மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 ஏப்ரல், 2017

15. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்பவர் நாமெல்லாம் அறிந்த, ஆன்மீக பதிவுகளில் முத்திரை பதிக்கும் அன்பின் ஐயா தஞ்சையம்பதி திருமிகு செல்வராஜூ அவர்கள். ஐயாவைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்... என்னிடம் அவ்வளவு இருக்கு அவரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும்... அபுதாபியில் சந்தித்த போது அவர் காட்டிய நேசம் என்றும் மறக்க முடியாது.

ஆன்மீகப் பதிவுகளை மிக விரிவாக, வரலாற்று விளக்கங்களுடன் அழகான படங்களுடன் வாசிக்கக் கொடுப்பவர். ஆன்மீகப் பதிவு மற்றுமின்றி எல்லா வகையான பதிவுகளிலும் சிக்ஸர் அடிப்பவர்.

ஒரு வலைப்பதிவரின் பதிவு பிடித்திருந்தால் அதற்கென தனிப்பதிவு எழுதுபவர். அப்படி எழுதக் கிடைத்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். ஆம் என்னோட நேசம் சுமந்த வானம்பாடி சிறுகதைக்கு தனிப்பதிவே எழுதினார்.

அபுதாபியில் சந்திக்கும் போது பல விஷயங்கள் ஐயா பேச... இடையிடையே கில்லர் அண்ணாவும் பேச... நான் எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஐயா சில பதிவுகளை இருவரோ மூவரோ பேசுவது போல் உரையாடல் நடையில் எழுதுவார். மிக அருமையாக இருக்கும்.

என்னோட சிறுகதைகள் ஐயாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இனி ஐயா உரையாடல் நடையில் சொல்வதை வாசிப்போமா...


நானும் உங்களுடன்..
***

ண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது
சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா
தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம்
குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத்தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது..

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா
பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி..
நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ... இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி...

இருக்கட்டுமே.. அதுல.. சினிமாவும் பார்க்கிறீங்க தானே!.. அதுல என்ன
குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாரே!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு
நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்...

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க
ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே
செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே
பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு
என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம்
இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!..

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி..
நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே
தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..

அப்பா அரசு ஊழியர் ஆனதால் வேறு சில ஊர்களில் வளர்ச்சியும் படிப்பும்!..

நீங்க என்ன படிச்சிருக்கீங்க?... அதுக்காக சத்தியம் தான் நான் படிச்ச
புத்தகம்!.. அப்படி..ன்னு எல்லாம் சொல்லக் கூடாது!...

நீ கேட்டதும் தான் நினைச்சுப் பார்க்கிறேன்!.. அதைத் தான் இது வரைக்கும்
படிச்சிருக்கேன்..ன்னு!..

அம்மா.. அவங்க தானே முதல்குரு!.. அந்தக் காலத்தில ஆனா.. ஆவன்னா.. அட்டை..
ந்னு இருக்கும்.. அதுல தான் குழந்தைகளுக்கு முதல்ல படிப்பு ஆரம்பமாகும்..

அட்டைக்கு ஒருபக்கம் உயிர் எழுத்துக்களும் மறுபக்கம் ஔவையார்
சொன்னாங்களே.. ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் - இதுங்கள்...ல சில வரிகளும்
இருக்கும்!..

ஆனா.. ஆவன்னா.. அட்டையை வெச்சிக்கிட்டு அம்மா சொல்லிக் கொடுத்த அதெல்லாம்
இன்னும் கூடவே வந்துகிட்டு இருக்கு!..

அறம் செய விரும்பு.. ஆறுவது சினம்!.. இயல்வது கரவேல்.. ஈவது விலக்கேல்!..
- இதெல்லாம் நீங்க கடைபிடிச்சிருக்கீங்களா?..

இந்த சினம் மட்டும் தான்.. ஆற மாட்டேங்குது!.. மகாகவி சொன்ன மாதிரி -
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா!.. - ன்னு
ஆகிடுது... மற்றதெல்லாம் இயன்ற வரைக்கும்...

அப்போ நீங்க தவறே செய்ததில்லையா?..

இல்லை... இளமையில கடல் கடந்து போன நாடு சிங்கப்பூர்.. அங்கே கண்டதே
காட்சி.. கொண்டதே கோலம்..ன்னு நடந்தவங்களுக்கு மத்தியில கற்பூரமா இருந்து
நாடு திரும்பியிருக்கின்றேன்...

அங்கே எப்படியும் இருந்திருக்கலாம்.. கேட்பார் என்று எவரும் இல்லை..
ஆனாலும் ஒரு நாளும் அறம் தவறியதே இல்லை... இன்னமும் அப்படித் தான்!..

அப்போ.. பொய்!..

மனமறிந்து சொன்னதில்லை..
ஆனாலும், சில உண்மைகளைச் சொல்லாமல் இருந்திருக்கிறேன்!...

ஏன்?..

ஒவ்வொரு திரைக்கும் மறுபக்கம் உண்டு தானே!.. தவிரவும் எல்லா உண்மைகளும்
எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியதில்லை!..

பொய் சொல்லத் தெரியாமல் உண்மையைச் சொன்னதால் குடும்பத்திற்குள் பிளவு
உண்டாகிப் போனது.. இன்று வரைக்கும் சரியாகவில்லை.. அது ஒன்றுதான் மிகப்
பெரிய வருத்தம்..

வருத்தப்படாதீங்க அண்ணே!.. எல்லாம் சரியாகி விடும்.. ஆனா இதெல்லாம் எப்படி!..

வாரியார் ஸ்வாமி, குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி... ன்னு..

இவங்கள்.. லாம் யாரு..ண்ணே?...

மக்களை நெறிப்படுத்தி வழிகாட்டிய பெரியவங்க...
அவங்க வாழ்ந்த காலத்தில வாழ்ந்தோம்...ங்கறது பெருமை..
அவங்க சொன்னதைக் கேட்டு நடந்தோம்...ங்கறது மகிழ்ச்சி...

அவங்கள்ளாம் என்ன சொன்னாங்க?..

அத்தனை திருக்குறள்..ல ஒன்றைக் கூட கடைப்பிடிக்க முடியாதா?.. - ன்னு கேட்டாங்க!..

மகாகவியும் சொல்றாரு..
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா!.. - அப்படின்னு!..

அதெல்லாம் மனசுல அப்படியே பசுமையா இருக்கு...

தவறு ஏதும் செய்யாம நாலு அடி எடுத்து வெச்சிட்டா..
அதுவே நல்ல வழி ஆகிடுது.. பிறகு அதில நாம போக வேண்டியதில்லை..
அந்த வழியே வழிகாட்டி ஆகி நம்மை அழைச்சிக்கிட்டு போயிடுது!...

இதச் சொன்னவங்க யாரு அண்ணே?..

தெரியாது... உங்கூட பேசிக்கிட்டு இருக்கறப்ப.. அதுவா நினைவுக்கு வருது...
யாராவது பெரியவங்க சொல்லியிருப்பாங்க!..

இதெல்லாம் சொல்றீங்க.. நீங்க படிச்சதைச் சொல்லவே இல்லையே?..

நான் படிச்சது புகுமுக வகுப்பு வரைக்கும் தான்!..

அப்படின்னா?..

இன்றைக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு...
அன்றைக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு..

அவ்வளவு தானா?.. அதுக்கு மேல ஏன் படிக்கலை?...

குடும்ப சூழ்நிலை.. அதற்கு மேல் இயலவில்லை... அப்பா மருத்துவப் பணியில்
இடைநிலை ஊழியர்... என்னுடன் இரண்டு தங்கைகள்.. இரண்டு தம்பியர்.. அன்புச்
செல்வங்களாக மாடு ஆடு கோழிகள்...

ஏன்..ண்ணே.. நீங்க படிச்ச படிப்புக்கு ஏதாவது ஒரு வேலையில சேர்ந்திருக்க
முடியாதா!..

ஆய்வக உதவியாளார் வேலைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில நேர்முகம்..
போனேனே!.. ஆனா, சுற்றியிருந்த அரசியல்வாதிகள் அது அதுக்கும் ஒரு விலையை
வெச்சிருந்தாங்க.. அன்பளிப்பு..ன்னு பேரு அதுக்கு..

நம்ம வசதிக்கு அன்பளிப்பு சீர்வரிசை அதெல்லாம் கொடுக்க முடியலை..
அடுத்தடுத்த ஆண்டுகள்..லயும் அப்படித்தான்... ஆனா அதிகமா இருந்தது!..

அப்புறம் என்ன..ண்ணே ஆச்சு!..

நான் முதல்..ல வேலைக்குப் போன  இடம் - மது கஷாய கடை!..
என்னை வந்து கூப்பிட்டாங்க.. நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. - ந்னு!..

மூனு மாசத்துல உரிமையாளர்களுக்குள்ள சண்டை.. மதுக்கடை கோவிந்தா!..

அதுக்கப்புறம் குடந்தையில் கிளினிக் ஒன்றில் வேலை.. அதுவும் ஆறு மாசந்தான்...

அதன் பிறகு தான் ஒரு பிடிப்பு ஏற்பட்டது...  தாமரை திரு. வை. முத்தையா
பிள்ளை - கிராம கர்ணம் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன்...

கிராம கணக்கு வழக்குகளைக் கையாளுவதற்கு தேர்வுகள் எழுதினேன்.. நில அளவை
பயிற்சியும் பத்திரங்கள் நகல் எழுத அனுமதியும் பெற்றேன்...

அப்போது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம்.. பணி நியமனம் கூடி வந்த
வேலையில் ஏதோ பிரச்னை.. அரசு முடிவெடுத்து கிராம கர்ணம் மற்றும்
பட்டாமணியர் வேலையையே ஒழித்துக் கட்டிவிட்டது...

தமிழகம் முழுவதற்கும் கிராம நிர்வாக அலுவலர் என்ற புதிய வேலையை உருவாக்கி
அதற்கொரு தேர்வு வைத்தார்கள்... அதிலும் நான் தேர்வு ஆனேன்.. திரும்பவும்
பணி நியமனம் வழங்குவதற்கு அன்பளிப்பு என்று கை நீண்டது...

மனம் வெறுத்துப் போனது.. கொடுக்க விரும்பாமல் வெளியேறினேன்..

அப்படி இப்படி என்று மாதங்கள் ஓடின...

அந்த வேளையில் தான் - சிங்கப்பூருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது..
அங்கே கப்பல் பட்டறையில் (Keppel ShipYard, Tuas, Singapore) நான்கு ஆண்டுகள்..

தங்கைக்கு நல்லபடியாக கல்யாணம்.. தம்பிகளும் மற்றொரு தங்கையும்
மேற்கொண்டு படித்தனர்...

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் மங்கல மேடை எதிர்கொண்டது..

இனிய இல்லறம்.. அன்பின் மகள்... மகன்...

அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்புக்காக பயிற்சி பெற்றபோது -
என்னதான் கோழி வளர்த்தாலும் பெரும் பண்ணைக்காரன் வைப்பது தான் விலை..
அதனால் நீங்களே கறிக் கடை வைத்துவிடுங்கள் - என்றார்கள்..

இது ஏதடா வம்பு!.. - என்று, அந்த எண்ணத்தை அப்போதே கை கழுவியாயிற்று..

அந்த சமயத்தில் தான் குவைத்தின் மீது ஈராக் படையெடுத்தது.. வளைகுடா
வானில் போர் மேகங்கள்..

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா பிற நாடுகளுடன் கூட்டணி போட்டுக் கொண்டு
ஈராக்கை விரட்டியடித்தது...

மீண்டும் குவைத் உருவாக்கப்பட்ட போது பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு வேலை
கிடைச்சது.. அவங்கள்.. ல நானும் ஒருவன்..

Catering Co., ஒன்றின் ஒப்பந்தத்தில் Waiter வேலை.. மருத்துவமனையில்
என்று அழைத்து வந்து ராணுவ பாசறைக்கு அனுப்புனாங்க!..

அடுத்த இரண்டு ஆண்டுகளில் -
இப்ராஹீம் கலீல் (லெபனான்) அப்துல்லா முகம்மது (கேரளம்) ன்னு நல்ல
மனசுக்காரங்களால - சரக்கறை பொறுப்பாளர்..ன்னு (Store Keeper) வேலை உயர்வு
ஆனது...

வாழ்வின் பொன்னான நாட்கள் அவை...

தொடர்ந்த வருஷங்களில் புதுசா வர்றவங்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையும்
சேர்ந்து கொண்டது..

கூடுதலாக சம்பள உயர்வு கேட்டப்போ புறக்கணிப்பு ஆயிடுச்சி..

நீங்க முன்னால சொன்னீங்களே அவங்க எல்லாம் உதவி செய்யலையா?..

அவங்க எல்லாம் வேற வேற இடங்களுக்குப் போய்ட்டாங்க..

புறக்கணிப்பு.. அலட்சியம்.. பிடிக்கலை.. அங்கிருந்து திரும்பி விட்டேன்..

தஞ்சைக்கு வந்ததும் கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் - ன்னு,
(DTP Center) பணியைத் தொடங்கினேன்...

குவைத்தில் Store Keeper ஆக வேலை செய்தபோது கணக்கு விவரங்களை கணினியில்
பதிவு செய்வதற்குத் தெரிந்திருந்தாலும்

முறையாக தட்டச்சு தெரியாது... இருந்தும் ஒருமணி நேரத்தில் செந்தமிழ்
எழுத்துருவைக் கற்றுக் கொண்டேன்...

தற்குறிப்பு தொடங்கி மாணவர் தம் ஆய்வேடுகள் வரை - நிறைவான பணி...

அப்போது தான் கரந்தை ஜெயக்குமார், அன்பின் ஹரிணி ஆகியோருடன் நட்பு மலர்ந்தது...

இருந்தாலும், தொடர்ந்த மின்வெட்டு வாழ்வைக் கெடுத்தது.. கடனும் சேர்ந்து கொண்டது...

என் முன்னோர் செய்த தவத்தால் மீண்டும் குவைத் அழைத்தது...
அதே Catering நிறுவனத்தில் மேற்பார்வையாளராக!...

இங்கு வந்த சில வருஷங்களில் மகளுக்குத் திருமணம்...
தற்போது அபுதாபியில் இனிய வாழ்க்கை..
மகன் MBA., முடித்து விட்டான்...

மகளையும் மருமகனையும் காண்பதற்காக அபுதாபிக்கு வந்தபோது தான்
அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களையும் குமார் அவர்களையும் சந்தித்த மகிழ்வு..

தம்பி.. என்ன தூக்கமா?..

என்ன..ண்ணே!.. இவ்வளவு தூரம் சொல்றீங்க.. தூங்குவேனா?.. மலைப்பா இருக்கு!...

என்னுடைய தந்தை சொல்லி - நான் கேட்காததாக ஒன்று மட்டும்!.

என்ன...ண்ணே.. அது!...

கல்லூரி முடித்ததும் தட்டச்சு பழகச் சொன்னார்.. அதில் விருப்பம் இல்லை..
அதைக் கேட்கவில்லை.. ஆனால், DTP Center வைத்த பிறகு ஆறு ஆண்டுகள் அதில்
தான் வாழ்க்கை...

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!.. என்று சும்மாவா சொன்னார்கள்!..

குவைத்தில் இருந்து தான் - தஞ்சையம்பதி மலர்ந்தது.. எத்தனை எத்தனை அன்பு
முகங்கள்.. ஆதரவுக் கரங்கள்.. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க
வேண்டும்...

உங்க வானத்தில வண்ணக் கிளிகள் ஏதும் பறக்கலையா!?..

அந்தக் காலத்தில் குடும்பத்தில் தலைப்பிள்ளைக்கு..
ஆணோ பெண்ணோ - அவர்களுக்கு..ன்னு சில கடமைகள்.. கட்டுப்பாடுகள்..

அதெல்லாம் மனசில நின்னதால - கிளியோ குருவியோ - ஒன்னும்  கூடு கட்டவில்லை...

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் -
எனக்கென்ற தர்மத்தை விட்டு விலகியதில்லை - என்றே நினைக்கின்றேன்...
அதனால் தான் - காலம் எனக்கொரு பெரிய பணியைத் தந்தது..

என்ன..ண்ணே.. அது!...

பழைமையான சிவாலயம் ஒன்றினை நல்ல உள்ளம் கொண்டோர் புதுப்பித்த வேளையில் -
மிக முக்கியமான பணி என்னை வந்தடைந்தது...

என் வாழ்வில் நான் பெற்ற பெரும்பேறு அது.. நல்லவிதமாக நிறைவேறியது..
கோயிலும் கும்பாபிஷேகம் கண்டு - மக்களின் வழிபாட்டில் உள்ளது...

இருந்தாலும் - ஒரு ஆசை.. இன்னும் நிறைய எழுதணும்..
நல்ல விஷயங்களைச் சொல்லணும்.. மக்களுக்குப் போய்ச் சேரணும்!..

அதுக்கெல்லாம் ஒரு குறைவும் இருக்காது.. பாருங்களேன்!..

சரி.. வா.. காபி குடிக்கலாம்!..

அப்போ... கதை அவ்வளவு தானா!..

கதையா?...

இல்ல..ண்ணே!.. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன்.. நீங்க இதுவரைக்கும்
சொன்னதெல்லாம் நல்லா இருக்கு.. மறக்காம குமாருக்கு அனுப்பிடுங்க!..

அப்படியா.. நீ சொன்னா சரிதான்!..

சரி.. வாங்க காபி குடிக்கலாம்!..

ஆமாம்!.. நானும் வேலைக்குப் போகணும்.. நேரமாச்சு!..
* * *

அன்பு நண்பர்களுக்கு..

இத்தகைய வாய்ப்பினை உருவாக்கித் தந்த திரு. குமார் அவர்களுக்கு நன்றி..

எனக்கு முன்பாக - தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும்
திரு துளசிதரன் அவர்கள் தளமும்
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் -
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை...

அவர்களுடைய பதிவுகளைப் படித்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் செல்லும்போது மனதில் உறுத்தலாக இருக்கும்...

எனினும் -
இப்படியான அறிமுகம்..
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் ..
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

தாய் தந்தை தம்பி தங்கையர்க்காக வாழ்ந்த வாழ்வு ஆனந்தம்..
மனைவி மக்கள் - எல்லாருக்குமாக வாழும் வாழ்வும் ஆனந்தம்!..

இந்நாளில் பேத்தி வர்ஷிதாவின் மழலையும் ஆனந்தம்..
வரும் நாட்களில் இனிய சந்ததியினரின் கொஞ்சு மொழியும் ஆனந்தம் தான்!..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..

என்றென்றும் அன்புடன்,
துரை செல்வராஜூ...

****

யாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது கொஞ்சம் வேலை அதிகம் எழுதி அனுப்புகிறேன் என்றார்... பின்னர் உடல் நலமின்மை காரணமாக எழுத முடியாத சூழல் என்ற நிலையிலும் நலமடைந்த பின்னர் இந்த வாரத்தில் எழுதி அனுப்புகிறேன் என்ற மின்னஞ்சல்... அதன் பின் எழுதிட்டேன் பாருங்கள் என்ற மின்னஞ்சல்...  நான் கேட்டதற்கு எழுதி அனுப்பிய ஐயாவுக்கு நன்றி. இந்தத் தொடரை தொடர வைக்கும் அனைவருக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

தியாகராஜன் (சிற்றிதழ்கள் உலகம் சிறு கட்டுரை)

ன்பின் ஐயா பெரம்பலூர் திரு.கிருஷ் ராமதாஸ் அவர்கள் 'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். துபாயில் வேலை செய்து கொண்டு ஒரு இதழ்... அதுவும் இணைய வழி மற்றும் பிரிண்ட்டிங்கில் புத்தகமாக சந்தாதாரருக்கு ஊரில் அவரின் மகள் மூலமாக அனுப்பவும் செய்து வருவதென்பது அவரின் எழுத்து மீதான... சிற்றிதழ்கள் மீதான அதீத காதலையே காட்டுகிறது. நானெல்லாம் இப்போ அறைக்கு வந்ததும் சமைத்துச் சாப்பிட்டு எப்படா படுப்போம் என்ற நிலையில்தான் இருக்கிறேன். இப்போ அதிகம் எழுதுவதில்லைதான்... 

சிற்றிதழ்கள் உலகம் முதல் இதழில் இருவரி வாழ்த்துச் செய்தி... இரண்டாம் இதழில் இங்கு நான் பகிர்ந்து கொண்ட ஐயா குறித்தான ஒரு கட்டுரை... இப்போது வெளி வந்திருக்கும் மூன்றாவது இதழுக்கு மறைந்த எழுத்தாளர் திருமிகு. அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதிக் கேட்டார். அசோகமித்திரனை அதிகம் வாசித்ததில்லை என்றாலும் ஐயா என்னையும் ஒரு எழுத்தாளனாய் நினைத்து அன்போடு கேட்டமைக்காக சமீபத்தில் வாசித்ததை வைத்து எழுதிக் கொடுத்தேன். அது இந்த இதழில்... அதுவும் என் போட்டோவுடன்... (நான் போட்டோ பெரும்பாலும் கொடுப்பதில்லை... பாக்யாவில் வாராவாரம் வரும் மக்கள் மனசு பகுதியில் நம்ம போட்டோ ஒன்றை ஒட்டியே வச்சிருக்கானுங்க... இவரு முகநூலில் தேடி எடுத்திருப்பார் போல... முகநூலில் கூட என் போட்டோ பகிர்வதில்லை... இது அலைனில் இருக்கும் போது எடுத்தது)

அவருக்கு நான் எழுதி அனுப்பிய முழு வடிவம் கீழே... அவர் பகிர்ந்த ஒரு பக்கத்துக்கு சுருக்கப்பட்ட பகுதி போட்டோவாக....

நன்றி கிருஷ் ராமதாஸ் ஐயா மற்றும் சிற்றிதழ்கள் உலகம் ஆசிரியர் குழு.

Image may contain: 1 person, text

 தியாகராஜன்...

தமிழின் பிரபல எழுத்தாளர்... 1970களின் ஆரம்பத்தில் தமிழ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் உலகளவில் கொண்டு சென்ற எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் தியாகராஜனா...? அப்படி ஒருத்தர் தமிழ் எழுத்துலகில் இருந்தாரா... என்ன..? என்று யோசிக்கிறீர்கள்தானே....

அவர்தாங்க எழுத்துலக ஆளுமை... வாழ்க்கைக் கதைகளை என்றென்றும் வாழும் கதைகளாக எழுதி, எழுத்துப் பணியே தன் வாழ்க்கை என இறுதி மூச்சுவரை எழுத்தாளனாக வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தமிழின் பிரபல எழுத்தாளர்...
திருமிகு. அசோகமித்திரன்...

நானெல்லாம் மிகப்பெரிய வாசிப்பாளன் இல்லை... கல்லூரிக்குப் போகும் வரை ராணி, குமுதம், க்ரைம் நாவல்தான்... கல்லூரியில் எங்க பேராசிரியரின் அறிமுகம் கிடைத்து அவரின் பிள்ளைகளாய் அவர் இல்லம் செல்லும் போதுதான்... இரண்டு அறைகள் முழுவதும் புத்தகங்களாக இருக்க, அவற்றில் மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது. கி.ரா, ஜெயகாந்தான், கார்ல் மார்க்ஸ், லெனின், பொன்னீலன், மீரா என அதிகம் வாசிக்க கிடைத்தது. அப்போது அசோகமித்திரனின் சில சிறுகதைகளை வாசித்ததுண்டு. வாசிப்பில் இப்போது இருக்கும் ஆர்வம் அப்போது இல்லை என்றாலும் அவர் வாசிக்க சொன்ன புத்தகங்களை வாசித்ததுண்டு. அப்படியான வாசிப்பில் அசோகமித்திரன் அவர்களின் சில கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் அவை இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை.

அவரின் மறைவுக்குப் பின் நண்பர் ஒருவர் அசோகமித்திரன் அவர்களின் சில சிறுகதைகள் மற்றும் நாவலைப் பிடிஎப்பாக அனுப்பித் தர வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலத்தில் புரிந்து கொள்ள ஏதுவாக இல்லாமல் கடினமாக பயணித்த கதை ஆசிரியரின் கதைகளை இப்போது வாசிக்கும் போது அந்த மனிதர்களுடன் நம்மையும் பயணிக்க வைத்ததை உணர முடிந்தது.

குறிப்பாக ‘தண்ணீர்’ நாவல்... கதையின் மையக்கரு தண்ணீர் பிரச்சினைதான் என்பதாய் படிக்க ஆரம்பித்த நாவல்... வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சினை வீதிக்கு வந்து மெல்ல மெல்ல அடுத்த தெருக்களுக்கும் பயணிக்கும் போது சில பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினை பேசப்படுகிறது... தண்ணீரும் பெண்களின் கண்ணீருமாய் பயணிக்கும் கதை தமிழ் இலக்கிய உலகத்தை மற்றொரு களத்துக்கு எடுத்துச் சென்றது என்று பலர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக கதை நாயகி  யமுனாவின் வாழ்க்கை... இந்தப் பெயர் பொருத்தத்தைப்  பாருங்க... அதாவது கதை தண்ணீர் பிரச்சினை பற்றியது... அதில் வாழ்க்கை பிரச்சினையாகி... தற்கொலை வரை செல்லும் பெண்ணின் பெயர் யமுனா... எப்படியான சிந்தனை... கதை நகர்த்தல் மிக அருமை....  தண்ணீர் குழாய்க்காக ரோட்டோரத்தில் குழி வெட்டுதல் அதனால் கக்கூஸ் குழாய் உடைப்பு... கார் பதிந்து கொள்ளுதல்... தெரு விளக்குப் பிரச்சினை...  என மிக எதார்த்தமாய் கதை பயணிக்கிறது. கடைசியில் வரும் தண்ணீரும் சாக்கடை நாற்றத்துடன் வர, யமுனாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாய் நிற்க வாசித்த நம்மை கண்ணீருடன் சில நிமிடம் அமர வைத்துவிடுகிறார். மிகச் சிறப்பான நாவல்... அருமையான.... ஆழமான எழுத்து.

அசோகமித்திரனின் மறைவு ஈடில்லா இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை என்ற போதிலும் அவரின் எழுத்துக்கள் என்றென்றும் இளமையுடன் வாழும்.

அனைவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளன்... எழுத்தின் ஆளுமை அசோகமித்திரன்.
-‘பரிவை’ சே.குமார்.

சனி, 22 ஏப்ரல், 2017

சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)

Related image

வர் பாண்டி...

தனுஷ் இயக்குநராய் அவதாரம் எடுத்திருக்கும் படம்.

ஒருவனுக்கு ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருந்தா எதைத் தொட்டாலும் ஜெயம்தான் என்பார்கள்... அப்படி ஒன்பதும் உச்சம் பெற்றவன் இவன்... இவன் தொட்டதெல்லாம் ஜெயம்தான்... அது நடிகைகளின் விவகார நிகழ்வில் கூட... தொலைக்காட்சி தொகுப்பாளினி விவகாரத்துக்கு கூட மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு இணையத்தில் மீம்ஸ் பறக்க விட்டதை நாமெல்லாம் வாசித்து சிரித்தோம்தானே...

அந்த மகாபிரபுவோட தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதுக்கு... நாம பவர் பாண்டி எப்படி இருக்காருன்னு பார்ப்போம். பவர் பாண்டியாய் வாழ்ந்திருக்கும் ராஜ்கிரண்... மிகச் சிறந்த நடிகர்... நாம் அவரை தொடை தெரிய வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஆட்டெலும்பைக் கடித்து இழுத்த நம்ம கிராமத்தான் மாயாண்டியாக, ராசய்யாவாகத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.  பத்துப் பேரை பறந்து பறந்து அடிப்போர் மத்தியில் நூறு பேரைக் கூட அசால்டாக எலும்பை ஒடிக்கும் மனிதராக இவரை மட்டுமே பார்க்க முடிந்தது. இளையராஜா என்னும் இசையோடு 'என் ராசாவின் மனசிலே'யில் கதை நாயகனாய் மலர்ந்தவர் தியேட்டருக்கு வருகிறார் என வகுப்புக்கு மட்டம் அடித்துவிட்டு லெட்சுமி தியேட்டரில் போய் பார்த்து வந்தோம். குயில் பாட்டு அப்படி இழுத்தது.

கதாநாயகனாக வலம் வந்த ராஜ்கிரண், நந்தா, சண்டைக்கோழி என தன் பாதையை மாற்றிப் பயணித்த போது சேரனின் தவமாய் தவமிருந்து நம் கண் முன்னே அச்சகம் நடத்தும் அப்பனை அப்பட்டமாகக் காட்டியது. மிக அருமையான நடிப்பு... அப்படி ஒரு நடிப்பை இளவரசு முத்துக்கு முத்தாக படத்தில் கொடுத்திருப்பார். இந்தக் கதாபாத்திரத்தை இவருக்குக் கொடுத்தால்தான் சரியாகும் என்ற தனுஷின் முடிவு பாராட்டத்தக்கது. ராஜ்கிரணின் தேர்வு பவர் பாண்டியை பவர்புல் பாண்டியாக மாற்றியிருக்கிறது என்பதே உண்மை.

தொடை தெரிய வேஷ்டி கட்டிய ராஜ்கிரணே நம் மனசுக்குள் இருக்க, சீன்ஸ் பேண்ட், டீ சர்ட், பேச்சில் கலந்து வரும் ஆங்கிலம், புல்லட் என வித்தியாசமான ஒரு மனிதரை திரையில் பார்க்க நேர்கிறது. தங்கள் பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர்... சிலர் விதிவிலக்கு...  நேற்று நண்பர் ஒருவர் சொன்னார் வீட்டில் தெண்டச்சோறு எனப் பெயரை எடுத்த அவருக்கும் அவர் தம்பிக்குமான காலை நேர தோசையில் அவருக்கும் சாதாரணமாகவும் தம்பிக்கு முட்டை போடப்பட்ட தோசையும் அதுவும் இவருக்குத் தெரியாமல் மறைத்துக் கொடுத்ததையும் சொல்லி ஆதங்கப்பட்டாலும் நான் என்ன அவனுக்கு கொடுக்க வேண்டான்னா சொன்னேன்... அப்படியெல்லாம் செய்தவர்கள்தான்... இருப்பினும் என் பெற்றோர் விட்டுக் கொடுக்க முடியலை என்றார்... பெற்றதில் சிலதை ஒதுக்கியும் சிலதை அணைத்தும் வாழக்கூடிய இது போன்ற சில பெற்றோரையும் பார்க்க முடியும். எது எப்படியோ தன் தோள் மீது தூக்கி அமர வைத்து உலகம் காட்டி குழந்தைகளுக்காகவே வாழும் பெற்றோர் ஒரு காலத்தில் தனக்கான ஒவ்வொன்றுக்கும் தன் பிள்ளையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. இது அவ்வப்போது நிகழ்வதல்ல... வாழையடி வாழைதான்...

தான் சுதந்திரமாக... மகனின் கையை எதிர்பார்க்காமல் வாழ நினைக்கும் அப்பாக்களை அப்படியே வாழ விடுங்கள் என்று சொல்கிறார் இயக்குநர் தனுஷ்... அப்பா மீது பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சொற்களால் அவ்வப்போது சுட்டாலும் மனசுக்குள் நேசிக்கும் மகன்... போனில் பேசும் போது ஏதாவது சொன்னால் 'இவரு வேற' என்று சொல்லும் மூணாப்பு படிக்கும் விஷால், நான் அப்பா பிள்ளை என்று சொல்லும் போது 'இவரு வேற' அன்பில் கரைந்துதானே போய்விடுகிறது. ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற எண்ணத்தின் விளைவாய்... சமூக விரோதிகளுக்கு துணை போகும் போலீஸ் வீட்டுக்கு வர, அது அடிக்கடி நிகழும் நிகழ்வாக மாறும் போது கோபத்தில் கத்திவிட, தண்ணியைப் போட்டுவிட்டு ரகளை செய்து வீட்டை விட்டு ஓடிபோகிறார் தனது புல்லட்டில் புல்லட் பாண்டியாக.

மனசுக்குள் இருக்கும் முதல் காதலியை சிலர் கிளறிவிட, அவளைத் தேடிப் புறப்பட்டு அவளைச் சந்தித்து காதலை மீண்டும் தொடர, கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் அபத்தமாகிவிடும் கதையை, மகள் அம்மாவின் முன்னாள் காதலை, இப்ப நீ சிங்கிள்தானே என ஏற்பது ஏற்ப்புடையதா என்ற யோசனைக்கு இடமில்லாமல் மிக அழகாய் நகர்த்தி முடித்திருக்கிறார்கள். பிரசன்னா நல்ல நடிகன்... பயன்படுத்திக் கொள்வோர் குறைவு... அப்படி பயன்படுத்தப்படும் பட்சத்தில் நிறைவாய் செய்து தனித்து நிற்பார். இதிலும் அப்படியே பாசத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியில் கண்டிப்பாய் இருப்பதும் அப்பா காணாமல் போனபின் தவிப்பதும் என கலக்கல். மனைவியாய் சாயா சிங்... கச்சிதமான கதாபாத்திரம். பேரன் பேத்திகளாய் இரண்டு அழகான வாண்டூஸ்... பக்கத்து வீட்டு வெட்டியாய் வந்து ராஜ்கிரணின் நண்பனாய் ரின்சன்... அளவான நடிப்பு.

காதலியைத் தேடி அதுவும் முன்னாள் காதலியைத் தேடி செல்வது சினிமாவில் மட்டுமே முடியும்... நிஜத்தில் நடப்பது அரிது... அதுவும் முகநூலில் உடனே பேரை வைத்து ஆளைப் பிடிப்பதும் முதல் முகநூல் அரட்டையில் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் சந்திப்பது எல்லாம் சினிமாத்தனம்... படம் முழுக நிறைந்திருக்கும் ராஜ்கிரணால் மட்டுமே இதெல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

சின்ன வயசு... ப்ளாஸ் பேக் போகணுமே... அப்படிப் போனால் பவர் பாண்டியாக தனுஷ்... நடிக்க... அதுவும் கெத்தாக நடிக்க... சொல்லியா கொடுக்க வேண்டும்.. கொஞ்ச நேரமே என்றாலும் இயக்குநர் தனுஷை நடிகர் தனுஷ் வெற்றி கொண்டு விடுகிறார். வாயும் கையும் சும்மா இருந்தால் இன்னும் சிறக்கலாம். யார் பிள்ளை என்ற வழக்கு ஒரு பக்கம் இருந்து தொலைத்தாலும் இயக்குநரின் வளர்ப்பாய்... ஆம் வளர்ப்பாய்த்தான் இருக்க வேண்டும்... அந்த ஏழைப் பெற்றோர் நேற்று வழக்கு தள்ளுபடி ஆனபின் கூட எங்கள் மகன்தான் என நிரூபிப்போம் என்று சொல்கிறார்கள். எனக்குள்ளும் ஒரு கேள்வி உண்டு... கிராமத்தான் கூட ஒரு குழந்தைகளை ஸ்டுடியோவில் கொண்டு போய் போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி வைத்திருக்கும் கால கட்டம் அது என்ற போதிலும் ஒரு இயக்குநர் தன் பிள்ளைகளை படமெடுத்திருக்க மாட்டாரா என்ன... ஒரு போட்டோ கூட இல்லையா.. என்னமோ போ ராகவா... கஸ்தூரிக்கே வெளிச்சம்.

ராஜ்கிரணின் காதலியாக சின்ன வயசில் மடோனா... வயசான பின் ரேவதி... டயானா தனுஷோடு கொஞ்சுகிறார்... ரேவதிக்கான தேர்வாய் மடோனா கனகச்சிதம்... இப்பவும் சொல்வேன்... எப்பவும் சொல்வேன் மடோனா அழகி. ரேவதி சொல்லவே வேண்டாம்... தன் முன்னாளை மகள் ஏற்றுக் கொள்ளச் சொன்னவுடன் எழுந்து உள்ளே செல்லும் முன் சின்னதாய் ஒரு ஸ்டெப் போடுவாரே... வாவ்... மண்வாசனை, மௌனராகம் ரேவதி இன்னும் அழகாய்... அருமையான நடிப்பு. படத்துக்கு இசை பெரும் பலம்.

நடிகராய்... பாடலாசிரியராய்... பாடகராய்... தயாரிப்பாளராய் பரிணமித்த தனுஷை இயக்குநராய் தமிழ் திரைக்கு வாரிக் கொடுத்திருக்கும் படம் பவர் பாண்டி. எந்த ஒரு கமர்ஷியல் திணிப்பும் இல்லாது சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக வசனங்கள் எல்லாம் அருமையாய் ஒரு கதை சமைத்திருக்கிறார். பவர் பாண்டி பார்க்க வேண்டிய பாண்டி. ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிற படம் இது.

பவர் பாண்டி... ப.பாண்டி அப்படின்னு ஆயிருக்கு நான் வேகமா பாப்பாண்டின்னு வாசிச்சி அப்படி ஒரு படமான்னு யோசிக்க அப்புறம்தான் பவர் பாண்டியோன்னு நினைச்சேன். பவர் பாண்டியில டிடியும் இருக்கார். பவர் பாண்டி பார்ட்டிதானே சுசியை பரபரப்பை கிளப்ப வச்சிச்சு... ஆமா இப்ப சுசி எங்கே..? சரி விடுங்க... எது எப்படியோ நல்லதொரு படத்தைக் கொடுத்த பவர் பாண்டி குழுவுக்கு வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 19 ஏப்ரல், 2017

14. என்னைப் பற்றி நான் - முனைவர். பா. ஜம்புலிங்கம்

ந்த வாரம் என்னைப் பற்றி நானில் தன்னைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார் அன்பின் ஐயா. முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள்.

முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவைப் பற்றி சமீபத்தில்தான் 'மூன்று முத்துக்களை வாழ்த்துவோமே' என்ற பிறந்தநாள் பகிர்வில் எனக்குத் தெரிந்தவரை எழுதியிருந்தேன். வலையுலகில் இவரைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் தளத்தில் சமீபத்தில் அவர் பகிரும் பகிர்வுகளில் பணி ஓய்வு குறித்துச் சொல்லும் போது பலரை நினைவு கூர்ந்தும்... முதன் முதலாகவென அவர் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் முதல் ஆவணப்படுத்தி வைத்திருப்பதையும் எழுதியிருக்கிறார்.

மிகச் சிறந்த மனிதர்... நற்சிந்தனையாளர்... சோழநாட்டில் பௌத்தம் என்ற தனது தேடுதல் ஆராய்ச்சியில் மிகச் சிறந்த புத்த சிலைகளை எல்லாம் கண்டெடுத்தவர்... இதற்காக நடந்தும், சைக்கிளிலும் பல மைல் தூரம் பயணம் செய்தவர்... இன்னும் தேடலைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். சிறந்த எழுத்தாளர்... பல பத்திரிக்கைகளில் இவரின் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. விக்கிபீடியாவில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வலைப்பூவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

ஐயாவைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை... அவர் குறித்து என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்...


ன்னைப் பற்றி நான் என்ற ஒரு தலைப்பினைக் கொடுத்து என்னை எழுதத் தூண்டிய திரு 'பரிவை' சே.குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரிசையில் அவரது வலைப்பூவில் தொடர்ந்து பல நண்பர்கள் எழுதி வருவதைப் பார்த்து, அவ்வப்போது பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். சுயமதிப்பீடு செய்வதற்கு இவை போன்ற பதிவுகள் மிகவும் உதவும். 

என் அத்தை கூறுவார் "எப்படியும் வாழலாம்ணு இருக்கு. இப்படித்தான் வாழணும்னு இருக்கு, இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான்.... எப்படி பிழைக்கப் போறோனோ?" பெற்றோர் என்று இருந்தாலும்கூட என்னை வளர்த்தவர்கள் ஆத்தா, தாத்தா மற்றும் என் அத்தையே. என்னை வளர்த்துக் கொண்டிருப்பதும், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்க உதவுவதும், தடுமாறாமல் என் வழியில் நான் தொடர்ந்து செல்லக் காரணமாக இருப்பதும் இந்த சொற்றொடரே.  இப்படியாகத்தான் வாழவேண்டும் என்ற நியதியை வைத்துக்கொண்டு இச் சமுதாயத்தில் வாழ்வது அதிகம் சிரமமே. இதுவரை அவ்வாறே இருந்துவிட்டேன். மாற்றிக்கொள்ள முடியவில்லை. என் கல்லூரி நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணன் "Men may come... men may go... but I can go forever" என்ற புகழ்பெற்ற அயல்நாட்டுக் கவிஞனின் சொற்களைக் கூறுவார். விடாப்பிடியான இக்கொள்கையானது மற்றவர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காண்பிப்பதை உணரமுடிகிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு (பி.1959, கும்பகோணம்) குடும்பச்சூழல் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து (1975-79), அதே காலகட்டத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியனவற்றைக் கற்ற வகையில் வேலை வாய்ப்பு பெற்றேன். சென்னையிலும், தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் தனியார் நிறுவனங்களில் (1979-82) பணியாற்றி விட்டு, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து (16 ஆகஸ்டு 1982) சுமார் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். வீட்டு வேலைகளையும், பிற பணிகளையும் விடுமுறை நாள்களில் கவனித்துக் கொள்கிறேன். நண்பர்கள், அறிஞர்கள் சந்திப்பு, ஆய்வுப்பணி, களப்பணி போன்றவற்றை விடுமுறை நாள்களில் மேற்கொண்டுவருகிறேன்.  ஒரு நாளுக்கான திட்டமிடலை பின்வருமாறு அமைத்துக்கொள்கிறேன். 
   
காலை 6.30 : 10 நிமிட உடற்பயிற்சி
காலை 6.45 : Guardian, New York Times, Dawn உள்ளிட்ட வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு  
காலை 7.45 : The Hindu மற்றும் தினமணி வாசிப்பு 
காலை 8.00 : தேவாரம் ஒரு பதிகம் வாசிப்பு (விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தமும் சேர்த்து)
காலை 8.20 : அலுவலகத்திற்குக் கிளம்புதல் (பேருந்தில்)
காலை 9.30 : அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்குள் வரல்
மாலை 5.45 : அலுவலகத்தை விட்டுப் புறப்படல் 
இரவு 6.30 : இல்லம் வந்து சேர்தல், குடும்பத்தினருடன் அளவளாவுதல்
இரவு 8.00 : சிறிது நேரம் வாசிப்பு
இரவு 9.00 : கட்டுரைகள் எழுதுதல்
இரவு 10.00 : உறங்கச் செல்லல்

வாழ்வின் இலக்குகளாக நான் நினைத்தனவற்றில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியுள்ளேன் என்பது எனக்கு மன நிறைவாக உள்ளது. வாசகர் கடிதம் எழுதத் தொடங்கி தற்போது சுமார் 1000 பதிவுகள் (ஆய்வுக்கட்டுரைகள், இரண்டு வலைப்பூவில் கட்டுரைகள், நாளிதழ்களுக்குக் கட்டுரைகள், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகள்) எழுதுமளவு உயர்ந்துள்ளது.   

காலந்தவறாமை : 1979இல் முதன்முதலாக பணியில் சேர்ந்த முதல் காலந்தவறாமை என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரத்திற்குள் சென்றுவிடுவேன். இயலா நிலை ஏற்படின் இயலாமையைத் தெரிவித்துவிடுவேன். நிகழ்ச்சியோ, விழாவோ நடப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டால் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். நேரம் வீணாவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.    

நேரம் பேணுதல் : உரிய நேரத்தில் உரிய பணிகளை முடித்துவிடல் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்தந்த நேரத்தில் அந்தந்த பணிகளைச் செய்யுமளவு வரையறுத்துக்கொள்வேன். தகுதிக்கு மேலாக முடியாததை இழுத்துப்போட்டுக் கொண்டு சிரமப்படுவதில்லை. இயலாது எனின் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவேன். 

நேர்மை அனுசரித்தல் : முடிந்த வரை நேர்மையாக இருக்கிறேன். இதனால் அதிக சங்கடங்களை எதிர்கொண்டு வருகிறேன்.   

இடம் விட்டு நகர்தல் : நமக்குப் பிடிக்காத ஒன்று, இயற்கைக்கு முரணானது, விதிகளுக்கு அப்பாற்பட்டு நடப்பது, அரசியல், இனம், சாதி என்ற போர்வையில் தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காரியம் சாதிக்கப்படல் என்பன போன்ற செயல்கள் கண் முன்னே நடக்கும்போது அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். 

மேற்கொள்ளும் பணிகளில் கட்டுப்பாடு : முடிந்தவரை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றேன். இயலாத ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளையோ எடுத்துக்கொண்டு நேரமில்லை, செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்வது கிடையாது.  

சுற்றமும் நட்பும் : பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகிய ஒருவர், அனைத்து செய்திகளையும் என்னுடன் பகிர்வார். நானும் அவ்வாறே பழகி வந்தேன். சில நாள்களாக அவரைக் காணவில்லை. பின்னர் வேறு சில நண்பர்கள் மூலமாக தனிப்பட்ட முயற்சியாலும், தகுதி அடிப்படையிலும் அவர் பிறிதொரு இடத்தில் ஆசிரியராக, பணியில் சேர்ந்ததாக அறிந்தேன். அதிர்ச்சியடைந்தேன். இதனை அவர் என்னுடன் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது வியப்பாக இருந்தது. அவரைப் பற்றி பேசுவதை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். இவ்வாறே குடும்ப நிலையிலும், உறவு நிலையிலும் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். தம் தவறை அவர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும்கூட அவர்களை விட்டு விலகி விடுகின்றேன். மனதிற்கு சரியாகப் படும் இடத்தில் நேர்மையினைக் கடைபிடித்து வரும் நிலையில் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன்.  

நெஞ்சு நிமிர்தல் : வாய்மையைக் கடைபிடிக்கும் நிலையில் எவருக்கும் அஞ்சுவதில்லை. அனாவசியமாக ஒருவரைப் பேருக்காகப் புகழ்தல், பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக உயர் பதவியில் இருப்போரை பாராட்டுதல், தத்துவங்களைப் பேசிக்கொண்டு குறுகிய நோக்கில் நடந்துகொள்ளல் என்பனவற்றில் ஈடுபடுவதில்லை. அவ்வாறான குணமுள்ளவர்களோடு பழகுவதும் இல்லை.  மூத்த அலுவலரோ, ஆசிரியரோ, நண்பரோ யாராக  இருந்தாலும் சரி, அவர் தவறாக ஒரு காரியத்தினைச் செய்யும்போது சுட்டிக்காட்டுவேன். (ஓர் அலுவலர் தட்டச்சில் பிழை செய்தபோது சுட்டிக்காட்டிய நிலை ஏற்பட்டது. பிறர் அதனைக் கண்டும் காணாதது போல இருந்தனர். அவ்வாறே ஆய்வு நிலையில் துறை சார்ந்த ஒருவர் புத்தர் சிலையை சமண தீர்த்தங்கரர் சிலை என்றார். பதவிப் பொறுப்பில் இருந்ததால் அவர் தவறான கருத்து கூறியும் உடன் இருப்போர் அதற்காக தலையாட்டினர். நான் ஏற்காமல், என் கருத்தை அதுவும் உண்மையான கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் நான் மாற்றுக்கண்ணோட்டத்தில் அவர்களால் பார்க்கப்பட்டேன்). என்னைவிட இளையவர்களாக இருந்தால்கூட அவர்கள் கூறும் கருத்தில் நியாயமிருப்பின் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.   

பொருளாசை, பணத்தாசை : பொருள்மீதோ, பணத்தின்மீதோ ஆசை வைத்து சேர்க்க ஆசைப்படுவதும், அண்டை வீட்டாரிடம் இருப்பதால் நம்மிடமும் இருக்கவேண்டும் என்று பொருள்களை வாங்கிச்சேர்ப்பதோ கிடையாது. நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அதனை மீறாமல் இருக்க முயற்சிக்கிறேன்.  

கணக்கு வைத்துக்கொள்ளல் : அவ்வப்போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு கணக்கு எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது பல நிலைகளில் அனாவசிய செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும், நம்மை திருத்திக் கொள்ளவும் உதவுகிறது.

ஆவணப்படுத்துதல் : முதன்முதலாக நான் வேலைக்குப் போட்ட விண்ணப்பம் (12.5.1976) தொடங்கி அண்மையில் தினமணியில் வெளியான என் பேட்டி வரை அனைத்தையும் ஆவணப்படுத்தி, ஆண்டுவாரியாக நூற்கட்டு செய்து வைத்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் இவற்றை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆய்வு என்ற தலைப்புகளாகப் பிரித்து வைத்துள்ளேன். பெரும்பாலும் நான் எழுதி வெளியான கடிதங்கள் மற்றும் கட்டுரைகளை இவ்வாறு வைத்துள்ளேன். 

கோபப்படல் : நமக்குப் பிடிக்காத, ஒவ்வாத ஒரு பொருள், நபர், செயல், சூழல் என்ற நிலையில் அதிகம் கோபம் ஏற்பட்டு விடுகிறது. முன்னர் அதிகம் கோபப்பட்டு கொண்டு இருந்தேன். தற்போது இதன் அளவு குறைந்துவிட்டாலும், இக்குணத்தை என்னால் முற்றிலுமாக விடமுடியவில்லை. 

ஆசிரியர் பணி : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், அலுவல் நிலையில் பணியாற்றும்போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இரு முறை நேர்முகத்தேர்வினை எதிர்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தால் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அளவிற்கு 1000+ பதிவுகளை எழுதியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பதை உணர்கிறேன். 

குடும்பம் : மனைவி (திருமதி பாக்கியவதி), மூத்த மகன் (திரு பாரத்/பி.காம்., எம்.பி.ஏ.,), இளைய மகன் (திரு சிவகுரு/பி.டெக்.,) ஆகியோரைக் கொண்ட குடும்பம். மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு மகன். இரு மகன்களும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மகன்கள் இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தோம். அதன் விளைவாக எங்கள் இல்லத்தில் தற்போது ஒரு சிறிய நூலகம் உள்ளது. நான் இரு வலைப்பூக்களில் (சோழ நாட்டில் பௌத்தம் மற்றும் முனைவர் ஜம்புலிங்கம்) எழுதிவருகிறேன். என் மனைவி பாக்கியவதி பக்கங்கள் என்ற வலைப்பூவிலும் மூத்த மகன் பாரத் ,என்ற வலைப்பூவிலும் இளைய மகன் தஞ்சை தமிழ்ச்செல்வன் என்ற வலைப்பூவிலும் எழுதி வருகின்றனர். 

சமுதாயத்தில் குடும்பம், பணி, ஆய்வு என்ற நிலையில் முன்னுதாரணமாக இருக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு என் நண்பர்களும், குடும்பத்தவர்களும் உதவியாக உள்ளனர். இவையனைத்திலும் என் மனைவி மற்றும் மகன்களின் ஒத்துழைப்பு என்னை மேம்படுத்த உதவியாக உள்ளது. குறிப்பாக நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் உறுதியாக உள்ளேன். எனது இப்பயணம் தொடரும்.  

நட்புடன்,
முனைவர். பா.ஜம்புலிங்கம்.



ன்னைப் பற்றி நான் தொடருக்கு கேட்டதும் எழுதி அனுப்பும் உறவுகளுக்கு நன்றி. இன்னும் சிலரிடம் கேட்டிருக்கிறேன்... தற்போது இன்னும் இரண்டு வாரத்துக்கான கட்டுரை கைவசம் இருக்கிறது. இன்னும் பலரிடம் கேட்க வேண்டும். இதுவரை கேட்டிருப்பவர்கள் அனுப்பிக் கொடுத்தால் நல்லது.

ஐயாவிடம் கேட்ட உடனேயே மிக விரிவாக எழுதி அனுப்பியிருந்தார்கள். அதன் பின் ஐயாவுடன் தொலைபேசி உரையாடலும் மனசுக்கு இதமாய்... கேட்டதும் அனுப்பிக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி.

இந்த வாரம் ஐயா, அவரைப் பற்றி சொல்லிய என்னைப் பற்றி நான் குறித்தான தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே...

அனைவருக்கும் நன்றி.

அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்...
-'பரிவை' சே.குமார். 

சனி, 15 ஏப்ரல், 2017

ரசிக்க வைத்த எங்கேயும் எப்போதும்...

மிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் இசை ஆளுமை மணி அவர்களின் ஆர்க்கெஸ்ட்ராவின்  'எங்கேயும் எப்போதும்' என்ற இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. சொல் அரங்கம், பட்டிமன்றம், பிரபலங்களின் உரை போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு எனக்குத் தெரிந்து இந்த முறைதான் முழுக்க முழுக்க இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது.  சரி நிகழ்வு எப்படி என்று பார்ப்போம்.

Image may contain: 1 person
(எப்படிப்பட்ட பாடலையும் துள்ளலுடன் பாடி அசத்திய அல்கா அஜீத்)
மொத்தம் நாலு பாடகர்கள்... நால்வருமே சூப்பர் சிங்கரின் மூலம் உயர்ந்தவர்கள்... இன்று திரையுலகிலும் அடி எடுத்து வைத்திருப்பவர்கள். தனியாக... இணையாக.. என கிட்டத்தட்ட மூணே முக்கால் மணி நேரம் சித்திரை முதல் நாளை மகிழ்வுடன் கொண்டாட வைத்தார்கள். பட்டிமன்றம், சொல்லரங்கம் என்றால்  நாமளும் அவர் அதைப் பேசினார்... இவர் இதைப் பேசினார் என பக்கம் பக்கமாக... மூணு நாலு பதிவு தேத்திடுவோம்... ஆனா பாட்டுக் கச்சேரியில ஒரு பதிவு தேத்துறதே பெரிய விஷயம்... என்னத்தை எழுதுறது சொல்லுங்க...

எப்பவும் ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் போடுவார்கள்... இந்த முறை 5.55க்கு என்று போட்டிருந்தார்கள். அறையில் யாரும் வர விரும்பாத காரணத்தால் சரி நடந்து போகலாம் என முடிவு செய்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எங்க கட்டிடத்துக்கு பின்னாலிருக்கும் பெங்காலி கடையில் டீ வாங்கி உறிஞ்சியபடி நடக்க, சென்ற முறை நானும் கில்லர் அண்ணாவும் மச்சானும் பேசிக்கொண்டே நடந்து சென்றது நினைவில் ஆடியது. இப்ப இங்க வெயில் காலம் ஆரம்பிக்கும் போதே ஐபிஎல் வீரர்களைப் போல அடித்து ஆடுகிறது. பேருந்து நிறுத்தம் கடக்கும் போது ஒரு நண்பர் பேருந்து ஓட்டுனரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் (அடுத்தவன் சண்டை போட்டாத்தான் என்ன நடக்குதுன்னு பார்க்க கூடுற கூட்டத்துல நாமளும் ஒருத்தன்தானே) நிற்க, அவரோ இந்த வண்டி ஐஎஸ்சி போகும்ன்னு அழைப்பில் போட்டிருந்தாக ஆனா இப்ப போகாதுன்னு இவரு சொல்றாருங்க.. அப்புறம் எதுக்கு அழைப்பில் போட்டாங்க... ரெண்டு திர்ஹாம் கட்டான கடுப்பில் பேசினார்.

டிரைவரிடம் நாங்க ஐந்து பேர் இருக்கோம்... எங்களை அங்க கொண்டு போய் இறக்கி விடு என்று வாதாடினார். எனக்குச் சிரிப்பு... அவன் போற ரூட்டை விட்டுட்டு இவருக்காக ஐஎஸ்சி வடான்னு சொன்னா, நம்ம ஊரா காலேசு பசங்களுக்காக பஸ்ஸை காலேஜ் வாசல் வரைக்கும் கொண்டு செல்ல, நாங்க படிக்கும் போது எங்க கல்லூரிக்கு காரைக்குடியில் இருந்து வரும் ஒரு தனியார் பேருந்து கல்லூரி வாசல் வரைக்கும் வந்து திரும்பும். சரி விஷயத்துக்கு வருவோம்... அந்த மலையாளி டிரைவர் சிரித்துக் கொண்டே அதெல்லாம்  முடியாது எனச் சொல்ல, அந்த நேரத்தில் ஐஎஸ்சி வழி செல்லும் ஒன்பதாம் நம்பர் வர அதில் ஏறிப் பயணித்தோம். இதை நான் விழா அமைப்பினரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்... ஐஎஸ்சியில் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன் என்றெல்லாம் குதித்துக் கொண்டே வந்த அந்த நண்பர் சொன்னாரா தெரியவில்லை... எனக்கு நாமெல்லாம் வாய்ச்சொல்லில் வீரரடி என்றுதான் தோன்றியது.  அங்கு இறங்கி கனவுப்பிரியன் அண்ணாவுக்கு போன் செய்தால் இப்போதான் கிளம்புறேன் என்றார். காத்திருந்தேன்... கூட்டம் கூட்டமாய் தமிழர்கள் கடந்து சென்றார்கள்.

Image may contain: 2 people, people on stage
(ஆர்ப்பாட்டமில்லாமல் பாடி அசத்திய சத்யபிரகாஷ் - பிரியங்கா)

பின்னர் அண்ணன் வரவும் ஆறு மணிக்கு உள்ளே சென்றோம்... அரங்கு நிறைந்திருந்தது... நாங்க சென்ற போதுதான் சிங்கத்தில் இருந்து பாரதி வர ஆரம்பித்தார்.... அதைப் பார்த்ததும் அரங்கில் ஆரவாரம்... அதன் பின்னர் அவர்களின் முந்தைய வருடத்து நிகழ்வுகள் திரையில்... இந்திய தூதரக அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட, அவர் தமிழ் அதிகம் பேச வராது என்று சொல்லி ஆங்கிலம் கலந்து தமிழில் மலையாளமும் வீச, இந்திய தூதரக முகநூல், டுவிட்டர் பக்கங்களைப் பயன்படுத்துங்கள்... எதுவாகினும் அதில் தெரிவியுங்கள் என்று சொல்லிச் சென்றார். உடனே மேடை ஆர்க்கெஸ்ட்ரா குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பமாக எங்கேயும் எப்போதும் மியூசிக்கை இசைத்தார்கள்... மிக அருமை... அதன்பின்னர் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் இசைக்குழுவினருக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். அவருக்கு பூங்கொத்தைக் கொண்டு வந்து கொடுத்த குட்டிப்பூக்கள் அழகோ அழகு.

முதல் நான்கு பாடல்களை நால்வருக்கும் அறிமுகமாக வைத்திருந்தார்கள்... ஒவ்வொருவரைப் பற்றி பாரதி அமைப்பின் சகோதரி விளக்கமாய்ச் சொல்ல, பின்னர் அவர்கள் பாடினார்கள்... அல்கா அஜீத் தமிழுக்கும் அமுதென்று பெயர் என ஆரம்பிக்க, அடுத்தடுத்த பாடல்கள் அழகாய் நகர்ந்தன... உதயா உதயாவில் உருக வைத்து.... சிங்கார வேலனில் சிலிர்க்க வைத்து... அல்லை நல்லை பாடி... ராஜாளியில் நனைய வைத்து... கூடை மேல கூடை வைத்து... அழகு மலராட பாடி... இப்படி நிறைய பாடல்களை நிறைவாய்ப் பாடி... உதயாவை ஒன்ஸ்மோராக்கி, சின்ன சிறிய வண்ணப் பறவையை அழைத்து குத்துப் பாடல்களை கலைவையாய் பாடி முடித்தார்கள். இங்கு சொன்னது சில பாடல்கள் சொல்லாதது நிறையப் பாடலகள்.... பெரும்பாலும் கொலைக்குத்துப் பாடல்கள் இல்லாது மெலோடியாய்ப் பாடல்களைத் தெரிவு செய்து பாடினார்கள்.

பாடியவர்களில் பார்வையாளரை அதிகம் கவர்ந்தவர் அல்கா அஜீத், என்ன குரல் வளம்... தமிழகத்தின் தங்கக் குரலென மலையாளிகளை விஜய் தொலைக்காட்சி தேடித்தேடி எடுத்தாலும் விழா ஆரம்பிக்கும் போது தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துச் சொல்லாமல் மலையாள 'விசு'வுக்கு வாழ்த்து சொன்னாலும் எந்தப் பாடலையும் பார்த்துப் பாடாது அட்சர சுத்தமாக பாடியதிலும் ஒவ்வொரு பாடலையும் அனுபவித்து ரசித்துப் பாடியதிலும் அனைவரையும் கவர்ந்தார் அல்கா... இவரைத் தொடர்ந்து சத்யபிரகாஷ்... உதயா உதயாவில் உருக வைத்தார்... எந்த அலட்டலும் இல்லாமல் ரொம்ப ஜாலியாக பாடல்களைப் பாடினார். அல்லை நல்லை ரொம்ப அருமை. அப்புறம் நம்ம வீட்டுப் பிள்ளை போல்... எங்க ஸ்ருதி மாதிரி ஒரு ஒல்லிக்குச்சி... பிரியங்கா... சிரிச்சிக்கிட்டே... பாடல் வரிகள் என் மூளையில் பத்திரமாக இருக்கு என்று கைகாட்டி மிக அழகாகப் பாடினார். பிரசன்னா நல்ல வாய்ஸ்... காக்கை சிறகினிலே மிகச் சிறப்பாக பாடினார். மொத்தத்தில் பாடல்கள் சிறப்பு.

Image may contain: 1 person
(கர்நாடக சங்கீதத்திலும் கலக்கிய பிரசன்னா)

பிரசன்னாவின் அளவுக்கதிகமான பேச்சு... அதிலும் தற்பெருமை... அவரின் அலட்டலும் அசைவுகளும் செயற்கையாய்... இன்னும் சில வருடத்தில் ஜி.வி.பிரகாஷ் போல் இவருக்குள்ளும் நாயகன் ஆசை துளிர்க்கலாம். இவர் பாடலின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ பேச ஆரம்பித்தால் எங்கள் அருகில் இருந்தவர்கள் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அல்காவின் குரலை வெகுவாய் ரசித்தார்கள்... இந்தப் புள்ள ரொம்ப அருமையாப் பாடுது... மலையாளியா...? பாட்டைப் பார்க்காமலே சூப்பராப் பாடுதே என்றார்கள். சத்தியபிரகாஷ் பாடும் போது கை தட்டி ரசித்தார்கள். இசைக்குழுவினர் ஒவ்வொருவரையும் இஞ்ச் பை இஞ்சாக ரசித்துப் பேசினார்கள். பாவம் மணி அண்ணா சும்மாவே நிக்கிற இந்தாளைப் புகழ்றானுங்களேன்னு ரொம்பவே திட்டுனாங்க... இதையெல்லாம் விட அவர்களுக்கு ஒரே வருத்தம் கானா பிரபா, தனுஷ் பாடிய அடிப் பாடல்களைப் பாடவில்லையே என்பது மட்டுமே.

நிகழ்ச்சியின் இடையே இந்த விழாவிற்காக உழைத்தவர்களில் இரவு பகல் பாராது ஏற்பாடுகளைச் செய்த நால்வர் மேடை ஏற்றப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் துணைவியாரின் கையால் அதைக் கொடுக்க வைத்தது சிறப்பு. இந்த யோசனையை யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.... உண்மையிலேயே மிகவும் சிறப்பான நிகழ்வு... மனைவி கையால் நினைவுப் பரிசு வாங்குவது என்பது எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது... அடுத்த முறை நிறையப் பேர் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் ரகுமான் பாடல்கள் வர, ஆஹா... ராயல்டி பிரச்சினையால் இளையராஜா பாடல்கள் வராதோ என்ற வருத்தம் மேலிட, அதை நீக்கும் வண்ணமாக பிரியங்கா, அரங்கிற்குள் ராஜகானத்தைக் கொண்டு வந்தார். அதன் பின் காதல் ஓவியத்தில் நம்மை ஈர்த்த பிரியங்காவுடன் இசைக்குழுவில் இருந்த அந்த தாடிக்காரர் பாடி அசத்தினார்... அப்படியே இளையராஜாவை குரலில் கொண்டு வந்தார்.... மற்ற சில பாடல்களிலும் குரல் கொடுத்தவர் இவர்.... ஒருமுறை குரல் கொடுக்க ஆரம்பிக்கும் போது சத்யபிரகாஷ் குரலுடன் இடை வர, சிரிப்புடன் விலகிக் கொண்டார். சிங்காரவேலனின் ஆரம்பத்தில் நாதஸ்வரத்தில் சற்றே சறுக்கினாலும் பாடலின் இறுதிக் கட்டங்களில் தன்னைச் சரி செய்து கொண்ட புல்லாங்குழல் வித்வான், புல்லாங்குழலில் கலக்கினார். பழமுதிர்ச்சோலையில் இடையில் வரும் விசில் சப்தத்தை அழகாக விசிலாக்கினார்... அதற்கேற்ப பார்வையாளர்கள் பக்கம் இருந்து அவருக்கு சீட்டி... அதாங்க விசில் பறந்தது. அந்த கீ போர்ட் பையனை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருந்தது.

Image may contain: 9 people, people standing
(நினைவுப் பரிசு பெற்றவர்களுடன் திரு. இராமகிருஷ்ணன் மற்றும் திரு. கலீல் அவர்கள்
 (முறையே 4th , 1st நிற்பவர்கள்))
தமிழகத்தின் தங்கக் குரல் தேடலில் கிடைத்தவர்களுடன் அபுதாபியின் செல்லக்குரல் அமிர்தா (பெயர் இப்படிச் சொன்னதாக ஞாபகம்) 'றெக்க' படப்பாடலான கண்ணம்மாவைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார். சில இடங்களில் இசையில் தவறு, பிரசன்னாவின் பேச்சு என சில விஷயங்களை (பிரசன்னாவின் பேச்சை இங்கு மறுபடியும் சொல்வதால் அவரைப் பிடிக்காது என்று தவறாக நினைக்க வேண்டாம்... அழகான குரல்... அருமையான பாடகர்... இருப்பினும் அவரின் பேச்சு பார்வையாளர்களில் பலருக்குப் பிடிக்கவில்லை.) விடுத்துப் பார்க்கும் போது மிகச் சிறப்பு... நேற்றைய மாலையை அருமையான மாலையாக ஆக்கிக் கொடுத்தது.

மிகச் சிறப்பாக இந்த நிகழ்வை நடத்தி, அபுதாபி வாழ் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான மணித்துளிகளைக் கொடுத்த பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் சார், கலீல் சார் மற்றும் சிறப்பாக விழாவை நடத்த உழைத்த அமைப்பின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

படங்கள் : திரு.இராமகிருஷ்ணன் சாரின் தளத்திலிருந்து, படங்களை எடுத்தவர் திரு.சுபஹான் அவர்கள்... இருவரிடமும் சொல்லாமல் உருவிதற்கு மன்னிக்கவும்...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

மனசின் பக்கம் : மறக்க முடியாத சித்திரை...

Image result for சித்திரை

சித்திரை முதல் நாள்...

தமிழ் வருடப் பிறப்புன்னு சொன்னா ஒரு சாரார் 'தை'தான் வருடப் பிறப்பு என்றும் ஒரு சாரார் சித்திரையே வருடத்தின் நுழைவாயில் எனவும் கொடி பிடிப்பது கொஞ்சக் காலமாகவே இருக்கிறது. அதுவும் இந்த முகநூலில் சொல்லவே வேண்டாம்.... எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அது சமீபத்திய சல்லிக்கட்டு பிரச்சினையாகட்டும்.... நெடுவாசல் பிரச்சினையாகட்டும்... தில்லியில் அம்மணமாக நம்மை நிற்க வைத்த (இங்கு நம்மை என்பது ஒரு விவசாயி அம்மணமாக நின்றால் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாமெல்லாம் அப்படி நிற்க வைக்கப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன்) நிகழ்விலாகட்டும்... திருப்பூர் சாராயக்கடைக்கு எதிரான பிரச்சினையாகட்டும் ஆதரித்தும் எதிர்த்தும் பேச இரண்டு குழுக்கள் உண்டு. எல்லாத்துக்கும் அடிச்சிக்கிட்டு நாறுவானுக... அதிலும் குறிப்பாக மத்திய அரசின் ஜால்ராக்கள் அடிக்கும் லூட்டி தாங்காது. இந்தப் பயகதான் சல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம் கூடை கூடையாக அள்ளினார்கள் என்று சொன்னவர்கள்.... இவர்களின் குழந்தைகளோ... அக்கா தங்கச்சியோ... அம்மாவோ... பொண்டாட்டியோ கலந்து கொண்டிருந்தால் இப்படிப் பேசுவார்களா...?

சரி விடுங்க... சித்திரை ஒண்ணு நம்மள மாதிரி விவசாயக் குடும்பத்தானுக்கு ரொம்ப சிறப்பான நாளுங்க.... வயல்லாம் பசுமையா இருந்து... கதிர் அறுத்து... புது நெல்லில் பொங்கல் வைக்கும் நாள்தான் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ விரும்பவில்லை... அவரவர் விருப்பம் எப்படியோ அப்படி இருப்போம்.... இப்ப சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவரவர் விருப்பம் என ஆத்திகமும் நாத்திகமும் பேசிக்கிட்டு அங்காளி பங்காளியா இருக்கலையா... அப்படி இருந்துட்டுப் போவோம்ன்னு சொல்றேன்... உனக்கு சித்திரை ஒண்ணு வருடப் பிறப்பு இல்லைன்னு தோணுனா பேசாம எப்பவும் போல வேலையைப் பாக்கலாமே.. அதை விட்டுட்டு வாழ்த்துச் சொல்லாதீக... கொண்டாடாதீக... ஆரியன் திராவிடன் என்றெல்லாம் எதற்காக பதிவுகள்... நமக்கு நல்லேரு கட்டுற இந்த நாள் இனிய நாள்தாங்க.

நல்லேருன்னா இன்னைக்கு யாருக்குமே தெரியாமப் போச்சு... அது என்னன்னு கேட்டா... என்ன நல்லாயிருவா... நாங்க நல்லாத்தான் இருக்கோம்ன்னு சொல்றாங்க,,, இப்ப எங்க விஷாலுக்கே பதில் சொல்ல முடியலை... ஆனா நம்மாளுக்கு ஆடு, மாடு, கோழி, செடிகள் வளர்க்கிறதுன்னு கிராமத்து வாழ்க்கையில ரொம்ப இஷடம் நம்மள மாதிரி... சரி நல்லேருக்கு வருவோம்.... பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டில் காளை மாடுகளும் கலப்பையும் இருக்கும் (ஏர்தான் எங்க பக்கம் கலப்பை) காலையில் மாட்டைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து கலப்பை நெகத்தடி (சுத்த தமிழ்ல சொன்னால் நுகத்தடி) எல்லாம் கழுவி, திருநீறு பட்டை இட்டு குங்குமம் வைத்து நல்ல நேரம் பார்த்து ஒரு சிறிய ஓலைப் பெட்டியில் நெல் எடுத்து கொஞ்சம் தண்ணீரும் எடுத்து பூஜைக்குரிய சாமன்களும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னே இருக்கும் மாரியம்மனை வணங்கி இந்த வருடம் நல்லா விளையணும் தாயேன்னு வேண்டிக்கிட்டு வயலுக்குப் போயி... அதுவும் போகும் போதே அம்மான் (மாமா) நல்லேரு கட்ட வரலை... சித்தப்பா கிளம்பலையா... என ஒவ்வொருவரையும் அழைத்தபடி வயலுக்குச் செல்வார்கள்...

சனி மூலையில் மாட்டைக் கலப்பையில் பூட்டி... கோணச்சால் அடிக்காமல் நேராக இரண்டு சாலோ மூன்று சாலோ ஓட்டி... சனிமூலையில் விதையிட்டு தண்ணீர் ஊற்றி தீபம் பார்த்து சாமி கும்பிட்டுத் திரும்புவார்கள். இது எப்போ நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்... கல்லூரிக்குப் போகும் போது காளைகளும் ஊருக்குப் போயாச்சு... வீட்டுக்குப் பாலுக்கென ஒரு பசு நிற்பதே அரிதானது. வயலெல்லாம் டிராக்டர் உழவுதான்... ஏம்ப்பா.... சால் என்ன கோணலாப் போடுறே.... நேர பாத்து உழுப்பா... என்று சொன்ன காலம் போய் வரப்பாவது ஒண்ணாவது டிராக்டர்க்காரன் இழுக்கிறதுதான் கோடுன்னு ஆயிப்போக... நல்லேருக் கட்ட டிராக்டரை வச்சா உழ முடியும்.... ஒரு கலக்கொட்டோ மண்வெட்டியோ எடுத்து கழுவி திருநீறு பொட்டு வைத்து கொஞ்சம் நெல்லெடுத்துக்கிட்டு சொம்புல தண்ணி எடுத்துக்கிட்டு அதே மாதிரி மாரியத்தாக்கிட்ட வேண்டிக்கிட்டு வயல்ல போயி சனி மூலையில கொத்தி விதையிட்டு தீபம் பார்த்து வருவோம். இப்ப வயலெல்லாம் கருவை முளைத்து விவசாயம் அத்துப் போன பூமியில் அந்த நடைமுறை மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. விவசாயம் தொலைந்தது வேதனையிலும் வேதனை.... மானத்தை விடுத்து போராடிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் மான் கீ பாத் என கவுதமியையும் ஐஸ்வர்யாவையும் பார்த்து குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிறது இந்தியா... டிஜிட்டல் இந்தியான்னு விவசாயிகளைத் தொலைச்சிட்டு ரப்பர் அரிசி சாப்பிட வைக்காமல் விடமாட்டானுக போல.

இடையில இடையில வேதனை வெடிச்சி எழுத்து வேற பக்கம் போயிருது... அப்ப சித்திரையில நல்லேரு கட்டுற நாள் சிறப்பான நாள்... வயல் விளைந்து நல்ல அறுபடை செய்ய வேண்டும்... பஞ்சம் பட்டினி இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நல்லேரு கட்டி மகிழும் நாள்தான் வருடத்தின் தொடக்க நாள்... நன்றாக விளைந்து... பட்டி பெருகி, பால் பானை பொங்கி சந்தோஷித்து தங்களின் வெள்ளாமை நல்ல விளைச்சலைக் கொடுத்ததுக்கு சாமிக்கும் தங்களோடு வயலில் வேலை பார்த்த மாடுகளுக்கும் சிறப்பு செய்யும் தை ஒண்ணு... வருடத்தின் தொடக்க நாளாய் எனக்குத் தெரியவில்லை... எது எப்படியோ சித்திரை ஒண்ணு உழவனுக்கு உகந்த நாள்தான்.

அப்புறம் இன்னைக்கு ராத்திரி தேவகோட்டையில் கரகாட்டம், பாட்டுக் கச்சேரி, நாடகம் என களைகட்டும்... படிக்கும் போது சைக்கிளில் கூட்டமாய் வந்து ஒவ்வொன்றையும் கொஞ்சக் கொஞ்ச நேரம் பார்த்து ரசித்து இடையில் சினிமாவுக்கு வேறு போவதுண்டு.... ஆஹா... அதெல்லாம் ஒரு கனாக் காலம் இல்லை... இனி காணக் கிடைக்காத காலம்... என்ன ஒரு சந்தோஷமான நாட்கள்... இப்போ பண்டிகை தினங்கள் எல்லாம் சந்தோஷத்தைத் தின்று தொலைக்காட்சிக்கு முன்னர் தவம் கிடக்க வைத்து விட்டது கால மாற்றம்... அதில் கிடைத்த சந்தோஷத்தில் ஒரு துளி கூட இதில் இல்லை என்பதை பண்டிகை நாளில் சுற்றித் திரிந்து  அனுபவித்து வாழ்ந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.

எல்லாருக்கும் சித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள்... 

இன்னைக்கு இங்க பாரதி நட்புக்காக அமைப்பினர் 'ஆர்க்கெஸ்ட்ரா' வச்சிருக்காங்க.. விஜய் டிவியில் 'தமிழகத்தின் தங்கக்குரல் தேடலில்' முதலிடம் பிடித்த கேரளத்து அல்கா அஜீத்துடன் இன்னும் மூவர் வருகிறார்கள். அண்ணன் கில்லர்ஜி இருந்தா ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு வேடிக்கை பார்க்கப் போவோம்... ம்... அவரும் ஊருல பாத்துக்கிறேன்னு பொயிட்டாரு... இப்ப எழுத்தாளர் கனவுப்பிரியன் அவர்கள் ஜோடி போட்டுக்கலாம் வாங்கன்னு சொல்லியிருக்கிறார். எனவே இரவு 'ஆர்க்கெஸ்ட்ரா' பார்க்கப் போறோம். வர்றவங்க வாங்க....

Image may contain: 4 people, people smiling, text

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

சினிமா : கவண்

வண்...

கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கும் படம். மீடியா மக்களில் பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை என்றும் சாதாரண மக்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள், தங்கக் குரலைத் தேடும் போட்டிகள், ஆய்த எழுத்து, நேருக்கு நேர் போன்றவற்றைப் பிடிக்காதவர்களுக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு என்றும் முகநூலில் பார்க்க முடிகிறது. 

Image result for கவண் விமர்சனம்

படம் பிடிச்சிருக்கு... பிடிக்கலை.... ஆனா எல்லாருக்கும் விஜய் சேதுபதி நடிப்பு பிடிச்சிருக்கு. கமல், அஜீத், தனுஷ்ன்னு பிடித்த நடிகர்கள் பலர் இருந்தாலும் இப்போ வி.சே.யின் எதார்த்த நடிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல நடிகன்.

ஆமா 'கவண்'னா என்ன..?

கவண்ங்கிறது வேற ஒண்ணுமில்லைங்க... ஊர்ல கவட்டைக் கம்பாப் பார்த்து (வி வடிவில்) வெட்டி அதை அழகா செதுக்கி... வேணுமின்னா உடைந்த பீங்கானால் மேலே சீவி வழுவழுப்பாக்கி, சைக்கிள் டியூப்பை அழகா, ஒரு அடி நீளத்துக்கு வெட்டி, சிறிதாக சணல் போல கத்திரிக்கப்பட்ட சைக்கிள் டியூப்பால் அதை கவனையின் இரண்டு பக்கத்திலும் நறுக்குன்னு கட்டிட்டு தோலால் ஆன சிறு வாரை (கல்வார் என்பது அதன் பெயர்) கவனையில் கட்டப்பட்ட டியூப்பின் முனைகளில் கட்டி இணைத்து கல்லை வைத்து, குறி பார்த்து, இழுத்து அடித்து காக்கை, கொக்கு, அணில், ஓணான், சில நேரங்களில் கோழிகளை அடித்துப் பிடிப்பதற்கு கிராமங்களில் பயன்படுத்துவதுதான்...

எங்க பக்கம் இதற்குப் பேர் கவட்டாப்புல் (கவட்டை+வில் என்பது மருவியிருக்கலாம்) சின்னப் பிள்ளைகளில் இது ஒரு விளையாட்டுப் பொருள்... விடுமுறை நாளில் சிலர் கவட்டாப்புல்லும் கையுமாத்தான் திரிவர். நெல்லவிச்சி காய வைக்கும் போது கோழி, காக்கைகளை விரட்டப் பயன்படும். இது நரிக்குறவர்களிடம் அதிகம் இருக்கும். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நரிக்குறவர்கள் செய்து விற்பார்கள். பள்ளியில் படிக்கும் போது அவர்களிடம் வாங்கியிருக்கிறோம். சைக்கிள் டியூப்பைவிட கார் டியூப்பில் உருண்டையாக கட்பண்ணி கட்டி விற்கும் கவட்டாப்புல்லுக்குத்தான் அதிக கிராக்கி...

தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி, தரவரிசைக்காக செய்யும் மோசமான நாடகங்களுக்கு முன்னோடி விஜய் டிவி என்பதை நாம் அறிவோம். சிம்பு - பிருத்விராஜ் மோதல் நாடகம்... சிம்புவின் அழுகை என அடிக்கடி காட்டிக் காட்டியே டி.ஆர்.பி.யை ஏற்றிக் கொள்ள, அதன் பின்னர் எல்லாத் தொலைக்காட்சிகளும் இந்த நாடக அரங்கேற்றங்களை மிக அழகாகச் செய்து வருகிறார்கள். சிம்பு - பிருதிவி நாடகத்தை சில காலங்களுக்குப் பிறகு பிருத்வி உடைத்தாலும் நாடக அரங்கேற்றம் என்பது இன்னும் தொடரத்தான் செய்கிறது. அதிலும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் கேலிக்கூத்துக்கள் உச்சபட்ச கேவலம். தமிழகத்தின் தங்கக் குரல் என கேரளத்தின் குரல்களைத் தேடிக் கொடுக்கும் நிகழ்ச்சியில் பிள்ளைகளை அழ வைப்பதுடன் பெற்றோரையும் அழ வைக்கும் தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம்.

சல்லிக்கட்டு,  நெடுவாசல், தில்லியில் விவசாயிகள் என எதையும் கண்டுகொள்ளாத பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சசிகலா சிறையில் என்ன சாப்பிட்டார் என்பதைப் பற்றி விலாவாரியாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு சென்றன. ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடாவில் மற்ற கட்சிகளைப்  பற்றி நேரிடையாகச் சொல்லும் மீடியாக்கள் கோடிகளில் விளையாடும் கேடிகள் பற்றிப் பேசுவதில்லை. எப்போதும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று மட்டும் குரல் கொடுக்கத் தவறுவதில்லை... நிர்வாணமாக உருண்ட விவசாயிகளை விட்டு விட்டு சினிமா நடிகைகளின் செய்திகளை  தலைப்புச் செய்தியாக்கத் தவறுவதில்லை... இப்படியான ஊடகங்களை தோலூரித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். வசனம் கபிலனும் சுபாவும்.... கலக்கல்.

Image result for கவண் விமர்சனம்

விளம்பரக் கம்பெனிகளை முன்னிறுத்தி தொலைக்காட்சிகள் செய்யும் உள்ளடி வேலைகளையும் தோற்றவன் அழ வேண்டும் என்பதற்காக அவர்கள் நடந்து கொள்ளும் அநாகரீக செயல்களையும் அரசியல்வாதிகளிடம் முன்கூட்டியே கேள்விகளைக் கொடுத்துவிட்டு அதை மட்டுமே கேட்கும் நிகழ்வுகளையும் காட்டும் முன் பாதி ஜாலியாய் பயணித்தாலும் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளயே சுற்றுவது இழுவையாய்தான் இருக்கு. இரண்டாம் பாதி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களும் மற்றொரு தொலைக்காட்சி நிலைய இயக்குநரான டி.ஆரும் சேர நன்றாக பயணிக்கிறது. டி.ஆர். சில இடங்களில் ஓவர் டோஸ்தான் என்றாலும் பல குரலில் பேசுவது, தன் நிலை குறித்துச் சொல்வது என சில இடங்களில் அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தின் கதை எப்படியிருந்தாலும் படத்தைப் தூக்கி நிறுத்தி, பார்க்கும்படி செய்யும் நடிப்புக்குச் சொந்தக்காரர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் என்றாலும் அப்படியே மாறும் நடிகன்... நாந்தான் சூப்பர் ஸ்டார் என பலர் மார்தட்டிக் கொண்டிருக்க... நடிப்பில் நவரச நாயகர்களின் வாரிசாய் முன் நிற்பது வி.சே.தான். இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கும் இடம் கலக்கல்... முதல்வன் அர்ஜூன் - ரகுவரன் பேட்டி போல் செம... தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

மடோனாவுக்கு வி.சே. உடன் இது இரண்டாவது படம். மலையாளத்தில் அனைவரையும் கவர்ந்த 'பிரேமம்' படத்தில் நம்ம மலர் டீச்சர் சாய் பல்லவி புகழ் பெற்றது போல் மற்ற இரண்டு நாயகிகளான அனுபமாவும் மடோனாவும் புகழ் பெற்றார்கள். மடோனா அழகி... பார்ப்பவரை ஈர்க்கும் அழகு மற்றும் நடிப்பு அவரிடம் உண்டு... இதிலும் சோடை போகவில்லை. வி.சே.வுக்கு கழிவறைக்குள் வைத்து அறிவுரை சொல்லும் இடத்திலும் டாக் ஷோ முடித்து வி.சே. கண்களால் தேடும் இடத்திலும் இறுதிக் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார்.

முஸ்லீம் இளைஞனாக.. தன் கிராமத்தின் பாதிப்புக்கு காரணமான அமைச்சரின் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் இளைஞனாக விக்ராந்த்தும், அவரின் காதலியாக... அவரோடு இணைந்து போராடியதால் கற்பை இழக்கும் பெண்ணாக தர்ஷணா ராஜேந்திரனும், வி.சேயின் நண்பர்களாக ஜெகன் மற்றும் சாந்தினியும், போலீஸ் ஆபீசராக நாசரும், தான் வேலை செய்யும் ஜென் ஒன் தொலைக்காட்சிக்கு விசுவாசியாக கிருஷ்ணாவும், மூத்த செய்தி ஆசிரியராக பாண்டியராஜனும்,  ஜென் ஒன் பொது மேலாளராக பிரியா ராஜ்குமார் அவரவர் வேலையை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் ஆகாஷ் தீப்... எடுபடவில்லை... வசனம் பேசும் போதெல்லாம் எந்த உணர்ச்சியையும் காட்டாது... ஒரு நிறைவனா வில்லனாய் இல்லாமல் கிருஷ்ணாவும்  பிரியாவும் அடித்து ஆட, இவர் நம்மைச் சோதிக்கிறார்... அதுவும் வி.சே.க்கு முன்னால் அவரின் டயலாக் ஏற்ற இறக்கத்தில்... நக்கலில்... நையாண்டியில்... வில்லன் காணாமல் போகிறார். நம்ம ரகுவரன் மாதிரி ஆட்களின் இழப்பு பேரிழப்புத்தான்... அவராக இருந்திருந்தால் அடித்து ஆடியிருப்பார்... செல்லம்... செல்லம்ன்னு பிரகாஷ்ராஜ் கூட செல்லமாய்ப் பின்னிப் பெடலெடுத்திருப்பார். இவர் அடித்து ஆடவில்லை... கட்டை வைப்பதில் கூட திணறல்.

Image result for கவண் மடோனா

இசை ஹிப் ஹாப் தமிழா... ஒரு பாரதி பாடலை கொன்று எடுத்திருக்கிறார்... நமக்கு வருத்தமா இருக்கு... பலர் செமன்னு சொல்லியிருக்காங்க... பாரதி கேட்டால் பாவம்ய்யா... அவரை விட்டுருங்க... இசை சுமார் ரகமே. ஒரு காட்சியில் வந்தாலும் பவர் பவர்தான்யா... டிரம்ஸ் வாசித்து நம்மை ஓ போட வைத்துவிடுகிறார்.

தொலைக்காட்சிகளின் அயோக்கியத்தனத்தை கொஞ்சம் ஓவர்டோஸாகக் கொடுத்திருந்தாலும் பார்த்து ரசிக்கலாம்.

விஜய் சேதுபதி ராக்ஸ்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 12 ஏப்ரல், 2017

13.'என்னைப் பற்றி நான்' - தமிழ்வாசி பிரகாஷ்

ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கும் வலைப் பதிவர் மதுரைக்கார நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள். தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் இவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மதுரையில் வலைப்பதிவர் மாநாடு நடக்கும் போது சீனா ஐயா, தனபாலன் அண்ணா உள்ளிட்ட இன்னும் பலருடன் இணைந்து முனைப்புடன் செயலாற்றியவர். மேலும் சீனா ஐயாவுடன் வலைச்சரத்தை மிகச் சிறப்பாக நடத்தியவர்.

வலைச்சரம் என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது... வாரம் ஒரு ஆசிரியர் என எத்தனை வலை ஆசிரியர்களை எழுத வைத்து அழகு பார்த்தது இந்த வலைச்சரம்...  எனக்கெல்லாம் மூன்று முறை வாய்ப்புக் கொடுத்தார்கள். தற்போது வலைச்சரம் என்ன காரணத்தாலோ நிறுத்தப்பட்டுவிட்டது. இடையில் ஒருமுறை தமிழ்வாசியுடன் இது குறித்துப் பேசினேன். எடுத்து நடத்துவோம் நண்பா என்றார். அதன் பின் இருவருமே அதை மறந்தாச்சு.... விரைவில் வலைச்சரத்தை புத்துணர்வோடு மீண்டும் வலம் வர வைக்க எல்லாரும் முயற்சிக்க வேண்டும். 

சரி நண்பர் தமிழ்வாசி பற்றி இன்னும் கொஞ்சமாய்... மதுரைக்காரர்தான்... அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு (ஊருக்குப் போகும் போது) இருந்தும் இன்னும் சந்திக்காத நண்பர்... முகநூலில்... வாட்ஸ் அப்பில்... போனில்... என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் இன்னும் முகம் பார்க்காத நட்பாய்...

சாண்டில்யனின் கதைகளைப் பற்றி சிலாகித்து எழுதக் காரணமாய் அமைந்தவர் இவர். ஆம்... கல்கியில் பொன்னியின் செல்வனை வாசிக்க வைத்து அதன் பின் சாண்டில்யனுக்குள் இறக்கிவிட்ட நண்பர்... எதை வாசித்தாலும் அது குறித்து முகநூல் அரட்டையில் என்னிடம் சொல்லி வாசிக்க வைப்பவர்.

தனது வலைத்தளமான !தமிழ்வாசி!-யில் தொழில் நுட்பப் பதிவுகள் அதிகம் எழுதியவர்... முகநூல், டுவிட்டரில் தங்கி விட்டதாலும் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டதாலும் தற்போது வலைத்தளத்தில் எழுதுவதில்லை என்றாலும் அவ்வப்போது தொழில் நுட்ப பதிவுகள், சினிமா விமர்சனம் என வலைப்பூவை வாடமல்தான் வைத்திருக்கிறார்.

இனி அவரைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்....


ணக்கம் நண்பர்களே..

நான் பிரகாஷ் குமார்,

பதிவுலகிற்காக தமிழ்வாசி பிரகாஷ்..

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பு மற்றும் இயந்திரவியல் பட்டயப்படிப்பு முடித்து, கோவை மற்றும் சென்னையில் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றி, தற்போது மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

தமிழ்வாசி என்னும் வலைப்பூவை கடந்த 2010-இல் ஆரம்பித்து பல இடுகைகள் எழுதி, தற்போது எழுத்து குறைந்து விட்டது. இந்தச் சுழலில் நண்பர் நித்யா குமார் என்னைப் பற்றிஎழும் தலைப்பில் ஒரு சில வரிகள் கேட்டார். ஆகையால் சிறு அதிர்ச்சியோடு இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பூவில் ஆரம்ப காலத்தில் என்னவோ ஏதோ எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், வலைப்பூவை வடிவமைக்கும் விஷயங்களில் ஆர்வம் வந்து அது தொடர்பாக இருந்த சில கட்டுரைகள் மற்றும் ஆங்கில வலைப்பூக்களையும் பார்த்து, அறிந்து எனது வலைப்பூவில் சோதித்து, பின்னர் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், வலைப்பூவை எவ்வாறு  உருவாக்குவது, எவ்வாறு மாற்றங்களை செய்வது என்பதை தொடராக எழுதியுள்ளேன். அதோடு அவ்வப்போது நான் அறியும் சில தொழில்நுட்ப விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, தொழில்நுட்ப பதிவுக்ளையும் எழுதியுள்ளேன். மேலும் சில நண்பர்களின் வலைப்பூ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வும், வலைப்பூ டெம்ப்ளேட் அமைத்தும் தருவது உண்டு. 

தற்சமயம் சில தொழில்நுட்பங்களை  யூடூப் வீடியோவாக பதிவேற்றியும் வருகிறேன்... அதோடு முகநூலிலும் சில மொக்கைகள் எழுதி வருகிறேன். எனது எழுத்து பற்றி சொல்வதென்றால் இவ்ளோதான்...

அதே சமயம் வாசிப்பில் ஆர்வம் வந்துள்ளது. அதுவும் சரித்திர நவீனங்களில் தான் ஆர்வம். அதற்கு காரணம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினமே காரணம். அவர் எழுதிய எல்லா சரித்திர நாவல்களும் வாசித்து முடித்து, என் பார்வையை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய நவீனங்கள் பக்கம் திருப்பி கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வாசித்து முடித்தாயிற்று. இன்னும் நிறைய சரித்திர நாவல்கள் கைவசம் இருக்கு. அதெல்லாம் வாசித்து முடிப்பதற்குள்  எப்படியும் அடுத்த வருடம் பிறந்து விடும். வாசித்த நாவல்கள் பற்றி முகநூலில் பதிவேற்றி நண்பர்களுடன் விவாதிப்பதும் உண்டு.

ஆங், சொல்ல மறந்துட்டேனே... எனக்கு வரலாற்று நாவல்களைக் கொடுத்து உதவியவர்கள், வாத்தியார் பால கணெஷ் மற்றும் மெக்னேஷ் திருமுருகன்.. இன்னும் வாத்தியாரிடம் பெற வேண்டிய நாவல்கள் நிரம்ப உள்ளன.  நண்பர்களின் பரிந்துரையின் பேரில் அவ்வப்போது இணையத்தில் ஆங்கில திரைப்படங்கள் (தமிழ் மொழி மாற்றத்தில்) பார்ப்பதும் உண்டு. 

ம்ம். அப்படியே பொழுது ஓடுது... 

இந்த இணையமும், வலைப்பூவும் எனக்கு நிறைய நண்பர்களைக் கொடுத்துள்ளது. இன்னமும் கொடுத்துக் கொண்டுள்ளது. 

உங்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த குமார் அவர்களுக்கு நன்றி...

இன்னும் பலரது என்னைப் பற்றிபதிவுகளை எதிர்பார்த்து உங்களுடன் நானும்....


நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

ண்பரைப் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள்... இவரைப் பற்றி இன்னும் விரிவாய் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன்... ரொம்பச் சுருக்கமாச் சொல்லிட்டார்... தனது பணிகளுக்கு இடையே கேட்டதும் எழுதிக் கொடுத்த பிரகாஷ்க்கு நன்றி.

தொடர்ந்து எழுதி அனுப்பிக் கொண்டிருக்கும்... எழுத இருக்கும்... வாசிக்கும்... வாசித்து வலை ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

இந்த வாரம் இந்தப் பகுதியை அலங்கரித்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

அடுத்த வாரம் மற்றுமொரு வலை ஆசிரியர் தொடர்வார்....
-'பரிவை' சே.குமார்.