மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 மார்ச், 2013

முட்டாள் தினமல்ல...




ஏப்ரல் முதல் நாள் முட்டாள்களின் தினம்  என்பது நாம் வகுத்த ஒன்று. இது முட்டாள்களின் தினமல்ல... முட்டாளாக்க நினைப்பவர்களின் தினம். இது முட்டாளாக்க நினைப்பவர்களின் தினம் என்பதெல்லாம் தெரிந்தாலும் நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாடிய தினம்தான் இந்த ஏபரல் முதல் தேதி.... நிறைய பேரை முட்டாளாக்கி... நிறைய பேரால் முட்டாளாகி... இப்படி சந்தோஷித்த தினம்தான் இந்த நாள்.

படிக்கும் காலத்தில் இந்த நாள் ஒரு இனிய அனுபவத்தைக் கொடுக்கும் நாள்... பள்ளிப் பருவத்தில் கூட பேனா மையில் கொட்டைச் செடியின் சாறை கலந்து அடித்து மகிழ்ந்து சந்தோஷப்பட்ட நாளாகத்தான் இருந்தது.

கல்லூரி நாட்களில் இந்த நாளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பேனா மை எல்லாம் சரி வருவது இல்லை. ரீகல் சொட்டு நீலப் பாட்டில்தான்... மொத்தமாக வாங்கிவிடுவோம்... மாடியில் நின்று கொண்டு கீழே போவோர் வருவோருக்கெல்லாம் நீள அபிஷேகம்தான். 

நண்பன் இளையராஜா உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஆம்புலன்ஸ் என்று எப்படி மாற்றி எழுதியிருப்பார்களோ அதுபோல் 'AF' என்று திருப்பி  அழகாக கட் பண்ணி கொண்டு வந்து  நீலத்தில் நனைத்து எல்லாருடைய முதுகிலும் ஸ்டிக்கர் போல வைத்து விடுவான்.

எனது பங்காளி ஆதியோ முதல்வருக்கு இங்க் அடிப்பதில்தான் அதிக முனைப்பு காண்பிப்பான்.  எங்கள் முதல்வர் திரு.பழனியப்பன் அவர்கள் மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டு மாணவிகள் மீது மை அடிப்பதை பார்த்து கத்திக் கொண்டே விரட்டிக் கொன்டு போவார். மாடியில் நின்று கொண்டு அவர் அவனுக்கு நேராக வரும் போது உஜாலாவில் குளிப்பாட்டிவிட்டு ஓடிவிடுவான். அவர் கத்திக் கொண்டே இருப்பார். நாங்கள் வேறு பக்கமாக இறங்கி மைதானத்தில் போய் விசில் அடித்து உற்சாகத்தில் திளைப்போம்.

அந்த சந்தோஷமான நாள்... நாளை... படிக்கும் போது அது தவறாக தெரியவில்லை... இந்த நாளில் நினைக்கும் போது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் நண்பர்களின் முகங்கள் மனசுக்குள் வந்து அவர்களைப் பற்றிய நினைவுகளை மனசுக்குள் இறக்கிச் செல்கிறது.


இந்நாள் குறித்து தமிழ் விக்னசரியில் தேடியபோது...

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் முதல் நாளே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.


முட்டாள் தினமல்ல இது..
நமது வாழ்க்கைப் பாதையில் இதுவும்
கடந்து போகும் ஒரு நாளே...

-'பரிவை' சே.குமார்.

சனி, 30 மார்ச், 2013

மனசின் பக்கம் - கொஞ்சம்... கொஞ்சம்...



மனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு... அதான் இன்று கொஞ்சம் எழுதலாமே என்று நினைத்து அமர்ந்தால் காலையில் இருந்து சோர்விலேயே நாள் ஓடிவிட்டது.  எப்படியும் எழுதணும் என்று ஆறு மணிக்கு ஆரம்பித்து அப்படியிப்படி என இரவு 11 மணிக்கு முடித்து அப்பவே பதிவாக பதிந்தாச்சு... அப்பாடா ...

கொஞ்சம் அரசியல்:

*சோனியாவின் பாசமலர் ஞானதேசிகனின் தூண்டுதல் மற்றும் துணையோடு மாணவர்களைத் தாக்கிய காங்கிரஸார் ஐம்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி படித்த போது சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் இனத்துரோகிகளான இவனுகளை உள்ள தூக்கிப் போட்டு முட்டிக்கி முட்டி தட்டினால் சந்தோஷம் இரட்டிப்பாகும்.


*காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற வாசனின் கோரிக்கையை ஏற்க முடியாதாம். அதை பிரதமர் மட்டுமே முடிவு செய்ய வேண்டுமாம்... இதை சில நாட்களாக அதிகமாக கூவிவரும் நரகல்... மன்னிக்கவும் நாராயணசாமி சொல்லியிருக்கிறார். இந்த சாமிக்கும் அந்த சாமிக்கும் ஒரு நாளைக்கு கவனிப்பு செஞ்சா எல்லாம் சரியாகும் போல.

*முதல்வரை செருப்பைக் கழட்டிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் வாருங்கள் என்று சொன்ன மருத்துவரை (பேரு கருணாநிதியாம்.... இதுக்காகவே இருக்குமோ என்னவோ...) இரவு அவசரமாக கைது செய்து... நீதிபதி முன்பு நிறுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்... வாழ்க அம்மாவின் ஆ(ட்)சி.

*சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாது என்ற முதல்வரின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ள போதும் சென்னையில் விளையாடவில்லை என்றால் கேரளாவில் நடத்தலாம் என்று உம்மன்சாண்டி சொல்லியிருக்கிறார். கூடங்குளம் மின்சாரம் உனக்கு வேணுமில்ல எங்களுக்கு கூடங்குளம் வேண்டாம் அதையும் நீ அங்கயே கொண்டு போயிக்க உம்முனசாண்டி.


கொஞ்சம் சினிமா:

*பாலாவின் பரதேசி குறித்து சைக்கோ எடுத்தபடம், ஜாதி வெறியனின் படம், கதாநாயகனை அரைவேக்காடாய் காட்டும் அற்பனின் படம், நாயகிகளை கரி பூசி நடிக்க வைக்கும் ஒருவனின் படம் என இன்னும் நிறைய விமர்சனங்களைப் படித்தாச்சு... எப்படி இருந்தாலும் பாலா என்ற ஒரு திறமைசாலியால் மட்டுமே ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாகத் தரமுடியும் என்று நிரூபித்த படம். மேலும் அப்படிப் படம் எடுத்தேன்... இப்படிப் படம் எடுத்தேன்... 90 கோடி போட்டேன்... 200 கோடி போட்டேன்... என்றெல்லாம் உதார்விட்டு சம்பாதிப்பதற்காக படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒரு நாவலை தன் பாணியில் மிக அழகாக தந்திருக்கிறார்.  அதற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

*ஆச்சர்யங்கள் என்றொரு படம்... நல்ல கதை... கொஞ்சம் வித்தியாசமாய் போனது... நாயகனாக  நடித்தவர் நடிக்கவேயில்லை என்பதால் மொக்கையாகிவிட்டது. 

*கருணாஸின் சந்தமாமா, மனைவியை காதலிக்க வைத்து கதை எழுதுகிறாராம். படத்தில் பெண்கள் பற்றிய கேவலமான வசங்கள் வேறு... எல்லாவற்றிற்கும் போராட்டம் செய்வோம்... இதையெல்லாம் கண்டுக்க மாட்டோம்...

*தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் காதலைச் சொல்ல நல்ல வசனங்கள் பஞ்சம் போலிருக்கிறது. நான் பார்த்த சிலபடங்களில் நாயகன் நாயகி பார்த்த முதல் காட்சியிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இருவருமே சுற்றம் பார்ப்பதில்லை. 


*வத்திக்குச்சியில் முருகதாஸின் தம்பிக்குப் பதில் வேறுயாராவது நடித்திருந்தால் கொஞ்சமாவது பத்தியிக்கும் போல. அஞ்சலி வழக்கம் போல அலட்டல் இல்லாத நடிப்பு... தயாரிப்பாளர் பக்கம் என்ன பஞ்சமோ தெரியலை அஞ்சலிக்கான உடைகள் கேவலமாக இருந்தது.

*கருப்பம்பட்டி என்ற ஒரு படம் லாஜிக்கே பாக்கக்கூடாது.... ரொம்ப போரா இருந்த ரெண்டு மணி நேரத்தை இப்படிப்பட்ட படங்களில் செலவழிக்கலாம்... எப்படியெடுத்தாலும் பார்ப்பார்கள் என்பதற்கு இது போன்ற படங்கள் உதாரணம்.

கொஞ்சம் வருத்தம்:

என்னுடன் சென்னையில் பணிபுரிந்த நண்பர் தண்ணியடித்துவிட்டு வண்டியில் போய் விபத்துக்குள்ளாகி யாரென்று தெரியாமலே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவரது அடையாள அட்டை மூலமாக அலுவலகத்துக்கு செய்தி சொல்லி அவர்கள் அங்கு பணியில் இருக்கும் எனது நண்பனுக்கு விவரம் தெரிவிக்க, அதன்பின் உறவுகளுக்கு தெரிவித்து ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்து ஆறு லட்சங்களை கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

இப்போ சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தாச்சு... ஆனால் அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்... சின்னபிள்ளையாக இருக்கிறாராம்... ஊட்டிவிட்டால் சாப்பிடுவாராம்... அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்... தண்ணியால் இன்று அவர் தன்னிலை மறந்து கிடக்கிறாராம்.. மருத்துவர்கள் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம்... அவர் நிலை குறித்து நண்பன் ஒரு மணி நேரத்துக்கு மேல் புலம்பியிருக்கிறான். பாவம் அந்தக் குழந்தைகளுக்காகவாவது அவர் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும்...

கொஞ்சம் நட்புக்காக:

எனது நண்பன் தமிழ்காதலன், காயத்ரி அக்கா, தங்கை அனிதாராஜ் மூவரும் நிர்வகிக்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூலமாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் நூலகம் ஒன்றை கட்டி வருகிறார்கள். இப்பொழுது நூலகத்திற்காக பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Cover Photo

நூல்கள் வழங்க விருப்பம் உடையவர்கள் அரிய வகைத் தமிழ் நூல்களான சங்க இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஓலைச்சுவடி, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற நூல்களை வழங்கலாம். மேலும் கணினி, அலமாரிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்க நினைத்தால் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கான முகநூல் விலாசம் கீழே...

தமிழ்க்காதலன்                   : https://www.facebook.com/thamizhkkaathalan
அனிதாராஜ்                               : https://www.facebook.com/AnithaRaj.2701
காயத்ரி வைத்தியநாதன்  : https://www.facebook.com/kayathrivaithyanathan


கொஞ்சம் மனசுக்காக:

ஒரு தொடர்கதை எழுதலாம் என்று நினைத்து முதல் பகுதியும் எழுதி அப்படியே கிடப்பில் கிடக்கு... இன்று பதியலாம் என்று நினைத்த போது என் நண்பனின் கைவண்ணத்தில் படங்கள் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்பதால் அவனிடம் பேசினேன்... அவனுக்கு அலுவலக வேலைகள் அதிகம்... அதனால் அடுத்த வெள்ளிக்குள் தருகிறேன் என்றான். என் நண்பன் வரையும் படங்களுடன் அடுத்த வெள்ளி அல்லது சனி ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம்... 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 29 மார்ச், 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்


ம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கும் நடுவில் கிழிகின்றன நாட்கள்!
புதிய கீர்த்தனா ஒருத்தி, நம்பிக்கையின் இசையால் என் இரவுகளை நிறைக்கிறாள் இப்போது. இவள் என் வாழ்க்கைக்குள் வருவாள் என நான் நம்பியதே இல்லை. 10 வருடங்கள் பழகிய பிறகு எங்கோ தூர தேசம் போய்விட்டவள் இப்போது திரும்பக் கிடைத்திருக்கிறாள். நான் பரிசாகக் கொடுத்த பறவையை ''வேணாம்... எடுத்துட்டுப் போயிருங்க...'' எனத் திருப்பிக் கொடுத்தவள். ''போன் எல்லாம் பண்ணாதீங்க... டார்ச்சரா இருக்கு...'' எனக் கொந்தளித்தவள். முன்பு ஃபேஸ்புக்கில்கூட என்னை நிராகரித்தவள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறாள், நம்பிக்கையின் சிறு வெளிச்சத்தைக் கண்களாக்கிக்கொண்டு. ''எப்பவுமே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக ஈஈஈன்னு இளிப்பாங்களா? பொண்ணுங்களுக்கு செக்யூரிட்டி ரொம்ப முக்கியம்ப்பா...'' என அவள் சொன்னபோது, காலத்தின் மீதான என் நம்பிக்கை கூடியது.
அன்பின் மீது நாம் வைத்திருக்கும் ஆழ்மன நம்பிக்கைகள் பொய்ப்பதே இல்லை. பேசாதிருப்பினும், பிரிந்திருப்பினும் அந்த நம்பிக்கை அரூபமாக நம்மைப் பின்தொடர்கின்றன. கடலேறிப்போன மீனவக் கணவன் திரும்பக் காத்திருக்கும் அக்காக்களின் விழிகள்... சாம்பலாகிவிட்ட காதல் கிழவனின் மோட்சத்துக்காக அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போய்க்கொண்டிருக்கும் முதுகிழவியின் பிரியம்... கடைசி வரை அப்பாவின் சத்தியங்களை நம்பிய அம்மாவின் இதயம்... கேள்விப்பட்ட ஒரு சொல்லை 'நீ சொன்னியா..?’ என நண்பனிடம் சாகும் வரை கேட்காத ஒரு நட்பு... சவுதி பாலைவனத்தில் அவனும் ஒரத்தநாடு வயக்காட்டில் அவளுமாக உழன்று, மாசத்துக்கு ஒரு போன் பண்ணிக்கொண்டு குடும்பத்துக்காக வாழும் நேசம்... 'அவன் பண்ணிருவாம்பா...’ என்கிற குருவின் வார்த்தைகள்... அன்பின் நம்பிக்கைக்கு உதடுகளோ, கண் களோ தேவை இல்லை என்பதை அறிக. காலமும் கோலமும் தடையில்லை என்பதை உணர்க!
நம்பியதை நிகழ்த்துவதில்தான் இந்த வாழ்க்கைக்கான அர்த்தமே இருக்கிறது. கண் முன்னே ஈழத்தில் லட்சம் சகோதர உயிர்களைப் பலிகொடுத்தோம். தாங்க முடியாத இன அழிப்புக் கொலைகளைக் கண்டோம். பிரபாகரனின் சேறு பூசிய உடலை டி.வி-யில் பார்த்தோம். உலகம் காணாத பேரதிர்ச்சிக் காட்சிகள், நமது தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு நடந்ததை
வேடிக்கை பார்த்தோம். எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானுட அறத்துக்காக இப்போதும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்களே... அதுதான் நம்பிக்கை!
 (ஓவியம்: ஹாசிப்கான்)
தனிமனித அவநம்பிக்கை களைக் கண்டு இந்த நம்பிக்கைகள் நகைக்கின்றன. விடிவோம் என்ற நம்பிக்கை யில்தான் இருள்கிறது ஆகாயம். பாதி அழுகிவிட்ட கை கால்களில் புதுத் துணி யைச் சுற்றிக்கொண்டு அடி வாரத்துக்கு அதிகாலையில் வந்து உட்கார்ந்துவிட்டார் அந்தக் கிழவர்... சுனாமி குடியிருப்பின் மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆலயம்மன் கோயிலுக்குப் போன வாரம்தான் கும்பாபிஷேகம் நடந்தது... கழுத்துக்குக் கீழே எதுவும் செயல்படாத சேலம் சகோதரிகள் கண்டுபிடித்த தமிழ் மென்பொருள் இப்போது நமது கணினிகளில் கண் சிமிட்டுகின்றன... யாரோ ஒரு பொறுக்கியால் ஆசிட் அடிக்கப்பட்ட பெண் சிதைந்த முகத்தோடு செங்கல் பட்டு மொட்டை மாடியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்திக்கொண்டுஇருக்கிறாள். ''புதுசா ஒரு லைன் பிடிச்சேன்... ட்ரெண்டியா சிக்கிருச்சு. எஃப்.பில ஆரம்பிக்கிற ஒரு லவ்... என்னெல்லாம் பண்ணுதுனு ஒரு த்ரில்லர் சொல்றேன்...'' என அறுபது வயதில் இன்னும் முதல் பட முயற்சியில் அலையும் இணை இயக்குநர் அண்ணன், ''இல்ல தம்பி... எங்காலம் வரைக்கும் இந்த நெலத்துல நான் வெதைச்சு அறுத்துக்கறேன். நா போன பொறவு வித்துக்க... வூடு கட்டிக்க... நா இருக்கற வரைக்கும் வெவசாயத்த விட முடியாது...'' என இப்போதும் நிலத்தோடு மல்லுக் கட்டும் பெரியப்பா, ''இப்போதான் தங்கச்சி கல்யாணத்த முடிச்சேன்... இனிமேதான் எனக்குப் பாக்கணும்...'' என சொட்டை தடவும் சகோ, 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சோர்வடையா இரோம் ஷர்மியின் இமைகள், சதா ராணுவம் திரியும் செர்பிய எல்லையின் கோதுமை வயலில் குருவிகள் விரட்டும் ஒரு சிறுமி... நம்பிக்கைகளை அடைவதில் அல்ல, நிகழ்த்துவதில்தான் இருக்கிறது இந்த வாழ்க்கை!
எதையேனும் யாரையேனும் நம்பிப் பற்றிக்கொள்வதில்தானே பிழைத்திருக்கிறது பலரின் உலகம். கோயில்களும், மசூதிகளும், தேவாலயங் களும் நம்பிக்கையின் பிரார்த்தனைகளால் நிறைந்துகிடக்கின்றன. அதிமுக்கியமான வேலை களுக்குப் போகும்போதெல்லாம் மஞ்சள் கோடுபோட்ட சட்டையைப் போட்டுப்போவார் சித்தப்பா. ரெண்டாவது பிள்ளை பிறந்த பிறகு தான் வீட்டுக்குள் செல்வம் வந்ததாக இப்போதும் நம்புகிறார் வராகன். வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் வாசலில் நாலணா சுண்டி விட்டுப் போவார் சௌந்தரபாண்டி மாமா. பேரன், பேத்திகளுக்குத் திருஷ்டி சுற்றிய பட்ட மிளகாயைச் சந்திக்கரையில் கொட்டிவிட்டுப் போகிறது அம்சத்தா. செத்துப்போன பிரியப்பட்டவர்கள் காக்கைகளாகி வருவதாகக் காத்திருக்கின்றன அமாவாசை மதியங்கள். அக்காக் குருவிகள் அழுதால் வசந்தம் வரப் போவதாக நம்புகிறது ஊர். ஒரே வெட்டில் ஆட்டின் தலை உருள வேண்டுகிறது ஜனம். தாய்ப் பிள்ளைக்காரி வந்து பொட்டிடக் காத்திருக்கிறது புதுவீட்டு வாசலில் கன்றுக்குட்டி. முதல் கொத்து நாத்துவிட, கலியன்தான் எடுத்துத்தர வேண்டும் அப்பாவுக்கு. முதல் அறுப்பு அறுக்க, அம்மா வர வேண்டும். முதல்முறை வாங்கிய பழைய பிளைமவுத்தை இப்போதும் வாசலில் போட்டு வைத்திருக்கிறார் துரைசிங்கம் தாத்தா... அவரவர்க் கான நம்பிக்கைகளில் லாஜிக் எல்லாம் இல்லை. அது மனதின் தேவைகள். தீ மிதித்துக் கொப் புளித்த கால்கள், கசையடித்து எரியும் தசைகள், ஆணியில் ரத்தம் பெருகும் பிரார்த்தனை என மனித நம்பிக்கைகளின் முட்டாள்தனமும் இயலாமையும் கடவுளின் குரூரமெனக் கொள்க!
''அடேய் முட்டகோஸு... நம்பிக்கைத் துரோகம்கற வார்த்தையே தப்பு. நம்பிக்கைல துரோகம் எப்பிடிறா வரும்..? நம்பிக்கை தனி... துரோகம் தனி... ரெண்டையும் சேக்காதீங்கடா...'' எனச் சிரித்த திருநாவுக்கரசு அண்ணனின் முகம் இப்போதும் அச்சடிக்கிறது மனதில். ஒரு மதியம் திருநாவுக்கரசு அண்ணனின் மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனார். மறுநாள்தான் அண்ணனுக்குத் தெரிந்தது. நாங்கள் போனபோது ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார். சாதி சனம் வந்து போலீஸ் புகாருக்குக் கூப்பிட்டது. சிலர் காரெடுத்து வந்து நின்றார்கள். ''அவனைப் பொலி போட்ருவோம்...'' எனக் கதறினார்கள். அண்ணன் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. ''போங்கப்பா... எம் பொண் டாட்டிதான ஓடிப்போனா... நா பாத்துக்கறேன். யாரும் ஒண்ணும் புடுங்க வேணாம்... கௌம்புங்க...'' என்றார். அந்தக்கா ஓடிப்போனது பக்கத்து ஊர் கார் டிரைவருடன். அடுத்த ரெண்டாவது நாள் அந்த கார் டிரைவருடன் கல்யாணமாகி வந்து நின்றது அக்கா. ''இனிமே ஒண்ணும் சம்பந்தம்இல்லனு எழுதிக் குடுத்துருங்க. நாங்க போயிர்றோம்...'' என்றார் அந்த டிரைவர். அவர்களை அடித்துப் பிரிக்கத் திரண்டது கும்பல். எல்லோரையும் அடக்கிவிட்டுக் கிடுகிடுவென எழுதித் தந்தார் அண்ணன். கொடுக்கும்போது அந்த அக்காவிடம், ''என்ட்ட சொல்லிருக்கலாம்ல... மொரப்படி டைவர்ஸ் குடுத்துருப்பேன். எதுக்கு இந்த அசிங்கம்லாம் கேக்கணும். போ... நம்புனவனோட நல்லாரு'' என்றார் சலனம் இல்லாத கண்களோடு. அன்றைக்கு இரவு குடிக்கும்போது தான் மேலே சொன்ன டயலாக்கைச் சிரித்தபடி சொன்னார். அந்தச் சிரிப்பு அவ்வளவு உண்மையாக இருந்தது. ஆமாம்... நம்பிக்கையில் ஏது துரோகம்?
ஒருநாள் நம்பிக்கையோடும் மறுநாளே அவநம்பிக்கையோடும் ஊஞ்சலாடும் மனசு. இது ஒரு மாயம். எப்போதும் சமநிலையில் இருக்கும் மனதை எவ்வளவு காலமாக யாசிக்கிறேன். ராஜாவின் ஓர் இசைத் துணுக்கில், ரமணரின் ஒரு புன்னகையில், பிரபாகரனின் ஒரு புகைப்படத்தில், குரோசோவாவின் ஒரு ஃப்ரேமில், அழகிய பெரியவனின் ஒரு கவிதையில், இமையத்தின் ஒரு கதையில், யாரோ எழுதிய ஒரு ட்விட்டர் வரியில், பயண வழிக் காட்சியில், போய் நின்ற ஒரு போராட்டத்தில், தோழர், தோழிகளின் ஒரு வார்த்தையில், யாரோ ஒருவரின் வாழ்த்தில், யாருக்கோ செய்துவிட்ட ஒரு செயலில், ஒவ்வொரு முறையும் தழைக்கிறது நம்பிக்கை. ஒவ்வொரு மனதையும் மீட்டெடுக்க ஆயிரமாயிரம் இதயங்கள் இருக்கின்றன இவ்வுலகில் என்பதுதான் ஆகப்பெரிய நம்பிக்கை.
நான் தளர்வுறும் பல தருணங்களில் ஜெயகாந்தனின் 'அம்மா நான் இருக்கிறேன்’ கதையை மறுபடி மறுபடி படிப்பேன். ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்துவருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் விழுந்துவிடுவான். ரயில் வருகிற நேரம் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரன், அந்த இளைஞனைக் காப்பாற்றிவிடுவான். பக்கத்தில் இருக்கும் ஒரு கல்மண்ட பத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞ னிடம் சொல்வான், 'நான் எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... அன்னிக்கு ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கு என்னையப் பாக்க. நானே உயிரோட இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்... உனக்கெல்லாம் என்ன தங்கம்...’ எனப் பேசி அந்த இளைஞனின் நம்பிக்கையைத் தூண்டி விடுவான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு அவன் தூங்குவான். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப் பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடிவருவாள் அவன் அம்மா. 'அம்மா... நான் இருக்கிறேன் அம்மா...’ என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருவான். அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடப்பான். இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் 'இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே...’ என யோசித்து தண்டவாளத்தில் குதித்திருப்பான். செத்துப்போன அவனைப் பார்த்தபடி அந்த இளைஞன் சொல்வான், 'அம்மா... அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்!’
நாம் நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத்தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை யின் அர்த்தம்!

நன்றி : ராஜுமுருகன், ஆனந்த விகடன்
-'பரிவை' சே.குமார்

கிளியே... கிளியே... கிளியக்கா..!


சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த (எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில்) பாரதி சாலையிலிருக்கும் ஒரு வீட்டின் மொட்டை மாடி. அந்த வழியே நடந்து போகின்றவர்களின் கண்களும் வாகனங்களில் பறப்பவர்களின் கண்களும் ஒரு விநாடி அந்த வீட்டின் மொட்டை மாடியை ஆச்சரியத்துடன் பார்த்துப் பரவசமாகின்றன. அவர்கள் அங்கே காணும் காட்சி... கூட்டம் கூட்டமாக பச்சைக் கிளிகளின் கும்மாளம்தான்!

சற்று அருகே சென்று ஊன்றிப் பார்த்தால் மதில்சுவரின் மேல் அணில்களும் புறாக்களும் காகங்களும் கூட காணப்படுகின்றன. வாகனங்கள் எழுப்பும் "ஹாரன்' ஒலிகளால் பயந்துபோய் பறப்பதும் மீண்டும் அங்கே அமர்வதுமாய் இருக்கின்றன கிளிகள். அந்தப் பகுதியில் நடப்பவர்களில் பலர் தங்களின் செல்போனின் மூலம் படம் பிடிக்கின்றனர். சிலர் கற்களை எடுத்துவீச, அவர்களை மேலிருந்து ஒரு குரல் அன்போடு.... ஆனால் கண்டிப்பாக தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், கேமரா மெக்கானிக் சி.சேகர். கடந்த 36 ஆண்டுகளாக கைவிடப்பட்ட கேமராக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த மெக்கானிக் சேகர். புகைப்படத் துறையில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது.
`
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலை 4 முதல் 6-30 மணிவரை இவர் யாரையும் சந்திப்பதில்லை. எந்த வேலையையும் பார்ப்பதில்லை. இவரின் தினசரி இரண்டரை மணிநேரப் பொழுது இந்தப் பறவைகளுடன்தான் கழிகிறது.

இது குறித்து அவரிடம் பேசியபோது...

""கோடைக்காலத்தில் மனிதர்களுக்கு நாவறண்டு போவதைப் போல பறவைகளுக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அவை யாரிடம் போய் தண்ணீர் கேட்கும்? இந்த யோசனை எனக்கு இருந்ததால், வாளியில் தண்ணீர் கொண்டுவைப்பதை நான் பல ஆண்டுகளாகச் செய்துவந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், வீட்டிற்குள் கேமரா சர்வீஸ் செய்துகொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் மதில் சுவரின் மேல் பார்த்தபோது, அவை உணவுக்கு ஏங்குவதை அறிய முடிந்தது. அன்றிலிருந்து கிளிகளுக்கு ஏற்ற தானியங்களைப் கொடுப்பதென்று முடிவுசெய்தேன். இதற்கென்றே பாரிமுனை, கோழிமார்க்கெட் பகுதிக்குச் சென்று தினை, நவதானியங்கள், பொட்டுகடலை, அரிசி போன்றவற்றை வாங்கி வந்து நாளுக்கு ஒன்றாக ஊறவைத்துப் போடுவேன்.

நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ முதல் எட்டு கிலோ வரை தானியங்கள் செலவாகும். ஒரே தானியத்தை தினமும் போடுவதை விட நாளுக்கு ஒரு தானியம் போடுவதை வழக்கமாகக் கொண்டேன். இதனால் பச்சைக் கிளிகள், அணில்கள், காகங்கள், புறாக்கள் எனப் பல உயிரினங்களும் பசியாறுகின்றன. அதைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. இதனால் அந்த நேரத்தில் யாரையும் நான் சந்திப்பதைத் தவிர்க்கிறேன். என்னைப் பார்க்க வருபவர்களின் சத்தத்தால் அந்தப் பறவைகளின் அமைதி குலைகிறது. அதனால் என்னுடைய வாடிக்கையாளர்களைக் கூட அந்த நேரத்தில் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

தினம் சிலமணிநேரங்களை அந்தப் பறவைகளுக்காகச் செலவிடுவதில் என்னுடைய வருவாய் கணிசமாகக் குறையும்தான்; ஆனால் மன நிம்மதி கூடும்!'' என்கிறார் பறவைகளுக்கு படியளிக்கும் கேமரா மெக்கானிக் சேகர்.

நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்

வியாழன், 28 மார்ச், 2013

நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா




வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா. 

ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை. ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. 

இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை. அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான். 

இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார். "விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ? 


என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. 

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்? எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது.

 என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை. நெத்தியடி பதில்!

-நன்றி : தமிழ் இணையம்

-'பரிவை' சே.குமார்

புதன், 27 மார்ச், 2013

'நயன்தாராவை விரும்புகிறேனா?' - ஆர்யா.



இன்றைய செய்தி :

சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்.

சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது.

இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது," என்றார்.



இரண்டு நாட்களுக்கு முன் வந்த செய்தி:


 நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ள நிலையில், நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? என ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது `வலை', ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள்.

பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது. அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். எனவே, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, 'எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர். எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார். மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்' என ஆர்யா கூறினார்.

சிம்பு, பிரபுதேவா வரிசையில் ஆர்யாவும் சேர்வாரா... இல்லை விரைவில் கெட்டிமேளம் கொட்டுவார்களா... சந்தைக்கு வந்தாச்சு எப்படியும் கடைவிரிக்காமலா போகப் போகிறார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்...

நன்றி : தமிழ் இணையங்கள்...

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 26 மார்ச், 2013

குடும்பத்தை ஒதுக்கி வையுங்கள்: கருணாநிதிக்கு அன்பழகன் கோரிக்கை




நேற்று கூடிய திமுக செயற்குழுக் கூட்டம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை. தொண்டை வலி என்ற காரணம் கூறப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தனது பேச்சை, கழகத்தின் நிரந்தரத் தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தொடங்கி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

குறைந்த நேரம் மட்டுமே பேசிய அவர் கூறுகையில், பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்காக சில நேரங்களில் பொறுத்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காகவோ உறவு கொள்வதில்லை. ஒரு முறை கலைஞரும், நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். 

அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் மிகவும் கோபமாக உள்ளே வந்தார். என்ன நடக்கிறது இங்கே? என்று தொடங்கிய அவர், கனிமொழியிடம் சிபிஐ விசாரணை செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். மேலே தயாளு அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவு துணிச்சலையும் யார் கொடுத்தது?. மத்தியில் ஆட்சி என்றால் நாமும் சேர்ந்துதானே ஆட்சி. இனியும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?. வெளியே வந்துவிடுவோம். தேர்தலையும் தனியாக சந்திப்போம். இந்த அவமானத்தை தாங்கியது போதும் என்று கூறியபடியே கண் கலங்கிவிட்டார். 

சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீடு என்பது நாம் எதிர்க்கும் ஒரு கொள்கை என்றாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்ற ஒரே நோக்கத்திற்காக மத்திய அரசுக்கு நாம் ஆதரவு தந்தோம். ஆட்சி கவிழ்ந்து மதவாத பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மனம் வருந்தி ஓட்டு போட்டோமே தவிர சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக அல்ல. 

இப்படி பல சம்பவங்களில் நமக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்பதற்காக ஆதரவு தெரிவித்து வந்தோம். ஆனால், இப்போது இலங்கை தமிழர் பிரச்சனை என்பது நமது உயிரோடு கலந்தது. 

1956ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது. நமது போராட்டத்தின் உச்சக்கட்டம் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுதான். இலங்கை தமிழர் பிரச்சனைக்காகத்தான் கலைஞரும், நானும், மற்றவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. 

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இருமுறை ஆட்சியையே இழந்து இருக்கிறோம். இங்கே கலைஞர் உடலும், மனமும் உடைந்து அமர்ந்திருக்கிறார். உள்ளத்தால் நொந்து உட்கார்ந்து இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை. 

எனக்கும் இருமலும், சளியும் இருக்கிறது. ஆனால் உங்களை எல்லாம் பார்த்த உடன் எல்லாவற்றையும் மறந்து பேசுகிறேன். 

நான் கலைஞரிடம் கூறுவது, அண்ணன் என்ன... தம்பி என்ன... மாமன் என்ன... மச்சான் என்ன... எவராக இருந்தாலும் ஒதுக்கி விடுங்கள். உங்களோடு லட்சோப லட்ச கழக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார் அன்பழகன். 

இதன்மூலம் கட்சியைக் காப்பாற்ற குடும்பத்தை ஒதுக்கி வையுங்கள் என்ற கருத்தையே அன்பழகன் முன் வைத்ததாகக் கருதப்படுகிறது.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

திங்கள், 25 மார்ச், 2013

திமுக செயற்குழு - அழகிரி, நெப்போலியன் ஆப்சென்ட்! குஷ்பு ஆஜர்!!



காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறிய நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

 ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

 இக்கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க. அழகிரி, நெப்போலியன் இருவரும் பங்கேற்கவில்லை. 

மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை தனியே சந்தித்து ரகசியம் பேசியவர்கள் அழகிரியும் நெப்போலியனும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுகவில் நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பி வைத்த நடிகை குஷ்புவும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.



உடம்பு சரியில்லை, ரெஸ்ட் எடுக்க மதுரைக்கு வந்துட்டேன்: முக அழகிரி

தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை மதுரைக்கு வந்துவிட்டார். 

மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திமுக செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மதுரைக்கு வந்துவிட்டீர்களே என்று அழகிரியிடம் கேட்டனர். 

அதற்கு அவர் கூறிய பதில், 250க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் சிலர் இன்று கூட்டத்திற்கு வராமல் இருப்பார்கள். அதில் நானும் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் மதுரையில் உள்ள எனது வீட்டில் ஓய்வெடுக்க வந்திருக்கிறேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் டெல்லியில் எனக்கு அலுவலகம் இல்லை. அலுவலகம் இல்லாததால் மதுரைக்கு வந்தேன் என்றார். 



ப.சிதம்பரம், வாசன் ஆகியோரை தனியாக சந்தித்ததாக செய்திகள் வந்ததே என்று கேட்டதற்கு, அவர்களை மட்டும் தானா சந்தித்தேன். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பலரையும் சந்தித்தேன் என்றார்.

நன்றி : தமிழ் இணையப் பக்கங்கள் 
-'பரிவை' சே.குமார்

சனி, 23 மார்ச், 2013

பக்... பக்... பய அனுபவம் - தொடர்பதிவு


வாழ்க்கையில் சந்தித்த பய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்படி ஆசியா அக்கா அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து நாட்களாகிவிட்டது... இனிமேலும் எழுதாமல் இருந்தால் அக்கா கோவமாயிடுவாங்க. அதனால பய அனுபவம் பற்றி கொஞ்சம் பேசலாம்.

பய அனுபவத்துல நிறைய சரக்கு இருக்குங்க... எதை சொல்வது எதை விடுவது... சரி கட்டுரையின் நீளம் கூடாமல் பகிரலாம்.



எட்டாவது வரைக்கும் ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் படிப்பு... மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைங்க எல்லாம் போங்க என்று விரட்டி விடுவார்கள். அதனால் நாலாவது படிக்கும் போது மரக்குரங்கு விளையாண்ட ஒருத்தன் மரத்தில் இருந்து குதிக்கும் போது நம்ம மேல விழுந்து கை ஒடிந்து அம்மாவின் திட்டுக்குப் பயந்து வீட்டுக்கு வந்து கை வலியோடு ரென்டு உதையும் வாங்கியது தவிர... வேறெந்தப் பய அனுபவமும் வரவில்லை..

ஒன்பதாவது வேறு பள்ளி... வேறு சூழல்... நாங்கள் படித்த பள்ளியில் இருந்து மற்ற பள்ளிகளுக்குப் போனால் முதல் வருடம் தேர்ச்சி பெறுவது என்பது ஒரு சிலருக்குத்தான் மணி மகுடம் பலருக்கு காவடிதான்... அப்படியிருக்கும் போது மதிப்பெண்களை பள்ளியில் தலைமையாசிரியர் வந்து வாசித்து வீட்டுக்கும் லெட்டர் அனுப்பி... போச்சு இந்த வருடம் நாமளும் காவடிதான் என்று நினைத்து தோல்வியை தோல்வி அடையச் செய்தது ஒரு புறம் இருந்தாலும் இரவு 7 மணிக்கு தேவகோட்டையில் டியூசன் முடித்து சைக்கிளில் எங்க ஊருக்குப் பயணிக்க வேண்டும்... 

அப்போது பாதி தூரம் வரை ரோடு இருக்காது... (இப்போது தேவகோட்டையில் இருந்து தார்ச்சாலை) விளக்கு வெளிச்சமும் இருக்காது... ஊருக்குள் இருக்கும் விளக்குகளும் எப்போதாவதுதான் எரியும்... பாதி தூரத்துக்கு மேல் அதாவது எங்க ஊர் பஞ்சாயத்து எல்லைக்குள் சரளை ரோடு இருக்கும். ரோடில்லாத பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிய சாலையில்தான் போக வேண்டும்.... எல்லா பக்கமும் ஆவாரஞ்செடிதான்...

அமாவாசை இருட்டாக இருந்தாலும் சைக்கிள் மட்டும் சும்மா எங்க பள்ளம் இருக்கு... எங்க மேடு இருக்குன்னு சரியான பாதையில் செல்லும்... இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் பகலில் செயின் அடிக்கடி கழண்டாலும் இரவில் அப்படி எதுவும் ஆகாது... அப்படியே ஆகி மாட்டமுடியாமல் போனால் அப்புறம்.... ஐயையோ.... அப்புறம் வேர்த்து... விறுவிறுத்து.... சரி கதைக்கு வருவோம்... 

சுடுகாட்டை கடக்கும் போது எதாவது ஒரு சாமி பாடல் சத்தமாக வரும்.... அப்படித்தான் ஒருநாள் இரவு எட்டுமணிக்கு மேல இருக்கும்... ஊர்ல அம்மன் கோவில்ல காப்புக் கட்டியிருந்தாங்க... தேவகோட்டையில் இருந்து போனால் சத்திரத்தார் ஊரணி என்ற இடத்துல ஒரு மேட்டில் இறங்க வேண்டும்... அந்தப் பகுதியில் அப்போது நரிக்குறவர்கள் இருந்தார்கள்... நல்ல இருட்டு வேற... பயம் கவ்விய மனசு வேற... படபடன்னு அடிக்க.... வேர்வையில் தெப்பலாய்... வேகமாக சைக்கிளை மிதித்துப் போனேன்... 

அந்த சறுக்கல்ல இறங்கி வலது பக்கமாக திருப்பினேன்... பயபுள்ள எதுவோ இருட்டுக்குள்ள பாதையில நின்னிருக்கும் போல லேசாத் தட்டிவிட அது கீழ விழுந்து கத்த ஆரம்பிக்க.... நிக்கலையே... நின்னா சட்டினிதாண்டியின்னு நெனச்சிக்கிட்டு வேகமாக மிதிக்க ஆரம்பிச்சேன்... கூ...கூ...ன்னு கத்திக்கிட்டு கல...புல... கல.. புலன்னு பேசிக்கிட்டு கூடிட்டாய்ங்க... நாந்திரும்பவே இல்லை.... வேகமாக மிதிச்சா.... திடீர்ன்னு லைட்டு வெளிச்சம் நம்ம மேல விழுகுது... ஆத்தாடி கொன்னுபுட்டாங்களேன்னு வேகமா ஓட்டுனா... முயல் பிடிக்கிற லைட்டை தலையில் கட்டிக்கிட்டு நாலஞ்சு பேரு இருட்டுக்குள்ள தப...தபன்னு ஓடியாராய்ங்க... பிடிபட்டா தொலஞ்சேடா குமாருன்னு சொல்லிக்கிட்டு.... சாமிகளை வேண்டிக்கிட்டு ஓட்டினா.... விடாம வெரட்டி வாறாய்ங்க.... கொஞ்சத் தூரத்துக்கு அவங்கனால அப்புறம் ஓட முடியலை.... நானும் வேகமாக வீட்டுக்குப் போயி சேர்ந்துட்டேன்... ஊரில் சாமி கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து சாமி கும்பிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

என்னோட கோலத்தைப் பார்த்த எங்கம்மா, பயந்தோளிப் பயலே எதுக்கு இப்படி பேயரஞ்சமாதிரி வந்திருக்கேன்னு திட்ட... எனக்குத்தானே தெரியும்... உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்ததுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் வீட்டில உக்காந்துட்டேன்... அப்புறம் பயலுக டேய் வெளியில வாடான்னு கூப்பிட (இப்படியா கூப்பிட்டாய்ங்க....) அடைக்கோழி மாதிரி உள்ள இருக்காம வெளிய வான்னு அன்பா கூப்பிட்டாய்ங்க... 

வெளிய வந்து அரட்டைக் கச்சேரியில ஆஜரானா... மொசப்புடிக்கிற மாதிரி குமாரை தேடிக்கிட்டு வந்துட்டாய்ங்க... சாமி இப்ப ஒரு ஆளு சைக்கிள்ல வந்துச்சுல்லன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க... போச்சுடா சனி சம்மணம் போட்டு உக்காந்திருக்குடான்னு நெனச்சுக்கிட்டு மெதுவா வேப்ப மரத்துக்குப் பின்னால பொயிட்டேன்.... அப்படி யாரும் வரலைன்னு பயலுக சொல்லிட்டாய்ங்க... சரி நாளைக்கு ராத்திரி வரும் போது பாத்துக்கிறோம்ன்னு சொல்லிட்டுப் பொயிட்டாய்ங்க.... 

அடுத்த நாள் காலையில போகும் போது பயமா இருந்துச்சு எங்க மோப்பம் புடிச்சிருவாய்களோன்னு... ஒரு நரிக்குறவர் என் முகத்தை உற்றுப் பார்க்க ஆஹா.... கண்டுபிடிச்சுட்டானோன்னு வடிவேல் மாதிரி நானும் பார்க்க, ராத்திரி புள்ள மேல சைக்கிள்ல மோதிப்புட்டாங்க சாமி ஆருன்னு தெரியல... இந்தப் போறவங்கதான்னு சொல்ல... ஐய்யையோ ரொம்ப அடியோன்னு கேட்டுட்டு மெதுவா ஜகா வாங்கிட்டு அதுக்கு அப்புறம் ஒரு வாரத்துக்கு மேல் இரவுப் பயணத்தை ரத்து செய்து டியூசனை காலையில் மாற்றியாச்சு... 

சுற்றுலா செல்லும் போது கேரளாவில் டாடா சுமோவோடு பள்ளத்தாக்கில் விழ இருந்த இன்னொரு பய அனுபவம் இருக்கு... யாராவது மீண்டும் எழுதச் சொன்னால் எழுதலாம்..

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.... கல்லூரி படிக்கும் போது பேராசான் பழனி இராகுலதாசன் இல்லத்தில் நண்பர், நண்பிகள் என எல்லாருமாய் பேசி மகிழ்ந்து அங்கயே சாப்பிட்டு அப்புறம் அக்கா வீட்டுக்குப் பொயிட்டு இரவு 10,11 மணிக்கெல்லாம் போக ஆரம்பிச்சாச்சு பயமில்லாமல்....

தொடர நினைக்கும் பயந்த அனுபவஸ்தர்கள் எல்லாரும் தொடரலாம்...

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 22 மார்ச், 2013

திருமலையில் இலவச தரிசனத்தில் மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய தேவையில்லை!



திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

'காலேஜுல படிக்குற என் மகனை போடா போய் போராடுன்னு அனுப்பிட்டேன்' - ஆட்டோ டிரைவர்

 auto driver attracts agitating students in madurai


மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது. 

அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி வந்தவர். வந்த இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். 

அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு.

இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம். 

நாகராஜ் தனது ஆட்டோவின் பின் புறத்தில் பிரபாகரன் துப்பாக்கியால் சுடுவது போல் படம் வைத்து மதுரை வீதிகளை பல ஆண்டு காலமக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி ,செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் இன்று இவரைப்போல் மனம் படைத்த சுமார் 750 ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

தொடரும் போராட்டங்கள் ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவர்கள் 300 பேர் 60 படகுகளில் கடலுக்குள் உண்ணாவிரதம் இருந்தனர். மீனவர்கள் கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் படகுகளை நிறுத்தி அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மீனவ பெண்கள் 500 பேர் சின்னங்குடி கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தனர். 

நன்றி : தமிழ் இணைய பத்திரிக்கைகள்

-'பரிவை' சே.குமார்

தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம்

 vaiko s 91yer old mother on fast seeking tamil eelam



நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். 

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 


இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. 

இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். 


இந்த போராட்டத்தில், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன், இணைய தள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்


-'பரிவை' சே.குமார்

வியாழன், 21 மார்ச், 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்


"மாப்ள எந்திரிக்கிறாரு பாருங்க... வூட்டுக்குப் போவ அவதியாகிருச்சுனு எந்திரிக்கிறாரு பாருங்க... டேய் காண்டா... அந்தத் தடிக் குச்ச எடு'' - சடசடவென எரிந்துகொண்டிருந்த தீயிலிருந்து, பொறபொறவென முறுக்கி மேலெழுந்த பிணத்தை 'மட்ட்டேர் மட்ட்டேரென’ தடிக் கம்பால் கத்தியபடி அடித்தார் செல்வம். அந்த ராத்திரி வல்லம் சுடுகாட்டில் நண்பர் மருதுவுடன் உட்கார்ந்திருந்தேன். மருதுவின் தாத்தாதான் டிக்கெட் எடுத்தது. மயான உழைப்பாளி செல்வம்தான் இப்படிக் கத்திக்கொண்டு பிணத்தை அடித்தார். 'வூட்டுக்குப் போவ அவதியாகிருச்சுனு எந்திரிக்கிறாரு பாருங்க...’ என அவர் சொன்ன பின்புலத்தில் அந்தக் காட்சி இப்போதும் நினைவில் எரிகிறது. நேற்று இரவுதான் பிரமிளின் கவிதை ஒன்றில் 'வீடடைதல்’ என்ற வார்த்தையைக் கண்டடைந்தேன். பிணம் முறுக்கி எழுவதும் வீடடையும் நினைவில் அன்றோ?

பிரமிள் தன் கடைசிக் காலத்தில் வசித்த குடிசைப் பகுதி வீட்டைப் பார்க்கணும் போலிருக்கிறது. அப்புறம் பஷீரின் பூர்வீக வீடு. வெள்ளாடுகள் மேயும் பஷீரின் கதைகளில் படித்த அந்த வீட்டுக்குப் போக வேண்டும். எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டுக்குப் போய் இரண்டு ராத்திரிகள் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறேன். கம்பிகளைப் பிடித்தபடி... விளக்கசையும் கூடத்தைப் பார்த்தபடி, பாரதி நினைவுகளில் நின்றிருக்கிறேன். ''இதான் காமராஜர் வாழ்ந்த வூடுப்பா...'' என அப்பா காட்டியபோது, ஓடிப்போய் வெகுநேரம் உட்கார்ந்திருந்தது ஒருமுறை. வண்ணதாசன் சார் வீட்டைப் பார்க்க இன்னும் போகவில்லையே என இக்கணம் தோன்றுகிறது. வாசலில் நந்தியா வட்டைகள் உதிர்ந்த, பூசணிப்பூ வைத்த, கரிசலாங் கண்ணிக் கீரைகள் முளைவிட்ட, மரவட்டைகள் ஊறும் ஈரம் படிந்த முற்றத்துடன் வண்ணதாசன் சார் எனக்கு அளித்த அவரது வீட்டுக்கு அவர்தானே வர வேண்டும் என்றும் தோன்றுகிறது.

ஒரு கருக்கலில் தென்காசியில் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் வீட்டுக்குப் போய் நின்றேன். குளிர் நிறைத்த வீட்டுத் திண்ணையில் அண்ணியோடு அண்ணாச்சியைப் பார்த்தது அபூர்வமாயிருந்தது. ''காபி சாப்பிடுங்க ராஜு... நம்மூடு இது... இப்பிடிக் கொஞ்சம் நீட்டிக்குங்க ஃப்ர்ரியா...'' என அவர் சொன்னபோது சிங்கம்போல் தாடியை நீவினார். காடடைந்த சிங்கமும் வீடடைந்த கலைஞனும் ஒன்று.

வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்பது எத்தனை நாள் ஆசை..? பதின் வயதில் இன விடுதலைக்காக வீட்டைவிட்டு வெளியேறிக் காடடைந்தவரின் நினைவில் அழியாமல் நின்றிருக்கும் அந்த வீடு. அங்கே அத்தனை பேரின் மனசுக்குள்ளும் எத்தனை எத்தனை வீடுகள் இருந்திருக்கும்..? ஏதுமின்றிப் பதுங்கு குழிக்குள் இருந்த பாலச்சந்திரனின் கடைசி நிமிடங்களை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா..? மக்கள் விடுதலைக்காகக் கடைசி வரை வீடடையவே முடியாத ஒரு தகப்பனின் பிள்ளை பதுங்கு குழிக்குள் கிடந்ததை... ஒன்றும் புரியாமல் பசித்த கண்களோடு வெட்ட வெளியில் விழுந்து செத்துப்போனதை... உங்களால் ஓட்டிப்பார்க்க முடிகிறதா..? இப்போது 'மேதகு தமிழினத் தேசியத் தலைவர் பிரபாகரன் இல்லம்’ என்ற எழுத்துகள் தார் பூசப்பட்டு, சிதைந்து சிதிலமாகிக் கிடக்கும் வல்வெட்டித்துறை வீட்டைப் பார்க்கும்போது அழுகையும் கோபமும் முட்டுகிறதா..?

என் நினைவில் படிந்து படிந்து ஏராளமான வீடுகள் கிடக்கின்றன. வாசலில் உப்புக்கறி காயும், அணிலும் உடும்பும் கட்டித் தொங்கும், புங்க மரத்தடியில் கயித்துக் கட்டில் விரித்துக்கிடக்கும் மணியின் குடிசை வீடு. எப்போதும் கறிக் குழம்பு மசாலா வாசம் அடிக்கும் சாணி மெழுகிய வீடு. ராத்திரிக்கு ரேடியோவில் வழியும் பாட்டும், தூரத்தில் எப்போதோ போகும் வாகனங்களின் சத்தங்களும், வீட்டை ஒட்டிய ஆகாயத் தாமரை மண்டிய குளக்கரையும், கயித்துக் கட்டிலில் தூங்கும்போது கொளத்துக்கு மேலே வந்து நிற்கும் நிலவுமாக... அப்படி ஓர் ஏகாந்தமான வீடு.

மணி, ஒரு குறவர். வேலை தேடி வீட்டைவிட்டு வந்துவிட்ட பிறகு, வேலை இல்லாமல் திரிந்தபோது மேலூரில் நான்கு நாட்கள் மணியின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். நாலு நாள்தான். ஆனால், நினைவில் காலம் தாண்டிச் சித்திரமாகிவிட்டது அந்தக் குடிசை. மூணாறில் அன்னாசித் தோட்டத்தின் நடுவே ஒரு ராத்திரி குண்டு பல்பில் தங்கியிருந்த மர வீடும் அப்படித்தான். பல்லாவரத்தில் ரயில்வே டிராக் ஓரம், ஹாலுக்குள் ரயில் புகுந்து ஓடுகிற மாதிரி இருக்கும் சேகர் வீடு. ஹைதராபாத் சார்மினார் ஏரியாவில் மாடியில் இருந்து கைக்கெட்டும் தூரத்தில் ரயில்கள் பறக்கிற ரதி வீடு. பம்மலில் மொட்டை மாடியில் தலையை உரசி உரசி விமானங்கள் பறக்கிற மகேஷ் வீடு. கொட்டிலில் குதிரைகள் கட்டிக்கிடக்கிற, கொல்லையில் வான்கோழிகள் மேய்கிற ஒட்டக் குடி தாத்தா வீடு, நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட திண்ணையில் கோழிகள் மேய்கிற எனது பழைய கிராமத்து வீடு, கதவெல்லாம் பழைய ஹீரோயின்களின் படங்கள் ஒட்டப்பட்ட, ஜன்னலில் சினிமா போஸ்டர் தட்டிகள் கதவான, பவுடர் டப்பா ஆஷ்ட்ரேவாகவும், கருவக்குச்சி ஹேங்கராகவும் இருக்கும் வெங்கட் வீடு, மலை மேல் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் லோகம்மா வீடு, பொள்ளாச்சியில் வயல்களுக்கு நடுவே இருக்கும் சக்திவேலின் வீடு, சாக்கடைக் குழிக்குப் பக்கத்தில் சமையல் நடக்கும் தாராவி சின்னசாமி வீடு, எங்கு பார்த்தாலும் சாமி படங்கள் தொங்கும் செல்வி வீடு, சென்னையில் மெயின் ஏரியாவில் அத்தனை அபார்ட்மென்ட் மாடி வீடுகளுக்கு நடுவே ஆச்சர்யமாக இருக்கிற பழைய ஓட்டு வீடு என நிமிடத்தில் தடதடவென இவ்வளவும் வருகின்றன.

நான் ஒரு மலையாளப் பெண்ணைக் காதலித்தேன். அவளுக்கு திருவனந்தபுரம் பக்கம் ஒரு கிராமத்தில் பூர்வீக வீடு இருந்தது. இப்போது சென்னைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அவள் பேசும்போதெல்லாம் அந்தப் பூர்வீக வீட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பாள். பெரிய பெரிய குத்துவிளக்குகள் இருக்கும் முற்றங்களோடு, பின்வாசலில் குளம் இருக்கும் கிராமத்து வீடு. வீட்டை ஒட்டி இருக்கும் தோப்பு முழுக்கப் பாக்கு மரங்கள். அந்த வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போய்விடும் சதித் திட்டத்தில் நான் இருந்தேன்.

ஒருமுறை அவள் ஊருக்குப் போயிருந்தபோது லேண்ட்லைனில் போன் பண்ணினேன். எடுத்து என்னிடம் தமிழில் பேசியவள் வேறு யாரிடமோ திரும்பி, 'ஆங் குட்டா... உண்ணு கழிஞ்சு... போன்ல ஃப்ரெண்டானோ...’ என என்னவோ மலையாளத்தில் பேசினாள். அப்போது நான் அடைந்த ஆனந்தப் பரவசத்தைச் சொல்ல முடியாது. ஒரு மலையாள ஃபிகர்... கூடவே ஒரு கேரளத்து வீடு. அவள் ஊரிலிருந்து திரும்பிய நாளிலேயே எனக்கு போன் போட்டு அழுதாள்.


 (ஓவியம்: ஹாசிப் கான்)

'ஏம்மா... என்னாச்சு..?''

''ரொம்பக் கஷ்டமா இருக்குடா... ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டோம்... அக்காவுக்குக் கல்யாணம் பண்றோம். வீட்டை வித்துட்டு ஃபேமிலியே இங்க வந்துரலாம்னு வித்துட்டாங்க... என்னால தாங்கவே முடியலடா!''

இன்னொரு முறை மதுரையில் கீர்த்தனாவின் வீட்டைத் தேடிப் போனேன். முழுதாக முகவரிகூட இல்லாமல் நீங்கள் உங்கள் காதலியின் வீட்டைத் தேடிப் போயிருக்கிறீர்களா? காதலியின் வீடு என்பது காதலியேதான். அந்திக்கு மேல் பயந்து பயந்து போய் அரசரடி ஏரியாவில் வீட்டைத் தேடினேன். தெருத்தெருவாக அவள் எந்த வீட்டிலாவது தென்படுகிறாளா எனத் தேடினேன். வீடுகளுக்குள் நுழைந்து திண்ணைகளில் அவள் செருப்பு இருக்கிறதா..? கொடிகளில் அவள் சுடிதார்கள் காய்கிறதா எனப் பார்த்தேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், அது ஒரு கிறுக்கு... பித்து... அதுதானே காதல். அவள் வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டால் போதும் என்று திரிந்தேன். இரண்டாவது நாள் போனபோது ஒரு பூக்கார அம்மாவிடம் கீர்த்தனாவின் பெயர் சொல்லிக் கேட்டேன். ''அந்த தையக்காரு புள்ள வூடா? அந்தா கடேசில ஊதா கேட்டு போட்ட வூடுப்பா...'' என்றது. வேக வேகமாகப் போய் அந்த வீட்டைப் பார்த்தேன். ஊதா நிற மர கேட் போட்ட சின்ன வீடு. அப்படி ஒரு சாதாரண வீட்டிலிருந்தா கீர்த்தனா வருகிறாள் என ஆச்சர்யமாக இருந்தது. உள்ளிருந்து தையல் மெஷின் ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பாதி ராத்திரி வரை அங்கேயே நின்று அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அப்புறம் எப்போது அவளை நினைத்தாலும் அந்த வீடும் சேர்ந்தே வருகிறது.

''மச்சான்... நா தங்கிருக்கற ஃப்ளாட்ல எதிர் ப்ளாக்ல ஒருத்தரு... செத்துப்போன வொய்ஃபைக் கூடவே வெச்சுக்கினு மூணு நாளா வூட்டுக்குள்ளயே இருந்துருக்கார்றா... கப்பு வந்து அக்கம்பக்கத்துல போய்ப் பாத்து.... போலீஸ்லாம் வந்து பாடியைக் கைப்பத்திருச்சு. அந்தம்மா ரொம்ப நாளா ஒடம்பு முடியாமக் கெடந்து செத்துப்போச்சு. என்னன்னு தெரில... அந்தாளுக்கு மென்டலா என்னமோ ஆகிருச்சு... வூட்லேருந்து வெளிய வுடாம அங்கயே உக்காந்துருக்காரு... அவர ஆஸ்பத்திரி அனுப்பிட் டாங்க. காலைல ஒரே கூட்டம்... தூக்கமே போச்சுரா...'' என ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு நண்பன் வந்து நின்றான். எனக்கும் அதைக் கேட்டுத் தூக்கமே இல்லை. அந்த மனுஷனும் மனைவியோடு அந்த வீட்டிலேயே செத்துப்போக நினைத்தாரா என்ன?

புலம்பெயர்ந்த ஒவ்வொருவர் நினைவிலும் தாய் நிலத்தில் இருக்கும் வீடு உயிர்த்திருக்கிறது. ''சிட்டில சொந்த வீடு வாங்கிரலாம்ல... மொதல்ல அஞ்சு ரூவா போதும். லோன் போட்டா மாசாமாசம் கட்டிக்கலாம். போரூர் பக்கம் பாத்தா கொஞ்ச எறங்கி வரும்...'' எனப் பார்க்கிற பாதிப் பேர் சொல்கிறார்கள். வேன் வேனாக ஏறி இடம் பார்க்கப் போகிறார்கள். வங்கிகள் எங்கும் கூட்டம் கும்முகிறது. நகரத்தைத் தாண்டினால், கலர் கலராக பெயின்ட் அடித்து சாலை ஓரமெல்லாம் ஃப்ளாட்கள். நடுத்தரவர்க்கத்துக்கு இப்போது இதுதான் பெரிய கனவு.  

பறவைகளுக்குக் கூடடைதல் என்றால், மனிதர் களுக்கு வீடடைதல். கூடற்ற பறவைக்கு வானம். வீடற்ற மனிதனுக்கு ஞானம். 'சொந்த வீடு’ என்ற பதமே கொஞ்சம் காமெடிதான். வீடடைதல் என்ற ஒரு சொல், பல பொருள்களை வைத்திருக் கிறது. என்றோ ஒரு கணம் நானும் எனது வீட்டை விட்டு மானசீகமாக வெளியேறிவிட்டேன். ஜோடிப் பெயர்களும், கெட்ட வார்த்தைகளும், போன் நம்பர்களும் கிறுக்கப்பட்ட பப்ளிக் டாய்லெட்டில், ஸ்டவ் அடுப்பும், குண்டான் சட்டியும், ஒரு அட்டைப் பெட்டியும் வைத்துக்கொண்டு வீடடைந்துவிட்ட ஒரு குடும்பம் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது. லாட்ஜில் ரூம் போட்டுச் சம்பாதித்த காசில், ஜி.ஹெச். வாசலில் ஸ்க்ராட்ச் கார்டு விற்கும் புருஷனுக்கு பொக்னா சோறு வாங்கிப் போகிறவள் வீடு பற்றிய என் கனவுகளை நொறுக்கிவிட்டாள். சாலையோரம் வசிக்கிறவர்களுக்கு அதுதான் வீடு.

விவசாய நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, ஊரிலிருந்து கடைசியாகக் கிளம்பிய தணிகை போன் பண்ணும்போது, ''உங்க ஏரியால நல்ல வீடிருந்தா பாரேன்... ஆறாயிரத்துக்குள்ள...'' என்கிறான். வாழ்ந்து கெட்டவர்களின் வீடு களையும் வாழ்ந்துகொண்டிருக்கிறவர்களின் வீடு களையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிற கால்கள் காலத்தினுடையது!

மானுடம் வீடாகிவிட்டால், எல்லா ஷாட்டும் டாப் ஆங்கிள்தான். அனைத்து முகங்களும் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அல்லது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து எடுத்து வந்த வருத்தங்களும் பிரியங்களும்தான் அவர்கள் முகம். அல்லது வீட்டுக்கு எடுத்துப் போகும் வருத்தங்களும் பிரியங்களும். வீடு நிம்மதி இல்லாத இடமாகவும் வீடு மட்டுமே நிம்மதியான இடமாகவும் இருக்கின்றன. இறுதியில் வீடடைவதுதான் எல்லோருடைய நோக்கமும். வீடு என்ற சொல் வீட்டை மட்டுமே குறிப்பதல்ல. அதோ வேக வேகமாகக் கடவுளும் போய்க்கொண்டிருக்கிறார். 

அவரை நிறுத்திக் கேட்கிறேன், ''எங்கே போகிறாய்..?''

''வீடடைவதற்கு...''

''வீடடைவதற்கா..? எங்கிருக்கு ஒன் வூடு..?''

சிரித்தபடி சொன்னார், ''உன் இதயத்தில்!''

*************

நன்றி : ராஜுமுருகன், ஆனந்தவிகடன்
-'பரிவை' சே.குமார் 

புதன், 20 மார்ச், 2013

தீர்மானமல்ல காரணம்! - தினமணி தலையங்கம்


பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஒன்று "மேக்பெத்'. ஸ்காட்லாந்து நாட்டு அரசன் டன்கேன் என்பவனை, தனது மனைவி மேக்பெத் சீமாட்டியின் வற்புறுத்தலின் பேரில் கொலைசெய்து அரசனாகிறான் மேக்பெத் என்கிற தளபதி. அந்தக் குற்ற உணர்வு, கணவன் மனைவி இருவரையும் நிம்மதி இழக்கச் செய்கிறது. மேக்பெத் சீமாட்டி மனநோயால் பீடிக்கப்பட்டு இறப்பாள். மேக்பெத் கொல்லப்படுவான்.

அரசனைக் கொன்றுவிட்டு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் திரும்பும் கணவன் தளபதி மேக்பெத் கூறுவான், ""கழுவினால் மறையும் ரத்தக் கறைகளா இவை? கடல் வெள்ளம் முழுவதையும் விட்டுத் தேய்த்துக் கழுவினாலும் மறையாத கறைகள் அல்லவா இவை? என்று.

குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு, மேக்பெத் சீமாட்டியும், தூக்கத்தில் பிதற்றிக் கொண்டு நடக்கும் நிலைக்குத் தள்ளப்படுவாள். அப்படி ஒருநாள் தூக்கத்தில் நடக்கும்போது, மேக்பெத் சீமாட்டி பிதற்றுவதாக ஷேக்ஸ்பியர் எழுதி இருக்கும் வரிகள் இவை - அரேபியாவின் ஒட்டுமொத்த வாசனைத் திரவியங்களையும் போட்டுத் தேய்த்தாலும் என்னுடைய இந்த விரல்களில் இருக்கும் ரத்தவாடையை அகற்ற முடியாது போலிருக்கிறதே!

ஈழத் தமிழர் பிரச்னையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், அப்படியே கொண்டுவர முடியாவிட்டாலும்கூட, நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடந்த படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து, இப்போது மத்திய அமைச்சரவையிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் திமுக விலகி இருக்கிறது. இதற்கும் "மேக்பெத்' நாடகத்திற்கும் என்ன தொடர்பு என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் கடுமையான போர் நடந்து வந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுகதான். முதலமைச்சராக இருந்தவர் மு. கருணாநிதிதான்.

இப்போதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் திமுகவின் ஆதரவு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இரண்டாவது பெரிய கட்சியே திமுகதான். திமுகவின் ஆதரவு இல்லாவிட்டால் அரசே கவிழ்ந்துவிடும் என்கிற நிலைமை.

அப்போது ஈழப் பிரச்னையில் திமுக எடுத்த நிலைப்பாடு என்ன? 14.10.2008-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது; 24.10.2008-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியது; 12.11.2008-இல் சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டது; 04.12.2008-இல் பிரதமரை எம்.பிக்கள் சந்தித்தது; 27.12.2008 அன்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது; 28.03.2009 அன்று பிரதமருக்கும் சோனியாவுக்கும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடிதம் எழுதினார்; 7.04.2009 அன்று பிரதமர், சோனியா, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோருக்குத் தந்தி அடித்தார்; 09.04.2009-இல் பேரணி நடத்தினார்; 21.04.2009-இல் மீண்டும் பிரதமருக்கும், சோனியாவுக்கும் தந்தி அனுப்பினார் கருணாநிதி; 27.04.2009-இல் ஆளும் கட்சியாக இருந்த திமுக, தமிழகத்தில் பந்த் நடத்தியது; 27.04.2009-இல் கண்துடைப்பு உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. இதையெல்லாம், "மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!' என்று தலைப்பிட்டு கடந்த ஆகஸ்ட் 29 அன்று அவர் அறிக்கை விடுத்திருக்கிறார்.

இப்போது எடுத்திருக்கும் முடிவை அப்போது எடுத்திருக்க வேண்டாம், எடுப்பதாகச் சொல்லி இருந்தால்போதும்; கூட்டணியிலிருந்து விலகி இருக்க வேண்டாம், அமைச்சரவையிலிருந்து வெளியேறி இருந்தால் போதும், முள்ளி வாய்க்கால் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். குறைந்தபட்சம், இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் இனப் படுகொலை நடந்தேறி இருக்காது.

அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் அமைச்சரவையிலிருந்து விலகுங்கள், மத்திய அரசுக்கு ஆதரவை விலக்குங்கள் என்று ஊடகங்களும், தமிழ் உணர்வு உள்ளவர்களும் ஓலமிட்டபோது, நாங்கள் ஆட்சியில் இருப்பது பிடிக்காமல் பதவி விலகச் சொல்கிறார்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டிய அதே கருணாநிதி இப்போது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையாக, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை என்று காரணம் கூறி, கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

தன்னைப் பிரணாப் முகர்ஜியும், ப. சிதம்பரமும் ஏமாற்றிவிட்டார்கள் என்று இப்போது மேக்பெத் சீமாட்டியைப் போலக் குற்ற உணர்வில்  புலம்புகிறவர், ஏமாற்றியது தெரிந்ததும் விலகி இருக்கலாமே, யார் தடுத்தது? குதிரைகள் ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டிய கதையாக அல்லவா இருக்கிறது கருணாநிதியின் முடிவு.

அமெரிக்கத் தீர்மானம் என்பதே உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானம். அதை ஆதரிப்பதும் ஒன்றுதான் எதிர்ப்பதும் ஒன்றுதான். நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது வெளியேறுவதற்கு வேண்டுமானால் சாக்காக இருக்குமே தவிர, அதனால் ஆகிவிடப் போவது ஒன்றுமில்லை. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டு விட்டனர். பல லட்சம் பேர் இன்னும் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது ராஜபட்ச மட்டுமல்ல. பதவிக்காக மௌனம் சாதித்த திமுகவும் கருணாநிதியும் கூடத்தான்.

இலங்கைப் பிரச்னையில், ஈழத் தமிழர் நலனில் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நிஜமான அக்கறை இருந்திருக்குமானால், தகவல் தொலை தொடர்புத் துறை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கேட்டுப் பெற்றது போல, வெளிவிவகாரத் துறையைக் கேட்டுப் பெற்றிருக்க முடியுமே, ஏன் செய்யவில்லை? செய்ய மாட்டார், அதில் அவருக்கு அக்கறை இல்லை.

இப்போது மட்டும் ஏன் இத்தனை நாளும் இல்லாத திடீர் ஆவேசம், அக்கறை? அதற்குக் காரணம், ஒன்று மேக்பெத் சீமாட்டியை அலட்டியது போன்ற குற்ற உணர்வாக இருக்கலாம். குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி காண்பதென்பதேது?

இன்னொரு காரணம், நிச்சயமாக ஈழத் தமிழர் மீதான அக்கறையல்ல, வெளியில் தெரியாத வேறு ஏதோ ஒரு காரணம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதை, கருணாநிதியின் பாணியில் கூறுவதாக இருந்தால், "மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை' அவ்வளவே!

-நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

அதீதத்தில் 'கண்ணில் ஆடும் காலம்'


காலையில எங்கட  கிளம்புறே என்ற அப்பாவிடம் தம்மத்துல குளிச்சி எத்தனை வருசமாச்சு… தண்ணி நிறைய கெடக்குதாம், அதான் நானும் ராமுவும் குளிக்க போறோம் என்றேன். அப்படியே லெட்டர்  எதுவும் வந்திருக்கான்னு  தபாலாபீஸ் சாமிநாதன் செட்டியார்கிட்ட  கேட்டுட்டு வா எனச் சொன்னதும் இன்னும் லெட்டர் வருதா? என்ற ஆச்சர்யத்துடன் என்னப்பா இன்னும் லெட்டர் எல்லாம் வருதா? என்றேன் சிரித்துக் கொண்டே.
ஆமா…. கோர்ட்,இன்சூரன்ஸ்காரன் அனுப்புறது அப்படியிப்படின்னு சில லெட்டர் வரும். போயி இன்னார் மகன்னு சொல்லி கேட்டியன்னா வந்திருந்தா கொடுத்திருவாரு. மறந்துறாம கேட்டுட்டு வா… இல்லைன்னா சாயந்தரம் நான் நடந்து போய்  கேட்டுட்டு வரணும்… என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பியது.
வண்டியில் போகும் போது “ஏன்டா  மச்சான்… இன்னமாடா நம்ம ஊருக்கு  லெட்டரெல்லாம் வருது… இப்போ போஸ்ட்மேன் யாருடா?” என்றேன் ஆவலாய்.
“எங்க மச்சான் எல்லாருக்குமெல்லாம் வர்றதில்லை. மாமா வாத்தியாரா இருந்ததால எதோ புக்கு அது இதுன்னு வரும். தபால்காரரெல்லாம் அதிகம் வர்றதில்லை.. நானும் பார்த்ததில்லை… யாராவது அங்கிட்டுப் போனா வாங்கிக்கிட்டு வந்திருவோம்.”
“பரவாயில்லையே… நம்ம ஊருக்கும் தபால் இன்னும் வருதுன்னா சந்தோஷமாத்தான் இருக்கு. நாம சின்னப் பிள்ளைகளா இருக்கும் போது ஒரு ஓட்டச் சைக்கிள்ல வயர்கூடைய தொங்கப் போட்டுக்கிட்டு தலையில வெயிலுக்கு துண்டை சுத்திக்கிட்டு வருவாரே குமாரசாமி ஐயர் ஞாபகத்துல இருக்காராடா”
“மறக்க முடியுமா மச்சான்… உடம்புல சட்டைய ஒரு பக்கம் மட்டும் போட்டுக்கிட்டு பூணூல் தெரிய வருவாரே… அதுவும் மழை பேஞ்சு கம்மா நெறஞ்சிருக்கும் போது குறுக்கால முழங்காலு தண்ணிக்குள்ள நடந்து வந்து தருவாரே… அவர மறக்க முடியுமா…”
“ம்… மாமா, சின்னத்தா, அப்பா, அண்ணன் , அக்கா, தம்பியின்னு எல்லாருக்கும் முறை வச்சித்தான் கூப்பிடுவாரு.”
“ஆனா என்னய எண்ணக்கடை முதலாளிம்பாரு… உன்னைய சின்ன வாத்தியாருன்னு சொல்வாரு… நம்ம கட்ட சுரேசுப் பயல பஞ்சாயத்து மவனேன்னு கூப்பிடுவாரு… பாண்டிய மட்டும் நாம எல்லாரும் கூப்பிடுற மாதிரி பொத்தமுட்டின்னுதான் சொல்லுவாரு…”
“அவரு மணக்குடிதானேடா… இப்ப அங்கதான் இருக்காரா… நீ பாத்திருக்கியா…”
“முன்னாடி பாத்திருக்கேன்… இப்ப முடியாம இருக்காருன்னு ஒரு தடவ மாமா சொன்னாங்க… ஒரு தடவ பாத்தப்போ என்னை அடையாளம் தெரியலை… இன்னார் மகன்னு சொன்னதும் அடேய் களவாணிப் பயலே… வளர்ந்துட்டியல்ல அதான் அடையாளாம் தெரியலை… எல்லாப் பயலுவலும் நல்லா இருக்காங்களா… ஆமா உங்க ஊரு எழுத்தாளன், அதான்டா சின்ன வாத்தியார் எப்படிடா இருக்கான்… இன்னும் எதாவதுதான் எழுதிக்கிட்டுத்தான் இருக்கான் போல… ரெண்டு மூணு தடவை புத்தகத்துல ஊர் போரோட பாத்திருக்கேன்… எங்கடா இருக்கான்னு கேட்டார்.”
“அவருக்கு எல்லாரையும் பிடிப்பதைவிட என்னை கொஞ்சம் கூடுதலா பிடிக்கும். நான் படிக்கும் போது கதை எழுதி வந்தப்போ பத்திரிக்கை அனுப்புற பணத்தை நா இல்லாதப்போ அவரே கையெழுத்துப் போட்டு அம்மாகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கார்… ம்… நல்ல மனுசன்…”
“காலம் நம்மகிட்ட இருந்து எத்தனையோ பேரை பிரிச்சிடிச்சிடா… பள்ளிக்கூடத்துல உம்மேல பாசமா இருக்குமே வாசுகி டீச்சர்… ரெண்டு மாசம் முன்னால இறந்து போச்சுடா… அப்புறம் பெட்டிக்கடை முருகேசு அண்ணன்… அதான்டா பள்ளிக்கூடம் விட்டா அங்கதானே நிப்போம்… போன மாசம் திடீர்ன்னு செத்துப் போச்சுடா… இவ்வளவு ஏன் நம்ம கூட படிச்சிச்சுல்ல கவிதா, கொஞ்ச நாளைக்கு முன்னால அரளி விதையை அரச்சிக்குடிச்சிட்டு செத்துப் போச்சுடா…”
எவ்வளவு பிரிவுகள்… இழப்புக்கள்… நல்லது கெட்டது எதுவுமே தெரியாமல் வெளிநாட்டில் வாழ்ந்து இரண்டு மூன்று வருசத்துக்கு ஒரு முறை ஊருக்கு வரும் போது இதுபோல் கேள்விப்பட்டு வருத்தப்பட மட்டுமே முடிகிறது என் போன்ற வெளிநாட்டு வாசிகளால் என்று நினைக்கும் போது மனசுக்குள் ஒரு அழுத்தம் வந்து அமர்ந்தது.
“என்னடா சொல்றே… எதுவுமே தெரிஞ்சிக்க முடியாம போகுதுடா… சொந்தத்துல நல்லது கெட்டதுன்னா அம்மா சொல்லிடும்… மத்ததெல்லாம் தெரிய வாய்ப்பில்லாம போகுதுடா… டீச்சர், கவிதா, முருகேசண்ணன் செத்ததை நீயாவது சொல்லியிருக்கலாமுல்லடா…” வருத்தம் தோய்ந்த குரலில் வார்த்தைகள் நொறுங்கி வெளியே வந்தன.
“ஆமா… அப்படியே போன் பண்ணி கிழிச்சிட்டே… அதான் இப்போ சொல்லிட்டோமுல்ல… செத்தவங்களைத் தவிர அவங்க வீட்ல நமக்கு யாரையும் தெரியாது… சரி வா குளியலைப் போடு… இப்படி குளிச்சி வருசக் கணக்காயிருச்சுல்ல உனக்கு… நல்லா அழுக்கை தேச்சுக்குளி…”

கதையை இனி அதீதத்தில் தொடர்ந்து படித்து உங்களின் கருத்தை அங்கும் இங்கும் பதியுங்கள்... 
அதீதத்தில் தொடர.... 'கண்ணில் ஆடும் காலம்'
  – “பரிவை” சே குமார்.

வெள்ளி, 15 மார்ச், 2013

பாரதி நட்புக்காக வழக்காடு மன்றம் பகுதி-II


முதல் பகுதி....

.................... 'ஆசை முகம் மறந்து போச்சா' என்று நடனமாடினார்கள் என்றால் 'ஆசைமுகம் மறக்கலையே' என்றபடி தனது உரையை தொடங்கிய நாஞ்சிலார், பாரதி நட்புக்காக அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து தனது இலக்கியப் பேச்சை மெதுவாக ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகமெடுத்து மேடைகளில் முழங்கும் வேகத்துடன் பாரதியின் பாடல்களை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி... உச்சஸ்தாயியில் கர்ஜித்து தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்பதை சொல்லாமல் சொல்லி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்........................ 

முதல் பகுதி படிக்காதவர்கள் தொடர்ந்து முதல் பகுதி படிக்க.... 

இங்கே சொடுக்கவும்.

************************

படித்தவர்கள் கீழே தொடர்க....  இரண்டாம் பகுதி....

விழா முடிந்ததும் எழுத நினைத்து அலுவலக வேலை கொடுத்த அசதியில் நாளை எழுதுவோம்... என்ற நினைப்பே நீண்ட நாள் இழுத்துவிட்டது. முதல் பகிர்வாக நடுவர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களின் உரையை தொகுத்து கொடுத்துவிட்டு அடுத்த பதிவை அப்போதே எழுதியிருந்தால் என்னால் ஓரளவுக்கு நிகழ்ச்சியின் தொகுப்பை உங்களுக்குத் தந்திருக்க முடியும் ஆனால் சோர்வே வெற்றி பெற்றதால் என்ன பேசினார்கள்... எப்படி பேசினார்கள் என்பதெல்லாம் மறந்துவிட்டது. இருந்தும் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர் முகமது ரபீக் அவர்கள் பேசியதில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

விழா தாமதமாக தொடங்கியது  என்று முதல் பகிர்வில் சொல்லியிருந்தேன். அதனால் இரண்டு வழக்குகள் மட்டுமே தொடுத்தார்கள். நடுவர் அவர்கள் பேசியதும் திரு.ரபீக் அவர்கள் வழக்குகளை தொடுக்க  திரு.கணேசன் அவர்கள் மறுத்துப் பேசினார். 

(பேராசிரியர். கணேசன் - திரு. நாஞ்சில் சம்பத் - பேராசிரியர். முகம்மது ரபீக்)

முதலில் ரபீக் அவர்கள் பேசியவற்றில் என் ஞாபகத்தில் உள்ளவை சிலவற்றை பகிர்கிறேன்.

"திருக்குறள்ல மூன்று பால் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனா என்னோட மாணவன் என்ன சொல்றான் தெரியுமா... திருக்குறள்ல நாலு பாலாம்... அதாவது அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால்... அப்படின்னு சொல்லி கடைசியா அமலாபால் அப்படிங்கிறான்"

"பாரதி அப்படி சொன்னார்... இப்படிச் சொன்னாருன்னு ஐயா பேசினார்... நாம பாரதியைப் பற்றி பேசவரவில்லை.. இன்றைய வாழ்க்கை முறை பற்றிதான் பேச வந்திருக்கிறோம்... பாரதி வீட்ல சாப்பாட்டுக்கே இல்லாதப்போ இருந்த அரிசியை எல்லாம்  காக்கை  குருவிக்கு போட்டார்... இன்னைக்கு சைதாப்பேட்டை சிக்னலுக்கிட்ட உக்காந்து காக்கை குருவி எங்கசாதியின்னு வீட்ல இருந்து அரிசியை எடுத்து வந்து போட்டுப் பாருங்களேன்.... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..."

"இப்பத்தான் கரெண்ட் எப்போ வரும் எப்போ போகுமின்னே தெரியாதுல்ல... அப்படி கரெண்ட் போன ஒரு நாள் என் மனைவியை கொசு ஒண்ணு கடிக்க... அவள் அதை அடிக்கப் போனா... அடிக்காதே... உன்னைக் கடித்த கொசு என்னையும் கடித்து நமக்குள் ரத்தப் பரிமாற்றம் செய்து உறவை பலப்படுத்துகிறது என்றேன்... இந்த கிறுக்குத்தனமான பேச்சை எல்லாம் கல்லூரியோடு விட்டு விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டாள்."

"இன்னைக்கு வயதானவர்களை யாரும் மதிப்பதில்லை... உறவு முறைக்குள் விரிசல் வரவில்லை என்றால் முதியோர் இல்லங்களே இல்லாமல் இருக்கும்."

"நாம பீச்சுக்கு எதுக்குப் போவோம்... ஆனா இன்னைக்கு மெரினா பீச் போயிப் பாருங்க... அங்கதான் காதலர்கள் என்ன என்ன அசிங்கம் பண்ணனுமோ அம்புட்டும் பண்ணுறாங்க" என இன்னும் நிறைய பேசினார்.

இவரது வாதத்தை மறுத்துப் பேசிய திரு. கணேசன் அவர்கள் பாரதியின் பாடலோடு தனது உரையை ஆரம்பித்தார்.

"பையன் அமலா பால்ன்னு சொன்னானாம்... அவரைப் பாருங்க தமிழ் வாத்தியார் மாதிரியா இருக்கார்... இவருக்கிட்ட படிக்கிற பையன் அப்புறம் எப்படியிருப்பான்..."

"என் தம்பி மகன் எங்கிட்டே ஐஸ்கிரீம் கேட்டான்... வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக உனக்கு காய்ச்சலா இருக்கு... இப்ப சாப்பிடக்கூடாது என்று சொல்லி தடுத்துவிட்டேன். மறுநாள் காரில் போகும் போது, பெரிப்பா... வண்டிய நிறுத்துன்னு சொன்னான். ஏண்டான்னு கேட்டா, எனக்கு காய்ச்சல் இருக்கான்னு தொட்டுப்பாரு அப்படின்னான்.. நானும் பார்த்துட்டு இப்ப இல்லடா என்றேன்.. அப்ப எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு.. என்றான். அவன் நிறுத்திய இடம் ஐஸ்கிரீம் கடை... இதுலதாய்யா சந்தோஷமே இருக்கு..."

"பொண்டாட்டிக்கிட்ட போயி என்ன பாட்டுப் பாடணுமோ அதைப் பாடணும் அதைவிட்டுட்டு கொசுவை அடிக்காதே என்றால் அப்புறம் அது யாரை அடிக்கும்..."

"என் வீட்டில் என் மனைவி கேட்ட எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்... நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன்..."

(விழா அரங்கில் பாரதி நட்புக்காக அமைப்பினரும் பார்வையாளர்களும்)

"முதியோர் இல்லம் வேண்டாம் என்கிறார்.... இப்ப மூணு வயசுலயே பயலை அடிச்சு பள்ளிக்கூடத்துல விட்டுடுறோம்... அவன் அப்பவே முடிவு பண்ணிடுறான்.... என்னையவா ஸ்கூல்ல விடுறேன்னு நமக்கு வயசான நாமளும் சின்னப் பிள்ளைதான் அதான் நம்மளை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்கிறான்..."

"என்னவளே அடி என்னவளே... என்ன ஒரு அருமையான பாடல்" என்று சொல்லி அதை ராகத்தோடு படித்து "பீச்சுல காதலர்கள் பற்றி சொன்னார்... இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்ன்னு தோணுதய்யா.." என்றதும் நடுவர் 60 வயசுல ஒருத்தர் கல்யாணம் பண்ணியிருக்காராம்... நீங்களும் ட்ரைப் பண்ணிப் பாருங்க என்றார்.

உங்களால்தான் உங்களைத் தாங்கும் ஔவை பெரிய நிலைக்குப் போக வேண்டும் என நடுவரைப் பார்த்து சொன்னதும் அவர் சிரிக்க நான் அவ்வையை சொன்னேன் என்றார்.

கடைசியில் இவர்களது வாதங்களை வைத்து தனது கருத்தை சொல்ல வந்த நடுவர் அவர்கள் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற பாண்டிச்சேரி பெண், கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண், சிங்கப்பூர் செல்லும் போது விமானத்தில் அருகில் அமர்ந்து பயணம் செய்த கிளி சோசியக்காரர், மகன் கேமரா கேட்டது அதை பஹ்ரைனில் இருக்கும் நண்பரிடம் சொல்ல அவர் இராமகிருஷ்ணன் சாருக்கு போன் செய்து சொல்லி காலையில் கேமராவை அவருக்கு வாங்கிக் கொடுத்தது எல்லாம் சொல்லி குடும்ப வாழ்க்கைக்குள் சில கருத்துக்களை தனக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லி சில பாதகங்கள் இருந்தாலும் இன்னும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று முடித்தார்.

வழக்குத் தொடுத்து அதை மறுத்து பேசியது என அடுக்கடுக்காக எழுத நினைத்தது... நேரம் இன்மை மற்றும் பனிச்சுமையின் சோர்வு காரணமாக சில கருத்துத் தொகுப்போடு மட்டுமே தர முடிந்தது...  இந்த முறை எழுதிய பகிர்வில் ஒரு முழுமை இல்லை என்பதே உண்மை. அடுத்த முறை விழா முடிந்த இரவே எழுத முயற்சிக்கிறேன்.

விழாவில் எப்பொழுதும் போட்டோ எடுப்பதற்காக மேடையில் ஒரு புரபஸனல் போட்டோ கிராபரை வைத்து நான் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த முறை விழா மேடையில் ஒருவர் பாலு மகேந்திரா போல் கேமராவில் நிஜங்களை நிழலாக சுட்டுக் கொண்டிருந்தார். யார்ரா அது புதுசா ஒரு போட்டோ கிராபர் என்று பார்த்தால்...

அட நம்ம அண்ணாச்சி... திரு. சுபஹான் அவர்கள்... 


இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் துபாய், அபுதாபி வாசிகள் தயங்காமல் அண்ணனை அழைக்கலாம்... அவரும் அழகாக படமெடுத்துத் தருவார். பணம் குறித்துப் பேச விரும்பினால் அண்ணனுக்குப் பிடிக்காது என்பதால் யோசிக்காமல் மனசு வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம். இங்கு பகிர்ந்திருக்கும் விழா போட்டோக்கள் அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய விழாப் படங்கள்தான்...

நன்றி...

-'பரிவை'. சே.குமார்