மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கிராமத்து நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிராமத்து நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்

பொங்கல்...

பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் ஏன் திருமணத்துக்கு முன்னும் அதன் பின்னான சில காலங்களும் கொடுத்த இனிப்பின் சுவையை மனதில் சுமந்து உதட்டில் வடுவாய் ஊறும் ஆசையை மெல்லத் தள்ளி பொங்கலா அப்படின்னா என்று கேட்பவர்களிடம் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து மனம் நிறைந்த வேதனையுடனே இன்றைய காலை நகர்ந்தது.

எதற்காக இந்த வாழ்க்கை...? இதில் சாதித்தது என்ன...? கடன் இல்லாமல் இருக்கிறோமா...? கவலை இல்லாமல் இருக்கிறோமா..? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் இதுவரை கடந்து வந்த ஒன்பது ஆண்டுகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது. 


காலையில் எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்த பின் மாலைகளில் சிரிக்கும் அவரை மனைவி செல்போனில் விழுங்கி வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பிய போது அதைப் பார்த்ததும் அங்கிருக்க முடியாத நிலை நினைத்து... இந்த வாழ்க்கையை நினைத்து... கண்ணீர்தான் வந்தது. 

இன்று முழுவதுமே மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் அலைந்து கொண்டே இருந்தது. இந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு விருமாண்டியில் 'போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கடா' என கமல் சொல்வதைப் போல் போய் புள்ளைகளோட, குடும்பத்தோட வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோமே... எத்தனை காலம் இங்கிருந்தாலும் கடன் நம்மை விட்டு விலகப் போவதில்லை ஆனால் வாழ்க்கையில் நிறைய இழப்புக்கள் நம்மைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றியது.

எங்க ஊரில் மார்கழி மாதத்தில் மாரியம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். முதல் வருடம் மைக் செட் கட்டியபோது எத்தனை பிரச்சினைகள்... போலீஸ் ஸ்டேசன் வரை சென்று வந்தோம் என்றாலும் அன்று ஆரம்பித்து வைத்து மழையில் குடை பிடித்தபடி நாங்கள் செய்த பொங்கலின் தொடர்ச்சியாய் இன்று வரை அது தொடர்வதில் மகிழ்ச்சி. மார்கழி மாதம் முடிந்து தை முதல்நாள் முதல் பொங்கல் மாரியம்மனுக்கே.

அடுத்ததாக எங்கள் ஊர் கண்மாயில் காவல் தெய்வமாய் நிற்கும் எங்க முனீஸ்வரனுக்கு ஊரில் பாதிப் பேர் பொங்கல் வைப்போம். கோவில் பொங்கல்களில் எல்லாருடைய பொங்கப் பானைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாமிக்குப் படைத்து அதில் நெய், வெல்லக்கட்டி எல்லாம் போட்டு வைத்திருந்து தீபம் பார்த்த பின் அந்த பள்ளையச் சோறை வாங்கிச் சாப்பிட்டால் ஆஹா என்ன சுவை... என்ன சுவை... பள்ளையச் சோற்றுக்கு தனி சுவைதான்... அதுவும் கோவில் பொங்கல்கள் எப்போதும் சுவை அதிகம்.

அதன் பின் வீட்டுப் பொங்கல்... முன்னெல்லாம் வயலில் இருந்து கதிர், அருகம்புல் எல்லாம் பிடிங்கி வந்து பொங்கல் வைப்போம். இப்போது வயல்களில் கருவை மரங்களின் ஆட்சியாகிவிட்டது. தண்ணீர் ஓடிப் பாய்ந்த வாய்க்கால்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சில இடங்களில் வயலில் கட்டிய வீடுகளுக்கு பாதை ஆகிவிட்டது. இன்னும் சில காலம்தான் எல்லா வயல்களும் ஒன்றாகிவிடும். ஊடு வரப்புக்கள் எல்லாம் உயிரை இழந்து கொண்டிருக்கின்றன.

வீட்டுப் பொங்கல் என்பது இப்போது எங்களுக்கு இரண்டாய்.... தேவகோட்டையில் அதிகாலையில் மனைவி பொங்கல் வைத்து விட்டுத்தான் ஊருக்குப் போனார். அங்கு முனியய்யா கோவில் பொங்கல் முடித்ததும் மாலைதான் வீட்டுப் பொங்கல் வைத்தார்கள்... இரவு நாச்சியம்மத்தா கோவில் பொங்கலுடன் முதல்நாள் பொங்கல் முடிவுக்கு வந்துவிடும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்....

அப்பல்லாம் வீட்டுக்கு நாலஞ்சி மாடு நிக்கும்... ஆடுகள் இருக்கும்... எல்லாமே மாறிப் போச்சு... மாடுகளும் இல்லை... ஆடுகளும் இல்லை... பல வீடுகளில் மனிதர்களும் இல்லை.

காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறு இட்டு புது பிடி கயிறு போட்டு... குளிப்பாட்டி... அதுவும் கம்மாய் நிறைந்து கிடக்கும் காலத்தில் எல்லாரும் ஒன்றாய் மாடுகளை நீச்சி... வைக்கோல் வைத்து தேய்த்து அழுக்கைத் தண்ணீரில் கரைத்துவிட்டு முனியய்யா கோவில் குங்குமத்தை எடுத்து அழகழகாய் பொட்டிட்டு வீட்டில் கட்டி வைப்பதுண்டு. பலர் மாட்டின் கழுத்தில் துண்டுடன் கரும்பையும் கிழங்கையும் பொங்கத் தாலிச் செடியையும் கட்டி வைப்பார்கள்... சிலரோ வீட்டுச் சுவற்றில் அடித்த காவியின் மீதத்தை மாட்டின் கொம்பிலும் உடம்பிலும் பூசிவிடுவார்கள்.

'ஏப்பா... ஏய்... எப்ப பொங்க வச்சி திரும்பி வர்றது... பத்தரை மணி வரைக்கும் ராகு காலம்ப்பா... வெயில்லயா போயி வச்சிக்கிட்டு நிக்கிறது... எளவரசுக  வாங்கப்பா போயி  பொங்கக் குழி சுத்தம் பண்ணிட்டு வருவோம்' என்றபடி சித்தப்பா மம்பட்டியுடன் வருவார். அவர் பின்னே அரிவாள், மம்பட்டி என ஆளாளுக்கு ஒன்றுடன் பாதையை சரி செய்தபடி கருப்பர் கோவிலை அடைவோம்.

கருப்பர் கோவிலின் முன்னே 'இன்னைக்கு எங்கிட்டுப்பா சூலம்' எனக் கேட்டு நீண்ட அடுப்பு வெட்டிவிட்டு... முள்களை எல்லாம் சுத்தம் செய்து படையல் போட வீடு போல் கட்டங்கள் இட்டு... 'ஏப்பா நீ நாலு பக்கமும் வாசப்படி வெட்டுப்பா... நீ உள்ள வெட்டிக்கிட்டு வாப்பா நிக்காம... ஏம்ப்பா கொஞ்சப் பேரு வைக்கப் பிரி போட்டு போட்டு மாவிலை வேப்பலை கொண்டாந்து தோரணம் கட்டுங்க... ரெண்டு பேரு தோரணத்துக்கு கம்பு ஊனுங்கப்பா... புள்ளக நிக்க கொஞ்சம் நெலல்ல சுத்தம் பண்ணி வைங்கப்பா... இங்க முடிச்சிட்டு கருப்பர் கோவிலச் சுத்தி நெருஞ்சி முள்ளா இருக்கு... கொஞ்சம் சுத்தம் பண்ணுங்கப்பா என்ற குரல்களின் ஓசைக்கேற்ப வேலைகள் நடக்கும்.

எல்லாம் தயார் செய்து வந்த உடன் 'ஏம்பா... பொங்க வைக்க கிளம்புங்கப்பா என்றதும் பொருட்கள் நிறைந்த கூடை, தண்ணீர்க்குடம், முள்ளுக்கட்டு என ஆளுக்கு ஒன்றாய் தூக்கிச் சென்று வரிசையாய் வைத்து எல்லாரும் வைத்ததும் பொங்கல் வைக்க ஆரம்பித்து எல்லாருடைய பானையும் பொங்கியதும் சங்கு ஊதி, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் கருப்பர் கோவில் முன்னே கட்டி, கருப்பர் கோவில் முன்னே இருக்கும் தூபக்காலில் தேங்காய் நாறு, பூவரசம் பட்டை என இட்டு தீவைத்து சாம்பிராணி போட ரெடி பண்ணி, பெரிய கருப்பர் சின்னக் கருப்பருக்கு தண்ணீர் வைத்து கழுவி பொட்டிட்டு... துண்டு கட்டி... பூமாலைகள் போட்டு ஐயாக்கள் பூஜைக்கான வேலையில் இறங்க, அர்ச்சனைக் கூடைகள் வரிசையாய் வந்தமரும்.

புறமடைத்தண்ணி... இப்பல்லாம் இல்லை... புறமடைத் தண்ணியெல்லாம் அப்போ எடுத்தாந்து அதை மந்திரித்து பொங்கலோ பொங்கலெனச் சொல்லி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அந்த நீரைத் தெளித்து... தீச்சட்டி எடுத்து... திட்டி சுற்றி அதில் போட்டு... மூன்று சுற்றுகளுக்குப் பின் பொங்கல் வைத்த பொங்கக் குழி தாண்டி உடைத்து எல்லாரும் விழுந்து கும்பிட்டு...  படையல் சோற்றைப் பிசைந்து எல்லாருக்கும் கொடுக்க, அதை மாடுகளுக்கு தின்னக் கொடுத்து.. கேலிக்காரர்களின் முகத்தில் மிளகாயுடன் தேய்த்து மகிழ்ந்து மாடுகளை வீட்டுக்குக் கொண்டு சென்று உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து கசாலையில் கட்டிவிட்டு மீண்டும் கருப்பர் கோவில் வந்து சாமி கும்பிட்டு எல்லாருமாக கிளம்பிப் போய் வீட்டில் பொங்கலுடன் மதிய விருந்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு கரும்புடன் மாரியம்மன் கோவிலுக்கோ அல்லது சிராவயல் மஞ்சுவிரட்டுக்கோ கிளம்பி விடுவார்கள்.

அன்று மாலை மீண்டும் மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல்... பெரும்பாலான வீடுகள் கலந்து கொள்ள, மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தோரணையுடன்... குழந்தைகளின் ஆட்டம்... பெரியவர்களின் அரசியல் பேச்சுக்கள்... இளைஞர்களின் கேலி கிண்டல்கள்... இளவட்டக் கல் தூக்குதல்... என மகிழ்வாய்... சில வருடமாக விளையாட்டுப் போட்டிகளும் இவற்றுடன் இணைய குதூகலமாய் பொங்கல் தினம் நகரும்.

இதை எல்லாம் அனுபவிக்காமல் ஆறு மணிக்கு எந்திரிச்சி... நம்ம டயத்தில் குளித்து... அவசரமாக அலுவலகம் சென்று... வேலை... வேலை என சாப்பாடு மறந்து... மாலை திரும்பி... என்ன சமையல் செய்வதென யோசித்து... சமைத்து... ஊருக்குப் பேசி... சாப்பிட்டு... கணிப்பொறியில் ஏதோ ஒன்றைப் பார்த்து.... படுத்து... மீண்டும் ஆறு மணி... குளியல்.... என நகரும் வாழ்க்கை வெறுப்பையே தருகிறது.


பொங்கல் நினைவுகளுடன் பொங்கும் மனதை தேற்றியபடி படுக்கையை விரிக்கிறேன்... அடுத்த வருடமேனும் குடும்பத்துடன் குதூகலப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலுடன்....

ஆசைகள் எப்போது நிராசைகள் ஆவதில்லை... எப்போதேனும் ஆகலாம்... அந்த எப்போதேனும் நம்மிடம் வராமல் இருக்கட்டும். 
-'பரிவை' சே.குமார்.   

நினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை

என் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இனிய 
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
(எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைக்கும் போது மனைவி எடுத்து அனுப்பிய போட்டோ)

நினைவிலே கரும்பு
 கரும்பு...

இதில்தான் எத்தனை வகைகள் செங்கரும்பு... ராமக்கரும்பு... ஆலைக்கரும்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய்

சிறுவயதில் கரும்பு என்ற வார்த்தையே இனிக்கத்தானே செய்தது நமக்கு.

பொங்கல் என்பது இனிப்பின் சுவையுடன் கரும்பின் சுவை உணர்த்தும் ஒரு பண்டிகைதான் இல்லையா...

கிராமங்களில் தீபாவளியை விட பொங்கலுக்கே மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் விவசாயியின் மகிழ்வின் விளைச்சல்தானே பொங்கல். புத்தரிசி... கலப்பை... மண்வெட்டி... உலக்கை... மாடுகள்... பொங்கலின் சுவையில் எல்லாமே விவசாயம் சார்ந்தவையாய் இருக்கும். 

சந்தோஷத்தின் மொத்தக் குத்தகையில் தீபாவளிக்கு பட்டாசு... மாரியம்மன் திருவிழாவுக்கு கரகம், கரகாட்டம்... சிவராத்திரிக்கு காவடி, பொரி உருண்டை... தேரோட்டத்துக்கு மாம்பழம்... என பகுக்கப்பட்டிருப்பதின் தொடர்ச்சியாய் பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு, செங்கரும்பு என்பதாய் எப்போதும்.

பொங்கல் வருவதற்கு முன்னர் கார்த்திகை, மார்கழியிலேயே வாரச் சந்தைக்கு வந்து விடும் கரும்பு... பொங்கல் முடிந்த பின்னரும் சில வாரங்கள் சந்தையில் களமாடும். பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் கடை விரித்து வைக்கும் ராஜாத்தி அக்காவின் கடையில் ஒரு சாக்கில் புதிதாய் படுத்திருக்கும் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கரும்பு.

சந்தைக்குச் செல்லும் அம்மா காய்கறிகள், மீன் எனப் பிடித்து வரும் சந்தைச் சாமான் கூடையில் நாலைந்து துண்டுகள் கரும்பு சிரித்துக் கொண்டிருக்கும். தூரத்தில் வரும்போதே தலைகாட்டும் கரும்பின் சுவை நாக்கில் தெரிய கண்கள் சிரிக்கும்.

ஆளுக்கொன்றாய் அம்மா கொடுக்க, அடிக்கரும்புக்குத்தான் சுவை அதிகம் என்பதால் தம்பிக்கும் எனக்கும் மல்யுத்தம் நடப்பதுண்டு. அக்கா கொடுப்பதைச் சுவைக்கும். சட்டையில் வடியாம தின்னுங்கடா... கறை புடிக்கும் என்ற அம்மாவின் கத்தல் சட்டை செய்யப்படாது. சட்டையில் முத்து முத்தாய் சிதறியிருக்கும் கடித்த கரும்பின் நீர் கறையானால் என்ன என்பதாய் நக்கல் செய்யும்.

மேல்நிலைப் பள்ளி காலத்தில் நான், அக்கா, தம்பி என நாங்கள் மூவருமே ராஜ்ஜியத்தில்... மற்றவர்களில் ரெண்டு அக்கா திருமணம் முடிந்து... அண்ணன்களோ சம்பாத்தியத்தின் பின்னே... பெரியண்ணனின் வரவு கரும்புடனும் எங்களுக்கான உடைகளுடனும் இருக்கும் என்றாலும் மாட்டுப் பொங்கல் முடிந்த பின் வருவதே அவருக்கு வாடிக்கையாய்.

பள்ளி நாட்களில் பொங்கலுக்குச் சாமான் வாங்க ஆரம்பிக்கும் அப்பா எப்போது கரும்பு வாங்கி வருவார் என்ற காத்திருப்பு மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்.  பெரும்பாலும் பொங்கல் சிறப்புச் சந்தை தினமே வீட்டுக்கு கரும்பின் வரவு தினமாய் இருக்கும்.

அடுத்தடுத்த வீடுகளில் கரும்புக் கட்டு வந்து இறங்கும் போதெல்லாம் 'அவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க...’ ‘இவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க' என்ற வார்த்தைகள் வாய்க்குள்ளயே வண்டியோட்டும். சத்தமாகக் கேட்டு அம்மாவிடம் திட்டோடு அடியும் வாங்க வேண்டியிருக்குமே என்பதால் வார்த்தைகள் வலுவிழந்த புயலாய்த்தான் வரும்.

ஒரு கட்டுக் கரும்பு... பள்ளிக்காலத்தில் பனிரெண்டு கரும்பு கட்டுக்கு என்றிருந்தது பின்னாளில் பத்தாகிப் போனது... எல்லாம் முதலாளித்துவம் என்பதுடன் லாப நோக்கமே பிரதானமாய்.

ஒரு கட்டுக் கரும்பை சைக்கிள் ஹாண்ட்பாரில் கட்டி, பின்னால் ஹேரியரோடு கட்டப்பட்ட அதன் தோகை ரோட்டில் இழுபட, அப்பா சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரும்போது கொல்லைக் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனசுக்குள் செங்கரும்பு இனிக்க 'டேய்... எங்கப்பா கரும்பு வாங்கிட்டுப் போறாங்கடா...' என்று குதூகலமாய்ச் சத்தமிடச் சொல்லும்.

அப்படி நாம் பார்க்கத் தவறிய நாட்களில் எவனாவது ஒருத்தன் 'டேய் உங்கப்பா ஒரு கட்டுக் கரும்பு வாங்கிட்டுப் போறாருடா' என்று கத்துவான். அவன் குரலில் ஒரு கட்டு என்பது ஆச்சர்யத்துடனும் மிகுந்த அழுத்தத்துடனும் வரும். அதன் பின்னான நாட்களில் மாடு மேய்க்கப் போகும் போது எப்பவும் போல் துண்டும் சிறிய மூங்கில் கம்பும் கையிருக்க  புதிதாய் நீளமாய் வெட்டிய கரும்பும் சேர்ந்து கொள்ளும். அதில் யாருக்கேனும் மரத்தில் அடித்து ஒடித்துக் கொடுக்கப்படும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் படிச்சிருக்கோமே... நடைமுறைப் படுத்தலைன்னா எப்படி.

மாடு மேய்த்து வீட்டுக்குப் போகும் போது தோகையெல்லாம் வெட்டி விட்டு திண்ணையில் இரண்டு உத்தரங்களுக்கு இடையே வரிசையாக போட்டு வைத்திருப்பார். டேய் கரும்பெடுத்து வெட்டிச் சாப்பிடுங்கடா என்று சொன்னதும் ஆமா வந்ததும் வராததுமாய் உடனே திங்கணுமாக்கும்... அப்புறம் திங்கலாம் என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கரும்பு ஆளுக்கு ரெண்டு மொளி என வெட்டப்பட்டு கடித்து இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்... நடுநாயகமாய் குப்பைத் தகரமும் சக்கைகளைச் சுமக்க... எனக்கு ரெண்டு மொளி வெட்டுங்கடா என அப்பாவும் இணைந்து கொள்வார்.

கரும்பு தனியே தின்பதில் என்ன சுகம் வந்து விடப் போகிறது. எல்லாருமாய் கோவிலில் கூடி தின்பதில்தான் மொத்த சுகமும் அடங்கியிருக்கும். நாம் ரெண்டு மொளி வெட்டிக் கொண்டு போனால் மற்றவர்கள் நாலு மொளி வெட்டி பெரிய தடிபோல் கொண்டு வந்து தின்ன ஆரம்பிப்பார்கள். நாம சீனி வெடி போடும் போது சிலர் சாணிக்குள் அணுகுண்டு வைப்பது போல. மாரியம்மன் கோவிலைச் சுற்றி கரும்புச் சக்கைகள் மல்லிகைப் பூவை இரைத்ததுபோல் கிடக்கும்... என்னை விடுடா என்று அது கதறும் வரை மெல்லப்படும் சக்கைகள் சற்றே மஞ்சள் கலந்த பூவாய்.

Image result for கரும்பு

பெரும்பாலான வருடங்களில் தை மாதத்தில் வயல்களில் அறுவடைக்குத் தயாராய் வயலில் தண்ணீர் காய வேண்டிய நிலையில் கதிர் தன் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருக்கும். ஒரு சில வருடங்களில் மட்டுமே பொங்கலுக்கு முன்னர் கதிர் அறுப்பு முடிந்திருக்கும். கதிர் அறுக்காத காலத்தில் வீட்டுப் பொங்கலன்று பிள்ளையார் பிடிக்க அருகம்புல்லும் பொங்கப்பானையில் கட்ட நெல் கருதும் வயலில் போய் பறித்து வருவோம்.

தொலைக்காட்சிகள் பொங்கலை நடிகர் நடிகையோடு கொண்டாட ஆரம்பித்த போது அருகம்புல்லும் நெல் கருதும் பறிக்கச் செல்ல முக்கலும் முணங்கலும் கூடியதையும் நீ போ மாட்டியா நாந்தான் போகணுமாவென சண்டைகள் முளைத்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். சாணியில் பிடித்து அருகம்புல் தலை சூடிய பிள்ளையாருக்கு முன்னே கரும்பும், கிழங்கும் இடம் பிடித்துக் கொள்ளும். பொங்கல் வைத்து இறக்கியதும் அந்தக் கரும்புக்கு ஒரு நாய்ச் சண்டையே நடக்கும்.

வீடு வாசலில் அதிகாலை எழுந்து அக்கா போட்ட சிரிக்கும் பொங்கல் கோலத்தில் கரும்பும் கலராய்த் தெரியும். அதற்கு கலர் கொடுத்தவன் நாந்தான் என்பதில் சந்தோஷம் மிளிரும். மறுநாள் மாடு போட்டு கலர் கொடுப்பதுண்டு. மாடு வரைவதில் என்னைவிட தம்பி கில்லாடி. அவனின் மாட்டுக்கே மவுசு அதிகம்.

வீட்டுப் பொங்கல் சாதாரணமாகக் கழிய மாட்டுப் பொங்கலே விஷேச தினமாய் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும்...

மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கு புது மூக்கணாங்கயிறு போட்டு, தண்ணீர் நிறைந்து கிடக்கும் கண்மாயில் மாடுகளை நீச்சி... அதுவும் வாலைப் பிடித்து தண்ணீருக்குள் நீஞ்ச வைப்பதில் நமக்கும் மாட்டுக்கும் சந்தோஷமும் சுகமும் கூடுதலாய்...

மாட்டைக் குளிப்பாட்டியதும் கண்மாய்க்குள் வின்னி மரமும் பூவரச மரமும் பிண்ணிப் பிணைந்து கிடக்க, அருகே நின்ற முனியய்யாவின் குங்குமத்தை எடுத்து மாட்டுக்கு பொட்டிட்டு... அதுவும் அழகழகாய் வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புதுக்கயிறு போட்டு... கழுத்தில் துண்டு கட்டி தயாராக கட்டி வைத்திருப்போம்.

பலர் சிறு துண்டுக் கரும்பை ரெண்டாய் வெட்டி கயிற்றில் கட்டி, அதனிடையே பனங்கிழங்கும் இணைத்து மாட்டின் கழுத்தில் கட்டி வைத்திருப்பார்கள். காவியைக் கலந்து கையை அதில் நனைத்து மாட்டின் மீது கைக்கோலம் போட்டு வைப்பார்கள். கொம்புக்கு காவி அடிப்பார்கள். எங்களுக்கு காவி அடிப்பதும் கரும்பு கட்டுவதும் எப்போதும் பிடிப்பதில்லை. அதனால் கொம்புக்கு எண்ணெய் தேய்த்து வழவழப்பாக வைப்பதுடன் சரி.

ஊர் கூடி பொங்கல் வைக்கும் இடத்தில் பொங்கக் குழி தாண்டவும் திட்டிக்குழி சோறு தீட்டவும் மாடுகளைக் கொண்டு வந்து மரத்துக்கு மரம் கட்டி வைத்திருப்போம்... இந்தச் சோறு கேலிக்கார உறவு முறைக்குள்ளும் தீட்டிக் கொள்ளப் படுவதும் உண்டு. அதுவும் வரமிளமாய் மட்டுமே கையில் எடுத்து முகமெல்லாம் தீட்டப்படுவதும் உண்டு. 

கட்டப்பட்டிருக்கும் மாட்டின் கழுத்தில் இருக்கும் கரும்புகளும் கிழங்குகளும் களவு போகாமல் பார்த்துக் கொள்வதற்கென சிலர் மாட்டிடமே நிற்பார்கள். அப்படியும் அவர்கள் அசந்த நேரத்தில் அது களவாடப்படும். யார் கையில் கிடைக்கிறதோ அவர் அதை மற்றவர் முன்னிலையில் வைத்துச் சுவைத்துச் சாப்பிடும் போது பார்த்துக் கொண்டிருப்பவரின் தொண்டைக்குள் கரும்பின் சுவை மெல்ல இறங்கும் உமிழ் நீராய்.

பொங்கல் முடிந்த பின்னரும் இரண்டு மூன்று நாட்களுக்கு கரும்பு தின்னும் நாட்களாய்த்தான் இருக்கும்... கரும்பை மென்று... மென்று... வயிறெல்லாம் தண்ணீராய் நிறைந்து நிற்கும்... சாப்பாடு வேண்டாமெனச் சொல்லி திட்டு வாங்க வைக்கும்.

தெரியாத வயதில் அறியாமல் கரும்பைத் தின்றதும் தண்ணீரைக் குடித்து வாயெல்லாம் வெந்து போய்க் கிடந்ததும் உண்டு. அதே போல் தோகையை கையில் எடுத்து இழுத்து அதிலிருக்கும் சொணையானது கையெல்லாம் முள்ளு முள்ளாய் ஓட்டிக்கொள்ள அவஸ்தைப் பட்டதும் உண்டு.

கரும்பெல்லாம் முடிந்த பின்னர் கரும்பைத் தேடும் வாய்க்கு வேண்டாமென ஒதுக்கிப் போட்ட தூர்க்கரும்பும் தோகைப் பக்கம் இனிக்காதென வெட்டிப் போட்டவையும் தேடிப் பிடித்து சுவைப்பவையாய் அமையும்.

பள்ளி நாட்களில் ஒரு கட்டுக் கரும்பு பத்துவதில்லை... இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டுமென மனசு சொல்லும். அதுவே காலங்கள் மாற, ஆறு கரும்பு போதுமா என்பதில் ஆரம்பித்து நாலு போதுமுல்ல... யார் இங்க திங்கிறா என்றாகி ஒரு கட்டத்தில் கரும்பு விக்கிற விலையில ஒரு கட்டு வாங்க முடியுமா..? என்ற சொல்லோடு இரண்டில் வந்து நின்றது.

அக்காக்கள் அண்ணன்களின் குழந்தைகளுக்கு கரும்பை வெட்டிக் கொடுக்கும் போது அதை நாலாக வெட்டித் தோலை உறித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொடுப்பதுண்டு. அப்படித் தின்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி... அதில் சில துண்டுகளை நம் வாய் விரும்புவதில் நமக்கும் மகிழ்ச்சி.

கரும்பைக் கடித்து இழுத்த இழுப்பில் ஆடிக் கொண்டிருந்த பல் விழுந்த அனுபவமெல்லாம் உண்டு. அளவுக்கதிகமாகத் தின்று புளிச்ச ஏப்பம் வர வயிறு சரியில்லை என படுத்திருந்த நாட்களும் உண்டு.

மாடு மேய்க்கச் செல்லும்போது செட்டியார் தோட்டத்தில் ஆலைக் கரும்பை களவாண்டு தின்ற களவாடிய பொழுதுகளும் ஞாபகச் சுவற்றில் இன்னும் அழியாமல்.  கரும்பு மட்டுமா... எவ்வளவு இளநீர்... ஓடி ஓடி வந்து குடித்த நாட்கள் எளிதில் மறந்துவிடுமா..?

அப்பா வெளியூரில் இருந்த காலத்தில் அம்மா சந்தைக்கு நடந்து போக சலிப்படைந்த தினங்களில் பழகும் போது முழங்காலில் பெற்ற காயம் தழும்பாக இருந்தாலும் சைக்கிளை தலை கீழாக ஓட்ட அறிந்து வைத்திருந்த நாமே சந்தையில் காய்கறி வாங்கும் பாக்கியவானாய்... அன்று பழகியதுதான் இன்று கை கொடுக்கிறது.

கரும்பு வாங்குவதும் நாம்தான் என்றான நாட்களில் ஒரு கட்டுக் கரும்பை அப்பாவைப் போல் ஹேண்ட்பாரில் கட்டி, சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த போது இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. கரும்புக் கட்டோடு சரளை ரோட்டில் சைக்கிள் சரச்சரவென பயணிக்கையில் சைக்கிளை மிதிக்கும் காலில் ஒரு மிதப்பு இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு அதன் சுவை அறியும்.

கல்லூரியில் படிக்கும் போது நண்பனுடன் சேர்ந்து கரும்புக் கடை போடலாம் என முயற்சி செய்து பின் நமக்கு சரி வராது என ஒதுங்கிய நிலையில் தன் சொந்தங்களுடன் நண்பன் ஒரு லாரி கரும்பை இறக்கினான் விற்பனைக்காக... 

மூங்கில் கம்புகள் கட்டப்பட்டு அதில் சாய்ந்து கரும்புகள் தோகை விரித்து ஆடிய அந்த கரும்புக் கடையில் கேஷியராய் அமர்ந்து பணத்தை வாங்கி சாக்கிற்குள் போட்டு சில்லரை கொடுத்து... அது ஒரு கானாக்காலம்... வீட்டுக்குச் செல்லும் போது நாப்பது ரூபாய் மட்டும் கொடுத்து நல்ல கரும்பாய் பத்தையெடுத்துக் கட்டிக் கொண்டு போக வாய்த்த தருணம் நினைவில் என்றும் அழியாதது.

தீபாவளிக்கு எப்படி வெடித்த வெடியின் பேப்பர்கள் இறைந்து கிடக்குமோ அப்படித்தான் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் ஊரெங்கும் நிறைந்து கிடக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்காக்கள் கோவிலைச் சுற்றிக் கூட்டி அள்ளி தீவைத்து சுத்தம் செய்வார்கள்.

கரும்பின் அடிப்பாகத்தை ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றி கரும்பு வளர்த்ததும் உண்டு... அது கொஞ்ச நாள் பச்சை காட்டி பின் நம் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு  காய்ந்து போனதும் உண்டு.

கரும்பென்றால் எத்தனையோ நினைவுகளை நம்முள்ளே சுவையாய் இறக்கிச் செல்லும். இப்போது பொங்கலுக்கு ஊருக்குப் போவதில்லை என்பதால் கரும்பின் சுவை கைவிட்டுப் போய்விட்டது.  கரும்பின் மீதான காதலால் ஊருக்குப் போகும் போது கரும்பு ஜூஸ் விற்கும் வண்டியைப் பார்த்தால் நம் வண்டி மெல்ல அதனை நோக்கி நகரும். ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்ற ஆசை இரண்டு கிளாசிலோ மூன்று கிளாசிலோ தழும்பி நிற்கும்.

இங்கும் கரும்புத் துண்டுகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு கட்டுக் கரும்பு சாப்பிட்டவனுக்கு ஒரு மொளிக் கரும்பு என்பது பெரியதாய்த் தெரியும் என்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதாய்தான் தோன்றும். அதைவிட அதன் விலை நம்மை மெல்ல விலகிப் போகச் சொல்லும். செங்கரும்பின் சுவை தந்த சந்தோஷ நாட்களை மனசுக்குள் சுமந்தபடி கரும்பைக் கடந்து நடந்து விடுவேன்... கரும்பு அந்த இடத்திலே இருக்கும் யாரேனும் தன்னை கூட்டிப் போவார்கள் என்ற ஆவலுடன்.

இங்கு எல்லாம் கிடைக்கும் என்றாலும் விலைதான் நம்மை வியக்க வைக்கும்... ஊரில் நொங்கு வெட்டி கூடைக் கணக்காய் குடித்து மகிழ்ந்திருப்போம்... இங்கு ஒரு நொங்கின் விலை ஊரில் ஆயிரம் ரூபாயாய்.... எல்லாமே இப்படித்தான் என்பதால் நாம் பார்வையாளனாய் கடப்பதும் ஒரு சுகமே.

செங்கரும்பின் சுவை அறியாத நாவுண்டோ...?

செங்கரும்பின் பின்னே எத்தனை நினைவுகள் இனிப்பாய்... சுவையாய்... பேசினால் இன்னும் சுவைக்கலாம் செங்கரும்பாய்... 
-'பரிவை' சே.குமார்.


புதன், 27 செப்டம்பர், 2017

ராசாத்தி உன்ன எண்ணி...

என்னோட வலை திறப்பதில் பிரச்சினை இருக்கிறது என்பதை திரு.இராமானுஜம் ஐயா உள்ளிட்ட பலர் சொன்னார்கள். நானும் என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்தும் சரியானது  பொல் தெரியவில்லை. என்னால் யாருக்கும் கருத்திடவோ, வந்திருக்கும் கருத்துக்கு மறுமொழி இடவோ இயலவில்லை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் காணவில்லை. தனபாலன் அண்ணன் தன் தொழிலில் பிஸியாக இருப்பதால் அவராலும் சரி செய்ய இயலவில்லை. நண்பர் தமிழ்வாசி சரி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சரியாகும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

'மன்னவன் பேரைச் சொல்லி' என ஆரம்பித்த சென்ற பதிவை வலைப் பிரச்சினையால் அதிகம் பேர் வாசிக்கவில்லை என்றாலும் பலர் முகநூல் அரட்டையில் பதிவு அருமை என்று சொன்னார்கள்... பாடல்கள் குறித்து எழுதியிருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துப் பதிவு எழுதிய மகிழ்ச்சி. சினிமாப் பாடல்கள்... குறிப்பாக 90-க்கு முந்தைய பாடல்கள் குறித்து எழுதினால் எவ்வளவு சந்தோஷம் மனசுக்குள் பூக்குமோ அப்படித்தான் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எழுதினாலும் பேசினாலும் மனசுக்குள் மகிழ்ச்சிப்பூ பூக்கும். கிராமியப் பாடல்கள் அதாங்க நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் சின்ன வயதில் இருந்து கேட்கும் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புச்சாமி, கோட்டைச்சாமி ஆறுமுகம், தேக்கம்பட்டி சுந்தரராஜன், கே.ஏ.குணசேகரன், சிங்கம்புணரி தங்கராசு, பரவை முனியம்மா, கொல்லங்குடி கருப்பாயி வரிசையில் தஞ்சை சின்னப்பொண்ணு, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இப்போ நாட்டுப்புறப் பாடல்கள் பாடுறாங்க... நிறைய இளைஞர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுறாங்க... கிராமங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

கிராமங்களில் நடத்தப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகளோடு போட்டியிடும் நோக்கோடு மட்டுமின்றி மக்களை அந்த நான்கு மணி நேரத்துக்கு அமர வைக்கவும் ஒவ்வொரு பாடலுக்கும் சிலரை நடனம் ஆட வைப்பது... அதாவது ஆடல்பாடல் நிகழ்ச்சி போல... என்ன அதில் படப்பாடலை ஒலிக்க வைத்து ஆடுவார்கள்... அது கேவலத்தின் உச்ச நிகழ்ச்சியாகி பெரும்பாலான இடங்களில் தடை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கள் பகுதியில் எல்லாம் அதற்கு அனுமதியில்லை. நாட்டுப்புறப் பாடலைப் மேடையில் பாடும் போது குத்தாட்டம் போட விடுகிறார்கள்... இதில் ஆபாசம் இல்லாதிருக்கிறது என்றாலும் இதிலும் குறவன் குறத்தி என்ற நகைச்சுவை பகுதியை இணைத்து ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான். கண்காணிக்க வரும் காவல்துறையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் போகிறது. எங்க பகுதியில் திருப்பத்தூரைச் சேர்ந்த சேவியர் அவர்களின் திருப்பத்தூரான் இசை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது கிராமியப் பாடல்களில் இளையராஜா என்பவர் இனிமையாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.

விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணனின் 'செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட...', 'தோட்டுக்கடை ஓரத்திலே...' 'ஓண்ணாம் படி எடுத்து...' போன்ற பல பாடல்களைத் திரும்பத் திரும்ப கேட்டிருந்தாலும் புஷ்வனத்தின் பாடல்கள் மீது ஏதோ ஒரு காதல்... எப்பவும் இப்பவும் உண்டு. குறிப்பாக 'ராசாத்தி உன்னை எண்ணி' பாடல் கேட்கும் போது மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி வந்து உக்கார்ந்து கொள்ளும்... அதுவும் அவர் 'மஞ்ச செவ்வந்திப்பூவாம்... மன்னார்குடி பூத்தபூவாம்... மன்னார்குடிக்கு போயிவந்தேன்... மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்...' என்ற வரிகளைத் தொடர்ந்து பாடும் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கும். இந்தப் பாடல் என்னோட ஆல்டைம் பேவரைட். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. புஷ்பவனம் குப்புச்சாமியும் அனிதா குப்புச்சாமியும் பாடிய பாடல்களை எப்போது கேட்டாலும் சோர்ந்து கிடக்கும் மனசுக்குள் ஒரு துள்ளல் ஏற்படும்.

அதே மாதிரி தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து எந்தக் கோவில் திருவிழா என்றாலும் பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வுகளில் தவறாது ஒலிபரப்பப்படும் பாடல் 'அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கரகம் மின்னுது' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடல் சாமி வராதவர்களையும் வரவைக்கும் பாடல். கிராமிய இசையில் இருக்கும் சாமிப்பாடல்களில் இந்தப் பாடல் மீது எப்பவும் ஒரு காதல். அதென்ன கருப்பர் மீது காதல்... கிருஷ்ணன் மீது காதல் வந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றலாம். எங்க குலதெய்வம் அழகர்கோவிலில் காவல் தெய்வம் பதினெட்டம்படிக் கருப்பன் என்பதால் இந்தப் பாடல் மீது காதல் வந்திருக்கலாம்... இந்தக் காதல் வழி வழியாகத் தொடருமா என்ன... எங்க விஷால் மொபைலில் சேமித்து வைத்து அடிக்கடி கேட்கும் பாடல் இதுதான் என்றால் விசித்திரமாக இருக்கும்... ஆனால் அதுதான் உண்மை. அதுவும்  சப்தமாகக் கேட்டுக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடித்தமானது.

இப்படியே பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்... சின்னப்பொண்ணு அவர்கள் நாக்கமுக்க பாடல் மூலம் பிரபலமாகினார் என்றாலும் அவர் படித்த 'மரிக்கொழுந்தே.. என் மல்லிகைப் பூவே' கிராமங்களில் மட்டுமின்றி சந்துபொந்தெல்லாம் அடித்து ஆடவில்லையா... நம்மைக் கடந்து செல்லும் எத்தனையோ பேரின் செல்போன்களில் ரிங்க்டோனே அதாகத்தானே இருந்தது. அவரின் மரிக்கொழுந்தைவிட 'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்' எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவைக்கும் அல்லவா? நம்ம பரவை முனியம்மா பாடிய 'மஞ்சு மலை நரிக்குறவர் நாங்கயில்லை சாமி' பாடல் கேட்டிருக்கிறீர்களா? அதேபோல் கே.ஏ.குணசேகரன் அவர்களின் 'நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்' பாடலைப் பலர் பாடியிருக்கிறார்கள். அதில் பரவை முனியம்மாவின் குரலில் கேட்டு ரசியுங்கள். அப்படியே கோட்டைச்சாமி ஆறுமுகம் அவர்களின் 'பச்சரிச்சி கொத்தமல்லி கீரையோடவே' பாடலையும் கேட்டுப்பாருங்கள் கொல்லங்குடி கருப்பாயி தன் கிராமியப் பாடல்களை ஆண்பாவம் படத்தில் பாடி நடித்துக் கலக்கியிருப்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம் அல்லவா.

'அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு' பாடல் எப்படி வறுமையைச் சொன்னதோ அதேபோல் ஆக்காட்டி  'ஆக்காட்டி எத்தனை முட்டை இட்டே...' பாடல் ஒரு சோக வரலாற்றைச் சொல்லிச் செல்லும். 'மொச்சைக் கொட்டப் பல்லழகி...' பாடலை கேட்டு ஆடாதோர் யாருண்டு... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பல பாடல்களை... எவ்வளவோ பாடல்கள்... பல கிராமியப் பாடல்கள் வாழ்க்கைக் கதை பேசும்... வயிற்றெரிச்சலைச் சொல்லும்... வயக்காட்டு வாழ்க்கையையும் வலிகளையும் சொல்லும்... ஆடு, மாடு, கோழி... ஏன் குருவிகளின் கதைகளையும் பாடும்... தாலாட்டில் ஆயிரம் கதை சொல்லும்... களையெடுப்பில்... நாற்று நடவில்... கருதறுப்பில்... திருவிழாவில் என எத்தனை பாடல்கள்.  இந்தப் பாடல்கள் எல்லாமே வாய் வழியாக சொல்லிச் செல்லும் பாடல்களாய் இருந்ததால் பல பாடல்கள் அழிந்து போய்விட்டன என்பதே உண்மை என்றாலும் இன்று பாடல்கள் டிஜிட்டல் மீடியாவால் பட்டிதொட்டி மற்றும் இன்றி பார் முழுவதும் கொண்டு செல்லப்படுவதால் இனி எழுதப்படும் கிராமியப்பாடல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

அட ஆமால்ல... இளையராசாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லலையில்ல... சரி விடுங்க அடுத்த பதிவு தேத்திக்கலாம். அதுவரைக்கும் எங்க கொல்லங்குடியில் பிறந்த கருப்பாயி அவர்களின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். கொல்லங்குடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோவில்... காசு வெட்டிப் போட்டால் நினைத்ததை நடத்திக் கொடுக்கும் தெய்வம்... இந்த வெட்டுடையாள்தான் வெள்ளையனிடம் நம்ம வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று சொன்னதற்காக வெட்டுப்பட்ட உடையாள்.... அங்க பிறந்த கிராமத்து அழகி கருப்பாயியின் பாட்டைக் கேட்டு ரசிங்க....


இன்னும் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

ஊர்க்குழம்பின் ஊடாக...

Related image

ஒரு பதிவு என்ன செய்து விடமுடியும்?

சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியுமா..?

தமிழை உலகமே கொண்டாடச் செய்து விட முடியுமா..?

இலக்கியவாதிகளுக்குள்ளான சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைத்துவிட முடியுமா..?

இப்படி நிறைய முடியுமாக்களை எல்லாம் முடித்து வைக்க இயலாதுதான்... ஆனால் எது முடிகிறதோ இல்லையோ நம் மனக்கிடங்குக்குள் ஆழ்ந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டி எழுப்பி அதை அசைபோட வைக்க முடியும். அப்படியான ஒரு பதிவை சமீபத்தில் வாசித்தேன். என் கிராமத்து வாழ்வினை அடிக்கடி அசைபோடுபவன் என்பதால் தூசிபடியாமல்தான் வைத்திருக்கிறேன். இருப்பினும் அந்தப் பதிவு கருவாட்டுக் குழம்பின் வாசத்தையும் வாஞ்சையான மனிதர்களின் நேசத்தையும் மனசுக்குள் மலரச் செய்துவிட்டது. 

என் கணிப்பொறியில் இருந்து கருத்துப் பதிய முடிவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினை... அலுவலகத்தில் நேரம் கிட்டும்போது வாசித்த பதிவுகளுக்கு கருத்து இட்டு விடுகிறேன். என்னைச் சுவாசிக்க வைத்த பதிவின் தொடர்ச்சியாக... அல்லது நீட்சியாக... அவர் பாணியில் எழுதுவது என்பது முடியாத காரியம் என்பதால் என் பாணி எழுத்தே எனக்குப் போதுமானதாகப்படுகிறது.

கருவாட்டுக் குழம்பை வாயில் நீர் ஊறவைக்கும் எழுத்தாக மாற்றியிருக்கும் கவிஞர் என் அன்பு அண்ணன் மீரா செல்வக்குமார் அவர்களின் வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும் வாசிக்க வாசிக்கச் சுவை. அந்தச் சுவை எனக்குள் கிடக்கும் கிராமத்தானையும் தட்டியெழுப்பி எழுத வைத்தது என்றால் மிகையில்லை. மீரா செல்வக்குமார் அண்ணனைப் பொறுத்தவரை அவரின் ஒவ்வொரு பகிர்வும் அழகியலை மட்டுமல்ல அழகிய வாழ்க்கையைப் பேசும். அவரின் 'பிங்க் நிறத்திலொரு பட்டாம்பூச்சி' மனங்களில் பறந்து மகிழ வைக்கவில்லையா... அப்படித்தான் இந்தக் குழம்பும் அதன் வாசத்தினை நாசியில் இறக்கி பசியை வயிற்றில் பூக்க வைத்தது.

எவ்வளவுதான் சொல்லுங்கங்க பட்டும் படாமலும் நட்பு பாராட்டும் நகர வாழ்க்கையைவிட பாசமும் நேசமும் பற்றிக்கொள்ள உறவு முறைகளோடு ஒன்றிக் கேலியும் கிண்டலுமாய் நகரும் கிராமத்து வாழ்க்கைதாங்க சிறந்தது. பள்ளியில் படிக்கும் போது விவசாய சமயங்களில் பச்சை பூத்திருக்கும் வயல்களின் வரப்பில் காலைப் பனித்துளியைச் சுமந்து சிரிக்கும் அருகம்புல்லின் மீது கால் வைத்து நடப்பது ஒரு சுகம் என்றால்... புல்லில் இருக்கும் பனித்துளி பாதத்தில் கொடுக்கும் சில்லிப்பை அனுபவித்தல் ஆத்ம சுகம். 

அப்படிப்பட்ட கிராமத்து வாழ்க்கையை... அதை அனுபவித்த நாம் பெற்ற சந்தோஷங்களை... நம் வாரிசுகள் இழந்துவிட்டு நகரத்து வாழ்க்கையில் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்களை மட்டுமே வாழ்க்கையாக்கி, அதன் பின்னே பயணித்து புளுவேல் என்னும் அரக்கர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இன்று கிராமங்களும் விவசாயமற்று... தண்ணீர் இழந்து... ஏன் மனிதர்களையும் நகரங்களுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயமிழந்து அழிவை நோக்கிப் பயணிப்பதைப் கிராமத்தில் தவழ்ந்த நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

'நாம் இருவர் நமக்கிருவர்' என்று சொன்ன காலம் போய் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று வந்து 'நாம் இருவர் நமக்கெதற்கு இன்னொருவர்' என நவீனம் பாட ஆரம்பிக்கும் காலங்களுக்கு முன்னர் கிராமங்களில் இந்த இருவர் ஒருவர் எல்லாம் இல்லை. வீட்டுக்கு குறைந்தது ஐந்து... அதிகபட்சமாக எங்கள் ஊரில் எல்லாம் ஒரு டஜனைத் தொட்ட குடும்பங்களும் உண்டு. நாங்கள் ஏழு பேர்... இன்று உறவுமுறைகள் தெரியாது... அண்ணன் தம்பி பாசம் அறியாது வளரும் குழந்தைகள் போல் அல்லாமல் எல்லாரும் ஒன்றாக உண்டு, உறங்கி சண்டையிட்டு மகிழ்ந்து... ம்... நினைத்தாலே இனிக்கும் நாட்கள் அவை. எத்தனை சந்தோஷங்கள்... அந்தச் சந்தோஷங்கள் எல்லாம் எங்கே போச்சு? காலம் கொண்டு போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அந்தக் காலம் நமக்கு மட்டுமல்ல இனி வரும் தலைமுறைகளுக்கும் கிடைக்கப் போவதில்லை.

இன்னைக்கு பக்கத்து வீட்டுல என்ன குழம்புன்னு தெரிஞ்சிக்கக் கூட முடியாத வாழ்க்கைதான் நம்மால் வாழ முடிகிறது. காரணம் பெரும்பாலான வீடுகளில் சமையல் என்பது அரிதாகி பாஸ்புட் கலாச்சாரம் பலமாக ஆட்கொண்டுவிட்டது. இன்று பொங்கல் கூட கேஸ் அடுப்பில் வைத்து விடும் சம்பிரதாய காலமாகிவிட்டது. விழாக்கள் கொடுத்த சந்தோஷங்களை எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் பறித்துக் கொண்டு விட்டன. கிராமங்களில் இன்றும் கூட பொங்கல் கேஸ் அடுப்புக்குப் போகாமல் எல்லாரும் கூடிக் கொண்டாடுவது தொடர்வதில் மகிழ்ச்சியே. இருப்பினும் எங்க காலத்துக்குப் பின்னே திருவிழாக்கள் எல்லாம் எவன் நின்னு பாக்கப் போறான் என்ற பெரிசுகளின் ஆதங்கம் எத்தனை உண்மையானது என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிகிறது.

கிராமங்களில் இரவுச் சாப்பாடு என்பது ரொம்ப மகிழ்வான தருணத்தைக் கொடுத்ததை அனுபவித்தவன் நான்... அந்த ஓட்டு வீட்டுக்குள் டைனிங் ஹால் இல்லை... டைனிங் டேபிள் இல்லை... பெரும்பாலான நேரங்களில் சாப்பாடு அடுப்படியில்தான். எல்லாரும் அடுப்புக்கு அருகில் சுற்றி அமர, அம்மா சாப்பாடு போடுவார்கள். எட்டாவதுக்கு மேல்தான் மின்சாரம் வீட்டிற்குள் தலைகாட்டியது. அதுவரை லண்டியந்தான் (அரிக்கேன் விளக்கு) வெளிச்சப் பூக்களை விதைக்கும் கருவி. அதைச் சுற்றி அமர்ந்துதான் படிப்பும் இரவுச் சாப்பாடும். 

நிலா தேயும் நாட்கள் கொடுத்த சந்தோஷத்தைவிட வளரும் நாட்களே அதிக சந்தோஷத்தைக் கொடுத்தன. காரணம் என்னவெனில் அரிக்கேன் விளக்குத் தவிர்த்து நிலா வெளிச்சத்தில் சாப்பிடும் தினங்கள் சுகமானவை... நிலாச்சோறு சாப்பிட ஆத்தங்கரைக்கோ பீச்சுக்கோ போகமால் வீட்டு முற்றத்தில் அல்லது வாசலில் அமர்ந்து சாப்பிடுவது கூட சுகமானதுதான் என்பதை உணர வைத்த நாட்கள் அவை. நிலாச்சோறு மட்டுமல்ல நிலா உறக்கமும் நிகழ்வதுண்டு. வரிசையாக பாய் போட்டு நிலாவெளிச்சத்தில் படுக்க, நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டே அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டபடி உறங்குவது ஒரு சுகமே.

பக்கத்து வீட்டில் இன்று என்ன குழம்பு என்பதை வாசனை காட்டிக் கொடுக்க வாயில் எச்சில் ஊறியதை இல்லை என்று சொல்ல மனமில்லை... எச்சில் ஊறத்தான் செய்தது. மீன் குழம்பா, கருவாட்டுக் குழம்பா என்பதை கலந்தடிக்கும் மனம் நாசிக்குச் சொல்லி வயிற்றுக்குள் பசியை வளர்த்துச் சிரிக்கும். வெஞ்சனம் எதுவும் வைக்கலையா என்றால் எங்கே நேரமிருந்துச்சு... அங்க இங்க பொயிட்டு வரவே சரியாப்போச்சு... தயிர ஊத்தி வெங்காயத்தை வெட்டிப் போட்டுச் சாப்பிடுங்க, சுண்டக்குழம்பு கிடக்கு... வேணுமின்னா ஊறுகாய் எடுத்துக்க என்ற வரிகள் அடிக்கடி எல்லாருடைய வீட்டிலும் கேட்க்கும் வரிகள்தான். சில வேளைகளில் அயித்தக்கிட்ட என்ன கொழம்புன்னு கேட்டு வாங்கிட்டு வா... ஆயாக்கிட்ட வாங்கிட்டு வான்னு கிண்ணத்தைக் கொடுத்து அனுப்புவதும் உண்டு. பல நேரங்களில் அண்ணம்பொண்டி (அண்ணன் மனைவி, இப்போ அண்ணி) அவுக ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்தாங்க... அரச்சி ஊத்தி சேந்தாப்புல வச்சேன் இந்தாங்க கொஞ்சம் பிள்ளகளுக்கு கொடுங்கன்னு வந்ததும்...  அவ என்ன வச்சாலும் தூக்கிட்டு ஓடியாருவா... இந்தா இதைக் கொண்டு போய் கொடுத்துட்டு வா எனப் போனதும்... உண்டு. பல நேரங்களில் இங்கன சாப்புடு... இப்ப ஒன்ன இங்க யாரு ஒன்னச் சாப்புடக்கூடாதுன்னு சொன்னா என உரிமையாய் திட்டி சாப்பிட வைப்பதும் உண்டு. இதெல்லாம் இன்னைக்கு போன இடம் தெரியலை. பாலில் உறை ஊற்ற கொஞ்சூண்டு தயிர் பக்கத்து வீட்டில் வாங்குவதற்கு கூட யோசனையான காலமாகிவிட்டது. அன்று காய்கறிகள் கூட மாற்றிக் கொள்ளப்பட்டது.

சுண்ட வைக்க... சுண்ட வைக்கத்தான் நல்லாயிருக்கும் என சில குழம்புகளை சூடு பண்ணி சூடு பண்ணியே மூன்று நான்கு நாட்கள் வைத்துச் சாப்பிட்ட அனுபவமெல்லாம் இருக்கு... மீன் குழம்பும் கருவாட்டுக் குழம்பும் சுண்ட வைத்துச் சாப்பிட்டால் தேவாமிர்தமே... இன்னைக்கு சுண்டக் குழம்பு என்பது அரிதாகிவிட, குளிர்சாதனப் பெட்டிகள் புளித்த மாவை பக்குவமாய்ச் சுமக்கின்றன. 

எனக்குத் தயிர் ஊற்றி, ஊறுகாய் சேர்த்துப் பிசைந்த பழைய கஞ்சிக்கு சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம்... அப்போ வீட்டில் எருமை மாடுகளும் அதன்பின் பசு மாடுகளும் ஆக்கிரமித்திருந்த காலம்... பால் தயிருக்குப் பஞ்சமில்லை... பழைய கஞ்சியில் தயிர் கணக்கு வழக்கில்லாமல் ஊற்றப்பட்டது. இன்று தயிர்ப் பாக்கெட் பத்து ரூபாய்க்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி கஞ்சி குடிப்பது தேவாமிர்தம் சாப்பிட்ட இடத்தில் கொஞ்சூண்டு தேனை நக்குவது போல்தான் இருக்கிறது. அதன் காரணமாகவே இந்த முறை ஊருக்குப் போனபோது காலிட்டர் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கி வீட்டில் உறை ஊற்றி வைத்து வேணுங்கிற அளவுக்கு தயிரிட்டு கஞ்சி சாப்பிட்டேன். நமக்கு மூணு வேளையும் கஞ்சி என்றாலும் ஓகேதான்... ஏன்னா நான் கிராமத்தான் என்பதைவிட பழையசோற்றுப் பிரியன். 

எப்போதாவது அரிதாகப் போடப்படும் பலகாரம் நாளை என்றால் முதல்நாள் இரவு சோறு வைக்கும் போது சேர்த்து வைத்துத் தண்ணீர் ஊற்றி வைக்கச் சொல்வார் அம்மா. ஏனென்று யாராவது கேட்டால் அவனுக்கு பலகாரம் புடிக்காது கஞ்சிதான் குடிப்பான் என்று சொல்வார். நானும் அம்மாவும் மட்டுமே இருந்த திருமணத்துக்கு முந்தைய நாட்களில் கூட எனக்காக பலகாரமே செய்யாமல் சோறு வடித்தவர் அம்மா என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இப்போ பலகாரம் மட்டுமே இங்கு வாழ்க்கையாகிப் போச்சு... பழைய கஞ்சி வைத்தால் மாடும் குடிக்காது... அதுலயும் புடிக்கவே புடிக்காதுன்னு சொன்ன உப்புமா, பொங்கல், இட்லியை அறையில் செய்து... ஏன் நானே பலநேரம் செய்து சாப்பிடுவது என்பது ரணத்தின் உச்சம்.

அப்புறம் குழம்பை மட்டும் பாக்கெட்டில் கட்டிக் கொடுப்பதாக அண்ணனின் பதிவில் இருந்தது. உண்மையிலேயே கிராமிய மணத்தில் அம்மியில் அரைத்து வைக்கப்பட்ட குழம்புக்கு ஒரு மனம் இருக்கும். எங்க வீட்டிலும் அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் கிடக்கு... சில வேளைகளில் மனைவி அரைத்துச் சேர்த்துச் சமைப்பார். குழம்பு மட்டும் செய்து கொடுப்பதை ஒரு தொழிலாக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்... அவர்கள் ஜெயிப்பார்கள். இங்கு மலையாளி வைக்கும் மண் போன்ற குழம்பு, குணம் மணம் திடம் ஏதுமில்லாமல் இருப்பதுதான் சிறப்பு. 

பக்கத்து வீட்டுக் குழம்பு வாசத்தை இங்கு நுகர முடியாது என்றில்லை... நாங்களும் நுகர்கிறோம்.. பல மாநில, தேச உணவுகளின் வாசத்தை நுகர ஒரு அடுப்படியே போதுமானது. ஆம் எங்கள் பிளாட்டில் நாங்க, மலையாளிங்க, பெங்காலிங்கன்னு இருப்பதால் வித்தியாசமான வாசனையை நுகரமுடிகிறது. என்ன மாட்டுக்கறியை அடிக்கடி மலையாளிங்க வைப்பதும் சிக்கனையும் காய்கறிகளையும் அதனுடன் பருப்பையும் இட்டு பெங்காலி செய்வதும் உருளைக்கிழங்கை வேகவைத்து எண்ணெயில் பொறித்துச் செய்யும் பிரியாணி வாசமும் நமக்கு வித்தியாசமானவையே. மாட்டுக்கறிக்கு எங்க அறையில் அனுமதியில்லை... உடனே நான் தடை விதிப்பதாக எண்ணிடாதீங்க... எனக்குப் பிடிக்காது.... உங்களுக்கு வேணுமின்னா செஞ்சிக்கங்கன்னு சொல்லியாச்சு... யாரும் செய்வதில்லை. 

எங்க அறை நண்பர் ஒருவருக்கு மாட்டுக்கறி செய்து சாப்பிட ரொம்ப ஆசைதான்... சமைப்பது என்பது அவருக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுக்கும் வேலை என்பதால் யாரேனும் செய்து தருவார்கள் என்ற எண்ணம் அவருக்குள்... மற்றவர்களுக்கு மாட்டுக்கறியில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்பதால் அவரின் ஆசை நிராசையாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை பிலிப்பைனிகள் பூனையைச் சாப்பிடுவது போல் பன்னி, நாய், மாடு எல்லாவற்றையும் ஊரில் இருக்கும் போது சாப்பிட்டவர் என்பதால் எதற்கும் இப்போதும் விலக்கு இல்லை. எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார் என்பதைச் சொல்வதுடன் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். அன்பர் என்பதையும் சொல்ல வேண்டும்.

மீரா செல்வக்குமார் அண்ணனின் பதிவு என்னை இந்தப் பதிவை எழுத வைத்தது. அதற்கு அண்ணனுக்கு என் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 11 நவம்பர், 2016

கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு

Image result for மாடுகள்

தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாத மாடு ஒன்றை மீட்புக் குழுவினர் வெளியில் எடுக்கும் வீடியோ ஒன்று பார்த்தேன். அதைப் பார்த்ததும் நம்ம வீட்டில் மாடு வளர்த்தது... கோழி வளர்த்தது... நாய் வளர்த்தது... ஆடு வளர்த்தது... கிளி வளர்த்தது... மைனா வளர்த்தது... புறா வளர்த்தது... என வளர்த்தது எல்லாம் ஞாபகத்தில் வந்தது. அதெல்லாம் எப்படி மறக்க முடியும்...?

எங்க வீட்டில் ஆரம்ப காலத்தில் எருமை மாடுதான்... எங்க பிச்சைக்குட்டி வாத்தியார்.... ஏராம்மாடு... எராம்மாடுன்னுதான் திட்டுவாரு... எருமை மாடுன்னு  திட்டமாட்டாரு... எங்க ஊருல பெரும்பாலான வீட்டில் எருமை மாடுதான் வளர்த்தாங்க... வயல் வேலைகளுக்காக காளை மாடு வீட்டுக்கு ஒரு ஜோடி கிடக்கும்... கூட்டு வண்டி, மொட்டை வண்டி ஊரில் சிலரின் வீட்டில் இருந்தது. எருமை மாடெல்லாம் நாம பொறக்கும் போது வீட்டில் இருந்தன... அதுவும் எங்க வீட்டில் பிறந்து வளர்ந்த மாடு... நரை எருமை... இவுகதான் தலைவர்... அவருக்குப் பின்னே அவரின் மகள்கள்... பேத்திகள்... வாரிசாய்... மனிதர்கள் பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்லி ஆஸ்திக்கு மட்டும் போதும்ன்னு முடிவெடுத்து இப்போ பொண்ணு கிடைக்காம அலையிற நிலை ஆயிப்போச்சு,,, ஆனா மாடுகளில் பெண் மாட்டுக்கு மட்டுமே மவுசு... ஆண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் விற்றுவிடுவதுண்டு... அப்படித்தான் ஆண்  வாரிசுகள் விற்கப்பட பெண் வாரிசுகள் கோலோச்சினார்கள்.

அப்புறம் விவசாய காலத்தில் எருமை மாடுகளை பார்ப்பதில் சிரமம் இருக்கு என்று... ஆமாம் காணாமல் போனால் வீடு திரும்ப நாலைந்து நாளாகும்... தேடித்தேடி அலைந்து முள்குத்தி... எப்படிக் கஷ்டப்பட்டுட்டு வந்தாலும் எங்கம்மா ஒரு மாடு பாத்துக்க முடியலைன்னு வெளுத்துக் கட்டிரும்... அதுக்காக வெளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு மாடு மேய்ச்சாலும் சில நேரங்கள் காணாமல் போவது சகஜம்தானே... அதுவும் ரெண்டு மூணு பேருவிட்டு மாடு காணாமல் பொயிட்டா சேர்ந்து தேடலாம்ல்ல... சரி எருமை மாடுகள் வேண்டான்னுட்டு எல்லாத்தையும் வித்துட்டு... எங்க வெள்ளச்சி மொதக்கொண்டு எல்லாம் விற்றப்போ எல்லோரும் அழுகை... அது ஒரு கதை... சரி விடுங்க... அப்புறம் பசு மாடு வாங்கி... கடைகளுக்கு பால் கொடுத்து வந்தோம். அப்புறம் அம்மா வீடுகளுக்கு பால் ஊத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் வீட்டில் பசுமாடுகள்தான்.... இப்ப எதுவும் இல்லை... மாட்டுக்கசாலை... மாட்டுத் தொட்டி (குலுதாலி)... வைக்கோல் படப்பு... எல்லாம் வெறுமையாய்...

அதுவும் மாடு கன்று போட்டதும்... அந்தக் கன்னுக்குட்டியை வீட்டுக்குள் சாக்குப் போட்டு கட்டி வைத்து அதை கட்டிப் பிடித்துக் கொண்டு விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா என்ன..? தினமும் காலையில் கன்றுக்குட்டியை குளியாட்டி மஞ்சள் வைத்து... பொட்டு வைத்து... வீட்டில் கட்டி வைப்பதற்குள் அது கயிற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் அழகே அழகுதான்...

இப்ப இதை எதுக்கு எழுத ஆரம்பித்தேன்னா... சில நேரங்களில் பசு மாட்டுக்கு உடம்பு முடியாமல் வந்து எழ முடியாது தவிக்கும்... ஊசி போட்டு... வாழைப்பழத்தில் மாத்திரை வைத்துக் கொடுத்து...  நாக்கைப் பிடித்து வெளியில் இழுத்து மருந்து ஊற்றி... எல்லாம் செய்தும் எழ முடியாமல் தவிக்கும்... அப்போ நாலைந்து பேர் இருபுறமும் நின்று மாட்டின் வயிற்றுப் பகுதியில் உலக்கை போட்டு மெல்லத் தூக்கி நிறுத்தி கொஞ்ச நேரம் பிடித்து வைத்திருக்க மீண்டும் கீழே விழுந்து விடும்... பார்க்க பரிதாபமாக இருக்கும்... சில மாடுகள் அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டாலும் பல மாடுகள் மரணத்தைத்தான் தழுவும்... பின்னர் நாலு காலையும் கட்டி... இடையில் கம்பு சொருகி, தூக்கிக் கொண்டு போய் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்... அப்படி இல்லாமல் சாக்கடைத் தண்ணீருக்குள் மாட்டி வெளியில் வர முடியாமல் நின்ற மாட்டை கயிறு கட்டி அந்த தாழ்வான பகுதிக்குள் இறங்கி கிரேன் மூலமாக அந்த வீடியோ பார்க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 

மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் விளையாண்ட எங்க வீட்டில் இப்போ கால மாற்றத்தில் எதுவும் இல்லை... எல்லாம் போயாச்சு... நாங்கள் பிறந்து வளர்ந்த வீடும் இடிச்சாச்சு... இப்போ அந்த வீட்டின் பின்னே இருந்த கசாலை மட்டுமே உயிர்ப்போடு... எங்க விஷாலுக்கு ஆடு, மாடு, கோழி மீது அலாதிப் பிரியம்... அவனுக்காகவே எங்க வீட்டில் இப்போ கோழி வளர்க்கிறோம்... டவுனுக்குள்ள எதுக்கு கோழி வளக்குறீங்க...? போர்டிகோ, மாடிப்படி எல்லாம் நாசம் பண்ணி வைக்கிது பாருங்க... என உறவுகள் எல்லாம் சொன்னாலும்... பள்ளி விட்டு வந்ததும் செவலக்கோழி முட்டை இட்டுச்சா... எடுத்து வச்சீங்களா... எங்கே சேவலைக் காணோம் என அவன் கேட்டு இரவு கோழிகளை அடைத்துவிட்டு வருவதில் அவனுக்கு இருக்கும் சந்தோஷத்துக்காகவே எங்கள் வீட்டில் கோழிகள் வாசம் செய்கின்றன.

-'பரிவை' சே.குமார், 

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கிராமத்து நினைவுகள் : ஆயுத பூஜையும் அட்லஸ் சைக்கிளும்

கிராமத்து நினைவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய நினைவுகள் தாங்கி மனசு காத்திருந்தாலும் ஏனோ எழுத எண்ணம் மட்டும் வரவில்லை. ஆயுத பூஜையின்னதும் நம்ம அட்லஸ் சைக்கிள் ஞாபகத்தில் வர, ரொம்ப நாளைக்குப் பிறகு எழுதியாச்சு.

Image result for அட்லஸ் சைக்கிள்

பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொரு பண்டிகைகளும் மிகவும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்த நிகழ்வுகள்தான்... தீபாவளி என்றால் புத்தாடையும் பட்டாசும் பலகாரங்களும்... பொங்கல் என்றால் புத்தாடையும் வாழ்த்து அட்டைகளும் ஜல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும்... கார்த்திகை என்றால் தீபமும் சுளுந்தும்...  ஆயுதபூஜை என்றால் கடலையும் பொரியும்.. வருடப் பிறப்பு என்றால் நல்லேர் உழுவும் விதை விதைத்தலும் இரவு ஆர்க்கெஸ்ட்ரா, நாடகங்களும்... திருவிழா என்றால் இரவு கரகம் எடுத்தலும் கலை நிகழ்ச்சிகளும்... தேரோட்டம் என்றால் அசைந்து வரும் பெரிய தேரும்... மாம்பழமும் பொரி உருண்டையும்... இப்படி ஒவ்வொரு திருவிழாக்களையும் ரசனையோடு ரசித்த நாட்கள் அவை.

அன்றைய நாட்களில் விசேஷ தினங்கள் எல்லாம் சந்தோஷத்தை அதிகம் அள்ளிக் கொடுத்தன. அன்றைய நாளில்   திரையரங்குகளில் கால் கடுக்க காத்திருக்கவில்லை. தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னால் தவம் கிடைக்கவில்லை. வீட்டிற்கு முன்னே இருக்கும் எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் கூடி ஆனந்தக் கூத்தாடத்தான் செய்தோம்... எல்லாருமாய் போட்ட ஆட்டங்களையும் அன்றைய தினங்களின் சந்தோஷங்களையும் மறக்க முடியுமா சொல்லுங்கள்..?

மாட்டுப் பொங்கல் என்றால் மாடுகளை குளிப்பாட்டி புதுக்கயிறு போட்டு பொட்டு வைத்து தயார் செய்வது போல் ஆயுத பூஜை என்றால் வீட்டில் இருக்கும் மண்வெட்டி, அரிவாள், உலக்கை, கலப்பை, சைக்கிள் என எல்லாவற்றையும் கழுவித் துடைத்து சந்தனம் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து இரவு சாம்பிராணி போட்டு சூடம் காட்டி சாமி கும்பிடுவது என்பது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. 

எங்க வீட்டில் அப்பா வைத்திருந்த அட்லஸ் சைக்கிள்தான் என்னோட பள்ளிக் கல்லூரி வாகனம்.... கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான் அண்ணன் வாங்கிக் கொடுத்த ஹெர்குலிஸ் சைக்கிள்... அப்பவும் எங்க அட்லஸ் வீட்டில்தான் இருந்தது. கவட்டைக் கால் ஓட்ட ஆரம்பித்து ஹாண்டில் பாரில் ஏறி ஓட்டி... பின்னர் சீட்டில் ஏறி இடுப்பை ஆட்டி ஆட்டி ஓட்டப் பழகி பின்னர் கை விட்டு ரொம்பத் தூரம் ஓட்டி... காலைத் தூக்கி வைத்தபடி சறுக்கலில் இறங்கி எல்லாம் செய்தது எங்க வீட்டு அட்லஸில்தான்... அண்ணன்கள், சின்ன அக்கா, தம்பி என எல்லாரும் பழகியது இந்த சைக்கிளில்தான்.

ஆயுத பூஜை அன்று காலையில்  சைக்கிளை கழுவும் வேலையை வெகு சிரத்தையாக செய்வோம்... கண்மாயில் தண்ணீர் நிறையக் கிடந்தால் அதில் கொண்டு போய் நிறுத்தி பெடலைச் சுற்றி தண்ணீரை இறைத்து சந்தோஷப்பட்டு... களிம்புகளும் மண்ணும் போகத் துடைத்துக் கழுவி... கரையில் வைத்து தண்ணீர் வடிவதற்காக தூக்கி.... சுத்தமாக துணி வைத்து துடைத்து எடுத்து வருவோம்... அதுவும் ஓட்டினால் மணல் ஒட்டும் என கண்மாயில் இருந்து உருட்டிக் கொண்டே வருவோம். வீட்டிற்கு வந்ததும் வெள்ளைத் துணியில் தேங்காய் எண்ணெய் தொட்டு மர்க்காடு. செயின் கவர், ஹாண்டில் பார்... ரிம் என எல்லாவற்றையும் துடைத்து பளபளப்பாக்கி... ஒவ்வொரு போக்ஸாக துடைத்து... ஜெயினுக்கு எண்ணெய் விட்டு... இப்படி பார்த்துப் பார்த்து துடைத்து எங்க வீட்டு அட்லஸை அழகி ஆக்குவேன். கண்மாயில் தண்ணீர் இல்லாவிட்டால் அடிபைப்பில் தண்ணீர் பிடித்து ஆளாளுக்கு கழுவிக் கொண்டிருப்போம்.

பத்தாவது படிக்கும் போது டியூசன் முடிந்து  இரவு கருங்கும் என்ற இருட்டுக்குள் அரக்கப் பரக்க ஓட்டிக் கொண்டு வரும் போது வியர்வைத் துளிகள் சட்டையை நனைக்கும். அப்புறம் அப்புறம் பழக ஆரம்பித்து இரவு பனிரெண்டு மணிக்கெல்லாம் சர்வசாதரணமய் சைக்கிளில் வர ஆரம்பித்தது தனிக்கதை... ஆரம்ப கால இரவுப் பயணத்தில் சைக்கிளின் செயின் கழண்டால்தான் கஷ்டம்...  சில நேரங்களில் சரி செய்து விடலாம்... சில நாட்கள் சரி செய்ய முடியாமல் தள்ளிக் கொண்டு வந்ததும் உண்டு. வெளிச்சமில்லாத பாதி ஒற்றையடிப் பாதையும் அதற்கு மேல் சரளைச் சாலையிலுமாக இருக்கும் வழியில் இருபுறமும் ஆவரஞ்செடி பூத்திருக்க சைக்கிளைத் தள்ளிக்கொண்டு விறுவிறுக்க வீடு வந்து சேர்வது மறக்கமுடியாதது. அதுவும் சுடுகாட்டுக்கு நேரே வரும்போது திக்..திக்தான்... பின்னர் எத்தனை மணி என்றாலும் பயமின்றி வர ஆரம்பித்தபோது எதுக்குடா இந்த இருட்டுல வர்றே... அக்கா வீட்ல இருந்திருக்கலாம்ல என்று அம்மா திட்டுவார்... நம்ம சைக்கிளுக்கு மேடு பள்ளம்... வளைவு சுளிவு எல்லாம் அத்துபடி... சும்மா சரச்சரன்னு வீட்டுல கொண்டு போயி விட்டிடும்.

பஞ்சர் ஆனால் வீட்டிலேயே பார்த்து விடுவேன்... டயர் மாற்ற... டியூப் மாற்ற... கோட்டம் பார்க்க... போக்ஸ் மாற்ற... சைக்கிள் ஓவர் ஆல் பண்ண... என எல்லாவற்றிற்கும் சக்தி அண்ணன் கடைக்குப் போய் விடுவேன். சக்தி அண்ணன்தான் அதற்கு டாக்டர்... அவர் வேலை பார்த்தால்தான் சைக்கிள் சைக்கிளாக இருக்கும்... நல்ல வேலைக்காரர்... ஆனாலும் குடியால் கெட்டார்... கடையை அங்கு மாற்றி... இங்கு மாற்றி... கொஞ்ச நாள் ஆள் காணாமல் போய் இப்போ தேவகோட்டை சந்தைக்கு அருகே ஒரு சுவரோரத்தில் அமர்ந்து பஞ்சர் பார்த்துக் கொண்டிருந்தார்... சென்ற முறை சந்தைக்குப் போன போது ஓடிவந்து குமாரு நல்லாயிருக்கியா என்றவர் பத்து ரூபாய் இருந்தாக் கொடு என்று தலையைச் சொறிந்தார்... நல்ல திறமை சாலி குடியால் கெட்டார்... வருத்தத்தோடு கொடுத்து வந்தேன்.

எங்க வீட்டு அட்லஸ் அப்பா மளிகை கடை வைத்திருந்ததில் இருந்து அவரைச் சுமந்து எனக்கு மூத்தவர்கள் எல்லாம் ஓட்டி... நானும் ஓட்டி... தம்பியும் ஓட்டி... அண்ணன் மூலமாக எம் 80 வந்த நாளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டது. ஆயுத பூஜை தினத்தில் கதம்பம் அலங்கரிக்க அழகாய் நிற்கும்... கர்..கர்...என்ற சப்தம் அடிக்கடி எழ முழுதாய் மறைத்திருந்த செயின் கவர் பாதி ஆனது... அதான் வண்டி இருக்குல்ல... இப்ப சைக்கிள் எதுக்கு சும்மா மூலையில நிக்கிதுன்னு சொன்னப்போ அதை விற்க மறுத்து வீட்டிலேயே வைத்திருந்து பின்னர் நாளடைவில் கசாலைக்குப் போய்... மாடில்லாத கசாலையில் தனியே கிடந்தது... தன்னை இழந்தது விற்க மனமில்லாமல் விட்டிலேயே கிடந்த அட்லஸ்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி



கிராமத்து வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்களில் முக்கியமானவைகளில் மழை நாட்களும் ஒன்று. இன்று இந்த பாலைவனப் பூமியில் மழையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஊருக்குப் போன் பண்ணும் போது மழை பெய்கிறது என்றால் 'நல்ல மழையா..? தண்ணி நிறைந்து ஓடுதா...?' எனச் சந்தோஷமாகக் கேட்கச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் மழையில் நனைந்த நினைவுகளையும், அதன் பின்னான விளையாட்டுக்களையும் குறித்து கிராமத்து நினைவுகள் பகுதியில் மழைக்காலம் என்னும் தலைப்பில் முன்பே பகிர்ந்திருக்கிறேன். எனவே இப்போது மழைத் தண்ணி பற்றிப் பார்ப்போம்.

மழை பெய்ததும் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி தண்ணீர் ஓடும்... அது பார்க்க சின்ன ஆறு போல் காட்சியளிக்கும். பெருமழை பெய்து முடிந்து தண்ணீர் ஓடும்போது அதன் மீது விழும் சிறு தூறலின் துளிகள் தெறித்து எழுவது அவ்வளவு அழகாக இருக்கும். இதேதான் கண்மாய் தண்ணீர் மீது மழைத்துளி விழும்போதும்... அந்த அழகை எல்லாம் நேரில் ரசித்திருந்தால் மட்டுமே சிலாகித்துப் பேசமுடியும். மற்றபடி சினிமாவில் மழை பெய்வதைப் பார்த்தேன்... முகநூலில் மழை பெய்ததைப் பகிர்ந்திருந்தான் பாரு... செம... என்றெல்லாம் பேசத்தான் முடியுமே தவிர அதை அனுபவித்த அந்த சுகானுபவத்தை ஒருபோதும் உடம்பில் சில்லிட வைக்க முடியாது.

நகரங்களை விட கிராமங்களில்தான் மழைத்தண்ணீர் ஓடும் அழகை அதிகம் ரசிக்க முடியும். காரணம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வீடுகள் நெருக்கமாய் இருக்கும்... அவற்றிற்கு இடையே சந்துகள் இருக்கும்... பெய்யும் மழைத்தண்ணி வீடுகளின் ஓடுகளிலும் கூரைகளிலும் விழுந்து வெளியாகி சந்துக்களின் வழியாக தாழ்வான பகுதிகளான வயல்களை நோக்கியோ அல்லது ஊரை ஒட்டியிருக்கும் சிறு ஊரணிகளை நோக்கியோ பயணிக்கும்... சலசலவென ஓடிவரும் தண்ணீரில் குதிகால் நனைய எதிர்புறமாக ஓடுவது... குறுக்கே அணை கட்டி தண்ணீரை நிரப்பி அணையில் ஓட்டையிட்டு திறந்து விடுவது... காகிதக் கப்பல், கருவை , வேப்பமர இலைகளைப் பறித்து அதில் விடுவது... என எல்லாமுமே மழையில் நனைந்தபடியே நடக்கும். அப்படி அனுபவித்த அந்த இன்பம் அலாதியானது.  இப்ப லேசா நனைந்தாலே சளி பிடிக்கும் என்கிறோம். ஒரு தும்மல் தும்மினாலே டாக்டரிடம் ஓடுகிறோம். அன்று தும்மியபடியே மழையில் ஆடிய நாட்கள் நிறைய உண்டு. ஏன் மழை விட்டதும் ஈர மணலில் கபடி விளையாடுவதும்... சண்டையிடுவதும் கூட நடக்கும்.

மழை ஓட்டு வீட்டின் மீது சடச்சடவென பெய்யும் போது அந்த வீட்டுக்குள் அமர்ந்து அந்த இசையைக் கேட்பது கூட ஒரு சுகம்தான். மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தவுடன் மழை நீர் ஓடுகளில் நெளிவான பாதையில் பயணித்து கீழே விழ ஆரம்பிக்கும். மழையின் வேகத்துக்கு ஏற்ப நீரும் ஓடுகளின் வழியே வழிந்து தரையைத் தொட்டு பயணிக்கும். அந்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை விழ ஆரம்பித்ததும் பிடிக்க மாட்டார்கள். ஓட்டில் இருக்கும் அழுக்கெல்லாம் போகட்டும் என்று கொஞ்சம் நேரம் தண்ணீரை பிடிக்காமல் இருந்து பின்னர் பிடிப்பார்கள். அண்டா, குண்டா, அலுமினியப் பாத்திரங்கள், காசாணித் தவலைகள் என எல்லாவற்றிலும் நீரை நிரப்பி வைப்பார்கள்.

மழை நீரில் சமைத்தால் சாதம் பூப்போல இருப்பதுடன் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது அதில் இருக்கும் நீச்சத்தண்ணியும் (நீராகாரம்) மணமாக இருக்கும். கண்மாய்த் தண்ணீரில் சமைத்தாலும் இப்படித்தான் இருக்கும்.  கண்மாயில் தண்ணீர் குறைந்து தெளிவில்லாமல் கிடக்கும் நீரை மண்டித் தண்ணீர் என்போம். சமையலுக்காகவே அதைக் கொண்டு வந்து பானையில் ஊற்றி தேத்தாங்க் கொட்டையை வைத்து தண்ணீருக்குள் உரசி உரசி மண்டித் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். 

மழை நாட்களைத் தொடர்ந்து வீட்டிற்கு யாராவது வந்தால் கூட மழைத்தண்ணி இருந்தா கொடுத்தா... பைப்புத்தண்ணி தாகம் நிக்கிது இல்லை என்பார்கள். கிராமங்களில் வீட்டுக்கு வீடு மணலைப் பரப்பி அதன் மீது மண்பானையில் தண்ணீர் நிரப்பி குடிக்கப் பயன்படுத்துவார்கள். அதில் மழைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் தொண்டைக்குள் இறங்கும் போது அப்பப்பா... என்ன... சில்லு... ஆஹா... செம்பு... செம்பா தண்ணி போய்க்கிட்டே இருக்கும். அதிலும் குறிப்பாக தண்ணீர் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி வேர் கொண்டு வந்து போட்டு வைப்பார்கள்.


மழைக் காலம் முடிந்தாலும் அண்டா, குண்டாக்களிலும் இருக்கும் தண்ணீரை மழைத்தண்ணி.. மழைத்தண்ணி என்று வைத்து வைத்துக் குடிப்பார்கள். அதுவும் ஓட்டில் இருந்து வழியும் இந்த மழை நீரைப் பிடிப்பதற்காகவே தகரம் வாங்கி அழகாக வளைத்து நாலைந்து ஓடுகளைச் சேர்த்து அடித்து வைத்திருப்பார்கள். அதாவது நாலைந்து ஓடுகள் வழியாக வழியும் தண்ணீரெல்லாம் அந்த தகரத்தின் வழியே வந்து மொத்தமாக குடத்தில் விழும்.  மேலே படத்தில் இருப்பது போல் மொத்தமாக தகரம் வளைத்து ஓரு ஓரத்தில் மட்டும் விழ வைப்பார்கள்.

எங்கள் வீட்டில் கூட ஆரம்பத்தில் ஓடுகளின் மூலம் விழும் தண்ணீரைப் பிடிக்க அம்மா, அக்காவெல்லாம் பரபரப்பாக இருப்பார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்போம். நனைந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது கூட சுகம்தான் இல்லையா... அப்படியாவது மழையில் நனையலாமே என்ற நப்பாசைதான்... டேய் நனையாதேடா என அம்மா கத்திக் கொண்டு நின்றாலும் நாம நனையாம இருப்போமா என்ன... அப்போதுதான் எல்லா வேலையும் பாக்குறது. அப்படித்தான் இந்த தண்ணீர் பிடிக்கும் நிகழ்வும்.

கூரை வீடாக இருந்தால் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. அவர்கள் எல்லாம் பக்கத்து வீடுகளில் குடம் கொடுத்துப் பிடித்துக் கொள்வார்கள். எங்கள் வீட்டில் கூட முன்னால் கிடந்த இடத்தில் ஒரு கிடுகு கொட்டகை போட்டபோது கிடுகு கொட்டகை மற்றும் ஓட்டு வீடு இணையும் இடத்தில் தகரம் அடைத்து தண்ணீர் உள்ளே விழாதவாறு வைத்துவிட்டோம். அத்தோடு மழை நீர் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மழைத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியுமா என்ன மழை பெய்ய ஆரம்பித்ததும் அருகே இருக்கும் பஞ்சம்மா வீட்டுக்கு குடங்களைக் கொண்டுக்கிட்டு ஓடுவோம். குடம் குடமாக பிடித்துத் தூக்கி வருவோம். சில நேரங்களில் பஞ்சம்மாவே பிடித்து நிறைத்து வைப்பார். மழை விட்டதும் போய் தூக்கி வருவோம். பெரும்பாலும் அக்கா தூக்கி வந்துவிடும். சில நேரங்களில் நானும் தம்பியும் உதவியாய்...  மழைத்தண்ணி மீது அம்புட்டு ஆசை.

பள்ளியில் இருந்து வரும்போது செம்மண்ணில் நிறைந்து நிற்கும் மழைத்தண்ணியில் ஆட்டம் போட்டு வந்த காலம் எல்லாம் கனாக்காலம் போங்க. ம்... இப்பவும் மழையில நனைய ஆசைதான்... ஊரில் இருக்கும் வரை மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

விடுமுறையும் திருவிழாக்களும்...

 வணக்கம்.
இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை

நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊரில் இருந்து ஒரு கூட்டமாக பழனிக்கு நடைப்பயணம் செய்வார்கள். தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, அதன் பின் சுண்டலோ, பொங்கலோ அல்லது மிட்டாயோ கொடுப்பார்கள். பழனிக்கு கிளம்புவதற்கு முதல் நாள் இரவு பஜனை முடித்து இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி மாரியம்மன் கோவிலில் போய் படுத்திருப்பார்கள்.  மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து தீபம் பார்த்து அரோகரா போட்டபடி கிளம்பிப் போவார்கள். எங்க அப்பா தொடர்ந்து பல வருடங்கள் போய் வந்தார். பஞ்சாமிர்தத்துக்காகவும் சுவாமி டாலருக்காகவும் அவர் எப்போது வருவார் என்று காத்திருப்போம். பழனிக்கு மாலை போட்டிருப்பவர்கள் எல்லாரும் மாரியம்மன் கோவிலில் தங்க முடியாது என்பதால் கோவிலை ஒட்டி கொட்டகை போட்டு படுப்பார்கள். மாலை போட்டது முதல் கோவிலில் படுக்கும் சாமிகளும் உண்டு.


தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடைப்பயணம்... முதல் நாள் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாலை குன்றக்குடி செல்லும் வரை வழி நெடுகிலும் எதாவது கொடுப்பார்கள். அதை வாங்குவதற்கென்று கையில் மஞ்சள் பையுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் உண்டு. தேவகோட்டையில் இருந்து வரும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு வரவேற்பும் மரியாதையும் உண்டு. மாலையிட்டவர்கள் ஏழு நாள் நடந்து முருகனைத் தரிசித்து பின்னர் பேருந்தில் திரும்புவார்கள். ஆனால் நகரத்தார் காவடியோ போகும் போது நடப்பது போல் வரும்போதும் நடந்தேதான் ஊர் வந்து சேர்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்க அண்ணன், செல்வ அண்ணன், பாண்டியண்ணன் மூவரும் பழனிக்குச் சென்று திரும்பிய ரெக்கார்டை இதுவரை எங்கள் ஊரில் யாருமே முறியடிக்கவில்லை. இனிமேலும் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம் மனுசனுங்க நாலாவது நாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிட்டானுங்க... ரெண்டாவது நாளே திண்டுக்கல்லுக்குப் பொயிட்டாங்களாம். அப்ப எப்படி நடந்திருப்பாங்கன்னு பாருங்க... இதுல பாண்டியண்ணந்தான் பாவம்... ரெண்டு பேருக்கும் மச்சான் வேற... சொல்லவா வேணும்.. படுத்து பத்து நிமிசத்துல ஏய் ரொம்ப நேரமாச்சு... எல்லாரும் நடக்க ஆரம்பிச்சிட்டானுங்கன்னு கிளப்பி இரவெல்லாம் நடக்க வச்சி... மூணாவது நாள் மலையேறிட்டாங்களாம். பழனியில் மூவரும் எடுத்த போட்டோ எங்க வீட்ல இன்னமும் இருக்கு. பாவம் பாண்டியண்ணன்தான் இப்போ இல்லை.

எங்க அண்ணன் பழனிக்கு போகும் போது இரவு வீட்டில் விருந்து முடிந்து சாமி கும்பிட்டு கிளம்பி கோவிலுக்குப் போக, எங்கக்கா (எனக்கு நேரே மூத்தது - இங்கதான் அக்காவெல்லாம் இதுவரை அக்கான்னு சொன்னதே இல்லை) திண்ணை நிலப்படியில் நின்றபடி வீட்டு வாரத்தில் பனங்கைகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் கம்பியைப் பிடிக்க, வெளிக் கொட்டகைக்கு போன கரண்ட் வயறு கட்டாகி கம்பியை மின்சாரக் கம்பியா மாத்தியிருந்திருக்கு.... கம்பியைப் பிடிச்சபடியே கத்துது... எல்லோரும் சாமி வந்திருச்சு போலன்னு நினைக்க, அப்புறம்தான் கைபிடிச்சிருக்கதைப் பாத்து வேகமாக ஓடி லைட்டை அமத்தி அக்காவை கரண்டில் இருந்து காப்பாத்தினோம். உடனே எல்லாரும் அண்ணன் கோயிலுக்குப் போகயில இப்படி ஆயிருச்சேன்னு பயந்தாங்க. ஆனா அவரு மூணு நாள் ரெக்கார்டோட நல்லவிதமாக முருகனைத் தரிசிச்சிட்டு வந்தார்.

அவர்களுக்குப் பிறகு யாருமே பழனிக்குப் போகமல் வருடங்கள் போக, எங்க சித்தப்பாவைக் கிளப்பி நான், சேகர் சித்தப்பு, சுரேஷ் மாமு, முருகன், இளையர் வீட்டு ஐயா, மீனா அயித்தை என ஒரு குழு முதன் முதலாக மாலை போட்டோம். நாங்கள் அதிகம் பஜனை எல்லாம் வைக்கவில்லை. கடைசி நாள் பஜனை வைத்து ஊர் முறைப்படி முதல்நாள் அம்மன் கோவிலில் வந்து படுத்து அதிகாலை அரோகரா கோஷத்துடன் கிளம்ப, ஊரே எங்களை முனியய்யா கோவில் வரைக்கும் வந்து வழியனுப்பி வைத்தது. 

வரிசையாக சாமிகளைக் கும்பிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேவகோட்டையை அடைந்து சிலம்பணி பிள்ளையாரை வணங்கி, திருப்பத்தூர் சாலையில் சாமிகளோடு சாமியாய் நடக்க ஆரம்பித்து காலை பத்து மணிக்கு மாநகரி ஊரணிக் கரையில் போய் படுத்துவிட்டோம். ,மூன்று மணி வரைக்கும் அங்கு படுக்கை, பின்னர் கிளம்பி குன்றக்குடி போய் மலையைச் சுற்றிக்கொண்டு நேரே பிள்ளையார்பட்டி நோக்கி நடையைக் கட்டினோம். வழியில் ஓரிடத்தில் கல்வெட்டி எடுத்துட்டு தாவாகக் கிடந்த இடத்தில் நல்ல தண்ணீர் நிரம்பிக்கிடக்க, அதில் அசதிபோக நீச்சல் போட்டு குளித்துவிட்டு பிள்ளையார்பட்டி போய் கற்பகவிநாயகரை தரிசிச்சிவிட்டு அங்கேயே படுக்கையைப் போட்டோம். இரண்டு நாளுக்கு தயிர்சாதம், புளியோதரை, லெமன் சாதம் கட்டிக் கொண்டு போயிருவோம். அதைச் சாப்பிட்டு மீண்டும் தூக்கம். பெரும்பாலும் முதல்நாள் தங்கல் குன்றக்குடிதான் ஆனால் நாங்கள் பிள்ளையார்பட்டியில் தங்கினோம்.

இரவு ஒரு மணிக்கெல்லாம் இளையரய்யா, கோழி கூவிருச்சு.... இன்னும் தூங்குறீங்க எந்திரிங்கன்னு கிளப்பி நடக்க விட்டுட்டாரு. திருப்பத்தூர் தாண்டிப் போனாலும் விடியலை... முதல் நாள் தெரியாத வலி இரண்டாம் நாள் இரவு படுத்து எந்திரிச்சி நடக்கும்போது காலில் தெரிந்தது. கொஞ்சத் தூரத்துக்கு தவந்துதான் நடை... அப்புறம் குதிரைக்கு வேர்க்க வேர்க்க வேகமாக ஓடும்ன்னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி பிக்கப் ஆயிட்டா, ஆட்டம் பாட்டம் அரட்டையின்னு நடை போறதே தெரியாது. 11, 12 மணிக்கெல்லாம் சூடு ஆரம்பித்தது கால் பொறுக்கமுடியாத நிலையில எங்காவது தங்கிவிடுவோம் பின்னர் மாலை மூணு மணிக்கு மேல் நடக்க ஆரம்பித்து எட்டு மணிவரை நடை... இரவு சாப்பாடு... உறக்கம்.. 2 மணிக்கு எழுந்து மீண்டும் நடை... இப்படியே முதல் நாள் இரவு பிள்ளையார்பட்டி... இரண்டாம் நாள் இரவு வெள்ளாளபட்டி.... மூன்றாம் நாள் இரவு திண்டுக்கல்... நான்காம் நாள் இரவு கணக்கம்பட்டி... ஐந்தாவது நாள் காலை பத்து மணிக்குள் பழனியை அடைந்து இடும்பனில் குளித்து அடிவாரத்தை அடைந்து மலையைச் சுற்றி வந்து மடத்தில் அறை எடுத்து பொருட்களை வைத்துவிட்டு சண்முகநதிக்கு பயணமானோம்.

கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் நடந்துபோய் முதல்வருடம் என்பதால் மொட்டை அடித்து சண்முகநதியில் குளித்து மீண்டும் நடந்து வந்து மலையேறி முருகனைத் தரிசிச்சி, அங்கேயே இருந்து கேரளக் காவடி ஆட்டம் பார்த்து, தங்கத் தேர் பார்த்து இரவு எட்டுமணிக்கு மேல் கீழிறங்கி, பஞ்சாமிர்தம், டாலர் உள்ளிட்ட சாமான்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பேருந்து ஏறி மறுநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். ஏழுநாள் நடக்க வேண்டிய நடைப்பயணத்தை நாலு நாள் நடந்து ஐந்தாம்நாள் ஊருக்குத் திரும்பினோம். 

அந்த வருட நடை என்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது... எங்க சித்தப்பாவும் இளையரய்யாவும் அவர்கள் வயதில் இருந்து இறங்கி வந்து எங்களோடு அரட்டை அடித்தபடி வந்தார்கள். இப்பவும் சேகரிடம் சித்தப்பு கூந்தப்பனை என்றால் போதும் மகனே... அப்படின்னு சிரிக்க ஆரம்பிச்சிருவார். அதன் பிறகு தொடர்ந்து ஆறாண்டுகள் பழனிக்கு நடந்திருக்கிறோம். முருகனைத் தேடி நடந்து சென்ற அந்தத் தினங்கள் என்றும் இனிமையானவை. அதன் பிறகு எல்லாரும் திருமணம், குடும்பம். வேலை என்று சென்றுவிட முருகனை தேடிச் செல்லும் நடைப்பயணம் முற்றுப் பெற்றது.


இந்த வருடம் மீண்டும் சேகர் தலைமையில் பசங்க எல்லாம் கிளம்பி பழனிக்குப் போயிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அடடா நம்ம இருந்திருந்தால் அந்த அணியில சேர்ந்து முருகனை தரிசிச்சிட்டு வந்திருக்கலாமே என்று நினைக்க வைத்தது. 

கிராமத்து நினைவுகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.