மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 12 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 55

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                      பகுதி-50     பகுதி-51    பகுதி-52    பகுதி-53

55.  நெஞ்சம் கரைந்ததா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளின் அம்மாவிடம் போனில் பேச பிரச்சினை ஆகிறது.

இனி...

புவனாவின் அம்மா கோபமாகப் பேசியதும் அவனுக்குள் இருந்த தன்மானம் விழித்துக் கொள்ள மீண்டும் போன் அடித்தான். ரிங்க் போய்க் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் போன் எடுக்கப்பட உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டான். எதிர்முனை அலோ என்றதும் குரல் முன்பு பேசியதுதான் என்று உறுதியானது.

"அம்மா நான்தான் பேசுறேன்... ப்ளீஸ் போனை வச்சிடாதீங்க..."

"இப்பத்தானே போனுகீனு பண்ணாதேன்னு சொன்னேன்... உனக்கு விளங்கலையா?"

"ப்ளீஸ்ம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"என்னப்பா... வீட்ல ஆம்பளை ஆளுங்க இல்லாத சமயமா போனைப் பண்ணி பேசுறியே... எங்க வீட்டு ஆம்பளைகளுக்கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா?"

"அப்படியெல்லாம் இல்லம்மா... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்கம்மா..."

"இங்க பாரு தம்பி.. கண்ட கண்ட எடுபட்ட நாய்ககிட்ட எல்லாம் பேச எனக்கு விருப்பமில்லை... தேவையில்லாம அடி வாங்கிச் சாகப் பாக்காதே..."

"அம்மா... இது உங்க பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்க..."

"என்ன மிரட்டுறியா?"

"நான் எதுக்குங்க உங்கள மிரட்டணும்... அவங்க என் கூட பழகுறாகன்னு சந்தேகப்பட்டு அவங்களுங்கு மாப்பிள்ளை பாக்குறீங்க... அவங்க இன்னும் நிறைய படிக்கணுமின்னு ஆசைப்பட்டாங்க..."

"எங்க சாதியில இவ இது படிச்சதே அதிகம்... நீ எங்களுக்கு புத்தி சொல்ல வேணாம்..."

"இருங்க இன்னும் முடிக்கலை... அதுக்குள்ள குறுக்கே பேசுறீங்க... பேசாம நான் பேசுறைதைக் கேளுங்க..." குரலை உயர்த்தினான்.

அவன் குரல் உயர எதிர் முனை மௌனமானது. ராம்கிக்கு ஆஹா நம்ம பேச்சைக் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இனி சக்ஸஸ்தான் என்று தோன்ற, "இங்க பாருங்க... அவங்களை மேல படிக்க வையுங்க... அவங்க மனசுக்குப் பிடிச்ச என்னை உங்க மனசுக்குப் பிடிக்கிற நாள் வரும்... அதுவரைக்கும் உங்க பொண்ணுக்கு என்னால கெட்ட பெயர் வராது..."

"ஏய் என்ன பேசுறே... யார்க்கிட்ட பேசுறே தெரியுமா?"

"தெரிஞ்சுதான் பேசுறேன்... ஆம்பளைங்க அவசர முடிவு எடுக்கலாம்... இப்போ எங்களைப் பிரிச்சி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா அவங்க நிம்மதியா வாழ்ந்திருவாங்களா என்ன... சரி கட்டிக்கிட்டுப் போறவனை மனசுக்குப் பிடிக்கலைன்னா தினமும் சண்டை சச்சரவுன்னு இருப்பாங்கன்னு வச்சிக்கங்க... அப்ப பெத்த மனசு அவ மனசுக்குப் பிடிச்சவனோடவாவது வாழ விட்டுருக்கலாம்ன்னு யோசிக்குமா இல்லையா... சொல்லுங்க... இதே உங்க பொண்ணு வாழவெட்டியா வந்து நின்னா... அவங்களோட வாழ்க்கையும் போயி படிச்சி பெரிய ஆளா வரணுங்கிற லட்சியமும் போயி நின்னா நீங்க சந்தோஷப்படுவீங்களா... அப்போ சாதிதான் பெரிசு மக வாழ்க்கை போனா போகுதுன்னு நினைச்சு உங்க சந்தோஷத்தைத் தொடருவீங்களா... இப்படி ஆச்சேன்னு தினம் தினம் சங்கட்டப்பட்டு அழுவீங்களா?"

"...."

"என்ன ஒரே குதியா குதிச்சீங்க... இப்ப மௌனமாயிட்டீங்க... நான் உங்களை அத்தையின்னு கூப்பிடப்போறேன்னா இல்லையாங்கிறது எனக்கு முக்கியமில்லை. என்னோட புவியோட லட்சியம், கனவு பலிக்கணும்... அதை எங்க காதல் காவு வாங்கிடக்கூடாதுன்னுதான் இவ்வளவு தூரம் பேசுறேன்... உங்களை நேர்ல பார்த்துப் பேசத்தான் ஆசை... இருந்தும் சில காரணங்களால இப்போ பேச வேண்டியதாயிருச்சு... தயவு செய்து புரிஞ்சிக்கங்க... புவிக்காக முன்னாடியே கத்திக்குத்தெல்லாம் வாங்கியிருக்கேன்... இன்னும் என்ன வேணுமின்னாலும் வாங்கத் தயாரா இருக்கேன்... நீங்க தூக்கிச் சுமக்கிற சாதியால எங்க காதலை ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு உங்க ஆதரவு தேவை. நான் உங்ககிட்ட பேசுறது பத்தி புவிக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ் புவியத் தொடர்ந்து படிக்க வையுங்க... அவங்க படிச்சு முடிக்கிற காலத்துக்குள்ள என்னைய உங்களுக்குப் பிடிச்சா உங்க ஆசியோட எங்களை சேர்ந்து வையுங்க... இல்லைன்னா நாங்களாவே பெத்தவங்க முடிவை ஏத்துக்கிறோம்..."

"நீ சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா இது நடைமுறைக்கு ஒத்து வராது தம்பி... தேவையில்லாம பேசி வாங்கிக் கட்டிக்காதே... இனி தயவு செய்து போன் பண்ணாதே... புவனாவோட அப்பாக்கிட்ட சொல்ற மாதிரி ஆயிடும்..."

"இம்புட்டு நேரம் கேட்டீங்க.... ஆரம்பத்துல சத்தமாப் பேசினீங்க.... இப்போ கொஞ்சம் யோசிச்சுப் பேசுறீங்க... எனக்குத் தெரியும் கண்டிப்பா நீங்க எங்களைப் பற்றி யோசிப்பீங்க... எங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு.... சாதியும் கௌரவமும் முக்கியம்ன்னு நினைச்சீங்கன்னா புவிக்கு கல்யாணம் பண்ணி வையுங்க... இல்ல அவங்க ஆசைப்பட்டபடி படிப்பும் வாழ்க்கையும் அமையணுமின்னு நினைச்சீங்கன்னா இன்னும் ரெண்டு மூணு வருசத்துக்கு அவங்க விருப்பப்பட்டபடி விடுங்க... ஆனா இப்பவும் சொல்றேன்.... பெத்தவங்க சம்மதம் இல்லாம நாங்க ரெண்டு பெரும் சேர மாட்டோம் அதுல கடைசி வரைக்கும் உறுதியா இருப்போம்... ஆனா எதாவது வில்லங்கம் வந்தா அதுக்காக நாங்க எங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்... ஆனா அப்படியெல்லாம் வராதுன்னு நம்புறோம்... நான் பேசின எதையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்... இப்போ போனை வைக்கிறேன்..." என்றபடி அவளது பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தவன் நம்மதான் பேசினோமா என்று நம்பமுடியாமல் சிரித்துக் கொண்டான். எதுவுமே பேசாமல் இருந்தார்களே... என்ன நடக்கும் என்று யோசித்தபடி கட்டிலில் போய் படுத்தான்.

தே நேரம் போனை வைத்த புவனாவின் அம்மா சேரில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். முகமெங்கும் திட்டுத்திட்டாக வேர்த்திருந்த வேர்வையை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். 'இந்தப்பய என்னமா பேசுறான்... என்னையவே வாயை அடைக்க வச்சிட்டானே... என்ன தைரியம் அவனுக்கு ரெண்டு பேரும் காதலிக்கிறோம்ன்னு தைரியமாச் சொல்லுறான்...' என்று மனசுக்குள் தானே பேசிக் கொண்டாள். குட்டித் தூக்கம் ஒன்று போட்டுவிட்டு வெளியே எழுந்து வந்த புவனா அம்மா அமர்ந்திருந்த கோலம் பார்த்ததும் பதறினாள்.

"என்னம்மா... என்னாச்சு... ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு... யார்க்கிட்டயோ பேசுற மாதிரிக் கேட்டுச்சு... என்ன எதாவது பிரச்சினையா?" என்று பதறலாய் கேட்டபடி அம்மாவின் அருகில் அமர்ந்து அம்மாவின் புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்துவிட்டு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்கச் சொன்னாள்.

அம்மா கொஞ்சம் ஆசுவாசமானதும் "என்னம்மா... என்னாச்சு.... அப்பாவுக்குப் போன் பண்ணி மாத்திரை எதுவும் வாங்கிட்டு வரச்சொல்லவா?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா... கொஞ்சம் படபடப்பா இருந்துச்சு... அம்புட்டுத்தான்..."

"சரி கொஞ்ச நேரம் படுங்க... அடுப்புல எதுவும் இருக்கா? நான் பார்த்துக்கிறேன்..."

"எல்லா வேலையும் முடிஞ்சிருச்சும்மா...."

"சரி படுங்க..." என அம்மாவை படுக்கச் சொல்லி காலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு மெதுவாக காலை அமுக்கிவிட்டாள்.

"புவனா.... அந்தப் பையனை உனக்கு ரொம்பப் பிடிக்குமா?" மெதுவாக மகளைப் பார்த்துக் கேட்டாள்.

"எ... எந்தப் பையனை..." படபடப்பாய் இருந்தாலும் காட்டிக் கொள்ளாது இழுத்தாற்போல் கேட்டாள்.

"அதாம்மா.. அந்த ராமகிருஷ்ணன்... அதென்ன மூச்சுக்கு முன்னூறு தடவை புவி... புவியின்னு சொல்றான்..." மகளின் கைகளைப் பற்றிக் கொண்டபடி கேட்டாள்.

புவனா பதிலெதுவும் பேசாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

தனிமரம் சொன்னது…

ஹீரோ வேசம் நிஜமா!ம்ம் தொடர்கின்றேன் சார்.

தனிமரம் சொன்னது…

மீண்டும் சொல்லுவது வடிகட்டல்/ஆசிரியர் ஓப்புதல் மூலம் கருத்துரை வெளீயீடு செய்வது இன்னும் நாம் எந்த நாட்டில் வாழுகின்றோம் என்ற் சந்தேகம் வருகின்றது ஐயா! இந்த பின்னூட்டமும் தூக்கும் உரிமை குமாருக்கு உண்டு தனிமரம் ஒப்புதல் உடன்!ஹீ

Unknown சொன்னது…

சபாஷ்!சரியான போடு.கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்!