மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

வாசிப்பனுபவம் : பாலும் பாவையும்


பாலும் பாவையும்

அதென்ன பாலும் பாவையும்..?

கெட்டுப் போன பாலை என்ன செய்வோம்... அது போல்தான் கெட்டுப்போன பெண்ணையும் இந்தச் சமூகம் தூக்கித் தூர எறியும் என்பதைச் சொல்லும் நாவல் இது.

எழுத்தாளன் விந்தன் அவர்களின் கதைகளை இதுவரை வாசித்ததில்லை... இதுதான் முதல் முறை... சமூகத்தைச் சாடும் எழுத்து...

ராணி முத்துவில் வரும் குடும்ப நாவல்கள் போன்றதொரு கதைதான் இது என்பதை வாசிக்கும் போது உணர்ந்தேன். அதன் பின் இது குறித்தான தேடலில் ராணிமுத்துவில் வந்த நாவல்தான் என்பதை ஜெயமோகனின் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. 

கதைக்குள் செல்லும் முன் தன்னுடைய வாசகி சரளாவின் கேள்விக்குப் பதிலை காதல் குறித்தும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் விளக்கமாய் சொல்லியிருக்கிறார்.

நீ கட்டுன சேலையோட வந்தாப் போதும் அப்படின்னு சினிமா வசனங்களை நாம் நிறையக் கேட்டிருப்போம்... அந்தக் காட்சிகளைப் பார்த்திருப்போம்... அதெல்லாம் நிஜ வாழ்க்கையில் அத்தி பூத்தாற் போல்தானே நடக்கும். 

அப்படிச் சொல்லாத தன் காதலனை நம்பி, பெற்றவர்களே வேண்டாமெனப் போகும் போது நகைகள் எதற்கு என பணக்காரியான அகல்யா வந்துவிட, நகைகளை வைத்து கொஞ்ச நாளேனும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தவன் எண்ணத்தில் மண் விழ, அவளுடன் சந்தோஷமாய் இரவைக் கழித்தவன் மறுநாள் போய்விடுகிறான். அவனின் நிலையை ஒரு கடிதத்தில் தெரிவித்துவிட்டு... 

சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் கனகலிங்கம் கலைஞானபுரத்தில் நடக்கும் கலைவிழாவில் புத்தகம் விற்க வருகிறான், அகல்யா தங்கியிருக்கும் அறைக்குப் பக்கத்து அறையில் அவன் தங்க நேரிடுகிறது.

அவளின் அழுகுரல் கொடுக்கும் எரிச்சலால் அறைக்கே சென்று பேசப்போக நீதான் எனக்கு நல்ல துணை எனச் சொல்கிறாள். 

அவளின் கதையைத் தெரிந்து கொண்டவன் அங்கு தங்கியிருக்கும் மூன்று நாட்களும் அவளுடன் நட்பாய் இருக்கிறான். காதலனுடன் சேர்த்து வைக்கிறேன் என்றதற்கும் பெற்றோரிடம் கொண்டு போய் விடுகிறேன் என்றதற்கும் மறுக்கும் அகல்யா, அவனை விரும்புவதாய்ச் சொல்லி தன்னையே கொடுக்க நினைக்கிறாள்.

அவளையும் அவளின் காதலையும் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறான் கனகலிங்கம்... அதற்குக் காரணம் அவள் கெட்டுப் போனவள் என்பதே என்றாலும் அதைச் சொல்லாது வேறு காரணங்கள் சொல்லி மழுப்புகிறான்.

அப்படியிருந்தும் அவளைத் தனியே விட்டு வர எண்ணமின்றித் தன்னோடு சென்னைக்குக் கூட்டி வருகிறான். 

ரயில் நிலையம் வரும் அவனின் முதலாளியைப் பார்த்ததும் அகல்யா பயந்து மெல்லப் பதுங்கிறாள். அதன் பின் அவனின் வேலையும் பறிபோகிறது. வேலை போக தானே காரணம் என்று வருந்தினாலும் அவனின் காதலைப் பெற, மனைவியாக நினைப்பதில் அகல்யா முனைப்போடு இருக்கிறாள்.

கனகலிங்கம் பிடிகொடுக்காது விலகி நிற்கிறான். 

சாப்பாடு கொடுத்து உதவும் நண்பனின் தாயாரும் யாரோ ஒருத்தியைக் கூட்டியாந்து வைத்துக் குடும்பம் நடத்துகிறான் எனச் சொல்லி சாப்பாட்டை நிறுத்துவதுடன் நண்பனையும் அவனுடன் பழகக் கூடாதென்கிறாள். 

இவை எல்லாமே அகல்யாவைச் சந்தித்ததால்தான் நடக்கிறது என்றாலும் அவள் மேல் அவனுக்குள் ஒரு அன்பு... அது காதலாகவும் இருக்கலாம்... ஆனாலும் ஓடிப்போய்... கெட்டுப் போனவளைக் கட்டியவன் என ஊர் பேசுமே என்பதால் கூட அவன் மௌனம் சாதித்திருக்கலாம்.

கனகலிங்கம் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை உணர்ந்து தோழியின் வீட்டுக்குச் செல்லும் அகல்யாவுக்கு அங்கும் கசப்பான அனுபவங்களே மிஞ்சுகின்றன.

வேலை தேடி அலையும் கனகலிங்கத்துக்கு நண்பன் மூலம் கிடைக்கும் வேலையில் மனநிறைவு இல்லாமல் அதையும் விட்டு விடுகிறான்.

அகல்யாவுடன் கனகலிங்கம் நட்பான பின் ஒரு மர்ம மனிதன் அடிக்கடி அவர்களை வேவு பார்க்க வருகிறான். ஒவ்வொரு முறையும் தப்பி ஓடிவிடும் அவன் இறுதியாக கனகலிங்கத்திடம் மாட்டினாலும் அவனிடம் இருந்து எதையும் அறிய முன்னரே தப்பி ஓடிவிடுகிறான்.

மீண்டும் கனகலிங்கத்தைத் தேடி வரும் அகல்யா வழியில் தன்னை ஏமாற்றிச் சென்றவனின் திருமண ஊர்வலத்தைப் பார்க்க நேரிட்ட போதும் எதுவும் செய்யாமல் தன் வழி நடக்கிறாள்.

கனகலிங்கம் அறையில் இல்லை... தன்னிடம் அவன் கொடுத்த சாவியை வைத்துத் திறந்து அறையைச் சுத்தம் செய்து அவனை நினைத்துக் கனவு காண்கிறாள்... தூக்கமில்லாத அந்த இரவு மெல்ல நகர, அவன் எப்படியும் வருவான் என நம்பிக்கையோடு விழித்திருக்கிறாள். 

அதிகாலையில் கனகலிங்கம் விபத்தில் இறந்த செய்தியோடு வருகிறான் நண்பன். 

தன் வினைப்பயன் இப்படியிருக்கிறதே என்று நொந்து நூலாகிப் போகிறாள் அகல்யா.

தன் குடும்பத்தில் நடந்ததை எடுத்துச் சொன்னால் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இல்லம் தேடிச் செல்பவளுக்கு அப்பாவும் சித்தப்பாவும் பேசுவதைக் கேட்டதும் மயக்கத்துடன் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அந்த நேரத்தில் அவளுக்கு ஆதரவாக கல்லூரியில் அவளை ஒரு தலையாகக் காதலித்தவன் வந்து சேர்கிறான். 

இவனுடன் இனி இனிதான வாழ்வு என மகிழ்வோடு அவன் இல்லம் செல்கிறாள். அந்த வாழ்க்கை இனிதானதா என்றால்... அதெப்படி இனிதாகும் என்பதே பதிலாகும்.

பதிவின் ஆரம்பத்தில் சொன்ன வரிகளை வேலைக்காரன் சொல்லக் கேட்டு ஞானம் வந்தவனாய் அவளை வீட்டை விட்டு வெளியேற்ற, துளிர்த்த அந்த வாழ்வும் அவளைப் புறந்தள்ளி விடுகிறது. 

ஒரு பெண் வழி தவறிப் போய்விட்டால் இந்தச் சமூகம் எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறது என்பதை அகல்யா உணர்கிறாள்.

யாருமே ஏற்றுக் கொள்ளாத போதும் கடல் தன்னை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் கடலை நோக்கிப் போகிறாள்.

கனகலிங்கத்தை வேவு பார்த்தவன் யார்..?

இரயில்வே நிலையத்தில் கனகலிங்கத்தின் முதலாளியைப் பார்த்து அகல்யா பயந்து பதுங்கியது ஏன்..?

கனகலிங்கத்துக்கு உண்மையிலேயே விபத்துத்தானா... இல்லை யாராலும் கொல்லப்பட்டானா..?

அகல்யாவின் அப்பாவும் சித்தப்பாவும் பேசியது என்ன..?

என்பவையே கதையின் சுவராஸ்யம்... அதைச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்களுக்கு வாசிப்பில் விருப்பமின்றிப் போய் விடும் என்பதால் விரிவாகச் சொல்லவில்லை.

கனகலிங்கத்தைப் பார்ப்பதற்காகவே அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக அகல்யா சொல்வது சினிமாத்தனம்.

சமூகத்தைச் சாடும் கருத்துக்கள்... கற்பிழந்த பெண்ணுக்கு இந்த உலகம் கற்பிக்கும் பாடங்கள் என கதை பயணித்தாலும் விறுவிறுப்பு இல்லாத நாவல் இது. இந்த நாவல்தான் விந்தனுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்ததாம்.

குடும்ப நாவல்கள் விரும்பிப் படிப்பவர்கள் வாசிக்கலாம்.

வாசிக்கக் கொடுத்த அ.மு.நெருடாவுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

புனைப் பெயர் (காற்றுவெளி இதழ்)

வணி மாத காற்றுவெளி மின்னிதழில் வெளியாகியிருக்கும் எனது சிறுகதை. கதையை வாசிக்க போட்டோவை கிளிக் செய்யவும்.

சிறுகதையை வெளியிட்ட காற்றுவெளி மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கும் அதை எனக்குத் தெரிவித்த சகோதரர். முனைவர் நௌஷாத் அலிக்கும் நன்றி.

வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நட்புக்களே... என் கதைகளின் வளர்ச்சிக்கு அது உரமாக இருக்கும்.

நன்றி.கதையில் பிழைகள் இருக்கலாம்... என் பாணி கதையாக இல்லாதிருக்கலாம் எதுவாக இருந்தாலும் தங்கள் கருத்தைச் சொல்லுங்க...

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

மனசு பேசுகிறது : கருவாச்சி காவியம்

Image result for karuvachi kaviyam

ருவாச்சி காவியம்...

சிரமப்பட்ட ஒருத்தி சிதைந்து போகாமல் வாழ்ந்து காட்டும் கதையே கருவாச்சி காவியம் என்றாலும் ஒருத்திக்கு இத்தனை துன்பங்களா என்ற வலிதான் கதை நெடுகிலும் நம்மை ஆக்கிரமித்துக் கொ(ல்)ள்கிறது. 

சொக்கத்தேவன்பட்டி என்ற கிராமமே கதைக்களம். கதையின் நாயகி கருவாச்சி.

கருப்பான பெண்களைக் கிராமங்களில் கருவாச்சி என பட்டப் பெயரிட்டு அழைப்பதுண்டு. இந்தக் கதையைப் பொறுத்தவரை நாயகியின் பட்டப்பெயரல்ல இது... அவளின் பெயரே இதுதான் என்றாலும் அவள் ஒரு கருப்பிதான்... 

எது நல்லது எது கெட்டது எனப் பிரித்தறியத் தெரியாத கருவாச்சி, முன் பகைக்கு பலிகடாவாக்கப்படுகிறாள். தகப்பன் இல்லை.. தாயின் வளர்ப்பு... அன்னாடங்காச்சிக் குடும்பம்... ஆண் துணையாய் தங்களோடு ஒட்டிக் கொண்ட கோண வாயன்... இதுதான் அவளின்  வாழ்க்கைக் கதையின் ஆரம்பம். 

நாந்தான் வாழலை... என் மக வாழ்க்கையும் இப்படியா ஆகணுமென துடிக்கிறா... துவளுறா...  போராட்டமே வாழ்க்கையாகிப் போன ஆத்தாக்காரி பெரியமூக்கி. 

யாரழுதாலென்ன கடவுள் போட்ட கணக்கை மாத்தியா எழுத முடியும்... உம் பொறப்பே இப்படித்தான்னு எழுதிப்புட்டான்... இதுல கருவாச்சியும் பெரியமூக்கியும் விதிவிலக்கா என்ன.. 

கருவாச்சியைக் கட்டி கழுத்தறுத்தவன் கட்டையன்... முறைக்கு மாமன் மகன்தான் என்றாலும் மனிதத் தன்மையற்ற மிருகம் அவன்.

கட்டிய பத்து நாளில் அவன் பண்ணின கொடுமைகள் சொல்லி மாளாது... கொதிக்கும் பாறை... கிணறு... கருவைமுள் என அவளைப் படுக்க வைத்து தன் இச்சையை மட்டுமல்ல முன் பகையையும் தீர்த்துக் கொள்கிறான். 

அவனின் அப்பன் சடையத்தேவரும் இந்த விஷயத்தில் சண்டாளனே... தன் அண்ணன் மகளைக் கொன்றவனின் அக்காள் மகளைப் பலி வாங்கி சிரிக்கிறான் பல்லிடுக்கில் வழியும் ரத்தத்தோடு...  

பதினோரு நாள் வாழ்வின் முடிவில் கட்டையன் பஞ்சாயத்தில் சொல்வது அவ பொம்பள இல்லை... அத்து விட்டுடுங்க என்பதுதான்.

கட்டையன் சொன்னதை மறுக்காது அத்துவிடச் சொல்றா கருவாச்சி தவிச்சி நிக்கும் ஊருச்சனம் முன்னாடி.  

பாத்திர பண்டம் வரை எல்லாம் எடுத்துக் கொடுத்தாலும் தாலியைக் கொடுக்க மறுக்கிறா... தனியே எதிர்த்து நிக்கிறா...

அந்தப் பிரிவுல ஊரு தவிக்குது.... தாயி துடிக்கிறா... கருவாச்சி மட்டும் தவிக்கவுமில்லை  துடிக்கவுமில்லை... வாழ்ந்து காட்டணுங்கிற வெறி மட்டுமே தலைக்கு மேல தனிச்சி நிக்கிது.

அப்படியே இருடின்னு விட்டுப் போக ஆத்தாவுக்கு மனசில்லை... சொந்தத்துல மாப்பிள்ளை பாக்குறா... விவரம் தெரிஞ்சதும் முழுகாம இருக்கேன்னு முறிச்சி விடுறா கருவாச்சி.

கருவாச்சி மேல கரிசனமிருந்தாலும் கட்டையனுக்குப் பயப்படுது ஊர்சனம்... நல்லதைவிட கெட்டதைப் பார்த்துப் பயப்படுறதுதானே மனுசப்பயக வேலை... கட்டையனுக்கு நரிகளும் துணை நிக்கிதுக.

எத்தனை பிரச்சினைகள் கட்டையனால்... எதற்கும் அஞ்சவில்லை... மல்லுக்கு நிற்கவும் இல்லை... பணிஞ்சு போகவுமில்லை... வேலுநாச்சியாய் நின்று மிருகங்களுக்கு மத்தியில் மனுஷியாய் ஜெயிக்கிறாள்.

ஆத்தாவின் மரணம் அவளை ஆட்டிப் பார்த்தாலும் அவளுக்குள் இருக்கும் வாழணுங்கிற... வாழ்ந்து காட்டணுங்கிற தீ அணையலை... அந்த நெருப்பு அவளை வயித்துப் புள்ளையோட வாழ வைக்கிது.

பவளம், மருத்துவச்சி, வளவிக்கார செட்டியார், கனகு, உருமாப் பெருமாத் தேவர் என உறவுகளின் அன்பில் உத்வேகத்தோடு நகர்த்துகிறாள்.

வேலை பார்த்தால் சாப்பாடு என்ற நிலையில் நிறை மாதத்தில் வேலை பார்த்துத் திரும்பும் போது மழையில் சிக்கி காட்டுக் குடிசையில் தனியே பெற்றெடுக்கிறாள் சிங்கத்தை... அழகு சிங்கத்தை. 

கட்டையனின் பகை கொடுக்கும் பிரச்சினைகள்... கோணவாயனை, பிள்ளைபோல் வளர்த்த கிடாயை என பரவலாகித் தாக்க... அடிபட்டும் வேங்கையாய் எகிறாமல் காலம் வெல்லும்... எதிரியைக் கொல்லும் என்ற நம்பிக்கையில் அடக்கியே வாசிக்கிறாள்.

சொந்த ஊரில் சாணி பொறுக்கி வரட்டி தட்டும் பெண்ணோடு கோண வாயனுக்கொரு காதல் இருந்திருக்கிறது... போதும் இந்த ஊரென அவளைத் தேடி, அத்துக் கொண்டு போகும் மாடென கருவாச்சியை அநாதையாய் விட்டுப் போகிறான்... போனவன் திரும்பி வருகிறான் காதலி சித்தி ஆன கதை சுமந்த கண்ணீரோடு.

வளவிக்காரச் செட்டியார் மூத்த மக கனகு கல்யாணத்துக்கு கைமாத்தா கருவாச்சி ஆத்தா கொடுத்த தங்கச் சங்கிலியை,  அழகு சிங்கத்துக்குப் போட்டு அழகு பார்க்க வருகிறது வினை.

கனகுக்குப் பிள்ளையில்லை எனக் காரணம் காட்டி போட வேண்டிய வைர மோதிரத்தையும் வட்டியாய் கொழுந்தியா பவளத்தையும் கேட்கிறான் வக்கத்த மாப்பிள்ளை.

செட்டியாரு தவிப்பைப் பார்த்து கருவாச்சி மீண்டும் நகையை அவரிடமே கொடுக்க வக்கத்த பயலுக்கு வைர மோதிரமாகிறது. 

வைரமோதிரமும் கொழுந்தியாளும் கிடைத்த சந்தோஷத்தில் ஊர் திரும்பும் மாப்பிள்ளை, கோழிக்கறி ருசியில் கல்லென வைரத்தைக் கடிச்சித் தின்னு திரும்பாத ஊருக்குப் போகிறான்.

ஒத்த மக வாழ்க்கையோட போவேண்டியது ரெட்டை மக வாழ்க்கையோட விளையாடிருச்சேன்னு உயிரை விட்டுடுறாரு செட்டியாரு. கனகுக்கும் பவளத்துக்கும் பிடிமானத் தேராகிறாள் கருவாச்சி.

அப்பனில்லாது வளர்ந்த பிள்ளை, குடும்பம் பொறுப்புணர்ந்து பிழைப்பானென நினைத்தால் அது தறுதலையாகி தறிகெட்டு நிற்கிறது. பெரும்பாலும் அம்மாவின் கஷ்டம் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் எல்லாருமே அழகு சிங்கங்களாய் இருப்பதில்லை என்பதே உண்மை.

கட்டையனுக்கு இரண்டாந்தாரமாக வருகிறாள் பேயம்மா என்ற திம்சு. ஊருக்குள்ள நல்லவளா நிக்குற நாகப்பாம்பு... மாமானாரை... கணவனை ... அழகு சிங்கத்தை என ஒரு குடும்பத்தையே தழைக்காது கிள்ளியெறிகிறாள் பாசமெனும் வெசம் கொடுத்து... 

எல்லாரையும் எரிச்ச பாவியின் ஜம்பம் கருவாச்சிக்கிட்ட மட்டும் செல்லலைன்னாலும் தன் கதை தெரிந்தவளை விடுதல் நலமாகுமா என்பதால் வீடு வரைக்கும் பறித்து வீதிக்குத் துரத்துறவ கட்டையனையும் மொட்டை மரமாக்கி கவர்ந்து செல்கிறாள் சொத்துக்களை.

மூத்தமகன்னு ஒத்த உறவாய் நின்ற கோண வாயனும் பாம்பு கடிக்குப் பழியாக, இழப்புக்களே வாழ்க்கையாகிப் போன பேதை தனிச்சி நிக்கிறா... ஆனா தவிச்சி நிக்கலை.

எத்தனை முறை வீழ்ந்தாலும் நான் சாகமாட்டேன் என ஒவ்வொரு முறையும் வீரியமாய் எழுகிறாள்.

பஞ்சத்திலும் சாயவில்லை பத்தினி கருவாச்சி... திக்கற்றோருக்கு தெய்வமாய் உயர்ந்து நிற்கிறாள்.

பொம்பள இல்லய்யா அவ என கூசாது பொய் சொன்ன கட்டையன், அவ காலில் விழுகிறான் குஷ்டரோகியாய்...

ஆம்பள பொட்டச்சி கால்ல விழக்கூடாது மாமான்னு தன்னை வாழவிடாது அழிக்க நினைத்தவனை அணைத்துக் கொள்கிறாள் கருவாச்சி.

வீம்பும் வீராப்பும் உடம்புல தெம்பிருக்கும் வரைதான் என்பதை கட்டையனும்... வைராக்கியம் ஆயுசு வரைக்கும் என்பதை கருவாச்சியும் சொல்லாமல் சொல்கிறார்கள்.

பஞ்சத்தின் கோரத் தாண்டவத்தில் ஊர் சிக்கிக் கிடக்க, வாழ்நாளெல்லாம் அழுத கருவாச்சி, இனியாச்சும் சிரிக்கட்டுமேன்னு வெறித்துக் கிடந்த வானம் அடித்துப் பொய்கிறது.

திம்சு பேச்சைக் கேட்டு அவ அண்ணன் வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கும் மகன் நினைப்பில் அவனைப் பார்க்கப் போனவள் வீரனாய் வாழ வேண்டியவனை கிறுக்கனாய்ப் பார்க்கிறாள்.

தன்னை படாத பாடு படுத்தியவன்... பொம்பளை இல்லைன்னு சொன்னவன்... வாழ விடாமல் ஆட்டிப் பார்த்தவனை இறுதிக் காலத்தில் காக்கிறவள் மகனை மட்டும் விட்டு விட்டு வந்ததேனோ... பார்த்துப் பார்த்து வளர்த்துப் பதராப் போச்சேங்கிற வலியின் விளைவுதானோ என்னவோ... கருவாச்சி மனசு யாருக்குத் தெரியும்..?

அருமையான எழுத்து நடை... கிராமத்துப் பேச்சு வழக்கு... பிரச்சினைகளோடு பயணிக்கும் கருவாச்சிக்குப் பின்னே என்னாகுமோ தெரியலையே... கடவுளே கண் இல்லையாவென நம்மையும் ஓட வைக்கிறார் வைரமுத்து.

பேன் பார்ப்பது... வைத்தியம் பார்ப்பது... கருவாட்டுக் குழம்பு வைப்பது... பருத்திப் பால் செய்வது... உடல் அழுத்தி விடுவது... என இன்னும் நிறைய விஷயங்களை ரொம்ப விரிவாய்ப் பேசுகிறார் வைரமுத்து... விவரணைகள் எப்போதும் அழகுதான்... வர்ணிப்புக்கள் நம்மை ஈர்க்கிறது என்றாலும் பக்கம் பக்கமாய் நகரும் போது கதையில் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

எங்கிருந்தோ சாமியார் ஒருவர் கருவாச்சியைத் தேடி வந்து அவளின் விளக்கம் கேட்டு காலில் விழுதல்... திம்சு பற்றிச் சொல்லிச் செல்லும் கிழவி... எனச் சில இடங்களில் சினிமாத்தனம். 

120 வீடுகளே உள்ள ஊரில் பேரனின் முகம் பார்த்ததில்லை என்று சொல்லும் சடையத் தேவர்... மாமனின் குரலைக் கேட்டதில்லை எனச் சொல்லும் கருவாச்சி என சில ஏற்க முடியாத விஷயங்கள்.

எது எப்படியோ என்றாலும் ஒரு நல்லதொரு வாழ்க்கைக் கதையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.

குறிப்பாக காமத்தைச் சிதறவிட நிறைய இடமிருந்தும் நாசூக்காய் நகர்த்திச் செல்லுதல் அழகு.

நகை செய்யும் போது நடப்பவற்றை அழகாய் விவரித்திருக்கிறார்... அதற்கும் பிரச்சினை வந்திருக்கிறது சாதி வடிவில்... விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். கதையை கதையாய் பார்த்தோமேயானால் அங்கு சாதி சதிராட வேண்டிய அவசியமில்லை.

ஒருவரின் எழுத்தின் வீரியத்தை வாசிப்பவர் சொல்ல வேண்டும்.. எழுதியவர் நானே சிறப்பாய் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்பதை வைரமுத்துக்கள் மட்டுமல்ல நாம் எல்லாருமே உணர வேண்டும்.

கருவாச்சி காவியம் வாசிக்க வாசிக்க ஈர்த்துக் கொள்ளும் என்பது உண்மை... வாசித்தால் மொழி நடையில் சொக்கிப் போவீர்கள் என்பதும் உண்மை.

-'பரிவை' சே.குமார். 

சனி, 11 ஆகஸ்ட், 2018

அசுரவதம்...ஆபாசம்

ந்தப் பதிவுமே எழுதாம இருக்கதுக்குப் பதிலா எதாவது ஒரு பதிவை... எப்போதேனும் எழுதி நாமளும் லைம் லைட்ல இருக்கோம்ன்னு காட்டிக்கலாமே என்பதால் இங்கு சிலதைப் பகிரலாம்.

அரசியல்வாதியாய் கலைஞரைப் பிடிக்காவிட்டாலும் ஒரு தமிழ் அறிஞராய் அவரைப் பிடிக்கும். அவரின் மரணம் தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு. மெரினாவில் துயில் கொள்ளும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அதென்ன கலைஞர் என்ற வார்த்தையை கலைஞ்சர் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க... ஒண்ணுமே புரியலை... சரி அதெதுக்கு நமக்கு. 

Image result for அசுரவதம்

சுரவதம்... சசிகுமார் நடிப்பில் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றி பெற்ற படம். தமிழில் இப்படியான படங்கள் வருவதில்லை. இந்த முயற்சிக்காகவே இயக்குநர் மற்றும் சசியைப் பாராட்டலாம். சசியை பொறுத்தவரை நண்பன்னா என்ன தெரியுமா... நட்புன்னா என்னன்னு தெரியுமா அப்படின்னுதான் படத்துக்குப் படம் பேசிக்கிட்டு இருப்பாரு. அதுவே நம்க்கு அலுப்பாயிரும். அதெல்லாம் இந்தப் படத்தில் இல்லை. 

முதல் காட்சியிலேயே வசுமித்ராவைக் கொல்லப் போறேன்னு சொல்லிடுறாரு... உயிர் போயிருமோ என்ற அவரின் பயமும்... அவரைக் கொல்லாமல் பயம் காட்டிக் கொண்டே திரியும் சசியின் கொலை வெறியுமாய்... படம் செமையாப் போகுது. இறுதிக் காட்சியில் நீ யார்டா என்னை ஏன்டா கொல்லப் பார்க்கிறே என்ற வசுவின் கேள்விக்கு, கழுத்தில் நிற்கும் அருவா உயிரை எடுக்கப் போகிறது என்ற நிலையில் சசி தனக்குள்ளே நினைப்பதாய் அந்தக் காரணி விரிகிறது.

சமீபத்திய நிகழ்வுகளின் சிறிய புள்ளிதான் அது என்றாலும் இப்படியும் செய்யலாம் என்பதை சினிமாவில் காட்டுவது நல்லதல்ல. எப்படிப் பிள்ளைகளை நம்பி கடைகளுக்கு அனுப்புவது என்றார் நண்பர் ஒருவர்.

உண்மைதான் சினிமாக்களும் மெகா தொடர்களுமே எல்லாவற்றையும் எல்லாருக்கும் கற்பித்துக் கொண்டிருக்கின்றன. அறியாத வயதில் காதலும் காமமும் குழந்தைகளுக்குள் செலுத்தப்படுவது இவைகளால்தான். வன்முறைகள் தவிர்த்து சினிமாக்கள் நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம்.

நல்ல விஷயத்தைச் சொல்லவில்லை என்றாலும் தவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனே சாகக்கூடாது...  சாகப் போகிறோம் எனத் தெரிந்து நரக வாழ்க்கை வாழ்ந்து... அந்த வேதனையை அனுபவித்துச் சாக வேண்டும். அதுதான் அசுரவதம்... 

இது சற்றே வித்தியாசமான படம்தான். பார்க்கலாம்.

Image result for ஆபாசம் மலையாள சினிமா

சூடானி ப்ரம் நைஜீரியா பார்த்த பிறகு தூக்கமில்லாத ஒரு இரவில் எதேனும் படம் பார்க்கலாமென யோசித்தபோது மலையாளப் படமான 'ஆபாசம்' (ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் - Aarsha Bharatha Samskaram) பார்க்கலாமென முடிவெடுத்தேன். காரணம் பேரால் அல்ல... கதை முழுக்க பேருந்துக்குள் என்பதால்... நம்ம ஆட்கள் பேருந்தை மையமாக்கி கொடுத்த படங்கள் எல்லாம் வெற்றி என்பதால் நல்லாயிருக்கும் என்ற நப்பாசையில் பார்க்க ஆரம்பித்தேன்.

பலதரப்பட்டவர்களுடன் பயணிக்கும் பேருந்துக்குள் சமகால அரசியலையும் தைரியமாக கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர். பேருந்தின் கண்டக்டருக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் எப்படியும் அடைய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் இளைஞிக்கு பிராக்கெட் போட்டு மூக்குடைபடுகிறார். அந்தக் கோபத்தை பெண் என்பதால்  உதவுகிறேன் என நக்சலைட்டுக்கு துணை போய் உதைவாங்கித் திரும்பியதும் நடக்கும் நிகழ்வுகளில் பின்னணியில் பயன்படுத்திக் கொள்கிறார்.

நன்றாக நகரும் கதை நக்சலைட், நடுவழியில் பேருந்தை விட்டு இறங்கிச் செல்லும் கண்டக்டர், பேருந்தைத் தேடி வரும் லஞ்சம் வாங்கும் தமிழக போலீஸ், ஆபாச படம் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டும் டிரைவர் போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாதென பயணிகளுடன் பேருந்தை அம்போன்னு விட்டுட்டு ஓடுதல், ஒரு பெண் நக்சலைட்டுகள் என்று சொல்லப்படுபவர்களை கண்டக்டர் இந்தப் பக்கமாக கூட்டிச் சென்றார் என்று சொல்லியும் பேருந்துக்குள் இருக்கும் மற்றொரு இளைஞியையும் திருநங்கையையும் குற்றவாளி எனத் தூக்கிச் செல்லும் போலீஸ் என தேவையில்லாத குப்பையாய் மாறிவிடுகிறது.

நல்ல தைரியமாய் நகரும் கதையைச் சரியாச் சொல்லாமல் குழப்பி கிளைமேக்ஸ் சொதப்பலில் இரவு தூக்கம் போனதே மிச்சம்.

விருப்பம் இருப்பின் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 4 ஆகஸ்ட், 2018

மனசு பேசுகிறது : பட்டத்து யானை

Related image

ரு சிலரின் எழுத்துக்கள் வாசிப்பவனை உள்ளிழுத்துக் கொள்ளும். அப்படியான எழுத்து எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அவர் ஒரு நல்ல கதை சொல்லி என்பதைக் குற்றப்பரம்பரை எனக்கு உணர்த்தியது. குற்றப்பரம்பரை வாசிக்கும் வரை அவரை ஒரு எழுத்தாளராய்த் தெரியுமே ஒழிய அவரின் எழுத்தை வாசித்ததில்லை. குற்றப்பரம்பரையில் பெருநாழி கிராமத்துக்குள் வேயன்னா பின்னே என்னையும் அலைய வைத்தார்.  அப்போதே தேடிப்பிடித்து வாசிக்க வேண்டிய எழுத்தாளராய் எனக்குள் அவரின் எழுத்து அமர்ந்து கொண்டது.

சாண்டில்யன், கல்கி போன்ற எழுத்து ஜாம்பவான்களின் வரலாற்று நாவல்களை வாசிப்பது ஒரு வித சுகானுபாவம் என்றால் வேல ராமமூர்த்தி அவர்களின் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை... அதன் உண்மையான பக்கங்களில் இருந்து எள்ளளவும் பிசகாத  தன்மையுடன் வாசிப்பது சுகானுபவத்திலும் சுகானுபவம். அதுவும் கிராமத்தானாய் ஆடு, மாடு, கோழிகளுடன் திரிந்தவனுக்கு இந்த எழுத்து சுகானுபவத்திலும் சுகானுபவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் கதைகளை வாசிக்கும் போது அந்த எழுத்தின் பின்னே மட்டுமின்றி அந்த காட்சிகளோடு பயணித்துக் கொண்டே படிப்பேன். கதை மாந்தர்கள் தவிர்த்து அவர்களைச் சுற்றியிருப்பவற்றைக் காட்சிப்படுத்துதல் என்பது எழுத்தில் ஒரு அழகு, அது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை. அப்படி வாய்க்கப் பெற்றவர்கள் காட்சிகளை கண் முன்னே கடத்துவதில் கில்லாடிகள். அப்படியான கில்லாடிகளில் ஒருவர் வேல ராமமூர்த்தி ஐயா. இவர் பேய்கள், தெய்வங்கள், ஊரணி, ஆறு, பந்தய மாடுகள், கோட்டை, குடிசை என எல்லாவற்றையும் காட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். ஏன் வெட்டிக் கிடக்கும் ஆடுகள் கூட நாம் எப்போது விருந்தாவோமென நம் கண் முன்னே காத்துக்கிடக்கின்றன.

குற்றப்பரம்பரை வாசிக்கும் போதே நெருடா என்னிடம் பட்டத்து யானை இருக்கு இதை முடிச்சதும் வாங்கிப் படிங்க என்றார். சென்ற வாரம் அவரின் அறையில் நண்பர்கள் கூடி சின்ன இலக்கிய அரட்டை. மறுநாள் காலை கிளம்பும் போது பட்டத்துயானையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

பெரும்பாலும் கிராமத்து ஜனங்கள் எந்த ஒரு பிரச்சினையை முன்னெடுத்தாலும் அதில் அதீத தீவிரம் காட்டுவார்கள். இந்த பட்டத்து யானையோ வெள்ளை அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பும் கிராமத்து இளைஞர்களின் வீரத்தையும் விவேகத்தையும் சுமந்து முன்னூற்றி எழுபத்தாறு பக்கம் பயணிக்கிறது. இந்த யானையில் வேங்கையாய் நிற்கிறான் பெருநாழி ரணசிங்கம்.

எங்க தேவகோட்டையில் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் நினைவாக தியாகிகள் பூங்கா இருக்கிறது. அந்த இடத்தில் வெள்ளையனை எதிர்த்துப் போராடி சிலர் உயிரை விட்டார்கள் எனச் சொல்வார்கள். எங்க ஊர் பக்கத்து ஊர் ஐயாமார்களெல்லாம் தியாகிகள் பென்சன் வாங்கி, இறந்தபின் தேசியகொடி போர்த்தப்பட்டு போனார்கள். 

இதுல வேடிக்கை என்னன்னா உண்மையா அடிபட்டவனைவிட வேடிக்கை பார்த்தவங்களெல்லாம் தியாகி ஆகிட்டாங்க. அவங்க குடும்பம் இன்னும் பென்சன் வாங்கிக்கிட்டு இருக்கு. போலீசுக்கு கொடுத்த ஜீப் அவருக்கு பயன்படுதோ இல்லையோ அவரின் குடும்பப் பணிகளுக்குப் பயன்படுவது போல... மந்திரி சுருட்டுறாரோ இல்லையோ மச்சான் சுருட்டுறதைப் போல... காட்டுனவனைவிட பார்த்து எழுதியவன் அதிக மார்க் வாங்குவதைப் போல... இப்படி போல... போலன்னு எத்தனையோ சொல்லலாம். இது எல்லா இடத்திலும் நடப்பதுதானே என்று நாம் கடந்து போக ஆரம்பித்து காலங்கள் போய் விட்டன... 

பட்டத்து யானை வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக களமிறங்கிய கருஞ்சேனகளின் வீரத்தையும் அவர்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வெற்றி வாகை சூடி துரோகத்தால் மரணிக்கும் ஒரு மகா வீரனையும் பற்றி விறுவிறுப்பாய் பேசுகிறது. 

'தமிழன் காட்டிக் கொடுப்பான்... மலையாளி கூட்டிக் கொடுப்பான்' என்ற சொல்லை அமீரகத்தில் பரவலாகக் கேட்கலாம். அன்று முதல் இன்று வரை தமிழன் வஞ்சத்தில்தானே வீழ்ந்தான்... கூட இருந்தே குழி பறிப்பவனால்தான் வீழ்கிறான். அழுது ஆர்ப்பாட்டம் செய்து பதவி ஏற்றவர்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை இதுவரை சொல்லாமல் ஆளுயர கட் அவுட் வைத்து தன்னை அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எட்டப்பர்கள் (கவனிக்க... பாடிகள் அல்ல) காலம் காலமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட தீயின் சிறு கங்கொன்று தென்னகத்தின் ஆப்பநாட்டில் விழுந்து சிறு தீப்பொறியாய்... பெரும் நெருப்பாய்... வெள்ளையர் என்னும் காட்டை அழித்து எக்காளமிடுகிறது. வீரத்தால் வெல்ல முடியாத வெள்ளையர்கள் விவேகத்தை முன்னிறுத்தி எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் சில குள்ளநரிகளை கையில் வைத்துக் கொண்டு தீயின் சுவாலையை அழிக்க முயல்கிறார்கள். 

அவர்கள் ஊற்றிய தண்ணீரில் கங்கு கரியாகிவிடுகிறது. பிடித்த நெருப்பு இன்னும் இன்னுமென தீவிரமாக எரியுமா... இல்லை அணையுமா என்பதைச் சொல்லாமல் விட்டாலும் நாடு கடத்தப்படும் சிறு தீப்பொறி பின்னாளில் பெரும் நெருப்பென திரும்பி வருமெனச் சொல்லி முடிக்கிறார்.

கல்யாண மாப்பிள்ளை மணக்கோலம் பூணாமல் வெள்ளையனை எதிர்த்து மடிகிறான்... மணமகன் வரவில்லை என்றால் அவனின் சகோதரி பெண்ணிற்கு தாலி கட்டலாம் என்ற வழக்கப்படி தன் கழுத்தில் தாலி வாங்கிய மறுநிமிடமே விதவையானவள் வீட்டுக்குள் முடங்காமல் மறுநாளே வேல்கம்பு தாங்கி வீரத்துடன் எதிரியின் வரவை நோக்கி குமரிகளுடன் நிற்கிறாள்.

அண்ணன் துப்பாக்கியும் வேல்கம்பும் சுமந்து திரிய அந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் தம்பியும் வெள்ளையரை எதிர்க்கும் கருஞ்சேனைகளின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கி தன்னுயிரைக் கொடுக்கிறான்.

ரணசிங்கம் என்ற ஒற்றை மனிதனின் கண் பார்வைக்கு கட்டுப்பட்டு இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என குருதி சிந்தி மண்ணில் வீழ்வதை வாசிக்கும் போது நம்மால் அந்த எழுத்தை, அந்த மனிதர்களை நேசிக்காமல் இருக்க முடியவில்லை. வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள் இந்த மக்கள்... இன்று நாம் எனக்குச் சுதந்திரம் இருக்கு என அடிபட்டவனை வீடியோ எடுத்து முகநூலில் போட்டு லைக்கை அள்ளுவதில் ஆர்வம் காட்டுகிறோம்.

தனுஷ்கோடியில் பிரிட்டீஷ் கப்பலை தகர்ப்பதில் தொடங்கி... அடுத்தடுத்த நிகழ்வுகளில் நிறைய உயிர்களைக் காவு கொடுத்தாலும் வெள்ளையர்களோடு ஒப்பிடுகையில் வெற்றி வாகை தென்னாட்டுச் சிங்கங்களுக்குத்தான். 

உன்னோட தம்பியை இழந்துட்டு நிக்கிறே... உனக்கு அழுகை வரலை... என்னடா நீ என்று கேட்கும் நண்பனிடம் நேற்று உயிர் விட்டானே அவன் யார்... இந்தா இன்னைக்கு செத்து வீழ்கிறார்களே இவர்கள் யார்... போர் தந்திரம் பழகாமலே என் பேச்சைக் கேட்டு உயிர் விட்டிருக்கிறார்களே அவர்கள் யார்... எல்லாரும் என் தம்பிகள் தானே எனச் சொல்லி, தன் சோகம் மறைத்து உடைந்து அழாமல் அடுத்தது என்ன என வேட்கையோடு கேட்கும் ரணசிங்கம்... இராணுவத்தில் இருந்து தப்பி வடநாட்டில் சில காலம் வெள்ளையனுக்கு எதிராக களமாடி விட்டு தன் சொந்தப் பூமியில் விருட்சமாய் வளர்ந்து நிற்பதில்... அவனே தலைவன் என கிராமங்கள் கொண்டாடுவதில் தவறே இல்லை. அவனின் பாசமெல்லாம் தாய் நாட்டின் மீதே... என்னே ஒரு வீரன். 

முனீஸ்வரனைக் கும்பிடும் மீரா கதாபாத்திரம் என்னுடன் படித்த சூசை மாணிக்கத்தை நினைவில் நிறுத்தியது. கல்லூரி செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவில் திருநீறு அவன் நெற்றியிலும் இருக்கும். என்னடா நீ இதெல்லாம் வச்சிக்கிட்டு என யாராவது கேட்டால் எனக்கு மதம் பிடிக்கவில்லை... இதை வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்பான். நானும் முருகனும் மெழுகுவர்த்தியுடன் சர்ச்சுக்குள் அமைதி நாடி அமர்ந்திருந்த நாட்கள் என்றும் அழியாதவை. நாகூரும் வேளாங்கன்னியும் எம்மதத்தினரையும் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்... எல்லாருமே மனதில் நிற்கிறார்கள். 

அரியநாச்சி வீரப்பெண்ணாய் வந்தாள்... அண்ணனின் மறைவோடு அவளும் காணாமல் போய் விடுகிறாள். எங்கே போனாள் அரியநாச்சி... ஒருவேளை அவள்தான் தமிழ் இந்து இதழில் வலம் வர ஆரம்பித்திருக்கிறாளோ..?

மாயழகி... அம்மா, அப்பனை இழந்து... தாலி கட்டாமல் கணவனை இழந்து.... தன்னை அப்பனாய் இருந்து வளர்த்த அண்ணனை இழந்து... இப்படி இழப்புக்களை மட்டுமே சுமக்கிறாள். இப்படிப்பட்டவர்களை ராசியில்லாதவள் என மூலையில் அமர வைப்பது இன்றும் கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த தவறைச் செய்யாமல் இதில் அவளையும் வெள்ளையன் வரவை எதிர்நோக்கி  போராட்டக் களத்தில் காத்து நிற்க வைத்திருக்கிறது பெருநாழி.

ஆப்பநாட்டுக் கருஞ்சேனையை மூன்று பிரிவுகளாக்கி 'புயல் பாய்ச்சல்' , 'புலிப் பாய்ச்சல்', 'முனிப் பாய்ச்சல்' என வெள்ளையர் மீது வெவ்வேறு இடங்களில் பாய்கிறார்கள். 

தோட்டக்காரன், சலவைக்காரன் என ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சுதந்திரத் தீ மிகச் சிறப்பாக வெளிப்பட வேண்டிய இடத்தில் வெளிப்படுகிறது.

காட்டிக் கொடுப்பவர்களாக... எட்டப்பன்களாக...  சுப்பையா முதலாளி, உடையப்பன் என செம்மண் பூமியில் கருஞ்சேனைகளுக்கு விஷச்செடிகளும் முளைத்து நிற்கின்றன.

போலீஸ் சொல்லும் ரணசிங்கத்தின் ராணுவக் கதை ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பை போகப்போக  கொடுக்கவில்லை அதனால்தானோ என்னவோ வடநாட்டில் இதைச் செய்தான்... இதைச் செய்தான் என அடிக்கடி சொன்னாலும் அதை எப்படிச் செய்தான் என சொல்லாமலே சென்னையில் இருந்து வரும் போன் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறது.

எத்தகைய வீரனும் பெண்களின் கண்ணீரில்தான் ஏமாந்து விடுவான். தான் கட்ட வேண்டிய அயித்தை மகளின் உண்மையான கண்ணீருக்குப் பின்னே உடையப்பன் என்னும் கருநாகம் இருப்பதை அறிந்தும்...  மற்றவர்கள் எச்சரித்தும் அவளுக்காக உடையப்பனுடன் உறவாடுகிறான். 

இயற்கையாக இறந்தான் என போலீஸ் விளக்கம் சொல்லி சுட்டுத் தள்ளுகிறது மக்களில் சிலரை. ரணசிங்கம் குடும்பம் இந்த வேள்வித் தீயில் சுக்கு நூறாகிறது. மாயழகியும் ரணசிங்கத்தின் வாரிசும் நாடு கடத்தப்படுகிறார்கள். 

வெள்ளையனை எதிர்த்து நெஞ்சில் குண்டு வாங்கி செத்திருந்தால் ரணசிங்கம் இன்னும் உயர்ந்திருப்பான்... இப்போதும் தாழவில்லை... அவன் எப்படி இறந்தான் என்பதைச் சொல்லாமலே விட்டுவிடுகிறார் ஆசிரியர்... துரோகத்தில் வீழ்ந்தான் வீரன் என்பதை வாசகர்கள் வாசிக்கக் கூடாது என்றோ அல்லது துரோகிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் அறிவார்கள் என்றோ நினைத்திருக்கலாம்.

நல்லதொரு நாவல்... விறுவிறுப்பாய் பயணிக்கிறது. இது போன்ற கதைகளை இன்னும் இவர் எழுத வேண்டும்.

'பட்டத்துயானை மெல்லத்தானே நடக்கும்... இந்த யானை சிறுத்தையாய் சீறிப் பாய்கிறதே' என்பதுதான் வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது.

'வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ரணசிங்கா...
வஞ்சகன் உடையப்பனடா...'
-'பரிவை' சே.குமார்.