மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கவிஞர் வரிசை: மக்கள் கவிஞர்"சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"

என்று சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்பிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் வாழ்ந்தது சில காலமே ஆனாலும் இப்புவியில் விட்டுச் சென்ற படைப்புக்கள் ஏராளம்.

கவிஞர் கல்யாண சுந்தரத்தின் சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய கிராமமாகும். இவர் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சாதரண விவசாய குடும்பத் தம்பதியரான அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோருக்கு முன்றாவது குழந்தையாக பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்ற அண்ணனும் வேதாம்பாள் என்ற அக்காளும் உண்டு.

குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்போடு அவரது படிப்பு முடிந்தது. பின்னர் திராவிட இயக்கத்திலும் கம்யூனிச கொள்கையிலும் ஈடுபாடு கொண்டார். அவரது தந்தை கவி இயற்றுவதில் வல்லராக இருந்ததாலோ என்னவோ 19வது வயதில் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவரது கவிதைகள் பெரும்பாலும் கிராமியப் படைப்பாகவே இருந்தன. கவிஞர் இயற்றிய பெரும்பாலான கவிதைகள் உணர்ச்சிப் பெருக்குடன் அமைந்தது சிறப்பாகும்.

தனது கவிதைகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதாமல் நாட்டில் இருக்கும் குறைகளையும் வளர்ச்சிக்கான நிறைகளையும் சுட்டிக்காட்ட ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியவர் கவிஞர். விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். தஞ்சாவூர் கண்டெடுத்த வீரத்தியாகிகள் சிவராமன் மற்றும் இரணியன் ஆகியோருடன் சேர்த்து விவசாய இயக்கத்தை மாபெரும் இயக்கமாக வளர்க்க அரும்பாடுபட்டார்.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்' என்ற திரைப்படத்தில் கவிஞரின் முதல் பாடல் அரங்கேறியது. அதன்பின் ஏராளமான திரைப்பாடல்களை எழுதி திரைப்படத்துறையில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். கவிஞர் எழுதிய திரையிசைப் பாடல்களில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பதிவு செய்தார். இவரது பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

29வருட காலமே இப்புவியில் வாழ்ந்த மக்கள் கவி, அந்த சிறிய வயதில் 17 தொழில்களை செய்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?. ஆம்... அவரது அவதாரங்கள்

1. விவசாயி.
2. மாடு மேய்க்கும் தொழிலாளி.
3. மாட்டு வியாபாரி.
4. மாம்பழ வியாபாரி.
5. இட்லி வியாபாரி.
6. முறுக்கு வியாபாரி.
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று (கிடுகு) வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. மேடைப் பாடகர்
15. நாடக நடிகர்
16. நடனக்காரர்
17. திரைப்பட பாடலாசிரியர் (கவிஞர்).

பன்முகங்களை காட்டி கடைசியில்தான் அவர் கவிஞராக உருவெடுத்துள்ளார். இவரது மனைவி பெயர் கௌரவாம்பாள். இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு குமாரவேல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கவிஞருக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. அதே வருடம் அக்டோபர் 08 ஆம் தேதி கவிஞர் அகால மரணமடைந்தார்.

கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள்:

ஆடை கட்டி வந்த நிலவோ:

தங்களது கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஆத்திக்கோட்டை என்ற கிராமத்திற்கு அண்ணனும் தம்பியும் பெண் பார்க்க சென்றிருக்கிறார்கள். பெண் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது 'தம்பி பெண் எப்படியிருக்கிறாள்...? நல்லாயிருக்காளா...?' என்று அண்ணன் வினவ, அண்ணனுக்குத்தான் பார்த்து வருகிறோம் என்ற எண்ணத்தில் அழகான பெண்ணண்ணே என்று சொல்லியிருக்கிறார் கவிஞர். 'தம்பி பெண் எனக்கல்ல உனக்குத்தான்' என்று அண்ணன் சொன்னதும் தனது ஏட்டில் 'ஆடை கட்டி வந்த நிலவோ...' என்று சில வரிகளை எழுதிவைத்திருக்கிறார் கவிஞர். அவர் திரைப்பட பாடலாசிரியரான பின்னர் அமுதவல்லி என்ற படத்திற்காக அந்த வரிகளையே பாடலாக்கி கொடுத்திருக்கிறார். அந்த வரிகள்...

“ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ!...”

கவிஞரின் திருமணத்திற்குப் பிறகே அவரது அண்ணனுக்கு திருமணம் ஆனது. இந்தத் தகவலை திரு.சி.பி.ஏ. ஞானப்பிரகாசம் சுவைபடத் தெரிவித்துள்ளார்.

பாட்டுக்களை எடைக்குப் போட்ட தேவர்:

திரைப்படத்திற்கு பாட்டெழுதும் ஆவலில் சென்னை வந்த பட்டுக்கோட்டையார் எட்டு ரூபாய் வாடகையில் ராயப்பேட்டையில் ஓ.ஏ.கே. தேவருடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். அந்த கால கட்டத்தில் தேவருக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதேபோல் பட்டுக்கோட்டையாரும் வாய்ப்பைத்தேடிக் கொண்டிருந்தார்.

சும்மாயிருக்கும் பெரும்பாலான சமயங்களில் கையில் கிடைக்கும் பேப்பர்களில் எல்லாம் பாடல்களை எழுதி ஏராளமான பேப்பர்களை அறையில் குவித்து வைத்திருந்தார் பட்டுக்கோட்டையார். ஒருநாள் டீக்கடைக்கு பட்டுக்கோட்டையார் சென்றிருந்த நேரம் தெருவில் சென்ற பழைய பேப்பர்க்காரனைக் கூப்பிட்டு அறையில் குவிந்து கிடந்த பத்திரிக்கைகள், புத்தகங்கள், பழைய பேப்பர்கள் என எல்லாத்தையும் அள்ளி எடைக்குப் போட்டுவிட்டார் தேவர்.

திரும்பி வந்த பட்டுக்கோட்டையாருக்கு சுத்தமாக இருந்த அறையைப் பார்ததும் சந்தோஷம். பரவாயில்லை தேவர் நல்ல வேலை செய்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். ஆமா இங்க இருந்த பேப்பரெல்லாம் எங்கே? என்று அவர் கேட்க நினைதத்போது, 'ஒரே குப்பையா இருந்துச்சு... அதான் எல்லாத்தையும் அள்ளி பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிட்டேன்' என்று தேவர் சொன்னதும் கவிஞருக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் எழுதிவைத்த பாட்டுகள் இருக்கின்றனவா என்று அங்கும் இங்கும் தேடினார். எதுவும் அவர் கண்ணுக்கு சிக்கவில்லை. 'பாட்டு நோட்டுக்களை எடுத்து வைத்தீர்களா?' என்று தேவரிடம் கேட்ட போது, அவர் சிரித்துக் கொண்டே... 'அடப் போங்க... நீங்களும் உங்க நோட்டும்... எந்தப் பட முதலாளியும் எடுக்காத உங்கள் பாட்டை பேப்பர்க்காரனாவது மூன்று ரூபாய்க்கு எடுத்துக் கொண்டனே' என்றார் தேவர்.

கவிஞருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'நல்ல நல்ல பாட்டுக்களையெல்லாம் எழுதி வைத்திருந்தேனே...' என்றார் வருத்தமாக. அவரது வருத்தத்தைப் பார்த்த தேவர், "அட... அது போனால என்ன... அதைவிட நல்ல பாடல்களை உங்களால் எழுதமுடியாதா என்ன..? எழுதுங்கள்..." என்று ஆறுதல் சொன்னார் தேவர். அதன் பிறகு கவிஞர் எழுதிய பாடல்கள் திரையிசையில் பெரும் இடத்தைப் பிடித்தன. தேவர் குறிப்பிட்டதுபோல் ஒன்றை ஒன்று விஞ்சும்படியாக அத்தனை நல்ல பாடல்கள்.

இந்தத் தகவலை 'எத்தனை மனிதர்கள்' என்ற புத்தகத்தில் திரு.சின்னக் குத்தூசி தெரிவித்துள்ளார்.

இதுதான் வாழ்க்கை:

பட்டுக்கோட்டையார் திரைத்துறையில் புகழ் பெற்றிருந்த போது அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத அனுமதிகோரி ஒரு பத்திரிக்கை நிருபர் வந்திருக்கிறார்.

அவரது ஆசையை கேட்ட கவிஞர் சரி என்றோ... வேண்டாம் என்றோ... சொல்லாமல் அவரை தன்னுடைய அறையில் இருந்து அழைத்துக் கொண்டு சாதாரணமாக பேசியபடி தெருவில் நடக்கலானார்.

சிறிது தூரம் சென்றதும் ரிக் ஷாவில் ஏறி மவுண்ட் ரோட்டில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதுவரை நிருபரின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இப்போதும் நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும் என்று கேட்டால் இப்படி எங்கோ அழைத்துச் செல்கிறாரே என்று மனதுக்குள் நினைத்திருக்கிறார்.

அங்கிருந்து டாக்ஸி பிடித்து பாடல் பதிவுக்காக வடபழனியில் இருக்கும் ஸ்டுடியோவில் வந்து இறங்கியிருக்கிறார். அப்போதும் எதுவும் சொல்லவில்லை. பொறுமையிழந்த நிருபர், 'அண்ணே... வாழ்க்கை வரலாறு..." என்று ஆரம்பித்திருக்கிறார்.

இப்ப நீ பார்த்தியே இதுதான் என் வாழ்க்கை வரலாறு. முதலில் நடையாய் நடந்தேன். அதன் பிறகு பஸ்ஸில் போனேன். அப்புறம் ரிக் ஷா... இப்போ டாக்ஸி.... அவ்வளவுதான் என்றாராம்.

மேலே சொன்ன வாழ்க்கை வரலாறு கவிஞர் குறித்த ஓரு தளத்தில் படித்தது. எத்தனையோ சிந்தனையை தூண்டிய பாடல்களை கொடுத்த பட்டுக்கோட்டை இன்னும் சில காலம் இருந்திருந்தால் படிக்காதமேதையான அவர் நிறைய படைத்திருப்பார். இருபத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்தாலும் உலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் கவிஞராக.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

முதுமை போற்றுவோம்இன்றைய இளமை நாளைய முதுமை என்பதை நாம் யாருமே நினைவில் கொள்வதில்லை. பெற்றோராக இருக்கட்டும்... உறவினராக இருக்கட்டும்... பழகியவராக இருக்கட்டும்... ஏனோ முதுமையை மதிக்க நாம் மறுக்கிறோம்.

அவர்கள் என்ன சொன்னாலும் 'பெருசுக்கு வேற வேலையில்லை' 'கிழடு அப்படித்தான் கத்தும்', 'வயசாயிட்டாலே நையி நையின்னு' என்று பலவாறு அவர்களின் அறிவுரைகளை உதாசீனப்படுத்துகிறோம். அதுமட்டுமின்றி அவர்களுடன் சேர்த்து அவர்களின் கருத்துக்களையும் மூலையில் கிடாசுகிறோம் .

இளம் பிராயத்தில் அவர்களும் நம்மைப்போல்தான் இருந்திருப்பார்கள். நாம் செய்யும் சேட்டைகளையும் உதாசீனங்களையும் அவர்களும் செய்திருப்பார்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் வயதுக்கு ஏற்ற மரியாதையை அவர்கள் கொடுத்திருப்பார்களா என்று யோசிப்பதைவிட அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் உரிய மரியாதைய நாம் கொடுக்கலாமே.

பேருந்துப் பயணத்தின் போது நாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே ஒரு தள்ளாத வயதுடைய பெரியவர் வந்து நின்றால் அவருக்கு இடம்தர வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது. கைப்பிள்ளையுடன் வந்து நிற்கும் பெண்ணையே கண்டு கொள்ளாத நாம் பெரியவருக்கா இடமளிக்கப் போகிறோம்?

இதற்கும் மேலாக அழுக்கடைந்த உடையுடன் யாராவது பெரியவர் நம் அருகே வந்தமர்ந்தால் 'பெரியவரே... அந்தப் பக்கமெல்லாம் இடமிருக்குல்ல... அப்படி உக்கார்ரது... இங்க ஆள் வருது' என்று சொல்லி இடம்தர மறுப்பதுதான் நம் இயல்பு. ஒரு சில நேரங்களில் அவர் ஏறுமுன் படியில் வைத்து அவரை மறித்து 'வேற வண்டி பாரு... இதுல ஏறக்கூடாது' என்று கண்டக்டரே மறுப்பதும் உண்டு.

எத்தனை வீட்டில் பெற்றோர்கள் கவனிப்பில்லாமல் காலத்தை தள்ளுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இன்றைய காலகட்டத்தில் வேலை நிமித்தமாக வெளி ஊரிலோ, வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிலோ தங்கும் நாம் குடும்பத்துடன் இடம் பெயரும் போது சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கும் அவர்கள் அதன்பின் தனிமையில் சந்தோஷத்தை இழக்கிறார்கள் என்பதே உண்மை. பலர் பெற்றோருக்கு வேண்டிய எல்லாம் செய்து கொடுத்தாலும் முதுமையில் தனிமை கொடியதல்லவா?

எத்தனை பெரியவர்கள் சந்ததியிருந்தும் கவனிக்காத நிலையில் பிச்சைக்காரர்களாக தெருவில் திரிந்து மரிக்கிறார்கள். நம் குழந்தைகளை நாம் சீராட்டுவது போல்தானே அவர்களும் நம்மை சீராட்டி இருப்பார்கள். இன்று நாம் செய்வதை நாளை நம் பிள்ளை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்.

எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் நல்ல நிலையில் இருந்தும் தாயாரின் கடைசிக் காலத்தில் கவனிக்கவில்லை. ஆனால் அந்தத் தாய் இறந்தபோது தாரை தப்பட்டை என்று தடபுடலாக வழி அனுப்பினார். இந்த படாடோபம் எதற்கு? இருக்கும்போது அனுசரணையாக இருந்திருந்தால் அந்த தாயுள்ளம் சந்தோஷமாய் இருந்திருக்கும் அல்லவா?

இன்னொரு வீட்டில் நடந்தது கொடுமையான சம்பவம்... அந்தத் தாய்க்கு ஒரே மகன்... நல்ல குடும்பத்தில் பெண் எடுத்தார்கள். பையன் மாமனார் வீட்டுப்பக்கம் சாய்ந்துவிட அந்தத்தாய் தனித்துவிடப்பட்டாள். யாரும் கவனிக்காமல் தள்ளாத வயதில் தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அந்த அம்மாவின் நடமாட்டமும் இல்லை... வீடும் உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்க... சந்தேகப்பட்ட ஊரார் கதவை உடைத்துப்பார்க்க அங்கே அவர் பிணமாகக் கிடந்துள்ளார். எப்ப இறந்தார்...? எப்படி இறந்தார்...? என்பது யாருக்கும் தெரியாது... இறக்கும் தருவாயில் அந்த வயதான தாயின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமை வரமா...? சாபமா...? என்று சிந்திப்பதை விடுத்து அதை சாபமாக மாற்றாமல் சந்தோஷ மாற்ற வேண்டுமெனில் முதுமைக்கு அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்... ஆனால் அந்த அரவணைப்பைக் கொடுக்க ஏனோ நமக்கு மனம் இடம் தருவதில்லை. அவர்களை உதாசீனப்படுத்தும் நம்மை பார்த்து வளரும் நம் வாரிசு நாளை அதைத்தானே நமக்கும் செய்யும்... அப்ப 'நான் அப்படி வளர்த்தேன்... இப்படி வளர்த்தேன்னு புலம்பி என்ன லாபம் அடைய முடியும் சொல்லுங்கள்...

முதியவர்களை கேவலமாக பார்க்கும் நம் எண்ணத்தை கைவிட்டு அவர்களை அரவணைப்போம்... நாளைய உலகில் நாமும் அரவணைக்கப்ப்டுவோம்.

-'பரிவை' சே.குமார்

 படத்துக்கு நன்றி கூகிளுக்கு...

வியாழன், 28 அக்டோபர், 2010

மனசின் பக்கம் 28/10/2010

 சிவகெங்கை சோழபுரம் தந்த எங்கள் சித்தப்பு கருவேல நிழல் பா.ரா. அவர்கள் இல்லத் திருமண விழாவிற்கு சென்று வந்த சந்தோஷத்தைக் கொடுத்தது மாதவராஜ் அண்ணன் அவர்களின் பகிர்வும் போட்டோக்களும். அதில் அண்ணன் அவர்களை சித்தப்பா, தங்கையிடம் அறிமுகம் செய்யும்போது மாதவராஜ் என்றதாகவும் தங்கையும் அண்ணனை முன்பே அப்பா மூலம் அறிந்திருந்ததால் புன்சிரிப்புடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

வலையுலக நட்பு ஒரு பந்தமாக எப்படி இறுகிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும். மேலும் திருமணப் போட்டோக்களை அகநாழிகை வாசு அவர்களும், பாசத்துடன் கூடிய நெகிழ்ச்சியான பதிவை சிவாஜி சங்கர் அவர்களும் பகிர்ந்துள்ளனர்.

இவர்களைப் போல் பலர் அந்தத் திருமண நிகழ்வைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கவிதையில் வாழ்த்துச் சொன்ன தேனக்கா, ராகவன் அண்ணா எல்லோரிடமும் அன்புடன் பாசமும் பந்தமும் கலந்திருந்தது. நான் முன்பு ஒருமுறை எழுதியதுபோல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

*****

எனக்கு சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது படித்த அண்ணன் ஒருவர் புதுக்கோட்டையில் இருந்து பின்னூட்டமிட்டிருந்தார். எங்கள் ஆசானில் அரவணைப்பில் நாங்கள் எல்லாம் ஒன்றாக பாரதி விழாக்கள், கவியரங்கம் என எல்லாவற்றிலும் இணைந்திருந்தோம். அதை நினைவு கூர்ந்து என்னை நீங்கள் யார் என்று கேட்டிருந்தார்கள்.

பின்னர் நான் மின்னஞ்சலில் உங்களுடன் பழகியவன்தான் நான் என்பதையும் அந்த நாள் நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்த உடன் மிகவும் மகிழ்வுடன் பதிலனுப்பினார். எங்கள் நட்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூக்க இணையம் உதவியது.

*****


2010 – உலகின் தலை சிறந்த ஹீரோவாக ஒரு தமிழரை உருவாக்குவோம் வாருங்கள். நாம் திரை நாயகர்களுக்கு பாலாபிஷேகம், மதுக்குடம், பால்க்குடம் எல்லாம் எடுப்போம். அவர்கள் உண்மையில் ரியல் நாயகர்கள்தானா? கண்டிப்பாக இல்லை... இங்கே... மதுரையில் 29 வயதேயான இளைஞர், உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அதற்கு காரணம்... அவருடைய 21 வயதில் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைக்க, தனது பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வந்தவரின் வாழ்க்கை ஒரு மனநலம் குன்றியவர் மாற்றிவிட்டார். ஆம்... ஒரு மனநலம் குன்றிய வயதான மனிதர் அவரது மலத்தையே உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு அவரை சுத்தப்படுத்தியதுடன் அவருக்கு உணவும் வாங்கி ஊட்டியிருக்கிறார். இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது. அன்று முதல் மனநலம் குன்றியவர்களுக்க்காக இவர் தன் வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.

இந்த மனிதரின் பெயர் நாராயணன் கிருஷ்ணன். தலை சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு வலையில் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான கடைசி நாள் : 25/11/2010. எதற்காகவோ மணிக்கணக்கில் நம் நேரத்தைச் செலவழிக்கும் நாம் ஒரு வாக்கிற்காக சில நிமிடங்களை செலவழிக்கலாமே.

நான் என் வாக்கைப் பதிந்துவிட்டேன் நீங்களும் வாக்கைப் பதிய இங்கே சொடுக்குங்கள்.


இது குறித்த விரிவான இடுகைகள் நம் நண்பர்கள் பலரின் வலைப்பூவில் வந்துள்ளது. சகோதரி கௌசல்யா அவர்களின் பதிவைப் படிக்க....


*****
 சச்சின் மட்டும்தான் சதம் அடிப்பாரா... நாமளும் அடிச்சாச்சுல்ல... அதாங்க நம்ம நட்பு வட்டம் 100ஐ புடிச்சாச்சு... முகம் அறியாமல அம்மா, அப்பா, சித்தப்பா, சகோதரன், சகோத்ரி, நண்பன் என ஒரு அன்பு வளையத்துக்குள் நம்மை வரவைத்த வலைப்பூவில் என் உறவுகள் நான்கு வலையிலுமாக 200 தொட்டாலும் கடந்த சில மாதமாக வேலைப்பளூவின் காரணமாக மனசில் மட்டுமே எழுதுகிறேன். எனவே என் மனசைத் தொடரும் 100 உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... நன்றியும்... தொடருங்கள் தொடரட்டும் நம் நட்பு என்றும் நட்போடும் சந்தோஷத்தோடும்....

-'பரிவை' சே.குமார்.

சனி, 23 அக்டோபர், 2010

கவிதைகள் இரண்டு

அப்பன் புத்திடா உனக்கு
அடிக்கடி சொல்கிறார்
ஆறாப்பு சார்...

அவரு மகன் எப்பவும்
கணக்குல முட்டை
வாங்குறானே...
அது யார் புத்தி...?******

காலை கோயில் மணி
ஒலிக்குமுன்னே
கோலமிடுவாள் கோகிலா...

கோலம் எப்படியோ...
தூக்கக் கலக்கத்திலும்
சந்திரனாய் பிரகாசிக்கும்
அவள் முகம் அழகு...!

கோலமாவு நடமிடும்
கையின் மணிக்கட்டால்
அவள் தலைமுடியை
தள்ளிவிடும் பாங்கழகு..!

எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!

-'பரிவை' சே.குமார்.

போட்டோ அருளிய கூகிளுக்கு நன்றி

புதன், 20 அக்டோபர், 2010

மனசின் பக்கம் 20/10/2010

வணக்கங்க... என்ன எல்லாரும் நலமா? கடந்த வியாழக்கிழமை இரவு கட்டைவிரலுக்குப் பக்கத்தில் திடீரென வீங்கி, உயிர் போற வலிங்க... அடுத்த ரெண்டு நாளும் வார விடுமுறைங்கிறதால அறையில் இருந்து எங்கும் செல்லாமல் ஏகப்பட்ட பாட்டி வைத்தியங்கள். சுலுக்கா இருக்கும் என்று சிலரும்... இல்லப்பா இது நடக்கிறப்போ கால் லேசா மடிச்சுக்கிட்ட மாதிரி இருக்கு என்று சிலரும் சொல்ல ஊரிலிருந்து வந்த மருந்துகள் எல்லாம் தேய்த்து உருவி... சுடு தண்ணீர் ஒத்தரம் எல்லாம் கொடுத்தாலும் சில நேரம் வலி குறையும் பின்னர் மீண்டும் வலி எடுக்கும் நிலைதான் தொடர்ந்தது.

சனி இரவு வேதனை குறைந்தது போல் இருக்க ஞாயிறு காலை மெதுவாக நடந்து சென்று அலுவலக காரில் வேலை செய்யும் இடம் சென்றுவிட்டேன். ஆனால் அங்கு அமர்ந்து வேலை செய்யும் போது வேதனை விரிய ஆரம்பித்து... கால் வீக்கமும் வலி பொறுக்க முடியாத வேதனையைக் கொடுக்க ஆரம்பிக்க... எழுந்து நடக்க முடியாத நிலையாகிவிட்டது. அங்கு வந்த எங்கள் அலுவலக நண்பர் என் நிலை கண்டு அழைத்து வந்து அறையில் விட்டுச் சென்றார்.

மாலை மருத்துவரிடம் சென்றோம். அவர் மதுரைக்காரர், முன்னர் இருமுறை அண்ணனுக்காக அவரிடம் சென்றிருக்கிறோம்... ஞாபகம் வைத்துப் பேசினார். எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை எல்லாம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார். எல்லா அறிக்கைகளும் வந்த பிறகு அவர் பரிசோதித்து உடம்பில் யூரிக் ஆசிட் கூடியிருப்பதாகவும் அதனால் மூட்டுக்கு மூட்டு வலி வரும் என்றும் சொன்னார். சாதாரணமாக ஒருவர் உடலில் 6% இருக்க வேண்டிய யூரிக் ஆசிட் எனக்கு 10.6% இருக்கிறதாம்... அதை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று கூறி சிக்கன், மட்டன் என ஒரு லிஸ்டே கொடுத்து இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் அவர் எழுதிக் கொடுத்துள்ள மாத்திரைகள ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்.

திங்களன்று அலுவலகம் செல்லவில்லை. நேற்று வழக்கம் போல் அலுவலகம் வந்தேன். காலை வரும்போது சாதாரணமாக இருந்த கால் ஒரு மணி நேர பிரயாணம், அலுவலக வேலை என நேரம் செல்ல செல்ல வீக்கமும் வலியும் கூட ஆரம்பித்தது. மாலை மீண்டும் வலி அதிகரித்தது. இரவு மாத்திரை மருந்து எடுத்துவிட்டு படுக்க, காலையில் பரவாயில்லை. இன்று சற்று வலி குறைந்திருந்தாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை... இன்னும் நடக்கும் போது வலிக்கத்தான் செய்கிறது.

****

நான் ஒரு மாதத்திற்கு முன்னர் மனசின் பக்கத்தில் எனது அத்தை பேத்திக்கு கான்சர் என்றும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எழுதியிருந்தேன். நீங்களும் அந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தீர்கள். நமது பிரார்த்தனை பொய்த்துப் போனது. ஒரு வாரத்திற்கு முன்னர் 21/2 வயதே ஆன அந்தப் பிஞ்சு உயிர் நீத்தது.

இதில் கொடுமை என்னவென்றால் மதுரையில் பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்தக் குழந்தை முதல் நாள் இரவே இறந்திருக்கிறது... கண்களை மட்டும் கட்டி வைத்துவிட்டு மூக்கில் இரண்டு டியூப்பை சொருகி உயிர் இருக்கிறது என்று நாடகம் ஆடியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அடுத்த நாள் மதியம் எல்லாருக்குமே குழந்தை இறந்துவிட்டது என்பது தெரிந்தாலும் 95% உங்க குழந்தை மரணத்தை நோக்கி போயாச்சு... இருந்தாலும் கடைசி 1% வரை நாங்க முயற்சிப்போம் என்று வசனம் வேறு பேசியிருக்கிறார்கள். அன்று இரவு 11 மணிக்கு மேல்தான் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களது பில்தொகை முழுவதையும் கட்டியபிறகு குழந்தையை கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் எனது மச்சான் ஒருவரிடம் பேசியபோது அவர் கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்தது. 'ஐத்தான்... நான் குழந்தையை பார்த்தேன்... கண்ண கட்டி வச்சிருக்காங்க... ஒண்ணும் இல்ல ஐத்தான்... இருந்தாலும் இங்க ரெண்டு நாளைக்குள்ள ரெண்டு குழந்தைங்க இறந்திருப்பதாலயும் ஆள் நடமாட்டம் அதிகமா இருப்பதாலயும் நம்ம குழந்தையை கொடுத்தால் ஆஸ்பத்திரிக்கு பேர் கெட்டுப் போயிடுமுன்னு நினைக்கிறாங்க... ராத்திரித்தான் தருவாங்க என்றார்.

அவர் கூறியது போல்தான் நடந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் குறைந்த பிறகே கொடுத்திருக்கிறார்கள். தங்கள் மருத்துவமனையில் சம்பாதிக்க மட்டுமே நினைத்து மனிதாபிமானத்தை மரணிக்க வைத்துவிட்டு மருத்துவப்பணி செய்யும் இவர்களும் மனிதர்கள்தான்..

நான் அந்த குழந்தையின் தந்தையான என் அத்தை பையனிடம் நேற்றுதான் பேசினேன். அந்தத் தந்தையின் வருத்தத்தையும் அழுகையையும் என்னவென்று சொல்வது?

***

சச்சின்... கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். முதல் டெஸ்டில் லஷ்மண், இஷாந்த் வெற்றிக்கு அழைத்து சென்றால் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 200க்கு மேல் அடித்து தன்னுடன் விளையாடிய விஜயும் முதல் சதம் அடிக்க உறுதுணையாக இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர் விளாசி 50க்கு மேல் எடுத்து வெற்றிக்கனியை இந்தியாவை ருசிக்க வைத்தார். 14000 ரன் களைக் கடந்த முதல் வீரர் என்ற மற்றுமொரு மைல் கல்லை எட்டினார். அவரது சாதனைகளுக்கு எல்லையில்லை. சிங்கம் என்றும் சிங்கம்தான்.

***

சில நாட்களுக்கு முன்னர் ஜீ தொலைக்காட்சியில் 'சொல்லத் துடிக்குது மனசு' என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில் ஒரு ஏழை விவசாயியும் அவரது மகளும், மகனும் கலந்து கொண்டனர். அவர்களது பிரச்சினை என்னவென்றால் அந்தப் பெண்ணை பரம்பக்குடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை மலேசியாவில் இருக்கிறார். திருமணம் முடிந்து எட்டு வருஷமாச்சாம், திருமணம் முடிந்து மலேசியா சென்றவன் வரவேயில்லையாம். போனும் செய்வதில்லையாம். அந்த நிகழ்ச்சி மூலமாக போனில் அவனைத் தொடர்பு கொண்டால் மலாயில் பேசிவிட்டு ராங் நம்பர் என்று வைத்துவிட்டான்.

பின்னர் அவன் நண்பனிடம் பேசினால் அவன் இங்கு ஒரு செட்டப்பாத்தான் இருக்கான்... இந்தியாவுல இருந்து போன் வந்தாலே மலாயில் பேசி ராங் நம்பர் என்று சொல்லி வைத்துவிடுவான். நாங்களும் அவனை நாட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சிக்கிறோம். கண்டிப்பாக அவனை அனுப்பி வைப்போம். நீங்கள் செய்தி.. அது... இது என்று கலவரம் பண்ணினால் அவன் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றாலும் சென்றுவிடுவான் என்றார்கள்.

அப்புறம் நிகழ்ச்சியில் ஒரு சட்ட ஆலோசகர் அவர்களது பிரச்சினைக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். மனம் ஒத்து மணம் செய்தவன் மனம் மாறக் காரணம் என்ன? திருமணம் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வேறு எதாவது காரணமாக இருந்தாலோ ஏன் ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுக்க வேண்டும்? மாமனார் மாமியாரின் ஆதரவு இருந்தும்... கணவன் அவளை ஒதுக்க அவர்களுக்குள் என்ன பிரச்சினை? விவாகரத்து வேண்டாம் அவருடன் வாழவே ஆசைப்படுகிறேன் என்று கண்ணீருடன் சொல்லிய அந்தப் பெண்ணுக்கு வாழ்வு கிடைக்குமா?

***

காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர் எத்தனை பிரச்சினைகள்... போட்டிகள் முடிந்து இப்ப விசாரணைகள் வேகமாக நடந்து வந்தாலும் போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவித்து இந்தியாவை பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிற்க வைத்த நம் வீரர்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

சிறு பூக்கள் - 15/10/2010


தாவணியில் சிரித்தாய் நீ...
தனியே சிரித்தேன் நான்...
பைத்தியம் என்கிறார்கள்..!

-----------------------

 தூரத்துப் பச்சை
நீயாக வேண்டும்...
துடிக்கும் இதயம்...
காதலர் தினம்..!

-----------------------

ரீங்காரமிடும் வண்டுகளைத்
தேடின கண்கள்...
துண்டாகிக் கிடந்தது
வெட்டுப்பட்ட மரம்..!

----------------------- 

கரு மேகத்திற்கு
போட்டியாய்
மழை நேர தார்ச்சாலை..!

-----------------------

நீந்த மனமின்றி
கரையில் வாத்து...
நீருக்குள் மிதக்கும்
மடிந்த மீன்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

மன்னாதி மன்னன்: மருதிருவர்

நண்பர் வெறும்பய அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் மன்னாதி மன்னன் என்ற அரசர்கள் குறித்த தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அலுவலக வேலைப்பளுவின் காரணமாக வலைப்பூவில் அதிகம் எழுதமுடியாத சூழல்... அதனால் சில நாட்களாக வலைப்பூவில் இருந்து சில காலம் விலகியிருக்கலாம் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

இருந்தும் நண்பரின் அழைப்பை கிடப்பில் போடுவது நட்புக்கு அழகில்லை என்பதால் இன்று வேலையில் சில மணிகள் இடைவெளி கிடைத்ததால் விக்கிப்பீடியா (விக்கிப்பீடியாவை தவிர்க்கச் சொல்லியிருந்தார் நண்பர்... இருந்தும் வரலாற்று உண்மைகளை பார்க்க அதை நாடாமல் இருக்க முடியவில்லை) மற்றும் நான் படித்த புத்தகங்களின் உதவியுடன் எழுதியாச்சு.

உண்மையை சொன்னா பத்தாப்பு வரைக்கும் வரலாறு படிச்சது... எம்புட்டு நாளாச்சு... இதுல நாமளா எழுதுறதுங்கிறது என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஊரில் இருந்தாலாவது படித்த அறிஞர்களிடம் கேட்டு எழுதியிருக்கலாம். பாலைவன பூமியில் எங்கே போவது.... அதனால் விக்கிப்பீடியா உதவியுடன் மன்னாதி மன்னன்களைப் பற்றி எழுதியாச்சு... காப்பியடிச்சாலும் கலந்து அடிச்சிருக்கோமுன்னு நண்பர் வெறும்பய அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மெய்க்காப்பாளராக இருந்து சிவகெங்கை சீமையின் மன்னரான மருது சகோதரர்கள். மருதிருவரின் வீரத்தையும் மக்கள் மீது கொண்ட பாசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

பாண்டியர்கள் , நாயக்கர்கள் ஆட்சி செய்த சிவகெங்கை சீமை, அவர்களைத் தொடர்ந்து நவாப் ஆட்சியின் கீழ் இருந்தது. 1604ஆம் ஆண்டு சேதுபதிகள் கட்டுப்பாட்டில் வந்தாலும் நாயக்கர்களுக்கும், நவாப்புக்க்களுக்கும் கப்பம் கட்டி அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறார்கள்.

1674 முதல் 1710 வரை சிவகெங்கை சீமையை ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதிக்குப் பின்னர் அவரது மகன் விஜயரகுநாத சேதுபதி தனது மகள் அகிலாண்டேஸ்வரியை சசிவர்ணத்தேவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.அதன் பின்னர்தான் சிவகெங்கை சீமையில் மாற்றங்கள் வந்தன எனலாம்.ஆம் சேது நாட்டில் (தற்போதைய ராமநாதபுரம்) மூன்றில் ஒரு பங்கு பகுதியை சிவகெங்கை சீமையுடன் சேர்த்ததைத் தொடர்ந்து தனி ஆட்சியின் கீழ் வந்தது.

சசிவர்ணருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் பிள்ளை பிறக்கவில்லை. அதனால் சசிவர்ணரின் மற்றொரு மனைவியான பூதக்க நாச்சியாருக்கு பிறந்த முத்துவடுக நாதர் தந்தைக்குப் பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவருக்கு மெய்க்காப்பளராக வந்தவர்கள்தான் பெரிய மருது, சின்ன மருது என்ற மருதிருவர். இவர்கள் பிறந்தது அருப்புக் கோட்டை பக்கம் என்றாலும் அவர்களது தாயார் பிறந்தது சிவகெங்கை பக்கம் எனவே அவர்களுக்கு பரிச்சயப்பட்ட பூமிதான் அது.

ஆங்கிலேயர்களுடன் ஆற்காடு நவாப்பும் இணைந்து சூழ்ச்சியால் முத்துவடுகரை வீழ்த்திய பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் முத்து வடுகரின் மனைவி வேலு நாச்சியார். முத்து வடுகு மற்றும் வேலு நாச்சியாரின் ஆட்சியில் பெரிய மருது தலைமை அமைச்சராகவும் சின்ன மருது படைத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்கள். முத்து வடுகர் இவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாரோ அதே நம்பிக்கையை வேலு நாச்சியாரும் கொண்டிருந்தார். கால ஓட்டத்தில் பெரிய மருதுவும் வேலு நாச்சியாரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எல்லா நிகழ்வுகளிலும் பெரிய மருது மன்னராகவே அங்கீகரிக்கப்பட்டார்.

மருதிருவர் செய்த கோவில் திருப்பணிகள் ஏராளம்... அதில் குறிப்பிடத்தக்கது அவர்களிம் இரண்டாம் தலைநகர் என்றழைக்கப்பட்ட காளையார் கோவிலில் கட்டிய காளீஸ்வரர் கோவில் திருப்பணிதான். சுவாமி சன்னதி வாசலில் இருக்கும் 157 அடி உயர கோபுரம் பெரிய மருதுவின் தீவிர முயற்சியால் கட்டப்பட்டது. பாண்டியர்கள் கால வழக்கப்படி பெரிய கோபுரம் கட்டியதால் மருதிருவர் அதன்பின் மருது பாண்டியர்கள் என்றழைக்கப்பட்டனர்.

சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் கண்டதேவி கோவிலின் கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் காளையார் கோவில் கோபுரமும்... காளையார் கோவில் கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரமும் தெரியும் என்று சொல்வார்கள். இதற்குச் சான்றாக,

"மதுரக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி"
                                                     என்ற நாட்டுப்பாடல் உண்டு.

செட்டிநாட்டுக் கவி கண்ணதாசன் எடுத்த 'சிவகங்கைச் சீமை' என்ற படத்ததில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய கால கட்டத்தில் சிவகெங்கை சீமையைச் சுற்றி பெருங்காடாக இருந்த காரணத்தால் ஒரு கோபுரத்தில் இருந்து மற்றொரு கோபுரத்தை பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது அது சாத்தியமா என்பது தெரியவில்லை.

இப்போது இருக்கும் நவீன வசதிகளோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் மானமதுரைக்கு அருகில் செங்கல் சூளை உருவாக்கி அங்கிருந்து காளையார் கோவிலுக்கு ( ஏறத்தாழ 13 மைல்கள்) பல்லாயிரக் கணக்கான மக்களை வரிசையாக நிற்க வைத்து கற்களைக் கொண்டு வந்து கோவில் கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

சின்ன மருது சிறுவயல் அரண்மனையில் இருந்த போதிலும் படைத்தளபதி என்பதால் காளையார்கோவிலில் இருந்த படைத்தளத்தில் பெரும்பாலான நேரங்களை செலவிட்டிருக்கிறார். இவர்களது படை ஆங்கிலேயரின் படைக்கு ஈடு கொடுக்கக் கூடியாதாக, சரிநிகரானதாக இருந்திருக்கிறது.

ஆங்கிலேயருக்கும் மருது பாண்டியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டன. படையுத்திகளில் வல்லவரான சின்ன மருது தன நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி நாவல்தீவின் விடுதலைக்காகவும் பாடுபட்டார். வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையில் தீவிர பிடிப்புடன் இருந்த சின்ன மருது அதற்காக திப்பு சுல்தான், கேரள குறுநில மன்னர்கள், கன்னட அரசர்கள், மராட்டிய தலைவர்கள், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பாளையக்காரர்கள், போராளிக் கழக அங்கத்தினர் என எல்லாரையும் ஒருங்கிணைத்து ஒரு எதிர்ப்புக் குழுவையே உருவாக்கியிருக்கிறார். இந்தக் குழுவின் கூட்டங்கள் திண்டுக்கல், திருப்பாச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளன. இந்தக் குழுவின் தலைவரான சின்ன மருதுவின் ஆணைப்படி அனைவரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

இவர்களது வெள்ளையர் எதிர்ப்பு குறித்த எழுச்சி நோட்டீஸ் 1801ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவில் மதில் சுவடில் ஒட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இதை அறிந்த ஆங்கில அரசு தங்களுக்கு எதிராக உருவாகியிருக்கும் எதிர்ப்புக்குழுவை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்தது. அப்போது சென்னையை ஆண்ட ராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவின் அரசு, 1801ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி இதற்கான அரசாணையை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆரம்பித்து எல்லா இடங்களையும் அழித்த ஆங்கிலப்படை மைசூரையும் வீழ்த்தி, முடிவில் சிவகெங்கை சீமைக்கு வந்தது.

ஏறத்தாழ எட்டுமாதங்கள் சிவகெங்கை சீமையை முற்றுகையிட்டு சின்னச்சின்ன வெற்றிகளைப் பெற்ற ஆங்கிலப் படைகளால் முழுமையான வெற்றியை தனதாக்கிக் கொள்ளமுடியவில்லை. இந்தியாவில் அவர்கள் நடத்திய போரில் சிவகெங்கை சீமையில் மரித்தது போல் அவர்களது வீரர்கள் எங்கும் மரித்ததில்லையாம். அவ்வளவு பேரை காவு வாங்கியிருக்கிறது சின்ன மருதுவின் தலைமையிலான வீரப்படை.

சிவகெங்கை சீமையை கைப்பற்றினால்தான் சென்னை கோட்டையில் வாசம் செய்வது உறுதியாகும் என்ற நிலைக்கு வந்த ஆங்கிலப்படை காளையார்கோவிலை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற முடிவில் தீவிரமானது. கர்னல் அக்னியூ தலைமையில் சிவகெங்கை சீமையை சுற்றி 40 மைல் சுற்றளவுக்கு விரிந்து இருந்த காட்டை சுற்றி வளைத்தது. அந்த முயற்சியும் பலிக்கவில்லை.

காளீஸ்வரர் கோவில் கோபுரத்தை பீரங்கி கொண்டு தகர்க்க இருப்பதாக மருதிருவருக்கு செய்திகள் வந்தன. இதுபோல் கோவில் தகர்ப்பு சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த முடிவுகளையும் அசைபோட்ட சின்ன மருதும் பெரிய மருதும் இரவோடு இரவாக கிட்டத்தட்ட 78000 பேரை உள்ளடக்கிய தங்களது படையையும் தளவாடங்களையும் காளையார்கோவிலை விட்டு வெளியேற்றினர்.

அந்த சமயத்தில் வெள்ளையனுக்கு உதவிய குள்ள நரியால் சுரங்கப் பாதையை அறிந்து அதன் வழியாக செப்டெம்பர் 30ஆம் தேதி இரவு, அக்னியூ காளையார் கோவில் எல்லைக்குள் நுழைந்தான்.

அக்டோபர் ஒன்றாம் தேதி உள்ளே வந்த ஆங்கிலப்படைக்கு மருது சகோதரர்கள் இல்லாத காளையார் கோவிலில் எந்த எதிர்ப்பும் இல்லை. பீரங்கி வைத்து வெடிக்கவோ துப்பாக்கி சூடு நடத்தவோ வேண்டிய அவசியமும் அக்னியூ தலைமையிலான ஆங்கிலப்படைக்கு ஏற்படவில்லை. அவர்கள் தங்களது கொடியை கோட்டை வாசலில் ஏற்றவில்லை... கோபுர உச்சியில் ஏற்றினார்கள்.

பெரும் வலிமையுடன் இருந்த மருது சகோதரர்கள் கோவிலுக்காக தங்களது போராட்டத்தை குறைத்து நகரைவிட்டு வெளியேறியது வெள்ளையர்களை இந்தியாவில் மேலும் 146 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திவிட்டது என்றே சொல்லலாம். அதன்பின் போராளிகளின் போராட்டத்தில் தொய்வு ஏற்பட்டதால் போர் முடிவுக்கு வந்தது.

காளையார் கோவிலை கையகப்படுத்திய அக்னியு அக்டோபர் 11ஆம் தேதி சிவகெங்கை காடுகளை அழிக்க உத்தரவிட்டான். காடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்ட சிவகெங்கை சீமை வறண்டு செங்காட்டுப்பூமியாய் காட்சியளித்தது... இன்றும் அதே வறண்ட நிலைதான் தொடர்கிறது என்பதே உண்மை.

நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அதீத பாசம் வைத்திருந்த மருதிருவரும் அந்தப் பகுதியிலேயே மறைந்து வாழ்ந்தனர். அவர்களின் தலைமறைவு வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவர்களின் மெய்க்காப்பாளன் கருத்தன் காட்டிக்கொடுக்க, ஆங்கிலேயருடன் ஏற்பட்ட மோதலில் காலில் பாய்ந்த குண்டுடன் கைது செய்யப்பட்ட சின்ன மருதும் அதற்கு அடுத்த நாளில் கைது செய்யப்பட்ட பெரிய மருதும் அக்டோபர் 24ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலப்பட்டனர்.

சிவகெங்கை மாவட்டத்தில் மருதிருவர் பயன்படுத்திய கோட்டைகள் சிதிலமடைந்திருந்தாலும் இன்றும் வரலாற்றுச் சின்னங்களாய் காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வரும் வழியில் இருக்கும் சங்கரப்பதி கோட்டையில் (விசுவின் சிதம்பர ரகசியம் படத்தில் இந்த் கோட்டை காட்டப்படும்) மருது சகோதரர்கள் காளையார் கோவிலில் இருந்து ரகசியமாய் வருவதற்காக சுரங்கப்பாதை வைத்திருந்தார்கள் என்று சொல்வார்கள். மேலும் வெள்ளையர்களிடமிருந்து வீரபாண்டிய கட்டப்பொம்மனை காப்பாற்ற இங்கு மறைத்து வைத்ததாகவும் கதைகள் உண்டு.

இந்திய விடுதலைப் போரில் பெரும்பங்கு வகித்த மருதிருவரின் வரலாறு சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

நீங்க தொடருங்கன்னு யாரையும் மாட்டிவிட மனசில்லை... ஆதாலால் மக்களே என் மனசைத் தொடரும் 93 பேரில் இதுவரை எழுதிய சில நண்பர்கள் தவிர்த்து அனைவரும் இதைத் தொடரும்படி வெத்தலை பாக்கு வைத்து (சுண்ணாம்பு வைக்காமல்) கேட்டுக் கொள்கிறேன்.

மருதிருவரின் வீர வரலாற்றைப் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பக வெளியீட்டில் திரு. மீ.மனோகரன் அவர்கள் எழுதிய 'மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801' என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

வரலாற்று உண்மைகளை வழங்கிய விக்கிபீடியாவுக்கும் அருமையான படங்களைத் தந்த கூகிளுக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்

வியாழன், 7 அக்டோபர், 2010

ரன்... எந்திரன்..!

அலுவலக வேலைப்பளூவின் காரணமாக உங்கள் வலைப்பூக்களை பார்க்க முடியவில்லை நண்பர்களே... இருந்தும் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்துக்களை வழங்கிவரும் உங்களுக்கு நன்றி. 


இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவு நான்கரை நாட்களில் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்து தவித்த இந்திய அணி ஐந்தாவது நாள் தாக்குப்பிடிக்குமா என்பதே சந்தேகமா இருந்தது. ஒரே ஆறுதல் சச்சின் களத்தில் இருந்ததும் லெட்சுமணன், தோனி ஆடுவார்கள் என்ற நம்பிக்கையும் தான்.

ஐந்தாம் நாள் சச்சின் 38 ரன்னிலும் இரவுக்க்காவலனாக வந்த ஜாகீர்கான் 10 ரன்னிலும் வெளியேற வெற்றி பெறுமா இந்தியா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குள்ளும் புயலாய் மையம் கொண்டது என்பதே உண்மை. முதுகுவலியால் தவித்த லெட்சுமணன் நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண காரியமல்ல என்ற நிலையில் தோனியும் வந்த வேகத்தில் திரும்ப மொத்தப்பளுவும் லெட்சுமணன் தலையில் விழுந்தது.

சும்மா சொல்லக்கூடாது அவருக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த உயர்ந்த மனிதன் இஷாந்த் சர்மா ரசிகர்கள் மனதிலும் உயர்ந்து விட்டார். எந்தப் பந்தை அடிக்கலாம் எதை அடிக்கக்கூடாது என்று ஒரு கை தேர்ந்த பேட்ஸ்மேன் போல் நிதானமாகவும் அதே சமயத்தில் லட்சுமணனின் விருப்பத்திற்கிணங்கவும் விளையாடினார்.

இந்த வெற்றியில் இஷாந்தின் 31 ரன் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அந்த ரன்னை அவர் எடுக்காமல் வந்து சென்றிருந்தால் கடைசி விக்கெட்டுக்கு லட்சுமணனால் வெற்றி கோட்டை தொட்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

லட்சுமணன்... எல்லாராலும் 'கட்டை மன்னன்' என்று விமர்சிக்கப்பட்டாலும் டெஸ்ட் அரங்கில் வெற்றி நாயகன் அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு அவர் எப்பவும் சிம்ம சொப்பனம்தான். ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு டிராவிட், டெண்டுல்கரை வெளியேற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட லெட்சுமணனை வெளியேற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்டீவ் வாக், பாண்டிங் என எல்லா ஆஸ்திரேலிய கேப்டன்களுக்கும் சிம்ம சொப்பனம் இவர்.

லெட்சுமணன் மிகவும் நிதானமான மனிதர். எல்லாரிடமும் அன்பாக பழகக் கூடியவர். பெரும்பாலும் இசையை ரசிப்பவர். கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் ஓய்வறையில் பாடல் கேட்டுக் கொண்டு ஜாலியாக அமர்ந்திருக்கும் லெட்சுமணனை பார்த்திருப்பீர்கள். இதுதான் அவரின் சுபாவம்... மற்றவர்களுடன் அதிகம் உரையாடுவதும் கிடையாது... தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபம் கொள்வதும் இல்லை.

நேற்றைய போட்டியின் போது அவருடன் கடைசி விக்கெட்டுக்கு விளையாட வந்த ஓஜாவை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழலில் பதட்டமில்லாமல் விளையாடினார்... வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது ஓஜா செய்த தவறுக்காக அவரை மிகவும் கோபமாக திட்டிவிட்டார். ஆனால் உடனே அவரிடம் சென்று பேசியதுடன் தனது கோபத்துக்கான மன்னிப்பும் கேட்டுக் கொண்டாராம். அவரின் இந்த செயல் ஓஜாவுக்கு கண்டிப்பாக பதட்டமில்லாத தருணங்களைக் கொடுத்திருக்கும். வெற்றி பெற்றதும் தனது சக நண்பர்களைப் பார்த்து கைகளை உயர்த்தி சந்தோஷப்பட்ட லெட்சுமணனுக்கு முதுகுவலியின் வேதனை முகத்தில் மறைந்து சந்தோஷ ரேகைகள் சம்மணமிட்டிருந்தன... அன்றைய போட்டியில் சச்சின் இஷாந்த் விளையாடியிருந்தாலும் வலியை வெற்றியாக்கிய எந்திரன் ஒருவரே... அவர் தி கிரேட் லெட்சுமணன்.


எந்திரன் சுரம் இப்போது ஓயாது என்பது எல்லாரும் அறிந்ததே...எந்திரன் குறித்து பதிவுகள் தினம் தினம் வருகின்றன, நான் பதிவு எழுதும் எண்ணத்தில் இல்லை இருந்தும் சன் டிவியின் அட்டூழியமே எந்திரன் குறித்து எழுதத் தூண்டியது.

எங்கும் எந்திரன்... எதிலும் எந்திரன்... அதிலும் குறிப்பாக சன் டிவியைப் பொருத்தவரை எந்திரன் என்பது ஒரு சாதாரண சினிமா அல்ல தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெறும் முக்கிய சம்பவம் என்ற எண்ணத்தை அவர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஆல விருட்சமாய் வளரச் செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் பண்ணும் அலும்பு தாங்கவில்லை. செய்திகளில் எந்திரனுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்குவது கேவலத்தின் உச்சம் என்றே சொல்லலாம். நாட்டில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

அயோத்தி தீர்ப்பு, காமன்வெல்த் போட்டிகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி எங்கும் ஆக்கிரமித்திருக்கிறது எந்திரன் புயல். சன் பிக்ஸர்ஸின் படம்தான்... அதற்காக அவர்கள் தனியாக நேரம் ஒதுக்கி என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் யாரும் கேட்க மாட்டார்கள். தினமும் செய்தியில் போடுவதென்பது மீடியா அவர்களது என்ற எகத்தாளமும் எக்காளமும்தான்.... என்னத்தை சொல்வது?

ரஜினி என்ற மனித நேயத்தின் படம்தான் எந்திரன்... ரஜினி என்ற இந்த மந்திரச்சொல்லுக்கு மயங்கிக் கிடக்கும் ரசிகர்கள் ஏராளம் என்பதில் சந்தேகம் இல்லை. ரஜினிக்காக படம் பார்க்கும் நண்பர்கள் கூட இந்த விளம்பரங்களையும் படத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் காசாக்கும் சன் டிவியின் செயல்களை விரும்பவில்லை. ஆஹா... ஒஹோவென்று புகழ்வோர் மத்தியில் தினமணியின் 'எந்திரனும் ஏகாதிபத்தியமும்' என்ற கட்டுரை சாட்டையடி... தைரியமான கட்டுரை. தினமணிக்கும் இந்த கட்டுரையை எழுதியவருக்கும் அதை தைரியமாக பிரசுரிக்க வைத்த ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்களுக்கும் பூங்கொத்தே கொடுக்கலாம். இந்த கட்டுரைக்கு கண்டிப்பாக பல வடிவங்களில் எதிர்ப்பு வந்திருக்கும்... உண்மையை சொல்வதில் தவறு இல்லை... அதற்காக வருத்தப்படவும் தேவையில்லை.

தனது மகளின் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்காத ரஜினி, 'எல்லாரும் சென்னைக்கு வந்தால் போக்குவரத்து சிக்கல் வரும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவேதான் ரசிகர்களாகிய உங்களை அழைக்கவில்லை' என்று கூறியிருந்ததை எல்லாரும் அறிவோம். அப்படிப்பட்டவர் தனது பட வெளியீட்டின் போது ரசிகர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பெண்கள் முளைப்பாரி தூக்கியும் வந்து பாலாபிஷேகம் செய்த போதோ, தமிழகத்தில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் வருமுன்னர் பெயர் போட்டுவிட்டதால் அடித்து உதைத்து ரகளை செய்த போதோ, நிறைய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட போதோ எதுவும் சொல்லவில்லையே ஏன்? யாராவது யோசித்தார்களா?

கோடிகள் செலவில் பல் கோடிகளை சம்பாதிக்கத் துடிக்கும் கூட்டத்தில் அவரும் ஒருவர் அதுதான் காரணம். மேலும் சில நாட்களுக்கு முன்னர் சன் டிவி எந்திரன் விளம்பரத்தில் 'ஜஸ்வர்யாவை பார்த்ததும் பாடி ஸ்ட்ராங்க இருக்கு ஆனா மைன்ட் ஆப்பாயிடுச்சின்னு சொன்னாருல்ல...' இன்னும் அப்படித்தான் இருக்கோ... இல்லை சன் குரூப் அவரை ஆப் செய்து வச்சிருக்கோ?

இவர்களின் கோடிகள் ஆட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிறிய தயாரிப்பாளர்கள்தான். அவர்கள் எடுத்த படங்களை தற்போது வெளியிட முடியாத சூழல். அப்படியே வெளியிட்டாலும் எந்திரன் என்ற ராட்சஸ பலூனுக்கு முன்னால் கிராமத்து திருவிழாவில் விற்கும் ஐந்து ரூபாய் பலூன் போலாகிவிடும். மேலும் அவர்கள் போட்ட காசும் போகும்... அவர்களின் எதிர்கால கனவும் தகரும்... எத்தனையோ புதிய இயக்குநர்கள் கஷ்டப்பட்டு நல்ல கதையை படமாக்கி இருப்பார்கள்... நாளை நாமும் ஷங்கராவோம் என்ற கனவும் மாயையாகும்.

 இன்னும் எந்திரன் பாடல்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதைவிட ஒளிபரப்பப்படவில்லை என்பதே உண்மை.. 'உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எந்திரன் பாடல்கள்...' என்ற வசனம் இன்னும் வரவில்லை... இந்த முறை ஒரு பாடலுக்கு ஒரு நாள் என திட்டமிட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ரஜினி நல்ல மனிதர்... நல்ல நடிகர்... அவரின் எந்திரன் வெற்றிப் படமாக அமைந்ததில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சந்தோஷமே... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படமாக அமைந்ததில் தமிழர்களுக்குப் பெருமைதான். நம்ம பெருமையை நாமே பேசாமல் அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சன் குழுமம் பார்க்கட்டும்.

இதற்கு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் வருத்தப்படப் போவதில்லை. மனதில் பட்டதை சொல்வதில் 'மனசு'க்கு சந்தோஷமே...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் : நன்றி Google Images

திங்கள், 4 அக்டோபர், 2010

கிராமத்து நினைவுகள்: தேரோட்டம்

 
 கண்டதேவி கோவிலும் தேரும்
 
எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் கண்டதேவியில் வருடா வருடம் ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.

நாங்கள் படிக்கும் காலத்தில் தேரோட்டம் என்பது எங்களுக்கெல்லாம் குதூகலத்தை வரவழைத்த ஒரு அற்புதமான திருவிழா. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை மக்களும் மாட்டு வண்டியிலும்... காரிலும்... நடந்தும்... வந்து கூடி களிக்கும் ஒரு இனிய திருவிழா. அந்த தினத்தில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தேரோட்டத்துக்கு காப்புக்கட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். முதல் எட்டு நாட்கள் வம்சம் படத்தின் கிளைமாக்சில் காட்டப்படுவது போல் தினம் ஒரு மண்டகப்படியும் அதனைத் தொடர்ந்து நாடகம் அல்லது திரைப்படம் என எதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும்.எங்கள் ஊரில் இருந்து பத்து நிமிடத்திற்குள் வந்துவிடலாம்... கலை நிகழ்ச்சி பார்ப்பதற்காக அம்மாவிடம் அழுது சம்மதம் வாங்கி கூட்டமாய் கிளம்பி வெளிச்சமில்லாத அந்த இருட்டில் நடந்து வருவோம். சில சமயங்களில் அம்மாவும் வருவதுண்டு. அதிகம் படம் பார்க்க மட்டுமே செல்வோம், நாடகம் பார்க்க நாட்டமிருப்பதில்லை. கம்பை ஊண்டி திரைகட்டி இரண்டு படம் ஓட்டப்படும். முதலில் படம் சரியாக வருகிறதா என்பதை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆரின் பாடலான 'கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்...' என்ற பாடல் போடுவார்கள்.

சில சமயங்களில் நாங்கள் நடந்து வரும்போதே ஆரம்பித்து விடுவார்கள். டவுசரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்து இரவு முழுவதும் விழித்திருந்து படத்தை பார்த்து அதிகாலையில் சாமி புறப்பாடு பார்த்து கிளம்பிச் செல்வோம். அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் போய் தூங்கியதும் உண்டு.... போகாமல் மட்டம் போட்டதும் உண்டு.

இடையில் கதவடை என்ற நிகழ்ச்சியும் பாரி வேட்டை என்ற நிகழ்ச்சியும் நடைபெறும் அப்பொழுதெல்லாம் தவறாமல் சென்று விடுவோம். அதற்காக பள்ளியில் கடைசி பாடவேளை அனுமதி பெற்று வீட்டுக்கு வந்து வேகவேகமாக கிளம்பிச் செல்வோம். வரும் போது பொரி உருண்டை தின்றபடி பேசிக்கொண்டு வருவோம்.

பெரிய தேர் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னர் கம்புகள் கட்டும் பணி ஆரம்பித்து தேரோட்டத்துக்கு முதல்நாள் அலங்கரித்து அழகாக நிற்கும். நாங்கள் பள்ளிவிட்டு வரும்போது எங்கள் கண்மாய்கரையில் ஏறியதும் மரங்களுக்கு இடையே தூரத்தில் காற்றில் பறக்கும் கொடியுடன் தனது உச்சியை காட்டிக் கொண்டிருக்கும் தேரைப் பார்த்து 'டேய் தேரை கட்டிட்டாங்கடா...' என்றும் 'அங்க பாருடா... பெரிய தேரு...' என்று கூவியும் சந்தோஷித்து மகிழ்வோம்.

தேரோட்டத்தன்று பள்ளிக்கெல்லாம் விடுமுறை... வீட்டில் சொந்த பந்தங்களுச் சொல்லி கிடாயோ, கோழியோ அறுத்து விருந்து வைத்து சந்தோஷமாக சாப்பிட்டு மாலை மூணு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விடுவோம். கூட்டம் அலை மோதும்... போனதும் தேர் அருகில் செல்லாமல் எங்க சொந்தங்கள் வந்து நிற்கும் இடங்களைத் தேடிச் செல்வோம். அஞ்சோ பத்தோ தேரோட்டக் காசு கிடைக்கும் அதை விட மனசு வருமா அதற்காகத்தான். அதை வாங்கி மாம்பழமோ சுவிட்டோ வாங்கி சுவைக்கலாம் அல்லவா?

தேர் நல்ல உயரத்தில் அழகாய் அலங்கரிக்கப்பட்டு முன்னர் பொம்மைக் குதிரைகளைத் தாங்கி நிற்கும். அதன் மேலே மேளக்காரர்கள், ஐயர்கள், முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் மேலே ஏறுவதற்கு தோதாக தேரின் நிலை அருகே மாடிப்படி போல் கட்டி உள்ளார்கள்.

தேரின் முன்னே நான்கு வடங்கள் நீளமாக போடப்பட்டிருக்கும் பத்துப் பதினைந்து கிராமங்கள் இணைந்து ஒரு நாடு என்று அழைக்கப்படும். நான்கு நாட்டாரும் வந்ததும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு தேர் இழுக்க ஆயத்தமாவார்கள். தேருக்கு முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் சப்பரத்தை சிறுவர்கள் இழுக்க, அது முதலில் செல்லும் அதற்கு முள்ளுப் பொறக்கி சாமி என்று பெயர். அதன் பின் தேர் நான்கு நாட்டார்களால் இழுக்கப்படும் அப்போது அது குலுங்கி... அசைந்து ஓடத்துவங்கும் அந்த அழகை பார்த்து ரசித்தலே எங்களுக்கு பரம சந்தோஷம். பின்னர் சிறிது தூரத்திற்கு ஒருமுறை கட்டை போட்டு நிறுத்தி தீப ஆராதனை பார்க்கப்படும். அதன் பிறகு 'ஊய்' என்ற சத்தத்துடன் தேங்காய்ப்பூ துண்டுகள் சுழல மீண்டும் இழுக்கப்படும்.

பெரிய தேர் வீதியின் முனையில் திரும்பியதும் சின்னத் தேர் என்று அழைக்கப்பட்ட அம்மன் தேர் இழுக்கப்படும். இது கடகடவென்று ஓடிவரும். இதுவும் இடையில் நிறுத்தப்பட்டு தீப ஆராதனை பார்க்கப்படும். நான்கு வீதிகளிலும் சுற்றி வரும் தேரைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருப்பர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நான்கு வீதிகளில் முதல் வீதியின் முடிவில் ரைஸ்மில் அருகில் வரும் போது கவனமாக திருப்பாவிட்டால் ரோட்டை விட்டு இறங்கிவிடும். பின்னர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் ரோட்டில் ஏற்றப்பட்டு வலம் வரும். சில சமயங்களில் மூன்றாவது வீதியின் முடிவில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் பொட்டலில் இறங்குவதுடன் பதுங்கியும் மின்சாரவயரில் மாட்டிக் கொண்டும் நிற்கும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் பலன் தராமல் போகவே, அவசரமாக நாட்டார்கள் கூடி மறுநாள் வந்து இழுப்பது என்று முடிவு செய்து செல்வார்கள். அடுத்த நாள் வந்து மீண்டும் இழுத்து அது கிளம்பிய இடத்தில் நிறுத்திய நாட்களெல்லாம் உண்டு.

தேர் நல்லபடியாக வந்து அதன் நிலையில் (நிலக்குத்துதல் என்று வட்டார வழக்கு) நின்றதும்தான் கூட்டம் நிம்மதியாய் கிளம்பும். ஊருக்குள் சென்றதும் கோவிலுக்கு வரமுடியாமல் இருக்கும் பெரியோரும் பெண்களும் கேட்கும் முதல் கேள்வி 'தேர் நிலக்குத்திடுச்சா' என்பதே. தேர் நிலைக்கு வந்ததும் மேலிருந்து மாம்பழம் கூடை கூடையாக வீசப்படும். அதை எடுத்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகுமெனற கதையும் உண்டு. மாம்பழங்கள், பொறி உருண்டை என எல்லாம் வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவோம்.

தேரோட்டம் முடிந்த அடுத்த நாள் நடத்தப்படும் சத்தார்னம் என்ற நிழ்வுடன் தேரோட்ட திருவிழா இனிதே முடியும்

பின்னர் கால மாற்றத்தில் ரோடுகள் விஸ்தாரமாக போடப்பட்டதால் தேர் விரைவாக நிலையை அடைந்தது. வடங்கள் திரித்து கயிருபோல் பயன்படுத்திய காலம் போய் நான்கு வடங்களும் சங்கிலியாய் மாறின.


ஆனால் மனிதர்களுக்குள் சமாதானம் தழைக்காததாலும் அரசியல் அல்லக்கைகளின் ஆதிக்கத்தாலும் தேரோட்டம் நின்று சில காலமாகிவிட்டது. அரசியல் மாற்றங்களின் போது இடையில் சில காலம் நடத்தப்பட்ட தேரோட்டம் இப்போது நடத்த முடியாத நிலையில்...

பிரச்சனைகளை தீர்க்க முடியாத சிவகங்கை சமாஸ்தான ராணியார் அவர்கள் கும்பாவிஷேகத்திற்கு கோவிலை தயார் படுத்தச் சொல்லிவிட்டார்கள். இரண்டு வருடமாக வர்ணம் பூசும் பணி நடப்பதால் தேரோட்ட பதற்றமோ, போலீஸ் குவிப்போ இல்லாமல் இருக்கின்றது.

அடுத்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா என்பதோ.... இனிமேல் நடக்குமா என்பதோ தெரியாமல் அப்பகுதி மக்கள் தவிப்பில் இருக்கிறார்கள். இனிமேல் மீண்டும் நடத்தப்பட்டாலும் எங்களுக்கு சிறுவயதில் கிடைத்த சந்தோஷம் இன்றைய சிறுவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காந்தி ஜெயந்தி


நாளக்கி லீவு...
பின்பக்கமா வா...
எப்பவும் போல
எல்லாங் கிடைக்கும்
விலக்கி மேல
ரெண்டு மூணு
கொடுக்கணும்...
குடிமகன்களிடம்
மறக்காமல் சொன்னான்
டாஸ்மாக் ஊழியன்..!

-'பரிவை' சே.குமார்.