முந்தைய பதிவுகளைப் படிக்க...
64. மீண்டும் திருமணப் பேச்சு.
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள். இருவரும் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாமா என யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.
இனி...
தேவகோட்டை பேருந்து நிலையம்...
"என்னடா... புவனா விஷயமா இனி பேச ஆரம்பிக்கலாம்ல... இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிடும்... அதோட நீயும் சேவியர் கூட சேர்ந்து பிசினஸ் ஆரம்பிக்க போறே... அப்புறம் என்ன..." வண்டியில் அமர்ந்தபடி அண்ணாத்துரை கேட்டான்.
"ஆரம்பிக்கலாம்டா... இப்ப என்ன அவசரம்... அதான் சொன்னேனுல்ல... சேகர் கல்யாணத்துக்கு வந்தவக்கிட்ட அம்மா நடந்துக்கிட்ட விதம் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு... அதே சமயம் அவ வீட்டுப் பக்கம் சரி பண்ணனுமில்ல..."
"டேய்... சும்மா தேஞ்சுபோன ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே சொல்லாதடா... அம்மா அவள மருமகளா ஏத்துக்கிறேன்னு சொன்னாங்களா... அந்த மாதிரி வார்த்தை அவங்க வாயில வந்துச்சா.. சும்மா அம்மா ஏத்துக்கிட்ட மாதிரி தெரியுது... தெரியுதுன்னு..." சரவணன் கடுப்பானான்.
"அது..."
"என்ன அது...நொதுன்னுக்கிட்டு... முதல்ல அதைக் கண்பார்ம் பண்ணு... அப்புறம் மணிப்பயலும் கொஞ்ச நடக்க ஆரம்பிச்சிருக்கான்... ஆனா அவன் இனி உன்னோட லைன்ல கிராஸ் ஆக மாட்டான்... ஏன்னா புவனாவே அவனைக் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..." என்றான் அண்ணாத்துரை.
"டேய்ய்ய்ய்ய்ய்..... என்னோட புவனா அவனையா...." ராம்கி கத்தினான்.
"இங்க பாரு தம்பி நெருப்புன்னு சொன்னா வெந்துடாது... ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... அவன் இனி வம்பு தும்புக்குப் போனா மொத்தமாப் போக வேண்டியதுதான்... அதனால அவனை விடு... நீ முதல்ல நம்ம பக்கம் பிரச்சினை இல்லாம இருக்கான்னு பாரு... அப்புறம் புவனா அப்பாக்கிட்ட பேசுறதுக்கு ஒரு நல்ல ஆளா... ம்.. ஐயாவையே பிடி அதுதான் சரியா வரும்... என்ன முடிவுன்னு தெரிஞ்சிக்கலாம்..."
"இதைத்தான் நானும் சொன்னேன்... ஆனா புவிதான் இன்னும் கொஞ்சம் நாளாகட்டுன்னு சொல்லிட்டா...."
"இன்னும் கொஞ்ச நாள்... இன்னும் கொஞ்ச நாள்ன்னா... அவ படிப்பை முடிச்சிடுவா... கட்டிக் கொடுத்துருவானுங்கடா... அவ சித்தப்பன் ஊரெல்லாம் மாப்பிள்ளை பாக்குறான்... அப்புறம் கல்யாண வீட்டுக்கு தாடியோட போக வேண்டி வந்திரும் ஜாக்கிரதை."
"அடேய் ஏன்டா... நல்லாதாவே உனக்குத் தோணாதா... இந்தப் பழனியும் அறிவும் எங்க புடுங்கப் போனானுங்க... வரேன்னு சொல்லிட்டு வரலை..."
"எதாவது வேலையா இருக்கும்... சரி நீ கிளம்பு...சொன்னதை ஞாபகம் வச்சிக்க... சேவியரை ரொம்பக் கேட்டோம்ன்னு சொல்லு... சரியா... நாங்க வரட்டா..."
"சரிடா... பைடா..." என்றபடி பேருந்தில் ஏற அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
"என்னடி படிப்பு முடியப் போகுது... உங்க பிளான் என்ன?" பேருந்துக்காக காத்திருக்கும் போது மல்லிகா கேட்டாள்.
"பிளான்னுன்னா... என்ன பிளான்...?" புவனா திருப்பி அவளைக் கேட்டாள்.
"அதான்டி.... ராம்கி எதாவது சொன்னானா?" கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
"இப்ப என்ன கேட்டுட்டேன்னு நாக்கைக் கடிச்சிக்கிறே..?"
"இல்ல பழக்க தோஷத்துல அவன்னு சொல்லிட்டேன்... அம்மணிக்கு கோபம் வந்திருச்சின்னா..."
"எனக்கு எதுக்கு கோபம் வருது... உன்னோட பிரண்ட் நீ சொல்றே... ஆமா என்ன கேட்டே..."
"இல்ல... படிப்பு முடியப்போகுது என்ன பிளான்னு கேட்டேன்..."
"இன்னும் முடிவுக்கு வரலை... அவங்க அம்மா கொஞ்சம் மாறிட்டாப்ல தெரியுதுன்னு சொன்னேன்ல... அது கொஞ்சம் நம்பிக்கை இருக்கு... நம்ம வீட்டுப் பக்கம் அப்பாக்கிட்ட யாராவது ஒருத்தர்... இவர் சொன்னா அப்பா தட்டமாட்டார்ங்கிற மாதிரி ஒருத்தரை பேச விடணும்... "
"அப்ப ஐயாவையே பேசச் சொல்லலாம்ல..."
"அப்படித்தான் அவரும் சொன்னார்... எனக்குத்தான் பயமா இருக்கு..."
"இதுல என்னடி பயம்?"
"இல்ல எங்களுக்காகப் பேச போயி அவருக்கு மரியாதை குறைவாயிருச்சின்னா... அதனால..."
"அதானால..."
"எங்க அண்ணன்கிட்ட நானே பேசலாம்ன்னு பார்க்கிறேன்..."
"பிரச்சினை எதுவும் வராதுல்ல..."
"வர வாய்ப்பில்லை... அவனுக்கு எங்க அத்தை பொண்ணு மேல கண்ணு... ஆனா அவ கண்டுக்கலை... அதைச் சரி பண்ணிக் கொடுத்து நம்ம காரியத்தை சாதிக்கலாம்ன்னு எண்ணம்..."
"அடிப்பாவி... காதலுக்காக நீ கூட்டிக்....." மல்லிகா முடிக்கும் முன்னர் புவனா கத்தினாள்.
"அடி வாங்கப் போறே... நான் சேர்த்து வைக்கப் போறேன்னு சொன்ன நீ என்ன சொல்றே... ஏன்டி புத்தி இப்படிப் போகுது..."
"சரி... காதலனை அடைய அண்ணனுக்கு அண்ணியை லஞ்சமாக்கப் பாக்கிறே... நடப்பது நலமாக எனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு..."
"பார்றா... பெரிய மனுஷி ஆசிர்வாதம் பண்ணுறாங்க... வாடி பஸ் வந்திருச்சி..."
"அத்தாச்சி... அத்தாச்சி..." கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் புவனாவின் சித்தப்பா.
"என்னம்மா... திருப்பத்தூர் கூவிக்கிட்டு வருது..." வைரவன் மெதுவாக அம்மாவிடம் கேட்டான்
"நீ சும்மா இருடா...." மகனை சத்தமில்லாமல் அடக்கிவிட்டு "வாங்க தம்பி... அவ வரலை..."
"இல்ல... நாந்தான் ஒரு வேலையா வந்தேன்... கொஞ்சம் தண்ணி கொடுங்க... அடடே வைரா இருக்கான்.... மைனரு பேசக் காசு கேக்க ஆரம்பிச்சிட்டாரு... எப்படா வந்தே...?"
"வந்து ரெண்டு நாளாச்சு... அம்மா நான் வெளியில பொயிட்டு வாரேன்..."
"முன்னாடி நடந்ததை அவனே மறந்துட்டான்... இவரு மறக்கலை... இன்னும் முறுக்கிக்கிட்டுத் திரியிறாரு... எம்புட்டு நாளைக்கு..."
"சரி விடுங்க தம்பி... அவனைக் காப்பாத்துன பையனை அப்படிப் பண்ணிட்டீங்கன்னு அவனுக்கு வருத்தம்... அதான்..."
"அதுக்காக நம்ம பொண்ணு கூட சுத்துனா விட்டுருவோமா என்ன... ஆமா புவனா எங்க பொயிட்டா...?"
"பக்கத்துலதான் அவ சித்தப்பன் வீட்ல ஒருத்தி இருக்காள்ல அவ கூட தாயம் விளையாடுவா... சும்மா கத்தி கித்தியின்னு தூக்கிக்கிட்டு திரியாதிய தம்பி.... ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது.... பாத்தியளா எம்புட்டு வெட்டுக்குத்துன்னு திரிஞ்சான்... பாஞ்சி திரிய வேண்டிய வயசுல அந்த மணிப்பய நிலமை என்னாச்சின்னு... உங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்காங்க... பாத்து சூதனமா இருக்கக் கத்துக்கங்க...."
"சரி அத்தாச்சி... இப்பல்லாம் அடிதடிக்கு எங்க போறேன் சொல்லுங்க... உங்க தங்கச்சிதான் புரியாமப் பேசுறான்னா... எல்லாந் தெரிஞ்ச நீங்களும் பேசுறீங்க... சரி ஒரு சந்தோஷமான சமாச்சாரம்..."
"என்னது?"
"நம்ம புவிக்கு படிப்பு முடியப் போகுதுல்ல... வேலாயுதபட்டினத்துல கை நிறைய சம்பாரிக்கிற. படிச்ச மாப்ள இருக்கான்... வீட்டுக்கு ஒத்தப்புள்ள... நல்ல வசதி... நம்ம குடும்பத்துக்கு எந்த விதத்துலயும் குறைச்சல் இல்லாத குடும்பம்... என்ன பேசி வச்சிடலாமா?" என்று சொல்லும் போது வீட்டிற்குள் வேகமாக நுழைந்த புவனா சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.
புவனாவின் அம்மா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தனது மகளின் முகத்தைப் பார்த்தாள்.
"என்ன நாங்கேட்டதுக்கு பதிலையே காணோம்.... ஓ... பொண்ணே வந்துட்டாளா? அத்தாச்சி அண்ணனும் நானும் முதல்ல போயி பார்த்துப் பேசட்டுமா? அண்ணன்கிட்டச் சொல்லுங்க... ஒரு நல்ல நாள்ல வேலாயுதபட்டணத்துக்கு ஒரு எட்டு பொயிட்டு வந்திடலாம்..."
"இல்ல தம்பி... அவ படிப்பு முடிய இன்னும் கொஞ்ச நாள் இருக்கு... அப்புறம் வேலைக்கு டிரைப் பண்ணனும்... இம்புட்டுப் படிச்சிட்டு அடுப்படியில போயி கிடந்தா நல்லாவா இருக்கும்... அவரு வேற எதாவது சொல்வாரு... கொஞ்சம் நாளாகட்டும்... பாக்கலாம்..."
"இப்படி தள்ளிக்கிட்டே போங்க... அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கனும்... அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்... நல்ல இடம்... சரி கொஞ்ச நாள் பொறுக்கச் சொல்றேன்... எதுக்கும் கடைக்குப் போயி அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்... அவுக முறுக்கிக்கிட்டுப் போனா இவுக திருகிக்கிட்டு நிக்கிறாக.... இந்த வீட்ல சித்தப்பன்னு சொல்லக்கூட புள்ளக இல்லாமப் போச்சு... கிளம்புறேன் அத்தாச்சி..."
"இருங்க சாப்பிட்டுப் போகலாம்..."
"வேண்டாம்... வர்றேன்... " என்று கிளம்ப "ஏன்டி வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்டா நீயும் உங்கண்ணனும் கொறஞ்சா போயிடுவீங்க... அப்படி என்ன உங்களுக்கு வீராப்பு..."
"அதை விடுங்கம்மா... ரொம்ப நன்றிம்மா"
"எதுக்கு..?"
"இல்ல சித்தப்பா சொன்னதுக்கு ஒத்துக்காததுக்கு..."
"நான் படிப்பு முடிச்சி வேலைக்குப் போகட்டும்ன்னு சொன்னேன்... வேற அர்த்தத்துல இல்ல... சரியா" என்றபடி உள்ளே போக, 'எந்த அர்த்தமா இருந்தா என்ன... வேண்டான்னு சொல்லிட்டீங்கள்ல...' என்று மனசுக்குள் நினைத்தபடி வைரவனின் பேசிவிடலாமா என்று யோசிக்கலானாள்.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
6 எண்ணங்கள்:
அருமை
தொடர்கிறேன் நண்பரே
வணக்கம்
தொடருங்கள்... அடுத்தபகுதிதை சில நாட்கள் இணையம் வரமுடியாமல் இருந்தது. இனி தொடரும் வருகை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
நல்ல திடீர் திருப்பம்.பார்ப்போம்.
சுவாரசியம் அடுத்து என்ன நடக்குமோ! தொடர்கின்றேன்.
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
கருத்துரையிடுக