான் என காட்சிகள் விரியும் போது அவரது நடிப்பு நம்மை மிரள வைக்கிறது... முதல் படத்தில் நடித்தது போலவே தெரியவில்லை.

நாயகன் ஸ்ரீ... கனா காணும் காலங்களில் நடித்தவர், நடைபாதைக் கடையில் வேலை செய்து கொண்டு நடை பாதையில் படுத்து உறங்கும் எத்தனையோ இளைஞர்களின் பிரதிபலிப்பாக இதில் வாழ்ந்திருக்கிறார். ஜோதியை ஒரு தலையாக காதலிப்பது, அவளை தன் தாயாக பார்ப்பது, அவளுக்காக செய்யாத குற்றத்துக்காக தண்டனையை ஏற்றுக் கொளவது என பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள் மத்தியில் வசனங்களை மட்டுமே நம்பாமல் நடிப்பையும் கலந்து நாம் பார்த்த மனிதர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.... இல்லை...இல்லை... வேலு என்ற இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, சராசரி வேலைக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். போகும் போதும் வரும் போதும் ஸ்ரீ தன்னை பார்ப்பதை வெறுப்பதும், பக்கத்து வீட்டு சிறுவனை கொஞ்சும் போது அம்மா திட்டினாலும் அவனுடன் கண்களால் பேசுவதாகட்டும்... நிறைவாக செய்திருக்கிறார். படத்தில் மூன்று நான்கு வசனங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்... அவரது உடம்பும் கண்களுமே வசனம் பேசுகிறது.

ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ், பணக்கார வர்க்கத்தின் வாரிசாக வாழ்ந்திருந்தாலும் பெண்மைக்கே உரிய பதட்டம், தவிப்பு... பருவ வயதில் வரும் ஆசைகள் என எல்லாம் கலந்து ஆர்த்தி கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

பள்ளிக்கூடம் நடத்தும் பண்பு கெட்ட அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்து, இன்றைய இளைய சமுதாயம் எந்த வழியில் செல்லக்கூடாது என்று எல்லாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் வந்தாலும் அதையும் தாண்டி இண்டர்நெட், செல்பேசி என சிக்கி கெட்டுப் போய்க்கிடக்கும் கோடானு கோடி மாணவர்களின் பிம்பமாக சொன்னதை சரிவர செய்திருக்கும் மிதுன் முரளியும் சோடை போகவில்லை.

காதல் டூயட் என்று கடற்கரைக்கோ அல்லது கனடாவுக்கோ செல்லாமல் கதையோடு உறவாடி வரும் இரண்டு பாடல்களும் இனிமை. அதிலும் 'வானத்தை எட்டிப் பிடிப்பேன்...' நம் மனதுக்குள் சோகமாய் இறங்கி சுகமாய் உட்கார்ந்து கொள்கிறது.

மேலும் ஜோதியின் அம்மா, கையேந்தி பவன் முதலாளி, முகம் காட்டாமல வரும் அமைச்சர், ஸ்ரீயின் அப்பா, அம்மாவாக நடித்திருப்பவர்கள், வட நாட்டு முதலாளி, ஆர்த்தியின் தோழியாக வந்து தமிழை கொஞ்சம் கொன்று பேசும் மாணவி என படத்தில் வரும் எல்லாருமே அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் இறைந்து கிடக்கும் பாட்டில்களும் இறுதிக் காட்சிக்கான சாட்சிகளாகத் தெரிகின்றன. சில இடங்கள் நம்மோடு ஒட்டவில்லை என்றாலும் காதல் கொடுத்த இயக்குநர் வழக்கையும் வாழ்க்கையோடு வார்த்துக் கொடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.


படத்தை தயாரித்த UTV & திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் படக்குழுவினர் அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.

திரு. பாலாஜி சக்திவேல் அவர்களே... இந்த வெற்றி உங்களை மேலும் நல்ல படைப்புக்களை வார்த்தெடுக்க வைக்கும் வெற்றியாக இருக்கட்டும்.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவி : கூகிள்

திங்கள், 7 மே, 2012

'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - திரு. நெல்லை கண்ணன்

முந்தைய பதிவின் தாக்கம் : பாரதி நட்புக்காக குழுவினரை கவிதாயினி மேடையேற்றிய போது வாசித்த பெயர்கள் அனைத்தும் எனது மனதில் இல்லை... மேலும் சங்கரன் என்று அவர் சொன்னார்... ஆனால் அங்கு சங்கர் அவர்கள் வரவில்லை என்பதும் தெரியும்... எழுதும் போது அவர் அழைத்தவர்களில் பலர் வரவில்லை என்று எழுத நினைத்து மறந்துவிட்டேன். குறிப்பாக பாரதி நட்புக்காக அமைப்பின் பொதுச் செயலாளர் திருமிகு. கலீல் ரஹ்மான் அவர்கள் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை... எனது பதிவுகளில் அவரை விட்டுவிட்டு போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை... என்னை எப்பொழுதும் புறக்கணிக்கிறார் என்று எனது சகோதரர் திரு. சுபஹான் அவர்களிடம் அன்புச் சண்டை போட்டிருக்கிறார். உங்களை மேடையில் பார்த்திருக்கிறேன்... பழகியது இல்லை... மறதிதான் காரணமே ஒழிய மறக்கடிக்கப்படவில்லை... உங்க பேரை மனசில் பொறிச்சாச்சு... இனி மறக்காது...என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... சார்... நேரடியாக கேட்டதற்கு நன்றி.

இனி தமிழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை பார்க்கலாம்...

விசாலி கண்ணதாசனின் பேச்சுக்குப் பிறகு மேடையில் திரையிடப்பட்டது. சினிமாவில் இடைவேளை போல சில மணித்துளிகள் கிடைக்க டீ,காபி,ஸ்நாக்ஸ் விற்பனை படு ஜோராக நடந்தது. திரை விலக்கப்பட, மேடை நடுவில் நாற்காலி,மேசை இடப்பட்டு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

தமிழ்கடல் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஆழிப் பேரலையாய் கண்ணதாசன், பாரதி, வள்ளுவன் என கலவையாய் தமிழ் மாலை தொடுத்து ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் மேடையை தன் வசப்படுத்தி பார்வையாளர்களை பஞ்சமில்லாமல் சிரிக்க வைத்தார்.

ஆரம்பத்தில் பின் வரிசையில் அமர்ந்து கேட்ட போது பேசுவது புரிந்தும் புரியாதது போல் இருந்தது. பின்னர் சற்றே முன்னோக்கி வந்து அமர்ந்தபோது அவரின் பேச்சை நன்கு கேட்க முடிந்ததோடு வாய்விட்டு சிரித்து ரசிக்க முடிந்தது.

அவர் பேச்சின் இடையே பிறருக்கு உதவுங்கள், இறைவனை நினையுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்ற வாசகங்களை அடிக்கடி சொன்னார்.

"கடவுள் ஒரு குழந்தை பிறக்கும் போதே எல்லா ஏற்பாடும் பண்ணிடுறான்... என்ன படிப்பான், எப்படி , யாரை கல்யாணம் பண்ண வேண்டும் என்று எழுதி வச்சிடுறான்... அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்.

"ஒருத்தனுக்கு உடம்பு முடியலைன்ன உடனே பெரிய ஆஸ்பத்திரியில வச்சி ஒரு வாரம் எல்லா ஊசியும் போட்டு எல்லாம் பண்ணிட்டு கடைசியில கடவுள்கிட்ட சொல்லுங்கிறான்... எங்க ஊர்க்காரப்பய அப்பாவுக்கு முடியல...பெரிய ஆஸ்பத்திரியில வச்சி பாத்துட்டு டாக்டர் ரெண்டு லட்ச ரூபாய் பில்ல கொடுத்து உங்கப்பாவை கடவுள்தான் காப்பத்தணுமின்னான். எங்க ஊர்க்காரப் பயலாச்சா, டக்குன்னு அருவாள எடுத்து நீ கடவுள்கிட்ட சொல்லு, நீ முடியாதுன்னு சொல்லியிருந்தா நாங்க அப்பவே கடவுள்கிட்ட சொல்லியிருப்பமே...அவரு உடம்புல இவ்வளவு ஊசி போட்டு, எதையும் சாப்பிடவிடாம பண்ணிட்டியேன்னு அருவாளை ஓங்கவும் அவங்க அப்பாவையும் கொடுத்து ரெண்டு லட்ச ரூபாயும் கொடுத்துட்டாங்க"

"எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா... நிறைய நல்லது செய் ... யாருக்கும் தீங்கு நினைக்காதே... இந்த பங்களாவுக்குள்ள யார் வந்தாலும் சோறு போடு... நான் பேச போறப்போ நிறையப் பேரு வருவாங்க... பையன காலேஜ்ல சேர்த்திருக்கேன் பணம் வேணுமின்னு கேப்பாங்க... எவ்வளவுன்னு கேட்டா... இருபதாயிரமுன்னு சொல்லுவாங்க... உடனே கொடுத்துடுவேன். நம்ம கூட நிறைய நல்லவங்க வருவாங்க... இதெல்லாம் தேறாதுன்னு சொல்லுவாங்க... படிக்கத்தானே பணங்கேக்கிறான்... கொடுத்தா என்ன"

"பசியின்னு வாறவன் கடவுள்ளுன்னு நினைங்க...எல்லா இடத்தில் கடவுள் கண்ணாக இருக்கிறான் என்று நினைப்பவன் தவறு செய்யவே மாட்டான் என திருவள்ளுவர் சொல்கிறார் என்றவர், இரண்டாயிர ரூபாய் ஷூவை வெளியில போட்டுட்டு பிள்ளையாரை கும்பிடப் போனவன், 'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை...' மாப்ளே ஷூ இருக்குமா என்று பிள்ளையாரை கும்பிடவே மாட்டான். பிள்ளையார் பார்ப்பாரு... அந்த நாயை செருப்பால அடிச்சி வெளியில வெறட்டுன்னு சொல்லிடுவாரு..."

" பெத்த அம்மாவை மதிக்க மாட்டான். வீட்ல காளிய கும்பிடுவான். காளி பார்ப்பா, பெத்த தாய மதிக்க தெரியலை... மூதேவியின்னு மிதிச்சிடுவா... பெத்தவங்களை மதிக்கணும்... இப்ப முதியோர் இல்லம் எவ்வளவு கட்டியிருக்கான்யா... பய அப்பாகிட்ட சொல்லுறான்... உங்க காலத்துல இன்னும் வசதியா முதியோர் இல்லம் வந்திரும்ப்பான்னு... எனக்கு இறைவன் கொடுத்த பெரிய வரமே என் தாய், தகப்பனை கடைசிக் காலத்துல பாத்துக்கிற வாய்ப்பை கொடுத்ததுதான்"

'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடலை விளக்கும் போது "அப்பாவை, அம்மாவை நினைச்ச புள்ள... எல்லாருக்கும் உதவுன புள்ள... நெஞ்செல்லாம் நல்லதே நினைச்ச புள்ள அந்த புள்ளை அவனைப் பாக்கிற... பாத்ததும் இப்படி மாறிடுறா... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... இதுதாய்யா கவிஞன், அடுத்த வரி போடுறான் பாரு... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... அடி சண்டாளி... சண்டாளி நீ பேசாத பேச்சு பேச்சே அல்ல... இப்ப தமிழ்நாட்டுல ஒரு நடிகைக்கிட்ட கேக்கிறாங்க... நீங்க இப்ப யார் கூட இருக்கீங்க... அவரு கூட இருக்கிறேன்... அவரு இதுக்கு முன்னாடி யார் கூட இருந்தாரு அப்படின்னு கேட்டா... அதுக்கு அவரும் ஏழெட்டுப் பேர் கூட இருந்திருக்காரு அப்படிங்கிறா... இல்வாழ்க்கை இப்படி அமையக் கூடாது. அறமும் பொருளும் சொல்லியிருந்தாலும் காமத்துப்பால்தான் 25 அதிகாரம்... காதல்ன்னா என்னன்னு என்னமா சொல்லியிருப்பாரு தெரியுமா" என்றார்.

கவிஞர் தன் காதலி இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டதும் காதலன் பாடுவது போல் எழுதிய 'எங்கிருந்தாலும் வாழ்க...' பாடலை விளக்கும் போது, தன் காதலனிடம் தன் கணவனை அழைத்து வந்து காண்பிக்கிறாள்... எனக்குத் தெரிந்து படத்தின் கதையை ஒரு பாடலில் சொல்லும் திறமை செட்டியாரைத் தவிர்த்து யாராலும் முடியாது என்றார்.


(திரு.தமிழ்கடல் நெல்லை கண்ணன்)

"சிவாஜி ஒரு முறை என்னிடம் செட்டியாருக்கிட்ட பாத்து இருக்கணும்... அதுவும் செட்டியும் நாயுடுவும் (எம்.எஸ்.வி) சேர்ந்துட்டாங்க பாட்டப் போட்டு நம்மள கவுக்கப் பாப்பாங்க... நாம ஒரு படி மேல நிக்கணும். அதே மாதிரி பள்ளத்தூர் ஆச்சி, நாகேஷ் எல்லாம் நாம கொஞ்சம் அசந்தாலும் சாப்பிட்டுப்பிடுவாங்க அப்படின்னு சொன்னாரு."

"நான் சைவப்பிள்ளைமார்... நாங்க சுத்த சைவம்...ஒரு தடவை டி.ஜி.பி ஒருவர் வீட்டுக்குப் பொயிட்டேன். அந்தம்மா சிக்கன் கறி செஞ்சு சாப்பாடு போட்டுட்டாங்க... நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னால் வருந்துவார்கள் என்பதால் குழம்பை மட்டும் போட்டு சாப்பிட்டு விட்டு வந்துட்டேன். அப்புறம் அந்தம்மா, அவ்ருக்கு போன் பண்ணி ஐயா சரியாவே சாப்பிடலைன்னு சொல்ல, அவரு என்ன சமைச்சீங்கன்னு கேட்க, சிக்கன்னு சொன்னதும் ஐயோ அவரு சைவமில்லன்னு சத்தம் போட்டாராம். ஒரு சில பேரு இருக்கான், நான் அதை சாப்பிடமாட்டேன்... இதை சாப்பிடமாட்டேன்னு... அப்புறம் எதுக்கு இருக்கணும்... போய் சேர வேண்டியதுதானே"

"நான் கடவுளிடம் கேட்பது என்னவென்றால் நான் இறக்கும் போது ஒரு பத்தாயிரம் பேராவது அழுக வேண்டும். எங்க ஊர்ல ஒருத்தன் இறந்த போது என் பங்காளி ஒருத்தன் அதிகமா அழுதான். ஏன்டான்னு கேட்டா நான் ஒருத்தன்தான் கடன் கொடுக்காம இருந்தேன்... நேத்துத்தான் கொடுத்தேன்னு சொன்னான்...அப்படியிருக் கூடாது."

"ஒருத்தன் தனக்காக தன் மனைவி உயிரையே கொடுப்பாள்ன்னு ஒரு சாமியார்கிட்ட சொன்னான். அந்த சாமியாரு நான் ஒரு மாத்திரை தாறேன்... போட்டுக்கிட்டு படு... செத்த மாதிரி ஆயிடுவே... அப்ப யார்... யார் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமுன்னு சொன்னாரு... இவனும் அதே மாதிரி செய்ய... மனைவி நானும் வாறேன்னு அழுகிறா... மகனும் , மகளும் நாங்களும் வாறோமுன்னு சொல்ல, அவன தூக்கிட்டாங்க... போகும் போது கல்தூணில் இடிச்சிடுது... எழுந்துவிட்டான். சாமியார்கிட்ட போயி பாத்தீங்களா இவங்க அன்பைன்னு சொல்லியிருக்கான்... அவரு வேற மாத்திரை ஒண்ணு கொடுத்து நீ படுத்து வேடிக்கை பாருன்னு சொல்ல, அதே மாதிரி தூக்கும் போது பாத்து தூக்குங்க கல்தூணில் இடிச்சிறாமன்னு மனைவி சொல்லியிருக்கா,... அப்ப சாமி சொல்லியிருக்காரு... நீங்க உங்க உயிரக் கொடுத்தா அவரை காப்பாத்திடலாமுன்னு மனைவியிடம் சொல்ல, அவுக நேரம் முடிஞ்சி போச்சு... என்ன செய்யிறதுன்னாலாம், மகனோ அப்பா எல்லாம் அனுபவிச்சிட்டுத்தானே போயிருக்காருன்னானாம்... மகளோ ஒரு படி மேல போயி நான் வேற வீட்டுக்குப் போறவ... நான் எப்படின்னாளாம்... அவன் எழுந்து சாமியார்கூட பொயிட்டானாம்"

" கண்ணதாசா என்னை வைத்து எழுது என கவிஞனின் வீட்டு வாசலில் வார்த்தைகள் வந்து தவம் கிடக்கும்... வார்த்தைகளுக்காக அவர் காத்திருந்தது இல்லை... இப்பவும் சில கவிஞர்கள் இன்னும் திரையுலகத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அடச்சிக்கிட்டு இருக்கான்"

விசாலி கண்ணதாசன் பற்றி குறிப்பிடும் போது கண்ணதாசனின் மறுபிறப்பு என்றவர், அதே நெற்றி... அதே மாறுகண், அதே பேச்சு என்றார்.

"நான் செட்டியார்களிடம் பேசும் போது சொன்னேன்... நீங்கள்லாம் பெரிய அளவுல இருந்தாலும் உலகளவுல எங்க செட்டிய மட்டும்தானேய்யா தெரியுது என்று சொல்வது உண்டு."

"ஒரு பாட்டுல 'ஏனென்று கேட்காமல் வருவான்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்' என்றார் கவிஞர், கவிஞருக்கு கடவுள் எங்க போவாருன்னு தெரிஞ்சிருக்கு பாருங்க... பணக்காரன் வீட்டுக்கு கடவுள் போகமாட்டாருன்னு சொல்றாரு. ஏன்னா அவன் கடவுளையும் சந்தேகப்படுவான்."

'புத்தி சிகாமணி பெத்த புள்ள...'பாட்டை பற்றி சொல்லும் போது அதில் முத்துலெட்சுமி , 'வருசம் ஒருபுள்ள பெத்தெடுத்து வயசு இருபத்தி ஆறாச்சுன்னு...' பாடுவாங்க. அப்ப கவிஞன் போட்டான் பாருங்க எம்.ஆர்.ராதா பாடுற மாதிரி ஒரு வரி, "ஆனாலும் நான் கொஞ்சி நாளாச்சின்னு...' சொல்லி சிலாகித்தார்.

"ஒரு முறை கவிஞர் இன்னும் சில தண்ணிப் பிரியர்கள் ஒரு அறையில் தங்க நான் மற்றும் சிலர் வேறு அறையில் தங்கினோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவர் அறைப்பக்கம் போனா எல்லாரும் தூங்கிட்டாங்க... செட்டியாரு மட்டும் சந்தோஷமா உலாவிக்கிட்டு இருக்காரு. காலையில அவருக்கிட்ட அண்ணே நேத்து ராத்திரி சந்தோஷமா உலாவுனீங்கன்னு சொன்னதும் முழுசும் பாத்தியான்னு கேட்டவரு, பழனியில அவனும் அப்படித்தானே இருக்கான்ன்னு சொன்னாரு... ஏன்னா முருகன் செட்டியார்ன்னு சொல்லுவாங்க..."

"செட்டியாரு பத்திரிக்கை ஒண்ணு நடத்தினாரு... அருமையான பத்திரிக்கை... நானும் ஏழு லெட்சம் கட்டி ஏஜென்ஸி எடுத்தேன்... போட்டது போட்டதுதான்... அவருகிட்ட ஒரு முறை அண்ணே ஏழு லட்சம்ன்னு சொன்னதும் என்ன நோட்டீஸ் அனுப்ப போறியா... பத்தோடு பதினொன்னுன்னு சொன்னாரு..."

"செட்டியாருக்கு உதவிய வள்ளல் சின்னப்பாதான்... செட்டியார் கஷ்டப்பட்ட போதெல்லாம் அவருக்கு உதவிகளை வாரி வாரிச் செய்தார். அவரு மாதிரி உதவிகளை யாரும் செய்ய முடியாது."

"இப்ப சினிமாவுல சோத்துக்கே வழியிருக்காது ஆனா சுவிட்சர்லாந்துல பாட்டுப் பாடுவாங்க... தமனாவெல்லாம் கிராமத்துப் பிள்ளையாய்யா... வெள்ள வெள்ளேருன்னு இருக்கு... இந்த தனுசு கொடுத்து வச்சவன்யா... ஸ்ரேயா மாமன் கூடவும் டான்ஸ் ஆடுறா... இவன் கூடவும் ஆடுறா..."

கணவன் மனைவி ஊடல், கூடல், கண்ணதாசன் சிவாஜிக்கு எழுதிய பாடல், நாகேஷை புகழ்ந்தது, எம்.ஜி.யாருக்கு எழுதிய 'மாபெரும் சபைதனில் நீ வந்தால்...',நேரு இறந்த போது எழுதிய பாடல் என கவிஞனில் கலந்து இன்னும் நிறைய விஷயங்களை சிரிப்புடன் அருமையாக பேசினார். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 மே, 2012

நீங்களும் வாழ்த்துங்க...


விச்சு போன்ல பாப்பாடா பேசு...

விஷால் : பாப்பா.... நல்லாக்கியா... சைக்கிள் ஓட்டியா...

ஸ்ருதி : இல்ல... டிவி பாக்குறேன்... நீ என்ன பண்றே...

விஷால் : சாப்றேன்...

ஸ்ருதி : விச்சு அப்பாக்கு ஹாப்பி வெட்டிங் டே சொன்னியா?

விஷால் : ஆப்பி பத்தேவா அப்பாக்கு...

ஸ்ருதி : இல்லடா வெட்டிங்க் டேடா...

விஷால் : ஆப்பி பத்தே... வெட்டேயா...

ஸ்ருதி : ம்... நா... மதுரயில இருந்து அப்பாட்ட பேசிட்டேன்...

விஷால் : நா...

ஸ்ருதி : நீயும் ஸ்கைப்புல அப்பாட்ட சொல்லு சரியா...

விஷால் : ம்... அம்மாக்கு...

ஸ்ருதி : அம்மாவுக்குந்தான்... போன அம்மாட்ட குடு...

விஷால் : அம்மா... பாப்பா...

ஸ்ருதி : அம்மா... ஹாப்பி வெட்டிங் டேம்மா...

விஷால் : அம்மா... கம்பூட்டர போடு அப்பாட்ட பேச...

ஸ்கைப்பில் தொடர்பு கொள்ள...

நான் : அலோ விச்சுக்குட்டி...
விச்சு : அப்பா ஆப்பி வெட்டே... ஆப்பி வெட்டே... ஆப்பி பெத்தே...

கத்திக் கொண்டே காலையில் பிள்ளையார்பட்டியில் வாங்கிய துப்பாக்கியை பிரித்துப் பார்க்கும் முயற்சியில் தீவிரமாய்...

இன்று காலை நடந்த நிகழ்ச்சி சற்றே மாறுதலாய்...

இந்த சந்தோஷம் எல்லா நாளும் தொடரட்டும்... வாழ்த்துங்கள்... வாழ்கிறோம்...


அன்புடன்

சே.குமார் - நித்யா குமார்.