மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 நவம்பர், 2010

பஞ்சாத்தாபஞ்சாத்தாவுக்கு தொண்டைக்கு நெஞ்சுக்குமா இழுத்துக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இல்ல... ரெண்டு நாளா இப்படித்தான் கஷ்டப்படுது... போற ஜீவன் உடனே பொயிட்டா நல்லது... இந்த மாதிரி 'கேவு... கேவு'ன்னு ரெண்டு நாளா அது கஷ்டப்படுறதைப் பார்க்க யாருக்கும் மனமொப்பலை.

பஞ்சாத்தாங்கிறது அதோட பேரில்லை... அதோட ஆயி அப்பன் வச்சது பஞ்சவர்ணம்... அதோட ஆத்தாதான் எப்பவும் 'ஏய் பஞ்சவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணனன'ன்னு நீட்டி முழங்கும். மத்தவங்க யாரும் அதை அப்படிக்கூப்பிட்டதில்லை. எல்லாருக்கும் அது பஞ்சுதான். வயசானதும் அத யாரோ ஒரு பய பஞ்சாத்தான்னு சொல்ல அவனுக்கு பின்னால வந்த எல்லாத்துக்கும் பஞ்சாத்தா ஆயி பஞ்சவர்ணமும் பஞ்சும் மறஞ்சாச்சி. பேருக்காரணத்தை பாக்கிற நேரம் இதுவல்ல என்பதால் பஞ்சாத்தாவை சுத்தியிருக்கும் உறவுகளுக்கு இடையே நாமும் செல்லலாம்.

"பாவம்... ரெண்டு நாளா இழுக்குது... பொட்டுன்னு கொண்டு போகாம கஷ்டப்படுத்துறானே"

"ஆமா... யாருக்கும் கடைசிவரைக்கும் தீங்கு நினைக்காதவங்க அயித்தை... ஆனா இப்படி கெடக்குதே..." என்றது நெருங்கிய உறவு.

"என்னப்பா... ரெண்டு நாளா போகவுமில்லாம எந்திரிக்கவுமில்லாம இழுத்துக்கிட்டு கிடக்கு... வயக்காட்டுல நடவு வேலைகளெல்லாம் அப்படியே கிடக்கு... நாமளும் இதுகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு... அது நெஞ்சுக்குள்ள என்ன இருக்கோ தெரியலையே..." என்றார் பஞ்சாத்தாவின் கொழுந்தன் முத்துக்காளை.

"அதாய்யா தெரியலை... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்குன்னா என்னவோ மனசுக்குள்ள இருக்குய்யா... அப்படியே செத்தாலும் நெஞ்சு அவ்வளவு சீக்கிரம் வேகாதுய்யா..." என்றார் பரந்தாமன்.

"பாவம்யா.. வயசு காலத்துல எல்லாருக்கும் நல்லா செஞ்ச மனுசிய்யா... அதோட பயலுகளுக்கு அப்பா இறந்த பின்னால அதை நல்லா கவனிச்சாங்கய்யா... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்காம பொசுக்குன்னு போன நல்லாயிருக்கும்... கொள்ளுப்பேரன் வரைக்கும் பாத்த மனுசிதானே இனி என்ன பாக்க வேண்டியிருக்கு..." என்றார் முத்துக்கருப்பன்.

"இப்பல்லாம் நல்லவங்கதான் இழுத்துக்கிட்டு கிடக்காங்க... கெட்டவங்களெல்லாம் பொட்டுன்னு போயிடுறாங்க இல்லன்னன்னா என் கவுண்டர்ல போட்டுடுறாங்க..." என்றான் சக்திவேல்.

"அட நீ வேற... எந்த நேரத்துல என்ன பேசுறா... பெரியவன் எங்கடா?"

"என்ன சித்தப்பா..."

"நீயி... தம்பி... தங்கச்சி எல்லாரும் இங்க இருக்கீங்க...புள்ள குட்டியெல்லாம் வந்தாச்சு... இருந்தும் உங்க ஆத்தா மனசுக்குள்ள எதோ இருக்கு... அது ரெண்டு நாளா படுற வேதனைய பாக்க சகிக்கலை..."

"ஆமா சித்தப்பா... எங்களை எப்படியெல்லாம் வளத்துச்சு... இன்னைக்கு அதோட சாவை எதிர்பார்த்து... சுத்தி உக்காந்து எப்ப சாகுமுன்னு பாத்துக்கிட்டிருக்கோம்..." சொல்லும் போதே தாய்ப்பாசம் அவனை உடைத்தது.

"சரி... அழுகாதே... ஆத்தா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டுத்தான்டா போகப் போகுது... அப்புறம் என்ன... வீட்டுக்குப் பெரியவன் நீ உடைஞ்சியன்னா மத்தவங்கள்ளாம்... என்னைக்கா இருந்தாலும் எல்லாரும் போறதுதானே... சரி.... கண்ணைத்தொட... ஆமா சிங்கராசு எங்க..."

"இங்கதான் இருந்தான் வெளிய போயிருப்பான்..."

"சரி... இப்படி கெடந்து அவஸ்தைப்படுறதை பாக்க சகிக்கலை... பேரனை விட்டு பாலூத்தச் சொன்ன உசிரு போகுமுன்னு சொல்லி எல்லாப் பேரணும் பாலூத்தியாச்சு... ம்... ஒண்ணும் நடக்கலை... அதனால..."

"....." ஒன்றும் பேசாது அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

"பாலுல கொஞ்சம் வெசத்தை..."

"சித்தப்பா... வேணாம் சித்தப்பா... எங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த மனுசிக்கு கடைசியில வெசத்தை கொடுக்கிறதா... எத்தனை நாளானாலும் பரவாயில்லை சித்தப்பா... "

"அட... இது ஊரு நாட்டுல கமுக்கமா நடக்கிற விஷயம்தாண்டா... இப்படி இழுத்துக்கிட்டு இன்னும் ரெண்டு மூணு நாள் கிடந்த தாங்கமுடியுமா உங்களால... இல்ல தூக்கிகீக்கி குளியாட்ட முடியுமா... முதுகெல்லாம் பிச்சிக்குமுடா... லேசா கலந்துட்டு அதுக்கு பாசமானவங்க ஊத்துன சட்டுனு நின்னு போகும்..."

"வேணாம் சித்தப்பா... இன்னைக்கு பாக்கலாம்..."

"பெரியவன் சொல்றதும் சரிதான்... பெத்த தாய்க்கு விஷம் கொடுக்க எந்தப் பிள்ளைக்கு மனசு வரும்... ம்... அதெல்லாம் இருக்கிற நாம அவங்களுக்கே தெரியாம கமுக்கமா செய்யணும்... அதை இப்ப விடு அப்புறம் பாக்கலாம்... கிழவி மனசுக்குள்ள ராமசாமி நினைப்பு இருக்குமோ..?" என்று மெதுவாக கேட்டார் பரந்தாமன்.

"என்ன பேசுறே... அவனோட உறவெல்லாம் எங்க அண்ணன் இருக்கும்போதே அத்துப்போச்சு... அவனை எதுக்கு அது நினைக்கப்போகுது..."

"இல்ல முத்து... நான் எதுக்கு சொல்ல வாரேன்னா... எல்லாரும் வந்தாச்சு... அவன் மட்டும்தான் வரலை... கிழவி இழுத்துக்கிட்டு கிடக்கதைப் பாத்தா எனக்கென்னவோ அதாத்தான் இருக்குமுன்னு..."

"சும்மா இருங்க மாமா... அவரு உறவே வேண்டான்னு ஒதுங்கி பல வருஷமாச்சு... இனி எதுக்கு அவரைப் பத்தி பேசிக்கிட்டு..."

"என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் அத்துப்போகுமா மாப்ளே... அவனக் கூட்டியாந்து பாலூத்தச் சொன்னா என்னங்கிறேன்.."

"ஏய்யா பகையாளிய கொண்டு வந்து பாலூத்துனாத்தான் கெழவி சாகுமுன்னா அதுக்கு வெசத்தை கொடுத்து நாமளே அனுப்பி வைக்கலாமே..."

"எதுக்கு முத்து வேகப்படுறே... பரந்தாமன் சொல்றதுல என்ன தப்பிருக்கு.. நாலு பேரு போயி அவன் கிட்ட பேசிப்பார்ப்போம்... அவன் வாரேன்னு சொன்ன கூட்டியாந்து பாலூட்டச் சொல்லுவோம். ஒருவேளை கெழவி அந்த நினைப்புல இருந்தா சந்தோஷமா சாகுமில்ல..." என்று பரந்தாமனின் கருத்தை ஆதரித்துப் பேசினார் முத்துக்கருப்பன்.

"எனக்கு இதுல விருப்பம் இல்லய்யா... நானும் எங்க பசங்களும் வரலை... பங்காளிக நீங்க வேணுமின்னா போயி பேசுங்க... அதுவும் நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால... அப்புறம் அவன் எடுத்தெரிஞ்சு பேசிட்டான்னு சொல்லிக்கிட்டு எங்ககிட்ட வராதீங்க... சொல்லிப்புட்டேன்..."

"நீ வரலைன்னா பரவாயில்லை... பெரியவனையாவது சின்னவனையாவது வரச்சொல்லு... அவங்க வந்து கூப்பிடணுமின்னு அவன் எதிர்பார்ப்பான்ல..."

"இல்ல மாமா அந்தாளு வீட்டுக்கு நாங்க வரலை... நீங்களே போயி பேசுங்க..."

"சரி... வா முத்துக் கருப்பா... ஏய் பழனிச்சாமி, வெள்ளையா வாங்கப்பா... ராமசாமி வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்".


"வாங்க..." என்றபடி எழுந்தார் ராமசாமி, எழுவதை விழுங்கிய தேகத்தில் சுருக்கத்தின் ஆதிக்கம் இருந்தாலும் விவசாய வேலை பார்த்து திண்ணென்று இருந்த வெற்றுடம்புடன் இருந்தார். அவரது கண்கள் கலங்கியிருப்பது தெரிந்தது. ஒருவேளை கிழவியை நினைத்து அழுதிருப்பாரோ என்னவோ என்று வந்தவர்களை நினைக்கவைத்தது. சத்தம் கேட்டு உள்ளிருந்து தலைகள் எட்டிப்பார்த்தன.

"என்ன விஷயம்... எல்லாரும் வந்திருக்கீங்க..." அவரது குரலில் எப்போதும் இருக்கும் கணீர் குறைந்து சுரத்தில்லாமல் இருந்தது.

"ஏய் சவுந்தரம்... ஒரு நாளஞ்சு காபி போட்டுகிட்டு வா" என்றபடி அவர்களை திண்ணையில் அமரவைத்து கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தார்.

"உனக்கு விசயம் தெரிஞ்சிருக்கும்... பஞ்சாத்தா ரெண்டு நாளா தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு..."

தெரியும் என்பது போல் தலையாட்டினார்... உள்ளம் அழுததை உதடுகள் காட்டிக் கொடுத்தன. மேல் துண்டால் கண்ணை துடைத்துக் கொண்டார். அவரிடமிருந்து பெருமூச்சொன்று எழுந்தது.

"அதான் நீ வந்து பாலூத்துனா..."

"நானா... எங்க உறவருந்து எத்தனையோ காலமாச்சி... எந்த நல்லது கெட்டதுக்கும் சேர்ந்துக்கலை... இப்ப நா எப்படி பாலூத்தறது..."

"இல்ல அது இழுத்துக்கிட்டு கிடக்கதப்பாத்தா உம்மேல உள்ள பாசத்துலதான்..."

அவர் எதோ சொல்ல வாயெடுக்க, "இந்தாங்க காபி எடுத்துக்கங்க... அவரு ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை... என்ன செய்ய எங்க கால நேரம் இப்படி தனியா நிக்கிறோம்..." என்றபடி சேலைத்தலைப்பால் மூக்கைச் சிந்தினாள் சவுந்தரம்.

"என்ன சொல்றே... ராமசாமி..."

"பாசமெல்லாம் இருந்து என்ன பண்ண... இதுவரைக்கும் நல்லது கெட்டது எல்லாத்தையும் தள்ளியாச்சு... "

"இனிமேயா பொறக்கப் போறோம்... நாம எல்லாருமே இருக்கிற காலத்துல சண்டை சச்சரவுன்னு வாழ்க்கையை தொலச்சிட்டுதானே நிக்கிறோம்..."

"ஆமா... பயலுக கூட வரலை போல..."

"அ... அவங்க ஆத்தாகிட்ட அழுதுகிட்டு நிக்கிறாங்க... நீ வந்தியன்னா அதோட உயிரு சந்தோஷமா போகுமின்னு நினைச்சுத்தான் நாங்க உன்ன கூட்ட வந்தோம்... இதுல அவங்களுக்கும் சம்மதம்தான்"

தனது மனைவியைப் பார்த்தார். "போயிட்டு வாங்க... அவங்க பேசுறாங்க இல்ல அதப்பத்தி எல்லாம் யோசிக்க வேணாம்... ரெண்டு நாளா இழுத்துக்கிட்டு இருக்குங்கிறாங்க... பாவம் போறப்போ அவங்க மனசு சந்தோசமாப் போகணும்..."

"நீயும் வா...."

"இல்லங்க... நீங்க மட்டும் போங்க... எங்களை எல்லாம் அந்த மனுசங்களுக்கு பிடிக்காது... நாங்க யார்கிட்ட வந்து அழுகுறது..." சொல்லும் போதே கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"சரி அழுவாதே... இவுங்க வந்து கூப்பிட்டதுக்காக நான் போறேன்... அந்த வீட்டு மனுசங்களுக்காக இல்ல... சாவோட போறாடிக்கிட்டிருக்கிற பஞ்சாவுக்காக அந்த வீட்டுப் படி ஏறுறேன்..." என்றவர் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

"சரி அழுகாம வா ராமசாமி... மறுபடியுமா பொறக்கப் போறோம்..." என்று அவரை தேற்றினார் முத்துக்கருப்பன்.

"என்ன இருந்தாலும் ரத்த பாசம் விட்டுப் போகுமாய்யா... தானாடாட்டாலும் தன் சதை ஆடுமுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க..." என்றார் ஒருவர்.சிறு சிறு விசும்பல் ஒலிகளுடன் இறுக்கமான முகங்களின் விலாசத்துடன் இருந்த வீட்டிற்குள் தயங்கி நுழைந்த அவரைக் கண்டவுன் முத்துக்காளையும் பயலுகளும் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர் யாரையும் சட்டை செய்யவில்லை. பஞ்சாத்தாவின் அருகில் சென்றதும் கலங்கிய கண்ணைத் துடைத்தபடி 'பஞ்சா...' என்றார் மெதுவாக.

"ஏய் பாலக் குடுங்க அவன் கையில... ராமசாமி சத்தமா கூப்பிட்டுக்கிட்டே பாலை அது வாயில ஊத்துப்பா..."

"என்ன பரந்தாமா... நான் பஞ்சாவுக்கு பாலூத்தி போவச் சொல்லணுமா... முடியலையே... என்னால முடியலையே... சண்டையா இருந்தாலும் வெளிய தெருவ இந்த முகத்தை பாக்கும்போது சந்தோஷப்பட்டுக்கிற நா... இனி எங்க பாப்பேன்..." உடைந்து அழுதார்.

'கேவ்...கேவ்..." என்று எதையும் அறியாமல் இழுத்துக் கொண்டேயிருந்தது. அவர் ஊற்றும் பாலுக்காகவும் அதன்பின் நடக்க இருப்பதையும் பாக்க எல்லா கண்களும் பஞ்சாத்தா மீது நிலைத்திருந்தன.

"பஞ்சா... அம்மாடி... நா... ராமசாமி வந்திருக்கேன்... பாலைக் குடிம்மா... ப..ஞ்..சாசாசா.... நா... ரா...ரா...ராமசாமி.... உன்..." முடியாமல் உடைந்து அழுதபடி பாலை வாயில் ஊற்றினார். உள்ளே சென்றதைவிட வெளியே வழிந்ததே அதிகமாக இருந்தது. தனது துண்டால் வழிந்த பாலை துடைத்தார்.

'கேவ்... கேவ்..."

"இதுக்கும் நிக்கிற மாதிரி தெரியலை.... இனி யாரை ஊத்தச் சொல்றது..." ஒரு உறவு குசுகுசுக்க...

"கே....வ்.... கே....வ்..." ஒரு மாதிரி இழுத்தது. 'கே....' அப்படியே நின்றது.

"பஞ்சா..." ராமசாமி கத்த அழுகுரல்களின் சப்தம் அதிகமானது.

"தன்னோட பொறந்தவனை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் மூணு நாளா தவிச்சிருக்கு கிழவி" என்று யாரோ சொல்ல,

ராமசாமியை மாமா, அப்பா, மச்சான் என்று உறவுகள் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தன.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ உதவி : கூகிள்.... நன்றி

வெள்ளி, 26 நவம்பர், 2010

பசி..!சாப்பிட்ட பின்
தூக்கிப் போட்ட
வாழையிலையில்
வயிற்றுப் பாட்டுக்கு
வழி கிடைக்குமா..?

ஆவலோடு தேடிய ஆத்மா...
மனசுக்குள்
சொல்லிக் கொண்டது
இலையை கழுவிப்
போடுவார்களோ..?

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 நவம்பர், 2010

மாறாத நினைவுகள்நிகழ்காலத்தின்
நிஜத்தில் வாழ்ந்தாலும்
கடந்த காலத்தின்
நினைவுகளாய் நீ..!

பாடப் புத்தகத்தில்
பக்கமெல்லாம் கிறுக்கிய
உன் பெயர் இதய
நோட்டிலிருந்து
இறங்க மறுக்கிறது..!

பேருந்துப் பயணத்தில்
கார்குழல் பறக்க
பயணிக்கும் பெண்
உன் ஞாபகச் சாரலை
விதைத்துச் செல்கிறாள்..!

தோள் சாய்ந்த காதலர்கள்
கண்டால் கைகள் தானாக
நீ சாய்ந்த தோளை
தடவிக் கொள்கின்றன..!

மழை நாளில் தலை
துவட்டும் மனைவி
துவட்டாமல் விட்டுச்
செல்கிறாள் நீ
துவட்டிய நாட்களை..!

பள்ளிக் குழந்தைகள்
பறக்கும் அவசரத்தில்
கொடுக்கும் முத்தங்கள்
நீ அவ்வப்போது
கொடுத்த முத்தங்களை
முத்தெடுக்க வைக்கின்றன..!

ஹோட்டலில் எதிரே
கொறித்துச் சாப்பிடும்
கொஞ்சும் குமரிகள்
நீ சாப்பிட்ட நினைவுகளை
ஊட்டிச் செல்கிறார்கள்..!

பூத்திருக்கும் பூக்களெல்லாம்
உன் புன்னகையையும்
பூச்சூடிய கூந்தலையும்
மனசுக்குள் மணக்க வைத்து
இதழ்களில் பூக்க வைக்கின்றன..!

பிரிவின் வலியை
பிரசவித்த அந்த நாளும்
அதன் பின்னான வாழ்வும்
எல்லாவற்றையும் மாற்றின...
நினைவுகளைத் தவிர..!

-'பரிவை' சே.குமார்.

புதன், 24 நவம்பர், 2010

சிறு பூக்கள் 24/11/2010செப்படி வித்தை செய்தாயோ
எப்படி விலக்கினாலும்
விலகாமல் நினைவில் நீ..!

***

புல்லறுபடுவது அறியாமல்...
அடைக்கலமானது
சூரியனுக்கு பயந்த பனித்துளி..!

***

அக்னிப் பிழம்பாய் வார்த்தைகள்...
வெட்கி நின்றது வெடித்த இதயம்...
வேலையில்லா காதலன்..!

***

உபயோகமற்று
மரங்கொத்தி வீடு...
வீதியில் கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!

***

ரோஜாவாய் மலர்ந்த
இதழ்கள் வீசும் பேச்சில்
முற்களாய் வார்த்தைகள்..!


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 நவம்பர், 2010

அண்ணே... பிளாக்கு வேணும்..!

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எழுதப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். என்னடா அப்படி எழுதப்போறே... பில்டப்பு எல்லாம் விடுறேன்னு கேக்காதீங்க... சும்மா நகைச்சுவைக் கிறுக்கல்தான்...தினசரியில் தீவிரமாக மூழ்கியிருந்த சொக்கு 'என்னண்ணே... பேப்பருல அப்படி என்ன போட்டிருக்கு' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார்.

"அடடே... வா செங்கோடா... என்னப்பா காலையில வந்திருக்கே"

"சும்மாதாண்ணே..."

"உட்கார்... காபி சாப்பிடுறியா"

"இல்ல... வேண்டாண்ணே.."

"சொல்லு... என்ன விசயம்..."

"அது வந்துண்ணே... இப்ப எல்லாரும் பிளாக்கு... பிளாக்குன்னு கிடக்காங்க... நீங்க கூட ரெண்டோ மூணோ வச்சிருக்கீங்க"

"டேய் நல்லா சொல்லு.. ரெண்டு மூணு வச்சிருக்கேன்னா வேற மாதிரி அர்த்தமாயிடும்... அழகா தமிழ்ல வலைப்பூன்னு சொல்லலாமே..."

"அது என்ன பூவோ... நான் ஞானசூன்யமுண்ணே... எனக்கு பிளாக்குன்னுதான் தெரியும்... ஆமா என்ன சொன்னீங்க வலைப்பூவா... அப்படின்னா மல்லிகைப்பூ.. கனகாம்பரம் மாதிரி இதுவும்..."

"அட வெளங்காதவனே இது அந்தப்பூ இல்ல இது இணையத்துல பிளாக்ஸ்க்கு தமிழ் சொல்..."

"அப்படியா... இருக்கட்டுங்கண்ணே... எதுக்கு வலைப்பூன்னு வச்சாங்க..."

"அட வேற ஒண்ணுமில்ல... குடும்பத்தைகூட இப்படி பாக்கமாட்டோம்... இத பூ மாதிரி சும்மா பொத்திப் பொத்தியில்ல பாக்கிறோம்.... அதனாலதான்.."

"அது சரி எனக்கு ஒரு பிளாக்கு வேணுமின்னே..."

"அடேய்... அதான் வலைப்பூன்னு தமிழ்ல சொல்லிக் கொடுத்தேன்ல..."

"ஈசியா வாரதை விட்டுட்டு வலைப்பூ... வாழைப்பூன்னு... எனக்கு ஒண்ணு வேணும்"

"சரிடா... ஒனக்கு ஒரு வலைப்பூ ரெடி பண்ணலாம்... அதுல என்ன பண்ணப்போறே..."

"நீங்கள்லாம் என்ன பண்றீங்க..."

"நாங்க நாட்டு நடப்பு, கதை, கவிதை, அரசியல், சினிமான்னு எழுதுவோம்"

"அதே கருமாந்திரத்தை நானும் எழுதுறேன்"

"இங்க பாரு எழுத்தை கருமாந்திரமுன்னெல்லாம் சொல்லப்படாது..."

"இந்த வார்த்தையெல்லாம் புளோவுல வாரதுண்ணே... விடுங்க”

“சரி எழுதி...”

“என்னண்ணே கொஸ்டினா கேக்குறே... நீ வேற பிரபல பதிவர்ன்னு டீக்கடையில பேசுறாங்க... அதான் உங்கிட்ட வந்தேன்... என்னென்ன செய்யணும் தெளிவா சொல்லுண்ணே...”

“சரி... இப்ப உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணி பதிவு போட்டதும்...”

“அண்ணே பதியமுன்னா விதை போட்டு...”

“டேய்ய்ய்ய்.... ஏண்டா கொல்லுறே... பதியமில்லை... இது பதிவு... நீ எழுதுறதை இங்க பதிவுன்னு சொல்வோம்... எழுதுறவரை பதிவர்ன்னு சொல்வோம்..”

“ஒ.கே. விளங்கிடுச்சு...”

“நீ பதிவுலகத்துக்கு புதுசா இருக்கிறதால...”

“ இது ஒரு தனி உலகமா...”

“எழுதிப்பாரு... அப்பத்தெரியும்... இந்த உலகத்தைப் பத்தி...”

“சரிண்ணே... மேல சொல்லுங்க...”

“மத்தவங்க வலைப்பூவுக்கு போயி படிக்கணும்... அங்க போயி படிக்கிறப்போ...”

“எங்க போயி படிக்கணும்...”

“குறுக்க குறுக்க பேசாதடா... அதுக்கெல்லாம் நிறைய திரட்டி இருக்கு... திரட்டின்னா என்னன்னு கேக்காதே... வரிசையா வாரேன்... அப்படி படிக்கிறப்போ அவங்களை பின் தொடரணும்...”

என்னண்ணே பின்னால போகச் சொல்றீங்க... இப்படித்தான் ரெண்டு நாளைக்கு முன்னால நம்ம தேவிப்புள்ள பின்னாடி போனேன்... முதல்ல முறைச்சிச்சு... நாம யாரு... மறுபடியும் பின்னால போனேன்... செருப்பு பிஞ்சு போயிடுமுன்னு சொல்லிருச்சி...”

“நீ பின்னால போன அது செருப்பு ஏன் பிய்யணும்...”

“என்னண்ணே... நக்கலா? “

“சரி விசயத்துக்கு வா... இப்ப சொன்ன செருப்பு மேட்டரையே முதல் பதிவாக்கிடலாம்...”

“என்னையவே கேவலப்படுத்திக்கச் சொல்றிங்களா?”

“ இதுல என்ன கேவலமுன்னேன்... நண்பனுக்கு நடந்தா எழுது... சரி பின் தொடரணுமுன்னு நான் சொன்னது அவங்களோட பாலோவர்ஸ் ஆகிறது...”

“ம்... இப்ப சொன்னீங்க பாருங்க அழகா தமிழ்ல புரியிற மாதிரி...”

“ இது தமிழ்...சரிதான்...”

“எத்தனை படத்துல பாக்கிறோம்... நாம எத்தனை விசயத்துல பாலோ பண்ணுன்னு சொல்லியிருப்போம்... அப்ப தமிழ்தானே...”

“சரிப்பா... அவங்களும் உன்னை பாலோ பண்ணுவாங்க... அதுக்கு அப்புறம் முக்கியமானது பின்னூட்டம் போட மறக்கக்கூடாது...”

“ஹா...ஹா...ஹா...ஹி...ஹி... எனக்கு பின் ஓட்டம் தெரியும்... ரெண்டு நாளைக்கு முன்னாடி பின் ஓட்டத்தால கக்கூஸ் உள்ளயே படுத்திருந்தேன்... பின்னூட்டமுன்னா...”

“அட கருமம் பிடிச்சவனே... பின்னூட்டமுன்னா எழுதுனதை படிச்சிட்டு நல்லாயிருக்கு... இந்த வரி பிடிச்சிருக்கு அப்படின்னு அவங்களுக்கு கமெண்ட் போடணும்...”

“கமெண்ட் அடிக்கிறதுன்னு சொல்ல வேண்டியதுதானே.... அதை விட்டுட்டு பின்னோட்டம்... முன்னோட்டமுன்னு... ஈஸியான வார்த்தைகளை சொல்ல பழகுங்கண்ணே...”

“சரி... இந்த பின்னூட்டத்துல ஈஸியான வழி என்னன்னா ‘nice’, ‘super’, ‘wow’ ‘good’ ‘கலக்கல்’, ‘அருமை’ இப்படின்னு போட கத்துக்கணும். அது கூட smiley-ம் போட்டா எடுப்பா இருக்கும்...”

“அது என்ன கருமாந்திரமண்ணே... புதுசா இருக்கு...”

“ இப்பதானே சொன்னேன்... இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு... சிரிப்புன்னா ‘:)’ இப்படி... வெறுப்புன்னா ‘:(‘ இப்படி... இது மாதிரி... போகப்போக கத்துக்குவே... இந்த பின்னூட்டத்துல முக்கியமா கும்மி அடிக்கத் தெரியணும்”

“கும்மியா... இங்க ஏன் அது வருது...”

“காரணம் இருக்கு... இப்ப ஒருத்தர் ஒரு பதிவு எழுதுறாரு... அதுல ஒரு வார்த்தையை எடுத்து பின்னூட்டம் போடும் போது சம்பந்தம் இல்லாம நமக்கு தெரிந்த பதிவரை இழுத்து விடணும்... அப்புறம் அவரு பின்னூட்டம் போடும் போது நமக்கு பதில் சொல்லி அடுத்த கேள்வியை நமக்கு வைப்பாரு... அதுக்கு யாராச்சும் பதில் சொல்ல வருவாங்க... அப்ப நாம மறுபடிக்கும் எண்டராகி அள்ளி விடணும்... இதுல முக்கியம் கூட்டமா கும்மி அடிக்கணும்... சும்மா அவருக்கு ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு போகும்... அந்த பாசத்துல நாம போட்ட மொக்க பதிவா இருந்தாலும் நம்ம வலைப்பூவுக்கும் வந்து கும்மி அடிப்பாங்க...”

“மொக்கைப் பதிவுன்னா...”

“ஒண்ணுமே இருக்காது.... ஆனா இருக்க மாதிரி ஒரு பில்டப்போட எழுதி முடிக்கத் தெரியணும்... அப்புறம் நம்மளையும் மொக்கைப் பதிவர் வட்டத்துல சேர்த்து பிரபல மொக்கைப் பதிவர்ன்னு சொல்லிடுவாங்க...”

“ஓ...”

“திரட்டியின்னு சொன்னேன்ல... அது என்னன்னா நாம எழுதுறதை மத்தவங்கிட்ட கொண்டு சேக்கிற நல்ல வேலைய செய்யிற வலைப்பக்கங்கள். நாம எழுதி அதுல இணைச்சிட்டோமுன்னா... பாக்க வர்றவங்க நம்ம பகிர்வு பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுவாங்க... இங்க பதிவரசியல் இருக்கும்...”

“என்னண்ணே அரசியலா... நம்ம முதல்வர் பண்ற குடும்ப அரசியல் மாதிரியா...”

“டேய்... அரசியலை இழுக்காதேடா... நாம ஸ்டேட்ல நடக்கிறது மன்னர் ஆட்சி... மதுரையில இப்ப குறுநில மன்னர் கல்யாணம் வச்சதுக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணிட்டு எல்லாருக்கும் சாப்பாடு போட்டாங்க... திங்கப்போன நாம இந்த பணமெல்லாம் ஏதுன்னு திங்க் பண்ணினமா... மன்னர் என்ன திருக்குவளையில கோடிகளோட பிறந்தா வந்தாரு... “

“என்னய பேசாதேன்னு சொல்லிட்டு நீங்க டீப்பா போறீங்களேண்ணே...”

“கிளப்பி விட்டுட்டே... சரி விசயத்துக்கு வா... இந்த அரசியல் என்னன்னா... நீ எவ்வளவுதான் நல்லா எழுதியிருந்தாலும் உனக்கு ஓட்டுப்போட மாட்டோம்... எங்களுக்குன்னு ஒரு குரூப் வச்சுப்போம்... அதுக்குள்ள ஓட்டுப் போட்டு மகுடமெல்லாம் சூட்டிப்போம்...”

“அடப்பாவிங்களா... அப்ப நல்லா எழுதுறவனெல்லாம்...”

“எவனாயிருந்தா என்ன... கும்மியடிச்சு அதிக ஹிட்ஸ்சும் குழு ஓட்டும் வாங்கிட்டா முன்னணியில இருக்கலாம்... மொக்கைப் பதிவோ... கச்சடா பதிவோ... கவலையில்லை... நீ வேணா நெனச்சுக்கலாம்... நான் நல்லா எழுதியிருக்கேன்னு... அதை நாங்க சொல்லணும் பின்னூட்டத்துலயும் ஓட்டுலயும்...”

“ம்...”

“அப்புறம் முக்கியமான விஷயம்... பதிவ எழுதிட்டு யார்ரா பின்னூட்டம் போடுறான்னு கம்ப்யூட்டர் பக்கத்துலயே கண் கொத்தி பாம்பாட்டம் பாத்துக்கிட்டே இருக்கணும். ஒரு பின்னூட்டம் வந்தாலும் அதுக்கு உடனே நன்றின்னு நீ முன்னூட்டமிடனும்.”

“அது சரி... கம்யூட்டர் பக்கத்துலயே இருக்கணுமா...”

“ஆமா... 24 மணி நேரமும் வலையில்யே இருந்தியன்னா சீக்கிரம் பிரபல பதிவராயிடலாம்... அதுக்கு மடிக்கணினி வாங்கி வச்சுக்க...”

“என்னது... மடக்குற கணினியா... அப்படின்னா...”

“ஐய்யோ... அது லாப்டாப்...”

“முன்னமே சொன்னேன் தெரிஞ்ச தமிழ் வார்த்தையில பேசுங்க... தெரியாத வார்த்தையில பேசாதீங்க... இப்ப பாருங்க ஒச்சாயின்னு தமிழ் சாமி பேர்ல படமெடுத்ததுக்கு வரி விலக்கு இல்லையின்னு சொன்ன முத்தமிழ் கலைஞரோட அவையில குவாட்டர் கட்டிங்ன்னு சூப்பர் தமிழுக்கு கொடுத்தாங்கள்ல... சும்மா மடிக்கணினி, வலைப்பூ, பின் தொடர்ன்னு...”

“ஏண்டா... இம்புட்டு டென்சனாகிறே... சரி பதிவெழுதிட்டு... அடிக்கடி பின்னூட்டம் வந்திருக்கான்னு பாக்கணும்... வரலைன்னா திரட்டிய ஓப்பன் பண்ணி யாருக்காச்சும் பின்னூட்டம் போடு... உடனே அவருகிட்ட இருந்து உனக்கு பின்னூட்டம் வரும்... இது இங்க எழுதப்படாத பாலிசி... நீ பாட்டுக்கு ஒரு பதிவ போட்டுட்டு நாளு நாளைக்கு அந்தப் பக்கமே போகாம இருக்கப்படாது...”

“அதாவது எவனையாவது அறிக்கைவிடச் சொல்லிட்டு கொடநாட்டுல போயி படுத்துக்கிற மாதிரி...”

“அடேய்... அந்த சாக்கடைக்குள்ளயே ஏண்டா இறங்குறே... அப்புறம் முக்கியமானது இதுதான் பதிவுலகத்துல அப்பப்ப போட்டியெல்லாம் வைப்பாங்க யோசிச்சு கலந்துக்கணும்... நீ பாட்டுக்கு தப்பா எழுதியிருந்தியன்னா போச்சு..."

“என்னண்ணே வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் வருமா?”

“அதெல்லாம் இல்லடா.... சொல்றேன்... இப்ப 'உயிர் ஊசல்'ன்னு எழுதுறதுக்குப் பதிலா 'உயிர் உசல்'ன்னு எழுதியிருக்கேன்னு வச்சுக்க... போட்டி நடத்துற பதிவர் தமிழ் பண்டிட்டை கூட்டியாந்து தப்பெல்லாம் கண்டு பிடிச்சு அதை ஒரு பதிவா போடுவாரு... அப்புறம் அவங்க உன்னோட படைப்பைப் பத்தி எது வேணாலும் எழுதுவாங்க... நீ எதுவும் பேசக்கூடாது... அப்படி எதாவது எதிர்த்தா உனக்கு குழுவா மிரட்டல் வரும்...”

“அம்மாடி... இவ்வளவு இருக்கா இதுக்குள்ள... இந்த கருமாந்...”

“சனியனே... இதை சொல்லாத சொல்லாதேன்னு எத்தனை தடவை சொல்றது எளவெடுத்தவனே...”

“சாரிண்ணே... வாய் தவறி... அதுக்காக கோவப்படாதீங்க...”

“சரி... நாம உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம். அதுல என்னென்ன சேக்கலாம் எப்படி சேக்கலாம்ன்னு விரிவா எழுதுற நண்பர்கள் வலைப்பூ இருக்கு... அதுல பாத்து அப்புறம் நல்லா டிசைன் பண்ணிக்க... இப்ப சாதாரணமா உனக்கு ஒரு வலைப்பூ தயார் பண்ணலாம்... என்ன பேரு வைக்கணும்.... “

“பிரபல பதிவர்ன்னே வையுங்கண்ணா...”

“அடங்கொய்யாலே... பேர கேட்டா...”

“ இல்லண்ணா... பிரபலமாகிறமோ இல்லயோ படிக்கிறவங்க பிரபல பதிவர்ன்னு சொல்வாங்கள்ல...”

“நல்லா யோசிக்கிறே... பதிவுலகத்துல பெரிய ஆளா வருவே...”

“உங்க ஆசிர்வாதம் அண்ணே...”

“சரி... எதாச்சும் எழுதி இன்னைக்கு பதிவிடு...”

“எதுல போயி எழுதணும்... தமிழ் டைப்பிங்க போகணுமா...”

“ஒரு புண்ணாக்கும் வேணாம். நிறைய தமிழ் எழுதிகள் இருக்கு... நான் தர்றேன்... ammaன்னு கொடுத்தா அம்மான்னு வரும்... ரொம்ப ஈஸி...”

“சரிண்ணே... நாமளும் கலக்கிடுவோம்... ரொம்ப நன்றிண்ணே... பொறுமையா சொன்னதுக்கு... நீங்க எதாவது எழுதியிருக்கிங்களா...”

“ இப்பத்தான் புயலடிக்கும் அலைக்கற்றைன்னு பாதி ரெடி பண்ணி வச்சசிருக்கேன்... ஏண்டா”

“அந்த பாதிய தொடருமுன்னு போட்டு என்னோட பிளாக்குல முத கட்டுரையா எம் பேருல போட்டிங்கண்ணா...”

“அடிங்கொய்யால... நரிக்கு ஒதுங்க எடம் கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டுச்சாம்... ஓடிப் போயிடு... செருப்பு மாட்டரையே பதிவா போடு...”

“அண்ணே... பாருங்க... எங்க ஓபனிங்க... சும்மா டெர்ரரா பதிவு போடுவோமுல்ல... நாளைக்கு இந்த பிரபல பதிவர்கிட்ட நீங்க ஆர்ட்டிக்கிள் கேட்டு நிக்கிற நிலமை வரும்... வரட்டா....”

“வராதே... தொலை...”-’பரிவை’ சே.குமார்.
Google - Thanks for photo...

சனி, 20 நவம்பர், 2010

சில சினிமாவும் சில வரி விமர்சனமும்..!

சில படங்கள் குறித்த எனது கருத்துக்களை சில வரிகளில் பதிவிட்டிருக்கிறேன். இது சினிமா விமர்சனம் அல்ல... படம் குறித்த சிறு பார்வையே...


உத்தமபுத்திரன்* யாரடி நீ மோகினி, குட்டி வரிசையில் தனுஷ், ஜவஹர் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

* முந்தைய படங்களின் வெற்றியை முறியடித்ததா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

* மற்ற படங்களில் பார்த்த அசால்ட்டான தனுஷ் மிஸ்ஸிங்...

* எல்லாப் படத்திலும் லூஸூப்பெண்ணாகத்தான் வருவேன் என்பது போல் லூசுத்தனமாக நடிக்கிறார் ஜெனிலியா.

* பாக்யராஜ், அம்பிகா, ரேகா, சுந்தர்ராஜன் என பெரிய கூட்டம் திரையை நிறைச்சிருக்கு.

* தெலுங்குப் படக் கதை என்பதால் வில்லன்கள் பேசும் போது கத்திக் கத்திப் பேசுவதால் தலைவலி வருவதை தவிர்க்க முடியவில்லை.

* விவேக் வசனங்களைக் குறைத்து முக பாவனையால் நடித்திருப்பது புதுசு.

* பாடல்களில் 'உசுமலரசே...', 'கல்யாணத்தேதி...' பாடல்கள் கலக்கல் ரகம். மற்ற பாடல்களையும் ரசிக்கலாம்.

அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றாலும் சில மைனஸ்களைத் தவிர்த்து விவேக்குடன் தனுஷ் கலக்கும் இரண்டாம் பாதிக்காக பார்க்கலாம்.


கௌரவர்கள்
* பழிக்குப் பழி வாங்கும் கதைதான்.
* சத்யராஜ் நடிப்பு படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

* விக்னேஷ் பெரிய மீசையுடன் வித்தியாசமாக காட்சியளித்தாலும் நடிப்பு மிஸ்ஸிங்.

* மோனிகா அழகுப் பதுமையாய் வருகிறார்.

* யுவராணி, சச்சு, குயிலி, பானுச்சந்தர் எல்லாரும் படத்தில் இருக்கிறார்கள்.

* படத்தில் ரசிக்க முடியாத ஒன்று பானுச்சந்தரின் சிரிப்பு. அதை தவிர்த்திருக்கலாம்.

* முக்கிய கதாபாத்திரத்தின் பெரும்பாலான காட்சிகளில் பின்னணியில் பாடல் ஒலிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

* பாடல்கள் சுமார் ரகம்.

* படத்தின் கிளைமாக்ஸ் வேறுமாதிரி இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

* சத்யராஜ்க்காக ஒருமுறை பார்க்கலாம்.


ஒச்சாயி* வன்முறைக் கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்திருக்கும் மற்றொரு படம்.

* ஒச்சாயி என்ற பெண் தெய்வத்தின் நாமகரணம் கதாநாயகிக்கு என்பது மட்டுமே பெயர்க்காரணம்.

* கதாநாயகன் தயாவுக்கு ரவுடி வேடம்...நன்றாக பொருந்தியிருக்கிறார்.

* நாயகி தாமரைக்கு நடிப்புக்கான வாய்ப்பு குறைவு. ஒரு இடத்தில் மட்டும் நறுக் வசவம் பேசுகிறார்.

* ராஜேஷ் நிறைவாக செய்திருக்கிறார்.

* ' நொச்சிக்காடு...', 'கம்மங்காட்டுக்குள்ளே..', 'சொந்தமெல்லாம்...' பாடல்கள் இனிமை.

* வரி விலக்கு பிரச்சினையில் சிக்கி வந்திருந்தாலும் வெற்றிக்கனியை பறித்ததா என்பது சந்தேகமே.

* மதுரை என்றாலே அரிவாளும் அடிதயும் நிறைந்ததுதான் என்று இன்னும் எத்தனை இயக்குநர்கள் சொல்ல இருகிறார்களோ தெரியவில்லை.வ குவாட்டர் கட்டிங்

* முதல்வரின் வாரிசுகள் எடுத்த தண்ணி போடும்... சாரி தேடும் படம்.

* எஸ்.பி.பி.சரணின் நடிப்பு அருமை.

* கதாநாயகன் சிவா தண்ணியடிக்க சென்னை முழுவதும் அழைகிறார்.

* லேகா வாஷிங்டன் படத்தில் இருக்கிறார்.

* பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

* படம் பார்க்க மனதளவில் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

* இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என்ற டைட்டில் கார்ட் போட்டிருந்தால் அய்யாவின் அபிமானிகள் படத்தை ஓட்டியிருப்பார்கள்.

-'பரிவை' சே.குமார்.

Photos  - Thanks to google

வெள்ளி, 19 நவம்பர், 2010

கிராமத்து நினைவுகள்: மழைக்காலம்கிராமத்து நினைவுகள் பகுதிக்கு உங்களின் ஆராவாரமான (!!!???) வரவேற்பை முன்னிட்டு தொடரலாம் என்று நினைக்கிறேன். சிறுவயது சந்தோஷங்களை அசை போடும் போது கிடைக்கும் அந்த சுகந்தமான சந்தோஷ அனுபவம் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

ஊளை மூக்கோடும் அந்த மூக்கை துடைத்த புறங்கை அழுக்கோடும் இடுப்பில் நிற்க மறுக்கும் டவுசரை அரணாக்கொடியில் (நாங்க இதை பட்டுக்கயிறு என்போம்) சிறையிட்டு அப்பப்ப இழுத்து விட்டுக் கொண்டும் சந்தோஷித்த அந்த தினங்கள் மீண்டும் வரா.... ஆனால் அந்த நினைவுகளை எப்ப வேண்டுமனாலும் அசை போடலாம்... அதற்கு தடை விதிக்க முடியுமா?

சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய....

அந்த மழைக்காலத்தில் மழை பெய்து நின்றதும் நாங்கள் முதலில் செல்வது கண்மாய்க்குத்தான்.... எவ்வளவு தண்ணீர் வந்திருக்கு... நாளை கண்மாய்க்கு குளிக்க வரலாமா? என்று பார்க்கத்தான்.. எங்கள் கண்மாயில் பெரிதும் சிறிதுமாக இரண்டு மேடான பகுதி எங்களின் அடையாளமாகும். அதில் பெரிய மேடு (பெரிய முட்டு) நீரில் அமுங்கினால் அந்த வருடம் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் நல்லாயிருக்கும். அதேபோல் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரரின் அடிப்பீடம் தண்ணீருக்குள் அமுங்கினால் நீர் இறைக்காமல் வெளைந்து விடும். கோடை போடவும் செய்யலாம் என்பது போன்ற வழிவழி வந்த கணக்குகள் உண்டு.

நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் கண்மாய்க்கு நீர் கொண்டு வர ம்ழைக்காலத்தில் பல வகைகளில் முயற்சித்து வெற்றி கண்டோம். அவை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது... (அது சீக்ரெட்... நாங்கள்ளாம் யாரு... சொல்லமாட்டோமுல்ல...)

மழை நாளில் பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு. போட்டியின் முடிவில் ஏற்படும் சண்டையால் பாலம் தகர்க்கப்படும். பின்னர் சில நிமிட அமைதியான நடைக்குப்பின்னர் மீண்டும் ஓரிடத்தில் புதிய பாலத்துடன் சமாதானம் ஆரம்பிக்கும்.

சில நாட்கள் மழையில் வரும்போது குளக்காலில் பாய்ந்தோடும் நீரில் ஏத்துமீன் (அதாவது தண்ணீரின் போக்கை எதிர்த்து வரும் மீன்) வருவதை பார்த்துவிட்டால் போதும் ' டேய் மீன் ஏறுதுடா... வாங்கடா பிடிக்கலாம்...' என்றபடி எல்லோரும் இறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்துவிடுவோம். அதில் அயிரை, கெண்டை, கெழுத்தி மீன்களே அதிகம் ஏறும். கெழுத்தி பிடிப்பதில்தான் தனிக்கவனம் தேவை. இல்லையென்றால் முகத்தில் இருக்கும் முள்ளால் குத்திவிடும்... அது குத்தினா கடுக்கும் பாருங்க... அப்பா... என்ன வேதனைங்கிறீங்க...

நல்ல மழை பெய்து கண்மாயின் சறுக்கை (கூடுதல் தண்ணீர் வெளியாகும் பகுதி) எடுத்துக் கொண்டால் எங்களுக்கு கொண்டாட்டம்தான்.... முதலில் எங்க கண்மாய் சறுக்கையில் மணல் சாக்குகளை போட்டு அடைத்து கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க வழி செய்வார்கள் நாங்களும் அங்கு செல்வோம்... வேலை செய்வோம். பிறகு அதற்கு மேல் நிரம்பும் நீர் குளக்கால் வழியாக அடுத்த ஊர் கண்மாய்க்குத்தான் போகும்... அந்த கண்மாயில் இருக்கும் மீன் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டபடி வரும்.

எங்க அண்ணன் உள்பட அவர் வயது நிறைந்த அண்ணங்கள் இணைந்து தண்ணீரில் அணை வைத்து ஒரு இடத்தில் பத்தக்கட்டை (உருளை வடிவில் துவாரங்கள் இடப்பட்டிருக்கும்.... அதாங்க எப்படி சொல்றது... அட நம்ம புல்லாங்குழல் மாதிரி பெரிசுங்க போதுமா... அட நாதாரின்னு திட்டுறது கேக்குது... இப்ப நாம ஸ்கூல் பையங்க...) போட்டு அதனருகில் ஒரு பெரிய குழி வெட்டி வைத்து தண்ணீரை திறந்து விடுவார்கள். துவாரம் வழியாக செல்லும் தண்ணீரில் ஏறிவரும் மீன் குதிக்கும் பாருங்க... அப்படியே குழிக்குள் விழும்... சில சமயங்களில் நிறைய மீன் வருமா... அப்படியே குதித்து விழும் பாருங்க... ஹையோ... என்ன அழுகு... பாக்கப் பாக்க சந்தோஷங்க... எங்கண்ணன் உரச்சாக்குன்னு சொல்லுவோம் தெரியுமா... அதுல எல்லாம் பிடிச்சாந்திருக்காருன்னா பாத்துக்கங்க.

அப்புறம் மழைக்காலத்தில பாத்திங்கன்னா... கருவ மரத்துல உட்காந்து காது கிழிய கத்துமே சில் வண்டு அதையும் விடுறதில்ல்... மரத்தோட ஒட்டி இருக்கிற அதை தேடிப் பிடிச்சு நூல்ல கட்டி கத்தவிட்டு வேடிக்கை பாக்கிறது.

மழை நாட்கள்ல மாடு மேய்க்கப் போறப்போ குடை கொண்டு போறதைவிட கடையில விக்கிமே பச்சை, சிவப்பு , மஞ்சள்ன்னு பிளாஸ்டிக் பேப்பர் அதை போட்டுக்கிட்டுப் போறதுல ஒரு ஆனந்தம்தான் போங்க.வயல்ல மாட்டை விட்டுட்டு சும்மாவா இருப்போம் அங்க கிடக்கிற தண்ணியை இரண்டு வயலுக்குமிடையில் இருக்கும் வரப்புல கையில கொண்டு போற மூங்கில் கம்பால குத்திவிட்டு வேடிக்கை பாப்போம்.

இந்தப் பழக்கம் விவசாய டயத்துல அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் போகும் போது அவனுக்குத் தெரியாம வாய்க்கால்ல இருந்து வயலுக்குள்ள குத்திவிட்டு தண்ணீரை பாய்ச்சுறது வரைக்கும் தொடர்ந்திச்சி... என்ன செய்ய தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமுன்னு பழமொழியே இருக்குல்ல... நம்ம பிரண்டு வீட்டுக்கு தண்ணி போறப்போ நம்ம வயல் ஓரத்த கண்ணுல விளக்கெண்ணை விட்டுக்கிட்டு பாப்பாங்க... அவங்களுக்குத் தெரியுமில்ல ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதானே... சில பெரிசுங்க நண்டு சிலவுல பொத்துக்கிட்டு தண்ணி போகுதேன்னுட்டு மம்பட்டியால வெட்டி அடச்சிட்டு போகுங்க.

மாடு மேய்க்கும் போது மழை பெய்து விட்டதும் மரத்தடியில் போய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென யாராவது ஒருவர் மரத்தின் வாதைப் பிடித்து ஆட்டி விட்டால் போதும் அதிலிருந்து சடச்சடவென விழுகும் நீரானது உடம்பில் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

மழை பெய்து ஓயும் போது ஊருக்குள் இருந்து ஊரணிக்குப் போகும் தண்ணீரில் அம்மாவின் காட்டுக் கத்தலையும் பொருட்படுத்தாது பழைய ராணிப் புத்தகத்தில் (எங்க ஊட்ல இன்னும் ராணி வாங்குறாங்கங்க... எங்கம்மா ராணி புத்தகத்தோட நீண்ட நாள் வாசகி) சாதா கப்பல், கத்திக் கப்பல் எல்லாம் செய்து ஓட விடுறது... அதுலயும் போட்டிகள் பொறாமைகள் சண்டைகள் எல்லாம் உண்டு.

அப்புறம் மழைவிட்டதும் பனங்காட்டுக்கு ஓடி காவோலை (காய்ந்த ஓலை) பொறக்குறது.... பனம் பழம் பொறக்குறது... இதிலும் போட்டிதான்... அடுத்தவன் போறதுக்குள்ள நாம போகணும் இல்லேன்ன அவன் எல்லாத்தையும் பொறக்கிடுவான். அதனால மழை லேசா விட்டாப்புல இருக்கயில சிட்டாப் பறப்போம். ஓலைகளை எடுத்து ஒன்றுடன் ஒன்று பிண்ணி ரோட்டில் தரத்தரவென்று இழுத்து வருவோம். அடுத்த நாள் அதன் அடிப்பக்கம் அழகாக வெட்டப்பட்டு கயிரு கட்டி வண்டியாக விளையாட வரும்... வண்டிப் பந்தயம் வேறு ... வேகமா ஓடுறவன் ஜெயிப்பான்... அதுக்கு பரிசு வீட்டில் திருடிய வெள்ளக்கட்டி.

எல்லாத்துக்கும் மேல மழை நாள்ல கண்மாய்க்கரையில நின்னு விஸ்தாரமான வெளியில வானத்துல வானவில் தெரியிறதைப் பாத்து அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லைங்க...

என்னதான் சொல்லுங்க... பெய்யிற மழையில நனையிற சொகம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதுங்க.

-'பரிவை' சே.குமார்.

Thanks for Photos : Google & Friends18.com

புதன், 17 நவம்பர், 2010

உயரப் பறக்கும் மைனா


தமிழ் சினிமாவை எந்திரனில் கட்டிப் போட்டு விட்டு சிறிய இயக்குநர்களெல்லாம் சிந்தை கலங்கியிருந்த வேளையில் தீபாவளி கோதாவில் மன தைரியத்துடன் குதித்தது என்னவோ ஐந்தே ஐந்து படங்கள்தான். இதில் எந்திரன் சுரத்திலும் விஞ்சி நின்றவை இரண்டு மட்டுமே... ஒன்று எந்திரனின் மாப்பிள்ளை நடித்த உத்தமபுத்திரன், மற்றொன்று பிரபு சாலமனின் மைனா.

கதை, எதார்த்த நடிப்பு, படமாக்கப்பட்ட ஏரியா என எல்லாமாய் சேர்ந்து தீபாவளி ரேசில் முதலிடத்தில் உயரப் பறந்து கொண்டிருக்கிறது மைனா என்றால் மிகையாகாது.கதை என்று பார்த்தால் தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் நடக்கும் நிகழ்வுகள்தான். அதை சொன்ன விதமும் நடித்திருப்பவர்களின் எதார்த்த நடிப்பும் கதைக்கு வலுச் சேர்த்திருக்கின்றன.

கதையின் நாயகன் விதார்த் கூத்துப் பட்டறையில் இருந்து வந்திருக்கிறார். கலைந்த கேசமும் கசங்கிய சட்டையுமாய் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். நாயகி அமலா இந்தப் படத்தில்தான் அறிமுகம் என்றாலும் சிந்து சமவெளி முதலில் வந்துவிட்டது. அந்த படத்தில் நடித்த பெண்ணா இது என்று யோசிக்க வைக்கும் நடிப்பு. தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்.

நாயகன் சுருளி சிறு வயதிலேயே ரவுடி போல் வளர்கிறார். வீட்டில் அப்பாவுக்கு அடங்குவதில்லை... அப்பாவும் அப்படித்தான்... சீட்டு விளையாட எப்படியாவது காசு பிடுங்கும் ரகம். பையன் பள்ளிக்கு வருவதில்லை என்று சொல்ல வரும் ஆசிரியரின் காதைப் பிடித்து திருகி மூணு மாசமா பையன் வராததை சொல்லாதது யார் குற்றம்... என்று கேட்டு அவரிடம் பணம் பறிப்பதில் தெரிகிறது அவர் குடும்பத்தைவிட சீட்டைக் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கிறார் என்பது.

கல்லுக்குள் ஈரம் என்பது போல் வீட்டை விட்டு அடித்து தள்ளப்படும் சிறுவயது மைனாவையும் அவரது அம்மாவையும் கொண்டு வந்து தனது ஊரில் உள்ள ஒரு பாட்டியின் அரவணைப்பில் விடுகிறார். அவர்களும் பனியாரம் சுட்டு விக்கிறார்கள். சுருளியை மாப்பிள்ளை... மாப்பிள்ளை என்று அவர் விளிக்க அவன் மனதில் சிறுவயது முதலே மைனாவின் பால் காதல் வருகிறது.

அவர்கள் வளரும் போது அவர்களின் காதலும் வளர்கிறது. இந்த சமயத்தில் மைனாவின் அம்மா வில்லியாகிறார். வெறும்பயலான உனக்கு கட்டமாட்டேன் என்று சொல்ல அவரை தாக்கும் சுருளி பதினைந்து நாள் ரிமாண்டில் வைக்கபடுகிறார். தீபாவளிக்கு முதல் நாள் மைனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக கேள்விப்பட்டு சிறையில் இருந்து தப்பித்துச் செல்கிறான்.

தனது முதல் வருட தீபாவளிக்கு பிறந்த வீடு செல்ல காத்திருக்கும் இளம் மனைவியின் எரிச்சலூட்டம் போன் கால் டார்ச்சருக்கு மத்தியில் தப்பியோடிய சுருளியை தீபாவளி விடுமுறைக்குள் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏட்டு தம்பி ராமையாவையும் கூட்டிக் கொண்டு அவனின் மலைக்கிராமத்துக்கு வரும் இன்ஸ்பெக்டராக அறிமுக நடிகர் சேது. அவருக்கு துணையாக வரும் தம்பி ராமையா சிரிக்க வைத்தாலும் அந்த பேருந்து விபத்துக்குப் பின் மனைவியுடன் பேசும் இடத்தில் நம் கண்களை நனைக்க வைத்துவிடுகிறார். அவரின் அலைபேசியின் ரிங்டோனாக 'மாமா... நீங்க எங்க இருக்கீங்க...' இயக்குநரின் வித்தியாசமான சிந்தனை.

மூணாறு ஹோட்டலில் வைத்து சுருளியிடம் இன்ஸ்பக்டர் சேது, என்னைய தீபாவாளி அன்னைக்கு இப்படி அலைய வச்சிட்டியல்ல... உன்னைய கஞ்சா கேசுல உள்ள போட்டு என் கவுண்டர்ல போடலைன்னா பாரு...' சொல்றப்போ சாப்பிடாமல் கண் கலங்கும் அந்த இளங்காதலர்களின் மனசு நம்மை எதோ செய்கிறது.

மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவரின் தயவால் விலங்கு கழட்டப்பட அங்கிருந்து தப்பிக்கும் போது ஆணி குத்திவிட மைனாவை தூக்கிக் கொண்டு ஓடும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் சருளியான விதார்த்.

பேருந்து விபத்தில் சேது, தம்பி ராமையா இருவரும் மாட்டிக் கொள்ள, காப்பாத்த மறுக்கும் சுருளியிடம் 'அப்ப அவனுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்கும் மைனா... அவரது கேள்வியால் உயிரைப் பணயம் வைத்து அவர்களை காப்பாற்றும் சுருளி... அதன் பின் அவர்கள் மீது பாசத்தை காட்டுகிறார்கள் காக்கிகள் என அந்த ஒரு காட்சியில் கதை நமக்குள் இறங்குகிறது.

ஸ்டேசனில் சுருளியை விட்டு விட்டு மைனாவை தனது வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் சேது. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை.... அதனால் ஏற்பட்ட இழப்புக்களே கிளைமாக்ஸ்...

சுகுமாரின் ஒளிப்பதில் அந்த மலைக்கிராமமும் மலையும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. விதார்த், அமலா, சேது., தம்பி ராமையா என நால்வரும் மலையில் நடந்து செல்லும் போது கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.

அருமையான காதல் கதையை பசுமையான மலைப்பகுதியில் படம்பிடித்து இருக்கிறார்கள். நாயகனுக்கு உதவும் சிறுவன், படத்தின் கிளைமாக்ஸ், நாயகனின் பேச்சு வழக்கு, நடை பாவனை எல்லாம் பருத்தி வீரனை ஞாபகப்படுத்தினாலும் இடவேளைக்கு பிறகு வேகமெடுக்கும் கதை ஓட்டத்தில் பெரிதாக தெரியவில்லை.

'மைனா... மைனா...' , 'கையை கொடு...' பாடல்கள் மனதை வருடிச் செல்கின்றன. 'சிங்கி புங்கி...' பாடல் கிராமத்து இசையில் பாடல் வைக்க வேண்டும் என்ற தற்போதைய தமிழ் சினிமாவின் பார்முலாப்படி வந்திருந்தாலும் கேட்க நல்லாத்தான் இருக்கு.

குருவியை பறக்க விட முடியாமல் தவித்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் மைனா மூலம் உயரப் பறந்திருக்கிறார். இயக்குநர் பிரபு சாலமன் இதுவரை நல்ல படங்களைக் கொடுத்திருந்தாலும் கதை சொன்ன விதத்தில் தவறியிருப்பார். இந்த படத்தில் மூலம் சிறந்த கதையை சிறப்பான முறையில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் அவரையும் சிறப்பான இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது மைனா.

மைனா - உயரப் பறக்கும் ஊர்க்குருவி அல்ல... உற்சாகமாய் பறக்கும் பருந்து.-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

சொல்ல மறந்த கவிதைகள் - I


மனைவிக்கு தெரியும்

நம் காதல்...

உன்னை திருவிழாவில்

பார்க்கும்வரை

எதுவும் கேட்காதவள்...

ஒரக்கண்ணால்

உன்னைத்தேடிய என்னை..!

'என்ன மறக்கமுடியலையோ...'

என்கிறாள் கோபமாக...

என் வளைக்கரம்

உன் இரும்புப்பிடியில்

வலியில் நான் முனங்க...

காதல் வேகம் என்கிறாயே...

காமம் கலந்த பார்வையுடன்..!


உன் எச்சில்பட்ட

எல்லாம் எனக்கு ருசிதான்

என்றாய் என்னை

எச்சிலாக்கியபின்

ருசியை மாற்றியது ஏனோ..?-'பரிவை' சே.குமார்.

படங்களுக்கு friends18.com-க்கு நன்றி

ஞாயிறு, 14 நவம்பர், 2010

மழைநாளில் அம்மா..!


"என்ன தனக்கா... வாசல்ல நிண்டு யாரைப் பாத்துக்கிட்டிருக்கே..."

"இந்த பாண்டிப்பயல அவுக சின்னத்தா வூட்டு வரெக்கும் போயிட்டு வரச்சொன்னே. இன்னும் வரலை அதான் பாத்துக்கிட்டிருக்கே..."

"பாண்டி என்ன சின்னப்புள்ளையா... வந்திருங்க்கா... இதுக்குப் போயி பயப்படுறே."

"அடி பயப்படலைடி... வானங் கருத்துக்கிட்டு வருது... மழ வந்தா ஒதுங்கக்கூட இடமில்லை... எப்படி வாரனோ என்னவோ... தெரியலை..."

"நம்ம வாத்தியாரு வூட்ல போயி போன் பண்ணிப் பாக்கவண்டியதுதானே..."

"பாத்தாச்சி... அங்க போன் வேலை செய்யலை போலன்னு சொன்னுச்சு"

"அப்ப பேசாம இரு பாண்டி வந்திரும்... ஆத்தாடி தூத்தப் போட ஆரம்பிச்சிருச்சி... நான் வாரேங்கா.."

"எங்கடி மழயில போறே... "

"கிடையில ஆடு கிடந்துச்சு... அதை கொட்டயக்கில்ல அடச்சிட்டு வர போறேன்..." என்றபடி அவள் சேலையை குடையாக்கிக் கொண்டு ஓட 'சடச் சட'வென மழை பெரிதாகியது.

'இந்தப் பயலை இதுக்குத்தான் போகச் சொல்றதே இல்லை. சின்னத்தா வூட்டுக்குப் போனா வர மனசு வராது. இனி மழயில நனைஞ்சுக்கிட்டு வந்து காச்சல்ன்னு படுக்கப்போகுதோ என்னவோ' என்று புலம்பியபடி ஓட்டில் இருந்து வழியும் மழைத்தண்ணீரைப் பிடிக்க குடங்களை வரிசையாக வைக்கலானாள்.

அப்போது மின்சாரம் போக, 'பாயிவரப்பானுக லேசா மழ வந்துட்டா போதும் உடனே கரண்ட வெட்டிப்புடுவாங்க... இனி எப்ப வரப்போகுதோ தெரியலை... இன்னங்காணும் பாத்தியா இந்தப் பயலை... மழக்கு சின்னத்தா வூட்ல இருந்துட்டு வந்தாலும் பரவாயில்லை. கிளம்பிருச்சோ என்னவோ...' மனதுக்குள் மகன் மட்டுமே பிரதானமாய் இருந்தான்.

வாசலில் சைக்கிள் வரும் ஓசை கேட்க, வேகமாக எட்டிப்பார்த்தாள். பக்கத்து வீட்டு சோலை நனைந்து கொண்டே சென்றான், 'மாப்ள... உங்க மச்சானை அங்கிட்டுப் பார்த்தியலா...?' என்று கேட்டு வைத்தாள்.

"இல்ல அயித்தை... எங்க போச்சு...?" என்றான் சைக்கிளில் இருந்து இறங்காமல் காலை ஊனியபடி.

"சின்னத்தா வூட்டுக்குப் போனபய இன்னும் வரலை"

"மழைக்கு எங்கினயாவது நிக்கும்... வந்துடும்..."

"சரி நீ எதுக்கு நனையுறே... போயி நல்லா தலயத் தொவட்டுப்பா..."

"ம்..."


ன்னும் பாண்டி வரவில்லை... மின்சாரமும் வரவில்லை.

'பேய் மழ பெய்யுது... எங்க நிக்கிறானோ தெரியலை... மழ விட்டாலும் மறுபடியும் வாத்தியார் வூட்டுல போயி போன் பண்ணிப் பாக்கலாம்... விடாது போலயே.... சாயங்காலம் ஆச்சினா எங்கிட்டுக் கெடந்து வருமோ தெரியலை தண்ணியா கொட்டிட்டுப் போயிடுது. மழக்கு முன்னாடி வந்திடுடான்னு படிச்சுப் படிச்சு சொல்லிவிட்டேன் நாம சொல்றதே எங்க கேக்குது அது போக்குக்குத்தான் போகுது... ஆத்தி மழ இப்புடி பேயுதே...' என்று தனக்குத்தானே பேசியபடி சாக்கை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு லண்டியனை எடுத்துக் கொண்டு மாட்டுக் கசாலைக்குப் போனாள்.

மழை நீர் ஒழுததால் தொருத் தொருவென்றிருந்த கசாலைக்குள் மாடுகள் நகட்டி வைத்திருந்தன.

'சை... போன வருசம் கட்டினது அதுக்குள்ள மோடு ஒழுகுது... என்னதான் கட்டுறாங்களோ... காசு மட்டும் கறாரா கேக்கிறாங்க... மாடு நிக்க நல்ல இடம் இல்லை... மோடு கட்டணும் அதுல கை வச்சா ரெண்டாயிரம் வேணுமின்னு அவரு காதுல வாங்கிக்க மாட்டேங்கிராரு... பாவம் படுக்க எடமில்லாம நகட்டி வச்சிருக்குக...' என்றபடி வைக்கலை அள்ளிப்போட்டாள். மோந்து பார்த்துவிட்டு பேசாமல் நின்றன.

"ஏ... ஈரமா இருக்கோ... புல்லு வெட்டியாந்து போட்டா நல்லா சாப்பிடுவிய... அதுக்கும் மழ பேஞ்சு தரையெல்லாம் தண்ணி நிக்கயில எங்கிட்டு புல்லு வெட்டப் போறது... இன்னிக்கு இதுதான்... தின்னா தின்னுங்க இல்லன்னா கிடங்க..." என்றபடி கதவை மூடி கயிரால் கட்டிவிட்டுச் சென்றாள்.


ழை லேசாக விட்டது போல் தெரிய வீட்டைப் பூட்டிக் கொண்டு வாத்தியார் வீட்டை நோக்கி நடந்தாள்.

"வா... தனம்... என்ன இந்தப்பய இன்னும் வரலையா..." என்றாள் வாத்தியார் பொண்டாட்டி.

"ஆமா...அதான் ஒரு போன் போட்டுப் பாக்கலாமுன்னு..."

"சரி... என்னங்க... ராமக்கா வீட்டுக்கு போன் பண்ணி பாண்டிப்பய கிளம்பிட்டானான்னு கேளுங்க..."

போன் பண்ணிப் பார்த்த வாத்தியார், "போன் வேலை செய்யலைடி... நான் என்ன செய்ய.... ஆமா... அண்ணன் எங்க?"

"அவுக செட்டிய வூட்டு வேலையா மதுர வரைக்கும் போயிருக்காக... நாளைக்குத்தான் வருவாக..."

"சரி... வந்துடுவான்... எதுக்கு இப்ப பதட்டப்படுறீக... சின்னப்பயலா அவன்... மழை விட்டதும் அவன் வரலைன்னா நாம்ப்போயி ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்."

"சரிப்பா... நான் வாறேன்."

"மழை விட்டும் வரலைன்னா வாங்க..."

"ம்..."


'ந்தக் காளை எங்க நிக்குதோ... இந்த மழயில... இருட்டுக்குள்ள பயப்புடாம வரணுமே... ஆத்தா மாரி எம்புள்ளய பயப்புடாம கொண்டாந்து சேத்துரு... நாளைக்கு அவங்கையால செதறு தேங்காய் வாங்காய்ந்து ஒடக்கச் சொல்லுறேன்.' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

அடுத்த மழை ஆரம்பமானது. 'இந்த மழ ஓயாது போலயே... இப்புடி ஊத்துது. பாவம் மாடுக... இந்த மழக்கு தொருத்தொருன்னு கிடக்க கசாலையில படுக்கக்கூட முடியாது.... நாளைக்கு வெட்டருச்சா காளியானைக் கூப்பிட்டு மோட்டுல வக்கலயாச்சும் போட்டு ஒழுகாமச் செய்யணும். அறுப்புக்கு அப்புறம் பணவோலை வெட்டி கட்டிப்புடணும். ' என்று நினைக்கும் போது வந்த மின்சாரம் உடனே போக,

'அட எளவெடுத்தது... வந்திட்டு பொசுக்குன்னு போயிருச்சு... இனி வராது... எங்கயோ கருவ வாது விழுந்து கெடக்கு போல... நாளக்கிப் போயி பயலுக பாத்து வாதுகளை வெட்டி விட்டாங்கனாத்தான் வரும்...... இனி வாரது அப்புடி அப்புடித்தான்.'

மழை சோவென பெய்தது. 'ஆத்தி... இப்புடி அடிச்சுக்கிட்டு ஊத்துதே... இந்தப்பய எங்கயாவது ஒதுங்கியிருப்பானா...' தாய்மனம் எங்க சுற்றியும் மகன் மீதே வந்து நின்றது.

மழை விட்டது போல் தெரிய, வாசலில் நிழலாடியது. 'அப்பா... பாண்டி வந்துட்டான் போல...' என்று நினைத்தவள், "யாரு பாண்டியா" என்றபடி வாசலுக்கு வந்தாள்.

"ம்..."

"ஏய்ய்யா... இப்புடி நனஞ்சுக்கிட்டு வாரே..."

"என்ன பண்ண... சைக்கிள் பஞ்சராயிடுச்சு... நல்ல மழை வேற... வேற என்ன செய்யிறது..."

"உருட்டிக்கிட்டா வந்தே..."

"அப்புறம்... இந்தப் பக்கம் உங்கப்பனா கடை வச்சிருக்கான்... பாதியில இருந்து உருட்டிக்கிட்டுத்தான் வாரேன்."

"ஆத்தி... சுடுகாட்டுப் பாதையாவா வந்தே..."

"ம்... அதுக்கென்ன..."

"பயந்து கியந்து வைக்கலையே..."

"அம்மா... ஏம்மா... நான் ஒண்ணும் சின்னப்புள்ள இல்லை பயப்புட..."

"இல்லப்பா... நிறைய பேர அந்த கருப்பாயி..."

"அம்மா... நா பயப்புடாம வந்தாலும் நீயே பயமுறுத்திடுவே போல... என்னய தலைய தொவட்ட விடும்மா..."

"உனக்கென்ன தெரியும்... "

"எனக்கு ஒண்ணும் தெரிய வேணாம்... ஆத்தா கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இரு..." என்றபடி டிரஸ்ஸை கழட்டி பிழிந்து காயப் போட்டுவிட்டு தலையைத் தொடைத்துக் கொண்டிருந்தான்.

"என்ன தனக்கா தம்பி வந்துட்டானா..."

"ம்... இப்பத்தான் வந்தான்... ஆமா.. நீ மழக்கு முன்னால ஆடடைக்கப் போனவதானே... இப்பத்தான் வாறியா..."

"ஆமா... சாயந்தரத்துல இருந்து பறந்துட்டியே... "

"ஆமா... பேய் மழ பெய்யுது... என்ன பண்றானோன்னு பதட்டமில்லாம இருக்குமா... அதுசரி இவ்வளவு நேரம் என்னடி பண்ணினே..."

"அது உங்கொழுந்தன் வந்தாக... ரெண்டு பேருமா வாறோம்..."

"சரி.. சரி..." என்று நக்கலாய் சிரித்தவள், "ஏய்ய்யா... கொடய புடிச்சுக்கிட்டு வாத்தியார் சித்தப்பா வூட்டு வரைக்கும் பொயிட்டு நான் இப்பத்தான் வந்தேன்னு சொல்லிட்டு வாய்ய்யா."

"அங்க போன் பண்ணப் போனியா... சித்தப்பா வரும்போது பாத்து ஆத்தா தவிச்சிப் போயிடுச்சுன்னு சத்தம் போட்டாரு... சைக்கிள் பஞ்சருன்னதும் ஒண்ணும் சொல்லலை." என்றவன் "பசிக்குது சாப்பாட போடும்மா" என்றான்.

"சரி வா"

தொண்டையை செருமிக் கொண்டே வந்த பாண்டி 'அஸ்க்' என்று தும்ம, "ஆத்தி... சளி புடிச்சிடுச்சா... சாப்பிட்டு கசாயம் வச்சித் தாரேன். குடிச்சிட்டு படு..." 

"அம்மா ஆரம்பிச்சிட்டியா... சரி... குடிக்கிறேன்.."

"இரு வாரேன்... இங்கிட்டு திரும்பு... மாரி, முனீஸ்வரா, கருப்பா எம்புள்ள மேலுகாலு சுகத்தோட இருக்கணும்... எங்கயும் பயந்திருந்தாலும் எல்லாம் விட்டு விலகிப் போகணும்" என்றபடி அவன் நெற்றியில் துனூறைப் பூச, போயிருந்த மின்சாரம் வந்தது. அவன் வரும்வரை அவள் பட்ட வேதனையும் மகனின் மீதான அதீத பாசமும் அந்த தாயின் நனைந்த கண்களுக்குள் தெரிய, அவனை அறியாமல் கண்கள் குளமாகின.

-'பரிவை' சே.குமார்.


படம் எடுத்தது http://www.mazhalaigal.com-ல்... படம் அருளிய கூகிளுக்கு நன்றி.