மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 ஜூலை, 2018சினிமா : கடைக்குட்டி சிங்கம்

Image result for கடைக்குட்டி சிங்கம்

மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக்குட்டி சிங்கம்'. இதற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.

மாயாண்டி குடும்பத்தார் பார்ட்-2 என ஒரு நண்பர் சொல்லியிருந்தார். அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே... அக்கா, தம்பியின்னு ஒரு அழகான குடும்பத்துக்குள்ள வாழ்ந்துட்டு வந்த வாசனையைக் கொடுக்குதே... ரத்தவாடை வீசாமல் ஒரு சினிமாவைக் கொடுத்திருக்கிறாரே... அதுவே இன்றைய தமிழ்ச் சினிமாவின் போக்கில் பெரிதில்லையா..?

படம் விவசாயி, விவசாயம்ன்னு பேசினாலும், சில காட்சிகளில் வயலில் உழவு செய்வது போலவும், வைக்கோல் டிராக்டரை ஓட்டி வருவது போலவும் காட்டினாலும், நிறைய இடங்களில் விவசாயிக்கு குரல் கொடுத்திருந்தாலும், காதல் அறுபடையின் காரணமாக உடன் பிறப்புகளுக்குள் வரப்பு எழ ஆரம்பிக்க, அந்த வரப்பில் மண் அணைத்து மகிழ நினைக்கும் வில்லன் என படம் வேறு பாதையில்தான் நகர்கிறது.

வானவன் மாதேவி, வேலு நாச்சியார், பத்மாவதி, பஞ்சவன் மாதேவி  என படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அழகான பெயர்கள். கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.

நாலும் பெண்ணாப் பிறந்திருச்சே... ஆண் வாரிசு வேணுமேன்னு மனைவியின் தங்கை பானுப்பிரியாவைக் கட்டிக் கொள்ளும் சத்யராஜூக்கு, பானுப்பிரியா மூலமாக பிறக்கும் குழந்தையும் பெண்ணாய் பிறக்க, மூன்றாம் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவரே கதையின் நாயகன் கார்த்தி.

அக்காள்கள் மீது பாசமழை பொழியும் தம்பி, தம்பியே உலகமென இருக்கும் அக்காள்கள்... அக்காள் மகள்களில் இரண்டு பெண்கள் மாமனைக் கட்டிக் கொள்ளும் போட்டியில்... மாமனுக்கோ வில்லனின் அக்காள் மகளின் மீது மோகம்... காதலுக்கு அப்பா ஆதரவு என்றாலும் இதனால் குடும்பங்கள் பிரியக்கூடாது என்பதே அவரது கோரிக்கை... இதன் பின்னான நிகழ்வுகளும் வில்லனுடனான மோதலுமே இடைவேளைக்குப் பின்னான கதையாய்....

இடைவேளையின் போது அக்காள்களின் குணங்களைப் பற்றிய பேச்சு வரும்போது ஒரு மகாபாரதத்தையும் (ஐந்து அக்காள்கள்) ஒரு இராமாயணத்தையும் (நாயகியின் மாமா) சமாளிக்கணும் என்று சூரியிடம் சொல்கிறார் கார்த்தி. 

தங்கள் மகள்களில் ஒருத்தியைக் கட்டிக் கொள்ளாமல் யாரோ சோடாக்காரியைக் கட்டிக்கப் போகிறானே என அக்காள்களும் மாமாக்களும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக பார்த்துப் பேசியும் எதுவும் ஆகவில்லை. இடையில் வில்லனும் அக்காள் கணவர்கள் இருவருடனும் கூட்டணி போட, நாயகனின் காதல் அறுவடைக்காக போராட வேண்டியதாகிவிடுகிறது. தண்ணீர் கிடைகாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயியாக நாயகனின் நிலை.

வானம் பார்த்த பூமியாய் நாயகி காத்திருக்க, அறுவடை செய்ய ஒரு தண்ணிதான் வேணும்... மழை இல்லை... கண்மாயில் தண்ணீர் இல்லை.. பயிர் காய்கிறது என அருகில் இருக்கும் தோட்டத்தில் இருந்து மோட்டார் தண்ணியை மணிக்கு இவ்வளவு பணம் எனக் கொடுத்து வாங்கி விளைய வைப்பது போல் அக்காள்கள் பின்னால் அழைகிறார் நாயகன்.

சிவகாமியின் செல்வனாக வரும் சூரிக்கான ஒரு வரி வசனங்கள் அருமை.... இறுதிக் காட்சி வரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். இப்படி அவர் சிரிக்க வைப்பது அரிது. அவரது நகைச்சுவைகள் எல்லாமே நகைக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலையே ஏற்படுத்தும் என்றாலும் சதீஷ், சந்தானத்துக்கு இவர் மேல். இந்தப் படத்தைப் பொறுத்தவரை மனுசன் அடிச்சி ஆடியிருக்கிறார். செம.

பாசப் போராட்டத்தின் பின்னே கோவிலில் நடக்கும் இறுதிக்காட்சியில் கார்த்தி அழ, அம்மா அழ, பாட்டி அழ, அக்காள்கள் அழ, மாமாக்கள் அழ, மருமக்கள் அழ.... பாசப் போராட்டம் உறவுகளுக்குள் அடித்து ஆட என்னை அறியாமல் நானும் அழுதேன். 

என்னைப் பொறுத்தவரை நாம் இனிமேல ஒரே வயிற்றில் பிறக்கப் போகிறோம் என்பதை எப்போதும் சொல்வேன். உடன் பிறப்புக்களுடன் சண்டை சச்சரவின்றி வாழ்ந்து செல்லுதல் வரம். அந்த வரம் வேண்டும். அப்படியான வாழ்க்கை வாழ்தல் சிறப்பு. அந்த உறவுகளுக்குள்ளான சிக்கலும் அதன் தீர்வின் போதான பாசப் போராட்டங்களும் என்னை அறியாமல் அழ வைத்தது.

நான் தூக்கி வளர்ந்த பெண்கள்... என்னோட தங்கச்சி மாதிரி பாத்துட்டேன்... கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முகத்தைப் பார்த்தா அக்காக்களும் அம்மாவும்தானே தெரிவாங்க என கார்த்தி சொல்வார். தன் மாமாவுக்கு கட்ட வைத்திருந்த பெண்ணை, தூக்கி வளர்த்த புள்ளையோட குடும்பம் நடத்தச் சொல்றீங்களேன்னு என் தோழியைக் கட்டிக் கொள்ள மறுத்த மனிதரைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் குடும்பத்தார் கட்டாயத்தால் அவர் மணம் புரிந்து கொண்டார். இங்கு கார்த்தி அதைச் செய்யவில்லை. 

பாடல்கள் அருமை... சண்டைக்காரி பாடல் செம.

பெருநாழி ரணசிங்கமான சத்யராஜூக்கு அதிக வேலை இல்லை என்றாலும் வரும் இடங்களில் எல்லாம் கலக்கல்.  முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகர் இறுதிக் காட்சியில்தான் பேசுகிறார்... அந்தப் பேச்சு தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல. பானுப்பிரியாவுக்கும் அதிக வேலை இல்லை. அக்காள் மகள்களுக்கு அளவான நடிப்பு. வில்லன் அடிவாங்குவதற்கென்றே. அக்காள் கணவர்களில் இளவரசே நடிப்பில் முன்னணி, சரவணன், ஸ்ரீமன், மாரிமுத்து எல்லாருமே அவருக்குப் பின்னால்தான்.

குணசிங்கமாக கார்த்தி, கிராமத்துக் கதைக்களம் என்றால் மிகச் சிறப்பாக நடிக்கிறார். இதிலும் நல்ல நடிப்பு... பாசப்போராட்டத்தில் கதையோடு ஒன்றிய நடிப்பு. இது போன்ற படங்களில் அடிக்கடி நடிப்பது நல்லது. அண்ணன் வழி செல்வதைக் காட்டிலும் இதுவே அவருக்கு நன்மை பயக்கும்.

'ஒரு நாள் விவசாயியா வாழ்ந்து பாரு... அது கூட வேண்டாம் விவசாயியோட இருந்து பாரு அப்பத் தெரியும்', 'எல்லாருக்கும் பேருக்கு முன்னால இஞ்சினியர், டாக்டர்ன்னு போட்டிருக்கீங்க, எனக்கு விவசாயின்னு போட்டிருக்கலாமுல்ல'  என விவசாயிக்கான வசனங்கள்.

எல்லாரையும் ஒண்ணா வச்சி ஒரு போட்டோ எடுக்கணும் என்பது கதையின் ஆரம்பத்தில் வரும் வசனம். கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இறுதியில் போட்டோ எடுப்பது போல்தான் குரூப் போட்டா வாய்த்திருக்கிறது.

மொத்தத்தில் கடைக்குட்டி சிங்கம் ஆக்ரோஷமாக இல்லாமல் பாசத்தின் மூலம் மனம் கவர்க்கிறான்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 14 ஜூலை, 2018மனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்

ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவது அண்ணனும் தம்பியும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்ததால் எல்லாருமாக இருந்து மகிழ்ந்த நாட்கள் முகநூல், வலைப்பூ என எதிலும் நுழையாமல் மகிழ்வாய் நகர்ந்தன. 

குடும்பத்துடன் எங்கும் வெளியில் செல்லவில்லை, நண்பர்களைப் பார்க்கவும் செல்லவில்லை. எந்த வேலையாக, எங்கு சென்றாலும் வண்டியில் எனக்கு முன்னே விஷால் ஏறிக் கொள்வான்.எப்போதும் என்னோடு பயணித்தவன் அவன் ஒருவனே. அதனால்தான் இந்த முறை அவனே நிறைய அழுதான்...:( பாப்பா பத்தாவதில் அடியெடுத்து வைப்பதால் அவருக்கு வகுப்பும் டியூசனும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ள, பக்கத்து ஊருக்குக் கூட எங்களுடன் வரமுடியவில்லை.

பழனி ஐயாவைக் கூட ரோட்டில் வைத்துத்தான் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னவன் வரும் வரையிலான போராட்டங்களில் அங்கும் செல்லவில்லை. அம்மாதான் ரொம்ப பாசமாக இருப்பார் எப்போதும்... இந்த முறை அவரைப் பார்க்கவில்லை. குலதெய்வம் கோவிலான அழகர் கோவிலுக்குக் கூட விடுமுறையின் இறுதித் தினங்களே செல்ல வாய்த்தது. அன்றுதான் மனைவியின் பிறந்தகத்திலும் தலைகாட்டி வந்தோம்.

குடந்தை சரவணன் அண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், அகல் சத்யா, திண்டுக்கல் தனபாலன் அண்ணன் மீரா செல்வக்குமார் அண்ணன் என பலரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது ஆனால் அதற்கான நாட்கள் அமையவில்லை. அப்படியிருந்தும் முத்துநிலவன் ஐயாவின் மகன் நெருடா இங்கிருப்பதால் ஊருக்குப் போய் வாருங்கள் என்று சொல்லியிருந்தார். அதற்கான நேரமும் நாளும் தள்ளிப் போக, ஒருநாள் போய் வந்தே ஆகவேண்டுமென  ஐயாவுக்கு போன் செய்தால் மாலை நாலு மணிக்கு திருச்சி போறேன் என்றார். அன்றைய நாளை விட்டால் அடுத்த நாள் செல்ல வாய்க்காது என்பதால் அதற்கு முன் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.

ஒரு மணி நேரம் மிஞ்சிப்போனால் ஒண்ணே கால் மணி நேரத்தில் போயிடலாம் என முடிவு செய்து உறவினர் கார் ஓட்ட, பாப்பா தவிர்த்து நாங்கள் மூவரும் கிளம்பினால் தேவகோட்டையில் இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை ரோடு பணி.... அதற்குள் நீந்திச் சென்று  புதுகை அடைந்து மீண்டும் தஞ்சாவூர் ரோட்டில் மெல்லப் பயணித்து ஐயா வீட்டை அடையும் போது மணி நான்கை நெருங்கியிருந்தது.

எங்கே வருகிறீர்கள் என அடிக்கடி போன் செய்து... வழி சொல்லி... மாடியில் காத்து நின்று எங்களை வரவேற்ற ஐயா, திருச்சி  செல்லத் தயாராக இருந்தாலும் எங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி பேசிக் கொண்டிருந்தார்.... அம்மா இருந்தால் உங்களை மிகச் சிறப்பாக உபசரித்திருப்பார், நண்பர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லிக் கொண்டே மிக்ஸர், முறுக்கு கொடுத்து காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்து மிகச் சிறப்பாக உபசரித்தார்.

மாடிக்கு அழைத்துச் சென்று புத்தகங்களைக் காட்டி, நெருடாவுக்கு புத்தகங்கள், எனக்கு... விஷாலுக்கு என தனித்தனியாக கொடுத்தபோது புத்தகங்களைப் பார்த்து விஷாலுக்கு ஆச்சர்யம்... நம்ம ஐயா (பழனி ஐயா) வீட்டுல இருக்க மாதிரி இருக்குப்பா என வியந்தான். நம்ம வீட்டிலும் இது போல புத்தகங்கள் வாங்கி வைக்கணும்ப்பா என்றேன் பின்னர் வீடு திரும்பும் போது.

ரொம்ப நேரம் பேசவில்லை... ஒரு போட்டோவும் எடுக்கவில்லை... பேசிய கொஞ்ச நேரத்தில் எங்களை தன் அன்புக்குள் அழுத்தமாய் அணைத்துக் கொண்டார் ஐயா. உங்க கதைகள் அருமையா இருக்கு... நல்லா எழுதுறீங்க... புத்தகமா எப்ப கொண்டு வரப்போறீங்க என்று கேட்டார். நம் கதை நல்லாயிருக்கு என அவர் சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.

மீரா செல்வக்குமார் அண்ணனையும் சந்திச்சிடலாம்ன்னு நினைச்சேன். அவர் திருச்சியில் இருப்பதாய் ஐயா சொன்னார்கள். இந்த முறையும் அண்ணனைப் பார்க்க முடியாதது வருத்தமே.

இந்த முறை மிகவும் ஒட்டிக் கொண்டது எங்கள் விஷால் வளர்க்கும் ரோஸிதான்... என்ன ஒரு பாசம் அதற்கு...

******

இப்போது மனிதர்களை கேன்சர் கொன்று கொண்டிருக்கிறது. ஊரில் இருக்கும் போது நிகழ்ந்த இழப்புக்களில் அதிகம் கேன்சரால்தான். அதுவும் சிறிய வயதுடையோரெல்லாம் பலியாவது வேதனை. 

******

கருவேல நிழல் என்னும் வலைப்பூவில் கவிதைகள், கதைகள், புரையேறும் மனிதர்கள் என எழுதிக் கொண்டிருந்து விட்டு சில வருடங்களுக்கு முன்னர் சிவகங்கையில் போய் செட்டிலான பா.ராஜாராம் அவர்களின் மரணச் செய்தி கேட்ட போது அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. என்னைப் போல் பலரை மகனே என்று அழைத்த சித்தப்பா அவர். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******

நம்ம கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் அப்பா இறந்த செய்தியை முகநூல் மூலமாக அறிய முடிந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்பாவின் இறப்பில் மீளாத் துயரில் இருக்கும் ஐயா இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

******
தீர்வில்லா பிரச்சினைகள் இல்லை... எல்லாப் பிரச்சினைகளும் தீர்வு உண்டு. நாளைய நாள் நல்லதாய் அமையும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறேன். விரைவில் எல்லாம் சுகமாகும் என்ற எண்ணம் மனசுக்குள் ஆலவிருட்சமாய்....

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 9 ஜூலை, 2018‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)


சில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு முறைப்படி வாசகர் பார்வை அதிகம் கிடைக்கப் பெறாத கதை... முடிவை மாற்றியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது இப்போது. பேய்க் கதைகள் எழுத நாம் என்ன பி.டி.சாமியா..? நமக்கு இதெல்லாம் வருமான்னு ஒரு முயற்சி அவ்வளவே. எது எப்படியோ உங்கள் பார்வைக்காக இங்கு கதை விரிக்கிறேன்.... உங்களின் உள்ளார்ந்த கருத்துக்களைச் சொல்லுங்க.

**************

ப்படி நள்ளிரவில் வந்து இறக்கி விடுவான் என்று ராமு நினைக்கவே இல்லை. கிளம்பிய நேரத்துக்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் தேவகோட்டை வரவேண்டிய பேருந்து, நாப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் நகராமல், இடையில் டயர் பஞ்சரானது வேறு சேர, பனிரெண்டரை மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான்.

தேவகோட்டையில் இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் ஊருக்கு எப்படி இந்த இரவில் செல்வது என்பதே இப்போது அவனது உள்ளத்துக்குள் ஓடும் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. அப்பா போன் பண்ணும் போதே எப்படியும் நடுராத்திரிதான் வந்து சேரும்போல நீங்க வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

நண்பன்... நண்பன் என்ன நண்பன், சின்னத்தை மகன் ராஜாவுக்கு போன் பண்ணின போது 'வேலையா திருச்சிக்கு வந்திருக்கிறேன் மாப்ள... ரெண்டு நாளாகும் வர' என்று சொல்லிவிட்டான்.

அண்ணன் சுப்பு இருந்தால் எந்த நேரம் என்றாலும் வந்து விடுவான். அவனும் சென்னைக்கு வேலைக்குப் போய் ஒரு  மாதம்தான் ஆகிறது.

என்ன செய்யலாம்...? ஆட்டோக்காரர்களைக் கூப்பிட்டால் அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நான் வரலைங்க... என்பார்கள்.  டாக்சிக்காரர்களோ ஒண்ணுக்கு மூனா வாடகை கேப்பார்கள். பெரும்பாலும் பொணம் ஏத்தும் வண்டிகளே வாறேன்னு சொல்லுவாங்க...

சுந்தரப்பய வீட்டுலதான் இருப்பான் ... அந்த நாய்க்குப் போனடிச்சா எடுக்கவே மாட்டேங்குது... மூதேவி தூங்குச்சுன்னா கும்பகர்ணந்தான்... இப்ப என்ன செய்யிறது என்ற பலமான யோசனையுடன் சங்கர் டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்தான்.

ராமு சரியான பயந்தாங்கொள்ளி என்று பெயரெடுத்தவன்... பத்தாவதில் மைக்கேல் சார்க்கிட்ட டியூசன் படிச்சப்போ ஆறு மணி இருட்டுல வீடு வர்றதுக்கே வேர்த்து விறுவிறுத்துப் போய் வருவான். அதுவும் சுடுகாடு ரோட்டை ஒட்டியிருப்பது அவனது பயத்துக்கு மேலும் பயம் சேர்க்கும். டியூசன் விட்டு வரும்போதுதான் மருந்தக் குடிச்சிச் செத்த மேல வீட்டுச் சந்திரன எரிச்சிக்கிட்டு இருந்தாக.... வந்து விழுந்தவன்தான்... மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தான்.

'நீ என்ன சின்னப்புள்ளையாடா.... உங்கண்ணன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வரச்சொன்னாலும் வருவான்... நீ என்னடான்னா இப்படிப் பயப்படுறே'ன்னு அம்மா திட்டினாலும் அவனோட பயம் மட்டும் போகவேயில்லை.

டவுனுல ராத்திரி எத்தன மணிக்கு வேணுமின்னாலும் நடந்து போகலாம். அங்க பேய்க்கதைகள் எல்லாம் அதிகமாக இருப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அப்படி இருட்டில் நடக்க முடியுமா என்ன...? எத்தனை பேய்க் கதைகள்... அதுபோக வில்லுக்கம்பு வெள்ளச்சாமி, முனீஸ்வரன்னு சாமிகளின் கதி கலங்க வைக்கும் கதைகள் வேறு...

எப்பத் தனியாகப் பயணிக்கிறானோ அப்பல்லாம் அவனுக்கு இந்தக் கதைகளும் நண்பர்கள் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் வர, முகத்தில் திட்டுத்திட்டாக வியர்க்க ஆரம்பிக்கும்... வாய் தன்னை அறியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கவசம் சொன்னால் பயம் போகும் என்பது அவனின் நம்பிக்கை.

சரி ஆட்டோக்காரனிடம் கேட்டுப் பார்ப்போம்... எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாமென்ற முடிவோடு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனான்.

'அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நேத்து நல்ல மழை இங்க... உங்க ஊரு ரோடு ரொம்ப மோசம்... இப்ப தண்ணி வேற கிடக்கும்... காசுக்கு ஆசைப்பட்டு வந்து லோல்பட  விரும்பலை... வண்டி வராது' என்றான் முழுக்குடியில் நின்ற ஆட்டோக்காரன். அவன் சொன்னதையே மற்றவர்களும் சொல்ல, சரி நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அப்பா அழைத்தார்... 'ம்... இப்பத்தான் வந்தேன்... ஆட்டோல்லாம் வர மாட்டேங்கிறானுங்க...நடந்து வந்திடுறேன்.' என்றான்.

'நீ அங்கயே நில்லு நான் வர்றேன்... எம்புட்டுத்தூரம் நடந்து வருவே' என்றவரை இந்த நேரத்துல நீங்க எதுக்கு வர்றீங்க... உங்களுக்கு ராத்திரியில கண்ணும் சரியாத் தெரியாது... மழையால ரோடெல்லாம் மோசமா வேற கிடக்காம்... நான் மெல்ல நடந்து வந்துடுறேன்... அரை மணி நேரத்துல வந்துருவேன்...' என்று அவரைத் தடுத்துவிட்டு நடந்தான்.

என்னென்னமோ நினைவுகள் மனதுக்குள் எழ, நடப்போமா வேண்டாமா... என்ற யோசனையும் மெல்லத் தலை தூக்கியது.

'நாம என்ன சின்னப்பிள்ளையா... ஆம்பளை... இனி இருட்டுக்குப் பயந்துக்கிட்டு இருந்தா கேவலமா இல்லை...' என்று வீராப்பாய் மனசுக்குள் நினைத்தவன் 'நடடா ராமு... நீ ஆம்பளை' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

தேவகோட்டையை விட்டு அவனோட ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் இறங்கிவனை இருட்டு தனக்குள் இழுத்துக் கொண்டது. விளக்கொளி விடுத்து இருளில் இறங்கும் போதே 'கதக்' என்றது மனசு.

இன்னும் இருட்டுப் பழகவில்லை என்பதால் மெல்ல அடியெடுத்து வைத்தான். வலது காலை வைத்த இடத்தில் தாவு இருந்திருக்கும் போல அதில் கிடந்த தண்ணிக்குள் 'சதக்'கென கால் இறங்க, 'சை...  இந்த ரோட்டைப் போட்டுத் தொலைய மாட்டேங்கிறானுங்க... காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா ரோடெங்கிட்டுப் போடுவானுங்க...' என் கடுப்போடு சற்று சத்தமாகவே சொன்னான்.

இருட்டு பழகிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தான், ரோட்டோரத்தில் குட்டையாய் தேங்கி நின்ற தண்ணிக்குள் கிடந்து கத்தும் தவளைகளின் 'கொர்ர்ர்... கொர்...' என்ற சத்தம் பயத்துக்கு தூபம் போட, மொபைலில் சாமிப் பாடல்களைத் தேடி 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்ற பாடலை ஓடவிட்டு இயர் போனை காதில் மாட்டிக் கொண்டான்.

நடையில் வேகம் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50-க்கு மாறியது.

லேசான குளிர் சிகரெட் கேட்டது... மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தவனுக்குள் மெல்ல மெல்ல பய நினைவுகள் மேலெழும்ப, நினைவுகளை மாற்ற முயற்சித்துத் தோற்றான்.

சின்ன வயதில் தன் வயதொத்த, தங்களுடன் ஓடிப்பிடிச்சி விளையாண்ட சித்ராவின் திடீர் மரணமும், ராத்திரியோட ராத்திரியா எரித்துவிட்டு வந்ததும் சாமி பாட்டையும் தாண்டி மனசுக்குள் எழ, சித்ரா எரிந்த தீயின் நாக்குகள் நெஞ்சுக்குள் சுட, படபடப்பு கூடியது. சை... எதுக்கு இப்ப தேவையில்லாத நினைவுன்னு நினைச்சிக்கிட்டே மனசுக்குள் வேறு நிகழ்வுகளை கொண்டு வர முயற்சித்துத் தோற்றான்.

செத்ததுக்கு அப்புறம் பேயா ஆட்டம் போட்டு சகட்டுமேனிக்கு அம்புட்டுப் பேரையும் பிடிச்சி ஆட்டுன சவுந்தரம் மனசுக்குள் வர,  'டேய் பேராண்டி... இருட்டுக்குள்ள போறியே... அப்பத்தா தொணக்கி வரவாடா...'ன்னு முதுகுக்குப் பின்னால குரல் கேட்பது போல் தோன்ற, பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது. 

திடீரென அவனுக்கு நாவறட்சி எடுத்தது, முதுகில் தொங்கிய பேக்கில் வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து நடந்தபடியே... அதுவும் வேகமாக நடந்தபடியே மடக் மடக்கென குடித்ததில் சட்டையை நனைத்துக் கொண்டான்.

'இங்கருடா... சுப்பிரமணி தூக்குப் போட்டுச் செத்தானுல்ல... அந்த மரத்துப் பக்கம் மட்டும் போவாதே... பிடிச்சிக்கிறானாம்... அவன் பிடிச்சா கயரை எடுத்துக்கிட்டு சாகப்போறேன்னு போறாங்களாம்...' எட்டாவது லீவுல ஆயா வீட்டுக்குப் போனப்போ மாமா மகன் கருப்பட்டி கண்ணன் சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வந்தது.

ரோட்டோரத்தில் நின்ற ஆலமரம் தலை விரித்து  நிற்கும் பேய் போல் தெரிய, இதயம் ஏறுக்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவன் நடையின் வேகம் இப்போது டிவிஎஸ் 50-ல் இருந்து ஹோண்டாவுக்கு மாறியிருந்தது.

அடக்கி வைத்த மூத்திரத்தை அடிச்சே தீர வேண்டும்... இனித் தாங்காது... எங்கே பயத்தில் பேண்ட்லயே போயிருவோமோ என்ற நிலை வந்தபோது நின்று அடிக்கப் பயம்... கண்ணை மூடிக்கொண்டு ஜிப்பைக் கழட்டியவனின் கால்கள் நிற்க மறுத்து நடக்க... யாருதான் ரொம்பத் தூரம் பேயிறாங்கன்னு பாப்போமா என அவன், முருகன், ரமேஷ் மூவரும் போட்டி போட்டது ஞாபகம் வர லேசான சிரிப்பும் வந்தது. நடந்தபடியே பெய்ய ஆரம்பித்தான்.

சுப்பிரமணியோட தோப்புக்கிட்ட போகும் போது உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. சின்ன வயசுல இருந்து இந்த இடத்துல உருளைக்கிழங்கு வாசம் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு... நல்லபாம்பு இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துருச்சு போல என்று நினைத்துக் கொண்டான்.

பய நினைவு மாறியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தூரத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கோபுர விளக்குகள் தெரிய ஆரம்பிக்க, சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.

அவனின் நடையின் வேகம் மட்டும் குறையவே இல்லை.

பள்ளிக்கூடம் படிக்கும் போது ராமசாமி ஐயா செத்ததுக்கு மண் முட்டியில வச்ச தண்ணியை பயலுக எல்லாம் சேர்ந்து கல்லெடுத்து எறிஞ்சி உடைச்சதும் புகையிலையை எடுத்து ஓணானைப் பிடித்து அதுக்கு வச்சிவிட்டு கிறுக்குப் பிடிச்சி ஓட வச்சதும் ஞாபகம் வர, 'ஏலே சுப்பையா மவனே... எம் முட்டித் தண்ணி எங்கடா... எனக்கு வேணும்.... தந்துட்டுப் போடா... போயில வாங்கித் தாடா.... வாயி நமநமன்னு இருக்கு 'ன்னு காதருகில் வந்து கேட்பது போல் தோன்ற பயம் மறுபடியும் மனசுக்குள் 'பச்சக்' என ஒட்டிக் கொண்டது.

சாமி பாட்டுக் கேட்டாலும் மனசுக்குள்ள ஆவி ஆட்டமாவே இருக்கே... சை... எதை நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறமோ அதையே நினைக்கச் சொல்லுது. எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இதுக மட்டும்தான் ஞாபகத்தில் வரணுமா என்ன...  பேய், பிசாசுன்னு சுத்திச் சுத்தி வருதே இந்த மனசு.... அவனுக்கு மனசு மீது கோபம் வந்தது.

சிறிது தூர நடைக்குப் பிறகு அவனைச் சுற்றி மல்லிகைப் பூவின் வாசம் அடிப்பது போல் தோன்றியது.  உதடு வறண்டு போக,  நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. சம்பந்தமில்லாம மல்லிகைப் பூ வாசம்... கொலுசு சத்தமும் கேக்குமோ என இயர் போனை எடுத்துவிட்டு கேட்டான். சில் வண்டுகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. அப்ப மல்லிகை வாசம் எப்படி...?

'ராமு... நல்லாயிருக்கியா... பாத்து எம்புட்டு நாளாச்சு... நீயெல்லாம் சந்தோஷமாத்தான் இருப்பே... நாந்தான்டா... சந்தோஷமில்லாமா... உடம்பெல்லாம் எரியுதுடா... என்னால முடியலைடா...' கோபத்தில் தீவைத்துக் கொண்டு செத்துப் போன பெரியப்பா மக அகிலா அழுது கொண்டே பேசுவது போல் இருந்தது. அக்காவுக்கு மல்லிகைப் பூன்னா உயிருல்ல என்பது ஞாபகத்தில் வர 'காக்க காக்க கனகவேல் காக்க' என வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட வேக நடை ஓட்டமாக மாறியது. குளிராக இருந்த போதிலும் வியர்வையில் தெப்பலாய் நனைந்திருந்தான்.

செல்லையாவின் ஆட்டுக் கசாலையைக் கடந்தபோது 'ஒரு காலத்துல எம்புட்டு ஆடு அடைச்சிக் கிடக்கும்... அவரு செத்ததுக்கு அப்புறமே எல்லாம் போச்சு... இப்பப் பாரு... கசாலை இருந்ததுக்கு அடையாளமா நாலு கல்தூண்தான் நிக்குது' தனக்குள் சொல்லிக் கொண்டவன்  அந்தக் கசாலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதானே செல்லையாய்யா செத்துப் போனாரு... முனி அடிச்சிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க... என அவரின் சாவுக்குப் பின்னே போன மனசை சனியன் பிடிச்ச மனசு எங்க சுத்துனாலும் அங்கதான் போயி நிக்கிது என மனசின் மீது கோபப்பட்டான்.

இன்னும் கொஞ்சத் தூரம்தான் ஓடியாச்சும் வீடு போய் சேர்ந்துடணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு சுடுகாட்டைக் கடக்கணுமே என்ற நினைவு வர, பயம் இன்னும் அதிகமாகியது. உடம்பில் உதறல் எடுப்பதை உணர்ந்தான்.

'அப்பாவ மெல்ல மெல்ல வரச் சொல்லியிருக்கலாம்... கொஞ்சத் தூரம் நடந்து வந்திருந்தாக்கூட இந்நேரம் அவரு வந்திருப்பாரு.... என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு... வந்துருவேன்னு வெத்துப் பந்தா வேற... பயத்துலயே செத்துருவேன் போலவே...'  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு முன்னே பத்தடி தூரத்தில் திடீரென வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து செல்வது தெரிய, அவனுக்குத் திக் என்றது.

நின்று விடலாமா என்று யோசித்தவனுக்குப் பின்னால் இருந்து 'பயமா இருக்கா பேராண்டி.... நீ இந்த கயித்துக் கட்டில்ல படுத்துக்க... நான் உள்ள கெடக்க பலகையில படுத்துக்கிறேன்... வா' என செல்லையாய்யா கூப்பிடுவது போல் தோன்ற, படபடப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எகிறியது.

நடையின் வேகத்தை அவன் அதிகமாக்கிய போது முன்னே நகர்ந்த வெள்ளை உருவமும் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

'நாந்தான் வீராப்பா வரவேண்டான்னு சொன்னேன்... அம்மாவுக்கு எங்கே போச்சு அறிவு... அவன் பயப்படுவான்... நீங்க மெதுவாப் போய் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு அப்பாவை அனுப்பியிருக்கலாம்தானே... வீட்டுக்குப் போய் வச்சிக்கிறேன்...' என அந்த நேரத்திலும் அம்மா மீது கோபப்பட்டான்.

திடீரென கோவில் மாடொன்று சடச்சடவென ரோட்டைக் கடக்க, ரோட்டோரத்தில் இருந்த காரஞ்செடிக்குள் சரச்சரவென சத்தம் கேட்க, அவனுக்குத் ‘திடுக்’ தூக்கிவாரிப் போட்டது. பயம் போக தூத்தூ எனத் துப்பினான்.

அந்த திடுக்கில் காதில் மாட்டியிருந்த இயர் போனும் கழண்டு கொள்ள, தூரத்தில் நரி ஒன்று ஊளையிடுவதும். அதைத் தொடர்ந்த அந்தையின் அலறலும் கேட்க, 'முனியய்யா... என்னைப் பெத்த அப்பனே...  பத்தரமா வீடு கொண்டு போய்ச் சேரு... உனக்கு நாளக்கி தேங்காய் வாங்கி உடைக்கிறேன்' என வேண்டியபடி நடையின் வேகத்தைக் கூட்டினான். அவன் முன்னே நடந்த வெள்ளை உருவம் இன்னும் முன்னேதான் போய்க் கொண்டிருந்தது.

முன்னால் பார்க்கவும் பயமாக இருந்தது... பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சுற்றிலும் கேட்கும் சப்தங்கள் வேறு பயத்தைக் கூட்ட, மீண்டும் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு, ஆசுவாசத்திற்கு கொஞ்சம் தண்ணீர் குடித்து, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுடுகாடு நெருங்க நெருங்க 'தம்பி சிகரெட்டு ஒண்ணு எனக்குக் கொடுத்துட்டுப் போவே' என்று யாரோ கேட்பது போலவும், 'எனக்கு மல்லிகைப் பூ வாங்கியாந்தியா' என அகிலாக்கா கேட்பது போலவும் 'வாடா ஓடிப்பிடிச்சி விளையாடலாம்' என்று சித்ரா கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்பட, அவனை அறியாமல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான்.

என்ன ஓடினாலும் வெள்ளை உருவத்தைத் தாண்ட முடியவில்லை. அது அவனுக்கு முன்னே நகர்ந்து கொண்டுதான் இருந்தது.

பின்னால் ஏதோ ஒரு வண்டி வருவது போல் சத்தம் கேட்க, இந்த நேரத்துல யாரு... பேயா இருக்குமோ... செத்தவன் எவனாச்சும் வண்டி ஓட்டிக்கிட்டு வாரானோ... அய்யோ... காலையில என்னைய பொணமாத்தான் பார்ப்பாங்க போலயே.... செல்லையாய்யா செத்த மாதிரி முனி அடிச்சிருச்சின்னு சொல்லுவாங்களோ... என்று நினைத்தவனுக்கு உடம்பெல்லாம் சில்லென வேர்க்க, இதயம் எக்ஸ்பிரஸ் ரயில் போல் படபடக்க ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.

அவனருகில் வண்டி வந்த போது. 'அடே ராமுவா... உயிருக்குப் பயந்து ஓடும் போதே நினைச்சேன்... நீனாத்தான் இருக்கும்ன்னு.... ஆமா மாமவ வரச் சொல்லியிருக்கலாமுல்ல... பயந்தோளிப் பயலே.... இந்த ஓட்டம் ஓடுறே... நல்லவேள சுடுகாட்டுக்கிட்ட இன்னும் போவல... அங்கிட்டு போயிருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்னு நினைக்கிறேன்... வா... வண்டியில வந்து ஏறு....' எனச் சிரித்தார் செல்லையாய்யா பேரன் ராஜேந்திரன்.

ராஜேந்திரனை அனுப்பி வச்ச முனியய்யாவுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி அவர் தோள் வழியாக மெல்ல முன்பக்கம் பார்த்தேன்.

வெள்ளை உருவத்தைக் காணோம்... 'அப்ப நம்மூருக்கு ரோடு இல்ல... குளக்கால் வழியாத்தான் வரணும்...  கடையடச்சிட்டு இருட்டுக்குள்ள நான் வரும்போது எனக்கு முன்னால ஒரு வெள்ள உருவம் வர்ற மாதிரியே இருக்கும். சரியா நம்ம முனியய்யா கோவில்கிட்ட வரும்போது மறைஞ்சிரும்... அது நம்ம முனியய்யாதான் தெரியுமா...' அப்படின்னு அப்பா எப்பவோ சொன்னது இப்ப ஞாபகத்தில் வர... அப்படியும் இருக்குமோ... இல்ல வில்லுக்கம்பு வெள்ளச்சாமி... அதுவுமில்லேன்னா செல்லைய்யாய்யா மாதிரி யாராச்சும்.... நினைவு மீண்டும் பேய்க்குள் பயணிக்க, பயத்தில் ராஜேந்திரனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு  கண்களை இறுக மூடிக் கொண்டான்.

'சிவப்பி செத்த கதை தெரியுமா...?' என ராஜேந்திரன் ஆரம்பிக்க, சுடுகாட்டைக் கடக்க வேண்டுமே என்ற நினைப்பே வயிற்றைக் கலக்க சிவப்பி கதை வேறயா என்று நினைத்தவனுக்குப் பின்னே மல்லிகைப் பூ வாசம் தொடர ஆரம்பித்தது.
-'பரிவை' சே.குமார்.