மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 மார்ச், 2015

கூடிழந்த பறவையாய்...


குளத்தங்கரை படித்துறையும்...
குளுகுளுக்கும் வேப்பமரமும்...
இன்றும் சுமக்கின்றன
நம் காதலின் சுவடுகளை..!

கருப்பர் கோவில் பூவரசு
கண்ணியமாய் சுமக்கிறது
மடி சாய்ந்த பொழுதுகளின்
நினைவுகளை..!

ஆவாரம் செடி தாலாட்டும்
ஒற்றையடிப் பாதை..
இன்னும் இசைக்கிறது
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த நாட்களின்
சந்தோஷங்களை..!

பிள்ளைகள் ஆடும்
ஆலமர விழுதுகள்
ஆராவாரமாய் சுமக்கின்றன
முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தை..!

கடக்கும் ஒவ்வொன்றும்
கடத்தாமல் வைத்திருக்கின்றன
நம் காதலின் தாக்கத்தை..!

நீயும் நானும் கடத்தி விட்டோம்...
காதலின் வாழ்க்கையை
காலத்தின் பாதையில்..!

எப்போதாவது சந்திக்கிறோம்...
எதாவது பேசுகிறோம்...
இதயம் மறந்த புன்னகையோடு..!

சிநேகமாய் சிரிக்கிறார்கள்
இதயத்தில் இடை புகுந்தவர்கள்...
கூடி விளையாடுகின்றன
வாழ்வின் வசந்தங்கள்..!

எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
-'பரிவை' சே,குமார்.

சனி, 28 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 25)

முந்தைய பகுதிகள் :

"இல்ல நீ பாரு நா பாருன்னு நம்மள இங்கயும் அங்கயும் அலைய விட்டுருவானுங்களோன்னு பயமா இருக்குங்க..."

"ஏய்... அதெல்லாம் எதுவும் நடக்காது... சித்ரா பேச்சுத்தான் அப்படி... ஆனா பாசமானபுள்ளதான்... சின்னவன் பொண்டாட்டி நம்ம மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு... அப்புறம் என்ன...?"

"அக்கம் பக்கத்துல நடக்குறதைப் பாக்கும்போது..."

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..." என மனைவியை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காளியம்மாள்.

இனி...

ந்தசாமி மனைவிக்கு ஆறுதல் சொல்ல, காளியம்மாள் முகத்தைத் துடைத்துக் கொண்டு 'இருங்க... காபி போட்டுக்கிட்டு வாறேன்...' என்றபடி எழுந்தாள்.

மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் மனசுக்குள் எங்களை மாதிரி எப்பவும் அன்போடு இவனுக இருப்பானுங்களா... இல்லை ஒரு சிலர் மாதிரி அடிச்சிக்கிட்டு நிப்பானுங்களான்னு தெரியலையே.... என்று யோசித்தார். அவர் மனசு ஏனோ நம்ம ஆயுசு வரைக்கும் அவனுக சேர்ந்திருந்தாப் போதும்ன்னு நினைக்கலை... ஆயுசுக்கும் ஒண்ணா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டார்.

"என்ன சித்தப்பா... யோசனை பலமா இருக்கு?" டவுனுக்குப் பொயிட்டு வந்த கண்ணதாசன் வண்டியை நிறுத்திக் கேட்டான்.

"வா... கண்ணா... நா எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கப்போறேன்... எல்லாம் நீங்க நாலு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கனுமேன்னுதான் யோசனை..."

"சித்தப்பா... நாங்க உங்க பிள்ளைங்க... எப்பவும் ஒண்ணாத்தான் இருப்போம்... என்ன சின்னத்தா மூக்கைச் சிந்திருச்சாக்கும்... அது முகம் நேத்து சித்ரா பேசினதுல இருந்தே நல்லாயில்ல... விடுங்க சித்தப்பா...குலைக்கிற நாயி கடிக்காதுல்ல... சித்ரா அப்ப அப்ப கூவிட்டு விட்டுடும்... விடுங்க... மலையாளத்தான் கடைப்பக்கம் போனேன் சூடா அப்பம் போட்டிருந்தாரு... இந்தாங்க..." என்று பொட்டலத்தை நீட்டினான்.

"பிள்ளைகளுக்கு வாங்கினியா... இல்லேன்னா இதைக் கொண்டேக்கொடு..."

"இருக்கு சித்தப்பா... சாப்பிடுங்க..."

"சரி கொடுத்துட்டு வா.... உங்க சின்னத்தா காபி போடுறா... "

"இந்தா வாறேன்... சின்னம்மா போடுற காபி வேண்டான்னு சொல்லுவேனா..." என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

"ஏலா... கண்ணனுக்கும் காபி சேத்துப் போட்டுக்கிட்டு வா..." என்று கத்தினார்.

"அதுதான் மாமரத்துக் கொல்லையில ஆளுக்கு பத்துச் செண்டு இருக்குல்ல... அப்புறம் எதுக்குடி மொத்தத்தையும் எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டு ஏழரையை இழுக்கப் பாத்தே...?" நேற்றிலிருந்து கேட்க நினைத்த கேள்வியை சாப்பிட்டு முடித்து படுத்தபோது மெதுவாகக் கேட்டான் மணி.

"ஆமா... எல்லாத்துக்கும் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துக்கிட்டு இருந்தா எல்லாம் வந்திருமா? ரோட்டோரத்துல மொத்தம் இருபது செண்டு... சும்மாவா?"

"அதுக்காக அவனுக்கு அங்க வீடு கட்டணுமின்னு எண்ணம் இருக்காதா?"

"பழைய வீட்டை எடுத்துக்கடான்னு சொல்லிட்டு இதை மொத்தமா வாங்கியிருக்கலாம்ல்ல... நா ஆரம்பிச்சா.... உடனே உங்க குடும்பத்தை பிரிக்கப் போறேனாக்கும்ன்னு என்னையத்தானே அதட்டுறீங்க..."

"அதுக்காக... அவனோ அபியோ எதுவும் பேசாதப்போ பெரிய மனுசங்ககிட்ட படக்குன்னு பேசுறது நல்லாவா இருக்கு..."

"ஆமா... பொல்லாத சொத்து... மேட்டுச் செய்யும்... அயிருவாய்க்காலும் என்னத்துக்கு ஆகப்போகுது... வானம் பாத்த பூமியில நாம போயி வெவசாயமா பண்ணப் போறோம்... உங்கப்பா இருக்கவரை பாப்பாரு... அப்பறம் வேலாயி வீட்டு வயலுக மாதிரி கருவ மண்டிப் போயிக் கெடக்கப் போகுது... அதுக்கு மாமரத்துக் கொல்லையை வாங்கியிருந்தா... இந்தா செட்டியாரு வீட்டு கரும்புத் தோட்டத்துல இஞ்சினியரிங் காலேசு கட்டப் போறானுங்க... இன்னைக்கு மாமரத்துக் கொல்லைதானேன்னு நினைப்பீங்க... நாளைக்கு அந்த எடத்துல செண்டு என்ன வெல போகும்... அதை நாம எடுத்துக்கிட்டா வீடு கட்டும்போது ரெண்டு வீட்டை சேத்துக் கட்டிப் போட்டா வாடகைக்கு விட்டாச்சும் சம்பாதிக்கலாம்ல்ல..."

"அது சரி... உன்னோட எண்ணம் இப்படிப் போகுதா... அடேங்கப்பா உன்னைய மட்டும் உங்கப்பன் படிக்க வச்சிருந்தாருன்னா... இன்னேரம் கலெக்கடராயிருப்பே... நீ யோசிக்கிற மாதிரி அவனும் யோசிச்சு அண்ணன் வீட்டை எடுத்துக்கட்டும் நா கொல்லையில வீடு கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா... "

"ம்க்கும்... உங்க தம்பிதானே... அவரு இனியாவது ஊருக்குள்ள வர்றதாவது... மெதுவா உங்க தம்பிக்கிட்ட பேசி அதை வாங்கப் பாருங்க..."

"ஆத்தா... பத்து செண்டு நமக்குப் போதும்... பேசாம இரு...."

"அதானே... நீங்க கேட்டுப்புட்டாலும்... கேக்கிற நேரத்துல நான் கேட்டுக்கிறேன்...."

"அத்தான்... நான் குமரேசன் பேசுறேன்..." 

"சொல்லு மாப்ள..." என்றார் எதிர்முனையில் அழகப்பன்.

"என்னத்தான் எப்படியிருக்கீங்க...?"

"என்ன மாப்ள நேத்துத்தான் பாத்துட்டுப் போனே... அதுக்குள்ள நலம் விசாரிக்கிறே...?"

"இல்ல அப்படி கேட்டு பழக்கமாயிருச்சில்ல..." சிரித்தான்.

"சரி... சரி... என்ன விஷயம்... எதாவது முக்கியமா...?"

"ம்... மருமக, மருமகன் எல்லாம் ஹாஸ்டல் போயாச்சா..."

"ம்... கிளம்பிட்டாங்க... நானும் உங்கக்காவுந்தான் எம்மொகத்தை நீ பாரு... உம்மொகத்தை நா பாக்குறேன்னு உக்காந்திருக்கோம்..."

"அப்புறம்... ரமேஷ் அத்தான் திடீர்ன்னு ரொம்ப நல்லவரா மாறிட்டாரேத்தான்... எப்படித்தான்..."

"ஏய்... அவன் அப்படித்தான்.... நல்லவந்தான்... மிடுக்கிக்கிட்டுத் திரிவான்... சரி விடு... அவனோட போக்கை அவனே மாத்திக்கிட்டது நல்லதுதானே... கெட்டவன் கெட்டவனாவே இருந்து சாகணுமின்னா எப்படி... நாலு வார்த்தையின்னாலும் நறுக்குன்னு பேசிப்பிட்டானுல்ல..."

"ம்... எனக்கு ஆச்சர்யம்..."

"அப்ப அப்ப அவனுக்கிட்ட போன் பண்ணிப் பேசு... இன்னும் மொறச்சிக்கிட்டு திரியாம..."

"சரி..."

"ம்... வேறென்ன சொல்லு..."

"அப்புறம் மாமரக் கொல்லையை...."

"கொல்லையை..."

"சித்ராண்ணி கேட்ட மாதிரி அவங்ககிட்ட கொடுத்துடலாம்ன்னு பாக்குறேன்... ஆசைப்பட்டுட்டாங்க... அதைக் கொடுக்கிறதால கொறஞ்சி போயிடப் போறதில்லை... பழைய வீட்டை அப்பாம்மா காலத்துக்கு அப்புறம் வேலை பாத்து வச்சிக்கிட்டு நல்லது கெட்டது போனா தங்கிட்டு வந்துக்கலாம்..."

"உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..."

"ஏந்த்தான்...?"

"ரோட்டோரத்துல கிடக்கிற நெலம் அது ஒண்ணுதான்... அதையும் மொத்தமாத் தூக்கி அவனுக்கிட்ட கொடுத்துட்டு... நாலப்பின்ன அபியே கேள்வி கேட்டா என்ன பண்ணுவே..."

"அதெல்லாம் அவ கேக்கமாட்டாத்தான்... அண்ணனுக்குத்தானே கொடுக்கிறோம்..."

"அண்ணன் கேட்டானா... இல்லையில்ல... அவ எதுக்கு இருபது செண்டையும் கேக்குறா தெரியுமா...? வீடு கட்ட மூணு செண்டு போதும் மாப்ள... தோட்டம் போட்டு காய்கறி யாவாரமா பண்ணப்போறா.... எல்லாம் பயங்கர பிளான் மாப்ள..."

"என்ன பிளான்?"

"பக்கத்துல இஞ்சினியரிங் காலேஸ் வருது... அப்புறம் அந்த எடத்துல செண்டு என்ன வெலைக்குப் போகும்... பிளாட் போட்டு வித்தாலும் நாலஞ்சி பிளாட் விக்கலாம்... இல்ல லோனைக்கீனைப் போட்டு வீடா கட்டி விட்டா மாசாமாசம் வாடகை வரும்... எந்தங்கச்சி சித்ரா படிக்கத்தான் இல்ல... ஆனா கலெக்டரைவிட அழகா கணக்குப் போடுவா... வெவரம் புரியாம தூக்கிக் கொடுக்கிறேன்னு சொல்றே..."

"அது சரி... இம்புட்டு உள்குத்து இருக்கா...?"

"மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும்... அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."

"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 மார்ச், 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 9. எம்.எஸ். சார்

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னைப் பாதித்த, செதுக்கிய, பாசம் காட்டிய உறவுகள் குறித்த நினைவுகளை கொஞ்சமாய் அசைபோட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த பகிர்வில் நினைவாய் மலரப்போவது எனது அன்பிற்குரிய பேராசிரியர். திரு. எம்.சுப்பிரமணியன் (எம்.எஸ்) அவர்கள்.

எங்கள் ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியராய் இருந்தார். கல்லூரியில் முதல் வருடம் படித்த போது இவருடன் அவ்வளவு நெருக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அமையவில்லை என்பதைவிட நான் படித்த துறைக்கும் இவரின் துறைக்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் இவருடன் பழகும் வாய்ப்புக் கிட்டவே இல்லை. எனது தோழர் தோழியர் இவரின் துறையில் படித்ததால் இவரைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் ஐயாவுடன் பேசியபடி செல்லும் நாட்களில் திருப்பத்தூர் ரோட்டில் இருந்த எம்.எஸ்.சாரின் கண்ணா பேப்பர் ஸ்டோரின் கல்லாவில் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நாங்களும் அங்கு நிற்போம்... அப்போது சிநேகமாய் சிரிப்பார். கடையில் வேலை பார்த்த ஜீவா ஐயா மீது மிகுந்த பற்று வைத்திருந்தான். ஐயா வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுடன் எங்களுக்கும் நெருக்கமானது. இவனைப் பற்றி மற்றுமொரு பகிர்வில் பார்ப்போம். ஐயாவுடன் எங்களைப் பார்த்ததும் என்ன ஐயா,  ரெண்டு மாணவர்களையும் எப்பவும் பக்கத்துலயே வச்சிருக்கீங்க என்று சொல்லிச் சிரிப்பார்.

அதன் பின் மே மாதம் புத்தகம், நோட்டு வியாபாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் ஒத்தாசைக்கு ஆளு வேணும் காலேசு இல்லாதப்போ மாலை நேரத்துல வந்து நில்லுவே என்று ஜீவா சொல்ல, மே,ஜூன் இரண்டு மாதமும் கணிப்பொறி மையம் ஆரம்பிக்கும் வரை கடையில் நின்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தேன். முருகன் வரமாட்டான். நானும் ஜீவாவுக்கு வேண்டிய சில நண்பர்களும் எங்களால் ஆன உதவியைச் செய்வோம். அப்படியே நெருக்கம் தொடர, குமார் வரலையா? என்று கேட்க ஆரம்பித்தது அவரின் நேசம்.

பின்னர் கணிப்பொறி மையம் அது இதுவென கொஞ்சம் அவருடனான உறவு பார்க்கும் போது பேசுவதோடு மட்டுமே தொடர்ந்தது. கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் எம்.எஸ். சாருடன் நெருக்கம் அதிகமாகியது. குறிப்பாக சபரிமலைக்கு அவர் தலைமையில் நான்காண்டுகள் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தபோது சாரின் அன்பில் மீண்டும் நனைய ஆரம்பித்தேன். மலைக்குச் செல்லும் போது நானும் முருகனும் மாணவர்களாய் அவர் முன் என்றாலும் எங்களை அன்பாய் பார்த்துக் கொள்வார். எந்த வேலை என்றாலும் எங்களைத்தான் அழைப்பார். மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவதற்காக தேங்காய் தேய்த்து எடுப்பது மற்றும் மற்ற வேலைகள் என சார் வீட்டில்தான் இருந்து செய்வோம்.

எம்.எஸ்.சார் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர். ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை அவருக்கு மிகுந்த சோகத்தையே கொடுத்தது. பையன்கள் இருவருக்கும் ஒரு வித நோய்... குழந்தைகள் இருவருமே நோயின் பிடியில் என்பதால் அவரின் மனைவியோ விரக்தியின் பிடியில்... எப்பவும் இருவருக்கும் ஒத்துப் போவதேயில்லை... எல்லாவற்றையும் தாங்கினார்.... இரண்டு மகன்களையும் இழக்கும் வரை...

நாங்கள் கல்லூரியில் வேலை பார்த்த போதுதான் அவரின் இளைய மகன் இறந்தான். அவரது வீட்டு ஹாலில் கிடத்தியிருந்தார்கள்... பார்க்க சகிக்கவில்லை... சாரின் அழுகையும்... துடிப்பும்... இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் வரக்கூடாது என்று நினைத்தாலும் எங்காவது மீண்டும் மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. எனது மைத்துனனை அவருக்கு நன்றாகத் தெரியும்... எங்களுடன் சபரிமலைக்கு இரண்டு வருடம் வந்தான். அவன் தற்கொலை பண்ணிக் கொண்டதைக் கேட்டு பதறியவர், நித்யாவுக்கு ஆறுதல் சொல்லு... அவங்க அப்பா அம்மா எப்படி இதைத் தாங்குவாங்க... கிறுக்குப்பய இப்படிப் பண்ணிட்டானே என்று புலம்பியவர்தான்... அன்று தனது மகனை இழந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

அபுதாபி வந்த பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரைக் கடையில்  சென்று சந்திப்பதுண்டு... எப்பவும் போல் பேசினாலும் ஒரு சோகம் அவருக்குள் ஒளிந்தே கிடக்கும்... குமார், சபரிமலைக்கு மறுபடியும் ஒரு பயணம் போற மாதிரி விடுமுறை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லுவார். அவரது பணி நிறைவுக்குப் பின்னரும் தேவகோட்டையில்தான் இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடைக்குப் போனபோது அவரின் தம்பிதான் கடையில் இருந்தார். சார் எப்படியிருக்காங்க என்று கேட்டதுக்கு நல்லாயிருக்கார் என்று சொன்னார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

அதன் பின்னான நாட்களில் நண்பர்கள் மூலமாகத்தான் அவரின் மூத்த மகனும் இறந்து விட்டதாகவும் மதுரையில் போய் செட்டிலாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவரின் தம்பியிடம் விசாரிக்க, 'ம்... அண்ணோட பையன் இறந்த பின்னால... அண்ணனுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு இல்லை... அண்ணிக்கும் இங்க இருக்க பிடிக்கலை... மதுரைப் பக்கமே பொயிட்டாங்க... நானும் கொஞ்ச நாள் கடையைப் பாத்துட்டு வித்துட்டுப் போக வேண்டியதுதான்' என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் ரொம்ப வேதனையாகவும் இருந்தது.

கல்லூரியில் எந்த மாணவனையும் கோபமாகப் பேசாத, எல்லாருக்கும் பிடித்த எம்.எஸ். சாராக, சபரிமலைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு பக்தனாக, அடுத்தவரை எடுத்தெறிந்து பேசாத மனிதராக வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற... அந்த மனிதரின் வாழ்வு மட்டும் ஏன் இப்படியானது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

எம்.எஸ்.சார்... தங்களின் புத்திர சோகத்துக்கு ஆறுதல் சொல்ல முடியாது. உங்கள் வாழ்வின் இழப்புக்கள் அதிகம்... மீட்க முடியாத இழப்புக்களால் வாழும் கடைசி நாள் வரை உங்களை இறைவன் அழ வைத்து விட்டான்... ஆற்றுப் படுத்த முடியாத சோகம் உங்கள் வாழ்க்கையில்... என்னைப் போன்றோரை செதுக்கிய சிற்பிகளில் தாங்களும் ஒருவர்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் என்று சொல்ல முடியாத நிலை என்றாலும் இனி வரும் காலங்களில் உங்கள் மனைவி உங்களிடத்தில் அன்போடு இருந்து உங்களை... உங்கள் வாழ்க்கையை கொஞ்சமாவது சந்தோஷமாக கொண்டு செல்லட்டும்.... செல்ல வேண்டும் என்பதே ஆசை.

இந்த முறை விடுப்பில் செல்லும் போது மதுரையில் இருக்கும் மனைவியின் அம்மா வீட்டுக்கு போகும்போது கண்டிப்பாக எம்.எஸ்.சாரை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எங்க எம்.எஸ்.சார் இனி வரும் நாட்களில் வசந்தத்தை பார்க்காவிட்டாலும் வலிகளை மறந்து வாழ இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 மார்ச், 2015

ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்

2004 ஆம் ஆண்டு மார்ச்-26... எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.மதுரையில் தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றதில் இருந்து பத்தாவது மாதம் வரை சுகப்பிரசவம் ஆகும் என்று சொன்னவர்கள்... ஏன் வலி வந்து சேர்த்த அந்த இரவு இட்லி சாப்பிடச் சொன்னவரை அதையேதான் சொன்னார்கள். அதன்பிறகு திடீரென மீண்டும் ஸ்கேன் எடுத்தார்கள்... உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்லிவிட்டார்கள்.

நாங்களும் அவர்களுடன் சண்டையிட்டு முடியாமல் தோற்று ஒத்துக்கொள்ள, அப்பா, அம்மா, அத்தை என எல்லாரும் பதட்டத்துடன் காத்திருக்க... மாமாவுக்கு விவரம் சொல்லி அவர் ஹோட்டலில் இருந்து வரும் முன்னரே ஆபரேசன் அறைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். நமக்கு ஒரு குழந்தை என்ற சந்தோஷம் நீங்கி... மனைவிக்கு ஆபரேசன் என்ற பயம் கவ்விக்கொள்ள என்னையறியாமல் கண்ணீர் ஓட, மாடிப்படியில் சென்று அமர்ந்துவிட்டேன்.

குழந்தை அழுகும் சத்தமும் எல்லோரும் சந்தோஷமாக பேசும் சத்தமும் கேட்க, என் மகள்... என் செல்லம் பிறந்ததை அறிந்து சந்தோஷித்தாலும் மனசு மனைவியை நாடியது. வெளியில் கொண்டு வந்து பின்னர் குளிரும் காய்ச்சலும் வர, மருத்துவர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லியபடி மீண்டும் ஐசியூவுக்குள் கொண்டு செல்ல, குழந்தையைக் கூட பார்க்க மனமின்றி மனைவிக்காக வேண்டுதலோடு காத்திருந்த அந்த நிமிடங்கள் இன்னும் மனசுக்குள் தடக்.. தடக்கென்று கடக்காமல் நின்று கொண்டேயிருக்கிறது.

மனைவி நினைவு திரும்பி, கொஞ்சம் பேச ஆரம்பித்ததும் மகளைக் கொஞ்சுவதே வேலையானது. அப்போது தேவகோட்டை கல்லூரியில் பணி, வார வெள்ளி மாலை கிளம்பிப் போய் மகளுடன் இருந்து திங்கள் காலை கிளம்பி வருவேன். நமக்குன்னு ஒரு வாரிசு என்ற சந்தோஷம் துள்ளலாட்டம் போட்டது. சின்ன பிள்ளையாக இருக்கும் போது கைலிக்குள் போட்டு விளையாடியது பசுமையாய்...

பின்னர் அவரும் வளர வளர... சேட்டைகளும் வளர ஆரம்பித்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது எனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விட்டுச் செல்ல வேண்டும். அதேபோல் மதியம் சாப்பிட வரும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலே சிமெண்ட் தரையின் சூட்டைப் பற்றி அறியாமல் தத்தக்கா... பித்தக்கான்னு நடந்து வரும் அழகே தனிதான்... கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னம் வாய் என எச்சில் வடிய முத்தம் கொடுக்கும் செல்லத்துக்கு எப்பவும் அப்பா வேணும்... ஆம்... அப்பா செல்லமாக வளர்ந்தது. விஷால் வரும் வரை தனிக்காட்டு ராணிதான்.

சென்னையில் இருக்கும் போது என்னோடுதான் படுக்கை... பெரும்பாலும் வயிற்றில் ஏறித்தான் படுத்துக் கொள்ளும். இறக்கிப் போட்டாலும் மீண்டும் ஏறிப்படுத்து விடும். இல்லையேல் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கும்... முகப்பேர் வேலம்மாளுக்கு எல்.கே.ஜி. போகும் போது இரவு வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குளிக்கவும்... சாப்பாடு ஊட்டவும்... பள்ளியில் கொண்டு சென்று விடவும் அப்பா வேணும்... அப்பா இப்பத்தான் வந்தாக... தூங்கட்டும் பாப்பா என்று அம்மா சொன்னாலும் பக்கத்தில் உக்காந்து அப்பா... அப்பான்னு கிளப்பிக் கொண்டு செல்லும்.

காரைக்குடி வந்து பள்ளிக்குச் சென்ற நேரத்தில் நான் அபுதாபி வந்தாச்சு... பின்னர் வருடம் ஒருமுறைதான் என்றாலும் அந்த ஒரு மாதமும் அப்பாதான் எல்லாம்... அப்பா... அப்பா.... எப்பவும் அப்பா பிள்ளை.... விஷாலும் அப்பாவுக்கு போட்டி போட ஒரே களபரம்தான். இந்த சண்டை இன்று வரை தொடருது. அதுவும் ஒரு சந்தோஷம்தானே,

எல்லாருக்கும் பாப்பா ஆகிப்போன எங்கள் செல்லத்துக்கு வயது பதினொன்று ஆச்சு.... டேய் பாப்பான்னு சொல்லாம அக்கான்னு சொல்லுடா என்று விஷாலிடம் அம்மா மிரட்ட, அப்பா பாப்பான்னு சொல்லாம அக்க்க்க்க்க்கான்னு சொல்லணுமாம் என்று சொல்லிச் சிரிக்கிறான். இப்பவும் பாப்பாதான் போடுறான்.

படிப்பு விஷயத்தில் திட்டும் போது என்னையவே திட்டுங்க என்று அழுதாலும் கத்தினாலும் அடுத்த நிமிடமே அப்பா என்று ஒட்டிக் கொள்ளும் அந்த அன்பு பெண்பிள்ளைகளுக்கே உரியது. அது இன்னும் கூடுதலாய்....

ஸ்ருதி... 

இதுதான் எங்கள் செல்லத்தின் பெயர்... ஆனா எல்லாருமே பாப்பான்னுதான் கூப்பிடுறோமா... ஸ்ருதிங்கிறது பள்ளியில் மட்டுமே கூப்பிடும் பெயராகிவிட்டது. வீட்டில் பெரிசு முதல் சிறுசு வரை எல்லாருக்கும் பாப்பாதான்... பாப்பா ஐயாவின் (மனைவியின் அப்பா) செல்லம். அவருக்கு காலையில் பேத்தியிடம் பேசவில்லை என்றால் வேலையே ஓடாது... அதே போல் அவர் பேசவில்லை என்றால் இவங்க போன் பண்ணி பேசிட்டுத்தான் பள்ளிக்குப் போவாங்க...

மார்ச் -07 என்னோட பிறந்தநாள்... மார்ச் - 15 தங்கை (நண்பனின் மனைவி) பிறந்தநாள்... மார்ச் - 21 பேராசான். மு.பழனி இரகுலதாசன் (எங்க ஐயா) பிறந்தநாள்... அந்த வரிசையில் மார்ச் - 26  எங்க செல்லத்தோட பிறந்தநாள்... 

நாளைக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள்... கைகளில் தவழ்ந்த எங்க செல்லம் பதினோறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... உங்கள் ஆசிகளையும் அன்பையும் வழங்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 24 மார்ச், 2015

கோபம்

''எதற்கெடுத்தாலும் கோபப்படுறதை முதல்ல நிப்பாட்டுங்க...'' என்றபடி அவன் தேடித்தேடி கடைசியில் கோபமடைய வைத்த நகவெட்டியை நீட்டியபடி சொன்னாள் சீதா. 

''வச்ச இடத்துல இருந்தா நான் ஏன் கோபப்படப் போறேன்'' 

''ம்... நம்ம குழந்தைங்க சின்ன வயசுங்க. விளையாட்டுத்தனமாக எடுத்து எங்கயாவது போட்டுடுங்க... பொறுமையா தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது. இல்லைன்னா அதுகளை கூப்பிட்டு அனுசரணையா கேட்டா சொல்லப் போறாங்க...  அதவிட்டுட்டு வீடே ரெண்டாப் போற மாதியா கத்துறீங்க. உங்க அம்மா சொல்ற மாதி உங்களுக்கு மூக்கு மேல தாங்க கோபம் வருது. சரி... சரி... நகத்தை வெட்டிட்டு குளிச்சுட்டு வாங்க சூடா தோசை வார்த்துத் தாரேன்...'' 

''ம்... நகத்தை வெட்டிட்டு ஷேவ் பண்ணிட்டுத்தான் குளிக்கப்போறேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... ஆபீசுக்குப் போற மாதி பறக்குறே...'' என்றான் மீண்டும் கோபமாக. 

''இப்பத்தானே சொன்னேன் அதுக்குள்ள எதுக்கு டென்ஷன். உங்களுக்கு லீவு தாங்க. ஆனா எனக்கு எல்லா நாளுமே ஒண்ணுதான். அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான் எனக்கு வேலை ஜாஸ்தி... தெரியுமில்ல... கொஞ்சம் சீக்கிரம் வாங்க'' 

''ம்... வர்றேன்...வர்றேன்...''

லுவலகத்தில் அவரவர் அரக்கப்பறக்க வேலை செய்து கொண்டிருந்தனர். 

''மிஸ்டர் சம்பத்... உங்களை எம்.டி. வரச் சொன்னார்'' என்றபடி வந்தார் எம்.டி.யை பார்த்துவிட்டு வந்த நாராயணன். 

''ம்... எதுக்கு...?'' 

''எனக்கென்னங்க தெரியும்... போய் பாருங்க...'' 

''மே ஐ கம் இன் சார்?''

''எஸ்... கம் இன்'' என்ற அழைப்புக்கு,  அவன் உள்ளே நுழைய...

''வாங்க... சம்பத் உட்காருங்க...'' என்றார் எம்.டி.

''தாங்க்யூ சார்'' என்றபடி அமர்ந்தான். 

''அந்த பான் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய கொட்டேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா...?'' 

''பண்ணிட்டேன் சார்...'' 

''ஓ.கே. அதை நம்ம பன்னீர்கிட்ட கொடுத்து ஒருதடவை சரிபார்த்துட்டு எங்கிட்ட தரச்சொல்லுங்க...'' 

''ஓ.கே. சார்...'' 

''அப்புறம் ஒரு விஷயம்.... நேத்து பியூன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டீங்களாமே...'' 

''ஆமா சார்... அவன் நடந்துக்கிட்ட விதம் அப்படி... காபி வாங்கிட்டு வந்து டேபிள் மேல வைக்கிறப்ப கொட்டிட்டான் சார். அப்ப எனக்கு வந்த கோபத்துல அவனை அறையணும் போல இருந்தது சார். ஆபீசாச்சேன்னு திட்டுனதோட நிறுத்திட்டேன்.'' 

''என்ன சம்பத்... வேணுமின்னா அவரு அப்படி செய்தாரு... ஏதோ கை தவறிடுச்சு... அவருக்கு உங்க அப்பா வயசிருக்கும்... அவரைப் போயி அவன் இவன்னு விளித்துப் பேசுறது நல்லா இல்ல... பர்ஸ்ட் கன்ட்ரோல் யுவர் செல்ப்... கோபத்தை குறைங்க. நானும் உங்க வயசுல உங்களை மாதித்தான் கோபப்பட்டேன்... அதனால நான் நிறைய இழந்தேன்... ஒரு நாள் எதுக்கு கோப்படுறோம்ன்னு தனிமையில யோசிச்சேன். அப்புறம் என்னை நானே மாத்திக்கிட்டேன்... இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கேன்னா அதுக்கு என்னை நானே மாத்திக்கிட்டது கூட ஒரு காரணம்... இப்ப நான் என்னோட அணுகுமுறையையே மாத்திக்கிட்டேன்.'' 

சந்துருவுக்கு மனசுக்குள் எவன் எவன் மீதோ கோபம் வந்தது. ஏன் தனக்கு முன்னால் லெக்சர் அடிக்கும் எம்.டி. மீது கூட கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு ''சாரி சார்... இனிமே இது மாதிரி நடக்காது சார்'' என்றான். 

''தட்ஸ் குட். அப்புறம் ஒரு விஷயம். இதை உங்க மனதைப் புண்படுத்தனும்ன்னு நெனச்சி சொல்லலை. உங்க கோபம் குறையணும்ன்னு தான் சொல்றேன். போன வாரம் நீங்க ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணி கொடுத்தீங்கல்ல ஞாபகம் இருக்கா... அதுல ரெண்டு மூணு இடத்துல மிஸ்டேக் இருந்தது... அதை உங்ககிட்ட கேக்காம நானே கரெக்ட் பண்ணி அனுப்பிட்டேன்...'' 

''சார்... என்னை கூப்பிட்டு சொல்லியிருக்கலாமே... கரெக்ட் பண்ணித் தந்திருப்பேனே. அது என்னோட தவறுதானே...'' 

''என்ன... உங்களை கூப்பிட்டு டோஸ் விடலையேன்னு கேக்குறீங்களா...? நான் கோபப்பட்டிருந்தா என்ன நடக்கும். அடுத்த தடவை நீங்க செய்யிற வேலையில அதிக சிரத்தை எடுக்கிறேன்னு தப்பு பண்ணிடுவீங்க... ஒரு தடவை தப்பு வர்றது சகஜம் தானே... உங்க வேலையில இதுவரைக்கும் தப்பே வந்தது கிடையாது. உங்க வேலையில நீங்க காட்டுற சிரத்தைய பார்த்து நான் நிறையத் தடவை பிரமிச்சிருக்கேன். நீங்க முதல் தடவை தப்பு பண்ணிருக்கீங்க. உங்க மனசில் ஏதாவது குழப்பம் இருந்திருக்கலாம். அதனால அதை நான் பெரிசா எடுத்துக்கலை''

சம்பத்துக்கு எங்கோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மனைவி, நண்பர்கள் என எல்லோரும் சொல்லியும் உறைக்காத ஏதோ ஒன்று உறைத்தது. 

எம்.டி.யிடம் விடை பெற்று வெளியே வந்தவன் எதிர்ப்பட்ட பியூனிடம் 'ஸாரி' என்று கையைப் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் வியப்பாய் பார்த்தனர்.

(2009-ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது மீள் பதிவாய்)

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 மார்ச், 2015

நேரில் வந்த காதலே சுவசமாக...

தேவா சுப்பையா... அண்ணனான ஒரு உறவு...

வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடரும் உறவுகளில் தேவா அண்ணாவும் ஒருவர். இலக்கிய ஆளுமை, அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர், இவரின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தால் அப்படியே நம்மை அதற்குள் வசீகரித்துச் செல்லும். தேவா அண்ணா வார்த்தைகளின் ராஜா என்பதை இவரின் பகிர்வுகளில் பார்த்து மயங்கித்தான் தொடர ஆரம்பித்தேன்.

இதோ பக்கத்தில் துபாயில்தான் இருக்கிறார்... மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எனது எழுத்தை அவரும் அவரின் எழுத்தை நானும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நட்பாய்த் தொடர்ந்தோம். சிவகங்கை மண்ணில் விளைந்த எழுத்துக்காரர் அவர் என்பது  பின்னர்தான் தெரியும். என்னதான் இருந்தாலும் நம்ம மண்... நம்ம மக்கள் என்னும் போது பாசம் இன்னும் அதிகமாகும்தானே... அப்படித்தான் தேவா அண்ணன் எனக்குள் நுழைந்தார்.

ஒரு நாள் முகப் புத்தகத்தில் அரட்டையில் வந்து 'தம்பி அபுதாபியிலயா இருக்கீக... போன் நம்பர் தாருங்கள் நான் பேசுகிறேன்' என்றார். மறுநாளே என்னைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார். சிவகங்கை மண்ணுக்கே உரிய 'தம்பி எப்படியிருக்கீக?' என்று கேட்டு ஆரம்பித்த பேச்சில் இருந்த அன்பு என்னை அப்படியே ஆட்கொண்டது.

பின்னர் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது போனில் பேசுவார்... அதிகம் அவர்தான் தொடர்பில் வருவார்... நான் எப்போதாவதுதான்... என்னைப் பொறுத்தவரை அதிகம் யாரையும் போனில் கூப்பிட்டு விட மாட்டேன். அது என்னவோ தெரியலை... இதற்காகத்தான் எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவேன். சென்னையில் இருக்கும் போது அம்மாவுக்கு கூட கூப்பிடுவதில்லை. போன்ல கூட பேசக்கூடாதாடா... என்று திட்டுவார். அப்படியே பழகிவிட்டது.

கில்லர்ஜி அண்ணா, மகேந்திரன் அண்ணா என சிலரை நேரில் சந்தித்து உறவாடியது போல் தேவா அண்ணனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான நேரம்தான் அமையவில்லை. சென்ற முறை அவர் அபுதாபி வந்தபோது என்னிடம் பேசினார். ஆனால் அலுவலகத்தில் இருந்ததால் சென்று சந்திக்க முடியவில்லை. சரிப்பா அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லிச் சென்றார்.

வெள்ளிக்கிழமை என்னை போனில் கூப்பிட்டிருக்கிறார். நாமதான் சமையல் அது இதுன்னு ரொம்ப பிஸியில்ல... போன் வந்ததை பார்க்கவில்லை... உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி... 'தம்பி நாளை நான் அபுதாபி வாரேன்... ஒரு மணியில் இருந்து மூணு மணிக்குள் நீ பிரியாக இருந்தால் சந்திக்கலாம் 'என்று அனுப்பியிருந்தார். உற்சவ மூர்த்தியே நேரடியாக வரும் போது பக்தனுக்கு அதைவிட என்ன வேலை... உடனே 'நாளைக்கு விடுமுறைதான்... கண்டிப்பாக சந்திப்போம்' என்று தட்டிவிட்டேன். அதற்கு பதிலாய் எப்பவும் பேசும் வாஞ்சையான குரலில் 'தம்பி நாளைக்கு வர்றேம்ப்பா... சந்திப்போம் 'என்று பேசி அனுப்பியிருந்தார்.

மறுநாள் காலையில் சில வேலைகள் முடித்து குளிக்கச் சென்ற போது கூப்பிட்டிருக்கிறார். பின்னர் போன் செய்தபோது 'தம்பி எங்க இருக்கே நான் சலாம்ல இருக்கேன்' என்றார். இடம் சொல்லி வரச்சொல்லி... நான் போய் காத்து நிற்க... அவரும் வந்து சேர்ந்தார். இதுவரை இருவரும் நேரில் பார்க்கவேயில்லை... எழுத்தும் குரலும் மட்டுமே எங்களை இணைத்து வைத்திருந்தாலும் என்னைப் பார்த்ததும் கைகாட்டி கூப்பிட்டார். கம்பீர எழுத்துக்குச் சொந்தக்காரரான தேவா அண்ணா கம்பீரமாகவே இருந்தார்.

என்னைப் பொறுத்தவரை கிராமத்தானின் கிறுக்கலாய்த்தான் எனது எழுத்துக்கள்... அவரின் எழுத்துக்களோ சுவாசமாய்... இலக்கியம் பேசுவதைக் கேட்பது மட்டுமே எனக்குப் பிடிக்கும்... அதிகம் பேசுவதும் இல்லை... அண்ணன் இலக்கிய அருவியாய் பேசிக் கொண்டேயிருந்தார். நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். வேலு நாச்சியார், மருது பாண்டியர், குயிலி, சின்னமருதுவின் மகன் என எங்கள் மண்ணின் காவியம் பேசினார். இதை மிகச்சிறந்த வரலாற்றுப் பகிர்வாக எழுத வேண்டும் என்பது அவரின் ஆசை... அவர் பேசியதில் இருந்து இந்த வரலாற்றை மிகச் சிறந்த புத்தகமாக கொண்டு வரும் அவரின் எண்ணம் இன்னும் சிறப்பாக அமையும் என்பதை அறிய முடிந்தது.

இன்னும்... இன்னும்... என நிறையப் பேசினார். 'தம்பி இப்ப வேலை அதிகம்... அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை... ஆனாலும் உனது எழுத்துக்களை தொடர்ந்து படிப்பேன். எனக்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில்... நம்ம மக்களின் வாழ்க்கையை நீ ரொம்ப அழகா எழுதுறது ரொம்ப பிடிச்சிருக்கு'ன்னு இலக்கியம் என்னையும் புகழ்ந்தது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்... எல்லாம் ஒரு விளம்பரம்தான்... இருந்தாலும் என்னோட எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் சிலரில் தேவா அண்ணனும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மிகச் சிறந்த எழுத்து ஆளுமை பாராட்டும் போது 'அட நம்மளும் பரவாயில்லாம எழுதுறோம் போல...' என்று தோன்றியது.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.... அவருக்கு அடுத்த மீட்டிங் இருந்ததால் இன்னொரு நாள் சந்திப்போம் என்று சொல்லி அவரின் டிரைவரிடம் எங்களைப் போட்டோ எடுக்கச் சொல்லி எடுத்துக் கொண்டார். அந்தத் டிரைவரிடம் நாங்கள் இருவரும் நாலாண்டுக்கு மேல் பழக்கம்... இன்றுதான் பார்க்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அவரோ இதுவரைக்கு பார்த்ததேயில்லையா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தீர்ந்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்ற ஆசை இன்னும் கூடியிருக்கிறது... மீண்டும் ஒரு சந்திப்பில் இன்னும்... இன்னும்... என நிறையப் பேச வேண்டும்...

தேவா அண்ணாவின் நான்கு புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அவரின் எழுத்துக்கள் வலையில் பகிர்வதோடு இல்லாமல் புத்தகமாக வந்து எல்லோரின் மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ஆசை... அது நிறைவேறும் நாள் விரைவில் வர இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

தேவா அண்ணாவின் வலைப்பூ : WARRIOR  

நீங்களும் வாசியுங்கள்... அவரின் எழுத்துக்குள் உங்களுக்கு ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 21 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 24)

முந்தைய பகுதிகள் :"அப்ப பொண்ணுங்களுக்கு வேண்டாம்... இருக்க சொத்தை பிரிச்சினை இல்லாம பிரிச்சிட வேண்டியதுதானே...." என்றார் தணிகாசலம்.

"இதுல அடிச்சிக்கிற என்ன இருக்கு... அப்பாதான் பிரிக்கணுமின்னாங்க... அவங்க ஆசை... பிரிச்சிக் கொடுத்துட்டு அவருதானே பாக்கப்போறாரு..." என்றான் மணி.

"எல்லாருக்கும் நா ஒண்ணு சொல்லிக்கிறேன்... சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு... அதனால அந்த மாமரத்துக் கொல்லையை எங்களுக்கு கொடுத்துட்டா... அதுல வீடு கட்டிப்போம்..." என்று ஆரம்பித்து வைத்தாள் சித்ரா.

இனி...

'சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு எங்களுக்கு மாமரத்துக் கொல்லையைக் கொடுத்துடுங்க' அப்படின்னு சித்ரா சொல்லவும் குடும்பத்தில் அனைவரின் முகமும் மாறியது.

"என்னத்தா சொல்றே... மாமரத்துக் கொல்லை ரோட்டோரத்துல இருக்கு... இது பூர்வீக வீடு... இது உம்மாமன் மாமியா இருக்க வரைக்கும் பொது வீடா இருக்கட்டும்... ரெண்டு பேரும் நல்லது கெட்டதுக்கு ஒண்ணா மண்ணா இருந்துட்டுப் போகலாம்... ரோட்டோரத்துல இருக்க இடத்துல அவனுக்கும் வீடு கட்டணுமின்னு ஆசையிருக்கும்ல்ல..." கேட்டது தணிகாசலம்.

"அதுக்காக... வீடு பெரியவுகளுக்கு அப்புறம் சின்ன மகனுக்குத்தான்னு சொல்லுவாக... அப்ப நாங்க எங்கன இருக்கது... " என்றாள் சித்ரா.

"என்னத்தா... பெரியவுக கூட கூடக்கூட பேசுறே... நம்ம வீட்டுப் பிள்ளைக்கு இது அழகில்லை... " என்றார் கந்தசாமி.

"என்ன சொல்லிட்டேன்னு சத்தம் போடுறீக... அவுக வீடு வாசன்னு இருக்காக... அதான் கேட்டேன்..."

"ஏய்... என்ன நீ வாய்க்கு வாய் பேசிக்கிட்டு... பெரியவங்க பாத்து பிரிச்சிக் கொடுப்பாங்க... இதுல அவனுக்கு அதைக் கொடுக்காதே... எனக்கு இதுதான் வேணுமின்னு என்ன பேச்சு இது... நாங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இப்பப் போலவே இருக்கணுமின்னு நினைக்கிறோம்... பங்காளியா அடிச்சிக்கிட்டு நிக்க நினைக்கலை... அப்பா இப்ப பிரிக்கணுமின்னு நிக்கிறாரு... சரியின்னு சொன்னோம்... அவனோ நானோ தூக்கிக்கிட்டு போகப் போறதில்லை... நீ பேசாம இரு..." கோபமாகச் சொன்னான் மணி.

"சித்ரா... இங்க பாருத்தா... இன்னாருக்கு இதுன்னு பிரிச்சிக்கிட்டு அதுக்கப்புறம் நீங்க மனமொன ராசியா விட்டுக் கொடுத்து வாழ்ந்தாப் போச்சு... இதுல எதுக்கு தேவையில்லாம சங்கடத்தை உண்டு பண்ணிக்கிட்டு...." என சித்ராவிடம் மெதுவாகச் சொன்னார் அழகப்பன்.

"இந்த இடத்தைக் கொடுங்கன்னு சொன்னா குத்தமாண்ணே... ஆளாளுக்கு என்னைய ஆயிறிய..."

"ஏத்தா... என்ன நீயி... தராதரம் இல்லாம எல்லாருக்கிட்டயும் பேசுறே... சின்னவன் அங்க சொந்த வீடு கட்டியிருக்கான்... அதுக்காக பொறந்த ஊர்ல வீடு கட்ட மாட்டானா என்ன.... இல்ல நீங்களுந்தான் இடம் வாங்கிப் போட்டியிருக்கீங்க... அதுல வீடு கட்ட மாட்டீங்களா என்ன.... கெடக்கதுல மாமரத்துக் கொல்லை மட்டுந்தான் ரோட்டு மேல இருக்கு ஆளுக்கு பத்துச்செண்டு வருமில்ல.... அப்புறம் என்ன எல்லாத்தையும் எனக்கிட்டத்தான்னா எப்படி... " கந்தசாமி சுருக்கெனறு பேச சித்ரா பேசாமல் இருந்தாள்.

"ஐயா... என்னதான் இப்ப எதுக்கு சொத்தைப் பிரிக்கணுமின்னு வெளியில சொன்னாலும் ஆளாளுக்கு மனசுக்குள்ள அதைக் கொடுத்தா நல்லா இருக்கும்... இதைக் கொடுத்தா நல்லா இருக்கும்ன்னு எண்ணம் வரத்தான் செய்யும்... அதெல்லாம் பாத்தா கதையாகாது... மாமரத்துக் கொல்லையில ரெண்டு பேருக்கும் வீடு கட்ட ஆசையிருக்கும். இது பொது வீடா இருந்துட்டுப் போகட்டும். அதை ரெண்டாப் பிரிச்சிடுங்க... எல்லாத்துலயும் சமமா பங்கு வச்சிடுங்க... அதுக்கப்புறம் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்கிட்டாலும் சரி... இல்லேன்னாலும் சரி... அது அவங்களுக்குள்ள...." ரமேஷ் நறுக்கென்று பேசினான்.

"சின்ன மாப்ள சொல்றதுதான் சரி... இன்னைக்கு பிரிச்சிட்டாலும் அவனுக மாம்பூவாசனையா விட்டுக் கொடுத்துக்கிட்டா சந்தோஷந்தானே..." என்றார் பரமசிவம்.

"ரமேஷ் அத்தான் சரியாச் சொன்னாங்க.... அதுதான் நல்லது... எனக்கு உனக்குன்னு கேட்டு வாங்குறதைவிட மொத்த சொத்துல இது... இது... இன்னாருக்குன்னு பிரிச்சிடலாம்..." என்றான் கண்ணதாசன்.

"அண்ணனுக்கு மாமரத்துக் கொல்லையைக் கொடுக்கிறதுல எனக்கு வருத்தமில்லை... அவங்க விருப்பப்படி அதை அவங்களுக்கே கொடுத்துருங்கய்யா..." தணிகாசலத்திடம் சொன்னான் குமரேசன்.

"அதெல்லாம் வேண்டாம்.... எல்லாத்துலயும் ரெண்டு பாகம் வையுங்க... " என்றான் மணி.

"நல்ல பிள்ளைங்க.... நாளைக்கி நாத்தாநப்பனை பாகம் வைக்கச் சொல்லுவிய போலவே..." சிரித்தார் தணிகாசலம்.

"சித்தப்பா... எங்க பிள்ளைங்க அப்படியில்ல... ஏன்னா உங்களுக்கே தெரியும் நாங்க அண்ணந்தம்பி மூணு பேரும் மனசுக்குள்ள சின்னச்சின்ன வருத்தம் வந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காமத்தான் வாழ்ந்தோம்... இன்னைக்கு கூடப்பொறந்த ரெண்டு பேரு இல்லை... ஆனாலும்  எனக்கு மணியும் குமரேசனும் மட்டும் பிள்ளைங்க இல்லை... கண்ணதாசனும் எம்புள்ளதான்... ஏன் சின்னவன் மகன் எங்களை விட்டு வேலைவெட்டியின்னு ஒதுங்கி நின்னாலும் அவனும் எம்புள்ளதான்... உங்களுக்கே தெரியும்... உரிமையோட நான் திட்டுறது கண்ணதாசனைத்தான்.... இவனுக கஞ்சி ஊத்தாட்டி எனக்கு கஞ்சி ஊத்த எம்மவன் கண்ணதாசன் இருக்கான்... ஆனா எங்க ரத்தம் அடிச்சிக்கிட்டு கிடக்காது... எல்லாம் ஒண்ணாத்தான் கிடக்கும்..." கந்தசாமி பெருமையாகப் பேசினார்.

"இப்ப எதுக்கு அதெல்லாம்... முதல்ல சொத்தைப் பிரிங்க..." என்றார் அழகப்பன்.

"ம்... இல்லப்பா சண்டை கிண்டை இல்லாம மனமொத்து போகணுமில்ல..." என்றார் தணிகாசலம்.

"எல்லாரும் பேசுவாங்க... அப்புறம் எல்லாம் ஒண்ணாத்தான் கிடக்குங்க... இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு... நாளைக்கி பெரிய மச்சானுக்கு சின்ன மச்சான் விட்டுக் கொடுக்கலாம்... சின்ன மச்சானுக்கு பெரிய மச்சான் விட்டுக் கொடுக்கலாம்... மறுபடியும் ஒண்ணாவா பொறக்கப் போறோம்... என்னத்தை எடுத்துக்கிட்டுப் போகப்போறோம்... சொத்து பத்துன்னு பந்தபாசத்தை இழந்துட்டு வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறோம்... எனக்கும் எம்மச்சானுங்களுக்கும் ஒரு சின்ன பிரச்சினை... அதுக்கு காரணமும் நாந்தான்.... இருந்தாலும் கெத்தை விடக்கூடாதுன்னு வீம்பு கட்டிக்கிட்டுத்தான் நின்னேன்... அப்படியே சாகுற வரைக்கும் இருக்கணுமின்னு நினைக்கல... ஒரு நா மச்சானுங்க தேடி வருவாங்க... இல்ல பொட்டப்புள்ள பெரியவளானா மாமக்காரனை நான் அழைக்க வரவேன்னுதான் இருந்தேன்... அதுக்காக எங்கயும் என் மச்சானுங்களை விட்டுக் கொடுத்ததில்லை... எவனையும் அவங்களைப் பத்தி தப்பா பேச விட்டதும் இல்லை... இதை ஏன் இங்க சொல்றேன்னா... ரெண்டு நாளைக்கு முன்னால அவங்க என்னைத் தேடி வர, நா வீம்பு பேச... கண்ணதாசன்... அவரு மச்சான் மட்டுமில்ல... இந்தக் குடும்பத்துல சிறந்த மனிதன்... என் கால்ல விழுந்து... முடியலை... அன்னைக்கே செத்துட்டேன்... இதெல்லாம் என்ன வாழ்க்கை... வீம்பு பேசி.... என்னைத்தை சாதிச்சோம்... எல்லாரும் சந்தோஷமாத்தான் இருப்பாக... சொத்தப் பிரிக்கிறதால உறவைப் பிரிக்கிறதா நினைக்கக் கூடாது... மணி மச்சானோட மகளும்  குமரேசனோட பிள்ளைகளும் ஏன்... கண்ணதாசன்... சின்ன மச்சானோட பிள்ளைகள் என எல்லாரும் இவுகளைப் போல வேற்றுமையில்லாம வளரணும்... சொந்தத்தைத் தவிர மத்தவங்களுக்கு கண்ணதாசனை எங்க பெரியமாமா மகனாத் தெரியுமா என்ன... எங்க மாமா மகன்னுதான் சொல்லுவாங்க... அது... அந்த பாசம்... இந்த வாழ்க்கை... இதுதான் எப்பவுமே சந்தோஷம்... இது அடுத்த தலைமுறையிலும் தொடரணும்..." ரமேஷ் பேச அனைவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

"என்ன மச்சான்...அதெல்லாம் இங்க சொல்லிக்கிட்டு..." என்றான் கண்ணதாசன்.

"இல்ல மச்சான்... மாமாக்கிட்ட நீங்க சொல்லியிருக்க மாட்டீங்க... இருந்தாலும் எனக்கு இங்க குத்துது மச்சான்... உங்க பாசத்துக்கு மத்தியில நாங்களும் உங்களோட இருக்கது ரொம்ப சந்தோஷமா இருக்கு... சரி... சரி... முதல்ல பங்கைப் பிரிக்கலாம்..."

சொத்து விவரங்கள் எல்லாம் கொடுத்து இன்னாருக்கு இன்னது என பிரித்து எழுதிக் கொண்டார்கள்... சொத்துப் பிரித்த அன்று எல்லோரும் எப்பவும் போல் சந்தோஷமாக சமைத்துச் சாப்பிட்டு மறுநாள் அவரவர் இல்லத்தை நோக்கிக் கிளம்பினர்.

ன்று மாலை...

வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாளிடம் வந்தமர்ந்த கந்தசாமி "ஏலா... நேத்துல இருந்து உனக்கு முகமே சரியில்லையே ஏன்... என்னாச்சு... சொத்துப் பிரிச்சது பிடிக்கலையா... இல்ல பொம்பளப் புள்ளைகளுக்கு எதுவும் கொடுக்கலைன்னு கோபமா?" என்றார்.

"அதெல்லாம் இல்லைங்க... அதுதான் குணமான மாப்பிள்ளைங்க இருக்காங்களே... அப்புறம் என்ன..."

"அப்புறம் ஏன் முகத்தை உர்ருன்னு வச்சிருக்கே?"

"ஒண்ணாக்கெடந்த சொத்து... இன்னைக்கி பிரிச்சாச்சு... அவனுக பாசத்துலயும் பிரிவு வந்துருமோன்னு பயமா இருக்கு... எப்பவும் போல சந்தோஷமா இருப்பானுங்களா... இல்ல மத்த குடும்பம் மாதிரி அடிச்சிக்கிட்டு இருப்பானுங்களான்னு மனசைப் போட்டு பிணையுதுங்க..."

"ஏய்... அவனுக நம்ம பிள்ளைங்க... நேத்தே சின்னவனும் பெரியவனும் எவ்வளவு பெருந்தன்மையாப் பேசினானுங்க... எப்பவும் அவனுக நாலு பேரும் ஒருத்தனை ஒருத்தன் விட்டுக் கொடுக்கமாட்டானுங்க..."

"நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னாலோ இல்ல உங்களுக்கு ஒண்ணுன்னாலோ...."

"ஏய்...எதுக்கு இப்ப இதெல்லாம்...?"

"இல்ல நீ பாரு நா பாருன்னு நம்மள இங்கயும் அங்கயும் அலைய விட்டுருவானுங்களோன்னு பயமா இருக்குங்க..."

"ஏய்... அதெல்லாம் எதுவும் நடக்காது... சித்ரா பேச்சுத்தான் அப்படி... ஆனா பாசமானபுள்ளதான்... சின்னவன் பொண்டாட்டி நம்ம மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு... அப்புறம் என்ன...?"

"அக்கம் பக்கத்துல நடக்குறதைப் பாக்கும்போது..."

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..." என மனைவியை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காளியம்மாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 மார்ச், 2015

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

லைனில் இருந்து இங்கு வந்த பிறகு அலுவலகத்தில் வேலை அதிகம். மாலை 5 மணி வரைக்கும் கணிப்பொறியோடு மல்லுக்கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பினால் மூளைச் சோர்வு வந்துவிடுகிறது. அதுபோக ஒரு மாத சுற்றுலா விசாவில் குடும்பத்தை இங்கு கொண்டு வர இருப்பதால் வீடு தேடி அலைவதும் சேர்ந்து கொள்ள, வலைப்பக்க வரவு குறைந்து விட்டது. அப்பப்ப நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் வாசிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன். இனி வரும் மாதங்களிலும் மனசு காத்தாடத்தான் செய்யும் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்... காரணம்... ஏப்ரலில் குடும்ப வரவும்... மே மாத விடுமுறையில் ஊருக்கும் என கொஞ்சம் பிஸியாக இருக்கப் போவதால் அவ்வப்போது தலைகாட்டுவேன்... மறந்துடாதீங்க மக்களே.

----------------------

வீடு தேடி அலைந்தது மறக்க முடியாத அனுபவம்... பேச்சிலர் அறைகூட கிடைத்து விடும் போல... பேமிலி அறை தேடுவதென்பது மிகவும் கடினம் என்பதை உணர வைத்தது கடந்த பத்து நாட்கள்.... தினமும் அலைச்சல்... ஒரு மாதத்திற்கு மட்டும் என்றால் எவனுமே கொடுக்க நினைப்பதில்லை. சரி ஏஜெண்ட் மூலமாக பார்க்கலாம் என்று நினைத்து மலையாளிகளுடன் நடந்தால் அவனுக காட்டுற இடத்தில் நானே தங்க மாட்டேன்... அதிலும் குடும்பத்துக்கு அப்படி இடமா... காசைக் கொடுத்தும் நிம்மதியில்லாத... தங்க முடியாத இடங்கள் தேவையா என அவர்களையும் விட்டு ஒதுங்கியாச்சு.... அவனுக்கு கமிஷன் என்பதால் இது நல்ல இடம் இதைவிட வேறென்ன வேண்டும் என்று நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறான். எங்களுக்குப் பிடித்தால்தான் இது நல்ல இடம்... இல்லைன்னா இல்லை என்று சொல்லிவிட்டோம். 

பின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. அபுதாபிக்கு வந்ததில் இருந்து நான் இப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்... கட்டிடங்களும் சுத்தமான கட்டிடங்கள் என்பதாலும் அந்த இடங்களைப் பார்த்ததும் அங்கு நிற்கக்கூட பிடிக்கவில்லை. அதிலும் அவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்களைத் தங்க வைத்திருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயந்தான்.

--------------------

பாக்யா இதழின் வரும் வார மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வந்துள்ளது. நம்ம எழுதும் கருத்து நல்லாயிருக்குன்னு தொடர்ந்து பகிர்ந்து வரும் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி. மேலும் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்தும் தொடர்ந்து வெளிவருகிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.


------------------------------

லகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வாழ்த்துவோம். அரையிறுதியில் மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.


-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

கோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை, இதை இங்கு பதியலாமா என்று யோசித்திருந்த வேளையில் இரண்டாம் இடம் பெற்ற திருமதி. சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்கள் தனது தளமான இலட்சிய அம்புகளில் பகிர்ந்திருந்தார். கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக எதுவும் எழுதவில்லை... மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படிக்கவில்லை... என்ற நிலையில் என்னை மறக்காமல் இருக்க இங்கு பகிர்கிறேன்.

சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்களின் கதை படிக்க "இங்கு"  சொடுக்கவும்.
-------------------------

தீபாவளிக்கு முதல் நாள் தனது நண்பர்களுடன் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தான் ஷங்கர். போதை ஏறவும் “மாப்ள பத்தாப்பு வரைக்கும் என்னோட படிச்சாடா... இந்தா இப்ப காலேசுல ஒண்ணாத்தான்டா படிக்கிறோம்... எத்தனை தடவை லவ்வைச் சொல்லியிருப்பேன்... எனக்கு எந்தப் பதிலும் சொல்லாம என்னை வெறுப்பேத்துற மாதிரி அந்த முத்துப்பய கூட சிரிச்சுச்சிரிச்சு பேசுறாடா..."

"விடு மாப்ள இந்த பொட்டச்சிங்களே அப்படித்தான்... அழகாயிருந்தா அவளுகளுக்குப் பிடிக்காது...." வாங்கிக் கொடுத்த சரக்குக்காக பேசினான் சுமன்.

அவர்களின் பேச்சில் அவளை வறுத்தெடுத்தார்கள். முடிவில் அவளது வீட்டுக்குப்போய் காதலிக்கிறாயா இல்லையான்னு கேப்பதென முடிவெடுத்தார்கள்.

"டேய்... ஓவராக் குடிச்சிட்டீங்க... எதாயிருந்தாலும் அவ காலேசுக்கு வரும்போது பேசிக்கலாம்... இந்த நேரத்துல ஒரு பொண்ணு வீட்டுக்குப்போயி கத்துறது நல்லதில்லை... அதுவுமில்லாம விடிஞ்சா தீபாவளி, ரெண்டு பேரும் ஒரே தெருவுல இருக்கீங்க... அங்கபோயி எல்லாரு முன்னாலயும் கேவலப்படணுமா? "  பீர் மட்டும் குடித்த ஆல்பர்ட் நிதானமாகப் பேசினான்.

"ஆமா... சாமியார் சொல்லிட்டாருடா... இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்... எப்ப பாரு அட்வைஸ்... “ என்று பாண்டி சொல்ல, எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"இல்லடா அவன் சொல்றதையும் யோசிக்கணும்...  வேற ஏதாச்சும் ஐடியா சொல்லுங்கடா..." என்ற ஷங்கர் சிகரெட்டை பற்ற வைத்தான்.

அதை வாங்கி இழுத்தபடி "அவ மொபைல் நம்பர் இருக்குல்ல... அதுல கூப்பிட்டு பேசுவோம்டா..." என்றான் சுமன்.

"மாப்ள... செல் நம்பர் எதுக்குடா... வீட்டு நம்பரே இருக்கு... இந்தா பேசு..."

"இப்ப நான் சொன்னா நீங்க கேக்குற நிலமையில இல்லை... உன்னோட போனில் இருந்து பேசி ஏதாவது பிரச்சினையாகி போலீசுக்குப் போனா டிரேஸ் பண்ணி வீட்ல வந்து நிப்பானுக... பேசு.. எதாவது லோக்கல் பூத்ல இருந்து பேசு..." என்றான் ஆல்பர்ட்

"மாப்ள... மாமூ சொல்றதுதான் சரி...? வாடா காயின்போன்ல பேசுவோம்..."

"நீ பேச வேணாம்... நான் பேசுறேன்..." என்றான் சுமன்.

எதிர்முனையில் கரகரப்பாய் ஒரு ஆண் குரல்.

"தீபாவைக் கூப்பிடுங்க..."

"நீங்க...?"

"அவ பிரண்ட்ஸ்..."

"இந்த நேரத்துல பிரண்ட்ஸ்க்கு என்ன வேலை...?"

"என்னய்யா நீ... அவகிட்ட ஒண்ணு கேக்கணும்.. கூப்பிடுன்னா கூப்பிடுவியா... கிராஸ்கேள்வி கேக்குறே...?" உள்ளே போயிருந்த சரக்கு வேலைசெய்தது.

"ஏய் எவன்டா நீ... போலீசுல புடிச்சிக்கொடுத்துருவேன்..."

"என்ன மிரட்டுறே... கோத்தா நேர்ல வந்தேன்... மவனே பொழந்துருவேன்...?"

டேய் வேணான்டா’ என சைகைகாட்டிய ஷங்கரை அடக்கிய சுமன் " போ... போலீசுக்கு போ யாருக்கு கேவலம்... அங்க வந்து இவன் எல்லாம் பண்ணிட்டான் வேணுமின்னா செக்கப் பண்ணச் சொல்லுங்கன்னு சொன்னா... யாருக்குய்யா கேவலம்...?. முதல்ல உம்பொண்ணைக்  கேளு..." கத்திவிட்டு போனை வைத்தான்.

"டேய் என்னடா இப்படி பேசிட்டே...?“

"அந்தாளு ரொம்பப்பேசுறான்... என்ன நெனச்சிக்கிட்டான்... இப்ப மககிட்ட நோண்டிநோண்டிக் கேப்பான்... காலேசுல அவகிட்ட நல்லவன் மாதிரி பேசி கவுத்துடலாம்."

தீபா வீட்டில் எழுந்த அழுகுரலோடு விடிந்தது தீபாவளிக்காலை. தெருவே அங்குதான் நின்றது. ‘ராத்திரி யாரோ இவளைப்பத்தி போனில் தப்பாப்பேசியிருக்காங்க... உடனே பெத்தவங்க அவளைப்போட்டு டார்ச்சர் பண்ணி யாருடி அவன்... அவன்கூட படுத்தது உண்மையான்னு கேட்டு அடிச்சிருக்காங்க... மானஸ்தி பொறுக்கமுடியாம தூக்கை மாட்டிக்கிட்டா... எந்தப் பொறம்போக்கோ தண்ணியப்போட்டுட்டுப் பேசி, ஒரு வயசுப்புள்ளையோட வாழ்க்கையை அழிச்சிட்டான்... அந்த பொறம்போக்கு நல்லாவே இருக்கமாட்டான்... வெளங்காமப் போயிருவான்...’ என தெருவாசிகள் பேசிச்செல்ல, ஷங்கர் இடிந்து போய் உக்கார்ந்து விட்டான்.


‘இவன் வீட்டுக்கு ஒரே பையன்.. எங்க தெருவுல ஒரு புள்ளையை விரும்பியிருக்கான்... அவளை எவனோ ஒருத்தன் கேவலமாப் பேச தற்கொலை பண்ணிக்கிட்டா... அன்னைக்கு பித்துப்பிடிச்ச மாதிரி ஆனவந்தான் இன்னும் தெளியலை... பைத்தியமாயிட்டான்.  அந்த வருஷத் தீபாவளி ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையை புரட்டிப் போட்டிருச்சு... அத்தோட அவங்க சந்தோஷமும் போயிருச்சு...’ என அவனைக் கடந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டுபோக, எதையோ பார்த்துச் சிரித்தபடி தலையைச் சொறிந்துகொண்டு வானத்தைப் பார்த்துச் சிரித்தவனை அவனின் அம்மா வீட்டுக்குள் இழுத்துச்சென்றாள். 
-'பரிவை' சே.குமார்.