மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மனசு பேசுகிறது : சில நொடி சிநேகம் - ஒரு பார்வை


ன்பிற்குரிய அண்ணன் இயக்குநர் குடந்தை ஆர்.வி.சரவணன்.

லையுலகில் எழுத ஆரம்பித்து நட்பு வட்டம் வர ஆரம்பித்த போது வாசித்த தளங்களில் குடந்தையூரும் ஒன்று. இவர் எழுதிய பகிர்வுகளை வாசித்து கருத்துக்களை இட்டு வந்தேன். அவரும் எனது தளத்தின் வாசிப்பாளராக இருந்தார். இப்படியாக ஆரம்பித்தது அந்த நட்பு... இன்று அண்ணன் தம்பி உறவாக மலர்ந்து நிற்கிறது.

சரவணன் அண்ணன் நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரின் கதைகள் எல்லாம் ஒரு திரைக்கதைக்கான வடிவத்தில்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக இவர் எழுதிய 'இளமை எழுதுக் கவிதை நீ' என்ற முதல் தொடரைச் சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் திரையில் காணும் காட்சிகளாக விரியும். இந்தக் கதையை தொடர்ந்து வாசித்தவர்களில் நானும் ஒருவன். பின்னான நாட்களில் முகநூலிலும் எங்கள் நட்புத் தொடர அவ்வப்போது சாட்டிங்கில் உரையாடிக் கொள்வோம்.

'இளமை எழுதும் கவிதை நீ' நாவலாக வெளியான போது அதில் ஆவரின் உரையில் சில நண்பர்களுடன் என்னையும் குறிப்பிட்டு இருந்தார். அதையும் முகநூலில் வந்து தெரிவித்தார். அப்போதுதான் தெரிந்தது அவர் என் மீது கொண்ட நட்பின் ஆழம். சென்ற முறை ஊருக்குப் போன போது இவரையும் முத்து நிலவன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா  என இன்னும் பலரைசயும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... அப்படித்தான் ஆனது. சில பல வேளைகளாலும் எங்கள் ஊரிலே இருக்க வேண்டிய சூழலாலும் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

இங்கு திரும்ப சில நாட்களே இருக்கும் போது இணையப்பக்கமே வரமுடியாமல் இருந்த நான் ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும். முகநூல் சாட்டிங்கில் வந்தார். இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து காலையில் போனில் பேசுகிறேன் என்றேன். இப்பவே கூப்பிடலாம் பிரச்சினை இல்லை. நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன் என்றார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசினோம். முதல் பேச்சு என்றாலும் பல நாள் பழகியவரைப் போல குடும்ப விசாரிப்புக்கள், நல விசாரிப்பு, வலைப்பேச்சு என பேசினார். பின்னர் நாவலை அனுப்ப முகவரி கேட்டார்.

ஊருக்கு கிளம்பும் நாள் வரை நாவல் வரவில்லை. இனி இப்ப வராது என்று நினைத்து கொண்டிருந்த போது தபால்காரர் போன் செய்து முகவரி கேட்டார். பின்னர் மெயின் ரோட்டுக்கே சென்று அவரிடம் வாங்கி வந்து இங்கு கொண்டு வந்து மீண்டும் ஒரு முறை எழுத்தில் வாசித்ததை அச்சில் வாசித்தேன். ஒரு திரைப்படம் போல் சோகம், காதல், அடிதடி, இறுதி நிமிட சண்டைக்காட்சி என அசத்தலான நாவல் அது. அப்புறம் இங்கு வந்த பிறகு சில முறைகள் போனிலும் பல முறைகள் முகநூலிலுமாக எங்கள் உறவு வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் நமது நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கப் போகிறேன் என்றார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அது குறித்த விவாதங்கள் நடந்தபோதெல்லாம் எனக்கு செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார். சென்னையில் இயக்குவதாக இருந்த குறும்படம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் நின்று போக, அவரின் தளத்தில் எழுதிய ஒரு பக்க கதை ஒன்றை எடுத்துக் கொண்டு கும்பகோணத்துக்கே சென்று விட்டார். இயக்குநராகும் முயற்சியில் இறங்கியவர், தனது முதல் படத்தை தனது சொந்த ஊரிலேயே ஆரம்பித்தது சந்தோஷமான விஷயம் என்றால் முதல் காட்சியாக கோவில் கோபுரத்தைக் காட்டியிருப்பது சிறப்பு. அவரும் கோபுரமாக உயர்ந்து தமிழ்ச் சினிமா உலகில் கலசமாக விளங்க வாழ்த்துவோம்.

சகோதரர்கள் அரசன், கோவை ஆவி, துளசி சார் என நட்பு வட்டங்களை வைத்துக் கொண்டு ஒரு அருமையான குறும்படத்தை இயக்கி விட்டு அதன் பின்னான நாட்களில் அதற்கான வேலைகளில் இருந்த போதும் இன்று இது செய்தோம்... இன்று இது... என்று முகநூலில் சொல்லி விடுவார். இந்தக் குறும்படத்தை இயக்குவதில் இருந்து அதை வெளியிட்டது வரை எனக்கு எல்லா நிகழ்வுகளையும் தெரியச் செய்தார். சில நொடி சிநேகம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்கள் இருக்கின்றன. எப்படிப்பட்ட விமர்சனங்களைக் கடந்து அவரின் கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கதை என்று எடுத்துக் கொண்டால் நமக்கெல்லாம் ஒரு பேருந்துப் பயணத்திலோ ரயில் பயணத்திலோ அல்லது விமானப் பயணத்திலோ கிடைக்கும் நட்பைப் பற்றியதுதான். ஆட்டோவில் பயணிக்கும் இருவர், டிரைவர் கொடுத்த சில்லரை விஷயமாகப் பேச ஆரம்பித்து ஒரே ஊருக்குப் போவது தெரிந்ததும் இன்னும் இறுக்கமாகிறார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் ஒருவர் டீ சாப்பிடப் போக அங்கு மாமாவைப் பார்க்க, அவர் காரில் கூப்பிட சரி என ஏறி, நண்பரைப் பற்றிச் சொல்லி அவரையும் கூட்டிச் செல்ல அவர்கள் நின்ற இடம் வந்து தேடுகிறார்கள். ஆள் இல்லை என்றதும் சில நிமிட நட்புத்தானே... என்று அவரை மறந்து தனது மாமாவுடன் செல்கிறார். மற்றவரோ ஒரு கடைக்குள் இருந்து வெளியாகி பேருந்து வந்ததும் ஓடி ஏறி இருக்கையில் ஒரு இடம் பிடித்து வைத்து அதற்காக மற்றவர்களிடம் சண்டை போடுகிறார். பேருந்து கிளம்ப நண்பனைத் தேடி சன்னலுக்கு வெளியே நீளும் அவரது முகத்தில் தெரியும் தவிப்போடு நிறைவு பெறுகிறது.

எடுத்த இடம், எடுத்திருக்கும் விதம் என எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இயக்குநர்களும் நடிக்க வேண்டும் என்ற தமிழ்ச் சினிமா வழக்கப்படி இதில் இயக்குநரான அண்ணன் சரவணன் அவர்களும் ஒரு காட்சியில் வருகிறார். மனிதர் பேப்பர் வாசித்துக் கொண்டு நிற்கிறார். கேமராவைக்கூட பார்க்கவில்லை... அது ஏன் என்று தெரியவில்லை... 

இந்தப்படம் மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் வெளியிடப்பட்டது ஒரு சந்தோஷமான நிகழ்வு. படம் வெளியான மாலை அண்ணன் ஒரு இணைப்பு முகவரி கொடுத்திருந்தார். அது வேலை செய்யவில்லை என்பதை ஸ்ரீராம் அண்ணா தெரிவித்திருந்தார். நானும் அந்த இணைப்பின் வழி சென்றபோது அப்படித்தான் இருந்தது. அதன் பிறகு அவர் கொடுத்த மற்றுமொரு இணைப்பு வழி சென்று பார்த்தேன்.


சரவணன் அண்ணனின் நண்பரும் பாக்யா வார இதழில் பணிபுரிபவருமான திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்கள் நேற்று தனது முகநூல் பகிர்வில் இந்தப்படத்தைப் பற்றிச் சொல்லி கண்டிப்பாக அனைவரும் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். சரவணன் அண்ணனிடம் ஒரு கேள்வி, அவரின் மானசீக குருவான கதைச் சித்தர் திரு. கே.பாக்கியராஜ் அவர்களிடம் படத்தைக் காண்பித்து வசிஷ்டர் வாயால் வாழ்த்து வாங்கியிருக்கிறார். அவர் என்ன சொன்னார்... என்ன சொன்னார்... என கோவை ஆவியும் இவரும் நம்மளைக் கேள்வி கேட்கிறார்களே ஒழிய சொல்லவே இல்லை. அந்த வாழ்த்து என்ன என்பதை எல்லோருக்கும் சொல்லுங்கள் அண்ணா.

இந்தப் படம் நல்லாயிருக்கு.... நல்லாயில்லை... சுமார் ரகம்தான்... பரவாயில்லை... என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை... இது சரவணன் அண்ணனின் கன்னி முயற்சி... கடுமையான உழைப்பு... பல நாள் கனவு... அவரின் முயற்சியைப் பாராட்டுவோம்... முடிந்தளவுக்கு வலை நட்புக்கள் இந்தப் படத்துக்கான இணைப்பை தங்களின் பகிர்வுகளில் சொல்லுங்கள். அதுவே ஒரு வலைப்பதிவராய் நம் சக பதிவரின் படைப்பை ஊக்குவிக்கும் செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அண்ணா, முதன் முதலில் குறும்படமாக எடுக்க நினைத்த கதையை சிறப்பான குறும்படமாக விரைவில் கொண்டு வாருங்கள்.

வாழ்த்துக்கள் அண்ணா...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

நண்பேன்டா : பிரான்சிஸ்


ண்பேன்டா வரிசையில் இன்று பூக்கும் நண்பன் கல்லூரியில் எங்களுடன் படித்த பிரான்சிஸ். கல்லூரிக்கு அருகில் வீடு... மதியம் எங்களுடன் சாப்பிடும் கொடுப்பினை எல்லாம் இவனுக்கு இல்லை... எங்கள் நட்பு வட்டத்தில் அந்தச் சந்தோஷத்தை இழந்த ஒரே நண்பன் இவன். பின்னே பல வகையான சாப்பாடுல்ல சாப்பிடுவோம்... கடைசிப் பிரிவேளை முடிந்ததும் வீட்டுக்குச் சாப்பிட வேகமாக சைக்கிளில் கிளம்பிவிடுவான். ஒரு சில நாள் வலுக்கட்டாயமாக எங்களது சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருக்க வைப்போம். பெரும்பாலும் வீட்டுக்குப் போவதற்குத்தான் நினைப்பான். காரணம் வீட்டில் மூத்த பையனாக இருந்தாலும் அப்பா, அம்மா இருவருமே இவனிடம் அதிகம் பாசம் காட்டுவதில்லை. எதற்கெடுத்தாலும் கேள்விக் கனைகள்தான். அதற்காகவே பயந்து சரியான நேரத்துக்குச் சென்று விடுவான்.

ஆரம்பத்தில் முதல் பெஞ்ச் முக்கியஸ்தர்களான முத்தரசு பாண்டியன் மற்றும் ராமகிருஷ்ணனுடன் அமர்ந்திருந்ததால் அவர்களுடன் மட்டுமே பேசுவான். இரண்டாவது வரிசை நாயகர்களான  அண்ணாத்துரை, சேவியர் மற்றும் என்னுடன் எப்போதாவது பேசுவான். ஒரு சின்னச் சிரிப்புத்தான் எல்லாத்துக்கும் பதிலாக வரும். பனிரெண்டாம் வகுப்பு வரை பெங்களூரில் சித்தி வீட்டில் இருந்து படித்தவன். ஆங்கில அறிவு அதிகம். தமிழ் பேசுவது கூட இழுத்தாற்போலத்தான் இருக்கும். நல்லாப் படிப்பான். 

முதல் வருடம் முடிவதற்குள் நம்ம கூட்டணியில் முக்கிய நபரானான். அரட்டை அடிப்பது என்றால் இவனுக்கு அவ்வளவு சந்தோஷம். இரண்டாம் வருடத்தில் எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு அளவே இல்லை. முதல்வருக்கே ஏப்ரல் மாத  முதல் நாளில் உஜாலா சொட்டு நீலம் அடித்த மிகச் சிறந்த மாணவர்கள்தான் நாங்கள். அதைத் துணிந்து செயலாற்றியவன் ஆதி என்றாலும் மூளையாக இருந்தவன் நம்மாளுதான். தீபாவளி வெடி வைக்கணுமா மதியம் சாப்பிட்டு வரும் போது கையில் ஊதுபத்தி வாங்கி வருவான்.

இரண்டாம் ஆண்டின் இறுதியில் எங்கள் குழுவின் அதிரடி ஆட்டத்தில் முக்கியமானது சூசைரத்தினம் பாட்டுப் பாட, மேஜையில் தாளம் போட்டு அமர்க்களம் படுத்தும் நிகழ்வுதான். எங்கள் வகுப்பறை வாசலில்தான் குடி தண்ணீர் வைத்திருப்பார்கள். அதைக் குடிக்க வரும் மாணவிகள் எங்கள் பாடகரின் பாட்டுக்கும் எங்களின் தாளத்துக்கும் ரசிகையாகி விட, எங்களுக்கும் நல்லா பொழுது போச்சு. இவனும் சாப்பிட்டு கை கழுவுவானோ இல்லையோ கல்லூரிக்கு வந்து விடுவான். எதோ ஒரு பொண்ணை சரியாக கணித்து வைத்திருப்பான். 'பங்காளி இன்னும் அந்தப்புள்ளையக் காணோம்... இன்னைக்கு வரலையோ?' என்று மெதுவாக கேட்பான். 'தெரியலையே வேணுமின்னா... அதோ அந்த பச்சைத் தாவணி அந்த வகுப்பு புள்ளதான். அதுக்கிட்ட  போயி கேட்டுட்டு வாரியா?' என்று ராம்கி திருப்பிக் கேட்டதும் 'டேய் பாருங்கடா... நானாச்சும் அந்தப்புள்ளையத்தான் பாக்குறேன்... இவன் அதோட கிளாஸ்மெட்டையெல்லாம் பாக்குறான்டா...  கேட்டா ரொம்ப நல்லவன்னு சொல்லுவாய்ங்க...' என்று நக்கலாகச் சொல்லி விட்டு பேசாமல் அமர்ந்து விடுவான்.

இரண்டாண்டு சந்தோஷங்கள் எல்லாம் மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் உருக்குலைந்தது. காரணம் கல்லூரி ஒரு பத்து நாள் விடுமுறைக்குப் பின்னர் திறக்கப்பட்டபோது இவன் வரவில்லை. இரண்டு நாட்களுக்கும் மேலாக வரவில்லை என்றதும் எப்பவும இவனோட வீட்டுக்குப் போகும் ராம்கியைப் போய் பார்த்துவிட்டு வரச்சொன்னோம். 'அவனுக்கு உடம்புக்கு முடியலையாம்... பெங்களூர்ல இருக்கானாம். அடுத்த வாரம் வருவானாம்' என்று சொன்னான். என்னாச்சு... ஏதாச்சு என்பது தெரியாமல் ஒரு வாரம் கழிய, முத்தரசும் ராம்கியும் ஒரு நாள் மிகப்பெரிய குண்டைத்தூக்கிப் போட்டார்கள். எங்க எல்லாருக்கும் இதயமே நின்று விட்டது.

'பிரான்சிஸ் வீட்லதான் இருக்கான்.... பைத்தியமாயிட்டானாம்... என்ன என்னவோ பேசுறான்... நெத்தியில விபூதி, குங்குமம் எல்லாம் வச்சிக்கிட்டு அவனா பேசிக்கிட்டு சிரிக்கிறான்... எங்களைத் தெரியல...' என்று சொல்லவும் எல்லோரும் அவனோட வீட்டுக்குப் போனோம். அங்கு அவன் திண்ணையில் உக்காந்திருந்தான். நெற்றியில் கலர்கலராய் குங்குமம்... எங்களைப் பார்த்ததும் அதே சிரிப்பு... பின்னர் என்னென்னவோ பேசினான். அவங்க அம்மா, அப்பா எல்லாரும் ஒரே அழுகை. அப்பாவோ 'இப்பத்தான் கூட்டியாந்தோம்... இங்க வந்ததும் ரொம்பப் பண்ணுறான் பாருங்க... குங்குமத்தை எல்லாம் நெத்தியில வச்சிக்கிட்டு... படிக்கிற பய மாதிரியா இருக்கான்... பேசாம் பெங்களூர்ல கொண்டு போயி வச்சிப் பாக்கலாம்ன்னு பார்க்கிறேன்' என்றார். எங்களுக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கிளம்பி வந்து விட்டோம்.

எங்கள் பேராசிரியரிடம் விவரம் சொல்லி அவனை எங்களுடன் வகுப்பறையில் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டோம். அவரோ முடியாத பையன்... நீங்க அவனோட ஒத்துப் போயிடுவீங்க... பொண்ணுங்க இருக்காங்களே என்று யோசித்தார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமில்லையா... எங்க பேராசிரியரோ எங்களுக்குத் தங்கம்... மனம் இறங்க மாட்டாரா என்ன.... அதுவும் நல்லாப் படிக்கிற பசங்கன்னு எங்க மேல எப்பவும் அவருக்கு தனி அன்பு உண்டு. நீண்ட யோசனைக்குப் பின்னர் ஒத்துக் கொண்டார். அவங்க வீட்டில் பேசி ஆறாவது செமஸ்டருக்குள் பழைய பிரான்சிஸா மாறிடுவான் என்று சொல்லி வகுப்பறைக்கு கூட்டி வந்தோம்.

தினமும் ராம்கி தன்னோட சைக்கிளில் அவனைக் கூட்டி வருவான். வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது இவன் எதாவது பேசிக் கொண்டிருப்பான் அல்லது எதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். அவனுக்கு அருகில் இருந்த ராம்கி கையைப் பிடித்து அமுக்கி அமுக்கி அடக்குவான். நாங்கள் எப்பவும் போல் அவனுக்கு முன்னால் எங்க ஆட்டங்களைத் தொடர்ந்தோம். மதிய வேளைகளில் பாட்டுக் கச்சேரி தொடர்ந்து நடந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் எங்கள் வகுப்பறையே அவனை குணமாக்குவதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தது. எந்தப் பெண்ணும் பச்சாதாபத்துடனோ... பயத்துடனோ பார்க்கவில்லை.

மாதங்கள் கரைய அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக உளறலும் கிறுக்கலும் குறைந்து அமைதியாக இருக்க ஆரம்பித்தான். ஆறாவது செமஸ்டர் எழுதும் முன்னர் ஆள் முன்பிருந்த பிரான்சிஸ் ஆனான். எப்பவும் போல் ஜாலியாக இருக்க ஆரம்பித்தான்... பேச ஆரம்பித்தான்... ஐந்தாவது செமஸ்டரையும் ஆறாவதில் எழுதி முதல் வகுப்பில் தேறினான். 'நான் அப்படியே போயிருப்பேன்.. நீங்கதான்டா என்னைய மறுபடியும் நடமாட விட்டிருக்கீங்க'ன்னு எப்பவும் புலம்புவான். கல்லூரி முடிந்த கையோடு பெங்களூருக்கு அனுப்பப்பட்டான். பின்னர் யாருடனும் தொடர்பில் இல்லை.

சில வருடங்களுக்குப் பிறகு எங்களது கணிப்பொறி மையத்துக்கு யாரோ சொல்லி என்னைத் தேடி வந்தான். வந்ததும் பங்காளி என என்னைக் கட்டிக் கொண்டான். 'எப்படிடா இருக்கே? என்றவன் பழைய பிரான்சிஸாக இல்லாமல் ஆளே மாறியிருந்தான்.  'என்னடா... எங்க இருக்கே... ஆளே மாறிட்டே' என்றதும் 'வாழ்க்கையே மாறிப்போச்சுடா... எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்... எல்லாம் போச்சு... உங்களோட இருந்த அந்த மூணு வருசந்தாண்டா என்னோட வாழ்க்கையில சந்தோஷமான காலம்... அது திரும்பி வருமாடா' என்றான். 'ஏன்டா... என்னாச்சுடா... ?' என்றதும் 'எங்க வீட்டைப் பத்தித்தான் தெரியுமே? விடு... பாக்ஸ்புரோ சொல்லித்தாரியா... கொஞ்ச நாள் இங்க இருப்பேன்... தினமும் வாறேன்...' என்றான். சரிடா என்றதும் ரொம்ப நேரம் கல்லூரியில் பார்த்த பிரான்சிஸாக சிரித்து பேசினான். ப்சங்க பொண்ணுங்க என எல்லோரையும் விசாரித்தான். 

ஒரு வாரம்தான் வந்திருப்பான். ஒரு நாள் வந்தவன் 'இன்னைக்கு பெங்களூர் போறேன்' என்றான். 'என்னடா கொஞ்ச நாள் இருப்பேன்னு சொன்னே... அதுக்குள்ள எதுக்கு...' என்றேன். 'உனக்குத்தான் எங்க வீட்டைப் பத்தித் தெரியுமே... இங்க எனக்குச் சரிவராது... அங்கதான் என்னோட லைப்புன்னு ஆயிப்போச்சு... சரி விடு... அந்த மூணு வருசத்தை நினைத்து இன்னும் முப்பது வருசம் ஓட்டிடுவேன்... வாழ்க்கை மாறிடுச்சுடா... சந்தோஷம் எல்லாம் காற்றில் கரைந்துருச்சு... வாறேன்டா... ஞாபகத்துல வச்சிக்கோ' என்று சொல்லிக் கிளம்பினான். அதன் பின்னான நாட்களின் அவன் குறித்து எந்தத் தகவலும் எங்க நட்பு வட்டத்தில் இல்லை.

இன்றைய பொழுதில் பெங்களூரில் ஏதோ ஒரு இடத்தில் அன்பான மனைவி, அழகான குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்று நம்புகிறேன். எங்கிருந்தாலும் அவன் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் கிடைக்காத சந்தோஷம் இறை அருளால் மனைவி மக்கள் வழியாகக் கிடைக்கட்டும்.

நண்பா நீ எங்கிருந்தாலும் நல்லாயிருப்பேடா....

-நண்பேன்டா தொடரும்
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 27 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 5)

(வலைச்சர ஆசிரியனாய் இருந்ததால் சனிக்கிழமை பதிவிட முடியவில்லை. 

இனி எப்பவும் போல் சனிக்கிழமை தொடரும் )

----

முந்தைய பகுதிகள் : பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4


நான்காம் பகுதியின் இறுதியில்...

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சும்மாதான் கேட்டேன்... வந்தா பேசச் சொல்லும்மா...." வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

"மாமா... சும்மா சொல்லுங்க... என்ன பண விஷயமா?" என்று நேரடியாகக் கேட்க கந்தசாமிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.

இனி...

ருமகள் அப்படிக் கேட்டதும் கந்தசாமிக்கு என்னவோ போலாகிவிட்டது. பதில் சொல்லாமல் அமைதி காத்தார்.

"என்ன மாமா பேச்சைக் காணோம்... எங்கிட்ட சொல்லக் கூடாதா என்ன?"

"ஏய்... அப்படியெல்லாம் இல்லத்தா... அது... அது... வேற ஒண்ணுமில்ல... மழ விட்டு வெட்டரிக்க ஆரம்பிச்சிருக்கு... பொதி கட்டுன பயிரு... இப்ப பூச்சி விழுந்தா வீணாப் போயிடும்... கையில காசு இல்ல... அதான்..." மெதுவாக இழுத்தார்.

"ம்... இதை அவர்கிட்டத்தான் கேக்கணுமா... எங்கிட்ட கேக்கக் கூடாதா?"

"இல்லத்தா... அப்படில்லாம் இல்ல..." பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கினார்.

"அவருக்கிட்ட இருக்கான்னு தெரியலை மாமா... கேட்டு அனுப்பச் சொல்றேன்... இப்ப எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... இன்னைக்கு அனுப்பி வைக்கிறேன்... அதை வச்சி உரம் வாங்கிப் போடுங்க..."

"நீ எதுக்குத்தா... அவனுக்கிட்ட வாங்கிக்கிறேனே..."

"நா உங்க மருமகதானே...? அப்புறம் எதுக்கு யோசிக்கிறீங்க..."

"இல்லத்தா... உனக்குன்னு செலவு இருக்கும்... இருக்க காச அனுப்பிட்டு..."

"ஒரு கஷ்டமும் இல்லை மாமா... அத்தைய மழை நேரத்துல வெளிய தெருவ போகும் போது பாத்துப் போகச் சொல்லுங்க... உடம்பைப் பார்த்துக்கங்க..."

"சரித்தா... அப்ப வச்சிடுறேன்... தம்பி வந்தா போன் பண்ணச் சொல்லு..."

"சரி மாமா" என்று அவள் போனை வைக்க, அவரும் போனை வைத்து விட்டு முகத்தில் பூத்திருந்த வியர்வையை துண்டால் துடைத்துக் கொண்டே கட்டிலில் போய் உட்கார்ந்தார்.

"என்னங்க பய இல்லயோ... மருமவதான் பேசுனாளா?"

"ம்..."

"கேட்டதுக்கு என்ன சொன்ன... இவளும் கைய விரிச்சிட்டாளா?"

"சேச்சே.... தம்பி வெளிய பொயிட்டானாம்... மருமகப் பொண்ணு தங்கமான பொண்ணு... அதுக்கிட்ட எப்படி கேக்குறதுன்னு பாத்தா இதுக்குத்தான் போன் பண்ணியிருப்பேன்னு சும்மா கற்பூரமாட்டம் கப்புன்னு பிடிச்சிக்கிச்சு.. தம்பிக்கிட்ட சொல்றேன்னு சொன்னுச்சு... இப்ப அதுகிட்ட இருக்க காச அனுப்புறேன்னு சொன்னுச்சு... "

"ம்... மவராசி அப்படியாச்சும் சொன்னாளே... பெரிய செட்டு மாதிரி எதுத்தெறிஞ்சு பேசாம..."

"ஏய்... எல்லாரயும் ஒரு மாதிரி பாக்காத... இந்தப்புள்ள என்ன ஒரு தன்மையாப் பேசுச்சு தெரியுமா? எங்க அண்ண வீட்டுச் சொந்தம் விட்டுப் போக்கூடாதுன்னு மூத்தவளக் கொண்டு வந்தே... இன்னைக்கி அது அத்துக்கிட்டு போப்பாக்குது... எனக்குப் பிடிச்சிருக்குன்னு சின்னவன் இவளத்தான் கட்டுவேன்னு நின்னான்... அன்னைக்கி எதுத்தோம்... கடைசியா ஒரே சாதிங்கிறதால ஒத்துக்கினோம். இன்னைக்கு அந்தப்புள்ள நம்மள பாசமா நெனைக்கிது... எனக்குத்தான் அதுக்கிட்ட காசு கேக்க என்னமோ மாதிரி இருந்துச்சு..."

"அன்னக்கி நா மட்டுமா எதுத்தேன்... எல்லாருந்தானே எதுத்தோம்... நல்ல குடும்பத்துல இருந்து வந்தவ... நல்லாப் பேசுறா..."

"அப்ப  மூத்தவ நாறக்குடும்பமா என்ன?"  படக்கென்று கேட்டுவிட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தவரைப் பார்த்து காளியம்மாள் முறைக்க "என்னதான் இருந்தாலும் உன்னோட பரம்பரையில்ல... கோபம் பொத்துக்கிட்டு வந்திருமே? விடு... எல்லாரும் ஒரு நா இல்லாட்டி ஒரு நா... புரிஞ்சிப்பாங்க..."

"எப்ப நம்ம மண்ட மண்ணுக்குள்ள போனதுக்கு அப்பறமா?"

"அப்புடி நடக்கணுமின்னு இருந்தா ஆரு தடுக்க முடியும்..." என்றவர் "சரி... சரி... வா மாடுகள குளுப்பாட்டிக்கிட்டு வருவோம்... அப்புறம் உக்காந்துட்டேன்னு கத்த ஆரம்பிச்சிருவே..." என்றபடி எழுந்தார்.

ரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு...

கஞ்சியைக் குடித்து விட்டு "போஸ்டாபீஸ் வரைக்கும் போயி பணம் வந்திருக்கான்னு பாத்துட்டு வாரேன்... அன்னைக்கே அனுப்பிட்டேன்னு சொன்னுச்சு... மழத் தண்ணி கெடக்கதால தபால்காரர் வரலை போல..." என்றபடி தோளில் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டினார். அப்போது வாசலில் வண்டி வந்து நிற்க, எட்டிப் பார்த்து விட்டு "ஆத்தி... பெரிய மாப்புள்ளயில்ல வாராக... ஏலா... சேரெடுத்துப் போடு சுந்தரியும் மாப்ளயும் வாராக..." என்றபடி வாசலுக்குச் சென்று "வாங்கப்பா... வாத்தா... என்றார்.

"அப்பா... நல்லாயிருக்கீகளா?" வாயெல்லாம் பல்லாக கேட்டபடி வந்தாள் மூத்த மக சுந்தரி.

"எனக்கென்னத்தா கொற... புள்ளக பேசுச்சுகளா?"

"ம்... அம்மா எங்க... அங்கிட்டு வரவே மாட்டேங்கிறீங்க..?"

"வயவேலயே சரியா இருக்கு... எங்கிட்டு வெளிய தெருவ போறது.... உங்கம்மா எங்க போகப்போறா... உள்ளதான் இருக்கா... " என்றதும் வெளிய எட்டிப்பார்த்த காளியம்மா "வாத்தா... வாங்கப்பா..." என்று சொல்லி விட்டு மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஏம்மா ரெண்டு நாளு அங்கிட்டு வந்து இருந்துட்டு வரவேண்டியதுதானே... இதுக்குள்ளே ஏங்கெடக்கே...?"

"ஆடு... மாடெல்லாம் ஆரு பாப்பா...அதவிட நா அங்கிட்டு வந்துட்டா உங்கப்பனை ஆரு மேக்கிறது...?"

"ஆத்தாளும் மகளுக்கும் நாந்தேன் கிள்ளுக்கீரையா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.

"இந்த வயசுல அதெல்லாம் எதுக்கு... வித்துப்புட்டு அக்கடான்னு இருக்க வேண்டியதுதானே... சும்மா ஆடு மாடுன்னு இழுத்துக்கிட்டு...?"

"அதுகளோடவே பழகியாச்சு ஆத்தா... அதையும் வித்துப்புட்டா... உங்கள எல்லாம் வெளிய அனுப்பிட்டு இருக்க எங்களுக்கு அதுகதான் தொண... அதுகளையும் வித்துப்புட்டு குர்ரான்னு இருக்கச் சொல்லுறியாக்கும்..." என்றவர் மாப்பிள்ளை அமரும் வரை நின்று கொண்டே இருந்தார்.

"ஏய் காபி போட்டுக் கொடு... இருங்கப்பா.,.. ஒரு எட்டு டவுன்னுக்குப் போயி கறி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்..."

"அய்யோ... அதெல்லாம் வேணாம் மாமா... உங்க மகளுக்கு உங்க நெனப்பு வந்து ரெண்டு மூணு நாளா நச்சரிப்பு... அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்.. எனக்கொரு வேல இருக்கு... பொயிட்டு மத்தியானத்துக்கு மேல வாரேன்..." என்றபடி எழுந்தார் மாப்பிள்ளையும்  பஞ்சாயத்துப் போர்டு பிரசிடெண்டுமான அழகப்பன்.

"எப்பவாச்சுந்தான் வாரீக... அப்பவும் கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டு வாரீக..."

"என்ன மாமா பண்றது... பிரசிடெண்ட் இல்லையா... இப்ப மழ பேஞ்ச பக்கமெல்லாம் போயி பாத்து பாதிப்பு இருந்தா நிவாரணம் கிடைக்க உதவணுமில்ல... அதான் பொண்டுகசட்டி பாண்டி வாரேன்னு சொன்னான். சாத்தமுத்திப் பக்கம் பொயிட்டு வரலாம்ன்னு பாத்தோம்.

"ஆமா... ஆமா... ஜெயிக்க வச்சவிகளுக்கு எதாவது செய்யணுமில்ல... எங்க பெரசண்டுந்தான் இன்னிக்கு வந்து பாத்துட்டு போனாரு... சரிப்பா... பொயிட்டு மத்தியானஞ் சாப்புட இங்க வந்துருங்க... வீட்லதான் கோழிக நிக்கில்ல.... வெடக்கோழியா அடிச்சி ரச வக்கச் சொல்லுறேன்..."

"ம்... சரி... வந்துடுறேன்.." என்றபடி கிளம்ப, "என்னத்தா புள்ளக போன் பேசுச்சுகளா?" என்று மகளிடம் கேட்டார்.

"ம்... பேசுனாக... பய இந்த வாரம் வருவான்..."

"அவன் வந்தாத்தான் இங்க வந்துருவானே... பொம்பளப்புள்ளயயும் ஆஸ்டல்ல போட்டு வச்சிருக்கீக... நீங்கள்லாம் வயசுக்கு வந்தப்புறம் வெளியவே விட்டதுல்ல..." காளியம்மாள் பேத்திக்காக வருத்தப்பட்டாள்.

"அம்மா... பழங்காலத்துல இருக்க முடியுமா? இப்ப எவ்வளவோ மாறிடுச்சி... படிக்கணுமின்னா பிரிஞ்சி இருக்கத்தான் வேணும்... ஆமா... அப்பா எங்கயோ கெளம்புனது மாதிரி இருந்துச்சு..."

"ஆமா... தபால்காரர் வரல... தம்பி பணம் அனுப்புறேன்னு சொன்னான்... அதான் பாத்துட்டு வரலாம்ன்னு கெளம்புனே... நீ வந்துட்டே... இனி என்னத்த போனே..." என்றபோது "வாக்கா... ரொம்ப நாளா ஆளக்க்கணோம்... ஆமா அத்தான் வந்ததும் வராததுமா ஓடிட்டாரு..." என்று கேட்டுக் கொண்டே சுந்தரிக்கு அருகில் வந்து அமர்ந்தான்.

(வேரும் விழுதுகளும் தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வலைச்சர நிறைவுப் பகிர்வு : நன்றி உனக்குச் சொல்ல

வலைச்சர ஆசிரியனாய் நேற்றைய நிறைவு நாள் பகிர்வில் நன்றி சொல்லும் பகிர்வாக பகிர்ந்ததை அப்படியே இங்கு கொடுக்கிறேன். வலைச்சரத்தின் இணைப்பு நன்றி உனக்குச் சொல்ல

வணக்கம்.

கடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான்எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும்அம்மாநான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவிபள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள்எங்கப்பா எழுதுனதுன்னு சொல்லும் செல்ல மகன் என அனைவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

என்னையும் எழுத வைத்து உலகளாவிய நட்பைக் கொடுத்த இறைக்கான நன்றி.

வலைச்சர ஆசிரியர் பணி குறித்து முதலில் சீனா ஐயா என்னிடம் கேட்டபோது அலுவலக வேலைச் சூழலில் பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவும் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் யோசனையோடுதான் ஒத்துக் கொண்டேன்.

காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் சென்று தொடர்ந்து 11 மணி நேரங்கள் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிவிட்டு அறைக்கு வந்து ஊருக்குப் பேசிசமையல் செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி இரவு பதினொன்றுக்கு மேலாகிவிடும். இந்தச் சூழலில் தினம் ஒரு பகிர்வு சாத்தியப்படுமா என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஜோதிஜி அண்ணன் அவர்கள் உன்னைவிட பணிச்சுமையில் நான் இருக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் உன்னை மெருகேற்றும்... செய் என்று சொன்னார்கள். சரி... சென்ற முறை போல் அதிகம் சிரமமின்றி ஓரளவு பகிர்வு தேத்திப் போட்டாப் போச்சு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அதை கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த்தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். அதன்படி நம்பிக்கையை வீணாக்காமல் முடிந்தளவுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் முதல் நாள் இரவே எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து ஊருக்குப் பேசிக் கொண்டே பதிவு எழுத ஆரம்பிப்பேன். பூவாக இருக்கும் பகிர்வு மொட்டாகி... காயாகி... கனியாகும் போது இரவு 1 மணியைத் தொட்டு விடும். அதன் பிறகு தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வைத்து விட்டு நித்திரையை அணைத்துக் கொள்வேன். மறுநாள் காலை குளித்து வந்ததும் அவசர அவசரமாக பதிவை பகிர்ந்து விட்டு கிளம்பி விடுவேன். மாலை வந்து பதிவருக்கெல்லாம் விவரம் தெரிவித்து பின்னூட்டம் போட்டு விடுவேன். தீபாவளி அன்று மதியம் வந்து விட்டதாலும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதாலும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.

இந்த வாரத்தில் பதிவு இடும்போது அதிகம் பின்னூட்டம் வரவாய்ப்பில்லை என்று தோன்றியது. காரணம் தீபாவளி விடுமுறைபதிவர் மாநாடு என நம் மக்கள் அனைவரும் ரொம்ப பிஸி. இருந்தாலும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உங்கள் மனதில் நிற்கும் வண்ணம் நிறைவாய் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு இணங்க முடிந்தளவு சிறப்பாக செய்திருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒரு படப்பாடலின் முதல் வரியாகவும் பதிவுக்குப் பொறுத்தமான பாடலையும் பகிரும் எண்ணம் முதல் பகிர்வை பகிரும் போதுதான் தோன்றியது. அதுவும் நல்லாத்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

எனக்கு வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவுக்கும் மற்றும்தமிழ்வாசி பிரகாஷ்ராஜி அக்கா இருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களால் எனக்கு ஊக்க உரமிட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

இனி எப்பவும் போல மனசு வலைப்பூவின் மூலமாக உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கும் வரை இந்த கிராமத்தானை நினைவில் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் என்னோட மனசுக்கு வாங்க...

எப்பவும் போல் இன்றும் நன்றி சொல்ல ஒரு பாடல்... கேளுங்கள் ரசிப்பீர்கள்...
நன்றி சொல்ல உனக்கு

ஒரு வாரம் என்னை ஆசிரியனாய் ஆக்கிப் பார்த்த வலைச்சரத்துக்கும் என்னோடு பயணித்த வலை நட்புக்களுக்கும் மீண்டும் நன்றி.
நட்புடன்
-சே.குமார்

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வலைச்சர ஏழாம் நாள் : ஒரு வானவில் போல

வலைச்சர ஏழாம் நாளான இன்று 'ஒரு வானவில் போல...' என்ற பகிர்வில்...

நம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.
கல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க...அப்படியே போகாமல் இந்தப் பாட்டையும் பார்த்துட்டுப் போங்க...

காதல் மயக்கம்... அழகிய கண்கள்....

-'பரிவை' சே.குமார்.

சனி, 25 அக்டோபர், 2014

வலைச்சர ஆறாம் நாள் : உன் சமையல் அறையில்

வலைச்சரம் ஆறாம் நாள் பகிர்வாக உன் சமையல் அறையில் என்ற தலைப்பில் பகிர்ந்தேன். இதில் சமையல் குறித்து எழுதும் தளங்களைத் தொகுத்தளித்தேன். அதில்...

மையல் செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை எல்லாருக்கும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. ஆண்களை விடுங்கள்... பெண்களில் கூட எல்லாரும் நல்லாச் சமைப்பதில்லை. மீன் குழம்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்றாலும் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேரின் கைவண்ணமும் ஒன்றாக இருப்பதில்லை. சமையலில் கைப்பக்குவம் மிகவும் முக்கியம். எங்க ஐயா (அப்பாவின் அப்பா) ஒரு சமையல் மேஸ்திரி. மிகச் சிறந்த சமையல்காரர். இவரின் கைப்பக்குவத்துக்கே தனி மரியாதை இருந்தது. எங்கப்பாவுக்கும் சித்தப்பாவும் சமையல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.
எங்க வீட்டில் அக்காக்கள் சமையல் அப்போது அருமையாக இருக்கும். இப்போது பிள்ளைகளுக்காக காரம் குறைத்து உணவில் சுவை குறைத்து விட்டார்கள். எங்கள் நால்வரில் தம்பி தவிர மற்ற மூவரும் நன்றாகச் சமைப்போம். சும்மாவே செட்டிநாட்டுக்காரர்கள் என்றால் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பார்கள். விதவிதமாக சமைப்பதில் எங்க ஆளுங்க கில்லாடிங்க. விருந்து உபச்சாரத்திலும் குறை வைக்க மாட்டார்கள். இப்போ இங்கு கூட நான் சமைக்கப் போனால் பக்கத்து அறை நண்பர்கள் செட்டிநாட்டு வாசனை மூக்கைத் துளைக்குது என்று சொல்லியபடி இன்று என்ன சமையல் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
சாப்பாட்டு விஷயத்துல கடவுள் நமக்கு குறையே வச்சதில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அம்மாவுடன் அதிகம் இருந்தது நான்தான். அம்மாவின் கைப்பக்குவம் சான்ஸே இல்லை. என்ன செய்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது வாரச்சந்தைக்குப் போவது நான்தான். எனவே இப்போது ஊருக்குப் போனாலும் காய்கறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் தம்பிய போய் வாங்கிட்டு வரச்சொல்லுங்க நல்லா பாத்து வாங்கிக்கிட்டு வருவான்னு சொல்லுவாங்க. திருமணத்துக்குப் பின் மனைவியின் சமையல்.... அம்மாவின் சமையல் செட்டிநாட்டுச் சுவை என்றால் மனைவியின் கைப்பக்குவமோ மதுரைச்சுவையுடன் செட்டிநாட்டுப் பாணி... ஆஹா... என்ன செய்தாலும் சூப்பரா இருக்கும். இப்போ விஷாலின் ஆசிரியைக்குப் பிடித்துப் போய் தினமும் விஷாலின் சாப்பாட்டில் ஒரு வாயாவது அவன் கையால் வாங்கி சாப்பிட்டு விடுவாராம். அந்தளவுக்கு ருசி.... மதுரை அம்சவல்லிபவான் கைவண்ணமாச்சே... சும்மாவா.

தொடர்ந்து வாசிக்க வலைச்சரம் வாங்க... அதுக்கு முன்னாடி உங்களுக்காக இந்தப் பாடல்...
என் வீட்டுச் சன்னல் எட்டி


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

வலைச்சர ஜந்தாம் நாள் : கதை சொல்லப் போறேன்

வலைச்சரத்தில் நான்காம் நாளான இன்று சிறுகதை ஆசிரியர்களின் பதிவுகளைப் பற்றி பகிர்ந்திருக்கிறேன். அதில்
"முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவமே சிறுகதை என்று சொல்வார்கள். உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம்என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள், ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ளகுளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும். தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்." (நன்றி தமிழ் விக்கிப்பீடியா)
சிறுகதையில் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி முடித்தால் அந்தக் கதை வாசகனைக் கவரும் என எங்கள் ஐயா சொல்லுவார். அவரின் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலோடு பயணிக்கும். நான் கதை எழுத ஆரம்பித்தது ஒரு நாள் மாலை ஐயாவுடன் பேசியபடி நடந்து சென்றபோது அவர் நீங்களும் எழுதுங்க என்று சொன்ன பிறகுதான்... முதல் கதை காதல் கதை... அப்ப அப்புறம் என்ன கதை எழுத வரும். அதையும் படித்து... நல்லாயிருக்கு... இன்னும் நல்லா முயலுங்க... என்று சொன்னார். அதன் பின் எழுதிய கதைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்க... விட்டு விட்டுத் தொடர்ந்தாலும் தற்போதைய எழுத்தில் வாழ்வியலோடு பயணிக்க ஆரம்பித்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்... இருந்தும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும்... நிறைய எழுத வேண்டும் என்பதே எனது எண்ணம். இப்போ சில வாரங்களாக தோன்றும் கருவெல்லாம் சோர்வில் கலைகிறது.
ஆமாங்க... அதேதான்... எப்பவும் போல முதலில் நட்பு வட்டத்தில் இருக்கும் கதையாசிரியர்கள் சிலரின் படைப்புக்கள் உங்களின் பார்வைக்காக.

மேலும் தொடர்ந்து வாசிக்க... எப்பவும் போலத்தான் வலைச்சரம் வாங்க.

அதுக்கு முன்னால இந்த பாட்டையும் ரசிச்சிட்டுப் போங்க... 


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் இங்கே... மதுரையில் பதிவர் வெள்ளம் சூழ இன்னும் ஒரு நாளே உள்ளது.


மீண்டும் சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்

வியாழன், 23 அக்டோபர், 2014

வலைச்சர நான்காம் நாள் : கவிதை அரங்கேறும் நேரம்

வலைச்சரத்தில் முன்றாம் நாளான இன்று கவிஞர்கள் சிலரைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறேன். அதில்...

பள்ளியில் படிக்கும் போது உருவாகாத கவிஞர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றதும் உருவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எனது நட்பு வட்டத்தில் முருகன்ஆதிஇளையராஜாபிரபாகர்சுபஸ்ரீஇவர்கள் மட்டுமே திறமையான கவிஞர்கள். அதிலும் கவிதைகட்டுரைப் போட்டிகள் என்றால் முருகனும் சுபஸ்ரீயும் கண்டிப்பாக கலந்து கொண்டு கல்லூரிக்கு பரிசைத் தட்டிவருவார்கள். மற்றவர்கள் எல்லாம் எழுதுவதும் இல்லை அதைப் படிப்பதும் இல்லை.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல இவர்களுடான நட்பால் நாமளும் கவிதையின்னு கிறுக்க ஆரம்பிச்ச நேரம் சின்னக் கவிதையே வராது. பக்கம் பக்கமாத்தான் எழுத வரும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஓரளவுக்கு எழுத வந்தபோது நண்பர்களின் காதலுக்கு கவிதை எழுதிக் கொடுக்கும் நிலை வந்தது. நம்ம பயக பொண்ணு யாரு... அவனுக்கு உறவா இல்லை பழக்கமா... எங்க படிக்குது... என எல்லாம் விவரமாச் சொல்லஅதை வைத்து அப்படியே ஒரு கவிதை உருவாக்கிக் கொடுத்து விடுவேன். இதில் முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா... அப்போதைக்கு அம்புட்டும் சக்ஸஸ் ஆனதுதான். அதுக கவிதைக்கு மயங்குச்சுகளோ இல்ல இவன வேண்டான்னு சொன்னா இன்னம் அந்தக் கிறுக்கனுக்கிட்ட கவிதை வாங்கிகிட்டு வந்து கொன்னுடுவான்னு நினைச்சதுங்களோ தெரியல. இன்றைய நிலவரப்படி எத்தனை காதல் வாழ்கிறது என்பதும் அடியேனுக்குத் தெரியாது.

தொடர்ந்து வாசிக்க நீங்க வலைச்சரத்துக்குத்தான் வரணும்... அதுக்கு இங்கு சுட்டுங்கள்.

அப்படியே இந்தப் பாட்டையும் பாத்துட்டுப் போங்க...


-'பரிவை' சே.குமார்

புதன், 22 அக்டோபர், 2014

வலைச்சர மூன்றாம் நாள் : கவிதை பாடு குயிலே... குயிலே...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று முழுக்க முழுக்க பெண் கவிஞர்களின் பதிவுகளின் அறிமுகமாய் 'கவிதை பாடு குயிலே... குயிலே...' இன்றைய பகிர்வில்...

என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது எல்லோராலும் எழுத முடிந்த ஒன்றுதான் என்றாலும் வார்த்தைகளை எப்படிப் போட்டு எழுதினால் எழுத்து வசமாகும் என்று தெரிந்து எழுதுபவர்கள் மட்டுமே கவிஞராக முடியும். நானும் கவிதை என்று சிலவற்றைக் கிறுக்கி வைத்துள்ளேன். ஒரு சிலரின் கவிதை படிக்கும் போதே மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். அது எதாவது ஒரு தருணத்தில் ஏதோ ஒரு நினைவில் நம்முள்ளே வந்து போகும். அப்படிப்பட்ட கவிதைகளை என் நட்பு வட்டத்தில் இருக்கும் பல சகோதரிகளின் எழுத்தில் கண்டிருக்கிறேன்.  என்ன ஒரு வருத்தம்ன்னா இன்னைக்கு வலைப்பூவில் பகிர்வதைவிட முகநூலில் பகிரும் சகோதரிகள்தான் அதிகம் இருக்கிறார்கள்.


இங்கு நிறைய கவிதாயினிகளுக்கு களம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனது வழவழாக்களைக் குறைத்துக் கொள்கிறேன்... சரி வாங்க பாரதி கண்ட புதுமைப் பெண்களின் கவிதை மழையில் நனையலாம்.


முதலில் எனது நட்புக்கு மரியாதை...

தொடர்ந்து வாசிக்க வலைச்சரம் வாங்க...

இன்றைக்கும் ஒரு பாட்டை ரசிச்சிட்டு அப்படியே மதுரையில் வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் நம்ம வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சி நிரலையும் தெரிஞ்சிக்கிட்டுப் போங்க...


மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் 'சில நொடி சிநேகம்' என்ற தனது முதல் குறும்படத்தை வெளியிடும் அண்ணன் குடந்தை சரவணன் அவர்களுக்கும்... 'கரந்தை மாமனிதர்கள்' என்ற புத்தகத்தை வெளியிடும் மதிப்பிற்குரிய ஐயா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும்... 'துளிர் விடும் விதைகள்' என்ற புத்தகத்தை வெளியிடும் சகோதரி 'தேன்மதுரத் தமிழ்' கிரேஸ் பிரதிபா அவர்களுக்கும்... 'ஒரு கோப்பை மனிதம்' என்ற புத்தகத்தை வெளியிடும் சகோதரி. மு.கீதா அவர்களுக்கும்... 'நல்லா எழுதுங்க... நல்லதையே எழுதுங்க...' என்ற புத்தகத்தை வெளியிடும் ஐயா பி.ஆர்.ஜெயராஜன் அவர்களுக்கும்...மனசு நிறைந்த வாழ்த்துக்கள்.


-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

வலைச்சர இரண்டாம் நாள் : தமிழா... தமிழா...

லைச்சர இரண்டாம் நாள் பகிர்வாக 'தமிழா... தமிழா...'. நாம் தமிழர் என்றாலும் வரலாறுகளையும் தமிழ் இலக்கியங்களையும் எல்லாப் பகிர்வர்களும் பகிர்ந்து விடுவதில்லை. அப்படி இலக்கியத் தரம் வாய்த்த பதிவுகளை அதிகம் பதிவிடும் மிகச் சிறந்த பதிவாசியர்களைப் பற்றிய பகிர்வுதான் தமிழா... தமிழா....
இன்றைய பகிர்வில்...

தமிழ் என்றதும் ஞாபகத்தில் வருவது தமிழாசிரியர்கள்தான். பள்ளி முதல் கல்லூரி வரை இவர்களை ஐயா என்றுதான் அழைப்போம். பள்ளியில் படிக்கும் காலத்தில் ஐயாக்கள் எல்லாம் வேஷ்டி சட்டையில்தான் வருவார்கள். கூடுதலாக ஒரு ஜோல்னாப் பையும் இருக்கும். அவர்களைப் பார்த்தாலே தமிழாசிரியர் என்பது சொல்லாமல் தெரிந்துவிடும். ஆனால் கல்லூரிக்குப் போனபோது வேஷ்டி கட்டிய ஐயாக்களைப் பார்க்க முடிவதில்லை. எல்லோருமே பேண்ட்தான். வீட்டில் வேஷ்டியுடன் தரையில் அமர்ந்து எழுதும் எங்க பழனி ஐயாவைக் கூட கல்லூரியில் வேஷ்டியில் பார்க்க முடியாது.

இப்ப நம்ம நண்பன் எந்தக் கல்லூரியில் தமிழ் படித்தானோ அதே கல்லூரியில் ஆசிரியனாய்... இவனெல்லாம் எப்பவும் பேண்ட்தான்... படிக்கும் போது இவன் யாப்புமொழிஇலக்கியம் அது இதுன்னு என்னென்னவோ சொல்லுவான். கவிதையெல்லாம் எழுதுவான். நமக்கு தமிழ் என்பது ஏட்டளவில் மட்டுமே... அதிக ஈடுபாடெல்லாம் கிடையாது.. இப்ப மட்டும் இருக்கான்னு கேக்கப்படாது. ஏதோ நெல்லுக்கு இரைத்த நீர் பில்லுக்குக் கிடைப்பது மாதிரி வலைப்பூக்களில் பகிரப்படும் தமிழில் சிலவற்றைப் படித்து நம்ம தமிழ் அறிவை அப்ப அப்ப அருகம்புல்லாட்டம் வளர விட்டுக்கிறதுதான்... சரி... சரி... எதுக்கு இப்ப அதையெல்லாம் கிண்டிக்கிட்டு வாங்க நண்பனைக் கிண்டுவோம்.

தொடர்ந்து வாசிக்க அங்க... அதாங்க... வலைச்சரத்துக்கு வாங்களேன்....

அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்ன்னா இந்த பாட்டையும் பாத்துட்டுப் போங்க...

-'பரிவை' சே.குமார்

திங்கள், 20 அக்டோபர், 2014

வலைச்சரத்தில் முதல் நாள் : இவன் யாரோ... இவன் யாரோ...

லைச்சர ஆசிரியனாய் ஒரு நாள் பதிவு போட்டாச்சு. இன்னைக்கு நம்மளைப் பற்றி சொல்லும் நாள் என்பதால் சுலபமாக பகிர்வு போட்டாச்சு... நாளை முதல் நமக்கு இருக்கு... எப்படியும் விரட்டிப் பிடிப்போம்... விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியின்னு சொல்லியிருக்காங்க... அதானால முடிந்தளவு தேடிப் பிடிப்போம்.

இன்று காலை வலைச்சரத்தில் இட்ட பதிவில்...

சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும்... எனது வலையில் கூட 67 சிறுகதைகள் பதிந்திருக்கிறேன். நாம ஒரு கருவைப் பிடித்து அதை  எழுதலாம்என நினைத்து... நினைத்து... நாட்களைத் தள்ளிப் போட்டு வந்து ஒரு நாள் இரவில் விழித்திருந்து எழுதி பதிவிட்டால் சில பதிவுத் திருடர்கள் திருடர்கள் திருடி தங்கள் பதிவாக்கி விடுகிறார்கள். எனவே சிறுகதைகளைப் பகிர்வதை நிறுத்தி விட்டேன். நாம புத்தகம் போடலாம்ன்னு கனவோட இருக்கும் போது அவங்க புத்தகம் போட்டுட்டா... அதான் யோசனையின் முடிவாய் நிறுத்தம்.
சமீபத்தில் கூட ஒரு போட்டோவை தேடிய போது நான் போட்டோ போட்டோ வேறோரு தளத்தில் இருந்தது. அங்க போன நம்ம தளத்தோட பெயரில் அப்படியே போட்டிருக்காங்க... பதிவின் கீழ் வரும் என்னோட பேர் கூட அப்படியே இருக்கு. அப்புறம் ஆங்கிலத்தில் ஒரு மெயில் தட்டினேன். அதற்கு எது தங்களது என்பதை இணைப்புடன் சொல்லுங்கன்னு சொன்னானுங்க... சொன்னதும் இப்போ அந்த இணைப்பு வேலை செய்யலை... சொக்கா... கொஞ்சமில்லை மக்கா என்னோட பதிவில் மொத்தம் 463.இன்னும் நண்பர்களும் இருக்கிறார்கள். படத்தைப் பாருங்கள் தெரியும். இதேபோல் ஒருவனைப் பற்றி பல சகோதரிகள் சொல்லியிருந்தார்கள். அந்தாளு எல்லாமே அவன் எழுதுனமாதிரி பதிவுகளில் படமெல்லாம் போட்டு கலக்கிட்டான்னா பாருங்களேன்.

வாசிக்காதவர்கள் தொடர்ந்து வாசிக்க கோவிச்சுக்காம வலைச்சரம் வாங்க....

அப்புறம் மதுரை வலைப்பதிவர் சந்திப்புக்கான அழைப்பிதழ் திரு. தமிழ்வாசி பிரகாஷ் (பதிவர் மாநாடு ஒருங்கிணைப்பாளர்) அவர்களால் வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அதை அப்படியே சுட்டு இங்கயும் போட்டாச்சு... விழா சிறக்க வாழ்த்துக்கள்.


நாளை மற்றுமொரு வலைச்சர பகிர்வில் சந்திப்போம்... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வலைச்சர ஆசிரியனாய் மீண்டும்...


ரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியனாய் இருக்க சீனா ஐயா அவர்களின் அன்பு அழைப்புக்கு மறுப்பு சொல்ல நினைத்த சூழல் மறுப்புச் சொல்ல முடியாமல் அன்பினால் அடித்துச் செல்லப்பட்டது. 

எங்களது புராஜெக்ட் அரசு அலுவலகத்தில் இந்த மாதத்துடன் முடிவடைவதால் ஒரு நாளைக்கு தொடர்ந்து பதினோரு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிற சூழ்நிலை.. பத்துப் பேர் பார்க்க வேண்டிய பணியை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நான், இரண்டு மலையாளிகள், ஒரு பாகிஸ்தானி என நான்கு பேர் பார்த்து வருகிறோம். விரட்டித்தான் பணிகளை முடித்து வந்தோம். கடைசி நேரத்தில் சர்வே பணியில் சொதப்பலாகிவிட எல்லா வேலைகளும் எங்கள் தலையில் விழுந்துவிட்டது. விரட்டி முடிக்க பார்ப்பதால் சனிக்கிழமைகளில் கூட பணிக்குச் செல்கிறோம்.

இந்த பிரச்சினையால்தான் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நண்பர்களின் தளங்களுக்குச் செல்லவில்லை. ஒரு சிலரின் தளங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறேன். இங்கும் இடுகைகள் அதிகம் எழுத முடியவில்லை. இருப்பினும் எதாவது எழுதினால் இவனை நம்ம பக்கம் ஆளையே காணோம் என்று நினைக்காமல் வந்து கருத்திடும் நட்புக்களை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.

இனி ஒருவாரம் அலுவலகப் பணியுடன் வலைச்சரப் பணி இருப்பதால் இங்கு எழுத நேரம் இருக்காது. நட்புக்களின் தளத்திற்கு நேரம் கிடைக்கும் போது தவறாமல் வருவேன். ஆனா நீங்க எல்லாரும் தினமும் வலைச்சரம் வந்து என்ன பண்ணியிருக்கேன்னு ஒரு எட்டு பார்த்து உங்க கருத்தையும் தட்டி விட்டுட்டு வர மறக்கக் கூடாது. 

ஆங்... சொல்ல மறந்துட்டேனே... வலைச்சரத்தில் பலரால் பலமுறை அறிமுகமான நான் அதே வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியனாக சீனா ஐயா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களால் அமர்த்தப்பட்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை இந்த ஒரு வார காலத்தில் செய்து முடிக்கிறேன். அதற்கு தங்கள் ஆதரவு கண்டிப்பாக வேண்டும்.

நாளை முதல் வலைச்சரத்தில்... 

அங்க இன்னைக்கு சீனா ஐயா அவர்கள் நம்மளைப் பற்றி அதிகமாச் சொல்லியிருக்காங்க... செவ்விருந்தோம்பி வரவிருந்து காத்திருத்தல் அப்படின்னு மீனைப் பிடிக்கப் போற கொக்கா காத்திருக்காங்க.,.. மீன்னா அங்க போயி கலக்கிட்டு வந்திடுவோமான்னு கலக்க ஆரம்பிச்சிருச்சு... நீங்களே பாருங்க...

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சே.குமாரினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்படியே ரிலாக்ஸா யாரோ இவன்... யாரோ இவன்... அங்க போயி என்ன பண்ணப் போறானோ இவன் என்று எனக்காக யோசித்தபடி இந்தப் பாடலையும் ரசித்துச் செல்லுங்கள்...-'பரிவை' சே.குமார்.

சனி, 18 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 4)

முந்தைய பகுதிகள் : பகுதி-1     பகுதி-2     பகுதி-3

மூன்றாவது பகுதியின் கடைசியில்...

"ஆமா ரெண்டு மயங்க சம்பாரிக்கயில வீட்டுக்கு வந்த மாப்ளக்கிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்... நாளைக்கி நெல்லவிச்சதும் அவளுகளுக்கா கொடுக்க விடுவாய்ங்க..."

"சரி... சரி... தருவாய்ங்க... விடு... இப்ப சோத்தப் போடு..." என்று சொல்லவும் 'ஆமா சீமையில இல்லாத பிள்ளகள பெத்துப்பிட்டாக... மாசா மாசம் நோட்டு நோட்டா அனுப்பிட்டுத்தான் மறுவேல பாக்குறாய்ங்க... அட ஏஞ் சும்மா... ஒவ்வொரு தடவயும் கேட்டுக்கேட்டு வாங்கணும்..' என்று முணங்கியபடி அவருக்கு சாப்பாடு போட்டுவிட்டு தானும் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

இனி...

"என்னங்க... என்னங்க... அட எந்திரிங்க... விடிஞ்சி வெள்ளக்கோழி கூவிருச்சி.. எந்திரிங்கன்னா..." ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கந்தசாமியைத் தட்டி எழுப்பினாள் காளியம்மாள்.

"கொஞ்ச நேரம் ஒறங்கவிடேன்..." என்றபடி திரும்பிப் படுத்துக்கொண்டார்.

"அட நல்லாத்தேன்... மழயில்லாம வெட்டரிச்சாப்ல இருக்கு... அம்புட்டுப் பேரும் வயப்பக்கம் பொயிட்டாக.. அம்புட்டுப் பேரும் பரபரப்பா திரியிறானுங்க... இப்பத்தான் நீங்க  இன்னந் தூங்குறிய..."

"என்னக்காச்சும் கருக்கல்ல எந்திரிக்காம இருந்திருக்கேனா... இன்னைக்கி என்னவோ உடம்பெல்லாம் ஒரே வழி... சத்த உறங்குறேனே..."

"அட எந்திரிங்க... சும்மா...  மழயில என்ன வெட்டி முறிச்சீக... எந்திரிச்சி வாயக்கொப்புளுச்சிட்டு காபித்தண்ணிய குடிச்சிட்டு வாங்க... மாடுகள பாக்கச் சகிக்கல... குளிப்பாட்டிட்டு வரலாம்...."

"ம்..." என்றவர் இனி பாட்டுக் கேட்க முடியாது என்பதால் எழுந்து வாளியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்தார். 'இவ கண்ணுல தூக்கமே வராதுங்கிறதுக்காக தூங்குறவனையும் தூங்க விடமாட்டா.. ரெண்டு பேரு வேலையத்துப் போயி வயப்பக்கம் போயிருப்பானுங்க... ஊரே போயிருச்சின்னு கத விடுவா... இதை காலங்காத்தால சொல்லி வாங்கிக் கட்டிகாம இருக்கதே நல்லது" என்று முணங்கியபடி துண்டால் முகத்தைத் துடைத்தவரிடம் 'என்ன மொணங்குறீங்க?" என்றபடி காபியைக் கொடுக்க கட்டிலில் அமர்ந்து ஒரு வாய் உறிஞ்சி "இந்தக் காபிக்கு மட்டந்தான் நாராயணவிலாஸ் காபியெல்லாம்..." என்றார்.

"ஆமா வாய்க்குள்ள திட்டிப்புட்டு இப்ப நல்லவுக மாதிரி பேசுறியளாக்கும்" என்று காளியம்மா கேட்கவும் "ஏலா...சின்னவனுக்கிட்ட பேசணும்ன்னு சொன்னே... கூப்பிட்டுப் பாக்கவா?" என பேச்சை மாற்றினார்.

"ம்... கொஞ்ச நேரமாகட்டும்... எந்திரிச்சிட்டாங்களோ இல்லயோ..."

"வேலக்கி போறவுக... புள்ளக வேற பள்ளிக்கொடத்துக்குப் போகணுமில்ல... எந்திரிச்சிருப்பாங்க... அடிச்சித் பாத்துட்டு மாட்டை அவுத்துக்கிட்டுப் போனா குளிப்பாட்டிட்டு வரலாம்..."

"சரி கூப்பிட்டுப் பாருங்க... எடுத்தடோடனே காசுன்னு கேக்காதீக... புள்ளகுட்டி எல்லாம் எப்படியிருக்குன்னு விசாரிச்சிட்டு... கடைசியில கேளுங்க...."

"அடிப்போத்தா நீ வேற... நா எப்ப அவனுககிட்ட காசுன்னு கேட்டிருக்கேன். இப்ப கேக்க வேண்டிய நெல... வெவசாயத்துக்குத்தானே கேக்கப்போறோம்... கொடுத்தா கொடுக்கிறானுக இல்லேன்னா எவனுக்கிட்டயாவது வாங்கி ஒரத்தைப் போட்டுட்டுப் போறேன்.... அதுக்காக இம்புட்டு தூரம் வெளய வச்சி விட்டுட்டாப் போப்போறேன்...." என்றபடி எழுந்து போனை நோக்கிச் சென்றவர் போனுக்கு அருகில் இருந்த சிறிய நோட்டில் சின்ன மகன் குமரேசனின் நம்பரைப் பார்த்து போனில் ஒவ்வொன்றாக அழுத்த ஆரம்பித்தார்.

"சாப்பிட்டு சீக்கிரம் எந்திரிடி... வேன் வந்திரும்... அவனப்பாரு வச்ச இட்லிய சாப்பிட்டுட்டு எந்திரிச்சிட்டான்... நீ இன்னும் ரெண்டு இட்லிய அணில் கொறிக்கிற மாதிரி கொறிக்கிறே..." கத்திக் கொண்டே டிரஸ் மாத்திக் கொண்டிருந்தாள் அபிநயா. அப்போது போன் அடிக்க, "அம்மா அப்பாட்டு மொபைலுக்கு யாரோ போன் பண்ணுறாங்க..." கத்தினான் முகேஷ்.

"எடுத்து யார்ன்னு கேளுடா.... உங்கப்பால்லாம் எதுக்குத்தான் மொபைல் வாங்கி வச்சிருக்காரோ... வீட்டுக்கு வந்துட்டா அதை தேடுறதே இல்லை..." 

"அலோ யாரு பேசுறீங்க...?"

"டேய் வடுவா.... யாருன்னா கேக்குறே... நீ யாருடா... எங்கப்பன் வெள்ளச்சாமிதானே...?"

"போங்கய்யா... இருங்க அம்மாக்கிட்ட கொடுக்கிறேன்..." 

"யாருடா...?"

"ஐயா..."

"சிவராமய்யாவா... பேச வேண்டியதுதானே...?" என்றவளிடம் "இல்ல இது நம்ம வேலங்குடி ஐயா..." என்றபடி போனைக் கொடுத்தான்.

"நல்லாயிருக்கீகளான்னு கேட்காம என்ன பழக்கம் இது... எல்லாம் சொல்லித்தரணும்" திட்டியபடி "அலோ" என்றாள்.

"ஆத்தா... நா மாமா பேசுறேன்..."

"சொல்லுங்க மாமா... இல்ல இந்த நேரத்துக்கு அப்பா பேசுவாக அதான் அவரான்னு கேட்டேன்..."

"அவரு தெனங் கூப்பிடுவாரு... இங்க வயவேலைக்கு கருக்கல்ல போனா ஆத்துப் பூத்துப் போயி வந்து அக்கடான்னு படுக்கும் போது எங்கனத்தா போன் பண்றது... நீங்க எல்லாருமே வாரம் ஒரு தடவையின்னு மொற வச்சிருக்கீக... ம்...."

"இல்ல மாமா நானே ரெண்டு நாளா பேசணும்ன்னு நினைக்கிறேன்... ஸ்கூல வேலை அதிகம் அதான் முடியல... இவரு சுத்தமா சொன்னதை மறக்கிற ஆளு... நைட்டு லேட்டாத்தான் வருவாரு... அப்ப கேட்டா மறந்துட்டேன்னு சொல்வாரு... எப்படி மாமா இருக்கீக... அத்தை எப்படியிருக்காங்க...?"

"எங்களுக்கு என்னாம்மா நல்லாயிருக்கோம்... ஆமா அங்கன எல்லாரும் சும்மா இருக்கீகளா..?"

"எல்லாரும் நல்லாயிருக்கோம் மாமா... வயலெல்லாம் தண்ணி நெறைஞ்சி கிடக்கா மாமா... பயிரெல்லாம் எப்படியிருக்கு... அழுகிப் போயிருமோ?"

"தண்ணி வெட்டி வடிச்சிடலாம்... கெழக்குப்பக்கந்தான் வேந்தங்கம்மாத்தண்ணிக்குள்ள கொஞ்ச செய்யிக கெடக்கு... அது தண்ணி எறங்குறதைப் பொறுத்துத்தான்... ஆனா பயிரெல்லாம் தண்ணிக்கி மேல நிக்கிறதால அழுக வாய்ப்பில்லை... இந்த வருசம் ஒரு வளத்தியா வளந்திருக்குத்தா... ஆமா தம்பி எங்க?"

"முடிவெட்டிக்கப் போறேன்னு போனார்... இன்னும் வரலை... ஏம்மாமா அவருக்கிட்ட எதாவது சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சும்மாதான் கேட்டேன்... வந்தா பேசச் சொல்லும்மா...." வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

"மாமா... சும்மா சொல்லுங்க... என்ன பண விஷயமா?" என்று நேரடியாகக் கேட்க கந்தசாமிக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. மருமக்களிடம் பணம் என்று இதுவரை கேட்டதில்லை என்பதால் அவருக்கு சங்கோஜமாக இருந்தது.

-வேரும் விழுதுகளும் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.