மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 54

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                           பகுதி-50       பகுதி-51    பகுதி-52

54.  என்ன செய்யலாம்?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் அவளின் அம்மாவிடம் பேசுவது என நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறான் ராம்கி.

இனி...


"என்னடா சொல்றே... எவன்டா உனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்தது?" அதிர்ச்சியோடு கேட்டான் சேகர்.

"ஏன்டா... இதுக்கு என்ன?"

"இருந்திருந்து அவளோட அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்றே... நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா?"

"புவியோட அப்பாக்கிட்டயோ அண்ணன்கிட்டயோ பேசுறதுக்குப் பதிலா அம்மாக்கிட்ட பேசினா சரியா வரும்ன்னு தோணுச்சு...."

"கேனத்தனமான யோசனை... இதுக்கு பொதுக்குழு கூடி முடிவெடுத்தீங்களாக்கும்... அவ அம்மாக்கிட்ட பேசி அவங்க ஒத்துக்கலைன்னா.... இல்ல புவனோட அப்பாக்கிட்ட சொன்னா என்னாகும் யோசிச்சியா?"

"எதுக்கும் அவங்ககிட்ட பேசிப் பாக்கலான்டா... சரி வரலைன்னா வேற முடிவு எடுக்கலாம்..."

"உன்னோட திட்டம் ஒண்ணத்துக்கும் உதவாத திட்டம்... இதனால பிரச்சினை வந்தா அது அயித்தைக்கு தெரிய வரும்... எல்லாப் பக்கமும் பிரச்சினையாகும் பாத்துக்க..."

"வேற என்னடா பண்றது... இதுதான் சரியின்னுபடுது..."

"இது சரியேயில்லைன்னு சொல்றேன்... சரியா வருங்கிறே... முதல்ல அவங்கதான் இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டவங்க... சரிதானே"

"ம்... ஆமா..."

"அப்புறம் அவங்ககிட்ட பேசி... சரியான முடிவா எடுக்கணும்டா... சும்மா அள்ளித் தெளிச்ச மாதிரி யோசிக்கக்கூடாது... ஒரு காரியத்துல இறங்கிட்டா வெற்றிதான் முக்கியம்..."

"என்ன வெற்றி... என்ன முக்கியம்.." என்றபடி அவர்கள் அருகில் வந்தாள் காவேரி.

"ஒண்ணுமில்ல போடி..." அதட்டினான் சேகர்.

"என்ன அந்தப்புள்ளையப் பத்திப் பேசுனீங்க... அப்புறம் ஒண்ணுமில்லேன்னா..."

"அது... அது வந்து..." வார்த்தைகளை முழுங்கினான் ராம்கி.

"என்னடா... இப்ப பிரச்சினை... எங்கிட்ட சொல்லு... நான் உனக்கு நல்ல பதிலாச் சொல்றேன்..."

"ஆமா இவுக ஐகோர்ட்டு ஜட்ஸ்... போடி அந்தப்பக்கம்..."

"இருடா... புவிக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைக்கிறாங்களாம்... அதை எப்படியாவது தடுக்கணும்..."

"ம்... அதுக்கு..."

"என்ன நொதுக்கு?" கடுப்பானான் சேகர்.

"புவியோட அம்மாக்கிட்ட பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்... மச்சான்கிட்ட சொன்னா சத்தம் போடுறான்..."

"அவ அம்மாக்கிட்டயா... கிழிஞ்சது கிருஷ்ணகிரி... ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள்ள ஒளிஞ்ச மாதிரியில்ல இருக்கு..."

"கெழவி மாதிரி பேசுறா பாரு..." 

"சும்மா இருடா... இப்ப என்ன பண்ணலாங்கிறீங்க... போட்டு குழப்புறீங்க..."

"குழப்பல்லாம் இல்ல... நீ போயி அவ அம்மாக்கிட்ட பேசு ஏழரை ஆகுறதுக்கு அவளையே படிக்கணும்மான்னு பேசச் சொல்லு... அதுல சரியா வருதான்னு பாக்கலாம். இல்லைன்னா உங்க ஐயாவை அவ வீட்டுல பேசச் சொல்லு... அதை விட்டுடுட்டு பேசுறேன்னு போயி காரியத்தைக் கெடுத்துறாதே..."

"இங்க பாருடா.... மாடு மேய்க்கப் போனாலும் அறிவாப் பேசுறா"

"ம்... இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பொலி எருதை மேய்க்கணுமில்ல... அறிவா இருந்தாத்தானே கதைக்கு ஆகும்... நாஞ்சொன்னபடி செஞ்சு பாரு... சரியா வரும்... வீணாவுல பிரச்சினையை ஏற்படுத்திக்காதே..." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"காவேரி சொல்றதுதான் சரியின்னு படுது...  புவனாவை பேசச் சொல்லு..."

"ம்... ஒரே குழப்பமா இருக்குடா... முடியலை... ஆமா எதுக்குடா எப்பப் பார்த்தாலும் அவகூட சண்டை போடுறே..."

"இதெல்லாம் ஒரு ஜாலி மச்சான்... அவ எதாவது சீரியஸா எடுத்துக்கிறாளா பாத்தியா... இது செல்லச் சண்டை.... அதைவிடு இப்போ புவனாவை எப்படியாவது அவ அம்மாகிட்ட பேசி அவங்க மனசை மாத்தச் சொல்லு....  எப்படி அவகிட்ட சொல்லுவே..."

"அதான் மல்லிகா இருக்காளே... அவகிட்ட சொன்னா பேசிருவா"

"ம்... முதல்ல செய்யி..."


"என்னடா சொல்றே... பிளான்ல மாற்றமா? அண்ணாக்கிட்ட சொன்னியா... அவன் கத்துவான்டா..." என்றான் சரவணன்.

"இன்னும் சொல்லலை... சேகர்கிட்ட சொன்னப்போ அவன்தான்டா புவியையே பேசச் சொன்னான்... இது நல்லதாத் தெரியுது.... அண்ணாக்கிட்ட சொன்ன கேட்டுப்பான்டா..."

"சரிதான்.... நீ பேசுனா ஒரு முடிவு கிடைக்கும்... அவ பேசினா ஏத்துப்பாங்களா?"

"பேசவிட்டுப் பாக்கலாம்... இல்லைன்னா ஐயாவை பேசச் சொல்வோம்... ஐயா சொன்னா அவ அப்பாம்மா கேட்டுப்பாங்கன்னு தோணுது..."

"ம்க்கும்... நீ வேற.... ஐயாவை மதிப்பானுங்களான்னே தெரியலை.... சரி பேசச் சொல்லு... அண்ணாக்கிட்ட நான் பேசிக்கிறேன்..."

"சரிடா... நான் மல்லிகாகிட்ட சொல்லி புவனாவுக்கு கூப்பிடச் சொல்றேன்..."

"எதுக்குடா சுத்தி வளைக்கிறே.... நீயே புவனா வீட்டுக்குப் போன் பண்ணு... அவங்க அம்மா எடுத்தா புவனாக்கிட்ட பேசணும்மான்னு சொல்லு... வேற யாரும் எடுத்தா கட் பண்ணிடு... சரியா..."

"ஓகேடா..." என்றபடி போனை வைத்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அம்மா மாடு மேய்க்கப் போனது ஒரு வகையில் நல்லதாகத் தெரிந்தது. வீட்டில் இருந்தால் புவனாவுடன் பேச முடியாமல் போகலாம். இந்த நேரத்தில் புவனாவின் அப்பா கடையில் இருப்பார். வைரவனும் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை... எப்படியும் புவனாவோடு பேசிவிடலாம் என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் மண்பானையில் இருந்த தண்ணீரை சொம்பில் மோந்து மடக் மடக்கென்று குடித்தான். குளிர்ச்சியாக இறங்கிய தண்ணீர் கொஞ்சம் படபடப்பைக் குறைத்து அவனை ஆசுவாசப்படுத்தியது.

போனை எடுத்து புவனா வீட்டு தொலைபேசி எண்ணைச் சுழற்றினான். 'வேறு யாராவது எடுத்தால்...' என்று நினைத்து கட் பண்ணினான். மீண்டும் யோசனைக்குப் பிறகு 'யார் எடுத்தா என்ன?' என நினைத்துக் கொண்டு மீண்டும்  நம்பரை டயல் செய்தான். எதிர்முனையில் ரிங்க் போய்க்கொண்டிருந்தது. ராம்கிக்கு படபடப்பாக இருந்தது.

"அலோ..." என்றது எதிர்முனை.

"அலோ...  புவனா இருக்காங்களா?" படபடப்பை அடக்கி தைரியமாகக் கேட்டான்.

"இருக்கா... நீங்க யாரு தம்பி... என்ன விஷயம்...?" என எதிர்முனை கேட்டதும் புவனாவின் அம்மாவின் குரல் என்பதைக் கண்டு கொண்டான்.

"நான் ராமகிருஷ்ணன் பேசுறேம்மா... அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...?" என்றவனுக்கு உடம்பு ஆட ஆரம்பித்தது.

"என்ன பேசணும்... எங்கிட்ட சொல்லுங்க... சொல்லிடுறேன்..."

"இல்ல அவங்ககிட்டதான் சொல்லணும்... கொஞ்சம் கூப்பிடுங்களேன் ப்ளீஸ்..."

"ம்... என்கிட்ட போன் பண்ணி அவளைக் கூப்பிடச் சொல்றியே உனக்கு எவ்வளவு தைரியம்?"

"அம்மா... கோபப்படாதீங்க... அவங்க மேல்படிப்பு விஷயமாப் பேசணும்... ப்ளீஸ்மா..."

"இங்க பாரு தம்பி... இனி போன் கீன் பண்ணாத... தெரிஞ்சதா.... அவ அப்பாக்கிட்ட சொன்னா புல் பூண்டு கூட முளைக்காமப் பண்ணிடுவாரு... அவ மேல படிக்கல... போதுமா..."

"அம்...." எதிர்முனை டக்கென்று போனை வைத்துவிட ராம்கிக்கு டென்ஷன் ஏறியது. சே... எதையும் கேட்க்கக்கூட மாட்டேங்கிறாங்களே... என்ன மனிதர்கள் இவர்கள்... சாதியும் மதமும்தான் இவர்களுக்குத் தெய்வமா... சொல்வதைக் கேட்கக்கூட இவர்களுக்கு முடியவில்லையா... காதல் தவறு என்பதற்காக அவளின் படிப்பில் மண் விழ வேண்டுமா என்ன... என்று கோபம் கோபமாக வந்தது. நீண்ட யோசனைக்குப் பின்னர் மீண்டும் அதே நம்பரை ரீடயல் செய்தான். ரிங்க் போய்க்கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ம்............ரணகளம் ஆரம்பம்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே
அருமை

தனிமரம் சொன்னது…

கோபக்கணல் நிஜம் தாயிடம்!ம்ம் தொடர்கின்றேன்.