மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 27 நவம்பர், 2016

சின்னக் கன்ணன் அழைக்கிறான்

கிருஷ்ணன்...

கோபால கிருஷ்ணன்...

கண்ணன்...

மாயக்கண்ணன்...

மாயவன்...

கோவிந்தன்... இப்படி எத்தனை பெயர்கள் அவனுக்கு...

Related image

சிறு குழந்தையாக... வெண்ணெய் திருடித் தின்று ஆயர் குலப் பெண்களின் அன்பில் வளர்ந்தவன் கண்ணன்... கோபியர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவன்... வெண்ணெய் திருடித் தின்பதில் கண்ணன் மட்டுமா கெட்டிக்காரன்... அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நம் தலைமுறை வரை அனுபவித்திருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைதானே.

இன்றைய குழந்தைகளுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் தயிர் மட்டுமே தெரியும். ஆனால் அன்று...? இந்த பாக்கெட் தயிரெல்லாம் இல்லையே... வீட்டில் உறை ஊற்றி வைக்கப்படும் தயிர்தானே... அதிலிருந்த சுவை இப்போது வரும் பாக்கெட் தயிர்களில் இல்லையே... எங்கள் ஊரில் எல்லாருடைய வீட்டிலும் மாடு இருக்கும்.... அது பசுவோ... எருமையோ... வீட்டுக்கு வீடு இருக்கும்.

பசுவின் பாலை விட எருமையின் பால் கெட்டியாக இருக்கும். எங்கள் வீட்டில் எங்களது பள்ளிக் காலங்களில் எருமை மாடுகள்தான்... ஒரு மாடு பால் வற்றும் போது இன்னொரு மாடு கன்று போட்டு விடும். அதனால் பாலுக்கு குறைவிருக்காது. அம்மா தயிர் விற்க மாட்டார்கள்... டீக்கடைக்கு மொத்தமாக கொடுத்துவிடுவோம். வீட்டில் காபிக்கும் தயிருக்கும் பால் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இரவு பாலைக்காய்ச்சி சூடு ஆறவைத்து, அதில் கொஞ்சம் தயிரை விட்டு மூடி வைத்து விடுவார்கள். காலையில் எடுத்துப் பார்க்கும் போது அல்வாபோல் கட்டியாக இருக்கும். சோற்றில் கட்டித் தயிரைப் போட்டு பிசைந்து சாப்பிடுவதுதான் சுகம். அதுவும் கஞ்சியில் தயிர் விட்டு... சின்ன வெங்காயமும் உப்பில் ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாயும் போட்டுச் சாப்பிட்டால்... ஆஹா... என்ன ருசி.. என்ன ருசி.

வீட்டில் தயிர் கடைவதற்கு என்றே மத்து வைத்திருப்பார்கள். காலையில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். அம்மா ஆரம்பித்து வைக்க யாராவது ஒரு ஆள் தொடர்ந்து மத்தால் கடைய வேண்டும்... நேரம் ஆக ஆக... மத்தின் நெளிவான பாகங்களிலும் சட்டியின் ஓரங்களிலும் வெண்ணெய் திரண்டு ஒட்டிக் கொள்ளும். ஒரு பழமொழி இருக்குமே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையான்னு... அதனாலதானோ என்னவோ மீன் குழம்புக்கு மண் சட்டி பயன்படுத்தும் அம்மா, தயிர் வைப்பது அலுமினியப் பாத்திரத்தில்தான்... திரண்டு வரும் வெண்ணெய்யை சுடச்சுட தின்பதற்காகவே தயிர் கடைவதுண்டு... மத்தியில் இருக்கும் வெண்ணெய் அவ்வப்போது வாய்க்குள் போய்க் கொண்டே இருக்கும்.

திரண்டு வந்த வெண்ணெய்யை லாவகமாக எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து வைப்பார்கள்... வாய்ப்புண்ணா... உதட்டில் வெடிவு வெடிவாக இருக்கிறதா... வெண்ணெய்யை எடுத்துத் தேய்த்துக் கொள்ளும் போது ஒரு உருண்டை வாய்க்குள் ஓடிவிடும்... பொங்கல், தீபாவளி, திருவிழாக்களின் போது எடுத்து வைத்த வெண்ணெய்யை இருப்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி நெய் எடுப்பார்கள்... அதில் கொஞ்சம் சீரகமும் கருவேப்பிலையும் போட்டு கொதிக்க வைக்கும் போது ஆஹா... அந்த வாசம்... இப்ப வர்ற பாட்டில் நெய்களில் இல்லை. நெய்யை ஊற்றிவிட்டு இருப்புச் சட்டியில் சாதத்தை எடுத்துப் போட்டு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுக்கும் போது வாங்கிச் சாப்பிட்டால்தானே தெரியும் அந்தச் சுவை... அதை அறியாத இன்றைய தலைமுறை நிறைய விஷயங்களில் கொடுப்பினை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை.

சின்னக் கண்ணனை பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்ன நம்ம கதைக்கு பொயிட்டேன் பாருங்கள்... ஸ்கைப்பில் மகளுடன் நடந்த  உரையாடல் அப்படியே... 

'என்ன பாப்பா கிருஷ்ண ஜெயந்தி வருது... வீட்டில் என்ன விஷேசம்..?'  

'என்ன விஷேசம்... அம்மா சூப்பரா வெஜிடபிள்ஸ் சமைப்பாங்க... இனிப்பு பணியாரம் எல்லாம் செய்வாங்க... அவ்வளவுதான்'. 

'ம்...சரி... வீட்டுக்குள்ள கண்ணன் வந்த மாதிரி கால்தடம் போடுவீங்கதானே... கையால போடாமா சின்னக் கண்ணனோட காலால போடுங்க...' மெல்ல வம்புக்கு வலை வீசினேன்.

'சின்னக்கண்ணனா...? இங்க யாரு இருக்கா... அம்மா கையால சூப்பரா கால்தடம் போடுவாங்க தெரியுமா..?' 

'அது தெரியும்... அதான் நம்ம சின்னக் கண்ணன்... நம்ம தம்பி இருக்கானுல்ல...' தூபம் போட்டாச்சு... இனி புகையும் பாருங்க.

'யாரு... விஷாலா... அப்ப்ப்ப்பா... அவன் கால் தடம் வச்சா வீடே நிறைஞ்சிரும்... தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் சின்னக் கண்ணனாம்.... சின்னக்கண்ணன்....' பேச்சில் கோப ஜ்வாலை அடித்தது... காதுகளில் புகை வந்தது.

நானும் விடாமல் 'அவந்தானே நம்ம வீட்டு செல்லக் கண்ணன்... பின்னே இதுக்காக கண்ணப்பாவையா கூட்டியார முடியும்..?' என்றேன். 

'எந்தக் கண்ணப்பாவை...? எதிர்கேள்வி வந்தது. 

கேட்டது சரிதான் அதுலயும் சிக்கல் இருக்குல்ல... எங்க பெரியண்ணன் கண்ணன்... அங்கிட்டு அவங்க சித்தி வீட்டுக்காரர் கண்ணன்... யாரைக் கூப்பிடுவது என்று ஸ்ருதி கேட்டது சரிதான் என்றாலும் நாம விடாக் கண்டனுல்ல.. இதை இன்னும் இழுக்காம விடுறதில்லையின்னு ஆட்டத்தைத் தொடர்ந்தேன்.

இங்கேரு பாப்பா... உங்க சித்தப்பா இங்க இருக்காரு... உடனே கூப்பிடமுடியாது.... நம்ம கண்ணப்பா அங்கதானே இருக்கார்... வரச்சொல்லி மாவைக் கலக்கிக் கொடுத்தியன்னா... மிதிச்சி வீடெல்லாம் நடந்துட்டு போவாருல்ல...' என்றேன் சிரிக்காமல்.

 'அப்ப்ப்ப்ப்பா.... யாரு நம்ம கண்ணப்பா..? அவருக்கு வயசு 50... தெரியுமா...?' 

'இருக்கட்டுமே... விஷால் செல்லக் கண்ணன் இல்லைன்னா... அவரு எங்கம்மாவுக்கு செல்லக் கண்ணன்தானே... பாரு பேர்லயும் கண்ணன் வச்சிருக்காரு..' 

'ஐயோ அப்பா முடியல... இதுக்கு பேசாம நானே கால்தடம் போட்டிருவேன்...' 

'நீயா... அதெப்படி போட முடியும்... நீ அழகு மீனாட்சியில்ல... கிருஷ்ண ஜெயந்திதானே... மீனாட்சி ஜெயந்தி இல்லையே..?' விடாமல் வம்பிழுத்தேன்.

'ஓ அப்ப உங்க செல்லமகனும் கிருஷ்ணன் இல்லையே... பெரிய கருப்பன்தானே... எப்பூடி...' என்னை மடக்கிய சந்தோஷம்.

'என்ன இருந்தாலும் அவன் கோகுலத்துல கண்ணன்தானே... பெரிய கருப்பன்னு உங்க ஐயா கோவில்ல கூப்பிடச் சொல்லிட்டாங்க சரியின்னு எல்லாரும் ஏத்துக்கிட்டோம்... ஆனா நாங்க மாயக்கண்ணன்னு யோசிச்சி வச்சிருந்தோம் தெரியுமா?' வம்பைத் தொடர்ந்தேன்.

'வக்கலையில்ல... வக்கலயில்லை...' என்றவர், 'அப்பா... நாங்க அம்மா கையால காலடி வச்சி சாமி கும்பிட்டுக்கிறோம்... நீங்களா வரப்போறீங்க... இல்லயில்ல... பின்ன என்ன... ஆனா அவனை மட்டும் வைக்கவே விடமாட்டேன்...' என்றார் கோபமாக. 

'பொறாமை... எங்க அவன் அழகா வச்சிருவானோன்னு பொறாமை..' எரியும் தீயில் எண்ணெய் வார்த்தேன்.

'ஆமா அவுக அழகா வச்சிக் கிழிச்சிட்டாலும்... வீடு பூராம் மிதிச்சி நாறடிச்சிடும்... போங்கப்பா நான் போறேன்... அம்மா வந்து பேசுவாங்க...' என்றபடி எழுந்தார்.

சின்னக் கண்ணனைப் பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்று மகளிடம் வம்பளந்தது வரைக்கும் பேசியாச்சு.... இனி... என்ன பேசுறது..?

நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி... ஊரில் விஷேசமான நாள்... இங்க... எப்பவும் போல எழுந்து குளித்து... சாமி கும்பிட்டு... வேலைக்கு வர வேண்டியதுதான்.... நமக்கு எங்கே கிருஷ்ண ஜெயந்தியும், தீபாவளியும், பொங்கலும்... எல்லா நாளும் வேலை நாளே...

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை... பூங்கோதையை...
அவள் மனம் கொண்ட ராகத்தைப் பாடி...
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' 
என்ற பாடல் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....

கண்ணன் மட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை அல்ல... நம் வீட்டுச் செல்லங்களும்தான்... அவர்களுடன் வம்பிழுத்து உரையாடுவதில் கிடைக்கும் சுகமே தனிதான்... அந்தச் சுவைக்கு முன்னால் கண்ணனும் நாமும் திருடித் தின்ற வெண்ணெய் சுவை கூட குறைவுதான்...

(இந்தக் கட்டுரை கோகுலாஷ்டமிக்காக சகோதரி ஒருவரின் பத்திரிக்கைக்கு எழுதி, அவர் இதை தவறுதலாக வெளியிடாமல் விட்டு விட்டு, மீண்டும் அடுத்த இதழில் போடுகிறேன் என்றார்... போட்டாரா என்று தெரியவில்லை... இதுவரைக்கும் போட்டதற்கான எந்த மின்னஞ்சலும் வரலை... அதான் பதிவு எழுத நேரமில்லாத காரணத்தால் இதை இங்கு பகிர்ந்தாச்சு)

சின்னக் கண்ணனைப் பற்றிய பகிர்வை பகிரும்போது இறுதியில் சொல்லியிருக்கும் பாடலை  வாசித்தபோது சமீபத்தில் மறைந்த இந்தப் பாடலைப் பாடிய திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஞாபகச் சுவற்றில் வந்து போனார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து அவர் பாடிய பாடலை இங்கு பகிர்கிறேன்.


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

மனசு பேசுகிறது : யவனராணி

வாசிப்பின் தொடர்ச்சியாய் யவனராணி வாசித்து முடித்து சில நாட்கள் ஆகிறது. அதற்குப் பிறகு எடுத்த இராஜதிலகம்  அண்ணன் ஒருவரின் கட்டுரைகளை வாசித்ததால் ஆரம்பிக்காமல் இருக்கிறது. இதேபோல் கனவுபிரியன் அண்ணாச்சி வாசிக்க கொடுத்த இரண்டு புத்தகங்களும் பக்கங்கள் திருப்பப்படாமல் அப்படியே இருக்கின்றன. முன்னெல்லாம் தினம் ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். கதைகளை பதியாமல் இருப்பதால் இடைவெளி வந்தது... எங்கள் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்த பின் இடைவெளி அதிகமானது. உடல் நலமின்மையால் நீண்ட இடைவெளி விட்டது போலாகிவிட்டது. அதான் இன்று நம் இருப்பைக் காட்டும் விதமாக எழுதலாம் என உட்கார்ந்தாச்சு.

Image result for யவனராணி
வனராணி... 

சாண்டில்யன் அவர்களின் வரலாற்றுப் புதினத்துக்கே உரிய இலக்கணத்தை மீறாமல் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் விரும்பும் நாயகனைச் சுற்றி நகரும் கதைக்களம்தான். திருமாவளவன்... இந்தப் பேரைக் கேட்டதும் இவரு எதுக்கு இங்க வர்றாருன்னு நினைக்காதீங்க... இது வரலாற்றில் மிகப்பெரிய அரசனாக இருந்து நமக்கு காவிரியில் கல்லணை கட்டிக் கொடுத்த சோழப்பேரரசன் கரிகாலனுங்க... கரிகாலனின் தாய் தந்தையை தூங்கும் போது மாளிகையை எரித்துக் கொன்று விட்டு ஆட்சியைப் பிடிக்கிறான் இருங்கோவேள் என்பவன். இளவரசனான திருமாவளவன் காட்டுக்குள் மறைந்து இருந்து படைகளை உருவாக்கி, வெண்ணி என்னும் இடத்தில் சேரன், பாண்டியன், மற்றும் குறுநில மன்னர்களான பல்வேறு வேளிர்களுடன் இணைந்து எதிர்த்து நிற்கும் இருங்கோவேளைக் கொன்று மீண்டும் சோழர்களின் ஆட்சியை அமைக்கிறான். அவனுக்கு பெரும் உதவியாக இருப்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனும் சோழப் படைத்தளபதியுமான இளஞ்செழியன்.

இளஞ்செழியனைச் சுற்றித்தான் கதை... இழந்த சோழ ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கத் துடிக்கும் அவனுக்கு அக்கா மகள் பூவழகி மீது காதல்... இருவருக்கும் அடிக்கடி ஊடல்... அவள் நினைவோடு பூம்புகாரின் கடலோரத்தில் நடந்து செல்பவன் காலில் யவனராணி தட்டுப்படுவதில் ஆரம்பிக்கும் கதை ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு மேல் மிக அழகாகப் பயணிக்கிறது. யவனராணியோ தமிழகத்தில் யவன (கிரேக்க) அரசை நிறுவ தன் நாட்டில் இருந்து படைத்தலைவன் டைபீரியஸூடன் வந்தவள் கப்பல் விபத்துக்குள்ளாகி கரை சேர்கிறாள். யவனராணியைக் காப்பாற்றுபவன் அவளின் அழகிய பொன்னிற கூந்தலுக்கும்... கவரும் கண்களுக்கும்... வசீகர இதழுக்கும் அடிமையாகி பூவழகி நினைவால் தடுமாறுகிறான். தன்னைக் காப்பாற்றிய தமிழன்தான் தன்னை இங்கு ராணி ஆக்குவான் என்ற சோதிடத்தை நம்பும் ராணியும் தன்னை முதலில் தொட்டுத் தூக்கிய இளஞ்செழியனைக் காதலிக்கிறாள். அவனுக்காக தான் வந்த காரியத்தை மறந்து இருங்கோவேளின் சதியை முறியடிக்க உதவுகிறாள்.

இளஞ்செழியன் மீது யவனராணி காதல் கொண்டு வந்த காரியத்தை மறந்து திரிகிறாள் என்பதால் அவளை சிறை பிடித்து, இவனை மயக்க மருந்து கொடுத்து நாடு கடத்துக்கிறான். கப்பலில் பயணிக்கும் இளஞ்செழியனைத் தேடி வரும் அவனின் உபதளபதி ஹிப்பலாஸூடன் கடலில் கொள்ளையரிடம் மாட்டி, அவர்களிடம் இருந்து தப்ப சாம்பிராணி நாட்டில் இல்-யாசுவிடம் மாட்டி அங்கிருந்து அலீமா உதவியுடன் தப்பி வருகிறான். அலீமா அவனை விரும்ப, அவளிடம் தான் வேறொருத்தியை விரும்புவதாய்ச் சொல்லி, அவளை கப்பலை இயக்கும் உபதளபதியாக்கி தமிழகம் திரும்புகிறான். இந்த அலீமா யவனராணியின் தோழி, டைபீரியஸ் அவளை மகளாய் நினைத்து கடலில் கப்பலைச் செலுத்தும் பயிற்சியெல்லாம் அளித்தான் என்பதெல்லாம் கதை நகர்வில் வரும்.

தமிழகத்தில் பூவழகி தன் காதலன் இளஞ்செழியன் நினைவால் வாடுகிறாள். அவளை சிறை வைத்து திருமணம் செய்து கொள்ள இருங்கோவேள் முயற்சிக்கிறான். திருமாவளவன் தீப்பிடித்த மாளிகையில் இருந்து தப்பி வரும் போது எதிரிகளிடம் இருந்து சுவாமிகளும் இளஞ்செழியனும் காப்பாற்ற, பூவழகிதான் காயத்துக்கு மருந்து இடுகிறாள். அவள் மீது கொண்ட பாசத்தில் தன்னைக் கரிகாலன் என்று அழைக்கச் சொல்லி அவளை தங்கை ஆக்கிக் கொள்கிறான். இது நடப்பது கதையின் ஆரம்பத்தில்... இந்தப் பாசத்தில் அவளை இருங்கோவேளின் சிறையில் இருந்து தன் காதலி மற்றும் அவளின் தந்தை உதவியால் காப்பாற்றி தான் ஒளிந்திருக்கும் காட்டுக்குள் வைத்துப் பாதுகாத்து வருகிறான். 

கரிகாலனுக்கு சுவாமிகள், இளஞ்செழியனின் உப தளபதிகள் என பலர் உதவி செய்ய, அவனின் மாமா இரும்பிடத் தலையாருடன் சேர்ந்து மிகப்பெரிய படையை உருவாக்க, தமிழகம் திரும்பும் இளஞ்செழியனும் டைபீரியசிடம் தான் யார் என்று காட்டாது யவனராணியை சந்தித்து திட்டம் தீட்டி, நாகையில் படைத்தளம் அமைத்து வெண்ணிப் போருக்கு வித்திடுகிறான். வரலாற்றில் மிக முக்கியமான வெண்ணிப் போர் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.

பூம்புகாரில் டைபீரியஸை தன் புத்தி சாதுரியத்தால் வெல்கிறான் இளஞ்செழியன், தான் வந்த வேலை மறந்து தமிழன் பின்னால் சுற்றிய யவனராணியை டைபீரியஸ் கொல்ல, இறக்கும் தருவாயில் பூவழகியையும் இளஞ்செழியனையும் சேர்த்து வைத்து உயிரை விடுகிறாள் அழகி யவனராணி.

போர்க்காட்சிகள், காதல் காட்சிகள் என எல்லாவற்றையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் சாண்டில்யன். இளஞ்செழியனின் வீரதீர செயல்களை விவரிக்கும் போதும் ஒவ்வொரு முறை அவன் திட்டம் தீட்டும் போதும் அவனின் முகத்தில் ஏற்படும் மாறுதல்கள், யவனராணி குறித்த வர்ணனைகள் என எழுத்தில் அசர அடித்திருப்பார். இளஞ்செழியனாகவே நம்மை மாற வைத்துவிடுவார்.

முக்கியமாக சொல்ல வேண்டியது ஹிப்பலாஸ் என்ற அந்த யவன உப தளபதியைத்தான்... தன் ராணி முன்னே வணங்க வேண்டியவன், தனது படைத்தலைவனும் யாரும் வெற்றிக் கொள்ள முடியாத வீரனுமான இளஞ்செழியன் மீது கொண்ட அன்பினால் அவனுடன் இருப்பதும்... அவனைத் தேடி கடலில் உடைந்த மரத்தில் பயணித்து அவனை அடைந்து யவனக் கப்பலில் மருத்துவனை கைக்குள் வைத்து காப்பாற்றி,  அவனுடன் சுறாக்கள் நிறைந்த நீருக்குள் குதித்து... அங்கும் காப்பாற்றி... சாம்பிராணி நாட்டில் மாட்டி... அங்கிருந்து தப்பித்து... டைபீரியஸிடம் மாட்டி... தப்பி.. சோழ நாட்டை மீட்கும் போரில் துணை நிற்பது வரை அருமையான கதாபாத்திரம்... கதையை வாசித்து முடிக்கும் போது மரக்க முடியாதவனாகிறான் ஹிப்பலாஸ்.

மாமனைக் காதலித்து தன் பெண்புத்தியால் சண்டையிட்டு பிரிந்திருந்தாலும் அவன் பிரிவால் வருந்தி.... அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு உடல் இளைக்க காத்திருக்கும் பூவழகி மனசுக்குள் உயர நின்றால் என்றால் அரசமைக்க வந்து ஒருவன் மீது கொண்ட காதலால் அவனுக்கு உதவ ஒவ்வொரு முறையும் தன் உயிரைப் பணையம் வைத்து இறுதியில் உயிரையே கொடுக்கும் யவனராணி ஏனோ சற்று அதிகமாக மனசுக்குள் உயர்ந்து நிற்கிறாள். அதனால்தானோ என்னவோ பூவழகி என்று வைக்காமல் யவனராணி என்று பெயர் வைத்தார் போலும் சாண்டில்யன்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

மனசு பேசுகிறது ; நீயா... நானா...

Image result for நீயா நானா

ன்னும் புதிய புராஜெக்ட்கள் எதுவும் ஆரம்பிக்காததால்... அதான் எண்ணெய் விலை குறைஞ்சி போச்சுன்னு புராஜெக்ட்டை எல்லாம் நிப்பாட்டி வச்சிட்டானுங்களே... நம்ம ஊர்ல மட்டுந்தான் எண்ணெய் விலை கூடிக்கிட்டே போகும்.. சரி விடுங்க... நம்ம கதைக்கு வருவோம். புராஜெக்ட் இல்லையா... அதனால அலுவலகத்தில் பணி... அதுவும் எப்படி... கிராமங்கள்ல நாலஞ்சு கோவில் இருக்கும் எல்லாத்துக்கும் ஒருத்தர்தான் மணி அடிப்பார் அப்படித்தான் அலுவலகத்தில்... எவன் எவனுக்கு வேலை இருக்கோ எல்லாத்தையும் நம்ம தலையில கட்டுவானுங்க... வேர்ட், எக்ஸல், அப்புறம் சாப்ட்வேர் பக்கம், டெஸ்டிங்... என எல்லாப் பக்கமும் சுழற்றி ஆடணும்... இருந்தாலும் வேலை அதிகமில்லைதான்... 

அலுவலகத்தில் ஒரு ஆறுதல் இணைய வசதி உண்டு என்பதே... அதுவும் இல்லைன்னா 9 மணி நேரம் என்பது பெரும் யுகமாத்தான் இருக்கும். நல்லவேளை தப்பிச்சோம்... என்னோட செல்போனில் தமிழ் டைப் செய்வது பிரச்சினை... நிறைய வாசிக்கலாம்... யூடிப்பில் நிறைய பார்க்கலாம். வேலை செய்து கொண்டிருக்கும் போது சிவக்குமாரோ, சுகி சிவமோ, சாலமன் பாப்பையாவோ, ராஜாவோ. லியோனியோ பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பப்ப வாட்ஸப்பில் மனைவியுடனோ குழந்தைகளுடனோ அரட்டை அடிக்கலாம். முகநூலில் நண்பர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம். நிறைய வரலாறு சம்பந்தமான வீடியோக்களைப் பார்க்கலாம். அப்படித்தான் குடவாசல் திரு. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் சோழர்கள் சம்பந்தமான வீடியோக்களைப் பார்த்தேன்... கல்வெட்டுக்கள் குறித்தான எத்தனை செய்திகள்... இராஜராஜனைப் பற்றி அறியாத செய்திகள் எத்தனை எத்தனை... அவர் சொல்லியிருக்கும் செய்திகளால் இராஜராஜன் என்னும் மிகச் சிறந்த மனிதன் மனசுக்குள் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி இன்னும் வாசி.. வாசி... என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரின் சதய நட்சத்திர தினத்தை இன்று சாதிக்குள் இறுத்திப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. 'பாரி எம் இனத்தான்... அவனை இந்த இனத்தான் உரிமை கொண்டாடுகிறான்.... எனவே நாம் அவனுக்கு விழா எடுக்க வேண்டும்' என்று என் நண்பர் முகநூலில் இட்டிருந்தார். அவர் எந்த இனத்தான் உரிமை கொண்டாடுவதாகச் சொன்னாரோ அந்த இனத்தானான நாந்தான் முதல் விருப்பம் தெரிவித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். படித்தவர்களே இப்படி இருக்கும் போது... என்னத்தைச் சொல்ல...

ராஜராஜனைப் பற்றி நிறையப் பேசலாம்...  இன்னொரு பதிவில் பேசலாம். இன்னைக்கு 'நீயா நானா' பழைய நிகழ்ச்சிகள் சில தலைப்புக்காகப் பார்த்தேன். ஒரு சில தலைப்புக்களை எடுத்துப் பேசும் போது கோபிநாத் தேவையில்லாமல் பேசுவதுண்டு... பெரும்பாலும் நீயா நானா பார்ப்பதில்லை... இன்று பார்க்கலாமே என்று மூன்று வித்தியாசமான தலைப்புக்களில் நிகழ்ந்த விவாதத்தைப் பார்த்தேன்... உண்மையிலேயே நல்ல தலைப்புக்கள்... நல்ல விவாதம்... சொல்வதெல்லாம் உண்மையைப் போல் காங்கிரசில் இருந்து கல்தா பெறப் போகும் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சியில் அடிதடி நிகழ்த்தினார் என்ற நிகழ்வுகளைப் பார்க்காமல் இப்படி விவாதங்களைப் பார்ப்பது சிறப்பு... பெண்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற விவாதம் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வந்திருந்தார். ஒவ்வொருவரின் கதையைக் கேட்கும் போது வேதனை மட்டுமே மிஞ்சியது... சிலர் சொல்லும் போது வந்த அழுகையை அடக்க நமக்குள் அழுகை வெளிவரத் துடிக்கிறது. சித்தாள் ஆணாக இருந்தால் முன்னூறு அதே பெண் என்றால் இருநூறு என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆண்களைவிட பெண்களுக்கே வேலை அதிகம் என்றாலும் சம்பளவிகிதத்தில் சித்தாள் என்றில்லை எல்லா வேலையிலும் பெண்களுக்கு ரொம்பக் கம்மிதான்.... 14 மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும்... வெளிச்சத்தைப் பார்த்ததே இல்லை... 1000 பீடி சுற்றினால் ஒரு ரூபாய்... என நிறையச் சொன்னார்கள்... வேதனையைப் பகிர்ந்தார்கள்.

இரண்டாவதாகப் பார்த்தது தேவையில்லாத செலவு செய்கிறார்கள் என்பதாக கணவன் மனைவிகள் எதிர் எதிர் அணியில் பேசினார்கள். கஞ்சத்தனமாக இருக்கிறார் என மனைவியும் மனைவி குழந்தைகளுக்கு எது வேண்டும் என்றாலும் வாங்கிக் கொடுக்கும் என்னால் இருநூறு ரூபாய்க்கு செருப்பு வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று இல்லை ஏனோ மனம் வரவில்லை என்று கணவனும் பேச, சாப்பாட்டுக்கு கணக்குப் பார்ப்பார்... சேலை எடுக்க கார் எடுத்துப் போவாள்... இருக்கு பயன்படுத்திக்குவோம் என்றும்... என் பணத்தை அதிகமாக செலவு செய்கிறாள் எனவும் பேசினார்கள். நான் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை செலவு செய்வதை விரும்பவில்லை என்று யார் யார் சொல்கிறீர்கள் கை தூக்குங்கள் என்று கோபிநாத் சொன்னதும் சிலர் கை தூக்கினார்கள். பின் யாருக்காக சம்பாதிக்கிறார்கள்... ஊதாரியாகச் செலவு செய்ய நினைக்கும் மனைவியருக்கு கணவனின் கஷ்டம் தெரியாதா என்ன... இருந்தாலும் நல்லதொரு நிகழ்ச்சிதான் இதுவும்.

கடைசியாகப் பார்த்ததும் அசைவத்துக்கு மாறிய சைவமும் சைவத்துக்கு மாறிய அசைவமும் எதிர் எதிர் அணியில்... சாப்பாடு பற்றித்தான் பேசினார்கள்... குழந்தைக்காக அசைவத்துக்கு மாறியதாக ஒரு பெண் சொன்னார். மனைவி, குழந்தைகளுக்காக அசைவத்துக்கு மாறினாலும் இன்னும் விருப்பப்பட்ட சாப்பிடவில்லை என்று ஒருவர் சொன்னார். எங்கள் குழுவில் சைவமாக ஒருவர் இருந்தால் அவரை எதுக்காக எங்க கூட சாப்பிட வந்தேன்னு சொல்வோம் என்று ஒருவர் சொன்னபோது கோபிநாத் அதை மறுத்தார். ஒரு பந்தாவுக்காக... மற்றவர்கள் தன்னை தனியாகக் கவனிப்பதாலேயே சைவத்துக்கு மாறியதாகச் சொன்னார். எல்லாரும் டாக்டர் சொன்னதால் அசைவத்துக்கு மாறினேன் என்று சொன்னபோது அதையும் கோபிநாத் மறுத்தார். டாக்டர் சொன்னார் என்று சொல்வதெல்லாம் ஜால்ஜாப்பு வேலை... மருத்துவமனையில் ஒட்டியிருக்கும் டயட் லிஸ்டில் முட்டையும் இருக்கும் கீரையும் இருக்கும் என்றார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு.சமஸ் அவர்கள் நான் சாப்பாட்டுப் பிரியன் என்றதுடன் காபி ஒவ்வொரு சிப்பிலும் ஒவ்வொரு விதமான காபி என்றார். சூடான இட்லிக்கு தனிச் சுவை என்று சொன்னார். நிறையப் பேசினார்.

நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது கவலைகளை மறந்து பார்க்க முடிகிறது. சிவக்குமார் அவர்களின் மகாபாரத உரையை பார்க்க கேட்க வேண்டும் என்ற ஆவல். இணையத்தில் கிடைக்க வில்லை... தேடிக் கொண்டிருக்கிறேன்... அதேபோல் இராஜராஜன் குறித்த வீடியோக்களின் தேடலும் தொடர்கிறது. இடையே சில வாசிப்புக்கள்... யவனராணி முடிஞ்சாச்சு... இப்போ கை பரவாயில்லை... இன்னும் கட்டியை கிழித்து எடுத்த காயம் ஆறவில்லை என்றாலும் வலி இல்லாதிருக்கிறது. பயணிக்கும் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்றால் பரவாயில்லை ஏற்றத்தை மட்டுமே நிர்ணயித்து ஏற விடாமல் மூச்சிரைக்க வைக்கும் போது கல்லாய் சமைந்து கிடக்கும் மனசுக்குள் இதுபோன்ற வீடியோக்களும் இளையராஜாவின் பாடல்களுமே மனசின் வலியை மாற்றுகின்றன.

புதுகையில் பதிவர் விழா வைக்கலாம் என முத்து நிலவன் ஐயா சொல்லியிருந்தார்... நிஷா அக்கா, ஜெயா அக்கா போன்றோர் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள். மாவட்ட விழாவாக என்பதை விட முடிந்தளவு மாநில விழாவாகச் செய்யலாம். குறைந்த நாட்களே இருந்தாலும் விழாவை முன்னெடுக்கும் முத்துநிலவன் ஐயாவுக்கு மற்ற நண்பர்கள் கை கொடுக்க நல்லதொரு விழாவாக நடத்திவிட முடியும்... முன்னெடுங்கள் நட்புக்களே...
-'பரிவை' சே.குமார்.

சனி, 19 நவம்பர், 2016

மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம்

டல் நலமின்மை காரணமாக பதிவுகளை வாசித்த போதும் கருத்து இட முடியவில்லை... கருத்து இட்டால்தானா... வாசித்தாலே போதுமே... என எல்லாருடைய பதிவுகளையும் ஓரளவுக்கு வாசித்தேன். எப்பவும் நான் நீண்ட கருத்துக்களை இடுவதில்லை... வாசித்தேன் என்பதைப் பதிவு செய்ய சின்னதாய் ஒரு கருத்து அவ்வளவுதான்... ஆனால் அதைக் கூட இட முடியாத நிலை... ஒரு வாரம் தூக்கமில்லாமல் நரக வேதனை...நான் தமிழ் மணத்தில் வாக்களிப்பது கூட எப்போதாவது செய்யும் அரிதான செயல்தான்... இதை கில்லர்ஜி அண்ணா அறிவார்... ஏன்னா நேற்று என்னைப் பார்க்க வந்தவரின் முன்னிலையில்தான் அவரின் தளத்துக்கு வாக்களித்து இன்னைக்குத்தான் உங்களுக்கும் வாக்களிக்கிறேன் என்றதும் சிரித்தார். அதில் 'அடப்பாவி' என்று தெரிந்தாலும் அவர் எப்பவும் 'அப்பாவி'யாய் பழகக் கூடியவர். இன்று ஓரளவு உடல் நலத்தில் முன்னேற்றம்... இடது கை டைப்ப முடியாத சூழல்... இன்று வலது கைக்கு ஓரளவு ஒத்துழைக்கிறது. இருப்பினும் இன்னும் சில நாட்கள் வாசிக்க மட்டுமே செய்வேன்... கருத்து இடவில்லை என்று நினைக்க வேண்டாம்.

கில்லர்ஜி அண்ணா பற்றிச் சொன்னதும்தான் ஞாபகத்தில் வருது... கடல் கடந்த தேசத்தில் எழுத்தின் மூலம் கிடைத்த உறவு அண்ணன்... இவ்வளவுக்கும் தேவகோட்டையில் எங்க பெரிய அக்கா வீடு இருக்கும் பகுதியில்தான் இருக்கிறார்  என்றாலும்... அத்தானை உறவு முறை சொல்லி அழைப்பார் என்றாலும்... இங்குதான் நாங்கள் இருவரும் அறிமுகம்.... இங்கு உறவாய்... நட்பாய்... அண்ணனாய்...தேடி ஓடி வரும் பாசக்கார மனிதர்... முரட்டு மீசைக்குள் அன்பு நிறைந்த மனிதர்... சில காரணங்களால் வெளிநாட்டு வாழ்க்கை துறந்து சொந்த ஊரில் குழந்தைகளுடன் வாழ முடிவெடுத்து ராஜினாமா பண்ணி விட்டார்... அடுத்த வாரத்தில் ஊருக்குப் போய் விடுவார்... மகேந்திரன் அண்ணன் போன் அடித்தாலும் எடுப்பதில்லை... இங்கிருக்கிறாரா..? ஊரில் இருக்கிறாரா...? தெரியவில்லை. அவரின் அம்மாவின் இறப்புக்குப் பின்னர் அவர் தொடர்பில் இல்லை. நல்லது கெட்டது எது என்றாலும் உரிமையோடு பகிர அருகிருந்த அண்ணன் கில்லர்ஜி அவர்களும் இனி ஊரில்... ஊருக்குப் போகும் போது பார்த்து பேசலாம் என்பது ஆறுதல்... தேவா அண்ணாவும் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டிருப்பது போல் கில்லர்ஜி அண்ணாவும் தனது முதல் புத்தகக் குழந்தையான 'தேவகோட்டை தேவதை தேவகி' வெளியீட்டு விழா வைப்பார்... தொடர்ந்து நல்ல புத்தகங்களை வெளியிடவும் அவர் விரும்பும் சந்தோஷ வாழ்க்கை அமையவும் இறைவன் அருள் புரியட்டும்.  புத்தகத்தை எல்லாரும் வாங்கிப் படியுங்கள். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல் அவரின் நகைச்சுவை... எடக்கு மடக்கு... எகத்தாளம்... கிராமியம்... காதல்... கேலிகள்...  என எல்லாம் கலந்து கலவையாய் தேவதையை சமைத்திருக்கிறார்... கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள்... நானா.. எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டார்... இன்னும் வெளியீட்டு விழா வைக்காததால் அது குறித்து விரிவாய் எழுதலை.


தேவா அண்ணா... துபாயில் இருந்து அபுதாபி வரும் போதெல்லாம் 'தம்பி... அபுதாபி வாரேன்... உன்னைச் சந்திக்கிறேன்...' என்று வந்து பார்த்து இருவரும் உணவருந்திப் பிரியும் வரை நிறைய இலக்கியம் பேசும் பிரியமான அண்ணன்... எங்க சிவகங்கை சீமையில் விளைந்த கில்லர்ஜி... ஜோதிஜி... தேனக்கா... இராஜாராம் சித்தப்பு... இன்னும் நிறைய எழுத்தாற்றல் மிக்க பெரியவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...அப்படித் தோன்றி தஞ்சையில் காலூன்றி... சென்னையில் அடியெடுத்து வைத்திருக்கும் தேவா அண்ணன் அவர்கள் இலக்கிய எழுத்துக்குச் சொந்தக்காரர்... காதலே சுவாசமாக அவர் எழுதும் எழுத்தில் காதல் வழிந்தோடும் என்பதில் சந்தேகமில்லை... வாசிக்க வாசிக்க யோசிக்க வைக்கும் எழுத்துக்கள் நம்மைக் கவர்வது போல் இவரின் எழுத்துக்கள் நம்மை அதற்குள் இழுத்துச் செல்லும்... இவரின் 'படைப்புக்கள் விற்பனைக்கு' என்ற முதல் புத்தகம் வெளிவந்திருக்கிறது... வாங்கி வாசித்துப் பாருங்கள்... கல்கி இணையாசிரியர் சூர்யா அவர்கள் இவரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு முகநூலில் விரிவாய் எழுதியிருந்தார்.குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதை வடிவில் 'வா காதல் செய்வோம்' என்ற ஒரு அழகான காதல் கதையை ஆரம்பித்திருக்கிறார். வாசியுங்கள்... வித்தியாசமான ஒரு கதையை வாசித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்... ஆம்... திருமணத்துக்குப் பின்னர் காதல் செய்கிறார்களாம்... ரெண்டு பகுதி வெளியாகி இருக்கு... அருமையா இருக்கு...

ண விவகார திட்டமிட்ட நல்ல முடிவுதான் என்றாலும் பாதிக்கப்பட்டிருப்பது கரை வேட்டிகளும்... பண முதலைகளும் அல்ல.. அன்றாடங் காச்சிகள்தான் என்பது வேதனைக்குரியது. சிறப்பான ஒரு திட்டம் தீட்டும் போது அதே 500. 1000த்தை புதிய நோட்டு வடிவில் கொடுத்துவிட்டு பழையதை செல்லாததாக்கியிருக்கலாம். 2000 ரூபாய் நோட்டு எதற்காக போடப்பட்டது../ இப்ப ஏழைகள் சில்லரைக்கும் அலைய வேண்டிய நிலமை. இன்னைக்கு அரசியல்வாதிக ஏழை கஷ்டப்படுறான்... விவசாயி கஷ்டப்படுறான்னு நாலு பேரு உக்காந்து ஞாயம் பேசுற பஞ்சாயத்துல குந்திக்கினு குதிக்கிறானுக.. காவிரி பிரச்சினையில விவசாயிக்காக குதிக்கலையே... பணப் பிரச்சினைக்கு மட்டும் ஏன் பக்கவாத்தியம் வாசிக்கிறானுங்கன்னு பார்த்தா... இன்னைக்கு அவனோட பொழப்புக்கு மண்ணு... அதான் விவசாயியை இழுக்கிறான்... களவாணிப் பயலுக...  ஏரோட்டுல தார்க்குச்சியால குத்தணுமின்னு அரசன் முகநூலில் சொல்லியிருந்தார். கண்டிப்பாக அதைத்தான் செய்யணும்... அப்பவும் திருந்த மாட்டானுங்க... இது மிக நல்ல விஷயம் என்றாலும் இத்தனை பாதிப்பு வராமல் செய்திருக்கலாம்... 

சென்ற வாரத்தில் கனவுப்பிரியன் அண்ணா அவர்கள் இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் வாசிக்க... உடல் நலப் பிரச்சினையால் அவை அப்படியே இருக்கின்றன... வாசிக்கணும்... யவனராணி வாசிப்பனுவத்தை ஒரு பகிர்வாக்கணும்... முதல்ல உடல் நலம் தேறி வருகிறேன்....
-'பரிவை' சே.குமார்.

சனி, 12 நவம்பர், 2016

சினிமா : புலி முருகன் (மலையாளம்)

Image result for மோகன்லாலின் புலிமுருகன்

புலி முருகன்...

மோகன்லாலைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது நடிப்பால் மேம்படுத்துவதில் வல்லவர். ஐம்பத்து ஐந்து வயதுக்கு மேலான மனிதர் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம் 'புலி முருகன்'. கேரளா திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை படைத்திருக்கும் படம் இது. இதே படத்தை நம்ம ஊரில் எடுக்கப் போவதாகப் பேச்சு... நம்மாளுங்க இன்னும் மாஸ் சேர்க்கிறேன் பேர்வழின்னு படத்தைக் கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கிடுவாங்க என்பது மட்டும் திண்ணம்.

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து இயக்கும் இயக்குநர்கள் நிறைந்தது கேரளச் சினிமா என்பதை நாம் அறிவோம். மலையாளப் படங்களைப் பார்க்கும் போது... நம் தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் போது... பல படங்கள் பீரியட் படங்களாகத்தான் தோன்றும்... ஆங்கிலப் படம் பார்த்தோமென்றால் முதல் அரைமணி நேரம் பேசியே கொல்வார்கள்... அட என்னடா... எப்படா விமானத்தை எடுப்பார்கள்... எப்போ சண்டை போடுவார்கள் என்று தோன்றும். அப்படித்தான் பல மலையாளப் படங்கள் இறுதிவரை இருக்கும்... ரொம்ப மெதுவாய் நகரும்... ஆனால் அந்தக் கதை நம்மை அதற்குள் ஒரு பேரலையாக இழுத்துக் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட எத்தனையோ படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன். புலி முருகன் அதில் இருந்து மாறுபட்ட படம்.

ஒரு காடு... அழகான அருவி... அதற்குப் பக்கத்தில் ஒரு வீடு... பாசத்தில் சண்டை இடும் அன்பான காதல் மனைவி... அழகான குட்டித் தேவதை... ஒரு முரட்டு மீசைக்காரனுக்கு... புலியெனச் சீறும் ஒருவனுக்கு இதை விட வேறென்ன வேண்டும். காடும் காடு சார்ந்த இடங்களிலும் வாழும் அவனுக்கு நாட்டு மனிதர்களால் பிரச்சினை... புலியைக் கொல்லும் வீரனான அவன் மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு இறுதியில் என்ன ஆகிறான் என்பதே புலி முருகன்.

ஆமா... அதென்ன புலி முருகன்... ஐயப்பந்தானே புலி மீது ஏறி வந்தார்... முருகன் மயில் வாகனம்தானே... அதுதான் அவரோட லாரியை மயில்வாகனம்ன்னு சொல்லுறாங்களே... அதனால புலி முருகனுக்கு மயில் வாகனம் இருக்கு.  'ஐயப்பன் ஏறி வந்தது புலி அல்லா அது கடுவன்' அப்படின்னு படத்தில் ஒருத்தன் சொல்வான்.  நமக்கு ஐயப்பன் புலிப்பால் கொண்டு வரப்போய்.. புலி மீது ஏறி வந்தார்... அவ்வளவுதான்... அந்த ஐந்து மலைக்குள் ஐயப்பனை... பதினெட்டுப்படி ஏறி தரிசிக்கும் போது அவன் அழகில் சொக்கி நின்ற அனுபவம் நான்காண்டுகள் தொடர்ந்து கிடைத்தது... பஸ்மக் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தியதை புலி முருகன் நினைவில் கொண்டு வந்தான். சரி அதென்ன புலி முருகன் அப்படித்தானே இந்தப் பாரா ஆரம்பித்தோம்... பின்னே எதற்காக ஐயப்பன் பின்னால் பயணம்... வாங்க புலி முருகனோட போகலாம்.

தம்பி பிறந்த உடன் அம்மாவின் மரணம்... பார்த்துப் பார்த்து வளர்க்கும் தந்தை தன் கண் முன்னே புலிக்கு இரையாக, சிறுவனான முருகன் அந்தப் புலியை மாமாவின் உதவியுடன் கொல்கிறான். அன்று முதல் அந்த புலியூர் கிராமத்துக்கு அவன் புலி முருகன் ஆகிறான். அடிக்கடி மக்களை அடித்து இழுத்துச் செல்லும் புலிகளைக் கொல்கிறான். புலி நம்ம தேசிய விலங்குதானே... அதுவே அழிந்து வரும் ஒரு இனம்... அதைக் கொல்வதா..? அப்போ அவனை போலீஸ் புடிக்காதா... மானை அடித்துச் சாப்பிட்டவனை... மனிதனை கார் ஏற்றிக் கொண்டவனை எல்லாம் நம்ம அரசு என்ன பண்ணுச்சு... இது சினிமாதானே... அதுவும் நாயகன் புலி... அப்புறம் எப்படி... இருந்தாலும்... எதுவாக இருந்தாலும் படம் பார்த்தால் தெரியும்.

Image result for மோகன்லாலின் புலிமுருகன்

புலி முருகன் காதலிக்கும் மைனாவை விரட்டும் போலீஸ்காரன்... மனைவியான பின்னும் வந்து உதை வாங்கிச் செல்கிறான். தன் ஊர் மக்களுக்காக புலியைக் கொன்றாலும்... லாரி ஓட்டிச் சம்பாரிக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி... தம்பியைப் படிக்க வைக்கிறான்... அவந்தான் உயிர்... அவன் மூலமாக ஆயுர்வேத மருந்து தயாரிக்க கஞ்சா வேண்டும் என வரும் டாடி கிரிஷாவின் மகன் வழியாக பிரச்சினை பின் சீட்டில் அல்ல... அவனின் லாரியின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொள்கிறது... பின்னர் அது அவன் வாழ்க்கையைக் கொல்கிறது. நம்ம வால்டர் வெற்றிவேல் போல... படிக்காதவன் போல... தம்பிதான் வில்லனாய் வருவானோன்னு பார்த்தா... அவன் நல்லவனாத்தான் இருக்கான். அப்ப வில்லன் யார்...? அதான் டாடி கிரிஷா... சைலண்ட் வில்லன்... ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் கஞ்சாக் கலந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

அவர்களிடம் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் புலி முருகன் எப்படி அதிலிருந்து தப்புகிறான்... புலி வேட்டைக்குப் போவது பிடிக்காத மனைவி... ஆரம்பத்தில் முறைத்துக் கொண்ட போலீஸ்... தன்னால் பாதிக்கப்பட்ட மாமா... வில்லனிடம் மாட்டிய தம்பி... எனக் கதை சொல்லி... இறுதிக் காட்சியில் தன் மகள் வயதொத்த குழந்தையை தூக்கிச் சென்ற புலியைக் கொன்றானா...? வில்லனை என்ன செய்தான்..? போலீஸ் முறைத்துக் கொண்டதா... அணைத்துக் கொண்டதா...? என்பதை 'முருகன்... முருகன்... புலி முருகன்'னு பின்னணி இசைக்க விறுவிறுப்பாய் நகர்த்தியிருக்கிறார்கள்.

படத்தில் பாராட்ட வேண்டியது சண்டைக் காட்சிகள் அமைத்த பீட்டர் ஹெயின்... புலியைக் கொல்லும் காட்சிகள் எல்லாம் மயிர்க் கூச்செறிய வைக்கும் அழகான காட்சிகள்... அதேபோல் தம்பிக்காக போடும் சண்டை... லாரிக்காக போடும் சண்டை... இறுதிச் சண்டைக் காட்சி... போலீசுடன் மோதும் சண்டை... லாரி சேசிங் காட்சி... என படத்தின் விறுவிறுப்பில் அடித்து ஆடியிருக்கிறார். மிகவும் அருமையான சண்டைக் காட்சிகள்.

மாமாவாக வரும் லால்... போலீசாக வரும் கிஷோர்... வில்லனாக வரும் ஜெகபதி பாபு...  சசியாக வந்து சிரிப்புப் பட்டாசு வெடிக்கும் சுராஜ்... என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மைனாவாக வரும் கமலினி முகர்ஜி... புலி வேட்டையாடி விட்டு வந்து குளிக்கும் கணவனை வெறுப்பதும்... தண்ணியடித்து விட்டு வரும் போது கோபமாய் சண்டையிடுவதும்... நமீதாவுடன் முறைத்துக் கொள்வதும்... எத்தனை கோபமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சுவதுமாய்... காதல் கணவன் மீது கோபம் நிறைந்த பாசக்காரியாகவும் அருவிக் கரையோரம் அழகிய மைனாவாக வாழ்ந்திருக்கிறார்.

நமீதா சில காட்சிகளில் வருகிறார்... அவர் வரும் போதெல்லாம் 'கட்டிப்புடி... கட்டிப்புடிடா... பாடல் பின்னணி இசையாக... ஆனாலும் சில காட்சிகளுடன் அவரை காணாமல் செய்து விடுகிறார்கள். லால் தண்ணியடித்துவிட்டு ஓலைப்பாயை விரிப்பதில் வடிவேலு 'எங்ககிட்டயேயா... நாங்கள்லாம்...' என பாய் விரிக்கும் காட்சியில் இருந்து கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். மோகன்லால் முறுக்கு மீசையுடன் புலி முருகனாய் பாய்கிறார்.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை வசூல் சாதனை செய்த படம் என்றாலும் தமிழ் படங்கள் போலில்லாவிட்டாலும் பின்னணி பில்டப் நிறைந்த படம்தான் புலி முருகன். அழகிய கதைக்களங்களில் பயணிக்கும் மலையாள சினிமாவில் புதிய சரித்திரமாய் பின்னணி அதிர, பறந்து பறந்து சண்டையிடும் மாஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது... நல்ல கதைகளை மலையாள சினிமா இழந்து விடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

(பாட்டைக் கேளுங்க... நல்ல மெலொடி)

கதைகளுக்காகவே மலையாளப் படங்களைத் தேடிப் பார்ப்பதுண்டு... இனி அங்கும் தல. தளபதி போல் மாஸ் நிறைந்த படங்கள் கோடிகளின் ஆசையில் கோலோச்சலாம்.

பின்னணி இசையில் கோபி சுந்தர் ஜமாய்த்திருக்கிறார்... பாடல்களும் நல்லாயிருக்கு. விறுவிறுப்பான படத்தை... தமிழில் கோடிகளில் சினிமாக்கள் புரளும் போது கிட்டத்தட்ட முப்பது கோடி செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் என்பதோடு முதல் முறையாக நூறு கோடி கிளப்பில் இணைந்த படம் என்ற பெருமையையும் உரிதாக்கிக் கொண்ட புலி முருகனை இயக்கிய வைசாக், தயாரிப்பாளர் தோமச்சன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

சொல்ல மறந்துட்டேனே... அந்த கிராபிக்ஸ் புலி நல்லாவே இருக்கு... உறுமலுடன் சீறுவது சூப்பர்.

மொத்தத்தில் புலி முருகன் நல்லாவே உறுமியிருக்கு.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 11 நவம்பர், 2016

கிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு

Image result for மாடுகள்

ண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாத மாடு ஒன்றை மீட்புக் குழுவினர் வெளியில் எடுக்கும் வீடியோ ஒன்று பார்த்தேன். அதைப் பார்த்ததும் நம்ம வீட்டில் மாடு வளர்த்தது... கோழி வளர்த்தது... நாய் வளர்த்தது... ஆடு வளர்த்தது... கிளி வளர்த்தது... மைனா வளர்த்தது... புறா வளர்த்தது... என வளர்த்தது எல்லாம் ஞாபகத்தில் வந்தது. அதெல்லாம் எப்படி மறக்க முடியும்...?

எங்க வீட்டில் ஆரம்ப காலத்தில் எருமை மாடுதான்... எங்க பிச்சைக்குட்டி வாத்தியார்.... ஏராம்மாடு... எராம்மாடுன்னுதான் திட்டுவாரு... எருமை மாடுன்னு  திட்டமாட்டாரு... எங்க ஊருல பெரும்பாலான வீட்டில் எருமை மாடுதான் வளர்த்தாங்க... வயல் வேலைகளுக்காக காளை மாடு வீட்டுக்கு ஒரு ஜோடி கிடக்கும்... கூட்டு வண்டி, மொட்டை வண்டி ஊரில் சிலரின் வீட்டில் இருந்தது. எருமை மாடெல்லாம் நாம பொறக்கும் போது வீட்டில் இருந்தன... அதுவும் எங்க வீட்டில் பிறந்து வளர்ந்த மாடு... நரை எருமை... இவுகதான் தலைவர்... அவருக்குப் பின்னே அவரின் மகள்கள்... பேத்திகள்... வாரிசாய்... மனிதர்கள் பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்லி ஆஸ்திக்கு மட்டும் போதும்ன்னு முடிவெடுத்து இப்போ பொண்ணு கிடைக்காம அலையிற நிலை ஆயிப்போச்சு,,, ஆனா மாடுகளில் பெண் மாட்டுக்கு மட்டுமே மவுசு... ஆண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் விற்றுவிடுவதுண்டு... அப்படித்தான் ஆண்  வாரிசுகள் விற்கப்பட பெண் வாரிசுகள் கோலோச்சினார்கள்.

அப்புறம் விவசாய காலத்தில் எருமை மாடுகளை பார்ப்பதில் சிரமம் இருக்கு என்று... ஆமாம் காணாமல் போனால் வீடு திரும்ப நாலைந்து நாளாகும்... தேடித்தேடி அலைந்து முள்குத்தி... எப்படிக் கஷ்டப்பட்டுட்டு வந்தாலும் எங்கம்மா ஒரு மாடு பாத்துக்க முடியலைன்னு வெளுத்துக் கட்டிரும்... அதுக்காக வெளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு மாடு மேய்ச்சாலும் சில நேரங்கள் காணாமல் போவது சகஜம்தானே... அதுவும் ரெண்டு மூணு பேருவிட்டு மாடு காணாமல் பொயிட்டா சேர்ந்து தேடலாம்ல்ல... சரி எருமை மாடுகள் வேண்டான்னுட்டு எல்லாத்தையும் வித்துட்டு... எங்க வெள்ளச்சி மொதக்கொண்டு எல்லாம் விற்றப்போ எல்லோரும் அழுகை... அது ஒரு கதை... சரி விடுங்க... அப்புறம் பசு மாடு வாங்கி... கடைகளுக்கு பால் கொடுத்து வந்தோம். அப்புறம் அம்மா வீடுகளுக்கு பால் ஊத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் வீட்டில் பசுமாடுகள்தான்.... இப்ப எதுவும் இல்லை... மாட்டுக்கசாலை... மாட்டுத் தொட்டி (குலுதாலி)... வைக்கோல் படப்பு... எல்லாம் வெறுமையாய்...

அதுவும் மாடு கன்று போட்டதும்... அந்தக் கன்னுக்குட்டியை வீட்டுக்குள் சாக்குப் போட்டு கட்டி வைத்து அதை கட்டிப் பிடித்துக் கொண்டு விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா என்ன..? தினமும் காலையில் கன்றுக்குட்டியை குளியாட்டி மஞ்சள் வைத்து... பொட்டு வைத்து... வீட்டில் கட்டி வைப்பதற்குள் அது கயிற்றை நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் அழகே அழகுதான்...

இப்ப இதை எதுக்கு எழுத ஆரம்பித்தேன்னா... சில நேரங்களில் பசு மாட்டுக்கு உடம்பு முடியாமல் வந்து எழ முடியாது தவிக்கும்... ஊசி போட்டு... வாழைப்பழத்தில் மாத்திரை வைத்துக் கொடுத்து...  நாக்கைப் பிடித்து வெளியில் இழுத்து மருந்து ஊற்றி... எல்லாம் செய்தும் எழ முடியாமல் தவிக்கும்... அப்போ நாலைந்து பேர் இருபுறமும் நின்று மாட்டின் வயிற்றுப் பகுதியில் உலக்கை போட்டு மெல்லத் தூக்கி நிறுத்தி கொஞ்ச நேரம் பிடித்து வைத்திருக்க மீண்டும் கீழே விழுந்து விடும்... பார்க்க பரிதாபமாக இருக்கும்... சில மாடுகள் அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டாலும் பல மாடுகள் மரணத்தைத்தான் தழுவும்... பின்னர் நாலு காலையும் கட்டி... இடையில் கம்பு சொருகி, தூக்கிக் கொண்டு போய் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்... அப்படி இல்லாமல் சாக்கடைத் தண்ணீருக்குள் மாட்டி வெளியில் வர முடியாமல் நின்ற மாட்டை கயிறு கட்டி அந்த தாழ்வான பகுதிக்குள் இறங்கி கிரேன் மூலமாக அந்த வீடியோ பார்க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 

மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் விளையாண்ட எங்க வீட்டில் இப்போ கால மாற்றத்தில் எதுவும் இல்லை... எல்லாம் போயாச்சு... நாங்கள் பிறந்து வளர்ந்த வீடும் இடிச்சாச்சு... இப்போ அந்த வீட்டின் பின்னே இருந்த கசாலை மட்டுமே உயிர்ப்போடு... எங்க விஷாலுக்கு ஆடு, மாடு, கோழி மீது அலாதிப் பிரியம்... அவனுக்காகவே எங்க வீட்டில் இப்போ கோழி வளர்க்கிறோம்... டவுனுக்குள்ள எதுக்கு கோழி வளக்குறீங்க...? போர்டிகோ, மாடிப்படி எல்லாம் நாசம் பண்ணி வைக்கிது பாருங்க... என உறவுகள் எல்லாம் சொன்னாலும்... பள்ளி விட்டு வந்ததும் செவலக்கோழி முட்டை இட்டுச்சா... எடுத்து வச்சீங்களா... எங்கே சேவலைக் காணோம் என அவன் கேட்டு இரவு கோழிகளை அடைத்துவிட்டு வருவதில் அவனுக்கு இருக்கும் சந்தோஷத்துக்காகவே எங்கள் வீட்டில் கோழிகள் வாசம் செய்கின்றன.

-'பரிவை' சே.குமார், 

திங்கள், 7 நவம்பர், 2016

கமல் என்னும் கலைஞன்

இன்று  ஒளிச் சிதறல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற நம் தமிழக் இயற்பியல் விஞ்ஞானி  சந்திர சேகர வெங்கட் ராமன்... அதாங்க நம்ம சர்.சி.வி ராமன் அவர்களின் பிறந்த நாள்... இந்நாளில் அவரை நாம் மனதில் நிறுத்துவோம்.

*****


Image result for கமல்

கமல்...

இன்று தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே உலகளவில் உயர்ந்து நிற்கக் காரணமானவர்களில் முக்கியமானவர். படத்துக்குப் படம் தன்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் முன்னிறுத்தும் நடிப்பை நேசிக்கும் நடிகர்களில் முதன்மையானவர். களத்தூர் கண்ணம்மாவில் 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்று பாடி... சினிமாவை அம்மா... அப்பாவாகப் பாவித்து படத்துக்குப் படம் விஸ்வரூபம் எடுத்தவர். 

கமல்... என்னை மிகவும் கவர்ந்த சொல்... படிக்கும் காலத்தில் கமலின் மீது தீராக் காதல்.... கமலின் ரசிகனாய்... விசிலடிச்சான் குஞ்சாய்... பாலாபிஷேகம் பண்ணும் அளவுக்கு எல்லாம் இருக்கவில்லை என்றாலும் கமலின் படங்களை கட் பண்ணி வைத்து, கமல் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி யாருக்கும் அனுப்பாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் மீது... அவரின் நடிப்பு மீது காதல்... கமலை மட்டும் காதலிக்கவில்லை.... இளையராஜா... பாலசந்தர்... பாலு மகேந்திரா... பாரதிராஜா... என நிறையப் பேரைக் காதலித்திருக்கிறேன்.

கமலை விரும்பியது போல் அதீத விருப்பம் இயக்குநர் பாக்யராஜ் மீது... அவரின் கதைகளுக்காகவும் இறுதிக் காட்சியில் வைக்கும் டுவிஸ்ட்டுகளுக்காகவுமே எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்ப்பதுண்டு.... சுந்தர காண்டம் இன்று வரை அடிக்கடி பார்க்கும் படம்... தூறல் நின்னு போச்சு படம் பார்த்த அடுத்த நாள் பள்ளியில் கை ஓடிய, கட்டுக் கட்ட குன்றக்குடி செல்ல,  8.30 மணிக்கு கண்டதேவிக்கு வரும் கே.எஸ்.எஸ். பஸ்ஸிற்கு கிளம்பும் சமயத்தில் 'ஏரிக்கரை பூங்காற்றே...' என ரேடியோவில் பாட்டுப் போட. அம்மா நீ போ பின்னால வாறேன் என்று சொல்லி பாடல் கேட்டு திட்டு வாங்கியதெல்லாம் இன்னும் பசுமையாய்...

இவர்கள் மீது எவ்வளவு காதலோ அந்தளவு டவுசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீதும்... எனக்கென்னவோ கிராமத்துக் கதைக்களத்தில் மாமன் மச்சான் உறவை மிக அழகாக கொடுத்தவர் இராமராஜன் என்ற எண்ணம் அப்போதும் இப்போதும் உண்டு. அவரின் படங்களில் சிகரெட், தண்ணி இருக்காது... அது போக அவர் படங்கள் கவர் முக்கிய காரணம் ராஜாவின் பாடல்கள்... ஆஹா... என்ன ஒரு பாடல்கள் அவை. இன்றும் என்னிடம் ராஜாக்களின் காம்பினேசன் பாடல்கள் ஒரு தொகுப்பே இருக்கு. இதே போல் கார்த்திக், மோகன் படங்கள் பாடல்களுக்காகவே பிடிக்கும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி' பாடலை அல்பாயுசுல மறைந்து போன மோனிஷாவின் துள்ளல் நடனத்துடன் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்... சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நானொரு சினிமாப் பைத்தியம்... 90-களின் பாடல்கள் மீது அலாதி பிரியம்... நிறையப் பாடல்கள் வைத்திருக்கிறேன்.

மூன்றாம் பிறை படத்தில் பிரதாப் போத்தனைத்தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சி செய்தார் என முகநூலில் வாசித்தேன். யோசித்துப் பாருங்கள் அப்படி பிரதாப் போத்தான் சுப்பிரமணி ஆகியிருந்தால் 'கண்ணே கலைமானே...' என்ற கண்ணதாசனின் கடைசிப் பாடல் இருந்திருக்குமா...? அது இருந்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவுடனா ' பொன்மேனி உருகுதே...' பாடல் கண்டிப்பாக இருந்திருக்காது... என்ன ஒரு நடனம் அது... கதைக்காகவோ... ஸ்ரீதேவிக்காகவோ படம் வெற்றி பெற்றிருக்கும் என்றெல்லாம் யாருக்காவது தோணுமா...? அதில் கமல் என்னும் பிம்பம் இணைந்ததே வெற்றிக்கான காரணி.... இறுதிக் காட்சியில் இரயில் நிலையத்தில் அவர் நடித்திருப்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவோமா?

ஒன்றா இரண்டா... எல்லாப் படங்களும் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமான படங்கள்தான்... படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிக்க அடித்தளம் இட்டது பதினாறு வயதினிலே சப்பாணியின் கோவணம்தானே... அவருக்கு பாலசந்தர் வாய்ப்புக்களை அள்ளி வழங்கினார் என்றாலும் திறமை இருந்த ஒரு காரணத்தால்தானே, படத்துக்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி... உருவத்தில் வித்தியாசம் காட்டி... நடிக்கத் தெரிந்த நடிகன் என்பதால்தானே வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியும் கமலும் என் குழந்தைகள் என்று அவர் சொல்லக் காரணம் அவர்கள் மீது கொண்ட அன்பினால் மட்டுமல்ல... அவர்கள் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று நம்பிக்கை கொண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்றதால்தானே. ரஜினி என்னும் நல்ல நடிகனை நாம் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி என நிறையப் படங்களில் பார்த்திருப்போம். அவரை ஸ்டைல் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து கல்லாக் கட்டிய இயக்குநர்களால்தான் அவரின் நடிப்பு காணாமல் போனது என்பது உண்மைதானே... கபாலியில் பழைய ரஜினியைப் பார்த்தோம்... ஆனால் அதில் மற்ற விஷயங்களைச் சேர்த்து வேறு மாதிரி ஆக்கிவிட்டார்கள். ரஜினி கூட கமலின் இடத்தை என்னால் தொட முடியாது என்று சொல்லியிருக்கிறார். இது நட்பின் தன்னடக்கம்.

குருதிப் புனலில் கதை சொன்ன விதம்... ஹேராமில் கதை சொன்ன விதம்... மகாநதி... குணா... புன்னகை மன்னன்... சிற்பிக்குள் முத்து... சலங்கை ஒலி... வாழ்வேமாயம்... என வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களை... இதற்கெல்லாம் மகுடமாய் (சண்டியர் என்ற) விருமாண்டி... இரு விதமான பார்வையில் கதையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார். ஒரு கலைஞனாய்... நல்ல நடிகனாய் இன்று வரை நான் ரசிப்பது கமலை என்பதால்தானோ என்னவோ தனுஷ் மீதும் ஒரு பற்றுதல்... எல்லோரும் சிவகார்த்திகேயனைக் கொண்டாட எனக்குப் பிடித்தவராய் விஜய் சேதுபதி... நடிப்பால் கவர்பவர்கள் மட்டுமே என்னையும் கவர்கிறார்கள்... ஆனால் அஜீத் இதில் விதிவிலக்கு... நல்ல மனிதனாய் கவர்ந்துவிட்டார்.

வாணி..  சரிகா... கவுதமி... இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனையோ என்று சிலர் கருத்துக்களோடு வரலாம்... கமல் என்னும் நடிகனைத்தான் ரசித்தேனே ஒழிய கமல் என்னும் மனிதனின் வாழ்க்கை முறை எனக்குத் தேவையில்லை... அது குறித்து கருத்துக்கள் வேண்டாம்... வாழ்க்கையில் அவர் தவறு செய்திருக்கலாம்... இனியும் செய்யலாம்... என்னைப் போல் நீயும் வாழ் என்று யாருக்கும் சொல்லவில்லை... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு மூணு குடும்பம் இருக்கு... இதெல்லாம் வெளியில் தெரிவதில்லைதானே... மீடியா வெளிச்சம் படுபவர்களின் வாழ்க்கை மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லை... நல்ல நடிகனாய் எனக்குப் பிடிக்கும்... ஆனாலும் இனிமேலாவது கமல் யோசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மூன்று பேரும் பிரிந்து செல்லக் காரணம் கமலின் பக்கம்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது. என்ன இருந்தாலும் தன் மகளுக்காக என கவுதமி சொல்லியிருக்கத் தேவையில்லை... பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..? வேறு காரணம் சொல்லியிருக்கலாம்... ம்ம்ம்ம்.... சரி விடுங்க... நடிகனாய் எனக்கு கமல் பிடிக்கும் அவ்வளவே.

எந்த நடிகருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் பார்ப்பது கிடையாது. நம்மை எல்லாம் சிரிக்க வைத்த ஆயிரம் படங்களில் நடித்த மனோரமா அவர்களை கடவுள் வாழ்க்கையில் சிரிக்கவே விடவில்லை... எத்தனை துன்பத்தைக் கொடுத்தான் தெரியுமா என சிவக்குமார் அவர்கள் அடுக்கிக் கொண்டே போகும் காணொளியைப் பார்க்க நேர்ந்தது. என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் யாரேனும் அறிந்திருப்போமா...? நம்மைச் சிரிக்க வைக்கும் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்து அதை நாம் ஆராய்ந்தோமா..? அதேபோல் கமலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாம் ஆராய வேண்டாம்... நம் தமிழ் சினிமாவை உயரத்தில் ஏற்றி வைத்து 'செவாலியே'வாக உயர்ந்து நிற்கும் கமலை ஒரு கலைஞனாய் வாழ்த்துவோம்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் ஜி.

*****
வாரியார் சுவாமிகளையும் நினைவில் நிறுத்துவோம்...


-'பரிவை' சே.குமார்.

சனி, 5 நவம்பர், 2016

சொல்லச் சொல்ல இனிக்குதடா..!

Image result for முருகன்

முருகன்...

என்னமோ தெரியலைங்க... முருகன் மேல் அத்தனை பற்றுதல்...

சின்ன வயதில் இருந்தே அவன் மீது தீராத காதல்... அவன் அழகன் என்பதாலா...? அல்லது தமிழ்க்கடவுள் என்பதாலா..? அதுவும் இல்லை என்றால் அந்த சிரித்த முகத்திற்காகவா...? என்பதெல்லாம் தெரியவில்லை ஏனோ அவன் மீது தீராத காதல்... சஷ்டியை நோக்க சரவணபவனார் எங்க போட்டாலும் நம்ம வாயும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிரும்.

சாமி இல்லை என்று சொல்லும் நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்... அது அவர்கள் விருப்பம்... நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கவோ அல்லது அவர்கள் விருப்பதை நம் மீது திணிக்கவோ நான் எப்போதும் விருப்பப்பட்டதுமில்லை... விரும்புவதுமில்லை... விருப்பமும் வெறுப்பும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. சாமி கும்பிடுறவனைவிட சாமி கும்பிடாதவன் நல்லாத்தான் இருக்கிறான் என்று நண்பர்கள் சொல்வார்கள். இருக்கட்டும்... அது சந்தோஷம்தான்.... கல்லூரியில் படிக்கும் போது செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நாங்கள் சாமி கும்பிட எங்கள் நண்பன் சூசைமாணிக்கமும் திருநீறு இட்டுக் கொள்வான். நானும் முருகனும் வாரம் ஒருமுறை சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கத் தவறுவதில்லை. மதம், ஜாதி எல்லாம் நம்மை சுற்றி இடப்பட்ட வட்டமே... நானெல்லாம் எப்போதும் அந்த வட்டத்துக்குள் நின்றதில்லை... மதத்தை மனசுக்குள் கொண்டு செல்லாததே நிறைய உறவுகளைப் பெறக் காரணமாக இருந்தது.

எனக்கு சின்ன வயதில் இருந்தே சாமி மீது அதிக பற்றுதல்... எங்க ஊர்த் தெய்வங்களான மாரியம்மன், கருப்பர், முனியய்யா, நாச்சியம்மன், ஐயனார், எங்கள் வீட்டுச் சாமியான உமையவள் போன்றவற்றின் மீது இருக்கும் பற்றுதலை விட முருகன் மீது கூடுதல் பற்றுதல்... இப்ப எங்க மாரியம்மன் கோவிலுக்குள் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் சந்நதி கொண்டு வந்தாச்சு. ஊருக்கு வருடாவருடம் கோவில் திருவிழாக்கு சென்று திருவிழா சமயத்தில் கோவில் வேலை செய்வதில் அவ்வளவு சந்தோஷம். எங்கள் ஊர் முனியய்யா எனது குடும்பத்தைக் காக்கும் தெய்வமாக நிற்பதாக கருப்பர் சாமி ஆடும் என் நண்பன் முதல் வீட்டிற்கு வரும் பெரியவர் வரை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் முருகன் மீது இருக்கும் காதல் முனியய்யா மீதும் உண்டு.

முருகன் மீது கொண்ட காதலால் ஐயப்பன் மீது அவ்வளவு பற்றுதல் ஏற்படவில்லை... எல்லாரும் கார்த்திகை மாசத்தில் ஐயப்பன் பாடல் கேட்டால் நான் முருகன் பாடல் கேட்பேன். முருகன்... முருகன்..  என அவனை மனசுக்குள் நிறுத்தி வைத்ததல் ஐயப்பனை வெளியில் வைத்திருந்தேன் என்றாலும் முதல் முறை சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப்படி ஏறி ஐயனைத் தரிசித்து ஐந்து மலை அழகில் மயங்கி 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்' என்னும் யேசுதாஸின் குரலில் லயித்து மலை உச்சில் சாரல் பெய்து கொண்டிருக்க பஸ்மக் குளத்தில் நாலைந்து முறை நீராடி ஒரு நாள் தங்கி படிபூஜை பார்த்து... ஐயனை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்து ஆனந்தமடைந்தது முதல் ஐயப்பன் பித்துப் பிடித்து நான்கு வருடங்கள் தொடர்ந்து மலைக்குச் சென்று வந்தது தனிக்கதை... இப்ப முருகனோடு பயணிப்போம்.

சின்ன வயதில் அப்பா உள்ளிட்ட உறவுகள் பழனிக்கு பாதயாத்திரை போவார்கள்... கிட்டத்தட்ட 20, 30 பேர் போவதால் மாரியம்மன் கோவில் அருகில் கொட்டகை போட்டு அதில் விரத காலத்தில் தங்குவார்கள். தினமும் பஜனை... சுண்டல், பொங்கல் விநியோகம் என அமர்க்களப்படும். தேவகோட்டையில் இருந்து பழனிக்கு ஏழு நாள் நடை... தைப்பூசத்துக்கு ஒரு வாரம் இருக்க நடக்க ஆரம்பிப்பார்கள்... அதிகாலையிலேயே 'அரோகரா...' போட்டுக் கிளம்பிடுவாங்க... அன்று பத்து மணிக்கு மேல் தேவகோட்டை நகரத்தார் காவடி பழனி நோக்கிப் புறப்படும்... பழனியில் நகரத்தார் காவடிக்கு மிகச் சிறப்பான மரியாதை கொடுக்கப்படும். முதல் நாள் நடை குன்றக்குடி வரை... ஊரில் இருந்து நிறையப் பேர் குன்றக்குடி வரை போய்த் திரும்புவார்கள். தேவகோட்டை முதல் குன்றக்குடி வரை ரொட்டி, மிட்டாய், புளியோதரை, பொங்கல், லட்டு என நிறைய விநியோகம் இருக்கும். மஞ்சள் பை கொண்டு போய் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது எங்க சித்தப்பாவையும், இளையர் ஐயாவையும் நச்சரித்து நாங்க ஏழு பேர் பழனிக்கு நடைப்பயணம் கிளம்பியாச்சு... காலை 2 மணிக்கு மேல் எழுந்து நடக்க ஆரம்பித்தால் காலில் சூடு ஏறும் வரை... அதாவது 11 மணி வரை நடை பின்னர் சாப்பாடு... நிழலில் படுக்கை... பெரும்பாலும் எதாவது வீட்டு வேப்பமரம் இல்லையேல் கோவில்... மதியம் 3 மணிக்கு மேல் எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்து 10 மணி வரை நடை... இப்படி நடந்து ஏழு நாள் நடையில் அடையும் பழனியை ஐந்தாம் நாள் காலை அடைந்து மடத்தில் இடம் பிடித்து சாமான்களை வைத்து விட்டு மீண்டும் சண்முகநதி நோக்கி நடை... அங்கு மொட்டை போடுபவர்கள் போட, சண்முகநதியில் ஆனந்தக் குளியல்... பின்னர் மலையேறி முருகன் தரிசனம்... இரவு தங்கத் தேர் பவனியை ரசித்து... கேரளக் காவடிகளின் ஆட்டத்தையும் ரசித்து இரவோடு இரவாக பேருந்தில் ஏறி குன்றக்குடியில் இறங்கி அதிகாலை குன்றக்குடி சண்முகநாதனைத் தரிசித்து வீடு வந்து சேர்வோம். இது ஆறு வருடம் தொடர்ந்தது. எங்க அண்ணனும் பெரியப்பா மகனும் மச்சானும் நடைப்பயணமாய் போய் மூன்றாம் நாள் இரவு பழனியை அடைந்து சாமி கும்பிட்டு நான்காம் நாள் ஊருக்குத் திரும்பிட்டாங்க... மனுசனுங்க எப்படித்தான் நடந்தாங்களோ... இது இப்பவும் எங்க ஊர்ல ரெக்கார்டாக்கும். ஆனா மச்சான் அடுத்த வருடம் இவனுக கூட நான் போகலப்பா... படுத்தவுடனே எழுப்பிடுறானுங்க... நடக்க விட்டே கொன்னுட்டானுங்க என்று சொல்லி விட மூவர் கூட்டணி கரைந்தது. மச்சானும் மறைந்து விட்டார்.

ஆறு வருடங்கள் முருகனை நடை பயணமாகத் தரிசிச்சிட்டு வந்தவன் செட்டியார் குழுவில் இணைந்து ஒரு முறை திருப்பரங்குன்றம் நடைப் பயணமும் சென்று வந்தேன். அப்போதே முருகன் போட்டோ என்றால் உடனே கிழித்து பத்திரப்படுத்தி வைப்பேன்... இப்போதும் அது தொடருது... என்னோட செல்போனில் முருகன்தான்  அதிகம் சிரிச்சிக்கிட்டு இருக்கான்.

'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்கதானே... நமக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்... காலை முதல் இரவு வரை எதற்கெடுத்தாலும் 'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா...' என்றுதான் வாயில் வரும்.  இதுக்கு அடுத்து வரும் வார்த்தைக்குத்தான் எல்லாரிடமும் திட்டு வாங்குவேன்... அது என்னன்னா 'ஸ்... அப்ப்ப்ப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னைய மட்டும் காப்பாத்து' அப்படின்னு சொன்னதும் சுயநலவாதிம்பாங்க... இதுல என்ன சுயநலம் இருக்கு... பொதுநலமே ஊறிக்கிடக்கு.. முருகன் எல்லாரையும் ஒரே நேரத்துல காப்பாத்த முடியுமா என்ன... என்னைக் காப்பாத்தினா நான் நாலு பேருக்கு உதவுவேன்... அந்த நாலு பேரு நாப்பது பேருக்கு உதவுவாங்க... அந்த நாப்பது நானூறாகும்... நானூறு நாலாயிரமாகும்... இப்படியே போனா எல்லாரும் சுபிட்ஷமா இருப்போமா இல்லையா..? அப்ப நான் கேக்குறதுல என்ன தப்புங்கிறேன்... இது பத்தாப்பு படிக்கும் போதுல இருந்தே வருது... இந்தா எழுதும் போதே ரெண்டு தடவை வந்திருச்சு.... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்லியிருக்காங்கதானே... ஸ்... அப்பா ,முருகா... என்னை மட்டும் காப்பாத்து.

இப்ப கந்தர் சஷ்டி நடக்குது... தேவகோட்டை சிவன் கோவிலில் நகரத்தார்களால் கந்தர் சஷ்டி மிகச் சிறப்பாக நடைபெறும்... பெரிய பெரிய ஆட்களை எல்லாம் அழைத்து வந்து தினமும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இப்ப தினமும் இரவு எங்க கல்லூரிப் பேராசிரியர் பகிரும் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.  சென்ற வருடம் திருச்செந்தூர் முருகனையும் தரிசிச்சாச்சு... பழமுதிர்ச் சோலை முருகனை வருடாவருடம் சந்திச்சிருவேன்... காரணம்... குலதெய்வம் அழகுமலையானைக் காணப் போகும்போது சுப்ரமணியனையும் பார்க்காமல் வரமுடியுமா என்ன...

இன்றைக்கு சூரசம்ஹாரம்... காலண்டரில் பார்த்ததும் ஏனோ முருகன் ஞாபகம் வந்தாச்சு... எப்பவுமே என்னை ஆட்கொள்பவன் அழகன் முருகன்தான்... நட்பில் நிறைய முருகன் பேர் இருப்பவர்கள் இருப்பார்கள்.

என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்து மகனாகப் பாவிக்கும் என் பேராசானின் பெயர் பழனி.

கல்லூரி முதல் இன்று வரை குடும்ப உறவாய் கலந்திருக்கும் என் நண்பனின் பெயர் முருகன்.

சரிங்க... முருகனைப் பற்றிப் பேசினால் நிறைய பேசலாம்....

'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னை... சரி இன்னைக்கு ஒரு நாளைக்காச்சும் எல்லோரையும் காப்பாற்று...'

'அரோகரா...'


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்திபுரத்து நாயகி

ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை...  அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்ததா..? வந்தியத்தேவன் - குந்தவை காதல் திருமணத்தில் முடிந்ததா..? அருண்மொழிவர்மன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாரா..? என்பதை தன் பாணியில்  நந்திபுரத்து நாயகியில்  கதை சொல்லியிருக்கிறார் கலைமாமணி விக்கிரமன்.

Image result for நந்திபுரத்து நாயகி

கல்கியின் பொன்னியில் செல்வனில் பலரைக் கவர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன்... துறுதுறுப்புக்கு பெயர் போன இளைஞன்... வேகமும் விவேகமும் கொண்டவன்... அதிபுத்திசாலி...  துடிப்பான இளைஞனாகப் பார்த்த வந்தியத்தேவனை உடையாரில் வயதானவனவராக, குந்தவையின் அன்புக் கணவராக,   இராஜராஜனுக்கு உறுதுணையாக இருப்பவராக பார்க்க முடியும்.  ஆனால் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குந்தவை திருமணம் குறித்து எதுவும் சொல்லியிருக்கமாட்டார் என்பதால் அப்போது வாசித்தவர்கள் இருவரும் இணைந்தார்களா... இல்லையா என்பதை அறிய ஆவலாய் இருந்திருப்பார்கள்.  அதை இளைய பிராட்டி குந்தவையை மையமாக வைத்து இந்த நாவலில் பூர்த்தி செய்திருக்கிறார் விக்கிரமன்.

சுந்தரச்சோழர் உடல் நலமில்லாத நிலையில்... ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்ட பின் மதுராந்தகச் சோழருக்குத்தான் அரசுரிமை என்ற குரல்கள் ஓங்கிய நிலையில் அருண்மொழிவர்மன் தான் பட்டம் சூட்டிக் கொள்ளாமல் மதுராந்தகருக்கு (சேந்தன் அமுதன்) பட்டம் சூட்டி வைப்பதாக கல்கி சொல்லியிருப்பார். ஆதித்த கரிகாலன் கொலைச் சதியில் இந்த மதுராந்தகருக்கும் பழுவேட்டயர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதாகவும் பொன்னியின் செல்வன் சொல்லிச் செல்லும். ஆனால் சுந்தரச் சோழருக்குப் பிறகு அருண்மொழிவர்மன் ஆட்சிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆட்சிப் பீடத்தில் இருந்த மதுராந்தகர் பற்றி வரலாற்றுக் குறிப்பில் சரிவர இல்லை என்பதாலும் அந்தக் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த குறையும் இல்லை என்பதாலும் மதுராந்தகர் நல்லவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதால் அவரை நல்ல மனிதராகவே காட்டியிருப்பதாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விக்கிரமன்.

மதுராந்தகர் அரியணையில் அமர, செம்பியன் மாதேவியிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைக்கும் குந்தவை தனது தம்பி அருண்மொழிவர்மனை கடல்க டந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளச் சொல்கிறாள். அப்போது அவருக்கும் வானதிக்கும் திருமணமாகி இருக்கிறது. வானதியை தன் கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள்கிறாள்  இளம் மனைவியைப் பிரிந்து... ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் கடல் பயணமாக எங்கெங்கோ வணிகர் போல் சென்று அருண்மொழிவர்மர் திரும்பும் நேரம் சோழப் பேரரசு கடல் கொள்ளையர்கள், பாண்டிய ஆபத்துதவிகள், பார்த்திபேந்திரன் என நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது.

இந்தப் பத்தாண்டு காலத்தில் வந்தியத்தேவன் எங்கிருந்தார். என்றால் பாதாளச் சிறையில்... ஆம்... ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது தொடர்பாக பார்த்திபேந்திரப் பல்லவனின் சதிக்கு சின்னப்பழுவேட்டயரையும் உடந்தையாகி சிறையில் தள்ளிவிடுகிறார்கள். குந்தவை வெளியில் வாட, வந்தியத்தேவனை பாதிக்கதை வரை சிறையில் வாட வைத்து விடுகிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து குந்தவையோடு முறைத்துக் கொண்டு திரிகிறார். இருவரையும் இணைக்கவே அருண்மொழி நந்திபுரத்துக்கு தனித்தனியாக அனுப்புகிறான். அங்குதான் கோபதாபங்கள் தீர்ந்து மீண்டும் காதலில் விழுகிறார்கள்.

சுந்தரச் சோழரின் இறப்பு, வந்தியத்தேவன் சிறையிலடைப்பு என எதுவும் தெரியாமல் கடல்கடந்து முல்லைத் தீவுக்குப் போகும் அருண்மொழிவர்மனுக்கு அங்கிருக்கும் இன்பவல்லி மீது காதல் ஏற்படுகிறது. இன்பவல்லியோ நாட்டியத் தாரகை... பாடல் அரசி... அங்கிருக்கும் சில நாட்கள் இன்பவல்லியோடு இன்பமாய் கழிய, திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்வேன் எனச் சொல்லிச் சென்றவர் வருடங்கள் கடந்து முல்லைத்தீவு வந்தபோது அது கொள்ளையர்களின் வெறிக்கு வீழ்ந்து கிடக்கிறது... இன்பவல்லி மட்டுமல்ல... அங்கிருந்த மக்கள் யாருமே இல்லை.

சின்னப்பழுவேட்டயரின் மகளை மதுராந்தகர் மனமுடித்திருந்தாலும் அவளுக்கு பட்டத்து ராணியாகும் வாய்ப்பு இல்லை.... சரி அவளது குழந்தை நாளை அரசாளுவான் என்றால் அதற்கும் வழியில்லை... குழந்தையே இல்லை.... இதனால் பழுவேட்டயர்கள் வம்சம் சோழ ராஜ்ஜியத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும் சின்னப்பழுவேட்டையர் தன் அரவணைப்பில் வளரும் பெரியபழுவேட்டையரின் மகளான பட்டவன்மாதேவியை அடுத்து அரசணையில் ஏறப்போறவருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அடுத்தது யார் மதுராந்தகனின் மகன் மதுரனா...? அருண்மொழிவர்மனா...? எனத் திண்டாடி... மதுரன்தான் அடுத்து அரசாளவேண்டும் என்று தூபமிட, பட்டவன்மாதேவியோ மதுரனை விரும்பி பின்னர் சிற்றப்பனின் ஆசைக்கு இணங்க, ராஜராஜனை விரும்புவதா..?வானதிக்கு துரோகம் செய்யலாமா...?  என்றெல்லாம் யோசிக்கிறாள்.

தனிநாடு வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் பல்லவ வம்சத்தை நிலைநாட்ட, பல்லவக் கொடி பறக்கவிட ஆசைப்பட்டு பார்த்திபேந்திரன் படைகளைத் திரட்ட, வல்லவரையன் தவறிழைக்காதவன்... நாம்தான் பார்த்திபேந்திரன் சொல்லைக் கேட்டு தவறிழைத்து விட்டோம் என்பதை அறிந்து சிறையிலிருந்து வந்தியத்தேவனை வெளியில் கொண்டு வரும் சின்னப்பழுவேட்டையர் தானே முன்னின்று பார்த்திபேந்திரனுடன் மோதுகிறார். பார்த்திபேந்திரன் இறக்க, பழுவேட்டையர் காயமடைந்து மரணத் தருவாயில் தன் மகளைக் கட்டிக் கொண்டு பட்டத்து அரசியாக்க வேண்டும் எனச் சத்தியம் வாங்கி இறக்க, பட்டவன் மாதேவியை கரம் பிடிக்க வேண்டிய சூழல்... வானதியின் நிலை என்ன...? இன்பவல்லி என்ன ஆனாள்...? பட்டவன் மாதேவி பட்டத்து அரசியானாளா...? எனப் பயணப்படும் கதையில் நந்திபுரத்துக்கும் தஞ்சைக்கும் குந்தவை மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையே ஆதித்த கரிகாலனைக் கொன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் தலைமையில் சோழப் பேரரசின் முக்கியத் தலைகளை வீழ்த்த கங்கணம் கட்டித் திரிகின்றனர். வீரபாண்டியனின் மனைவியா... மகளா என்பதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி (இங்கு இவரை வெளியில் காட்டாமல் திரைக்குள் வைத்துவிடுகிறார் அதனால் பெயர் எதுவுமில்லை... தலைவி என்பதாய்ச் சொல்கிறார்... இறுதியில் அருண்மொழிவர்மனை சகோதரா என அழைத்து ஓலை அனுப்புகிறாள்... அப்படி எனில் சுந்தரச்சோழர் காதல் கொண்ட ஊமைராணியின் மகளாகவும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது) வளர்க்கும் பாண்டியனின் மகன் அமரபுஜங்கன் தலைமையின் கீழ் காட்டுக்குள் அதற்கான நேரத்தை எதிர்பார்த்து தங்களைச் தாயார் செய்கிறார்கள். இதற்காக சேரனின் உதவி நாடிப் போகும் அமரபுஜங்கனுக்கு சேரனின் மகள் மீது காதல்... ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவுவதாய் ஒரு காளமுகர் வருகிறார். அவரை ராஜராஜன் பார்த்துப் பேசும் போதே நமக்கு யாரென்று தெரிந்து விடுவதால் அந்த சஸ்பென்ஸ் உடையும் போது இதுதான் தெரியுமே என்றுதான் தோன்றுகிறது. அதேபோல் இன்பவல்லிக்கு சோழப் பேரசுக்கும் தொடர்பு இருப்பதாய் சொல்லி, அவளது அப்பா குறித்துப் பேசி... அவர்தான் இன்பவல்லியை குழந்தாய் என அரவணைத்து சோழ தேசத்தில் பாதுகாக்கிறார்... ஆனால் இறுதிவரை அவர்தான் அவளின் அப்பா எனச் சொல்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை... நந்திபுரத்து நாயகி யார்...? குந்தவைதானே... எனவே கதை அவரைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் பொன்னியின் செல்வன் போல் முடிச்சுக்களும் அதை அவிழ்த்துப் பயணிக்கும் அழகும் இதில் இல்லை.

உடையாரின் பாலகுமாரன் கிளைக்கதைகளால் படிப்பவர்களுக்கு அயற்சியைக் கொடுத்தார் என்றால் இதில் விக்கிரமன் இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைச் சொல்லிச் செல்வது விறுவிறுப்புக்குத் தடை ஏற்படுத்துகிறது. இது இதில் மட்டுமில்லை... அவரின் கதைகளில் எல்லாம் இப்படித்தான் கதை சொல்வார் என்பதை மற்றொரு கதையான தெற்குவாசல் மோகினி வாசிக்கும் போது அறிய முடிந்தது. 

உடையாரில் வரும் பஞ்சவன் மாதேவி, சிதம்பரத்தில் நடனமாடும் தேவரடியாள் வகுப்பைச் சார்ந்த பெண் என்றும் அவரை இராஜராஜன் பார்த்து, சிநேகித்து திருமணம் செய்து கொள்ள, பட்டத்து இளவரசி பட்டவன் மாதேவி, உள்ளம் கவர்ந்த வானதி (வானவன் மாதேவி) இருந்தாலும் அரசியலில் இராஜராஜனுக்கு பக்க பலமாக இருந்தவர் பஞ்சவன்மாதேவிதான்... தஞ்சைக் கோவிலில் இருக்கும் 107 சிவ நடன சிற்பங்களுக்கு மாதிரியாக நின்றவர் பஞ்சவன்மாதேவிதான்... அவருக்கு இராஜேந்திர சோழன் ஒரு கோவில் கட்டினான் அதற்கு கல்வெட்டுச் சாட்சியமும் கோவிலும் இருக்கு என்று சொல்லியிருப்பார். அவரைத்தான் விக்கிரமன் இன்பவல்லி எனச் சொல்கிறார் என்பதை கதையின் போக்கில் அறியலாம்.

ஆரம்பம் முதல் வந்தியத்தேவனை சிறையில் வைத்து... பின்னரும் குந்தவையுடன் சேராமல் நம்மைத் தவிக்க வைத்து... இருவரும் நந்திபுரத்தில் தங்கியிருக்க, சரி இனி திருமணம்தான் என்று நினைக்கும் போது ரவிதாசனிடம் மாட்ட வைத்து... எப்படியோ இறுதியில் இருவரையும் உல்லாசப் படகில் ஏற்றி அனுப்பி வைத்துவிட நந்திபுரத்து நாயகி வானதியை இழந்து சுபமாய் முடிகிறது.

அருண்மொழிவர்மனை குந்தவை உள்ளிட்ட அனைவரும் அவர்... இவர்... என மரியாதையுடன் அழைப்பதாய் எழுதிய ஆசிரியர் கூட மரியாதையாய்த்தான் எழுதியிருக்கிறார். வந்தியத்தேவனை மட்டும் அவன் இவன் என்றே எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு இருக்கும் மரியாதை சிற்றரசர்களாக இருந்து... அதை இழந்த பரம்பரைக்கு இல்லை போலும்.

அது என்னவோ தெரியலை எல்லா வரலாற்றுப் புதினங்களிலும் கண்டவுடன் காதல் வந்துவிடுகிறது. உதவி கேட்டு சேரநாடு போகும் பாண்டியனுக்கு சேரன் மகள் மீது பார்த்த மாத்திரத்தில் காதல்... படை வீரன் சங்கரத்தேவனுக்கு தன் அன்னையின் தோழி மகளும் குந்தவையின் வேலைக்காரப் பெண்ணுமான சுமதி மீது பார்த்ததும் காதல்... மதுரனைப் பார்த்ததும் மயங்கும் பட்டவன்மாதேவி...  அருண்மொழிவர்மனைப் பார்த்த மாத்திரத்தில் இன்பவல்லிக்கு காதல்.... இவை எல்லாமே கதையின் சுவை கூட்ட மட்டுமே என்பதுதான் உண்மை... வரலாற்றில் மட்டுமல்ல.... இன்றைய வாழ்விலும் கூட தமிழ்பெண்கள் பார்த்த மாத்திரத்தில் வீழ்ந்து விடுவதில்லை... தமிழ் சினிமா இதில் விதிவிலக்கு.

சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்ட புதினங்களை வாசித்ததில் கல்கிதான் முதலிடத்தில் நிற்கிறார். அதற்கான காரணம் கல்கி கதையை அதன் போக்கில் அழகிய முடிச்சிட்டு அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்த்து... முன்னே பின்னே என்று அலையாமல் நேர்த்தியாய் நகர்த்தியமையால்தான் பொன்னியின் செல்வன் காலம் கடந்தும் கவர்ந்து இழுக்கிறது. பாலகுமாரனோ உடையாரில் தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் சொல்லியிருந்தாலும்... ஒற்றன் என்றால் ஒரு கதை... வேளாளன் என்றால் ஒரு கதை என ஒவ்வொன்றிற்கும் ஒரு கிளைக்கதை வைத்து பக்கங்களை நிரப்பி வாசிப்பில் அயற்சியை ஏற்படுத்திவிட்டார். அதானாலேயே உடையார் என்றால் பலர் காத தூரம் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.  விக்கிரமனோ எழுத்தில் கவர்ச்சி காட்டினார் என்றால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதோ... இல்லை ஒருவரைப் பற்றிய கதை பயணிக்கும் போதே அங்கு வருவதற்கு முன்னர் நிகழ்ந்ததைச் சொல்ல ஆரம்பித்து மீண்டும் நிகழ்காலப் புள்ளிக்கு வருகிறார். இது அழகாய் நகரும் தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்துவது போல ஆகிவிடுவதால் முன்னோக்கி பின்னோக்கி நகர்வதில் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. நரசிம்மாவோ மிகச் சிறப்பாய் கற்பனை செய்து தமிழ் சினிமாவை மிஞ்சும் விதமாக கதை அமைத்து... பொன்னியின் செல்வனுக்கு எதிர்மறையாய் களம் அமைத்து வாசித்தவரை இனி வாசிப்பே எனக் கேட்கவைத்து விட்டார்.

நந்திபுரத்து நாயகியில் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, மதுராந்தகர், பழுவேட்டையர், சம்புவரையர், மலையமான், இராஜராஜன், செம்பியன்மாதேவி, ரவிதாசன், பிரம்மராயர் என எல்லாரும் இருந்தும்... இராஜராஜன் கடல் கடந்து செல்வது முதல் இராஜேந்திரன் பிறப்பு வரை சென்றாலும் ஏனோ வாசிக்கும் ஆவலை அதிகம் தூண்டாமல் மெல்லத்தான் பயணிக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 2 நவம்பர், 2016

சினிமா : கொடி

கொடி....

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில்....

த்ரிஷா முதல் முறையாக வில்லியாய்...

Image result for கொடி விமர்சனம்

தன்னால் அடிமட்டத் தொண்டனாக மட்டுமே இருக்க முடிந்தது என்பதால் இரட்டையாப் பிறந்த  மகன்களில் ஒருவனை அரசியலில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல, பிறந்தது முதல்  அரசியல் பாலூற்றி வளர்க்கும் கருணாஸ், பாதரசக் கழிவு பிரச்சினையில் மகன் முன்னரே கட்சிக்காக தீக்குளித்துச் சாகிறார்.  மகன் அரசியலில் சாதித்தானா...? அவனுடன் பிறந்தவன் என்ன செய்தான்..? இவர்களுக்கு ஒரு காதல்... இல்லை இரண்டு இருக்கணுமே... அது என்னாச்சு...? என்பதை அரசியல் கலந்து அழகாக நகர்த்த அதிரடி அரசியல் இல்லாவிட்டாலும்.... சீமானின் பேச்சு போல் உணர்ச்சிகரமாக இல்லாவிட்டாலும்... வெற்றி மாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் பறக்கவிட்ட கொடி... ரெக்கை கட்டி பறக்கலைன்னாலும் நல்லாவே பறந்திருக்கு.

படத்தின் ஆணி வேர் த்ரிஷா கதாபாத்திரம்தான்... ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கனத்தை தாங்க முடியாமல் தாங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். அரசியல் போதை எவ்வளவு மோசமானது எனபது அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டப்பட்டுள்ளது... பதவி ஆசைக்காக காதலைக் காவு கொடுக்கிறார்... அதற்கான விலையை தமிழ் சினிமாவுக்கே உரிய பார்முலாவில் இறுதியில் வாங்கிக் கொள்கிறார். நல்லாத்தான் நடிச்சிருக்கிறார் என்றாலும் கம்பியை எடுத்து காளியை அடிக்கும் இடத்தில் எல்லாம் பதட்டம் வராமல் சிரிப்புத்தான் வருது... ஆக்ரோஷத்தைக் காட்டி நடிக்க முயன்றிருக்கிறார்... சோடை போகவில்லை என்பதுடன் அவரின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம்.

தனுஷ் ரெட்டையாய்... கொடியும் அன்புமாக பின்னி பெடலெடுத்து இருக்கிறார். வித்தியாசமான கெட்டெப் எல்லாம் போட்டு இரட்டையரை வித்தியாசப்படுத்த முயற்சிக்கவில்லை.... நம்ம விஜய் மாதிரி ரொம்ப சிம்பிளா தாடி வச்சி பொட்டு வச்சா கொடி, தாடியில்லாமல் சின்னப்பய மாதிரி வந்தா அன்பு... அம்புட்டுத்தான்... அன்பு பயந்தாங்கொள்ளி... அம்மாக்கிட்ட வீராப்பாய் பேசிட்டு போயி பொம்பளப்புள்ளக்கிட்ட அடி வாங்கிட்டு வர்ற சராசரியான இளைஞன்... கொடி நெஞ்சை நிமிர்த்தி... உடல்மொழி... வசனத்தில் மிரட்டல் விடும் நம்ம ஊர் அரசியல் தொண்டன் ... இரண்டு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கிறார்.

Image result for கொடி விமர்சனம்தனுஷைப் பொறுத்தவரை பிளாப் படம் என்றாலும் சிறப்பாய் நடிக்கும் நடிகன்... அப்படிப்பட்டவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கலான நடிப்பைக் கொடுப்பார் என்பது எல்லாரும் அறிந்ததே... இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதுவும் த்ரிஷா உடனாக காதல் காட்சிகள் செம. விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவுக்கு ஜோடியாய் எப்படி ஒட்டிக் கொண்டாரோ அதேபோல் இதில் தனுஷூடன் த்ரிஷா.... கோபம்... சண்டை... அதன் பின் காதல் என கலக்கியிருக்கிறார்.

அன்பாக வரும் தனுஷ் டீயில் முட்டையை நனைத்து விற்கும் அனுபமா பரமேஸ்வரன் பின்னால் சுற்றுகிறார். 'ஏய் குழலி' பாட்டில் அனுபமா தனுஷை மட்டுமல்ல நம்மையும் சாய்த்துவிடுகிறார். அனுபமாவுக்கு அளவான நடிப்பு. அன்பு கொடியாக மாற வேண்டிய சூழலில் இவர்களின் காதலும் காணமல் போய்விடுகிறது.

எதிர் எதிர் கட்சியில் இருந்தாலும் திருச்சி சிவா - சசிகலா புஷ்பா போல அந்நியோன்யம் காட்டி யாருக்கும் தெரியாமல் காதலிப்பது சுவராஸ்யம்... இருவரும் திட்டிக் கொள்வதும்... கட்டிக் கொள்வதுமாய் நகரும் கதையில் அரசியலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதை அறிந்த நமக்கு அரசியல் ஆசை... பதவி வெறி காதலையும் கொல்லும் என்பது வித்தியாசமாய்த் தெரிகிறது. காதலைக் கொல்லும் இடம் நமக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை முன்னரே தெரிந்து கொள்ள வைப்பதால் சுவராஸ்யம் அற்றுப் போகிறது.

காதல் களியாட்டம் தெரிந்து கட்சிக்குள் செல்வாக்கு இழந்து பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் வந்ததும் சசிகலா புஷ்பா போலில்லாமல் அடுத்தடுத்த காட்சிகளில் கட்சிக்குள்ளேயே காய் நகர்த்தி ராஜ்யசபா எம்.பி. ஆகிவிடுகிறார் த்ரிஷா.

இரட்டையரில் ஒருவர் இறந்தால் மற்றொருவருக்கு இருவரின் குணநலன்களும் வரும் என்பதை டாக்டரை வைத்து படம் பார்ப்பவர்களுக்கு சொல்லி விடுகிறார்கள் என்றாலும் அன்பு தாடி மீசைக்கு மாறி நெஞ்சைத் தூக்கி நடப்பது சினிமாத்தனம்.

Image result for கொடி அனுபமா

சிங்கமுத்து சிரிக்க வைக்கிறார். சரண்யா எப்பவும் போல் நல்ல அம்மாவாக வருகிறார். கொடியின் நண்பனாக வரும் காளி சிறப்பாக நடித்திருக்கிறார்.

எப்படி காதலைக் கொல்லும் இடம் நமக்கு முன்னரே இப்படித்தான் ஆகும் எனத் தோன்றுகிறதோ அப்படித்தான் இறுதிக் காட்சியும்... அதிலும் சுவராஸ்யம் கம்மியே. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் சித்ராவின் குரலில் வரும் 'ஆராரோ' பாடலும்  'ஏய் குழலி'யும் ரொம்ப ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் அருமை... எஸ். வெங்கடேஷ் ஓளிப்பதிவில் இரட்டையர் காட்சிகள் கலக்கல்.

அரசியல் போதை பொல்லாததுதான்... இல்லைன்னா இன்னைக்கு அம்புட்டுப் பயலும் அப்போலோ வாசல்ல உருள மாட்டானுல்ல... நம்ம பஞ்சாயத்து பிரசிடெண்ட் அடுத்த தேர்தலில் ஜெயிக்க சொத்துப் பத்தை வித்து களமிறங்க மாட்டானுல்ல... அதைத்தான் இதில் காட்டியிருக்காங்க... சின்ன வயசுல இருந்து அரசியல் போதையுள்ள பெண் அதற்காக எதையும் செய்வாள்ன்னு சொல்லியிருக்காங்க..

கொடி பரபரப்பான அரசியல் வசனங்களைச் சுமந்து பறக்கவில்லை... பரபரப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பாதரசக் கழிவு குறித்துக் கூட பட்டும் படாமலுமே சொல்லப்படுகிறது. பாதரசக் கழிவால் பாதிக்கப்பட்ட குழந்தை இறக்கும் போது பரிதாபப்படத் தோன்றுகிறது. அதன் பின்னர் அரசியல் சதிராட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தி அடக்கியே வாசித்திருக்கிறார்கள். இன்னும் தீவிரமாக அதைக் கையாண்டிருக்கலாம்தான் என்றாலும் இன்றைய அரசியல்வாதிகளிடம் சினிமாக் கலைஞர்களுக்கும் பயம் உண்டல்லவா... போட்ட காசை எடுக்கணுமே... அதுக்கு படம் வெளிவரணுமே... அதனால தொட்டுக்கோ தொடச்சிக்கோன்னு அதை எடுத்துக்கிட்டு காதல், காவு, மிரட்டல் என பயணிச்சிட்டாங்க...

இணையத்தில் பலர் சொல்வது போல் கொடி கொல மாஸூம் இல்லை... அட்டர் பிளாப்பும் இல்லை... வித்தியாசமான கதைக்களம்... விறுவிறுப்பான நகர்த்தலில் நல்லாவே  பறக்கிறது.  படம் பார்க்கலாம் ரகம்தான்.

-'பரிவை' சே.குமார்.