மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 ஜூலை, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 71

(புதங்கிழமை வர வேண்டிய பகிர்வு ஒரு நாள் தாமதமாக...


முந்தைய பதிவுகளைப் படிக்க... 



71. ஒரு புள்ளியை நோக்கி பயணம் ஆரம்பம்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். இதற்கிடையே அக்காவைப் பார்க்கப் போன ராம்கி, அண்ணியையும் அம்மாவையும் இணைக்கிறான். ராம்கியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மல்லிக்கா வீடு செல்லும் புவனா அங்கு ராம்கியையும் பார்க்க நேரிடுகிறது.

இனி...

ராம்கியை அங்கு பார்த்ததும் ஓடிச் சென்று அழுகையோடு அவனைக் கட்டிக் கொண்டாள் புவனா. எதற்கு அழுகிறாள்... என்ன ஆச்சு.... ஏதாவது பிரச்சினையா... என்பது எதுவும் புரியாமல் தவித்த ராம்கி "ஏய் புவி... என்னடா ஆச்சு... எதுக்கு அழுகுறே.... இங்க பாரு... இது நம்ம பிரண்ட் வீடு... அவளோட அம்மா வீட்டுக்குள்ள இருக்காங்க... கட்டிப்பிடிச்சா தப்பா நினைக்க மாட்டாங்களா..."

புவனா பதில் பேசாமல் அவன் தோளில் சாய்ந்து அழ, மல்லிகாதான் பேசினாள். "எங்கம்மாவுக்குத்தான் உங்க கதை தெரியுமே... அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க... ஆனா பக்கத்து வீட்டு ஆளுங்க பாத்தா என்ன வேணுமின்னாலும் பேசுவாங்க... வாங்க உள்ள போயி பேசலாம்" என்றதும் அவனை விட்டு விலகிய புவனா, அவன் வலது பக்கத்து தோளில் சாய்ந்தே நடந்தாள். இது ராம்கிக்கு புதிதாகப்பட்டது.

"எங்கிட்ட கூட சொல்லாம வந்திருக்கீங்க?" அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகக் கேட்டாள்.

"கண்ணம்மாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்ன்னுதான்...."

"எருமை... எருமை... அவ அவ அழுதுகிட்டு கிடக்கிறா... சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கிறாராம்... சர்ப்ரைஸ் விசிட்... இங்க நடக்கிறது எதுவாவது தெரியுமா? இன்னும் காலேசுல படிக்கும் போது இருந்த மாதிரியே இருக்கீங்க..."

"இப்ப என்னாச்சுன்னு இப்படி கோபப்படுறே?" என்றபடி சோபாவில் அமர, அவனருகே நெருக்கமாக புவனா அமர, "நல்லா ஒட்டிக்கடி... ஓடிப்போயிடப் போறான்..." என்று சொல்லிச் சிரித்த மல்லிகா, "சரி இனி சீரியஸ்... ஆமா இப்ப என்ன அவசரம்ன்னு சொல்லாமக் கொள்ளாம ஓடியாந்தே?" என ராம்கியைப் பார்த்துக் கேட்டாள்.

"என்ன ஆளாளுக்கு ஏ... வந்தே ஏ... வந்தேன்னு கேக்குறீங்க... எனக்கு அதுக்கு அர்த்தம் புரியலை...? நான் வந்தது உங்களுக்குப் பிடிக்கலையா? கோபமாகக் கேட்டான்.

"இரு ஏதுக்கு சூடாகுறே... உங்க காதல் விசயத்தை புவனா அவ அண்ணன்கிட்ட பேசப்போக அது உன்னோட உயிரை எடுக்கிற வரைக்கும் வந்து நிக்கிது..."

"ஏ...ஏய்... என்ன சொ...சொல்றே...?" பதட்டமாய் கேட்டான்.

"எஸ் ராம்... எங்கண்ணன் ஒத்துக்கலை.... அதோட இல்லாம இளங்கோகிட்ட என்னைக் கட்டித்தாரேன்னு சொல்லி உங்களை கொல்லச் சொல்லியிருக்கான்..."

"யாரு இளங்கோவா? அவன் எதுக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சீன்ல வாறான்..."

"ம்... எல்லாம் இந்த சீமாட்டிக்காகத்தான்... ஆமா அப்படி என்னடி இருக்கு மத்தவங்ககிட்ட இல்லாதது உங்கிட்ட..." என் மல்லிகா குறும்பாகச் சிரிக்க "ம்... அதை அவனுக்கிட்டத்தான் கேக்கணும்... சும்மா இருக்க மாட்டே... உதை வாங்கப் போறே பாரேன்..." என புவனா சிரிப்போடு சொன்னாள்.

"அப்ப சிரிச்சிட்டாப்பா... மழை வரப்போகுது... சரி விஷயத்துக்கு வருவோம்... உன்னைய கொல்ல இளங்கோ கிளம்பியாச்சு... அவனுக்கு புவனாவ கட்டி வைக்க அண்ணன்காரன் சம்மதிச்சாச்சு... இப்ப நீயும் வந்து வலைக்குள்ள மாட்டியாச்சு.... எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிறது... அதுதான் இப்போதைய கேள்வி..."

"இதை யாரு சொன்னா... நம்பத்தகுந்த வட்டாரமா?"

"ஆமா பெரிய நீயுஸ் எடிட்டர்... நம்பத்தகுந்த வட்டாரமான்னு கேக்குறாரு... இதையெல்லாம் சொன்னது மணிதான்"

"யாரு... மணியா?"

"என்ன எல்லாத்துக்கும் கேள்வி கேக்குறே...? விளக்கமா சொல்லிக்கிட்டு இருக்க இது நேரமில்லை... ஆக வேண்டியதைப் பற்றி யோசிக்கணும்... நான் அண்ணாத்துரைக்கு போன் பண்ணி விசயத்தைச் சொல்லி இங்க வரச்சொல்றேன்... அவன் வந்ததும் நல்ல முடிவா எடுக்கலாம்..." என்றபடி மல்லிகா போன் பண்ண எழ, " உங்களுக்கு ஒண்ணுன்னா நான் செத்துருவேன் ராம்..." என புவனா கண்ணீரோடு அவன் தோளில் சாய "ஏய் அசடு... அப்படி சாகுறதுன்னா மூணு தடவை தப்பியிருக்கமாட்டேன்... புரிஞ்சிக்க..." என்றபடி ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டான்.

"என்ன வைரவன் தம்பி சௌக்கியமா?" என்றபடி அருகே வந்தார் தமிழய்யா.

"நல்லாயிருக்கேன்... என்னய்யா விஷயம்... எங்கிட்ட..." தலையைச் சொறிந்தான்.

"ஒண்ணுமில்ல... புவனா படிப்பை முடிச்சிட்டாங்க... வரப்போற ரிசல்ட் பத்திக் கவலைப்பட வேண்டாம்...  தெரிஞ்சதுதானே... அப்புறம் நீங்களும் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்..." 

'நக்கலைப் பாரு' என்று மனதுக்குள் நினைத்தபடி "ஆமா முடிச்சிட்டோம்... அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்..." என்றான் படபடவென.

"நல்ல விஷயந்தான்... பாக்குற மாப்பிள்ளையை இப்ப இங்க உங்க கூட சிகரெட் குடிச்சிக்கிட்டு நின்ன இளங்கோ மாதிரி பாக்காம அவ மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையாப் பாருங்க..." என்றார் அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக.

"பிடிச்ச மாப்பிள்ளையின்னா... எங்களுக்கு எவனைப் பிடிக்குதோ அவனை அவளுக்கும் பிடிக்கும்... அம்புட்டுத்தான்..."

"என்ன தம்பி இது... உங்களுக்குப் பிடிச்சா அவளுக்குப் பிடிக்கணும்ன்னு கட்டாயமா...? சரி அப்படியே வச்சிப்போம்... இப்ப அவளுக்கு இன்னாரை பிடிச்சிருக்குன்னா அவரை உங்களுப் பிடிக்குமா?"

சுற்றி வளைத்து எங்க வரப்போறாருன்னு யூகித்த வைரவன், "அவ எவனாவது ஒரு தறுதலையைக் காட்டி இவனைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னா பொட்டை மாதிரி தலையாட்டுற சாதியில்ல நாங்க... நீட்டுடி கழுத்தையின்னா எவனா இருந்தாலும் நீட்டணும்... இல்லேன்னா அவளை போட்டுட்டு எங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்..."

"என்ன தம்பி... படிச்சபுள்ள மாதிரியா பேசுறிக... சே... பேச்செல்லாம் சாதிவெறி... இதுல வக்கீலுக்குப் படிச்சி என்ன தம்பி புண்ணியம்...? உங்ககிட்ட பேசிப் புண்ணியம் இல்லை... அவ மனசறிஞ்சு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு உங்க அப்பாவைப் பார்த்துப் பேசுறேன்...."

"இங்க பாருங்க ஐயா... தேவையில்லாம இதுல தலையிடாதீங்க... அவளுக்கு எப்படி... எப்ப கல்யாணம் பண்ணனும்ன்னு எங்களுக்குத் தெரியும்... வந்துட்டாக... இப்பத்தான் நானும் பாடம் எடுக்கிறேன்னு... மரியாதை கெட்டுறாம பாத்துக்கங்க..." என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்த வைரவனைப் பார்த்து 'சே... மனுசனே இல்லாத இவனுக்கிட்ட போயி பேசி... நம்ம கவுரவத்தைக் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம்... அதுக சேர்றதுக்கு வேற என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்று நினைத்தபடி சைக்கிளைத் திருப்பினார்.

புவனா மீது கோபமாக வீட்டுக்குள் நுழைந்த வைரவன், எதிர்ப்பட்ட அம்மாவிடம் "எங்கம்மா அந்தக் கழுதை... என்ன கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி வாத்தியை தூது விடுறாளா... எங்க அவ..." என காட்டுக் கத்தாய் கத்தினான்.

"இப்ப அவ கூட உனக்கெதுக்கு சண்டை... அவ உங்கிட்ட என்ன சொன்னா... நீ அவகிட்ட என்ன பேசினேன்னு எல்லாம் தெரியாது... ஆனா என்னோட வாழ்க்கையோட விளையாடுறான்னு எங்கிட்ட சொன்னா... "

"ஆமா அவதான் நம்ம எல்லாரோட கண்ணுலயும் மண்ணைத் தூவிட்டு விளையாடுறா... இப்ப அவ எங்க?" கர்ஜித்தான்.

"மல்லிகா வீட்டுக்குப் போயிருக்கா..."

"இந்த வெயில்ல அப்படி என்ன முக்கிய விஷயம்... அவனைப் பாக்கப் பொயிட்டாளா..?"

"எவனை... அ... அந்தப்பையன் வந்திருக்கா...?"

"ஆமா... போயி ரெண்டு போட்டுட்டு அவளை இழுத்துக்கிட்டு வாறேன்...." என்று ஆக்ரோஷமாக கிளம்பிய வைரவனை "நில்லுடா... " என்ற அம்மாவின் குரல் தடுத்தது.

"என்ன அவ பண்றது சரியின்னு சொல்லுறீங்களா?" என கோபத்தை அம்மா மீது திருப்ப, "அந்தப் பையனை யாரை வச்சி... என்ன பண்ணச் சொல்லியிருக்கே...?" என்ற அம்மாவின் கேள்வி நிலைகுலைய வைத்தது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

அடுத்த பகுதிக்காக வெயிட்டின்,என்ன நடக்க போகுதோ..

Unknown சொன்னது…

ம்..........அம்மா கெளம்பிட்டாங்க,பார்க்கலாம்..................!

Yarlpavanan சொன்னது…

கதை நகர்வு நன்று
தொடருங்கள்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

நன்றாக உள்ளது அடுத்த தொடரை தொடருங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

ராம்கிக்கு என்னாச்சு ?
த ம 2

Unknown சொன்னது…

ராம்கிக்கு என்னாச்சு ?
த ம 2