மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 ஜூலை, 2011

வாழ்க்கை முழுமையானதா? பகுதி-II

  

முதல் பகுதி படிக்காதவர்களுக்காக... 


ஒரு அரசியல்வாதி நாட்டை ஆண்டு மறைந்தான் என்றால் இப்படி ஒருத்தன் இருந்தான் நாட்டு மக்களுக்கு செய்தானோ இல்லையோ வாரிசுக்குச் செய்தான் என்று அவன் வரலாறு பல காலம் பேசப்படும். அப்படிப் பேசப்பட்டால் அந்த அரசியல்வாதி முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் என்று அர்த்தமாகிவிடுமா...? அவன் மனசுக்குள்ளும் சோகங்கள் இல்லாமலா இருந்திருக்கும்... இல்லை நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தான் என்று யாராவது அடித்துச் சொல்லத்தான் முடியும.

ஒரு கவிஞன் தன் யோசனையில் விளைந்த முத்துக்களை புத்தகங்களாக வடித்து வைத்திருக்கிறான். அவன் காலத்துக்குப் பிறகு அவன் கவிதைகள் பேசப்பட்டால் அவன் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து சந்தோஷமாக மறைந்திருக்கிறான் என்று அர்த்தமாகிவிடுமா? இல்லை அந்தப் புத்தகங்கள் எத்தனை காலத்துக்கு அவன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் சொல்லுங்கள்.

ஒரு நடிகன் தன் நடிப்பால் உலகையே கலக்கி மறைந்தானென்றால் அவன் நடிப்பு ஆஹா... ஓஹோவென்று பல காலங்கள் புகழப்படலாம். அப்படி புகழப்படும் நடிகன் உண்மையிலேயே சாதித்தானா... சந்தோஷமாக வாழ்ந்தானா... இந்தப் புகழ்ச்சி அவன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்காக கிடைத்ததாக இருந்தால் எத்தனை காலத்துக்கு?

இவ்வளவு ஏன் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைத்திருக்கிறோம்... சிம்மக் குரலோன் என்று புகழ்கிறோம்... அடுத்த தலைமுறைக்கு சிவாஜி எப்படித் தெரிவார்... கலைஞனாகவா... இல்லை சிலையாகவா...? இப்ப இருக்கும் நாமே பழைய படங்களை பார்க்க யோசிக்கும் போது நாளைய உலகம்...?

இன்னும் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம்... மக்களுக்காக போராடிய தலைவர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், அரசியல் வாதிகள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், போலிச்சாமியார்கள், பாடகர்கள் என எல்லாரும் புகழை மட்டுமே விட்டுச் செல்கிறார்கள். அப்படியென்றால் இந்த புகழ் என்ற போதை மட்டுமே வாழ்க்கையாகிறதா?வாழ்ந்ததற்கு ஆதாரமாக எதையாவது விட்டுச் சென்றால் அது வாழ்க்கையாகிவிடுமா? தன் வாழ்நாளில் மரக் கன்றுகளை நடுவதை எத்தனையோ பேர் தவமாக செய்கிறார்கள்... நாம் அதை சிலாகித்துப் பேசுவோம்... அடுத்த தலைமுறையும் பேசும். அதன் பின் பேச மரம் இருந்தாலும் இருக்கும் மனுசனுக்கு இவர்களைத் தெரியுமா?

சரி வாழ்க்கை என்றால் என்ன? நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? வைரமுத்து சொன்னது போல் எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரிச்சுப் பார்த்தாலும் தம் சந்ததிக்காக வாழ்ந்து மறையும் வாழ்க்கை உண்மையான வாழ்க்கைதானா? இதில் நிம்மதியும் நிறைவும் இருக்கிறதா? அப்படி இரண்டுமே இருந்தால் நாம் வாழ்ந்த வாழ்க்கை முழுமையாகிவிடுமா? பணம், புகழ் எல்லாம் நம்மை நாளைய உலகுக்கு அடையாளம் காட்டும் என்றால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா?

சரிங்க... என் நண்பன் ஒருவன் வாழ்க்கையென்றால் என்ன என்று எதார்த்தமாக கேட்கப் போக, நானும் உக்காந்து யோசிச்சேன்... யோசிச்சேன்... ம்... மேலே சொன்ன எல்லாமும் வரிசையா வந்து நின்றது... ஆனா வாழ்க்கையைப் பற்றி ஒரு மண்ணும் தோணலை...

என்னடா இவன் இரண்டு இடுகை போட்டுட்டு கடைசியியல் ஒரு மண்ணும் தோணலைன்னு சொல்லிட்டானே 'எங்கடா அந்த அருவாளை எடுடான்னு' நீங்க சொல்றதுக்குள்ள இந்த வாழ்க்கை என்பது நாம் விட்டுச் செல்லும் உறவுகளாலும் நமது உடமைகளாலும் நெய்யப்பட்டதுதான் என்றாலும் அது முழுமையானது அல்ல... நாம் வாழ்வது முழுமையான வாழ்க்கையும் அல்ல... என்பதே என் கருத்து.

இந்தக் கருத்து முழுமையானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

அப்படியென்றால்...

வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் நாமெல்லாம் சேர்ந்து விவாதிக்கலாமே... உங்களுக்கு தெரிந்ததை உங்கள் வலைப்பூக்களில் பகிருங்கள்... விவாதிப்போம்...வாழ்க்கை முழுமையானதா? என்ற எனது  முதல் பகுதிக்கு நண்பர்கள் அளித்த பின்னூட்டத்தில் சில...


இந்த மாதிரி தேடலில் சுலபமாகத் தொலைந்து போக முடியும். நிறைய யோசிக்க வைக்கிறீர்கள். சாதனைகள் அவரவர் செயலைப் பொறுத்து வாழ்வில் நிறைவைத் தருகின்றன. சிலருக்கு மூச்சு விடுவதும் சாதனை. கட்டில் கிழவரின் சந்தோஷங்கள் வாழ்வில் நிறைவைத் தரலாம் என்றே நினைக்கிறேன்.

திருமதி. மனோ அம்மா...

ஏற்க‌ன‌வே இன்றைய‌ குழந்தைக‌ளுக்கு உறவின் அருமை தெரிவதில்லை! அதற்கு கணினி, மற்ற‌ புறச்சாதன‌ங்கள் மட்டும் காரணம் இல்லை! உறவுகளைப் பற்றியும் அன்பின் மேன்மையைப்பற்றியும் சொல்லிக்கொடுத்து வள‌ர்க்காத இன்றைய பெற்றோர்கள்தான் முக்கிய காரணம்!

முதுமை அடையும்போது அதுவரை வாழ்ந்த அனுபவங்கள் தந்த களைப்பும் நிறைவும்தான் அந்தக் கிழவரை அப்படிப் பேசச்சொல்லுகிறது!

திரு.ஜீ...

எல்லாரும் காலங்காலமாக ஓடிக்கொண்டே இருந்தாலும் வெகு சிலரின் தடங்களே சரித்திரத்தில்! மற்றவர்கள் எந்த அடையாளங்களும் இல்லாமல் நிறுத்திவிடுகிறோம்!

திருமதி ரமா(RAMVI) அக்கா...

உங்க பதிவை படித்தவுடன், ஆம் என்ன சாதித்து விட்டோம்? என்று எண்ண தொடங்கி விட்டேன்.

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photos from Google search

ஞாயிறு, 24 ஜூலை, 2011

வாழ்க்கை முழுமையானதா? - பகுதி - I
வாழ்க்கை என்பது என்ன? நாம் வாழும் இந்த சங்கிலித் தொடர் இருக்கிறதே... இதுதான் வாழ்க்கையா... இல்லை வாழ்க்கை என்னும் பக்கத்தில் இன்னும் நிறைய இருக்கிறதா..? நாம் ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் போது நிறைவுடன் செல்கிறோமா... இல்லை நிறைவில்லா வாழ்க்கையாகிப் போச்சே என்று நினைத்துச் செல்கிறோமா? எதாவது ஒரு வகையில் சாதிப்பது மட்டும்தான் வாழ்க்கையா... இல்லை சாதனைகளும் நிறைந்தது வாழ்க்கையா..? வாரிசுகள் வாழ வழி செய்து வைப்பது மட்டும் வாழ்க்கையா... இல்லை நாம் வாழ்ந்த வாழ்க்கை பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வாழ்க்கையா? வாழ்க்கை குறித்து இதுபோல் இன்னும் எத்தனையோ கேள்விகள் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள முடியும். கேட்டால் மட்டும் போதாது எது வாழ்க்கை என்று தெளிந்து வாழ நினைக்க வேண்டும். ஆனால் நாம் இதுவரை இப்படிப்பட்ட கேள்விகளை நமக்குள் கேட்டிருக்கிறோமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது எப்படி வாழவேண்டும் என்று நினைக்கத்தான் தோன்றுமா என்ன?

நம் மனித இனம் எப்போது தோன்றியது யாருக்கேனும் தெரியுமா? ஆதாம் ஏவாள்தான் ஆரம்பம் என்கிறோம். சரி அப்படியே இருக்கட்டும். அந்த ஆதாம் ஏவாள் தொடங்கி இன்று இந்த நொடியில் உலகின் ஏதோ ஒரு மூலையில் பிறக்கும் குழந்தை வரை வந்தவர்கள் எத்தனை பேர்... வாழ்ந்து சென்றவர்கள் எத்தனை பேர்... என்பது நம்மில் யாருக்கேனும் தெரியுமா? அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதுண்டா? ஒரு வாரம் முன்னர் என்ன சாப்பிட்டோம் என்பதே நமக்கு ஞாபகத்தில் இல்லை... இதில் வாழ்ந்தவர்கள் கணக்கு நமக்கெதுக்கு என்ற நினைப்பு வருகிறது அல்லவா?.

எத்தனையோ மனிதர்களில் நம்மால் ஞாபகத்திற்குள் வைத்துக் கொள்ள முடிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்? விவேகானந்தர், நேரு, அண்ணா, காந்தி, காமராஜர், கண்ணதாசன்... இப்படியாக நம் மனதிற்குள் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்களா? அப்படியானால் வாழ்ந்து மறைந்த மற்றவர்கள் எல்லாம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள் என்பதுதானே அர்த்தம். இதே நிலை நாளை நமக்கும்தான் என்பதை நாம் அறியாமலில்லை இருந்தும் என்ன செய்துவிட்டோம்... சொல்லுங்கள்.

ஒரு சிலர் மட்டும் மனதில் நிற்க காரணம் அவர் சார்ந்த துறைகளாலேயே தவிர அவரது ஒழுக்கத்தால் அல்ல என்பதை நாம் அறிவோம். அப்படியிருக்க இந்த உலகில் பிறந்த எல்லாரும்தான் வாழ்ந்தார்கள். தங்களுக்கும் தங்கள் சந்ததியின் வாழ்க்கைக்குமாக உழைத்தார்கள்... என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அனுபவித்து மடிந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நினைவில் இல்லையே?மருது பாண்டியர், கட்டப்பொம்மன் என அரசர்கள் எல்லாம் ஞாபகத்தில் நிற்கக் காரணம் பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். இன்னும் எத்தனை காலங்களுக்கு வரலாறுகள் பேசும்?

ஏன் நம் உறவுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை இந்த உலகிற்கு கொடுத்த அப்பா, அம்மாவை நமக்குத் தெரியும். அவர்கள் மூலமாக அப்பாவின் பெற்றோர், அம்மாவின் பெற்றோருடன் வாழ்ந்து இருக்கிறோம். அவர்களுக்கு முந்தைய நம் தாத்தா பாட்டி குறித்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். அவர்களுக்கும் முந்தையவர்கள் யார்? அவர்கள் சாதித்தது என்ன என்பது வெகு சிலருக்கே தெரியலாம் ஆனால் பலருக்கு?

நம் வம்சாவழியின் அடி வேரில் சிலது மட்டுமே தெரிந்த நமக்கு ஆணி வேர் எங்கே தெரியப் போகிறது. நமக்கேனும் பரவாயில்லை தாத்தா பாட்டி வரை போகிறோம். நம் குழந்தைகளான இன்றைய தலைமுறை கணிப்பொறியையும் வீடியோ கேமையும் கட்டிக் கொண்டு அறைக்குள் அடங்கிய வாழ்க்கையோடு பழகிவிட்டது. அவர்களுக்கு உறவின் விழுதுகள் தெரியாமல் போகும் காலம் தூரமில்லை.

நாம் பிறந்தோம்... வளர்ந்தோம்... வயதின் வளர்ச்சிக்கான மாற்றத்தில் காலத்துக்கு தகுந்தவாறு பச்சோந்தியாய் வாழ்கிறோம். திருமணம், குழந்தைகள் என ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லை எட்டும் நாம் அத்துடன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். நமக்கு பின்னே நம் சந்ததி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஓட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சொத்து சேர்த்தாச்சு... பிள்ளையை படிக்க வச்சி நல்ல வேலையில் அமர்த்தி கல்யாணமும் பண்ணிப் பார்த்தாச்சு... எல்லாம் அனுபவிச்சாச்சு இனி என்னய்யா இருக்கு காடு வா... வாங்குது... வீடு போ...போங்குது... சந்தோஷமா போக வேண்டியதுதான் என்று மாலை நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வேப்பமரத்துக் காற்றை சுவாசித்துக் கொண்டே பேசும் முதியவர் என்ன சாதித்துவிட்டதாக கருதுகிறார்... அவர் சொல்லும் வாவா... போபோவோடு அவர் குறித்த நினைவுகளும் சமாதியாகிவிடும் என்பது தெரிந்துதானே சொல்கிறார். அப்படியானால் அவர் பெற்ற இந்தச் சந்தோஷங்களுடன் வாழ்க்கை முடிந்து விடுகிறதா?

----->தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

**** பதிவு பதிந்த பின் பார்த்தால் மிக மிக நீண்ட பதிவாகிவிட்டது எனவே இரண்டு பதிவாக பதிவிட வேண்டியதாகிவிட்டது. மீதமுள்ள பகுதி அடுத்த பதிவாக வரும்... நன்றி.

**** Thanks:  Photo from Google.

புதன், 20 ஜூலை, 2011

நினைவுகள் சுடுவதில்லை'பாழாப்போற கரண்ட்டு எப்ப போகுமின்னே தெரியலை. திடீர்ன்னு வருது... திடீர்ன்னு போகுது... ராத்திரியில கரண்ட நிப்பாட்டி தூக்கத்தை கெடுக்கிறாய்ங்க' என்று முணுமுணுத்தபடி கம்பியில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து துடைத்து... 'மண்ணெண்ணெய் இருக்கான்னு தெரியலையே' என்று முணங்கியபடி... ஆட்டிப் பார்த்து ஒரு ஓரமாக வைத்தாள் கண்ணம்மா.

"அதான் அண்ணன் ஊர்ல இருந்து கொடுத்துவிட்ட சார்ஜர்லைட் இருக்குல்ல... அப்புறம் எதுக்கும்மா தினமும் லண்டியனை தொடச்சு வக்கிறே..?" எதோ வரைந்து கொண்டிருந்த சின்ன மக செண்பகம் கேட்டாள்.

"ஆமாடி கரண்டே சரியா வரலையாம்... இதுல சாருசுலைட்டு எங்குட்டு எரியும்... சாருசுலைட்டு... அவசரத்துக்கு லண்டியந்தான்டி நமக்கெல்லாம் ஒத்து வரும்" என்றபடி புகைந்த அடுப்பில் சில்லாமடையையை பிய்த்துப் போட்டு ஊதாங்குழாயால் ஊதிவிட்டாள்.

"அடியே... செம்பகம்... வெறகு ஈரமா இருக்குடி... புடிக்கவே மாட்டேங்குது... புகையா வருது... கண்ணெல்லாம் எரியுது... கொஞ்ச வெறக நாளக்கி வெயில்ல எடுத்து காயப்போட்டு கசால பரண்ல போட்டு வைக்கணும்... ஆத்தர அவசரத்துக்கு உதவும்."

"அதானே என்னடா லீவுக்கு இன்னும் ஒரு வேலையும் சொல்லலையேன்னு பாத்தேன்..."

"ஆமா... கலையெடுக்க போகப்போறே... கெடக்க வெறக எடுத்து வெயில்ல போடுறது ஒரு வேலயாடி உனக்கு... சரி... சரி...படிக்கிற வேலயப் பாரு... கரண்டு பொயிட்டா உங்களுக்கெல்லாம் லண்டியனை வச்சுக்கிட்டுப் படிக்க புடிக்காது. அந்தக் காலத்துல நாங்கலாம் இதுலதான் படிச்சோம்" என்று தனது படிப்பை மகளிடம் பெருமையா சொன்னாள்.

"ஆமா... கலெக்டருக்குப் படிச்சிட்டிய... அட ஏம்மா... நீங்க லண்டியனை வச்சுக்கிட்டு படிச்சதுக்காக நாங்களும் அப்படியே இருக்கணுமா என்ன..." அம்மாவை எதிர்த்துக் கேட்டாள்.

சின்னவ எப்பவும் இப்படித்தான் படக் படக்கென்று பேசுவாள். வாய்க்கு வாய் பேசுவதால் ஊருக்குள் அவளுக்கு வாயாடின்னு பட்டப்பேரே உண்டு. பெரியவள் இவளுக்கு நேர்மாறானவள். எதைச் சொன்னாலும் உதடு நெளியாமல் சிரிப்பாள். அம்புட்டுத்தான்... அவளுக்கும் அமுக்குனியின்னு பட்டப் பெயர் இருந்துச்சு. கண்ணம்மாவுக்கு சின்ன மகளை ஒரண்டை இழுத்துப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும்.

"நான் அந்தக் காலத்து அஞ்சாப்புடி... எதோ உங்கய்யனுக்கு வசதி வாய்ப்பில்லை... அதுக்கு மேல படிக்க வைக்கலை... இல்லேன்னா நாங்களும் எதாவது ஒரு கவருமெண்டு ஆப்பீசராவோ இல்ல ஸ்கூலு டீச்சராவோ இருந்திருப்போம்".

"ஆத்தாடி...இம்பூட்டு படிப்பு படிச்சிட்டா எருமைச் சாணி அள்ளுறே... நீ டீச்சரா இருந்தா பிள்ளைங்க நெலமை என்னாயிருக்குமுன்னு நெனச்சா சிரிப்புத்தான் வருது. விடும்மா... முடியலை..." என்று கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.

"சிரிப்பேடி... சிரிப்பே.... ஏ... அழகுக்கும் அறிவுக்கும் எத்தனையோ மாப்ள வந்தும் எங்கப்பா சொந்த விட்டுறக்கூடாதுன்னு உங்கப்பாவுக்கு கட்டி வச்சாரு..."

"அய்யோ அம்மா... நான் ஒண்ணும் சொல்லலை... எதுக்கு எங்கப்பாவ இழுக்குறீங்க... அப்புறம் அவரை திட்டாம உங்களுக்கு தூக்கம் வராது... வேண்டாம்... அடுப்புல இருக்க சோத்தைப் பாருங்க... போங்க" என்று விரட்டினாள்.

அவள் விரட்டவும் கரண்ட் போகவும் சரியாக இருந்தது. "இப்பத்தான் சொன்னேன்... நிப்பாட்டிட்டாண்டி... இனி எப்ப வருதோ... அடுப்படி செவத்து மேல தீப்பட்டி இருக்கு பாரு... எடுத்து லண்டியனைக் கொளுத்துடி."

லண்டியனைப் பற்ற வைத்து டக்கென்று வைத்தாள். அது 'டப்டப்'பென்று எரிய ஆரம்பித்தது.

"மெதுவா வைடி... அந்தக் காலத்து வெளக்குடி இது... எங்கயித்தை வச்சிருந்தது... இப்ப வச்ச மாதிரி எங்கயித்தைக்கிட்ட வச்சிருந்தா செவுலுல நாலு விட்டிருக்கும். இந்த வீட்டுக்கு நான் வாறப்போ கரண்ட்டு இல்ல... அப்ப இந்த வெளக்குத்தான்... ஒண்ணு இல்ல மூணு லண்டியன்... ரெண்டு சிமுளி விளக்கு... அது பத்தாதுன்னு பாட்டில்ல துணிய திரியாப் போட்டு காண்டா வெளக்கு வேற வச்சிருக்கும்... அதை வச்சிக்கிட்டே பால் பீச்சிக்கிட்டு வந்துரும். சாயங்கலமாச்சின்னா எங்கயித்தை எல்லா கிளாசையும் சுத்தமா கழுவி துணூறு போட்டுத் தொடச்சு வரிசையா வச்சிருக்கும்... ஆறு மணிக்கெல்லாம் பத்த வச்சி வச்சிரும்.... அந்த வெளிச்சத்துலதான் நாங்க பேசிக்கிட்டு இருக்கிறது... சாப்பிடுறது எல்லாம்... ம்... இப்ப யாரு சிமுளி தேடுறா... எல்லாங் காலந்தான்..."

"அம்மா... அப்பத்தா வச்சிருந்த வெளக்குக்குத்தான் இம்புட்டு பில்டப்பா..."

"அடியேய்.... எங்கயித்தை எல்லா மாமியாரு போலவும் இல்லடி... எங்காத்தாடி அது... இல்லேன்னா இந்த குடிகாரக் கொத்திய அப்பவே தூக்கிப் போட்டுட்டுப் போயிருப்பேன்... எல்லாத்துக்கும் அது எனக்கு ஆதரவாயிருந்துச்சு... உங்கப்பா வேலை வெட்டிக்குப் போகாம சீட்டாட்டம்தான் போட்டாரு... எங்கயித்தைதான் ஏழெட்டு எருவமாடு வச்சி பால் பீச்சி தயிர் யாவாரம் பண்ணி குடும்பத்தை ஓட்டுச்சுடி... உங்கப்பனுக்கு புள்ளகுட்டியின்னு ஆனோடனேதான் அந்த ஆண்டவன் புத்தியக் கொடுத்துச்சு... கொஞ்ச கொஞ்சமா உங்கப்பா திருந்தி வேலை வெட்டியின்னு பாக்க ஆரம்பிச்சாரு... எங்கயித்தை ஆம்பளைக் கணக்கா வேலை பாக்கும்... ஊருக்குள்ள ஒரு பயபுள்ள எதுத்துப் பேசமுடியாது... அதோட குணந்தான் உனக்கிட்ட இப்ப அப்படியே இருக்கு..."

"ஆத்தாடி... அப்பத்தா குணமா எனக்கு... அப்ப நானும் எருவமாடு மேப்பனா?"

"நீ வாய்க்கு வாய் பேசுறதுல உங்கப்பத்தாடி... சரி அந்த லண்டியனை அமத்திட்டு மறுபடிக்கும் பத்த வச்சி கிளாசை நல்லா மாட்டு... காத்து உள்ள போகுது போல டப்பு டப்புங்குது பாரு..."

சரியாக வைத்துப் பற்ற வைத்தாள்... கண்ணாடி கிளாசுக்குள் திரியில் எரியும் தீ வீடெங்கும் வியாபித்திருக்க... தீயின் ஆடலுக்குத் தகுந்தாற்போல் நிழல்களும் ஆட ...

"என்ன செண்பா... திடீர்ன்னு அரிக்கேன் விளக்கை பத்த வச்சி ...அது எரியிறதையே பாத்துக்கிட்டு இருக்கே... பழைய ஞாபகமா?" கணவனின் குரல் கேட்டுத் திரும்பியவள்

"ஆமாங்க... எங்கப்பத்தா ஞாபகமா எங்கம்மா வச்சிருந்தாங்க... ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வந்ததும் தூசியடைஞ்சு கிடந்த லண்டியனைப் பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்திரிச்சு... அதான்..." சொல்லும் போதே குரல் கம்மியதுடன் அழுகையும் வந்தது.

கண்ணைத் தொடைத்து தலையை உயர்த்தினாள். சுவற்றில் ஐயா, அப்பத்தா, அப்பா, அம்மா அனைவரும் காய்ந்த மாலைகளுக்கு இடையே சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

-'பரிவை' சே.குமார்.

Photo from Google

ஞாயிறு, 17 ஜூலை, 2011

மனசுக்குள் மண்வாசம்...


மண் வாசம் சுவாசிக்கும் முன்னர் சில வரிகள்...

எனது வலைப்பூவில் இன்னும் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை... பலருக்கு பின்னூட்டம் இட்டாலும் சிலருக்கு இடமுடியவில்லை... குறிப்பாக 'விடிவெள்ளி' செண்பகம், தமிழ்க்காதலன், அப்பாவி தங்கமணி அக்கா என இந்த பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களை படித்தது பின்னூட்டம் இடும் போது பிரச்சினை வருகிறது. எனவே நட்புக்களே பின்னூட்டம் வரவில்லை என்றதும் நான் வருவதில்லை என்று என்ன வேண்டாம். உங்கள் பதிவுகளை படிக்கிறேன்... படிக்கிறேன்... படிக்கிறேன்... (இப்படி கூவ காரணம் நாம போகலையின்னு நிறையப் பேர் நம்ம பக்கம் காணுமப்பா... அதான்... இதெல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...)

சரி மண் வாசத்துக்குள்ள போவோம்....


(மாரியம்மன் கோவில் - திருவிழா நாளில்...)


நம்ம மண்ணைப் பற்றி எழுதணுமுன்னு மலிக்கா அக்கா அன்புடன் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்காமால் இருப்பது மரியாதை இல்லை என்ற காரணத்தால் எங்கள் கிராமத்தையும் அது சார்ந்த நகரத்தையும் பற்றி எழுதியிருக்கிறேன். அதிகமெல்லாம் என்னால சொல்ல முடியாது... ஏதோ என்னால முடிந்ததை சொல்லி தொடர்பதிவு எழுதியிருக்கிறேன். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

தேவகோட்டைக் காரங்களோ, சிவகெங்கை மாவட்டத்துக்காரங்களோ (நம்ம பாரா சித்தப்பா, தேவா அண்ணா... இன்னும் நிறைய...) தவறு இருந்தால் வெளிய சொல்லி மாட்டி விட்டுறாதீங்க.

எங்கள் சிவகெங்கை மாவட்டம் வானம் பார்த்த செம்மண் பூமி, இந்தப் பூமியின் முதல் நகராட்சி என்று பெயர் பெற்ற தேவகோட்டை, அது என்னங்க தேவர்களின் கோட்டை எதுவும் இருக்கான்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. தேவி கோட்டை என்ற பெயர் மருவி தேவகோட்டை என்றாகிவிட்டது.

சரி விசயத்துக்கு வருவோம். தேவகோட்டைக்கு அருகில் 3 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்தான் எங்க ஊர்... ஒரு அழகிய சின்ன கிராமம்.... சூதுவாது அறியாத வெள்ளந்தியான மக்கள்... ( இதெல்லாம் இப்ப இல்லைங்க... எங்க அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது) ஊருக்குள் வீட்டுக்கு வீடு இருக்கும் எருமை, பசு மாடுகள், கோழிகள், ஆடுகள், நாய்கள்... (இதுவும் இப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக... ) என ஒரு அப்பட்டமான கிராமம்.

தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலையில் பிரியும் கிளைச் சாலையில் பயணித்தால் கண்மாக் கரைக்கும் வயலுக்கும் இடையில் செல்லும் தார்ச்சாலையில் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரர் வரவேற்க... சற்றே தூரத்தில் வீடுகள் அணிவகுக்கும் சிறிய கிராமம்தான் எங்கள் பரியன் வயல்.

இங்கயும் நீங்க கேட்கலாம் அது என்ன பரியன் வயல்... பரியாத வயல்ன்னு... இருங்க சொல்றேன் எங்க ஊர்ல விவசாயம் நல்லா இருக்குமா... பரிஞ்சு பொதி கட்டி நிக்கிற பயிரைப் பாக்கிறப்போ கிடைக்கிற சந்தோஷம் இருக்கே அதை அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும். அப்படி விவசாயம் கொழித்ததால எங்க ஊருக்கு பரியன் வயல்ன்னு பேர் வந்ததாக முன்னோர்கள் சொல்லக் கேள்வி.

இப்ப எங்க ஊருக்கு பேர் வைக்கச் சொன்னா கருவ வயல்ன்னு வைக்கலாம்... ஆமாங்க சில வருடங்களாக விவசாயம் இல்லாத வயல்கள் இந்த முறை ஊருக்குப் போனபோது கருவ மரங்களால் சூழப்பட்டிருப்பதை பார்த்த போது மனசு வலிக்கத்தான் செய்தது....

என்ன செய்ய எங்கள் ஊர் விவசாயம் பொய்க்க இரண்டு காரணம்.. ஒன்று நாங்களெல்லாம் வாழ்க்கையின் பின்னால் ஓட வேண்டிய கட்டாயத்தால் பொழப்புக்காக வெளியிடங்களில் இருக்க, எங்களைப் பெற்றோர் மட்டுமே ஊருக்குள் இருப்பது... ரெண்டாவது எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தாழையூர் பெரிய நாயகி அம்மன் கோவில் மாடுகள் விளைந்த வயலில் அறுபடை செய்து விடுவதால் விளைந்ததை வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை என எங்கள் ஊர் விவசாயம் அறுபட்டுப் போய்விட்டது.


(கரகம் எடுத்தல் - முளக்கொட்டு)

இப்பல்லாம் எங்க ஊரில் எல்லோரும் கூடுவது திருவிழாக்களில் மட்டுமே. வருடம் ஒருமுறை நடக்கும் இதுமாதிரியான விழாக்கள்தான் எங்கள் கிராமத்தின் அடையாளமாய் இன்னும் இருக்கின்றன. பசுமையான வயல்கள், நீர் நிறைந்த கண்மாய்... உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள் என்றிருந்த எங்கள் ஊர் இன்று பலவீனமாக இருக்கிறது.

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒத்தையடிப் பாதை, அடி குழாய் தண்ணீர் என்றிருந்த எங்கள் ஊர் இன்று தார் ரோடு, ஊருக்குள் குடிநீர்த் தொட்டி, வீட்டுக்கு வீடு பைப் வசதி என்று வளர்ந்திருந்தாலும் விவசாயமிழந்த வயல்கள் போல... வறண்டு கிடக்கும் கண்மாய் போல... மக்கள் மனதிற்குள் வன்மம் குடி கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் வருத்தமான விஷயம்.ஆனால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஊர் திருவிழாவில் எல்லாரும் ஒன்றாக இருந்து கொண்டாடும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.

இந்த வருடம் ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வந்த எனது நண்பன் தமிழ்க்காதலன் விவசாயமற்ற ஊரைப் பார்த்து வருத்தப்பட்டான். ஆனால் எங்கள் ஊர் அம்மன் திருவிழாவில் கரகம் எடுப்பதும் முளக்கொட்டுவதும் அவனை ஆச்சரியப்பட வைத்ததுடன் அவனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. (இது குறித்து தனிப்பதிவு எழுதுவதாய்ச் சொன்னான்... மறந்துட்டான் போல...)

இவ்வளவுதான் எங்கள் ஊர் பற்றிய என் பார்வை....

நண்பர்களே நீங்க வளர்ந்த... வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் ஊரைப் பற்றி எழுதுங்கள்... யாரையாவது நாமளும் மாட்டிவிடணுமாமே... சரி நம்ம "இதயச்சாரல்...!" தமிழ்க்காதலன், "கலியுகம்" தினேஷ், அன்புடன் ஆனந்தி மூன்று பேரை என் பங்கிற்கு களத்தில் இறக்கி விடுகிறேன்.

நன்றி... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

நேச முடிச்சு...தன்னிடம் வெள்ளைப் பேப்பர் கேட்ட ராகவியைப் பார்த்து "என்ன அண்ணி... திடீர்ன்னு கவிதை எதுவும் எழுதப் போறீங்களா?" என்று கிண்டல் செய்தாள் வளர்மதி.

"என்னடி கிண்டலா... எனக்கு வேணும்... பேப்பர் இருக்கா... இல்லையா..."

"சரி... எதுக்குன்னு சொல்லுங்க தாரேன்..."

"அது... உங்கண்ணனுக்கு லெட்டர் எழுதி, நாளைக்கு நம்ம ராமச்சந்திரண்ணன் போகுதுல்ல அதுக்கிட்ட கொடுத்துவிடத்தான்..."

"அண்ணி... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... தினமும் செல்லுல பேசுறீங்க... நாங்க உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்தா வீதிக்கு வீதி இண்டர்நெட் சென்டர் தொறந்து வச்சிருக்கான். அங்க போயி உங்க மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி மெயில் அனுப்பிட்டு வரலாம். அத விட்டுட்டு லெட்டர் அது... இதுன்னு... எந்தக் காலத்துல அண்ணி இருக்கீங்க..."

அவளது கேள்விக்கு ஒற்றைச் சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு பேப்பரை வாங்கிக் கொண்டு தனியாகப் போயி அமர்ந்தாள்.

கை வளையல்களை ஏற்றிவிட்டுக் கொண்டு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள்.

'என் அன்புள்ள அத்தானுக்கு... நலம், நலமறிய ஆவல்ன்னு ஒற்றை வரியில சொல்ல என்னால முடியலைங்க... நீங்க இங்க சுகம்... நான் அங்க சுகமான்னு சினிமா வசனமெல்லாம் எழுத வராதுங்க எனக்கு... ஆனா அங்க நீங்களும்... இங்க நானும் உதட்டுல புன்னகை பூசி வாழ்றோங்கிறது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுங்க...'

'அப்புறம் இங்க அத்தை, மாமா, வளரு, கணேசு எல்லாரும் நல்லாருக்காங்க. இந்த வருசம் மழை இப்பத்தான் பெய்ய ஆரம்பிச்சிருக்கு. நீங்க என்னய நினைச்சுக்கிட்டு சாப்பிடாம கெடக்காதீங்க... உடம்புக்கு ஆகாது. ஆனா எனக்கு இங்க சாப்பாடே இறங்கலைங்க... எப்ப சோறு போட்டுக்கிட்டு உக்காந்தாலும் உங்க முகம் கண்ணுக்குள்ள மட்டுமில்லங்க... போட்டுருக்க சாப்பாட்டுலயும் தெரியுதுங்க... ' அதற்குமேல் எழுதமுடியாமல் கண்களை கண்ணீர் கட்டிக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

'அப்பாவும் அம்மாவும் வந்துட்டுப் போனாங்க... அங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாமுன்னு சொன்னாங்க... எனக்குத்தான் போக புடிக்கலை... நாம இருந்த ரூமுக்குள்ள படுக்கும் போது எதோ நீங்களும் எங்கூட இருக்க மாதிரி இருக்குங்க... அதான் போகலைங்க...'

'சரி... நம்ம லெட்சுமி கன்னு போட்டிருக்கு... இது நாலாவது கன்னுன்னு அத்தை சொன்னாங்க... பொங்கன்னுக்குட்டி... பொங்கன்னுக்குட்டியினவுடனே எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அது ஏங்க பொம்பளைப்புள்ளை பொறந்தா வெறுக்குற நாம ஆடோ மாடோ பொங்கன்னுக்குட்டி போட்ட சந்தோஷப்படுறோம்... ஆமா நமக்கு பொம்பளைப்புள்ள பொறந்த உங்கப்பாம்மா இப்படி சந்தோஷப்படுவாங்களா... நினைச்சதும் எனக்கு சிரிப்பு வந்துருச்சுங்க...' எழுதியபோது அவளையறியாமல் சிரிப்பு வந்தது.

'இன்னொன்னு எழுத மறந்துட்டேன்... நம்ம தோப்புல இருக்க மாமரம் நல்லா காச்சிருக்கு... நேத்து நம்ம வீட்டுக்கு வந்த உங்க சின்னம்மா... எதாவது விசேசமாம்மான்னு கேட்டாங்க... ஒண்ணும் சொல்லாமா இருந்துட்டேன்... அப்புறம் அவங்களா இன்னும் ரெண்டு வருசத்துக்கு பேரன் பேத்திய பாக்க முடியாதாக்குமுன்னு சொன்னாங்க... நான் என்னங்க சொல்ல முடியும் ஒரு மாசம் குடும்பம் நடத்தி... இப்ப வேண்டாம் ரெண்டு வருசமாகட்டுமுன்னு நீங்க சொன்னதை எப்படி அவங்கிட்டே சொல்வேன்... நல்லவேளை உங்க அம்மா... இப்ப என்ன அவசரம்... அவளும் சின்னப் பொண்ணுதானேன்னு சொல்லிட்டாங்க...'

'ராமச்சந்திரண்ணன் வந்ததுல இருந்து சரோஜாண்ணி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க... ஒரு மாசமா ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாவே திரிஞ்சாங்க... அவங்களை பாக்கிறப்போல்லாம் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு... நாமளும் அப்படித்தானே இருந்தோம்... ம்... எனக்கு அதை நெனைக்கிறப்போ மனசு வலிச்சு... கண்ணுல கண்ணீர் வழிய ஆரம்பிச்சிருதுங்க...'

கண்ணை தொடச்சுக்கிட்டே... ' நா ஒரு கிறுக்கச்சி சரோஜாக்கா பத்தி சொல்ல வந்துட்டு எதையோ எழுதிட்டு இருக்கேன் பாருங்க... எதையும் நெனச்சுக்காதீங்க... ரெண்டு நாளா சரோஜாக்கா முகமே சரியில்லை... பாவம் அழுதுருக்கும் போல... முகமெல்லாம் கருத்து... வீங்குனமாதிரி இருக்கு... எங்க எல்லார் தலையெழுத்தும் ஒண்ணுதான் போல... இல்லையாங்க...'

'ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் போங்க... நம்ம கணேசு என்ன பண்ணியிருக்கார் தெரியுமா... எழுத நெனைக்கிறப்போவே சிரிப்பா வருது... நம்ம மூலைவீட்டு செல்லச் சித்தப்பா இருக்காகல்ல... அவங்க மக... அதாங்க ரேவதி, அதுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்காரு... ஆமா...மீசை மொளைக்க ஆரம்பிச்சிருச்சுல்ல... அந்தப் புள்ளை நேர அத்தைகிட்ட கொண்டாந்து கொடுத்து அழுதுட்டுப் போச்சு... தலைவர் வீட்டுக்குள்ள வந்ததும் அத்தை வெளக்குமாத்தால தாலாட்டிட்டாங்க... எனக்கும் வளருக்கும் சிரிச்சு மாளலை... இப்ப நல்ல புள்ளையாட்டம் இருக்கான்... ஆனா சிகரெட் புடிப்பான் போல தெரியுது... இதை நீங்க மனசுல வச்சுக்கங்க... கேட்டுக்கீட்டு தொலச்சிடாதீங்க... அப்புறம் நாந்தான் சொல்லிட்டேன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துருவான்... சரிங்களா'

'அப்புறம் இந்த வருசம் கோயில் திருவிழா சம்பந்தமா கூட்டம் கூட்டுனாங்க... பிரச்சினை எதுவுமில்லாம நல்ல முடிவா எடுத்து இருக்காங்க... நீங்க இல்லாம எனக்கு நாளும் பொழுதும் ஓடவேயில்லங்க.. எதப் பார்த்தாலும் உங்க ஞாபகமாகவே இருக்குங்க... என்னால முடியலங்க... எதோ வாழனுங்கிறதுக்காக வாழ்றேங்க...' வழிந்த கண்ணீரை துடைத்தபடி எழுத ஆரம்பிக்க, அவளது கண்ணீர் பட்டு சில எழுத்துக்கள் சிதிலமாகின.

'இப்ப உங்களுக்கு லெட்டர் எழுதலாமுன்னு பேப்பர் கேட்டப்போ வளர்கூட இண்டர்நெட், செல்லுன்னு எத்தனையோ இருக்கிறப்போ என்னண்ணி லெட்டர் எழுதுறேன்னு பழங்காலத்துக்குப் போறீங்கன்னு கேட்டா... செல்லுல பேசும் போது நல்லா இருக்கேன்னு நானும்... நீங்களும் மாத்திமாத்தி சொல்லிக்கிட்டு போன் மேல கிஸ் கொடுக்கிறப்போ படியுற நம்ம மனச்சாயத்தை ரெண்டு பேரும்மே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம மறச்சிடுறோம்... ' சற்றே எழுத முடியாமல் அமர்ந்திருந்தாள்.

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள் 'மெயில்ல டைப்பண்ணி அனுப்பினா... மெஷினாட்டம் படிச்சிட்டு உங்க மனவலிய மறச்சி எல்லாம் சரியாகுமுன்னு ஒத்த வரியில பதில் அனுப்புவீங்க... இங்க இருக்க என்னோட மனசு தெரியனுமின்னா லெட்டர்தான் சரியின்னு எனக்குப்படுது... ஏன்னா... இந்த லெட்டர்ல அங்கங்க என்னய மாதிரியே எழுத்து சிதிலமடஞ்சிருக்குல்ல... அதெல்லாம் என்னோட கண்ணீர்... ' அவளை அறியாமல் கண்ணீர்த்துளி ஒன்று அவள் எழுதிய கண்ணீரின் மீது விழுந்தது.

'இதைப் படிக்கும் போது என்னோட மனசு உங்களுக்குள்ள விசாலமா விரியுங்க... இதை நான் உங்களை கஷ்டப்படுத்த சொல்லலைங்க... எல்லா ராத்திரியும் ரெண்டு பேரோட தலகாணியும் நனையும் இந்த வாழ்க்கை உண்மையை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் சொல்கிறேன்...'

'சரிங்க... இரவுகளில் என் இளமை தகிக்கிறது.... என்னை நானே... இல்லை நம்மை நாமே எரித்துக் கொள்கிறோம் தூங்காத ராத்திரிகளில்... இந்த வாழ்க்கைதான் நமக்கான வாழ்வு என்றால் இன்னும் நானூற்றி முப்பத்தோரு நாளில் நீங்க வரும் போது எனக்குள்ள விதச்சிட்டுப் போங்க... எனது தனிமைக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.'

'சரிங்க... நா... எதோ கிறுக்கச்சி மாதிரி மனசுல உள்ளதெல்லாம் கொட்டியிருக்கேன். எதுவும் மனசுல வச்சுக்காதீங்க... உடம்ப பாத்துக்கங்க... வாரத்துல ஒருநா... எண்ண தேச்சுக் குளிங்க... உடம்ப பாத்துங்க... இங்க நா.. அத்தை... மாமா... வளரு... கணேசு... இப்படி எல்லாரோடவும் சந்தோஷமா இருக்கேன்... என்னயவே நெனச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்காதீங்க... நீங்க நல்லாயிருந்தாத்தான் நாளைக்கு நமக்கு பொறக்குற புள்ளைங்க நல்லாயிருக்கும்.'

'ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பேசுங்க... எனக்காகாக... ப்ளீஸ்... என்றும் உங்களை மட்டுமே நினைத்து வாழும் உங்கள் செல்லம்' லெட்டரை எழுதி மடித்து நிமிர்ந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்ன அண்ணி... முடிஞ்சதா... சாப்பிடலாமா...?"

"நீ... சாப்பிடு வளர்... எனக்கு இப்ப வேண்டாம்..." என்றபடி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

**************

போட்டோவுக்கு நன்றி :  Google


குறிப்பு: எனது நண்பன் தமிழ்க்காதலன் எழுதிய கவிதையின் தலைப்பையே கதையின் தலைப்பாக அவனது அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறேன். நன்றி நண்பா.

-'பரிவை' சே.குமார்.

சனி, 2 ஜூலை, 2011

மனச் சுமை
பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. 'சே... என்ன ரேடியோ... ஒரு டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது... கட்ட வேற போச்சு போல... சவுண்டும் கொறச்சுக் கேக்குது. நாளைக்கு நாலு கட்டை வாங்கணும்"

"சத்தியப்பா... சத்தியப்பா...அட ஏங்க..."

"என்ன... சத்த இரு... "

"வந்து சாப்டுப் போயி என்ன வேணாலும் பாருங்க... டிவி பாத்தாலும் இந்த ரேடியாவ ராத்திரி நேரத்துல கர்ரு... முர்ருன்னு கத்த விடுறதே பொழப்பாப் போச்சு... வந்து சாப்டு உங்க ரேடியாவை நோண்டுங்க..."

"ஆமா... இருட்டுனா உனக்கு தூக்கம் வந்திரும்...இரு வாரேன்"

"வந்து சாப்ட்டா நான் படுப்பேஞ்சாமி... பகல் பூராம் ஊறிக்கிட்டே திரியிறது உடம்பெல்லாம் வலிக்கிது"

"சரி... என்ன சாப்பாடு..."

"ஆமா நேரா நேரத்துக்கு வடிச்சுக் கொட்ட நான் என்ன குமரியா..? மத்தியானம் வச்ச மொச்சக் கொட்டைதான்..."

சாப்பிட்டபடி "ஆமா... சத்தி பேசுனானா..."

"ஆமா... இவரு கலக்கிட்டரு வேலை பாக்கிறாரு... இப்பத்தான் வந்தாரு... சும்மா மரத்தடியில படுத்திருக்கிற உங்களுக்குத் தெரியாம எங்கிட்ட தனியா பேசுற மாதிரி..."

"சரி ஏன் விசனப்படுறே... பெரியவ கல்யாணம் வச்சிருக்கா... என்ன பண்ணலாம்... ஏது பண்ணலாமின்னு ...அவங்கிட்ட பேசணுமில்ல..."

"ஆமா.. சொல்ல மறந்துட்டேன்...காலையில போயி சின்னவங்கிட்ட கல்யாண விசயமா பேசிட்டு வாங்க..."

"நாளைக்கா..." மெதுவாக இழுத்தார்.

"என்ன இழுக்குறிய... அவன் வேலைக்குப் போறதுக்கு முன்னால போனாத்தான் அவங்கிட்ட பேசி ஒரு முடிவெடுக்கலாம்"

"இல்ல நாளைக்கி கண்டிப்பட்டி பந்தயம்... ராமசாமி கருக்கல்ல போலாமான்னு கேட்டான்... வாரேன்னு சொல்லிட்டேன்..."

"ஆமா... பேத்தி கல்யாணத்தைவிட பந்தயந்தான் முக்கியமா?" கோபமாக வார்த்தைகள் வந்தன.

"சரி... எதுக்கு இப்ப கூவுறே... காலையில சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வாரேன்...போதுமா?" என்றபடி எழுந்து வாசலில் கிடந்த கட்டிலில் போய் அமர்ந்து புகையிலையை அதக்கியபடி மீண்டும் ரேடியோவை நோண்ட ஆரம்பித்தார்.

***

"வாங்கப்பா..."

"ம்... பேத்திக்குட்டி எங்க?"

"தூங்குறா... அம்மாவையும் கூட்டிகிட்டு வந்து இருந்துட்டுப் போகமுல்ல..."

"இல்லப்பா... அவளுக்கு நம்ம ஊரைவிட்டு எங்கயும் வந்து இருக்கிற நெனப்பே இல்ல"

"வாங்க மாமா... அத்தை நல்லா இருக்காங்களா?"

"ம்... நல்லா இருக்காம்மா... "

"ஏம்ப்பா... எதுக்கு காலையில விழுந்து வாறீங்க... எனக்குப் போன் பண்ணியிருந்தால் நாளைக்கு லீவு நான் வந்திருப்பேனே..."

"இல்லப்பா... அக்கா கல்யாணம் வச்சிருக்குல்ல... நம்ம வீட்ல நடக்கிற மொத கல்யாணம்... மாமச்சீரை நல்லா சிறப்பா செய்யணும்... அதான் என்ன செய்யிறது... ஏது செய்யிறதுன்னு பேசி முடிவு பண்ணனுமில்ல... உங்கிட்டயும் சத்திக்கிட்டயும் பேசி ஒரு முடிவுக்கு வரலாமுன்னுதான் உன்னை கருக்கல்ல பாத்துப் பேசலாமுன்னு அம்மா சொன்னுச்சு... ""

"அண்ணன் பேசுச்சாப்பா... "

"இல்ல உங்கிட்ட பேசிட்டா... அவன் இன்னைக்கு நாளைக்குப் பேசினா... விவரமா சொல்லிடலாமுல்ல..."

"சரிப்பா... "

"மாமா... மூத்தவர்கிட்ட பணம் அனுப்பச் சொல்லி எல்லா செலவையும் பாருங்க... வீடு கட்ட லோன் வாங்கிட்டாரு... மாசமான பிடிச்சது போக கிடக்கிறத வச்சு குடும்பத்தை ஓட்டவே கஷ்டமாயிருக்கு.."

"என்னம்மா சொல்றே... ரெண்டு பேரும் செய்ய வேண்டிய செலவு இது... அவன் ஒருத்தனை எப்படி சுமக்க சொல்ல முடியும்?"

"ம்... இத்தன வருசமா வெளி நாட்டுல சம்பாதிக்கிறவரு.. செஞ்சா குறஞ்சிடமாட்டாரு..."

"ஏய்... என்ன பேசுறே...? அவரு நம்மள மாதிரித்தானே இருக்காரு.... அப்பா அவ கிடக்கிறா ஆக வேண்டியதைப் பாருங்க... அண்ணங்கிட்ட பேசிட்டு எல்லாம் வாங்குங்க... எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல..."

"ஏங்க அவருகென்ன கொள்ளக்காச்சல்... நம்மளை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கா பாத்து வாழ்றாரு..."

"என்னம்மா சொன்னே... நம்ம குடும்பத்துக்காக சத்தி பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல... ஒம் புருஷன் இன்னக்கி வாத்தியாரா இருக்கானா... அதுக்கு அவந்தாம்மா காரணம்"

"ஆமா பெரிய வாத்தியார் வேலை... அவர மாதிரி இவரும் வெளிநாடு போயிருந்தா நாங்களும் தோட்டம் தொறவுன்னு இருந்திருப்போம்..."

"என்ன நீ... வாய்க்கு வாய் பேசுறே.... எங்க இருந்து வந்துச்சு இந்த வாய்..."

"டேய்... அவ பேசட்டுமுடா... ஏம்மா... இத்தனை வருசம் சம்பாதிச்சு காசு பணம் இருந்தாலும் அவங்கிட்ட என்ன சந்தோஷம் இருக்கு சொல்லு... குடும்பம் பொண்டாட்டி புள்ளையின்னு இருக்க முடிஞ்சதா சொல்லு... வயசையும் வாழ்க்கையையும் தொலச்சிட்டு இன்னைக்கு பட்டமரமா நிக்கிறான்... இந்த வயசுல பொண்டாட்டிய தூக்கி கொடுத்துட்டு... புள்ளைகளுக்காக இன்னமும் வெளிநாட்டுல கிடந்து கஷ்டப்படுறான்.... வயசான காலத்துல எங்களால அந்தப் புள்ளைகளுக்குப் பாக்க முடியாதுன்னு அனாதைக மாதிரி ஆஸ்டல்ல விட்டு படிக்க வைக்கிறான்... அவனாமா நல்லா இருக்கான்..."

"அப்பா... பேசணுமின்னு பேசுறவகிட்ட எதுக்கு எல்லாம் சொல்லிக்கிட்டு... விடுங்கப்பா... நடக்க வேண்டியதைப் பாருங்க..."

"இல்லப்பா... எல்லாரு மனசிலயும் சத்தி நல்லாயிருக்கான்... பணம் காசு இருக்குங்கிற எண்ணம் மட்டும்தான் இருக்குப்பா.... உங்கக்காகூட பேச்சு வாக்குல பெரியவங்கிட்ட சொல்லி தாலிச் செயின் வாங்கிட்டு வரச்சொல்லுங்கன்னு சொல்லுறா... சின்னவ வீடு கட்ட பணம் வேணும் அண்ணங்கிட்ட கேக்கலாமுன்னு இருக்கோமுன்னு சொல்லுறா... இங்க ஒம் பொண்டாட்டி அவங்கிட்ட இருக்க பணம் எங்ககிட்ட இல்லையின்னு சொல்லுறா.. ஆனா உங்க யாரு மனசுலயும் அவன் பட்டமரமா நிக்கிறானேங்கிற எண்ணம் வரவேயில்லையே...அவன நெனச்சு வருந்த எனக்குகூட நேரமில்ல... அவனுக்காக அழுகுற ஒரு ஜீவன் உங்கம்மா மட்டுந்தான்..." என்றபோது அவரது கண்கள் கலங்கின.

"அப்பா... அவதான் எதோ பேசுறான்னா... நீங்க கண் கலங்கிக்கிட்டு..."

"இல்லப்பா... அவ கேக்கிறது தப்பில்ல... கூடப்பொறந்ததுகளே பேசும் போது வந்தவ அவ பேசுறது தப்பில்ல...விடு... சரிப்பா வாரேன்..." அவனது பதிலை எதிர்பார்க்காமல் நடக்கலானார்.

மனசு நொந்து சைக்கிளை மிதித்தவர்,'அவகிட்ட சொன்னா ரொம்ப வருந்துவா.... சொல்ல வேண்டாம்.. பயலுக சமாச்சிடுவாங்கன்னு சொல்லிடலாம்..." என்றபடி மனைவிக்குப் பிடித்த மலையாளத்தான் கடை அப்பம் வாங்கிக் கொண்டு பெரியவனை நெஞ்சில் சுமந்தபடி கனத்த மனதுடன் சைக்கிளை மிதித்தார்.
 
*****
 
குறிப்பு: இது மனசில் வரும் 150வது பதிவு. கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் என நான் தொடராத மூன்று தளங்களில் பதிந்தவைகளுடன் சேர்த்து இது 345வது பதிவு. இதற்கு உங்கள் ஊக்கம்தான் முக்கிய காரணி என்றால் மிகையாகாது. நன்றி நட்புக்களே...!


படத்திற்கு நன்றி : மாலைமலர்

-'பரிவை' சே.குமார்.