மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2017

நாளைய விடியல் நமதாகட்டும்...

சிறு விதை மிகப்பெரிய அறப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது தமிழனாய் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். கடலலை போல் மக்கள் வெள்ளம்... எங்கு நோக்கினாலும் 'சல்லிக்கட்டு வேண்டும்' என்ற குரல்கள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கிப் போராடுவது சல்லிக்கட்டுக்காக மட்டும் என்று நினைத்தால் நினைப்பவருக்கு ஏமாற்றமே... இந்தப் போராட்டம் வைக்கும் தீ இனி தமிழினத்துக்கு எதிராக எது வந்தாலும் பற்றி எரியும் என்பதில் மாற்றமில்லை.

Image result for மெரினா போராட்டம்

தொடரும் அறப்போராட்டத்தில் சில இடங்களில் டவர்களிலும் கட்டிடங்களும் ஏறி 'சல்லிக்கட்டுக்கான தடையை உடை...' என்று தற்கொலை முயற்சியில் இறங்க முயல்கிறார்கள்... அப்படி நினைக்காதீர்கள். உயிரை விடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... நம் உரிமை... நம் பண்பாடு... நம் கலாச்சாரம்... என்பதில் உறுதியாய் இருங்கள்... உங்கள் உயிரை இழந்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்பதில்லை.... உங்கள் உயிரைக் கொடுத்து உரிமையைப் பெற நினைத்து பெற்றவர்களை தவிக்க விட்டுச் செல்லாதீர்கள். போராட்டம் என்பது உயிரினை வைத்து அல்ல... நம் உணர்வை வைத்துத்தான் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அறப்போராட்டத்தின் வேகத்தைத் தடுத்து வேறு பாதையில் பயணிக்க வைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நம் அறப்போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும். 

எம்.ஜி.ஆர். மீது நமக்கும் பற்றுண்டு... அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடக்க வேண்டும்தான்.... அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதான்... இருந்தாலும் தமிழகமே இரண்டு நாட்களாக தெருவில் கிடக்க, ஒரு அரசுக்கு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு... மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வோட்டு வாங்கி அரசமைத்த மறைந்த முதல்வரின் அன்புக்குப் பாத்தியமான நம் முதல்வர் மக்களுக்காக நான் என்பதை மறந்து தன் பதவியைக் காத்துக் கொள்ள, சின்னம்மா காலில் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, உரிமைக்காக மக்கள் போராடும் போது ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மக்களுக்கான முதல்வராக இருப்பார். போராட்டக் களத்துக்கு வரமுடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை... இன்று தில்லி செல்கிறேன்... உரிமை மீட்டு வருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது...? அதைவிடக் கொடுமை தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பல நாள் போராட்டத்துக்குப் பின் இன்று சொல்வது நகைப்புக்குரியதுதானே... இதில் என்ன உணர்வு இருக்கிறது...?

நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்... மக்களுக்கு ஆதரவா இருப்போம் என்று சொன்ன எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் எங்கள் பண்பாட்டுக்கு... எங்கள் உணர்வுக்கு... எங்கள் உரிமைக்கு மதிப்பில்லாத நாட்டில் எனக்கெதற்கு பதவியும் பவுசும் என்று சொல்லி ராஜினாமா செய்து விட்டு வந்து மக்களோடு மக்களாக உரிமை மீட்க உட்கார முடியலை... எனக்கு பதவி வேண்டும்... பணம் வேண்டும்... என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் இருந்து தெரியவில்லையா அவர்களுக்கு பண்பாடும் உரிமையும் தேவையில்லை... பணமும் பகட்டும்தான் தேவை என்பது. இதற்குத்தான் அலங்காநல்லூரில் இன்று மதியம் வைத்தான் ஆப்பு... இன்று அவசர சட்டம் போடு... இல்லையேல் எல்லாரும் ராஜினாமா பண்ணுன்னு வாடிவாசல்ல வச்சி வச்சான் ஆப்பு... நம்ம ஆட்கள் பண்ணுவானுங்க... ஒரு பய வாடி வாசல் பக்கம் போகமாட்டானுங்க... மக்கள் நல்ல யோசிக்கிறாங்க. இந்த வேகம்... இந்த விவேகம் இனி எல்லாத்திலும் தொடரணும்.

நடிகர்களில் சிலர் உண்மையிலேயே இன உணர்வோடு போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்.... ஆனால் இருபதாம் தேதி போராட்டம் பண்றோம்ன்னு அறிக்கை விடும் நடிகர்கள் இதுவரை வாய் திறக்காமல் இப்போதுதான் வாய் திறக்கிறார்கள்... காரணம் அவர்களின் படம் ஓடவேண்டுமே... பொழப்பு நடக்கணுமே... என்பதால்தான்... இன்று நியூஸ்-7 தொலைக்காட்சியில் பேசிய  இயக்குநர் பாண்டிராஜிடம் அரசியல்வாதிகளை ஏற்காத மக்கள் திரையுலகினரை ஏற்கின்றனரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, எங்காளுக பலரை விரட்டிட்டாங்க.. அவங்களுக்கு இவன் உண்மையோட வர்றான்... இவன் பேர் வாங்க வர்றான் தெரியுங்க... என்றார். என்னங்க நீங்களே இப்படிச் சொல்றீங்க என்றபோது அதுதாங்க உண்மை... நான் கூட இங்க இயக்குநர் பாண்டிராஜாவாக வரச் சொன்னால் வந்திருக்கமாட்டேன்.... விவசாயி பாண்டிராஜாத்தான் வந்திருக்கிறேன்... அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றார். அதுதான் உண்மை... அவரின் பேச்சில் கலப்படம் இல்லை. அதேபோல் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், போன்றவர்களின் நெஞ்சத்தில் போராட்ட குணமிருக்கு...  தன்மான உணர்வோடு பேசுகிறார்கள்... ஆனால் விஜய், விஷால், தனுஷ் என சிலரோ இப்போது வேகவேகமாக ஆதரவுக்கரம் நீட்டுவது எதற்கு என்பதை பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகளின் மூலம் அறியலாம் அல்லவா..?

Image result for சல்லிக்கட்டு போராட்டம்

போராட்டக்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகள் சாட்டையடி... சல்லிக்கட்டுப் பிரச்சினை என்றில்லை... எந்த ஒரு பிரச்சினைக்கும் இப்படி ஒரு அறப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை உணர வைத்த போராட்டம் இது. எத்தனை தில்லாலங்கடி வேலைகள்... மூன்று நாட்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஆங்காங்கே தடியடி நடத்தச் சொல்லி விட்டு இன்று உங்கள் போராட்டத்தில் நாங்களும் கை கொடுப்போம்... உங்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போது ஆதரவுக் கரம் நீட்டும் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு நல்லவன் போல் நடிப்பதை என்ன சொல்வது..? பிரதமருக்குத்தான் தமிழகம் இருப்பது தெரியவில்லை... முதல்வருக்கு தமிழகத்தில் இருப்பதே தெரியவில்லை போலும்... எங்கள் களத்துக்கு வாருங்கள் என்று மெரினாவுக்குத்தானே கூப்பிட்டார்கள்... அலங்காநல்லூருக்கு இல்லையே... அப்படியிருந்தும் அவரால் போராட்டக்களம் செல்ல முடியவில்லை என்பது கேவலமானது. தன் இனம் போராடும் போது மற்ற நாட்டில் மக்கள், தலைவர்கள்... இங்கு வந்து கிரிக்கெட் மட்டும் விளையாடிச் செல்லும் வீரர்கள் உரிமையோடு குரல் கொடுக்கும் போது இவரால் செல்ல இயலவில்லை... உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டாம்... உணர்வுக்கு மதிப்பளிக்கலாமே... அப்படி மதிப்பளித்து இருந்தால் இன்று போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னதும் அவனவன் கிளம்பியிருப்பானே... இப்ப என்ன சொல்றான் நீ செய்யி நான் கிளம்புறேன்னு இன்னும்  தீவிரமாக்கிவிட்டான் போராட்டத்தை.

அடிக்கடி சொல்வதுதான் நம் போராட்டம் அறப்போராட்டம்... தற்கொலை முயற்சிகளை...வீண் விவாதங்களை முன்னெடுக்காதீர்கள்... அரசியல்வாதிகளை அண்ட விடாதீர்கள்... சினிமாக்காரனை தரம் பிரியுங்கள்... தனக்கான பெயரை தக்க வைக்க வரும் எவனையும் உள்ளே விடாதீர்கள்... குளிரில் கொசுக்கடியில் கைக்குழந்தைகளுடன் கிடக்கும் தாய்மார்களைப் போல்... கல்லூரி மாணவ மாணவிகளைப் போல்... இளைஞர்களைப் போல்... இளைஞிகளைப் போல்... பெரியவர்களைப் போல்... எந்தப் பிரபலத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடக்கமுடியாது என்பதை உணருங்கள். இது தானாக சேர்ந்த கூட்டம் முன்னெடுத்த... உலகையே வியக்க வைத்த மாபெரும் போராட்டம்... இதை அரசியல்வாதிகள் கூத்தாடிகள் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.

போராட்டக்களத்தில் இன்னும் இன்னுமாய் நம் சொந்தங்கள் கூடிக்கொண்டுதான் இருப்பார்கள்... ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை... உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கப் போன ஆயிரத்தில் ஒருவன் நல்ல முடிவோடு வரும்வரை யாருக்கும் அடிபணியாதீர்கள்... அராஜகத்தை கையில் எடுக்காதீர்கள்... போராட்டக்களம் உலகை வியக்கச் செய்யட்டும்.. நம்மில் விலகி நின்று கைகொட்டிச் சிரிக்கும் நம் தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழுணர்வை விதைத்துச் செல்லட்டும்...

நாளைய விடியல் நம்பிக்கையான விடியலாய்... நமக்கான உரிமையை... உணர்வை மீட்ட விடியலாய் அமையட்டும்...
-'பரிவை' சே.குமார்.

திமிலில் துள்ளும் வீரம்


ல்லிக்கட்டுக்கான போராட்டம் பல நாட்களாகத் தொடர்ந்தாலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே சல்லிக்கட்டுகள் தடையை மீறி நடத்தப்பட்டன. இது பீட்டாவுக்கு செருப்படிதான் என்றாலும் நம் கலாச்சார, பண்பாட்டின் அடையாளத்தை யாரோ ஒருவருக்காக பயந்து பயந்து ஒளிந்து ஓடி நடத்தியதில் மானத் தமிழனாய் மார்தட்டிக் கொள்ள முடியவில்லை. எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்... நாங்கள் ஏன் அவர்களுக்குப் பயப்படணும்... அடங்கிப் போகணும்... என அலங்காநல்லூர் வாடிவாசலில் திங்களன்று கூடிய சிறு கூட்டத்தின் மீது போலீஸ் தடியடி நடத்தி தொடங்கி வைக்க, மாணவர்கள் விதைத்த விதை நேற்று வேர்விட்டு இன்று விருட்சமாக வளர்ந்து தமிழகமெங்கும் வேள்வித் தீயில் தகித்துக் கொண்டிருக்கிறது.

வன்முறை சிறிதும் கலக்காமல் மிகவும் அமைதியாக அறவழிப் போராட்டத்தைக் கையில் எடுத்த மாணவர்கள், மாலை ஐந்து மணிக்கு மேல் கேட்டதெல்லாம் இரண்டு வருடமாக வாடிவாசலில் மாடு விடப்படலை... ஐந்து மாடுகளை மட்டும் அதன் மூலம் அவிழ்த்து மட்டும் விடுங்கள் போதும் என்றார்கள். மேலும் நேரம் செல்லச் செல்ல இரண்டே இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியாக பிடித்து வந்தால் போதும் என்றார்கள். எதற்கும் அசையாத போலீஸ்... அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை... ஆளுபவன் சொல்வதைச் செய்ய வேண்டியது அவர்களின் வேலை... தலையெழுத்து... தமிழுணர்வு உள்ளவன் எல்லாம் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை என்ன செய்வான்..? ஆளும் அரசில் யார் முதல்வர் என்ற போட்டியோடு, மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு கர்நாடகக்காரன் காவிரியில்  நீதியை மதிக்க மாட்டான்... கேரளக்காரன் முல்லைப் பெரியாரில் நீதியை மதிக்கமாட்டான்... ஆனால் நாங்கள் மட்டும் நீதியை மதிப்போம்... ஏனென்றால் எங்களுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கே என்று செத்துக் கிடக்கும் அரசு எதையும் செவி சாய்க்கவில்லை.

போராட்டக் களத்தில் இருந்தவர்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு போகச் சொன்ன அரசு, மாணவர்கள் கையில் எடுத்த பிரச்சினை எப்படிப் பரவும் என்பதை அறியாமலா இருந்திருக்கும். என்ன செய்யப் போகிறார்கள்... நாம் ஊமையாய் இருப்போம்... புரட்சித் தலைவர் நூற்றாண்டில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்ப்போம் என சென்று விட்டார் வேலைக்காரி காலில் விழும் முதல்வர்... இவர் பேசுவதில் தனியொருவன்... செயலில் ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை என்பதை நாம் அறிவோமே... நேற்றுக் கைதான மாணவர்களை விடச் சொல்லி மெல்ல மெல்ல மெரினாவில் கூடிய மாணவர்களுக்கு ஆதரவாய் தமிழகமே திரள, எல்லா இடமும் போராட்டகளம் ஆனது. எங்கள் உரிமையை மீட்டெடுத்துத் தாறேன் என்று சொல்லுங்கள் என்ற கோரிக்கையை கேட்க நாதியில்லை... நம் நாதியற்ற தமிழகத்தில்....இந்த அறப்போராட்டம் இன்னும் வீரியம் எடுக்கக் கூடாது என்பதற்கான முயற்சியில் அரசும் அதிகாரிகளும்... இந்த வீரியத்தை கட்டுக்குள் வைக்க விடமாட்டோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் ஏன் குழந்தைகளும் வீதியில்...

பொங்கல் வரை நீங்க நடத்துங்க நாங்க இருக்கோம் என்றவனெல்லாம் திங்களன்று வெளியில் வரவில்லை... நான் மத்திய அமைச்சர்... நான் போராட்ட களத்துக்கு வரமுடியாது என்கிறான் ஒருவன்... பீட்டாவுக்கு அனுமதி அளித்து பணம் பண்ணிக் கொண்டவன் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நடத்துவோம் என்கிறான்... நாங்கள்தான் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்கிறாள் ஒருத்தி... இப்படிப் பேசும் இவர்கள் எல்லாம் எங்கள் பாரம்பரியம் காக்கப்படவேண்டும்... நாங்களும் போராட்டக் களத்தில் இருப்போம்... எங்களுக்கு இந்த எம்.பி., எம்.எல்.ஏ பதவியெல்லாம் வேண்டாம்... நான் தமிழன் என்று எவனும் இதுவரை இறங்கி வரவில்லையே... இவனுக எல்லாம் மக்கள் பிரதிநிதியாம்... கேட்டால் பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டீர்கள் என்கிறார்கள்... அவன் சொல்வதும் சரிதானே... நம் தலையில் நாம்தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

மாணவர் பிரச்சினையில் தாங்களும் ஆதரவு அளிப்பது போல் உள் நுழைந்து தங்கள் பதவியையும் பவுசையும் தக்க வைத்துக் கொள்வோம் என்ற மனப்பால் குடித்து வந்த ஸ்டாலின், சரத்குமார் போன்றோரை இது மாணவர்களின் போராட்டக்களம்.... இங்கு நுழைந்து அரசியல் களம் ஆக்காதீர்கள்... உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று சொன்ன என் தமிழ் இளைஞனை... என் சொந்தத்தை... என் இன ரத்தத்தின் திமிலை... திணவெடுக்கும் திமிரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு போராட்டம் தொடரும் வரை இருக்கட்டும். எந்த பச்சோந்தியையும் நமக்குள் நுழைய விடாதீர்கள். இங்கு அவர்களுக்கு ஆதரவில்லை அங்கு ஆதரவுண்டு என்ற நிலைப்பாட்டுக்கு வராதீர்கள்... எல்லா இடத்திலும் அரசியல்வாதி, பிரபலங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்... அலங்காநல்லூரில் அனுமதி... மெரினாவில் மறுப்பு என்பதையும் அரசியலாக்குகிறார்கள் சில முகநூல் நண்பர்கள். நமக்கு நாம்தான் எதிரி என்பதை உணருங்கள்... தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முன்னெடுப்புக்களை வையுங்கள். இன்று ஆடு நனையுதேன்னு வருத்தப்படும் பச்சோந்திகள் நம்மை வைத்து தன்னைக் குளிர்வித்துக் கொள்ள நாடகம் போடுகிறது. விடாதே தமிழா.

நான் ஆதரவு... நான் எங்கே எதிர்த்தேன்... தமிழுணர்வு என்னக்குள்ளும் இருக்கு... என்று நேற்று போட்டி போட்டி பேட்டி கொடுத்த நடிகனின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்து விடாதே என் தமிழா... அவனெல்லாம் இவ்வளவு தூரம் வரும் என்று நினைக்கவில்லை... பீட்டாவுக்கு ஆதரவு என்பது என் சொந்த நிலைப்பாடு... சல்லிக்கட்டு என்று வரும்போது நான் பீட்டா இல்லை என பீலா விடுகிறான்... பீட்டாவை விட்டு வெளியேறிவிட்டேன் என எந்த நாயும்.. மன்னிக்கவும் நாய் நன்றியுள்ள விலங்குதானே... இவனுகளுக்கு தேவை பணம்... அவன் படம் வரும்போது கட் அவுட் வைக்கவும் பாலாபிஷேகம் பண்ணவும் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்துப் பார்க்கவும் மட்டுமே நாம் வேண்டும்... இந்தப் போராட்டம் தொடர்ந்து எழுச்சி பெற்றால் நம்ம பொழப்பு நாறிப் போயிரும் என்பதால் இப்போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஆதரவு என அள்ளிவிடுகிறார்கள்... நம்பி விடாதீர்கள்... அரசியல்வாதிகளை தள்ளி வைத்தது போல் இவர்களின் கரங்களையும் தட்டிவிடுங்கள்... பீட்டாவை எதிர்க்கிறோம் என்று சொல்லும் இவர்கள் இதுவரை தங்கள் உறுப்பினர் அட்டையைத் தூக்கி எரியலையே.. பின்ன என்ன எதிர்ப்பு...  நம் உரிமை... நமக்கான போராட்டம்... எவன் தயவும் நமக்கு வேண்டாம்... நாம் நாமாகவே போராடுவோம்.

கரண்டை நிறுத்துவது... மிரட்டுவது.... அடிப்போம் எனச் சொல்வது இதெல்லாம் மிரட்டி நம்மைப் பணிய வைக்கச் செய்யும் முயற்சிகள். நாம் இனமானத்தோடு சாதி, மதம் துறந்த தமிழர்கள்... எதையும் எதிர்க்கொள்வோம். துணை ராணுவம் வருகிறது என்கிறார்கள்...தஞ்சாவூர் பகுதி போலீசாரெல்லாம் சென்னை வரவேண்டும் என்ற செய்தியெல்லாம் பரவிவருகிறது... இதையெல்லாம் செய்ய முடிந்த அரசு, மாணவர் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு அவசர சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசை கேட்க முடியாதா என்ன...? வழக்கு நீதி மன்றத்தில் இருந்தால் என்ன... ஒரு இனமே போராடும் போது அதன் தலைமையும் அந்த மாநிலத்தின் மீடியாக்களும்...(நியூஸ் 7 நீங்கலாக) மௌனம் சாதிப்பது எதற்காக,,,? யாருக்காக...? விஜயகாந்த் துப்பியதில் தவறேயில்லை...

முதல்வர் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சொல்கிறார்... முதல்வர் என்ன கோமாவிலா இருக்கிறார்... இல்லை சின்னம்மா காலில் விழுந்து அறிக்கை விடலாமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா...? வெட்கக்கேடு. மாணவர்களை விடுவித்து விட்டோம் என போலீசார் சொல்வதையும் நம்பாதீர்கள். அந்த மாணவர்கள் வந்தால் மட்டுமே உறுதி செய்யுங்கள். அமைச்சர்களை தேடிச் செல்லாதீர்கள்... அவர்கள் நம்மைத் தேடி வரச் செய்யுங்கள்.

தேசியக்கொடியை எரிப்போம்... இந்தியாவை வெறுப்போம் என்பதெல்லாம் வேண்டாம்... இதுபோல் நம் போராட்டம் திசை திருப்பப்படுமானால் அது தமிழ்த் தீவிரவாதிகள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும்... இது நம் பண்பாடு, பாரம்பரியம் காக்க அறவழிப் போராட்டம் இதை இந்த வழியிலேயே நகர்த்தி வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் வரும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு கருப்பு தினமாக  அனுசரிப்போம், அப்போது தெரியும் தமிழன் யார் என்பது.. அதுவரை அறவழிப் போராட்டத்தை அறவழியிலேயே கொண்டு செல்வோம்.

அரசியல்வாதிகளை நம்மோடு அமர விட வேண்டாம்...

நடிகனை நமக்காக குரல் கொடுக்கச் சொல்ல வேண்டாம்...

தேசியக் கொடியை அவமதிக்க வேண்டாம்...

அமைச்சர்களிடம் பேசுகிறோம் என்று அவர்களை நாடிச் செல்லாதீர்கள்...

யாராகினும் பொதுவெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.

நாம் வீரத்தமிழர் பரம்பரை என்பதை இந்த வீரியமிகு போராட்டத்தில் காட்டுவோம்...

மறத்தமிழன் மட்டுமல்ல... மானத் தமிழன்... வீரத்தமிழன்... உலகையே ஆண்ட வெற்றித் தமிழன் நாங்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்போம்.

மாட்டை துன்புறுத்துபவன் நாங்கள் அல்ல... எங்கள் வீட்டுச் செல்லங்களின் திமிலைத் தடவி ஏறு தழுவுதல் நடத்துபவர்களே நாங்கள் என்பதை நிரூபிப்போம்.

சிங்கத்தை அடக்கி ஆண்ட பரம்பரைதான் நாங்கள் என்பது இப்போராட்டத்தில் நிரூபிப்போம்...

தமிழனின் போராட்டம் வெல்லட்டும்... நம் பாரம்பரியம் காக்கப்படட்டும்... இந்த விதை சல்லிக்கட்டோடு மட்டும் நிற்காமல் விவசாயிகள் சாவு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை ஒழித்தல், நதிநீர் பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் வேர் விடட்டும்...

-'பரிவை' சே,குமார்.

தற்போதைய சூழல் தமிழனுக்கான குரல் கொடுக்கும் நேரம் என்பதால் இந்த வாரம் போட வேண்டிய 'என்னைப் பற்றி நான்' வெள்ளி அல்லது சனியில் பதியப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 6 டிசம்பர், 2010

தமிழன் என்று சொல்லடா..!



"தமிழன் என்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா..!!"

நாங்கள் தமிழர்கள்... நாங்கள் வாழ்வதைவிட பலரை வாழ வைப்பவர்கள்... என்றுமே நாங்கள் உயரத்தில் இருக்க ஆசைப்பட்டதில்லை... உயரத்துக்கு கொண்டு செல்லும் ஏணியாய்த்தான் இருந்திருக்கிறோம்... இன்னும் இருப்போம்...

எங்கள் சாதனைகளை... மன்னிக்கவும் நாங்கள் எதையும் சாதித்ததில்லை அப்புறம் எப்படி சாதனைகள் என்று வரும். அதனால்... எங்கள் செய்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.... எனவே சற்றே உரக்கச் சொல்லுங்கள்...

"தமிழன் என்று சொல்லடா..."


* எங்கிருந்து வந்தார்கள் என்று நாங்கள் யோசிப்பதே இல்லை... அவர்களை வாழ வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே எங்கள் வாடிக்கை...

* ஐயாவின் குடும்பம் ஆனந்தமாய் ஆள அடிப்பொடிகளாய் கொடிபிடித்து கோட்டைக்கு வெளியே கோவணத்துடன் பிரியாணி சாப்பிடும் பிரியமானவர்கள் நாங்கள்.

* அம்மா கொடநாடு போனால் என்ன கொலரடோ போனால் என்ன எப்போது வந்து எழுதி வைத்து படித்தாலும் மொட்டை வெயிலில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளாய் பாடம் கேட்கும் பாசக்காரர்கள் நாங்கள்.

* இலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல் நடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்.

* அம்பேத்கர் என்ற திரைப்படம் வந்ததா என்று வாய் பிளக்கும் நாங்கள் எந்திரன்களின் வெள்ளிவிழாவில் அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்கள் நாங்கள்.

* கோவிலுக்குப் போக நினைக்காதவர்கள்... ஆனால், குஷ்புவின் பெரிய மனசுக்காக கோவில் கட்டிய கொத்தனார்கள் நாங்கள்.

* பெற்றோரை எண்ணிப் பார்க்க நேரமின்றி நடிகனை காண காத்திருந்து அவன் பின்னே ஓடி உயிரைக் கொடுக்கும் வள்ளல்கள் நாங்கள்.

* கேரளத்து சேட்டன்களையும் பைங்கிளிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாயுள்ளம் கொண்டவர்கள் நாங்கள்.

* தமிழன் கிறுக்கன் என்று சொன்னாலும் சிரித்துக் கொண்டே சொன்னவனை தூக்கி ஆடும் பரமாத்மாக்கள் நாங்கள்.

* கோடிகள் செலவழித்து சோறு போட்டால் யார் வீட்டுக் காசு என்று யோசிக்காமல் இன்னும் கொஞ்சம் ரசம் என்று கட்டுபவர்கள் நாங்கள்.

* ஊழல் செய்தவனை சாதியின் பெயரால் காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தில் குந்தி அமர்ந்து குதிப்பவர்கள் நாங்கள்.

* காவிரித் தண்ணீருக்காக ஐயா எழுதும் கடிதமும் அதற்குப்பின் முரசொலி கவிதையும் கண்டு சந்தோஷத்தில் கூத்தாடும் கூத்தாடிகள் நாங்கள்.

* காவிரி பிரச்சினையை வருண பகவான் தீர்த்தாலும் கடித்தத்தின் பலனால் தண்ணீர் திறக்கப்பட்டது என்றால் அடைமழையிலும் குடை மறந்து கை தட்டுபவர்கள் நாங்கள்.

* பாஸ்மார்க் வாங்கவில்லை என்றாலும் டாஸ்மாக் விடுமுறை என்றால் சந்துக்குள் சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் வல்லவர்கள் நாங்கள்.

* சிம்ரனின் இடையில் சிலகாலம்... தமன்னாவின் நடையில் சிலகாலம்... என காலத்தை கழிக்கும் கயவர்கள்... மன்னிக்கவும் கவிஞர்கள் நாங்கள்.

* குடும்பத்தை நினைக்க நேரமில்லாமல் மாதவனை மேடியாகவும் சிம்புவை சொம்புவாகவும் சுமப்பவர்கள் நாங்கள்.

* காசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி... மன்னிக்கவும்... மறுக்கா தப்பா டைப்பிட்டேன்... உலகமகா உத்தமர்கள் நாங்கள்.

* பக்கத்து வீட்டுக்காரருடன் நட்புறவு என்றால் என்ன என்று தெரியாத போதிலும் ஓபமா, மன்மோகன் நட்பு குறித்து ஓசி டீயில் ஒரு மணி நேரம் விவாதிப்பவர்கள் நாங்கள்.

* ஹாக்கியை நோக்காமல் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாய் ஆக்கிய பெருமையில் அதிக பங்குதார்கள் நாங்கள்.

* எவனுக்காகவோ இறக்கும் இளைஞனுக்கு அவன் கொடுக்கும் பிச்சைக்காசை நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் பொதுச்சுவர் நாங்கள்...




'எம் பெருமை இம்புட்டுத்தான்... எங்கப்பன் பெருமை கப்பல்ல வருது' அப்படின்னு எங்கள் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். அதெற்கெல்லாம் நேரமில்லை... வள்ளுவர் சிலைக்குப் பக்கத்தில் அனுஷ்காவிற்கு சிலை வைப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கு வருகை தர தானே முன்வந்து ஒத்துக் கொண்ட தானைத் தலைவர் தமிழகத்தின் நிரந்தர.... அவரிடம் விழா நிகழ்வில் பாராட்டு விழா ஒன்றை இணைப்பது குறித்து பேசவும் வேலையிருப்பதால் தமிழர்களின் சார்பாக சிறு குழுவை தலைமை ஏற்று அழைத்துச் செல்ல இருப்பதால் விடை பெறுகிறேன்....

அட அங்க யாருப்பா... அதுகுள்ள நோட்டீஸை எடுத்துக்கிட்டு அடை மழையில ஒட்டப் போறது.... மழை விடட்டுமப்பா... பாசக்கார பயபுள்ளங்க.... என்னைக்குத்தான் திருந்தப் போகுதே தெரியலை...

அப்ப வரட்டுங்களா....? தேர்தலப்போ பணம் வாங்க பக்கத்து பக்கத்துல நிக்கிற மாதிரி இருந்தா மத்ததை பேசிக்கலாம்... மறுக்கா ஒரு தடவை எல்லாரும் சத்தமா சொல்லுங்க...

"தமிழன் என்று சொல்லடா.... தலை குனி..."

அட யாருப்பா பாட்டை மாத்துறது... தேசிய கீதம் பாடும் போது தெரியலைன்னா வாய மட்டும் தொறந்து வச்சிருக்க மாதிரி நில்லுப்பா... மத்த ஆளுங்க கரெக்டா சொல்லுங்க...

நேரமாச்சி... ஐயா... அனுஷ்கா வூட்டுக்கு வேற போகனுமின்னாரு மறந்துட்டேன்... குவாட்டா... என்ன எளவு இது அடிக்கடி மன்னிக்க போட வைக்கிது... வரட்டாடாடா.....


-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி