மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 22

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

22. நண்பர்கள் சங்கமம்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள். ராம்கியும் அவளைக் காதலிக்கிறான்.

இனி...


"என்னடா ரெண்டு மூணு நாளா எங்க கூட வரலை... எங்க போறே..?" கடுப்பாகக் கேட்டான் அண்ணாத்துரை.

"ஐயா வீட்ல கொஞ்சம் புக் ஒர்க் இருக்குது... அதான் காலேஸ் முடிஞ்சதும் அங்க போயிடுவேன்..."

"நீ புக் ஒர்க்குக்குப் போற மாதிரி தெரியலையே... உனக்கிட்ட என்னமோ மாற்றம் வந்திருக்க மாதிரி தெரியுது... என்னடா விஷயம்?" சரவணன் கொக்கி போட்டான்.

"ஒண்ணுமில்லேடா... உங்களுக்குத் தெரியாம என்னடா பண்ணப் போறேன்."

"டேய் அறிவு, இவரு நமக்குத் தெரியாம எதுவுமே பண்ண மாட்டாராம்... கேட்டியா..."

"நடிக்கிறான்டா... முன்னெல்லாம் லீவு நாள்ன்னா மாடு மேய்க்கப் போகணுன்டா... இன்னைக்கு ஒரு நாளாச்சும் அக்கா, அம்மாவுக்கு ரெஸ்ட் கிடைக்குமேன்னு சொல்லுவான். ஆனா லீவு நாளெல்லாம் ஐயா வீடுதானாம்... எங்க கிளாஸ் சண்முகம் அதே காம்பவுண்ட்டுக்குள்ளதான் இருக்கான். என்னடா உன்னோட பிரண்ட் ராம்கி எப்பவும் ஐயா வீட்லதான் இருக்கான்னு எனக்கிட்ட கேட்கிறான்... "

"அதான் புக் ஒர்க்குன்னு சொன்னேனே... அப்புறம் என்னடா... சரி இந்த சண்டே படத்துக்குப் போவோமாடா..."

"பேச்சை மாத்தாதே... எப்பவும் நீங்க ரெண்டு பேர்தான் ஐயா வீட்டுக்குப் போறீங்களாம்..." பழனி எகிறினான்.

"யார் ரெண்டு பேரும்..?"

"டேய் நடிகாதேடா... நீ என்ன பண்ணினாலும் எங்களுக்குத் தெரிஞ்சிடும்... உண்மையைச் சொல்லு... அவளும் நீயும் ஐயா வீட்டுல உக்காந்து அப்படி என்ன பேசுவீங்க... இங்க பேசுறது பத்தாதுன்னு..." சரவணன் மண்டையில் தட்டியபடி கேட்டான்.

"டேய் அய்யா வீட்ல புக் ஒர்க் அவருக்கு ரொம்ப நெருக்கமான எல்லாரும் பண்ணிக் கொடுக்கிறோம்... அதுக்காக அந்தப் பொண்ணும் வரும் ஐயா, அம்மா எங்ககூட இருப்பாங்க... நாங்க என்ன தனியாப் பேசப் போறோம்... அப்படி பேசுறதுக்கு என்ன இருக்கு... எனக்கு அவங்க ஒரு பிரண்ட் அவ்வளவுதான்... போதுமா... விட்டுத் தொலைங்கடா..."

"காதலில் விழுந்தவனுக்குத்தான்டா கோபம் வரும்... எங்ககிட்ட மறைக்கிறியா... என்னைக்கா இருந்தாலும் சந்திக்கு வந்துதான் ஆகும். புரிஞ்சுக்க..." என்றான் அண்ணாத்துரை.

"நம்ம பிரண்ட்ஷிப்புக்குள்ள புவனா ஒரு கேள்விக்குறியா வந்துட்டாளே..." என்ற சேவியர், "வர வர பிரண்ட்ஷிப் கசக்குதய்யா... மனம்தான் புவனா... புவனான்னு புலம்புதய்யா..." என்று பாட ஆரம்பித்தான்.

"அடேய்... ஏன்டா... இப்ப உங்களுக்கு என்ன வேணும்? உங்களுக்குத் தெரியாம ஒண்ணும் இல்ல போதுமா... இப்ப மல்லிகாகிட்ட சிரிச்சுப் பேசுறேன் அதுக்காக அவளைக் காதலிக்கிறேன்னு அர்த்தமா? கதை, கவிதையின்னு இலக்கியம் பேசுவாங்க... எனக்கு பிடிச்சிருக்கு... அவங்ககிட்ட திறமை இருக்கு... அதை மதிக்கிறேன்... அதுக்காக காதல் அது இதுன்னு ஏன்டா சும்மா.... வாங்க போகலாம்..."

"ஓகே... நம்பிட்டோம்... போகப்போகத் தெரியும்... வாங்கடா போகலாம்..."

அவர்கள் நடந்து செல்லும் போது மரத்தடியில் இளங்கோ மற்றும் அவனது நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் " மாப்ளே... வைரவனைப் போடப்போன நம்ம ஆளுங்களை அடிச்சவன் நடுவுல சைக்கிள்ல வர்றானுல்ல அவன்தான்..." என்று ஒருவன் எடுத்துக் கொடுக்க "அவனைத்தான் எனக்குத் தெரியுமே... குச்சிக்கணக்கா இருந்துக்கிட்டு இது நம்ம ஆளுகளை அடிச்சிருக்கு... சமயம் வரட்டும்... பாத்துக்கலாம்..." என்றான் இளங்கோ.

"இல்ல மச்சான் கூப்பிட்டு மிரட்டி விடலாம்..." என்றான் ஒருவன்.

"அப்படிங்கிறே... சரி... டேய்... அடேய் உங்களைத்தாண்டா இங்க வாங்க..." என்று இளங்கோ அழைக்கவும் , "டேய் அவனுக நம்மளை வம்பிழுக்க கூப்பிடுறாய்ங்க... இருங்க நான் பேசுறேன்..." என்ற அண்ணாத்துரை "என்ன சொல்லுங்க..." என்றான்.

"என்னடா நீதான் இந்த டீமுக்கு லீடரா?" என்றான் ஒருவன்.

"அப்படியெல்லாம் இல்ல... கூப்பிட்டீங்களே என்னன்னு கேட்டேன்..." என்றதும் "ஏன் நம்ம காலேசோட புதிய ரவுடி பேச மாட்டாரா?" என்றான் இளங்கோ.

"நாங்க யாரும் ரவுடி இல்லை... ரவுடிங்க அடிச்சிக்கிட்டப்போ அங்க இருந்ததால அவன் அடிச்சிருக்கான்... போதுமா... தேவையில்லாம பேசாதீங்க... வாங்கடா போகலாம்..."

"என்ன துள்ளுறே... எல்லாரும் பேசாம இருக்கும் போது உனக்கென்ன குதிக்கிறே... செட்டையை ஒடிச்சிருவோம்..." என்று முன்னால் வந்தான் ஒருவன்.

"ஒடிச்சிப் பாருங்க... யாருக்கு ஒடியுதுன்னு பார்ப்போம்..." அண்ணாத்துரையும் பதிலுக்குப் பேச, அந்த இடம் ஒரு சண்டையை நோக்கி நகர ஆரம்பிக்க.

"டேய் சும்மா இருடா... என்னங்க எங்கிட்ட என்ன பேசணும்... சொல்லுங்க. அன்னைக்கு அந்த இடத்துல நீங்க இருந்து வேற யாராவது ஆள் அனுப்பியிருந்தாலும் நான் அடிச்சித்தானிருப்பேன். ஏன்னா எனக்கு முன்னாடி யாரை அடிச்சாலும் பாத்துக்கிட்டு இருக்கமாட்டேன்... தெரியுமா?" என்றான் ராம்கி.

"என்ன உன்னோட பிரண்டு குதிக்கிறான்.... இங்க வாடா... எங்ககிட்ட இனி வச்சிக்கிட்டேன்னு வச்சுக்கோயேன்... காலைக் கையை ஒடிச்சிப் போட்டுருவோம்... தெரியுதா..?"

"என்னைய யாரும் தொடாத வரை நான் யாரு வம்புக்கும் போகமாட்டேன்..."

"தொட்டா பொங்கிருவீங்களோ?" என இளங்கோ நக்கலாகக் கேட்க

"அவனில்லை... நானே பொங்குவேன்..." சூடாகச் சொன்னான் அண்ணாத்துரை.

"என்னடா... எதுக்கெடுத்தாலும் நீ துள்ளுறே... செட்டைய ஒடிச்சாத்தான் சரியா வரும் போல..."

அண்ணாத்துரை சிரித்தபடி "ஒடிச்சிப்புட்டு காலேசு வாசல் தாண்ட முடியாது... தலை தனியா விழுந்திரும்... தெரிஞ்சுக்கங்க... ஆழம் தெரியாம எதுலயும் காலை விடாதீங்க... சும்மா ரவுடி ரவுடின்னு பீத்திக்கிட்டுத் திரியாதீங்க... டேய் வாங்கடா போவோம்... சும்மா டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு..."

"அட இங்க பார்றா.... தலையை எடுத்துருவாங்களாமுல்ல... இருடி போட்டுப் பார்ப்போம்..." என்று வண்டியில் இருந்து இளங்கோ இறங்கினான். அப்போது அவர்களை வண்டியில் கடந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவன், "என்ன அண்ணா... எதுவும் பிரச்சினையா?" என்றான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லேண்ணே... சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்... நீங்க போங்க..." என அண்ணாத்துரை சொன்னதும் "இளங்கோ.... அவன் யாருன்னு நெனச்சே... நம்ம பூபாலண்ணன் தம்பி..." என்று போகிற போக்கில் சொல்லிச் செல்ல இளங்கோ மீண்டும் வண்டியில் அமர்ந்தபடி "நீ பூபாலண்ணன் தம்பியா? அதான் வேகமா இருக்கே.... சரி... சரி... அவன் எங்க ஆளுகளை அடிச்சது ஒரு ஆக்ஸிடெண்ட்தான்... இனி நமக்குள்ள பிரச்சினை வேணாம்... அதுவும் பூபாலண்ணன் மேல எனக்கு தனி மரியாதையே உண்டு. எனக்காக எம்புட்டோ செஞ்சிருக்கு... அது தம்பியின்னு இதுவரை எனக்குத் தெரியாமப் போச்சு...அண்ணனும் இங்கிட்டு வரலையில்ல அதான். அண்ணன் எப்படியிருக்கு..? கேட்டேன்னு சொல்லு..." என்றதும்

"சரிண்ணே... இவன் பண்ணுனது அந்த நேரத்துல அவரைக் காப்பாத்தத்தான்... மற்றபடி உங்க மேலயோ மற்றவங்க மேலயோ எந்த முன் விரோதமும் இல்லை... கஷ்டப்பட்டு படிக்க வந்திருக்கான். இனி இவன்கிட்ட உங்க பிரண்ட்ஸ் யாரும் முறைச்சிக்காம இருக்கச் சொல்லுங்க..."

"ஓகே... இனி நாம பிரண்ட்ஸ்... சரி போங்க..." என்ற இளங்கோவிடம் "என்ன மாப்ளே... சட்டுன்னு மாறிட்டே..." என்றான் ஒருவன்.

"சும்மா இருங்கடா.... பூபாலண்ணன் மாதிரி ஒரு ஆளோட தம்பிங்கிறதாலதான் அவன்கிட்ட அந்த எதிர்ப்பு ரத்தம் ஓடுது... பாத்தியல்ல அடிச்சிப்பாரு காலேசை விட்டுப் போகும்போது தலையிருக்காதுன்னு சொல்றான்... அப்படியே நடக்கும்... நேரம் வரும் போது அந்த ராம்கியை தனியா பாத்துக்கலாம்... விடுங்க..." என்றபடி கிளம்பினான்.

"எதுக்குடா அவங்ககிட்ட முறைச்சிக்கிட்டு... " என அறிவு கேட்க,
"இல்ல மச்சான்... அவனுகளை விட்டா நம்மளை தினம் வம்பிழுப்பாய்ங்க... அதான் நம்ம எதிர்ப்பையும் காட்டிப் பார்த்தேன்... இல்லைன்னா ராம்கியை எப்படியும் அடிக்க நினைப்பாய்ங்க... இனி நாமல்லாம் இருக்கதால யோசிப்பாய்ங்க... சரி விடுங்க... அடேய்... ஐயா வீடு போறேன்... நொய்யா வீடு போறேன்னு சுத்தாம ஒழுங்கா காலாகாலத்துல வீடு போய் சேரு... புவனாவை காலேசுல பாத்துக்கலாம்... சரியா"

"எதுக்குடா சும்மா சும்மா அதையே சொல்றீங்க.. புக் ஒர்க் அதனால போனேன். சரி வாங்க... ஞாயிற்றுக்கிழமை படத்துக்கு போறோம்... பொங்கலுக்கு அண்ணன் செவ்வாய்க்கிழமை வருது. அப்புறம் பொங்கல் வேலை அது இதுன்னு அந்த வாரம் ஓடிடும்... எல்லாரும் பொங்கலுக்கு எங்க வீட்டுக்கு வாறீங்கதானே... அம்மாகிட்ட சொல்லிட்டேன்..."

"வர்றோமுடா... உன்னோட பொங்கலுக்குத்தானே வரச்சொன்னே?"  என்றான் சேவியர்.

"என்னோட பொங்கலா?"

"அதான்டா மாட்டுப் பொங்கல்..." என அண்ணாத்துரை எடுத்துக் கொடுத்தான்.

"ம்.. பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்டா..."

"பொண்ணுங்களா... எல்லாரும் வரமாட்டாளுங்க... எதுக்கு தேவையில்லாத வேலை...நாங்க மட்டும் வந்தா போதும்" என்றான் சரவணன்.

"இல்லடா... மல்லிகாவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் வந்தா பிரச்சினையில்லடா..."

"வரலைன்னா என்ன பிரச்சினை?" என்றான் அறிவு.

"இருக்குடா... புவி... "

"புவியின்னா..?" இடைமறித்தான் அண்ணாத்துரை.

"புவியா... என்னமோ சொல்ல வந்தேன்... மறந்துட்டேன்... இல்லடா... மத்த பிரண்ட்ஸ் வாறேன்னு நிக்கிறாங்க... அதான்... மல்லிகாவும் மற்றவங்களும் வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்..."

"மத்த பிரண்ட்ஸ்ன்னா..?"

"புவனாவும் அவங்க பிரண்ட்டுந்தான்...."

"அவ எதுக்கு பொங்கலுக்கு..."

"இது தலைப் பொங்கல்டா மச்சான்..."

"சும்மா கேலி பேசிக்கிட்டு... பிரண்ட்லியா வாறேன்னு சொன்னாங்க அதான் மல்லிகாவைக் கூப்பிடலாம்ன்னு..."

"மச்சான் சக்களத்தி சண்டை வந்துறாம... பாத்துக்க..." என்றான் பழனி.

"சும்மா போங்கடா... மல்லிகா என்னோட நல்ல தோழி போதுமா?"

"சரி பொங்கல்ல பொங்குறதைப் பார்ப்போம்..." என்றபடி சைக்கிளை மிதிக்க, "சரிடா ஐயா வீட்டுக்குப் பொயிட்டுப் போகணும்... வாறேன்டா..." என்று ஐயா வீட்டை நோக்கி சைக்கிளை ராம்கி திருப்ப, "பாத்துடா மாப்ளே... எங்க போய் முடியப் போகுதோ... உனக்காக நாங்க அடி வாங்குறது உறுதிடோய்.." என்று கத்தினர்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

சக வயதுடைய நண்பர்களின் விளையாட்டுப் பேச்சுக்கள் அப்படியே தடம் தவறாமல்!...

வாழ்த்துக்கள் குமார்!. மேலும் வளர்க..

Menaga Sathia சொன்னது…

கதை ரொம்ப நல்லா விறுவிறுப்பா போகுது,நேரிலயே நடப்பது போல உணர்வு,வாழ்த்துக்கள் சகோ!!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது... இன்னும் விறுவிறுப்பாக தொடருங்கள்...

சில பகுதிகளை நான் படிக்கவில்லை....
நேரம் இருக்கும்போது கண்டிப்பாக வாசிக்கிறேன்...

நன்றி

Unknown சொன்னது…

அருமை.....தொடரட்டும் தொடர்,தொடர்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சே.குமார.(அண்ணா)

தொடர்கதை அருமையாக உள்ளது மேலும் தொடரஎனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை தொடர்கிறேன் நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. சௌந்தர்...
கண்டிப்பாக உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.