மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 9 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 60

முந்தைய பதிவுகளைப் படிக்க...



60.  காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் புவனாவின் அம்மா கல்யாணப் பேச்சை தள்ளிப் போட்டு மகள் படிக்க சம்மதிக்கிறாள். தங்கள் காதலுக்காக இருவரும் தனித்தனியாக இருப்பது என்று முடிவு செய்கிறார்கள்.

இனி...

"என்னடி போகும்போது குதிச்சிக்கிட்டுப் போனே வரும்போது மொகரையைத் தூக்கி வச்சிக்கிட்டு வர்றே...." என்று கேட்ட அம்மாவை முறைத்தபடி உள்ளே சென்றாள் புவனா.

"என்னடி கேக்குறதுக்கு பதில் சொல்லக் கூட முடியலையோ?" கேள்வியைத் தொடர்ந்தாள்.

"ம்... எங்கூட ஒரே யுனிவர்சிட்டியில படிக்கிறேன்னு சொன்னவ இப்போ வேற யுனிவர்சிட்டி போறாளாம்..."

"ம்... சேந்து படிச்சாத்தானா..? வரும்போது போகும்போது பாத்துக்க வேண்டியதுதான்..."

"இம்புட்டு நாளு வாறேன் வாறேன்னு சொல்லிட்டு இப்போ ஆஸ்டல்ல தங்கிப் படிக்கப் போறாளாம்... எனக்கு படிக்கவே புடிக்கலை..."

"ஏன்டி அவ ஆஸ்டல் போறாங்கிறதுக்காக படிப்புத்தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்ல நீ படிப்பு வேண்டாங்கிறே... என்னாச்சுடி உனக்கு... நீ படிக்கணுமின்னு உன்னோட கலியாணப் பேச்சைக்கூட நிறுத்தி வச்சிருக்கோம்... தெரியுமில்ல..."

"ம்... அதுக்காக எவ எங்கூட படிக்கணுமின்னு நெனச்சேனோ அவ வரலைன்னா கடுப்பு வருமா வராதா?"

"அவளா இல்ல அவனாடி?"

"ம்... வேலையப் பாருங்கம்மா... அவளா அவனான்னு பட்டி மன்றம் நடத்தாம... அவ வரலைன்னா என்ன நான் படிப்பேன்... படிக்கிறேன்... போதுமா?"

"என்னமோ போ... உன்னோட போக்கு எங்களுக்குப் பிடிக்கலை... அம்புடுத்தான்..."

"பிடிக்கலைன்னா விட்டுடுங்கம்மா.... நானே கடுப்புல வந்திருக்கேன்... எனக்கு சாப்பாடுல்லாம் வேண்டாம்... சும்மா நொய்யி நொய்யின்னு கத்திக்கிட்டே இருக்காதீங்க... அப்புறம் அந்தப்பயனா இந்தப்பயனா அப்படியெல்லாம் ரொம்ப யோசிக்காதீங்க.. எனக்கு இப்போ படிப்பு மட்டும்தான் முக்கியம் வேற எதுவும் இல்லை ஓகேவா..." என்றபடி அறைக்குள் புகுந்து கொள்ள மகளின் போக்கு பிடிபடாமல் உதட்டை பிதுக்கியபடி அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.


"என்னடா சொல்றே...? திருப்பூர் போறியா...? இப்போ திருப்பூர் போக என்ன அவசியம் வந்துச்சுன்னேன்..." கஞ்சியில் எலுமிச்சை ஊறுகாயைக் கரைத்தபடி மகனைப் பார்த்துக் கேட்டாள் நாகம்மா.

"ம்... காரைக்குடியில சேர்ந்தா ரெண்டு மூணு வருசம் படிப்புக்குச் செலவழிக்கணும்... தினமும் பொயிட்டு வரணும்... செலவும் அலைச்சலும் இருக்கும்... படிப்புக்காக அண்ணனை கஷ்டப்படுத்தனும்... இனி அதுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குல்ல... காலேசு படிக்க வச்சிச்சு... இனி என்னோட படிப்பை நானே பாத்துக்கிறதுதானே நல்லது... அதனால..."

"அதனால..." வாய்க்கு கொண்டு போன சோற்றை கையில் வைத்தபடி கேட்டாள்..

"அதனால நம்ம சேவியர் திருப்பூர்ல இருக்கான்... எதோ ஒரு பனியன் கம்பெனிடை லீசுக்கு எடுக்கிறதா சொல்றான்... அங்க போன அவன் கூட இருந்துக்கிட்டு எதாவது ஒரு யுனிவர்சிட்டியில கரஸ்ல போட்டு படிக்கலாம்ல... படிப்புச் செலவுக்கும் ஆச்சு... அதுல கொஞ்சம் உனக்கும் மாசாமாசம் அனுப்பலாம்ல்ல... அதான்..."

"ம்... பரவாயில்லையே தம்பிக்கு பொறுப்பு வந்திருச்சு போல..."

"ரெண்டு மூணு வருசம் அங்க இருந்தா தொழில் கத்துக்கிட்டு எதாவது செய்யலாம்ல்ல... அண்ணனுக்கும் பாரம் குறையுமில்ல..."

"எல்லாஞ் சரித்தான்... அந்தச் சிறுக்கியும் அங்கிட்டு வாறாளோ...?"

"யாரு?" தெரியாதது போல் கேட்டான்.

"அடேயப்பா... யாருன்னு தெரியாது பாரு... அதான்டா உன்னைய வளச்சிப் போட்டு வச்சிருக்காளே அந்த  சிவப்புத் தோலுக்காரி..."

"யாரு புவியா?" கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான்.

"செல்லமா கூப்பிடுவியளோ... சரித்தான்... புவியோ... கவியோ... அந்த சிறுக்கிதான்..."

"அம்மா இப்ப எதுக்கு அந்தப் பொண்ணப் பத்திப் பேசுறீங்க... அவ எங்க படிக்கப் போறான்னெல்லாம் எனக்குத் தெரியாது... எனக்கு இப்போ மேல படிக்கணும்... படிப்பு முக்கியம்... யாரைப் பற்றியும் எனக்கு கவலையில்லை... நான் ரெகுலர்ல சேரலை... கரஸ்ல படிக்கப் போறேன்... சேவியர்கிட்ட பேசிட்டு அடுத்த வாரத்துல திருப்பூர் போறேன். அம்புட்டுத்தான்."

"ஆத்தா மாரி.... முனியய்யா... இதுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து எங்கிட்டோ கெட்டிக்காரத்தனமா பொழச்சிக்கிற வழியைக் காட்டிருங்க..." என்று சோத்துக் கையோடு கோவில் இருக்கும் பக்கம் திரும்பி கும்பிட்டாள்.


"என்னடா சொல்றே... திருப்பூர் போறியா?" அண்ணாத்துரை கேட்க, "ஆமாடா... சேவியர் அடுத்தவாரம் வர்றானாம். அவன் கூட போயிரலாம்ன்னு பார்த்தேன்."

"முடிவே பண்ணிட்டியா?" - பழனி 

"இதுல முடிவு பண்ண என்னடா இருக்கு... இவனுக ரெண்டு பேரும்தான் சொன்னானுங்க... யோசிச்சேன் அதுதான் சரியின்னு தோணுச்சு... முடிவு எடுத்துட்டேன்..."

"சரி... புவனாகிட்ட சொன்னியா? ஆவலாய்க் கேட்டான் அறிவு.

"எல்லாம் சொல்லி ஓகே பண்ணியாச்சு... படிப்பு முடியும் வரை பிரச்சினை இல்லை பாரு... அதான்..." என்றான்.

"ஆமா புவனாக்கிட்ட பேசிட்டியா?" அறிவு கேட்டதையே சரவணனும் திரும்பக் கேட்டான்.

"பேசிட்டேன்... அவளுக்கும் ஓகே..."

"அய்யோ பாவம்" அண்ணாத்துரை முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

"என்ன நொய்யோ பாவம்" என்றபடி அண்ணாத்துரை தலையில் தட்டினான் ராம்கி.

"இல்ல காதல்... காதலி... அந்த முத்தம்... ராம்.., ராம்... மந்திரம் எல்லாத்தையும் விட்டுட்டுப் போகணுமேன்னு உன்னைய நினைச்சு எனக்கு வருத்தமா இருந்துச்சு..." 

"ஆமாடா பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டியையும் ஆட்டி விடுங்கடா... நாங்க பிரியிறதே எங்க காதல் கடைசி வரை நீடிக்கணுமின்னுதான்..."

"எனக்குத் தெரியுண்டா... சும்மா சொன்னேன்... உன்னோட காதலை நாங்க வாழ வைப்போம்டா..."

"எனக்கு உங்க துணையிருக்கும் போது என்னடா கவலை... சரி... நம்ம தலைவர் யாருக்கோ புரபோஸ் பண்ணியிருக்காருடா..." என்றபடி சரவணனைக் கண்காட்ட, எல்லோரும் சரவணனைச் சுற்றிக் கொண்டார்கள்.

"இது எப்போ..? யாருடா அவ..?"

"அட அது ஊத்திக்கிச்சுடா... அவ பேரைச் சொல்லி என்னாகப் போகுது... விடுங்கடா.... அவ இவனுகிட்ட சொல்லாம இருக்க மாட்டளே... யார்கிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருப்பா அப்பவே எல்லார்கிட்டயும் போட்டு ஓடைக்கணுமின்னு வந்திருப்பான்... கள்ளன்..." என்று ராம்கியின் தலையில் கொட்டினான்.

அண்ணாத்துரைக்கு யார் என்று புரிந்து போக, "மாமா மகன் மாலையோட இருக்கான்டோய்... எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே... சரி இதை இத்தோட விடுங்கடா... வாங்க போகலாம்..."

"டேய் நான் திருப்பூர் போனதும் அக்கா பிரச்சினையை சரி பண்ணனும்டா... மறந்துடாதீங்க... புவிக்கு எதாவது ஹெல்ப்ன்னா நீங்கதான்டா பண்ணனும்... சரியா..."

"அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்... அக்காவோட வாழ்க்கைப் பிரச்சினையை நாங்க பாத்துகிறோம்... எல்லாரும் காரைக்குடியிலதான் படிக்கப் போறோம்..."

"சரிடா... வாங்க கிளம்பலாம்..."

ராம்கி திருப்பூர் போக, புவனா காரைக்குடியில் படித்தாள். ராம்கி ஊருக்கு வரும்போதெல்லாம் அவளைச் சந்திக்காமல் செல்வதில்லை. மல்லிகா வீட்டிற்கு வரச்சொல்லி போனிலும் பேசினான். ராம்கி தனது படிப்பை கரஸ்சில் தொடர்ந்தான்.

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகப் போய்க் கொண்டிருக்க, சீதாவின் கணவன் முத்துவை ராம்கியின் நண்பர்கள் கவனிக்கும் விதமாக கவனிக்க ஆள் அதன்பிறகு தனது ஆட்டபாட்டத்தை அடக்கி தேவகோட்டையில் ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்து மனைவியுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தான். எல்லாருக்கும் அவன் திடீரெனத் திருந்தி வாழ ஆரம்பித்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. மல்லிகாவுக்கும் அவளது மாமா மகனுக்கும் திருமணம் முடிந்து மல்லிகா திருச்சி மலைக்கோட்டைப் பக்கம் செட்டிலாகிவிட்டாள்.

ராசுவுக்கு கல்யாணம் முடிந்து மீண்டும் சிங்கப்பூர் செல்ல வந்தவளுக்கும் நாகம்மாளுக்கும் ஒத்துப் போகவில்லை. தினமும் அவர்களுக்குள் வந்த சின்னச் சின்னச் சண்டை வாய்க்காய் வரப்புத் தகராறாக முத்திக் கொண்டு நிற்க, மனைவியின் மந்திரத்துக்கு மயங்கிய ராசு அவளை தேவகோட்டையில் தனிக்குடித்தனம் வைத்தான். அம்மாவுக்கு வாரம் ஒரு முறை வந்த போன் மாதம் ஒரு முறையாக மாறியது. 

அடிபட்ட மணி பல மாதங்களாகியும் எழுந்து நடக்க முடியாத நிலையில்தான் இருந்தான். சாவை வென்று வந்தாலும் நடைபிணமாகக் கூட இல்லாமல் கிடைபிணமாகவே வாழ்ந்தான். 

சேகர் - கவிதாவின் கல்யாணத்துக்காக ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்கு வந்தான். சேகரின் திருமணத்துக்கு புவனாவும் வருவதாகச் சொல்லியிருந்தாள் அவளைச் சந்திக்கும் சந்தோஷம் ஒரு புறம் இருக்க, ஐயா வீடு போய் அவர்களைப் பார்த்து வந்தான். வாழ்க்கை சம்பந்தமான பல விஷயங்களை அவனுக்கு எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டான்.

நாகம்மா மூத்த மகனை நினைத்து இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருப்பதை பார்த்த ராம்கிக்கு மனசு வலித்தது. அம்மா ஏம்மா அழுகுறே.... அண்ணன் எங்கம்மா போயிருச்சு... ஒரு நா இல்லாட்டி ஒரு நா வரும்மா... நா இருக்கேம்மா உனக்கு... என்று அவளுக்கு ஆறுதல் சொன்னவன் அவளின் ஒரே ஆறுதலாக மாறிப்போனான். 

அம்மாவை தவிக்க விட்டு புவனாவுடன் சென்றால் அம்மாவின் நிலை என்னவாகும் என அவனை யோசிக்க வைத்தது நாகம்மாவின் கண்ணீர், புவனாவா அம்மாவா என்ற தவிப்பான நிலையில் தூக்கத்தைத்  தொலைத்து தவித்தான் ராம்கி.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

தனிமரம் சொன்னது…

தூக்கத்தைத் தொலைத்து தவித்தான் ராம்கி./அன்றைய இரவு இன்னொரு சிறை போல இருந்து இருக்குமோ ராம்கிக்கு!ஹீ