மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 19 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 62

முந்தைய பதிவுகளைப் படிக்க...



62.  ஜோடி சேர்ந்தாச்சு

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்தில் இருவரும் பார்த்துக் கொள்ள, சீதாவும் புவனாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேகரின் திருமணத்திற்காக வந்த புவனாவையும் போட்டோவுக்கு நிற்க கூப்பிடச் சொல்கிறாள் நாகம்மா.

இனி...

ந்தப் புள்ளையையும் கூப்பிடு என்று அம்மா சொன்னதும் நம்ப முடியாமல் பார்த்தான். சொல்வது அம்மாதானா... இது உண்மைதானா... என்று அவனுக்குள் கேள்வி எழ, "எதுக்கும்மா அவங்க... அதான் அக்காவும் மச்சானும் சேர்ந்து நின்னு போட்டோல்லாம் எடுத்துட்டாங்கள்ல... நாம குடுத்துட்டு வருவோம்..." என்றான் மெதுவாக.

"அட ஏ உங்கக்கா உனக்குப் பக்கத்துல நின்னா உனக்கு கவுரதை போயிருமோ..? கூப்பிடுடான்னா... வியாக்கியானம் பேசுறே..."

"ம்...அதுக்கில்ல... அந்தப் பொண்ணையும் கூப்பிடணுமான்னு..."

"அவள உன்னோட பொண்டாட்டியாவா கூப்பிடச் சொன்னேன்... உனக்குத் தெரிஞ்சபுள்ள இங்க யாரும் தொணைக்கு இல்ல... அதான் நம்ம கூட போட்டாவுக்கு நிக்கட்டுமேன்னுதான் கூப்பிடச் சொன்னேன்..."

இதுக்கு மேல பேசி அம்மா வேணான்னு சொல்லிட்டா உள்ளதும் போயிடும் என்று நினைத்தவன் "சரிம்மா... இந்தாக் கூப்பிடுறேன்..." என்றபடி அவர்களிடம் போய்க் கூட்டி வந்தான். புவனாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரு பக்கம் பயமாகத்தான் இருந்தது. மெதுவாக தயங்கித் தயங்கி வந்தாள்.

"என்ன யோசனை... சும்மா வா... என்னமோ எங்கம்மா மனசு வந்து கூட்டியாரச் சொல்லியிருக்கு... அப்புறம் மனசு மாறினாலும் மாறிடும்." என்றபடி புவனாவின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா.

மணமக்களுக்கு அருகில் சீதா அம்மா பக்கத்தில் நிற்க, ராம்கி சேகருக்கு அருகில் நின்றான். அவனுக்கு அருகில் புவனா போய் நிற்கப் போக, "டேய் நீ இங்கிட்டு வா...அக்காவும் அந்தப் புள்ளையும் அங்கிட்டு நிக்கட்டும்" என்ற அம்மாவின் ஆணைக்கு இணங்கி ஒன்றும் பேசாமல் காவேரிக்கு அருகில் போய் நின்றான். புவனா சிரித்துக் கொண்டாள்.

"என்ன எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி போட்டுட்டிங்களா?" என்று அவனின் காதைக் கடித்தாள் காவேரி.

"நீ சும்மா இரு... எங்கம்மாவே எப்படி இப்படி மாறிச்சின்னு எனக்கு இன்னும் புரியல... நீ பாட்டுக்கு எதையாவது கிளப்பி விடாதே..." என்றான் மெதுவாக.

"அருமையான ஜோடிடா... சூப்பர்...  உங்க ரெண்டு பேரையும் தனியா போட்டோ எடுக்கச் சொல்லணும்" என்றாள்.

"ஆமா இப்ப அதுதான் குறைச்சல்... பேசாம கேமராவைப் பாரு..."  

"சரி... நீ உடனே போயிடாதே... எனக்கு உன்னோட ஆளுக்கிட்ட பேசணும்"

"சரி..." என்றவன் இயல்பாய் சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தான்.

"சரி வாடா..." என்றபடி அம்மா இறங்க, "நீ போம்மா... நான் சேகர்கிட்ட பேசிட்டு வாறேன்..." என்றபடி சேகர் பக்கம் நகர்ந்தான். அக்காவும் அம்மாவும் இறங்க, புவனாவிடம் நிற்கும்படி கண்காட்டினான்.

அங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாதிசனம் மெதுவாக முத்துவின் வாயைக் கிளறியது.

"யாருடி அவ சினிமாக்காரியாட்டம் இருக்கா... அப்பவே உனக்கிட்ட கேக்கணுமின்னு பாத்தோம்... இந்த நாகம்மா வேற சொந்தக்காரியாட்டம் அவளையும் கூட்டிக்கிட்டுப் போயி போட்டோ எடுக்கிறா?"

"ம்... அவதான் நாகம்மாவோட சின்ன மருமவ... சீதா கலியாணத்துக்கு வந்திருந்தாளே... பாக்கலையா" தான் சொன்னதை நாகம்மா கேட்கவில்லை என்ற கோபத்தில் இருந்த முத்து மெதுவாக பத்த வைத்தாள்.

"என்னடி சொல்றே... பாத்த மாதிரித் தெரியலையே... ஆமா அவளப் பாத்தா ......சாதிக்காரி மாதிரி இருக்கா....?"

"ஆமா அவ அந்த சாதிக்காரிதான்... பய அவளை விரும்புறான்... அப்புறம் நாகம்மா என்ன பண்ணுவா..."

"நல்லாயிருக்கே... சாதிசனத்துல பொண்ணு இல்லாமயா போச்சு... எவளோ ஒரு சாதிக்காரிய கட்டிக் கூட்டியாற..." ராம்கிக்கு தனது மகளைக் கட்டி விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டும் மீனா எங்கே தனது மகளுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையில் குதித்தாள்.

"இதுவரைக்கும் அவளுக்கு இதுல விருப்பம் இல்ல... ஆனா இன்னைக்கு இந்த சீதா அவளைக் கூட்டி வச்சிப் பேசவும் இவ மாறிட்டாளோன்னு தோணுது..."

"ஆமா... குடும்பத்தை தூக்கி நிறுத்துவான்னு கட்டிக்கிட்டு வந்தவ அத்துக்கிட்டுப் பொயிட்டா... இவளப் பாத்தாலே பெரும் பந்தாக்காரி மாதிரி இருக்கு... சாதிவிட்டு சாதி கலியாணம் பண்ணிக்கிட்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்...  அப்புறம் சாதி சனமுன்னு நமக்கு என்ன மருவாதை இருக்குன்னேன்"

"அட விடுங்க... நமக்கென்ன வந்துச்சு... ஆனா அவள மருமவளாக்குவேன்னு நாகம்மா சொன்னா ஊருல கூட்டம் போட்டு ஒண்ணுல ரெண்டு கேட்டுப்புடணும்... ஆமா..." முத்து மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள்.

"ஆமா...ஆமா... நம்ம் சாதிசனத்துக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல... இதுவரை யாருஞ்செய்யாததை இவன் செஞ்சா... விட்டுடுவோமா என்ன..."  இவர்களின் பேச்சு காரசாரமாகப் போய்க் கொண்டிருக்க, மணமக்கள் அருகில் நின்ற புவனாவிடம் "ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி.... நீ இங்க வந்தது... அதைவிட சந்தோஷம் எங்க அயித்தை உன்னையும் கூட்டிக்கிட்டு வந்து போட்டோ எடுத்தது" என்றான் சேகர்.

"எனக்கு இது கனவா... நனவான்னே தெரியலண்ணே..... சந்தோஷமா இருந்தாலும் இன்னும் படபடப்பு அடங்கலை... "

"இனி பிரச்சினை இல்லம்மா... பயப்படாதே.... டேய் மச்சான்... எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..."

"ம்..."

"என்ன உம்மு... வாங்க நாங்க ரெண்டு பேரும் ஒரு பக்கமா நிக்கிறோம்... நீங்க ரெண்டு பேரும் ஒரு பக்கம் நில்லுங்க... போட்டோ எடுக்கலாம்..." என்றாள் காவேரி.

"அடி ஆத்தி... நீ வேற... எங்கம்மா முன்னாடி உக்காந்து பாக்குற பார்வையைப் பாத்தியா... சும்மா பத்த வச்சி விட்டுறாதே..."

"அட எதுக்குப் பயப்படுறே... பேசாம நில்லு அப்புறம் பாத்துக்கலாம்... இப்ப போட்டோ எடுப்போம்... அண்ணி கூட நின்னு ஜோடிப் பொருத்தம் எப்படின்னு நம்ம மக்களைப்  பேச வைக்கலாம்... அண்ணி நீங்க நில்லுங்க... இவன் ஒரு பயந்தாங்கொள்ளிப் பய... அழகான அண்ணிக்குப் பக்கத்துல நிக்க இப்படிப் பயப்படுறே... எதோ ரெண்டு புள்ளங்க வந்தப்ப என்னோட ஆளு என் பக்கமே திரும்பல... முகத்துல வந்த சிரிப்பைப் பாக்கணுமே... சீ... போ... போயி நில்லு..." என்று காவேரி சொல்ல பேசாமல் புவனாவுக்கு அருகில் நிற்க, "அண்ணி அவனோட கையை நறுக்குன்னு புடிங்க... விடாதீங்க" என்று சொல்ல புவனா சிரித்தபடி அவனைப் பார்க்க கேமரா அந்தக் காட்சியை தனக்குள் வாங்கிக் கொண்டது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கவும் வந்திருந்த சாதிசனமெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்தது. நாகம்மா பார்த்தும் பார்க்காதது போல் சீதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, சீதா அதைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டாள்.

ராம்கி புவனாவுடன் நேராக அம்மாவிடம் வந்தான். அவனைப் பார்த்தவள் "என்னடா... ஊருக்குச் சொல்லிட்டியா?" என்றாள்..

"எதை..?" தெரியாதது போலக் கேட்டவன் "சரி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு இந்தா வாறேன்..." என்றபடி அங்கிருந்து நகர, சீதை உக்காரு என்று கண்ணைக் காட்ட, நாகம்மாவைப் பார்த்தபடி புவனா மறுத்தாள்.

"ஊருக்கு முன்னால  ஜோடி போட்டு நிக்கிறாக ஜோடி போட்டு... இதுல எதுவுமே தெரியாத மாதிரி கேள்வி வேற..." என்று சொன்னவள் புவனாவைப் பார்த்து "எதுக்கு நிக்கிறே... ஒக்காரு..." என்றபடி நாகம்மா தள்ளி அமர,  அவளுக்கு அருகே பேசாமல் அமர்ந்தாள்.

இதையெல்லாம் பார்த்த முத்துவின் வயிறு எரிய ஆரம்பிக்க "பாருங்கடி மருமவள பக்கத்துல உக்கார வைக்கிறதை... இதுக்கெல்லாம் இவ ஊருக்கு பதில் சொல்லித்தான் ஆவணும்..." மனசுக்குள் கருவியபடி மற்றவர்களிடம் சொல்லி விட்டு நாகம்மா என்ன பண்ணுகிறாள் என்பதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

"வீட்ல ஒத்தப் புள்ளையா நீயி...?" நாகம்மா மெதுவாகக் கேட்டாள்.

"இல்ல அண்ணன் இருக்கான்..."

"ம்... பொட்டப்புள்ளயா ஒத்தப்புள்ளையான்னு கேட்டேன்..." என்றாள் கடுப்பாக.

"ம்... ஆமா..." பயத்துடன் பதில் சொன்னாள்.

"ஆமா... ஆத்தா அப்பனைவிட எங்கவூட்டுப் பய முக்கியமாப் பொயிட்டானா?"

"...." பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி இருந்தவள் 'மாட்டி விட்டுட்டு இவன் எங்க போனான்...லூசு...' என்று மனதுக்குள் ராம்கியைத் திட்டினாள்.

"அம்மா... இப்ப எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம்... தம்பிய அவளுக்குப் பிடிச்சிருக்கு... இவகிட்ட என்ன குறை இருக்கு சொல்லு... அவனுக்கு மனசுக்குப் பிடிச்சவ பொண்டாட்டியான அவனோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குமுல்ல..."

"அதுக்காக... வேலியில போற ஓணானை பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு கத்தச் சொல்றியா... இவ இங்க ஜோடி போட்டதுக்கே நாக்கு மேல பல்லப் போட்டு நாலு பேரு பேசியிருப்பாளுங்க... ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமுன்னு எதாவது பண்ண ஆரம்பிச்சிருவாளுங்க..."

"நல்லாயிருக்கே... ஊருக்காக நம்ம இல்லம்மா... நமக்காகத்தான் நாம... அவனோட மனசுக்குப் பிடிச்சவளை கட்டிக்க ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமெல்லாம் எதுக்குன்னேன்.... அவன் பாட்டுக்கு இவளக் கட்டிக்கிட்டு வாழட்டும்...."

"இப்ப ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல... பின்னாடி பாக்கலாம்..."

அப்போது ராம்கி அங்கு வர,  புவனா எழுந்தாள்... அம்மா கவனிக்காத சமயத்தில் சீதா அவனிடம் புவனாவைக் கூட்டிக்கிட்டு போகும்படி கண் ஜாடை செய்தாள்.

"அப்ப... நான் கிளம்புறேம்மா...  அக்கா வாறேங்கா..." என்றபடி புவனா கிளம்ப, ராம்கி அவளுடன் சேர்ந்து நடந்தான். நாகம்மா அவர்கள் போவதையே வெறித்துப் பார்க்க, திருமணத்திற்கு வந்த பெரும்பாலான கண்கள் அவர்களின் பின்னே பயணித்ததன.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

"எனக்கு இது கனவா... நினைவான்னே தெரியலண்ணே..... சந்தோஷமா இருந்தாலும் இன்னும் படபடப்பு அடங்கலை... "

"இனி பிரச்சினை இல்லம்மா... பயப்படாதே.... டேய் மச்சான்... எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..."

- கலகலப்பு!..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நண்பரே

Unknown சொன்னது…

நல்ல சந்தோஷமாத் தான் இருக்கு,கெடுத்துப்புடாதீங்க சார்!

தனிமரம் சொன்னது…

அடுத்த கட்டம் என்னாகும்??