மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 9 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 67

முந்தைய பதிவுகளைப் படிக்க...



67.  மீண்டும் சதிவலை

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள்.

இனி...

ராம்கியைக் காதலிப்பதை புவனா வைரவனிடம் சொல்ல அவன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.

"என்ன சொன்னே?" சிகரெட்டை தூக்கி வீசியபடி கோபமாகக் கேட்டான்.

"ம்... நான் ராம்கியை விரும்புறேன்னு சொன்னேன்"

"ஏய்... என்னடி சொன்னே?"

"என்ன சொன்னே... என்னடி சொன்னேன்னு திரும்பத்திரும்பக் கேக்குறே?"

"என்ன எகத்தாளமா? எம்புட்டுத் தைரியம் இருந்தா எங்கிட்ட வந்து இதைச் சொல்வே?"

"தைரியமும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... நாங்க லவ் பண்றோம்... எங்களைச் சேத்து வைக்க ஒரு ஆள் வேணும் அதுதான் உங்கிட்ட சொல்றேன்..."

"லவ்வாமுல்ல லவ்வு... நாம எங்க... அவுக எங்க... நம்ம கால்த்தூசிக்கு வருவானுங்களா..."

"எனக்கு அதெல்லாம் தெரியாது... ராம்கியைப் பிடிச்சிருக்கு..."

"என்னடி நாஞ் சொல்றதுக்கு திரும்பத்திரும்ப பதில் சொல்லிக்கிட்டு..." என்று கத்தியபடி கையில் இருந்த சிகரெட்டை தூக்கி வீசிவிட்டு அவளது கண்ணத்தில் 'பளார்' என்று ஒரு அறைவிட்டான்.

அந்தப்பக்கமாக தண்ணீர் பார்த்துக் கொண்டு வந்த வேலையாள் மாணிக்கம் "என்ன தம்பி இது... வயசுக்கு வந்த புள்ளய கை நீட்டிக்கிட்டு..." என்று கேட்க, "அவ என்ன பேசுறான்னு தெரியுமா... சரி... சரி நீ ஒன்னோட வேலையப் பாரு... அப்பாக்கிட்ட இதைப் பத்தி வத்தி வைக்காதே..." என்று வைரவன் சொன்னதும் புவனாவைப் பாவமாய்ப் பார்த்தபடி அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

"இங்க பாரு இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. அவன் என்ன சாதி... நாம என்ன சாதி... யோசிச்சியா... படிப்ப முடிச்சமா வீட்ல பாக்குற பயலுக்கு கழுத்தை நீட்டுனோமான்னு இருக்கணும்... புரியிதா"

"அவன் எந்த சாதியாவோ இருக்கட்டும்... எனக்கு அவன் வேணும் அம்புட்டுத்தான்... நீ சொல்ற மாதிரி சாதி பாத்து வந்தா அது காதல் கிடையாது புரிஞ்சிக்கோ" கண்ணீரோடு சொன்னாள்.

"இங்க பாரு என்னைய கொலைகாரனாக்கிடாதே... மறுபடியும் மறுபடியும் அவந்தான் வேணுமின்னு சொன்னியன்னா... அவனை பொணமாக்கிடுவேன் ஜாக்கிரதை..."

"இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். உன்னோட உயிரைக் காப்பாத்துன என்னோட ராம்கிக்கு அவரோட உயிரைக் காப்பாத்திக்கத் தெரியாதா என்ன...நாங்க ஒண்ணு சேர நீதான் உதவணும்... செய்வியா?"

"எனக்கு இந்தக் காதலே பிடிக்கலைன்னு சொல்றேன்... உதவி வேணுமாம் உதவி... வா வீட்டுக்குப் போவோம்..." என்றபடி வண்டியை எடுத்தவன் "இங்க நடந்தது வீட்ல தெரிய வேண்டாம்... தேவையில்லாத பிரச்சினை வரும்... நீ அவனைக் காதலிக்கிறது எனக்கு அரசல்புரசலாத் தெரியும்... வெடிக்கும் போது பாத்துக்கலாம்ன்னு பார்த்தேன்... தைரியமா எங்கிட்டயே வந்து சொல்றே... ஆனா அவனை மறந்துடு... அதுதான் உனக்கும் நல்லது... அவனுக்கும் நல்லது... ஏறு" என்றதும் பேசாமல் ஏறி அமர்ந்தாள்.

வீடு வரும் வரை எதுவும் பேசாமல் வந்தவள், வண்டியை விட்டு எறங்கும் போது "எங்க ரெண்டு பேரையும் நீதான் சேர்த்து வைப்பே... இது நடக்குதா இல்லையான்னு பார்ப்போம்... " என்றபடி வீட்டுக்குள் சென்றவளைப் பார்த்து பல்லைக் கடித்தான்.


"ஏன்டா இம்புட்டு நேரம்? எங்க போனே... உனக்காகத்தான் வெயிட்டிங்க" என்றவனிடம் "கொஞ்சம் வேலை... அதான் லேட்டாயிருச்சு? ஆமா எல்லாரும் வந்துட்டானுங்களா..." என்று கேட்டபடி வண்டியில் இருந்து இறங்கினான்  வைரவன்.

"எல்லாரும் வந்தாச்சு... உள்ள வா"

உள்ளே சென்று அமர்ந்ததும் தண்ணிப் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தது. பாட்டில்கள் காலியாக வைரவனின் நெஞ்சுக்குள் புவனா சொன்னது திரும்பத் திரும்ப வர ஆரம்பிக்க ராம்கியின் மேல் வெறி ஏறியது. '...க்காலி எங்கிட்டே வேலையக் காட்டுறியா?' என்று சொல்லியபடி கையிலிருந்த கிளாசை சுவற்றில் தூக்கி அடித்தான். அதைப் பார்த்து பயந்த நண்பர் கூட்டம் பீதியானது. அப்போது உள்ளே நுழைந்த இளங்கோவைப் பார்த்ததும் வெறி இன்னும் ஏறியது.

"இவனை எதுக்குடா கூப்பிட்டீங்க நொண்ணைங்களா... எங்கிட்ட நடிக்கிறீங்களா?"

"இல்லடா இளங்கோ மச்சாங்கிட்ட பார்ட்டிக்கு நீ வர்றேன்னு சொன்னதும் உன்னைய பாக்கணுமின்னான்... அதான்..." சற்று தள்ளி நின்று மெதுவாகச் சொன்னான் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணியவன்.

"என்னையப் பார்த்து என்ன புடுங்கப் போறாராம்?"

"இங்க பாரு மாப்ளே... காலேசு படிக்கும் போது அடிச்சிக்கிட்டோம்... அது வயசு... அதுக்காக ஒரு சாதிக்காரப் பயலுவ நாம பிரிஞ்சி நின்னிட முடியுமா என்ன... இப்பவுல இருந்து பிரண்டா இருப்போம்..." என்றபடி அவனருகே அமர்ந்து கை கொடுக்க வைரவன் வேண்டா வெறுப்பாக அந்தக் கையைப் பிடித்து குலுக்கினான்.

"அப்பா நீண்ட நாள் பகை முடிவுக்கு வந்தாச்சு... மாப்ள அடுத்த ரவுண்டு ஊத்து ரெண்டு சிங்கமும் சேர்ந்ததைக் கொண்டாடுவோம்..." என்று ஒருவன் கத்த "நீங்க சாப்பிடுங்க... எனக்குப் போதும்... ரொம்ப ஓவராயிடுச்சு.. வீட்டுக்கும் போகணும்..." என்றபடி வைரவன் எழ, "அப்ப எங்கூட பேசப் பிடிக்கலை அப்படித்தானே... நா வரும் போது கிளாஸை ஒடச்சியே... அதுக்கு என்ன காரணமுன்னு சொல்லிட்டுப் போ... அதை நா பாத்துக்கிறேன்..." என்றபடி சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்.

சிகரெட்டைப் பிடித்தபடி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த வைரவன் நீண்ட யோசனைக்குப் பின் 'இப்போதைக்கு இவனைப் பயன்படுத்திக்குவோம்' என நினைத்துக் கொண்டு "மாப்ள... நாம இனி ஒண்ணுடா... எந்தங்கச்சி இருக்கால்ல... அதான்டா புவனா அவ அந்தப் பரதேசி... அதான்டா ராம்கி... அவனை லவ் பண்றாளாம்... எங்கிட்டேயே சேர்த்து வையின்னு சொல்றாடா... ...க்காலி அவனைப் போடணும்டா..." என்று கத்தினான்.

"ம்... அப்பவே சொன்னோம் நீ கேட்டியா... உன்னைய காப்பாத்தி அவளைப் பிக்கப் பண்ணிட்டான்... சரி விடு... நாங்கள்லாம் இருக்கும் போது அவனை விட்டுருவோமா என்ன.. ம்... மணி நல்லாயிருந்தா நாளைக்கே அவனை எரிச்சிருவான்.... உனக்கு என்ன புவனா விஷயத்துல அவன் குறுக்க வரக்கூடாது அம்புட்டுத்தானே... நான் பாத்துக்கிறேன்... ஆனா அதுக்கு நீ எனக்கு என்ன செய்வே?" இளங்கோ குதர்க்கமாய் கேட்டான்.

"என்ன வேணும் உனக்கு... நாஞ் செய்யிறேன்... ஆனா எனக்கு அவன் பொணமா வேணும்..."

"ஓகே... அவனை உனக்கு முன்னாலயே போடுறேன்... அது சப்பை மேட்டர்... எனக்கு புவனா வேணும்... மனைவியா வேணும்... நீ இதுக்கு ஒத்துப்பியா?"

புவனா வேணும் என்றதும் வைரவன் யோசிக்க... மற்றவர்கள் அனைவரும் வியப்பாய் பார்க்க... இளங்கோ சிரித்தான்.

"என்ன மாப்ள... டீல் ஒத்து வராதுன்னு பாக்குறியா? எவனோ ஒருத்தனை நாலு வருசத்துக்கு மேல விரும்பினவ... அவளை மனைவியாக்கிக்கத்தானே நினைக்கிறேன்... எல்.எல்.பி. முடிச்சிட்டேன்... வக்கிலா பிராக்டிஸ் பண்ணுறேன்... ஒரே சாதி... ஊருக்குள்ள மதிப்பா இருக்க குடும்பம்... நீ சரியின்னு சொன்னா ...க்காலி இந்தத் தண்ணியவும் புவனாவுக்காக விட்டுடுறேன்..." என்றான்.

"சரி மாப்ள... முதல்ல அவனை முடி... அப்புறம் உங்க கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன்..." என்றபடி அவனது கையைப் பிடித்து குலுக்கிவிட்டு எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

"என்னடா... புவனாக்கிட்ட பேசினியா? என்ன சொன்னுச்சு?" ராம்கியிடம் கேட்டான் சேவியர்.

"இன்னைக்கு மல்லிகா வீட்ல இருந்து பேசுச்சு... வைரவனுக்கிட்ட பேசுச்சாம்... அவரு ஒத்துக்கலையாம்... அடிச்சிட்டாராம்..."

"நாந்தான் அப்பவே சொன்னேன்ல... இப்ப தேவையில்லாம அது பக்கம் பிரச்சினை வந்தாச்சு..."

"இல்லடா... எங்கண்ணன் சேர்த்து வைப்பான்னு புவி நம்பிக்கையா சொல்லுதுடா..."

"எப்படிடா..?"

"தெரியல... ஆனா ரொம்ப நம்பிக்கையா இருக்கு... எனக்கும் ஊருக்குப் பொயிட்டு வரலாம்ன்னு தோணுதுடா... ஒரு ரெண்டு நாள் பொயிட்டு வரவா..."

"ம்... எனக்கென்னவோ நீ இப்பப் போறது நல்லதில்லைன்னு தோணுது... நாம அண்ணாத்துரைக்கிட்ட பேசிப்பாக்கலாமா?"

"வேணான்டா... நேர்ல பொயிட்டு வாரேண்டா... ரொம்ப இல்ல... ரெண்டு நாள் மட்டும்... அம்மாவையும் பாக்கணும்டா.... அப்புறம் அக்கா இப்போத்தான் உண்டாகியிருக்காம்... அதையும் பாத்துட்டு புவியையும் பார்த்துட்டு பசங்ககிட்ட பேசி ஒரு நல்ல முடிவோட வாரேண்டா..."

"சரி... பொயிட்டு வா..." என்றவன் "ராம் பத்திரமாப் பொயிட்டு வாடா" என்றான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

வணக்கம் குமார்!நலமா?///கடந்த பகுதிக்கும் இன்றைய பகுதிக்கும்,அதாவது முடிவுக்கும்,இன்றைய ஆரம்பத்துக்கும் ஒட்டவில்லையே?வீட்டில் புவனா வைரவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறா.வைரவன் வண்டியில் வீட்டுக்கு வந்து விடுகிறாரே?பின்னர் எங்கிருந்து புவனாவை ஏற்றி வர முடியும்?சம்பாஷனை வீட்டு வாசலில் நிகழ்கிறதே?(இதுவிமர்சனக் கருத்தல்ல.தவறை சுட்டிக் காட்ட வேண்டும் போல் தோன்றியது ,அவ்வளவே,பிரசுரிக்க வேண்டாம்.)

Unknown சொன்னது…

சாதி.....................இந்தக் காலத்திலும்,ஹூம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
அதற்கு அடுத்து ஒரு பதிவு போட்டாச்சு அண்ணா... தங்களுக்கு அந்த பதிவு தெரியவில்லையா என்ன?

அதைப் பதியும் போது சின்ன பிரச்சினை. அதனால் இருக்குமோ... இருந்தும் நண்பர்களின் கருத்துக்கள் வந்துள்ளதே...

நான் கூட தங்கள் கருத்து இல்லை என்றதும் வேலை பிசி போல என்று நினைத்தேன்.

அந்தப் பதிவின் இணைப்பு இதோ...

http://vayalaan.blogspot.com/2014/07/blog-post_5.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்ந்து படிக்கும் நீங்கள் கேட்டதில் தவறில்லை அண்ணா...

சந்தோஷமாக இருக்கு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன் நண்பரே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விறுவிறுப்பான தொடர்..

Unknown சொன்னது…

சே. குமார் said...
வணக்கம் அண்ணா...
அதற்கு அடுத்து ஒரு பதிவு போட்டாச்சு அண்ணா... தங்களுக்கு அந்த பதிவு தெரியவில்லையா என்ன?///அந்தப் பகுதி(65)என் பக்கத்தில் தோன்றாததால் இந்தக் கருத்து வெளிப்பட்டது.படித்து தெளிவு வந்தது,நன்றி குமார்!

Bavyakutty சொன்னது…

அருமை.. சிறந்த கதை தொடர்...பகிர்வினிற்கு நன்றி..

Happy Friendship Day 2014 Images