மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 7 நவம்பர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 26

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

26. அவள் வரவில்லை... இவளும் போகவில்லை...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.   ராமுக்கு புவனா அனுப்பிய பொங்கல் வாழ்த்து ராசு கையில் கிடைக்கிறது. பொங்கலுக்கு ராம்கி ஊருக்குப் போக அம்மாவிடம் சம்மதம் கேட்கிறாள்.

இனி...

"என்னடி லீவுன்னா அவ்வளவு சீக்கிரம் எந்திரிக்கமாட்டே... என்ன சீக்கிரமே எந்திரிச்சிட்டே?" என்ற அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் புவனா அங்கும் இங்கும் யாரையோ தேடினாள்.

"என்னது... யாரைத் தேடுறே..? உங்கப்பாவையா... அவரு கருக்கல்ல ஆட்டு யாவாரியப் பாக்கப் போயிட்டாரு... எல்லாஞ் சொல்லிட்டேன்... அவரும் ரொம்ப யோசிச்சாரு... அப்புறம் பேசிக்க் சரி பண்ணினேன். இந்த ஒரு தடவை ஆசைப்படுறான்னு விடலாம். இதுவே தொடரக் கூடாதுன்னு ரொம்ப கண்டிசனா சொல்லிட்டாரு. நாந்தான் சின்னப்புள்ள கிளாசுப்புள்ளங்கல்லாம் போகுதுன்னு ஆசைப்படுதுன்னு சொல்லி வச்சேன். அவரு வந்ததும் நீயும் ஒரு வார்த்தை கேட்டுப்புடு... ஆமா.."

"என்னத்துக்கும்மா?" என்றாள் புவனா.

"என்னடி... என்னத்துக்கா... அந்தப்பய வீட்டுக்கு போறேன்னு சொன்னே... "

"உங்கிட்ட சொல்லிட்டு போய் யோசிச்சேம்மா... எனக்கிட்ட நீ நல்லாப் பேசினாலும் அப்புறம் வைரவன் சொன்னதையெல்லாம் யோசிச்சிருப்பே... உனக்கு வயித்துக்குள்ள ஒரு பக்கம் புளியைக் கரச்சிருக்கும். ஏன்னா பொட்டப்புள்ளயப் பெத்த வயிறுல்ல... அப்பாகிட்ட நீதான் எல்லாத்தையும் எடுத்துச் சொல்லியிருப்பே..."

"ஏய் அப்படியெல்லாம் இல்லடி... அதான் உங்கப்பா போகச் சொல்லிட்டாருல்ல... அப்புறம் என்ன..."

"இல்லம்மா உன்னோட பயம் எனக்குப் புரியுதும்மா... அதான் போக வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்."

"என்னடி நீதான் எல்லாரும் போறாளுங்க.. போகலைன்னா சத்தம் போடுவாளுகன்னு சொன்னே... இப்ப போகலைங்கிறே..."

"இல்லம்மா உன்னோட பயம் ஒரு பக்கம் இருந்தாலும் வைரவன் ரொம்ப கோபமாப் பேசிட்டுப் போனான். நாளைக்கு அந்தப் பையனை அடிச்சிக்கிடுச்சுப்புட்டான்னா... அது போக அவன் ஏழைக் குடும்பத்துப் பையன். அவங்க அம்மாவோட கனவே அவன் நல்லாப் படிச்சி குடும்பத்தை கரையேத்தணுங்கிறதுதான். நம்ம வைரவனைக் காப்பாத்தப் போயி காலேசுல அவன் மேல பிளாக் மார்க் ஆயிடுச்சி... வைரவன் அடிக்கப் போய் அதனால அவன் பேர் இன்னும் கெடலாம்...ஏன்னா..." நிறுத்தி அம்மாவை நோக்கினாள்.

"என்னடி ஏன்னான்னு என்னையப் பாக்குறே?"

"ஒருவேளை வைரவன் அடிக்கப் போறான்னு வச்சுக்கயேன்... கத்தியோட வந்தவனுங்களை அடிச்சி நம்மாளைக் காப்பாத்தினவன்... இவன் அவனை அடிக்கப் போயி அவன் இவனை திருப்பி அடிச்சிட்டா அவனோட படிப்பு பாழாகிப் போகும். என்னால எதுக்கும்மா சண்டை சச்சரவு... அதான் என்னோட பிரண்டுக்கிட்ட எதாவது சொல்லி போகாமல் இருந்திட்டா எல்லாப் பிரச்சினையும் சால்வ் ஆயிடுமில்ல... எப்படி என்னோட திங்கிங்..." 

"சொல்றது சரியாத்தான் இருக்கு... ஆனா நேத்து அந்தக் குதி குதிச்சே... இன்னைக்கு மாத்திப் பேசுறே... எனக்கு எதுவுமே புரியலை..."

"புரிஞ்சு மட்டும் என்ன பண்ணப் போறே... விடும்மா.. நான் போகலை... இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் உங்க மகன் சொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல... ராத்திரி அப்பா எம்புள்ளை எந்த தப்பான வழியிலயும் போகக்கூடாதுன்னு கருப்பருக்கு முடிஞ்சி வச்சியே காசு அதுவும் வேஸ்ட்தான்..."

"நான் முடிஞ்சதை நீ எங்கடி பார்த்தே..?"

"முடிஞ்சு வச்சிருப்பேன்னு ஒரு நம்பிக்கையில போட்டு வாங்கிப் பார்த்தேன்..." என்றபடி பட்டாம்பூச்சியாய் ஒடி போனை எடுத்து ராம்கி கொடுத்த மல்லிகாவின் நம்பரை டயல் செய்தாள்.

"அம்மா... என்னோட படிச்சவளுங்க பொங்கலுக்கு வந்திருக்காளுங்க... போய் பார்த்துட்டு வந்துடுறேன்.."

"காலையில பொங்க... எதாவது உதவியா இருக்கலாம்... இப்ப போகணுமா?"

"அம்மா அப்புறம் அவளுகளைப் பாக்க முடியாது... பொங்க முடிஞ்சதும் ஆஸ்டலுக்குப் போயிருவாளுங்க..."

"நீ இங்க இருந்தாலும் எனக்கு என்ன ஒத்தாசையா செய்யப் போறே..? உங்கப்பா வர்றதுக்குள்ள வந்துடு... அப்புறம் அவரு என்னையத்தான் திட்டுவாரு..."

"வேணுமின்னா அவரைப் போயி கடையில பாத்து அட்டெண்ட்டன்ஸ் போட்டுட்டு வரவா?." என்றவள் அம்மாவின் கத்தலை காதில் வாங்காமல் சைக்கிளில் சிட்டாய்ப் பறந்து பூங்காவை அடைந்த போது அங்கு அவளுக்காக மல்லிகா காத்திருந்தாள்.

"ஹாய்.... சாரி லேட்டாயிடுச்சு..."

"பரவாயில்லங்க... வாங்க உள்ள போகலாம்..."

இருவரும் பேசாமல் நடக்க, மல்லிகா பேச்சை ஆரம்பித்தாள். "என்னங்க என்மேல ரொம்ப கோபமா?"

"சேச்சே... அப்படியெல்லாம் இல்ல... "

"இது சகஜந்தானே... ஒருத்தரை நேசிக்கிறவங்க அடுத்தவங்க பேசினா கோபப்படத்தான் செய்வாங்க..."

"இல்ல... அது..."

"சரி விடுங்க... ராம்கி வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க... அப்புறம் தனியா பேசணுமின்னு சொன்னீங்க... என்ன பேசணும்..?"

"முதல்ல இந்த வாங்க போங்க வேண்டாமே... பேரைச் சொல்லியே கூப்பிடலாமே..."

"ம்... ஒகே... சொல்லு புவனா... நான் என்ன செய்யணும்?"

"எங்கண்ணன் பேசுறதைப் பார்த்த ராம்கியை அடிச்சாலும் அடிப்பான் போல தெரியுது... பத்தாததுக்கு எங்கம்மா வேற ரொம்ப பயப்படுறாங்க. அவங்க பயம் எங்கப்பா வரைக்கும் போனா பிரச்சினை... இன்னும் ரெண்டு வருசம் படிப்பு இருக்கு... என்னால ராம்கியோட படிப்புக்கு பிரச்சினை வந்துடக்கூடாது. அதான் நான் பொங்கலுக்கு வராம இருந்தா எல்லாப் பிராப்ளமும் அடங்கிடும்ல்ல..."

"நான் ஒண்ணு கேட்டா பொய் சொல்லாம பதில் சொல்லுவியா புவி..."

புவி என்றதும் ராம்கி நெஞ்சுக்குள் வந்தான். "ம்... கேளு..."

"நீயும் ராம்கியும் லவ் பண்ணுறீங்கதானே..?"

"அது... அது..."

"சரி இதுவரைக்கும் பிரண்டாத்தான் இருக்கீங்கன்னு சொன்னா நம்ம முடியாது... ஒருத்தர் மேல ஒருத்தர் கோபப்படும் போதே எனக்குத் தெரியும்... என்ன உங்க மேட்டர் யாருக்கும் தெரியாம இருக்கட்டும்ன்னு நினைக்கிறீங்க... எவ்வளவு நாளைக்கு..? எப்பத் தெரிஞ்சாலும் பிரச்சினைதானே..?"

"இல்ல... காதலிக்கிறோம்ன்னு வச்சுக்கயேன்... இப்போ வெளிய தெரிஞ்சா எல்லாப் பக்கமும் பிரச்சினைதான்... பின்னால தெரிய வரும் போது சமாளிக்கலாம்ன்னு தைரியம் இருக்கு... பாக்கலாம் என்ன நடக்குதுன்னு... நான் சொன்னது உங்க பசங்களுக்குத் தெரிய வேண்டாம் ப்ளீஸ்...."

"கவலைப்படாத நான் சொல்லமாட்டேன்... சரி நீ நாளை மறுநாள் வரலை... அப்படித்தானே அவன்கிட்ட என்ன சொல்லணும்..."

"எங்க அத்தை வந்துட்டாங்க... அதான் வரலைன்னு சொல்லிடு...."

"இது சரியா வருமா?"

"தெரியலை... நம்பமாட்டான்..."

"ம்... இப்படிச் செஞ்சா என்ன"

"எப்படி..?"

"நானும் போகலைன்னா...?"

"நீயுமா?"

"ஆமா... எங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்துட்டாங்க... அதனால நான் வரலை... நீ வந்து காத்திருந்துட்டு வீட்டுக்குப் பொயிட்டேன்னு சொல்லிடுறேன்... ஏன்னா பசங்க கூட நாங்க வரலை... தனியாத்தான் வருவோம்ன்னு சொன்னேன். எங்க பொண்ணுங்களுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன். பசங்க மட்டும் பொயிட்டு வரட்டும்... என்ன சரியா?"

"நீ பொயிட்டு நான் சொன்னதை சொன்னா போதுமே... எதுக்கு இப்படி மாத்தி..."

"இல்ல புவி... உனக்காகத்தான் என்னைய வரச்சொன்னான்னு எனக்குத் தெரியும். அவன் உனக்காகத்தான் காத்திருப்பான்.... நீ வரலைன்னா ரொம்ப அப்செட் ஆயிடுவான். எதோ பிரச்சினையின்னு நினைச்சிருவான். அதான் நான் போகலை அதனால நீயும் போக முடியலைன்னு சொல்லிட்டா... பிரச்சினையில்லை.... ஓகே... இதையே சொல்லுவோம்..."

"ரொம்ப நன்றிடி..." என்று உரிமையுடன் டி போட்ட புவனா "உம்மேல கோபப்பட்டேன் பாரு... எனக்காக எப்படி யோசிக்கிறே... நீ போறதையும் கெடுத்துட்டேன் பாரு... "

"விடுடி... இப்ப இல்லைன்னா இன்னொரு நாள் போகலாம். முதல்ல உன்மேல உங்க வீட்ல சந்தேகம் வராம இருக்கணும். அதுதான் முக்கியம்... சரி கிளம்பு... நேரத்தோட வீட்டுக்குப் போ... காலேசு டேய்ஸ்ல ஒருநாள் எங்க வீட்டுக்கு நீ வரணும்... சரியா..."

"கண்டிப்பா இனி நாம் நல்ல தோழிகள்... ஒகே... பை... ஹேப்பி பொங்கல்டி..." என்று கத்தியபடி சைக்கிளை எடுத்த புவனாவிடம் விடைபெற்று தனது சைக்கிளை எடுத்த மல்லிகா எதிர் திசையில் பயணிக்க, புவனா மனசுக்குள் மல்லிகா மணம் வீசத் தொடங்கினாள்.

(சனிகிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

பிரண்டுன்னா இப்புடி இருக்கணும்!என்னமா திட்டம் போடுறாங்க,இந்தப் பொண்ணுங்க!!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்ந்து கதையை வாசித்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.