மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 15 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 56

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                      பகுதி-50     பகுதி-51    பகுதி-52    பகுதி-53     பகுதி-54

56.  வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுதா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். அந்தப் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமா என்று மகளிடம் கேட்கிறாள்.

இனி...


மூச்சுக்கு முன்னூறு தடவை புவி புவியின்னு சொல்றானே அவனைத்தான் என்றதும் புவனா பதிலேதும் சொல்லாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

"என்னம்மா...ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறே..?"

"எனக்கும் பிடிக்கும்... ஆமா அதுக்கு என்னம்மா இப்போ...?"

"இல்ல அவன்தான் பேசினான்... உன்னைய படிக்க வக்கச் சொன்னான்..."

"ம்..."

"நீ தொடர்ந்து படிக்கணுமாம்... அதுக்காக அவன் உங்கிட்ட பழகுறதைக்கூட விட்டுடுறானாம்..."

புவனாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மாவை கலவரமாகப் பார்த்தாள்.

"நான் சொல்லலைம்மா... அவன்தான் சொன்னான்... புவிய படிக்க வையுங்க... என்னால ஒரு பிரச்சினையும் வராதுன்னு..."

"இது ராம் சொன்னாரா... இல்ல நீங்களா சொல்றீங்களாம்மா?"

"என்னம்மா இது... அவன் சொன்னதைத்தான் நான் சொல்றேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா.... இப்பத்தான் அவன் பேசினான்... ஆரம்பத்துல கத்துன என்னையே பேச்சால மயக்கிட்டான்..."

"நம்பாம இல்லம்மா... ராம் இப்படி சொன்னாரான்னுதான் டவுட்டா இருக்கு..."

"வேணுன்னா போன் பண்ணிக் கேளு..."

"அம்மா...." அதிர்ச்சியாய் அம்மாவைப் பார்த்தாள்.

"என்னடா யாருடி போன்ல.... அவன் எதுக்குடி உனக்கு போன் பண்ணுறான்... அப்படியிப்படின்னு கத்துற அம்மா போன் பண்ணச் சொல்றாளேன்னு அதிர்ச்சியா இருக்கா?"

"...."

"தாராளமாப் போன் பண்ணு... அவனோட பேச்சுல உண்மை இருந்துச்சு.... ஆனா நீ பேசுறதுக்கு முன்னால ஒண்ணே ஒண்ணு... உன்னோட படிப்பைத் தொடரணும்ன்னா நீ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்... படிச்சு முடிக்கிற வரைக்கும் அந்தப் பையனைப் பாக்க மாட்டேன்... பேச மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்..."

"அம்மா..."

"என்ன கத்துறே... உன்னைய படிக்க அனுப்பிட்டு நீ அங்க அவன் கூட பேசிக்கிட்டு இருந்தே... சினிமாத் தியேட்டர்ல பாத்தோமுன்னு யாரும் சொல்லக்கூடாது பாரு...."

"அதுக்காக..."

"அவனைப் பாக்கக்கூடாதுன்னு சொல்றேன்..."

"முடியாதும்மா.... என்னால முடியாது..."

"அப்ப படிக்க முடியாது... கல்யாணந்தான்..."

"என்னம்மா மிரட்டுறீங்களா? உங்க மிரட்டல் எங்க காதலை ஒண்ணும் பண்ணாது தெரிஞ்சுக்கங்க..."

"இதுல மிரட்ட என்ன இருக்கு... அந்தப் பையன் உன்னோட படிப்புக்காக என்ன வேணுமின்னாலும் செய்யிறேன்னு சொன்னான். நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதெல்லாம் விட்டுட்டு எவனோ ஒருத்தனுக்கு உன்னைய கட்டிக் கொடுக்க நாங்க என்ன பைத்தியமா?"

"உங்க சாதியையும் கௌரவத்தையும் குப்பையில போடுங்க... எங்க மனசுக்குப் பிடிச்சிருக்கு அம்புட்டுத்தான்... ரொம்ப பாசமாப் பேசினதும் அம்மா மாறிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்... சாதியும் கௌரவமும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்துடாதும்மா... நல்ல மனசும்... நம்மளை விரும்புற மனசும் வேணும்... உங்களுக்கு வேணுமின்னா பதினெட்டு வயசுல இவர்தான் கணவன்னு ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்... ஆனா எனக்கு மனசுக்குப் பிடிச்சவன்தான் கணவனா வரணும்... அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணுமின்னாலும் போவேன்... நான் உங்க மக... உங்ககிட்ட இருக்க பிடிவாதக் குணம் எனக்குள்ளயும் இருக்கும்... அதே நேரம் அப்பாக்கிட்ட இருக்க ரவுடித்தனமும் எனக்குள்ள இருக்கு... ஞாபகம் இருக்கட்டும்..."

"என்னடி மிரட்டல் விடுறியா?" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

"இதுல மிரட்ட என்ன இருக்கு... உண்மையைச் சொன்னேன்... அவ படிக்கட்டும்... என்னால அவ படிப்பு முடியிற வரைக்கும் பிரச்சினை வராது. அதுக்கு அப்புறம் உங்க மனசுக்கு எங்களைப் பிடிச்சா சேர்த்து வையுங்கன்னு சொல்லியிருப்பார்... அதை மறைச்சு பேசுறீங்க... அம்மா... நா எவன் கூடவும் ஓடிப்போகனுமின்னு நினைக்கலை... அப்படி ஒரு கெட்ட பேர் உங்களுக்கு என்னால வராது. ஆனா ராமைத் தவிர வேற யாரைக் கட்டச் சொன்னாலும் என்னோட பொணத்தைத்தான் பாப்பீங்க..." 

"என்னடி சொன்னே...?" என்று வேகமாக எழுந்தவள் வாசலில் கணவரின் வண்டிச் சத்தம் கேட்கவும் பேசாமல் அமர்ந்தாள். புவனா அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

"என்னடா மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்கிடக்கே.... எங்கயும் சுத்தப் போகலையா?" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.

"ம் எங்க போகச்சொல்றே.. இந்த வெயில்ல... எதாவது காலேசுல இருந்து லெட்டர் வந்தாத்தானே மேக்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்..."

"ஏன்... அந்த மேனா மினுக்கிய உங்க நொய்யா வீட்டுக்கு வரச்சொல்லி கொஞ்சிக் குலாவிட்டு வரவேண்டியதுதானே..."

"அம்மா... எதுக்கு வந்ததும் வராததுமா தேவையில்லாம பேசுறீங்க... என்னோட எப்பவும் சண்டை போடணுமின்னே நிக்காதீங்கம்மா... நான் இப்போ எவளையும் பாக்கப் போகலை..."

"ம்.... அப்ப மாட்டுக்குள்ள போயித் தொலஞ்சிருந்தா நா ஒரு எட்டுப் போயி சீதையைப் பாத்துட்டு வந்திருப்பேன்... அவ கண்ணக் கசக்கிட்டு கிடக்கா... இல்ல சும்மா படுத்துக் கிடந்தவன் அங்கன போயி அவளப் பாத்துட்டு வந்திருக்கலாம். எல்லாத்தையும் நானே சுமக்கணும்... நேரா நேரத்துக்கு வடிச்சிக் கொட்டணும்... மாடு மேக்கணும்... எல்லாத்துக்கும் நானே ஓடுறேன்... இப்போத்தானே எனக்கு பதினாறு வயசாவுது..."

"காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே... போயிருப்பேனுல்ல... சொல்லாம மாட்டை அவுத்துக்கிட்டு ரொட்டு ரொட்டுன்னு ஓடுனா..."

"ஆமா நா சொல்லப்போயி கலெக்கிட்டருக்கு படிக்கிறவுகளுக்கு கவுரவக் கொறச்சலாயிட்டா.... வந்து கொட்டிக்கிட்டு மறுபடிக்கும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்க.... என்னைய சோத்துக்கு ஏவுனவளுகளை நாஞ் சோத்துக்கு ஏவணும்..."

"சாப்பிட்டு நான் போறேன்... நீங்க ஒண்ணும் போக வேணாம்... ரெஸ்ட் எடுங்க... சாயந்தரம் வந்திட்டு அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வாறேன்..."

"ஆமா ரெஸ்ட்டு எடுக்கிறாக ரெஸ்ட்டு... கட்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் எனக்கு ரெஸ்ட்டுத்தான் கொறச்சல்... நானே போறேன்... நீ முடிஞ்சா அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வா..."

"சரி..." என்று சாப்பிட ஆரம்பித்தான் போன் அடித்தது. அவனை பார்த்தபடியே நாகம்ம்மா "இந்த நேரத்துல எவுக கூப்பிடுறாக.... தொரைக்காத்தான் இருக்கும்... போயி எடு..." என்றாள்.


போனை எடுத்து "அலோ" என்றதும் எதிர்முனையில் அண்ணாத்துரை பேசினான்.

"என்னடா ஒரு போனைக்கூடக் காணோம்.. புவனா அம்மாக்கிட்ட பேசுனியா என்ன... என்னாச்சு... "

"ம்..."

"என்னடா இம்முன்னா.... என்ன அர்த்தம்... ஆமாவா இல்லையா?"

"ஆமாதான்... ஆனா இப்போ விவரமா பேசமுடியாது... அம்மா இருக்காங்க..." என்றான் மெதுவாக.

"ஓ... அப்ப சாயந்தரம் சரவணன் வீட்டுக்கு வா... பேசுவோம்... சரியா?"

"சரி.. இப்போ அக்கா வீட்டுக்குப் போறேன்... சாயந்தரம் அப்படியே வாறேன்டா..."

"சரிடா... ஆமா எப்ப அத்தானை சுளுக்கெடுக்கிறது.." 

"அக்காவை பாத்துட்டு வந்து விவரமா பேசலாம்டா" என்றபடி போனை வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

"என்னடா... என்ன மறைச்சி மறைச்சிப் பேசுறே... அவ பேசுனாளா?"

"ஐயோ இல்லம்மா.... அண்ணாத்துரை பேசினான்... அம்புட்டுத்தான்..." என்றபடி வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கிளம்பினான். அப்போது மீண்டும் போன் அடித்தது.  எடுத்த சைக்கிளை வைத்துவிட்டு வேகமாகப் போய் போனை எடுத்தான். போனில் பேசிய சரவணன் "டேய் உடனே கிளம்பி வீட்டுக்கு வா உங்கிட்ட முக்கியமாப் பேசணும்..." என்றான்.

"அப்படி என்னடா அவசரம்? அதுவும் மத்தியானத்துல..."

"போன்ல சொல்லிக்கிட்டு இருக்க முடியாது... நீ உடனே கிளம்பி வா" என்றபடி போனை வைக்க குழப்பத்துடன் சைக்கிளை எடுத்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ம்.......ம்......'அம்மா' க்களே இப்படித்தான்!

தனிமரம் சொன்னது…

ம்ம் சிந்த்னையில் அம்மாக்கள் எல்லாம்!தொடரட்டும் தொடர்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே