மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 2 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 18

முந்தைய பதிவுகளைப் படிக்க...


******
18. மனமெங்கும் அவளின் வாசம்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவளைப் பார்த்துப் பேசி சமாதானமாக அவனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கிறாள்.

இனி...

"வாடா..மண்டையெல்லாம் ஒடச்சிக்கிட்டு வந்தியாமே... இப்ப எப்படியிருக்கு? இப்படி உக்காரு... " என்றபடி கயிற்றுக் கட்டிலில் எழுந்து அமர்ந்தான் சேகர்.

"பரவாயில்லடா... விழுந்ததுதான்..."

"இங்க பாரு... எங்க பயலுக உங்க காலேசுல படிக்கிறாய்ங்க... வெவரமா புட்டுப்புட்டு வச்சிட்டாய்ங்க... ஆமா அந்தாளு நீ சொன்ன ரவுடிதானே... உன்னோட ஆளோட அண்ணன்னதும் நீ ஹீரோவாயிட்டியாக்கும்... நடக்கட்டும்... நடக்கட்டும்..."

"உனக்குச் சொல்லிட்டாய்ங்களா.... அட கண்ணு முன்னாடி ஒருத்தனை அடிக்கிறாய்ங்க... பாத்துக்கிட்டு இருக்கச் சொல்லுறியா... அது எதிரியா இருந்தாலும் காப்பாத்தணுங்கிறதுதான் என்னோட எண்ணம்..."

"ம்.... இப்ப எல்லாம் பேசுவீங்கடா... பள்ளிக்கொடத்துல படிக்கயில பாண்டி என்னைய பதம் பாக்கும் போது பாத்துக்கிட்டு நின்னவந்தானே நீயி... இன்னைக்கு வெவரமா பேசுறே... எல்லாம் பூமா பித்தம்டா..."

"பூமாவா... இது யாருடா புதுசா..?"

"அவ பூமா இல்லையா... இல்லையே... பூலதானே ஆரம்பிக்கும்... ம்... பூலாந்தேவிதானே..?"

"ஏன்டா நீயா எதாவது பேரை சொல்லிக்கிட்டு... அவங்க பேரு புவனா..."

"ம்... இப்ப ஞாபகம் வந்திருச்சு... புவனாராம்... கரெக்ட்..."

"எதுக்குடா கத்துறே... அதுவும் ராம் வேற சேத்துக்கிட்டு... அத்தை வீட்லதானே..?"

"அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை.... அதான் படுத்திருக்காங்க..."

"உள்ள சட்டி முட்டி உருட்டுற சத்தம் கேக்குது..."

"அதுவா எங்க வீட்டு பூனை வந்திருக்கு... அது வந்த சத்தமாத்தான் இருக்கும்..."

"யார்டா... அது... உங்க வீட்டுப் பூனை..."

"ம்... என்னையத்தான்டா பூனையின்னு நக்கல் பண்ணுறான்... இவரு சிங்கம்...." என்றபடி தண்ணீர் பிடிக்க வெறுங்குடத்தை கையில் வைத்தபடி உள்ளிருந்து வந்தாள் காவேரி.

"அடேய் இதைத்தான் பூனையின்னியா..."

"அப்புறம் இது பூனையில்லாம புலியா... குந்தானி..."

"இங்கருடா... குந்தானியின்னு சொன்னியன்னா பாத்துக்க.... " என்று விரலை உயர்த்திக் காட்டியவள் "என்னடா பொம்பளப்புள்ள பேரு அடிபடுது... ஊருக்குள்ள இந்தப் பூனையும் பால்குடிக்குமான்னு இருக்கிறது... காலேசுக்குப் போனவுடனே எவளையாவது புடிச்சிரவேண்டியது.... எவடா அவ..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... எங்கூட படிக்கிற பொண்ணைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்... நீ எதாவது  நெனச்சுக்காதே சும்மா..."

"எங்கக்கிட்டயா... என்னைக்கா இருந்தாலும் தெரியாமயா போயிடும்..."

'இங்க பாரு உனக்கு ஒருத்தனை பட்டாப்போட்டு வச்சிருக்காய்ங்க... மத்தவங்களை பத்தி யோசிக்காம இவனை வளைச்சிப் போடுற வழியைப் பாரு... போ அடிபைப்ல உன்னோட நண்பிகள் கூடியிருப்பாளுக..."

"எங்களுக்குத் தெரியும்... எப்பப்பாரு ரெண்டுபேருக்கும் இதுதான் பொழப்பு..." என்றபடி நகர

"ஆமா குந்தானிக்கு எங்களை வேவு பாக்கிறதுதான் வேலை... போடி..."

காவேரி கீழே கிடந்தை கல்லை எடுத்து அவர்களை நோக்கி எறிந்தாள்.

:ஏன்டா... அதுகிட்ட போயி.... எதுக்கு அதை குந்தானியின்னு கேலி பண்ணுறே... பாவன்டா அது... ரொம்ப நல்ல பொண்ணு..."

"அடேய் இப்ப சர்ட்டிபிகேட் கேட்டாங்களா... சரி விடு...அவளுக்கிட்ட நான் எதாவது வம்பிழுக்கணுமின்னு அவளோ வழியக்க வருவா... இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்டா... உன் மேட்டருக்கு வா... எதாவது இம்ப்ரூவ்மெண்ட்..."

"எதுல..?"

"ம்.... தெரியாத மாதிரி கேக்கிறே...? அதான்டா உன்னோட காதல்..."

"ஏன்டா நீ வேற... அவங்க எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாங்க... என்னோட கிளாஸ்மெட்டுக்கிட்ட பேசினாலே கோபம் வருது... சும்மா பிரண்டா இருக்கும் போதே இப்படின்னா... இவங்களை காதலிச்சா அம்புட்டுத்தான்...."

"டேய்... டேய்... எனக்கு சின்ன வயசுலயே காதுக குத்திட்டாய்ங்கடா... நீ திரும்பக் குத்தாதே...அவளைப் பத்திப் பேசினாலே உன்னோட முகம் பிரகாசமாயிடுதே... வவ் இல்லையின்னு மட்டும் சொல்லாதடா... எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்... உன்கிட்ட உரிமையோட கோபப்படுறான்னா அவ உன்னைய சின்சியரா லவ் பண்ணுறாடா... சீக்கிரமே ட்ரீட் வைக்கிற மாதிரி இருக்கும்.."

"சும்மா இருடா... எங்க குடும்ப சூழலுக்கு நான் படிச்சி அம்மாவோட கனவுகளை எல்லாம் நிறைவேத்தனும்... எங்களுக்காக கஷ்டப்படுற எங்கண்ணனை கடைசி வரைக்கும் கஷ்டப்படாம வச்சிக்கனும். என்னை மாதிரி ஆளுக்கு காதல் கீதல் எல்லாம் சரிவராது..." மனசுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று  நினைத்தாலும் வார்த்தைகளில் வாழ்க்கையை கொண்டு வந்தான்.

"உன்னோட எண்ணமெல்லாம் ஓகேதான்... அதுக்காக காதல் இருக்கக்கூடாதுன்னு எவன் சொன்னான்... அந்தப் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்... நல்லாப் படிக்கிற பொண்ணு... கண்டிப்பா உனக்கு துணையா நிப்பா... என்ன காலேசுல அவ அண்ணனால பிரச்சினை வந்தாத்தான்... மத்தபடி மூணு வருசம் ஜாலியாப் போயிரும்... வெளிய வந்தப்புறம்தான் ஜாதி அது இதுன்னு நிறைய சந்திக்க வேண்டியிருக்கும்... ஆனா அவ உன்னைய விரும்ப ஆரம்பிச்சிட்டாங்கிறது மட்டும் நீ சொல்றதுல இருந்து தெரியுது. நீ விலகினாலும் அவ உன்னை விடமாட்டாடா..."

".........." ஒன்றும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். தண்ணீர் குடத்துடன் திரும்பிய காவேரி, "இன்னும் பொம்பளப்புள்ளங்க பேச்சுத்தானா... உங்கம்மா அங்கதான் இருக்கானான்னு கேட்டுச்சுப்பா.... சீக்கிரம் போ... இவங்கூட பேசிக்கிட்டு இருந்தா பொம்பளப்புள்ளங்களப் பத்தித்தான் பேசுவான்... நீயும் இதுகூட சேர்ந்து கெட்டுப் போயிடாதே..."

"ஆமாடா... ஆத்தா ஔவையாரு சொல்லுறா கேட்டுக்க... போடி குந்தானி..." என்ற சேகர், "சரிடா... அத்தை கோபமாயிடாம சீக்கிரம் போ.... நாளைக்குப் பேசுவோம்..."

"ஆமா... ரொம்ப முக்கியமாப் பேசப்போறாய்ங்க... போங்கடா..." என்றபடி காவேரி உள்ளே போக, ராம்கி அங்கிருந்து வீடு நோக்கிக் கிளம்பினான். சேகருடன் பேசிய பின்னர் அவனை புவனா அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கதையின் சுருக்கம் நன்றாக உள்ளது...... கதை பின்னிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை. தொடர்கிறேன் ஐயா

Unknown சொன்னது…

அருமையான,சுவாரஸ்யமான தொடர்,நன்று!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜெயக்குமார் அண்ணாச்சி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.