மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

முத்துக்கமலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துக்கமலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 டிசம்பர், 2018

சிறுகதை : சன்னலோரம்

முத்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. 

நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு.

முத்துக்கமலத்தில் வாசிக்க 'சன்னலோரம்'

****
Related image
திருச்சி செல்லும் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு எப்பவுமே இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்து பயணிப்பது மட்டுமே பிடிக்கும். பெரும்பாலும் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் எப்பவுமே என்னோட சாய்ஸ் சன்னலோர இருக்கைதான்... லேசா சன்னலைத் திறந்து வைத்தால் முகத்தில் அடிக்கும் காற்று... கடந்து செல்லும் அசையும் அசையாப் பொருட்கள்... மனிதர்கள்... என ரசிப்போடும்... களிப்போடும் பயணிப்பதில் ஆர்வம் அதிகம்.

சில நேரங்களில் இருவர் அமரும் சீட்டில் சன்னலோரம் அமர்ந்த பின்னர் நம்மருகில் யாருமே அமர மாட்டார்கள். அப்போதெல்லாம் எங்கே நம்மை எழச் சொல்லி விடுவார்களோ என்ற நினைப்போடு பேருந்துக்கு உள்ளே பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் விழிகளை ஓட்டுவேன்.

எனக்குப் பிடித்தது சன்னலோர இருக்கை அதை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துட்டு உள்ளிருக்கையில் அமர்ந்து கூட்ட நெரிசலில் அழுக்கப்பட்டு... அழுத்தப்பட்டு... பிழிந்து எடுக்கப்பட்டு... பின்னர் கசங்கிய சட்டையோடும் உடலோடும் இறங்குவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை.

இப்படித்தான் ஒருமுறை மதுரைக்குச் செல்லக் காரைக்குடியில் ஏறினேன். பேருந்துக்குள் ஏறியதும் இருக்கைகளைப் பார்த்து முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடையிலான இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். 

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை என்றாலும் பெரும்பாலான சன்னல் இருக்கையை ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அப்போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஏறினாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக என் இருக்கை அருகே வந்து 'எக்ஸ்கியூஸ் மீ...' என்றாள். நானோ அப்போதுதான் மொபைலில் முக்கியமாய் எதையோ தேடுவது போல் நோண்டிக் கொண்டிருந்தேன். அவள் மீண்டும் 'எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களைத்தான்' என்றாள்.

"என்னையா...? உங்களுக்கு என்ன வேணும்...?" என்று அவளை அண்ணாந்து பார்த்துக் கேட்டேன்.

"நீங்க கொஞ்சம் மாறி உக்காரமுடியுமா...?" என்றாள்.

"மாறி உக்காரணுமா..? ஏன்..? பஸ்ல சீட் இல்லையா?" எழுந்த கோபத்தை அடக்கியபடி கேட்டேன்.

"இப்படி எல்லாச் சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டா வர்றவங்க எங்க உக்கார்றதாம்..."

நான் என் மடியைப் பார்த்தேன்... உடனே அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"மேடம் பஸ்ல இடமில்லைன்னா பரவாயில்லை... அதான் நிறைய சீட் காலியாத்தானே இருக்கு... முன்னாடி மூணு பேர் அமர்ற இருக்கையில எல்லாம் ரெண்டு பேர்தானே இருக்காங்க... அங்க போயி உக்காருங்க... அதென்ன குறிப்பா.. என்னமோ நீங்க சீட் போட்டிருந்து அதுல நான் உக்காந்த மாதிரி எங்கிட்ட வந்து நிக்கிறீங்க.. அப்படி சன்னலோர சீட்டுதான் வேணுமின்னா... கண்டக்டருக்கிட்ட போயி கேளுங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் கண்டக்டர் என் அருகில் வந்து "சார்... கொஞ்சம் மாறி உக்காருங்க " என்றார்.

"எதுக்கு சார்... நான் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறேன்... எனக்கு எந்த இருக்கை வேணுமோ அதில் பயணிக்க உரிமை இருக்கா இல்லையா... அதுக்காக ஒரு இடத்தைப் பிடிச்சி... அதுல உக்காந்த பின்னால யாரோ ஒருவருக்காக நான் ஏன் இடம் மாறனும்... அப்படி எதுவும் ரூல்ஸ் வச்சிருக்கீங்களா...? மாறி உக்காந்தா டிக்கெட் ரேட்ல டிஸ்கவுண்ட் தருவீங்களா..?" என்றேன்.

"சார்... விதண்டவாதம் பேசாதீங்க... எல்லா சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்தா எப்படி சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்..."

"அது சரி... இந்த சீட்ல பயணம் செய்யலாம் அப்படின்னு ஒரு மனநிலைக்கு வந்த பின்னால இப்ப ஏறிக்கிட்டு இடமாறி உக்காரச் சொல்றவங்களுக்கு முன்னுரிமையின்னா நான் எதுக்கு பதினைந்து நிமிடமா உங்க பேருந்துல ஏறி உக்காந்திருக்கணும்... கிளம்பும் போது ஏறி இருக்கலாமே... இதே ஒரு பொம்பளை உக்காந்திருந்து நான் வந்து மாறி உக்காருங்கன்னு சொன்னா விட்டிருப்பாங்களா... நீங்க கூட மாறி உக்காரச் சொல்லுவீங்களா...? ஏன் பஸ்ல இருக்கவங்களே இவ்வளவு இடம் கிடக்கையில நீங்க ஏன் சார் அங்க போயி நிக்கிறீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க..."

"என்ன சார் படிச்ச நீங்களே இப்படிப் பேசுறீங்க... பாருங்க... நிறைய லேடீஸ் ஏறுறாங்க... ஜென்ஸ் ஒவ்வொரு ஆளா உக்காந்திருந்தா அவங்களை நான் எப்படி உக்கார வைக்கிறது சொல்லுங்க.... முன்னாடி இருக்கிற சீட்டுக்கு மாறுறதால உங்களுக்கு என்ன பிரச்சினை சார்..."

"ஓகே... சார்... நான் விரும்புற சீட்டுல பயணிக்கத்தான் எனக்கு விருப்பமே தவிர, உக்காந்த சீட்ட மத்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க உக்காரச் சொல்ற இடத்துல உக்காந்து பயணிக்க எனக்கு இஷ்டமில்லை சார்... அவங்க உக்காரட்டும்..." என்றபடி எழுத்து பேருந்தைவிட்டு இறங்க, "சார்... சார்... முன்னால சீட்ல உக்காருங்க சார்... அடுத்த பஸ் இருபது நிமிஷம் ஆகும் சார்...' என கண்டக்டர் முதுகுக்குப் பின்னே கத்திக் கொண்டிருந்தார்.

என்னடா இவன் சீட் மாறி உக்காந்தா என்னன்னு நீங்க யோசிக்கலாம்... ஒரு பெரியவர் வந்து தம்பி எனக்கு சன்னல் பக்கம் உக்காந்தாத்தான் வாந்தி வராது என்றாலோ... சன்னல் சீட்டா இருந்தா குழந்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வருவான் அழமாட்டான் என்றாலோ... மாறிக் கொடுப்பவன்தான் நான்.. ஆனால் சீட் இருக்கும் போது வீம்புக்குன்னே வந்து நிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இறங்கிப் போவதில்லை... அது என் குணமும் இல்லை. 

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது... ஒரு சில இருக்கைகள் தவிர மற்ற இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகே காலியாக இருந்தது. 'யாராச்சும் வந்து உக்காந்துட்டா தேவலாம்... இல்லேன்னா எதாச்சும் லேடீஸ் வந்தா மாறி உக்காருங்கன்னு சொல்லுவானுங்க... அப்புறம் சண்டை போட வேண்டி வரும்' என்று நினைத்தபோது ஒரு பெரியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவருக்கு 70 வயசு இருக்கும். என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, டிவியில் மருது படம் ஓட ஆரம்பித்தது. 

படம் பார்க்கும் எண்ணமின்றி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

"என்ன தம்பி... படம் பிடிக்கலையோ... வெளியில பாத்துக்கிட்டு வாறீக...?" என்றார் பெரியவர்.

"பாத்த படம்தான் ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது... அதான்"

"இப்ப எல்லாப் படமும் அப்படித்தானே இருக்கு..." என்றவர் டிஏஎஸ் பட்டணம் பொடி பட்டையை இடைவாரில் இருந்து எடுத்தார். "தூக்கம் வராம இருக்க பொடிப் போடுவேன்... உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே..." என்றார்.

"பிரச்சினையில்லை..." என்றதும் கொஞ்சம் பொடியை விரலால் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென்று உறிஞ்சினார். 

அவர் கையை உதறியபோது எனக்குத் தும்மல் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் நிஜாம்லேடி புகையிலை பாக்கெட் எடுத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து உருட்டி, வாய்க்குள் அதக்கிக் கொண்டார். 

அதன்பிறகுதான் அவரின் ஆட்டம் ஆரம்பமானது... 

பேருந்து ஏதாவது ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதெல்லாம் என் மீது படுத்து வெளியே எச்சிலை துப்ப ஆரம்பித்தார். வாய்க்குள் எச்சிலோட கொதகொதவென பேச ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது பெரிய மனுசன் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தேன். 

திருமயம் தாண்டியது மெல்ல தோள் சாய்ந்தார்... தட்டி விட்டுப் பார்த்தும் மறுபடியும் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தார்.... மெல்லிய குறட்டையோடு.... 

நான் எப்போதும் என்மீது சாய்ந்து தூங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அது எனக்குப் பிடிப்பதுமில்லை... கோபம் தலைக்கேறினாலும் பெரிய மனிதர் என்பதாலேயே அவரை தட்டித் தட்டி விடிவதோடு நிறுத்திக் கொண்டேன். 

புதுக்கோட்டை போவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. 'தம்பி உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேனோ...?' என்று சிரித்தபடி அங்கு இறங்கினார். 

இப்போது பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஆயா வந்து அமர்ந்தது... கையில வேற வெத்தலைப் பெட்டி வச்சிருக்கதைப் பார்த்ததும் ‘ஆஹா புதுக்கோட்டை வரை புகையிலை பார்ட்டி... இனி வெற்றிலை பார்ட்டி இன்னைக்கு யார் முகத்துல முழிச்சமோ தெரியலை’ என்று நினைத்த எனக்குள் பக்கத்து வீட்டு புஷ்பா வந்து சிரித்தாள்... சேச்சே... புஷ்பாவைப் பார்த்துட்டுப் போனா அன்னைக்கு சக்ஸஸ்தான் என நினைத்துக் கொண்டேன்... காரணம் அவ நம்ம ஆளாச்சே.

சரி சன்னலோரமா ஒண்டிக்க வேண்டியதுதான் என சன்னலோடு ஐக்கியமாக...

பேருந்தின் வேகத்தில் காற்றுத் தாலாட்ட... 

தூக்கம் மெல்லக் கண்களை அணைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தேன்... 

என் தலை மெல்ல அருகிலிருந்த ஆயாவின் தோள் சாய்ந்தது.

- 'பரிவை' சே.குமார்.

புதன், 3 அக்டோபர், 2018

சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)

'என் உயிர் நீதானே...' என்ற எனது சிறுகதை 'ஐ லவ் யூடா' என்ற பெயரில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. என் உயிர் நீதானேயை விட ஐ லவ் யூடா ஈர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள் போல. 

எது எப்படியோ முத்துக்கமலத்தில் இது எனது மூன்றாவது கதை... படைப்பாளர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடமும் அதில் என் கதைகளும்... நன்றி முத்துக்கமலம்.

முத்துக்கமலத்தில் வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.

வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... நன்றி.




உயிரே ஒரு கடிதம்
(ஐ லவ் யூடா)
'எப்படியிருக்கே?'

யாருடா இவன் ஒரு லெட்டர் எழுதும் போது எப்படியிருக்கேன்னு ஆரம்பிச்சிருக்கானேன்னு நீ நினைக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். அந்த ஒரு வரிக்குள் ஒளிந்திருக்கும் என்னை நீ கண்டுபிடித்து விடுவாய் என்பதை நான் அறிவேன்.

'சரி... எப்படியிருக்கே...?' என் நினைவுகள் பல நேரம் நம் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை காலம் ஆனாலும்... இனிக்கும் நாட்களல்லவா அந்த நாட்கள்...? எப்படி மறப்பது... எப்படி அதை வீசி எறிவது..?

'நம் முதல் சந்திப்பு உனக்கு ஞாபகம் இருக்கா...?' அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன். நீ உன் தோழியை துணைக்கழைக்க, 'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..'? என நான் சொன்னதும் என் நண்பர்கள் எல்லாம் கேலியாய் சிரிக்கிறார்கள். நீ உன் தோழி தவிர்த்து அழகான முகத்தில் கோபத்தின் சிவப்பு சூடி அருகே வருகிறாய்...

'பர்ஸ்ட் இயர்தானே...' என்றதும் 'ஆமாம்' என தலையாட்டினாய்.

'ஆமா நீ பூம்பூம் மாடு... நான் மாட்டுக்காரன்... கேள்வி கேட்ட தலையாட்டுறே... ஊமையா...?' என்றேன் நக்கலாய்... மீண்டும் நண்பர்களின் சிரிப்பொலி.

'ஆமா...' என்றாய்... பர்ஸ்ட் இயரா என்றதற்கு இந்த ‘ஆமா’வா இல்லை ஊமையா என்றதற்கு இந்த ‘ஆமா’வா என்று ஆராயாமல் 'உன் பேர் என்ன?' என்றேன். நீயும் கோபத்தோடு 'மிருதுளா' என்றாய்.

'டேய் மாப்ள... பிரதர் இன் லா , சிஸ்டர் இன் லாவெல்லாம் தெரியும்... அது என்னடா மிருது லா' என்று சிரித்தான் ரகு. உடனே நீ 'மிருதுளான்னு சொன்னேன் என்றபடி அங்கிருந்து அகன்றாய். கொஞ்சத் தூரம் போய் திரும்பி பார்த்து முறைத்தாய்... நானும் முறைத்தேன்... 

முறைக்கும் கண்கள் விரைவில் ரசிக்கும் என்பதை அப்போது நாம் உணரவில்லை.

நாட்கள்... வாரங்களாகி... வாரங்கள்... மாதங்களாக பயணித்தபோதுதான் நான் ரவுடி என நீயும்.. நீ திமிர் பிடித்தவள் என நானும் நினைத்திருந்தது மெல்ல மாறி முதல் பார்வையின் தவறுதான் அது என்பதை உணர்ந்து சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து மெல்ல மெல்லப் பேசி நட்பானோம்.

அன்று... அதுதான் நம்மை உணர வைத்த நாள்... உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. என்னமோ எல்லாமே இவனுக்கு மட்டுந்தான் ஞாபகம் இருக்க மாதிரி ஞாபகம் இருக்கான்னு கேட்கிறானேன்னு நீ சிரிப்பேன்னு எனக்குத் தெரியும்... இருந்தும் கேட்கத் தோணுது  இப்போதைய வாழ்க்கை... சரி வா... நம்மை உணர வைத்த நாளை மீண்டும் உணர்வோம்.

கல்லூரி நண்பனின் தங்கை திருமணம்... நீயும் அங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும்... என்னைவிட உனக்கு அவனிடம்தான் ஒட்டுதல் அதிகம். அதற்கு காரணம் இருந்தது... அவனும் நீயும் இலக்கியம் பேசுபவர்கள்... எனக்கு அதெல்லாம் புரியாது... தெரியாது. கல்லூரி சார்பாக பல போட்டிகளுக்கு இருவரும் அனுப்பப்பட்டு நிறைய பரிசுகளை வென்று வந்து கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் நான் வெளியேதான் நிற்க வேண்டியிருக்கும் என்பதை நன்கறிவேன். நான் இன்னும் உன்னுடன் நெருங்கிப் பழகாத தினங்களே அவை... ஒரு புன்னகை., சில வரிப் பேச்சுடனான நட்பு மட்டுமே நமக்குள்... அப்படியிருக்க உன் இலக்கியத் தோழனின் தங்கை திருமணம் வரமாலா இருப்பாய்..?

Image result for மனைவி

அது ஒரு சிறு கிராமம்... பசுமை நிறைந்த வயல்வெளிகள்... பேருந்து வசதி இல்லாத கிராமம்... மெயின் ரோட்டு வழியாக பயணிக்கும் பேருந்தில் கிளைச்சாலையில் இறங்கி கப்பி ரோட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். அதனால் நாங்கள் நண்பர்களின் வண்டிகளில் ரெண்டு மூணு பேர் என அங்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே கல்லூரி நண்பர்கள் வந்திருக்க, நீ வந்திருக்கிறாயா..? என்று நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா..? சரி விடு... இந்த வார்த்தை வேறு அப்பப்ப வந்துவிடுகிறது. தேடிய என் விழிகளுக்குள் நீ சிக்கினாய்... ஆனால் உன் இலக்கிய நண்பனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்... ஏனோ விழிகளை விலக்கினாலும் மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமே நகர்ந்து கொண்டிருந்தது.

சாப்பிடப் போகும் போது ஏதேச்சையாய் பார்ப்பது போல்,'ஹாய் எப்ப வந்தீங்க..?' என்றாய்... இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன்.  'அப்பவே வந்துட்டோம்... நீதான் பிசி' என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது. கிளம்பும் போது 'எங்களை பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா?' என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்..? அப்போது பெண்கள் பேசுவதே பெரிய விஷயம்.. வண்டியில் பின்னால் அமர்ந்து வருவது என்பது சாத்தியமேயில்லை. அப்படியிருந்தும் நீ கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. நண்பனின் வண்டியில்தான் நான் வந்திருந்தேன். அவனிடம் வண்டியை நான் வாங்கி ஸ்டார்ட் பண்ண, நீ என் பின்னே ஏறிக்கொண்டாய். மற்றவர்கள் மற்ற நண்பர்களின் வண்டியில்...

'என்ன எதுவுமே பேசாம வாறீங்க..?' நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன். சிரித்தவாறே 'ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..?' என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...?' என்றேன். 'இந்த டிரஸ் நல்லாவே இல்லை... இந்தப் பேண்டுக்கு லைட் ஊதாக் கலர் சர்ட்டுன்னா சூப்பரா இருக்கும்' என்றாய். 'ம்... எங்க அக்கா நல்லாயிருக்குன்னு சொன்னுச்சு...' என்றதும் 'அக்காவோட ரசனை சூப்பர்' என்று சிரித்தாய்.

நமக்குள் கொஞ்ச நேர அமைதி "என்ன சார்...பேச யோசிக்கிறீங்க... ராக்கிங் பண்ணினப்போ என்னை ஊமையின்னு சொன்னீங்க... இப்ப யார் ஊமை...' என்று நீ கேட்க, 'அது என்னமோ தெரியலை... வந்த பொண்ணுகள்ல சட்டுன்னு உன்னைப் பிடித்தது... கூப்பிட்டுக் கேட்டேன்... ராக்கிங்ன்னா அப்படித்தான் பேசணும்... அதான்...' என்றதும் நீ சிரித்தாய்.

வேகமா வாங்கடா.. என்ன இப்பத்தான் கல்யாண ஊர்வலம் மாதிரி மெதுவா வாறீங்க என்று முன்னே சென்ற நண்பன் கத்த, வண்டியின் வேகத்தைக் கூட்டினேன். 'மெல்லவே போங்க' என்று என் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாய்.

'ஆமா... உன் இலக்கிய நண்பன் கல்யாண வேலையை விட்டுட்டு உங்கிட்ட அப்படி என்ன கடலை போட்டான்.... சிரிச்சு சிரிச்சு பேசினீங்க... இலக்கியமா?' என்றேன் நக்கலாக.

 'என்ன நக்கலா... அவங்க வீட்டுத் திருமணத்துக்கு வந்திருக்கோம்... அவன் வந்து பேசினான்.. தட்ஸ் ஆல்.. ஆமா நீங்க பாத்தீங்களா...?' என்றாய். 'ஆமா... என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... கல்யாண மாப்பிள்ளை மாதிரி...' என் பொறுமலை கொட்டினேன். 'ஏய் அவன் என்னோட பிரண்ட்... நீங்க அப்ப என்னையத்தான் பாத்துக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...' என்னைச் சீண்டினாய்.

'ஆமா... பெரிய அழகி... கண்ணுக்கு முன்னே கடலை... அதான்...' என்றதும் 'ஏன் நான் இந்த டிரஸ்ல நல்லாயில்லையா...?' என்றவள், 'நீங்க எங்க பக்கம் வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்... வரவேயில்லை... அவன்கிட்ட பேசினதால கோபமாக்கும்..' என்றாய். 'நான் எதுக்கு தாயி உங்கமேல கோபப்படணும்... என்னோட பிரண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... இப்பக்கூட உதவியின்னு கேட்டீங்க... வந்தோம்... உங்களை கூட்டிக்கிட்டு பவனி போகலாம்ன்னு சந்தோஷத்துல வரலை...' என்றேன்.

உடனே நீ 'ம்க்கும்... நம்பிட்டோம்.... இதே பசங்க கேட்டிருந்தா வந்துருப்பீங்களாக்கும்... சாக்குப் போக்கு சொல்லியிருக்கமாட்டீங்க... பொண்ணுங்கன்னதும் வந்தீங்க... என்ன சார் சரிதானே...?' என்று சிரிக்க, நான் மறுக்க ‘என்னைய ஏத்தாம வேற பொண்ணை உங்க வண்டியில ஏத்தியிருக்கலாமே என் என்னை உங்க வண்டியில ஏத்தினீங்க..’ எனக் கேட்டுச் சிரித்தாய். நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை செலுத்த பேருந்து நிறுத்தம் வந்தது.

நீ இறங்கியதும் நான் வண்டியை எடுக்க 'ஒரு நிமிடம்' என்றாய்.. நின்றேன்... அருகே வந்து 'இந்த சாரி எனக்கு நல்லா இல்லையா..?' என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..' உண்மை பேசினேன். 'அப்ப அப்படிச் சொன்னீங்க..?' சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று சிரிக்க, 'டேய்... அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின் அழைப்புக்கு, 'போங்கடா... வாறேன்' என்றதும் 'நடத்துங்க... நடத்துங்க...' என்றபடி அவர்கள் கிளம்ப, 'எங்க நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல முணங்கினாய். 'என்ன..?' என்றேன். 'பின்னே' என்று சிரித்தாய்.

'சாரே... அவன் என்னோட போட்டிகளுக்கு வர்றவன் என்ற முறையில்தான் பேசுவேன்... நீங்க பாட்டுக்க காதல் கத்திரிக்காய்ன்னு எல்லாம் நினைச்சிறாதீங்க... எனக்கு என்னைய முதன் முதலில் ராக்கிங் பண்ணின இந்த ரவுடியைத்தான் பிடிக்கும்... அந்த கத்திரிக்காயெல்லாம் இங்கிட்டுக்கூட இருக்கலாம்' என்று சாதாரணமாய் நீ சொல்ல, நான் விக்கித்து நின்றேன்.

'ஏய் வாயாடி... வாயாடுனது போதும்....வாடி பஸ் வருது' என் உன் பிரண்ட்ஸ் குரல் கொடுக்க, 'உங்க கூட வண்டியில வந்த இந்தக் கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது, நாளைக்கு இந்த பேண்டுக்கு லைட் ஊதா சர்ட்டுல வாங்க...' என்றபடி ஓடினாய். அதன் பின் கப்பி ரோட்டில் என் வண்டி பறந்தைச் சொல்லவும் வேண்டுமா..?

நம் காதலைச் சுமந்த கல்லூரி...

மைதானத்துப் புங்கை மரத்துக்கு கீழ் இருக்கும் அமரும் திண்டு...

பெண்கள் அறைக்குப் பின்னே இருக்கும் வேப்ப மரம்...

கல்லூரிச் சாலை...

மாலை நேரங்களை விழுங்கிய பாரதி பூங்கா...

என இவையெல்லாம் நம் காதலைப் பருக, ஈருடல் ஓருயிராய் ஆனோம். எல்லாருக்கும் வரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து  உறுதியாய்... முடிவாய்... நின்று குடும்ப சம்மதத்துடன் குமரன் சன்னிதியில் வாழ்வில் இணைந்தோம்.

அன்று... நம் முதல் இரவு...

எல்லாருமே முதல் இரவு என்றால் அது காமத்திற்கான இரவு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் நம் வாழ்க்கைக்கான முதல் இரவு...

காதலித்த ஆறாண்டுகள் எவ்வளவோ பேசியிருந்தாலும் அந்த இரவில் நம் வாழ்க்கையைப் பற்றி, பிறக்கப் போகும் நம் குழந்தைகள் பற்றி, செல்ல வேண்டிய தூரம் பற்றி, அடைய வேண்டிய சிகரம் பற்றி... இன்னும் இன்னுமாய் நேரம் கடந்து கொண்டே செல்ல, நம் பேச்சும் கூடிக்கொண்டே போனது உனக்கு நினைவில் இருக்கா?

காதலிக்கும் போது இருக்கும் நேசம், புரிந்து கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல் திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய கோலமாக மாறி... 'அப்பவே சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன் அம்மாவின் வாக்கு வேதவாக்காகி   என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்.

‘விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம்’ என்கிறார் உங்கப்பா...

விவாகரத்து...

அது யாருக்கு வேணும்...?

உயிர் போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..?

நான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ..? எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலையின்றிப் பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்...

என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்கான தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... தினம் தினம் இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது,

என்னைப் புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...

உன் உயிரைச் சுமக்கும் உடல் மட்டும் இங்கே... உயிர்...?

‘என் ப்ரியமானவளுக்கு...’ என கணவன் எழுதியிருந்த மின்னஞ்சலை வாசிக்க விருப்பமில்லாததால் திறந்து பார்க்காமல் வைத்திருந்தாள். இரவு படுக்கப் போகுமுன் ‘சரி அப்படி என்னதான் கதை விட்டிருக்கிறான்’ என வாசித்துத்தான் பார்ப்பமோ என்று திறந்த மிருதுளா,  'பிரிய நினைத்தால் படிக்க வேண்டாம்... பிரியம் இருந்தால் ஒருமுறை வாசித்துச் செல்' என்று ஆரம்பித்த கடிதத்தைப் படிக்க மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.

‘நல்லாயிருக்கியா’வில் உருகி...

ஒவ்வொரு ‘நினைவிருக்கிறதா’விலும் கண்ணீரைச் சேர்த்து...

‘என் கண்ணம்மா’வில் கன்னத்தில் இறக்கி...

‘நீ இல்லா மணித்துளி’யில் உடைந்து...

‘கேள்விக்குறியில் நிற்கும் உயிரில்’ பொறுமி...

'ஐ லவ் யூடா...' என்று கதறி அழுதாள்.
-'பரிவை' சே.குமார்.

****
நண்பர் 'தளிர்' சுரேஷின் 'தேன்சிட்டு' மின்னிதழில் வெளியான 'மனிதர்கள்' சிறுகதை விரைவில் பகிரப்படும். அத வாசிக்கவும் நண்பர் இதழை வாசிக்கவும் விரும்பினால் இங்கு சொடுக்குங்கள்.

****

திங்கள், 19 மார்ச், 2018

தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)


முத்துக்கமலம் மின்னிதழில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது, முத்துக்கமலத்தில் வாசிக்க 'தோஷம்' 

கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

Image result for இளையராஜா ஓவியம்

"என்னம்மா சொல்றீங்க..? மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குச் செய்யிறது நல்லாவா இருக்கும்... ஜாதி சனம் என்ன சொல்லும்... அதை விடுங்க... ரேணுகா மனசு உடைஞ்சி போயிடமாட்டாளா..?"

"ஊரு ஆயிரம் பேசும்... அதுக்காக நாம ஊருக்காகவா வாழ முடியும்... இங்க பாரு மாணிக்கம்.... மூத்தவளுக்கு இதுவரைக்கு எத்தனையோ இடம் வந்து தட்டிக்கிட்டே போகுது... அவ ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சாதகக்காரன் சொன்ன எல்லாக் கோயில்லயும் போயி பரிகாரம் பண்ணிட்டு வந்தாச்சு... ஒண்ணும் அமையலை... சின்னவளுக்கு முடிச்சிட்டு இவளுக்குப் பாக்கலாமே... அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..." பாக்கு உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசினாள் காளியம்மாள்.

"அதுக்கில்லைம்மா... என்ன இருந்தாலும் பெரியவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோன்னு ஊர் பேசாதா?"

"நாந்தேன் சொல்றேனுல்ல... ஊருக்காக நாம வாழக்கூடாது... நமக்காகத்தான் வாழணும்... இங்க பாரு நம்ம செல்வராஜூ மூத்தவ இருக்கும் போது இளையவளுக்குப் பண்ணலையா என்ன... அதைவிடு நம்ம சின்ன மாமா என்ன பண்ணுனாரு... தேவிகா இருக்கும் போது சுஜாதாவுக்கு பண்ணி வைக்கலையா என்ன... சும்மா யோசிக்காம நம்ம புவனாவை கட்டிக்கிறோம்ன்னு நல்ல இடத்துல இருந்து கேக்கிறாக... பெரியவளுக்காக இதையும் விட்டுட்டா... இந்த இடமும் போகும்... இப்பவே சின்னவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல..."

"எனக்கென்னவோ யோசனையா இருக்கும்மா... ரேணுகா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை... எல்லாப் பொண்ணுகளுக்கும் உள்ளது போல இவளுக்கும் ஆசை இருக்கும்ல்லம்மா... இப்ப அவளை விட்டுட்டு சின்னவளுக்குச் செய்யப்போறேன்னு சொன்ன அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்... அதான் யோசிக்கிறேன்..."

"அவ புரிஞ்சிப்பாப்பா... எத்தனை இடம் வந்துச்சு எல்லாமே தட்டிக்கிட்டுத்தானே போகுது... ஒருவேளை  சின்னவளுக்கு கல்யாணம் நடந்தா இவளுக்கு ஆகுமோ என்னவோ... சொல்றவிதமா சொல்லு மாணிக்கம்..."

"ம்..."

அம்மாவுடன் பேசியதை மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஓட விட்டபடியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு மோட்டு வலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்த மாணிக்கத்துக்கு மனசுக்குள் ஒரு வித வலி, எப்படி ரேணுகாவிடம் பேசுவது...? அவள் வருத்தப்பட்டா என்ன செய்வது...? மனசொடிஞ்சி பொயிட்டான்னா... எதாயிருந்தாலும் அவளுக்குத்தான் முதல்ல செய்வேன்... ஆனா திருமணத்தை... தங்கையின் கல்யாணத்துக்குப் பின்னால உனக்குன்னு சொன்னா... எப்படி எடுத்துப்பா... யோசனையின் வலியில் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. யாரும் பார்க்கும் முன்னர் நெஞ்சில் கிடந்து துண்டால் துடைத்துக் கொண்டார்.

"அப்பா..." ரேணுகாவின் குரல்.

"எ... என்னம்மா..?"

"உடம்புக்கு முடியலையா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..? தலைவலிக்குதா...? மருந்து தேய்ச்சுவிடவா?"

"ஏய் அதெல்லாம் இல்லைம்மா... மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி... பதிலைத் தேடித்தேடி எனக்கே சோர்வாப் போச்சு..."

"என்ன கேள்விப்பா... வயலுக்கு தண்ணி பாய்ச்சணும் உரம் போடணுமின்னா..." சிரித்தாள்.

"ம்... வெளஞ்ச பயிருல்ல... முதல்ல அறுக்க வேண்டியதை விட்டுட்டு அடுத்ததை முதல்ல அறுக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சேன்னு யோசனையா இருக்கும்மா..."

"போங்கப்பா... எப்பவும் இப்படித்தான் வேதாந்தி மாதிரி பேசுவீங்க... வாங்க சாப்பிடலாம்..."

"ம்... இப்படி உக்காரும்மா... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..."

"எங்கிட்டயா..? என்ன விஷேசம் அப்பா..."

"உக்காரும்மா... ஆமா உங்கம்மா எங்கே...?"

"அம்மாவா... டிவியில நாடகம் பாக்குறாங்க... புவனா எப்பவும் போல மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கா...?"

"ம்... இருக்கட்டும்... நாம கொஞ்சம் தனியாப் பேசணும்..."

"தனியாவா... எங்கிட்ட என்ன ரகசியம் அப்பா... நாம ரெண்டு பேரும் தனியாப் பேசினா உங்காத்தா அதான் எங்கப்பத்தா என்ன குசுகுசுன்னு பேசுறீங்கன்னு வந்திரும்..."

"ஏய்... அப்பத்தாதான் தூங்கிக்கிட்டு இருக்கே... நீ உக்காரும்மா..."

"அதானே... ஆத்தாவை பாத்துக்கிட்டுத்தான் இந்த ஆத்தாக்கிட்ட பேச நினைச்சீங்களாக்கும்..." சிரித்தபடி அவரருகில் அமர்ந்தாள்.

"ஏம்மா... அப்பா கேக்குறது தப்புன்னா எங்கிட்ட நேர சொல்லிடணும்... சரியா?"

"என்னப்பா பீடிகையெல்லாம் பலமா இருக்கு...?"

"இல்லம்மா... முடிவு நீ எடுக்க வேண்டிய ஒரு காரியம்... அதான்..."

"சரி..."

"ரெண்டு நாளைக்கு முன்னால உன்னைப் பெண் பார்க்க வந்தாங்கல்ல... அவங்க எப்படிப்பட்டவங்கன்னு நினைக்கிறே..."

"என்னப்பா அவங்க என்ன சொன்னாங்கன்னுதான் உங்களுக்குத் தெரியுமில்ல... அப்புறம் எப்படிப்பட்டவங்கன்னு எங்கிட்ட கேட்டா..." சிரிப்பை விடுத்து கொஞ்சம் சீரியஸாக் கேட்டாள்.

"இல்லம்மா... அவங்களுக்கு நம்ம புவனாவைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்கதானே...?"

"ம்... ஆமா... அதுக்கு..."

"அந்தப் பையன் நம்ம புவனாவுக்கு சரியா வருவானாம்மா...?" நேரடியாகக் கேட்டு விட்டார்.

"அப்பா..."

"இல்லம்மா... நல்ல குடும்பம்... நமக்குத் தூரத்துச் சொந்தம் வேற... உன்னையத்தான் பாக்க வந்தாங்க... ஏனோ அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க... உங்கிட்ட இதைப் பற்றிப் பேசக்கூடாதுதான்... ஆனா உங்கிட்ட கேட்டாத்தான் எனக்கு சரியான பதில் கிடைக்கும்... சொல்லும்மா..."

"ம்... நல்ல பையனாத்தான் இருக்கான்... " அவளின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்த குதூகலம் இல்லை. மாணிக்கத்திற்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது.

"சரிம்மா...  வா சாப்பிடலாம்" என்று பேச்சை மாற்றினார்.

"அப்பா... அந்த மாப்பிள்ளையை புவனாவுக்கு செய்யலாம்ன்னு உங்களுக்கு ஆசையிருக்காப்பா..." அவரின் மார்பு முடியில் கோலம் போட்டபடிக் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்லைம்மா... உன்னோட ஜாதகமும் சரியில்லை... வர்ற வரனெல்லம் தட்டிக்கிட்டே போகுது... பரிகாரம் எல்லாம் பண்ணியாச்சு... அவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க... உன்னோட எண்ணம் என்னவோ அதுதான் என்னோட முடிவு..."

ரேணுகா வறட்சியாய் சிரித்தாள் "எனக்குத்தான்  ஜாதகம் சரியில்லையே... எனக்குத்தான் சரியான வரன் அமையாம தள்ளிக்கிட்டே போகுது... அவளுக்காச்சும் முடியட்டுமேப்பா...."

"இல்லம்மா... நீ இருக்கும் போது அவளுக்கு..."

"என்னப்பா... தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாத்தான் உனக்குன்னு ஆம்பளப் பசங்களுக்கு முப்பது முப்பத்தி ரெண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்கிறது இல்லையா..? அது மாதிரி நான் நினைச்சிக்கிறேன்... என்ன எனக்கு இருபத்தெட்டுத்தானே ஆகுது... அவளுக்கு நடக்கட்டும்... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா நமக்குச் சந்தோஷம்தானேப்பா... எனக்குன்னு இனிமேயா பிறக்கப்போறான்... எங்கயாச்சும் இருப்பானுல்ல... வர்றப்போ வரட்டும்... இப்ப அவளைக் கட்டித்தாரேன்னு அவங்ககிட்ட பேசுங்க..." மனசுக்குள் வேதனை இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சாமர்த்தியமாய்ப் பேசினாள்.

"இல்லம்மா... உன்னைக் கஷ்டப்படுத்தி..."

அவரை இடைமறித்து "அப்பா... என்னோட மாப்பிள்ளையை அவ கட்டலையில்ல... வந்தவங்களுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சாச்சு... என்னைப் அவங்களுக்குப் பிடிச்சி... நாம ஜாதகம் பாத்து சரியில்லையின்னு வச்சிக்கங்க... அப்ப அவங்க அவளைக் கேப்பாங்களா... இப்பவே அவங்களுக்குப் பிடிச்சபடி அவளோட ஜாதகத்தைப் பாருங்க... அதான் சரிப்பா..."

"ம்... நீ இவ்வளவு உயர்வாச் சிந்திக்கிறே... ஆனா ஊரும் உறவும் என்ன சொல்லும்...?"

"அப்பா ஊருக்காகவும் உறவுக்காகவும் நாம இல்லை... எனக்கு எங்கப்பாவைத் தெரியும்... என்னோட தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையுதுன்னா எனக்குச் சந்தோஷம்தான்...  அவங்க என்ன பேசினா என்ன...?"

"ம்.... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்மா..."

"அப்பா... முதல்ல அவளுக்குப் பேசுங்க... யாரு கண்டா அவளுக்கு வரன் வந்த நேரம் என்னோட ஜாதக தோஷம் போயி எனக்கும் மாப்பிள்ளை வரலாமுல்ல..."

"அப்படி அமைஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... எல்லாம் அந்த மாரிதான் பாத்துக்கணும்..."

"சரிப்பா... வாங்க.... சாப்பிடலாம்... உங்களுக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு... உங்களுக்காக நாந்தான் வச்சேன்.... என்னோட கருவாட்டுக் குழம்பு உங்களுக்குப் பிடிக்கும்ல்ல... வாங்க... இன்னைக்கே மாப்பிள்ளை வீட்ல பேசி நம்ம புவனா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க... எனக்கு ரொம்பச் சந்தோஷம் அப்பா..." என்று எழுந்தவள் கலங்கிய கண்ணை அவர் பார்க்காது தாவணியில் துடைத்துக் கொண்டாள். 

அவள் இப்படிச் சந்தோஷமாப் பேசினாலும் அவள் மனசின் வலியும் வேதனையும் வார்த்தைகளில் தெரிந்ததை மாணிக்கமும் உணர்ந்திருந்ததால் அவருக்கும் கண்ணீர் வர எங்கே மகள் பார்த்து விடுவாளோ என்ற எண்ணத்தில் செருமிக் கொண்டே முகத்தைத் துடைப்பது போல் கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவர் மனசுக்குள் ஏனோ இதுவரை அத்துப் போயிருந்த தங்கை உறவு வந்து செல்ல, மாப்பிள்ளையும் ஞாபகத்தில் வந்தான். கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்தபடி எழ, சுவற்றின் மூலையில் பல்லி ஒன்று 'உச்... உச்...' என்று கத்தியது.
-‘பரிவை’ சே.குமார்.