மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 டிசம்பர், 2009

துபாய் 'குளோபல் வில்லேஜில்' ஒருநாள்...
நேற்று விடுமுறை தினம் என்பதாலும் அறை நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்ததாலும் எங்கள் அறையில் கொண்டாட்டமாக இருந்தது. மாலையில் எங்காவது செல்லலாம் என்று முடிவு செய்தோம். எங்கு செல்வது என்ற யோசனையில் எல்லோரும் இருந்தபோது நண்பர் ஒருவர் துபாய் குளோபல் வில்லேஜ் போகலாம் என்றார். உடனே எல்லோரும் ஓகே அங்கே போகலாம் என்றனர்.

மாலை நான்கு மணிக்கு கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான்கு மணிக்கு அண்ணா வண்டியில் அவரது குடும்பமும் இலங்கை நண்பர் குடும்பமும் வர நாங்கள் ஐந்து பேர் நண்பர் வண்டியிலும் குளோபல் வில்லேஜ் நோக்கி பயணமானோம்.


நீண்ட பயணத்தின் முடிவில் குளோபல் வில்லேஜை அடைந்தோம். அங்கு இறங்கிய போது நேரம் 5.50 ஆகியிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு நான்காவது நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல டிக்கெட் எடுக்க நின்றபோது லேசாக மழை தூற ஆரம்பித்தது. உடன் வந்த நண்பர் ஒருவர் 'என்னப்பா நம்ம வந்த நேரம் மழை வருது. உள்ள ஒதுங்க இடம் இருக்காது. பார்த்துக்கிட்டு வாங்கலாம்' என்றார். 'மழை வராது வாங்குங்க' என்று நண்பர் ஒருவர் சொல்ல டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம்.

உள்ளே... ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மனிதர்களின் சங்கமம்... எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். உலக நாடுகளின் சங்கமம் ஒரே இடத்தில்... கொள்ளை அழகு. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி அரங்கங்கள். அங்கே அந்த நாட்டுப் பொருட்களின் விற்பனை. உலகில் உள்ள எல்லா பொருட்களும் ஒரே இடத்தில்...

நாங்கள் முதலில் சென்றது இந்தியா அரங்கம். (முதல் மரியாதை நம்ம நாட்டுக்குத்தானே...) கோட்டை போல் அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் மேல் நமது தேசியக்கொடியை பார்த்ததும் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை என் மனதிற்குள் வந்து செல்ல.. என்னை அறியாமல் சந்தோஷம் குடி கொண்டது.


இந்திய அரங்கில் காஷ்மீர் சால்வைகள், ஆடைகள் எல்லாம் இருந்தது. அதை பார்த்துக் கொண்டு வந்தபோது சிறு பிள்ளைகளை வைத்து சுற்றிவிடும் ராட்டினம் ஒன்று இருந்தது. அதை கையால் இயக்கிக் கொண்டிருந்தவர் ஒரு பாகிஸ்தானி என்பது முக்கியமானது. மற்ற கடைகளில் எல்லாம் பெரும்பாலும் மலையாள வாடை அடித்தது.

அங்கிருந்து வெளியில் வந்து அடுத்த அரங்கத்திற்குள் நுழையும் முன்னர் இயற்கை உபாதையை குறைக்க கழிப்பிடம் தேடி சென்றோம். சத்தியமா சொல்லுறேங்க... அந்த ஜன நெருக்கடியிலும் அவ்வளவு சுத்தமா, நாற்றமில்லாமல் எப்படி வச்சிருந்தாங்க தெரியுமா?. நம்ம ஊர்ல பேருந்து நிலையத்துல காசு வாங்கிக்கிட்டு உள்ள விடுவாங்க. ஆனா அதுக்குள்ள போக முடியாது. சினிமா தியேட்டர்லயும் அதே நிலை...

பின்னர் சௌதி, சீனா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர்,நேபாள், ஆப்பிரிக்கா, லெபனான், தாய்லாந்து என்று எல்லா நாட்டு அரங்கத்திற்குள்ளும் சென்று பார்த்து ஒரு சில பொருட்கள் வாங்கியும் வந்தோம். சீனாவும் பாகிஸ்தானும் அருகருகில்... (இந்தியா கவனிக்க வேண்டிய விசயம்...)


போகும்போது கூட்டத்தில் யாராவது காணாமல் போய்விட்டால் செல்பேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்று விசாரித்தால் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.. நீ எந்த நாட்டில் இருக்கிறாய்? என்று பதில் வரும். பத்து திர்ஹம் கொடுத்து டிக்கெட் எடுத்துவிட்டு சிங்கப்பூரில் இருக்கிறேன்... பிலிப்பைனில் இருக்கிறேன்... என்றால் எப்படிங்க.

இதற்கு இடையில் நடந்து செல்லும் போது கேரளாவில் இருந்து வந்திருந்த வாத்தியக்குழுவினரின் அதிரடி கச்சேரி.

அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க இளைஞர்களின் அதிரடி நடனம். அப்பா... நம்ம பிரபுதேவா எல்லாம் கிட்ட நெருங்கமுடியாது என்ன நடனம்,,, ஒருவர் மீது ஒருவர் ஓடி வந்து ஏறுவது... சின்ன வளையத்துக்குள் மாறி மாறி தாண்டுவது... இருவர் கயிறு சுழற்ற மற்றவர்கள் கயிற்றில் படாமல் குதித்து ஆடியது... நெருப்பு விளையாட்டு என எல்லாமே சிலிர்க்க வைத்த நடன காட்சிகள்.

அங்கிருந்து அப்படியே விளையாட்டு அரங்கம் வந்து சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறி ஐரோப்பா அரங்கு சென்றபோது இலங்கை நண்பரின் குழந்தைகள் பசி எடுப்பதாக கூற, சாப்பாட்டு அரங்கிற்குள் சென்று இந்திய உணவகம் ஒன்றில் பசியாற நினைத்து ஆர்டர் செய்தோம். உணவு வருவதற்கு முன் பில்லை கட்டச்சொன்னார்கள். கட்டிவிட்டு கட்டத்தோசைக்காக காத்திருந்தோம்.


வந்ததுங்க தோசை.... எவ்வளவு பெருசு தெரியுமா..? ஊர்ல இட்லி மாவு தண்ணியா போச்சுன்னா எப்படி துணியில ஒட்டி ஓடா இருக்குமோ அந்த சைசு (பார்த்துட்டு வேண்டாமுன்னு சொல்லிறக் கூடாதுங் கிறதுக்காகத்தான் முன்னாலயே பில்லை வாங்கிட்டான்.) குழந்தைங்க பசியே ஆறலையின்னா பாருங்களேன். (இந்தியனா இதை என்ன சொல்றது.?. எங்க கதை கட்டத்துரைக்கிட்ட மாட்டின கைப்புள்ளமாதிரி ஆச்சுங்க...)

ஒருவழியா சுத்திட்டு மணி பார்த்தா நள்ளிரவு 12.30. ஒரு சில நண்பர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கிருந்து அபுதாபி நோக்கி கிளம்பினோம். துபாய் எல்லை தாண்டி ஒரு பெட் ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி சாண்ட்விச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.


  அபுதாபியில் சில மாதங்களுக்கு முன் பார்முலா ஒன் கார் பந்தயம் நடந்த யாஸ், சாதியத் வழியாக வரும் புதிய ஷேக் கலீபா பின் சையது நெடுஞ்சாலையில் 130கீமி வேகத்தில் வந்தபோது, வெளியே சற்று அழுத்தமாக பெய்திருந்த மழையின் காரணமாக ரோட்டில் கிடந்த தண்ணீர் காரின் சீற்றத்தால் மயில் தோகை விரித்தது போல் இருமருங்கிலும் எழும்பி அடங்கியபடி இருந்தது.
 
காரின் உள்ளே இரவு நேர பண்பலையில் ராஜாவின் இனிய பாடல்கள் இதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.


(குறிப்பு: போட்டோ செல்பேசியில் எடுத்தது... சரியாக இல்லையென்றால் மனதிற்குள் திட்டுங்கள்.)

 
-சே.குமார்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

கடிதம் - மட்டைக்காரனுக்கும் வேட்டைக்காரனுக்கும் ..!
விஜய் , தோனி

 சன் தொலைக்காட்சிக்கு, அய்யா... தமிழ்ல வர்ற எல்லா படத்தையும் நீங்கதான் வாங்குறீங்க. மொக்கைப் படத்தைக்கூட நீங்க பண்ணுற விளம்பரத்தால வெற்றிப்படமாக்கி விடுவீர்கள் என்பது இயக்குநரும் தயாரிப்புத்தரப்பும் உணரும் உண்மை. உங்களுக்கு போட்டியா கலைஞர் தொலைக்காட்சியும் குதித்திருப்பதாக கேள்வி. உண்மையா?. அப்ப ரெண்டு பேரும் உங்களோட விளம்பரத்துக்கு இடையே நிகழ்ச்சியை போடுவீங்கன்னு சொல்லுங்க. அடப்பாவி மக்கா, நாங்க ஏமாளிங்கதான்... ஆனா அதுக்காக இப்படியா, சன், சன் நியூஸ் செய்திகள்ல தலைப்புச் செய்தியில வேட்டைக்காரன் மிகப்பெரிய வெற்றியின்னு சொல்லி , ரசிகர் கூட்டத்தை காட்டி செய்தி போடுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா? நாட்டுல வேற செய்தியே இல்லையா?. சரிங்க, நீங்க பணம் போட்டுட்டிங்க அதனால விளம்பரம் பண்ணுறீங்க ஒத்துக்கிறோம்.  அதுக்காக செய்தி வரைக்கும்....... கேவலமாயில்லை.

நடிகர் விஜய்க்கு, ஆரம்பகாலத்துல உங்களை வளர்த்துவிட உங்கப்பா டப்பா படங்களா எடுத்தாரு. உங்க வளர்ச்சிக்கு முக்கிய காரணமா இருந்தவங்க..... சங்கவி, சுவாதி, யுவராணி இல்லீங்களாண்ணா. உங்க அப்பாகிட்ட இருந்து வெளிய வந்து நீங்க நடிச்ச படங்களில் 'பூவே உனக்காக', 'துள்ளாத மணமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'பிரண்ட்ஸ்', 'கில்லி'... (அடுக்கலாம்) உங்களுக்கு பேர் வாங்கிக் கொடுத்த நல்ல படங்கள்... ஏனுங்கண்ணா சரிதானுங்களே. அப்புறம் ஏண்ணா 'குருவி', 'வில்லு'... இப்படி கேவலமான படத்துல நடிச்சு பட்டது போதாதுன்னு இன்னும் அதே மாதிரியான படங்கள்ல நடிக்கிறிங்க.... வித்தியாசமான (உங்களுக்குத்தான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலும் வித்தியாசம் காட்டத் தெரியாதுங்களேண்ணா...) கதாபாத்திரத்தில் நடிங்கண்ணா. இன்னைக்கு வந்த நடிகர்களெல்லாம் என்னன்னமோ பண்ணுறாங்க (கோவணம் கூட கட்டிறாங்க) நீங்க இதுகூட பண்ண மாட்டீங்களா (எவ்வளவோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா?). சரிங்கண்ணா பாத்துப் பொழைங்க. இந்த பயபுள்ளைங்க செம்மறி ஆட்டு மந்தை மாதிரித்தான் இருக்கும்... ஆனா டப்புன்னு மாறிப்புடுங்க...

கிரிக்கெட் தலை தோனிக்கு, தலைவா... இந்த இலங்கைக்காரப் பயலுவ 1000 அடிச்சாலும் வெரட்டி வந்துடுவாங்க போலயிருக்கேன்னு ஆடிப் போயிட்டியா... பாவம் தலைவா நீ என்ன பண்ணுவா... பந்து வீசுறவங்க சரியில்லை. ஆமா தலைவா ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமின்னு நினைச்சேன்... நூறு கோடியில உனக்கும் , தேர்வுக்குழு தலைவருக்கும் நல்ல பயலுகளா ரெண்டு பேரு கிடைக்கலையா? நாட்டுல பந்து போடுறவங்களுக்கு அம்புட்டு பஞ்சமா?..... ம்.... என்னத்த சொல்ல ஜாகீரும், நெஹ்ராவும் கிழிச்ச கிழிக்கு ரெண்டு போட்டியில நீ  விளையாடக் கூடாதுன்னு உனக்கு ஆப்பு வச்சுப்புட்டாங்களே... இது அடுக்குமா...? பரவாயில்லை விடு... அப்படியே இந்த ஒருநாள் தொடரை  இலங்கை பயலுவ அள்ளிக்கிட்டு போனாலும் நான் ரெண்டு போட்டியில விளையாடாததுனால இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லிறலாம். உனக்கு இது என்ன புதுசா...? விடு... ஆனா இந்த தில்ஷன் வூடு கட்டி அடிக்கிறானே தலைவா... அதான் தாங்க முடியலை... சரி மனச தேத்திக்க... திறமையிருக்கு ஆடுறான். விட்டுத்தள்ளு .... பெர்முடாஸை வரச்சொல்லுவோம்.

வலையுலக நண்பர்களுக்கு, இதை நான் வேண்டுகோளாத்தான் சொல்லுறேன். விஜய் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அவருக்கோ தயாரிப்பாளருக்கோ இயக்குநருக்கோ இல்லை சன் தொலைக்காட்சிக்கோ பாதிப்பு இல்லை. இந்த படம் எடுத்ததால பல குடும்பம் திரைக்குப்பின்னால வாழுதுங்கிறத மறுக்க முடியாது... அதனால அந்த ஜீவன்களுக்காகவாவது வேட்டைக்காரனை வேட்டையாடாமல் விடுங்க... வேட்டைக்காரனுக்காக பதிவு எழுதுவதை விடுத்து, உங்கள் எண்ணங்களை பதிவில் தாருங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.  செய்வீர்களா நண்பர்களே...?

-சே.குமார்

புதன், 16 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் -V


எனது முதல் கதைக்கு ஐயாவிடம் இருந்து ஐம்பது சதவிகித மார்க் கிடைத்ததால் சந்தோஷம் அடைந்தேன். நாமும் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் கவிதை எழுதுவதில் நாட்டம் போனது. ஆனால் சிறிய கவிதைகளை எழுதுவது எப்படி என்று தெரியவில்லை.நான் எழுதிய கவிதைகள் எல்லாமே நீளமாக இருந்தன.

அப்போதுதான் எனக்கும் முருகனுக்கும் ஒரு எண்ணம் உதித்தது, அது கையெழுத்துப் பிரதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்பதே. ஆவலுடன் அதற்கான ஆயத்தப்பணிகளில் இறங்கினோம். எனது நண்பர்கள் யாரும் வருவதாக இல்லை, முருகன் பக்கமும் அதே நிலை. என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, பெண்களுக்கு இடமளிக்கலாமே என்று சுபஸ்ரீ மற்றும் கனிமொழியை கைகாட்டினார் ஐயா. அவர்களிடம் பேசியதில் கனிமொழி மறுத்துவிட, சுபஸ்ரீ இணைந்து கொண்டார்.

நாங்கள் மூவரும் இணைந்து 'மனசு' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்த முடிவு செய்து களத்தில் இறங்கினோம். அப்போது சுபஸ்ரீ வகுப்புத் தோழர்களும் எங்களின் நண்பர்களுமான அம்பேத்கார் மற்றும் இளையராஜா (நல்லா படம் வரைவான்) இருவரும் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வந்தார்கள். மூவர் ஐவரானோம்.

அதன் பிறகு பிரபாகரன் என்ற நண்பரும் இணைந்து கொண்டார். முதல் பிரதி வெளிவருவதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டோம். மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவன் கேசவனும் அவரது நண்பர் நவனீதன் என்பவரும் 'தென்றல்' (பேர் சரியா என்று தெரியவில்லை) என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி வந்தனர். அவர்களது பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து அமர்களமாக முதல் பிரதி கொண்டு வந்தோம்.

கல்லூரி நூலகம், பொது நூலகம், துறைகள் சுற்றுக்கு, பெண்கள் ஓய்வறை, ஆசிரியர் குழுவுக்கு என ஐந்து பிரதிகள். முதல் முயற்சியில் பேராசிரியர்களின் பாராட்டுடன் வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் சந்தோஷம்.

அதன் பிறகு தொடர்ச்சியாக நிறைய கையெழுத்துப் பிரதிகள் வர ஆரம்பித்தன.

அதில் குறிப்பிடத்தக்கது எனது சகோதரர் பழனியப்பன் (தற்போது பத்திரிக்கை துறையில் நல்ல பொறுப்பில் இருக்கிறார்) தனது நண்பர்களுடன் இணைந்து நடத்திய 'ரோஜா', எல்லா கையெழுத்துப் பிரதியும் 40 பக்க நோட்டு வடிவில் இருக்க, ரோஜாவோ கிராப் நோட்டு வடிவில் வந்தது. பழனியின் கையெழுத்து அச்சில் வார்த்தது போல் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது அவரது எழுத்தில் ரோஜா அழகாய் மலர்ந்தது. (மனசுக்கு போட்டியாய் ரோஜா மலர்ந்தது என்றால் மிகையாகாது). பின்னர் மனசுக்கும் அவர்தான் அச்சுக்காரர் ஆனார். எனோ தெரியவில்லை நீண்ட நாட்கள் ரோஜா மலரவில்லை (ரோஜாவின் முள் நட்புக்குள் குத்தியதோ?)

மற்றொன்று நணபர் பரக்கத் அலி நடத்திய கவி'தா', (அவரது காதலி பெயர் என்று வதந்தி பரவியது. உண்மையா என்பது தெரியவில்லை). உன்மையை சொன்னால் நாங்கள் குழுவாக நடத்தியதை அவர் ஒருவராக நடத்திக் காட்டினார். கவி'தா' சார்பாக சிறுகதைப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற கதைகளை தொகுத்து தேனப்பன் ஐயா மூலமாக புத்தகமாக கொண்டுவந்தார். அதில் முருகன், மற்றும் பழனியின் கதைகளும் பிரசுரமாயின என்பது சந்தோஷமான நினைவுகள்.

அதே நேரத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்திலும் உறுப்பினரானோம். ஐயா வசம் இருந்த தாமரை, செம்மலர், சுபமங்களா ஆகியவற்றின் ஏஜென்ஸி உரிமையை எங்களிடம் கொடுத்தார். ஒரு புத்தகத்துக்கு 25 பைசா கிடைக்கும். மன்றத்தில் உள்ள எல்லோருக்கும் புத்தகம் போட வேண்டும். புத்தகம் வந்துவிட்டால் போதும் அன்று மாலை கல்லூரி முடிந்ததும் சைக்கிளில் வீதிவீதியாக சுற்றுவோம். அதன் மூலம் காசு கிடைத்ததோ இல்லையோ மனசுக்கு நிறைவும், நல்லோர்களின் நட்பும் கிடைத்தது.

எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்து கொண்டிருந்த மனசுக்குள் விரிசல் வந்தது. யாரோ ஏதோ சொன்னார்கள் என ஆசிரியை குழுவில் இருந்து சுபஸ்ரீ விலகினார். அவரைத் தொடர்ந்து அம்பேத்காரும், பிரபாகரனும் விலகினர்.

அறுவர் குழு மூவர் குழு ஆனது. அதன் பிறகு ஒரு பிரதி மட்டுமே வந்தது என்று நினைக்கிறேன். அத்தோடு மனசுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம்.

பல வருடங்கள் கழித்து அதே கல்லூரியில் சுயநிதிப் பிரிவான கணிப்பொறியியல் துறையில் நானும், முருகனும் (இப்போது அதே கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக இருக்கிறான்) வேலை செய்த போது அப்போதைய முதல்வர் எங்களிடம் நீங்கள் நடத்திய மனசு போல் இப்ப உள்ள பசங்க நடத்த முன் வரமாட்டேங்கிறாங்க என்றார் (அப்போது எங்கள் கல்லூரியில் கையெழுத்துப் பிரதிகளே இல்லை).

அவர் அப்படி சொன்னது எங்கள் மனசுக்கு கிடைத்த வெற்றி என்றே நாங்கள் நினைத்தோம். அதன் பிறகு முருகன் அது போல் ஒரு பத்திரிக்கை கொண்டுவர முயற்சித்தான். கொண்டு வந்தானா தெரியவில்லை அதற்குள் நான் கல்லூரியில் இருந்து வெளியே வந்து விட்டேன்.

எனக்குள் என்றும் மறக்கமுடியாத பெயர் 'மனசு'. அதனால்தான் இந்த வலைப்பூவிற்கு அதே நாமகரணம். இப்போதும் மனசை நினைத்தாலே என் எண்ணங்கள் கல்லூரிக்குள் பட்டாம்பூச்சியாய் வலம் வர ஆரம்பித்துவிடும். ம்... அது ஒரு கனாக்காலம்.
 
-சே.குமார்

திங்கள், 14 டிசம்பர், 2009

அபுதாபியில் கனமழை
வியாழன் அலுவலத்தில் இருந்து திரும்பும் போதே வானம் கருமேகங்களுடன் காட்சியளித்தது. குளிர் சற்று கூடியிருந்தது. என்னுடன் வந்த கேரளா நண்பர் நாளை மழை வரும் என தெரிவித்தார். அதற்கு நான் சும்மா தூறல் வரும். இங்க எங்க ஊர்ல மாதிரி மழை வரப்போகுது என்றேன்.

வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் சாவகாசமாக எழுந்தேன். வெளியில் வந்து பார்த்தால் லேசான சாரல் இருந்தது. கடந்த ஆறுமாதமாக தொடமுடியாத அளவிற்கு கொதித்த தண்ணீர் அன்று ரொம்பவே குளிர்ந்தது. அன்றுமாலை துபாயில் திரு.லியோனி பட்டிமன்றம் இருந்தது. அதற்கான இலவச டிக்கெட் எங்களிடம் இருந்தது (போன வாரம் துபாய் போனபோது உறவினர் ஒருவருடன் மதிய உணவருந்த அஞ்சப்பர் உணவகம் சென்றோம். எனது உறவினருக்கு உணவக நண்பர் பழக்கம் என்பதால் எத்தனை டிக்கெட் வேண்டும் என கேட்டு கொடுத்திருந்தார்). எனவே அண்ணா எனக்கு போன் செய்து துபாய் கிள்ம்புவோமா என்று கேட்டார். நான் மழை வருது இந்த மழையில துபாய் போகணுமா? என்றேன். மழை வராது வா போகலாம் என்றார்.

இந்த குளிரில் அபுதாபியில் இருந்து துபாய் செல்லவேண்டாம் என்று முடிவு செய்த நான் இல்லை அண்ணா நான் வரவில்லை என்றதும் அவர் குடும்பத்துடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.அங்கும் மழை பெய்ததாக அவர் போன் மூலம் தெரிவித்தார்.

நான் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை. அன்று முழுவதும் லேசான சாரலுடனே கழிந்தது. சனிக்கிழமையும் தூறலுடன் கழிந்தது. இரண்டு நாள் விடுமுறைக்குப்பின் ஞாயிறு காலை வேலைக்குப் போக எழுந்து குளிக்கச் சென்றால் வெளியே மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. வேலைக்கு கிளம்பியவர்கள் எல்லாம் மழையினால் எப்படி போவதென்ற யோசனையுடன் நின்றனர். மழை விடுவதாக தெரியவில்லை. வீதியெங்கும் வெள்ளமாய மழை நீர். அலுவலக காரில் செல்வோரெல்லாம் தலையில் பிளாஸ்டிக் கவரை மாட்டிக் கொண்டு கிளம்பினர்.

நான் சிறிது நேரம் பார்த்துவிட்டு போகலாம் என்று நினைத்து கணிபபொறியில் வலைப்பூக்களை மேய்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டதும் அவசர அவசரமாக கிளம்பினேன். ஒருவழியாக அலுவலகம் வந்து எனது கணினியை ஆன் செய்து அப்பாடா என்று உட்கார்ந்த போது வெளியில் மீண்டும் இருட்டத் தொடங்கியது. சிறிது நேரத்தில் 'சடச்சட' என்று பெய்த மழை அரைமணி நேரத்திறகு மேல் விடாமல் கொட்டித்தீர்த்தது.

எனது அலுவலகம் இரண்டாவது மாடி, நான் அமர்ந்திருக்கும் இடமோ ஒரு மூலையில்... எனவே மேலே இருந்து நான் மழையை ரசிக்க ஆரம்பித்தேன். மழைநீர் தெப்பமாக காட்சியளித்தது. மழை நீர் வடிவதற்குள் மதியம் மீண்டும் ஒரு மழை. நான் எழுந்து நின்று மழையை ரசித்துக் கொண்டிருக்கும் போது அருகில் வந்த எனது மேலதிகாரி (அவர் லெபனான்), 'இப்ப இந்தியா மாதிரி இருக்கா?' என்றார். நான் 'ஆம்' என்றதும் 'இந்தியா போல்தான் லெபனானும்' என்றார்.

மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.நானும் எனது நண்பரும் மழையோடு கிளம்பினோம். இரவு விட்டுவிட்டு மழை பெய்தது.

கடந்த மூன்று நாட்களாக எப்போதாவது எட்டிப்பார்த்த சூரியன் இன்று காலை பாலைவனப் பூமியில் பளிச்சென்று தெரிந்தான்.

இன்று மழை இல்லை இருந்தும் வானம் ஒரு சில நேரங்களில் கருமேகங்களால் சூழப்படுகிறது. மழை பெய்யலாம்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ரஜினி மகான் அல்ல நல்ல மனிதர்

என்னடா இது மனசுன்னு போட்டிருக்கே... அதுககு கீழே எதுவும் போடாம விட்டுட்டே... மனசு வெறுமையா இருக்கக்கூடாதுடா என்று நண்பன் என்னிடம் கேட்டதற்கு இணங்க மனசுக்கு கீழே 'கண்டது... கேட்டது..." என்று ஒரு நீள பட்டியலே இட்டாச்சு. சரி இனி யாரும் கேட்க மாட்டாங்க அப்படின்னு அப்படியே விட்டாச்சு.

இப்ப என்னடான்னா வேறொரு நண்பன் பார்த்துட்டு "என்ன மாப்ளே இது கண்டது... கேட்டதுன்னு ஒரு பெரிய பட்டியலே போட்டுட்டு சுயசரிதை (நான் சொல்லலை... அவன் சொல்லுறான்) எழுதுறமாதிரி பள்ளி, கல்லூரிக் காலத்தை மட்டும் எழுதுறே... இது ஒரு பக்கம் போகட்டும் வேற எதாவது எழுதுன்னு ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டான் (சும்மா... அப்படித்தானே சொல்ல முடியும்.. வேற எதுவும் உனக்கு எழுத வராதான்னு கேட்டதையா சொல்ல முடியும்... நமக்குன்னு ஒரு கெளரவம் இருக்குல்ல...).

தனியா படுத்து (எத்தனை வருஷமாத்தான் உக்காந்துன்னு சொல்றது. அதனால ஒரு மாற்றம் இருக்கட்டுமேன்னுதான் ) யோசிச்சு பார்த்தப்ப சரி வேற எழுதலாமேன்னு முடிவு பண்ணினேன். கல்லூரிக்காலம் ஒரு புறம் வந்தாலும் அப்பப்ப எதாவது எழுதுவோம்ன்னு எடுத்த முடிவோட முதல் கட்டமா திரு.ரஜினி பற்றி ஒரு சின்ன கட்டுரை எழுதலாமுன்னு முடிவு பண்ணினேன்.

இதை அவரோட பிறந்தநாளான நேற்று எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு சில பணிகளால் முடியவில்லை.

ரஜினி ஒரு சகாப்தமா... சரித்திரமா..? அவர் சகாப்தமாக இருந்தாலும் சரி, சரித்திரமாக இருந்தாலும் சரி முதலில் அவர் ஒரு நல்ல மனிதர். எனக்கு ரஜினியை நடிகர் என்ற முறையில் சத்தியமாக பிடிக்காது (ரஜினி ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிப்பது கேட்கிறது.) ஆனால் அவரை மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் என்ற விதத்தில் ரொம்ப பிடிக்கும் (ஐயோ... ரஜினி ரசிகர்கள் முகத்தில் சந்தோஷத்தைப் பாரேன்).

சொல்லப்போன நான் கமல் ரசிகன். மனசுல கமலை ஒரு பெரிய இடத்தில் வைத்து மதிப்பவன். நடிப்பில் மதிக்கும் கமலை சினிமா தவிர்த்து சுத்தமாக பிடிக்காது. (எப்பூடி... ரஜினி, கமல் இருவரையும் பிடிக்கும் விதம் மாறினாலும் எங்களுக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும்)

பாலசந்தரால் சிவாஜிராவ் ரஜினியானார். நடத்துனராக இருந்தவர் இன்று மக்களை வழி நடத்தும் (முதல்வராக) தலைவராக வரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரது பணிவு, விடாமுயற்சி போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு.மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலில் ரஜினியின் ஆதரவுக் குரலுக்கு தமிழகத்தில் த.மா.க. போட்டியிட்ட இடத்தில் எல்லாம் சைக்கிள் ஓடியது. (அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அரசியலுக்கு வருவீங்க... வருவீங்கன்னு எதிர்பார்த்து ரசிகர்கள் நொந்துட்டாங்க சார்). அதுக்கு அடுத்து வந்த தேர்தல்களில் அவரு அடுத்தவங்களுக்கு கொடுத்த ஆதரவுக்குரலுக்கு மரியாதை இல்லாமப் போனது என்னவோ உண்மைதான்.

நல்ல மனிதரான அவர் அரசியல் சாக்கடைக்குள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைத்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ காலம் பதில் சொல்லும் என்று இன்னும் கூறிவருகிறார். (சந்தனம் சாக்கடைக்குள் வரவேண்டாம்... சாக்கடைக்குள்தான் வாரிசுகள் வலம் வருகின்றனவே)

அவரது நடிப்பில் பழைய படங்களான எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், பைரவி, முள்ளும் மலரும்... (இன்னும் அடுக்கலாம்.) எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள். அவருக்குள்ளும் நல்ல நடிகன் இருந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் படங்கள்.

அவரது ரசிகனாக இல்லாவிட்டாலும் அவரது பழைய படங்களை (ரொம்ப வயசானவன்னு நினைச்சுடாதீங்க... ) விரும்பிப் பார்ப்பேன். என்னை அழவைத்த படம் எங்கேயோ கேட்ட குரல் (எதாவது ஒரு சேனலில் அல்லது டிவிடியில் பார்ப்பதுதான்) . சத்தியமா முத்துராமன் அவரது உடம்பில் குண்டுகளையும், ஆயுதங்களையும் கட்டிய பிறகு வந்த படங்களை பார்ப்பதே இல்லை.

அப்புறம் இன்னொன்று, எதற்காகவும் யாருக்காகவும் பொது மேடையில் பரிந்து பேசுவதை அவர் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இது புறம் கூறும் உலகம் அவர் நல்லவிதமாக பேசினாலும் திரித்து விடுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. எதற்கு வீண் வம்பு என இருக்கும் நடிகர்கள் மத்தியில் இவர் மட்டும் ஏன் தானாக முன்வந்து பிரச்சினைகளை வாங்கிக் கொள்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக நடந்த கூட்டத்தில் ரஜினி உண்மையை சொன்னதுடன் தனது சக நண்பர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டார். அதற்குமேல் அவரால் பேசமுடியவில்லை. ஆனால் அதே மேடையில் விவேக் (இரட்டை அர்த்த வேஷக்காரன்) போன்ற உத்தமர்கள் (??) பேசிய விதம் எத்தனை தமிழர்களை பாதித்திருக்கும். அது குறித்து அந்த உத்தமரைக் கூப்பிட்டு இதுவரை எதாவது சொல்லியிருப்பாரா தெரியவில்லை. எனவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது குறித்து ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து அதன் பிறகு அவரது கருத்துக்களை சொன்னால் நல்லது.

ரஜினி மகான் அல்ல மனிதன். அவருக்கு என்று ஒரு குடும்பம் உண்டு. அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு, அவரை அவர் போக்கில் விடுங்கள். அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது இஷ்டம். அவரை அவராகவே இருக்க விடுங்கள்.

கடைசியாக ரஜினிக்கு, வயசு அறுபதாச்சு இன்னும் உங்கள் பேத்தி வயசிருக்கும் நடிகைகளுடன் டூயட் பாடுவதை நிறுத்திவிட்டு மனசுக்கு நிறைவான நல்ல கதாபாத்திரங்களில் நடியுங்கள்.

உங்கள் ரசிகர்கள் உங்களுக்காக எதையும் இழப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அவர்களுக்காக நீங்கள் எதையும் இழக்க வேண்டாம். அவர்களது ஆசையெல்லாம் நீங்கள் நல்ல சுகத்துடன் நீண்ட ஆயுள் இருக்கவேண்டும்... நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்பதே.

உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வயதில்லை... நல்லாயிருக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

-சே.குமார்

வியாழன், 10 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - IV

இது கொஞ்சம்... இல்ல அதிக நீளமான பதிவு... அறுவையா இருந்தாலும் பொறுமையா படிங்க... வாழ்த்துறவங்க ஓட்டப் போடுங்க. திட்ட முடிவு பண்ணிட்டா பின்னூட்டத்துல வாங்க. என்னை திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்.

இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் எனது நண்பர்கள் வட்டம் இன்னும் இறுக்கமானது. நவநீயை தவிர மற்ற அனைவருக்கும் நான் பங்காளியானேன். நவநீ மட்டும் என்னை மாப்ள என்று அழைத்தான். என்னை மாப்ள என்றதால் மற்றவர்களுக்கு அவன் மாப்ளயானான்.

தினமும் கல்லூரிக்கு நாங்கள் செல்வதே ஒரு ஊர்வலம் போல் இருக்கும். ஆதி, திருநா, கண்ணன், நவநீ, முத்தரசு உள்ளிட்ட நண்பர்கள் பேருந்தில் வருவார்கள். நான் சைக்கிளில் வருவதால் அவர்களுக்காக பேருந்து நிலைய வாயிலில் காத்திருப்பேன். எனது நண்பர்கள் மற்றும் அவர்களுடன் வரும் மற்றதுறை நண்பர்கள் என ஒரு கூட்டமே கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பிக்கும். நான் எனது சைக்கிளில் இருபுறமும் திருநா மற்றும் நவநீ பிடித்துக் கொள்ள (ஓட்ட வேண்டியதே இல்லை... தள்ளியே கொண்டு போய் விடுவர்) காரசார விவாத்துடன் கல்லூரி சென்றடைவோம். (மாலையும் விவாதம் தொடரும்).

எங்களுக்கு போரடித்தால் முத்தரசுபாண்டியன் (நல்ல வழக்கறிஞர்) மற்றும் திருநா (கல்யாணத்துக்கு போனது. பிறகு நினைவில் உண்டு... தொடர்பில் இல்லை...) இருவரையும் எதாவது ஒன்றை ஆரம்பித்து கோர்த்து விட்டு விடுவோம். (அந்த வேலையைதான் நல்லா செய்வோமே...) அப்பா... காரசாரமான விவாதம் நடக்கும் (நமக்கும் நல்லா பொழுது போகும்). இருவரும் அரசியலை அலசி ஆராய்வார்கள் (நமக்கு அப்பல்லாம் அரசியல் தெரியாது. இப்பவும்தான்) அப்பவே நாங்க முடிவு பண்ணினோம் ரெண்டும் வழக்கறிஞராத்தான் வருங்கன்னு (அப்ப நாங்க என்னபாடு பட்டிருப்போம்) முத்தரசு வழக்கறிஞராகி எங்க எண்ணத்தை காப்பாத்திட்டான். ஆனா குடும்ப கஷ்டத்தினால திருநாவால மேல படிக்கலை (நிறைய பேருக்கு அமையும் வாழ்க்கைதான் அவனுக்கும்).

நாங்க யாரையும் லந்து அடிக்க மாட்டோம் ஆனா எங்களுக்குப் பேரு லந்துக் கோஷ்டி. அப்ப முதல்வரா பழனியப்பன் சார் இருந்தாருங்க. ரொம்ப............. பயந்தவருங்க (வடிவேலுக்காவது பிரேஸ் மட்டம் மட்டும்தான் வீக்.இவருக்கு மொத்தமும் வீக்...). அதனாலதானோ என்னவோ ஒரு பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் முதல்வர் பதவியை விட்டுட்டு ஓடிவிட்டார்.

ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி (முட்டாள்கள் தினம்) உஜாலா சொட்டு நீலம் வாங்கி (மை அடிக்க) முதல்வர் பழனியப்பன் சாருக்கே அடித்திருக்கிறோம். அப்ப சந்தோஷமாக இருந்தது இப்ப நினைக்கும் போது வலிக்கிறது (சொல்லப்போனா அன்னைக்கு நாங்கதான் முட்டாள்களா இருந்திருக்கோம்).

தீபாவளிக்கு வெடி ரெடியானதும் முதலில் வெடிக்கும் இடம் எங்கள் கல்லூரியாகத்தான்  இருக்கும். விளையாட்டுத்திடல், கேண்டீன், மாணவிகள் ஓய்வறை, டாய்லெட், சைக்கிள் நிறுத்துமிடம் என எல்லா இடத்திலும் வெடிக்கும். வைத்ததும் வெடிக்கக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியில் கட்டி வைப்போம் (எல்லாம் முன்னோர் காட்டிய வழி) .அதற்காக வாங்கும் ஊதுபத்தி வாசனையில்லாததாக (குறைந்த விலைக்கு ) வாங்குவோம். முதல்வர் அறைக்குள் பின்புறம் ஒரு தடுப்பு இருக்கும் அதற்கு பின்பக்கமாக ஒரு சன்னல் உண்டு. அதற்குள்ளும் எங்கள் கூட்டணி வெடி வச்சதுன்னா பாருங்களேன்.

ஒருபுறம் நண்பர்கள், அரட்டை என்று நாட்கள் நகர்ந்தாலும் மறுபுறம் ஐயாவுடனான நட்பும் இறுகியது. ஒருநாள் முருகன் கதை ஒன்றை எழுதி ஐயாவிடம் கொடுத்தான். அதை வாங்கியபடி என்னய்யா நீங்க எதுவும் எழுதுவிங்களா? என்றார். "இல்லைய்யா... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்." என்றேன். "எழுதிப்பாருங்க வரும்" என்றார்.

அதன் பிறகு எனக்கும் தமிழ் மீது பற்று வந்தது. ஐயா எழுதிய புத்தகங்களையெல்லாம் வாசிக்கலானேன். ஒருநாள் கதை எழுதிப் பார்ப்போமே என்று 'மண்ணில் இந்த காதலின்றி...' பாட்டு வரிகளுடன் ஆரம்பித்து 'மனிதர் உணர்ந்து கொள்ள...' என்ற பாடலில் முடித்தேன் (என்ன செய்ய வயசு அப்படி...).

முருகனிடம் காட்டியபோது 'ஆஹா...ஓஹோ... என்று புகழ்ந்தான் (எனக்காக பொய் சொன்னான் என்று எனக்குத் தெரியும்). ஐயாகிட்ட காட்டு என்றான் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும் ஐயா நிச்சயம் நல்லாயிருக்குன்னு சொல்லமாட்டார். ஆனா முருகன் ஐயாவிடம் எனது கதையை போட்டுக் கொடுத்துவிட்டான். என்னய்யா நான் படிக்ககூடாதா? என்று வினவ, அப்படியில்லையா... நல்லாயில்லை... என்று இழுத்தேன். பரவாயில்லை கொடுங்க என்று வாங்கி படித்தவர். என்னிடம் "எழுத்து நடை நல்லாயிருக்கு...ஆனா காதல்.. கத்திரிக்காய்ன்னு வயசுக்கு தகுந்த மாதிரி எழுதாம வித்தியாசமாக எழுதுன்னிங்கன்னா நல்லாயிருக்கும் என்றபடி கதையை என்னிடம் கொடுத்தார்.

அவரது கையில் என் முதல் கதை பட்டதாலோ என்னவோ அதன் பிறகு நல்ல கதைகளை எழுத ஆரம்பித்தேன் (படிச்சவங்க சொல்லணுமுன்னு நீங்க சொல்லுறது கேக்குது என்ன செய்ய... எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்).

நம்ம கதையை படிச்சுட்டு முகம் தெரிஞ்சவங்க நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்காங்க. எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய முகம் தெரியாத நண்பர்களிடம் இருந்து பாராட்டுக்கள்.

அதில் குறிப்பா நண்பர் 'நாடோடி இலக்கியன்' அவரது வலைத்தளமான 'நாடோடி இலக்கியன் பக்கத்தில்' பதிவர் அறிமுகத்தில் 'நொறுக்குத் தீனி' எனற தலைப்பில் எழுதியிருந்தார். அது......

"ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்: இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்: கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:

விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..! "'

அடுத்தவங்களை பாராட்ட நல்ல மனது வேண்டும். என்னை அறிமுகம் செய்த இந்த முகம் அறியா நட்புக்கு நன்றி (என்னப்பு நம்ம சுயவிளம்பரம் சரிதானுங்களா..).

சரி... சரி... இவ்வளவு தூரம் இந்த மொக்கையை மேஞ்சுட்டிங்க... அப்படியே 'செந்தமிழ் பைந்தமிழ் மன்ற சிறுகதை' போட்டியிலயும் காலை விட்டிருக்கோம். கொஞ்சம் அங்க போயி பார்வைகள் கதையை படிச்சுட்டு கருத்த சொல்லிட்டுப் போங்களேன்.

கல்லூரிக்காலம் - V ல் சங்கமிப்போம்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - III

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை சந்தோஷம் , சங்கடம், அடிதடி, ஸ்டிரைக், ஐடிசி என கரைந்தது. விடுமுறைக்குப் பின்னர் இரண்டாம் ஆண்டில்... என்ன ஒரு சந்தோஷம் என்றால் அரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்பு பிரியாமல் ஒரே வகுப்பறையில்... (பள்ளிக்கூடத்தில் அப்படியில்லாமல்தான் பல நட்புகளை இழக்க நேரிடுகிறது இல்லையா?)

எனது நண்பர்கள் அண்ணாத்துரையும், சேவியரும் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் சமைத்து சாப்பிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அறையில்தான் நான். (ஐயோ... சத்தியமா சாப்பாட்டுக்காக இல்லைங்க...) . தங்கும் அறையை அண்ணாத்துரை அந்த இடத்தில் எடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க காரணம் ஒன்று உண்டு. அது அவனது காதலி தங்கிப் படித்த அக்கா வீட்டின் அருகில் என்பதே. (இப்ப இருவரும் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். வேறு வேறு குடும்பத்தில்...)

எனக்கும் வகுப்பறை தோழர்களுடன் மற்ற துறையிலும் தோழர்கள் கிடைத்தனர். இயற்பியல் துறையில் அம்பேத்கார் (இப்ப எம்சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் இருப்பதாக கேள்வி), இளையராஜா (உள்ளூரிலே கடை வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான்) , சுபஸ்ரீ, கனிமொழி (ஐயா இல்லத்தில் உருவான நட்பால் கிடைத்த நல்ல தோழியர்) , விலங்கியல் துறையில் பிரபாகரன், தமிழ்த்துறையில் சங்கர், ரவி(தற்போது ஆசிரியர்) , ஜஸ்டின் (தற்போது ஆசிரியர்) ,ரவி, முருகன் (தற்போது பேராசிரியர்) , சிவகுமார், ஆங்கிலத்துறையில் ரமேஷ் (ஆசிரியர்), சூசை மாணிக்கம் (நல்லா பாடுவான். கல்லூரியில் இவன் குரலுக்கென்று ரசிகைகள் உண்டு) , கண்ணன் (என் நண்பன் ஆதியால் கிடைத்த நல்ல நண்பன்) வணிகவியல் துறையில் சில நண்பர்கள். இதில் முருகன் தவிர மற்ற நண்பர்கள் தொடர்பில் இல்லை.

எங்கள் வகுப்பறை முதல்வர் அறைக்கு அருகில் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகளில் எங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களும் கலந்து விடுவர். அரட்டைக்கு கேட்கவா வேண்டும்.

தமிழ்த்துறையில் இருந்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவர்களில் ஆறுமுக ஐயா, நகைச்சுவை என்று எதாவது சொல்லி அவரே சிரிப்பார். நாங்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக அவரையே பார்ப்போம். உடனே சிரிப்பை நிறுத்தி எங்களைப் பார்த்து சிரிப்பு வரலை என்று கேட்பார். அவர் சீரியஸாக பாடம் நடத்தும் போது திடீரென எல்லோரும் சிரிப்பார்கள். இது தினமும் தொடரும்.

சுந்தரமூர்த்தி ஐயா, இவர் பாடம் எடுக்கும் போது லண்டன் என்று யாராவது கத்தினால் போதும் மனுசனுக்கு கோபம் வரும் பாருங்க. அப்பா... ஒரே ருத்ரதாண்டவம்தான் போங்க. (எங்க முன்னோடிகள் சொல்லிச் சென்றார்கள். நாங்கள் தொடர்ந்தோம்... எதுக்கு கோபம் கொள்கிறார் என்பது யாருமே அறியாத சிதம்பர ரகசியம்)

சுப்பிரமணியன் ஐயா (RMS என்று சொல்லுவோம். பெயர் சரிதானா என்பது தெரியவில்லை) , இவரை பாடமே எடுக்க விடமாட்டார்கள். இவருக்கு தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும். ஒருநாள் அவர் சிரத்தையுடன் பாடம் எடுக்கும் போது ஒருவன் எழுந்து உங்க தலை முடியெல்லாம் எங்கய்யா என்று வினவ, கோபத்தில் வீட்டிலிருந்து கல்லூரி வரும் வழியில் புறா பொறக்கி தின்னுருச்சு என்றாரே பார்க்கலாம் வகுப்பில் எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரம் ஆனது. அது முதல் அவரது பெயர் புறா பொறக்கியானது. (கல்லூரி சுவர், வகுப்பறை எல்லா இடங்களிலும் கல்வெட்டாய்...)

பழனி ஐயா, மற்ற துறை மாணவர்களிடம் எப்படியோ தெரியவில்லை. எங்கள் வகுப்பறையில் பாடத்துடன் பொது அறிவும் கலந்து கொடுத்து மாணவர்களை கட்டிப் போட்டிருந்தார் (ஐயா பற்றி இன்னும் நிறைய இருக்கு).

சிங்காரவடிவேலன் ஐயா, நல்ல கவிஞர். நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நடந்து கொள்வார். நல்லா நடத்துவார். சில காலம் முதல்வராகவும் இருந்தார்.

தேனப்பன் ஐயா, நல்ல இலக்கியவாதி, நகைச்சுவையுடன் பாடம் நடத்தும் கலை அறிந்தவர்.

எல்லோரிடமும் வகுப்பறையில் மாணவர்களாக (நாங்களெல்லாம் வாயே திறப்பதில்லை) நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தாலும் பாடம் நடத்துவதிலோ பழகும் விதத்திலோ எங்கள் பேராசிரியர்கள் என்றைக்குமே எவரெஸ்ட்டாய்தான் இருந்திருக்கிறார்கள். (நம்ம அனுபவிக்கும் போதுதான் அவங்க கஷ்டம் நமக்கு புரியுது) .

ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பெரிய திருவடி, வாசுதேவன், தண்ணீர்மலை என எல்லா பேராசிரியர்களுமே நல்லா நடத்தினார்கள். இன்றைக்கும் என் பேராசிரியர்களை மனதில் மரியாதையுடனதான் வைத்துள்ளேன்.

என் நண்பன் முருகன் தமிழ்த்துறை என்பதால் பழனி ஐயாவிடம் நல்ல நட்பு உண்டு. அவன் மூலமாக ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதுடன் அவர் வீட்டில் அவரது பிள்ளைகளில் ஒருவனாய் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அந்த ஜோதியில் நானும் ஐக்கியாமானேன்.

கல்லூரிக்காலம் - IV ல் சங்கமிப்போம்

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - II

சில பல காரணங்களால் கல்லூரிக்காலம் இரண்டு எழுத நீண்ட நாட்களாகி விட்டது.

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. கல்லூரி வாழ்க்கைக்குள் செல்லும் முன்...

எனது துறை பேராசிரிய பெருமக்களைப் பற்றி சில வரிகள் (குரு மரியாதை...) பேராசிரியர் நா.சீனிவாசன் (துறைத்தலைவர்) - நாங்கள் கல்லூரியில் சேரும் முன்னர் முதல்வராக இருந்து நாங்கள் சேர்ந்த பொழுது சில காரணங்களால் நீக்கப்பட்டு (எங்க ராசி நல்ல ராசி...) நாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும் போது எங்கள் மாற்றுச் சான்றிதழில் முதல்வராக கையெழுத்துப் போட்டவர் (நாங்க ரொம்ப நல்லவங்க).

பேராசிரியர் கே.வி. சுப்ரமணியன் (செல்லமாக கேவிஎஸ்) - நடந்தே தான் கல்லூரிக்கு வருவார். எல்லோருக்கும் உதவும் நல்லகுணம் கொண்டவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். ஆரம்பம் முதலே என் மீது அதிக பாசம் கொண்டவர்.

பேராசிரியர் ஏ.வெங்கடாசலம் - நல்ல மனிதர். ஆமாங்க நாம இந்தா வர்றேன் சார் என்று சொல்லிச் சென்றால் (திரும்ப வரவில்லை என்றாலும்) வருகை பதிவில் கைவைக்கவே மாட்டார்.

பேராசிரியர் அமலசேவியர் - மிகவும் நல்லவர். எட்டாம் நம்பர் மீது அதிக பற்றுக் கொண்டவர். (அவரோட ஸ்கூட்டர் நம்பர் 0440ன்னா பார்த்துக்கங்க)

பேராசிரியர் சேவியர் - எங்கள் துறையின் கடைக்குட்டி (மேல சொன்ன பேராசிரியர்களிடம் படித்து அதே துறையில் வேலை). பசங்களுக்கு உதவ தயங்காதவர். தம்பி... என்று பாசத்துடன் அழைப்பவர்.

இவர்கள் போக இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் எடுத்த பேராசிரியர்கள் பற்றி பின்னர் பார்க்கலாம்.

முதல் பருவத்தேர்வுகள் முடிந்து எல்லா பாடத்துலயும் தேர்ச்சி. (ஆங்கிலத்துல எழுதி அரியர் இல்லாம வெற்றி... சத்தியமா நம்ப முடியலைங்க...) எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சிலர் தவிர மற்றவர்களுக்கு அரியர் இல்லை (நல்ல நட்பு).

அடுத்த பருவம் தொடங்கிய போது எங்கள் வகுப்பிற்குள் கோஷ்டி முளைத்தது. ஆறுமுகம் தலைமையில் சிவபாலமூர்த்தி (நம்ம ஆளுதாங்க) உள்ளிட்ட 5 நண்பர்கள் ஒரு கோஷ்டியும் (அடிதடிக்கு முன் நிற்கும் கோஷ்டி) இளங்கோ தலைமையில் ஒரு கோஷ்டியும் (அடியும் வாங்கும் கோஷ்டி) உருவானது. எங்க கோஷ்டி (அதிகம் ஆளு இருந்த கோஷ்டி) தனி. இரண்டு பக்கமும் பேசுவோம் (மத்தளம் மாதிரி).

எங்களை பேராசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். சண்டை வரும் போது எங்களை வீட்டுக்குப் போகச்சொன்ன நாட்களும் உண்டு. (உண்மையை சொன்னா நாங்கள்ளாம் கைப்புள்ள மாதிரி...)

எங்க கூடப் படித்த தோழியருக்கும் எங்களை மட்டுமே பிடிக்கும். (உண்மையான நட்புங்க). நல்லா போச்சுங்க முதல் வருடம்.

முதல் வருடத்தில் எனக்கு மற்ற துறைகளிலும் முத்தான நட்பு கிடைத்தது. எனக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் பழனி ஐயாவுக்கும் இடையில் நண்பன் முருகன் மூலம் நட்பு ஏற்பட்டது. (இன்றுவரை அப்பா ஸ்தானத்தில் உரிமையுடன் தொடரும் நட்பு) ஐயா, முருகன், மற்ற நண்பர்கள், முதல் கதை, மனசு இதழ் பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில்... கல்லூரிக்காலம் இன்னும் பசுமையுடன் தொடரும்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

கல்லூரிக்காலம் - I

கல்லூரிக்காலம்... அந்த நாட்கள்தான் எத்தனை இனிமையான நாட்கள். எங்கிருந்தோ வந்து எனக்குள் ஐக்கியமான நட்புகள்... எனது படைப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தது... இலக்கியப் போட்டிகளில் வென்ற பரிசுகள்... எனக்குள் நுழைந்து என்னை மகன் போல் நடத்திய பேராசிரியப் பெருமக்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ அந்த வசந்த காலத்தில்...


பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.

ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.

எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)

பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).

எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).

என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).

இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).

மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.

ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)

ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

கல்லூரிக்காலம் தொடரும்.

-சே.குமார்

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - III

டுநிலைப் பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளிக்குப் பயணம். அதற்கென நுழைவுத்தேர்வு வேறு. தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சிபாரிசிலும் சிலர் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. (ஏழைக்களுக்கு அந்த கொடுப்பினை எங்கும் இல்லை. அரசியல்வாதியாகவோ அல்லது அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவரின் பிள்ளையாகவோ அல்லது ஆசி பெற்றவரின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும்.)

பரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)

எங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)

பெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)

அது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)

எப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.

இவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.

அடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்லூரிக்காலம் பற்றி பார்ப்போம்.

-சே.குமார்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் -II

பள்ளிப் பருவம் -II... இதுவும் நடுநிலைப்பள்ளி சம்பவங்களின் தொகுப்புதான். நாலாப்பு படிக்கும் போது பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு' படம் வந்துச்சு. ஒருநாள் அம்மா, நான், அக்கா, தம்பி எல்லோரும் படம் பார்க்க போனோம். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனப்ப மத்தியானம் சாப்பிட்டுட்டு மரத்தடியில நின்னு மரக்குரங்கு (அதாங்க ஒரு கம்பை வச்சு வட்டம் போட்டு விளையாடுவாங்களே... அதான்) விளையாடுனவங்களை பார்த்துக்கிட்டிருந்தேன்.

மரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.

ரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)

அம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா..? என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).

இப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.

ஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)

அப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்துல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.

அந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.
 
-சே.குமார்

வெள்ளி, 13 நவம்பர், 2009

பள்ளிப்பருவம் - I

பள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.


நான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).

மூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.

புஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .

அதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.?

ஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை(!!!???)எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)

அவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.

என்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.

அடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.

-சே.குமார்