மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 40

முந்தைய பதிவுகளைப் படிக்க...



---------------------------------

40. காதலும் கல்லூரி மூடலும்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்குச் சென்றது முதல் இவர்கள் மீது சந்தேகப் பார்வை விழ ஆரம்பிக்கிறது. அண்ணனுக்கு முடியாமல் போக சீதை முத்து திருமணத்தை நடத்த வேண்டும் என அவசரப்படுத்த ஆரம்பித்தள் நாகம்மா.

இனி...

புவனா சொன்ன ஓடிப்போவோம் என்ற வார்த்தையின் அதிர்வு கொடுத்த அதிர்ச்சியில் ராம்கி அப்படிக் கேட்டதும் புவனா சிரித்தாள்.

"அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் ஓடிப்போகலாம்ன்னு சொன்னேன்.. அதுக்கு எதுக்கு இத்தனை அதிர்ச்சி... ஓடிப்போய் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க..."

"அதுக்காக நான் அதிர்ச்சி அடையலை... எங்க வீட்ல என்னைய நம்பிக்கையோட படிக்க வைக்கிறாங்க... அவங்க நம்பிக்கையை தகர்த்துட்டு நாம ஓடிப்போறதுங்கிறது நல்லாவா இருக்கு... நம்ம மேல எவ்வளவு ஆசைகளை அவங்க வளர்த்து வசிருப்பாங்க... அதுல மண்ண அள்ளிப் போடணுமா?"

"அப்பா... நான் சொன்னது அப்படி ஒரு இக்கட்டான நிலமை வந்தால் ஓடிப்போயிடலாம்ன்னு சொன்னேன்... இப்பவே ஓடுவோம்ன்னு சொல்லலை... அதுபோக ரெண்டு குடும்பமும் ஓகேன்னு சொல்லிட்டா எதுக்கு நாம ஓடப்போறோம்... குடும்பம்... குடும்பம்ன்னு பார்த்தா எதுக்கு நமக்குள்ள லவ்வு..."

"ஏய் எதுக்கு கோபப்படுறே... எத்தனை பிரச்சினை வந்தாலும் நீதான் என் மனைவி... அதுல மாற்றம் இல்லை..." 

"அப்படித்தான் நானும் நினைச்சிக்கிட்டே காத்திருக்கேன்..."

"டேய் மாப்ள..." என்று லைப்ரரிக்குள் எட்டிப் பார்த்துக் கத்தினான் அண்ணாத்துரை.

"இருடா வாறேன்... என்ன அவசரம்?"

"உனக்கு அவசரம் இல்ல... வெளியில வெட்டிக்கிட்டுக் கிடக்கானுக... உனக்கு இப்பத்தான்...." சொல்ல வந்ததை லைப்ரரிக்குள் ஆட்கள் இருந்ததால் நிறுத்தினான்.

"என்ன வெட்டிக்கிறானுங்களா?"

"உனக்குத்தான் உலகமே மறந்து போச்சே... வெளியில கூகூன்னு இருக்கு சத்தம் கூடவா கேக்கலை... சவாடான்னா..."

ராம்கி வெளியில் ஓடிவர புவனாவும் அவன் பின்னாலே வந்தாள். மரத்தடியில் மரக்கட்டைகளும் சைக்கிள் செயினுமாய் மாணவர்கள் குழுமி இருந்தார்கள். ஒரு சில ஆசிரியர்கள் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர்.

"யார்.. யாருக்கு சண்டை" என்று மெதுவாகக் கேட்டாள் புவனா.

"யாரு அடிச்சிக்குவா... இப்போ யாரு காலேசுல ரவுடி... " என்றான் சேவியர்.

"விக்னேசும் ராஜசேகரும்... ஆமா எதுக்குடா திடீர்ன்னு அடிச்சிக்கிறானுங்க?" என்றான் ராம்கி.

"போன வருசம் ரவுடி சீட்ல இருந்த சுதாகரோட... அதான் உன்னோட மச்சானின் வலதுகையா இருந்து உனக்கு அப்போ அப்போ பாதுகாப்பு கொடுத்தானே அவனோட தங்கச்சிய ராஜசேகர் என்னமோ சொல்லிட்டானாம்... அதான் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிறானுங்க..."

"யாரு கற்பகத்தையா?" புவனா கேட்டாள்.

"ஆமா அவளைத்தான்... " என்ற சரவணன். "பார்றா பர்ஸ்ட் இயரெல்லாம் கம்பைத் தூக்கிக்கிட்டு திரியிறானுங்க..." என்றபோது மீண்டும் சண்டை வலுக்க எவனோ ஒருத்தனை அடிக்க விரட்டிக் கொண்டு ஓடினார்கள். பின்னாலேயே புரபஸர்களும் ஓடினார்கள். 

"பேசாம கலஞ்சு போங்க... இல்லேன்னா நான் போலீசைக் கூப்பிட வேண்டியிருக்கும்" கத்திக் கொண்டே நின்றார் முதல்வர்.

முதல்வரின் பேச்சைக் கேட்கும் சூழலில் அவர்கள் இல்லை... ஆளாளுக்கு புங்கை மரக்கிளையை ஒடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். 'போடுடா அவனை...' 'விடாதே...' 'காலை ஒடிடா...' 'அந்தா ஒடுறான் பாரு...' என்ற குரல்கள் கலவையாய் வந்தன. அடிதடியின் வேகம் கூட ராம்கியின் தோளில் கை வைத்து நடுக்கத்துடன் பார்த்தாள் புவனா, அதைப் பார்த்த சரவணன் "புவனா... யாராவது பார்த்தா அந்தச் சண்டை இங்க திரும்பிரும்... " என்று மெதுவாகச் சொன்னதும் படக்கென்று விலகி நின்றாள்.

"சார் இவனுக சரி வர மாட்டானுங்க... போலீசைக் கூப்பிடுங்க" என்றான் புரபஸர் கந்தசாமி.

"ஆமா சார்... நாலு பேரை புடிச்சி போலீஸ்ல போட்டாத்தான் சரியா வருவானுங்க...." என்ற முதல்வர் போலீசைக் கூப்பிட தனது அறைக்குள் நுழைந்தார்.

போலீஸ் வருவதற்கு முன்னதாகவே சண்டை போட்ட மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அடிவாங்கிய மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் சிலரும் முதல்வர் அறைக்கு முன் நின்று கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கத்திக் கொண்டு நின்றனர். இன்ஸ்பெக்டர் வந்து முதல்வர் அறையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் சென்றதும் கல்லூரிக் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். 

"புவி நீ கிளம்பு..." என்றான் ராம்கி.

"இல்ல என்ன நடக்குதுன்னு பாத்துட்டுப் போகலாம்... ஆமா உங்ககூட நிக்கிறதுல உங்களுக்குப் பயமா?"

"எனக்கொன்னும் பயமில்லை... எனக்கென்ன பயம்... " என்றபடி அவளை இழுத்து தோளில் கை போட்டான்.

"அடேய்... கீழ போட்ட கட்டைய மறுபடியும் எடுக்கப் போறானுங்கடா... உனக்கு இப்போ ரொம்பத் தைரியமாயிப் போச்சுடா... காலேசுக்குள்ள வரும்போது இந்தப் புள்ளையும் பால்குடிக்குமான்னு நினைச்சோம்... இப்போ பீரே குடிக்கிறே... ராசா கையை எடு... எங்களால அடி வாங்க முடியாது..." என்றான் சேவியர்.

"உனக்கு என்ன... நீ வேணுமின்னா எவளையாச்சும் லவ் பண்ண வேண்டியதுதானே... இன்னைக்குத்தான் அவரே இவ்வளவு தூரம் வந்திருக்காரு... உனக்குப் பொறாமை... அப்படியே கையை வச்சிருங்க ராம்..." என்று இன்னும் நெருக்கமானாள்.

"ம்க்கும்... இன்னைக்கு நமக்குத்தான் அடுத்த பூஜை... அடேய் ஏழரையைக் கூட்டாதீங்கடா... லைப்ரரியில வேலை இருந்தா போய் பாருங்கடா... எவனாவது பார்த்துத் தொலைக்கப் போறான்... கொஞ்சமாச்சும் அவை அடக்கம் வேணுமுடா... அம்புட்டு வாத்தியும் இங்கதான் இருக்கானுங்க... உங்க ஐயா கூட இங்கதான் இருக்காரு..." என்ற பழனி "ஆத்தா தங்கச்சி... உங்களுக்காக எங்களை ஓட வச்சிடாதீங்க..." என்றான்.

"என்ன பயம்... பயந்தாங்கொள்ளிகளா..." என்றபடி விலகி நிற்க, பியூன் பாண்டி நோட்டீஸ் போர்டில் எதோ எழுத ஆரம்பிக்க, "என்னடா என்னமோ எழுதுறாங்க?" என்றான் சரவணன்.

"என்ன எழுதப் போறானுங்க... இழுத்து மூடிருவோம்ன்னு முடிவு பண்ணியிருப்பானுங்க..." என்ற சரவணன் "இருங்கடா நான் போயி பார்த்துட்டு வாறேன்..." என்றபடி முதல்வர் அறை நோக்கி சென்றான் பழனி.

"ஐய்யய்யோ ஐடிசி போட்டா நாம பாக்கவே முடியாதுல்ல.." புவனா வேகமாகக் கேட்டாள்.

"பார்றா... இன்னும் பரிட்சைக்கு கொஞ்ச நாள்தான் இருக்கு... இப்படி இழுத்து மூடிட்டா என்ன பண்ணுறதுன்னு யோசிக்காம அததுக்கு அதது கவலை..." என்றான் அறிவு.

"படிப்பு படிக்கலாம்... ஆனா சனி ஞாயிறு பாக்காம இருக்கதே ரொம்ப கஷ்டம்... இதுல பத்துப் பதினைந்து நாள்னா என்ன பண்றது..." என்றாள் புவனா.

"கவலையே படாதே புவனா... மச்சானை வீட்டுக்கு வரச் சொல்றேன்... நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருங்க..." என்றான்  சேவியர்.

"உதை விழப்போகுது பாரு உனக்கு" என்றாள் புவனா சிரித்துக் கொண்டே.

"டேய் போட்டுட்டானுங்கடா... ஐடிசி... இனி எப்போ திறப்பானுங்களோ தெரியலை... கற்பகத்தை என்னமோ சொன்னானுங்கன்னு சொல்லி காலேசையே மூட வச்சிட்டானுங்கடா... வெளங்குமா?" என்றபடி வந்தான் பழனி.

"இனி இங்க என்ன வேலை...  போகலாம் வாங்க... கற்பகம் வாழ்க..." என்றான் சேவியர்.

"ராம்... எப்போ பாக்குறது...?" கவலையாய் கேட்டாள் புவனா.

"நான் போன் பண்றேன் புவி... நீ கிளம்பு பை..." என்றதும் அவள் மனசில்லாமல் தலையாட்டி விட்டுச் செல்ல அவர்களும் கிளம்பினார்கள்.

ல்லூரி மூடிய பின்னான நாட்களில் சீதைக்கும் முத்து திருமணம் செய்வதென முடிவு செய்தார்கள். முன்னர் முரண்டு பிடித்த சீதை அண்ணனின் கடிதங்கள் சொன்ன நல்ல சேதிகளாலும் மாமாவின் உடல்நிலையாலும் தனது வாயைத் திறக்கவில்லை.

"சேகர் எங்க பொயிட்டான்..?" என்று கேட்டபடி திண்ணையில் அமர்ந்தான் ராம்கி.

"எங்கிட்டோ போயிருச்சு... சொல்லிட்டா போகுது... உனக்கு காலேசு எப்ப தொறப்பானுங்கலாம்.?" அவனுக்கு எதிரே அமர்ந்தபடி கேட்டாள் காவேரி.

"தெரியலை... ஆமா நீ இங்கயே டேரா போட்டுட்டே போல... சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருதா வந்துட வேண்டியதுதானே?"

"டேராவெல்லாம் போடலை... அத்தை கேதத்துக்குப் பொயிட்டாங்க... அதான் தண்ணி தூக்கி வக்க வந்தேன்... ஆமா உன்னோட பிரண்டுக்கு வாக்கப்பட்டுட்டாலும்..."

"அவனுக்கு என்ன கொறச்சல்... சரி உங்க கதை எதுக்கு எப்படியும் அவனுக்கு நீதான் பொண்டாட்டின்னு ஆயிப் போச்சு... எனக்கு ஒரு உதவி செய்யணுமே?"

"என்னடா சொல்லு..."

"உங்க மாமா எங்க?"

"கொள்ளப்பக்கம் பொயிட்டாக.. நீ என்னன்னு சொல்லுடா"

"நான் ஒரு பிரண்டுக்கு போன் பண்ணனும்... எங்க வீட்ல சீதா இருக்கா... அதான் இங்க வந்தேன்... நான் போன் பண்ணுறேன்... அவங்க எடுத்த பேசுறேன்... வேற யாரும்ன்னா நீதான்டி பேசி சமாளிக்கணும்..."

"என்னடா வம்புல மாட்டிவிடுறே... எவளுக்குடா... உன்னைய ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்..."

"நீ நினைச்சா.... சரி எங்க அக்காகிட்ட உளறி வைக்காதே... எனக்காக பேசேன் ப்ளீஸ்...."

"சரி வா..."

புவனாவுக்கு போன் அடிக்க ரிங்க் போய்க் கொண்டேயிருக்க காத்திருந்தான். எதிர் முனையில் போனை எடுத்து 'அலோ' என்றதும் ராம்கிக்கு சர்வ நாடியும் ஒடுங்கியது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

கதை என்று வாசிக்க முடியவில்லை.
சம்பவங்கள் நிஜமானவை போலவே தொடர்கின்றன..
அருமை!..

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

கதை சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் சொன்னது…

சுவாரசியாம திகிலுடன் தொடர்கின்றேன்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஐயா சொல்வதைப் போல
நிஜம் போலவே தொடர வைக்கின்றது
தங்களின் எழுத்துக்கள்
அருமை தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்