மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : கலாய்த்த பிக்பாஸ்

Image result for biggboss 30th august 2019 images
காலையில் திருப்பள்ளி எழுச்சியாய் 'லாலா கடை சாந்தி...' பாட்டு எப்பவும் போல் லாஸ்லியா, முகனுடன் சாண்டியும் தர்ஷனும் ஆடினார்கள். சேரனும் ஷெரினும் கக்கூஸில் ஆடினார்கள். ஆட்டம் முடிந்தது அடுத்து என்னன்னு யோசிக்கவெல்லாம் வேண்டாம்... பிக்பாஸ் காதல் வளர்த்தேன் கவின் பின்னால போயிடுவாருதானே...

ஆமா... லாஸ்லியாவும் கவினும் அந்த சிகப்புக் கேட்டும்... கவின் வெளியில ஒருத்திய அத்துவிட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டு லாஸ்லியா அதன் காரணமாக தன்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிற முனைப்புல இருக்கிறார். நாம் செய்யும்... செய்த தவறுகளால் இந்த வாரம் வெளியில போயிருவோமோங்கிற பயமும் இருக்கு... அப்படிப் பொயிட்டா லாஸ்லியா மனசை உள்ள இருக்கவங்க மாத்திருவாங்களேங்கிற நினைப்பும் இருக்கு... எப்படியும் உன்னைத் தான்டா லவ்வுறேன்னு சொல்ல வைக்க படாதபாடு படுகிறார்.

சோகமாய் இருப்பது போலவும் நீங்க விளையாடுங்க... நாந்தான் எல்லாம் சொல்லிட்டனே... நீங்க உங்க முடிவைச் சொல்லுங்க... அப்படி இப்படின்னு நடிகர் திலகமாய் மாறிக்கிட்டு இருக்கிறார். லாஸ்லியா எந்த ஒரு விஷயத்தையும் மனசுக்குள் ஆராய்ந்தே முடிவைச் சொல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார். கவின் அத்துவிட்ட காதலை ஆயிரம் சிவாஜியாய் மாறிச் சொன்ன பின் லாஸ்லியா ரொம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டார். கவினை விட்டு விலகவும் முடியாமல் நான் உன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லவும் முடியாமல் தவிக்கிறார்.

கவின் தன்னை ஒதுக்குவது போல் நடிப்பதை அவர் உண்மை என்று நம்பி அழ, கவின் கண்ணைத் துடைத்து விட்டு செமையா ஒரு நடிப்பைப் போட்டிருக்கிறார். கவினைப் பொறுத்தவரை லாஸ்லியாவை விட்டு விடக்கூடாது என்பதில் முனைப்புடன் இருக்கிறார். லாஸ்லியாவுக்கு மனம் கடிகாரப் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் காதல் வெர்சன் இப்போதெல்லாம் ரொம்பவே போரடிப்பதுடன் கடுப்பாகவும் இருக்கிறது. பிக்பாஸ் வேற காட்சிக்குப் போங்க பிக்பாஸ்ன்னு கத்தணும் போல இருக்கு. இவர்கள் வெயிலில் அமர்ந்து காதல் வளர்ப்பதை சாண்டி, தர்ஷன் எல்லாம் கேலியாப் பேசுகிறார்கள். 

வனிதாவை காலைக்கடனாய் ஜூம்பா சொல்லிக் கொடுன்னு பிக்பாஸ் சொன்னாரு. என்னைக்குச் சொன்னதைக் கேட்டிருக்கிறோம் இன்னைக்குக் கேட்க... நீ என்னய்யா ஜூம்பா சொல்லிக் கொடுக்கச் சொல்றது நான் வம்பா சொல்லிக் கொடுக்கிறேன் என வம்பா நின்னு முகனை வைத்து ஏதோ சொல்லிக் கொடுத்தார். ரொம்ப நேரமா வம்பாவை வம்பாச் சொல்லிக் கொடுத்திருப்பார் போல கவின் போதுங்க்கா என்றார். சேரனெல்லாம் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். வனிதாக்கான்னா சும்மாவா..?

தர்ஷனிடம் லாஸ்லியா கவின் வெயிலில் காதல் வளர்ப்பதைப் பற்றி அவர்களுக்குள் எதும் பிரச்சினையாடா என சேரன் கேட்க, அவங்க சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் எங்கிட்டயே கேக்குறீங்கண்ணா... நானும் உங்களை மாதிரித்தான் அண்ணா... இதை அவங்ககிட்ட கேளுங்கன்னு சிரிச்சான். சேரனுக்கு இது தேவையில்லாத வேலை... நீ ஆணியே புடுங்க வேண்டான்னு கவினும் லாஸ்லியாவும் ஒதுங்கிப் போகும் போது புடுங்கியே ஆவேன்னு எதுக்கு நிக்கணுங்கிறேன்.

டாஸ்க் ஒன்று... வனிதா வர நேரமானதால் லாஸ்லியா அதை வாசிக்காது நானே சிறந்தவள்... பிக்பாஸ் என்னை எதுவும் கேட்கமாட்டார்... கவின் மைக்கை ஒழுங்கா வை... அது இதுன்னு அளந்து விட்டுக்கிட்டு என்னை ஒரு தரம் கூட பிக்பாஸ் மைக்கைச் சரி பண்ணுன்னு சொல்லலைன்னு சொன்னதும் லாஸ்லியா உங்க மைக்கை சரியாக வையுங்கள் என்று பிக்பாஸ் சொல்ல, எல்லாரும் ஒரே சிரிப்பு. பிக்பாஸ் முடிவு பண்ணிட்டாரு போல இன்னைக்கு லாஸ்லியாதான் நம்ம இலக்குன்னு... அடிக்கடி மைக்கை மாட்டு... மைக்கைச் சரி பண்ணுன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

தர்ஷன் சேரனுடன் ஜாலி விவாதத்தில் இருந்த லாஸ்லியா தர்ஷனை அவன் இவன் என்று சொல்லிவிட்டு கவின் பற்றிய பேச்சு வந்த போது அவர் இவர் என்றார். அதென்ன நான் அவன் இவன் கவின் மட்டும் அவர் என தர்ஷன் கொக்கி போட, கவினையும் அவன் இவன்ன்னு சொல்லுவேனே எனச் சொல்லி அழைக்க, கவின் வந்து தனியே இருக்கும் போது இதைவிட கேவலமாக கூப்பிடுறான்னு சோகமாச் சொல்லிட்டுப் போயிட்டார்.

அப்புறமும் லாஸ்லியாவைத்தான் தர்ஷன் முகன் சாண்டி சேர்ந்து ஓட்டினார்கள்... மேக்கப் போடுவதையும் சாப்பிடுவதையும் கேலி பண்ணினார்கள். சிரிக்காதீங்க என கோபமாய்ச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். முகன் பாட்டுப்பாடி கேலி செய்தார். தர்ஷன் ஷெரின் பின்னால் சுத்த ஆரம்பித்திருக்கிறார். பாட்டுப்பாடி காதல் வளர்க்கிறார். வனிதாவுக்கு இவர்களின் செயல் எரிச்சலைக் கொடுப்பது அவர் பார்வையில் தெரிந்தது. ஷெரின் சாப்பாடெல்லாம் ஊட்டி விட்டார். தர்ஷனுக்கு ஷெரினை அனுப்பிடுவாங்களோன்னு மனசுக்குள் பயம்.

கக்கூஸ்ல ஷெரின் சாண்டிக்கு முடி வெட்டிக் கொண்டிருக்க, அங்கு வந்த தர்ஷன் ஷெரினுடன் காதல் சேட்டையை ஆரம்பிக்க, அடேய் இது எந்தலைடா... என்னோட முடிடா... உங்க பிரியாணிக்கு நானாடா தாளிச்சான்னு கவின் பாவமாய் உட்கார்ந்திருந்தார்.

அடுத்து தலைவருக்கான போட்டியில் இந்தப் போட்டியில் இப்போது இருப்பவர்களில் யார் பிரபலம் என்பதாய் வரிசைப் படுத்தணும்  மற்றவர்கள் சொன்ன வரிசையை ஞாபகத்தில் வைத்து பிக்பாஸிடம் சொல்ல வேண்டும், யார் சரியாகவும் விரைவாகவும் சொல்றாங்களோ அவங்களே தலைவர்... வனிதா, சேரன், முகன் மூவருமே முதலாவதாய் தங்களைச் சொல்லிக் கொண்டார்கள். சேரன் இரண்டாம் இடத்தில் இருந்தார். மற்றவர்கள் எல்லாம் மாறி மாறி இடம் பிடித்தார்கள். வரிசையைச் சொல்லும் போது முகனிடம் சேரனின் வரிசை என்ன என்று கேட்டபோது பாட்டாய் மனப்பாடம் பண்ணியிருந்ததை மாற்றி வனிதா வரிசையைச் சொல்லிவிட்டார். சேரன் வரிசைப்படுத்தியதில் முன்பின் ஆக்கிவிட்டார். வனிதா சும்மா சரச்சரன்னு சொல்லி தலைவி ஆயிருச்சு... சும்மாவே ஆடும்... பிக்பாஸ் சலங்கை வேற கட்டிவிட்டுட்டார்... இனிமேத்தான் அக்காவின் ஆட்டத்தைப் பார்க்கணும்.

இந்த முடிவுக்குப் பின் சாண்டி குருநாதா... எங்குருநாதா இப்படிப் பண்ணிட்டே என வனிதாவை தலைவராக்கி அடுத்த வார நாமினேசனிலும் இல்லைன்னு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிக்பாஸ்க்கு இப்போதிருக்கும் ஒரேஆயுதம் வனிதாக்காதான்... அவரையும் அனுப்பிட்டு என்ன செய்ய என்பதை யோசித்தே இந்த டாஸ்க் வச்சிருக்கார். அட தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கூட ஒரு விறுவிறுப்பா... சுறுசுறுப்பா இல்லாம... வெண்டக்காய் சாம்பார் மாதிரி வளவளன்னு... ஏன் பிக்பாஸ் ஏன்..?

அடுத்து ப்ரூட்டிக்கான டாஸ்க்... கயிறில் கட்டி இருக்கும் புரூட்டியை கயிறை இரு கைகளாலும் இழுத்து பாட்டிலைப் பிடிக்காமல் வாயில் வைத்துக் கவ்விக் குடிக்க வேண்டும்... கவின், சேரன், முகன் மற்றும் வனிதா ஒரு அணி இவர்களில் முகன் குடித்துவிட்டார்... முதலில் பாட்டிலைக் கவ்விய சேரனால் தம் பிடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டு மீண்டும் பிடித்துக் குடித்தார். அவர் கையால் பாட்டில் இருந்த அட்டையைப் பிடித்தது போல் இருந்தது... கள்ள ஆட்டம் ஆடினார். கவினுக்கு லாஸ்லியா, சாண்டியெல்லாம் கத்தி இறுதியில் பிடித்துக் குடித்தார். வனிதாவால் பிடிக்கவே முடியலை... இதெல்லாம் என்னடா டாஸ்க் என எப்பவும் போல் நீ என்ன சொல்றது நான் என்ன செய்யிறது பாணியில் பாட்டிலை ஆட்டி கீழே ஊற்றி விளையாண்டார்.

அடுத்த அணியில் ஷெரின் கலக்கலாய் குடித்து முடிக்க, தர்ஷனும் முடித்தார்... சாண்டி போராடி வெற்றி பெற்றார். வனிதாவைப் போல லாஸ்லியாவும் போராடிக் கொண்டிருந்தார். கவின் அப்படித்தான்... இப்படித்தான்னு கத்திக்கிட்டு இருந்தார். சேரன் போட்டின்னு வந்துட்டா சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருப்பார் போல கவின் சின்னதாய்  ஒரு கடி கடித்தார். ஷெரின் அணிதான் வெற்றி பெற்றது.

அப்புறம் எங்களுக்குச் சிக்கன் வேணும்ன்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... கத்து கத்துன்னு கத்துனானுங்க... சேரனெல்லாம் கோஷம் போட்டார். கவின் மட்டுமே பேசாமல் சிரித்தபடி படுத்திருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பின் பிக்பாஸ் சிக்கனை ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு கதவைத் திறக்காது 'சரக்கு வச்சிருக்கேன்... இறக்கி வச்சிருக்கேன்...' பாட்டைப் போட்டு கொஞ்ச நேரம் விளையாண்டு கதவைத் திறந்துவிட்டார். சிக்கனை எடுத்துக் கொண்டு ஓடி ஆளாளுக்கு அள்ளிக் கொள்ள, ஷெரினுக்கு ஒரு பீஸ் மட்டுமே மிச்சம் போல, பரவாயில்லை எனக்கு இது போதும் என்றார்.

நல்லாத்தான் திங்கிறானுங்க... தினமும் மதியமெல்லாம் இவனுக சமைத்துச் சாப்பிடுவது போலெல்லாம் இல்லை... ஹோட்டலில் இருந்துதான் வரும் போல அப்படியிருந்து கேஎப்சி சிக்கனை காணாததைக் கண்டது போல் தின்றார்கள். சிக்கன் மட்டும் பிக்பாஸ் கொடுக்கலைன்னா ஷெரின், லாஸ்லியாவையெல்லாம் லெக் பீஸாகி கடிச்சித் தின்னிருப்பானுங்க போல. பிக்பாஸ் செமையான மகிழ்ச்சியில இருந்தாரு போல... கொஞ்சம் ஆட்டம் காட்டி விளையாண்டு சந்தோஷப்பட்டுக்கிட்டார். பின்னே போராட்டம் மட்டுமே இருபது நிமிட எபிசோடை சரிபண்ணிடுச்சுல்ல.

வனிதாவும் சேரனும் கவின் லாஸ்லியா பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கவின் இப்போது விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை என்பதை வனிதா சொல்ல, காதலிக்கிறவங்க பக்கத்துல இருந்து பேசிக்கிட்டே இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அதை மட்டுமே செய்யக்கூடாதுல்ல... எதுக்கு வந்திருக்கோங்கிறது புரியணும் அது ரெண்டு பேருக்குமே புரியலை... அது போக இது மட்டும் வாழ்க்கையில்லை இதையும் தாண்டி வெளியில ஒரு வாழ்க்கை இருக்கு... அதை முதல்ல மனசுல வச்சிக்கணும்... லாஸ்லியாவுக்கு வெளியில சினிமா வாய்ப்பு இருக்கு... காதல்ல விழுந்தவங்களால இண்டஸ்டிரியில நீடிக்க முடியாது. அதுவும் போக வாய்ப்பு காத்திருக்குன்னு சொன்ன பின்னாடிதான் கவின் ரொம்ப அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறான்... அவனைப் பொறுத்தவரை அதை ஏத்துக்க முடியலைன்னு தோணுது. ஒருவேளை வெளியில போயி கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை நடிக்க விடமாட்டான் என்றார் சேரன். அவரது பார்வை சரியோ என்று தோன்றியது.

வனிதாவும் அது சரியென்றே பேசினார்... மேலும் சேரன் ரெண்டு பேரும் நமக்கிட்ட எதுவும் பகிர்ந்து கொள்வதில்லை... நாம எதுக்கு தேவையில்லாம மூக்கை நுழைக்கணும்... அதனால நம்ம பாதையில் நாம போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார். இந்த முடிவு நல்லதுதான்... இதையே தொடர்தல் நலம்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்க, கவினும் லாஸ்லியாவும் அந்த சிகப்புக் கதவும் தங்கள் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மனசின் பக்கம் : அபி முதல் அன்னை வரை

காலையில் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்பும் சூழலிலும், விடுமுறை தினத்தில் இன்னும் சிறிது நேரம் தூங்கலாமே என்று எண்ணும் சூழலிலும் நாள் தவறாமல் ஒரு குழந்தை திருக்குறள் சொல்லி, அதற்கு விளக்கம் கொடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல... இதைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுவதைவிட தொடர்ந்து காலையில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்தக் குழந்தையின் மனசுக்குள் ஏற்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

முத்துநிலவன் ஐயாவின் பேத்தியும் சகோதரர் நெருடாவின் செல்ல மகளுமான அபி , திருக்குறள் சொல்ல ஆரம்பித்து நூறு குறள்களைச் சொல்லி முடித்திருக்கிறார். இப்போது தினம் ஒரு சங்கப்பாடலும் அதற்கு விளக்கமும்  கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இது ஒரு நல்ல பழக்கம் என்பதைவிட அருமையானதொரு பயணம் என்றே சொல்ல வேண்டும்.  தொடரட்டும் இந்தப் பயணம் சிகரம் தொட... வாழ்த்துக்கள் அபி.

தினமும் தவறாது சொல்ல வைத்து அதை வீடியோவும் எடுத்து முகநூல் பக்கத்தில் பகிரும் அவரின் அம்மாவுக்கும் யுடியூப்பில் வலையேற்றம் செய்யும் நெருடாவுக்கும் வாழ்த்துக்கள்.

அபியின் யுடியூப் சேனல் முகவரி : செம்மொழி

அபியின் முகநூல் முகவரி : செம்மொழி

சிறுகதைகள் தளத்தில் பலரின் கதைகள் பகிரப்படுகிறது. அதை எப்போதேனும் வாசிப்பதுண்டு. அந்தத் தளத்தில் கதைகள் பகிர நினைத்ததில்லை... நெருடாதான் கதை அனுப்புங்கள்... அங்கு பகிர்வார்கள் என்று சொன்னார். ஆல்ப்ஸ் தென்றல் நிஷாந்தி அக்கா உள்ளிட்ட பலரை உறவாப் பெறக் காரணமாக இருந்த, சேனைத் தமிழ் உலா என்னும் இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் 2015-ம் ஆண்டு முதல் பரிசு பெற்ற விழலுக்கு இறைத்த நீர் என்னும் சிறுகதையை அனுப்பி வைத்தேன். பத்து நாட்களுக்குப் பிறகு இன்று காலையில் உங்கள் கதை பகிரப்பட்டிருக்கிறது என்ற மின்னஞ்சல் வந்தது. சில பல காரணங்களால் வருந்திக் கிடந்த மனசுக்குள் நம் கதை பகிரப்பட்டிருக்கிறதே என்ற மகிழ்ச்சி மழை பெய்தது என்பது உண்மையே. தனபாலன் அண்ணன் சொன்னது போல் எதையும் தூக்கிச் சுமக்காமல் அங்கங்கே இறக்கி வைத்துவிட்டு என் பாதையில் பயணித்துக்  கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலுடன்.

நீங்கள் வாசித்த கதைதான் என்றாலும் சிறுகதைகள் தளத்தில் வாசித்து கருத்துக்கூற...


லுவலகத்திலும் வேலையில்லை... எதுவும் எழுதவும் தோணலை... அப்படியே எப்போதேனும் சிறுகதைகள் எழுதினாலும் இங்கு பகிர்வதில்லை என்ற போது பிக்பாஸ் எழுதலாமே என பொழுது போக்காக ஆரம்பித்தது இன்று 51வது பதிவாக வந்துள்ளது. இப்படித் தினமும் பதிவெல்லாம் எழுதியவன் கிடையாது நான்... மீண்டும் மனசு தளம் இயங்கக் காரணமாய் அமைந்தது பிக்பாஸ் எனலாம். 

ஆரம்பத்தில் சாதாரணமாக எழுத ஆரம்பித்து... இடையில் சுவராஸ்யமில்லாத போது அதில் என்ன நிகழ்வோ அதை அப்படியே காமெடியாக எழுதித் தொடர்ந்து கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் விரிவான பார்வையுடன் எழுத முடிகிறது. இதை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இங்கும் பிரதிலிபியிலும் முகநூலிலும் சிலர் இருப்பதாலேயே இது சாத்தியப்பட்டுள்ளது. இத்தனை பதிவுகள் தொடர்ந்து எழுதியதில் ஒரு நன்மை... தடைப்பட்டிருந்த எழுத்து கொஞ்சம் சரளமாக வர ஆரம்பித்திருக்கிறது. அதற்கு இதை வாசித்து, எழுதவில்லை என்றால் ஏன் எழுதலை என்று கேட்கும் உறவுகளுக்கு நன்றி.

டல் நலமில்லை... உடம்பில் சில மாற்றங்கள்... இங்கு கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி என்பதெல்லாம் வயது பார்த்து வருவதில்லை... அதேபோல் யூரிக் ஆசிட்டும் நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது பேருக்கு இருக்கும். யூரிக் ஆசிட் இங்கு வந்து இரண்டு வருடத்தில் வந்தது. தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இதுவரை யூரிக் ஆசிட் குறைந்த அளவுக்கு மேல் இல்லாமல் செய்து விட்டேன். இப்போது கொலஸ்ட்ராலா சர்க்கரையா என்று தெரியவில்லை... டெஸ்ட்டுக்கு இரத்தமும் யூரினும் கொடுத்திருக்கு. நாளைதான் தெரியும்... எது எப்படி என்றாலும் மாத்திரை எடுத்துக் கொள்ள மாட்டேன். உணவுக் கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலுமே குறைத்துக் கொண்டு வர வேண்டும். பார்க்கலாம்... பிரச்சினைகள் இல்லாத வாழ்வு எப்போது வாய்க்கும்..?

மீபத்தில் எழுதிய கதையில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு... முழுக்கதையும் போட மாட்டோமுல்ல...

"சார்... நிஜம்மா.." கண்கள் விரிய முகுந்தன் கேட்டார்.

"பொய்யா சொல்லப் போறேன்.... அன்னை சாயந்தரம் அப்படியே மரங்களுக்கு இடையே நடந்து போவாங்க.... அதைப் பாக்கக்கூட கூட்டமா அங்க அங்க நிப்பாங்க... அப்ப சிலர்கிட்ட அன்னையே போயிப் பேசுவாங்க... போன தடவை நான் போயிருந்தப்போ அப்படி ஒரு மாலையில என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசினாங்க... தினம்தினம் எத்தனையோ ஆயிரம் பேர் வர்றாங்க... பேரெல்லாம் ஞாபகம் வச்சிப் பேசுறதுன்னா... எம்புட்டு ஞாபக சக்தி வேணும்..."

"ஓ...என்ன ஒரு கொடுப்பினை சார் உங்களுக்கு"

"சின்னப்புள்ளைங்கன்னா அன்னைக்கு ரொம்ப இஷ்டம் சார்... அவங்களோட போனா  அன்னைக்கிட்ட முதல் முறையே ஆசி வாங்கிடலாம்..."

"ம்... ஆமா சார்... உங்க எண்ணமெல்லாம் நிறைவேறியிருக்கா?"

"என்ன சார் இப்படிக் கேக்குறீங்க... நிறைவேறாமையா அன்னையோட அடிமையாயிருப்பேன்... எம் பொண்ணுங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது... மனைவிக்கு பைபாஸ் அன்னையோட அருளால இப்ப நல்லாயிருக்கா... பசங்க வெளிநாட்டுல சம்பாதிக்கிறானுங்க... வேற என்ன சார் வேணும்..?"

"ஆஹா... எனக்கும் அன்னையோட ஆசிரமத்துக்குப் போகணும்ன்னு ஆசை வந்திருச்சு சார்..." என்றார் முகுந்தன்.

இராஜமாணிக்கம் வாயில் வைத்திருந்த சோறு தெரித்து விழுமளவுக்குச் சிரித்தார்.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

பிக்பாஸ் : வில்லுப்பாட்டு

Related image
பிக்பாஸ் கிராமத்து டாஸ்க்ல பொம்மலாட்டம், தெருக்கூத்து முடிச்சிட்டு இன்னைக்கு வில்லுப்பாட்டு... இந்த டாஸ்க் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால எப்பவும் போல பாட்டுப் போட்டு எழுப்பி விடும் கடமையுடன் கவின் லாஸ்லியாவின் காதலையும் காட்டும் கடமையைச் செய்யலைன்னா பிக்பாஸ் நிகழ்ச்சியே இல்லை என்பதை நாம் அறிந்துதானே வைத்திருக்கிறோம். 

காலை பள்ளியெழுச்சிக்கு 'ஹேய்... டிய்யா... டிய்யா... டோலு...' பாட்டு... எப்பவும் போல முகனும் லாஸ்லியாவும் எப்பவும் போடும் அதே ஆட்டத்தைப் போட்டார்கள்... வனிதாவும் ஷெரினும் கட்டியணைத்து காலை வணக்கம் சொல்லிக் கொண்டார்கள்... சேரனின் தலை மட்டும் டிய்யா... டிய்யா டோலுன்னு ஆடுச்சு.... பாட்டு முடியும் வரை கவின் எழவில்லை.... நைட் டூட்டி பார்த்திருப்பார் போல.

அப்புறம் எப்பவும் போல கவினும் லாஸ்லியாவும்... 

கொஞ்சநாள் கக்கூஸ்க்குள்ள காதலும் பாட்டும் இல்லாம இருந்துச்சு... இப்ப ஆரம்பிச்சிட்டானுங்க... முதல்நாள் கவின் காதல் கதையைச் சொன்னதே மிகப்பெரிய திட்டத்தின் ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. வெளிய போய் பார்த்துக்கலாம் என்ற எண்ணத்தை லாஸ்லியா மனசுக்குள் எல்லாரும் விதைத்து வைத்திருக்கிறார்கள். வெளியில் போனதும் அவர் மனம் மாறிவிட்டால் என்ன செய்ய என்பதாலேயே பிரச்சினைக்குரிய காதலை மூன்று ஆண்டுகள் தொடர்ந்த கதையைச் சொல்லி வைத்திருந்தார். காதல் பிரச்சினையின்னா எதுக்குய்யா மூணு வருசம் தொடரணும்... அதுவும் பிக்பாஸ்க்கு வரும்வரை தொடர்ந்த காதல் அபி, சாக்சி, லாஸ்லியான்னு மாறிமாறி பயணித்த பின்தான் பிரச்சினைக்குரிய காதலைச் சொல்லத் தோன்றி இருக்கிறது, அந்த காத்லுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொல்வதெல்லாம்... ம்... பல்லிருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்.

நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்... இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு... இனி இதுல வெளிய போயி பார்த்துக்க என்ன இருக்கு... வெளியில போயி ஒரு வாரத்துக்கு ரெண்டு பேருமே பேட்டி அது இதுன்னு பிஸியா இருப்போம். அப்புறம் நார்மலாயிருவோம்... வெளிய போயி பேசுவோம்ன்னா எதைப் பற்றி... கடந்த காலத்தைப் பற்றியா... இல்லை எதிர்காலத்தைப் பற்றியா... எதிர்காலம் நம் கையில் இல்லை... ஆனாலும் நான் எதிர்காலத்துல எப்படி என்ன எதுன்னு எல்லாம் முடிவு பண்ணித்தான் வச்சிருக்கேன். என்னோட கடந்த காலத்தைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை... நான் எல்லாம் சொல்லிட்டேன்... உங்க் கடந்த காலம் பற்றிப் பேசணுமா...? என்ன கல்யாணம் ஆயிருச்சா..? குழந்தை இருக்கா...? எனக்கொன்னும் பிரச்சினையில்லை... அப்படி இருந்த என்ன இப்போ..? நாம வாழ்க்கையை நாம எப்படி வாழ்றதுன்னு பேசலாம் என்றார் கவின்.

எல்லாத்துக்கும் வெளிய போயிப் பார்த்துக்கலாம் என்ற ஒற்றை வரியை மட்டுமே திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. அவருக்குள் கவினைப் பற்றி எதிர்மறையான எண்ணம் வந்திருக்கும் போல... அதான் பழங்கதையைச் சொன்ன கையுடன் நான் பிள்ளைக்குப் பேர் வச்சி ராமச்சந்திராவுல டாக்டருக்குப் படிக்கிற வரைக்கும் முடிவு பண்ணி வச்சிருக்கேன்... நீ என்னடா இன்னும் கடந்த காலத்துலயே நிக்கிறேன்னு பிராண்ட ஆரம்பிச்சிட்டார் கவின். மேலும் வெளியில் சென்றால் மனமாற்றம் நிகழக்கூடும் என்பதையும் நினைவில் வைத்தே இப்போதே முடிவைச் சொல்லு என்ற நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். கமல் பேசிய பின் இந்த ஒரு வாரத்துக்குள் எப்படியும் லாஸ்லியாவும் நானும் தீவிரமாகக் காதலிக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் காட்டவும் முனைகிறார் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இவர்களின் காதல் கதையை காட்டித்தான் பிக்பாஸையே ஒட்ட வேண்டிய சூழல் இருப்பதால் பிக்பாஸ்க்கு இது தித்திப்பாகத்தான் இருக்கிறது என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்ற மாதிரி நமக்கு நஞ்சாகத்தான் தெரிகிறது. என்னைப் பார்த்துக் கொள்ள ஆளிருக்கு என்ற எண்ணம் மனசுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கும் என்றாலும் அரவணைக்கிறேன் பேர்வழின்னு பின்னாலயே திரிஞ்சா தைரியத்தைவிட அசௌரியமே அதிகமிருக்கும். பழங்கஞ்சி புளிக்கத்தான் செய்யும் என்பதையும் இவர்கள் உணர்ந்து காதல் உணர்வுடன் மற்றவர்களுடன் இணைந்து பயணித்து வெளியே வந்தால் இவர்களின் காதல் நேற்றுப் போட்ட ரோடு மாதிரி அழகாகப் பயணிக்கும்.. இல்லேன்னா மழை பெய்து குண்டுங்குழியுமான ரோட்டில் பயணிப்பது போல்தான் ஆகும். உணர்வார்களா இருவரும்..?

அண்ணே... பிக்பாஸ் அண்ணே... நல்ல டாஸ்க்கா கொடுங்கண்ணே... விளையாட்டுகளைக் காட்டுங்கண்ணே... இவங்க காதலைப் பார்த்து என்னண்ணே ஆகப்போகுது... ஆரம்பத்துலயே இது மக்களின் பிரதிபலிப்புன்னு சொன்னீங்க... ஊருல உள்ள மக்கள் பூராம் கக்கூஸ்க்குள்ள காதல் வளர்த்துக்கிட்டாத் திரியிறானுங்க... அவனவன் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல்பட்டுக்கிட்டு ஒரு நேரச் சோத்துக்கு உழைச்சிக்கிட்டு இருக்காங்கண்ணே... எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு சொல்லிக்கிட்டு எப்பவும் நாங்க இதுதான் இன்னைக்கு நடந்திருக்கும்ன்னு எதிர்பார்க்கிற மாதிரித்தானே வச்சிருக்கீங்க பிக்பாஸ் அண்ணே... முடியலைன்னே... கவின் லாஸ்லியா பின்னால கண்ணை அலைய விடாம நல்ல டாஸ்க் கொடுத்து இனி வரும் வாரங்களையாவது கொஞ்சம் கலைகட்ட விடுங்கண்ணே... பெரிய மனசு பண்ணுங்கண்ணே...  சிநேகனெல்லாம் நாலுநாள் காருக்குள்ள கிடந்தாரேண்ணே... தண்ணி டாங்கைக் கட்டிக்கிட்டு அஞ்சு நாள் இருந்தாங்களேண்ணே... பொம்மை செஞ்சு ராப்பகலா திருடு போகமா காத்துக்கிட்டுக் கிடந்தாங்களேண்ணே... அப்படி டாஸ்க்கெல்லாம் எதுவுமே கொடுக்கலையேண்ணே ஏண்ணே..?

அப்புறம் எப்பவும் போல ஒரு கலை பற்றிய விளக்கம், பயிற்சி, அணி பிரிந்து செய்தல்ன்னு ஆரம்பிச்சிட்டானுங்க... ஐயா வந்து வில்லுப்பாட்டுப் பாடி அதைப் பற்றி விளக்கினார். அப்புறம் நாலுநாலு பேரா பயிற்சி எடுத்துக்கிட்டாங்க... அடுத்து ஆளுக்கு ஒரு தலைப்பெடுத்து நிகழ்ச்சி நடத்துனாங்க... 

வனிதா, சாண்டி, முகன், லாஸ்லியா அணி விவாகரத்து வாங்குதல் அதனால் குழந்தை அனாதையாதல் என்ற கருத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துனாங்க.... சேரன், கவின், தர்ஷன், ஷெரின் அணி அளவுக்கு மீறி வாழ ஆசைப்பட்டு கடனால் பாதிக்கப்படுவதைப் வைத்து நிகழ்ச்சி நடத்துனாங்க. வனிதா அணிதான் வெற்றி பெற்றது. 

பெரியவருக்கு பொன்னாடை போர்த்தி, பழங்கள் கொடுத்து மரியாதை செலுத்தினார்கள். வெற்றி பெற்ற அணியினருக்கு மட்டும் மரியாதை கொடுக்கும் விதமாக வாழ்த்துப் பாடல் பாடியபடி தலைப்பாகை கட்டிவிட்டார் பெரியவர். இதை எல்லாருக்கும் செய்திருக்கலாம். ஒரு வழியாக கிராமத்து டாஸ்க் முடிவுக்கு வந்தது.

கிராமத்து வாழ்க்கையை வாழ, அந்தக் கலைகள் அழியாமல் இருக்க இப்படி ஒரு டாஸ்க்குன்னு சொல்லிட்டு அதெல்லாம் ஒண்ணுமே இல்லாமல் கிராமியக் கலைஞர்களை பயிற்சி கொடுக்கச் சொல்லி இவர்களைச் செய்யச் சொல்லி ஒரு வழியாக ஒண்ணுமே இல்லாம ஒரு டாஸ்க்கை ஒப்பேத்தியிருக்கார் பிக்பாஸ்... கிராமத்து மனிதர்கள் எல்லாரும் கசங்காத புதிய ஆடைகள் அணிந்து திரிந்தது நகைச்சுவையிலும் நகைச்சுவை... 

கிராமியக் கலைகளை உடனே கத்துக்கிட்டு அதில் புதிய பரிமாணத்தையும் செய்து விட்டீர்கள் என்று புகழ்ந்ததெல்லாம் காலங்காலமாக அந்தக் கலையைச் சுமந்து கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கேவலப்படுத்துவது போலிருந்தது. பத்து நிமிடம் நடிப்பவர்கள் கிட்டத்தட்ட இரவெல்லாம் ஆடியும், பாடியும், நின்று கொண்டே மேளமிசைத்தும் நாதஸ்வரம் வாசித்தும் வாழ்க்கையை நகர்த்தும் கலை அழியக்கூடாதென நினைக்கும் கலைஞர்கள் முன் நிற்கக்கூட தகுதியில்லாதவர்கள்... இவர்கள் அவர்களை விட நன்றாகப் பண்ணினார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணியே.

கிராமியக் கலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன... நடவுப்பாடல், குலவைப்பாடல், தாலாட்டுப் பாடல் என எல்லாமே வாழ்வை இழந்து பல வருடமாகிவிட்டது. எங்க ஊரில் கோவிலில் குலவை போட யோசிக்கும் இளம்பெண்களே இப்போது இருக்கிறார்கள். மைக் செட் காரரிடம் குலவைப்பாட்டு கேசட் கொண்டு வரச் சொல்லி சாமி கும்பிடும் போது போடும் நிலையில்தான் உள்ளது. கரகாட்டம் என்னும் கலையை மிகக் கேவலமாக்கி வைத்திருப்பது அந்தக் கலைஞர்கள்தான்... ஏனென்றால் வயிற்றுப்பாட்டுக்காகவே அதை மாற்றித் தொலைத்திருக்கிறார்கள். எங்கள் தேவகோட்டையில் கரகாட்டம். ஆடல்பாடலுக்கு எல்லாம் தடை இருக்கிறது. கரகாட்டக் கலையை சுத்தமாகத் தொலைத்துவிட்டோம்... அதேபோல கூத்து... வள்ளி திருமணத்தில் வள்ளியும் நாரதருமே இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார்கள். இப்போது சில புதியவர்கள் நிறைய தர்க்கங்கள் பேசி கூத்துக் கலையை மீட்டெடுத்து வருகிறார்கள். கலைகளை மீட்டெடுப்போம் என்பது இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் அவர்களை விட நீங்க அருமையாகச் செய்கிறீர்கள் என்பதல்ல... அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தாலே போதும்... அக்கலை காலத்துக்கும் உயிர்ப்புடன் இருக்கும்.

அப்புறம் ஓப்போ போனுடன் போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். வனிதா முன்னரே வெற்றி பெற்று அடுத்த வார தலைவருக்கான போட்டியில் இருப்பதால் இன்னும் ஒருவரைச் சொல்லச் சொன்னார்கள்... எல்லாரும் முகன் என்றார்கள்... சரியான தேர்வுதான்... இந்த வாரம் முகன் டாஸ்க்கில் கலக்கினார். அடுத்து ஒட்டு மொத்தமாக சிறப்பாகச் செயல்பட்டவர் என்றதும் சேரனைச் சொன்னார்கள்... ஆச்சர்யமாக இருந்தது... பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் மழை பெய்திருக்கிறது. சேரனுக்கு காயின் பரிசாகக் கிடைக்க தனது உண்டியலில் போட்டு வைத்திருக்கிறார். சேரன் கையிருப்பு நாலு ஆக உயர்ந்திருக்கிறது.

அடுத்தது எப்பவும் போல் சிறப்பாக விளையாடாதவர்கள் யார் என்ற கேள்வி... இதில்தான் வில்லங்கமே வரும்... நானும் தர்ஷனும் சரியா விளையாடலை... ஆனா என்னைய நான் சொல்ல முடியாது... நீங்க யாராச்சும் என்னைச் சொல்லுங்கன்னு கவின் சொன்னார்... லாஸ்லியாவைச் சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவருக்கு... தர்ஷன் முழுத் திறமையுடன் விளையாடினார் என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள். இப்பத்தான் வனிதாக்கா நீ சொல்றதுன்னா தர்ஷனைச் சொல்லு... அதென்ன உன்னைய சொல்ல முடியாதுன்னு சொல்றே மத்தவங்களும் தர்ஷனைச் சொல்லணும்ன்னு நினைக்காதேன்னு வனிதாக்கா கம்பு சுத்த ஆரம்பிச்சது. கவின் என்ன சொன்னார்ன்னு புரிஞ்சிக்கவே இல்லை... நீ என்ன கூமுட்டையான்னு கவின் கேட்டுட்டு பேசாம உக்காந்துட்டார்.

கவின் போறான்னா அங்க நாமளும் போயிடலாம்... கக்கூஸ்ல கூட கவனமாப் பாத்துக்கிறவன் ஜெயிலுக்குள்ள தாங்க மாட்டானான்னு லாஸ்லியாவுக்கு ஒரு எண்ணம்... நானே நல்லா விளையாடலைன்னு சொல்ல, வனிதாவுக்குள்ள இது ரெண்டும் ஜெயிலுக்குள்ள போனா... ஆத்தாடி என்ன நடக்குமோன்னு ஒரு பயம் தோணியிருக்கும் போல லாஸ்லியா நல்லா விளையாண்டா... அப்படின்னு கம்பு சுத்த, சாண்டி நாந்தான் விளையாடலைன்னு சொன்னதும் எல்லாருமே நல்லா விளையாண்டீங்க... மாஸ்டர் நீங்க நல்லா விளையாண்டீங்க... உங்களை எப்படிச் சொல்லமுடியும்ன்னு சேரன் மறுத்தார். ஒரு வழியாக் கவினும் தர்ஷனும் என முடிவானதும் லாஸ்லியா சோகத்தை சோறாய்ச் சாப்பிட்டார்.

நீங்க எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம்ன்னு பிக்பாஸ் சொல்ல, எல்லாரும் எழுந்து போனாலும் லாஸ்லியா மட்டும் சோகத்தோடு இருந்தார். அப்ப வனிதாக்கா ஜெயில்ல போட்டா போராடுவோம்ன்னு சொன்னதும் பிக்பாஸ் பயந்து போயி, அடேய் எல்லாரும் வாங்கடா இங்கன்னு கூப்பிட்டு தெரியாம யாரு சரியா விளையாடலைன்னு கேட்டுட்டேன்... போராட்டமெல்லாம் வேண்டாம்ய்யா... இப்பவே நிகழ்ச்சி சரியாப் போகாம இருக்கு... இதுல போராட்டம்ன்னு போயி உக்காந்துட்டீங்கன்னா என் நிலமை என்னாகுறதுன்னு யாருக்கும் ஜெயில் இல்லைன்னு சொல்லிட்டார். வனிதாக்கா பாத்தீங்களா நானே இங்கே பிக்பாஸ்... என கொக்கரித்தார். லாஸ்லியா சிரித்த சிரிப்பு காஞ்சிபுரத்துல தண்ணிக்குள்ள இருக்க அத்தியோட நித்திரையைக் கலைச்சிருக்கும்.

வில்லுப்பாட்டு டாஸ்க்கில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை என சேரன் தன் அணியினரிடம் மன்னிப்புக் கேட்டார். அவர்கள் ஏண்ணே நீங்க வேற நாங்களும்தான் விளையாடலை என்று சொல்ல, சாண்டி இப்ப அவனுக எதுவும் சொல்லலையே அப்புறம் ஏன் சார் நீங்க மன்னிப்பெல்ல்லாம் கேட்டுக்கிட்டு என்றபோது என்னோட தவறு என்றால் அதற்கு முழுப்பொறுப்பு ஏற்றுக் கொள்வேன்... மன்னிப்புக் கேட்பேன் அது என்னோட குணம் என்றார் சேரன். நல்ல குணம்தான்... மன்னிப்புக் கேட்பதால் கெட்டுப் போவதில்லை.

வில்லுப்பாட்டு பயிற்சியின் போது தர்ஷன் பின்னால ஷெரின் சுத்துறான்னு சாண்டி பாடியதற்கு ஷெரின் தனிப்பட்ட முறையில் கோபித்துக் கொண்டார்... இப்படிப் பேசுவதை நான் விரும்பவில்லை... அவன் பின்னாடி நான் எங்க போனேன் என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவரை அணைத்து அப்படியே கக்கூஸூக்குள் கொண்டு போய் மாற்ற முயற்சித்தார் சாண்டி.  கட்டியணைத்தல் எல்லாம் இங்கே சாதாரணம்... ஆம் இவர்கள் நடிகர்கள்.

பாவாடை தாவணியும் சேலையும் எப்போதும் அழகுதான்... லாஸ்லியாவை விட ஷெரின் இன்று தேவதையாகத் தெரிந்தார்.

வில்லுப்பாட்டு பற்றி பேச ஆரம்பிக்கும் போது வனிதா மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தார். அவர்கள் அது குறித்து விளக்கமெல்லாம் சொல்லிக் கொடுத்து வந்தனம் முடிக்கும் போதே கட்சிக் கூட்டத்துக்கு வந்த மந்திரி மாதிரி மெல்ல வந்து சேர்ந்தார். இதைப் பற்றி ஒரு பய கேள்வி கேட்கலை... அக்கா சரியாக விளையாடவில்லை என்று சொல்லியிருந்தால் என்னாகுங்கிற முன்முடிவோட பயலுக பேசாமல் இருந்துட்டாங்க.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : தெருக்கூத்து

Image result for bigg boss 3 28th august 2019
'கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும்டி..
கத்துக்கடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி...
விடமாட்டேன் பொண்ணே நானே...
உன்னப் பிச்சி தின்னப் போறேன் மானே...'

பாடல் திருப்பள்ளி எழுச்சியாய்... கேமரா கவின் மற்றும் லாஸ்லியாவைப் படம் பிடித்து மகிழ்ந்த பின் முகன், லாஸ்லியா, சாண்டியின் நடனத்தில் லயித்தது. 

ஆட்கள் குறையக் குறைய நடனமாடுவதும் குறைந்து விட்டது... பிச்சிப்போட்ட இடியப்பம் மாதிரி சாக்சி, கஸ்தூரியெல்லாம் ஆடுன இடத்துல ரெண்டே ஸ்டெப்பை வைச்சிக்கிட்டு லாஸ்லியா மட்டுமே தினம் தினம் ஒரே நடனத்தை ஆட வேண்டியிருக்கு.

கிராமங்களில் அம்மன் திருவிழாவில் கரகத்தை வைத்து முளக் கொட்டுவார்கள்... அதைச் செய்தார்கள்... சாண்டி பிக்பாஸைப் பற்றி பாடல் பாடினார்... சேரன் முளக்கொட்டுப் பாட்டுச் சொன்னார். முன்னரே பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும் போல எல்லாரும் ஒரே மாதிரி ஆடினார்கள்.

சினிமாவில் நாயகன் எனக்கு இன்னொரு கதை இருக்குன்னு சொல்வதைப் போல லாஸ்லியாவிடம் ஒரு கதையை ஆரம்பித்தார் கவினார்... எனக்கு மூணு வருசமா ஒரு காதல் இருந்துச்சு... ஆனா அது முப்பத்தாறு மாசத்துல முழுசா நாலு மாசம்தான் மகிழ்வான காதலாய் இருந்தது. மற்ற மாதங்களில் எல்லாம் சந்தேகங்களும் பிரச்சினைகளுமாய்த்தான் இருந்தது. அதனால் அது எனக்கு பிரச்சினையான காதல்தான் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். இதை ஏன் சாக்சியிடம் சொல்லவில்லை என்று யோசிப்போம் என்பதால் அவரே அதற்கும் பதில் வைத்திருந்தார்.

கவின் : எனக்கு அது உண்மையிலேயே பிரச்சினையான ஒரு காதல்தான்ப்பா...

லாஸ்லியா : ம்...

கவின் : இங்க வரும் முன்னால அவங்க போகாதேன்னு சொன்னாங்க... அதையும் மீறி வந்தேன்.

லாஸ்லியா : ம்...

கவின் : கிளம்புறப்போ அவங்களுக்குப் போன் பண்ணினேன்... ஆனா அவங்க எடுக்கலை...

லாஸ்லியா : ம்...

கவின் : என்னமோ உங்கிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சி சொல்லிட்டேன்.

லாஸ்லியா : ம்...

கவின் : நல்லா யோசிப்பா... உனக்கும் தெரியணும்ல்ல... ஏன்னா நாளைக்கு நாம சேர்ந்து வாழணுமுல்ல...

லாஸ்லியா : ம்...

கவின் : என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே...

லாஸ்லியா : எதாயிருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்.

கவின் : இல்லப்பா... நீ யோசிக்கணும்ன்னுதான் சொன்னேன்... இதயம் உடைச்சிருச்சா..?

லாஸ்லியா : ஒரு மண்ணும் உடையலை... வெளிய போயி பேசுவோம் மரமண்டை... இல்லேன்னா அந்தாளு இந்தச் சனிக்கிழமையும் நம்மளைத்தான் வச்சி ஆத்துவாரு...

இந்த உரையாடலுக்குப் பின் கவின் முகம் கொஞ்சம் பிரகாசமாகவே இருந்தது. லாஸ்லியாவின் முகத்தில்தான் யோசனை ரேகைகள்... 

கவினைப் பொறுத்தவரை பிக்பாஸ்க்குள் வரும் வரை ஒரு காதலி இருந்திருக்கிறார்... அவரைப் புறந்தள்ளிவிட்டுத்தான் வந்திருக்கிறார்... இங்கு சாக்சியுடன் காதல் செய்தார்... அதே நேரம் லாஸ்லியாவுக்கும் அம்பு விட்டார். இந்த அம்பு அன்பானபோது சாக்சியைப் புறந்தள்ளினார். அடுத்த ஆள் உள்ளே நுழையும் போது லாஸ்லியாவைப் புறந்தள்ளமாட்டார் என்பது என்ன நிச்சயம்...? மூன்று வருடக் காதல் என்பது உண்மையானதுதானா அல்லது எல்லாமாய் இருந்தோம் என்றதன் பின்னே அவர் பிரச்சினைக்குரியது என்னும் போது அப்பெண்ணுடனான உறவு எப்படியானது..? லாஸ்லியாவுக்காக அவரை நிராகரிக்கிறாரா..?

இங்கே இன்னொன்றையும் யோசிக்க வேண்டும்... லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆன நிலையில் இதுவரை சொல்லாத பிரச்சினைக்குரிய காதலை இப்போது சொல்வானேன்..?

இந்த வாரம் கிராமத்து டாஸ்க்.... பெரும்பாலும் கிராமியக் கலைகளைச் சொல்லிக் கொடுத்து, அதைப் பயிற்சி செய்து இவர்கள் இரு குழுவாகப் பிரிந்து நிகழ்ச்சி நடத்தி முடித்துப் படுக்கும் போது அதிக நேரமும் சோர்வுமாய் நாட்கள் நகரும். இந்த நேரத்தில் சொன்னால் லாஸ்லியாவால் இது குறித்த சிந்தனைக்குள் அதிகம் மூழ்க முடியாது. வெளியில் போய் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியவள் இதை இப்போது பெரிதாக எடுக்கக்கூடிய சூழலும் இல்லை... ஒருவேளை அப்படி ஒரு காதல் இருந்ததை... அந்த உறவு நல்லதொரு உறவாக இல்லாத பட்சத்தில் லாஸ்லியா பிரச்சினையாக்கும் போது நான்தான் முன்னமே உன்னிடம் எல்லாம் சொன்னேனே எனச் சொல்லித் தப்பிக்கவும் முடியும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கவின் கணக்குப் பண்ணுவதில் கில்லாடி.

நேற்று பொம்மலாட்டம் சொல்லிக் கொடுத்த பெரியவர்தான் இன்று தர்மபுரியில் பத்து வயது முதல் தெருக்கூத்தில் ஆட ஆரம்பித்து கிட்டத்தட்ட நாப்பது வருடங்களாக அந்தக் கலையைப் பாதுகாத்து வரும் திரு.ராமலிங்கம் அவர்களின் குழுவைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் ஆடும் தெருக்கூத்துக்குப் பெயர் கனியன் கூத்து என்றார். 

இக்குழுவில் ராமலிங்கம் அவர்களின் மூத்த மகன் இன்சினியரிங் முடித்துவிட்டு அப்பாவுடன் இந்தக் கலை முடிந்து விடக்கூடாது என்பதால் கூத்தாட வந்திருப்பதாகச் சொன்னார். அவர்தான் மந்திரி வேஷம் கட்டுகிறார். ராமலிங்கம் ஐயா அவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார் என்று கேட்கும் போது மகிழ்வாய் இருந்தது. ராணி வேசம் போடுபவர் அவரின் தம்பி மகன் என்பது கூடுதல் செய்தி.

சேரனும் முகனும் கோமாளியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீவிரம் சேரனுக்குள்... அதுவாகவே வரும் சிரிப்போடு கோமாளியாகவே மாறினார் முகன்.

ராணியிடம் பயிற்சி எடுத்தவர்கள் சாண்டியும் ஷெரினும்... சாண்டி கலக்க... ஷெரின் நீண்ட வசனத்தைச் சொல்லிக் கொடுத்த போது நான் இப்பத்தான் தமிழ்ல்ல ஆனா... ஆவன்னாப் படிக்கிறேன்.. ஆத்திசூடியே வாயில் வரலை... அதற்குள்ள சிலப்பதிகாரத்தையும் சீவக சிந்தாமணியையும் சொல்லிக் கொடுக்குறீங்களேன்னு கேட்டதும் எல்லாரும் சிரித்தார்கள்.

ராஜவிடம் வனிதாவும் தர்ஷனும் பயிற்சி எடுத்தார்கள்... டாஸ்க் என்று வந்தால் தர்ஷன் கமலஹாசனாக மாறிவிடுவார். கர்ஜிக்கும் குரலில் அவரின் பயிற்சி எடுத்த முறை செம... வனிதாவும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

மந்திரியிடம் பயிற்சி எடுத்தது காதல் ஜோடி... கவினிடம் ஒரு ஈடுபாடு இருந்தது... பாவாடை தாவணியில் ஆடிய லாஸ்லியா அழகுதான்.

பயிற்சி முடித்து சேரன், கவின், தர்ஷன், ஷெரின் என ஒரு அணியும் வனிதா, முகன், சாண்டி, லாஸ்லியா என ஒரு அணியும் பிரிந்து ஆளுக்கொரு தலைப்பில் தெருக்கூத்துக்குத் தயாரானார்கள். போக்குவரத்து நெரிசல் குறித்து வனிதா அணியும் மழை வெள்ளம் பாதிக்கக் காரணம் நீர்நிலைகளை எல்லாம் பட்டாப் போட்டதுதான் என்பதைக் குறித்து சேரன் அணியும் கூத்து நடத்தினார்கள்.

அவரவர் தலைப்பில் நல்லாவே செய்தார்கள்... 

வனிதா அணியைப் பொறுத்தவரை கோமாளியாக முகன் கலக்கினார்.... ராணியாக சாண்டியும் செம.... மந்திரியாக லாஸ்லியாவும் எமதர்மராஜாவாக வனிதாவும் நல்லாவே செய்தார்கள். பாட்டில் கவனம் செலுத்திய அளவு இறுதிக் காட்சியில் கவனம் செலுத்தவில்லை... 

சேரன் அணியைப் பொறுத்தவரை தர்ஷன் கலக்கினார்... கூடவே கவினும் மந்திரியாய்.... ஷெரின் ராணியாய் வந்து போனார்... இந்த வயதில் சேரன் கோமாளியாக நடிப்பது என்பது பெரிய விஷயம்... முடிந்தவரை பண்ணினார். இறுதியில் ஷெரினைத் தூக்கிய தர்ஷன் டேய் கடைசி வசனத்தைச் சொல்லுடா....கனமா இருக்கா தூக்க முடியலை என்றது கலக்கல்... முடிவில் சேரன் பேசிய வசனங்கள் அருமை. 

மற்றபடி தெருக்கூத்துக் கலைஞர்கள் அளவுக்குச் செய்ய முடியாதென்றாலும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். கவினை வாழ்த்தினார் ராமலிங்கம் ஐயா... சேரன் அணி வெற்றி.

ஓப்போ புதிய போன் அறிமுகத்துக்காக போட்டோ எடுக்கும் டாஸ்க்... 

சேரனும் முகனும், சாண்டியும் லாஸ்லியாவும், கவினும் ஷெரினும் என மூன்று அணிகள்... தர்ஷன் மற்றும் வனிதா நடுவர்கள். 

ஐந்து படங்கள் எடுத்து அதை வைத்துக் கதை சொல்ல வேண்டும். லாஸ்லியா சொன்ன கதை அவ்வளவாக எடுபடவில்லை... கவின் சொன்ன கதை கொஞ்சம் பரவாயில்லை... போட்டோக்கள் நல்லாவே இருந்தது. சேரன் அழகான ஒரு கதை சொன்னார்... மற்ற அணியினரைப் போல் போட்டோ பிரேமுக்குள் மாடலை நிறுத்தாமல் எடுத்தது சிறப்பு... அந்தப் படங்களுக்குத் தகுந்த கதையாய் அமைந்தது அதைவிடச் சிறப்பு. வெற்றியாளர்கள் இவர்களே.

வனிதா கூட 'டைரக்டர் டச்' எனப் பாராட்டினார். மிகச் சிறந்த கதை சொல்லி சேரன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே... இந்த வெற்றி அவருக்கு ரொம்ப மகிழ்வைக் கொடுத்திருக்கும்  போல இரண்டு கைகளையும் தூக்கி ஏற்றுக் கொண்டார். தோல்வியில் துவளும் போது சிறியதொரு வெற்றி கூட பழங்கஞ்சி சாப்பிட இடத்தில் பிரியாணி சாப்பிடுவது போல்தானே.

பிள்ளையை நினைத்து ராத்திரி ரெண்டு மணிக்கு வெளியில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் சாண்டி. நாங்கள்ல்லாம் வருடக் கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறோம் கேட்கத்தான் ஆளில்லை... ஒரு கட்டில் வாழ்க்கை மிகவும் மோசமானது சாண்டி எனச் சொல்லத் தோன்றியது.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 28 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : பொம்மலாட்டம்

Image result for bigg boss 27th august 2019 images
வெற்றி பெற என்னிடம் என்ன தகுதி இருக்கிறது எனப் பேசியதன் தொடர்ச்சியாய் லாஸ்லியா பேசும் போது நான் என்னுடைய விளையாட்டை சரியாக விளையாடுகிறேன்... எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவைத்தான் நான் எடுத்து வருகிறேன்... என் மனசுக்குப்பட்டதைச் செய்கிறேன். வேறொரு நாட்டில் இருந்து இங்கு வந்து மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது எளிதானதல்ல... அதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன்... என்னை மக்கள் ஏதோ ஒரு விதத்தில் விரும்புகிறார்கள்... எனவே இந்தத் தகுதிகள் போதும் என்று நினைக்கிறேன் என்றார்.

சேரன் அண்ணாவை நாமினேட் பண்ணியபின் அழுத நீ இனி வரும் நாட்களில் உனக்குப் பிடித்தவங்களைப் பண்ண வேண்டிய சூழல் வரும் போது எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவே என்ற தர்ஷனின் கேள்விக்கு சுற்றி வளைத்துப் பதில் சொன்னார் அப்போது முதல் நாள் கவின்கிட்ட சேரப்பாவை பண்ணமாட்டேன்னுதான் சொன்னேன் என்றதும் அப்ப உன்னை முதல்நாளே யாரோ கட்டாயப்படுத்திருக்காங்க இல்லையா என்று சேரன் கேட்டதும் மழுப்பலாய்ப் பதில் சொல்ல, கவினும் இடைபுகுந்தார். 

உடனே சேரனிடம் நீங்க மது பிரச்சினையில் பேசாமல் இருந்தீர்கள் என்ற வாதத்தைக் கொண்டு வர, அங்கு தான் பேசியதை சேரன் சொன்ன போது இல்லை வெண்டைக்காய்தான் வெட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றார். லாஸ்லியாவைப் பொறுத்தவரை மக்கள் அவருக்கு அமோக ஆதரவளிப்பதாக திமுகவைப் போல் நம்பிக் கொண்டிருக்கிறார். சீனியில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்ன்னு சொல்ற மாதிரி லாஸ்லியாவின் சிரிப்பிலும் சின்னப்பிள்ளைத் தனத்திலும் மயங்கிய மக்கள் இப்போதைய லாஸ்லியாவின் காதல் போக்கில் மயக்கத்தில் இருந்து தெளிவு பெற்றிருக்கிறார்கள். முன்பு கிடைத்த கைதட்டல் இப்போது எதற்காகக் கிடைக்கிறது என்பதை லாஸ்லியா உணரவே இல்லை. மேலும் நேற்றைய பேச்சின் பின்னணியில் கவின்தான் இருந்தாரேயொழிய லாஸ்லியாவாய்ப் பேசவில்லை.

அடுத்து வந்த சேரன் விளையாட்டை உணர்ந்து விளையாடுவதையும் இது ஏதோ பதினைந்து பேர் தங்கியிருந்து விளையாடும் விளையாட்டு என்பதைவிட என் குடும்பத்து மனிதர்களை... உறவுகளைத்தான் இதில் பார்க்கிறேன்... அப்பாவாய்... அண்ணனாய்... நண்பனாய்த்தான் நான் வாழ்கிறேன்... ஆரம்பத்தில் விளையாட்டு என்ன... எப்படின்னு எனக்கு விளங்கலை என்றாலும் இப்போது  டாஸ்க்கிலும் சரி... கொடுக்கப்படும் வேலைகளிலும் சரி நான் என் முழுத் திறமையைக் காட்டுகிறேன் என்றார்.

தர்ஷன் மது பிரச்சினையை பேசியபோது இங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரித்தான்... உங்க வீட்டில் அப்பா ஒரு மாதிரி, அண்ணன் ஒரு மாதிரி, நீ ஒரு மாதிரித்தான்... ஒவ்வொருவருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தீர்வுகள் எடுப்பதில் மாற்றம் இருக்கும். மதுவைப் பொறுத்தவரை கோபம் அதிகம் வரக்கூடிய பெண்... அந்த நேரத்தில் நாம் பேசினால் அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் பிரச்சினை முடிந்து தனியே எடுத்துச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும். மதுவுடன் பேசிய வீடியோ இருக்கு... பார்த்தால் தெரியும்.

அதேபோல் சரவணன் அண்ணன் எனக்கு மூத்தவர்... எதனால் அந்த வார்த்தை அவரிடம் இருந்து வந்தது என்பதையும் அறிவேன்... அதற்கு மேல் அங்கு அமர்ந்து பேசினால் வீண் விவாதங்கள் வருமே என்றுதான் எழுந்து போனேன். மீராவைப் பொறுத்தவரை அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகலை... அது கால்ல விழுந்து சொன்னாலும் ஏத்துக்காதுங்கிறது எனக்குத் தெரியும்... அதனிடம் பேசிப்பயனில்லை என்பதால் விலகியிருந்தேன் என்றார்.

நீங்க இயக்குநர்ன்னு பொதுவாக எல்லாரிடமும் சொல்வதில்லை ஆனாலும் சில சமயம் பேசி அதற்காக கமல் சாரிடமும் மன்னிப்புக் கேட்டீங்க... ஆனா எங்கிட்ட நிறையத் தடவை சொல்லியிருக்கீங்க... இயக்குநர்ங்கிற முத்திரையை வச்சிக்கிட்டு ஜெயிச்சிடலாம்ன்னு நினைக்கிறீங்களான்னு கவின் கேட்டதும் உங்கிட்டயும் சாண்டிக்கிட்டயும் அதைச் சொல்ல வேண்டிய நிலையைக் கொண்டு வந்ததே நீங்கதான்... என்னமோ தெரியலை வந்தது முதல் என்னை ஒதுக்கியே வந்தீங்க... நான் பேச வந்தாலும் ஒதுங்கிப் போனீங்க... ஏனோ என்னைய உங்களுக்குப் பிடிக்கலை... அந்த வலி எனக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்துச்சு தெரியுமா..? என்றபோது தான் இவ்வளவு உயரத்தில் இருந்தவன் என்றாலும் எல்லாரிடமும் இறங்கிப் போக நினைத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்ததை ஒருவரின் மனம் எப்படி பாடும்படும் என்பதை உணர முடிந்தது.

சேரன் இவ்வாறு பேசியதும் கவின் மழுப்பலாய்ப் பதில் சொல்ல, நீ இணை இயக்குநர் என்றாலும் என்னிடம் எத்தனையோ விஷயங்களைப் பேசியிருக்கலாம்... ஆனா நீ என்னை ஒரு இயக்குநராய் மதிக்கவேயில்லை... பழகவும் நினைக்கவில்லை... ஏதோ ஒரு விதத்தில் உனக்கு என்னையும் என் படங்களையும் பிடிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன்... நீ என்னிடம் ஆட்டோகிராப் எப்படி எடுத்தீங்க... அந்தக் காட்சி எப்படி எடுத்தீங்கன்னு கேட்டிருக்கலாம்.... ஆனாலும் உனக்கு என்னை இயக்குநராய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை என்னும் போது நான் ஒதுங்கியிருத்தலே நலம் என்றதும் கவினால் பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இத்தனை நாட்கள் தனித்திருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் இது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை என்ற நிலையில் சினிமாத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒருவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருப்பார்... அது அத்தனையையும் பொண்ணுங்களை டாவடிப்பதில் வீணடித்திருக்கிறார் கவின். இந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிட்டாது. ஏன் சேரனுடன் ஒரு மணி நேரம் தனித்திருக்கும் வாய்ப்பு இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே கிடைத்துவிடுமா..? எவ்வளவு ஒரு நல்ல வாய்ப்பு... சாண்டியுடன் சேர்ந்து கவின் வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

எனக்கு சப்பாத்தி ஊட்டுறீங்க ஓகே... கவினுக்கும் அன்னைக்கு ஊட்டுனீங்களே... அவங்க கூட ஜெல் ஆகணும்ன்னுதானே என லாஸ்லியா கேட்டதும் எனக்கு யாருடனும் ஜெல் ஆக வேண்டிய அவசியமில்லை... விருப்பமும் இல்லை... இறுதிப் போட்டி வரை போறேன்... போகலை... என்னோட விளையாட்டை நான் விளையாடுவேன்... யாருடனும் ஜெல்லாகி விளையாடனும்ன்னு நினைக்கலை.... அப்படி ஜெல் ஆகியிருந்த இப்ப இப்படி கவினைப் பேசியிருக்கமாட்டேனே என்றார்.

பாசம் வைத்திருக்கும் மகளுக்காக விட்டுக் கொடுப்பீங்களா என ஷெரின் கேட்டார்... இந்தக் கேள்வி தர்ஷன் லாஸ்லியாவுக்காக இறுதிப் போட்டியில் விட்டுக் கொடுக்கச் சொல்றார் சேரன்னு சொன்னதன் எதிரொலிதான்... அவள் அவளாக விளையாடி வெற்றி பெறுவதில்தான் பெருமை... அடுத்தவர் விட்டுக் கொடுத்து வெற்றி பேறுவதில் பெருமை இல்லை என்றார் சேரன்.

அடுத்து வந்த வனிதாக்கா எங்கிட்ட மக்கள் எதையோ விரும்புறாங்கன்னு கலைஞர் டிவி பட்டிமன்றத்தில் தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் அரசியல் பேசும் லியோனி மாதிரி என்னென்னவோ பேசினார். அவரது பேச்சில் தானே அறிவாளி எதிர்ல உக்காந்திருக்கவங்க எல்லாம் முட்டாள்ன்னு நினைப்புத்தான் இருந்தது.

தர்ஷன் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டான்... ஆனா நீங்க கேட்கலை... வெளியில பொயிட்டு வந்து மன்னிப்புக் கேட்க நினைக்கலையே ஏன்ன்னு கவின் கேட்டதும் தர்ஷன் பண்ணினது தப்பு... அதை அவன் உணர்ந்து மன்னிப்புக் கேட்டான்... அவர் எப்பவும் பயன்படுத்தும்  'பீ கானஸ்ட்'டைப் போட்டு நான் தப்புப் பண்ணலை... என்னோட நிலைப்பாடு எப்பவும் தப்பானது இல்லை என்றவர் விஜயகாந்த் தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொன்ன மாதிரி சாரிங்கிற வார்த்தையே எனக்குப் பிடிக்காது என்றார்.

வந்த மூணாவது வாரமே உங்களை மக்கள் வெளியேற்றிட்டாங்க... மறுபடியும் வந்தும் நீங்க நாமினேட் ஆயிருக்கீங்க... அப்ப உங்களோட குணத்தை மாத்திக்கலைன்னுதானே அர்த்தம் என தர்ஷன் கேக்கவும் எங்கிட்ட எதோ பிடித்திருப்பதால்தான் மக்கள் மீண்டும் என்னை வரவச்சிருக்காங்க... போக நான் எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்து விட மாட்டேன்... என்னால் ஆன வரை போராடுவேன்... பெண்களுக்கு நான் ஒரு முன்னுதாரனமாக இருக்கிறேன் என்றார். இவரை முன்னுதாரனமாக எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் தென்றல் வீசாது... கஜா புயல்தான் வீசும்.

சேரன் ஏதோ கேள்வியைக் கேட்க முனையும் போது இதுக்கு மேல இதுக்கிட்ட கேட்டீங்கன்னா என்ன சொல்லுதுன்னு உங்களுக்கும் புரியாது எனக்கும் புரியாது சும்மாவே மொக்கை போடுறாங்கன்னு சொல்ற மக்கள் ரொம்பக் கடுப்பாயிருவாங்கன்னு பெல் அடிச்சி முடிச்சி வச்சிட்டாரு பிக்பாஸ்... இதுல யார் நல்லாக் கேள்வி கேட்டாங்கன்னு சொல்லுங்கன்னு பிக்பாஸ் சொன்னதும் எதுக்குப் பிரச்சினையின்னு வனிதாக்கான்னு சொல்லிட்டாங்க... அடுத்த வார தலைவருக்கு அக்கா நேரடித் தேர்வு...

காலையில பள்ளியெழுச்சிப் பாட்டு 'பழையது கழிந்தது புதியது பிறந்தது'ன்னு போட்டாங்க... வெளிய பார்த்த கிராமத்துத் திருவிழா மாதிரி மாறியிருந்துச்சு... இரவு பணிரெண்டு மணி வரை இருந்து பேசிட்டுப் போறாங்க... காலை எட்டு மணிக்கு குடிசை வீடு, கிணறு, கொடிகள்ன்னு ஓரு செட்... உண்மையிலேயே விஜய் டிவிக்கு டிஆர்பி, பணம் என எதை வேண்டுமானாலும் நாம் பேசினாலும் எத்தனை பேரின் உழைப்பு இதன் பின்னே இருக்கிறது. எட்டு மணி நேரத்திற்குள் எப்படி இப்படி மாற்றமுடியும்... இதற்காகவே பாராட்டலாம்.

சேரன், தர்ஷன், ஷெரின், கவின் எனவும் வனிதா, சாண்டி, முகன், லாஸ்லியா எனவும் இரு அணியாகப் பிரிந்து கிராமத்து வாழ்க்கை வாழ வேண்டும்... தினம் ஒரு கிராமத்து கலை நிகழ்ச்சி சொல்லித் தரப்படும். அதை அன்று மாலை இவர்கள் செய்து காட்ட வேண்டும்... முதல் நாள் பொம்மலாட்டம் சொல்லிக் கொடுக்கப்பட்டு இவர்களால் நடிக்கப்பட்டது. சாண்டிக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வால் அவர்கள் அணி சிறப்பாகச் செய்து வெற்றியும் பெற்றது. சேரன் அணி எடுத்த தலைப்புக்குத் தகுந்தபடி செய்தார்கள் என்றாலும் அதில் சுரத்தில்லை. 

இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா... அடேய் என்டா கொன்னெடுக்குறேன்னு வனிதாக்கா உக்கார்ந்திருச்சு... பொம்மலாட்டக் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கினார் சேரன். கவின் லாஸ்லியா டாஸ்க் தாண்டி காதலை வளர்த்துக் கொண்டிருக்க வனிதா கிராமத்து மனுசியாய் கத்த, சேரன் உம்புருஷனுக்கிட்ட சொல்லி அவனையும் வெளிநாட்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு சொன்னதும் அப்ப இந்த வாரம் சனிக்கிழமை அவரு வரும்போது கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லிடுவோம்ன்னு சொன்னது அல்டிமேட்... ஷெரின் மட்டும் வாய்விட்டுச் சிரிக்கவில்லை... நானும் சிரித்தேன்.

எந்த வேலையும் செய்யாமல் டாஸ்க் சமயத்தில் கூட அதிலிருந்து விலகி காதல் வளர்க்கும் லாஸ்லியாவை ஏன் மற்றவர்கள் வேலை செய்யுமாறு சொல்ல மாட்டேன் என்கிறார்கள்..? கமல் சொன்ன பின்தான் லாஸ்லியாவின் காதல் விளையாட்டுக்கள் அதிகமாகியிருக்கிறது அப்படியென்றால் இவர் என்ன நமக்குச் சொல்வது என்ற மேட்டிமைத்தனமா..? கழுத்தில் கருப்புக்கயிறு கட்டி கிராமத்துப் பெண்ணாக மாற நினைத்தவர் ஷெரின், வனிதாவைத் தவிர்த்து கவினைக் கட்டிவிடச் சொல்ல அவரும் மூணு முடிச்சிப் போட்டார். நிச்சயித்த பெண்ணுக்கு கருகமணி போடுவது போல்தான் இருந்தது... இதெல்லாம் இவர்களுக்கு மோசமாத் தெரியவில்லை என்றாலும் பார்க்கும் நமக்குத்தான் கருமமாய்த் தோன்றுகிறது. இந்த வாரம் கமல் லாஸ்லியாவின் செயல்களைக் கடந்து போவாரா அல்லது கடிந்து கொள்வாரா..?

கிராமத்து மனிதர்கள் என்றால் கஷ்டப்பட்டுக் கொண்டு கூழைக் குடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்ற பதத்தை மாற்றுங்கள் நண்பர்களே... விவசாயம் செய்து நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தான் வளர்ந்தோம்... இன்று விவசாயம் பொய்த்தாலும் படித்து  எல்லாரும் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள்... யாரும் குடிக்கக் கஞ்சியின்றி கோவணத்துடன் திரிவதில்லை...  கிராமத்து டாஸ்க் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம்... புதிய பட்டாடைகள் உடுத்திக் கொண்டு ஏழ்மையில் உழல்கிறார்கள்... நாமும் அதுபோல் நடிப்போம் என்பதெல்லாம் கேலிக்கூத்து.

வீட்டின் மூத்தவர் நிலாச்சோறு ஊட்டிவிட, செவ்வாய் பிக்பாஸ் நிறைவு பெற்றது.

இந்த டாஸ்க்கின் முன் எல்லாருக்கும் மூன்று காயின் போட்ட உண்டியலைக் கொடுத்திருக்கும் பிக்பாஸ் காயினைச் சேர்க்கணும் என்றும் சொல்லியிருக்கிறார். நேற்று எதுவும் செய்யவில்லை... இன்று ஏதாவது செய்திருக்கக் கூடும்... அல்லது நாளை அதற்கான போட்டிகள் இருக்கலாம்.

குறிப்பு : உடல் நலமில்லாததால் அலுவலகம் செல்லாமல் மருத்தவமனை சென்று வந்ததால்  காலையில் எழுதவில்லை.

பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மனசு பேசுகிறது : விமர்சனம் வேண்டும்...

Image result for விமர்சனங்கள்
ல்லா நாளும் போறோமோ இல்லையோ செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக் பக்கம் எட்டிப் பார்க்கிறது உண்டு... ஏன்னா நமக்குப் பிடித்த சிறுகதைக்கான நாள்... வாரம் ஒருவரின் கதை... இன்னைக்கு எழுதியவரின் பெயருக்குப் பதில் '?' என கேள்விக்குறி மட்டுமே. தொடர்ந்து வாசிப்பவர்களால் இது யாருடைய நடை என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதற்காகவே எழுதிய கதையாசிரியர் கேள்விக்குறிக்குள்... இதுவும் வித்தியாசமான முயற்சிதான்... தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஸ்ரீராம் அண்ணா. 

கதையின் முதல் வரி படிக்கும் போதே இது நம்ம துரை. செல்வராஜூ ஐயால்ல... என எனக்குள் தோன்றி முகமலர்ச்சியைக் கொடுத்தது... முனியய்யாவின் ஆட்டமும்... நாலாவது வீட்டுல அவரு நின்னு வாக்குச் சொல்வாரான்னு ஏங்க வச்சித் தொடரும் போட்டதும் ஆஹா... அருமை... அடுத்த செவ்வாய் வரையெல்லாம் காத்திருக்க முடியாது... ஐயா மீதிக்கதையே எனக்கு மட்டும் தனியே அனுப்பிடுங்க... கிராமியக் கதைகளின் எழுத்துக்கள் என்னுள் எப்போதும் வழுக்கிக் கொண்டு செல்லும் அப்படித்தான் இதுவும்... வாழ்த்துக்கள் ஐயா.

அங்கு கருத்திட்டவர்களில் சிலர் இது குமாரின் கதையோ எனவும் கேட்டிருந்தார்கள்... உண்மையில் மகிழ்வாய் உணர்ந்த தருணம் அது... என் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கிறதே... அதுவும் எழுத்தை வைத்து இது குமாராக இருக்கலாம் என யோசிக்க வைக்கிறதென்றால் அது நான் பெற்ற பேறுதானே... ரொம்ப மகிழ்வாக இருந்தது.

எங்கள் பிளாக்கில் வாசிக்க களத்து மேட்டுக் காவலன் - 1

காலையில் ஒரு தோழி போன் செய்து ஒரு படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் குறித்துப் பேசினார். ஆரம்பிக்கும் முன்னர் நான் சொல்வதால் வருந்தமாட்டீர்களே... நம் நட்புக்குள் பிரச்சினை வராதே என்றெல்லாம் சொல்லிவிட்டு இந்த இடத்தில் இப்படி எழுதியிருப்பது சரியாக இல்லையே... கொஞ்சம் பழைய பஞ்சாங்கமா இருக்கே... இப்ப உள்ள மாதிரி எழுதுய்யான்னு சொன்னாங்க... அந்த இடம் என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருந்தது என்றாலும் அவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்டேன். 

விமர்சனம் என்றதும் அதெப்படிச் சொல்லலாம்... அதில் என்ன பிழை வந்து விடப் போகிறது என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும்... எல்லாரும் என் எழுத்தை ஆராதிக்க வேண்டுமென எப்போதும் நினைப்பதில்லை.... விமர்சனங்களே என்னைச் செதுக்கும் உளி என்பதில் நான் எப்போதும் தெளிவாகவே இருக்கிறேன். அந்தத் தோழிதான் நட்பில் உடைப்பெடுக்குமோ என்ற உதறலுடன் போனை வைத்தார்.  விமர்சனம் சரியென்றால் என்னை நான் மாற்றிக் கொள்ளப் போகிறேன்... எனக்கு அது தவறென்றால் சொன்னவருடன் எதிர்த்துக் களமாடுவதைவிட வாங்கி என்னுள் வைத்துக் கொள்ளப் போகிறேன்... அவ்வளவே... தங்கள் விமர்சனத்துக்கு நன்றி தோழி.

இதேபோல்தான் பிக்பாஸ் எழுதுவதற்கு பலர் எதிர்த்த போதும் தனபாலன் அண்ணன் மட்டும் நீ எழுது என தினமும் தவறாமல் கருத்திடுவார். வெங்கட் அண்ணாவும் எழுது என்று சொன்னார். பிரதிலிபில் பல சகோதரிகள் பதிவிட தாமதமாகும் போது ஏன் ஏழுதலைன்னு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஒரு சகோதரி நீங்க சேரனுக்கு ஆதரவாய்த்தானே எழுதுகிறீர்கள் என்றார். இருவருக்கும் இடையே நீண்ட உரையாடல்கள்... இப்படியான விமர்சனங்களும் விவாதங்களும் நம் எழுத்தை பட்டை தீட்டவே உதவும் என்பதால் நான் விரும்பியே விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ழுத்தாளர் லதா சரவணன் புதிதாக ஆரம்பித்திருக்கும் 'மின் கைத்தடி' என்ற மின்னிதழுக்கு படைப்புக்கள் கேட்டு முகநூல் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். சரி அனுப்புவோமே என ஒரு சிறுகதையைத் தட்டிவிட்டேன்.

அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் பதில் மின்னஞ்சலில் உங்கள் கதை காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தியது... உறவுகளைச் சொல்லும் அழகான கதை... முதல் இதழிலேயே பயன்படுத்திக் கொள்கிறோம்... போட்டோவும் உங்க நம்பரும் கொடுங்க எழுத்தாளர் குழுமத்திலும் இணைத்து விடுகிறோம் என்று அனுப்பியிருந்தார்கள்.

இங்கு அழுகாச்சிக் கதை எனவும் உறவுகளைச் சொல்லி எழுதும் எழுத்தாளர்களை ரமணிச்சந்திரர்கள் எனவும் கிண்டலடிக்கும் நிலையில் நம் எழுத்துக்கு உரிய மதிப்பு ஏதோ ஒரு இடத்தில் கிடைக்கிறதே என்னும் போது மகிழ்ச்சியாய் இருக்கத்தான் செய்கிறது.

விமர்சனங்களை வீசுங்கள் நண்பர்களே... அப்பத்தான் நான் இன்னும் சிறப்பாக எழுத முடியும்.
-'பரிவை' சே.குமார்.

பிக்பாஸ் : வெற்றி பெற என்னிடம் என்ன தகுதியிருக்கு..?

Image result for bigg boss 3 tamil 26th august episode images
நீங்கள் சுற்றுலாவுக்கு வரவில்லை விளையாடவே வந்திருக்கிறீர்கள்... வெற்றி என்னும் இலக்கை அடைய சுறுசுறுப்பாய் விளையாடுங்கள்... உறவு முறைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அலையாதீர்கள் என கமல் சொல்லிவிட்டு, யாரிடமும் பகிர்ந்து கொள்ளும் விஷயமல்ல.... இதை மனசுக்குள் வைத்து வெற்றியை நோக்கி விளையாட வேண்டும்... இவர்கள் அதைச் செய்வார்களா..? என பார்வையாளர்களிடம் புலம்பிச் சென்றதன் அர்த்தம் எல்லாருக்கும் புரியாமலில்லை... பிக்பாஸ் இல்லத்துக்குள் நாமினேசனே குழு முடிவாய்த்தான் இருக்கிறது... அப்படியானால் இதுவும் மனசுக்குப் பிடித்தவர்களிடம் கண்டிப்பாகப் பகிரப்படும் என்பதை அவரும் உணர்ந்திருக்கிறார்... அதுவும் சிலரிடம் பகிரப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

காலையில் 'ஜிகிரு... ஜிகிரு...' பாடல்தான் திருப்பள்ளி எழுச்சியாய்... ஷெரின் மற்றும் சேரன் இருவரும் கையால் நடனமாடினார்கள்... முகனும் லாஸ்லியாவும் மட்டுமே ஆடினார்கள்... மற்றவர்கள் சோர்வாய்...

எப்பவும்  துறுதுறுன்னு இருக்க தர்ஷன் சோகமாய் உட்கார்ந்திருக்க, ஷெரின் 'என்னாச்சு தர்ஷன்... ஏன் இப்படியிருக்கே..?' என்று விசாரிக்க, வனிதா திரும்பவும் உள்ள வந்ததில் இருந்து தர்ஷனை மட்டுமே கட்டும் கட்டுவதைச் சொல்லிப் புலம்பினார். அதைவிடு... அதெல்லாம் அப்படித்தான்... என்பதாய் ஷெரின் சொன்னதும், சேரன் அண்ணா கூட லாஸ்லியாவுக்கு இறுதிப் போட்டியில் விட்டுக்கொடு என்று சொல்கிறார் என்றும் சொன்னார். 

தர்ஷன் தனக்கு இருக்கும்  மனக் குழப்பத்திலும்... மனச் சோர்விலும் சேரன் டாஸ்க்கில் அவளுக்கு விட்டுக் கொடு என்றும்... அவள் பின்னிருந்து உந்தித்தள்ளி உற்சாகப்படுத்து என்றும் சொன்னதாய் லாஸ்லியாவிடம் ஒருமுறை சொன்னதை இங்கு மாற்றிச் சொன்னார். உடனே ஷெரின், 'அவர் விட்டுக் கொடுப்பாரா... மாட்டாருல்ல... அப்ப நீ ஏன் விட்டுக் கொடுக்கணும்... நீ எதையும் மனசுல ஏத்திக்காதே... உன்னோட பார்வைக்கு எது சரியோ அதுவழி போ' என அறிவுரை சொன்னார். உண்மையில் சரியான அறிவுரை என்றாலும் சேரன் குறித்தான செய்தி தர்ஷனிடமிருந்து தவறாகவே வந்திருக்கிறது. ஏன் இந்தாளுக்கு இந்த வேலை என்று சேரனைப் பற்றி பார்வையாளர்கள் தவறாக நினைக்கக் கூடும்.

இன்னைக்கு ஒண்ணும் தேறாதுன்னு தோணுச்சுன்னா பிக்பாஸ் காலைக்கடன் என அதைச் சொல்லிக் கொடு இதைச் சொல்லிக் கொடுன்னு யாரையாச்சும் கூப்பிட்டுக் கொடுக்கும் டாஸ்கையும் பார்வைக்கு வைத்து வருகிறார். அதிகம் இதைக் காட்டுவதில்லை என்றாலும் மேலே சொன்னது போல் தேறாத சில நாட்களில் நம்மைக் கொல்லத் தவறுவதில்லை. 

நேற்றும் குளிப்பதன் அவசியம் குறித்து குளிக்காத சாண்டி விளக்க வேண்டுமாம்... குளிக்காமல் முகத்துக்கு சோப்பைப் போட்டு... ஜிப்பா போட்டு... யோகா செய்து... செண்ட் அடித்து... எல்லாருக்கும் விளக்கம் கொடுத்தார்... சேரன் கொஞ்சம் நல்ல கேள்வியாய்க் கேட்டார். மற்றோர் கேள்வியெல்லாம் மொக்கை... கைக்குட்டை என்றதும் அதென்ன கைக்குட்டி என ஷெரின் கேட்டது செம... மற்றபடி எப்பவும் போல் இந்த டாஸ்க் காலையில் வெளக்கெண்ணைதான்.

கமல் என்னடா சிவப்புக் கேட்டைச் சொல்றது நாம இன்னும் சிறப்பாய் காதல் ஊர்வலம் போவோம் என முடிவு செய்துட்டாங்க போல... முன்பு தள்ளியமர்ந்து (நமக்குக் காட்டிய காட்சிகளின்படி) காதல் செய்தவர்கள் இப்போது நெருங்கியிருக்கிறார்கள். இப்ப அம்மணி கவின் தலை கலைத்து காதல் செய்ய ஆரம்பிச்சாச்சு... ஆண்டவா... இது தேவையா ஆண்டவா...?

இப்பக் குளிக்கப் போறதைக் கூட சொல்லிட்டுப் போறாங்க...  'ஷாம்பு போடும் போது கண்ணை மூடிக்கிங்க... கண்ணுல பட்டுட்டா எரியும்' என பார்த்துக் குளிக்கச் சொல்லிட்டு பார்க்க முடியாத காரணத்தால் கக்கூஸ்க்கு காவல் இருக்க முடியாத சூழலில் வெளியில் உட்கார்ந்திருக்கிறார் கவினார். மற்றவர்களை மறைந்திருந்து பார்த்துக் கேலி செய்யும் அவரின் வேலையை மற்ற மூவரும் எடுத்துக் கொண்டு இவர்களைக் கேலி செய்கிறார்கள். அதைப் பார்த்து அம்மணியும் கவினாரும் சிரிக்கிறார்கள்... லாஸ்லியா மீண்டும் தலை கலைக்கிறார்.

நாமினேசன் பண்ணுங்கடான்னா சேரன் தலைவர்ன்னு அவரைப் பண்ண முடியாத காரணத்தால் மைக்கை அமத்திவிட்டு மையல் கொண்ட கவினை கண்டிப்பாக நாமினேட் பண்ணுவானுங்க... அதேபோல் வனிதாவும் வருவார்... வேறு யாருக்கும் வாய்ப்பிருக்காது என்பதால் இதில் ஒருவர் வெளியில் போகவேண்டியிருக்கும் கவின் போனால் காதல் கதை இருக்காது... வனிதா போனால் வம்பு வழக்கு இருக்காது... அப்புறம் பிக்பாஸ்ல இப்ப இருக்க கொஞ்ச நஞ்ச விறுவிறுப்பும் இருக்காது... அதனால நாமினேசன் பண்ணுங்கடா... ஆனா நாங்க இந்த வாரம் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்கிறோம் என பிக்பாஸ் செய்திருக்கும் பித்தலாட்டம் முன்முடிவுடன் தீர்மானிக்கப்பட்டது... அப்ப இங்க கூமுட்டை யாரு..?  ஓட்டுப் போடுறவனுங்களான நாமதானே...

அவெஞ்சர்ஸ் அணியில தர்ஷன் மற்றும் முகன் தலா ஒரு ஆளை மாற்றி வனிதாவைச் சொன்னார்கள், மற்ற மூவரும் பேசி வைத்தபடி வனிதா, ஷெரின்னு சொன்னாங்க... சேரன் இல்லை என்பதால் ஷெரின் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கவின், முகனில் நின்றார்கள். இறுதியில் கவின், முகன், ஷெரின், வனிதா களத்தில்... டம்மியாய். கவின் உடனே நாலு ஓகே... இன்னொன்னு யாரு சொல்லியிருப்பான்னு கணக்குப் போட ஆரம்பித்தார்... லாஸ்லியா முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிருச்சு... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கவின் போயிருவாரோன்னு கலக்கம் அவருக்குள்... என்னோட கணக்கு உனக்குத் தெரியாது... சில நாள் இந்த நாமினேசனை வச்சி ரெண்டு பேரும் சீரியஸாப் பேசுவாங்கன்னு பிக்பாஸ் சிரிச்சிக்கிட்டாரு.

சிகப்புக் கேட்டை விட படுக்கை அறையில் காதல் செய்வது உடம்புக்கும் நல்லதுன்னும்.... சூட்டுல கெடக்க வேண்டியதில்லைன்னும் கவினார் காதல் அந்தாதியில் எழுதிக்கிட்டார்.. ஆமா ஏசியெல்லாம் இருக்குல்ல... அதன்படி கவினும் லாஸ்லியாவும் வீட்டுக்குள் லவ்வ ஆரம்பிச்சிட்டாங்க... 

'உங்களை நாமினேட் பண்றதுக்கு நான்தான் காரணம்' அப்படின்னு அம்மணி பிட்டைப் போட, 'நீங்க அப்படி நினைக்காதீங்க... எங்ககிட்டயிருந்து உங்களைப் பிரிக்க நினைக்கிறவங்க இதைத்தான் செய்வாங்க... நான் எல்லாரையும்தான் சொல்றேன்'னு கவின் காலாட்ட... நமக்கு ஆமா இது அம்பிகாவதி-அமராவதியின் அமரக்காதல் இதைப் பிரிக்க எல்லாரும் கத்தியெடுத்துக்கிட்டுத் திரியிறாங்கன்னு தோணுச்சு... வெளிய போனபின் கவின் யாருன்னு தெரியப் போகுது.... அம்மணி சொல்லாமக் கொள்ளாம இலங்கைக்கு வண்டி ஏறப்போகுது.... பேச்சைப் பாருங்க.

'நீங்க நல்லா விளையாடுங்க... உங்களுக்காக நானே பேசும் போது மத்தவங்க பேசாம இருப்பாங்களா'ன்னு அவரு... 'என்னைய திட்டுங்க... அடிங்க... பேசாதீங்க... விளையாடுங்க'ன்னு இவரு... 'உங்களைத் திட்டாமயா இருக்கிறேன்... வெளியில காட்டமாட்டாங்க... வாங்க வெளிய போனதும் நான் காட்டுறேன்'னு அவரு... 'நண்பர்களுக்காக நான்னு நீங்க நிக்கிறதை மட்டும் யாரு சொன்னாலும் விடாதீங்க... அதுதான் உங்க பவரு'ன்னு இவரு... இப்படியே அவரும் இவரும் பேசிக்கிட்டே இருந்தாங்க. 

நண்பர்களுக்காக நிற்பவர்ன்னு லாஸ்லியா சொன்னது ஓட்டுப் போடுறவனுங்க சசிகுமார் மாதிரி துரோகின்னாலும் நண்பேன்டான்னு நினைச்சி கவினைக் காப்பாத்துங்க... எங்க காதல் ஆறு பிக்பாஸ் இல்லத்துக்குள் ஓடி அப்படியே சென்னையோட தண்ணிப் பிரச்சினையைத் தீர்த்து கூவத்துல... ச்சை... மெரினாவுல கலைஞர் சமாதிக்கும் அம்மா சமாதிக்கும் அப்பால போயிக் கலக்கணும் அப்படிங்கிற மாதிரித்தான் இருந்தது.

கவின் 'GAME ON'ன்னு ஒரு பனியனைப் போட்டிருக்காராமாம்... இனிமேப் பாருங்க என்னோட ஆட்டத்தைன்னு கபாலியில ரஜினி சொல்ற மாதிரி இல்லாள்க்கிட்ட அள்ளி விட்டுக்கிட்டு இருந்தார். இல்லாலும் புன்னகை அள்ளி வீசிக்கிட்டு இருந்தாங்க... இவங்க கமலுக்கு வச்சிருக்கிறது செக்... சின்னப் பயக சகவாசம் வேணான்னு ஏன் சேரன் ஒதுங்கியிருக்கிறாருன்னு கமல் இப்ப யோசிச்சிருப்பாப்ல. மறுபடியும் மனசுக்குள் தோணியது தேவையா ஆண்டவரேதான்.

'வசந்த் அன் கோ' டாஸ்க் சிவப்பு நீளம்ன்னு ரெண்டு அணி... வெளியில் இருக்கும் சுழலும் நாற்காலிகளில் உள்ள படங்களைப் பார்த்து எது இரண்டு ஒன்றாக இருக்கோ அவற்றைச் சேர்க்க வேண்டும்... வனிதா, சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் ஒரு அணி; சேரன், ஷெரின், கவின், முகன் மற்றொரு அணி... முடிவில் சேரன் அணி வெற்றி... எப்பவும் போல பிக்பாஸ் கேக் அனுப்பினார்... எட்டுப் பேருக்கு இவ்வளவு பெரிய கேக்கா... அடப்பாவிங்களா... முப்பது பேருக்கு எங்க ஆபீசில அதுல மூணுல ஒரு பங்குதான் வெட்டுறானுங்க... வனிதா அதெப்படி அவங்க ஜெயிச்சாங்கன்னு ஆரம்பிச்சாங்க... ஷெரின் எதிரணி என்பதால் அடக்கி வாசிச்சிட்டாங்க.... ஆமா அதானே அக்கா சொல்றது சரின்னு ஒத்து ஊத கவினும் அவர் அணியில் இல்லை... சோ... வாயை கேக்கால் மூடிக்கிட்டாங்க.

'பிக்பாஸ் போட்டியில் நான் ஏன் வெற்றி பெறணும்..? அதற்கான தனித்துவ தகுதி என்னிடம் என்ன இருக்கிறது..?' என ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளர் முன் எடுத்துச் சொல்ல வேண்டும்... 'உன்னிடம் அதற்கான தகுதியே இல்லையே பின்னே நீ எப்படி வெல்ல முடியும்..?' என எதிர்க்கேள்விகள் கேட்டு நான் அதற்குத் தகுதியில்லாத ஆள்தான் எனச் சொல்ல வைக்க வேண்டும்... அப்படிச் சொல்ல வைப்பவர் ஒருவருக்கு அடுத்த வாரம் நாமினேசனில் விடுமுறை என பிக்பாஸ் ஒரு கண்றாவி டாஸ்க்கைக் கொடுத்தார். ஊரில் மழை பஞ்சம் மாதிரி பிக்பாஸ்க்கு இந்த முறை டாஸ்க் பஞ்சம்.... பாவத்த அவரும் என்னதான் பண்ணுவார்.

இந்த டாஸ்க்கைச் சொன்னதும் சரி இனி அரைமணி நேரம் சீரியல்தான்னு முடிவாயிருச்சு... சும்மாவே கொட்டாவி வரும்... இதைப் பார்த்தால் தூக்கம்தான் வரும் என்றாலும் எழுதணுமே... பதிவு ஒண்ணு கூடும்ல்லன்னு கொட்டாவியோட பார்க்க வேண்டியதாயிருச்சு... பார்த்து முடிச்சதும் தூக்கமும் வந்தாச்சு.

முதலில் கவின் நான் எல்லாரோடவும் சண்டை போட்டாலும் எங்கிட்ட மோதினவங்கதான் வெளியில போயிருக்காங்க.... நான் இப்ப இந்த இடத்தில் நிக்கிறேன்னா எங்கிட்ட ஏதோ இருக்குன்னு சொன்னார். சேரன் மட்டுமே 'இதுவரை நீங்க தனித்துவமாய் உங்களை நிலை நிறுத்த என்ன செஞ்சிருக்கீங்க..?'ன்னு அருமையான கேள்வியை முன் வைத்தார்... கவினால் அதற்கு சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை... ஏன்னா காதலைத்தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை. 

வனிதாவோ கேள்விங்கிற பேர்ல சாக்சி, லாஸ்லியான்னு புளிச்சிப்போன மாவுல மறுபடியும் தோசை ஊத்துனாங்க... எப்படியும் கவினைக் கருக வச்சிடலாம்ன்னு கீரல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே பேசினாங்க... கவினும் பதில் கொடுத்தார்... திடீரென லாஸ்லியா அவர் வெல்லத் தகுதியானவராங்கிறதுதான் கேள்வி... என்னைக் காதலிக்கத் தகுதியானவரான்னு பிக்பாஸ் கேக்கலையில்ல... பின்ன ஏன் நான் இதுக்குள்ள எனக் கத்தவும் வனிதா வாயை மூடிக் கொண்டார்.

'நீங்க எப்ப உங்க விளையாட்டை விளையாடுவீங்க..?'ன்னு தர்ஷனும் சாண்டியும் கேக்க, லாஸ்லியாக்கிட்ட சொன்ன மாதிரி அதான் ''GAME ON' பனியன் போட்டிருக்கேனே... எதுக்குத் தெரியுமா... இனி உங்களை எல்லாம் அடித்துத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போகப்போறேன் பாருங்க அதுக்குத்தான்... அதுதான் முதல் ஆளா இங்க நான் வந்திருக்கிறேங்கிறதைப் புரிஞ்சிக்கங்க..?' என்றார் கவின். முதல்ல லாஸ்லியாக்கிட்ட 'COME ON'ன்னு சொல்றதை நிறுத்துறியான்னு பார்ப்போம் என்பதாய் இருந்தது சாண்டியின் பார்வை.

அடுத்தாய் வந்த சாண்டி இதுவரை என்னோட விளையாட்டை நான் சரியாகவே விளையாடி வருகிறேன் என்றார். இவரிடம் 'நீங்க நட்புக்கு மரியாதை கொடுக்குறீங்க... நகைச்சுவையால் இங்க இருப்பவர்களை மகிழ்விக்கிறீர்கள்... ஆனாலும் அடுத்தவரைக் கேலி பண்ணி நீங்கள் செய்யும் நகைச்சுவை மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்..?' என சரியான கேள்வியை முன் வைத்தார் சேரன். நான் அப்படித்தான் எங்க அப்பாவை... அம்மாவை... மனைவியை... மாமியாரை என எல்லாரையும் கலாய்ப்பேன்... அதனால மனசு வருந்துறாங்கன்னு தெரிஞ்சா உடனே மன்னிப்புக் கேட்டுட்டு அவங்களை மறுபடியும் கேலி பண்ண மாட்டேன் என்றார். இவர் சேரனிடம் மன்னிப்புக் கேட்டதைப் பார்த்திருக்கிறோம் என்பதால் உண்மை எனப்பட்டது. 

இவரிடமும்  வனிதா தேவையில்லாத ஆணியையே புடுங்கினார்... 'வளர்ந்தவன்... ஜிம்பாடி... அழகானவன் என ஒருவரிடம் பிக்பாஸ் கோப்பையைத் தூக்கிக் கொடுப்பேன்னு சொல்றீங்க... அதெப்படி முடியும்... பிக்பாஸ் என்ன கேனப்பயல... நீங்க இப்படிச் சொல்றதால மக்கள் மத்தியில் உயர்ந்தவன் உயர்ந்துக்கிட்டே போறானுல்ல... எனக்குப் பொறாமையா இருக்குல்ல'ன்னு தர்ஷனைப் பற்றி வனிதா கேட்டார். வனிதாவின் முக்கியமான டார்க்கெட்டே தர்ஷன்தான்... மிஷன் ஷெரின் தோல்வியில் முடிந்ததால் மிஷன் சாண்டியைக் கையில் எடுத்தார். என்னைவிட அவன் சிறப்பாக விளையாடுகிறான்... அதனால் அவனைச் சொன்னேன் என சாண்டி முடித்துக் கொண்டார். 

அடுத்து வந்த முகம் ரொம்பத் தெளிவாய்ப் பேசினார்... நான் நண்பர்களுடன் இருக்கிறேன் என்றால் எப்பவுமே அன்புக்காக ஏங்குபவன் நான்... அண்ணன் தம்பின்னு ஒரு உறவு வரும் போது என்னால அதைவிட்டு வெளியில் வரமுடியலை... நாங்க கூட்டமா இருக்கது மட்டுமே உங்களுக்குத் தெரியும்... ஆனா அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியாது... எனக்கு இந்தியா புதுசு... தமிழகம் புதுசு... வீதியில கூட இறங்கி நடக்கலை... பிக்பாஸ் வீட்டுல காலடி வச்சப்பவே எனக்கு மாற்றம் வரும்ன்னு தோண ஆரம்பிச்சிருச்சு... என்னோட வயதொத்தவங்களோட என்னால சுலபமா ஜெல் ஆக முடியுது... ஆனா சேரன் அண்ணா நிறைய எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க... அக்கறை காட்டுறாங்க... ஆனாலும் அவங்க கூட ஜெல் ஆக முடியலை.... காரணம் வயது வித்தியாசம்தான்... தன்னால் வெல்ல முடியும்ங்கிற மனதிடத்துடன் சேரன் அண்ணா இருப்பது எனக்குப் பிடிக்கும்... அவராலே வெல்ல முடியும் என்னும் போது என்னாலும் போட்டியின் இறுதிவரை செல்ல முடியும் என்றார்.

'உங்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது... அது உங்க விளையாட்டைப் பாதிக்கும்தானே..?' என இவரிடமும் சரியான கேள்வியை முன் வைத்தது சேரன் என்று சொல்லவும் வேண்டுமா..? 'கோபத்தைக் குறைத்து வருகிறேன்... இனி வரும் நாட்களில் உங்கள் அன்பில் என் கோபம் கரையும்' என்றார். வனிதா முகனிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். பின்னே கட்டில் உடைந்ததை வெளியில் இருந்து பார்த்தவர்தானே.

தர்ஷன் பேசும் போது என்னால் மற்றவர்களை விட சிறப்பாக போட்டிகளில் விளையாட முடியும் என்பதை இதுவரை நிரூபித்திருக்கிறேன்... அதை யாராலும் மறக்க முடியாது... அநீதிக்கு எதிராக நான்தான் முதலில் குரல் கொடுத்திருக்கிறேன். வாரத் தலைவராய் இருக்கும்போது நான் கொண்டு வந்த அந்தந்த நாளிலேயே பிரச்சினைக்குத் தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம் இன்று வரை வாரத் தலைவர்களால் பின்பற்றப்படுகிறது என்றார்.

வனிதாவோ தர்ஷனின் மனதிடத்தை உடைத்து மக்கள் மத்தியில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தார். 'மத்தவங்க பிரச்சினையில் முன்னாடி மைக்கை நீட்டுன நீ... மது பிரச்சினையில் ஏன் நீட்டலை..?' எனக் கேட்டார். 'நான்தான் முதலில் நீட்டினேன்... நீதான் பாக்கலை' என்று விளக்கினார் தர்ஷன். 

வனிதாவுக்கும் தர்ஷனுக்குமான பேச்சு ரொம்ப நேரம் நீடித்தது... தர்ஷன் விளக்கம் கொடுத்தாலும் அவருக்குள் ஒரு பதட்டம் மெல்லப் படர ஆரம்பித்தது. வனிதாவுக்குள் 'வர்றே வா..' என்ற புன்னகை மெல்ல இழையோட ஆரம்பித்தது... வரும் நாட்களில் தர்ஷன் கவனம் தப்பினால் வனிதாவால் அடித்துத் துவைக்கப்படுவார் என்பது உறுதி... பெண்புத்தியை விட ஆண்புத்தி கொஞ்சம் கூடுதலாய் யோசிக்கும்... தர்ஷன் சிக்குவாரா... அல்லது தப்பிப்பாரான்னு பார்ப்போம்.

ஷெரின் பேசும் போது நான் நானாகத்தான் இருக்கிறேன்... இங்க வரும் போது வெற்றி பெறணும்ன்னுல்லாம் நினைச்சிக்கிட்டு வரலை... ஒரு புது அனுபவத்துக்காகத்தான் வந்தேன்.... நிறையக் கிடைத்திருக்கு... ஆனா இப்பக் கொஞ்ச நாளா வெற்றியை நோக்கி ஓடணும்ன்னு என் மனசுக்குத் தோணியிருக்கு... ஒன்பது வாரங்கள் நான் நாமினேசன்லயே வரலை... அது என்னோட தனித்தன்மைக்கு கிடைத்த பரிசு... இந்த வாரம் என் நண்பர்களுக்கு வேறு ஆளில்லை (சேரன் இல்லை என்பதைத்தான் மறைமுகமாக சொன்னார்) அதான் எனக்கு குத்திட்டாங்க என்றார்.

இவரிடமும் சேரன்தான் 'எல்லா விஷயங்களிலும் நீங்க தனித்தன்மைதான்.... எதிலும் மாட்டிக்க மாட்டீங்க... ஆனாலும் சில விஷயத்தில் ஷெரினோட தனித்தன்மை போய் சோகமாயிடுறீங்க... இது பற்றி நாம் பலமுறை பேசியிருக்கிறோம்... நீங்களும் நிறையச் சொல்லியிருக்கிங்க... ஆனாலும் இங்கு சொல்லப்பட வேண்டியதால் கேட்கிறேன்... சொல்லுங்க' என்றார் சிரித்தபடி. ஆமாம் சில விஷயங்களில் நான் என் முடிவை எடுக்க முடியாமல் தவிக்கிறேன் என்பது உண்மையே என ஒத்துக் கொண்டார்.

மற்றவர்கள் இன்று பேசலாம்... வனிதாவைப் பொறுத்தவரை தர்ஷன் முதல் டார்க்கெட்.... அவரின் பின்னே கவினும் சாண்டியும்... 

பார்க்கலாம் எப்படித் தன் மிஷன்களைக் கொண்டு போகிறார் வனிதா என...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

கறுப்பி குறுநாவலில் இருந்து முதல் பகுதி


ழுதி இருக்கும் கறுப்பி குறுநாவல் குறித்து இங்கு முன்னரே பகிர்ந்திருக்கிறேன்... அதன் முதல் பகுதி மட்டும் உங்கள் பார்வைக்காக... வாசித்து இப்படியான ஆரம்பம் வாசிப்பவரை ஈர்க்குமா என்று சொல்லுங்க... முழு நாவல் இங்கு பகிர முடியாது... நன்றி. 

Image result for black girl
வளின் அழுகை சிவாவிற்கு உறக்க வராமல் புரண்டு புரண்டு படுக்க வைத்தது... ஒரு பெண்ணின் கண்ணீர்தான் எத்தனை வீரியமானது..? அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்... அந்த ஆயுதம் எப்படிப்பட்டவனையும் சாய்த்து விடக்கூடியதே என்பதை அவன் அறிவான்... அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, தோழி என எத்தனை பேரின் கண்ணீரை அவன் பார்த்திருக்கிறான். அந்தக் கண்ணீர்கள் எல்லாமே வலியை மட்டுமே பிரதிபலிக்கவில்லை. பல நேரங்களில் நினைத்ததைச் சாதித்துக் கொண்ட கண்ணீராய்த்தான் இருந்திருக்கின்றன... இருக்கின்றன... ஆனால் இவளின் கண்ணீர் வலியை மட்டும்தான் கொட்டியது.

எத்தனை வலி இருந்தால் அப்படி அழுதிருப்பாள்..?

சொந்தங்கள் ஊரில் இருக்க... இந்த ஊரில் அவளுக்கு ஆறுதலாய் தோள் கொடுக்கவும்... அணைத்துக் கொள்ளவும் யாரேனும் இருப்பார்களா...?

அப்படியே இருந்தாலும் அவளின் வலியைத் தீர்க்கும் மருந்தாக இருப்பார்களா..?

அந்தச் சூழலில் அவளோடு  வேலை பார்ப்பவர்களுக்குள்ளும் வேதனைகள் மட்டும்தானே நிறைந்திருக்கும்...?

கூட இருந்து அவளுக்குத் தோள் கொடுக்கும் தோழிக்குள்ளும் இது போல் எத்தனை வலிகளோ..?

அப்படியானால் அந்தத் தோளும் கூட வலி சுமக்கும் தோளாய்த்தானே இருக்கும்...?

கேள்விகள் நிறைந்த மனசு ஆற்றாமையால் அடித்துக் கொள்ள, தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்தான். அவனின் கட்டில் 'கிரீச்... கிரீச்...' எனச் சப்தமிட்டது. அந்தச் சத்தத்தில் மேல் கட்டிலில் படுத்திருப்பவன் புரண்டு படுத்தான். கண்ணீர் இவன் உறக்கத்தைக் கெடுத்தது போல் கட்டில் சப்தம் அவநின் உறக்கத்தைக் கலைத்திருக்கலாம்.

எழுந்து கைலியை நன்றாகக் கட்டிக் கொண்டு மற்றவர்களின் தூக்கம் கெடாமல் கதவைத் திறந்து பாத்ரூம் போய்விட்டு வந்தவன் மனசுக்குள் அந்தக் கண்ணீரே சுழன்று சுழன்று சுனாமியாய் எழுந்து கொண்டிருந்தது.

பாவம் அவள்... வறுமையே அவளை இங்கு விரட்டியிருக்கும்...

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது... எங்கெங்கிருந்தோ வேடந்தாங்களுக்குப் பறவைகள் வருமாம்... அப்படித்தான் இந்தப் பாலை மண் வேடந்தாங்களாய் இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான பேசுமொழி... எத்தனை விதமான உணவுகள்... எத்தனை விதமான கலாச்சாரம்...

இப்படிப் பலவிதமான மனிதர்கள் இருந்தாலும் வலிகளையும் வேதனைகளையும் அதிகம் சுமப்பதாலோ என்னவோ இந்தப் பாலை கடும் வெப்பத்தால் தகிக்கிறது... இங்கிருக்கும் பெரும்பாலானோர்களின் மனதைப் போல...

அறைக்குள் நுழையாமல் யோசித்துக் கொண்டு கிச்சனில் நின்று கொண்டிருந்தான். அந்தத் தளத்தில் இவர்களும் இவர்களுக்கு எதிரே இருப்பவர்களும் எப்போதும் கதவைப் பூட்டுவதில்லை. சும்மா சாத்தியிருந்த கதவுக்கு வெளியே பேச்சுக்குரல் கேட்டது. எப்படியும் ஒரு மணிக்கு மேலிருக்கும். இந்த நேரத்தில் பெண் குரல்... சிறு விசும்பலுடன்...

யார் அவள்...? யாருடன் பேசுகிறாள்..?

ரெண்டு நாள் முன்பு மாடிப்படியில் ஒருவனிடம் தன் பிரேமம் குறித்த கதை சொல்லிக் கொண்டிருந்தாளே அவளாக இருக்குமோ...?

வீட்டுக்குள் சிறை வைத்திருக்கும் மலையாளியின் மனைவி இரவு நேரத்தில் சிறை உடைத்து வந்து ஊரில் இருக்கும் உறவுகளுடன் பேசுகிறாளோ..?

ஒரே ஒரு குரல்தான்...

சிறிய இடைவெளிவிட்டுத் தொடர்கிறது... எதிர்க்குரல் கேட்கவில்லை...

அப்படியானால்...

எவளோ ஒருத்தி ஊருக்குப் பேசுகிறாள்..

இந்த வேளையில் யார் அவள்...?

கதவைத் திறந்து பார்க்க நினைத்தான் சிவா.

அப்படிப் பார்ப்பதை அவள் தவறாக நினைத்து விட்டால்...?

யோசனைகள் எப்போது யோசனைகளாகவே இருப்பதில்லை... அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற உந்துதலும் சேர்ந்தே வருவதுண்டு. அப்படியான உந்துதலே ஜெயித்தது.

மெல்லக் கதவைத் திறந்து பார்த்தான்...

அவள் பேசிக் கொண்டிருந்தாள்...

முப்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும்... அவளை அடிக்கடி லிப்டில் பார்த்திருக்கிறான்... அவளும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பாள்... அவள் பார்வையின் பொருள்தான் அவனுக்குப் புரிவதில்லை...

சில நேரம் அவன் லிப்ட்டுக்குக் காத்திருக்கும் போது அவள் பிளாட் கதவு திறந்திருந்து இருந்து  அவள் உள்ளே நிற்கும் பட்சத்தில் அவனையே குறுகுறுவெனப் பார்ப்பாள். அவனும்தான் பார்ப்பான்... அவன் ஒன்றும் புத்தன் அல்லவே... திருவிழாக்களில் தாவணியை ரசித்து பின்னால் சுற்றியவன்தானே... கல்லூரியில் புவனா மீதான ஒரு தலைக்காதலில் தகித்தவன்தானே... அவனொன்றும் அக்மார்க் தங்கமெல்லாம் கிடையாது என்றாலும் தனகென எல்லை வகுத்து வைத்திருப்பவன். அவனின் கண் கூட சில நேரம் கழுத்துக்குக் கீழே மேயத்தான் செய்யும். இங்கு பம்பாய் படத்தில் உயிரே பாடலில் மலையில் ஓடி வரும் மனிஷா கொய்ராலாவை நடக்கும் போதே பார்க்க முடியும்... சாமிக்கு படையல் வைப்பதும் தெரியாமல் எடுப்பதும் தெரியாமல் பார்த்தா பார்த்துக்க பார்க்காட்டி போ என பூஜாரி நெய் வேத்தியம் செய்வதைப் போல் பார்த்தும் பார்க்காதது மாதிரிக் கண்களைத் தாழ்த்திக் கொள்வான்.

அவன் நிற்கும் நேரத்தில் சில சமயம் கதவுக்கு வெளியே வந்தும் போவாள்... எதற்காக வருகிறாள் என்பதெல்லாம் தெரியாது... ஒரு மின்வெட்டுப் பார்வை அவன் மீது பட்டுத் தெறிக்கும்... இதுவரை சிநேகமான புன்னகை எதுவுமில்லை என்றாலும் கண்கள் புன்னகைத்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறான். அவள்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

நடந்தபடி யாரிடமோ நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா... இந்த வாழ்க்கை யாருக்காக... எனக்காகவா... நமக்காகத்தானே... நான் சொகுசா இருக்கேன்னு யார் சொன்னா... ஒவ்வொரு நாளும் விதியை  நொந்துக்கிட்டு தூக்கமில்லாமக் கிடக்கேன் தெரியுமா..? எனத் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சுச் சுவராஸ்யத்தில் கதவைத் திறந்த சப்தத்தைக் கவனிக்காமல் லிப்டைப் பார்க்க நின்றிருந்தாள்.

எதேச்சையாகத் திரும்பிய போது அவனைப் பார்த்தாள்.

அதே பார்வை...

அழுதிருப்பாள் போல...  எதிர்முனைக்காரன் இந்த நேரத்தில் அவளுடன் பேசுகிறான் என்றால்... அவளும் அழுது கொண்டு பேசுகிறாள் என்றால் எதிர்முனை ஏதோ ஒருவித சந்தேகத்துடன் தூங்காமல் இருக்க வேண்டும்...

இவள் கூட தன் விதியை நொந்து தூங்காமல் இருக்க வேண்டும். பகலெல்லாம் வேலை பார்த்துவிட்டு வந்து சமைத்துச் சாப்பிட்டு இந்த நேரத்தில் ஊருக்குப் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்கள் தூங்குவது எப்போது...?

தூக்கம் துறந்த துக்க வாழ்க்கையைச் சொகுசெனச் சொல்லும் உறவுகளை என்ன சொல்வது..?

எப்பவும் புன்னகை பூக்கும் பார்வையைப் பார்த்தவன் அழுதிருக்கும் கண்களைப் பார்த்ததும் வருத்தப்பட்டான்... அவளும் இவனைத் தவிர்க்க நினைத்து பேசுவதைக் குறைத்து 'ம்' போட்டபடி லிப்ட் பக்கம் திரும்பிக் கொண்டாள். அவளின் துக்கத்தைப் பகிர சரியான மடி இங்கு இல்லை என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

அவள் பேசட்டும்... அழட்டும்... ஆறுதலாய் ஒரு வார்த்தையாவது எதிர்முனையில் இருந்து கேட்டுவிட மாட்டாளா என்ன... யாரும் அறியாவண்ணம் இந்த நடுநிசியில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றால் எதிர்முனையில் இருந்து ஆறுதலாய் ஒரு வார்த்தை கிடைக்கும் என்ற நம்பிக்கைதானே... அந்த நம்பிக்கை பொய்க்காதிருக்கட்டும்.

பகலெல்லாம் சிரிப்பவள் இரவில் யாருக்கும் தெரியாமல் அழுகிறாள்... இந்த நாட்டில் விதி யாரையும் சந்தோஷமாக இருக்க விடுவதில்லை என நினைத்தபடி கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்தான்... கட்டில் கிரிச்.. கிரீச்.. எனச் சத்தமிட்டது... மேலிருப்பவன் புரண்டு படுத்தான்... எதிர் கட்டில்க்காரன் எழுந்து வெளியே போனான்.  அவனும் கூட கதவைத் திறந்து அவளைப் பார்க்கக் கூடும்... இங்கே பெண்ணின் குரல் எல்லாரையும் ஈர்க்கத்தானே செய்கிறது.

பத்துக்குப் பத்து அறையில் இரண்டிரண்டாய் நாலு கட்டில்கள்...

பாலை மண்ணில் தனித்த  வாழ்க்கை என்பது ஒரு அறைக்குள்தான்... இல்லையில்லை... ஒற்றைக் கட்டிலில்தான் கழிகிறது.

சந்தோஷமோ... துக்கமோ... எதையும் இறக்கி வைக்கக் கூட இடமில்லா வாழ்க்கை...
அன்போ... அரவணைப்போ... எதுவுமற்ற வாழ்க்கை...  ஆனால் இதுதான் வாழ்க்கை... இது அவர்களுக்கு எழுதப்பட்ட வாழ்க்கை...

எனக்கு இப்படி... அவளுக்கு அப்படி... இப்படித்தானே ஒவ்வொரு நாளும் கரைகிறது என நினைத்துக் கொண்டான்...

அவள்... அந்தக் கருப்பி... மீண்டும் மனசுக்குள் எழுந்தான் கண்ணீர் சிந்தியபடி...

அவளின் அழுகை இரவெல்லாம் அவனுள் தொடர்ந்தது...

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமில்லாத இரவாக அது நகர்ந்தது.

எப்படியும் மீண்டும் ஒரு முறை அவளைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்...

அவனுக்கான அலாரம் அடித்தது... தூக்கமில்லா அலுப்போடு எழுந்து கொண்டான்.
-'பரிவை' சே.குமார்.