மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 6 ஆகஸ்ட், 2014தொடர்கதை: கலையாத கனவுகள்

முந்தைய பதிவுகளைப் படிக்க... 


பகுதி-64    பகுதி-65     பகுதி-66     பகுதி-67    பகுதி-68    பகுதி-69    பகுதி-70

71.கனவுகள் நனவாகுமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். வைரவனுக்காகவும் புவனாவை அடையவும் இளங்கோ ஒரு பக்கம் ராம்கியை கொல்ல அலைகிறான். இதற்கிடையே ராம்கியும் புவனாவும் சந்திக்கிறார்கள்.

இனி...

"அந்தப் பையனை யாரை வச்சி... என்ன பண்ணச் சொல்லியிருக்கே...?" என்ற அம்மாவின் கேள்வியால் நிலை குலைந்த வைரவன் "யாரை...?" என்றான் தனது பதட்டத்தை மறைத்தபடி.

"தெரியாத மாதிரி கேக்காதடா... அதான் உன்னைய காப்பாத்தி இப்ப புவனாவை விரும்புறானுல்ல அவனைத்தான்..."

"அவனை நான் என்ன பண்ணப் போறேன்... புவனாவை ரெண்டு தட்டுத்தட்டி நம்ம வழிக்கு கொண்டு வர எனக்குத் தெரியும்... அப்புறம் எதுக்கு அவனை நான் எதாவது பண்ண நினைக்கனும்... எதுக்கும்மா சும்மா தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு...." என்று அவளது வாயை அடைக்கப் பார்த்தான்.

"நீ தோட்டத்துல வச்சி புவனாவை அடிச்சது எனக்குத் தெரியும்... இதுக்காகத்தான் அடிச்சிருப்பேன்னு காரணமும் எனக்குத் தெரியும்... இன்னைக்கு மத்தியானம் அவளுக்கு போன் வந்தப்போ அவ எங்கிட்ட சொல்லிட்டுப் போன வார்த்தை என்ன தெரியுமா? உன்னோட பிள்ளை என்னோட வாழ்க்கையில விளையாடுறான்னுதான்... அப்பவே எனக்கு லேசா சந்தேகம்... அதை இப்போ உன்னோட கோபம் உறுதிப்படுத்திருச்சு..."

"...."

"இங்க பாரு... அவனை வெட்டுறேன்... கொத்துறேன்னு எறங்கி உன்னோட வாழ்க்கையும் கெட்டு அவளையும் இழக்க வச்சிறாதே..."

"அம்மா..." கத்தினான்.

"ஏன்டா கத்துறே... அவ அவனைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா நிக்கிறா... ஒருநா இல்லாட்டி ஒருநா நமக்குத் தெரியாம ஓடிப்பொயிட்டா..."

"இங்க இருந்து போயி எந்த மூலையில இருந்தாலும் அவளை வெட்டுவேன்..."

"அடப் போடா... நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வருமே மருதாயி... அது மவ ஓடிப்போனப்போ ஊரே வெட்டுவோம் கொத்துவோம்ன்னு குதிச்சிச்சு... இப்ப என்னாச்சு... அவ பாட்டுக்கு மெட்ராசுப் பக்கம் இருக்காளாம்... மருதாயி ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருவாட்டி போயி பாத்துட்டு வாறா... தெரியுமா?"

"அதுக்கு... நாமளும் அப்படி அனுப்பிட்டு ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி போயி பாத்து சீராட்டிட்டு வருவோம்ன்னு சொல்றீங்களா?"

"அதுல என்னடா தப்பு..."

"அம்மா..."

"கத்தாதேடா... அவ மனசுக்குப் புடிச்சவனோட வாழணுங்கிறா கண்டிப்பா நம்ம சாதிசனம் ஒத்துக்காது... உங்கப்பனும் சித்தப்பனும் சொல்லவே வேண்டாம்... அப்படியே நாம மாப்பிள்ளை பாத்து கட்டி வச்சாலும் அவ வாழ்வான்னா நினைக்கிறே... கண்டிப்பா மருந்தையோ கயித்தையோதான் தேடுவா... இது தேவையா...? நீ யோசி..."

"அம்மா... அதுக்காக ஏதோ ஒரு சாதிக்காரனுக்கு நாம அவளைத் தாரை வார்த்துக் கொடுக்கனுங்கிறீங்களா? நல்லாயிருக்கே... சும்மா போங்கம்மா... ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க முடியுமா... ஓடிப்போனவ அம்மா போற... இவன்தான் ஓடிப்போனவளோட அண்ணன்... ஓடிப்போனவளோட அப்பனைப் பாரு வெள்ளையுஞ் சொள்ளையுமா போறான் பாருன்னு ஆளாளுக்கு பேசுவானுங்க... இதுக்கு அவளை மருந்தைக் கொடுத்து கொன்னுடலாம்... ஆமா எப்படி இப்படி மாறினீங்க..."

"நானும் எல்லாம் யோசிச்சேன்... எத்தனை அவமானம் வந்தாலும் பரவாயில்லை... நா பாத்துப்பாத்து வளர்த்த என்னோட மக எங்கயோ கண்கானாத இடத்துல மனசுக்குப் பிடிச்சவனோட சந்தோஷமா வாழ்வான்னு நினைக்கும் போது சாதிசனம்... அவமானம் எல்லாம் பெரிசாத் தெரியலை.... டேய் நீதான்டா அவளை அந்தப் பையன் கூட சேத்து வைக்கணும்... உங்கப்பாக்கிட்ட பேசி உனக்குப் பிடிச்ச எங்கண்ணன் மகளை என்னோட மருமகளா கொண்டாறது என்னோட பொறுப்பு... நல்லா யோசிச்சிப் பாரு... தன்னோட உயிரைப் பற்றி கவலைப்படாமல் உன்னைய காப்பாத்துன பையன் புவனாவை நல்லபடியா பாத்துக்க மாட்டானா என்ன?"

"அதுக்காக சாதிவிட்டு சாதி... சரி நான் நீங்க சொல்றதை ஏத்துக்கிட்டாலும் அப்பாவும் சித்தப்பாவும் சும்மா விட்டுருவாங்களா? அவனோட அம்மா, அக்கா, அண்ணன்னு மொத்தக் குடும்பத்தையும் வேரறுத்துருவாங்க... இவங்களுக்காக அவங்க ஏன் சாகணும்..."

"இங்க பாரு... முதல்ல இவங்களை எங்கயாவது கண்கானாத இடத்துக்கு அனுப்பிட்டா... மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... சரியா?"

வைரவன் ஒன்றும் பேசாமல் யோசித்தான்... அம்மாவிடம் சரியென்று சொல்லி இளங்கோவை வைத்து அவன் கதையை முடிச்சிட்டு நா கட்டி வைக்கலாம்ன்னு பாத்த இளங்கோ முன் விரோதத்துல கொன்னுட்டானேன்னு பிளேட்டை திருப்பிடலாமா.... இல்ல விருப்பப்பட்டவனோட வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு எங்கயாவது அனுப்பி வச்சிடலாமான்னு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்தினான்.

"இங்க பாருங்க... இனி யோசிக்க நேரமில்லை... சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவெடுக்கணும்... இளங்கோ, வைரவன்னு எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டானுங்க... இனி ஐயா பேசட்டும் ஆட்டுக்குட்டி பேசட்டும்ன்னு இருந்தா கதைக்கு ஆகாது... முதல்ல சேவியருக்குப் போனைப் போட்டு விவரத்தைச் சொல்லி இங்கேயிருந்து நீ கிளம்பணும் அதுதான் எனக்கு நல்லதாத் தெரியுது.." என்றான் அண்ணாத்துரை.

"ஓடிப்போகச் சொல்றியா?" அதிர்ச்சியாகக் கேட்டான் ராம்கி.

"ஆமா இதைச் செய்யலைன்னா... உன்னோட உயிருக்கு கேரண்டி இல்லை... இவ கழுத்துல உன்னோட தாலி ஏற வாய்ப்பும் இல்லை"

"என்ன இருந்தாலும் இப்படி ஓடிப்போகவா இம்புட்டுத் தூரம் கஷ்டப்பட்டோம்..."

"இங்க பார் ராம்கி அண்ணாத்துரை சொல்றதுதான் சரி... நானும் பழனியும் உங்க கூட வாறோம்... நாளைக்கே இங்கேயிருந்து புவனாவைக் கிளப்புறோம்..."

"நாளைக்கா... ஐயாவை வச்சோ இல்ல புவியோட மாமா பொண்ணை வச்சோ புவி வீட்ல பேசிப்பாக்கலாண்டா..."

"ஐயா போனா கேவலப்பட்டுத்தான் திரும்பணும்... சொசைட்டியில நல்ல பேர்ல இருக்க மனுசன் எதுக்கு இந்த விஷயத்துல கேவலப்பட்டு நிக்கணும்... அப்புறம் மாமாவுக்கு இவ வீட்ல மரியாதை இல்ல மாமா பொண்ணு பேசிட்டாலும்... காதலிக்கத் தெரிஞ்ச உனக்கு அவளை மனைவி ஆக்கிக்கிட்டு வாழ பயமா இருக்கா என்ன..."

"அப்படியில்ல... ஆனா..."

"ராம்... எதுக்கு யோசிக்கிறீங்க... இப்ப இவங்க சொல்றதுதான் நல்ல முடிவு... உங்க பக்கம் ஒத்து வந்தாலும் எங்க பக்கம் சான்ஸே இல்லை... உங்களுக்கு ஒண்ணுன்னா நானும் செத்துருவேன்... இது சத்தியம்... இங்க இருந்து போயி வாழ்ந்து பாப்போம்... ஒரு நாளைக்கு எல்லாரும் நம்மளைத் தேடி வருவாங்க..."

"பாரு பொம்பளப்புள்ள அதுக்கு இருக்க தைரியம் உனக்கு இல்லை... நீயெல்லாம் காதலிச்சு... எங்க வீட்டுப் பக்கத்துவீட்டு ஜெனிபர் ஒருத்தனோட ஓடுனா... நேத்துப் பாக்குறேன் மகனைக் கொஞ்சிக்கிட்டு வீட்டு வாசல்ல நிக்கிறா... வீட்டுல சேத்துக்கிட்டானுங்க... அப்படி குடியும் குடித்தனமும் ஆயிட்டியன்னா... அப்புறம் என்ன மாமனார் வீட்டு குதிரையெடுப்புல மாப்ள நீதானே முன்னாடி நிப்பே..." கிண்டலாய்ச் சொன்னான் அறிவு.

"ம்... சேவியருக்குப் பேசுறோம்... எப்ப... எப்படி... எங்கேன்னு முடிவு பண்ணி அதுபடி புவனாவை வர வச்சி கார்ல தூக்குறோம்... நேர திருப்பூருக்குப் போறோம்... சரியா?" என்ற அண்ணாத்துரையை "நிறைய முன் அனுபவம் இருக்கு போல..." என்று சீண்டினாள் மல்லிகா.

"உனக்கு மாமா மகன் சரி வரலைன்னா சொல்லு... இன்னொருத்தன் காத்துக்கிட்டுத்தான் இருக்கான்... உன்னையும் கார்ல தூக்கிருவோம்" என்று சிரித்தபடி அண்ணாத்துரை சொல்ல, "இங்க கேட்டை மூடி ரொம்ப நாளாச்சு?" என்றபடி சரவணனைப் பார்க்க அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

"வாங்க ஐயா... என்ன இந்த நேரத்துல கடைக்கு வந்திருக்கீங்க... சும்மாதானே.." என்று புவனாவின் அப்பா கேட்க, "நம்ம புவனா கல்யாணத்தைப் பத்தி கொஞ்சம் பேசணும்" என்றபடி சேரில் அமர்ந்து ஜக்கில் இருந்த தண்ணீரைக் 'மடக்... மடக்...' என்று குடித்தவர் "ஸ்.... அப்பா.... என்ன வெயிலு" என்று சொல்லியபடி அவரைப் பார்த்தார்.

"இன்னும் மாப்பிள்ளை பார்க்கவே இல்லை... கல்யாணம் அது... இதுன்னு... பேசுறீங்க?" மெதுவாக இழுத்தார் புவனாவின் அப்பா..

"மாப்பிள்ளைப் பையனெல்லாம் ரெடி... உங்களோட முடிவுதான் இப்ப முக்கியம்" என்று சாதாரணமாகச் சொல்ல, "அவளே பாத்துட்டாளா?" என சற்று கோபமாக கேட்டார் புவனாவின் அப்பா.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. ம்.......ஒரு வழியா வைரவன சரிக்கட்டியாச்சு,இனி அப்பா....சித்தப்பா..........பார்ப்போம்!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...