மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 ஜூலை, 2012

சிறு பூக்கள்..!
சாமிக்குப் படையலாய்
கறியும் சாராயமும்...
கும்பிட்ட மனங்களுக்கு
படையலே சாமியாய்..!

*************************

தவளைகள் தாலாட்டும்
மழை இரவு...
உறங்காமல் தவிக்கும்
உன் நினைவுகள்..!

*************************

சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!

*************************

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!

*************************

தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 10 ஜூலை, 2012

விவசாயியின் வேதனைவாய்க்கா வரப்பு பாக்கயிலே
வயிரெல்லாம் எரியுதடா..!
கருவ மண்டிக் கிடக்கிறது
காண மனசு சகிக்கலைடா..!

நீர் நிறையும் கண்மாயும்
வறண்டு போய் கிடக்குதடா..!
வானம் பார்த்த பூமி இப்போ
வனமாகிப் போச்சுதடா..!

மடை திறந்து தண்ணி
பாய்ச்ச மனசு நினைக்குதடா..!
சறுக்கை உடைப்படச்ச காலம்
கரையேறிப் போயாச்சுடா..!

களையெடுப்பு கதிரறுப்பு
காண விருப்பமடா..!
உரம் போட்டு மருந்தடிக்க
உள்ளம் மறுகுதடா..!

நெல் குவிந்த களத்து மேடு
கரைஞ்சுதான் போச்சுடா..!
வைக்கோல்போர் இருந்த இடம்
கருவைக்கு வீடாச்சுடா..!

நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..!
நெல் அவிக்கும் அண்டாவும்
பரணில் தூங்குதடா..!

புண்ணாக்குத் தண்ணி சுமந்த
தொட்டி குப்புறக் கிடக்குதடா..!
கோழிகள் குலவிய கூடும்
வெறுமையை சுமக்குதடா..!

உழவுக்கு காளைமாடு...
பாலுக்கு பசுவமாடு...
எப்போதும் ரெண்டெருமை...
விளையாடும் வெள்ளாடு...
எல்லாம் வளர்த்த கசாலை
இடிந்து போய் நிக்குதடா..!

எங்கயும் போகாம
இங்கயே இருக்கமடா..!
எங்க ஊரு எங்க மண்ணு
எங்களுக்கு உலகமடா..!

எங்களுக்கும் எம்எல்ஏ...
எம்பி எல்லாம் இருக்காங்கடா...
கண்ணுலதான் காணவில்லை
களவாணிப் பயலுகளை..!

முன்ன மழையால விவசாயம்
அழிஞ்சப்போ வருவாங்கடா..!
கண் துடைப்பு காசையும்
எங்களுக்குத் தருவாங்கடா..!

இப்ப இங்க விளையவில்லை
அதனால அவங்க வரலையடா..!
எப்போ ஓட்டுத் தேவையோ
அப்போ ஓடி வருவாங்கடா..!

விளஞ்ச பூமி வெடிப்பு போல
விரிஞ்சு கிடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!

-'பரிவை' சே.குமார்.

படம் வழங்கிய கூகிளுக்கு நன்றி.

செவ்வாய், 3 ஜூலை, 2012

அதீதத்தில் "தங்க விழுதுகள்" - சிறுகதை

“என்னப்பா ஆகுற காரியத்தப் பாக்க வேண்டியதுதானே… அதுதான் வர வேண்டிய சொந்த பந்தமெல்லாம் வந்தாச்சில்ல… அப்புறம் என்ன… ஏம்ப்பா… சொர்ண… நீ என்ன சொல்றே…” என்றபடி சொர்ணம் அருகில் வந்தார் சுதர்சனம்

“செய்ய வேண்டிய காரியத்தை செஞ்சுதானே ஆகணும்… பயலுககிட்ட கேளுங்க வேற யாரும் வரவேண்டியது இருக்கான்னு…” அருகில் நின்ற சின்னையாவிடம் “ஏப்பா… வெளிய நிக்கிற குமரேசனக் கூப்பிடு…” என்றார்.

குமரேசன் சோகம் தாங்கிய முகத்துடன் அவர் அருகில் வந்து “என்ன மாமா…” என்றான்.

“என்ன மாப்ளே… யாரும் வரணுமா… நேரமாகுதுல்ல ஆக வேண்டியதப் பாத்தாத்தானே இருட்டுறதுக்குள்ள முடிக்க முடியும்…”

“பாக்கலாம் மாமா… யாரும் வரவேண்டியதில்லை…”

“சின்னவன் எங்கே…?”

“வெளியிலதான் இருக்கான்…”

“அவன கூப்பிடு”

“நீங்கதானே கூப்பிடுங்க… நா அவங்கிட்ட பேசுறதில்ல மாமா…”

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தன் பேசாம இருந்தா எப்படிப்பா… மறுபடியுமா பொறக்கப் போறீங்க…”

“மாமா… அவங்கிட்ட பேச என்ன இருக்கு… நானும்தான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்… கேட்டா ஒண்ணுமே கொடுக்கலைம்பான்… நீங்களே அவங்கிட்ட கேட்டுட்டு ஆக வேண்டியதப் பாருங்க…”

“சரி அதெல்லாம் இப்ப எதுக்கு… அதை பேச நேரம் காலம் இருக்குப்பா…” என்றவர் வெளியே வந்து கதிரேசனிடம் “என்ன கதிரேசா… உனக்கும யாரும் வரவேண்டியது இருக்கா… இல்ல ஆக வேண்டியதைப் பாக்கலாமா…”

“பாக்கலாம் மாமா… அதுக்கு முன்னாடி கொஞ்சம் பைசல் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்னப்பா பைசல் பண்ணனும்?”

“இங்க பாருங்க ஆத்தாவுக்கு இம்புட்டு நாளா நாந்தான் பாத்தேன்… மூத்தவன் சல்லிக்காசு தரலை…”

“சரிப்பா… அதுக்கு என்ன இப்போ… அதை பேசுறதுக்கு இது நேரமில்லைப்பா… எதா இருந்தாலும் காரியம் முடிஞ்சதும் நாலு பேரு உக்காந்து பேசலாம்ப்பா…”

“இல்ல மாமா… இதுவரைக்கும் ஆத்தா எப்படியிருக்கான்னு கூட கேக்காதவன் இன்னைக்கு வந்துக்கிட்டு வாடிப்பட்டி மேளத்த வச்சி பேரெடுத்துட்டுப் போகலாமுன்னு பாக்கிறான்… இப்பவே அவனையும் வச்சி எல்லாத்தையும் பேசிடுறது நல்லது… எம்பொண்டாட்டி மூத்தரம் பீயெல்லாம் அள்ளி குளிப்பாட்டி பாத்துக்கிட்டா இன்னைக்கு மூத்தவ பவுசா வந்து தலமாட்டுல உக்காந்து அழுவுறா… எல்லாரும் பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க…”

“அவந்தான் பாக்கலை… உன்னய பெத்த மாதிரித்தானே அவனையும் பெத்தா… பெத்தவங்களுக்கு பாக்க எல்லாரும் கொடுப்பினை இருப்பதில்லை… அதுக்கு நீ சந்தோசப்படணும்ப்பா… சரி வா… நீர்மாலை எடுக்கப் போகணும்… காரியம் முடிஞ்சதும் நானே எல்லாத்தையும் பேசி சரி பண்ணுறேன்…”

“இல்ல மாமா… நாளைக்கி பேசலாம்ப்பான்னு சொல்லுவீங்க… வேல முடிஞ்சா எல்லாரும் போயிருவீங்க… எனக்கு இப்பவே பேசணும்…”

“என்னப்பா நீ… இங்க பாரு நாலு சனம் வந்திருக்கயில வரவு செலவப் பத்தி பேசினா யாருக்கு அசிங்கம்… உங்க ரெண்டு பேருக்கும் அசிங்கமாத் தெரியலைன்னாலும் பெத்த உசிரு ரெண்டுக்கும் அசிங்கமில்லையா… பெத்தவ பொயிட்டா… உங்கப்பன உசிடரோட கொல்லுற மாதிரி இல்லையா… நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.”

அவர் அப்படி சொன்னதும் கதிரேசன் ஒன்றும் சொல்லாமல் அவருடன் சென்றான்.

ல்லாம் முடிந்து மூன்றாவது நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டு சென்றதும் சொர்ணத்துடன் சில சொந்தங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை காம்பைக் கிள்ளியபடி வந்த சுதர்சனம், “ஏம்ப்பா சொர்ணம், கதிரேசன் ஏதோ பைசல் பண்ணனுங்கிறான்…”

“என்னவாம் அவனுக்கு…” என்றார் நெற்றியை சுருக்கியபடி.

“உங்க ரெண்டு பேருக்கும் அவந்தான் இதுவரைக்கும் நல்லது கெட்டது பாத்திருக்கான்…”

“ஆமா… பெத்தவங்களுக்குத்தானே பாத்தான்…”

“ஆமா… ஆமா… இல்லேன்னு சொல்லலை… ஆத்தவோட நகையெல்லாம் அவனுக்கு வேணுங்கிறான்”

“….”

“என்னப்பா ஒண்ணும் பேசமாட்டேங்கிறே…?”

“அவரு என்ன சொல்றது. ஆத்தாவோட நகையை ரெண்டு பங்கா வைக்கணும்” என்றான் குமரேசன்.

“பாத்ததெல்லாம் நானு… பங்கு போட வந்திட்டிட்டாரு… பங்கு போட…” கோபமாக வார்த்தைகளை விட்டான் கதிரேசன்.

“நானும்தான் மாசா மாசம் பணம் அனுப்பியிருக்கேன்… இப்ப ரெண்டு நாளா எம்புட்டு செலவு தெரியுமா?”

“இப்ப பாத்தது ரெண்டு பேருக்கும் பாதி பாதிதானே… அதை கணக்குப் பண்ணி வாங்கிட்டுப் போயிடுவேயில்ல… அப்புறம் என்ன…”

“ஏம்ப்பா என்னது… பாசத்தை வெல பேசிக்கிட்டு… அதுக்கு சண்டை வேற போட்டுக்கிட்டு… உக்காருங்கடா… ” கோபமாக கத்திய சுதர்சனம், “இங்க பாரு சொர்ணம்… உம்பொண்டாட்டி நகையை நீயே ஒங்காலத்துக்கும் வச்சிக்க… நீ யாருக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறியோ… அவங்களுக்கு கொடுத்துக்க… இப்ப இருக்க சூழ்நிலையில இதுதான் நல்லது”

“வேணாம் சொர்ணம்… அவ கிடந்த கஷ்டப்படும் போது போய் சேரக்கூடாதான்னு நானே சத்தம் போட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு அவ இல்லாத உலகத்துல நா தனிச்சிருக்கணுமேன்னு நினைக்கும் போது… இப்ப நடக்கிறதைப் பார்க்கும் போதும் பேசாம அவ கூட போயிருக்கலாமோன்னு தோணுது. இதையெல்லாம் பாக்க வேண்டியது இல்லாம போயிருக்குமே…” பேசமுடியாமல் துண்டால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

“சரி விடு… அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… நாந்தான் பாப்பேன்… இல்ல நாந்தான் பாப்பேன்னு பாசத்தை பங்கு போட்டுக்கிட்டாங்கன்னா சந்தோஷப்படலாம்… சரி விடு… என்ன பண்ணலாம் அதை சொல்லு…”

“இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு… பொம்பளப்புள்ளைக்கு இனி இவங்க எதுவும் செய்ய மாட்டாங்க… அதனால அதுகிட்ட எதாவது ஒரு தங்கத்தை கொடுத்திடுப்பா”

“அதெப்படி முடியும்… அதுக்கெல்லாம் கொடுக்க முடியாது… நாளக்கி அவரு வாங்கி வச்சிருக்க கடனை அவ அடைக்க வருவளா… நாங்கதானே அடைக்கணும் ரெண்டு பங்கா மட்டும் வையிங்க மாமா” குமரேசன் வேகமாக பேசினான்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்… எங்க ஆத்தாவுட்டு நகையின்னு ஒண்ணு கொடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க… என்னத்தை செஞ்சிட்டிங்க…” என்று கத்தியவள், “ஒரு நகை கொடுக்க மனசில்ல… இவனுகளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு… இனி இவனுக கூட எனக்கு ஒட்டும் இல்ல… உறவும் இல்ல… நா இப்பவே போறேன்” என்று கிளம்ப… பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, “ஏய் இருக்க பிரச்சினை பத்ததுன்னு நீ வேற… சும்மா கத்தாம உள்ள போ…”

“ஆமா… இப்ப நா என்ன சொல்லிப்புட்டேன்…”

“போடின்னா… போ… நாலு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது வாய்க்கு வாய் பேசிக்கிட்டு… நீங்க பேசுங்க சித்தப்பா…”

“குமரேசா… நான் சொல்றதை கேளு… உனக்கு பசங்கதான்… சின்னவனுக்கு ரெண்டு பொம்பளப்புள்ளங்க இருக்கு… அதுக அப்பத்தாவுட்டு தங்கமுன்னு போட்டுட்டுப் போகட்டுமே… சின்னவங்கிட்ட செயினை கொடுப்போம்… அப்புறம் பொம்பளப்புள்ள… அதுக்கு இனி உங்க அப்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது… நீங்களும் இனி செய்வீங்கன்னு சொல்ல முடியாது அதனால அதுக்கிட்ட காப்பை கொடுக்கலாம்… ஆத்தாவிட்டு தங்கமுன்னு பொம்பளப்புள்ளக்கி கல்யாணம் பண்ணும் போது போடுமில்ல… உனக்கு மோதிரத்தை வச்சிக்க… என்ன குமரேசா…”

“அதுவும் எதுக்கு… அதையும் சின்னவனுக்கே கொடுங்க… நாங்க இனி நல்லது கெட்டது எதுக்கும் வரலை… ” கோபமானான் குமரேசன்.

“ஏய் என்னப்பா நீயி… இன்னும் ஒரு முடிவுக்கு வரலை… கேட்டதுக்கே இம்புட்டு கோபப்படுறே…”

“மாமா நா… ஆத்தாவுக்கு பாத்ததுக்காக நகையை கேக்கலை… அவன் பாக்கலையேங்கிற கோவத்துலதான் கேட்டேன்… அவங்கிட்டே கொடுத்திருங்க… எனக்கு வேண்டாம்” திடீரென கதிரேசன் நல்லவனாக மாறினான்.

“இல்லப்பா… பஞ்சாயத்துன்னு வந்திட்டா மூணு பேருக்கும்தான் கொடுக்கணும்… நீ காப்ப வச்சிக்க… பெரியவன் செயின எடுத்துக்கட்டும்… அக்காவுக்கு அந்த ரெண்டு மோதிரத்தையும் கொடுத்திடுங்க… என்ன சொர்ணம் நாங்க சொல்றது சரிதானே…”

சொர்ணம் பதில் சொல்லாமல் சிரித்தார்.

“என்னப்பா ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறே?”

“இல்ல… அவ இழுத்துக்கிட்டு கெடந்தப்போ இதுவரை பாத்த சின்னவன் பால ஊத்தியும் உயிரு போகலை… நா… பேரப்பய… எல்லாரும் ஊத்தியாச்சு…ம்… பாவி மனுசி போகமாட்டேனுட்டா… அப்ப நீதான் சொன்னே பெரியவனை நெனச்சுக்கிட்டே இருக்கு போல… அவன் பேரை சொல்லி ஊத்துங்கன்னு… அப்புறம் சின்னவன் நான் குமரேசன் வந்திருக்கேந்தான்னு….” பேசமுடியாமல் அடைத்த அழுகையை அடக்கிக் கொண்டு “வந்திருக்கேந்தான்னு ஊத்துனதும்தான் அந்த மூச்சி நின்னுச்சு… பாவி மனுசி பாசத்தை வச்சிக்கிட்டு தவிச்சா… ஆனா இதுக தங்கத்தைத்தானே பாக்குதுக… சுதர்சனம் அப்படியே என்னய மூணு பங்கா வக்கிறாகளா இல்ல யாராவது ஒருத்தர் எடுத்துக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுப்பா… அவ இல்லாத உலகத்துல அவதிப்படணுங்கிறது என் தலையெழுத்து… மகராசி கஷ்டப்பட்டாலும் நான் இருந்தேன் பாக்க… இப்ப எனக்கு இனி யாரு இருக்கா… கஷ்டப்படணுங்கிறது எந்தலையெழுத்து… அதை மாத்த முடியாதே…” உடைந்து அழுதார்.

பஞ்சாயத்து பேசியவர்கள் எல்லாரும் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தனர். அவரது வாரிசுகள் வாயடைத்துப் போயி நின்றனர்.

*************************

குறிப்பு : இந்தக் கதை ஜூலை-01 அதீதம் இதழில் வெளியாகி இருக்கிறது. எனது கதையை வெளியிட உதவிய  திருமதி.ராமலக்ஷ்மி அக்கா அவர்களுக்கும் நண்பர். எல்.கே உள்ளிட்ட அதீதம் குழுவினருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதீதத்தில் படிக்க... "தங்க விழுதுகள்" 

உங்கள் கருத்துக்களை இங்கும், மறவாமல் அதீதத்திலும் பதியுங்கள் உறவுகளே... கருத்துக்களே எனது ஆக்கங்களை செப்பனிடும் கருவி.

-’பரிவை’ சே.குமார்.

Thanks ----  Google (PHOTO)