மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 மே, 2016

சிறுகதை : கடைசி வரை காணாமல்...


திகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.

''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.

''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''

''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.

''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.

''எப்படிப்பா...'' அழுகை பீறிட்டது.

''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...''  பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.

''அண்ணனுக்கு போன் பண்ணிட்டிங்களா...?''

''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?''  கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.

''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா எங்க அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.

''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.

அவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...?' என்று பதறினர்.

''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். அவனைச் சூழ்ந்து ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.

''இப்ப நீ போகணுமில்லயா...''

''போகணும்... ஆனா...''

''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''

''ம்...'' என்றவன் கண்கள் மட்டும் அருவியாக.

''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''

''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.

''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார்.''

''எப்படிப்பா... நம்ம கம்பெனியிஸ ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறு மாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா...  அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''

''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.

''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''

எம்.டி.யிடம் வெகு நேரம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது.

ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப்பட்டு அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

ண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

மனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான்.  கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்ற நம்பிக்கை முளைத்த போது அழுகை வெடித்தது.

அப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும்,  நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.

சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.

''என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...''

''விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.அம்மாவை தூக்கிட வேணாம்ணே...''

''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.

போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.

''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.

''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும்.  எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.

தனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

ரில்...

''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.

''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''

''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.

''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.

விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே... திருச்சி வந்துட்டேன். எப்படியும் ஒரு மணி நேரத்தில வந்துடுவேன்...''

''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''

''சுடுகாட்டுக்கா...''

''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இப்ப தூக்கப் போறேம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்...  வேகமாக வந்துடு''

''ச...சரிண்ணே...''

விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் கண்களை மூடியபடி அழுகையை அடக்கிக் கொண்டான்.

''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''

''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.

அப்போது ஒரு சில துளிகள் தூறல் விழுக, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''

''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்'' சம்மதித்தார் மாணிக்கம்.

சுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் கண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.

அவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு நகரும் போது வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.

காரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி, டிரைவரிடம் சற்று நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்...

எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ''அம்மா...''  என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான்.

(தமிழ் சிகரம்.காமில் வெளிவந்து சிறுகதைகள் தளத்தில் ஆகஸ்ட்-2009-ல் பதியப்பட்டது... மீள்பகிர்வாக உங்கள் பார்வைக்கு)
-'பரிவை' சே.குமார்.

சனி, 7 மே, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-16)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


ம்பேத்கார் வண்டியை நிறுத்தவும் 'இதுவரையும் எதுவும் பேசாமல் வந்தவன் இங்க நிப்பாட்டி திட்டப் போறானோ...?' என்று நினைத்த கண்ணன் “என்னடா...” என்றபடி இறங்கினான் .

“ம்... தம் அடிக்கணும்... சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கு...” என்றவன் அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் சிகரெட் வாங்கி அவனுக்கு ஒன்றை நீட்டினான்.

“வேணான்டா...” என்றவன் வண்டியில் சாய்ந்து நின்று கொண்டான். அம்பேத்கார் சற்று தள்ளி நின்று சிகரெட்டை இழுத்தான்.

“டேய்... என்னடா எதுவுமே பேசமாட்டேங்கிறே...?” கண்ணன்தான் ஆரம்பித்தான்.

“என்ன பேசணும்...?”

“இல்ல நான் செஞ்சது தப்புன்னு எங்கிட்ட நீ பேசமாட்டேங்கிறே...? அப்படித்தானே...?”

“அப்படி என்ன செஞ்சிட்டே... நண்பனுக்கு வாக்கப்பட வேண்டியவளை நீ கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்கே... இது நட்புக்கு செய்யும் மிகச் சிறந்த செயல்தானே.... இதுல நான் என்ன பேச வேண்டியிருக்கு... அவளுக்கு தயிர் சாதம் சாப்பிடுற அம்பியைவிட மாமிசம் சாப்பிடுற இந்த தம்பியை பிடிச்சிருக்கு... நான் என்ன சொல்லட்டும்... அதான் பூ வச்சி விட்டாச்சே... பின்ன என்ன... நடக்கிறது நடக்கட்டும்...”

“பூ நா... எங்கே வச்சேன்...?”

“ம்... இதை காதோரமா வையி அழகா இருக்கும்ன்னு சொல்றதும் ஒண்ணுதான்... வச்சி விடுறதும் ஒண்ணுதான்... அதான் புருஷன் பொண்டாட்டி மாதிரி ஒரசிக்கிட்டு உக்காந்திருந்தியளே...”

நல்லவேளை அவ கையைப் பிடிச்சதை பார்க்கலை போல என நினைத்துக் கொண்டு “செஞ்சது தப்புத்தாண்டா... இனி என்ன பண்ணட்டும்...” என்றான்.

“ஒண்ணும் பண்ண வேண்டாம்... அவ கையை பிடிச்ச உன்னோட கையை ஒரு பத்து நாளைக்காவது தண்ணி படாம பாத்துக்க... இல்லேன்னா அவ வாசம் போயிரும்...” என்றான்.

“டேய்....” எனக் கத்திய கண்ணன் ‘படுபாவி அதையும் பாத்துட்டியா’ என்று மெல்ல முணங்கினான்.

“என்ன... என்ன சொன்னே?”

“ஒண்ணும் சொல்லலையே...”

“தெரியும்டி... உனக்குத்தான் தெரியுமே... நம்ம பக்கம் பொண்ணு பார்த்து பிடிச்சிப் போச்சின்னா பூ வச்சி விட்டுட்டு வருவாங்க... அது நிச்சயம் பண்ணினதுக்கு சமம்... என்ன பெரியவங்க பூ வச்சி விடுவாங்க... இங்க நீயே வச்சி விட்டுட்டு வந்திருக்கே.. அம்புட்டுதான்...”

“என்னடா நீயி...”

“பின்ன என்ன... இறங்கிட்டே... இனி என்ன சொல்றது... படிப்பு முடியிற வரைக்கும் சாரதிக்கோ அவன் வீட்டுக்கோ தெரிய வேண்டாம்... பின்னாடி தெரிய வரும் போது பிரச்சினைகள் எப்படி சுழலுதோ அதுக்கு தகுந்த மாதிரி முடிவெடுக்கலாம்... என்ன மாடு மேய்க்கிறவளை கட்டினா உன்னை மவராசன்னு உங்கப்பா சொல்வாரு... நீ மாமியையில்ல கட்டப் போறே... மல்லாக்கப் போட்டு வெட்டுனாலும் வெட்டுவாரு... பார்க்கலாம் வா...” என்றபடி சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினான்.

அவர்களின் காதல் மெல்ல மெல்லப் பயணிக்க, கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.  கண்ணன் மேலே படிக்கும் எண்ணம் இருந்தாலும் வேலைக்குப் போய்க் கொண்டே படிக்கலாம் என முடிவு செய்து அதற்கான முயற்சியில் இருந்தான். சாரதி மேலே படிக்க விரும்பவில்லை. அம்பேத்கார், பிரவீண், ஜாகீர் மூவரும் ஒரே கல்லூரியில் மேற்படிப்பில் சேர்ந்தனர். சுபஸ்ரீயும் மதுரையிலேயே மேற்படிப்பைத் தொடர்ந்தாள். கண்ணனையும் சேரச் சொல்லி வற்புறுத்திப் பார்த்தாள்... ஆனால் அவன் தனது கொள்கையில் பிடிவாதமாக நின்றான்.

சில மாதங்களுப்பிறகு... சாரதிக்கும் சுபஸ்ரீக்கும் திருமணத்தை முடித்து விடலாம் என்றும் அதன் பின் அவள் தன் படிப்பைத் தொடரட்டும் என்றும் வீட்டில் முடிவு செய்த விவரத்தை கண்ணனிடம் சொல்லி, இனி பேசாமல் இருந்தால் சரி வராது என்று சொன்ன சுபஸ்ரீயிடம் யாரிடம் பேசுவது..? எப்படிப் பேசுவது..? என்றெல்லாம் பேசி முடிவு செய்தான் கண்ணன்.

அந்த நாளும் வந்தது.

வேலாயுதம் வெறி கொண்டு கத்த, பிரச்சினை வேறு கோணத்தில் பயணிப்பதை உணர்ந்த  பஞ்சநாதன், “ஏம்ப்பா விடுங்கப்பா... என்ன இது சின்ன பிள்ளைங்க மாதிரி...  ஏம்ப்பா வாசு... அந்த பய விரும்புன பொண்ணோட சந்தோஷமா வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கான்... ஆணவக் கொலையை எதிர்க்கிற நீ அவனைக் கொல்லச் சொல்றே... இதுதான் நீ வாத்தியாரா இருந்து பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற படிப்பா... போப்பா... போயி வேலையைப் பாரு... ஏய் வேலாயுதம் அவன் என்ன சொல்லிட்டான்னு மூத்தவனை வெட்டுவேன் கொத்துவேன்னு... உம் மவன் மனசுக்குப் புடிச்சவளோட வாழுறான்... அவளும் நீ சொன்னியே அந்தப்புள்ளை மாதிரி யாரும் வேணாம்ன்னு எழுதிக் கொடுக்கலை... நாமளும் அப்படி உம் மவனுக்கிட்ட சொல்லி எழுதி வாங்கலை... நீ ஏத்துக்கலை... உனக்குப் பிடிக்கலை... அத்தோட விடு... அதை விட்டுட்டு நாலஞ்சி வருசத்துக்கு அப்புறம் அவன் வந்தா வெட்டுவேன் குத்துவேன்னு சொல்லிக்கிட்டு... பேசாம இருக்கமாட்டே... நீங்க ரெண்டு பேரும் ஊருக்குள்ள சாதிச் சண்டையைக் கொண்டாராம விடமாட்டீங்க போல...” கோபத்தில் கத்தினார் பஞ்சநாதன்.

“என்ன மாமா... இவருக்கு என்னவாம்... எப்பப் பார்த்தாலும் சாதி சாதியின்னு... இவரு மகன் இருக்க எடமெல்லாம் தெரியும்... கையைக் காட்டி விட்டுருவோமா... கூறு போட்டுட்டு வந்திருவானுங்க... “ வெறியோடு பேசினான் அங்கு வந்த ராசு.

“ஏய் சும்மா இருப்பே... நீ அவனை வெட்ட ஆளு விடுவே... அவனுக்கு வேண்டியவன் உன்னைத் தூக்கிப் போட்டு வெட்டுவான்... அப்புறம் உன்னோட அண்ணந்தம்பிங்க இவனை வெட்டுவானுங்க... இப்படி வெட்டிக்கிட்டு சாங்கடா... வயசுப் புள்ளைகளுக்கு இந்த வெறி கூடாதுடா.... வாசு பயலுகளுக்கு சொல்லி வை...”

“அப்புறம் சாதி சாதியின்னா ரத்தத்தைக் கொடுக்கத்தான் வேணும்...”  என்ற ராசுவை “ஏய்... சும்மா இருக்கமாட்டே...  பஞ்சநாதா... நான் கெளம்புறேன்... சொல்லி வையி.... சும்மா சாதி... சாதியின்னு கத்திக்கிட்டு இருக்காம... வாழப்போற கொஞ்ச நாள்ல நல்லது செஞ்சிட்டுப் போனோம்ன்னு இருக்கனுமின்னு... “ என்ற வாசுதேவன் “ராசு... வா.... ஏய் எல்லாரும் வாங்கப்பா..” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

“பாத்தியா... அந்தப் பயலுக வேகத்தை... உனக்குப் பிடிக்கலையா... ஒதுங்கியிரு... அதை விட்டுட்டு... தேவையில்லாத வேலை பாக்காதே... மூத்தவன் ரொம்ப நல்லவன்... அவனை எதுக்கு இழுத்து தெருவுல விடுறே... உனக்கு அவனைப் பிடிக்காட்டி மூடிக்கிட்டு இரு... சும்மா எப்பப் பார்த்தாலும் சாதி... சாதியின்னு... அந்த மசுரப்புடுங்கின சாதியால நீ சாதிச்சது என்ன... சொல்லு... சும்மா பேசிக்கிட்டு... ஊருக்குள்ள நாலு நல்லதைச் செஞ்சு... நாலு பேரு மனசுல நம்ம நினைவை விதைச்சிட்டுப் போகணும்...  மூணு தலைமுறைக்கு முன்னாடி இருந்த பெரியகருப்பனை இன்னமும் இந்த ஊரு கொண்டாடுதே... ஏன்..? அந்தாளு நம்ம சாதிக்குன்னு இல்லை... இங்க இருக்க எல்லாப் பயலுகளுக்கும் உதவியிருக்காரு... இந்த ஊரோட வளர்ச்சியில தன்னோட பேரை பெரிசாப் பதிச்சிட்டுப் போயிருக்காரு... அப்படி இருந்துட்டுப் போகணும்... தயவு செய்து இனி சாதி... சாதியின்னு ஓடாதே...”

“நல்லாச் சொல்லுங்கண்ணே.... என்ன சொன்னாலும் எரும மாடு சேத்துக்குள்ள பெரண்ட மாரித்தான்... எப்பப் பாத்தாலும் சாதி... சாதியின்னு பேசி சண்டயத்தான் இழுக்குறாரு...” என்றபடி வந்தாள் சவுந்தரம்.

“ஆமா... இவுக லாத்திக்கிட்டு வந்துருவா... நீ போலா எனக்குத் தெரியும்...” கடுப்படித்தார் வேலாயுதம்.

“என்ன போலா... வாலான்னுக்கிட்டு... எந்திரிச்சி வாங்க அங்கிட்டு...” கத்திவிட்டு முன்னே நடக்க, “இந்தா வாரேன்லா... சும்மா கத்திக்கிட்டு... “ என்றவர், “எப்பா நடுநிலைவாதி உனக்கு அப்புறமா விளக்கமா பதில் சொல்றேன்... இப்ப அவ கூப்பிட்டு போகலைன்னா மககிட்ட வத்தி வச்சி... அந்தாளு வந்து தையத்தக்கான்னு குதிப்பாரு...” என்றபடி எழுந்து நடந்தார்.

“போடா பொண்டாட்டிக்கு பயந்த பயலே..’ என்று சிரித்தபடி எழுந்த பஞ்சநாதன், “ஏங்க எந்திரிச்சி வாறீங்களா...? காலையிலேயே பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு...” என்ற மனைவியின் குரலுக்கு “இந்தா வந்துட்டேன்...” என்றார்.

வேலாயுதம் வீட்டுக்குள் நுழைந்த போது போன் அடித்தது. “யாரு இந்த நேரத்துல...?” என்றபடி எடுத்து “அலோ” என்றார். எதிர்முனையில் சரவணன் பேசினான். நல விசாரிப்புக்களுக்குப் பின் 'இந்த வார லீவுல ரெண்டு நாள் அங்க வரலாம்ன்னு இருக்கேன்.... நான் மட்டுமில்ல... எல்லாருந்தான்... முக்கியமான ஒரு விஷயம் உங்ககிட்ட பேசணும்... நேர்ல வந்து சொல்றேன்..' என்றவன் அதன் பின்னர் அம்மாவுடன் பேசிவிட்டு போனை வைத்தான்.

கட்டிலில் வந்து அமர்ந்தவர் ‘முக்கியமான விஷயமா..? என்னவா இருக்கும்...? வயவரப்பை அவன் பேர்ல எழுதச் சொல்லப் போறானா...? இல்ல ரோட்டோரமாக் கெடக்க மேட்டு நாத்தங்கால்ல வீடு கட்டலாமான்னு கேக்கப் போறானா...?  என்னவா இருக்கும்...’ என்று யோசித்தவர் மனைவியிடம் “ஏலா உங்கிட்ட எதுவும் சொன்னானா...” எனக் கேட்டார்

“ஆமா... அப்பன் புள்ளைக்கிட்ட ஆயிரம் இருக்கும்... எல்லாத்தையும் எங்கிட்டயா சொல்றீங்க...? அதான் வந்து பேசுறேன்னு சொல்லியிருக்கானுல்ல... வரட்டும்...” என்றபடி வெற்றிலையை மெல்ல ஆரம்பித்தாள்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...)
 -பரிவைசே..குமார்.

வியாழன், 5 மே, 2016

வாக்காளர் அலப்பறை...10

"வர வர நம்மாளுங்க செய்யிறது சரியில்லைங்க... சொல்லப்போனா என்னோட சண்டைக்கு வர்றாங்க..." என்றபடி அறைக்குள் நுழைந்தார் திருஞானம்.

"ஏன்..? என்னாச்சுண்ணே...? யாராவது உங்ககிட்ட பிரச்சினை பண்ணினாங்களா?" என்றார் கணிப்பொறியில் இருந்து தொலைக்காட்சிக்கு பிரேமலதாவின் பேச்சை மாற்றிக் கொண்டிருந்த அறை நிர்வாகி ராமராஜன்.

"நேத்து நீங்களும் இல்லை... இன்னைக்கு லீவு வேறயா...? நம்மாளுங்க நைட்டு ரெண்டு மூணு மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல படம் பார்த்துக்கிட்டு என்னைத் தூங்க விடலைங்க..."


"இன்னைக்கு லீவு... அப்படித்தானே இருக்கும்... இது எப்பவும் நடக்குறதுதானே... இதுக்காக சண்டையா போட முடியும்..."

"நான் உங்களைச் சண்டை போடச் சொல்லலைங்க... பாத்துட்டுப் போகட்டும்... அதுக்காக ரெண்டு பேரு மாத்தி மாத்திச் சிரிச்சா எப்படிங்க... கொஞ்சமாச்சும் அடுத்தாளு தூங்குறான்னு பாக்க வேண்டாமா.. பகலெல்லாம் வேலை பாத்துட்டு ஆத்துப் போயித்தானே வர்றோம்..." ஆதங்கத்தோடு பேசினார் திருஞானம்.

"நீங்க சொல்றது சரிதாண்ணே... பல தடவை சொல்லிட்டேன்... படம் பாருங்க... சத்தம் போட்டு சிரிக்காதீங்கன்னு... இன்னைக்கும் சொல்லிடுறேன் விடுங்க..."

"ம்.. நாம சொல்லி அவனுங்க கேப்பானுங்களாக்கும்..." என்றபடி கட்டிலில் அமர்ந்தார். அப்போது அறைக்குள் நுழைந்தான் அவன்.

"என்னங்க... நேத்து ராத்திரி போன ஆளு... ஒரே தண்ணிப் பார்ட்டிதானா...? நாளைக்கும் லீவுதானே... அதுக்குள்ளயும் வந்துட்டீங்க..."  அவனிடம் கேட்டார் ராமராஜன்.

"இல்ல நாளைக்கு காலையில அலைன் போகலாம்ன்னு முடிவு பண்ணினோம்... அதான் டிரஸ் எடுக்க வந்தேன்... பிரண்ட்ஸ் கீழ கார்ல இருக்காங்க... இங்க இருந்தாலும் எதிர் பெட்டுக்காரனுங்க ரெண்டு பேரும் படம் பார்த்து சிரிச்சே நம்மளை தூங்க விடமாட்டானுங்க" என்றான் .

"இப்பத்தான் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்தாரு.... நீங்களும் சொல்றீங்க... கொஞ்சம் கண்டிச்சி விட்டிருவோம்..."

"கண்டிச்சி என்னங்க ஆகப்போகுது... அவங்களுக்கா அறிவு வேணும்... நம்ம மக்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லையே..." என்றான் அவன்.

"ஆமாங்க நாம இலவசங்களுக்கு மயங்குற ஆளுங்கன்னு நல்லா கணிச்சி வச்சிருக்கானுங்க... எல்லாப் பயலும் இலவசம் இலவசம்ன்னுதான் சொல்றான்... " என அரசியலுக்கு மாறினார் ராமராஜன்.

"இதுல கூத்து என்னன்னா தேர்தல் கமிஷன் இலவசங்கள் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லுது... நாங்க தேர்தல் அறிக்கையில அழகா இலவசங்களை அள்ளி விடுறோம்..." சிரித்தார் திருஞானம்.

"சொல்றதை எப்பவுமே சரியாச் செய்ய மாட்டாங்க... சொன்னதைச் செய்வோம்ன்னு சொல்வாங்க சொல்லாததை எல்லாம் முதல்ல செய்வாங்க... இலவசம்ன்னு சொல்லி மகுடிக்கு மயங்குன பாம்பு மாதிரி நம்மளை மயக்க நிலையில வச்சி, ஜெயிச்சி, கோடி கோடியா கொள்ளை அடிக்கப் போறாங்க... இது தெரியாம... இலவச மொபைலு... கம்ப்யூட்டரோட இணைய வசதி அப்படின்னு வாயைப் பிளந்திடுறோம்.." கடுப்பாய்ச் சொன்னான் அவன்.

"இதுல கூத்து என்னன்னா இருக்கவனுக்கே வேலையைக் காணுமாம்... வீட்டுல ஒருத்தருக்கு வேலையாம்... கேக்குறவனை கேன...." கோபமாகப் பேசிய திருஞானம் கெட்டவார்த்தையை விட்டு விடுவாரோ எனப் பயந்து "அண்ணே..." என்று கத்தினார் ராமராஜன்.


"எதுக்கு அலர்றீங்க... தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து மக்கள் இதுபோல அலறி இருந்தா அவனுகளுக்கு ஒரு பயம் வந்திருக்கும்... நான் மக்களை கேனையன்னு நினைச்சிட்டாங்களான்னுதானே சொல்ல வந்தேன்..." சிரித்தார்.

"எப்படி விஜயகாந்த் சொன்ன மாதிரி... நீங்க கத்திக்கிட்டே இருந்தா... நீங்க மட்டுந்தான் இங்க வந்திருகீங்களா... இந்தா உக்காந்திருக்கவனெல்லாம்... என்ன சொம்பைங்களான்னு கேட்டாரே... அது மாதிரி நீங்க நம்மளை கேனையன்கள்ன்னு சொல்றீங்களா?" சிரித்தான் அவன்.

"அந்தாளு என்ன பேசுறாரு... அவரைப் போயி பேசிக்கிட்டு..."

"இதுக்குத்தான் அவரு எனக்குப் பேச்சு வரலையாம்... எனக்கு பேச வரலையா... யாரைப் பார்த்துச் சொல்றீங்கன்னு கேட்டாருல்ல... சரி விடுங்க... இந்தத் தேர்தல் அறிக்கைகள் எல்லாமே நம்மளை ஏமாற்றும் ஒரு கருவிதான்... நிறையாச் சொல்வாங்க... நிறைவாச் சம்பாதிச்சிக்குவாங்க... இது கானல் நீர் மாதிரி... அப்படியே காணாமல் போயிடும்..." என்றான் அவன்.

"அம்மா தேர்தல் அறிக்கை எல்லாம் இலவசங்கள்... ஆனா ஒருவேளை இந்த ஆத்தா ஜெயிச்சி வந்துட்டா... பஸ், பால், மின்சாரம்ன்னு எல்லாத்தையும் தூக்கி உச்சியில வச்சி... நம்மளை கத்திரிவெயில்ல அம்மணக்கட்டையா நிப்பாட்டிரும்... அதுதான் நடக்கும் பாருங்க..." என்றார் ராமராஜன்.

"அப்ப ஐயா வந்தா மட்டும் கச்சத்தீவை மீட்டு டாஸ்மாக்கை மூடிருவாராக்கும்... அட போங்கங்க... பேண்டு போட்டவனெல்லாம் டிரண்ட் மாறி முதல்வராயிடலாம்ன்னு பாக்குறான்... அரை டவுசர்களும் அல்லக்கைகளும் பண்ணுற அலப்பறை தாங்க முடியலை..." என்றவன் "சரி வர்றேன்... கீழ பிரண்ட்ஸ் நிக்கிறாங்க... அரசியல் பேசினா இங்கயே உக்காந்திருவேன்..." என அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

"கருத்துக் கணிப்புன்னு சொல்லி மக்கள் மனசுல ரெண்டு கட்சியை மட்டுமே திணிக்கப் பாக்கிறாங்க... பொது மேடையில என்னமா அடிச்சிக்கிறாங்க... மக்கள் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இதுவே இப்ப பெரிய திருப்பம்தான்..." என்றார் திருஞானம்.

"உண்மைதாண்ணே... பல ஊர்கள்ல சிட்டிங் எம்.எல்.ஏக்களை விரட்டி அடிக்கிறாங்க... இது நல்ல மாற்றம்தான்..." என்றார் ராமராஜன்.

"எம்.எல்.ஏக்களை மட்டுமில்ல... திருவாடானை தொகுதியில கருணாஸை பல ஊர்களுக்குள்ள விடவே மாட்டேங்கிறானுங்களாம்... செய்யணும்... சென்னையில இருந்து போயி சாதிப்பிரச்சினையை கிளப்பி விடுறான்... நாளைக்கு ஜெயிச்சிட்டா அங்கிட்டு போகவே மாட்டான்... விரட்டணும்... மக்கள் கொஞ்சம் விழிப்பாத்தான் இருக்காங்க..." 

"இந்த தடவை எல்லாருக்கும் வச்சிச் செய்வாங்க... இவனுக நம்மளை இளிச்சவாயனுங்கன்னு நினைச்சிட்டானுங்க... கச்சத்தீவை மீட்போம்ன்னு இவர் சொன்னா... கொடுத்தது யாருன்னு அவங்க கேக்குறாங்க.... டாஸ்மாக்கை மூடுவோம்ன்னு சொன்னா... சரக்கு யார் ஆளுங்க உற்பத்தி செய்யிறாங்கன்னு கேக்கிறானுங்க... இப்படியே மாத்தி மாத்தி பேச வேண்டியதுதான்..."


"இதுல கூத்து என்னன்னா கடந்த அம்பது வருசமா அவனுங்கதான் மாத்தி மாத்தி ஆளுறானுங்க... ஏன் ஒருத்தன் தப்புச் செஞ்சா மற்றவன் அதை மாற்றலாமே... செய்ய மாட்டானுங்களே... அப்பன் ஒரு இடத்தை அடகு வச்சா மகன் அதை திருப்பமாட்டானா என்ன... அரசியல் செய்ய அது வேணும்... இன்னைக்கு இல்ல... நம்மளோட பேரன் பேத்திகளோட காலத்துல கூட இவனுக தலைமுறை இதைச் சொல்லியே நம்மளை ஆண்டுக்கிட்டு இருக்கும்...." சிரித்தார் திருஞானம்.

"ஆமா... ஆமா... கச்சத்தீவை பேசுவானுங்க... ஈழத்தைப் பேசுவானுங்க... விட்டா அமெரிக்காவுல இருந்து அதை கொண்டாருவோம்... இதைக் கொண்டாருவோம்ன்னு சொல்வானுங்க... ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, பக்கத்து மாநிலத்தோட தண்ணிப் பிரச்சினை பற்றி எல்லாம் பேச மாட்டானுங்க... விவரமானவனுங்க..." 

அப்போது இரவில் படம் பார்த்துச் சிரிப்பதாக திருஞானம் சொன்ன இருவரும் உள்ளே நுழைய, "என்ன ரவுண்ட் அடிச்சிட்டு வந்தாச்சாக்கும்.. இனி நைட்டுப் படம்தானா...?" என்றார் ராமராஜன்.

"பின்னே... வேற வேலை..." என்றான் சுந்தரம்.

"பாருங்க... மத்தவங்களுக்கு நம்மளால டிஸ்டர்ப்பன்ஸ் இருக்கக்கூடாது..."

"ஓ... அண்ணே நைட் தூங்க விடாம சிரிச்சிட்டிட்டோமோ... நாந்தான் சிரிச்சேன்னு நினைச்சேன்... அவனுமா... சாரிண்ணே... இனி அப்படி நடக்காது..." என்றான் சுந்தரம்.

"சரிப்பா விடுங்க..."

"என்னமோ காரசாரமான விவாதம் போய்க்கிட்டு இருந்துச்சு... எங்களைப் பார்த்ததும் நின்னு போச்சு..."

"எல்லாம் அரசியல்தான்..."

"கெடுகெட்ட அரசியல்ண்ணே... அம்மாவும் ஐயாவும் நம்மளை நல்லா எடை போட்டு வச்சிருக்காங்க.." என்றான் மற்றொருவனான பிரவீண்.

"ம்... இந்த சீமான்... பாட்டன், முப்பாட்டன்னு பேசினாலும் இனம் மதம்ன்னு பேசினாலும்... சில விஷயங்கள் ரொம்பச் சரியாப் பேசுறான்... டோல்கேட் வச்சி வசூல் பண்ணுறானுங்க பாருங்க... அதப்பத்தி பேசினான்... எவ்வளவு உண்மைங்கிறீங்க... நாம ஏன் அதை யோசிக்கலை... நான் கார் வாங்கும் போதே ரோடு டாக்ஸ் கட்டுறேன்... அப்புறம் எதுக்கு அம்பது கிலோமீட்டருக்கு ஒருதடவை பணம் பிடுங்கிறே... அப்ப நான் எந்த ரோட்டுக்கு வரி கட்டினேன்னு கேட்டான்... ரொம்பச் சரிங்கிறேன்... இனம் ஈழம்ன்னு அவனோட அரசியல் வேணுமின்னா நமக்கு எரிச்சலா இருக்கலாம்... ஆனா சரியான விஷயங்களை ரொம்பத் தெளிவாச் சொல்றான்...." என்றார் திருஞானம்.


"என்னாச்சுண்ணே மாம்பழத்துல இருந்து மெழுகுவர்த்தி பத்த வைக்க வந்துட்டீங்க...." சிரித்தார் நிர்வாகி.

"அப்படியில்லை... எது சரியோ அதை நாம பேசுறதுல தப்பேயில்லை... சாராயக் கம்பெனி எந்த திமுக காரனுக்கும் இல்லைன்னு ஐயா சொன்னதும் விஜயகாந்த் ஒரு கூட்டத்துல அப்ப வச்சிருக்கவனை நான் கெட்டவார்த்தையால திட்டவான்னு கேட்டார்... வெள்ளம் வந்தப்போ வரமுடியலை.. அப்துல்கலாம் இறந்ததுக்குப் போக முடியலை... இன்னைக்கு மட்டும் தினமும் சுத்தமுடியுதோன்னு கேட்டாரா இல்லையா... இதெல்லாம் சரிதானே... ஏன் கருத்துக் கணிப்பு என்பது திராவிடக்கட்சிகளை தூக்கி நிறுத்த பத்திரிக்கைகள் செய்யும் வேலை என வைகோ சொல்லும் போது அன்புமணி மூணாவது இடத்துல வருவார்ன்னு சொல்றது நம்புறமாதிரியா இருக்குன்னு சொல்லலையா... அரசியல் வேறு... நல்ல பேச்சுக்களை கேட்டு பாராட்டுறது வேறு..." என்றார் திருஞானம்.

"ஆமாண்ணே... அரசியல்வாதிங்க மக்களோட புத்தியை மழுங்கலா வைக்கவே விரும்புறாங்க... அதை சரியாச் செய்யிறாங்க..."

"திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுப்போம்ன்னு சொல்லியே நம்மை ஏமாத்துறாங்க... எப்பத்தான் இவங்க திருந்துவாங்களோன்னு புலம்புறதை விட்டுட்டு நாம சிந்திக்க ஆரம்பித்தால் தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்... செய்வோமா?" என்றார் ராமராஜன்.

"செய்வோம்... அப்படின்னு நம்புவோம்" சிரித்தார் திருஞானம்.

படங்களுக்கு நன்றி : இணையத்துக்கும் இணைபிரியாத கவுண்டர் செந்திலுக்கும்..

-'பரிவை' சே,குமார்.

திங்கள், 2 மே, 2016

பொலிவை இழந்த கிராமங்கள் (அகல் மின்னிதழ் கட்டுரை)

மே மாத அகல் மின்னிதழ் - 1-ல் (முழு இதழுக்குமான இணைப்பு) வந்திருக்கும் எனது கட்டுரை... கட்டுரையை வாசித்து இங்கும் அங்கும் கருத்துச் சொல்லுங்கள்... நன்றி.

கட்டுரையை வாசிக்க : பொலிவை இழந்த கிராமங்கள்


கிராமங்கள் பொலிவிழந்துவிட்டதா..? என்ற கேள்வியை மனசுக்குள் மெல்ல எழுப்பிப் பார்த்தால் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நிலையில் விவசாயத்தை பெருமளவு இழந்து, இளைய தலைமுறையின் நகரத்தை நோக்கிய படையெடுப்பால் தன் சுயம் இழந்து... பழுத்த மனிதர்கள் மட்டுமே தேங்கி நிற்க, கிராமங்கள் மெல்ல மெல்லத் தன்னுடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

சில காலங்களுக்கு முன்னர் கிராமங்கள் பசுமை போர்த்தி மிக அழகாக காட்சியளித்தன... விவசாயத்தை நம்பிய குடிகள்... வயலும் வாழ்வுமாய்... ஆடு. மாடு, கோழிகள் என பாசத்தோடு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். விவசாய காலம் என்றால் தாவணி அணிந்த இளம் பெண் போல கிராமங்கள் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சை போர்த்திய வயல்கள், கரையில் மோதும் கண்மாய் நிறைந்த தண்ணீர், வாய்க்கால்களில் இரு மருங்கிலும் வளர்ந்திருக்கும் அருகம்புல்லை தடவியபடி வயலை நோக்கி பாய்ந்தோடும் தண்ணீர்... வரப்புகளில் நிற்கும் மரங்கள் சுமக்கும் பசுமை என ஊரைச் சுற்றி ஒருவித குளுமையை பரவ செய்திருக்கும்.

அதே போல் மாலை நேரங்களில் வயல் வரப்புக்களில் நடந்து போவதே ஒரு சுகம்தான்... அந்தப் பசுமையும், பாய்ந்தோடும் நீரின் சலசலப்பும், பயிரோடு விளையாடும் இளங்காற்றும், மெல்லிய குளிரோடு உடலை வருடிச் செல்லும் தென்றலும்.. ஆஹா... என்ன ஒரு சுகானுபாவமாக இருக்கும் தெரியுமா... இதை அனுபவித்தவர்களுக்கு என்னதான் இருபத்து நாலு மணி நேரமும் ஏசியில் இருந்தாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும். வெயில் காலம் கூட வெக்கையை வீட்டுக்குள் கொண்டு வராது... காரணம் என்னவென்றால் வீட்டிற்கு முன்னே நிற்கும் வேப்ப மரம்தான். ஆம் இதையெல்லாம் சிறுவயதில் அனுபவித்தோம் ஆனால் இன்று...?

நம் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையில் சாதிவெறி இருந்தாலும் மாமன் மச்சானாய்த்தான் எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது கிராமங்களிலும் சாதிக்கென வரவேற்புப் பலகைகளும், சாதிக் கட்சிகளின் கொடிகளும் புகுந்து விட பல இடங்களில் திருவிழாக்கள் கூட சாதிக்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டன. உள்ளூர் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் நேசமாய் வாழ்ந்த காலங்கள் கிராமங்களில் உயிர்ப்போடு இருந்தன... நல்லது கெட்டது என்றால் ஊரே கூடி நின்று எடுத்துச் செய்யும் நிகழ்ச்சிகளை நாம் கிராமங்களில் மட்டுமே காண முடியும். திருவிழாக்கள் என்றாலே ஒருவருக்கு ஒருவர் பதார்த்தங்களையும் அன்பையும் பரிமாறிக் கொள்வார்கள்.
பெரும்பாலான நகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதை அறியாமல்தான் இப்போது வாழ்கிறோம். எதற்கு அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணமே இப்போது மனசுக்குள் தூக்கலாக இருக்க ஆரம்பித்துவிட்டது. சரி கிராமங்களில் இந்த உயிர்ப்பு இப்போதும் இருக்கிறதா...?

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் குழந்தைகள் அனைவரும் கோவில் முன்பாகவோ அல்லது விளையாட்டுத் திடலிலோ ஒன்று கூடி கண்டுபிடிச்சோ, ஓடிப்பிடிச்சோ, கபடி, கோகோ, கிட்டி, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு என நிறைய விளையாட்டுகளை விளையாடி இருட்டிய பிறகே வீட்டிற்குச் செல்வார்கள். விடுமுறை தினங்கள் எல்லாம் அது விளையாட்டு தினங்கள்தான் என்பதை கிராமத்துப் பிள்ளைகள் மனதில் வைத்திருப்பார்கள். கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற பலர் இப்படித்தான் வளர்ந்திருப்பார்கள் ஆனால் இன்று குழந்தைகள் இப்படி விளையாடுகிறார்களா...?

கோயில் விழாக்கள் என்றால் ஊரே ஒன்று கூடி அவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடும். வருடம் ஒருமுறை வரும் மாரியம்மன் திருவிழாவில் காப்புக் கட்டியது முதல் திருவிழா உச்சம் பெறும் நாள் வரை (செவ்வாய் முதல் செவ்வாய் வரை மொத்தம் எட்டு நாள்) இரவு அம்மனுக்கு கரகம் வைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என எல்லாருமாய் மேளம் கொட்டி சந்தோஷித்து கொண்டாடும் அழகே தனிதான் ஆனால் இப்போதும் நடக்கிறதா...?

என்னடா அனைத்திலும் கேள்விக்குறியோடு முடித்திருக்கிறானே என்று பார்க்கிறீர்களா...? ஆம் பசுமையாய்.... பாசமாய்... பார்த்த கிராமங்கள் எல்லாமே இப்போது அந்தப் பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டுதான் வருகின்றன என்பதாலேயே இந்தக் கேள்விக்குறி... இன்னும் கிராமங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன... அப்புறம் எப்படி அது இல்லை... இது இல்லைன்னு சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். தூரத்துப் பச்சை பார்க்க அழகாகத்தான் இருக்கும் அதன் அருகில் போய்ப் பார்த்தால்தான் அந்த அழகு நிஜமா என்பது தெரியும்... அப்படித்தான் கிராமங்களும்...


வானம் பார்த்த பூமிகளான பல கிராமங்கள் முதலில் இழந்தது அதன் வேரான விவசாயத்தைத்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நெல்மணிகளைச் சுமந்த எங்கள் ஊர் வயல்கள் எல்லாம் இப்போது கருவை மரங்களைச் சுமந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.

எங்கள் கிராமம் மட்டுமல்ல... இதைப் போல் நிறைய கிராமங்கள் விவசாயத்தை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டன. உடம்பில் கோவணமாய்க் கட்டிய வேஷ்டியுடன் வயலில் இறங்கி வேலை பார்த்த மனிதன் இன்று வேலை இல்லாது மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை. 

இதன் காரணமாகவே நிறைய தற்கொலைகள்... நிறைய பேரின் வெளியேற்றம்... பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனுமா... இந்த வருடம் விளையட்டும் என்றிருந்த காலம் மலையேறிப் போச்சு... பல கிராமங்கள் நெல் மணிகளை நம்பியிருந்த கண்மணிகளை முதிர் கன்னிகளாக்கி வீட்டுக்குள் முடக்கிப் போட்டு வைத்திருந்ததால் பல தற்கொலைகளைச் சுமந்தன.

விவசாயம் போச்சு என்றாலும் இப்போது கிராமங்களிலும் கல்வித்தாய் எட்டிப் பார்த்து எல்லாரும் ஓரளவுக்கு படித்து விடுகிறார்கள். வேலை, குழந்தைகளின் படிப்பு போன்ற காரணிகளே கிராமத்து இளம் தலைமுறையினரை நகரத்தினை நோக்கி படையெடுக்க வைக்கிறது. காலப்போக்கில் நகரத்து வாழ்க்கை அவர்களுக்கு சொந்த பந்தம் அற்ற ஒரு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. நல்லது கெட்டது என்றால் கூட விடுமுறை இல்லை, குழந்தைக்கு லீவு போட முடியாது என ஏதாவது காரணத்தை முன்னிறுத்த கற்றுக் கொடுத்து விடுகிறது. ஒரு நாள் சொந்த ஊருக்குப் போனாலும் என்ன இது மொபைலுக்கு டவர் கிடைக்கலை... இண்டர்நெட் இல்லை... டிவி பார்க்க முடியலை... கம்ப்யூட்டர் இல்லாம என் பையன் இருக்கவே மாட்டான் என புதிய பழக்கத்தின் அடிமைத்தனம் பழைய சுகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்ப வைக்கிறது.

கிராமங்களில் சட்டை போடாமல் விவசாயம், ஆடு மாடு எனத் திரிந்த மனிதர்களே இன்று அங்கு தங்கியிருக்கிறார்கள். இதுதான் உண்மை... எங்கள் ஊரில் நான் படிக்கும் காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகள் என கூட்டமாய் இருக்கும். அது ஒரு அன்பான உலகமாய்த் தெரியும் ஆனால் இன்று எங்களைப் பெற்றவர்கள் தங்களின் முதுமையை பிறந்த ஊரில்தான் களிப்போம் என்ற உறுதியுடன் இருப்பதாலும் உள்ளூரில் வேலை செய்யும் சக வயதுக்காரர்கள் சிலர் நகரத்து வாழ்க்கை வேண்டாமே என்று ஊரில் இருப்பதாலும் கூட்டமாய் இருந்த இடத்தில் அழிந்து போன சிட்டுக்குருவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பது போல் வீட்டிற்கு இரண்டு முதுமை சுமந்த மனிதர்களும் சில இளைய தலைமுறைகளும் இருக்கிறார்கள்.

பல வீடுகள் திருவிழாக் காலத்தில் மட்டுமே திறக்கப்படுகின்றன... சில வீடுகள் வாழ்ந்து முடிந்து மரித்தும் விட்டன... இந்த நிலை தொடரும் பட்சத்தில்... பழுத்த கிளைகள் உதிரும் போது எங்கள் கிராமத்தின் நிலை... எங்கள் என்பதைவிட பல கிராமங்களின் நிலை...? ஆம் வயல்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆக கிராமங்கள் காணமல் போகும் என்பதே நிதர்சன உண்மை.

திருவிழாக்கள் என்றால் கூடிக் கொண்டிருந்தவர்கள் கூட இப்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருக்க ஆரம்பித்த பின்னர் திருவிழாக்கள் கூட தனித்துவத்தை இழந்துவிட்டது. குலவைப்பாடல், மொளக்கொட்டு பாடல், நடவுப்பாடல் என கிராமத்துக்கே உரிய தனித்துவமான பாடல்கள் எல்லாம் இப்போது இருக்கும் தலைமுறைக்கு தெரிவதில்லை... தெரிந்து கொள்ளவும் விரும்புவது இல்லை....

‘ஏப்பா அந்த மைக்செட்காரத் தம்பிக்கிட்ட சொல்லி குலவைப்பாட்டு போட்டுவிடச் சொல்லு... சாமி கும்பிடணும்...’ என்றும் அடேய் மொளக்கொட்டணும் அந்த தானானேப் பாட்டை சத்த போட்டுவிடு...’ என்றும் தான் இப்போது சொல்லப்படுகிறது.
இன்னும் சில காலங்களில்... அதாவது நம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைகள், “ஆமா வேலை வெட்டி இல்லாம ஒரு வாரம் பத்து நாள்னு திருவிழாக் கொண்டாடுறானுங்களாம்... வேற வேலை இல்லை” என்று திருவிழாக்களுக்கு மூடு விழா வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


இன்றைய உலகம் கைக்குள் சுருங்கிவிட்டது... பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தால் கண்ணாங் கண்ணாமூச்சியோ..., ஓடிப்பிடித்து விளையாடுதலோ..., கபடியோ.... இப்படி எதுவுமே விளையாட குழந்தைகள் நினைப்பதும் இல்லை அது தெரியவும் இல்லை... கிராமங்களில் விளையாட குழந்தைகள் இல்லை என்பதே சத்தியமான உண்மை. குழந்தைகளுக்குத் தெரிந்ததெல்லாம் வீடியோ கேமும் கம்ப்யூட்டரும்தான்...

இன்றைய குழந்தைகளின் உலகம் சின்ன அறைக்குள் என்றாகிவிட்டது. இவர்களுக்கு பந்த பாசமோ... உறவு முறைகளோ தெரிவதில்லை. கிராமத்தில் இருந்து வந்தவனின் மகன் கூட பழுப்பேறிப்போன தன் தாத்தா, பாட்டியைப் பார்த்தால் 'டர்ட்டி பீப்பிள்' என்றுதான் சொல்கிறான்.

நகரங்கள் விழுங்கிய கிராமத்து வாழ்க்கையில் நாம் நல்ல காற்றை இழந்தோம்... நல்ல பண்பை இழந்தோம்... உறவு முறைகளை இழந்தோம்... உண்மையான அன்பை இழந்தோம்... இவற்றிற்கெல்லாம் மேலாக நம் உயிர் நாடியாம் விவசாயத்தை இழந்தோம்... இப்படி எல்லாம் இழந்த கிராமங்கள் பெயரளவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றின் சிறப்பான பொலிவை இழந்து அழிவை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்திருக்கின்றன என்பதே உண்மை.

நன்றி சத்யா ஜி....
-'பரிவை' சே.குமார்.