மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 செப்டம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 15

முந்தைய பதிவுகளைப் படிக்க...

           பகுதி-1        பகுதி-2        பகுதி-3       பகுதி-4        பகுதி-5     
           பகுதி-6        பகுதி-7        பகுதி-8       பகுதி-9       பகுதி-10   
           பகுதி-11      பகுதி-12      பகுதி-13    பகுதி-14
******
15. வாடகை அம்மா

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அம்மாவை கூட்டியாரச் சொல்கிறார் முதல்வர். வைரவன் மூலமாக வாடகை அம்மாவுக்கு ஏற்பாடு செய்கிறான்.


இனி...


காலையில் அவசர அவசரமாகக் கிளம்பினான். இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருந்துட்டு நாளைக்குப் போடா... என்ன அர்ஜெண்டுன்னு கேக்குறேன்னு கேட்ட அம்மாவிடம் இன்னைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு... இப்போ வலி இல்லை... சாயந்தரம் வரும்போது ஆஸ்பத்ரி பொயிட்டு வாறேன்... வீட்ல இருந்தா பரிட்சை போயிடும்... என்றபடி சைக்கிளை எடுத்தான்.

கல்லூரிக்கு அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு வைரவனுக்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் வைரவன் வந்து சேர, அவனது பைக்கின் பின்னால் இருந்து ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கினாள்.

"ராம்கி இது சரசக்கா... இவங்கதான் இன்னைக்கு உங்க அம்மாவா நடிக்கப் போறாங்க... நான் விவரம் சொல்லியிருக்கேன்... நீயும் எல்லாம் சொல்லிக் கூட்டிப்போ... அக்கா கொஞ்சம் தத்ரூபமா நடிக்கும்.. அப்பத்தான் பிரின்ஸிக்கு சந்தேகம் வராது... அடிச்சாலும் வாங்கிக்க... பாத்து முடிச்சிட்டு இங்க கூட்டிக்கிட்டு வா... நான் கூட்டிக்கிட்டுப் போறேன்... சரியா?"

"சரிண்ணே..." என்றபடி சரசக்காவைப் பார்த்தான். ஏறக்குறைய அவனது அம்மாவை ஒத்திருக்கும் சாயல்... நல்ல வளர்த்தி... தலையில் ஆங்காங்கே வெள்ளை முடி... ஒற்றை நாடி தேகம்... ஒரு பாடாவதி கண்டாங்கிச் சேலை... அதற்கு சற்றும் ஒத்து வராத ஜாக்கெட், பொட்டில்லாத நெற்றி... கழுத்தில் தாலி... செங்கற்காலவாய்க்கு செம்மண் மிதித்து சிவப்பேறிய கால்கள்... மிஞ்சி இல்லாத விரல்... அவளைப் பார்வையால் எடைபோட்டு அவள் முகத்துக்கு வந்தபோது, 

"என்ன தம்பி விழுங்குற மாதிரி பாக்குறே... அம்மா வேசம் கட்ட வந்திருக்கேன்... அத்தாச்சி வேசம் கட்ட வந்தமாதிரி பாக்குறே..?" என்று சொல்லி சத்தமாகச் சிரித்தவள் வாய்க்குள் நிஜாம் லேடியையோ... கலைமானையோ அதக்கியிருந்தாள்.

"ஏய்... அவன்கிட்டப் போயி அத்தாச்சி நொத்தாச்சின்னு வந்த வேலையை மட்டும் பாரு..." என்றான் வைரவன்.

"இல்லக்கா... அம்மா வேசத்துக்கு வந்திருக்கீங்க... நெத்தியில பொட்டில்ல... மிஞ்சி இல்ல ஓகே... ஆனா தாலிக் கயிறு.... அதான்..."

"ஏப்பா... உனக்கு நடிக்கிறதுக்காக எம்புருஷனை சாகவா சொல்லமுடியும்... நல்லாயிருக்கே...?"

"ஐய்யய்யோ அப்படி சொல்லலை... அதை மறைச்சு..."

"தம்பி... வைரவன் உன்னோட அப்பா இல்லைன்னு சொன்னாப்ல... அதான் பொட்டு வைக்கலை... எப்பவும் செங்கலுக்கு மண்ணு மிதிக்கிறப்போ மிஞ்சியைக் கழட்டி வச்சிருவோம்... அதனால அதுவும் இல்லை... பாக்கிறவங்க பார்வை நெத்தியப் பாக்கும்... இல்லேன்னா காலைப் பாக்கும் அது ரெண்டையும் மறைக்க முடியாது... சேல முந்தானிய எடுத்து மூடிக்கிட்டா தாலியிருக்கது தெரியாது.. அதெல்லாம் நா பாத்துக்கிறேன்... நீ விவரம் சொல்லு..."

அவளுக்கு விவரம் சொல்லி, தனது அம்மாவை அழைத்துப் போவதுபோல் சைக்கிளில் வைத்து கல்லூரிக்குள் அழைத்துச் சென்றவன் சைக்கிளை நிறுத்திவிட்டு துறைத்தலைவரின் அறைக்கு சரசுவுடன் செல்லும் போது எதிர்ப்பட்ட தமிழய்யா, "என்ன ராம்கி... அம்மாவை கூட்டியாந்துட்டீங்களா... வணக்கம்மா... நல்லாப் படிக்கிறபுள்ள... தெரிஞ்ச பையனை அடிக்கிறாங்கன்னு கம்பை எடுத்துருச்சு... காலேசுக்கு வெளிய நடந்ததுதான்... இருந்தும் காலேசு பேரு கெட்டுடக்கூடாதுன்னுதான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்காங்க.... புள்ளய எதுவும் சொல்லாதீங்க... இனி இப்படி நடக்கக்கூடாதுன்னு மட்டும் தம்பிக்கு சொல்லி வையுங்க..." என்றபடி நகர்ந்தார்.

புரபஸர் கேவிஎஸ் இண்டியன் எக்ஸ்பிரஸைப் படித்துக் கொண்டிருந்தார். ராம்கி அவரருக்கில் செல்லவும்.

"ம்... அம்மாவா...?"

"ஆ... ஆமா.. சார்..."

"அம்மா பிரச்சினைக்குன்னு காலேசுக்கு வர்றது இதுதான் கடைசியா இருக்கணும்... சரியா.... மறுபடியும் அடிதடின்னு போகக்கூடாது... சரி வாங்கம்மா பிரின்ஸ்பாலைப் பாத்துட்டு வரலாம்..."

"ம்.."

"இதுதான் உங்க அம்மாவா..?" பிரின்ஸிபாலின் முதல் கேள்வியே மிரட்டும் வண்ணம் வந்தது.

"ஆ... ஆமா... சார்..."

"உங்க பேரு என்னம்மா?"

"நாகம்மாங்க சார்..."

"உங்க வீட்டுக்காரர் தவறிப்போயிட்டாராமே..."

"ஆமா... இந்தா இதுக சிறுசுகளா இருக்கயிலயே போயிச் சேந்துட்டாரு... கஷ்டப்பட்டு படிக்க வச்சா இது அடிதடின்னு வந்து நிக்கிது... நா வாங்கியாந்தா வரம் அப்படியிருக்குங்க சார்..."

"இது மொத தடவைங்கிறதாலயும்... அவங்க புரபஸர்ஸ் ரெக்கமெண்ட் பண்ணுனதாலயும் இத்தோட விடுறேன். அப்புறம் அவங்க பசங்களெல்லாம் இவன் நல்லவன்... நல்லா படிக்கிற பையன்... இந்த ஒரு தடவை மன்னிச்சுருங்கன்னு சொல்லி எழுதிக் கொடுத்திருங்காங்க... இந்தா இருக்கு பாருங்க... உங்க புள்ளைக்கு புத்திமதி சொல்லுங்க..."

"சரிங்க சார்..."

"குடும்ப சூழலை நினைச்சு படிக்கச் சொல்லுங்க...  இவன நம்பித்தானே இருக்கீங்க... நல்லா படிச்சு நல்ல வேலைக்குப்  போனான்னா குடும்ப கஷ்டம் போகுமில்ல.... நீங்க என்ன வேலை பாக்குறீங்க..."

"புத்தி சொல்றேங்க சார்... இன்ன வேலையின்னு இல்ல சார்... பாலூத்துவேன்... தயிரூத்துவேன்... களை எடுக்கப் போவேன்... கருதறுக்கப் போவேன்... வீட்டு வேலைக்குப் போவேன்.... இப்புடி எல்லாஞ் செய்வேங்க சார்..."

"தம்பி.... பாரு அம்மா எம்புட்டு கஷ்டப்படுறாங்கன்னு... அவனை அடிச்சாங்க... இவனை அடிச்சாங்கன்னு நீ முன்னாடி போவாதே... அவனுக அடிச்சிக்கிறதுக்குன்னே வர்றவனுங்க... நீ படிக்க வர்றே... அதை மனசுல வச்சுக்க... இனி உம்பேரு பிரச்சினைகள்ல வரக்கூடாது சரியா..."

"சரி சார்..."

"என்னோட கனவுல மண்ணை அள்ளிப் போட்டுறுவான் போலங்க சார்... பெரியவன் கஷ்டப்பட்டு பணம் அனுப்புறான்.. இது இங்க சண்டியராத் திரியுது... எல்லாம் என்னோட தலையெழுத்து.... சனியனை பன்னெண்டாப்போடா மில்லுல விடச் சொன்னாங்க... நாந்தேன் படிக்கட்டுமின்னு நெல்லப்பில்ல வித்து குடும்பம் நடத்துனாலும் பரவாயில்லன்னு காலேசுல சேர்த்துவிட்டேன்... ரவுடின்னு பேரு வாங்கிருச்சு... சனியனே... ரவுடின்னு பேர் வாங்கி என்னை இங்க கொண்டாந்து நிறுத்தவா காலேசுக்கு அனுப்புனேன்.... " என்றபடி ராம்கி கன்னத்தில் பளார்ன்னு ஒரு அறைவிட்டு விட்டு முந்தானையில் மூக்கைச் சிந்தினாள்.

"அம்மா தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்காதீங்க... அன்பா சொல்லி புரிய வைங்க... இனி படிப்புல மட்டும் கவனம் செலுத்துவான்... அடிக்காதீங்க... அதுவும் எங்க முன்னாடி அடிச்சீங்கன்னா அவன் ரொம்ப பீல் பண்ணுவான்... சரி... தம்பி நீங்க இனி கிளாஸ்க்குப் போகலாம்..."

"சரி சார்...."

"வர்றேனுங்க சார்... பயல நல்லா பாத்துக்கங்க.... நானும் புத்தி சொல்லுறேன்... நீங்களும் சொல்லுங்க..." என்று முதல்வரிடமும் கேவிஎஸ் சாரிடம் சொல்லிவிட்டு வெளியேற, அவர்கள் பின்னே எழுந்த கேவிஎஸ்ஸை 'இருங்க சார் போகலாம்' என்றார் முதல்வர்.

"சொல்லுங்க சார்..."

"அந்தம்மா வாங்குன காசுக்கு நல்லா ஆக்ட் பண்ணுது பாத்தீங்களா?"

"என்ன சார் சொல்றீங்க... வந்தது அவனோட அம்மா இல்லயா?"

"என்ன சார் எத்தனை பேரைப் பாக்குறோம்... அம்மா மகன்னு பாத்தோடனே தெரியாதா என்ன... அதுவும் போக அந்தம்மா உள்ள நுழையும் போதே எங்கயோ பாத்திருக்கமேன்னு யோசிச்சேன்... அப்புறம் பேசும் போதுதான் ஞாபகம் வந்துச்சு... போன வருசம் ஒ ருதடவை வைரவன் அப்பா, அம்மா ஊருக்குப் போயிருக்காங்க... இது என்னோட சித்தியின்னு கூட்டியாந்தான். இன்னைக்கு இவனுக்கு அம்மாவா வந்திருக்கு.. வைரவனுக்கு ராம்கி என்ன சித்தி பையனா?"

"சார் என்ன திருட்டுத்தனம்... இப்பவே கூப்பிட்டு கண்டிக்கனும் சார்..."

"சார்... பாவம் நல்லா படிக்கிற பய... அவங்க அம்மா கஷ்டப்படுறவங்க... பல கனவோட இருப்பாங்க... அதை கெடுத்துடக்கூடாதுன்னு இவனுககிட்ட கேட்டிருப்பான்... விட்டுடுங்க... அடுத்து மாட்டினான்னா அப்ப பாக்கலாம்... விட்டுடுங்க..."

"சரி சார்.... இருந்தாலும்..."

"விட்டுடுங்க... தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க..."

"ஓகே..."


"என்னடா.... பிரச்சினை முடிந்ததா..?" என்றனர் நண்பர்கள்.

"ம்... ஏன்டா பழனி... நம்ம கிளாஸ்ல எல்லாருமா சேர்ந்து தண்டிக்கக்கூடாதுன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றிடா..."

"இதுக்கு முக்கியகாரணம் மல்லிகாதான்... நாங்க சொன்னதும் அதை உடனே செயல்படுத்தியவ அவதான்....  லேடீஸ் ரூம் போயிட்டா போல... ஆள் இல்லை... இவங்களை அனுப்பிட்டு வந்து அவளுக்கு நன்றி சொல்லு..."

"சரிடா... இப்ப வாறேன்... வாங்கக்கா போலாம்..."

"காலேசுக்குள்ள அம்மான்னு சொல்லு யாராவது கேட்கப் போறாங்க...." என்று சிரித்தபடி சைக்கிளில் ஏறினாள்.

"எதுக்கு பளார்ன்னு அறைஞ்சிங்க...?"

"அப்பத்தான் தத்ரூபமா இருக்கும்... எத்தனை பிரின்சுபாலைப் பார்த்திருப்பேன்..."

"அது சரி... அதுக்காக இப்படியா அடிப்பீங்க..."

"ரொம்ப வலிக்கிதா...?"

"அடிச்சிட்டு... வலிக்கிதான்னா... விடுங்க..." என்றான்.

கடையில் வைரவன் வண்டி நிக்க ஆளைக் காணோம்... 

"அண்ணே... வைரவண்ணன் எங்க போனாரு..?"

"பசங்க கூப்பிட்டாங்கன்னு டவுனுக்குள்ளா போயிருக்கு... இந்த அம்மாவை இங்க இருக்கச் சொன்னுச்சு... உன்னைய கிளாசுக்குப் போகச் சொன்னுச்சு...."

"இல்ல இவங்களுக்கு காசு கொடுக்கனும் அதான்..."

"அதெல்லாம் அது கொடுத்துக்கிதாம்...அப்புறம் பேசிக்கலாம்ன்னு சொல்லச் சொன்னுச்சு..."

"சரிண்ணே... அக்கா  ரொம்ப நன்றி... நான் வாறேங்க்கா... அண்ணன் வந்து பணம் கொடுப்பாரு... அண்ணே அக்காவுக்கு ஒரு பவண்டோ குடுங்க... இந்தாங்க காசு..." என்று கொடுத்து விட்டு கிளம்பினான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பிற்கு நடந்தவன் எதிரே வந்த மல்லிகாவிடம் "ரொம்ப நன்றிங்க..." என்று சொல்ல, "இதுக்கு எதுக்கு நன்றி... நன்றி எல்லாம் சொல்லி என்னைய பிரிச்சுப் பாக்காதீங்க..." என்றாள். 

"அப்படியில்லை... உங்க முயற்சிக்கு நன்றி சொல்லனுமில்ல..." என்றபடி அவளுக்கு இணையாக நடந்தான்.

"ராம்... ஒரு நிமிசம்..." என்று குரல் கேட்க, திரும்பினான்... அவனை நோக்கி புவனா வந்து கொண்டிருந்தாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அருமை.அம்மா...............ஹ!ஹ!!ஹா!!!இப்புடீல்லாமா பண்ணுவாங்க?

'பரிவை' சே.குமார் சொன்னது…

இந்தக் கதையில்அடிதடி, பிரச்சினைகள் எல்லாம் படிக்கும் போது கல்லூரியில் நடந்தவைகளே...

காதல் மட்டுமே புதியதாய்...

எனது நண்பனே அம்மா என்று ஒரு பெண்ணைக் கூட்டி வந்து இரண்டு அறை வாங்கியிருக்கிறான் சார்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.