மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 59

முந்தைய பதிவுகளைப் படிக்க...



59.  பிரிவே சுகம் தரும்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் புவனாவின் அம்மா கல்யாணப் பேச்சை தள்ளிப் போட்டு மகள் படிக்க சம்மதிக்கிறாள். படிப்பு மற்றும் காதல் தொடர்பாக பேச புவனாவுக்கு மல்லிகா மூலமாக அழைப்பு விடுகிறான் ராம்கி.

இனி...

"வா ராம்கி..." கதவைத் திறக்கும் போதே வரவேற்றாள் மல்லிகா.

"எப்படியிருக்கே மல்லிகா... அம்மா எங்கே?"

"நான் நல்லாயிருக்கேன்... எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க.... உள்ள வா..."

"இல்ல பெரியவங்க இல்லாம நாங்க இங்க வந்து பேசுறது நல்லாயிருக்குமா? ஐயா வீட்டுக்கு வரச்சொல்றியா... நான் அங்க இருக்கேன்..."

"அடச்சீ வா... யாரு என்ன பேசப்போறாங்க... என்னைப் பற்றி எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும்... நீ உள்ள வா..." என்றதும் பேசாமல் உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான்.

மல்லிகா கொடுத்த காபியைக் குடித்தபடியே "புவி வந்துருவாளா?" என்றான்.

"கண்டிப்பா வருவா... இதுல என்ன சந்தேகம்... ஆமா அப்படி என்ன முக்கிய விஷயம்? ரெண்டு பெரும் எஸ்கேப் ஆகப் போறீங்களா?"

"என்ன மல்லிகா நீயே இப்படிக் கேக்குறே...? படிப்பு சம்பந்தமா பேசத்தான் வரச்சொன்னேன்.."

"ஏய் சும்மா கேட்டேன்... சீரியஸா எடுத்துக்கிட்டே... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... சரவணன் எதாவது சொன்னானா?"

"சரவணனா... ஒண்ணும் சொல்லலையே... என்ன விசயம்... நீ சொல்லேன்..."

"சரவணன் எனக்கு புரப்போஸ் பண்ணினான்..." என்றபடி அவன் முகத்தை நோக்கினான்.

"இது எப்போ... அவன் ஒண்ணும் சொல்லலை... ஆமா அதுக்கு நீ என்ன சொன்னே?"

"என்ன சொல்லச் சொல்றே... எனக்குன்னே எங்க மாமா மகன் காத்திருக்கான்... இது சின்ன வயசுல முடிவு பண்ணினது... எங்க அப்பா அம்மாவோட முடிவு மட்டுமில்ல எனக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும்... அப்படி இருக்க எப்படி ஏத்துக்க முடியும்... சாரிப்பான்னு சொல்லிட்டேன்..."

"ம்.. இதுவரைக்கும் அவன் இதுபற்றி சொல்லவேயில்லை...."

"ஒருவேளை நான் ஓகே சொல்லியிருந்தா உங்ககிட்ட சொல்லியிருப்பான்... இதை எப்படி சொல்லுவான்... நீ போயி எதுவும் கேக்காதே... " என்று சொல்லும் போதே புவனாவின் சைக்கிள் வாசலில் வந்து நின்றது.

"வந்துட்டா உன்னோட ஆளு... பார்றா முகத்துல ஆயிரம் சந்திரன் வந்தாச்சு...."

"பாத்து நாளாச்சுல்ல... ஆயிரத்துக்கு மேல வரும்ல்ல...."

"ஹாய் மல்லிகா, ஹாய் ராம்..." என்றபடி உள்ளே வந்தவள் சோபாவில் அவனுக்கு அருகே அமர மல்லிகா எழுந்து கொண்டாள்.

"ஏய் ஏன் எழுந்துட்டே?" எனக் கேட்டாள் புவனா.

"நீங்க பேசுங்க... நான் எதுக்கு இங்க... உனக்கு ஒரு சூப்பர் காபி போட்டுக்கிட்டு வாறேன்...." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"என்னப்பா எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா... பாத்து எத்தனை நாளாச்சு...?" என்றபடி அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். அந்த ஸ்பரிசம் ராம்கிக்குள் ஆனந்த அலையை அள்ளி வீசியது.

"நல்லாயிருக்கேன் புவி... நீ என்ன கெறங்கிப் பொயிட்டே...?"

"அதெல்லாம் இல்ல ராம்... நல்லாத்தான் இருக்கேன்..."

"மேல படிக்கிறதுக்கு வீட்ல என்ன சொன்னாங்க?"

"ஒத்துக்கிட்டாங்க.... அதுவும் அம்மாவே அப்பாக்கிட்ட பேசினாங்கன்னா பாத்துக்கோங்களேன்... ஆமா எங்கம்மாக்கிட்ட அப்படி என்ன பேசினீங்க..?"

"ஏன் அத்தை மாறிட்டாங்களா..?"

"என்னைய படிக்க வச்சா எம் பக்கமே திரும்பிப் பார்க்கவே மாட்டேன்னு சொன்னீங்களாமே?" என்றவளின் கை விரல்களில் விளையாடிக் கொண்டிருந்தான்.

"ம்க்கும்" என்ற சத்தம் கேட்டதும் படக்கென்று அவளது கையை விட்டான். அவனுடன் ஒட்டி அமர்ந்திருந்த புவனா சற்றே தள்ளி அமர்ந்தாள். "சாரி" என்றபடி மல்லிகாவைப் பார்த்தான் ராம்கி.

"இதுல என்ன சாரி வேண்டிக் கிடக்கு... பிரிந்தவர் கூடினால் பேச மனம் வருமா என்ன... சரி இந்தா புவி காபி... பின்னால தோட்டத்துல மாமரத்து காத்தை வாங்கிக்கிட்டே பேசுங்க... மத்தியானத்துக்கு சமைக்கிறேன்... ரெண்டு பேரும் சாப்பிட்டுப் போகலாம்..."

"அய்யய்யோ சாப்பாடெல்லாம் வேண்டாம்... இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்... அவசரமாப் போகணும்" என இருவரும் கோரஸாகச் சொல்ல, "பார்றா ஒத்துமையை" என்று சிரித்தபடி வாசலுக்குப் போனாள் மல்லிகா, இருவரும் எழுந்து பின்பக்கம் போனார்கள்.

"அப்ப காரைக்குடியில படிக்க பிரச்சினை இல்லை... அப்படித்தானே?"

"ம்... என்னோட படிப்புக்கு இப்போ பச்சைக்கொடி காட்டிட்டாங்க... இனி படிப்பு முடியும் வரை திருமணப் பேச்சு இருக்காது..."

"சந்தோஷமான விசயமாச்சே..."

"சந்தோஷமான விசயந்தான்... ஆனா படிப்பு முடிச்சதும்...." புவனா மெதுவாக இழுத்தாள்.

"அப்போதைக்கு பாத்துக்கலாம் புவி... இப்ப நம்ம பிரச்சினைக்கு கொஞ்சம் கால அவகாசம் கிடைச்சிருக்குல்ல..."

"ம்... நீங்க காரைக்குடியிலதானே படிக்கப்போறீங்க..?"

"அது... அது வந்து..."

"என்ன இழுக்குறீங்க..?"

"இல்ல புவி என்னோட குடும்பச் சூழல் இன்னும் ரெண்டு மூணு வருசம் படிக்கிற மாதிரி இல்ல... அண்ணோட சம்பளத்தை வச்சி எல்லாமே பாக்க வேண்டியிருக்கு... இனி மறுபடியும் அவருக்கு பாரமா இருக்கணுமா... அதனால..."

"அதனால..." கோபமானாள்.

"திருப்பூர்ல சேவியர் இருக்கான்... அவனோட போய் இருந்திக்கிட்டு மதுரையிலயோ திருச்சியிலயோ கரஸ்ல படிக்கலாம்ன்னு நினைக்கிறேன்..."

"என்னது கரஸ்ஸா... அப்ப நான் படிக்கலை... இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... எங்கிட்டாவது போயிடலாம்... படிப்பும் வேண்டாம்... ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..." அவன் தோளில் சாய்த்திருந்த தலையை எடுத்தபடி கோபமாகச் சொன்னாள்.

"ப்ளீஸ் புவி.... இப்ப இருக்க சூழலுக்கு ரெண்டு பேரும் ஒரு இடத்துல படிக்கிறது அவ்வளவு நல்லதில்லை... அது போக உங்கம்மாக்கிட்ட சொன்ன மாதிரி ரெண்டு பேரும் கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்... அப்பத்தான் பெத்தவங்களை புரிஞ்சிக்க வைக்க முடியும்..."

"என்ன ராம் உங்களை கொஞ்ச நாள் பாக்காம இருக்கதே பெரிய விஷயமா இருக்கு... இதுல நீங்க ஒரு ஊர்ல நான் ஒரு ஊர்லன்னா எப்படி... ப்ளீஸ் ரெண்டு பேரும் ஒரே இடத்துல படிப்போம்... உங்களுக்கு நானும் உதவுறேன்..."

"காசுக்காக பேசலை புவி.... நம்ம காதலுக்காக பேசுறேன்...இன்னைக்குச் சூழல்ல உன்னைய படிக்க வைக்கிறேன்னு உங்கம்மா இறங்கி வந்திருக்கதே பெரிய விஷயம்... இதுல நாம ஒரே இடத்துல படிச்சு... ரெண்டு பேரும் ஒண்ணாப் போகயில யாராவது பாத்து வத்தி வச்சிட்டா அது பெரிய பிரச்சினையில முடியும்... ஏன் உனக்கு அவசரக் கல்யாணம் பண்ணுற வரைக்கும் கூட போகும். "

"அதுக்காக..."

"இப்ப என்ன நான் இங்க அடிக்கடி வரப்போறேன்... உன்னைப் பாக்கப் போறேன்... போன்ல பேசப்போறோம்... ரெண்டு மூணு வருசம் சீக்கிரமே ஓடிடும்மா..."

"ம்... இதெல்லாம் தேவையா?"

"இப்போதைக்கு இதுதான் தேவை...."

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ராம்... " கண்கள் கலங்க அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். பற்றிய கைகளை ஆதரவாக தடவியபடி " இன்னைக்கு நமக்கு வர்ற கஷ்டம் நாளைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் புவி..." என்றபடி அவளது நெற்றியில் இச் பதித்தான்.

"ம்... பேச்சு பேச்சா இருக்கும் போது ஐயாவுக்கு முத்தம் கேக்குதோ..?"

"என்ன பண்றது... கிடைக்கத்தான் மாட்டாது... கொடுத்தாவது வைப்போமேன்னுதான்..." என்று சிரித்தான்.

"அதுசரி... கெடைக்க வேண்டிய நேரத்துல சரியாக் கிடைக்கும்... அந்த மணி ரொம்ப சீரியஸா இருக்கானாம்... எனக்கு உங்களை எதாவது பண்ணிருவானுங்களோன்னு பயமா இருக்கு.... அப்பாக்கூட வைரவனை மதுரைக்குப் போகச் சொல்லிட்டாரு... அவனுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு பேச்சு அடிபட்டதா யாரோ அப்பாக்கிட்ட சொன்னாங்களாம்... பாத்து இருங்க..."

"என்ன புவி நான் அவனை அடிக்க ஆள் வச்சேன்னா என்ன... ஆனா என்னைய அடிக்கணுமின்னு பேசின விவரம் தெரிஞ்சு மச்சான்தான் போட்டிருக்கணுமின்னு நம்ம பசங்களும் பேசினாங்க... ஆனா மச்சான் பண்ண வாய்ப்பில்லை... ஏன்னா இது பலநாள் திட்டம் போல இருக்கு... மச்சானுக்கு கோபம் வருந்தான்... ஆனா இந்தளவுக்கு போகமாட்டாரு... அவரு இங்க இல்லாம இருக்கதுதான் இப்போதைக்கு நல்லது"

"என்னது மச்சானா.... வைரவன் அண்ணன் எங்க போனாரு... மச்சானாயிட்டாரு...?"

"ஆமா உன்னைய லவ்விக்கிட்டு அவரை அண்ணன்னு சொன்னா நல்லாவா இருக்கு... எப்படியிருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல மச்சான்னு கூப்பிடப் போறோம்... அதை இப்பவே கூப்பிட்டா என்ன..." என்றபடி அவள் தோளில் கைபோட்டு இழுத்து அணைத்தான்.

"அப்பா ராசா... இன்னைக்கு ஒரு மாதிரித்தான் இருக்கீங்க... ஆளை விடுங்க சாமி... " என்றபடி எழுந்தாள்.

"அப்ப இதுக்கு நீ ஓகேதானே...?"

"எதுக்கு?" அவனை முறைத்தாள்.

"ஏய் நீ தப்பா புரிஞ்சிக்கிட்டே நான் கேட்டது படிப்புக்கு..."

"ம்... நா வேற என்னமோன்னு நினைச்சிட்டேன்.. அதான் சொல்லிட்டீங்களே... என்ன பண்றது... அவனவன் காதலிச்சமா... கல்யாணத்தைப் பண்ணினோமான்னு இருக்கான்... இங்க என்னடான்னா பிரிஞ்சிருந்து புரிய வைக்கிறாராம்...."

"புவி நம்மளோட இந்த முயற்சி கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்... சரி வா போகலாம்..."

"ம்..."

"என்ன பேசியாச்சா?" என்றபடி டிவியை ஆப் பண்ணினாள் மல்லிகா.

"பேசியாச்சு... அப்பக் கிளம்புறோம்..." என்றான் ராம்கி.

"அட இருங்க சாப்பிட்டுப் போகலாம்... ஆமா புவி முகம் சரியில்லையே ஏன்?"

"ஆமா... இவரு திருப்பூர் போறாராம்... அப்புறம் எப்படி சந்தோஷமா இருக்கச் சொல்றே?"

"என்ன ராம்கி என்னாச்சு?" என்றதும் ராம்கி விவரமாகச் சொன்னான்.

"இங்க பாரு புவனா... ராம்கி சொல்றதுதான் சரியின்னு படுது... எல்லாம் நல்லா முடியும்... உங்க வீட்ல இருந்து பேச முடியலைன்னா காலேஜ் முடிச்சிட்டு இங்க வந்து பேசலாம்... நானும் காரைக்குடிதானே வர்றேன்... கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னால சந்தோஷமா இருக்கலாம்..." என்று மல்லிகா சொல்ல புவனா ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.

"ரெண்டு பேரும் ஒண்ணாவா போறீங்க... ராம்கி முன்னால போகட்டும் புவனா நீ அப்புறம் போகலாம்..." என்று மல்லிகா சொல்ல இருவருக்கும் அதுதான் சரியெனப்பட்டது. ராம்கி கிளம்ப, சற்று நேரம் அமர்ந்திருந்த புவனா தனது சைக்கிளை வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

தனிமரம் சொன்னது…

இனி என்ன ஆகுமோ புவியின் நிலை??? தொடரட்டும் தொடர்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma.2

Unknown சொன்னது…

சரியான பேச்சு/முடிவு!எல்லாம் நல்லபடியே முடியும்/முடியணும்.

Menaga Sathia சொன்னது…

இப்பதான் பழைய பதிவுகள் படித்தேன்,சுவராஸ்யமா இருக்கு...அப்போ 2 காதலுக்கு இனி எதிர்ப்பு வராதுன்னு நினைக்கிறேன்