மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 மார்ச், 2010

தமிழரசியும்... செல்லமும்... வலைச்சரமும்..!

மனசு - 1.

'அவள் பெயர் தமிழரசி' - பாவைக் கூத்துக் கலை என்பது அழிந்து வரும் கலைகளில் ஒன்று. தற்பொழுது எங்கும் நடத்துவதில்லை என்ற நிலையில்தான் இருக்கிறது. நாடகம், கரகாட்டம் (இப்பொழுது நடத்தப்படுவது கரகாட்டம் என்பது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்) பாவைக் கூத்தெல்லாம் நமது அப்பா காலத்தில் அடிக்கடி கிடைத்தவை... இப்போது அரிதாகக் கிடைப்பவை.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நாடகங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். எங்கு நாடகம் நடந்தாலும் சைக்கிளில் சென்று வரும் கூட்டமும் உண்டு. வள்ளி திருமணம் நாடகத்தில் வேலானாக ஸ்ரீராம் நடித்தாலும் வள்ளியாக கரூர் இந்திரா நடித்தாலும் அவர்களின் தர்க்கத்திற்காக கூட்டம் அலை மோதும். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜின் நடிப்புக்காகவே பார்க்கப் போவோர் உண்டு. ஆனால் அதே நாடகம் இன்று ஒருசில இடங்களில் நடத்தப்பட்டாலும் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் உள்ளது.

அதேநிலைதான் கரகாட்டத்திற்கும்... நல்ல கலை, ஆனால் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கேவலமாக மாற்றப்பட்டு விட்டது. எங்கள் ஊரில் சில காலமாக கரகாட்டம் நடத்திவந்தோம். அவர்களிடம் 'இது கிராமம் இங்கு ஆபாசப் பேச்சுக்கூடாது' என்று சொல்லத்தான் செய்வோம். ஆனால்... அவர்கள் மோசமாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் பாசமாகவாவது பேசியும் ஆடியும் விடுவார்கள். அதனால் கடந்த ஆண்டு நாடகத்திற்கு மாறினோம்.

வள்ளி திருமணம்... ஆரம்பிக்கும் போது நல்ல கூட்டம் முடியும் போது ஆறு பேர் மட்டுமே இருந்தோம். அதுவும் விழாக் கமிட்டியை சேர்ந்தவர்கள். நாடக அமைப்பாளர்தான் முருகனாக நடித்தார். ' அடுத்த வருடம் கூட்டத்தைக் கூட்டப்பாருங்க. இப்ப முடிச்சுக்கிருவோம்' அப்படின்னு எங்களது சித்தப்பாவிடம் சொன்னாரே பார்க்கலாம், வேற என்ன செய்ய முடியும் .

இந்த வருடம் திருவிழாவிற்குப் போக இப்போதே அலுவலகத்தில் ஒரு மாத விடுமுறை வாங்கியாச்சு. இந்த வருடம் கலை நிகழ்ச்சி வேண்டாம் என்ற மனநிலைதான் எல்லாருக்கும்... ம்... பார்க்கலாம்.

 சரி, நமது நாட்டுப்புறக் கலைகள் அழியக் காரணம் அவற்றை சுமந்து திரியும் மனிதர்கள்தான். அப்படி அழிந்த கலையைத்தான் கையில் எடுத்துள்ளார் புதிய இயக்குநர் மீரா கதிரவன். 'அவள் பெயர் தமிழரசி' - அருமையான கதைக்களம், சிறப்பாக பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கு, என எல்லாம் சிறப்பாக உள்ளது.

தான் சிநேகிக்கும் பாவைக்கூத்து நடத்தும் குடும்பத்து சிறுமிக்கு சிறுவயதில் உதவும் கதையின் நாயகன், அவர்களை தனது தாத்தாவை கட்டாயப் படுத்தி தங்கள் ஊரில் தங்க வைக்கிறான். அவளது குடும்பத்திற்கு உதவுவதுடன் நட்பாகவும் இருக்கிறான்.

கால ஓட்டத்தில் வளரும்போது அவள் நல்ல படிப்பதும் அவன் படிக்காமல் இருப்பதும் (பசங்களை எல்லா இயக்குநர்களுமே இப்படித்தாம்பா பலி வாங்குறாங்க.) அதனால் அவர்களுக்குள் பிரச்சினைகள் தலை தூக்குவதும் அதற்குத் தீர்வாக நண்பர்களின் கருத்தை சுமக்கும் அவனால் அவள் சுமக்கும் சுமைகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

பாவைக் கூத்துக் கலைஞர்களின் பரிதாப நிலையை கண்முன்னே நிறுத்துயுள்ளனர் இயக்குநரும், பாவைக் கூத்துக் கலைஞர்களாக நடித்தவர்களும். அனைவரும் பார்க்கும் வகையில் இயக்கப்பட்ட நல்ல படம்தான் ஆனால் பாவைக் கூத்துக் கலைஞர்கள் மேக்கப்புடன் வீதியில் அலைவதாக் ஆரம்பத்தில் காட்டும் காட்சியில் நாடகத்தனம் தெரிகிறது. புதிய இயக்குநரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மனசு - 2.

கடந்த வெள்ளியன்று என் பிரிய மகளின் பிறந்தநாள். வியாழன் இரவு இந்திய நேரப்படி 12.01க்கு செல்பேசியில் வாழ்த்து அனுப்பியாச்சு. வெள்ளி விடுமுறை என்பதால் காலையில் அறை நண்பர்கள் தூங்கியதால் போன் செய்யவில்லை. பிறகு போன் பண்ணலாம் என்று நினைத்தபோது மகள் பள்ளி சென்றிருப்பார்கள் வரட்டும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

ஊரில் இருந்து மனைவி போன் செய்து 'எல்லாரும் போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க... எங்கப்பா மட்டும் பண்ணலை. நான் பேச மாட்டேன்' என்று சொல்லிச் சென்றதாக சொன்னார். என் மகள் என் செல்லம் எனக்குத் தெரியும் என்றேன் அவரிடம்.

பள்ளியில் இருந்து வரும் சமயத்தில் போன் அடித்தேன். என் மகளே எடுத்து 'அப்பா...' என்று மழலையில் அழைக்க, வாழ்த்துச் சொல்லியாச்சு. அவர் "அப்பா... அம்மா உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொல்றாங்க... நான் பேசுவேன்ல" என்று சொன்னாரே பார்க்கலாம். என் மனைவிக்கு முகத்தில் ஈயாடவில்லை என்பது எனக்குத் தெரியும்.

மனசு - 3.

நான் வலையில் எழுத வந்த புதிதில் எனது கதையைப் படித்து, அது குறித்து நண்பர் நாடோடி இலக்கியன் அவர்கள் தனது தளத்தில் எழுதி எனக்குள் ஒரு உத்வேகத்தை கொடுத்தார் . இல்லையென்றால் கடந்த ஐந்து ஆறு மாதமாக வலையில் தொடர்ந்திருப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

எனக்கு நண்பர்களாகி எனக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திய நண்பர்களில் புலவன் புலிகேசி தனது டரியலில் எனக்காக சில வரிகளை விதைத்திருந்தார். அந்த விதைப்பில் நல்ல நட்பின் விளைச்சல் இருந்தது.

இந்த முறை திரு.ஸ்டார்ஜன் அவர்கள், எனது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர், வலைச்சரத்தின் கடந்த வாரம் ஆசிரியராக பணியாற்றி பல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தார்.

வலைச்சரத்தில் அரிமுகமாக பிரபல பதிவராக இருக்க வேண்டும் என்ற என் நினைப்பை பொய்யாக்கியது அவரது சனிக்கிழமை பதிவு. நல்ல அறிமுகங்களுக்கு மத்தியில் என் பெயரும்... பிரபலங்களுக்கு மத்தியில் நானும் அதற்கு ஸ்டார்ஜனுக்கு நன்றி.


-'பரியன் வயல்' சே.குமார்

வெள்ளி, 19 மார்ச், 2010

சிம்பும் தாசனும் என் பதிவர்களும்..!

எண்ணம் - 1:

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும், நடித்து மட்டுமே இருக்கும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். பார்த்ததும் அது குறித்து பதிவு எழுதலாம் என்றிருந்தேன். அறை மாறியதால் மன நிம்மதி போயாச்சு. நெட் வசதியும் இல்லை. அதனால் எதுவும் எழுத எண்ணம் இல்லை.எனக்கு சிலம்பரசன் படங்கள் பார்க்கும் எண்ணம் இதுவரை மனசுக்குள் மலர்ந்ததில்லை. இருந்தாலும் கௌதம் மேனன் படம் என்பதால் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் பார்த்தேன். அட சிம்புவா இது... உண்மையில் அசந்தேன். நல்ல திறமை உள்ளவர் தேவையில்லாமல் விரலு... விசிலு என்று இதுவரை தன்னைத்தானே வீணடித்திருக்கிறாரே என்று நினைத்தபோது இனிமேலாவது அவர் மாறுவாரா என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' கௌதம் மேனனுக்கே உரிய வசனங்களோடு கலந்த ஆங்கில உரையாடல்களுடன் இருந்தது. இதில் கொஞ்சம் மலையாள நெடியும் வீசியது. சிம்பு, கார்த்திக் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பும் அசால்டான அந்த நடிப்பும் இதுவரை எங்கே இருந்தது.

அவருக்கும் திரிஷாவுக்கும் இடயேயான நெருக்கமான காதல் காட்சிகளின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் விட்ட புரளி உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றியது.

கடைசியாக சிம்புவுக்கு, நல்ல படங்ளாக பார்த்து நடியுங்கள். உங்கப்பா வழியில் செல்வதால் வீணாவது உங்கள் திறமையுடன் நீங்களும்தான் என்பதை உணர்ந்தி நடியுங்கள். கண்டிப்பாக நல்ல கதாநாயகன் என்ற நிலையை விரைவில் எட்டலாம்.

எண்ணம்-2:

திரு, பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சாதி, மதம் எல்லாம் நாமாக வகுத்துக் கொண்டதுதான். அவர் மாறிவிட்டார் என்பதால் எதோ பெரிய வெற்றியை சுவைத்தது போல் பல இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் சந்தோஷ பதிவுகளை போடுகிறார்கள் என்றால் மற்றவர்கள் கண்டனப் பதிவுகளை போடுகிறார்கள்.

அவர் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். பின்னர் அங்கிருந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் சேஷாசலம் என்பது அவரது இயற்பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பெரியார் மீது கொண்ட பற்றுதலால் அவர் பெரியார்தாசன் ஆனார். எல்லோருக்கும் அவரை பெரியார்தாசனாகத்தான் தெரியும்.

அந்த பெரியார்தாசன் கடவுள் இல்லை என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை நம்பி கெட்டவர்கள் பலர். அவர் இஸ்லாமுக்கு வந்ததற்காக நண்பர்கள் சந்தோஷப்படுவது நீடிக்குமா என்பது அவரது கையில்தான் உள்ளது. கடவுளைத் தேடினேன் எனக்கு இதுதான் பிடித்தது என்கிறார். நாளை இதுவும் இல்லை என்று வேறு எதற்காவது மாறினாலும் ஆச்சரியமில்லை.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... ஏன் எல்லோருமே வயதானதும் இறைவனை நாடுகிறோம்... சாவு பயம் அங்கு அழைத்துச் செல்கிறதோ..?.

எது எப்படியோ. நீங்கள் இஸ்லாத்துக்கு மாறியதில் எம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நல்ல பேச்சாளர் கிடைத்த சந்தோஷம். அதை மெய்யாக்குங்கள். இதுவரை இறைவன் இல்லை என்று சொன்ன நீங்கள் எங்கள் அல்லாவின் புகழை எடுத்து உரையுங்கள். எங்கோ செய்த தவறுக்கு அங்காவது புண்ணியம் கிடைக்கட்டும்.

மதம் மாறுவது உங்கள் விருப்பம். அதையே விருப்பமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து எங்கு செல்லலாம் என்று யோசிக்காதீர்கள். பிறந்த வீட்டில் இருந்து மாமியார் வீடு போய் சரியில்லை என்பதால் தனிக்குடித்தனம் போயாச்சு.. இனி போனால்...?

எண்ணம் - 3

முழுக்க முழுக்க என்னைக் கவர்ந்த, நான் வாசித்த பதிவர்கள் குறித்து எழுந்த எண்ணங்களின் வீச்சுதான். எல்லோரையும் சொல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இப்ப முத்துக்களில் சில மட்டும் ( என் மனதில் பட்டதை சொல்கிறேன்... அவ்வளவுதான்)

நாடோடி இலக்கியன் - நாடோடியாய் இலக்கியம் எழுதும் நல்ல இலக்கியவாதி, அருமையான எழுத்து.

வெ.பூங்குன்றன்- இவரது கவி வரிகளை படித்து வியந்திருக்கிறேன். அப்படி ஒரு வார்த்தை ஜாலம் பாக்தாத்தில் இருந்து முழங்கும் தமிழ் கவி.

தேனம்மை - சும்மா எழுதுகிறேன் என்று சொல்லி என்னமாய் எழுதுகிறார் பாருங்கள். நல்ல இலக்கியவாதி, விமர்சகர்.

செ.சரவணக்குமார் - நிறைய புத்தகங்கள் படித்து விமர்சனங்களில் கலக்குபவர் பக்கங்களெல்லாம் சரவணக்குமாரின் எழுத்துக்களிம் வீச்சுதான்.

புலவன் புலிகேசி - வழிப்போக்கனாய் எழுதினாலும் அருமையான எழுத்து நடை.நிறைய திறமைகளை உள்ளடக்கிய புலி.

பா.ராஜாராம் - கருவேல நிழலில் இளைப்பாறலாம் என்று சற்றே ஒதுங்கிப்பாருங்கள். மரத்தை விட்டு வரமாட்டீர்கள். கவிதைகள், கதைகள் காய்த்துப் பூத்துக் குலுங்குகின்றன்.

ஷங்கர்- பலா பட்டறையில் பல்சுவை தந்து ஷங்கராக மாறினாலும் பலாவின் சுவையில் குறையில்லை.

தியாவின் பேனா - பேனாமுனையின் கூர்மையுடன் எழுதும் இவரது எழுத்துக்களை ரசித்து அனுபவிக்கலாம்.

திவ்யாஹரி - திவ்வியமான கருத்துக்கள் மற்றும் கவிதைகள்.

நிலாமதி - பௌர்ணமியான எழுத்துக்கள். நிலாவின் வீச்சு இவரது எழுதுக்களில்.

அன்புடன் மலிக்கா - கலைச்சாரலில் நீரோடையாய் எழுத்துக்களை பாயவிடுபவர்.

கண்மணி - இவர் கூட்டத்தில் கும்மி அடிக்காமல் தனியாக கும்மி அடிப்பவர். அருமையான எழுத்துக்கள்.

சித்ரா- வெட்டிப்பேச்சு என்பது இவரது பார்வை. ஆனால் நம் பார்வையில் இவர் விவேகமான எழுத்தாளர்.

விடிவெள்ளி - நட்சத்திரமாய் சொலிக்கும் இவரது செண்பக எழுத்துக்கள்.

கமலேஷ் - இவர் சுயம் தேடும் பறவையாம். ஆம் நீண்ட கவிதைகளின் மூலம் நம் சுயம் தேட வைப்பவர்.

அம்பிகா - சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எழுத்தால் இதயங்களை ஆக்கிரமிப்பவர்.

மீன்துள்ளியான் - மீனாக துள்ளி மின்னலாக இருப்பவர். அருமையான எழுத்துக்கள் ஒருமுறை மீன் பி(ப)டித்துப் பாருங்கள்.

விக்னேஷ்வரி - சில நாட்களுக்கு முன் பதிவுகளை பார்த்தேன். ஆழமான எழுத்துக்கள்.

இரா.குணசீலன் - எல்லோரும் கதை, கவிதை என் பகிர்வுகளில் இருக்க, இவர் தமிழின் வேர்களைத்தேடி இலக்கிய அமுது படைப்பவர்.

நிலாரசிகன் - அனைவரும் ரசிக்கும் பௌர்ணமி இவர்.

ஸ்ட்ராஜன் - நிலா அது வானத்து மேலே என்று சொன்னாலும் நல்ல பகிர்வுகளை கொடுக்கும் பதிவர்.

சத்ரியன் - மனவலி ஏற்படுத்தாத மனவிழி எழுத்துக்கள இவரது கையில் விளையாடுகின்றது.

க.நா.சாந்தி லெட்சுமணன் - கிராமங்களில் காந்தியத்தை தேடும் பெண் பதிவர். நல்ல பதிவுகளை இவரது தளத்தில் மேயலாம்.

ரசிகா - ரசிகக் கூடிய பதிவர்களில் ரசிக்கும்படி எழுதுபவர்.

ஏஞ்சல் - எண்ணங்களின் உருவத்தில் எழுதும் இவர் நல்ல இலக்கியவாதி என்பது இவரது பின்னூட்டங்களில் அறியலாம்.

மேலும் பல நல்ல பதிவுகளைத்தரும் நண்பர்கள் எனது அடுத்த பதிவில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கையிடன் முடிக்கிறேன்.

கடைசியாக... நண்பர் செ.சரவணக்குமாரின் நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பூரண குணம் அடைய நாம் எல்லாம் இறைவனை பிரார்த்திப்போம்.


-'பரியன் வயல்' சே.குமார்

வெள்ளி, 5 மார்ச், 2010

மனசுக்குள் சில..!கடந்த ஒரு வாரகாலமாக கணிப்பொறி முன் அமரும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை இடிக்க ஆணை பிறப்பித்தாச்சு, மார்ச் 3ஆம் தேதி கடைசி நாள் என்றார்கள். நாங்களும் அறை தேடி அலுத்து கடைசி நேரம் பார்க்கலாம் என்று அசால்டாக இருந்து விட்டோம். (இன்னும் இரண்டு மாதம் நீடிக்கும் என்று ஒரு சிலர் சொன்ன வார்த்தைகளின் நப்பாசையால்..." மார்ச் ஒண்ணு நல்ல மழை.... அதனால எங்க பிளாட் மட்டும் மின்சாரம் கட்டாகியுள்ளது என்பதை அறியாமல் அலைந்து திரிந்து அதைவிட வசதிகள் குறைந்த அறையை அதிக வாடகைக்கு எடுத்தாச்சு.. இப்ப புதிய அறையில் வாசம்.. இன்னும் பல வேளைகள் பாக்கியிருக்கு... அதனால சில நாட்களுக்கு அடிக்கடி வலைப்பக்கம் வரமுடியாது அப்பப்ப வருவேன்... நண்பர்களுக்கு பின்னூட்டம் இட முடிந்த வரை முயற்சிக்கிறேன். இன்டர்நெட் இல்லைங்க அதான் பிராப்ளம்.
நித்திய ஆனந்தர் குறித்து பத்திரிக்கைகளிலும் வலைப்பக்கங்களிலும் பரபரப்பு செய்திகள். இத்தனை பரபரப்புக்கு காரணம் என்ன? யோசித்தால் காமம் அவ்வளவுதான். அவங்களும் மனிதர்கள்தான்... எதோ சில நல்ல கருத்துக்களை ஆன்மிகம் மூலமாக சொல்லும்போது நம்ம மக்கள் சாமி ஆக்கிவிடுகிறார்கள்... அவர்களும் பணம், புகழ் வந்ததும் காமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பிரபலம் ஒருத்தி மாட்டியதால் செய்தியாகும் காமசாமியிடம் எத்தனை முகம் அறியா பெண்கள் அழிந்திருப்பார்கள்... அவர்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கும்..? . ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை .ஏமாற்றுக்கரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... அன்று பிரேமானந்தா... இன்று நித்யானந்தா... இடையில் எத்தனை ஆனந்தாக்கள்...?
அவர்களை குற்றம் சொல்லும் நாம் முதலில் திருந்துவோம்... அவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றுவது நாம்தானே... இவர்கள் எல்லாம் நாலு நாளோ ஒருவாரமோ பரபரப்பின் மூலதனமாக இருப்பார்கள். அப்புறம் எதாவது அரசியல்வாதியோ அல்லது பணம் படைத்தவர்களோ தலையிட்டு ஒன்றும் இல்லாமல் பண்ணிவிடுவார்கள். அவ்வளவுதான்.
சில மாதங்களில் நம் மக்கள் அடுத்த ஆனந்தாவை நம்பி புறப்பட்டு விடுவார்கள். தெய்வத்தின் பெயரால் கேவலச்செயல் செய்யும் இவர்களை எல்லாம் தெருவில் நிறுத்தி சுட்டுக் கொள்ளவேண்டும்.எந்த நாயோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்... வலைப்பூவில் நல்ல விசயங்களை எழுதலாமே...?
நாக்கில் சனி பிடித்த நடிகர் விவேக் அவர்களே... நீங்கள் மேடையில் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் அப்போது இருந்த மனநிலையில் பலத்த கை தட்டு கிடைக்கும் என்று பேசினாயே... இப்போது உன் முகத்தை எங்கு வைப்பாய்... காசுக்காக முந்தி விரிப்பவர் யார் என்பது தெரியும்தானே... எதையும் நிதானித்துப் பேச கற்றுக்கொள்.
சரிங்க, நம்ம கதைக்கு வருவோம்... நண்பர் புலவன் புலிகேசி அவரோட வலைத்தளத்தில் எனது ஆசிரியர் என்ற சிறுகதை குறித்து எழுதியிருந்தார். அவருக்கு நன்றிகள் பல. அவருக்கு பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலர் வாழ்த்தியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றி. குறிப்பாக தோழி தேனம்மை என்னை ரொ...ம்...பபபபபபபபப... நல்லா எழுதுறவன்னு சொல்லியிருந்தாங்க... (உண்மையாகவா...?) அவருக்கு நன்றி
சில நாட்களுக்கு முன் அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக திருமதி. பி.சுசிலா அவர்களுக்கு பாராட்டு விழாவும் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் தலைமையில் விவாதமேடையும் நடத்தப்பட்டது. அது குறித்து 'அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே' என்ற தலைப்பில் வலையில் எழுதியிருந்தேன். அதை படித்த திரு. சுபான் அண்ணா அவர்கள் அந்த அமைப்பின் தலைவரிடம் சொல்லி அவரும் என்னிடம் பேசினார். நன்றாக இருந்தது என்று சொன்னார். அவருக்கு எனது நன்றி.
இன்று காலை எனக்கு வந்த mail பார்த்துக் கொண்டிருந்த போது நண்பர் சுபான் அண்ணா ஒரு forward mail அனுப்பியிருந்தார். அவரிடம் இருந்து அதிகம் mail வரும் அதில் ஒன்று என்ற நினைப்பில் கிளிக்கினால் திரு. டெல்லி கணேஷ் எனது கட்டுரை படித்து பாராட்டு அனுப்பியுள்ளார் (நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நிகழ்ச்சியை மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துது. Hats Off to u Kumar). அவருக்கு எனது நன்றிகள் பல. (எனக்கென்னவோ அந்த கட்டுரையில் திரு.டெல்லி கணேஷ் பற்றி அதிகம் எழுதவில்லை என்ற எண்ணம். இருந்து) அவரிடம் இருந்து பாராட்டு. எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல மேன்மக்கள் மேன் மக்களே..!

-'பரியன் வயல்' சே.குமார்